இந்தக் கதை ஹிந்தியில் அனு சிங் சௌதரி அவர்களால் எழுதப்பட்ட ‘நீலா (ஃப்ளூ) ஸ்கார்ப்’ என்ற கதைத் தொகுப்பிலிருந்து எடுத்து சுருக்கி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
சுஷீலா சித்தியின் மனம் தழுதழுத்தது. ஆசை பூர்த்தியாகும் போது மனம் எப்பிடியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா! இந்தக் காலத்தில் பெண்ணிற்கு ஒரு நல்ல வரன் அமைவது ஒன்றும் சாதாரண விஷயமல்லவே! அதுவும் டில்லியில் வசிக்கும் பையன். இந்த சம்பந்தம் கிடைத்தது மிகவும் பாக்கியமே! இல்லாவிடில் தன்னைப் போலவே தன் பெண்ணும் வாழ்நாள் பூரா முற்றத்தை அலம்பிக் கொண்டு மண் அடுப்பில் கரியை ஊதி அதில் ரொட்டி வாட்டிக் கொண்டு, வருடா வருடம் நகரத்திலிருந்து கிராமத்திற்கு விடுமுறை கழிக்க வரும் தனது உறவினர்களைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டு கிராமத்திலேயே இருந்து விடுவாளோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த நிலைமை ஏற்படவில்லை. வினோத் சித்தப்பாவுடன் பல முறை சண்டை போட்டு அவரை சம்மதிக்க வைத்து விட்டாள்.
சுஷீலா போனில் என்னிடம் ‘நாங்கள் டில்லி வருகிறோம், பெண் பார்க்கும் (காண்பிக்கும்) படலத்திற்காக, உங்களுக்கு ஒன்றும் கஷ்டமாக இருக்காதே?’ என்றாள். திரையை விலக்கி உள்ளே விழும் சூரியனைப் பார்த்துக் கொண்டே ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த பாவனையில் இங்கே வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்குவீர்கள் அல்லவா! எப்போது வருவீர்கள்?’ என்று கேட்டேன். உண்மையில் இந்த இரண்டு அறையில் பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்வது கடினம். அது ஒரு பெரிய விசேஷம் போல் நீண்ட நேரம் நடக்கும். பெண் பிடித்து விட்டால் நல்லது, இல்லையெனில் அதற்காக இரண்டு மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டி வரும். இது என்னை விட வேறு யாருக்கு நன்றாகத் தெரியும்!
மாலையில் ஆபீசிலிருந்து வீடு திரும்பிய கணவரிடம் பயந்து கொண்டே இதைப் பிரஸ்தாபித்தபோது நல்ல மூடில் இருந்த அவர் ‘எல்லோரையும் வரச் சொல், ஒருவருடைய பெண்ணின் கல்யாணத்திற்கு உதவுவது புண்யச் செயலாகும். நாம் அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ முடிந்தால் அது நமது நல்ல நேரமேயாகும். கிராமத்திலிருக்கும் நமது மனிதர்களுக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவப் போகிறோம்?’ என்று என் மனம் குளிரப் பேசினார்.
உண்மையில் சுஷீலா சித்தி எனது சொந்த சித்தி அல்ல. என் மாமனாரின் தூரத்து சொந்தம். பாகப்பிரிவினை ஆகி விட்டாலும், நகரத்திற்கு புலம் பெயர்ந்து விட்டாலும் எல்லோருக்கும் நில புலன்கள் கிராமத்தில் இருக்கின்றன. அவைகளையும், ஆடு மாடுகளையும் பார்த்துக் கொண்டு வினோத் சித்தப்பா கிராமத்திலேயே தங்கி விட்டார். இதனால் நாங்களும் கிராமத்திற்கு போய் வந்து கொண்டிருந்தோம். பாகப் பிரிவினை ஆகி விட்டாலும் வாசலை ஒன்றாக வைத்துக் கொண்டு ஒரே அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தோம்.
