முகம் நக நட்பும் நட்பு!
ஒருநாள்…..
வலைத்தளத்தைக் குடைந்து குடைந்து தேடிக்கொண்டிருந்தேன். ஏன், எதற்காக, என்கிறீர்களா? எனது பள்ளிப்பருவத்தில் உயிருக்குயிராய்ப் பழகிய அருமைத்தோழி ஜானா எங்கிருக்கிறாள் என அறிந்து மீண்டும் தொடர்பு கொள்ளத்தான்! அவளுடைய பெரிய அத்திம்பேர் (மூத்த அக்காவின் கணவர்) ஒரு பெரிய இண்டஸ்டிரியலிஸ்ட்- என அன்றைக்கே அவள் கூறியிருந்தாள். ஆகவே அவரைக் கண்டுபிடித்தால் ஜானாவைப்பற்றி அறிந்து கொள்ளலாமே! தொடர்பும் கொள்ளலாமே என்ற ஆவல்தான் இத்தேடலுக்குக் காரணம். ஒரு காலகட்டத்தில் எல்லாருடைய வாழ்விலும் பழைய நண்பர்களின் தொடர்பு என்பது மிகவும் இனிமையான ஒன்று. இன்றியமையாததும் எனலாமா? பணமும் காசுமல்ல! இந்த நட்புகளே வாழ்க்கையின் அத்தியாவசியமான தேவைகளாகி விடுகின்றனவோ என்னவோ! இது என்னுடைய தத்துவ விளக்கம்.
ஆகா! இதோ அவருடைய மின்னஞ்சல் முகவரி கிடைத்து விட்டது- உடனே செய்தி அனுப்பியாயிற்று! அப்பாடா! கூடிய விரைவில் ஜானாவிடமிருந்து வரப்போகும் செய்தியை எதிர்பார்த்து உள்ளம் துள்ளிற்று.
பள்ளி நாட்களில் நானும் ஜானாவும் அடித்த கொட்டம் எங்கள் நட்பைப்போலவே உலகப்பிரசித்தி – இல்லை – பள்ளிப்பிரசித்தி! பள்ளிக்கூட கோலப்போட்டியில் எங்கள் வகுப்புதான் முதல்பரிசு பெறும். ஏனெனில் நானும் ஜானாவும் எங்கள் பாட்டிமார்களைக் கேட்டுக்கொண்டு வந்து போடும் கோலங்கள் அத்தனை அழகானவை!
ஆண்டுவிழாவில் டிராமாவா? நானும் அவளும் தான் முதலில் நிற்போம். எங்கள் நடிப்புத் திறன் அவ்வளவு பிரமாதம்!
ஏதாவது ஒரு வகுப்பு ஆசிரியர் வரவில்லையானால், மற்றொருவர் வந்து – பாடம் எடுக்க மாட்டார்- எங்களைப் படிக்கச் சொல்வார். ஆனால் சுந்தரம் வாத்தியார் தான் ஜாலிப் பேர்வழி! அவரே நல்ல கதைகள் சொல்வார். தமிழ் மீடியம் மாணவர்களான எங்களுக்கு ராபின்ஸன் க்ரூஸோவையும் டிக்கன்ஸையும் விரிவாக நாடக பாணியில் சொல்லி மகிழ்விப்பார். எனக்கும் ஜானாவுக்கும் இக்கதைகள் மிகவும் பிடித்தமானவை. பிற்காலத்தில் ஒரிஜினல் ஆங்கில நூல்களைத் தேடிப்படிக்க எங்களை இவைதான் ஊக்குவித்தன எனலாம். சித்திர ஆசிரியர் செந்தில்குமார் வந்தால் என்னையும் ஜானாவையும் பாடல்கள் பாட வைப்பார். நான் நன்றாகப் பாடுவேன். ஜானா கொஞ்சம் தயங்குவாள். உற்சாகப்படுத்தி என்னுடன் பாடவைப்பேன். அவரை ‘இம்ப்ரஸ்’ செய்வதற்காகவே புதுப்புது திருப்புகழ், தேவாரப்பாடல்களை நானே இசையமைத்துக் கொண்டுவந்து அவளுக்கும் சொல்லிக்கொடுத்து இருவரும் சேர்ந்து பாடுவோம்.
