அக்கிலிஸ் கிரேக்கருக்கு ஆதரவாகப் புறப்பட்டுவிட்டான் என்றதும் டிராய் நகரின் அழிவு நிச்சயம் என்பதை உணர்ந்த டிராய் நகர வீரர்கள் அதர்ச்சியில் உறைந்து போய் நின்றனர். ஆனால் தன் வீரத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட ஹெக்டர் மட்டும் அக்கிலிஸ் வந்தாலும் சரி அவனுக்கு ஆதரவாகக் கடவுளர்கள் வந்தாலும் சரி கிரேக்கர் படை முழுவதையும் அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றான்.
ஹெக்டரின் நண்பனும் படைத்தளபதிகள் முதன்மையானவனுமான பாலிடாமஸ் ஹெக்டருக்கு அறிவுரை கூறத் தொடங்கினான்.
” அகேம்னனனுக்கும் அகீலிசுக்கும் பிரச்சினை இருந்தவரை நமது வெற்றியில் சந்தேகமேயில்லை. ஆனால் அக்கிலிஸ் கொடிய அரக்கன். வீரர்களோடு மட்டும் அவன் போரை முடிக்கமாட்டான் , நமது இலியம் நகரை எரித்து பெண்டு பிள்ளைகளைக் கூண்டோடு கொலை செய்யவும் தயங்காத கிராதகன் அவன். அதனால் நாம் இப்போது பின்வாங்கி நமது கோட்டைக்குள் புகுந்து பாதுகாப்பான முறையில் போர் செய்யவேண்டும். அவர்கள் கப்பலுக்கு அருகில் நாம் இருந்து போரிட்டால் அவர்களுக்கு நம்மைத் தாக்குவதும் அழிப்பதும் சுலபமாக இருக்கும்”
ஹெக்டர் இதைத் திட்டவட்டமாக நிராகரித்தான்.
“வெற்றி வாகை நம் கைக்கு அருகில் இருக்கும்போது பின்வாங்கிச் செல்வது கோழைத்தனம். கிரேக்கர்களை அவர்கள் கப்பலிலேயே கொன்று புதைக்க வேண்டும் என்று வெறியோடு நான் இருக்கிறேன். ஆக்கிலிசுடன் நேருக்கு நேர் மோதி அவனை அழிக்கவும் தயாராக இருக்கிறேன்” என்று கூறி ஹெக்டர் வீரர்களைப் போருக்கு தயார் நிலையில் இருக்கும்படி ஆணையிட்டான்.
அதே சமயம் கிரேக்கப்படையில் அக்கிலிசின் வீர முழக்கம் காட்டுத்தீயைப் போல் பரவியது. ஹெக்டரின் தாக்குதலால் நிலை குலைந்து மரண காயத்துடன் துடித்துக் கொண்டிருந்த கிரேக்க வீரர்களும் தளபதிகளும் அந்தக் குரல் கேட்டதும் தங்களைக் காக்கத் தானைத் தலைவன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் குரல் வந்த இடத்திற்கு ஓடோடி வந்தனர். இரு பெரும் அஜாக்ஸ் , ஓடிசியஸ் ஹெலனின் கணவன் மெலிசியஸ் ஏன் அக்கிலியசை விரட்டி அடித்த அகெம்னனும் வந்து சேர்ந்தனர்.
தன் கிரேக்கப் படையில் பல நண்பர்களைக் காணாத அக்கிலியஸ் துடித்தான். தன் கோபத்தினால் ஹெக்டர் தன் உற்ற நண்பன் பெட்ரோகுலசுடன் எண்ணற்ற வீரர்களைக் கொன்றுவிட்டான் என்பதை அறிந்தது துயரத்தில் துடித்தான்.
” அருமை நண்பா ! அகெம்னன் ! நமக்குள் ஏற்பட்ட பிணக்கால் அதனால் ஏற்பட்ட என்கோபத்தால் எண்ணற்ற நண்பர்கள் மரணத்திற்கு நானே காரணமாகி விட்டேன். என்னை மன்னித்துவிடு ! டிராய் நாட்டை அடிமைப்படுத்தி அந்தக் கொடியவன் ஹெக்டரின் உடலைச் சின்னாபின்னமாக்காமல் இனி நான் உறங்க மாட்டேன். உண்ணவும் மாட்டேன்” என்று வீர சபதம் எடுத்தான்.
அகெம்னனும் முன் வந்து, “நண்பா! இதற்குக் காரணம் என் தவறுதான். உன் பரிசுப் பொருள்களையும் பிரியமான பெண்ணையும் நான் கவர்ந்தது மன்னிக்க முடியாத செயல். உன்னிடம் அந்தப் பொருட்களையும் பெண்ணையும் இப்போதே கொண்டு வந்து கொடுக்க ஆணையிடுகிறேன். உன் தலைமையில் நமது கிரேக்கப் படை நாம் இழந்த புகழை மீண்டும் அடையவேண்டும். டிரோஜன்களை அழிக்கவேண்டும். ஹெலனையும் மீட்கவேண்டும். ” என்று வேண்டி நின்றான். கிரேக்கப் படை வீரர்கள் அனைவரது உடலிலும் புதிய ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது. அனைவரும் ஒரே குரலில் ” வெற்றி நமதே ” என்று குரல் எழுப்பினர்.
