எட்டுத்தொகை நூல்களுள் ஐங்குறுநூறு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் பெயர்களில் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.
அவை, ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டதாக விளங்குகின்றன. இந்நூல் குறைந்த அடியெல்லை கொண்ட பாக்களால் அமைந்தமையால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.அந்தப் பாடல் சிவபெருமானின் விரிவாக்கத் தன்மையை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த 100 பாடல்களையும் ஒவ்வொரு புலவர் இயற்றியுள்ளார். அவ்வகையில் இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் வெண்பாவைக் கீழே காண்போம்.
மருதம்ஓ ரம்போகி நெய்தல்அம் மூவன்
கருதும் குறிஞ்சிக் கபிலர்–கருதிய
பாலைஓத லாந்தை பனிமுல்லைப் பேயனே
நூலைஓது ஐங்குறு நூறு.
மருதத் திணைப் பாடல்களை ஓரம்போகியார்,
நெய்தல் திணைப் பாடல்களை அம்மூவனார்,
குறிஞ்சித் திணைப் பாடல்களக் கபிலர்,
பாலைத் திணைப் பாடல்களை ஓதலாந்தையார்
முல்லைத் திணைப் பாடல்களைப் பேயனார் ஆகியோர் பாடி உள்ளனர்.
இந்நூலைத் தொகுத்தவர் “புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்” என்னும் புலவர்.
தொகுப்பித்தவன் “யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை” என்ற வேந்தன் ஆவார். ஐங்குறுநூற்றில் உள்ள ஐந்நூறு பாடல்களில், 129, 130 ஆஅகிய இரண்டு பாடல்கள் மறைந்து போனதால் 498 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். இதில் திணைப்பாடல்கள் அமைவுமுறையை, “மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே” என்ற அடிகள் தெளிவுபடுத்துகின்றன. இந்நூலில் நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அப்பாடல்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ ஒவ்வொரு பத்துப் பாடல்களும் சிறப்பான தலைப்புப் பெயர்கள் பெற்றுள்ளன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, தெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருள் அமைப்பாலும் பெயர் பெற்றன.
மேலும் தொண்டிப்பத்து (பாடல் 171-180) என்ற தலைப்பின் கீழ் அமைந்த பத்துப் பாடல்களும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. இதனைப் பாடியவர் நெய்தல் திணையைப் பாடிய அம்மூவனார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாய்ப்பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. ஐந்திணைக் கருப்பொருட்களான விலங்குகளையும் பறவைகளையும் அடிப்படையாகக் கொண்டு எருமைப்பத்து, கேழற்பத்து (கேழல்-பன்றி), குரக்குப்பத்து, கிள்ளைப்பத்து (கிள்ளை-கிளி), மஞ்ஞைப்பத்து (மஞ்ஞை-மயில்), போன்ற பெயர்களும் பாடல்களின் தொகுப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.
ஐங்குறுநூற்றின் பாடல்கள் கடைச்சங்க காலம் முதலாகச் சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நூலை டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர்த் தமிழறிஞர் பலரும் இந்நூலுக்கு உரைகள் எழுதி வெளியிட்டுள்ளனர்.
தலைவன் தலைவியைப் பிரிந்து புறத்தொழுக்கத்தில் நெடுநாள் ஈடுபட்டான். பின்னர் “இது தகாது” என உணர்கிறான். தலைவியோடு கூடி வாழ வருகிறான். அப்பொழுது அவன், “நான் உங்களைப் பிரிந்திருந்த காலத்தில் நீங்கள் என்ன கருதினீர்கள்” என்று கேட்கிறான். அதற்கு விடையாகத் தோழி கூறுவதாகப் பத்துப் பாடல்களும் அமைந்துள்ளன, எல்லாப் பாடல்களுமே அப்பொழுது ஆண்டு கொண்டிருந்த அவினி என்னும் பெயருடைய சேர மன்னனையும் அவன் குடியாகிய ஆதன் என்பதையும் வாழ்த்தி, “வாழி ஆதன் வாழி அவினி” என்றே தொடங்குகின்றன. எந்த ஒரு செயலும் மன்னனை முதன்மைப்படுத்தி அவனை வாழ்த்திய பிறகே மக்கள் தொடங்கினர் என்று இதன்வழி உணரலாம்.
