பல வருடங்களாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் ஆங்கில இலக்கியம் படித்ததைப் பிரயோகித்து, கன்டன்ட் டெவலெப்பராக வேலை செய்து கொண்டிருந்தார் சந்த்ரு. எழுதுவது, பல தயாரிப்புகள், உரையாடல், தெளிவுபடுத்துவது என மும்முரமாய் வேலை. ஆங்கில இலக்கியம் மேல் கொள்ளை ஆசை சந்த்ருவிற்கு.
அதனாலேயே நெடுநாள் ஆசை, கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சொல்லித் தர வேண்டும் என. வாய்ப்பு வந்து சேர்ந்தது. ஊர் பக்கத்தில் உள்ள கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை கிடைத்தது. சந்த்ரு பேரானந்தம் அடைந்தார்.
ஆர்வமுடன் ஆசிரியராகப் பணி செய்து வந்தார். வகுப்பு மாணவர்கள் எல்லோரின் விவரங்களும் அத்துப்படி. கசப்பான அனுபவங்களின் சஞ்சலத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.
ஃபிப்ரவரி மாதத்திலிருந்து சந்த்ருவின் சுறுசுறுப்பு சரிந்தது போலத் தோன்றியது. புதிய வேலையின் அனுபவங்கள், மற்றும் அதிக ஓய்வு எடுக்காததின் விளைவுதான் என நண்பர்கள் ஆசுவாசப்படுத்தினார்கள். ஆண்டு இறுதி விடுமுறையில் சரியாகிவிடும் என்றார்கள்.
விடுமுறையில் ஏதோ சரியாகி வருவதாகத் தோன்றியது. புது வருடம் ஆரம்பமானது. சந்த்ரு பாடத்தைச் சொல்லித் தரத் தொடங்கினார். இரண்டு மாதத்திற்குள் கவிதைகளைச் சொல்லித் தரும் போதெல்லாம் தன்னை அறியாமல் அழுகை வருவது, வேதனைகளைக் கேட்கும்போது தாங்க முடியாத நிலை உண்டாவதை சந்த்ரு உணர்ந்தார். அதே சோர்வு.
இதைப் பார்த்த மாணவர்கள் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவர்களுக்குப் பலமுறை மனதிடம் உருவாக்க வர்க்ஷாப் செய்ய என்னை அழைத்திருந்தார்கள். எனக்கு வெளியூர் என்பதால் அது ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும். அந்த மாணவர்கள் மட்டுமே பள்ளியில் இருப்பார்கள். மற்றவர்களைச் சந்திக்கச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அதனால்தான் நான் சந்த்ருவைப் பார்த்ததில்லை. சந்த்ருவிடம் என்னைப் பார்க்க பரிந்துரைத்தார்கள்.
சந்த்ரு வந்தார். இருபத்தி எட்டு வயதினர், கூட வந்தவர்கள் அவருடைய நண்பன் மற்றும் இரு மாணவர்கள். அந்த இரு மாணவர்கள் தான் வர்க்ஷாப்பிற்கு வேண்டிய தேவைகளைக் கவனித்து உதவுவார்கள். அதனால் எனக்குப் பரிச்சயமானவர்கள்.
மூவரும் சந்த்ருவை அறிமுகம் செய்துவிட்டு, உடனேயே வெளியே காத்திருப்பதாகக் கூறி விலகினார்கள்.
சந்த்ரு தன் குழப்பத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார். தன் குணத்தைச் சொல்ல வேண்டும் என ஆரம்பித்தார். அவர் போக்கில் விட்டேன். சிறுவயதிலிருந்தே யாரையும் துன்பத்தில் பார்த்தாலே மனம் கலங்கி விடுமாம். எல்லா ஜீவராசிகளுக்கும்தான், மனிதர்களுக்கு மட்டும் அல்ல. பெற்றோர் இளகிய மனமுடையக் குணத்தைப் பாராட்டினார்கள்.
