பல வருடங்களுக்கு முன்பு சூசன் என்னைத் தன் குடும்பப் பிரச்சினை ஒன்றின் சம்பந்தமாக நாடியிருந்தாள். இப்போது மீண்டும் என்னிடம் வந்திருந்தாள். தனக்கு மிகக் குழப்பமாக இருக்கிறது என ஆரம்பித்த சூசன், அவள் பிரியசகியான மேரியைப் பற்றிப் பேசத் தொடங்கினாள். கூடவே மேரியின் மூன்றாவது மகனான ஜான் வந்திருந்தான். இதுவரை குடும்பத்தினர் யாரையும் முதியோர் விடுதியில் சேர்த்ததில்லை என்றாலும், அம்மா மேரிக்கு அதுவே புகலிடம் எனத் தோன்றுவதாகவும், தெளிவு பெற வந்திருப்பதாகவும் கூறினார்கள்.
சூசன்-மேரி உயிர்த்தோழிகள். இருவரும் வாழ்வின் எந்தவொரு வித்தியாசமான சூழ்நிலை நேர்ந்தாலும் பகிர்ந்து கூடிப் பேசிக் கொள்வதுண்டு.
சில ஆண்டுகளுக்கு முன்னால் பக்கவாதம் வந்ததால் மேரியின் இடது கை மற்றும் காலில் வலு குறைந்திருந்தது. மருத்துவர் எச்சரித்திருந்தார். அதையும் மீறி வாகனம் ஓட்டிக்கொண்டு போனதில் விபத்து ஏற்பட்டு, மண்டையில் பலத்த காயத்தினால் மாற்றங்கள் அதிகரித்தது.
நினைவைப் பாதித்தது. வீட்டிற்கு வருவோர் சிலரை மேரியால் அடையாளம் காண முடியவில்லை, பெயரும் ஞாபகம் வரவில்லை. உணவுச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சாப்பிடவில்லை என்பாள். சாப்பிடத் தரவில்லை என்றால் தகாத வார்த்தைகளால் திட்டுவாள். வயதானவர்களுக்குச் சகஜமாக வருவதாகக் குடும்பத்தினர் நினைத்து விட்டுவிட்டார்கள்.
பல மாதங்களாக மருத்துவரிடம் போய்க் காட்டவில்லை. இரு வருடத்திற்குப் பிறகு, ஒன்று சம்பவித்ததால் அழைத்துக்கொண்டு போனார்கள். ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் சர்ச் சர்வீஸ் போயிருந்தார்கள். மேரியைக் கூட்டிச் செல்ல அவமானப் பட்டு வீட்டில் விட்டார்கள். திரும்பிய போது வீட்டிற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்றிருந்தாள். கேட்டதற்கு “டேவிட் வரச் சொன்னான்” என்றாள். ஆச்சரியமாகப் பார்த்தார்கள். டேவிட், மேரியின் தம்பி, மறைந்து பத்து வருடங்கள் ஆயின.
மருத்துவர் சிறிய மனநிலைப் பரிசோதனை (mental status examination) செய்ததில் மேரியின் நிலை டிமென்ஷியா எனக் குறிப்பிட்டார். அதற்கான பரிசோதனைகள் செய்ததில், அதையொட்டிய மாற்றங்கள் தெரிந்தது. டிமென்ஷியா நிரூபணமானது. எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என விளக்கி, மூன்று மாதங்களுக்குப் பிறகு அழைத்து வரச் சொன்னார். வரவில்லை.
சூசன் வெளிநாட்டிற்குச் சென்றிருந்ததால் இவை தெரியவில்லை. தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் பேச்சு இருந்தது.
ஒருமுறை தொலைபேசியில் இளைய மருமகள் பேசினாள். மேரியை பூட்டி வைப்பதாகக் கூறினாள். சூசன் இது மனிதாபிமானத்திற்கு எதிரானது என விளக்கப் பார்த்தாள். மருமகள் மறுத்து காரணம் கூறினாள். மேரி வெளியே செல்லும்போது வழி தவறி எங்கேயோ சென்றுவிட்டாள். அங்கிருந்து தரதரவென இழுத்து வருகையில் மேரி முரண்டு பிடித்து அடித்தாள், இவர்களும் கை ஓங்க, அக்கம்பக்கத்தினர் தடுத்தார்கள். மாமியாரால் தலைவலி என்றாள்.
சூசன் இருவாரங்களில் தாய்நாடு திரும்பியதும் மேரியைப் பார்க்க வந்தாள். மேரியின் கோர்வையாகப் பேசாதது, சொன்ன செய்தியை மறுபடி சொல்வது, சந்தேகங்கள், இவற்றைக் கண்டாள். ஜானுடன் என்னிடம் ஆலோசிக்க வந்தாள்.