நானும் சுஷீலா சித்தியும் மிகவும் நெருக்கம். வெயிலில் எல்லாக் குழந்தைகளும் பூக்களையும், கொட்டைகளையும் சேகரிக்கும் நேரத்தில் நான் அறையில் சித்தியின் பாட்டை ரசித்துக் கொண்டிருப்பேன். என்ன குரல் அது! புடவையில் பூ வேலைப்பாடு செய்து கொண்டே தன் மகளது கல்யாணத்தைப் பற்றி இனிமையான குரலால் பாடும்போது நான் அந்த மயக்கும் குரலில் லயித்திருப்பேன்.
சித்தியின் பிள்ளை ரோகித்துக்கு நான் வருடந்தோறும் ராக்கி அனுப்புவேன். ஷ்வேதாவையும், ரோகித்தையும் நான் மடியில் வைத்து கொஞ்சியிருக்கிறேன். ஷ்வேதாவின் தலையில் ரிப்பன் கட்டி விடுவேன், வெயில் காலம் பூராவும் அவளது பெரிய பெரிய கண்களில் மை எழுதுவது என் வேலையாகும். அவர்கள் வளர்ந்த பிறகு ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். இதற்கு பிரதியுபகாரமாக எனக்கு சித்தியிடமிருந்து பல பரிசுகள் கிடைக்கும். புளி போட்ட சிவப்பு மிளகாய் ஊறுகாய் சித்தி எனக்காக விசேஷமாகப் போட்டுத் தருவாள். நாங்கள் பாட்னா திரும்புகிறோம் என்று தெரிந்தவுடன் ஊறுகாய், இனிப்புபுளிப்பு மாங்காய், பொட்டுக்கடலை உருண்டை, சுத்த கோவாவில் செய்த இனிப்பு எல்லாவற்றையும் ஒரு பையில் போட்டு மெதுவாக என் அறையில் வைத்து விடுவாள். இதை மற்ற சித்தி, பாட்டி, தமக்கை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. அவர்களுடைய பொறாமை குணத்தை எங்கள் இருவராலும் சமாளிக்க முடியாது.
இப்போதும் அப்படியே. டில்லியில் ஒவ்வொரு மூலையிலும் எனது மூன்று சித்தப்பாக்கள், அநேக அண்ணன் தமக்கையர்கள். எங்களது இந்தத் தலைமுறையில் எல்லோரும் காலேஜில் படித்து விட்டு ஐஏஎஸ் எழுதுவதற்காக டில்லி வந்துள்ளனர். இருந்தாலும் சித்தி என் வீட்டில்தான் தன் பெண்ணின் பெண் பார்க்கும் வைபவத்தைக் கொண்டாடத் தீர்மானித்துள்ளாள்.
கல்யாணத்திற்கு முன் நானும் காலேஜ் முடித்து விட்டு ஒரு கால்சென்டரில் சிறிது காலம் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எனது தந்தை மூன்று வருடங்கள் விடாமல் தேடி எனக்கு இந்த வரனை ஏற்பாடு செய்வதில் வெற்றி பெற்றார். பையன் வீடு எங்களது கிராமத்துக்கு அருகிலேயே. குடும்பச் சூழ்நிலையும் எங்களது மாதிரியே. எனது வருங்கால மாமனாரும் எனது தந்தை மாதிரியே அரசு வேலை. இதனால் அவருக்கு கான்பூரில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு இருந்தது. வருடத்தில் ஒரு ஹோலி அல்லது தீபாவளிக்குக் கிராமத்திற்குச் செல்வார்கள். எனது தந்தைக்கும் மாமனாருக்கும் வேலையிலிருந்து நிவர்த்தி பெற்ற பின், நிறைவேறாது என்று தெரிந்தாலும், கிராமத்தில் சென்று வசிக்கும் ஆசை இருந்தது, இதனால் இருவரும் சிறிது நிலம் வாங்கிப் போட்டு அதற்கு வேலியும் போட்டு வைத்துள்ளனர்.