கடந்த சில மாதங்களாகப் பல சூழலில் மனம் கலங்கிப் போகிறது என்றார். பிடித்தமான வேலையில் இது குறுக்கிடுவது பிடிக்கவில்லை. பாடம் சொல்லித் தரும்போது, கண்கலங்கி மனம் அந்தப் பகுதியில் மட்டுமே லயித்து அடுத்த கட்டத்திற்குப் போக முடியாமல் இருந்து விடுவதால், மேற்கொண்டு பாடத்தைச் சொல்லித் தர முடியாமல் போய்விடுகிறது என்றார். ஏதோவொரு சோகம் மனதைப் பாரமாக ஆக்குகிறது என்றதை விவரித்தார். ஏனோ இப்போதெல்லாம் கவிதையினால் இவ்வாறு அதிகமாக உணர்ச்சிவசப் பட்டுவிடுகிறேன் என்றார்.
மாணவர்களுடன் இவர் அன்பாக இருப்பதால், அவர்கள் இவரிடம் ஏதோ மாற்றம் இருப்பதைக் காண்பதாகக் கூறுவதினால், முன்பு போல் இல்லாமல் எரிச்சல் ஏற்படுகிறது என்றார். அவர்களுடன் இப்படி நேர்கிறது எனத் தன்மேல் கோபம். சாப்பாட்டு, குளியல் மற்றும் தினசரி கடமைகள் வெறுப்பூட்டுவதாகக் கூறினார். மீண்டும் மீண்டும் ஆங்கில இலக்கியத்தில் அதே கவிதையைப் படிக்க மட்டும் மனம் போகின்றதாம்.
இதை மையமாக வைத்து ஸெஷன்களில் ஆராயத் தேவை எனச் சொல்லி வாரந்தோறும் சனிக்கிழமை ஸெஷன்களுக்கு நேரத்தைக் குறித்துத் தந்தேன்.
வந்ததும் சந்த்ரு எடுத்து வந்திருந்த அத்தனை கவிதைப் புத்தகங்களையும் மேஜை மீது குவித்தார். டெனிஸன், ப்ளேக், வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லீ, எட்கர் போ, எனப் பிரபலங்களின் கவிதைகள்! இவையெல்லாம் தன் மனதை உருக்கும் கவிதையெனக் கூறினார். அவற்றின் பல வரிகளைச் சரளமாகச் சொல்லி வந்தார். நான் சந்த்ருவை நிறுத்தவில்லை, கேள்வி கேட்கவில்லை. காத்திருந்தேன்.
தருணம் வந்தது. வரிகள் நீள, இதைக் கேட்டீர்களா என சந்த்ரு கேட்டு, கண்ணீர் மல்க, தாங்க முடியவில்லை எனக் கூறினார். ஆங்கில இலக்கியம் பரிச்சயம் இருந்ததால், அதற்குச் சமமாகக் கவிஞர்களின் மற்றும் சில படைப்புகளைச் சொல்லி சமாதானப் படுத்தினேன்.
இதையே மையமாக ஸெஷனில் எடுத்து பரிசீலனை செய்யத் தொடங்கினோம். இந்த இலக்கியத்தில் ஆர்வம் பிறந்தது தந்தைக்கு இலக்கியத்தில் உள்ள ஈடுபாடு, மற்றும் அவர் நூலகராக இருப்பதினால் என்றார். இல்லத்தரசியான தாய் கதைகள் மூலமாக எல்லாவற்றையும் சொல்லித் தருவது வழக்கம். அதனால் தான் இலக்கியப் பற்று என விவரித்தார்.
இந்த காலகட்டத்தில் தான் இவ்வாறு உணர்ச்சிக்கு அடிமை ஆவதாகக் கூறினார். அதன் அடிப்படை காரணம் என்னென்ன என்ற தேடலை ஆரம்பித்து வைத்தேன். பலவிதமான வடிவத்தில் எழுதுவதைப் பிடித்தமான ஒன்றாகச் செய்துகொண்டிருந்த சந்த்ரு இதை சில மாதங்களாக நிறுத்தியதாகக் கூறினார். இதற்கும் மறுவாழ்வு தர, பள்ளி கால வகுப்பறையில், பிறகு கல்லூரியில் கவிதைகளை ரசித்த விதத்தை வர்ணிக்க, பள்ளிப் பருவம்-கல்லூரி காலம் எனப் பிரித்து ஆராய ஆரம்பிக்கப் பரிந்துரை செய்தேன்.