மேரி விதவை. ஆடை வடிவமைப்பாளர் வேலையில் நல்ல சம்பாத்தியம். மூன்று குழந்தைகள், மூத்தவர் இருவரும் கல்யாணமாகிக் கூட்டுக் குடும்பமாக ஒன்றாக வசித்தார்கள். இளையவனான ஜான் அண்ணன்மார்கள் சொத்திற்காக இருப்பதாகவும், அம்மாவைப் பார்த்துக் கொள்வதில்லை எனக் கவலைப் பட்டான். அவர்களின் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காக அம்மா வேலையை நிறுத்தியதைத் துயரத்துடன் தெரிவித்தான்.
கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்காதது, தாமதமாகக் குறைந்த உணவைத் தருவது, இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருந்தால் அறையில் மூடிவிடுவது என்று பாசம் குறைந்த அளவின் உதாரணம் தந்தான்.
இந்த உடல் மன நிலையில் இவ்வாறு நேரிடும். அதனால் தான் மருத்துவரின் சிகிச்சை பிரதானம்! எங்களைப் போன்ற ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் மற்ற நலனை, சூழல், குடும்பப் பங்களிப்புகளை முழுமையாக (holistic) கண்டுகொண்டு பரிந்துரைப்பதுண்டு.
அதனால்தான் ஜானிடம் மற்றவர்களை அழைத்து வரச் சொன்னேன். மேரியின் செயல்பாட்டு அவளுடைய டிமென்ஷியாவால் என்றதை விளக்கினேன். அதாவது மீண்டும் மீண்டும் கேட்பது, இந்த நிமிடம் செய்ததை அடுத்த நிமிடம் மறந்துவிடுவது, அவர்கள் வேண்டுமென்று செய்வதில்லை, இவை இந்த நிலையினால்.
சட்டென்று மேரி மறந்து போவது; நாள், தேதி, கிழமை கேட்டுக் கொண்டே இருப்பாளாம். இதை எடுத்துக்கொண்டு விடையைத் தேட வைத்தேன். மேரி முன்னே செய்து வந்ததை எடுத்துக்கொண்டு, தினசரி தேதித் தாளைக் கிழிப்பது மற்றும் தினசரிச் செய்தித்தாளைப் படிப்பதென அமைத்தோம்.
வேறு பணிகளைச் சேர்த்துக் கொள்வதற்குமுன் மேரியின் உடல்நலனைப் பற்றிக் கேட்டதற்கு, கடந்த நான்கு ஆண்டுகளாகப் பலமுறை குளியல் அறையில் விழுந்து அடிபட்டதைத் தெரிவித்தார்கள். ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள விவரித்தேன். ஏற்கனவே நிகழ்ந்த விபத்தினாலும் பக்கவாதத்தாலும் மூளையின் பாதிக்கப்பட்ட பாகங்கள் சுருங்கி டிமென்ஷியா இருப்பதைக் காட்டியது. இந்தக் கட்டத்தில் உபயோகமான ஏதாவது ஒன்றைச் செய்வது மூளையின் மற்ற பாகங்களைப் பாதுகாக்கும். மூளையைச் சுறுசுறுப்பாக இயங்க வைத்தால் நிபுணர்கள் சொல்வது போல மலர்ந்து இருக்கும்.
மேரி செய்யக்கூடிய பாதுகாப்பான வேலைகளைக் கணக்கிட, துணிகளை மடித்து வைப்பது போன்ற நாற்பது வேலைகளைப் பட்டியலிட முடிந்தது. தொடர்ந்து செய்து, ஒரு மாதத்திற்குப் பிறகு வரச்சொன்னேன்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு வந்தார்கள். மேரியின் கைகள் கட்டிப்போட்டு இருந்தது. பார்த்ததுமே அவிழ்க்கக் கட்டளையிட்டேன். பலர் இவ்வாறு செய்வதுண்டு. உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காதோரின் செயல்பாடு. இது மேரி போன்றவர்களின் நலனைக் குறைக்கும் என்றதை வலியுறுத்தினேன். உடை, நகம், தலை எதுவும் சுத்தமாக இல்லை. மங்கின வாடை.
குடும்பத்தினர் எல்லோரும் வந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் மேரியைப் பார்த்துக் கொள்வது மன அழுத்தத்தைத் தருகிறது என வலியுறுத்தினார்கள். அவளுக்கு ஒன்றும் புரியாது என்ற எண்ணத்தில் வீட்டில் பேசுவது போலச் செய்ததைத் தடுத்து நிறுத்தினேன்.
