நூறாண்டுகளைத் தாண்டி, “இராமகிருஷ்ண விஜயம்” !
தமிழகத்தில், அரசியல், சினிமா, பொழுதுபோக்கு அம்சங்கள் என எதுவும் இல்லாமல் ஒரு பத்திரிகை நூறாண்டுகளுக்கும் மேலாக மாதம் தவறாமல் வெளி வந்துகொண்டிருக்கிறது – 2007 ஜூலையில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆயின. இன்று அதையும் தாண்டி விற்பனை! கொரோனா காலத்திலும் இடைவிடாது வெளிவந்து சாதனை படைத்த பத்திரிகை; சமயம், பண்பாடு, கல்வி, அறிவியல் எனப் பல உபயோகமான தகவல்களைத் தாங்கி வரும் மாத இதழ்தான், ‘ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்’. அரசியல், ஜாதி, மதம், இனம் இவற்றையெல்லாம் ஒதுக்கி, மக்களுக்கான ஆரோக்கியமான இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது!
“சென்னையிலிருந்து ஆன்மீக அலையெழுந்து இந்தியாவையே மூழ்கடிக்கப் போகிறது என்பதில் எனக்கு திடமான நம்பிக்கை உள்ளது” என்றார் சுவாமி விவேகானந்தர். இதன் தொடக்கமாக ‘பிரம்மவாதின்’ என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று முதலில் சென்னையில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு ஶ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஶ்ரீசாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகிய தெய்வத் திருமூவரின் வாழ்க்கையையும், உபதேசங்களையும் எடுத்துச் சொல்ல, சுவாமி பிரம்மானந்தரின் சீடர் சுவாமி சர்வானந்தர் 1921 ஆம் ஆண்டு, ‘ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்’ என்ற மாத இதழைத் தொடங்கினார். திரு அண்ணா என்.சுப்ரமணியம், திரு மயில்வாகன பண்டிதர் (சுவாமி விபுலானந்தர்), திரு கே.சி. ராமசாமி ஐயர் மூவரும் பத்திரிகை ஆசிரியப் பொறுப்பேற்க,
“இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு”.
என்ற திருக்குறளைக் (352) கொள்கை விளக்க வரிகளாகக் கொண்டு ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் தன் பயணத்தைத் தொடங்கியது.
‘’விஜயம்’ என்பதற்கு, ‘வெற்றி’ அல்லது ‘வருகை’ என்ற பொருள் கொள்ளலாம். ‘ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்’ தமிழ்நாட்டில் ஆன்மீக ‘விஜயத்தை’ – வருகையை – ‘வெற்றி’கரமாகப் பரப்பி வருகிறது! ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர், சுவாமி கெளதமானந்தர் சொல்வதைப் போல, ”ஶ்ரீராமகிருஷ்ணர் இந்தப் பத்திரிகையின் வடிவில், ஒவ்வோர் இல்லத்திற்கும் வருகை தருகிறார். அவரது வருகை என்பது மங்களகரமான ஒன்று; மக்களுக்கு நன்மை பயக்கும் ஒன்று.”
“வேதாந்தச் சிந்தனைகளை, சாமான்ய மக்களிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டதுதான் நம் நாட்டினைச் சீரழிவுக்கு ஆளாக்கியது. மனிதகுலத்திற்கு அவர்கள் தெய்வீகத் தன்மையைப் போதிப்பதும், வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் அதை அவர்கள் எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதைத் தெளிவுபடுத்துவதும்தான் எனது லட்சியம்” என்றார் சுவாமி விவேகானந்தர். அந்த உயர்ந்த இலட்சியத்தின் வெளிப்பாடுதான் ‘ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்’.
ஆன்மீகம், தத்துவம், பண்பாடு, கலாசாரம், கல்வி, ஒழுக்கம், பக்தி, சேவை எனப் பல துறைகளிலும் சமூகத்தை வழிநடத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ‘ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்’ போற்றுதலுக்குரியது.
