சத்யஜித் ரே அவர்களால் பெங்காலியில் எழுதப்பட்ட கதைகள் கோபா மஜூம்தார் அவர்களால் ஆங்கிலத்தில் ‘பெலூடாவின் சாகசங்கள் பாகம் 2’ என்ற கதைத் தொகுப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதிலுள்ள ‘சகுந்தலாவின் நெக்லஸ்’ என்ற கதை சுருக்கி தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கதையின் ஓட்டம் ஏதும் தடைபடவில்லை.
துப்பறிபவர் பெலூடா என்கிற பிரதோஷ் மிட்டர், அவருடைய உறவினர் தபேஷ், நண்பன் லால்மோகன் கங்குலி மூவரும் தங்கள் நகரமான கல்கத்தாவை விட்டு விடுமுறைக்காக லக்னோ போகும் போது இரயில் வண்டியில் ஜயந்த் பிஸ்வாஸ் என்பவரை சந்திக்கின்றனர். தன்னைப் பற்றி அவர் கூறியதாவது – ‘ஜான் ரேனால்ட்ஸ் என்பவர் ஆர்மியில் இருந்தார். அவருடைய மகன் தாமஸ் ரேனால்ட்ஸ் என்பவரும் ஆர்மியில் சேர்ந்தார். நன்கு உருது பேசுவார். அவர் பரிதா பேகம் என்ற ஒரு முஸ்லிம் பாடகரைக் கல்யாணம் செய்து கொண்டார். அவருடைய முதல் பிள்ளை எட்வர்ட் ஒரு வக்கீலாக ஆனார், இரண்டாவது பிள்ளை சார்லஸ் தேயிலைத் தொடத்தைக் கவனித்துக் கொண்டார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த ஆங்கிலோ இந்தியனான பெண் சகுந்தலா தேவி ஒரு பெங்காலி கிறிஸ்டியனைக் கல்யாணம் செய்து கொண்டாள். அவளுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். மார்கரெட் சுஷீலா என்ற முதல் பெண் சாமுவேல் சல்கனந்தா என்ற ஒரு கோவாவாசியைக் கல்யாணம் செய்து கொண்டாள், அவர் இசைக் கருவிகள் விற்கும் ஒரு கடை வைத்துள்ளார், இரண்டாவது பெண் பமீலா சுநீலா கிறிஸ்டியனான என்னைக் கல்யாணம் செய்து கொண்டாள், பையன் ரதன்லால் கல்யாணம் செய்யாமல் உள்ளான். நான் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்கிறேன். எனக்கு ஒரு பெண், மேரி ஷீலா, பத்திரிகைத் துறையில் ஆர்வம் உள்ளவள், பையன், விக்டர், என் வியாபாரத்தில் உதவாமல் இருக்கிறான்.
இடைமறித்து பெலூடா ‘ஒரு சமயம் மஹாராஜா சகுந்தலா தேவிக்கு ஒரு விலையுயர்ந்த நெக்லசைப் பரிசாகக் கொடுத்தார் இல்லையா’ என்று ஆர்வத்துடன் கேட்டார். ‘ஆமாம் மைசூர் மஹாராஜா சகுந்தலாவின் நடிப்பைப் பாராட்டி பரிசாகக் கொடுத்தார். அப்போதே அதன் விலை சில நூறு ஆயிரமாக்கும். ஆனால் நீங்கள் பிறப்பதற்கு முன்பே சகுந்தலா நடிப்பதை நிறுத்தி விட்டாள். பின் இது எப்படி உங்களுக்குத் தெரியும்!” ‘நான் இதை பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு பேப்பரில் படித்துள்ளேன். மேலும் அது காணாமல் போய் திரும்பவும் போலீஸால் கண்டு பிடிக்கப்பட்டது என்றும் எழுதியிருந்தது.’ ‘மிகவும் சரி. அப்போது சகுந்தலா உயிருடன் இருந்தாள். அவளது மறைவிற்குப் பிறகும் அந்த நெக்லசைப் பற்றி பல கதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்’. ‘எனக்கு க்ரைம் மிகவும் பிடிக்கும்’ என்று சொல்லி பெலூடா தனது கார்டை நீட்டுகிறார். ‘என் நண்பன் லால்மோகன் பாபு ஒரு சிறந்த எழுத்தாளர்.’ ‘ஓ என் பெண் தங்களது ரசிகை. தாங்கள் அவசியம் எங்களது வீட்டிற்கு வர வேண்டும்’. ‘கட்டாயம், அப்போது அந்த நெக்லசையும் காட்ட வேண்டும். நாங்கள் மிகவும் ஆவலாக இருக்கிறோம். அது எப்படி முதல் பெண்ணிற்கு கொடுக்காமல் இரண்டாவது பெண்ணிற்கு நெக்லஸ் கொடுக்கப்பட்டது!’ ‘என் மனைவியும் ஒரு சிறந்த நடிகை. அவள் அம்மா மாதிரியே வர வேண்டியவள். சகுந்தலாவிற்கு அவளை மிகவும் பிடிக்கும். ஆனால் அவள் ஒரு குடும்பத் தலைவியாகவே இருக்க விரும்புகிறாள்.’
காலை சிற்றுண்டிக்குப் பிறகு பிஸ்வாஸ் பக்கத்து பெட்டியில் பயணம் செய்யும் தமது நண்பரைப் பார்த்து வரச் சென்றார். அவர்களுக்குள் சிறிது உரத்த வாக்குவாதம் மாதிரி நடந்தது. பின் பிஸ்வாஸ் அவரை அழைத்து இவர்களிடம் வந்து ‘இவர் என் நண்பர் திரு சுகியாஸ், லக்னோவில் பெரிய வியாபாரி, கலைகளில் சிறந்த அறிவாளி. நாங்கள் இருவரும் பழைய கால நண்பர்கள்’ என்று அறிமுகம் செய்தார்.
பெலூடாவும் மற்ற இருவரும் லக்னோவில் தங்கியிருந்த ஹோட்டல் உணவு மிகவும் நன்றாக இருந்தது. பாரா இமாம்பரா, புல்புலையா, ரெஸிடென்சி என்று எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தனர். அன்று மாலை பிஸ்வாஸ் கார்ட் அனுப்பியும், ஃபோன் செய்தும் அவர்களை அவருடைய 25 ந்தாவது வருட கல்யாண நாளுக்காக வரச் சொன்னார். அங்கே சென்ற போது அவருடைய மனைவி பமீலா சுநீலா, பெண் மேரி ஷீலா, பையன் விக்டர், மனைவியின் தமக்கை மார்கரெட் சுஷீலா, அவளுடைய கணவர் சாமுவேல் சல்கனந்தா இருந்தனர். பிறகு அவருடைய மைத்துனர் ரதன்லால், சுதர்சன் சாம் என்கிற ஓவியர் (இவர் அந்த வீட்டிலேயே தங்கியுள்ளார்) இவர்களையும் அறிமுகப்படுத்தினார். பெலூடா கேட்டுக் கொண்டதற்கிணங்க பமீலா சுநீலா ஷீலாவிடம் சாவி எடுத்து லாக்கர் திறந்து நெக்லசைக் கொண்டு வரச் சொன்னாள். ‘சாவி அங்கேதான் இருக்கும். உங்களுக்குக் கதவைத் திறந்த சுலேமான் உட்பட இங்கே எல்லோரும் மிகவும் நம்பிக்கையானவர்கள்’. நீலக் கலர் வெல்வெட் பெட்டியில் பளபளக்கும் அதைப் பார்த்து வியந்து மனமில்லாமல் திருப்ப, ‘ஷீலா இதை எடுத்த இடத்திலேயே வைத்து வீடு. விலை உயர்ந்த பொருள் அதிக நேரம் வெளியில் இருக்கக் கூடாது’ என்று பமீலா சுநீலா சொன்னாள். ரதன்லால் ஒன்றும் பேசாமல் இருந்தான். சிறிது நேரத்தில் ஓர் ஆள் வந்து சகுந்தலாவின் கடைசி படத்தின் ஒரு பாகத்தைத் திரையிட்டார். இருட்டான அந்த அறையில் ஒரு நிமிடம் சுகியாஸ் வந்து விட்டுச் சென்று விட்டார். அவரை இரவு விருந்து சாப்பிட்டுப் போகும்படி பிஸ்வாஸ் சொன்னார். நல்ல விருந்து சாப்பிட்டு விட்டு பார்ட்டியின் பாதியிலேயே பெலூடாவும் அவரது நண்பர்களும் ஹோட்டலுக்குத் திரும்பி விட்டனர்.
