கதவு தட்டப்படும் சத்தம்! தொடர்ந்து தட்டப்பட, நான் அதிர்ச்சியில் கண்ணாடியைத்
தேடி அணிந்து கொண்டு கதவைத் திறந்தேன்.
வாசலில் போலீஸ் வேன்!
போலீஸ்காரர்கள் தான் தட்டியுள்ளார்கள்!
தள்ளாடியபடி நிலையை பிடித்து நின்றேன்.
“நீங்கதான் நமச்சிவாயமா?”
“ஆமா சார்.
” சங்கரன் உங்கள் பையனா? “
ஆமா சார்!”
“சரி ரெடியாகி வண்டியிலேயே ஏறுங்க, போகும் போது சொல்றேன்!”
“சார் என்ன ஆச்சு சார்? தயவு செஞ்சு சொல்லுங்க. நீங்க சொல்ற வரைக்கும் என்னால தாங்க முடியாது.”
“உங்க பையனுக்கு ஆக்சிடென்ட், கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில அட்மிட் செய்திருக்கோம்.
பைக்ல போகும்போது நிதானம் தப்பி மரத்தில் மோதி இருக்கான்.
“வாங்க, பேச நேரம் இல்லை, நேர்ல பாருங்க.”
” மனசு பதறுது சார்.”
“ஐயா, அவன் பர்ஸ்ல இருந்த அட்ரஸ் வெச்சுத்தான் உங்களைப் பார்க்க வந்தோம்.”
கதவை பூட்டிவிட்டு அவர்களை தொடர்ந்தேன்.
“சார் நான் ஒரு ரிட்டையர்டு வாத்தியார். அவனுக்கு தாயார் காலமானதுக்குப் பிறகு நான் தான் தாயாகவும் தந்தையாகவும் இருந்து வளர்த்தேன். “
” சரி ஆஸ்பத்திரி வந்தாச்சு, இறங்கி வாங்க, பிடிச்சு இறங்குங்க”.
தடுமாறி போலீஸ்காரர் உதவியுடன் இறங்கினேன்.
அவிழ்ந்தவேட்டியைக் கட்டிக்கொண்டு அவர்களுக்கு பின்னால் நடந்தேன்.
நேரம் நடு இரவு தாண்டி இருக்கும்.
எமர்ஜென்சி வார்டு வாசலில் உட்காரச் சொன்னார்கள் .
உள்ளே போனவர்கள் நேரம் கழித்து வந்து ” ரத்தம் நிறையப் போயிருக்கு, நினைவில்லாமல் இருக்கான்”
“ரத்தம் கொடுத்துகிட்டு இருக்காங்க, ரிசல்ட் வர நேரம் ஆகும்” என்றார்கள் .
உடலில் அசதி, மனதில் குழப்பம்! படுத்தவன் மறுபடியும் எழுந்து விட்டேன் .
தூக்கமா வரும்? உக்காந்தேன். உட்காரவும் முடியவில்லை.
அழைத்து வந்து போலீஸ்காரர்கள் கூப்பிட்டார்கள்.
” உட்காருங்கள், பையன் என்ன பண்றான் “
சங்கரன் ஸ்கூல்ல நல்லாத்தான் படித்தான், முதல் மார்க் தான். அப்புறம் இன்ஜினியரிங் காலேஜ்
ஒரு குறிப்பிட்ட காலேஜ்ல தான் படிப்பேன், அதான் நல்ல காலேஜ் என்றான்.
கவுன்சிலிங் அவனுக்கு இருக்கிற மார்க்குக்கு அந்த காலேஜிலேயே இடம் கிடைத்தது.
எல்லாம் அவன் விரும்பியபடி நடந்ததாலே நிம்மதியா படிப்பான் என்று நினைத்தேன்.
ஆனால் நடந்தது வேறயாப் போச்சு.”
சரி உங்க பையனுக்கு வேற பழக்க வழக்கம் உண்டா? தண்ணி, போதை பொருள், கஞ்சா? போலீஸ்காரர் கேட்டது ஈர கொலை நடுங்கி போச்சு!
ஓ வென்று கதறி விட்டேன் .
அவர்கள் வெளியில் அழைத்துச் சென்று டீ வாங்கி குடிக்க வைத்தார்கள்.
முகத்தை கழுவி விட்டு டீயை குடித்தேன்.