‘ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் வகையில், சென்னை ஶ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125 ஆவது ஆண்டு வைபவ வேளையில் 24.03.2023 அன்று விஜயத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழாவும், இளைஞர்களுக்கான ‘ஆகுக; ஆக்குக’ என்னும் கருத்தரங்கமும், யுவதிகள் மற்றும் பெண்களுக்கான ‘நவயுகத்தில் பெண்மணிகள்’ கருத்தரங்கமும், சிறுகதை மற்றும் கட்டுரை குறித்த கருத்தரங்கமும், ‘கலைகள் மூலம் கடவுள் ஆராதனை’ என்கிற கலைகள் சார்ந்த கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஶ்ரீராமகிருஷ்ணா மடத்தில் ‘விவேகானந்தரும் இளைஞர்களும்’ என்ற தலைப்பில், இளைஞருக்கான கருத்தரங்கில் உரையாற்றவோர் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது, மனதில் அவ்வளவு மகிழ்ச்சி!
“வீரனாக எழுந்து நிற்க வேண்டுமா? வலிமையும் மன உறுதியும் வேண்டுமா? தன்னம்பிக்கை வேண்டுமா? ஒழுக்கமாக வாழ வேண்டுமா? ‘கர்ம யோகம்’ தெரிய வேண்டுமா? ஆன்மீகம் அறிய வேண்டுமா? கல்வி பற்றிய தெளிவு வேண்டுமா? சாதி, மதப் பிரச்சனைக்குத் தீர்வு வேண்டுமா? புதிய இந்தியாவைப் படைக்க வேண்டுமா? விவேகானந்தரை வாசியுங்கள், அவரது சிந்தனைகளை சுவாசியுங்கள் – எழுச்சி மிகுந்த பாரதத்தை உருவாக்குவீர்கள்” – என்பதே அன்று நான் பேசிய பேச்சின் சுருக்கம்!
நூற்றாண்டு விழாவினை ஒட்டி, ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழ்களிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளின் தொகுப்பாக, ”நூறாண்டு ஶ்ரீராமகிருஷ்ண விஜய பாரம்பரியம்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது; தொகுத்தவர் மூத்த பத்திரிகையாளர் திரு மாலன் அவர்கள். அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு.
“ஆன்மீகத்தைப் பற்றியும், அறிவியலைப் பற்றியும் ஒரு சேரப் பேசிய இதழ்கள் தமிழில் இல்லை. கலாசாராத்தைப் பற்றியும், கல்வியைப் பற்றியும் ஒரு சேரப் பேசிய இதழ் ஏதுமில்லை. இலக்கியத்தைப் பற்றியும், சமூக சேவையைப் பற்றியும் பேசிய இதழோ, இளைஞர்களைப் பற்றியும், சான்றோர்களைப் பற்றியும் பேசிய இதழோ இங்கு இல்லை. ஆனால், இவை எல்லாவற்றைப் பற்றியும் அக்கறையோடும் ஆழ்ந்த சிந்தனையோடும் எளிமையான மொழியில் அழகான வடிவமைப்பில் பேசிய ஒரே தமிழ் மாத இதழ் ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்” – கட்டுரையில் மாலன்.
புத்தகத்திலிருந்து …..
“ஸ்வாமி, ஒருவன் உலகத்தைத் துறந்தாலொழிய கடவுளை அடைய முடியாதென்பது உண்மையா?” என்ற கேள்விக்கு பதிலில் பகவான் இராமகிருஷ்ணர்:
”நீ இவ்வுலகில் கிருஹஸ்தனாக இருந்தாலும் சரி, லெளகீகனாகயிருந்தாலும் சரி; அதனால் ஒன்றும் பாதகமில்லை. நீ உன் மனதை மட்டும் பகவான்பால் நிலை நிறுத்த வேண்டும். ஒரு கையினால் உன் வேலையைச் செய்; மறு கையினால் பகவானுடைய பாதங்களைப் பிடித்துக் கொள். இவ்வுலகில் உனக்குச் செய்ய வேண்டிய வேலையில்லாமல் இருக்கும்போது நீ உன் இரு கைகளாலும் பகவான் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்து, உன் ஹிருதயத்தோடு அணைத்துக்கொள்”. – இராமகிருஷ்ண விஜயம் முதல் இதழிலிருந்து (ஜனவரி 1921).
