- மைக்கேல்
லேசான நாயகன் தழுவலுடன், நிறைய ரத்த வாடையுடன் வந்திருக்கும் படம்! சந்தீப் கிஷனுக்கு இது புதிய களறிகளை காட்டக்கூடும்! இதனால் அவர் காட்டேரி ஆகலாம். எண்ணற்ற நட்சத்திர முகங்கள். மணல் தாள் குரலில் பேசும் கவுதம் மேனன் பிரதம தாதா! கடைசி இருபது நிமிடங்களில் வந்து கலக்கி விடும் விஜய் சேதுபதி தாதாவுக்கு தாதா! இன்னும் வரலட்சுமி சரத்குமார், திவ்யான்ஷா என்று பாயச முந்திரிகள்! சாம் சிஎஸ் இசையில் வயலின் மெலடிகள், வயலன்ஸை தாண்டி ஈர்க்கின்றன! இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடிக்கு இது மூன்றாவது படம். அடுத்த படத்தில் இவரது கொடி மேலும் உயரும். அனாவசிய வசனங்களைத் தவிர்த்து மணிரத்தினம் பாதையில் பயணித்து அளவான மசாலா சேர்த்து திரைக்கதை அமைத்து, முருகதாஸ் பாணியில் செல்லும் இவருக்கு உச்ச நட்சத்திரங்கள் அழைப்பு விடலாம். கதை அரத பழசு! தாயையும் தன்னையும் தவிக்க விட்ட அப்பனை அவன் எத்தனை அப்பாடக்கராக இருந்தாலும் ஒற்றை ஆளாக போட்டுத் தள்ளும் மகனின் வன்முறை பாதை!
இறுக்கமான காட்சிகளும் அழுத்தி உட்கார வைக்கும் திரைக்கதையும் இந்த ஜஸ்ட் பாஸ் படத்தை ரசிக்க வைக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா!
சந்தீப் கிஷனின் திரை பட்டியலில் முக்கியமான படம்! பொருத்தமான நடிகர்களை ( கவுதம் மேனன், விஜய் சேதுபதி ) இணைத்திருப்பது வெற்றிக்கான சூத்திரம். – ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
காதல் பின்னணியில் ஒரு தாதா சண்டை! குரல் தான் உரத்து ஒலிக்காமல் கம்மி விட்டது! – தி ஹிந்து!
- வி ஹாவ் எ கோஸ்ட் ( ஆங்கிலம் / தமிழ் )
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்த காமெடி கோஸ்ட் வலம் வருகிறது. யார் சொன்னார்கள், பேய் பயமுறுத்தும் என்று.. இது விலா நோக சிரிக்க வைக்கும் பாதி பட்டணத்தில் பூதம். ஜாவார் மாதிரியே தேவ் ஹார்பரையும் வழுக்கை பூதம் எர்னஸ்டாக காட்டுகிறார்கள். முதல் பாதி சிரிப்பு மேளா! பின்னால் கொஞ்சம் துப்பறிதல்; எர்னஸ்டை கொன்றவனைக் கொன்று பழி வாங்குதல் என்று ஜிகர் தண்டாவாக முடிகிறது படம். பழி வாங்கியபின் மகளைப் பார்த்து அமைதி அடையும் எர்னஸ்ட் பேய் முழுவதும் கனலாகி முடிந்து போகும் முடிச்சு! வீட்டை காலி செய்தாலும் அணைந்து அணைந்து எரியும் விளக்குகள் அடுத்த பாகத்திற்கு கட்டியம் கூறுகின்றன.
- அயோத்தி
வர வர தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் போல் ஆகி விடுவார் போலிருக்கிறது சுப்பிரமணியபுரம் சசிகுமார்! மாதத்தில் இரண்டு மூன்று படங்களாவது வெளிவந்து விடுகிறது.
அயோத்தியில் வசிக்கும் இந்திக் குடும்பம் ராமேஸ்வரம் நோக்கி பயணப்படுவதும், மதுரையிலிருந்து அவர்கள் போகும் டாக்ஸி விபத்துக்குள்ளாவதும் தொடரும் சம்பவங்களும் தான் கதை! இது தமிழ் படமா மலையாளப் படமா என்று வியக்கும் அளவிற்கு எந்த இடத்திலும் மிகைபடுத்தாமல் சினிமாவுக்காக சமரசம் செய்து கொள்லாமல் இயக்கியிருக்கிறார் மந்திரமூர்த்தி! பாராட்டுக்கள்!
