ருத்ரன்
1950ல் வெளியாக வேண்டிய படம்! ஒரு விஷயம் பழசாக இருந்தா பரவாயில்லை! மொத்தமுமே பரணை தூசி தட்டிய விசயமா இருந்தா எப்படி? இது யூ டியூப் விமர்சகர் அருணின் வாக்கு. மற்றபடி ராகவா லாரன்ஸாகட்டும் பிரியா பவானி சங்கராகட்டும், சரத்குமாராகட்டும் கொடுத்த பாத்திரத்தை நேர்த்தியாகத்தான் செய்திருக்கிறார்கள். பல காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகரின் உழைப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.
பல மசாலா படங்களை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தது போல் இருக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா. எரிச்சலைத் தரும் படம் – இண்டியா டுடே!
சொப்பனசுந்தரி
லாட்டரியில் பம்பர் பரிசாகப் பெறும் மகிழுந்தினால் ஏற்படும் சிக்கல் தான் கதை!
மூன்று பெண்களின் அதிரடி பாய்ச்சலில் சற்று நகைச்சுவையை தூவி நம்மை சூதில்லாமல் கவ்விக் கொள்கிறது படம்! திரைக்கதையின் மேல் வைத்த பெருத்த நம்பிக்கை வீண் போகவில்லை! பரிசாகக் கிடைத்த மகிழுந்தின் பின்னால் இத்தனை சிக்கல் என்று எதிர்பார்க்காமல் மாட்டிக் கொள்ளும் மூன்று பெண்கள். சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை – தி ஹிந்து
செமை காமெடி குத்து. ஆனால் நம்மை விழ வைக்கவில்லை. யாரும் நடிப்பில் சோடை போகவில்லை. டெக்னிகல் குழு சில இடங்களில் படத்தை உயர்த்துகிறது. குறிப்பாக இசை செமை! இயக்குனர் நம்மை சாய்க்க செய்த முயற்சி புஸ்!– டைம்ஸ் ஆஃப் இந்தியா.
திருவின் குரல்
எந்த லாஜிக்கும் இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எடுக்கப்பட்ட படம். இதில் அருள்நிதி மட்டும் போராடி என்ன பயன் – ஃபில்மி கிராஃப்ட் அருண்! சுவையான தருணங்களை சரியாக மீட்டெடுக்கத் தவறி விட்ட படம் என்பது டைம்ஸின் வாதம்! அரசி மருத்துவமனையில் நடக்கும் அராஜகங்களைத் தட்டிக் கேட்கும் இளைஞனுக்கு நேரும் சிக்கல்கள் தான் படம். ஆனாலும் அதை முறையாகச் சொல்லத் தெரியவில்லை இயக்குனர் ஹரிஷ் பிரபுவால் – தி ஹிந்து!
சுவாரஸ்யமான படமாக ஆரம்பித்து ஓரளவு நம்மைக் கட்டிப் போட்டு முடிச்சை இறுக்காமல் தளர விட்டு விட்டது படம். கடைசி பகுதியில் சற்று ஒன்ற வைக்கிறது. ஆனால் விட்டது விழலாகி விட்டது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
கப்ஸா ( கன்னடம் / தமிழ் )
விடுதலைப் போராட்ட வீரரின் மகன் நிழல் உலக் தாதாவாகும் கதை! சுவையான திருப்பங்கள் இந்தப் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன! –ஷ்ரேயா சரனின் மதுமதி பாத்திரம் உணர்வுகளை உள்ளடக்கியதாக இருப்பது ஈர்க்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா!
கேஜிஎஃப்பை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனை – இண்டியன் எக்ஸ்பிரஸ்!
சில திருப்பங்கள் ரசிக்க வைக்கின்றன. மதிப்பெண் எழுபது விழுக்காடு -இந்தியா டைம்ஸ்!
