பாரதி அன்பர்களுக்கு நல்லதொரு பொன்னாள் !
பெருமதிப்பிற்குறிய வ வே சு அவர்கள் ‘ மகா கவியின் மந்திரச் சொற்கள்’ என்ற தலைப்பில் குவிகம் இணையவழி ஜூம் மூலம் நடத்தும் தொடர் சொற்பொழிவின் 100 வது நிகழ்வு ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்றது !
ஒவ்வொரு புதன் மாலையையும் பொன் மாலைப் பொழுதாக மாற்றி பாரதி அமுதத்தில் நம்மைத் திளைக்க வைக்கும் வ வே சு அவர்களுக்கு நன்றி ! குவிகம் என்ற அமைப்பிற்கு இப்படி ஒரு பாக்கியத்தை அளித்த வ வே சு அவர்களைப் போற்றி வணங்குகிறோம்.
100 வாரங்கள்! 100 மணிநேரம் – இன்னும் தொடர்கிறது. இலக்கிய உலகில் பாரதிக்கு இவர் ஆற்றிய சேவையைப் பாராட்ட வார்த்தைகள் போதாதுதான் !
நிச்சயம் இது ஓர் ஒரு உலக சாதனையாகத்தான் இருக்கும்.
இவரது 100 மணி நேர உரையும் காணொளியாக்கப்பட்டு யூ டியூப் சானலில் குவிகம் இலக்கியவாசல் என்ற தலைப்பின் கீழ் தனியே PLAYLIST இல் பதிவிடப்பட்டிருக்கின்றன. அதன் லிங்க் இதோ:
https://www.youtube.com/playlist?list=PLOYdayF9QzXmpI6pzD3B6vZVf7q2wCSIB
இதுவரை நூறு நிகழ்வில் நாம் கடந்து வந்த பாதையும் பயின்ற பாரதியின் பாடல்களும் :
12 மே 2021 – மகாகவியின் மந்திரச் சொற்கள் துவக்கம். நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களால் இசையோடு துவங்கப்பட்டது
19 மே 2021 முதல் 11 வாரங்கள் – பாஞ்சாலி சபதம்
28 ஜூலை 2021 முதல் 18 வாரங்கள் – கண்ணன் பாடல்கள்
1 டிசம்பர் 2021 முதல் 22 வாரங்கள் – புதிய ஆத்திசூடி
27 ஏப்ரல் 2022 முதல் 12 வாரங்கள் – விநாயகர் நான்மணி மாலை
27 ஜூலை 2022 முதல் 21 வாரங்கள் – குயில் பாட்டு
21 டிசம்பர் 2022 முதல் 13 வாரங்கள் – பாரதி சுயசரிதை
13 மார்ச் 2023 முதல் தொடர்வது – பாரதி 66
இன்னும் நாம் பயணிக்கவேண்டிய பகுதிகள் ஏராளமாக இருக்கின்றன. பாரதிக் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்துத் தர வ வே சு அவர்கள் இருக்கும்போது ஏது குறை நமக்கு?
சதம் அடித்த வ வே சு அவர்களின் உரையைப் பற்றி நண்பர்களின் கருத்துப் பெட்டகத்தில் சில வரிகள்!! :
மல்லிகா :
பாரதியார் நமக்கு கிடைத்த வரம் என்றால் அவரின் ஒவ்வொரு சொல்லையும் விளக்கும் வ வே சு நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். பாரதியார் படைப்புகள் பற்றி அறிந்ததுடன் அனைத்து தமிழ் அறிஞர்களின் படைப்புகள் பற்றி விளக்கியதற்கு நன்றி நன்றி.
வி வி கணேசன்:
பாரதி ஒரு தேசிய கவிஞன் , எழுச்சி நிறைந்த தேசபக்திப் பாடல்களை எழுதியிருக்கிறான் என்று மேலோட்டமாக அவனப் பற்றி அறிந்த எனக்கு இந்த சொற்பொழிவு பாரதியின் பன்முகத் தன்மையையும் அவனுடைய ஆழ்ந்த புலமையையும் அவன் படைப்புகளின் நீள அகலத்தையும் , புரிய வைத்தது. இது பாரதியை முழுமையாகப் புரிந்து கொள்ள வைக்கும் ஒரு முயற்சி.
கம்ப இராமாயணம் , ஆத்திச்சூடி , திருக்குறள், சங்ககால இலக்கியங்கள் , பல அறிஞர்களின் படைப்புகள் என்று நிறைய மேற்கோள் காட்டிப் பேசியதால் , அந்தந்த நூல்களைப் பற்றியும் அறிய முடிந்தது.
