வணக்கம். “தவம் செய்த தவம்”, “அழகின் நண்பன்”, “மௌனத்தின் அழகிய கோணங்கள்” ஆகிய என் மூன்று கவிதைத் தொகுதிகளுக்குப் பின், என் காவியம் “கடவுளின் மரபணுக் கூடம்” உயிர்த்தெழுந்திருக்கிறது. என் கவிதைகள் எத்தனை பேரை சென்றடைகிறது, எத்தனை இரசிகர்களால் வாசிக்கப் படுகிறது என்பது எனக்குத் தெரியாது. சில வாசகர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுவதும் வழக்கமாக இருக்கிறது. எண்ணிக்கையில் எத்தனை பேர் என் கவிதைகளை வாசிக்கிறார்கள் என்பது தெரியா விட்டாலும், என் கவிதைகள் காலத்தை வென்று நிலவும் என்னும் நம்பிக்கை மட்டும் எனக்குள் எப்போதும் உண்டு. என் உள்ளத்தில் ஆழ வேர் விட்டிருக்கும் நம்பிக்கை அது. ஒரு கவிஞனாக சிந்தனைக்குள் செல்லும் போது, ஆழ்நிலை தியானத்திற்கு உள்ளாகிறேன்; அந்நிலையில் என் ஆழ் மனத்திலிருந்து சுரந்து வெளிவரும் சொற்கள் எல்லாம், இறையருளே உணர்த்தி வெளிப்படுத்தும் சொற்களாகும். மரபு இலக்கணத்திற்குள் இயல்பாக சொற்கள் அமைந்து நிற்பது இறையருளே அன்றி வேறில்லை என்பேன்!
தான் பிறந்த மண்ணை நேசிக்காதவன் நல்ல குடிமகன் ஆக மாட்டான். தாய்மொழியை காதலிக்காதவன் மனிதனே ஆக மாட்டான். மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் கவிஞனுக்குள் இயற்கையாக வேரிட்டிருக்கும் இயல்புகள் ஆகும். நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளமோ பிற மொழியாளரையும் ஈர்த்து அணைத்துக் கொள்ளும் தன்மையது. மண்ணை நேசிப்பது என்பதும், மொழியை நேசிப்பது என்பதும் நுட்பமான ஆழ்ந்த பொருளுடையது. என் மண்ணை நேசிக்கும் போது, இந்த மண்ணின் மக்களிடையே தொன்மையிலிருந்தே வளர்ந்து வந்த பண்பாட்டை விரும்பிப் பின் பற்றுகிறேன். அந்த பண்பாட்டின் கூறுகளை அடித்தளமாகக் கொண்டு தோன்றி வளர்ந்த சமய நம்பிக்கைகளை, இறையன்பை, கோயில் வழிபாட்டு முறைகளை ஏற்றுப் பின் பற்றுகிறேன். இந்த மண்ணிற்கு உகந்தவைகளையே மண்ணின் மக்கள் உணர்வில் இறைவன் தோன்றச் செய்கிறான்; அருளாளர்கள் வாய்மொழியாக சமய நம்பிக்கைகளை, கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறான். எப்படி ஒரு சிசுவின் உடல் வளர்ச்சிக்கு, அதன் தாய்ப்பால் அவசியமோ, அப்படியே முழுமையான மன வளர்ச்சிக்கு தாய்மொழிப் பயிற்சியும், மண்ணின் பண்பாட்டு மாண்புகளின் சிந்தனையும் மிக மிகத் தேவையாகிறது. “மன நலன் மன்னுயிர்க்கு ஆக்கம்” என்றார் வள்ளுவப் பெருந்தகை. ஆக்கமான மன நலனைத் தருவது தாய்மொழியின் மரபு சார்ந்த இலக்கியங்களும், தாய் மண்ணின் பண்பாடும், சமய நம்பிக்கைகளும் ஆகும்.
இன்றைய தமிழகத்தில், தமிழகத்தை உள்ளடக்கிய பாரதப் புண்ணிய பூமியில் நிகழும் பலவும் கவிஞனாக மட்டுமன்றி, ஒரு பாமரக் குடிமகனாகவும் என் உள்ளத்தைத் தாக்குகிறது; சில சமூக, அரசியல் போக்குகள் சோகத்தைத் தருகின்றன. இந்த நாட்டிற்கு ஒரு நல்ல தலைவன் இல்லையே என்ற ஏக்கம் மனத்துள் எழுகின்றது. சேக்கிழார் பெருமான் ஓர் அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று தன் பெரிய புராணத்தில் இலக்கணப் படுத்துகிறார்:
“மாநிலங் காவல னாவான் மன்னுயிர் காக்குங் காலைத்
தான் (அ)தனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்
ஊனமிகு படைத்திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ?”