ஆகஸ்டு 16 1947
சுவையற்ற திரைக்கதை படத்தைக் கொன்று விடுகிறது! யாராவது இயக்குனருக்கு சொல்லியிருக்கலாம்..எழுதியதை எல்லாம் எடுக்க வேண்டியதில்லை! எடுத்ததை எல்லாம் காட்ட வேண்டியதில்லை என்று! பொன்.குமாருக்கு யாராவது சினிமா எப்படி எடுக்கப்பட வேண்டும் என்றுகற்றுக் கொடுக்க வேண்டும்! – தி ஹிந்து.
சுதந்திர காலத்து உடைகள், வீடுகள், கிராமத் தெருக்கள் என்று அசத்தியிருக்கிறது கலை இயக்கம். கௌதம் கார்த்திக் ஓரளவு நடிக்கிறார். புதுமுகம் ரேவதி இன்னொரு மண் வாசனை. காட்சிகளை இழுத்துப் பிடிக்காமல் இழுவையாக ஆக்கியது பெரும் குறை. மையக் கரு புதுமை. அது மட்டும் தான்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
மக்களுக்குப் புரியாதோ எனும் பயத்தில் விளக்கவுரைகளாக காட்சிகளை எடுத்ததில் இப்படத்தைக் கெடுத்து விட்டது – இந்தியன் எக்ஸ்பிரஸ்.
தஸரா ( தெலுங்கு/ தமிழ் )
கீர்த்தி சுரேஷ் ஒப்புக் கொள்ளும் படங்கள் சமீபமாக நல்ல கதைகளைக் கொண்டதாக இருப்பது ஆறுதல். இதிலும் செமை காட்டு காட்டி இருக்கிறார் நடிப்பில்! முரட்டுத் தனமான நட்பு என்பது திரைக்கு புதுசு! நானி அருமையாக நடித்திருக்கிறார்! கண்ணுக்கு அழகாக படமாக்கப்பட்ட படம். அடுத்து என்ன எனும் ஆர்வத்தைத் தூண்டும் காட்சி அமைப்புகள்! இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா தாக்குப் பிடிப்பார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா!
நல்ல வேகத்தில் போய் சமயத்தில் தடம் புரளும் படம் – இந்தியன் எக்ஸ்பிரஸ்!
சாதி அரசியலை கையிலெடுத்து அருமையான பங்களிப்பை நானி, கீர்த்தி சுரேஷிடம் வாங்கிய இயக்குனருக்கு பாராட்டுக்கள் – தி ஹிந்து!
சாகுந்தலம் ( தமிழ் / தெலுங்கு)
நோய் வாய்ப்பட்டு ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்த சமந்தா ரூத் பிரபு நடித்த படம்! சிறந்த சினிமா அனுபவம். ஆனால் சொன்ன விதம் சற்று காலை வாரி விடுகிறது! சாகுந்தலத்தின் பார்வையாள அனுபவம், திரை அரங்குகளில் பார்க்கும்போது சிறப்பாக இருக்கும்! பிரம்மாண்ட ஜோடனைகள், தீராத விழி விரியும் போர்க் காட்சிகள்; சிறப்பான உடை அலங்காரங்கள்; இவை எல்லாம் சேர்ந்து ரசிகனை ஒரு மாயா உலகத்திற்கு இட்டுச் செல்லும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா!
சமந்தா ரூத் பிரபு சகுந்தலையாக நெருங்கி வருகிறார். படம் அவரைத் தாண்டி சராசரிக்கும் கீழே இருந்து, ரசிகனை பாதாளத்திற்கு இழுத்து விடுகிறது! திரைக்கதையோ, வி எஃப் எக்ஸோ, முப்பரிமாணமோ இதற்கான முதன்மைக் காரணங்கள்! இயக்குனர் குணசேகருக்கு ஆசை இருக்கும் அளவுக்கு வித்தை இல்லை! அசகாய சூரர்களின் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் தமிழ் ரசிகர்கள் இதையும் பார்ப்பார்கள் எனும் அசட்டு தைரியத்தில் எடுத்து காட்சிகளில் பிரம்மாண்டம்! கதையில் கோட்டை என்று ஆகி விட்டது!-தி ஹிந்து
எதுவுமே சரியில்லை சமந்தாவைத் தவிர – ஹிந்துஸ்தான் டைம்ஸ்!
அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்த்தா பரதனாக கட்டக் கடைசியில் வரும் காட்சிகள் மட்டும் ஜுவாலையாக புறப்பட்டு நம்மை இழுக்கின்றன! – இண்டியன் எக்ஸ்பிரஸ்!
யாத்திசை
பெரும் பொருட் செலவு வேண்டாம். நட்சத்திர பங்களிப்பு வேண்டாம். துவளாத இறுக்கமான திரைக்கதையும் காட்சிகளும் போதும்! ஒரு நல்ல சரித்திரப் படத்தை எடுக்க என்று நிரூபித்திருக்கிறது யாத்திசை! ரணதீர பாண்டியனை எதிர்த்து போராடும் எய்னார் குல வீரன் கோத்தியின் பயணம் தான் கதை. சேயோன் மிரட்டுகிறார் கோத்தியாக! இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வ காட்சிகளும், பாண்டிய எய்னார் போர் காட்சிகளும் இருந்திருந்தால் வேறு தளத்திற்குப் போயிருக்கும் படம். ஆனாலும் எடுத்த வரையில் சரித்திரப் பட ரசிகர்களுக்கு இது தெவிட்டாத தினை மாவும் தேனும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா!
சொல்ல வந்ததை சமரசம் இல்லாமல் சொல்லியே தீர வேண்டும் எனும் உறுதியுடன் செயல் பட்டிருக்கிறது யாத்திசை குழு! சில இடங்களில் மணிரத்திரனத்தின் நளினத்தையும் அழகியலையும் இழக்கிறது என்றாலும், தன் பலத்தில் உயரப் பறக்கிறது தரணி ராசேந்திரனின் இயக்கக் கொடி! தரையில் கால்களை வைத்து படமெடுக்கும் யதார்த்த சினிமாவுக்கு இன்னொரு வரவாக வந்திருக்கிறது இந்தக் குழு! – தி ஹிந்து!
ஒரு அரசனின் அழுக்குப் பக்கங்களை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டியிருக்கிறது யாத்திசை! சக்ரவர்த்தியின் இசைக் கோர்வை, மென் துடிப்புகளை மீட்டாமல், பட்டவர்த்தனமாக இருப்பது ஒரு குறை. அது பல சமயங்களில் படத்தை கை நழுவ விட்டு விடுகிறது. – சினிமா எக்ஸ்பிரஸ்!
தெய்வ மச்சான்
ரசிக்கக் கூடிய படம். பார்த்து முடித்தபின் புன்னகை முகங்களில் இருந்து அகலாது! பல படங்கள், பாசமலர் தொட்டு அண்ணன் தங்கை பாசத்தை தழுவினாலும், இதில் சேர்க்கப்பட்டிருக்கும் நகைச்சுவை வேற லெவல்! தபால் கார்த்தி ( விமல்) தங்கைக்கு ( அனிதா சம்பத்) மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஏற்படும் சங்கடங்கள் தான் கதை! ஒரு வழியாக மாப்பிள்ளை கிடைத்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் கனவில் வரும் ராட்சச குதிரை வீரனின் எச்சரிக்கையால் மனம் துவளும் கார்த்தி என்ன செய்தான் என்பது க்ளைமேக்ஸ்!