மேரியை வெளியே அமர்ந்திருக்கக் கேட்டுக் கொண்டேன். அவளால் உயில் எழுதி, கையெழுத்துப் போட முடியுமா என்பது மட்டுமே தன் கவலை, எதிர்பார்ப்பு என்றார்கள் குடும்பத்தினர். மேரியின் பராமரிப்பை மீண்டும் நினைவூட்டி, அதை விவரிக்கச் செய்தேன். அவர்களின் அச்சம், ஆதங்கத்தைப் புரிந்து கொண்டாலும் மேரியின் பாதுகாப்பு கவலை தந்ததால் அதற்கு முக்கியத்துவம் அளித்தேன். நடைமுறையில் வரவழைக்க, ஒவ்வொரு வாரம் ஒருவர் என்னைப் பார்க்க வரவேண்டும் என்றேன்.
ஸெஷனுக்கு மூத்தவனும் மருமகளும் வந்தார்கள். மேரியைக் கட்டிப் போடாததால் வாழ்வை அனுபவிக்க முடியவில்லை என வருத்தத்துடன் சொன்னார்கள். அக்கம்பக்கத்தினர் மேரியின் நிலையைப் பற்றிக் கேட்கும்போது டிமென்ஷியா என்று சொல்லுவதற்கு வெட்கப் படுவதால் ஏதேதோ மழுப்பிச் சொல்வதாகக் கூறினார்கள்.
மீண்டும் அடுத்த சில ஸெஷன்களில் இந்த நிலை ஏற்படும் விதம், அதனால் உண்டாகும் மாற்றங்களை விவரித்தேன். எவ்வாறு வயதினருக்கு உடல் உறுப்புகளில் உபாதைகள் நேர்கிறதோ, அதேபோல் மூளைப் பாகங்களுக்கு நேரும்போது இது போல இருக்கும். வெட்கத்திற்கு இடமில்லை. அண்ணன் என்றதால் அவர்கள் ஏற்றுக்கொள்வதை, நடந்து கொள்வதைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவார்கள்.
இளைய மகன் மருமகள் விவரிப்பிலிருந்து எதுவும் மாறவில்லை எனப் புரிந்தது. இவரைப் பார்த்துக் கொள்வதால் என்ன ஆதாயம் எனப் பலமுறை கேட்க, அம்மாவின் நலன் என்றதும், தங்கள் எதிர்காலத்தில் அதனால் பிரயோஜனம் இல்லை என மகன் கூறினான். மேரியைப் பார்த்துக்கொள்வது தொல்லை எனச் சொல்லி வெளியேறினார்கள்.
ஜான் தன்னால் முடிந்தவரைச் செய்வதைப் பகிர்ந்து கொண்டான். மேரியை வற்புறுத்திக் குளிக்க வைத்தாலும் குளியலறை போவாள், பல நிமிடங்களுக்குப் பிறகு அப்படியே வெளியே வந்து, கேட்டால் குளித்து விட்டதாகக் கூறி விடுவாளாம், அவள் தன்னை அறியாமல் சிறுநீர் கழித்து விடுவதால் அண்ணிமார்கள் நைட்டி போட வைத்தார்கள். மேரி அழுதுகொண்டே வேண்டாம் என்றாலும் “பைத்தியம்” எனக் கேலியாகப் பேசினார்கள். இப்போதும் கைகளைக் கட்டிக் கொண்டு இருப்பதைக் கூறினான். வேலையாக வெளியூர் சென்று விட்டால் அம்மாவின் நிலை படுமோசம் என்றான்.
மேரியின் உயிர்த்தோழியான சூசனிடம் பேசி இல்லத்தில் சேர்ப்பது நல்லது எனத் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். மனச் சஞ்சலத்தை போக்குவதற்கு இருவரையும் நன்றாக நடத்திவரும் சில நிறுவனங்களைப் பார்த்துப் பேசிவரப் பரிந்துரை செய்தேன். செய்ய ஆரம்பித்தார்கள்.
அந்தக் கட்டத்தில், மேரி வெளியே சென்று திரும்பி வர வழி மறந்துவிட்டதால் காவல் நிலையத்தின் உதவியை நாடினாள். உதவிக்கு எங்கே போக வேண்டும் எனத் தெரிந்தது என்பது நன்கு. குடும்பத்தினர் அழைத்து வரப் போகையில் மேரியால் சலித்து ஓய்ந்து விட்டதாகக் கூறினார்கள்.
வீட்டிற்கு வந்ததும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜான், சூசன் திரும்பி வந்தார்கள். மேரியைச் சேர்க்கப் போகும் இடத்தின் விவரத்தைச் சொல்லி அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்கள். மேரி, சூசனின் கையைப் பற்றிக்கொண்டு, “ஜானை மட்டுமே மனிதனாக வளர்த்தேன். எல்லாம் அவன் பெயரில் செய்ய வேண்டும். சீக்கிரம். புரிஞ்சுக்க.” என்றாள்.
குடும்பத்தினர் திகைத்து நின்றனர். இதுவரை எடுத்துச் சொன்னது இப்போது புரிந்து விட்டதோ? சூசன் தாமதிக்காமல் மும்முரமாக ஈடுபட்டாள்.
*********************************************