பொன்னியின் செல்வனும் நானும். –
நான் முழுக்க முழுக்க ஒரு சென்னைவாசி. திருவல்லிக்கேணி கோஷாஸ்பத்திரியில் பிறந்து தி.நகர் எனப்படும் மாம்பலத்தில் வளர்ந்தவன். நான் பிறப்பதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னரே என் தந்தையார் எங்கள் பூர்வீகமான நெல்லை மாவட்டத்தை விட்டுத் தொழில் நிமித்தம் சென்னை வந்து வசிக்கத் தொடங்கினார். மாம்பலம் ரயில் நிலையம் அருகே ரயில்வே லயனை ஒட்டியபடி செல்லும் மாம்பலம் சாலையில் எங்கள் இல்லம் அமைந்திருந்தது. இரண்டு கிரவுண்டில் கட்டப்பட்ட பெரிய வீடு. முதல் மாடியில் இருக்கும் அறையின் மேல் இருக்கும் மொட்டைமாடிக்குச் செல்ல ஏணி உண்டு. அங்கிருக்கும் “வாட்டர்டேங்” கை “கிளீன்” செய்யத்தான் யாரேனும் மேலே வருவார்கள், மற்றபடி யாரும் வரமாட்டார்கள். அக்காலத்தில் இப்போது இருப்பதுபோல, உயரமான கட்டடங்கள் கிடையாதாகையால், அந்த மொட்டைமாடித் தண்ணிர்த் தொட்டியின் அருகில் அமர்ந்திருந்தால் யாராலும் பார்க்க முடியாது. ஒரு பெரிய , இனிய தனிமை வழங்கும் இடமாக எனக்கும் என் சகோதரனுக்கும் எங்கள் இளமையில் அந்த இடம் அமைந்தது.
இதை இத்தனை விரிவாக நான் சொல்வதன் காரணம், இங்கு அமர்ந்துகொண்டுதான் நான் கல்கியில் வரும் பொன்னியின் செல்வன் தொடரை முதலில் படிக்க ஆரம்பித்தேன்… கல்கியில் வாரா வாரம் வரும் தொடரின் அடுத்த பகுதி என்னவாக இருக்கும் என்பதை அறிய அத்தனை ஆவலோடு படிப்பேன். ஒவ்வொரு வாரமும் ஒரு “சஸ்பென்ஸோடு” தொடர் முடியும். அந்த ஆண்டு பள்ளி விடுமுறையில் என் அத்தையின் பெண், கோவையிலிருந்து வந்திருந்தாள். என்னிலும் நான்கு வயது பெரியவள்.
“என்னடா ! பொன்னியின் செல்வன்” படிச்சிண்டு இருக்கியா ?”
“ ஆமாம் ! பூரணி ! ரொம்ப நல்லா இருக்கு .இந்த வாரம் படிக்கும் போது ஒரு சந்தேகம் வந்தது கொள்ளிட கரையில் இருந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு எப்படி வந்து சேர்ந்தான்?
எனக்குத் தெரியும் என்று அவள் சொல்லத் தொடங்கினாள். எனக்கோ ஆச்சரியம் “ எப்படித் தெரியும் ”என்று கேட்டேன். கொஞ்சம் என்னை அலைக்கழித்துவிட்டுப் பிறகு சொன்னாள்
“ டேய் ! ஏற்கனவே இது கல்கியில் தொடர்கதையா வந்துடுத்து. எங்கம்மா அதான் ஒங்க அத்தை அத எற்கனவே “பைண்ட்” பண்ணி வச்சிருக்கா. வீட்டிலே அதை எடுத்துப் பூராவும் போன வருஷ லீவிலேயே படிச்சிட்டேன் ” என்றாள்.
