திருப்புமுனை ஆண்டு
1963 மிகவும் சிறப்புடைய ஆண்டு. சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா நடந்த ஆண்டு. நாங்கள் ( நானும் எனது இணை சகோதரன் கணேசனும்) ஸ்ரீ இராமகிருஷ்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறோம். மறக்க முடியாத ஆண்டு. சுவாமிஜியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுக்காகப் பள்ளியே விழாக்கோலம் பூண்டிருந்தது. சுவாமிஜியின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் நாள் மிகப் பெரிய இளைஞர் ஊர்வலமும், சென்னை இராமகிருஷ்ணா மடத்தில் பல வேறு திறப்புவிழாக்களும் , கருத்தரங்கங்களும் போட்டிகளும் , கலை நிகழ்ச்சிகளும் நடக்கவிருந்தன.
ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் நடத்தும் ஆண்களுக்கான மூன்று உயர்நிலைப் பள்ளிகளும். இரண்டு பெண்கள் பள்ளிகளும் எங்கள் பகுதியான தியாகராய நகரில் அமைந்து இருந்தன. அத்தனை பள்ளிகளும் இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்த இருந்தன. எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த எங்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய அனுபவம். சிறு வகுப்புகளில் இருந்தே நானும் கணேசனும் மாணவர்க்கான போட்டிகளில் கலந்து கொள்வோம் பரிசுகளும் வாங்கியுள்ளோம். பொதுவாக நான் பேச்சுப் போட்டியிலும் கணேசன் ஓவியப் போட்டியிலும் பரிசுகள் பெறுவது வழக்கம்..
பள்ளி ஆண்டுவிழா நாடகங்களில் எங்கள் இருவர் பங்கும் எப்போதும் இருக்கும். ஏழாம் வகுப்பு படிக்கும் போது நாங்கள் :வீரபாண்டிய கட்டபொம்மன் “ திரைப்படத்தில் வரும் கட்டபொம்மன் – ஜாக்ஸன் துரை உரையாடலை சிறப்பாக நடித்து ( நான் கட்டபொம்மன், கணேசன் ஜாக்ஸன்), விழாவுக்கு தலைமை வகித்த அன்றைய முதலமைச்சராக இருந்த கர்மவீர்ர் காமராஜர் கரங்களினாலே பதக்கமும் சான்றிதழும் பெற்றோம்.
பிறகு தலைமை உரையில், கட்டபொம்மனின் வீரத்தைப் புகழ்ந்து காமராஜர் பேசிய போது அது எங்களையே சொன்னது போல எண்ணிப் பெருமை அடைந்தோம். “ அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா ? அல்லது நீ மாமனா மச்சானா ? யாரைக் கேட்கிறாய் வரி ? எதற்குக் கேட்கிறாய் திறை ?” என்ற வரிகளும் , அதற்காக மீசையை முறுக்கிக் கொண்டதும், மஞ்சள் அரைப்பது போல் உடலை வளைத்துக் கைகளால் அம்மி அரைப்பது போல் ஆக்ஷன் காட்டியதும் பல நாட்கள் என் நெஞ்சிலிருந்து மறையவே இல்லை. நல்ல “டீக்”காக உடை அணிதவதில் ஆசை கொண்ட என் சகோதரன் கணேசனுக்கு இன்னொரு விதமான மகிழ்ச்சி.. “சூட்டும்” கோட்டும்” “ஹாட்டு”மாய் மேடையில் தோன்றும் வாய்ப்பு.
மேற்படி நாடகப் புகழ், எங்களைப் பள்ளியிலே மிக முக்கியப் புள்ளிகளாக மாற்றிவிட்டன. அன்று தொடங்கி அடுத்த ஓராண்டில், எந்த வகுப்பில் ஆசிரியர் வரவில்லை என்றாலோ அல்லது ஏதோ ஃப்ரீ அவர் என்றாலோ எங்களை அழைத்து அந்த வச்னங்களை பேசச் சொல்வார்கள். சில நேரங்களில் எங்கள் பள்ளியின் நீண்ட “காரிடாரில்” நாங்கள் எங்கள் வகுப்பறைக்குப் போகும் போது, வழியில் சில அறைகளில் உள்ள ஆசிரியர்கள், நாங்கள் செல்வதைப் பார்த்துவிட்டு , ”உள்ளே வந்து வசனம் பேசிவிட்டுப் போங்க” என்று ஆர்வத்தோடும் அன்போடும் கூப்பிடுவார்கள்.. பரிசாகச் சில நேரம் பால் பாயிண்ட் பேனாக்களும், சாக்லேட்டுகளும் கிடைத்ததுண்டு. இப்போது நினைத்தால் நடிகர் திலகம் பேசியதை விட அதிகம் தடவைகள் நாங்கள் பேசியுள்ளோம் என்று தோன்றுகிறது.