யஷ்பால் ஷர்மா, அஞ்சு அஸ்ரானி,பிரீத்தி அஸ்ரானி, மற்றும் குட்டி அஸ்வத்- இந்த நால்வரும் கொட்டிய நடிப்பை அள்ள நம்மிடம் கொள்கலன் இல்லை! அஞ்சு அஸ்ரானியின் பாத்திரம் சிக்கலானது. அதை எல்லை மீறாமல் நடித்த வகையில் வாரே வாவ் சொல்ல வைக்கிறார்! நாடோடிகள் படத்திற்கு அப்புறம் அதே வண்ணத்தில் இன்னொரு கதாபாத்திரமாக சசிகுமார். அவரும் சோடையில்லை! இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம், என்.ஆர்.ரகுநந்தனின் இசை! படம் நெடுக உணர்வுகளைத் தூண்டி எழுப்பப்படும் காட்சிகளுக்கு அருமையான பின்னணி இசையைத் தந்து பாடல்களையும் நெருடா வண்ணம் அமைத்திருக்கிறார் நந்தன்! எல்லாம் நன்றாக இருந்தால் படம் பார்க்க யார் வருவாங்க? அதனாலயே தேவையில்லாமல் ஒரு குத்துப் பாட்டை காவல் நிலையத்தில் வைத்திருக்கிறார்கள். அழகான குழந்தைக்கு திருஷ்டிப் பொட்டு அவசியம் தான்!
நெஞ்சைத் தைக்கும் கதை! வீரியமான எழுத்து!முக்கியமாக மதத்தைத் தாண்டி மனிதநேயம் முக்கியம் என்பதை நிறுவும் படம்-டைம்ஸ் ஆஃப் இந்தியா.
மனிதத்தைச் சொல்வதில் கவனம் ஈர்க்கும் படைப்பு உன்னையும் என்னையும் ஒன்றிணைக்கும் வாழ்வில் அன்புதான் பாலமாகுமே” என படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிதான் ஒட்டுமொத்த படத்தின் ஒன்லைன் –தமிழ் இந்து!
தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் இப்படி ஒரு கதை இதுவரை வந்ததில்லை – தினமலர்!
- அரியவன்
புதுமுகங்கள் இஷானும் பிரானிலியும் நடித்திருக்கும் படம். இவர்கள் புதுமுகங்கள் தானா என்று சற்று யோசிக்க வைக்கும் நடிப்பு. பிரனாலி காதலிலும் கண்ணீர் விட்டுக் கசிவதிலும் அழுத்தமாக மனதில் பதிகிறார்! இஷானைப் பொறுத்தவரை சண்டைக் காட்சிகளாகட்டும் முன்பகுதியில் வரும் கபடி போட்டிக் காட்சிகளாகட்டும் ஒரு அனுபவமுள்ள நடிகராக சுமையை அசால்டாக தோளில் சுமக்கிறார்.டேனியல் பாலாஜி நம்பத்தகுந்த வில்லன். சும்மா மிரட்டி இருக்கிறார். அவருக்கும் சில உணர்வு காட்டக்கூடிய காட்சிகள். அதிலும் முதன்மை பெறுகிறார். பாடல்களைப் பொருத்தவரை வரிகள் புரிகிறது என்பதே இதன் பெருமை. தொண்ணூறுகளுக்கு இட்டுச் செல்லும் பாடல்கள். அனார்க்கலி எனும் பாடல் ஜேம்ஸ் வசந்தனுக்கு இன்னொரு ‘கண்களிருந்தால்’. எல்லாம் இருந்தாலும் அடுத்து என்ன வரப் போகிறது எனும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசிகனே காட்சிகளைப் பட்டிட்யலிடும் வகையில் தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் க்ளைமேக்ஸில் ஒலிக்கும் பாடல் நமக்கு கொஞ்சம் புல்லரிப்பை தருகிறது. ஆனால் காட்சிப்படுத்திய விதம் அதை கோட்டை விட்டு விடுகிறது.இவைதான் மட்டுமே படத்தின் குறை! இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ?
இன்றைய இளம் பெண்கள் காதல் என்று நினைத்து பெரும் அபாயத்தில் சிக்கிக் கொள்ளும் தேவையான செய்தியை சுமந்து வரும் படம் இன்றைய நவீன உலக மகளிருக்கு சொல்ல வேண்டிய பாடம்!
பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர். அரியவன் மிகச் சிறியவன் என்பது தினமலரின் விமர்சனம். சமூக நலனுக்காக செய்யப்படும் பிரச்சாரம் என்பது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கணிப்பு! தேவையான தாக்கத்தை ஏற்படுத்த தவறிட்டது அரியவன் – இந்தியன் ஹெரால்ட்!
இப்படி ஏறு மாறாக விமர்சனங்கள் வருவதற்கு இயக்குனர் மித்ரன் பாதி படத்தில் விலகி விட்டது காரணமாக இருக்குமோ?
- டாக்டர் 56 ( கன்னடம் / தமிழ் )
ரொம்ப நாளாச்சு பருத்தி வீரன் காதலியைப் பார்த்து! பிரியா மணி நடித்த கன்னடப்படம் தமிழ் பேசுகிறது. பிரியா இன்னமும் அப்படியே இருக்கிறார். சந்தோஷமாக இருக்கிறது. கதை லேசா திரில்லர்; கூடவே கொஞ்சம் மருத்துவம்! பாதை ஷங்கரின் ஐ படம் போல ஆரம்பிக்கிறது. பின் புலனாய்வு பாதையில் செல்வதால் வித்தியாசப்படுகிறது.
கூத்து கட்டும் அர்ஜுனை, காசு ஆசை காட்டி புதிய மருந்தை அவன் மேல் பரிசோதிக்கும் ஜார்ஜ் செபாஸ்டியனும் அவனது கூட்டாளி மருத்துவர்களும். பிரியா கிருஷ்ணன் சிபிஐ செல்வாக்கில் அவனை சுட்டு பிடித்தாலும் அர்ஜுனை காப்பாற்ற முடியவில்லை! அர்ஜுன் செய்யாத கொலைகளைச் செய்தது யாரு?
கொலைகாரன் விட்டுச் சென்ற தடயங்கள்; அதைக் கொண்டு அவனை நெருங்கும் மத்திய புலனாய்வுத் துறை; இயக்குனர் ராஜேஷ் ஆனந்தலீலா திரைக்கதையில் சரியான திருப்பங்களைக் கொடுத்து சுவாரஸ்யத்தை தக்க வைத்திருக்கிறார். அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது இந்தப் படம்!
புரட்டிப் போடும் மெடிக்கல் திரில்லர் – இந்தியன் எக்ஸ்பிரஸ்.
மனிதர்கள் முயல்களாக சோதனை செய்யப்படும் மருத்துவ கருப்புப் பக்கங்களை பயங்கர பக்க விளைவுகளோடு சொல்கிறது படம் –பேங்களூர் மிரர்.
குறுகுறுக்க வைக்கும் மருத்துவ திரில்லர் – சினிமா எக்ஸ்பிரஸ்.
பெரும்பகுதி கதை விசாரணையிலேயே கடந்து விடுவதை தவிர்த்து இருக்கலாம். மருத்துவ ஆராய்ச்சிக்கு மனிதர்களை பயன்படுத்துவதையும், அதனால் ஏற்படும் விபரீதங்களையும் விறுவிறுப்பான திரைக்கதையில் சமூக அக்கறையோடு காட்சிப்படுத்தி உள்ள இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலாவை பாராட்டலாம். ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன என்ற திகிலோடு நகர்வது சிறப்பு. நோபின் பால் பின்னணி இசை கதைக்கு உயிர் ஊட்டி உள்ளது. ஒளிப்பதிவாளர் ராகேஷ் திலக் காட்சிகளை நேர்த்தியாக படம் பிடித்துள்ளார்.- தினத்தந்தி
- பஹீரா
முரட்டுக் குத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தன் களங்கத்தைத் துடைத்துக் கொள்ள எடுத்த முயற்சி பார்வையாளர்களுக்கு பகீரைத் தந்தால்? உடலை எட்டுக் கோணலாக வளைக்கும் பிரபுதேவாவை எட்டும் கோணலான சைக்கோ கொலைகாரனாக காட்டினால் ரசிகர் பட்டாளம் ஏற்றுக் கொள்ளுமா? மிக மோசமாக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் என்பது டைம்ஸின் தீர்ப்பு! ஒரு சைக்கோ திரில்லர் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு இந்தப் படம் சரியான சாட்சி என்பது சவப்பெட்டியின் கடைசி ஆணி!