மதிய உணவு நேரம்தான் எங்கள் சொர்க்கம். அங்காயப்பொடி பற்றி நான் தெரிந்து கொண்டது ஜானாவிடமிருந்துதான். என் பெற்றோர் பாலக்காடு பக்கத்தவர் ஆனதால் தயிர்சாதமும் மாவடுவும்தான் எனது மதிய உணவு. சென்னை வெயிலில் அந்தத் தயிர்சாதம் புளித்து, ஒவ்வொரு கவளமும் உட்கொள்ளும்போது உடலைக் கூச வைக்கும். சிறிது தயிர் ஊற்றி, நிறையப் பாலைச் சேர்த்துப் பிசையலாம் எனும் நவீன ‘டெக்னிக்’குகள் தெரியாத காலம் அது! ஜானாவின் டப்பாவில் கொண்டுவரும் புளியோதரையும், தேங்காய், எலுமிச்சை சாத வகையறாக்களும்தான் கைகொடுக்கும். அவற்றை அவள் என்னுடன் பங்கிட்டுக்கொள்ளும்போது நட்பின் உச்ச எல்லையில் உலவுவோம்! என் மாவடுவும் மாகாளிக்கிழங்கு ஊறுகாயும் அவளுக்கும் மிகவும் பிடித்த அயிட்டங்கள்! இவை மதிய உணவு நேரத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும்.
விளையாட்டு நேரம், நாங்கள் இருவரும்தான் எங்கள் வகுப்பில் ‘எறிபந்து’ விற்பன்னர்கள். மிகுந்த உற்சாகத்துடன் போட்டி போட்டுக்கொண்டு நாங்கள் விளையாடும் ஆட்டம் சீரியஸ் முகத்துடன் இருக்கும் உடற்பயிற்சி ஆசிரியையைக்கூட புன்னகைக்க வைக்கும்!
என் தகப்பனாருக்கு வேலை மாற்றம் ஆகி நாங்கள் வேறு ஊருக்குச் சென்று சில மாதங்கள் வரை ஜானாவுடன் கடிதத் தொடர்பு இருந்தது. பின் என்ன காரணத்தினாலோ நின்று விட்டது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எனது பிறந்தநாளுக்கு அவள், ‘ஆலிவர் ட்விஸ்ட்,’ஐப் பரிசாகத்தர, அவளுடைய பிறந்ததினத்திற்கு நான், ‘கலிவரின் யாத்திரைகள்,’ புத்தகத்தைப் பரிசளித்தேன். அவ்வளவுதான் தொடர்பு. சிறுமிகளான எங்களுக்குப் படிப்பிலும் பாட்டிலும் தான் நேரத்தைச் செலவிட முடிந்ததே தவிர வேறு எதனையும் பற்றிச் சிந்திக்கவும் முடியவில்லை. புது இடங்கள், புதுத் தோழிகள்!
இப்போது, நான் ரிடையரான பின்பு, பழைய நினைவுகள் மனதில் பொங்கியெழ, கிட்டத்தட்ட ஐம்பது சொச்சம் ஆண்டுகளின்பின் எனது பழைய பள்ளித்தோழியைத் தேடும் முயற்சியில் இறங்கினேன்.
அதிர்ஷ்டம் என்பக்கம் இருந்தது போலும்! அடுத்தநாளே எனது மின்னஞ்சலுக்கு அந்தப் பெரிய மனிதரிடமிருந்து (ஜானாவின் அத்திம்பேர்) மறுமொழி வந்துவிட்டது. தனது மனைவியின் இளையசகோதரியும் நானும் கொண்டிருந்த ஆழ்ந்த நட்பைச் சிலாகித்து எழுதியிருந்தார். ‘பாரியும் கபிலரும் போல,’ என எல்லாம் அவர் எழுதியிருந்தது உள்ளத்தைத் தொட்டது. அவள் தற்சமயம் என்ன செய்கிறாள் என்றும் ஓரிரு வரிகளை எழுதி எங்கள் நட்புக்குத் தனது வாழ்த்துக்களுடன், அத்தனை பணிகளுக்கு நடுவிலும், இதனை ஒரு முக்கியமான செய்கையாகக் கருதி அவர் பதில் எழுதியிருந்தது மனதைத் தொட்டது.
ஆகா! ஜானாவின் மின்னஞ்சல் முகவரி கிடைத்துவிட்டது. என்னுள் ஒரே உற்சாகம் கொப்பளித்தது. உள்ளம் களியாட்டம் போட்டது!!
என் பள்ளிப்பருவ அருமைத்தோழிக்கு நீட்டி முழக்கி, வரிந்து வரிந்து ‘இதுவே தோழமையின் உதாரணம்,’ எனுமளவிற்கு ஒரு நீ……ண்ட மின்னஞ்சலை அனுப்பிவைத்தேன். நான் மாறவேயில்லை என அவள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
அவளிடமிருந்து சில நாட்கள் கழித்து நிதானமாகவே ஆனால் அவசரப்படாமல் ஒரு சுருக்கமான மறுமொழி வந்தது.