பள்ளிக் கால கவிதைகளை வரிசை செய்தபோது சந்த்ரு உற்சாகமாக எமிலி டிக்கின்சன் கவிதையைப் படித்த பின்பே வானத்தின் அழகை ஆறு வயதிலிருந்து ரசிக்க ஆரம்பித்ததை விவரித்தார். தொடர்ந்து, ஒவ்வொருவரின் கவிதையைப் படிக்க, சந்த்ரு இயற்கையின் பலபாணிகளைக் கவனித்து ரசிக்கலானார். தனக்கு மனித நேயம் கற்பித்ததும், மன அமைதி பெற்றதும் கவிதைகளால் என்றார்.
கல்லூரி காலமும் அதன் கவிதையையும் விவரிக்க ஆரம்பித்ததுமே மனம் வலிக்கிறது என்றார்.
ஏதோ தடைப்படும் போன்ற உணர்வதாகக் கூறினார். மேலும் அறிந்து கொள்ள, இதற்கு முன் நடந்ததை விவரிக்கச் சொன்னேன்.
விவரங்களைத் தருகையில், எழுதுவதைப் பற்றிக் கூறினார். எழுதிப் பல மாதங்கள் ஆகின என்றதையும் சொன்னார்.
கல்லூரி கட்டத்தைப் பற்றி எழுதி விவரிப்பது சுலபமாக இருக்குமோ எனக் கேட்டேன். இடையூறுகளை அடுத்த மூன்று ஸெஷனில் பகிர்ந்து அலசியதில் நம்பிக்கை பிறக்க, முயல முன் வந்தார் சந்த்ரு. அவருடைய போக்கில் போய்த்தான் விடைகள் பெறவேண்டும். ஸெஷன்கள் அந்த நோக்கில் முறையாகப் போனது.
செய்து கொண்டிருந்த ஆசிரியர் வேலையில் ஒரு திருப்தி, மாணவர்களுடன் நேர்ந்த உறவு. ஒவ்வொருவரையும் இன்னல்களை உட்பட, முழுமையாக அறிந்து கொண்டார்,. ஒவ்வொரு முறையும் கவிதைகளைச் சந்த்ரு கற்றுத் தர, இது இவனுக்குப் பொருந்தும், இது அவளுக்கு என மனக்கண்ணில் தோன்றும். நாளடைவில் அந்த கவிதையில் நேர்ந்தது போலவே அவர்களுக்கு ஆகிவிடுமோ எனக் கவலைப்பட்டு, மாற்றம் ஏதோ தென்பட்டதும், அவ்வாறே ஆகிவிட்டது என சந்த்ரு முடிவு செய்தார்.
இந்த மன ஓட்டத்தை ஸெஷனில் பல வாரங்களுக்கு ஆராய்ந்தோம். சந்த்ருவுக்கு புரிய ஆரம்பித்தது, கவிதையை லயித்துப் படித்ததால் மனதைத் தொட்ட நபர்களை அந்த இலக்கிய வடிவத்தில் அடையாளம் காண்கிறோம் என்று. ஒரு வரி மட்டுமே பொருந்திருக்கும், ஆனால் மெதுவாக முழுவதும் பொருந்துவது போல நினைத்துவிட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டது.
இதன் விளைவுதான் சந்த்ருவின் இன்றைய நிலை. இந்த அடிப்படை வடிவத்தைப் புரிந்து கொள்ள, சந்த்ருவை அவருக்குப் பிடித்த கலைமுறை வடிவில் இதை வர்ணிக்க முயலச் சொன்னேன்.
சந்த்ரு கன்டன்ட் ரைட்டர் பாணியைப் பயன்படுத்தி கவிதை-காரணி எனத் துல்லியமாக விவரித்திருந்தார். அளித்த வர்ணனைகள் மற்றும் சித்திரங்கள் வைத்துக் கடந்த ஏழு மாதங்களாக நேரும் அனுபவங்களை ஒப்பிடச் சொன்னேன். இந்தச் செயலை ஸெஷன்களில் செய்யும் பொழுது அனுபவங்களைப் பகிர்ந்து வந்தார். வீட்டிலும் செய்தார். தன் தவறான அணுகுமுறையினால் ஏற்பட்ட வித்தியாசத்தை சந்த்ரு அடையாளம் கண்டுகொண்டார். குழப்பத்தில் இருப்பதாகக் கூறினார்.