தோழி, ”வாழி ஆதன் வாழி அவினி
பசிஇல் ஆகுக! பிணிசேண் நீங்குக”
என்வேட் டோளே யாயே யாமே” என விடை கூறுகிறாள்.
“நாங்கள் மன்னன் வாழ்க என்றும், நாட்டில் பசி இல்லாமல் போகட்டும், நோய் அகன்று போகட்டும் என நினைத்திருந்தோம்” என்பது இதன் பொருளாகும். மன்னன் சிறப்புடன் வாழ்ந்து சிறப்பாக ஆட்சி செய்யும் நாட்டில் பசியும், நோயும் இருக்காது. அப்படிப்பட்ட நாட்டை விரும்பினோம் என்கிறாள். உறு பசியும் ஓவாப்பிணியும் இல்லாததுதான் நாடு என்பார் வள்ளுவர்.
மற்றொரு பாடலில், தோழி,
“வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக” என்கிறாள்.
அதாவது நம்அரசனுக்குப் பகை இல்லாமல் போகட்டும், அரசன் பல்லாண்டு வாழட்டும் என்று நினைத்திருந்தோம். ஒரு நாட்டுக்குப் பகைவர் இருந்தால் எப்பொழுதும் போர் நடந்துகொண்டே இருக்கும். மக்கள் அமைதியாய் வாழமுடியாது என்று இது கூறுகிறது. மேலும் தங்கள் மன்னன் பல்லாண்டு சிறப்புடன் வாழவேண்டும் என்றும் விரும்புவதாக அவள் கூறுகிறாள்.
இப்படி ”நாட்டில் தீமை இல்லாமல் போகட்டும்; பால் வளம் பெருகட்டும்; நெல் மிகுதியாக விளையட்டும்; பொன் மிகுதியாகக் கிடைக்கட்டும் என்றெல்லாம் நாங்கள் நினைத்திருந்தோம் என்று தோழி இப்பாடல்களில் கூறுகிறாள். தலைவனைப் பிரிந்து வருத்தத்தில் இருந்த போதும் மன்னனைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் நினைத்த மக்களின் வாழ்வை எண்ணி நாம் பெருமைப்படத் தோன்றுகிறது.
நெய்தல் பற்றிய பாடல்கள் பத்துப் பத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ’ஞாழப்பத்து’ என்பதில் அக்கால மக்களின் திருமண நிகழ்வுகள் சிலவற்றை அறிய முடிகிறது. ஞாழல் என்பது கொன்றைமர வகைகளில் ஒன்றாகும். இது கடற்கரைப்பகுதியில் அதிகமாகக் காணப்படும். ஒவ்வொரு பாடலும் ஞாழல் தொடர்பைக் கொண்டிருப்பதால் இப்பகுதி ஞாழல் பத்து எனப்பெயர் பெற்றது.
அவனும் அவளும் சந்திக்கின்றனர். ஒருவர் மனத்தில் மற்றவர் நுழைந்து காதல் கொண்டு களவு நடைபெறுகிறது. அவள் அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள். அவனோ சிறிது காலம் கடத்துகிறான். அவள் வேதனைப் படுகிறாள். பின்னர் ஒருநாள் அவன் திருமண எண்ணத்துடன் வருகிறன். அதை அறிந்த அவள் மகிழ்ச்சியுடன் தன் தோழியிடம் சொல்லும் பாடல் இதுவாகும்.
”எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழினர்
நறிய கமழும் துறைவற்கு
இனிய மன்ற-எம் ,மாமைக்கவினே.” [ஐங்குறு நூறு—146]
[எக்கர்=மணல்மேடு; மாமை=மாந்தளிர்நிறம்]
“நீரால் உண்டாக்கப்பட்ட மணல் மேட்டில் ஞாழல் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள், நறுமணம் வீசுகின்ற துறையைச் சார்ந்தவனுக்கு என் மாந்தளிரைப் போன்ற அழகு இனிமையானதே பார்த்தாயா?” என்பது பாடலின் பொருளாகும்.