படம் நெடுக அலுப்பை விதைக்கிறது! பிரபு தேவாவால் கூட இதை தூக்கி நிறுத்த முடியவில்லை – தி ஹிந்து!
மாற்று யோசனை இல்லாமல் தவிர்த்து விடுங்கள்!- இந்தியா ஹெரால்ட்!
சரியாக எழுதப்படாத திரைக்கதையில் பிரபுதேவா மட்டும் மன நோயாளியாக பளிச்சிடுகிறார் – சினிமா எக்ஸ்பிரஸ்!
- இன் கார் ( இந்தி /கன்னடம் / தமிழ் )
இறுதிச் சுற்றுக்குப் பிறகு ரித்திகா சிங் நடித்துள்ள புதுப் படம். புடம் போட்ட திரில்லர்! பேருந்துக்கு காத்திருந்த சாக்ஸியை காரில் கடத்தும் நபர்களும், அவர்களிடமிருந்து தப்பிக்க அவள் போராடுவதும் தான் கதை. பாலியல் சார்ந்த படங்களில் சதை முன்னுரிமை பெறும். இதில் கதைக்கு உரிமை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹர்ஷ் வர்தன். முன் பாதி அதிக நேரம் எடுத்து மித வேகம் காட்டினாலும், அதை ஈடுகட்ட ஃபார்முலா ஒன் போல வேகம் எடுக்கிறது பின் பாதி! ஞான் பிரகாஷ், சந்தீப் கோயல், சுனில் சோனி இவர்களோடு ரித்திகாவும் பவர்ஃபுல் நடிப்பைக் கொட்டியிருக்கிறாகள்! நிமிடத்திற்கு நிமிடம் பதைப்பை ஜீரணிக்க முடிந்தவர்களுக்கு இது சரியான திரில்லர் விருந்து – டைம்ஸ் ஆஃப் இந்தியா!
படம் பார்க்கும்போதே இருக்கையில் உங்களை நெளிய வைக்கும் திரைப்படம். சொல்ல வந்ததில் இருந்து விலகாமல் அதே சமயம் உங்கள் மனதை அசைத்துப் போடும் கலையை செய்து வெற்றி பெற்றிருக்கிறது படம் – இந்தியா டுடே!
- மெமரீஸ்
நான்கு கொலைகளைச் செய்ததாக அறியப்படும் கதை நாயகனுக்கு ஜஸ்ட் பதினேழு மணி நேரம் தான் உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடிக்க.. அவரால் முடிந்ததா என்பது தான் ஒன்லைன்!
வித்தியாசமான கதைக்களம் என்றாலும் பார்வையாளனை சீட்டு நுனியில் இருத்தி வைக்க இயக்குனர் சியாம் பர்வீன் அமைத்த திருப்பத் திரைக்கதை கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி சலிப்பை விதைப்பது உண்மை! மாற்றி மாற்றி நடிகர்களை ஒரே பாத்திரத்தில் காட்டி கொஞ்சம் புரிந்ததையும் காலி பண்ணி விடுகிறார் இயக்குனர்!
வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பாத நினைவுகளை கடத்துகிறது இந்தப் படம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா!
- கொன்றால் பாவம்
விளிம்பு நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு இரவு தங்க வரும் இளைஞனின் பெட்டியில் இருக்கும் நகையும் பணமும் அவனைக் கொன்றால் தான் கிடைக்கும் எனும் இக்கட்டில் மாட்டி, அவனை போட்டுத் தள்ளும் முடிவுக்கு வரும்போது எதிர்பார்க்காத திருப்பமாக படம் முடிகிறது, நடிப்பைப் பொருத்தவரை சார்லியாகட்டும், வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ் உட்பட எல்லோரும் சோடையில்லாத பங்களிப்பு! ஆனாலும் இயக்குனர் தயாள் பத்மநாபன் துணைப் பாத்திரங்களை இன்னும் கவனமாக எழுதி இருக்கலாமோ என்று தோன்ற வைக்கும் படம்!
கட்டிப் போடும் கதை! அழுத்தமான நடிப்பு! தயாள் பத்மநாபனுக்கு பாராட்டுக்கள் – சினிமா எக்ஸ்பிரஸ்!
தொண்ணுறு விழுக்காடு மதிப்பெண் கொடுத்திருக்கிறது டைம்ஸ்!