என்னை மாதிரியே என் கணவரும் கிராமமும் இல்லை, நகரமும் இல்லை. வேர் இல்லாதலால் எந்த இடமும் சொந்தமில்லை. என் கணவர் டில்லியில் ஒரு தனியார் கம்பனியில் துணை மேலாளர். நான்கு லக்ஷம் வரதக்ஷணையில் இதை விட சிறந்த மாப்பிள்ளை எங்கே கிடைக்கும்! எனக்குப் பின் இரண்டு தங்கைகள் வேறு. மூன்று பேர் என்னைப் பார்த்து வேண்டாம் என்று சொன்ன பிறகு இந்த வரன் அமைந்தது. என் கல்யாணம் கிராமத்தில் நடந்தது. சுஷீலா சித்தி பாடிக் கொண்டே கல்யாண வேலைகளில் அம்மாவிற்கு மிகவும் உதவியாக இருந்தார். எனக்காக போர்வைகள், புடைவைகள் எல்லாவற்றிலும் வேலைப்பாடு செய்து இருந்தார். அப்போதே ஷ்வேதா ‘நீ இவ்வளவு அழகாக இருக்கிறாய், நன்றாகப் படித்திருக்கிறாய், நகரத்தில் வசித்துள்ளாய், உனக்கே கல்யாணத்தில் இவ்வளவு கஷ்டம் என்றால் எனக்கு எப்படி? என் அப்பாவால் உன் அப்பா மாதிரி நான்கு லக்ஷம் வரதக்ஷணையும் கொடுக்க முடியாது. ஸ்ரீராமருக்கே சீதாவைக் கல்யாணம் செய்ய வில்லை வளைக்க வேண்டி வந்ததாக்கும்’ என்று பெருமூச்சு விடுவாள்’ ‘உன் கல்யாணம் எல்லாம் நன்றாக நடக்கும்’ என்று நான் அவளை அப்போது சமாதானப்படுத்தினேன். ‘இப்போது யார் ஷ்வேதாவைக் கல்யாணம் செய்ய வில்லைத் தொடுக்கத் தயாராக உள்ளார்கள், டில்லியில் இருக்கும் மாப்பிள்ளைக்குக் கொடுக்க வினோத் சித்தப்பா எப்படி பணம் தயார் செய்தார்’ என்று யோசித்தேன். சித்தி வந்தால்தான் இதற்கெல்லாம் விடை தெரியும். சித்திக்கு இரண்டு ஆசைகள் ஷ்வேதாவின் திருமண வாழ்க்கையும் ரோஹித்தின் வேலையும் நகரத்திலே, அதுவும் டில்லியாக இருந்தால் மிகவும் சந்தோஷம்.
நகரம் என்றால் சித்திக்கு மிகவும் பிடிக்கும். இங்கிருந்து தான் பிள்ளைகளுக்கு துணி வாங்கி வரச் சொல்லுவாள். நான் கிராமத்திற்குப் போகும் போதெல்லாம் நகரத்தைப் பற்றி துருவித் துருவி விசாரிப்பாள். “வீடு எப்படி இருக்கிறது. முற்றம் இல்லை அல்லவா, நல்லது மெழுக வேண்டிய அவசியமில்லை, கேஸ் கிடைக்கும் அல்லவா, பெரிய கடைகள் உள்ளனவா, குழாயைத் திறந்து விட்டால் தண்ணீர் கொட்டும் அல்லவா?’ என்று. நகரத்தின் மீது அவர்களுக்கு இருந்த மோகம் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. எங்களது நாகரீகப் பேச்சு, சுத்த ஹிந்தியில் பேசுவது, அம்மாவின் ஷிபான் புடவை, அப்பாவின் ஜிலு ஜிலு சட்டைகள் இவற்றைப் பார்த்து ஷ்வேதாவிற்கும் நகரத்தின் மீது மோகம் வந்து விட்டது. ‘அண்ணாவின் சட்டையைப் பார் பெரிய மனிதனின் தோரணை, சித்தப்பா ஏதோ ஒரு வேஷ்டியுடன் மாடுகளுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருப்பார் அல்லது வயலில் டிராக்டர் ஒட்டிக் கொண்டிருப்பார்’ என்று சித்தி புலம்புவதை ஷ்வேதாவும் கேட்டுக் கொண்டிருப்பாள்.
