தூக்கம் உன் கண்களை…
“அல்லி! அது என்னமோ தெரியல!. தூக்கம் தூக்கமா வருது. பெரும் தூக்கம்!” என்று அலுத்துக்கொண்டாள் அங்கயர்க்கண்ணி மாமி. அல்லிராணி சிரித்தாள். “மாமி.. பெரும் தூக்கம் என்று சொன்ன உடனே எனக்கு நினைவு வருவது இந்த சயன்ஸ் நியூஸ் தான்” என்றவள், “மாமி, ஹைபர்னேஷன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றாள். மாமி உடனே “ஆமாம். கரடிகள் குளிர்காலத்தில் ஹைபர்னேஷன் செய்து தூங்குமாம். அந்த நேரத்தில், பெண் கரடிகள், குழந்தைகள் கூட பெத்துக் கொள்ளுமாம்” என்றாள். அல்லி ஆச்சர்யப்பட்டாள்.
“சூப்பர் மாமி! நிறையப் படிச்சிருக்கீங்க! கரடிகள் நூறு நாட்கள் வரை ஒன்றும் சாப்பிடாம, தூங்கி, அப்புறம், வசந்த காலத்தில் புது உத்வேகத்துடன் விழிக்குமாம்” என்றாள். “நம்ம கும்பகர்ணனைப்போல! அப்புறம் அந்தக்கால முனிவர்களும், ஒன்றும் சாப்பிடாமல், யோக நிலையில் யுகங்கள் கழிப்பார்களாமே” என்றாள். அல்லி சொன்னாள், ”சரி தான் மாமி. அந்த உறக்க நிலையில் அவர்களுக்கு மெடபாலிசம் குறைந்து, உடல் குளிர்ந்து இருக்குமாம். சரி இப்ப விஷயத்துக்கு வருகிறேன். எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம், மற்றும் தூர கிரகங்களுக்கு மனிதன் செல்லும் போது, நிறைய உணவு தேவைப்படும். மனிதனும் ஹைபர்னேஷன் செய்தால், உணவும் தேவைப்படாது. கிராவிட்டி இல்லாத பயணத்தில் தசை (muscle) இழப்பு ஏற்படும். இந்த ஹைபர்னேஷனால் அதுவும் தவிர்க்கப்படும்” என்றாள்.
மாமி கேட்டாள், “மனிதர்களும் ஹைபர்னேஷன் செய்யமுடியுமா?”. அல்லி, “அதற்குத் தான் சயன்டிஸ்ட்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அது சரி மாமி! இந்த சமாசாரத்தைப்பற்றி ஏதாவது சினிமா வந்திருக்கா?” என்று குறும்பாகச் சிரித்தாள்.
“இல்லாமல் என்ன? சில்வெஸ்டர் ஸ்டாலன் நடித்த 1993 திரில்லர் ‘டெமாலிஷன் மேன்’. அப்புறம் 2016 பாசெஞ்சர்’. அப்புறம் அந்தக்காலத்திலேயே எச் ஜி வெல்ஸ் எழுதிய ‘ஸ்லீப்பர் அவேக்ஸ்’ என்ற நாவலில் 200 வருடம் தூங்கி ஒருவன் விழிக்கும் கதை ஒன்று” என்று விரித்தாள் மாமி. அல்லி சொன்னாள்: ‘மனிதன் கற்பனை செய்கிறான்.. பிறகு அதை நனவாக்குகிறான். இந்த ஹைபர்னேஷனால் மனித குலம் பயன் பெரும்”.
“பறவையைக் கண்டான்.. விமானம் படைத்தான் “ என்று பாடி முடித்தாள் மாமி.
இது ஒரு அதிசய உலகம்!
https://www.bbc.com/future/article/20230509-will-we-everhibernate-in-space