கவிஞர் அப்துல் ரகுமான் எழுதிய “ஆலாபனை” கவிதை தொகுப்பில் “தவறான எண்” என்றொரு கவிதை
“தவறான எண்”
தற்செயலாய் ஒருநாள் தொலைபேசியில்
தவறான எண்ணில் சிக்கினான்
இறைவன்
“என்ன ஆச்சரியம்! இறைவனா?
நீ தேடினால் கிடைப்பதில்லை
இப்படித்தான் எதிர்பாராத வகையில்
சிக்கிக் கொள்கிறாய்
தொலைபேசியை வைத்துவிடாதே
பல நாட்களாகவே
என் இதயத்தைக் குடையும்
சில கேள்விகளை
உன்னிடம் கேட்க வேண்டும்” என்றேன்
கண்ணீரைப் போல்
கேள்விகள் பொங்கி கொண்டு வந்தன
எங்கள் காரியங்களில் குற்றம் பிடிப்பவனே!
எந்த சபிக்கப்பட்ட மண்ணால் எங்களை படைத்தாய்?
ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியை ஏன் வைத்தாய்?
உனக்கே பணிய மறுத்த சாத்தானை பலவீனமான எங்களின் எதிரியாக ஏன் ஆக்கினாய்?
அந்த பிரளயப் பொழுதில் தன் பேழையில் சேமிக்க நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுத்ததில் நோவா தவறு செய்துவிட்டாரா?
இங்கே என்ன நடக்கிறது என்று பார்!
இதோ! உனக்கு வீடு கட்டுவதற்காகவே உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்!
இடிக்கப்படுவதில் நீ இடிக்கப்படுகிறாயா?கட்டப்படுவதில் நீ கட்டப்படுகிறாயா?
இந்த ராம் யார்? ரஹும் யார்?
பெயரில் என்ன இருக்கிறது என்றவன் பேதை பெயரால் அல்லவா இத்தனை பிரச்சனைகள்?
பெயர்களில் நீ இருக்கிறாயா?
நீ அன்பு என்றால் இந்தப் பகை யார்?
நீ சாந்தி என்றால் இந்த வெறி யார்?
நீ ஆனந்தம் என்றால் இந்த துயரம் யார்?
நீ சுந்தரம் என்றால் இந்த அசிங்கம் யார்?
நீ உண்மை என்றால் இந்தப் பொய் யார்?
நீ ஒளி என்றால் இந்த இருள் யார்?
எரியும் வீடுகள் உன் தீபாராதனையா?
கொப்பூழ்க் கொடிப் பூக்கள் உனக்கு அர்ச்சனையா?
ரத்தம் உன் அபிஷேகமா?
இது எந்த மதம்? எந்த வேதம்?
இவர்களா உன் பக்தர்கள்?
தீமை அதிகரிக்கும் போதெல்லாம் அவதரிப்பேன் என்றாயே ?
இதை விடக் கொடிய காலம் ஏது?
எங்கே காணோம் உன் அவதாரம்?
இன்னும் எதற்காகப் பூக்களை உண்டாக்குகிறாய்?
இன்னும் எந்த நம்பிக்கையில் குழந்தைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறாய்?
ஆலய மணி ஓசையும் மசூதியின் அழைப்பொலியும்
காற்றில் கரைந்து சங்கமிக்கும் அர்த்தம் இவர்களுக்கு எப்போது விளங்கும்?
கடைசியாகக் கேட்கிறேன்
நீ ஹிந்துவா? முஸ்லிமா?
“ராங் நம்பர்” என்ற பதிலோடு இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மரபுக்கவித் தேன்சுவையில் மயங்கிநின்ற மாந்தர்களை
மனம்மாற்ற மாநிலத்தில் மாகவியெனப் பேரெடுத்த
அரசக்கவி பாரதியின் அடியொற்றிப் புதுக்கவிதை
ஆயிரமாய்ப் பாடியவர் அப்துல்ரகு மான்ஐயா
தம்பாடல் புகழ்போலத் தாரணியில் தழைத்தோங்க!
LikeLike