ஏழாம் வகுப்பைக் கடந்து எட்டாவது சென்ற பின் அந்த வருட பள்ளி ஆண்டுவிழாவுக்கு நாங்கள் இருவரும் ஏதேனும் கலை நிகழ்ச்சி தயாரித்து அளிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் விரும்பினார்கள். அதன் விளைவாக நகைச்சுவை நடிகர் கே ஏ. தங்கவேலு திரைப்படத்தில் நிகழ்த்திய “குசேலோபாக்கியானத்தை” நாங்கள் செய்தோம்.
சுவையான காமெடி உள்ள “ஸ்க்ரிப்ட்”. குசேலருக்கு 27 குழந்தைகள் என்று சொல்லும் பாகவதர் (தங்கவேலு)) “ அஸ்வினி பரணி கார்த்திகை .ரோகிணி மிருகசீர்ஷம் திருவாதிரை .என்று வேகமாகப் பாடி இறுதியில் “ரேவதி” என்று நிறுத்துவார். உடனே கூட்டத்திலிருந்து ஒரு சிறுமி எழுந்து அருகே வந்து “கூப்பிட்டேளா மாமா ?” என்பாள் ( பள்ளியில் இந்த வேடத்தில் யார் நடிப்பது என்பதற்கும் போட்டி இருந்தது)
குசேலர் வறுமையை விவரிக்கும் பாடல் ஒன்று வரும்
ஆடை இல்லாத ஓர் பாலகன் – திங்க
சீடை வேண்டுமென்று கேட்டனன்
கோடை இடி கேட்ட நாகம் போல் –தாயும்
குலுங்கிக் குலுங்கி அழுதனள்
இது போன்ற பாடல்களை கையில் சிப்ளாக்கட்டை வைத்துக் கொண்டு நான் பாடுவேன் ; என் சகோதரன் கணேசன் பின்பாட்டு பாடுவான். இருவருக்கும் பஞ்சகச்ச ”மேக் அப்” கழுத்தில் மாலை எல்லாம் உண்டு.இதற்கும் பள்ளியில் பல இரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். இந்தப் பின்னணியில்தான் விவேகானந்தா நூற்றாண்டு விழா வந்த்து.
சுவாமி விவேகானந்தா நூற்றாண்டு விழாவுக்கு எங்கள் பள்ளி கீழ்க்கண்ட திட்டங்களை வகுத்தது.
1.மாணவர் பேரணி –என்.சி.சி. ஏ.சி.சி. யூனிட்கள். தி.நகர் ஆண்கள் மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் பனகல் பூங்காவிலிருந்து தொடங்கி மயிலை ஸ்ரீ இராமகிருஷ்னா மடம் வரை நடக்கும் பேரணி.
- எங்கள் பள்ளியில் ( ராமகிருஷ்ணா மெயின்) ஒரு அறிவியல் கண்காட்சி ( Science Exhibition) வைப்பது.
3.விவேகானந்தர் புகைப்படங்கள் கொண்ட கண்காட்சி நடத்துவது.
- சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்துவது.
- கட்டுரை,பேச்சு, .பாட்டு, ஓவியப் போட்டிகள்.
இப்போது நினைத்துப் பார்த்தால்தான் பள்ளியில் படிக்கும் போது இளவயதில் இது எத்தனை பெரிய வாய்ப்பென்று புரிகிறது. ஆனால் இதன் முக்கியத்துவம் புரியாமலேயே நானும் என் சகோதரனும் மேற்சொன்ன அத்தனை நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டோம். மேலும் சாரணர் படையில் இருந்ததால் இராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று அங்கும் சேவைகள் செய்து நல்ல பெயரும் நற்சான்றிதழ்களும் பெற்றோம்.
எங்கள் வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனை. கல்வி கலை, இலக்கியம், இசை நாடகம் அனைத்திலும் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் அன்றைய எங்கள் ஆசிரியர் வே.மு. மந்திரமூர்த்தி என்னும் “மந்திரம்” சார்.
எங்கள் இருவரோடு இன்னும் ஆறேழு மாணவர்களை ஒரு குழுவாக அமைத்து எங்களுக்கு இராமகிருஷ்ணா விவேகானந்தா இலக்கியத்தைக் கற்றுக் கொடுத்தவர். குருமகராஜ், சுவாமிஜி ஆகிய இருவர் மீதும் அப்பற்ற தூய பக்தி கொண்ட அவரைப் போன்ற ஒருவரைக் காண்பது மிக அரிது. சுவாமிஜியைப் பற்றிப் பேசும் போது விழிகள் மேலே செருக ஒருவித யோக நிலையில் ஆழ்ந்துவிடுவார். தனி மனித வாழ்க்கையிலும் மிக ஒழுக்கமானவர். மாணவர்களை அன்போடு வழிநடத்துவார். அவர் கோபித்துக் கொண்டு பேசியதை நாங்கள் பார்த்ததே இல்லை. ஆங்கிலம் , வரலாறு , அரசியல், கணக்கு என அனைத்துப் பாடத்திலும் வகுப்பெடுக்கும் திறமை மிக்கவர். தமிழில் மிக அழகாகப் பேசக் கூடியவர். பாடல்கள் எழுதி இசையமைத்துப் பாடக் கூடியவர். விளையாட்டுத் திடலில் எங்களுக்குக் கால்பந்து கற்றுக் கொடுத்துள்ளார்.