சித்தியும் ஷ்வேதாவும் ஒரு கும்பலுடன் ஸ்டேஷனில் வந்து இறங்கியதைப் பார்த்தவுடன் இவர்களை ஒரு கழிவறையுடன் கூடிய இரண்டு படிக்கையறை வீட்டில் எப்படி தங்க வைப்பது என்று மலைத்து விட்டேன். ‘இத்தனை பேர் எதற்கு?’ என்று ஷ்வேதாவிடம் கேட்டதற்கு சித்தி ‘இவர் என அண்ணா இவர் தான் சம்பந்தம் பேசினார், இது என் மருமகள்’ என்று ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினார் வெகுளியாக. ‘அது சரி இவர்கள் எல்லோரும் எங்கே தங்குவார்கள்?’ ‘ஏன் உன் வீட்டில்தான்?’ அதற்குள் ஷ்வேதாவின் மாமா ‘நாங்கள் டில்லிக்கு அநேக தடவை வந்துள்ளோம் எங்களது உறவுக்காரர்கள் இருக்கிறார்கள் அங்கே தங்குவோம்” என்று சமாளித்தார். ஆம் இங்கே எல்லோருக்கும் உறவினர்கள் இருப்பார்கள்.
நான் சித்தி, ஷ்வேதாவைக் கூட்டிக் கொண்டு பஸ்ஸில் எறினேன். சித்தி ஜன்னல் அருகில் உட்கார்ந்து குழந்தை மாதிரி தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஷ்வேதா ஏறும் ஜனங்களைக் கண்டு பயந்து இருந்தாள். வீட்டிற்கு வந்தவுடன் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டு ஷ்வேதா சோபாவில் உட்கார்ந்து விட்டாள். சித்தி வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டு ‘நின்று கொண்டே சமைக்கிறாயா, நல்லது என்னை மாதிரி உட்கார்ந்து சமைப்பதால் வரும் மூட்டு வலி இராதே’ என்று நகரத்துப் புராணம் பாட ஆரம்பித்து விட்டாள். இன்று சனிக்கிழமையாதலால் எனக்கு லீவ். மிஷினில் போட்ட துணிகளை எடுத்துக் கொண்டு மாடியில் காய வைக்கும்போது கூட்டத்தையும், அடுக்கடுக்கான வீடுகளையும் பார்த்து ஷ்வேதா கலவரப்பட்டாள். ‘இது ஒன்றுமேயில்லை. கோரேகானில் வானளாவிய கட்டிடங்கள் இருக்கும். ஆமாம் எப்படி இந்த வரன் வந்தது?’ ‘பையனுடைய அப்பா பெரிய மாமாவின் பால்யகால ஸ்நேகிதர். என் போட்டோவைக் காட்டினார். போட்டோ எடுப்பதிலும் ஒரே வேடிக்கைதான். அம்மாவிற்கு டில்லியில் பிரேம் ஸ்டூடியோவிலேதான் எடுக்கணும் என்று ஆசை. உங்கள் போட்டோவும் அங்கேதான் எடுத்தார்களா?’ நான் சிரித்துக் கொண்டேன். என் போட்டோவை அம்மா எல்லோரிடமும் காண்பித்து ‘எவ்ளோ அழகு. கொஞ்சம் கூட பணம் வாங்கிக் கொண்டாலும் அவர்களுக்குப் பெண்ணைப் பிடித்து விட்டது. அது போதும்’ என்று வரதக்ஷணையைப் பற்றியும் சொல்லி விட்டதை இப்போது நினைத்து சிரித்தேன். திரும்பவும் ஷ்வேதா ‘போட்டோ எடுக்கவில்லையா?’ என்று வினவவும் பழைய நினைவுகளிருந்து மீண்டு ‘வரதக்ஷணையைப் பற்றி பேசியாகி விட்டதா?’ என்று வினவினேன். ‘இது வரை இல்லை. பிள்ளை வீட்டார் எங்களிடம் இருப்பதில் கொஞ்சம் ஆசீர்வாதமாகக் கொடுக்கச் சொல்கிறார்கள். அம்மாவின் நகரத்து ஆசை என் கல்யாணத்தில் அதிக விலையாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது. ’உனக்கு என்ன வேண்டும்?’ ‘உண்மையைச் சொல்லப் போனால் நகரத்திற்கும் கிராமத்திற்கும் எனக்கு ஒரு வித்யாயசமும் தெரியவில்லை. என் கல்யாணம் அம்மா அப்பாவிற்கு பிரச்னையாகி விடக் கூடாது.’ எல்லாப் பெண்களும் இப்படித்தான் நினைக்கிறார்கள்.