இங்ஙனம் ஒரு தலைவன் – மண்ணை நேசிப்பவன், மக்களை நேசிப்பவன், தன் நலம் மறந்து நாட்டின் நலனை முன்னிலைப் படுத்திச் செயல் படுபவன் இத்தனை கோடி இந்திய மக்களிடமிருந்து ஒருவன் தோன்றி வர மாட்டானா என்கிற ஏக்கம் என் மனத்தைத் துளைப்பது போல, பாமர பாரத மக்கள் பலர் உள்ளத்தையும் துளைத்துக் கொண்டிருக்கக் கூடும். இந்த ஏக்கத்தின் விளைவே இந்த காவியம்.
மரபணு ஆராய்ச்சியால் பல சமூக மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று நம்புகின்றனர் இன்றைய மரபணு விஞ்ஞானிகள். அணுக்களால் நிரம்பிய இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ஒரே பரம்பொருள் அணுவுக்குள் அணுவாகவும், பெருமைக்கு மேல் பெருமையாகவும் நிறைந்திருந்து இயக்கிக் கொண்டிருக்கிறான்! அவன் மனம் வைத்தால் மட்டுமே ஒரு மாற்றுத் தலைவனை இந்தப் புண்ணிய பூமிக்கு தர முடியும். எத்தனையோ அருளாளர்களை இந்த நிலத்தில் பிறப்பெடுக்க வைத்த அவனால், அருள் மனம் கொண்ட ஒரு தலைவனை பிறப்பெடுக்க வைக்க முடியாமலா போகும்? காலம் இன்னும் கனிய வில்லை போலும்! அங்ஙனம் ஒரு தலைவன் கருவாகி உருவாகும் போது, அவன் இந்த உலகத்தையே ஆள்வான் அல்லவா? கவிஞனின் இந்தக் கனவே காவியமாக மலர்ந்திருக்கிறது.
இந்தக் காவியத்தில் தனி மனித உணர்வு வெளிப்படுகிறது; காதல் உணர்வு வெளிப்படுகிறது; சமூக உணர்வு வெளிப்படுகிறது; ஆன்மீக உணர்வு வெளிப்படுகிறது; இவற்றோடு அறிவியல் உணர்வும் வெளிப்படுகிறது. மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் பின்னிப் பிணைந்த காவியத்தில், கதையின் போக்கில் அரசியல் சூழல்கள் சுட்டிக் காட்டப்பட்டு தேவையான அலசலும் இடம் பெறுகிறது.
எளியேனின் இக்காவியம் உங்கள் உள்ளங்களில் இடம் பிடிக்கும் என்னும் நம்பிக்கை எனக்குண்டு.
மனம் மலர்த்தும் நன்றிப் பூக்கள்………
எளியேனின் “கடவுளின் மரபணுக் கூடம்” காவியத்தை சிறந்த செம்மையானப் பதிப்பாக வெளிக்கொணரும் வானதி பதிப்பக அதிபர் முனைவர் திரு.இராமநாதன் ஐயா அவர்களுக்கும்,
அணிந்துரை வழங்கியிருக்கும் என் வணக்கத்திற்குரிய பெரியவர் மேனாள் அரசவைக் கவிஞர் திரு.முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கும், ஐயாவுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த நண்பர் உரத்த சிந்தனை திரு.உதயம்ராம் அவர்களுக்கும்,
நட்புரிமையுடன் வாழ்த்துரை தந்திருக்கும், இலக்கிய உலகில் அன்புடன் ‘ஏர்வாடியார்’ என்றழைக்கப் படும், ‘கவிதை உறவு’ ஆசிரியர் கலைமாமணி எஸ்.இராதா கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும்,
பதிப்பக, அச்சக உதவியாளர்கள், ஊழியர்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் நூலகங்களுக்கும்,
காவியத்தை வாசித்து இரசிக்கப் போகும் என் வாசக, வாசகியர்கள் அனைவருக்கும்,
மற்றும்
ஒவ்வொரு சொல்லையும் என் உள்ளிருந்து எடுத்துத் தரும் இறையருளுக்கும்
கடவுளின் மரபணுக் கூடம் (காவியம்) வாழ்த்துரை
கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன், எம்.ஏ.
ஆசிரியர், ‘கவிதை உறவு’ , இலக்கிய மாத இதழ்
காவியம் எழுதுவதொன்றும் அத்தனை எளிய காரியமன்று. அது கதைக்கலையும், கவிதைத் திறனும் கைகோத்துக் கொள்ள வேண்டிய இலக்கிய வகை. இந்த எழுத்தின் இலக்காக சமூகப் பயனும் இருக்க வேண்டும். தமிழின் சிறந்த காவியங்கள் அவ்வாறே அமைந்துள்ளன. இவ்வகை இலக்கியங்கள் இலக்கணம் வழுவாது, இலக்கிலும் விலகாது காணப்பட வேண்டும். இந்த எதிர்பார்ப்பை “கடவுளின் மரபணுக் கூடம்” எனும் இக்காவியம் நிறைவேற்றியுள்ளது பாராட்டத் தக்கது.
