இரண்டாம் ராஜேந்திரன்
முன்கதை: வருடம் 1054. கொப்பம் போர்க்களத்தில் சோழ-சாளுக்கிய போர் வெகு உக்கிரமாக நடந்தது. வெற்றியின் வாயிலில் இருந்த சோழ மன்னன் ராஜாதிராஜனின் உடல், சாளுக்கிய வில்லவர்களால் அம்புகளால் சல்லடையாகத் துளைக்கப்பட்டு, அவன் யானை மீதிருந்து சாய்ந்தான். சோழப்படை தள்ளாடி, நிலை குலைந்தது. இனி தொடர்வோம்.
சோழநாட்டின் சக்கரவர்த்தி ராஜாதிராஜன், போர்க்களத்தில் யானை மீதிருந்து இறந்து வீழ்ந்ததைக் கண்ட சோழப்படை, திக்பிரமை அடைந்தது. புறங்காட்டி ஓடத் தொடங்கியது. சாளுக்கியப்படை பெரும் உற்சாகத்துடன் சோழப்படையைத் துரத்தத் தொடங்கியது. இதைப் பார்த்த அவன் தம்பியும், பட்டத்து இளவரசனுமான (இரண்டாம்) ராஜேந்திரன் தன் குதிரையிலிருந்து இறங்கினான். அண்ணன் விழுந்ததைக் கண்டு அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அது ராஜாதிராஜன் உடலில் விழுந்து அவன் மீதிருந்து வழிந்து கொண்டிருந்த ரத்த ஊற்றைப் பெருக்கியது.
‘மன்னன் ராஜாதிராஜன், தனது மகன்களை விட்டு விட்டு, தம்பியான தன்னை பட்டத்து இளவரசனாக்கியது’ அவன் மனதில் அழியாதிருந்தது.
‘இந்த அன்புக்கு நான் கைம்மாறு செய்தே ஆக வேண்டும்.’ என்று எண்ணினான்.
‘சக்கரவர்த்தி ராஜராஜர், தந்தை ராஜேந்திரர் இவர்களது பெருமுயற்சியால் உலகறிய வளர்ந்த சோழப்பெருநாட்டுக்கு இப்படி ஒரு இடியா! நூறு ஆண்டுகளுக்கு முன், ராஜாதித்தர் தக்கோலத்தில் யானை மீது இறந்ததால், சோழர் அடைந்த பெருந்தோல்வி, ராஜேந்திரனின் மனக்கண்ணில் நிழலாடியது. அத்துடன், தந்தை முதலாம் ராஜேந்திரர் சொன்ன அறிவுரையும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவர் சொன்னது இது தான்:
‘ராஜாதித்தர் யானைமேல் இறந்தார். இறந்த உடனே, சோழப்படை நிலைகுலைந்து மாபெரும் தோல்வியைத் தழுவியது. அந்த நிலை நமக்கு என்றும் வாராமல், இளவரசர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து சோழநாட்டைக் காக்க வேண்டும். இது நீங்கள் அனைவரும் எனக்குத் தரும் சத்தியம். செய்வீர்களா?” – தந்தையின் இந்த அறிவுரை எண்ணத்தில் வந்ததும் இரண்டாம் ராஜேந்திரனின் நெஞ்சு உறுதியானது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். சாய்ந்திருந்த அண்ணன் தலையிலிருந்த அந்தப் புராதானமான சோழக்கிரீடத்தை மெல்ல எடுத்தான். அதைக் கண்களில் ஒற்றிக்கொண்டான். ‘சிவபெருமானே! உனது அருளால் எங்கள் சோழ குலம் வெற்றி பெறட்டும். இப்பொழுதே நான் இந்த சோழ முடியை ஏற்கிறேன்” என்று கூறினான்.
ராஜேந்திரன் தனது பட்டத்து யானை மேல் ஏறினான். சோழக்கிரீடத்தைத் தலையில் சூட்டிக்கொண்டான். பட்டாபிஷேக முழக்கமாகப் போர்முரசைக் கொட்டுவித்தான். புதிய மன்னனைக் கண்ட வீரர்கள் கிளர்த்தெழுந்து திரண்டனர். ராஜேந்திரன், படைகளை ஒருங்கிணைத்தான். “அஞ்சேல், அஞ்சேல்! வெற்றி நமதே “ என்று முழங்கி, “உயிரால் ஒன்றுபடுவோம். சோழநாட்டைக் காப்போம். வெற்றிவேல்! வீரவேல்!” என்று போரைத் தொடங்கினான்.
ராஜாதிராஜனைச் சூழ்ந்து வில்வளைத்து அவனைக் கொன்ற சாளுக்கிய வில்லாளர்கள் திடுக்கிட்டனர். ‘புலி வீழ்ந்தது .. கதை முடிந்தது என்று நினைத்தோமே.. இப்படி ஒரு பூதம் கிளம்பியிருக்கிறதே” என்று நொந்தனர். ஆகவமல்லன், அவர்களை விரைவில் மீண்டும் ஒன்று சேர்த்தான். “வீரர்களே! இது நமக்கு நல்ல சமயம். இந்த ‘இரண்டாம் ராஜேந்திரனை’யும் உங்கள் அம்புகளால் முடித்துவிட்டால், பிறகு இந்தச் சோழர்கள் தலையெடுக்கவே முடியாது” என்று கூவி தனது வில்லவர்களுக்கு உற்சாகம் அளித்து, ராஜேந்திரனுடைய யானை மீது அம்பு தொடுக்க ஆணையிட்டான். ஆகவமல்லனும் இந்த வில்லவர்களுடன் சேர்ந்து கொண்டான். மீண்டும் அம்பு மழை பொழியத் தொடங்கியது.
