(அரக்கர்கள் பலரைக் கொன்றழித்த கண்ணன், பலராமன் இருவரின் ஆற்றலைக் கண்ட ஆயர் சிறுவர்கள் மகிழ்ந்தனர்.
கழுதை வடிவில் இருந்த தேனுகாசுரன் இறந்த பின்னர், அவர்களுக்குக் காளியன் என்ற பாம்பினால் தொல்லை உண்டாயிற்று…..……..)
காளியன் என்னும் பாம்பு
ஆற்றின் அருகில் ஆங்கோர் மடுவில்
அச்சம் விளைக்கும் காளியனாம்
சீற்றம் மிக்க நெடிய அரவோன்
சிந்தும் மூச்சில் நஞ்சுடையோன்
கூற்றம் போன்றோன் குடும்பத் தோடு
குளிர்ந்த நீரில் குடியிருந்தான்
காற்றில் பறக்கும் புள்ளும் மூச்சுக்
காற்றுப் பட்டால் மடிந்துவிழும்.
காளியன் வாழ்ந்த மடு
அகலம் எட்டுக் கல்லென்பர்
ஆழம் கடலின் உள்ளென்பர்
முகிலாய்ப் புகையும் மேல்பரவும்
மூச்சின் நஞ்சு போய்விரவும்
திகழும் உயிர்கள் இடம்விட்டுச்
சேய்மை நோக்கிச் சென்றனவே
இகல்சேர் குணத்தான் வாழ்மடுவின்
இரண்டு புறமும் பாழ்நிலமே
கல் – mile
சேய்மை – தொலைவு
இகல் – பகை
அல்லும் பகலும் அம்மடுவில்
ஆட்டம் போட்டான் காளியனே.
புல்லும் பூண்டும் முளைக்காவே
புள்ளும் விலங்கும் நெருங்காவே
செல்ல மாந்தர் அஞ்சினரே
சிந்தை நடுங்கித் தவிர்த்தாரே
கொல்லும் நச்சுப் பல்லெண்ணிக்
குமைந்து நெஞ்சம் தவித்தாரே.
காளியனை அடக்க மடுவில் கண்ணன் குதித்தல்
அடங்க மறுத்த காளியனின்
அல்லல் இழைக்கும் தன்மையினை
மடங்கல் மாற்ற மனங்கொண்டான்
மாடு மேய்க்கப் போகையிலே
கடம்ப மரத்தின் மேலேறிக்
கைகள் தட்டி ஒலியெழுப்பி
நடுங்க வைக்கும் அம்மடுவின்
நடுவில் பாய்ந்து குதித்தானே
மடங்கல்- சிங்கம்(போன்ற கண்ணன்)
கறுத்த மதலை குதித்தவுடன்
கதித்த நீரும் விண்ணுயரத்
தெறித்துச் சிந்தத் திவலைகள்போய்த்
திசைகள் எட்டும் நனைத்தனவே
வெறுத்துச் சினந்த வெவ்வரவோன்
விரைந்து வந்து துடித்தெழுந்து
நிறுத்திப் பிடித்து நெரிப்பதற்கு
நீண்ட வாலைச் சுழற்றினனே
கதித்த – எழுந்த
வெடிக்கும் சினத்தால் நஞ்சுமிழ்ந்து
விரைந்து வந்த காளியன்மேல்
நொடிக்குள் ஏறி விரிபடங்கள்
நோகக் கண்ணன் குதித்தனனே
முடிக்க நினைத்து மிகமுயன்றும்
முகத்தைக் கொத்த இயலாமல்
அடிக்கும் அரவோன் வால்பற்றி
அழகன் ஆட்டம் தொடங்கினனே
.
காளிய நர்த்தனம்!
(பாம்பின் மேல் கண்ணன் நடனம்)
முத்தொளிரும் வெண்ணகையான் மொய்முகில்மைக் குழலுடையான்
கொத்துதற்குச் சீறிவந்த கொடியவனாம் காளியனின்
மெத்தவிரி படத்துமிசை விரைந்தேறிக் குதித்ததன்மேல்
தித்தித்தோம் தித்தித்தோம் திருநடனம் செய்தனனே
அடித்தெழுந்த வால்முறுக்கி ஆற்றலால டக்கியே
பிடித்திருந்த பாம்பேறிப் பின்னிநின்ற கால்களால்
பொடிச்சிறுவன் ஆடுகின்ற பொலிவுகொண்ட நாட்டியம்
வெடித்தெழுந்த தாமரையின் வியனழகை ஒத்ததே
சீறுகின்ற பேரரவோன் சிந்துகின்ற நஞ்சினால்
ஊறடைந்து கறுப்புநிறம் உற்றதுவே மடுநீரும்
வீறுகொண்ட நீலவண்ணன் வேறுவேறு நடைகளை
மாறிமாறி ஆடியதால் வானவர்கள் வழுத்தினார்.
சத்தமிட்டுக் காற்சதங்கை சலசலக்க வானிடியும்
மத்தளமாய்த் தானொலிக்க வல்லரவோன் சோர்வடையக்
கொத்துமலர்ப் பாதங்கள் குதித்தெழுந்த தாளநடை
தத்தித்தோம் தகதித்தோம் தத்தித்தோம் தகதித்தோம்
ஐந்தலைய பைந்நாகம் ஆத்திரத்தால் ஆர்ப்பரிக்கப்
பைந்தண்கார் விண்முகிலும் பையமழைத் துளிதெளிக்க
மைந்தனவன் ததிங்கிணத்தோம் வளர்நடையில் மேல்குதிக்க
நைந்தரவோன் உடல்நலிந்து நாவறண்டு நடுங்கினனே
பிழையுணர்ந்த காளியன் தஞ்சம் அடைதல்
பிஞ்சுக் கால்கள் திருநடனம்
பெரிய இடிபோல் தலைமேலே
கொஞ்சம் கொஞ்ச மாயிறங்கக்
குலைந்த அரவோன் செருக்கழிந்தான்.
கொஞ்சும் குழந்தை வடிவத்துக்
கோமான் பெருமை உளத்தறிந்தான்.
தஞ்சம் அடைந்தேன் என்பிழையைத்
தாங்கள் பொறுக்க வேண்டுமென்றான்.
கண்ணன் அறிவுரையும், காளியன் கடலுக்குச் செல்லுதலும்.
பாழும் பகைமை விட்டுவிட்டாய்
பாதம் பணிந்து தொட்டுவிட்டாய்
ஆழி செல்வாய் இப்பொழுதே
அமைதி கொண்டு குடும்பத்தார்
சூழ இருப்பாய் என்றருளத்
தொழுத அரவோன் உடனகன்றான்.
வாழி குலத்தின் விளக்கென்று
வாழ்த்தி ஆயர் மகிழ்ந்தாரே!
(தொடரும்)
மரபின்சுவை மரபின்தகை மறக்கின்ற மாந்தரிடை
மணக்கும்செந் தமிழாலே மயக்கும்நற் பாட்டெழுதிப்
புரக்கின்ற வேந்தனெனப் பொன்தில்லை வேந்தரவர்
புவியினிலே நீடூழி புகழுடனே வாழியவே!
LikeLike
அரவம் அருமை நடனம்
LikeLike
காளியநர்தனத்தை கண்முன்னே ஆடவைத்தது தங்கள் கவிதை
LikeLike