”ஆஹா அப்படியா சமாச்சாரம்” என்று அக்கம்பக்கத்தில் தேடி எனது நண்பன் ஒருவன் வீட்டிலிருந்த “பைண்ட்” பண்ணின புத்தகத்தை வாங்கி அடுத்த லீவுக்குள் படித்துமுடித்தேன். ( (தொடர்ந்து வாரா வாரமும் படித்து மகிழ்ந்தேன். காரணம் அவற்றில் தொடர்கதைக்கான படங்களும் வருமல்லவா !. அதன் பிறகு எத்தனை முறைகள் பொன்னியின் செல்வனைப் படித்தேன் என்று எண்ணிக்கை வைத்துக் கொள்ளவில்லை. )
வீட்டுக்குள் அமர்ந்து கதை புஸ்தகம் படித்தால் திட்டு விழும் என்பதால் நான் இதை மொட்டைமாடித் தனிமையில்தான் படிப்பேன். நல்ல வெய்யில் இருக்கும் பகலிலும், மொட்டைமாடியில் எலெக்ட்ரிக் லைட் இல்லாத்தால் இரவிலும் படிக்கமுடியாது. இளங்காலைப் போதிலும் மாலையிலும்தான் படிக்கமுடியும். எனவே பொன்னியின் செல்வனை நான் படிக்கும் நேரமெல்லாம் சூழல் மிக ரம்மியமாக இருக்கும்.
முதல் அத்தியாயத்தின் தொடக்கத்தில், ” ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.” என்ற வரிகளைப் படித்த உடனேயே மனத்தில் நானே ஒரு குதிரையில் ஏறி அமர்ந்துள்ளது போல ஒரு கற்பனை வளர்ந்தது. அந்த இள வயதில் அதைப் படிக்கப் படிக்க மனத்தில் ஆயிரம் கற்பனைகள் சுழல ஆரம்பித்தன. நான் காணாத ஒரு “ராஜாராணி” காலத்துக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். இக்கதையின் பின்னணியில் சரித்திரச் சான்றுகள் உள்ளன. அது பேசும் கதாபாத்திரங்கள் பல வரலாற்று நாயக நாயகிகள் என்பதெல்லாம் பின்னாளில் நான் அறிந்து கொண்டவை. ஆனால் அந்த இளைய பருவத்தில் பொன்னியின் செல்வன் கொடுத்த ஓர் ஆர்வம் கதை படிக்கும் ஆர்வமாக மாறியது; அது தமிழ் மொழி மீது ஆர்வத்தை ஊட்டியது. நீண்ட ஆழ்ந்த வாசிப்புகள் ஒருநாள் என்னை எழுதவும் தூண்டின.
பொன்னியின் செல்வன் என்பது ஒரு சாதாரண வரலாற்றுப் புதினமல்ல; அது ஓர் அற்புதமான கலைப்படைப்பு. தமிழ் இலக்கியப் பரப்பிலே சோழர்களின் வீர மரபையும் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் கலைத் தொண்டுகளையும் பற்றிச் சுவைபட விரிக்கும் காவியம்; அந்த கதாபாத்திரங்கள் அனைவரும் என் மனத்திலே ஆழ்ந்துவிட்டனர். இது எனக்கு மட்டுமல்ல, பொதுவாகத் தமிழ் வாசகர்கள் அனைவரது மனங்களையும் ஒருசேரக் கட்டிப்போட்ட கதை என்பதற்கு திரு. சுந்தா எழுதிய “பொன்னியின் புதல்வர்” என்ற நூலிலிருந்து ஒரு சான்று தருகிறேன்.
பொன்னியின் செல்வனும் பூங்குழலி அம்மையும்
வந்தியத் தேவனும் வானதியும் குந்தவையும்
பழுவூர் நந்தினியும் பழுவேட் டரையர்களும்
பாடாய்ப் படுத்துகிறார் படிக்கின்ற போதெல்லாம்
“பொன்னியின் செல்வன் தொடராய் வந்துகொண்டிருக்கையில் , விழுப்புரத்தில் உள்ள மகாத்மா காந்தி பாடசாலையில் கல்கிக்கு அளித்த வரவேற்பு மடலில் உள்ளது இந்தப் பாடல்.