ராஜேந்திரனது யானையின் நெற்றியில் அம்புகள் தைத்தன. ஆகவமல்லனின் அம்புகள் ராஜேந்திரனின் குன்று போன்ற புஜத்திலும், தொடையிலும் தைத்துப் புண்படுத்தின. அருகிலிருந்த யானைகளிலிருந்த பல சோழ நாட்டு வீரர்களும் இறந்து விழுந்தனர்.
ராஜேந்திரன் ரத்தம் உடலில் வழிந்தது. புலி போல கர்ஜித்தான். தன் காயங்களைக் காட்டியே தன் வீரர்களுக்கு வீரமூட்டி ஆர்ப்பரித்துப் போரிட்டான். பல சாளுக்கிய படைத்தலைவர்களை வேலால் குத்திக் கொன்றான். சாளுக்கிய படைத்தலைவர்கள் ஜயசிங்கன், புலகேசி, தசபன்மன், அசோகன், ஆரையன், மொட்டையன், நன்னி நுளம்பன் என்ற அனைவரையும் கொன்றான். மகா காளி தாண்டவம் போல ராஜேந்திரன் சென்ற இடங்களெல்லாம் சாளுக்கிய பிணங்கள் விழுந்தன. ஆகவமல்லன் இந்த போர் உக்கிரத்தைக் கண்டு திரும்பி ஓடினான்.
பின்னாளில் வந்த ‘விக்கிரம சோழ உலாவில்’ இந்த கொப்பத்துப் போரைப்பற்றி கூறுகையில், “ஒரு களிறு கொண்டு ராஜேந்திரன் ஆயிரம் களிறுகளைக் கைப்பற்றினான்’ என்று கவிக்கிறது. மீதம் இருந்த சாளுக்கிய படைத்தலைவர்களான வன்னியத்தேவன், துத்தன், குண்டமை, மற்றும் சாளுக்கிய அரசகுமாரர்களும், போர்க்களத்தில் நிற்க முடியாமல் புறங்காட்டி ஓடினர். சாளுக்கிய பட்டத்து அரசியரான சாங்கப்பை, சத்தியவ்வை இருவரும் கைப்பற்றப்பட்டனர்.
ராஜேந்திரன், தோல்வியை வெற்றியாக்கி, தனது புது ஆட்சியைப் புகழ்ச்சியாக்கினான். சாளுக்கியர்கள் விட்டுச்சென்ற பட்டத்து யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், சாளுக்கியரின் வராகக் கொடியும், பெரும் நிதிக்குவை, மற்றும் பெருவாரியான ஆயுதங்கள் அனைத்தும் ராஜேந்திரனின் வசமானது. பகைவரது அம்புகள் தைத்த புண்கள் ஆறும் முன்னரே, அப்போர்க்களத்திலேயே மன்னனாக வீராபிஷேகம் செய்து முடி சூட்டிக்கொண்டான். ‘இதற்கு முன் எவரும் போர்க்களத்திலே முடி சூட்டிக்கொண்டதில்லை’ என்று சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் எழுதுகிறார். வெற்றிக்குப் பின், ராஜேந்திரன், கொல்லபுரம் (கோலாப்பூர்) என்ற சாளுக்கிய நகரில் வெற்றித்தூண் நிறுவினான்.
வாசகர்கள் ஒரு விஷயத்தை ஆராய்ந்து பார்க்கவேண்டும். சோழர்களது வீரம் பார்த்தோம். அதே நேரம் சாளுக்கியர்களது வீரமும் திறம்படவே இருந்தது. வீழ்ந்தாலும், தாழ்ந்தாலும், மீண்டும் மீண்டும் எழுந்து, பலமான சோழர்களை போருக்கு இழுத்தனர். முதலாம் ராஜேந்திரன் காலம் தொட்டு, பல சாளுக்கியப் போர்களை, சோழர்கள் சந்திக்க நேரிட்டது. தோல்வி, அவமானங்களால் சாளுக்கியர்கள் துவண்டு விழவில்லை. கொப்பத்து தோல்விக்குப் பிறகு, அவர்கள் விரைவில், மீண்டும் துள்ளி எழுந்து, துடிப்போடு சோழரைத் தாக்க முற்படுவார்களா? வருவார்கள். அவர்கள் மட்டுமல்ல, தெற்கே பாண்டியர்களும் துடிப்போடு வீரத்தைக் காட்டுவார்களா? காட்டுவார்கள். அந்தக்கதைகளையும், சோழநாட்டுக்கு வரவிருக்கும் சோதனைகளையும், சரித்திரம் விரைவில், விவரமாகப் பேசும்.