ஞாழல் அரும்பு முதிர்ந்து மலராக மணம் வீசுவது போல அவன் கொண்ட அன்பு முதிர்ந்து இப்போது மணமாகவும் உறுதியாகி அனைவர்க்கும் செய்தி பரப்புகிறது என்பது மறைபொருளாகும்.
அவன் அவளைப் பெண் கேட்கச் சான்றோர் பலரைத் துணையாகக் கொண்டு அவளின் பெற்றோரை அணுகுகிறான். அவள் தாய் தந்தையர் மகிழ்ச்சி அடைகின்றனர். வந்தவரை வரவேற்றுத் தம் மகளை மணக்க வேண்டுமாயின் சிலவற்றை மணப்பொருளாகத் தரவேண்டும் என்கின்றனர். இது மணமகளை மணப்பதற்காகத் தருகின்ற வரைபொருளாகும். இதை முலைவிலை என்றும் கூறுவர். அவன் அவர்கள் கேட்டவற்றைத் தந்து மேலும் தருகிறான். இதனைக் கண்ட தோழி உள் வீட்டில் இருக்கும் அவளிடம் போய்ச் சொல்லும் பாடல் இதுவாகும்.
”எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
ஒண்தழை அயரும் துறைவன்
தண்தழை விலையென நல்கினன் நாடே” [ஐங்குறுநூறு—147]
[அயர்தல்=விளையாடி மகிழ்தல்; தழைவிலை=மணப்பெண்ணுக்குத் தருகின்ற வரைபொருள்; முலைவிலை என்றும் சொல்வதுண்டு]
”மகளிர் மணல்குன்றில் விளையாடச் செல்கின்றனர் அங்கே ஞாழல் மலர்களைக் காணாததால் அதன் தழைகளை ஆடையாக அணிந்து விளையாடும் துறையைச் சேர்ந்தவனான நம் தலைவன் உனக்குரிய குளிர்ச்சியான தழையாடையின் விலையாக தனக்குரிமையான ஒரு நாட்டையே அளித்தானடி” என்பது பாடலின் பொருளாகும்.
அவன் பெரும் செல்வக்குடியைச் சார்ந்தவன் என்பதும் அவளிடம் மிகுந்த காதல் கொண்டவன் என்பதும் இப்பாடல் மறைமுகமாக உணர்த்துகிறது.
அவனுக்கும் அவளுக்கும் திருமணம் இனிதே நடந்தேறுகிறது. தோழி தன் தலைவியைத் தலைவனுடன் இன்புற்று மகிழுமாறு பள்ளியிடத்தே கொண்டு விடுகிறாள். அப்போது அத்தோழி தலைவியை வாழ்த்திச் சொல்லும் பாடல் இதுவாகும்.
”எக்கர் ஞாழல் இகழ்ந்துபடு பெருஞ்சினை
வீயினிது கமழும் துறைவனை
நீ இனிது முயங்குமதி காத லோயே” [ஐங்குறுநூறு—148]
[வீ=பூ; இகந்து படல்=வரம்பு கடந்து உயரமாக விளங்கல்; பெருஞ்சினை=பெரிய கிளை; முயங்கல்=தழுவி இன்புறல்]
“அன்புடையவளே! மணல் குன்றிலே எல்லை கடந்து உயர்ந்து வளர்ந்த பெரும் கிளைகளிலே பூத்துள்ள ஞாழல் பூக்கள் நாற்புறமும் மணம் வீசும் துறையைச் சார்ந்த நம் தலைவனை இனி நீ இனிதாகத் தழுவி இன்புறுவாயாக” என்பது பாடலின் பொருளாகும்.”
ஞாழல் பூக்களின் மணம் எல்லா இடங்களிலும் கமழ்தல் போல உன் மண வாழ்வும் இனிதாக யாவரும் போற்ற அமையட்டும் என்பது மறைபொருளாம்.
அடுத்துத் தோழி தலைவனையும் வாழ்த்துகிறாள். அந்தப் பாடல் இதுவாகும்.
”எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்கு வளர் இளமுலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்தகறல் வல்லா தீ மோ” [ஐங்குறுநூறு—149]
[சுணங்கு=அழகுத்தேமல்; அணங்கு வளர்த்தல்=வருத்தம் வளரச்செய்தல்; வல்லாதீயோ=வன்மையுறாதிருப்பீராக]
“ஞாழல் பூவின் இள மஞ்சள் நிறம் போல அழகுத் தேமல் படர்ந்துள்ள இளமையான முலைகளைக் கொண்டுள்ள இவளுக்கு வருத்தத்தை வளரச் செய்து, பிரியும் செயலை ஒருபோதும் மேற்கொள்ளாது இருப்பீராக” என்பது பாடலின் பொருளாகும்.
இவ்வாறு மணம் பேச வருதல், மணமகன் மணமகளுக்கு வரைபொருள் அளித்தல், தோழி மணமகளையும் மணமகனையும் வாழ்த்தல் போன்ற செய்திகளை ஐங்குறு நூற்றில் காணமுடிகிறது.
சங்ககாலத்தில் பண்டம் மாற்று முறையில்தான் வணிகம் நடைபெற்று வந்தது. தங்களிடம் இருக்கும் ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக வேறொரு பொருளை அக்கால மக்கள் வாங்கி வந்தனர். இதுவே பண்டமாற்று முறையாகும். பாண்மகன் ஒருவன் வலைவீசி வரால் மீன்களைப் பிடிக்கிறான். அம்மீன்களை விற்று வரத் தன் இளையமகளிடம் கொடுத்து அனுப்புகிறான். அப்பெண் அம்மீன்களை ஓலைப்பெட்டியில் எடுத்துக் கொண்டு விற்கச் செல்கிறாள்.
தலைவி ஒருத்தி அந்த வரால் மீன்களை வாங்கிக்கொண்டு அதற்கு ஈடாக ஓலைப்பெட்டி நிறைய வெண்ணெல்லைக் கொடுத்து அனுப்புகிறாள். நெல்லானது “யாண்டுகழி வெண்ணெல்” என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. அதாவது அந்நெல் ஓராண்டுக்கு முன் அறுவடையானதாகும் பழைய நெல்லைக் குத்தி அரிசியாக்கி உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் மீன்களுக்குப் பதிலாக நெல்லைக் கொடுக்கும் அளவுக்கு அந்த ஊர் வளமாக இருந்ததாக அறியப்படுகிறது. தவிர வலைவீசி மீன்பிடிப்போர்க்கு மீன்கள் அதிகம் உணவாகக் கிடைக்கும் ஆனால் நெல்லரிசி கிடைக்காது. அது போலவே உள்ளுரில் வசிப்போர்க்கு மீன்கள் கிடைப்பது அரிது. எனவேதான் அவர்கள் இருவரும் தங்களிடம் இருப்பதைக் கொடுத்து வேண்டியதைப் பெறுகிறார்கள்.
இஃது ஐங்குறுநூறு காட்டும் காட்சியாகும். தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையர்பால் தங்கினான். அவர்கள் செய்த பற்குறி, நகக்குறி அவன் உடலில் தங்கி உள்ளன. இப்பொழுது அவன் மீண்டும் அவன் தலைவியிடம் வருகிறான். அப்பொழுது அக்குறிகளுடன் நீ இங்கு வரவேண்டாம் எனத் தலைவி உரைக்கிறாள். அவனை மறுத்தாலும் அவன் ஊரானது வெண்ணெல்லுக்கு மாற்றாக வரால் மீன்களைப் பெறும் வளமானது என்று அவன் ஊரைப் புகழ்ந்துதான் மொழிகிறாள். அவள் அடிமன ஆழம் தலைவனிடம் இருப்பது புரிகிறது. புலவிப்பத்து பகுதியின் எட்டாம் பாடல் இதுவாகும்.
“வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர!
வேண்டேம் பெருமநின் பரத்தை
ஆண்டுச்செய் குறியோடு ஈண்டுநீ வரலே.
இவ்வாறு தொட்ட இடமெல்லாம் ஐங்குறுநூறு இலக்கிய இன்பத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் விளக்கும் கருவூலமாகத் திகழ்கிறது எனலாம்.
மிகவும் அருமை ஐயா.
LikeLike