- அகிலன்
ஜெயம் ரவிக்கு இது ஒரு பேர் சொல்லும் படம்! கதை நாயகன் ஒரு கருப்பு ஆடு என்பதை இமேஜ் பார்க்காமல் ஒத்துக் கொண்டு அதில் தீவிர அக்கறை காட்டி நடித்த வகையில் அவருக்கு பாராட்டுக்கள். துறைமுகத்தில் நடக்கும் சட்டத்திற்கு விரோதமான செயல்கள் என்பதை மிக அழகாக வரிசைப் படுத்தி காட்டிய வகையில் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் பாராட்டுக்குரியவர். ஆனாலும், கதை ஒரே இடத்தில் மாற்றி மாற்றி நடப்பது சற்று சலிப்பை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது! பிரியா பவானி சங்கர் சராசரி தமிழ் பட கதை நாயகி! ஒரு மாற்றத்திற்கு அவருடைய கனவில் ஒரு அயல்நாடு போய் வந்திருக்கலாம்! லேசாக விழிகள் குளிர்ந்திருக்கும்! எல்லாத்தையும் செஞ்சுட்டு மக்களுக்காக செய்தேன் என்பது இமேஜை தூக்கி நிறுத்துமா ரவி?
ஜெயம் ரவிக்கு இருக்கும் பிரச்சினை ஒன்று தான்! நல்ல கதையில் பிரச்சார தொனியை விதைப்பது. வழுக்கிக் கொண்டு போக வேண்டிய திரைக்கதை, மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து ரசிகனை இடுப்பொடிய வைக்கிறது! என்ன சொல்ல வேண்டும் என்பதில் தெளிவில்லாததும் பெரிய குறை! – ஹிந்துஸ்தான் டைம்ஸ்!
முதல் பாதியில் எதிர்பார்ப்பை விதைத்து விட்டு அதை சரியாக வளர்க்கத் தெரியாம்ல் கோட்டை விட்டு விட்டது அகிலன்! ரசிக்கக் கூடிய வசனங்கள் இந்தப் படத்தின் ப்ளஸ்! அதற்காக மட்டும் கேட்கலாம்! பார்க்க தேவையில்லை!– டைம்ஸ் ஆஃப் இந்தியா!
ஜெயம் ரவியால் கூட காப்பாற்ற முடியவில்லை இந்த குழப்படியான தெளிவில்லாத படத்தை –தி ஹிந்து!
மக்கள் தீர்ப்பு என்ன? மொத்தமாக ஒதுக்கி விட்டார்கள்! சில அரங்குகளில் ஒரு பார்வையாளன் கூட இல்லை என்பதால் காட்சியை ரத்து செய்து விட்டார்கள்! நல்ல படமான அயோத்தியை பார்க்க வந்து, அந்தப் படம் நீக்கப்பட்டதால் இந்தப் படத்தில் மாட்டிக் கொண்டேன் என்கிறது ஒரு ரசிகக் குடும்பம்! ஜெயம் ரவிக்கு திருஷ்டி கழிக்க வேண்டிய காலம் வந்தாச்சு!
11.இரும்பன்
வித்தியாச கதைக்கு வித்தியாச பாத்திரப் பெயர்கள் வேண்டும் என்று இயக்குனர் கீராவுக்கு யாரோ சொல்லி விட்டார்கள் போலிருக்கிறது! கதை நாயகன் பெயர் ஆபீஸ்! அவனது நண்பனின் பெயர் ஆஸ்பத்திரி! நல்ல வேளை கதை நாயகியின் பெயர் மஹிமா! அதனால பொழச்சோம்! நரிக்குறவர் இனத்து இளைஞன் துறவியாகும் பெண்ணைக் காதலிப்பதும் கடைசியில் இணைவதுமாக மிகச் சுமார் கதை! கதை நாயகனாக நடிக்கும் ஜூனியர் எம் ஜி ஆருக்கு நல்ல பாவங்கள்! நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் ஒரு ரவுண்டு வரலாம்! வர்த்தகத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கும் யோகிபாபு இனி கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டிய கட்டாயம்! ஊடகங்களில் இந்தப் படத்தைப் பற்றி யாரும் மூச்சு கூட விடவில்லை என்பது இதன் தரத்திற்கான உரைகல்!