உலகின் ஒவ்வொரு உயிர்ப்பொருளும் அணுவினால் ஆக்கப் பட்டவை. அந்த அணுவுக்குள்ளும் அணுவாய் மரபு இருத்தலைப் போலக் கடவுளும் இருக்கிறான் என்று நம்பப் படுகிறது. அந்த அணுவுக்குள் அந்தந்த உயிரினங்களுக்கான தன்மைகள் அமைந்துள்ளதைப் போல நாம் விரும்பும் தன்மைகளையும் புகுத்தலாம் என்பது அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையிலும் நிகழ்த்த முடியும் என்ற ஒரு சிந்தனையும் உண்டு. அந்த சிந்தனையை ‘கடவுளின் மரபணுக் கூடம்’ என்ற இக்காவியத்தின் வாயிலாய் கவிஞர் சின்மய சுந்தரன் விதைத்திருக்கிறார். காவியம் இனியதாகவும் கோட்பாடு கொஞ்சம் ஏற்கத் தக்கதாகவும் இருக்கிறது.
விபத்தொன்றில் சிக்கிக் கொள்கிற ஆரூரன் என்கிற முதியவரை செவ்விதன்-செண்பகம் தம்பதியர் மருத்துவ மனையில் சேர்க்கின்றனர். மருத்துவ மனையில் அவர் உணர்வு மயக்க நிலைக்குப் (கோமா) போய்விடுகிறார். அவரது உயிர் சொர்க்கத்திற்கு செல்கிறது. ஆரூரன் இறப்புக்கு முன்னம் வந்ததால் திருப்பியனுப்பப் படுகிறார். திரும்பிய ஆரூரனுக்கு முந்தைய நினைவுகள் மனத்தில் விரிகின்றன. செண்பகம் என்ற அந்தப் பெண் முற்பிறவியில் சேந்தனாகப் பிறந்திருந்த ஆரூரனின் மகள். அப்பிறவியில் சேந்தன் அமைச்சராகப் பணியாற்றிய சோழ மன்னனின் திருக்குமரன் இளவரசனைக் காதலித்துக் கரம் பற்ற முடியாமல் போனவள். இப்பிறப்பில் அந்த இளவரசன் செவ்விதனாகவும், அவள் செண்பகமாகவும் இணைந்திருக்கிறார்கள். நல்ல வண்ணம் முடிவது தானே நமது கதைகளின் பொதுவான இயல்பு. அவ்வாறே முடிகிறது கதை.
கதையின் போக்கில் பல்வேறு செய்திகள், கவிஞரின் ஆசைகள், ஆதங்கங்கள் என்று வளர்வது போற்றுதற்குரியது. சென்னை மக்கள் தொகை மிகுந்த நகரம். ஞான பாரதி வலம்புரி ஜான் சொல்வது போல மக்கள் தொகையில் இங்கே மனிதர்களின் எண்ணிக்கை குறைவு. சாலை விபத்தொன்றில் சிக்கிக் கொள்கிற ஆரூரனை காப்பாற்ற நிகழிடத்தில் கூட்டமிருந்தும் பரிவு காட்டவோ உதவவோ யாருமில்லை. செவ்விதனும், செண்பகமும் உதவுகிறார்கள். மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இந்தச் சாலை நிகழ்ச்சியை கவிஞர் சின்மய சுந்தரன் இப்படிச் சித்தரிக்கிறார்:
என்பது உண்மை தானே! உடலொன்றிலிருந்து பிரியும் ஆன்மாவானது வேறு ஒரு உடலுக்குள் செல்லலாம். சொர்க்கமோ நரகமோ சென்று மீளும் ஆன்மா குறிப்பிட்ட உடலுக்குள் சென்று மீண்டும் மறுபிறவி எடுக்கலாம். அப்படியேதும் நிகழாத போது அந்த ஆன்மா அலைக்கழிவதும் உண்டு என்று சொல்லும் கவிஞர் சின்மய சுந்தரன் மொழிப்பற்றும் மக்கட்பண்பும் உள்ளவர்க்கே மறுபிறவி செம்மையாய் அமையும் என்கிறார். தமிழ் மக்களுக்குப் பிற நாட்டார் போலத் தாய்மொழிப் பற்றில்லை என்றும் வருந்துகிறார்.