‘நான் ‘இன்ன’ வேலையில் ‘இந்த’ ஊரில் இருக்கிறேன். விவரமாகப் பிறகு தொடர்பு கொள்கிறேன்,’ என்றெல்லாம் எழுதியிருந்தவளுக்கு, என்னுடன் தொடர்புகொள்ள முடிந்ததற்கு மகிழ்ச்சியா என்ன எனவெல்லாம் தெரிவிக்க இயலவில்லை. ரொம்ப ரொம்ப ‘பிஸி,’ போலும்; பாவம், என்ன வேலைப்பளுவோ என எண்ணிக்கொண்டேன்!
ஒருவாரம், பத்து நாட்கள்; காத்திருந்து கண் பூத்துப்போனதுதான் மிச்சம்! ஈ-மெயிலாவது ஒன்றாவது, எதையும் காணோம். அவளுடைய கைபேசி எண்ணையும் அத்திம்பேர் அனுப்பியிருந்தார். சரி, இதில் என்ன இருக்கிறது? நம் தோழமையை நாம்தான் கூப்பிடலாமே எனக் கூப்பிட்டேன்.
என் கணவரிடம், “என் பள்ளித்தோழியிடம் அரட்டை அடிக்கப் போகிறேன். நீண்ட நாட்களின் பின் பேசுவதனால் நிறைய நேரம் ஆகும். பசித்தால் நீங்கள் சாப்பிட்டு விடுங்கள்,” எனவெல்லாம் சொல்லிவிட்டு கைபேசியும் தானுமாய் மாடியறையுள் புகுந்தேன்.
பத்துப் பன்னிரு ‘ரிங்’ ஆனபின் இணைப்பு கிடைத்தது. ஆவல் கொப்பளிக்கப் ‘படபட’வெனப் பேசினேன். அவள் பேசியதோ அறிமுகமேயில்லாத ஒரு மூன்றாம் மனிதரிடம் பேசுவதுபோல இருந்தது. எனக்குத் துணுக்கென்றது.
“ஓ! நான் இப்போது ஒரு திருமண வரவேற்பில் இருக்கிறேன். அப்புறமாகக் கூப்பிட்டு விவரமாகப் பேசுகிறேன்,” என்றவளிடம், “எனது கைபேசி எண்ணைச் சேமித்து வைத்துக்கொள்,” எனப் பழைய நட்பின் உரிமையுடன் நினைவுறுத்தினேன். என்னால் எவ்வாறு இவ்வளவு இயல்பாகப் பேச முடிகிறது என எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
“ஓகே!” இணைப்பு துண்டிக்கப்பட்டது.
“என்ன? பழைய தோழிகள் இத்தனை சீக்கிரம் பேசி முடித்து விட்டீர்களா?” என்று கேட்ட கணவர், விழுந்துவிட்ட என் முகத்தைக் கண்டதும் பலவிதமாக எனக்கு ஆறுதல் கூறித் தேற்றினார்.
இது நடந்து இரு வருடங்களாகி விட்டன; இன்னும் ஆவலுடன் ஜானாவின் ‘அந்த’ நீண்ட தொலைபேசி அழைப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
ஒருவேளை அவள் என் கைபேசி எண்ணைச் சேமித்து வைத்துக் கொள்ள மறந்துவிட்டாளோ? திரும்பக் கூப்பிடலாமா? வேண்டாம். என் நட்பு அவளுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருந்தால் அவளே நான் அவளைத் தேடிக் கண்டுபிடித்தது போல, என்னத் தேடிக் கண்டுபிடிப்பாளல்லவா?
நான் எப்படியெல்லாம் மாய்ந்து மாய்ந்து தேடி அவளைக் கண்டுபிடித்துத் தொடர்பும் கொண்டேன். அவளுக்குப் பழைய நட்பைப் புதுப்பித்துக் கொள்ள விருப்பம் இல்லை போலும். பள்ளிப்பருவத்தில் பிரிந்தபோது எப்படிக் கண்ணீரும் கம்பலையுமாகப் பிரிந்தோம். காலம் அனைத்தையும் மாற்றிவிட்டதே!
வாழ்வின் இணைபிரியாத உறவுகளான வாழ்க்கைத்துணை, குடும்பம் ஆகியன மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகின்றன! ஆனால் நட்பைப் பெருமைப்படுத்தி வளர்ப்பதில் நான் மாறவில்லையே! அவள் ஏன் மாறிவிட்டாள்? எனக்கு மனிதர்களையும் நட்பையும் எடைபோடத்தெரியும் என்றிருந்த கர்வம் ஒருவாறு ஒடுங்கி அடங்கியது!
Old wine and old friends are the best!
ம்… இது ஒரு அப்பட்டமான பொய் எனத் தோன்றுகிறது!
வாழ்க்கை வழங்கிய பல பாடங்களில் இதுவும் இன்னொன்று!
*****
உண்மையான நட்பு காலாவதியானது போல இருக்கிறது…இவர்தேடிய தேடலில் வெறுமையானது தெரிகிறது.
LikeLike