மறுபடியும் இவற்றையே ஸெஷனில் விவரித்துக் குறித்து வர, அதன் பற்றிய விவரிப்பு விஸ்தாரமாகச் சென்றது! இதே நேரத்தில் கல்லூரிப் பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்ததால், அன்றைக்கு நடந்ததை எடுத்துக் கொண்டோம். அதிலிருந்து சந்த்ரு விளக்கம் பெற்றார், கவிதை வரியினால் தன்மேல் ஏற்படும் தாக்கம் என்ன, தான் மற்றும் அதை எழுதியவர் அனுபவித்த உணர்ச்சிகள் என்ன, இது இரண்டையும் வேறுபடுத்த வேண்டும் என்று. கவியின் சொல்லை, கற்பனையைத் தனக்காகவே சொல்லப்பட்டதுபோல், தானே அனுபவித்ததுபோல் பாவிப்பதினால் விபரீதங்கள் ஏற்படுகின்றன என்று புரிய வந்தது.
இந்தத் தனிப்பயனாபடுத்தி (personalization) மட்டுமின்றி, கவிதையில் சொல்லப்பட்ட அனுபவங்கள், நிகழ்ச்சிகள் மற்றவருக்கும் பொருந்தும், அப்படியே நிகழ்ந்துவிடும் என்று பொதுமைப்படுத்தல் (over-generalization) செய்கிறோம், அதனாலேயே சில வரிகள் ஒருவருக்குப் பொருந்தினால், அவர்களுக்கும் அவை எல்லாமே நேர்ந்துவிடும் என்று கவலைப் படுகிறோம் எனக் கண்டுகொண்டார். இதனால்தான் அதிகமாக உணர்ச்சிவசப் படுகிறோம், தொடர்ந்து பாடம் சொல்லித்தர முடியாமல் போகிறது என்று தெரிய வந்தது.
இந்தப் புரிதலை நிலைநாட்ட, அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்த
தனிப்பயனாபடுத்தல், பொதுமைப்படுத்தல் நிகழும் போதெல்லாம் கவனித்து, அடையாளம் கண்டுகொண்டு, அவ்வாறு எதற்காகத் தோன்றியது என்பதை எழுதி வரச் சொன்னேன்.
முதலில் மேலோட்டமாக எழுதி வந்தார். அவற்றை அலசியதில் தன்னுள் நிகழ்வதை மேலும் புரிந்து கொண்டார். போகப்போக, உணர்ச்சிகள் ஓடோடி விடுவதைக் கட்டுப்படுத்தி, வகுப்பில் நல்வழியில் எடுத்துரைக்க முடிந்தது.
சந்த்ருவின் நல்ல மனதினால் வகுப்பு மாணவர்கள் பல விதத்தில் நன்மை அடைந்தார்கள். சந்த்ரு சொன்னார், தான் “ஐயோ பாவம்” என்ற ஸிம்ப்பதி (sympathy) நிலையிலிருந்து விடுகிறோம், மாறாக, மேற்கொண்டு செயல்படுவதற்கு மற்றவரின் உண்மையான உணர்ச்சிகளைக் கண்டறியும் எம்பத்தி (empathy) தேவை, கற்றுக் கொள்வது எப்படி என வினவினார். இதற்கு அவர்கள் கல்வி நிலையத்தில் ஆசிரியர்களுக்குத் தரப்படும் பயிற்சியில், லே கௌன்ஸலர் பயிற்சி, மற்றும் மனநலனை மேம்படுத்த முறைகள் பற்றிய வர்க்ஷாப் சென்று முறையாகக் கற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உற்சாகத்துடன் சேர்ந்தார்.
சந்த்ரு போன்ற ஆசிரியர்கள் எங்களைப் போன்ற மனநலனை மேம்படுத்தி வருவோருக்குப் பக்க பலமே. இவர்கள் மனநலனைக் காப்பதில் தரும் ஒத்துழைப்பினால், வகுப்பில் சூழலில் மனதிடம் மேம்படும். இவர்கள் என் தாரகை மந்திரமான “வரும் முன் காப்போம்” நோக்கத்திற்குக் கை கொடுப்பவர்கள்!
இது நடந்து ஒன்பது வருடம் ஆயிற்று. சந்த்ரு பல மாணவர்களின் சஞ்சலம் அடைந்த மனநலனை அடையாளம் கண்டு, அழைத்து வருவதும், நலனுக்காக முழு ஒத்துழைப்புத் தருவதும் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறது.
*************************************