“பாதிக்கப் பட்டோர் பக்கம்
போய்விடார் எளிதில் யாரும்;
ஏதிலார் போல நிற்பார்;
ஏதேதோ உரைப்பார்; முன்எத்
தேதியில் எங்கோ ஆனத்
தெருவிபத் தொன்றை ஆய்வார்;
வீதியில் வளர்காப் பின்மை
விமர்சிப்பார்; வீணே நிற்பார்”
இது நாம் வெட்கப் பட வேண்டிய உண்மை. இக்காவியத்தின் மாடம் 9-ல் ‘தமிழாங்கிலர்’ என்றொரு சொற்றொடரை கவிஞர் சின்மய சுந்தரன் பயன் படுத்துகிறார்.
“தாய்மொழிப் பற்றை மற்றைத்
தரணிவாழ் மக்கள் வெற்று
வாய்மொழி யாக வல்ல;
உணர்வினில் ஏற்றுள் ளாரே!
ஆய்மொழி அமிழ்தை, ஞால
அறிவியல் அறிஞர் போற்றும்
தூய்மொழித் தமிழை ஏனோ
தமிழரே தரம்தாழ்க் கின்றார்!”
“கண்ணாடிக் குடுவை போன்ற
கட்டட அறைக்குள், சென்னை
மண்ணாடும் ஆங்கிலஞ் சேர்
மயங்கொலித் தமிழில் பல்லோர்
திண்டாடித் திணறிப் பேசி
தமக்குளே பலவா தித்துப்
புண்ணாடும் நாவால் சோர்ந்து
புலம்பியே இருத்தல் கண்டார்”
என்கிறார் கவிஞர். தமிழர்களுக்கு தமிழுணர்வு வேண்டும், தமிழ் பேச வேண்டும், அத்தகையோர்க்கே சொர்க்கம் அருளப் படும் என்கிறார் கவிஞர் சின்மய சுந்தரன். காவிய நகர்விலும், கவிதை ஓட்டத்திலும் அங்கங்கே அவர் தூவும் உவமைகள், காதல் உணர்வூட்டும் வரிகள் யாவும் நமக்கு உவமைக் கவிஞர் சுரதா, கவியரசர் கண்ணதாசன், கம்பர் ஆகியோரை நினைவூட்டுவது சிறப்பு.
“சேந்தனார் மகளும் வாழ்வில்
செய்வளோ தவறு? எந்தக்
காந்தமும் இழுக்கா வைரக்
கல்லென ஒழுக்கச் செம்மை
ஏந்திய நெஞ்சை என்னுள்
எழிலுற வளர்த்தீர் அன்றோ!”
என்று அமைச்சர் சேந்தனாரின் மகள் கூறும் வரிகள் அவர் வளர்த்த சிறப்புக்குச் சான்று. சமூகம் சார்ந்த சிந்தனைகளிலும் இக்காவியம் சிறந்தோங்கியுள்ளது. எண்ணற்ற எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக ஒரு கவிதை. ஆட்சி என்பது கயவர் கை சென்று விடலாகாது என்கிற கவனம் நம் கவிஞருக்கு இருப்பது குறிப்பிடத் தக்கது.
“அரசியல் தலைவர், தேச
அதிகார நிர்வா கத்தார்,
உரியஅத் துறையைச் சார்ந்த
வித்தகர் இவர்கள் கூடி
நிரல்முறை ஆய்ந்து நியாயம்
நிலைபெறுத் துவதை விட்டு,
திரிகிற கயவர் கையில்
தருவரோ சட்டந் தன்னை?”
என்பதோடு மட்டுமல்ல, “வாள் உடை வீரம் எல்லாம் வரலாறாய் ஓய்ந்தாயிற்றே” என்றும் வருந்துகிறார். முழுக் காவியத்தைப் படித்து முடித்ததும் நம் மனத்தில் நிறுத்த வேண்டிய செய்தியை பின் வரும் கவிதையால் புலப்படுத்துகிறார்.
“மரபணு மாற்றம் என்னும்
மகத்தான வித்தை கூடின்
தரமுயர் அறிவில் மக்கள்
தனித்துவம் எய்தக் கூடும்;
உரம்பெறும் உடம்பில் வாழ்நாள்
உயரவும் கூடும்; நோய்தீர்
வரம்பெறக் கூடும்; வான்போல்
வையகம் மாறக் கூடும்”
நல்ல நாவலைப் படித்த நிறைவும், நற்சுவைத் தமிழை நுகர்ந்த உணர்வுமாய் ஒரு கவிதானுபவத்தை கவிஞர் சின்மய சுந்தரன் இக்காப்பியத்தின் வழியே நமக்குக் கொடுத்திருக்கிறார். அறுசீர் விருத்தம் நறுந்தேன் சுவையென வாசிப்போர்க்கு வழங்கி மகிழ்ந்திருக்கும் அவரைப் பெரிதும் பாராட்டி, இன்னும் எழுதுக, இமாலயப் புகழ் பெறுக என்று வாழ்த்துகிறேன்.