புத்தாண்டு வருகையிலே விடியொளி வீசட்டும்
வாட்டுகின்ற துன்பங்கள் பனிபோல விலகட்டும்
சித்தமதைக் குழப்புகின்ற சங்கடங்கள் தீரட்டும்
அன்போடு அமைதியுமே யலையலையாய் வீசட்டும்
தித்திக்கும் செய்திகளே காதுகளில் கேட்கட்டும்
தென்றலாய் நம்முடலை மெதுவாக வருடட்டும்
சாதிமத பேதமின்றி ஒருமித்து வாழ்ந்திடவே
மகிழ்ச்சியே கரைபுரள நல்லாசி கூறிடுவாய்!
சாதிமத பெயராலே நாடெல்லாம் கட்சிகள்
வலியவன் யாரென சண்டைகள் பூசல்கள்
சாதிமத பேதமில்லை முழங்குகிறார் மேடையிலே
சாதிவாரி ஓட்டுகளை எண்ணுகிறார் வீதியிலே
சாதிபேத மிலையென்றார் முண்டாசுக் கவிஞரவர்
சொன்னநல் வார்த்தைகளை காற்றிலே விட்டுவிட்டோம்
பேதங்கள் வாழ்வினையே புரட்டிப் போட்டுவிடும்
ஓரினமாய் செயல்பட்டால் நன்மைகள் தேடிவரும்..!
புத்தம்புது திட்டங்களை முழுதாக விவாதித்து
ஒருமனதாய் செயலாக்க இருப்பதுதான் மக்களவை
எதிர்க்கட்சி யாள்பவரின் தவறுகளைச் சுட்டிடவே
எதிரிபோல் களத்தினிலே கோதாவில் இறங்காதீர்
ஊர்மெச்சும் திட்டங்களை யோர்முகமாய் செயலாக்கி
நீர்வளமும் நிலவளமும் பொருள்வளமும் பெருகிடவே
பாரினிலே பாரதமும் முதன்மையாய் நின்றிடவே
பெருமையொடு புத்தாண்டே ஆசிகூற வந்திடுவாய் !
அறியாமை இல்லாமை பொறாமை தள்ளாமை
ஆமையிவை நான்கினையு மோடோட விரட்டிடுவாய்
சொற்களில் இனிமையும் எண்ணத்தில் நேர்மையும்
செயலிலே பணிவதுவும் வெற்றிக்கு வழியென்றும்
வேற்றுமையில் ஒற்றுமையை காண்பதன் மாண்புதனை
ஓரினமாய் ஓர்குலமாய் வாழ்வதன் நன்மைதனை
நெறிதேடித் தவிக்கின்ற நம்முடை மாந்தர்க்கு
போதிமர புத்தராய் புதுகீதை புகட்டிடுவாய் !