குஞ்ஞாரமணி ராஜகோபால ஐயர்
சிறந்த துவக்கம். மாதா பராசக்தி!எனக்கு வேண்டும் வரம் ஒன்று இசைப்பேன். குறைந்தது பன்னிரு புதன்களுக்கு எனது ஆயுளை நீட்டித்தந்து செவிப்புலனையும் வளமாக்கி அருள்வாயாக! பாரதத்தின் சாரதியின் பாதாரவிந்தம் பணிவோம்! கம்பனுக்கு அன்று ஒரு வ.வே.சு ! பாரதிக்கு இன்றும் ஒரு வ.வே.சு.! என்னே தமிழர்தம் பேறு!
விஜயலட்சுமி :
வ வே சு அவர்களின் உரை தேன் போலக் காதில் ஒலிக்கிறது
நாணு:
புதன்கிழமை வாராவாரம் பாரதி வாரம்தான். வ வே சு அவர்கள் உரையைக் கேடிக்கையில் எனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை பாரதி அரூபாமாக இவருள் புகுந்துவிட்டானா?
அகரமுதல:
வெண்பாவில் அக விடுதலை, கலித்துறையில் சமுதாய நீதி, விருத்ததில் தன்னிலைப் பேச்சு, அகவலில் பக்தி யோகம் ஞானம் எனப் பல படிகளில் நம்மை ஏற்றுகிறார் பாரதி!
கு மா பா திருநாவுக்கரசு:
தமிழ் ஆர்வலர்களர்களுக்கு பயன்தரும் பதிவு
முரளிதரன்:
பாரதியின் புதிய ஆத்தி சூடியை அலசி ஆராய்ந்து நுணுக்கமான பார்வையைப் பகிர்ந்துகொள்கிறார் வ வே சு
ஹரிகிருஷ்ணன் :
அருமையான பேச்சு! தலை வணங்குகிறேன் வ வே சு!
எம் சாமிநாதன்:
வ வே சு அவர்களின் குரல் அருமை! விளக்கம் அருமை! சுண்டி இழுக்கும் முயற்சி !
முருகன் ரங்கநாதன்:
மிக அற்புதமான கருத்தாழமிக்க ஆராய்ச்சிச் சொற்பொழிவு. விள்ளாத நுணுக்கமான கருத்துக்களே இல்லை என்று கூறலாம்
வேதா கோபாலன்:
வ வே சு ஐயாக்குள் பாரதி புகுந்துகொண்டு பேசுவதாகவே தோன்றுகிறது
இந்திர நீலன் சுரேஷ்:
தமிழ் பத்திரிக்கை உலகில் முதல் கார்ட்டூன், வசன கவிதை கொடுத்த பாரதி, ‘தாலாட்டு’ பாடவில்லை என்ற தகவலையும் இந்த நிகழ்ச்சி மூலம் சொன்னார்.
திரு மா.பொ.சி அவர்கள், திருமதி பிரேமா நந்தகுமார், பாரதியின் மொழிபெயர்ப்புகளை ‘Dynamic Equivalence’ என்று வர்ணித்த பெ.ந.அப்புசாமி போன்ற பலரின் கட்டுரைகளை இந்த உரை மூலம் அறியச் செய்தார் வ.வே.சு அவர்கள்.
பாடு பொருளை அதிகம் பாடியவன் பாரதி என்றால், அவன் பாடிய பொருளை அதிகம் விவரித்து சொன்னவர் வ.வே.சு. 100 நிகழ்ச்சிகள், 100 புத்தகங்களுக்கு சமம்
தென்காசி கணேசன்:
எத்தனை முறை கேட்டால் தான் என்ன ? எத்தனை முறை படித்தால் தான் என்ன ? அலுப்புத் தட்டும் விஷயமா இது ? மதுரைக் கோவிலை பார்க்கப் பாரக்க பரவசம் தானே ? குற்றாலக் குளியல் புதுப் புது சுகம் தானே ? அப்படித் தான் பாரதி படைப்புக்கள் ! அப்படித்தான் வ வே சு அவர்கள் உரை ! அடடா 100 நிகழ்வுகள் ! சுவை புதிது – சொல் புதிது என்றது போல, ஒவ்வொரு நிகழ்வும் புதிது புதிது ! எவ்வளவு தரவுகள் ? எத்தனை தகவல்கள் ! பாரதி ஒரு கடல் என்றால் , பேராசிரியர் ஒரு நதி ! உரை நதி, பாரதி எனும் கடலில் கலந்து, அப்புறம் அருவியாயக் கொட்டிய அழகை எப்படிச் சொல்வது?