சார் அவன் காலேஜில் சேர்ந்த முதல் வருடம் எந்த சங்கடமும் இல்லாமல் காலேஜ் பஸ்ஸில் போய் வந்தான். என் சம்சாரம் காலமா னதிலிருந்து அவங்க அம்மாதான் பேரனை வளர்த்தார்கள்நானும் அவனை ஒன்னும் சொல்வது கிடையாது .என்நேரமும் ஆண்ட்ராய்டு செல்போன் தான். இரண்டாவது வருடம் இரண்டாவது செமஸ்டர் படிக்கும்போது “எனக்கு பைக் வாங்கி தாங்கன்னு” கேட்டான்.
தம்பி, இருக்கிற டிராபிக் பார்த்தா பயமா இருக்கு . பைக் தேவையா? பஸ்லே போய் பஸ்லயே வந்தா எனக்கும் நிம்மதியாய் இருக்கும் என்றேன்.
என் வகுப்பு பையன்கள் பைக் வச்சிருக்காங்க. எனக்கு பைக் வேணும்னு அடம் பிடிச்சான்.
ஒரு லட்சம் வேணும் அந்த பைக் வாங்கணும் என்றான். வேற வழி தெரியல. பி எஃப் லோன் போட்டு பணம் கொடுத்தேன்
ஒரு நாள் வீட்டில் கொண்டு வந்து வண்டியை நிறுத்தினான். அசந்து போனேன்
ஏதோ பறப்பது போல இருந்தது.
பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் பார்த்து விட்டு போனார்கள்.
தினமும் அவன் வண்டியில் போற வேகத்தை பார்த்து பலரும் சொன்னார்கள்.
அதில் கேலியும் கிண்டலும் சேர்ந்து இருந்தது. மனதில் பயத்தையும் உண்டாக்கியது
இதற்கிடையில் ரிட்டையர்டு ஆகிவிட்டேன்.
பையன் போக்கு சரியாய் இல்லை என்பது, அவன் இரவு லேட்டா வரும்போது புரிந்தது.
வண்டியில் போகும் போது செல்போனை பார்த்து கொண்டே செல்வதாக கேள்விப்பட்டேன்.
சாப்பிடாமல் பாட்டியும் நானும் பல நாள் அவனுக்காக காத்திருப்போம்.
“எனக்கு சாப்பாடு வேண்டாம் வெளியில் சாப்பிட்டேன்”என்று ரூமைப்பூட்டுக் கொள்வான்.
இரவு முழுவதும் லைட் எரியும்.
இப்படி பல நாட்கள்.
அப்புறம் சேர்க்கையால் போதை வஸ்துக்கள் நடமாட ஆரம்பித்தது தெரிந்தது, கையைப் பிடித்துக் கொண்டு அழுவேன்.
கையை உதறிவிட்டுப் போய் விடுவான்.
தண்ணீரும் சாப்பிட்டு இருக்கிறான் என்பது தெரிய வந்தது.
வளர்த்து ஆளாக்கிய பாட்டி நடப்பதை பார்த்து, மனம் நொந்து ஒருநாள் கண்ணை மூடி விட்டார்கள்.
சமையலுக்கு ஒரு பாட்டியம்மாவை போட்டு, சாப்பிட்டோம் என்று பெயர் பண்ணிக் கொண்டு வாழ்ந்தேன்.
பையன் மூன்று நேரமும் வெளியில் தான் ஆகாரம்.
இரவில் தள்ளாடி வரும் பொழுது விழுந்து விடாதபடி பிடித்துப் படுக்க வைப்பேன்.
மாதாமாதம் பென்ஷன் வந்து போதவில்லை.
ரிட்டயர்மென்ட் பணத்தை பேங்கில் போட்டதால் வந்த வட்டியும் தண்ணியாய் போனது.
தினமும் பணம் கேட்டு அவன் போட்ட சத்தம் தாங்க முடியவில்லை.
பக்கத்தில் உள்ளவர்கள் எட்டிப் பார்த்துவிட்டு வசை பாடினார்கள்.
தலையெழுத்து என்று நடமாடும் நேரத்தில் இந்த பேரிடி.
அவசரமாக ஓடிவந்த ஆஸ்பத்திரி ஆள் போலீஸ் காரர்கள் கிட்டே ஏதோ சொன்னார்.
போலீஸ்காரர் முகம் மாறி விட்டது, என்னவென்று தெரியவில்லை.
“வாத்தியார் சார் மனசை தளர விடாதீங்க அவன் பொழைச்சுக்குவான்” கோமாவுக்குப் போய்விடுவான்னு பயந்து இருக்காங்க .
ஆனா அவனுடைய கிட்னியில் அடிபட்டு இருக்காம்.