“ஏன் சார் உங்களுக்கு கால்பந்து விளையாட்டு மிகவும் பிடித்துள்ளது ?” என்று கேட்ட போது அவர் சொன்ன பதிலை இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.
“அது சுவாமிஜிக்கு பிடித்த விளையாட்டு” என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னார். பிறகு ஒருநாள் சுவாமிஜியின் கட்டுரைகளைப் படித்துக் காட்டுகையில் , கால்பந்து விளையாட்டின் மூலமும் ஒருவன் எவ்வாறு மனஒருமைப்பாட்டைக் கற்றுக்கொள்ளலாம் என்ற வரிகளைச் சுட்டிக் காட்டினார். இராமகிருஷ்ணர் , சாரதாதேவி. சுவாமிஜி ஆகிய மூவரின் வாழ்க்கை வரலாறுகளையும் பாடல்களாக வடித்துள்ளார்.
“கண் வளர்ந்தாரே கணப் பொழுதினிலே” என்ற நீலாம்பரியும், “கதாதரா உன்னைக் கலந்துறவாடும் காலம் வாராதா/” என்ற தர்பாரிகானடாவும் இன்றும் உயிர்ப்புள்ள பாடல்களாக என் நெஞ்சில் இசைத்துக் கொண்டுள்ளது.
இதையெல்லாம் சொல்ல ஒரு காரணம் உண்டு. தங்கவேலு நகைசுவை குசேலோபாக்கியானத்தைப் போட்டு பேர் வாங்கிய எங்களை வேறு தலைப்புக்குள் திருப்பியவர் மந்திரம் சார். அவர் எழுதிய ஸ்ரீ இராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாற்றுப் பாடல்களைக் கொண்டு எங்கள் குழு இசை சொற்பொழிவு நடத்தியது. நான் தான் கதை சொல்பவன்,. கணேசன், பிரபு, பாலகிருஷ்ணன் ஆகியோர் பாடல்கள் பாடுவார்கள். நிகழ்ச்சி சுமார் ஒன்றரை மணி நேரம் நிகழும்.
பாடல்களை இசையமைத்து அவர் கற்றுக் கொடுக்க நாங்கள் கற்றுக்கொண்டு பாடுவோம். பல நாட்கள் இதற்காக எங்களுக்குப் பயிற்சி கொடுத்தார். பள்ளி விடுமுறை நாட்களில் மேற்கு மாம்பலத்தில் இருந்த அவரது இல்லத்திற்கே சென்று அந்த வீட்டுக் கிணற்றடியில் அமர்ந்து நாங்கள் பயிற்சி செய்துள்ளோம். அது போன்ற நேரத்தில் அவரது அன்னையார் அன்போடு எங்களுக்கு உணவு அளித்தது இன்றும் நெகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த இன்னிசை சொற்பொழிவு நிகழ்ச்சி அந்த ஆண்டு முழுவதும் பல்வேறு இடங்களிலும் பள்ளிகளிலும் இடம் பெற்றது. இப்போதும் நினைவில் பசுமையாக நிற்கும் பரவச அனுபவங்கள்..
1980 களில் தொடங்கி 1995 வரை தொலைக்காட்சியில் எனது பல நிகழ்ச்சிகளை அவர் பாராட்டியுள்ளார். எனது பாடல்களை கே.ஏ. ஜேசுதாஸ், எஸ்.பி.பி., சித்ரா போன்றவர்கள் பாடக் கேட்ட எனது ஆசிரியர், முதிர்ந்த வயதில் அவரை அவரது இல்லத்தில் சந்தித்த போது, நேரிலே பாராட்டி பெருமை கொண்டார்.
காலில் வீழ்ந்து வணங்கிய நான் “ எல்லாம் நீங்கள் போட்ட விதைதானே “ என்றேன்.
வழக்கமான சிரிப்போடு “ நல்ல நிலத்தில்தான் போட்டுள்ளேன் “ என்றார்.
அடுத்த ஒரு வாரத்தில் அவர் அமரரான செய்தி வந்தது. இந்தப் பதிவின் மூலம் மீண்டும் அஞ்சலி செலுத்துகிறேன்.
மந்திரம் சார் போட்ட விதை, இப்போது குவிகம் வாராந்திர ஜூம் நிகழ்வில் “மகாகவியின் மந்திரச் சொற்கள்” என்னும் பயிராக வளர்ந்திருக்கிறது! உங்கள் ஆசிரியர் நினைவுக்கு அடியேனும் அஞ்சலி செலுத்துகிறேன்.
LikeLike
ஆகா..!
விதையொன்று இட்டாலே சுரையொன்றா தான்முளைக்கும்?
விளைகின்ற பயிரதனை முளையினிலே பாரென்று
கதைகதையாய் நம்முன்னோர் கதைத்தவையும் பொய்யாமோ?
கன்னல்தமிழ்ச் சுவையெல்லாம் கருத்துடனே தாமளிக்கும்
அண்ணல்எம் வவேசு ஆண்டுநூறு வாழியவே!
LikeLike