மறு நாள் காலையில் பிஸ்வாஸ் ஃபோன் செய்து நெக்லசைக் காணோம் என்றார். பெலூடா அங்கே சென்றார். போலீசும் வந்து இருந்தனர். வேலைக்காரர்கள் மூன்று பெரும் மிகவும் நம்பகமானவர்கள். எனவே எனவே பார்ட்டிக்கு வந்த யாரோதான் எடுத்திருக்க வேண்டும் என்று யோசித்தனர். பிஸ்வாஸ், அவர் மனைவி, இரு குழந்தைகள், ஓவியர் சாம், பிஸ்வாஸ் மனைவியின் சகோதரன், சகோதரி, சகோதரியின் கணவர், சுகியாஸ் எல்லோரும் விசாரிக்கப்பட்டனர். பிஸ்வாஸ் பையன், ஓவியர் சாம், சுகியாஸ் மூவருக்கும் பணத்தேவை அதிகம். மேலும் சுகியாஸ் புராதனப் பொருட்களை விற்பவர், அடகுக் கடையும் வைத்திருப்பவர். அவர் ஒரு முறை இந்த நெக்லசை விலைக்குக் கேட்டார். இவர்கள் எல்லோரும் சந்தேகப் பட்டியலில் வருகிறார்கள்.
போலீஸ் சென்ற பிறகு பெலூடா பிஸ்வாஸிடம் சில கேள்விகள் கேட்டார். அதிலிருந்து வேலைக்காரர்கள் நம்பகமானவர்கள், பிஸ்வாஸ் ஒரு பார்ட்னருடன் தனது வியாபாரத்தைக் கவனித்துக் கொள்கிறார், சுகியாஸ் ஒரு முறை நெக்லசை தனக்கு விற்கும்படி கேட்டார், ஆனால் கொடுக்கவில்லை என்று தெரிய வந்தன. மார்கரெட் சுஷீலாக்குத் தெரியும் நெக்லசை தமது அம்மா இரண்டாவது பெண்ணிற்குத் தான் தருவார்கள் என்று பமீலா சுநீலா சொன்னாள். போலீஸ் வந்து கேட்டாகி விட்டது, என்னை அரெஸ்ட் பண்ண வேண்டுமென்றால் அதற்கு சாட்சியம் என்ன என்று விக்டர் எடுத்தெறிந்து பேசினான். சாமைக் கேட்டபோது அவர் தமக்கு வருமானம் என்று இல்லை, இந்தப் படங்களை விற்றுத்தான் சம்பாதிக்கிறேன், சகுந்தலா தேவி தான் இங்கே தங்க இடம் கொடுத்துள்ளாள், விக்டருக்கு சில கெட்ட சகவாசங்கள் இருப்பதால் அவனுக்குப் பணத் தேவை அதிகம் தேவைப் படுவதால் தமக்கு அவன்மீது சந்தேகம் இருப்பதாகச் சொன்னார்.