பைக்ல நிதானம் இல்லாம ஓட்டி, தூக்கி எறிந்து மரத்தில் விழுந்தது அடிபட்டு கிட்னி வேலை செய்யலையாம்!
டாக்டர்கள் ஆலோசனை பண்ணிக்கிட்டு இருக்காங்க
சார் என்னை டாக்டர் கிட்டக் கூட்டிட்டுப் போங்க .
கிட்னி வேலை செய்யலைன்னா பிறகு அவன் எப்படி சார் பிழைப்பான்?.
டாக்டர் ஐயா, உடனே தெய்வம் மாதிரி தயவு செய்து என் கிட்னி அவனுக்கு பொருந்துமா ன்னு டெஸ்ட் பண்ணி, சரின்னா, என் கிட்னியை அவனுக்குத் தர ரெடி. தயவு செஞ்சு உடனே ஏற்பாடு பண்ணுங்க சாமி!
கையெடுத்து கும்பிட்டேன்.
அடுத்து நொடியில் இருந்து ஒவ்வொரு டெஸ்ட்டும் செய்யப்பட்டது. எனது கிட்னிஅவனுக்கு பொருந்தும் என்றார்கள்.
என் கிட்னி ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஒரு கிட்னியில் எடுத்தாலும் அடுத்த கிட்னியுடன் நான் வாழலாம் என்றார்கள்.
அவன் உயிர் பிழைத்து நல்லா இருந்தா போதும் டாக்டர்.
எனக்கு வேற என்ன வேணும்?
ஆறுதல் கூறினார்கள்.
மற்ற எல்லாரும் நடைமுறை சட்ட திட்டங்களை அனுசரித்து கையெழுத்து வாங்கினார்கள்.
அவசரகதியில் நடத்த வேண்டிய ஆபரேஷன் என்பதால் ஒருவர் கூட அசரவில்லை
மனதில் அவர்களுடைய கடமை உணர்விற்காக ஆண்டவனை வேண்டிக் கொண்டேன்.
டாக்டர்கள் தான் கடவுள் என்று எல்லோரும் ஆபத்து காலத்தில் சொல்வது வழக்கம்.
ஆனால் நானே நேரில் அனுபவித்து அவர்கள் கருணை உள்ளத்தையும் உணர்ந்தேன்.
எல்லாம் போர்க்கால அடிப்படையில் நடந்தது.
பையனுடைய நிலைமை என்னவென்று யாரிடமும் கேட்க முடியவில்லை .
அவர்கள் அவசரம் அவசரமாக அவனை காப்பாற்றுவதில் இருந்ததால் கடமையில் கவனமாக இருந்தார்கள் .
எனக்கு எல்லா டெஸ்டுகளும் செய்தார்கள். இருதயம் தாங்கும் சக்தி உள்ளதா என்று பார்த்தார்கள்.
அதான் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு வாழ்கிறதே!
என்னை ஆபரேஷன் தியேட்டருக்கு செல்வதற்கு முன் உடல் அளவிலும் மனதளவிலும் தயார் படுத்தினார்கள்.
நான் முழுமையாக அவர்களுக்கு ஒத்துழைத்தேன்.
அவர்கள் ஆக வேண்டியதை மிகத் துரிதமாகவும் துல்லியமாகவும் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
ஆப்பரேஷன் நடந்தது.
முடிந்தவுடன் ஸ்டெச்சரில் தள்ளிக் கொண்டு வந்தார்கள்.
“பெரியவர் நல்ல மனுஷன்,” “பையனும் அதிர்ஷ்டக்காரன்”
இனிமேல் கவலை இல்லை! உடல் நலம் தேறி வேண்டும் என்றார்கள்.
அரைமயக்கத்தில் கேட்டது.
ஹாஸ்பிடல் இருக்க வேண்டிய நாட்களில் நல்ல சத்தான ஆகாரமும் மருத்துவமும் கொடுத்து எங்களைத் தேற்றினார்கள்.
இருவருக்கும் கட்டுப்பாடுகளைச் சொன்னார்கள். பையனை பார்த்தேன்.
கண்ணீர் தான் அவன் பதிலாக இருந்தது .
கோர்ட்டிலும் யாருக்கும் உயிர் சேதம் வைக்காத காரணத்தால் அவன் நிலை கருதி அவனுக்கு
மன்னிப்பு வழங்கிய தகவல் வந்தது.
கடவுள் அதற்கெல்லாம் சேர்த்து தண்டனை கொடுத்துப் பின் காப்பாற்றி விட்டார்
என்று நினைத்துக் கொண்டேன்.
