குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் இரண்டு சிறிய பாடல்கள் இடம் பெறும்.
பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாகத் தன் கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
69. எதனாலே ?
மாங்காய் புளிப்பது எதனாலே ?
மாம்பழம் இனிப்பது எதனாலே ?
பாகல் கசப்பது எதனாலே ?
பாக்கு துவர்ப்பது எதனாலே ?
ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாய் –
எறும்புகள் போவது எதனாலே ?
குக்கூ குக்கூ என்றழகாய்
குயில்கள் கூவுது எதனாலே ?
புள்ளிமான்கள் உடல்களிலே
புள்ளிகள் இருப்பது எதனாலே ?
மயிலின் தோகை விரிக்கையிலே
மயக்குது நம்மை எதனாலே ?
சூரியன் உதிப்பது எதனாலே ?
சந்திரன் வருவது எதனாலே ?
வானத்தில் ஆயிரம் நட்சத்திரம்
மினுக் மினுக் என்பது எதனாலே ?
இயற்கையில் அனைத்தும் அதிசயமே !
அடைவோம் அனுதினம் பரவசமே !
அனைத்தையும் இயக்கும் சக்தியிடம்
ஆனந்தமாக நாம் சரணடைவோம் !
*********************************************
70. என் ஆசை !
எனக்கொரு ஆசை உண்டம்மா –அதை
இன்று உன்னிடம் சொல்லுகிறேன் !
இந்தியாவின் புகழ் உலகெங்கும் –
பரவ வேண்டும் என விரும்புகிறேன் !
நாட்டு மக்கள் அனைவருக்கும் –நல்ல
கல்வி கிடைத்திட வேண்டுமம்மா !
உண்ண உணவும் இருக்க இடமும் –
ஆரோக்கியம் அனைவரும் பெற வேண்டும் !
வேலை தேடி வெளிநாடு செல்லும் –
அவலம் இங்கே தொலையட்டும் !
தாத்தா பாட்டி அம்மா அப்பா –
அனைவரும் ஒன்றாய் வாழட்டும் !
தூய காற்று சுற்றுச்சூழல் –
தூய்மையாய் அனைத்தும் விளங்கட்டும் !
வீடுகள் எங்கும் வெளியில் எங்கும் –
மகிழ்ச்சி பொங்கி ஓங்கட்டும் !
நானும் ஒருநாள் பெரியவன் ஆவேன் !
நல்ல மாற்றங்களை நான் அனுபவிப்பேன் !
இந்தியா என்ற என் தேசத்தை – என்
அன்னையைப் போல் நான் நேசிப்பேன் !