“ஒரே வஸ்துவான தண்ணீரைச் சிலர் ஜலம் என்றும், சிலர் வாரி என்றும், சிலர் அக்வா என்றும், சிலர் பானி என்றும் வேறு வேறு வார்த்தைகளால் கூறுகின்றனர். அதே போல ஸச்சிதானந்த பிரம்மத்தைச் சிலர் கடவுள் என்றும், சிலர் அல்லாவென்றும், சிலர் ஹரி என்றும், சிலர் சிவனென்றும், சிலர் பிரம்மம் என்றும் கூறுகின்றனர்.
ஒவ்வொருவனும் தன்னுடைய மார்க்கத்தை அனுசரிக்கட்டும். கிறிஸ்துவன் கிறிஸ்து மார்க்கத்தையும், முகமதியன் முகமதிய மார்க்கத்தையும் பின்பற்ற வேண்டும். ஹிந்துக்களுக்கோ ஆரியரிஷிகள் ஏற்படுத்திய பிராசீன மார்க்கந்தான் உத்தமமானது”. தர்ம ஸ்மன்வயம் அல்லது மதங்களின் ஒற்றுமை பற்றி.. (மார்ச் 1921 இதழிலிருந்து).
இந்து மதம் பற்றி மட்டும் பேசும் இதழாக இல்லாமல், பெளத்த மதம் (‘புத்தர் புகட்டிய நல்வழிகள்’ – சுவாமி சித்பவானந்தர் – 1928), இயேசுநாதர் (‘பெரியோர் சரிதை’ டிச் 1924, ஜன 1929), ‘கிறிஸ்துவர்களும், தேசீய இயக்கமும்’ (சுவாமி விபுலானந்தர் 1927), ‘முகம்மது நபி’ பற்றிய கட்டுரை (டி.எஸ். அவினாசிலிங்கம் ஜூன் 1928) என அனைத்து மதங்களைப் பற்றியும் கட்டுரைகள் வெளியிட்டு, மத நல்லிணக்கத்தைப் பேசியது ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்.
கி.வா.ஜ., ரா.பி.சேதுப்பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி, கி.சந்திரசேகர், தத்துவ அறிஞர் டி.எம்.பி.மகாதேவன் போன்ற இலக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. 1952 டிசம்பரில் வெளியாகியுள்ள சகோதரி நிவேதிதா அம்மையாரின் சுய சரிதை, 1957 ஜனவரியில் வெளியான ராஜாஜியின் ‘ஒரு தெய்வக் கொள்கை’ கட்டுரை ஆகியவை முக்கியமானவை.
“என் கருத்துப்படி, இந்திய விடுதலைக்கான தேசியப் போராட்டத்தைத் துவக்கிய மகோன்னதமான மனிதர்களில் சுவாமி விவேகானந்தரும் ஒருவர்” – ஜவஹர்லால் நேரு.
1977 ஜூலை – கவிஞர் கண்ணதாசனின் கவிதை:
மனைவியோ டிருந்தார்; ஆனால்
மஞ்சத்தை நினைத்தாரில்லை
வினைபல புரிந்தார், ஆயின்
விளைபலன் கேட்டாரில்லை
தனையவர் வென்றா ரங்கே
தரணியின் மனத்தை வென்றார்
இனையவர் புவியில் இல்லை;
இவர் பெயர் பரமஹம்சர்!
2010 ஆகஸ்ட் இதழில் வெளியான ஒரு துணுக்கு:
ஒரு துறவியிடம் இன்னொரு துறவி கேட்கிறார்: ‘குருவே, துறவி இ-மெயில் வைத்திருப்பது சரியா?’
அதற்கு குருவின் பதில்: பார்க்கலாம், அதில் பற்று (Attachment) இல்லாதவரை!
அனைவரும் வாசிக்க வேண்டிய மாத இதழ் “ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்”. இன்னும் பல நூறாண்டுகள் மனித மனவள மேம்பாட்டுக்காக ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் வெளி வர பகவான் ஶ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஶ்ரீசாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் அருள் செய்ய வேண்டிக்கொள்வோம்!
மிகச் சிறப்பு டாக்டர். இதழையும் படித்தேன், இந்தப் பதிவையும் படித்தேன். இரண்டுமே அருமை.
LikeLike