வீட்டில் பையனைத் தனியாக கொஞ்ச நாள் ரூமில் இருக்கச் சொல்லிவிட்டு நான் நடு வீட்டில் கட்டில் போட்டு படுத்து இருந்தேன்.
ஆஸ்பத்திரியிலிருந்து வந்த நாள் முதல் பார்ப்பதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
யாரையும் தடுக்க முடியவில்லை.
பையனிடம் மட்டும் யாரும் நெருங்காமல் பார்த்துக் கொண்டேன்.
எல்லோருக்கும் நானே பதில் சொல்லி சமாளித்தேன்.
எனக்கும் களைப்பாகத்தான் இருந்தது.
வேறு வழியில்லை.
யாரும் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
நாளை யாரும் விசாரிக்கவில்லை என்று சொல்லிவிடக்கூடாது என்று நினைத்து அவர்கள் வந்தார்கள்.
நாளடைவில் ஏதோ ஒரு தொற்று நோய் என்னை தீண்டி விட்டது
காய்ச்சல் என்று நினைத்து மாத்திரைகள் சாப்பிட உடல் நலமாக இல்லை.
நண்பரிடம் சொல்லி பையனை வீட்டிலேயே பாத்துக்க, அவரை துணைக்கு இருக்கச் சொன்னேன்.
நண்பர் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைத்தார்.
ஆஸ்பத்திரியில் டெஸ்ட் எடுத்து தொற்றும் நோய்க்கு மருந்துகள் கொடுத்தார்கள்.
நோய் குறைவதும் அதிகமாவதுமாக இருந்தது.
சிறுநீரக பிரச்சனை இல்லாததால் டாக்டர்கள் தைரியம் கொடுத்தார்கள்.
திடீரென்று மயங்கி விட்டேன்.
அதற்கு பிறகு நடந்தது, ஆஸ்பத்திரி உள்ளவர்கள் சொன்னது :
உங்களை டாக்டர்கள் பரிசோதித்தார்கள் . நாடி குறைந்துவிட்டது என்றும் இருதயம் வேலை செய்வது நின்று விட்டது என்பதையும் அவர்கள் அறிந்து முதல் உதவிகள் செய்தும் ஒன்றும் ஆகாததால் இறந்ததாக முடிவு செய்து விட்டார்கள்! “எல்லா சடங்குகளும் முடிந்து ஆம்புலன்ஸ்ல வீட்டுக்குக் கொண்டு சென்ற போது இரவு வெகு நேரம் ஆனதால் ரோட்டில் இருந்த பெரிய குழியில் வண்டி இறங்கி ஏறியதில் ஸ்ட்ரக்சரில் கிடந்த நீங்கள் ஒரு பக்கம் சாய்ந்து கீழே விழுந்து விட்டீர்கள்! உடனே ஆம்புலன்ஸ் நிறுத்தி மறுபடியும் ஸ்ட்ரக்சரில்
உங்களைத் தூக்கிப் போடும் போது ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது! உங்கள் உடல் அசைவையும் இருதயம் வேலை செய்வதையும் பல்ஸ் இருப்பதையும் கண்டு உடனே ஆம்புலன்ஸை ஆஸ்பத்திரிக்கு திருப்பி விட்டார்கள். மருத்துவ உலகில் எப்போதோ நடக்கும், நம் அறிவுக்கு எட்டாத ஒன்று நடந்ததாக எண்ணி மீண்டும் சிகிச்சைகள் தரப்பட நீங்கள் சகஜ நிலைக்கே திரும்பி சாதாரணமாக ஆகிவிட்டீர்கள்! எதையும் உங்கள் வீட்டுக்கு தெரிவிக்காததால் நீங்களும் சுகம் ஆகிவிட்டீர்கள் . ஆஸ்பத்திரியில் எல்லோருக்கும் மகிழ்ச்சி!
மனதில் ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன்!
“யார் செய்த புண்ணியமோ” என்று இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்குப் பிறகு சொல்வார்கள்.
எனக்கும் தெரியவில்லை
“யார் செய்த புண்ணியமோ”
—————-(((((((()))))))))) – – – – – – – – – – – – – –
பையன் மேல் உள்ள அதிகமான பாசம். காலத்தின் கோலம். நல்ல வேளையாக பையனுக்காக கிட்னி கொடுத்தும் தொற்று நோய் வந்து தப்பித்தது பரவாயில்ல என்று எண்ணவேண்டிய நிலை. பையன்களை சரியாக வளர்க்க வேண்டும், அவன்போக்கில் விடக்கூடாது இதை ஏன் கதாசிரியர் செல்லவில்லை?
LikeLike