நான் படித்த தி நகர் இராமகிருஷ்ணா பள்ளியில் (மெயின்), எங்கள் தமிழாசிரியர் திரு என். எஸ். வைத்தியநாதன் ஒருநாள் தஞ்சாவூரைத் தஞ்சை என்கிறோம் கோயமுத்தூரைக் கோவை என்கிறோம் ;அதுபோல கும்பகோணத்தை எப்படிச் சொல்வோம் என்று கேட்டார். “குடந்தை” என்று எழுந்து நான் சொன்னேன். சரி என சொன்ன ஆசிரியர் ”அதற்கு இன்னொரு பழைய பெயரும் உண்டு ..அதுவும் சொல்வாயா ?” என்று என்னை மடக்கினார்.
“சொல்வேன் சார் ! கும்பகோணத்துக்கு இன்னொரு பழைய பெயர் “குடமூக்கு” “ என்றேன்
அதிசயித்த ஆசிரியர். “எப்படித் தெரியும் ?” என்று கேட்டார்
“ பொன்னியின் செல்வன் நாவலில் இருக்கிறது” என்றேன். வகுப்பே கரவொலி செய்தது. ஆமாம் அன்றிலிருந்தே நான் கல்கிக்குக் கடன்பட்டிருக்கிறேன்.
சென்னை தி.நகரில் பிஞ்சாலசுப்பிரமணியின் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சிலகாலம் ”பொன்னியின் புதல்வர்” ஆசிரியர் எழுத்தாளர் திரு சுந்தா குடியிருந்தார். நானும் அதே பகுதி என்பதால் பலமுறை அவரை சந்தித்திருக்கிறேன். அவர் தனது டெல்லி வாழ்க்கை பற்றியும் சென்னை பற்றியும் ஒப்பிட்டு நகைச்சுவையாகப் பேசுவது வழக்கம். வயது வித்தியாசம் பாராமல் மிக எளிமையாக நட்போடு பழகுபவர்.
ஒருமுறை அவரிடம் “ சார் நீங்கள் எழுதிய கல்கியின் வாழ்க்கை வரலாற்றில் பொன்னியின் செல்வன் என்று ஏன் ஒரு தனி அத்தியாயம் எழுதவில்லை ? கல்கியின் பெருமைக்கு அது ஒரு அழியா சான்று அல்லவா ?” என்றேன்.
புன்னகைத்துக் கொண்டே சுந்தா “ அத்தியாயம் எதற்கு தலைப்பிலேயே பொன்னியின் செல்வர் வந்துவிட்டாரே !” என்றார். உண்மைதான் ! கல்கியின் வாழ்க்கைச் சரிதத்திற்கு இதைவிடப் பொருத்தமாக வேறு எந்த பெயர் இருக்கமுடியும்? வாளெடுத்து அருண்மொழிவர்மனும், வந்தியத்தேவனும் செய்த சாதனைகள் போன்று தாளெடுத்து பல சாதனைகளை நமது ஆசிரியரும் செய்தவரன்றோ !
2013-ம் ஆண்டு, ஜூன் மாதம் 14-ஆம் நாள்; எனது கல்லூரித் தோழர் பாம்பே கண்ணன் தயாரித்த “பொன்னியின் செல்வன்” ஆடியோ நூல் வெளியீட்டு விழா, சென்னை நாரத கான சபாவில் நிகழ்ந்தது. விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கல்கி ஆசிரியர் சீதா ரவி, பிரபல நடிகை சுஹாஸினி மணிரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் ஓர் அங்கமாக “ பொன்னியின் செல்வன்” வெற்றிக்கு மிகுதியும் காரணமாக இருப்பது கல்கியின் கருத்துச் செறிவா? கற்பனைப் பொலிவா ? என்ற பட்டிமன்றம் நிகழ்ந்தது. நடுவர் நானேதான்.
நான் நடுவராக இருந்த பல பட்டிமன்றங்களில் இன்னும் என் நினைவில் மிகப் பசுமையாக விளங்கும் பட்டிமன்றம் அது. கல்கியின் புதல்வரும், மேனாள் ஆசிரியரும் ஆகிய கல்கி ராஜேந்திரன் பட்டிமன்றம் முழுமையும் கேட்டு இரசித்தார்கள் என்பதை இன்றும் பெருமையுடன் நினைவுகூருகிறேன்.
பட்டிமன்றத் தீர்ப்பு என்னவா ? மறந்துவிட்டேன்; உங்கள் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்.