‘மங்க்கி கேட்ச் ‘ – ஜார்ஜ் ஜோசப் – உயிரெழுத்து – ஏப்ரல் 2023
இதனை ஏப்ரல் 2023 மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்வு செய்கிறேன்.
ஆசிரியர் ஜார்ஜ் ஜோசப் இன்னும் பல படைப்புக்கள் தருவார் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்திருக்கிறார். – ஈஸ்வர்
——————————————————————————————————————————————————
2023 ஏப்ரல் மாதம் வெளிவந்த கதைகளை ஒரு சேரப் படித்தது ஒரு நல்ல அனுபவம். சிறு கதை என்பது நாம் படிக்க ஆரம்பித்த கால இலக்கணங்களுடன் நின்று விடுவதில்லை. கரு, களம், சொல்லும் முறை எல்லாவற்றிகும் மேலாக வடிவம் மாறிக்கொண்டு வருகிறது என்பது நிதர்சனம்.
கதைகளில் சில
- மருள் – பிரபாகரன் சண்முக நாதன் விகடன். 12.04.2023
கதையின் தலைப்பை ஒரு அரிவாள் வடிவில் எழதப்பட்டுள்ளது.
தேர், திருவிழா, நாவைத் தொங்கப் போட்டுக் கொண்டு, யார் மீதாவது இறங்கி ஆடும் சாமி, என கிராம வாடை அதிகம். இருந்தாலும் இப்படியும் இன்னும் இருக்கும் கிராமக் கதை, திருவிழாவைப் போல் சுவையாகவே நம்முள் இறங்குகிறது. அண்ணிக்கும் கருப்பர் இறங்க, அம்மாவுக்கும், அண்ணிக்குமான பிணக்கும் குறைய ஆரம்பித்தது. பரவாயில்லையே. கருப்பன் வந்து இறங்கினால் இன்னும் நிறைய தமிழ் குடும்பங்கள் சண்டைகள், பிணக்குகள் நீங்கி, இன்றும் நன்றாக மகிழ்ச்சியுடன் இருக்கலாமே என்று தோன்றாமல் போகாது. சுவை குறையாமல் நகரும் எழுத்து. கதையின் தலைப்பை
- அப்பா என்றொரு மனுசன் ரிஷபன் குங்குமம் 14.04.23
சொல்லப் போனால் அப்பா என்று எப்பொழுது அழைத்திருக்கிறான். நினைவில் இல்லை. நிறைய வீடுகளில் நிலவும் அப்பா – மகன் உறவு பற்றிய கதை “உனக்குப் புரியாது. சில விஷயங்கள்லாம் அனுபவிச்சாத்தான் புரியும்.” சீரான நடையில் இன்றைய குடும்பங்களில் பல அப்பாக்களின் நிலையை அழகாக உணர்த்தும் கதை.
- மேடம் இன்னிக்கு சிவ பிரகாஷ்
வேலைக்கான கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞன். தினமும் காதங்கள் பட்டுவாடா செய்ய வரும் புதிய தபால் ஊழியர் பெண். “மேடம், இன்னிக்கு ஏதாவது எனக்குத் தபால் உண்டா?.” கேட்பதும் அவளும் சளைக்காமல் ‘இல்லை’ என்று சொல்வதும் வழக்கமாகிவிடுகிறது
கொஞ்சம் கொஞ்சமாக அவளே அவனை விரும்ப ஆரம்பித்து விடுகிறாள். அவளே அவனுக்கு ‘ ஐ லவ் யூ’ என்று தன் கைப்பட எழுதி, கடிதத்தை அவனிடம் கொடுக்க விழைகிறாள் இரண்டு மூன்று தினங்கள் அவனைப் பார்க்கவே முடிவதில்லை. பார்க்கின்ற அன்று அவள் அவனிடம் தன் கடிதத்தைக் கொடுக்க முற்படும் முன் அவன் சொல்லும் செய்தி தான் கதையின் ஹை லைட். .. அசத்தலாக எதுவும் இல்லை என்றாலும் படிக்கலாம். கதையின் இறுதி வரிகள், நாட்டின் இன்றைய நடப்பை சரியாகப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது சிறப்பு.
- சுவை – எஸ் பர்வீன் பானு விகடன் 04.05.23
தை மழை, நெய் மழை. என்ற தொடக்கமே ஒரு சுவை தருகிறது. பரஸ்பரம் இருவரும் பொய் சொல்லிக் கொண்டார்கள். அது அவர்களுக்கும் தெரிந்திருந்தது. இந்த சமாதானப் பொய்கள் மட்டும் இல்லாமல் போயிடுந்தால், உலகம் எப்போதோ உப்பு இப்பாத கருவாடாய் நாறிப் போய் இருக்கும். இதற்கு மேல் சொல்வது ‘சுவையைக்’ கெடுத்து விடக் கூடும். படித்துத்தான் பாருங்களேன்
- ஆண்களை நம்பாதே – சுப்ரஜா குங்குமம் 07.04.23
கதையின் தலைப்பு கதையைபற்றிய ஒரு ஊகத்தை அளிக்கிறது. கும்பகோணத்தில் தினம் கோவில் சென்றுவரும் மாதவி, அவள் விரும்பும் மாமன் மகன் நந்து. அவனுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. சென்றவன் தொடர்பே கொள்ளவில்லை. இவளே முகவரி தெரிந்துகொண்டு சந்திக்கிறாள். கடிதம் எழுதாததற்கு வேலைப்பளு காரணம் என்கிறான். நண்பர்களோ எப்போதும் உங்கள் புராணம் தான். உங்கள் சமையல் பற்றிதான் என்கிறார்கள். நந்துவிடம் ’இவங்களுக்கு சமைத்துப்போடவா நான் வருவேன். சற்று தூரத்தில் வீடு பார் என்று சொல்வதோடு கதை முடிகிறது. நம் ஊகம் பொய்க்கிறது.
கதை சொல்லப்பட்டு இருக்கும் விதம் நன்றாக இருக்கிறது.
- ‘மங்க்கி கேட்ச் ‘ ஜார்ஜ் ஜோசப் உயிரெழுத்து ஏப்ரல் 2023
குழந்தைப் பெண் தனுவைப் பற்றிய கதை இது. பொதுவான வராந்தா கொண்ட மூன்று குடித்தனங்களில் சிறிய போர்ஷன். அதில் வசிக்கும் குழந்தைப் பெண் தனு. மூன்றரை வயதுக்குரிய புத்தி கூர்மை இல்லை. ஒன்றுமே தெரியவில்லை. மற்ற குழந்தைகள் படிக்கும் கான்வென்ட் பள்ளி சீட் தர மறுக்கிறது.
இப்படி சமூகத்தில், மற்றவர்களால் நிராகரிக்கப்படும் ஒரு பெண் குழந்தையை, அவள் முகத்தில் குறிபார்த்து, பெரிய ப்ளாஸ்டிக் பந்தை வைத்து. மங்கி கேட்ச ஆடும், மூன்று சிறுவர்களின் விளையாட்டான கதை மனங்களை நெகிழ வைக்கும் இப்படைப்பு. சொல்லப்பட்ட விதத்திலும் இக்கதை தனித்து நிற்கிறது. ஏப்ரல் 2023 மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்வு செய்கிறேன் ஆசிரியர் ஜார்ஜ் ஜோசப் இன்னும் பல படைப்புக்கள் தருவார் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்திருக்கிறார்.