தென்னாங்கூரில் ஓர் விட்டல் மகராஜ்!
மருத்துவக் கல்லூரி நண்பர், வந்தவாசியில் நல்ல பிராக்டீஸ், பல ஆன்மீக, சமூக
சேவைகளுக்கு ஆதாரமாக இருப்பவர் டாக்டர் ஶ்ரீதர். அவரும் அவர் மனைவி டாக்டர் சுசீலாவும் நான்கைந்து வருடங்களாகத் தென்னாங்கூர் பெருமாளை சேவிக்க அழைத்தபடி இருந்தார்கள். அதற்கொரு வாய்ப்பு கிடைக்க, தென்னாங்கூர் சென்றுவந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது!
தென்னங்கூர் டவுன் – திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்காவில், காஞ்சீபுரம் – வந்தவாசி வழியில் உள்ளது. வயல்களும், இயற்கை எழிலும் கொஞ்சும் இடம். திருவண்ணாமலியிலியிலிருது 85 கிமி. காஞ்சீபுரத்திலிருந்து 36 கிமி தூரத்தில் உள்ள அழகிய இடம். இங்கு ஶ்ரீ பாண்டுரங்கன் – ஶ்ரீ ரகுமாயி தாயார் உறை திருக்கோயில் அமைந்துள்ளது.
‘தக்ஷிண ஹாலாஸ்யம்’ – ‘ஞானிகள் ஞானமுதம் அருந்தும் இடம்’ – என்று குறிப்பிடப்படுகின்ற இடம். காடுகள் நிறைந்த இடம் என்பதால், ‘ஷதாரண்ய க்ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த இடத்தில்தான் மூன்று வயதுக் குழந்தையாக, பாண்டிய மன்னனால் கண்டெடுக்கப்பட்டவர் மதுரை மீனாட்சி அம்மன் என்ற புராணக் கதையும் உண்டு. அதைக் குறிக்கும் வகையில் இங்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆலயம் ஒன்றும் உள்ளது.
கொஞ்சம் கோயிலின் பின்னணி:
ஒரு புராண நிகழ்வு: “நீங்களா அல்லது உங்கள் பெயரா, எதற்கு வலிமை அதிகம்?” (’Thyname or Thyself’) என்று நாரதர் மகாவிஷ்ணுவைக் கேட்கிறார். அதற்கு மகாவிஷ்ணு ,”நான் வைகுண்டத்திலும் பள்ளி கொள்ளவில்லை, யோகிகளின் இதயங்களிலும் இல்லை. யாரெல்லாம் என்னைப் பக்தியுடனும் அன்புடனும் அழைக்கிறார்களோ, என் நாமாவைச் சொல்லிப் பாடுகின்றார்களோ அவர்களுக்கு முன்னால் நான் நின்றுகொண்டிருக்கிறேன்” என்றாராம். இதைத்தான் ஶ்ரீசுகப்பிரம்ம ரிஷி, “கலியுகத்தில், கேசவனின் பெயரையும், பெருமைகளையும் பாடுவது ஒன்றே அவனை அடைவதற்கான பக்தி வழி” என்கிறார்.
இறைவன் மீது பக்திப்பாடல்களையும், நாமாவளிகளையும் பாடும் முறை ‘நாமசங்கீர்த்தனம்’ – இசையுடன் கூடிய எளிய பக்தி மார்க்கம். நாம் வாழும் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நல்லவை, தீயவை எவை? போன்றவற்றைப் பற்றிய தெளிவான சிந்தனையுடன். அமைதியும் மகிழ்ச்சியும் கொண்ட வாழ்க்கை வாழ்வதற்கு வழி செய்பவை ‘நாமசங்கீர்த்தனங்கள்’.
ஜோதிர் மடாதிபதி சுவாமி சிவரத்னாகிரி (ஆதி சங்கரர் நிறுவிய 4 மடங்களில் ஒன்று) அவர்களின் பிரதம மாணவர் திரு. ஞானானந்த கிரி சுவாமிகள். கர்நாடக மாநிலத்தின் கோகர்னா வை அடுத்த மங்கலாபுரியில் பிறந்து, இந்தியா முழுவதிலும், மற்றும் திபெத், நேபாளம், பர்மா, இலங்கை என பயணம் செய்து ஆன்மீக நெறிகளை வளர்த்தவர். 1966 முதல் திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோவிலூரில் தபோவனத்தில் தங்கி அருளாசி வழங்கியவர்.