12.டி 3
பாதி கிணறு தாண்டிய படம்! டீசன்ட் புலனாய்வு திரில்லர் என்பது பத்திரிக்கையின் தீர்ப்பு! கதை வழக்கமானது தான்! விக்ரம் எனும் குற்றால காவல் அதிகாரியின் கவனத்திற்கு வரும் கோர விபத்துகள்! அவைகளில் தொடர் ஒற்றுமைகள் இருப்பது அவரை அசைக்க உள் இறங்கிப் பார்க்கும்போது புலப்படும் மருத்துவ குற்றங்கள்!
தொலைக்காட்சி தொடர்களில் அந்தக் காலத்தில் விரும்பப்படும் நாயகனாக வலம் வந்த பிரஜின் சற்று மலையாளக் கரையோரம் ஒதுங்கிய பின் நடித்த தமிழ் படம். சில காலம் கிடப்பில் போடப்பட்டு இப்போது வெளிவந்து கவனத்தை ஈர்க்கிறது!
திசை திருப்பப்படும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும், அதிலிருக்கும் காயப்பட்ட பயணிகள் காணாமல் போவதும் முதல் பாதி! மருத்துவ குற்றத்திற்காக கடத்தப்படும் பயணிகள் எனும் சுவாரஸ்யமான முடிச்சை வைத்துக் கொண்டு அதை பின் பாதியில் பரபரப்புடன் சொல்லத் தவறி விட்டார் இயக்குனர் பாலாஜி! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
எதையும் எதிர்பார்க்காமல் போனால் ஏமாறாமல் வரலாம் – இன்டியா போஸ்ட்ஸ்!
13.ஷூட் தி குருவி
சூது கவ்வும் பாணியில் ஒரு படம் என்று பரிந்துரை செய்திருக்கிறார் ஃபில்மி கிராஃப்ட் அருண்! குருவி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தாதா, நான் கில்லர் என்று பிரகடனம் செய்யும் காட்சியில் நமக்கும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது! அதோடு ஆங்காங்கு டார்க் காமெடி காட்சிகளும் வசனங்களும் இது திரில்லர் தானா என்றொரு ஐயத்தை விதைத்து விடுகிறது. போகிற போக்கில் சொல்லப்படும் வசனங்கள் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. சாம்பிளுக்கு ஒன்று: நடுத்தர வர்க்கத்துல இருக்கறவன் இருப்பத்தி ஏழு வயசுலயே செத்துடறான்! ஆனா எழுபத்தி இரண்டு வயசில தான் அடக்கம் பண்றாங்க! இது போக சுஷாந்தின் ஒளிப்பதிவும், கமலக்கண்ணனின் எடிட்டிங், மூன்ராக்ஸின் இசையும் கூட இந்த படத்திற்கு பலம்! நடிப்பைப் பொருத்தவரை அதிகம் அறிமுகமில்லாத ஷாரா பின்னி பெடலெடுக்கிறார். இன்னும் உயரங்கள் தொட வாய்ப்புண்டு! காது கொடுத்து கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளை நீக்கியிருந்தால் இதுவும் ஒரு சூது கவ்வும் ஆகியிருக்கும்!
14..கண்ணை நம்பாதே
முக்கிய பாராட்டு இயக்குனர் மு.மாறனுக்கு போய்ச் சேர வேண்டியது அவசியம். நாலு வருடம் தயாரிப்பில் இருந்த படம் இது! ஆனாலும் இன்று எடுக்கப்பட்டும் கிரைம் திரில்லர் படங்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை இந்தப் படம்! சித்து குமாரின் பின்னணி இசை வெகு நேர்த்தி! படத்தின் கதாநாயகன் எடிட்டரான சாம் லேகேஷ் தான்! ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவும் கச்சிதம். உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா,பூமிகா ஸ்ரீகாந்த் போன்ற கலைஞர்கள் தங்கள் பங்கை அருமையாக தந்திருக்கிறார்கள்! முதல் பதினைந்து நிமிடங்களைப் பொறுத்துக் கொண்டால் இது நல்ல படம்!