பிறகு பெலூடா சாமுவேல் சல்கனந்தா கடைக்குச் சென்றார். இது எங்கள் தாத்தா காலத்து கடை. கஷ்டப்பட்டு நடத்துகிறேன். என் பையன் கடையைப் பாரத்துப்பான் என்று நினைத்தேன். ஆனால் அவன் மருத்துவம் படித்து விட்டு அமெரிக்கா சென்று விட்டான். நெக்லசைப் பற்றி கேட்டதற்கு மார்கரெட்டுக்குக் கொடுக்காமல் பமீலா சுநீலாவிற்கு கொடுத்தது அவளுக்கு மிகுந்த மன வருத்ததைக் கொடுத்தது, விக்டர் இப்போது டிரக்சுக்கு அடிமையானதால் அவனுக்குப் பணத்தேவை அதிகம் என்று சொன்னார். மார்கரெட்டைக் கேட்டதற்கு தமக்கு வருத்தம் இருந்தது, ஆனால் இப்போது இல்லை, பமீலா சுநீலா மீது பொறாமைக்குப் பதில் இரக்கம் தான் வருகிறது, கடை சரியாக நடக்காததால் அவர்களது பொருளாதார நிலைமை நன்றாக இல்லை, நேற்று இவ்வளவு பெரிய பார்ட்டி எப்படி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை, பார்ட்டியின் நடுவில் விக்டர் எழுந்து சென்று விட்டு வந்தான் என்று சொன்னாள்.
ரதன்லால் தனது தாய் அந்த நெக்லசை யாருக்குக் கொடுத்தாலும் எனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று பொதுவாக முடித்துக் கொண்டார். அடுத்தது சுகியாஸ் வீட்டிற்குச் சென்றபோது அவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அவர் பெலூடாவிற்கு ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந்தது தெரிந்தது. அதில் ரதன்லால் தம்மிடமிருந்து பணம் வாங்கியதாகவும் அதைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதாகவும், தன்னை மிரட்டிக் கொண்டிருப்பதாகவும் எழுதியிருந்தார். போலீஸ் சுகியாஸை கொலை செய்தவனைப் பிடித்தது. அவன் ரதன்லால்தான் தனக்குப் பணம் கொடுத்து இப்படி செய்யச் சொன்னதாகக் கூறினான்.
பெலூடா இப்போது தம்முடைய இறுதி முடிவைச் சொல்ல ஆரம்பித்தார். சுகியாஸ் கொலை வழக்கு முடிந்து விட்டது. அடுத்தது நெக்லஸ். இங்கு எல்லோருக்குமே ஏதோ ஒரு விதத்தில் பணத்தேவை இருக்கிறது. யார் மேல் சந்தேகம் அதிகம் என்று பார்த்தேன். பிஸ்வாஸ் வீட்டிற்கு கடைசியாகச் சென்ற போது ஒரு மண் தொட்டியில் செடி அப்போதுதான் புதிதாக நட்ட மாதிரி இருக்க அதைத் தோண்டினால் அதன் கீழே நெக்லசைக் கண்டு பிடித்தேன். மறுபடியும் ஷீலாவை விசாரித்து நான் தெரிந்து கொண்டது அவளுடைய தாய் சுகியாயஸுக்கு நெக்லசை விற்க சம்மதித்து விட்டாள், ஆனால் பாட்டி பரிசாகக் கொடுத்த அதை விற்க மனமில்லாமல் ஷீலா அதை செடியில் புதைத்து விட்டாள். இந்த வீட்டை விட்டு அதைப் போக விடாமல் இருக்க இப்படிச் செய்தாள் என்று நெக்லசைக் காட்டி சொன்னார். சகுந்தலாவின் நெக்லஸின் அருமை தெரிந்தவள் மேரி ஷீலா மட்டுமே. இப்படிப்பட்ட பெண்ணை அடைய அவளது பெற்றவர்கள் மிகவும் பாக்கியசாலிகள் என்று பெலூடா முடித்துக் கொண்டார்.
மறு நாள் பெலூடா, தபேஷ், லால்மோகன் கங்குலி மூவரும் லக்னோவிலிருந்து கிளம்பி கல்கத்தாவிற்கு நிறைவோடு சென்றனர்.
.