ஞானானந்தருடைய பிரதான சீடர் திரு ஹரிதாஸ் கிரி சுவாமிகள் – சம்பிரதாய பஜனைகள் பாடும் திரு அண்ணாஜி அவர்களின் புதல்வர் – சின்ன வயது முதலே நாமசங்கீர்த்தனங்கள் பாடுவார். ஹரிதாஸ் சுவாமிகள், தன் குரு ஞானானந்த கிரி சுவாமிகளைச் சந்தித்த நிகழ்ச்சியே மெய்சிலிர்க்க வைப்பது. ஒருநாள் மலை உச்சியிலிருந்து கீழே சில நெருப்பு ஜ்வாலைகளைக் காண்கிறார் ஹரிதாஸ். கீழே சென்றால் அங்கு தீயிருந்ததற்கான எந்த சுவடும் இல்லை. சில தினங்களில் அதே ஜோதி ரூபத்தில் ஒருவர் வந்து வீட்டின் கதவைத் தட்டிச் செல்கிறார். இதைக் கேட்ட ஹரிதாஸ் அவர்களின் தந்தை, அவரைத் தன் குரு ’சுவாமி ஞானானந்த கிரி’ அவர்களிடம் அழைத்துச் செல்கிறார். குருவைக் கண்டவுடன் கண்ணீர் பொங்க அழுது வணங்குகிறார் ஹரிதாஸ் – ஜோதி வடிவமாக வந்து தன்னை அழைத்தவர் தன் குருவே என அறிந்துகொள்கிறார். குருவின் ஆசிப்படி, நாமசங்கீர்த்தனம் மூலம் பக்தியையும், சனாதன தர்மத்தையும் மக்களிடையே எடுத்துச் செல்கிறார், ஶ்ரீ ஹரிதாஸ் கிரி சுவாமிகள். 1994, செப்டம்பர் 4 ஆம் தேதி, இமயமலை ருத்ரப்பிரயாகில் ஜலசமாதி அடைகிறார்.
ஹரிதாஸ் சுவாமிகளின் கனவில் தோன்றி குரு வழிநடத்த, பந்தர்பூர் கருவரையில் இருந்து ஒரு கிருஷ்ணனை – விட்டல் என அழக்கப்படும் ஶ்ரீகிருஷ்ணர் – இறைவனின் உத்தரவின்படி, தமிழ்நாட்டின் தென்னாங்கூரில் பிரதிஷ்டை செய்து கோயிலும் கட்ட முடிவு செய்கிறார். பாண்டுரங்கன் -ரகுமாயி கோயில், ஞானானந்தகிரி பீடம், இரண்டு அன்னதானத்திற்கான இடங்கள், கோசாலா, நாமசங்கீர்த்தனம் செய்வதற்கான பெரிய ஹால் என அமைந்துள்ள பக்தி பூர்வமான இடம் இது! “தக்ஷிண பந்தர்பூர்” என்று அழைக்கப்படுகிற க்ஷேத்ரமாக உள்ளது.
ஶ்ரீ பாண்டுரங்கா – ஶ்ரீ ரகுமாயி (விஷ்ணு – மஹாலக்ஷ்மி) மூர்த்தங்கள் முழுவதும் சாலக்கிராமத்தில் உருவானவை. விட்டல் 12 அடி அடிஉயரத்தில் (3 அடி உயரம் பந்தர்பூர் கோயிலில் குழந்தையாக), 10 அடி உயர ரகுமாயித் தாயாருடன், கண்கவர் கருமை நிறத்தில் விஸ்வரூபக் காட்சி இங்கே! சுதர்ஸனச் சக்ர ஆழ்வார், யோக நரசிம்மர், மற்றும் ஶ்ரீனிவாச பெருமாள் உற்சவ மூர்த்திகளாய் கர்பகிரகத்தில் எழுந்தருளியுள்ளார்கள்! நித்ய உத்சவ மூர்த்தி கோவிந்தராஜ பெருமாள். உடன் ருக்மினி, சத்யபாமா! கல்யாண உற்சவம், அன்னப் பாவாடை உற்சவம், கோகுலாஷ்டமி, ஆருத்ரா பெளர்ணமி, ரதோத்சவம் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கோயிலின் பிரதான கோபுரம் மகாராஷ்ட்ரா கோயில்களைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பூரி ஜெகன்னாத் கோயில் கோபுரம் மாடல். 120 அடி உயரம்; 9 1/2 அடி உயரக் கலசம்; அதன் மேல் காவிக்கொடி. கிழக்கு நோக்கிய கோபுரம். தமிழ்நாட்டில் வித்தியாசமான கோபுரம்!
