இந்த மாதத்தின் சிறந்த கதையாக கிரிஜா பாஸ்கர் அவர்கள் தேர்ந்தெடுத்த சிறுகதை :
தாவரங்களுடன் உரையாடுபவள்
எழுதியவர்: சோ.சுப்புராஜ் உயிர் எழுத்து மார்ச் 2023
மார்ச் 2023 மாதத்திற்கான ‘எழுத்தாளர் சிவசங்கரி – குவிகம் சிறுகதை தேர்வு’ பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு பத்திரிகைகில் வந்த கதைகளை கூர்ந்து படித்தது ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது. இதில் நான் கற்றவை ஏராளம்.
இனி என்னைக் கவர்ந்த கதைகள் குறித்து
- மன்னிப்பு : சரவணன் சந்திரன் உயிர்மை மார்ச் 2023
கதை நகரத்தின் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் டெய்ஸி என்ற இளம்பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியது. வறுமை எப்படி தாய் – மகளுக்குள் ஓர் எதிரும் புதிருமான நிலையை உருவாக்கும் என்பதை படம் பிடிக்கிறது. கதையின் நிறைவாக வரும் வரி கதையின் முடிச்சை அழகாக அவிழ்க்கிறது.
2. சின்னக்கிளி குட்டியப்பன் : ராஜேஷ் வைரபண்டியன் விகடன் 08.03.2023
கதை, அண்ணன் மகன் குட்டியப்பனை எடுத்து வளர்க்கும் ஆச்சியிலிருந்தும் அவளுடைய பசுமாடு, கோழி, கோழிக்க்குஞ்சுகள், கயிற்றுக்கட்டில் என்ற சிறிய உலகத்தில் நடக்கிறது. குட்டியப்பன் குடியின் போதைக்கு அடிமையாகிறான். அழிவிலிருந்து அவனை மீட்கவே முடியவில்லை. இந்த எளிய உலகத்திற்குள் இச் சிறுகதை நம்மைக் கட்டி இழுக்கிறது.
3. நட்பூ : ஜனநேசன் திண்ணை 26.03.23
மரணப்படுக்கையில் கிடக்கும் சந்திரவதனாவின் தாயாரிடமிருந்து கதை தொடங்குகிறது. அந்த நேரத்திலும் அவள் “சந்திரசேகர்” என்ற பெயரை உச்சரிக்கிறாள். ஆனால் அவள் கணவர் பெயரோ சந்திரசேகர் இல்லை. சந்திரசேகர் என்பவர் அம்மாவின் இளம் பருவ நண்பர் என்று சந்திரவதனாவுக்குத் தெரிய வருகிறது. பழைய சினிமா கதை போல் இருந்தாலும், கதையில் உண்மைத் தன்மையும் அன்பின் பெருக்கெடுப்பும் மிளிர்கிறது.
4. மீதிக்கதை : இந்திரா பார்த்தசாரதி உயிர்மை மார்ச் 2023
இந்த ஆழமான சிறுகதை ராமாயண காவியத்தில் ராமன் இறுதியில் அரியணையில் ஏறி அமர்ந்த பிறகு, மீதிக்கதையை சொல்ல முற்படுகிறது . குழந்தைகள் லவனும், குசனும் ராமன் முன் அமர்ந்து பாடுவதுதான் மீதிக் கதை. வாசகனை சிந்திக்கவும் வைக்கிறது.
5. நரகத்தில் சொர்க்கத்தின் பிரதிநிதி : நாராயணி கண்ணகி விகடன் 22.03.23
கதை வெட்டியான் வரதனைப் பற்றியது. இல்லை, வங்கி செக்யூரிட்டியாய் பணியாற்றும் வரதனைப் பற்றியது. அவனுக்கு ஒரு வண்டி வாங்க பேங்க் லோன் வேண்டும். என்ன வண்டி ? லோன் கிடைத்ததா? வேதனையான, வித்தியாசமான திருப்பத்தோடு முடிகிற கதை.
6. மகனின் மூன்று கடிதங்கள் : ஐய்யப்ப மகராஜன் விகடன் 15.03.2023
தமிழ்நாட்டின் தென் மூலையில் தொலைந்து போய் விடக்கூடிய ஒரு கிராமத்தில் வாழ்வின் இறுதியை தொட்டுவிடக்கூடிய பருவத்தில் உள்ள “ஆத்தா” என்ற ஏழைக்கிழவிதான் இந்தச் சிறுகதையின் மையப் புள்ளி. இம்மாதிரி வறுமையின் பிடியில் உள்ள படிப்பறிவில்லாத குடும்பத்திலும் வீட்டை விட்டும் ஓடத் தயங்காத கலை வெறி பிடித்த கலைஞர்கள் இருக்கிறார்கள் – ஆத்தாவின் கணவர் மற்றும் ஆத்தாவின் மகன். மனதை உருக்கும் சிறுகதை.
7. தாவரங்களுடன் உரையாடுபவள் : சோ.சுப்புராஜ் உயிர் எழுத்து மார்ச் 2023
கதை கவிதா என்ற பெண்ணைப் பற்றியது. அவளுடைய உணர்வுகளைப் பற்றியது. அவளுக்கும் அவள் வீட்டில் உள்ள மரத்துக்கும் உள்ள உறவைப் பற்றியது. அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் பற்றியது. இது ஒரு கவித்துவமான, மெல்லிய உணர்வுகளை பிரதிபலிக்கும் கதை. கட்டாயம் வாசிக்க வேண்டிய கதை
இந்தச் சிறுகதையை 2023 மார்ச் மாதத்திற்கான சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்கிறேன்
கிரிஜா பாஸ்கர்
சென்னை
ஆஹா அருமை
LikeLike