15..குடிமகான்
தலைப்பைப் பார்த்தால் டாஸ்மாக் போலத் தெரிகிறது அல்லவா! ஆனால் இது ஒரு வித்தியாசக் கதைக்களம்! தானியங்கி பணப் பட்டுவாடா செய்யும் வங்கிகளின் எந்திரங்களுக்கு பணம் நிரப்பும் வேலையச் செய்யும் மதி ( விஜய் சிவன் ) செரிமானம் ஆகாத குப்பை உணவுகளைச் சாப்பிட்டால் போதை ஏறும் நிலைக்குத் தள்ளப்படும் விசித்திரமான நோய்க்கு ஆளாகிறான்! ஒரு கட்டத்தில் நூறு ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டிய பெட்டியில் ஐநூறு நோட்டுகளை வைத்து விடும் மதிக்கு நேரும் சிக்கல்களே இந்தப் படம்! குளிர் தென்றல் போன்ற நகைச்சுவை காட்சிகள்; இதுவரை தமிழ் படங்களில் பார்க்காத அரிதான நிகழ்வுகள் எனக் கலந்து கட்டி அடிக்கிறது இந்த புதுமுக பட்டாளம்! அதிகம் காணாத சாந்தினி தமிழரசன், மதியின் மனைவியாக சரியான தேர்வு! தொழில் நுட்பத்திலும் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சோடை போகவில்லை! இரண்டாம் பாதியில் தேவையில்லாத ஒரு பாட்டை நீக்கியிருக்கலாம். தமிழ் சினிமாவில் குறிஞ்சியாக வந்திருக்கும் இது போன்ற படங்களை நல்ல திரை ஆர்வலர்கள் கொண்டாடுவார்கள்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா!
எழுத்து, நடிப்பு, இசை கைக்கோர்த்து நல்ல திரைப்படத்தைத் தந்திருக்கிறது – சவுத் ஃபர்ஸ்ட் டாட் காம்!
முதல் பாதி குடும்ப பின்னணி! மறுபாதி நகைச்சுவை சரவெடி. இயக்குனர் பிரகாஷ் கையிலிருக்கும் கதைக்கேற்ப சரியான விகிதத்தில் படத்தை தந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மையேந்திரனின் பங்கு பாராட்டுக்குரியது! – சென்னை விஷன்
- என் 4
ஏழ்மையை சாதகமாக்கிக் கொண்டு செல்வ சீமான்கள், காசிமேட்டில் வாழும் இளைஞர்களை தப்பான வழிக்கு கொண்டு செல்வதும், அந்த இனிய வாழ்வுக்கு பங்கம் வரும்போது ஒட்டு மொத்த மீனவ சமுதாயமே அவர்கள் பக்கம் நிற்பதும் நெகிழ்வான தருணம்! இயக்குனர் லோகேஷ் குமாரின் வித்தியாசக் கதையும் மாந்தர்களும் களமும் தமிழ் சினிமாவுக்கு புதிய பாதையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கின்றன. போதை விடயங்களை பிரச்சாரமாக அல்லாமல் போகிற போக்கில் மனதில் தைப்பது போல சொல்லி இருப்பதும் பாராட்டத்தக்கது! முக்கிய பாத்திரங்களான சூர்யா, கார்த்தி வேடங்களில் நடித்திருக்கும் மைக்கேல் தங்கதுரை, அஃப்சல் ஹமீத், பாத்திரத்தில் பொருந்திப் போவது படத்திற்கான வெற்றி! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
சரியாக எழுதப்பட்ட அருமையான படம் – இந்தியா ஹெரால்ட்.
- புட்டா பொம்மா ( தெலுங்கு தமிழ் )
மலையாளத்தில் பெரிதும் பேசப்பட்ட படம் கப்பேலா! அதை தமிழ் தெலுங்குக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சௌரி சந்திரசேகர். மூலத்தை சிதைக்காமல் கிட்டத்தட்ட அதே காட்சியமைப்பை ஒற்றி எடுத்ததால் இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமாகி விடுகிறது. பிரதான பாத்திரம் ஒரு கிராமத்துப் பெண்! வசீகரப் பேச்சால் அவளை மயக்கிவிடும் ஆட்டோ ஓட்டுனர் முரளி, நேரில் சந்திக்க இடமும் நேரமும் குறிக்க அதில் இருக்கும் ஆபத்தை உணராமல் வீட்டிலிருந்து கிளம்பி வரும் சத்யா சந்திக்கும் சோதனைகள் தான் முடிச்சு! இதன் வெற்றிக்கு காரணமே வித்தியாச திரைக்கதையும் உரையாடல்களும் தான்! தமிழ் தெலுங்கில் வில்லனைப் போன்ற வடிவமைப்பில் வரும் கதையின் நாயகன் ஆர் கே ஆக அர்ஜுன் தாஸ் அதகளப்படுத்துகிறார். சத்யாவாக அனிகா ராஜேந்திரன் வெகு இயல்பு! நிச்சயம் பார்க்க வேண்டிய படம்!