இந்த நிகழ்வுகளை எல்லாம் தன் அகலக் கண்களால் விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜீயஸ். தனக்குப் பிரியமான அக்கிலிஸ் போர்க்களத்திற்குச் செல்ல முடிவு செய்துவிட்டான் என்பதை அறிந்ததும் இலியட் போர் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்டார். .
இனி காற்றை அக்கிலிஸுக்குச் சாதகமாக வீச வேண்டும் என்றும் ஜீயஸ் தீர்மானித்தார்.
இருப்பினும் வெற்றிக் கனியைச் சுலபமாகக் கிரேக்கர் அடைந்துவிடக்கூடாது என்பதில் அவர் எச்சரிக்கையாக இருந்தார்.
அதனால் அந்த இலியட் மகா யுத்தத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு கொண்ட அனைத்துக் கடவுளர்களையும் அழைத்தார்
.” கடவுளர்களான உங்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. மனிதர்கள் நடத்தும் யுத்தத்தில் நாம் நேரடியாகப் பங்கு கொள்வது சரியல்ல. இருப்பினும் உங்களில் சிலருக்குக் கிரேக்கர் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இன்னும் சிலருக்கு டிராஜன் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நானே இரு அணிகளுக்கும் மாறி மாறி உதவி புரிந்து கொண்டிருந்தேன். ஆகவே நீங்கள் இரு அணிகளாகப் பிரிந்து தத்தம் அணிக்கு வெற்றி வாய்ப்பு பெற என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்யுங்கள். உங்கள் கட்சி வீரர்களைத் தயார் செய்யுங்கள். நான் உத்தரவிட்டதும் கடவுளர்களான நீங்கள் அனைவரும் போர்க்களத்திலிருந்து விலக வேண்டும். இறுதிப்போர் மனிதர்கள் தங்களுக்குள் நிகழ்த்தும் போராகவே இருக்கவேண்டும். யார் யார் மடியவேண்டும் என்பதை ஏற்கனவே தீர்மானித்த விதி முடிவு செய்யட்டும்.” என்று உத்தரவிட்டார்.
அவர் உத்தரவைக் கேட்ட கடவுளர்கள் இரு குழுக்களாகப் பிரிந்தனர். அதீனி , ஹீரா, பொசைடன் மற்றும் பலர் கிரேக்கரை ஆதரிக்கப் பறந்தனர். ஏரிஸ் , அப்போலோ , ஈனியாஸ் போன்றோர் டிரோஜன்களுக்குத் துணையிருக்கச் சென்றனர்.
இருவரும் தங்கள் அணிகளுக்கு உற்சாகத்துடன் போர் வெறியையும் ஊட்டினர். விளைவு இதுவரை காணாத மிக மிக பயங்கரமான போருக்கு அந்தக் கடலும் கப்பல்களும் வீரர்களும் தயாராயினர்.
அக்கிலிஸ் ஹெக்டரைக் கொன்று அவன் ரத்தத்தைக் கடவுளுக்குப் பலி கொடுக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் போர்க்களத்திற்கு விரைந்தான். ஆனால் ஹெக்டரைக் காக்க விரும்பிய அப்போலோ ஈனியாஸ் என்ற மற்றொரு கடவுளை அக்கிலிசுடன் போரிடத் தூண்டி அனுப்பினான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹீராவும் அதினியும் அக்கிலிசைக் காக்க திட்டம் தீட்டினர். உணவு உண்ண மறுத்த அக்கிலிசுக்கு அவனை அறியாமலேயே அமிர்தத்தையும் தேனையும் ஊட்டினர். அது அக்கிலிசுக்கு இன்னும் ஆயிரம் குதிரைகளின் பலத்தை அளித்தது. அதைத் தவிர அக்கிலிசை மறைமுகமாக எந்தக் கடவுளும் தாக்காதவாறு துணை போகவேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
பசியுடன் இருக்கும் சிங்கம் குகையிலிருந்து புறப்பட்டு வேட்டைக்குச் செல்லப் புறப்பட்டதைப்போல அக்கிலிஸ் எதிரிப் படை மீது பாய்ந்தான். ஹெக்டரை அவன் கண்கள் வலை போட்டுத் தேடின. அனால் ஹெக்டருக்குப் பதில் ஈனியாஸ் கடவுள் தன்னுடன் போரிட வருவதைக் கண்டு ஒரு கணம் திகைத்தாலும் கொலை வெறியுடன் ஈனியாசைக் கொல்லப் பாய்ந்தான்.தன்னுடைய ஆயுதங்கள் அனைத்தும் அக்கிலிசின்முன் தோல்வியுற்றுக் கிடப்பதைக் கண்ட ஈனியாஸ் தவித்தான். கிரேக்கர்களுக்கு உதவ வந்த பொசைடன் தங்கள் கடவுளர்களின் ஒருவனான ஈனியாஸ் மனிதன் கையால் மரணமடையக் கூடாது என்ற எண்ணத்தால் ஒரு பனிப் படலத்தை உருவாக்கி ஈனியாசை அங்கிருந்து அப்புறப்படுத்தினான். இது கடவுளர்களின் சூழ்ச்சி என்பதை உணர்ந்துகொண்ட அக்கிலிஸ் தனது வீரர்களை முன்னேறித் தாக்குமாறு உத்தரவிட்டு ஹெக்டரைத் தேடி போர்க்களத்தின் மத்திக்கு விரைந்தான்.
