நான் பேச இருப்பது, பொடி விஷயம் அல்ல. அந்தக் காலத்தில் மிகப் பெரிய விஷயம். பொடி போடுபவர்கள் அறிவாளிகள் என்று கூட கூறுவார்கள். அதனால் தான், அது, அந்தஸ்து விஷயமாகவும் இருந்தது. அவஸ்தையான பழக்கங்களில் ஒன்றாகவும் இருந்தது.
எனது மாணவ பருவங்களில், எங்கு பார்த்தாலும் விளம்பரம் ; ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் விளம்பரங்கள் , பார்த்த நினைவு உண்டு.
சிறுவரை பொடியர் என்று கூறுவதுண்டு
பெண்டிர் தம் ஆடவர்க்கு சொக்குப் பொடி போடுவதுண்டு
ஆனால், பொடி என்றாலே நினைவிற்கு வருவது
TAS ரத்தினம் பட்டணம் பொடி ஒன்றே !
இதே போல, SR பட்டணம் பொடி, NS பட்டணம்பொடி, அம்பாள் பட்டணம் பொடி இப்படி பல தயாரிப்பு நிறுவனங்கள். பொடியினைப் போடா மூக்கு, புண்ணியம் செய்யா மூக்கு என்று தமிழ்தாத்தா உ வே சா அவர்கள் ஒரு கவிதையே எழுதினார்கள் என்பார்கள்.
பொடி போடுவது என்பது பெரிய கலை. சாதாரணமாக, கடையில் (அப்போதெல்லாம் shop கடை என்பார்கள் . இரண்டும் ஒன்றுதானே . ஜெனரல் பேன்சி ஸ்டோர் தான் அது) , சீப்பு, பேஸ்ட், சோப்பு, பவுடர், ஹார்லிக்ஸ் முதல், கடை முதலாளி கல்லா அருகில், ஒரு சின்ன பரணி (பீங்கான் ஜாடி தான்) 3 இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு சின்ன கரண்டி (உத்தரணியை விட சிறிய அளவு கொண்ட தலை பகுதி ) நீளமாக அதில் இருக்கும். வருபவர்கள், 3 பைசா முதல் 25 பைசா வரை வாங்கி போவார்கள். நான், 70களில் எங்கள் ஊர் தென்காசி கோயில் எதிர் பஜாரில் மணி விலாஸ் போன்ற கடைகள், மண்டபத்தில் உள்ள சங்கரய்யா நாயுடு கடையில் பார்த்து இருக்கிறேன். 6 அல்லது 7 தடவை அந்த கரண்டியால் போட்டாலும், தங்கப்பொடியை விட குறைவாகவே விழும், பொதுவாக வாழை மட்டை (காய்ந்து போனது) அதை சிறு மடக்கு மடக்கி, அதில் வாங்கிப் போவார்கள். சிலர், உருட்டையாக அல்லது தீப்பெட்டி போல எவர்சில்வரில் சிறிய டப்பா வைத்திருப்பார்கள். அது மேலிருந்து திறந்து மூடுவது போல இருக்கும். வசதிக்கேற்ப, வெள்ளியில், தங்கத்தில் கூட சிலர் வைத்திருப்பார்கள்.
அந்தக் காலத்தில் உழைப்பாளிகள் ஒருபுறம் இதை உபயோகித்தாலும், அந்தஸ்து உள்ளவர்களின் அடையாளம் என, அத்தர், ஜவ்வாது, சென்ட், இவற்றுடன் இதுவும் ஒன்றாக இருந்தது.