- பத்து தல
சில குறைகளை மீறி சிம்புவும் கவுதம் கார்த்திக்கும் இந்தப் படத்தை பார்க்கும்படி செய்து விட்டார்கள். இசைப்புயலின் பின்னணி இசை கடைசி கட்ட சண்டைக் காட்சியை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது. மாவட்ட ஆட்சியராக பிரியா பவானி சங்கர் தன் பங்கை அப்பழுக்கில்லாமல் செய்திருக்கிறார். இதன் மூலமான மஃப்டி படத்தைப் பார்க்காதவர்களுக்கு இது பிடிக்கக் கூடும்! – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
காவலர் கேங்ஸ்டர் பார்முலாவை விட்டு விலகாது பயணிக்கும் படம்! – இந்தியா டுடே!
ஊகிக்க முடியும் திருப்பங்கள் என்றாலும் சுவாரஸ்யத்தை தக்க வைக்கிறது ஒபேலி கிருஷ்ணாவின் திரைக்கதை – ஹிந்துஸ்தான் டைம்ஸ்!
பலரும் துவைத்து காயப்போட்ட கதையை சிலம்பரசன் மட்டுமே காப்பாற்றுகிறார்! – இந்தியன் எக்ஸ்பிரஸ்!
- விடுதலை
நெல்லை பழரசமாக விமர்சனங்கள் வருகின்றன. ஆனாலும் ஒட்டு மொத்த ரசிகரும் பாராட்டுவது சூரியின் நடிப்பை! இதுவரை நகைச்சுவையை மட்டும் தந்தவரால் ஒரு கதை நாயகனின் பளுவை சுமக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வந்து கடைசி காட்சியில் அதகளமான நடிப்பைத் தந்திருக்கும் விஜய் சேதுபதி இப்போதே இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்க வைக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவு ஜாலங்கள் காட்டாத யதார்த்தம். ராமரின் எடிட்டிங் சாணை பிடித்த கூர் கத்திரி! இதையெல்லாம் தாண்டி இரண்டே வாத்தியங்களை வைத்து பரவசத்தை விதைக்கும் இசை ஞானி இன்னொரு நாயகன். வழக்கமான மசாலா பட ரசிகர்களுக்கு இல்லை இந்தப் படம். அப்படிப்பட்ட ரசிகனுக்கு இது ஒரு ஆவணப் படம் போலத் தோன்றலாம். ஆனால் வெற்றிமாறன் படங்களை கொண்டாடுபவர்களுக்கு இது ஒரு மாப்பிள்ளை விருந்து!
மென் இதயக்காரர்களுக்கு ஏற்றதல்ல இந்தப் படம்! நெஞ்சில் அறையும் காட்சிகளும், காவல் துறையின் வன்முறையும் அடி வயிற்றில் பதைப்பை விதைக்கிறது! – ஹிந்துஸ்த்தான் டைம்ஸ்!
வெற்றிமாறன் எனும் பெயரே பல எதிர்பார்ப்புகளை எழ வைக்கிறது. அதை பூரணமாக நிறைவேற்றி வெகு லகுவாக கடக்கிறது படம்! தொய்வில்லாத திரைக்கதை ரசிகனை நகர விடாமல் இருக்கையில் கட்டிப் போடுகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
மலைவாழ் பெண்ணாகவும் சூரியை காதலிப்பவளாகவும் வரும் பவானிஸ்ரீ இன்னொரு நல்ல கலைஞர் என்று இந்த படம் உறுதி கூறுகிறது. கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன் என சில பாத்திரங்கள் படம் முடிந்தபின்னும் மனதை அகலாமல் நிற்பது வெற்றியின் மேஜிக். –ஃபில்மி கிராஃப்ட் அருண்!
தனித்து நிற்கிறார் சூரி என்கிறது இண்டியா டுடே! பொன்னாக தகதககிறார் சூரி – தி ஹிந்து! வெற்றிமாறன், இளையராஜா, சூரி, விஜய் சேதுபதி இவர்களைப் பற்றி சொல்லாமல் இந்தப் படத்தின் விமர்சனத்தை எழுதவே முடியாது. படத்தின் ஆரம்பத்தில் வரும் ரயில் குண்டு வெடிப்பு காட்சியின் நீளம், மற்றும் இடைவேளைக்கு பின் வேகம் குறைவதும் இப்படத்தின் குறைகள்!- தினமலர்.