நான்கு பக்கங்களிலும் நான்கு கோபுரங்கள், சாளுக்கிய ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளன. கிழக்குப்பக்கம் பலி பீடம், அழகிய சபா மண்டபம் (16 தூண்கள் – ஒவ்வொன்றிலும் விட்டல் – ரகுமாயியின் வித விதமான அலங்காரங்களுடன் காட்சி கொடுக்கும் வண்ணப் படங்கள், கண்னைப் பறிக்கும் அழகுடன்!). நாமசங்கீர்த்தனம் மற்றும் மெடிடேஷனுக்கான மண்டபம்.
கோயிலின் உள்ளே மகாமண்டபத்தில், கண்ணைக் கவரும் கிருஷ்ண லீலா, ராஸலீலா படங்களுடன், ஃபைபர் கிளாஸ் பெயிண்டிங்கில் கூரை, மற்றும் சுவர்கள் மனதைக் கவர்கின்றன. ‘விட்டல் இருக்குமிடம் அரண்மனை போல இருக்க வேண்டும்’ என்று சுவாமி ஹரிதாஸ் அவர்கள் விரும்பிச் செய்ததாக கோயில் நிர்வாகம் செய்யும் சம்பத் பட்டாச்சாரியார் கூறினார். பஞ்சலோகத்தில் இரண்டு பக்கமும் துவார பாலகர்கள் – வெள்ளியில் வேலைப்பாடுடன் கதவுகள், அர்த்த மண்டபம், கர்பக்கிரகம் – அர்த்தமண்டபத்தின் கூரையில் தசாவதாரம் (ஃபிபர் கிளாஸ் பெயிண்டிங்கில்) என மிக அழகு! ஆசியாவிலேயே இங்கு மட்டும்தான் கிருஷ்ணரின் பாலலீலா ஓவியங்கள் ஃபைபர் பெயிண்டில் உள்ளதாக குறிப்பு ஒன்று கூறுகிறது.
ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம். ராஜ அலங்காரம், வெங்கடாசலபதி-அலர்மேல் மங்கை, குருவாயூரப்பன் (பலவிதமான் பழங்களுடன்), ஶ்ரீராமர் அலங்காரம், ஶ்ரீ வேணுகோபாலன் அலங்காரம், பாற்கடலில் சயன அலங்காரம், வெண்ணைக் காப்பு அலங்காரம், காளிங்க நர்த்தன அலங்காரம் என சிறப்பாகச் செய்யப்படுகின்றன.
இங்கு தலவிருட்சம், ‘தாமாலா விருட்சம்’ ஆகும். உத்தரப்பிரதேசத்தில் சகேத், ஒரிசா மாநிலத்தில் சாஷீகோபால், மற்றும் தென்னாங்கூர் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகின்றது இந்த விருட்சம். தமாலா மரம் — துவாபர யுகத்தில், கிருஷ்ண பகவான் இந்த மரத்தில் அமர்ந்து குழல் இசைக்க, பர்ஸானாவிலிருந்து ராதை வந்து அவரை அடைந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பக்தியடன் இவ்விருட்சத்தை 12 முறை சுற்றி வந்தால் வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
விட்டல்-ரகுமாயி சன்னதியில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் – மனமுருகி நாமசங்கீர்த்தனம் இசைக்கிறார்கள் – கேட்கிறார்கள். எப்போதும் மகிழ்ச்சியும் மங்களகரமும் பரவியுள்ள அருமையான சூழல் மனதுக்கு மிகவும் இதமானது.
காலையும் இரவும் பூஜை, ஆரத்தியைக் கண்டு களித்தோம். ஞானந்தகிரி குருபீடம், நாமசங்கீர்த்தன மண்டபம், அன்னதான மண்டபங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.
முதல்நாள் மாலை வரும் வழியில், அகரம் கிராமம், வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் மணிமண்டபத்தை தரிசித்தோம்.
தென்னாங்கூர் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆன்மீகத் தலம்!
அருமை..
LikeLike