துரை தனபாலன்
அ கி வரதராஜன் சிங்கப்பூர்
பட்டையைக் கிளப்பிச் சொன்னார், பாடலின் விளக்கம் எல்லாம்
எட்டைய புரத்தான் பாவின் இனிப்பெலாம் ஊற்றித் தந்தார்.
வெட்டியாய் யாதோர் சொல்லும் விளம்பிடா நேர்த்தி நின்றார்.
அட்டியென் றேதும் இன்றி அரனருள் பெற்று வாழ்வார்.
வள்ளியூர் தந்த ஆசான், வழங்கினார் தமிழாம் அமுது,
தெள்ளிய உரைகள் யாவும், தேன்மிகச் சொரிந்து தந்தார்.
அள்ளியே குடித்தோம் ஒன்றி, அற்புத நூறு வாரம்.
வள்ளியின் கணவன் ஈய வளமெலாம் கண்டு வாழ்வார்.
படித்த துறையோ வேறொன்று, பாடம் யாவும் அதில்சொன்னார்,
குடித்த தேனாம் அமுதத்தால், கொண்டார் காதல் தமிழ்மீது.
இடித்த புளியாய் இருந்தாரும் எழும்பி நிற்கும் உரைதந்தார்,
அடுத்த புதனும் எப்போதோ? ஆர்வம் பொங்கி நாம்நின்றோம்.
ஆர்க்கே…!
அப்படித்தான் அக்கவிக்கு
அக்கறையாய் ஒரு
விழா என்ற இரண்டெழுத்திற்கு
முனைப்பெடுத்த
குவிகம் என்ற நான்கெழுத்து
தேர்ந்தெடுத்து
முன்னிறுத்திய
முனைவர் வ வே சு மூன்றெழுத்து.
பொன் கிடைத்தாலும் கிடைக்காத
புதன் மூன்றெழுத்து.
வாரம் மூன்றெழுத்து.
நேரம் மூன்றெழுத்து
ஆறரை மூன்றெழுத்து
அட!
பாரதியை கவிதையை
ரசனையுற திளைத்து சுவைத்த
வவேசு
அவருக்கும்
மூன்றெழுத்து.
கவிஒளி, பொருள் உன்னதம், மொழியழகு
மூன்றும் கூட்டி அற்புதமாய்
ஒரு முத்துமாலை கட்டிவைத்தார்
கவிதை சொன்ன விதம்
கனன்று பொழிந்த நடை
நமக்குள் கடத்திய கவியுணர்வு
வவேசு நிகழ்த்திக்காட்டியது
பாரதிக்கு,
ஒரு சரியான ஜதிபல்லக்கு.
இராய செல்லப்பா
நூறு முறை படித்தது தான்; மீண்டும் மீண்டும்
நூறுமுறை கேட்டதுதான், அதனால் என்ன?
காதலியின் கன்னத்தில் அலைந்தே பாயும்
கருங்கூந்தல் சுருள்போலக் கவர்கிறதே
பாரதியே உன் பாடல்!
வேறென் சொல்வேன்?
மீசையிலும் தமிழ் வளர்த்த நாயகனே! உன்னை
மீண்டுமொரு நூறுதரம் சொல்லவந்தார் -எங்கள்
வ-வே-சு என்னுமொரு பாட்டுக்காரர்!
வாய்மூடப் பூட்டில்லா பாசக்காரர்!
‘தெளிவுறவே அறிந்திடுதல்’ என்றே சொல்லித்
தெம்மாங்காய்த் தொடங்கிடுவார், அவையின் மூச்சைத்
திருடி யெடுத்திடுவார், தித்திக்கும் உரை தன்னை
முடிக்கும்போதுதான் அது நம் வசமாகும்!
நான்மணியாம் மாலையுடன், நாரணனாம் கண்ணனவன்
பாடலெல்லாம் எம்நெஞ்சில் படிந்திடவே சொல்லிவைத்தார் !
பாண்டியிலே பிறந்த குயில், பாட்டெடுத்தே இவர் குரலில்
ஜூம் அதனில் ஒலிக்கையிலே சொக்கிநின்றோம் யாவருமே!
பாரறிந்த சபதம்தான் பாஞ்சாலி செய்ததுவும் ! எங்கள்
வள்ளியூரார் வாக்கில் கேட்டதுவும் எம் பேறே!
இன்னும் பல சொல்லக் காத்திருக்கும் ஆசானே!
என்னையொரு
இராமனாய் ஆக்கிவிட இங்கே வழியுளதோ?