பையனுக்குப் போட்டோவில் பெண்ணைப் பிடித்து விட்டது. புதன் கிழமை பெண் பார்க்கும் படலம் ஒரு பெரிய இடத்தில் என்று முடிவாயிற்று. திங்கட்கிழமை சித்தி பார்லர் சென்று வந்தாள். ரோஜாப்பூ மாதிரி இருந்த அவரைப் பார்த்து ‘ஷ்வேதாவிற்குப் பதில் உங்களை அனுப்பலாம் போலிருக்கிறதே!’ என்று நாங்கள் சொன்னோம்.
புதன் அன்று காலையிலிருந்து சித்தி பக்கத்து கடைக்குச் சென்று சாமான் வாங்கிக் கொண்டே இருந்தாள். வேண்டுதலும் வைத்துக் கொண்டே இருந்தாள். ஷ்வேதா பரீட்சையில் பாஸ் ஆகி விடுவோமா என்று பயந்து கொண்டே இருந்தாள். ஷ்வேதாவிற்கு என் புடவையை அணிவித்து ‘இவளை யார் மறுக்கப் போகிறார்கள்’ என்றேன். நாங்கள் மொத்தம் பன்னிரண்டு பேர் சென்றோம். நாங்கள் ஒரு நீளமான இருக்கையில் அமர்ந்தோம். பிள்ளை வீட்டார்களும் வந்தார்கள். பையன் அப்பாவின் பிசினஸைப் பார்த்துக் கொள்கிறார் மேலும் சில கடைகள் திறக்க உத்தேசம் என்று தெரிந்தது. ‘பெண் பிடித்திருந்தால் மேலே பேசுவோமே!’ என்று மாமா ஆரம்பிக்க பையனின் அப்பா ‘எங்களுக்குப் பெண் பிடித்திருக்கிறது. கிராமத்திலிருக்கும் எங்களது பூர்வீகச் சொத்தை வாங்கிக் கொண்டு அதற்குப் பணம் கொடுத்து விடுங்கள். அது போதும்’ என்றார். நில புலன்கள் இருக்கிறது என்று வந்தால் அவற்றை விற்கும் நிலமையிலா இருக்கிறார்கள் இவர்கள்! எப்படி மேலே குடித்தனம் நடக்கும்!’
வீட்டிற்கு வந்தவுடன் சித்தி கிராமத்திலிருக்கும் சித்தப்பாவிற்குப் ஃபோன் போட்டு ‘பண்டிதர் சொன்ன நில புலன்கள் உள்ள அந்த டீச்சர் வரனையே முடித்து விடுங்கள். சின்ன வீடாக இருந்தாலும் நமது பெண் சந்தோஷமாக இருப்பாள். நகரத்தில் வசிக்க நில புலங்களை விற்க வேண்டி வரும் நிலமை அவளுக்கு வராது. ஆனால் ஒன்று நேரே கல்யாணம்தான், இந்தப் பெண் பார்க்கும் படலம் ஒன்றும் கிடையாது!’ என்று நச்சென்று ஃபோனை வைத்தாள்.