போகும் வழியின் அக்கிலிஸின் வீரம் கொழுந்து விட்டு எரிந்தது. கண் நில் பட்ட அத்தனை டிரோஜன் வீரர்களைக் கொன்று குவித்தான். பல போர்களில் வீரம் காட்டிய எண்ணற்ற டிரோஜன் தளபதிகளின் நெஞ்சில் இரக்கமின்றித் தன் ஈட்டியைப் பாய்ச்சி வாளால் வெட்டி மடியச் செய்தான்.
ஹெக்டரின் தம்பிகளில் ஒருவன் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடும்போது அக்கிலிஸ் ஈட்டியால் அவன் வயிற்றில் குத்தி குடலை உருவி மாலையாக அணிந்து கொண்டான். அதைக் கண்ணுக்கு முன் கண்ட ஹெக்டர் தம்பிக்காகக் கலங்கினாலும் அக்கிலிசை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்ற கோபத்தில் அவன்முன் பாய்ந்தான்.
ஹெக்டரின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அக்கிலிசும் அவனைக் கண்டதும் சிம்ம கர்ஜனை புரிந்தான்.
இருவருக்கும் இடையே அதி பயங்கரமான போர் நிகழ்ந்தது.
குறி தவறாதத் தன் ஈட்டியை அக்கிலிஸின் நெஞ்சுக்குக் குறிவைத்து முழு பலத்துடன் வீசினான். கிரேக்கப் படை ஒருகணம் ஸ்தம்பித்து நின்றது. அதை எதிர்பார்த்த அதீனிக் கடவுள் அந்த ஈட்டியை செயலற்றுப் போகும்படி செய்தாள்.
கடவுளால் காப்பாற்றப்பட்ட அக்கிலிஸ் கடுங்கோபத்துடன் ஹெக்டரை அழிக்க வாளை உயர்த்திக் கொண்டு பாய்ந்தான். அவனைத் தடுக்க யாராலும் முடியவில்லை. டிரோஜன் பக்கம் இருக்கும் கடவுளர்கள் அந்த நிமிடமே ஹெக்டர் அழிந்தான் என்று முடிவு கட்டினர். போர்க்களத்தின் பின்னணியிலிருந்து அப்போது அந்த இடத்துக்கு வந்த அப்போலோவும் ஹெக்டர் இருக்கும் அபாய நிலையக் கண்டு ஒருகணம் திகைத்தான். சட்டென்று ஒரு பனிப் படலத்தை உருவாக்கி ஹெக்டரைத் தூக்கிக் கொண்டு போர்க் களத்தின் மற்றொரு கோடிக்குச் சென்றான்.
இது அப்போலோவின் வேலை என்பதைப் புரிந்துகொண்ட அக்கிலிஸ் அந்தக் கோபத்தை அங்கிருந்த மற்ற டிரோஜன் வீரர்களுடன் காட்டி அவர்கள் அனைவரையும் கொன்று குவித்தான். காலில் விழுந்து கெஞ்சி உயிர்ப்பிச்சை கேட்ட தளபதியின் கல்லீரலில் குத்தி அக்கணமே மரணமடையச் செய்தான்.
அக்கிலிஸ் சென்ற இடமெல்லாம் கருப்பு மண் குருதியில் நனைந்து சிவப்பாகியது. ரத்த ஆறு ஓடியது. நதிக் கடவுளின் மடியில் தஞ்சம் அடைந்திருந்த ஆயிரக் கணக்கான டிரோஜன் வீரர்களை அக்கிலிஸ் கொன்று குவித்தான். அதனால் கோபம் கொண்ட நதிக்கடவுள் பெரும் வெள்ளத்துடன் அக்கிலிசை அழிக்க வந்தது. அதைக் கண்ட ஹீரா நெருப்புக் கடவுளை ஏவி நதியைத் துரத்தினாள் .
கடவுளர்களும் மனிதர்களும் சேர்ந்து அந்த பூமியை ரண பூமியாக்கிக் கொண்டிருந்தனர்
(தொடரும்)