இருந்தால்,
சொல்ல விரும்பும் சொற்றொடரும் இதுவேதான்!
“யார்கொலோ இச் சொல்லின் செல்வன்?”
மதுவந்தி
மகா கவி பாரதி எனும் மாபெரும் பொக்கிஷக் கதவு திறந்து, மந்திரச் சொற்கள் எனும் பொக்கிஷங்களை நாம் , கண்டு கேட்டு , உணர தந்து கொண்டு வருகிறார் திரு வ வே சு.
நம் கை பிடித்து அழைத்துச் சென்று, நிறுத்தி அந்த பொக்கிஷங்களை அடையாளம் காட்டி, அனுபவிக்கச் செய்து உடன் பயணம் வருகிறார். வேறெங்கு கிடைக்கும் இந்த பேரனுபவம்?
பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, ஆத்தி சூடி, விநாயகர் நான்மணி மாலை, பாரதி சுய சரிதை, பாரதி 66 என மகா கவியின் பொக்கிஷங்களை நமக்கு வாரி வழங்கும் இந்த இனிய நிகழ்வு ஒரு மேடைப் பேச்சு போல அல்லாமல் , ஒரு கலந்துரையாடல் போல நிகழ்கிற ஒரு அருமையான தொடர் நிகழ்வு.. நம்மில் நிறைய பேருக்கு பாரதியைத் தெரியும் , ஆனால், பாரதியை முழுமையாக அறிந்து கொள்ள இந்தத் தொடர் உரை நிச்சயம் கை கொடுக்கும். நம்மில் நிறைய பேர் பாரதியை வாசித்திருப்போம், ஆனால் , இந்தத் தொடர் உரை பாரதியை எப்படி படிக்க வேண்டும் , எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொடுத்து , பாரதியை மீண்டும் மீண்டும் வாசிக்க, நேசிக்க கற்றுக் கொடுக்கிறது.
சுரேஜமீ
முனைவர் வ வே சு அண்ணா அவர்களை வாழ்த்திப் பணிகிறேன்!
ஆழ்ந்தபொருள் ஆய்ந்தவைக்குத் தானுரைத்த அண்ணலைத்
தாழ்ந்து பணிந்தேன் தகவுடைத்தீர்! – சூழ்ந்திங்கு
பாரதியைத் தான்கற்றோம் பாவலரால் பைந்தமிழைத்
தேரதனில் ஏற்றித் தெளிந்து!
ஆர். வத்ஸலா
மகாகவியாம்
அவனின் மந்திரச் சொற்களை
உள் நுழைந்து
சுவைக்க ஆசைப் பட்டேன்
அவர் சொல் மந்திரத்தில்
தெள்ளத் தெளிந்த விளக்கமெனும் அமுதினைக் குழைத்து
ஆசான் வ வே சு ஐயா ஊட்ட
கள்ளால் மயங்குவது போலே
அதைக்
கண்மூடி வாய் திறந்தே கேட்டிருந்தோம்
நாங்கள்
தொண்ணூற்றி ஒன்பது புதன்கள்
’பாரதி எனும்
பாயும் காட்டாற்றை
முக்கண்ணனைப் போல
தன் சிரசில் தாங்கி
அதில் ஒரு பங்கை
ஆசான் வ வே சு ஐயா
பிரசாதமாக தர
புத்துயிர் பெற்றேன் ஐயா
புதன்களில்
இவை தவிர இன்னும் பல நண்பர்கள் காணொளியில் இந்த நிகழவிகவகி பற்றியும் வ வே சு அவர்களின் ஆறவாற்றளைப் பற்றியும் விளக்கமாகக் கூறியிருக்கிறார்கள் !
அதையும் செவி மாடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாற்பது நண்பர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். ஒவ்வொருவருக்கும் இரண்டு நிமிடங்களே அளிக்கப்பட்டது. தாங்கள் பேசியதை, குரல் பதிவாகவும், உரை வடிவமாகவும் குவிகம் இலக்கியத் தகவல் வாட்ஸப் குழுவில் பலர் பதிவுசெய்துள்ளனர்.
நேரிலும், தொலைபேசியிலும் சில நண்பர்கள் தொடர்புகொண்டு வாழ்த்தியுள்ளனர்.
உங்கள் அனைவருக்கும் தனித்தனியே எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். உங்கள் பாராட்டில் நெஞ்சம் நெகிழ்ந்துபோனேன்.
வவேசு
நான் நிகழ்ச்சியை பார்க்காமைக்கு மிகவும் வருந்துகிஆறேன்
LikeLike