உழைக்கும் வர்க்கத்தில் பல பெண்மணிகள் – கீரை மற்றும் காய்கறி விற்பவர்கள், தயிர் விற்பவர்கள், பொடி உபயோகிப்பார்கள். எப்படி இருந்தாலும், பொடி போடுபவர்கள் அருகில் செல்ல எல்லோருக்கும் ஒருவித தயக்கம் உண்டு. ஒன்று அந்த நெடி – அது தும்மலை ஏற்படுத்தும் . ஒவ்வாத வாசனையை தரும். இரண்டாவது, அவர்கள் கையில் கைக்குட்டை அல்லது துண்டு, சில நேரங்களில் இடுப்பில் உள்ள வேட்டி/புடவை தலைப்பு நுனி – ஒன்றும் இல்லை என்றால், அருகில் உள்ள தூண், சுவர், தரை என, பொடி சேர்ந்த சளி கையை ஈஷி விடுவார்கள் என்ற அருவருப்பு,
ஜலதோஷம் மற்றும் மூச்சு விடுவதற்கு நல்லது என்று பலர் கூறினாலும், இது ஒரு தீய பழக்கமாக தான் கருதப்பட்டது. அந்தக் காலத்தில், பலே பாண்டியா படத்தில், சிவாஜியை மாப்பிள்ளையாக்க (நீயே உனக்கு என்று என்ற பாடலுக்கு முன் ) எம் ஆர் ராதா, சிவாஜியை பார்த்து கேட்பார், மாப்பிளைக்கு, புகையா, பொடியா, குடியா எதாவது உண்டா என்பார். காரணம், அந்தக் காலத்தில் புகை மற்றும் பொடி பழக்கத்தினால், புற்றுநோய் வர வாய்ப்புண்டு என்பார்கள். முதல்வராக இருந்த அண்ணாதுரை அவர்களுக்கு புற்று நோய் வர, அவரின் பொடி மற்றும் புகையிலை பழக்கம் என்று அப்போது செய்திகள் வந்தன,
எப்படியோ, பல சங்கீத கலைஞர்கள் – கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், சின்னபபா, மஹாலிங்கம் என பல திரைக் கலைஞர்கள், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், GN பாலசுப்ரமணியம் என பல சங்கீத வித்வான்கள், ஜி ராமநாதன், எம் எஸ் வீ போன்ற பல இசை அமைப்பாளர்கள், பொடி போடும் பழக்கத்தில் இருந்தார்கள். அரியக்குடியின் மிக பிரபல புகைப்படங்கள் மற்றும் மாலி வரைந்தது, அவர் பொடி போடுவது, பொடியை உறிஞ்சுவது, கையை உதறுவது என பல பாவங்களில் அந்தக் காலத்தில் தீபாவளி மலர்களில் வந்திருக்கிறது. MKT குரலில் ஒரு nasal வாய்ஸ் வரும். அது அந்தப் பொடியால் தான். ஆனால், அதுவே, அவரின் style ஆனது. TMS, அவரைப் போல பாட வேண்டும் என்று அந்த வாய்ஸ் கொண்டுவருவார். ராதே உனக்கு போன்ற பல பாடல்களில் அது தெரியும். காபி, டீ, சிகரெட் போல, பொடியை உறிஞ்சிய பிறகு, ஒரு புதுவித உற்சாகம் மற்றும் உத்வேகம் வருகிறது என்பார்கள். ஜி ராமநாத ஐயர் , MSV, போன்ற இசை மேதைகள், ஆர்மோனியத்தை கையில் பிடித்தபின், பொடியை ஒரு இழு என உறிஞ்சியபின், ராகம், வேகமாக வரும் என்பார் வாலி போன்ற பல கவிஞர்கள்.
அதேபோல், அண்ணாதுரை, பொதுக்கூட்டத்தில் பேச ஆரம்பிக்கும் முன், பொடியை ஒரு உறிஞ்சு, உரிஞ்சிய பிறகே, பேச தொடங்குவாராம். கையில், பொடிமட்டை இருந்தால், ஒரு மாதிரியாக இருக்கும், என்று, பேச வரும்போது, கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் இடையில் பொடியை வைத்து, பேசும்போது இடையில் உறிஞ்சுவராம். அதேபோல , முழங் கைகளில் இருபுறமும், பொடியை தடவி வைத்து, பேச்சுக்கு நடுவில், கையை மூக்கிற்கு அருகில் கொண்டு செல்வது போல் உறிஞ்சி விடுவார் என்பார்கள். பொடி போட்டு போட்டு, அவர் குரலே , கொஞ்சம் நாக்கை மற்றும் மூக்கை மடித்து பேசுவது போல் ஆனது. அதுவே, கழகத்தின் பாணி ஆகிவிட்டது. பொடி போடாதவர்களும், அதேபோல நாக்கை வளைத்து, மூக்கை இழுத்து , கரகர குரலில் பேச தொடங்கிவிட்டார்கள்.
பிரெஞ்சு தளபதி நெப்போலியனும், பொடிக்கு அடிமை என்பார்கள். இந்தப் பழக்கம், அந்தக் காலத்தில் வீட்டில் அல்லது பொது இடங்களில், சீட்டு விளையாடுபவர்கள் பலரிடம் உண்டு. சீட்டு விளையாட்டு தொடங்குமுன், ஒரு செம்பில் நீர், (புகையிலை கொப்பளிக்க) , பொடி மட்டை இரண்டும் இருக்கும். பாதி ஆட்டத்தில், பொடி தீர்ந்துவிட்டால், எங்களை போன்ற சிறுவர்கள் கையில் காசு கொடுத்து, ஓடிப்போய், பட்டணம் பொடி வாங்கி வா, செல்லம், என்பார்கள். இதில் ஒரு லாபம் என்னவென்றால், ஆட்டத்தில் ஈடுபாடு என்பதால், மிச்சக்காசு 2 அல்லது 3 பைசா, கேட்க மாட்டார்கள். அல்லது, நீயே வைத்துக்கொள் ராஜா என்பார்கள். பெரும்பாலும், அக்ரஹாரத்து மிராசுதார், மைனர், பண்ணையார் என பலர் இருப்பார்கள். (அந்தப் பக்கம் போவது என் வீட்டுக்கு தெரிந்தால், என் தந்தை, பின்னி விடுவார் – அது தனிக் கதை )
1981 களில் கூட , இந்த பழக்கம் இருந்தவர்கள் மற்றும் பொடி கடைகள் இருந்தன. 1981 டிசம்பரில் வெளியான குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் கூட, வேலை வெட்டி இல்லாத விசு, ஒரு பையனைக் கூப்பிட்டு, கடையில் போய் , பொடி வாங்கி வா என்பார். எந்த brand எனக் கேட்க, விசு அவர்கள், மூக்குக்குள்ள போகனும் – எதுவாக இருந்தால் என்ன என்பார்.
என் தந்தை சொன்ன ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது. பொடியும் ஒரு பழக்கமே என்றும், அதில் இருந்து மீளுவது என்பது கடினமே என்பார். அவருக்கு தெரிந்த மிகப்பெரிய செல்வந்தரான வக்கீல், நெல்லையில் இருந்தார். அவருக்கு பொடி போடும் பழக்கம் உண்டு, அவரின் செல்வாக்கிற்கு, அவர், தங்கத்தில், பொடி டப்பா வைத்திருந்தார். ஒரு தடவை, வயலில் நெல் அறுவடையின் போது, அவர் கொண்டு போயிருந்த பொடி முழுவதும் காலி ஆகிவிட்டது. வயல் ஊருக்கு வெளியே இருந்ததால், கடைக்கு சென்று வாங்கி வருவது கொஞ்சம் கஷ்டம். அவருக்கு எதோ ஒன்றை இழந்த உணர்வு. பொடி இல்லையே என்று கொஞ்சம் சோர்ந்து போன போது, வயற்காட்டில் இருந்த விவசாயிகளில் ஒருவன், அவனிடம் மட்டையில் இருக்கிறது என்று கூற, அவர் முகத்தில் புது உற்சாகம் ஏற்பட, வாங்கிக்கொண்டார். அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அந்த உணர்வு தோன்ற, அவனைக் கூப்பிட்டு அனுப்பினார். அவன் வந்து கொடுத்தான். இன்னும் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் கூப்பிட்டபோது, அவன், கொஞ்சம் இருங்கய்யா – வாரேன் என்று அனைவர் மத்தியில் அவன் அப்படி கூறியது, அவரைப் பாதித்தது. என்ன நினைத்தாரோ, இந்த பாழாப்போன பழக்கம் இருக்க கண்டு தானே, இப்படி மரியாதையை இழக்க வேண்டி இருக்கிறது, இனி இந்த பொடியை தொட மாட்டேன் என்று பையில் இருந்த தங்க பொடி டப்பாவை தூக்கி ஓடையில் வீசி எறிந்தார். அருணகிரிநாதருக்கு, தமக்கையால், துளசி தாசருக்கு, தாரத்தால் , ஒரே வார்த்தையில் ஞானம் வந்தது போல, அவருக்கும், சம்சாரி (விவசாயி) சொன்ன ஒரு வார்த்தையால் ஞானம் அன்று வந்தது என்பார் என் தந்தை.
எது எப்படியோ, இந்த தலைமுறை அறியாத விஷயங்களில் இதுவும் ஒன்றானது, உருப்படி(பொடி )யான விஷயம் தானே !! போதை பழக்கங்களில் ஒன்று குறைந்ததே !