ஒரு பாசக்கதையை எப்படிச் சொல்ல வேண்டும் என்று இயக்குனர் மார்ட்டினுக்கு தெரிந்திருக்கிறது. முதல் பாதியின் வறட்சியை பின் பாதியில் பால சரவணனுடன், விமல் சேரும் காட்சிகளில் நகைச்சுவையை அள்ளித் தெளித்து ஈடு கட்டி இருக்கிறார். சபாஷ்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
எல்லாம் சரி!ஆனால் இருக்கும் தருணங்களை நகைச்சுவை வீணையால் மீட்டத் தவறி விட்டார் இயக்குனர். கல்யாண விருந்தாக மாறியிருக்க வேண்டியது கையேந்தி பவனாக மாறி விட்டது! – சினிமா எக்ஸ்பிரஸ்.
யானை முகத்தான்
இயக்குனர் ரெஜிஷ்ஷின் படம் ஒரு மாஸ்டர் பீஸ்! அதன் பலங்கள் கனமான வசனங்களும், நல்ல உணர்வுகளும்! பழைய படங்களான அறை எண் 305ல் கடவுள், வினோதய சித்தம் போன்றவைகளை நினைவுக்கு கொண்டு வந்தாலும், விழிகளை திரையை விட்டு அகலா வண்ணம் இட்டுச் செல்லும் திரைக்கதை சூப்பர்! ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி என்று மூவரும் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள். இசையில் தவழும் மெலடிகள் உயர்த்துகின்றன இப்படத்தை! -டைம்ஸ்!
உயர்ந்த லட்சியங்களோடு எடுக்கப்பட்ட படம், பாதி கிணறு தான் தாண்டி இருக்கிறது! ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருக்கிறார் எனும் தத்துவம் சரிதான்! ரசிகனுக்குள் ரசனை இருக்கிறது என்று யோசிக்கத் தவறி விட்டார்கள்! -சினிமா எக்ஸ்பிரஸ்.
இறைவனின் முகவரி சொல்லும் யானை முகத்தான்- தினமணி!
தமிழரசன்
கதை எழுதும்போதே இது கைவிடப்பட்ட, ஒரு மருத்துவ அதிசயம் நேராமல் பிழைக்காத நோயாளி என்று தெரிந்திருக்க வேண்டும் இயக்குனர் பாபு யோகேஸ்வரனுக்கு! படமாக எடுத்து எவ்வளவு பிராண வாயு கொடுத்தாலும் பலனில்லாமல் உயிரை விட்டு விடுகிறது. எண்ணற்ற கதாபாத்திரங்கள்! அதில் நடித்த விஜய் ஆன்டனியோ, சங்கீதாவோ, சுரேஷ் கோபியோ கொடுத்த பாத்திரத்தில் உயிரைக் கொடுத்து நடித்தாலும், படம் மரணித்துப் போவதை தடுக்க முடியவில்லை. யோகி பாபு இந்தப் படத்தில் தேவையில்லை. அவரை ஒட்டாவிட்டால் கூட ஒட்ட வைத்தால் படம் ஓடும் எனும் மூட நம்பிக்கை, இதில் வெளிறிப் போய் விட்டது. பாதி படம் வரை பாத்திர அறிமுகத்தில் செலவிட்டு விட்டு தரையிறங்கிய விமானம் போல அங்கேயே நிற்கிறது படம். காசை வீணாக்க வேண்டாம் வேறு ஒரு நல்ல படத்தை இரண்டாம் முறை பாருங்கள் – ஃபிலிம் கிராஃப்ட் அருண்!
எந்த வித ஆய்வும் செய்யாமல், அநியாயமாக சம்பாதிக்கும் மருத்துவமனையின் முதன்மை மருத்துவரைக் கடத்தினால் போதும் எனும் அசட்டு நம்பிக்கையில் எடுக்கப்பட்ட படம். ஊசி மருந்து உள்ளே சொட்டு சொட்டாகப் போவது போல அலுப்பை விதைக்கிறது படம்!– டைம்ஸ் ஆஃப் இந்தியா.
விஜய் ஆன்டனிதான் இதயம். ஆனால் மற்ற அவயங்கள் செயல்படவே இல்லை! குட்டை குழப்பலாக தமிழரசன். -சினிமா எக்ஸ்பிரஸ்.
புர்க்கா
மணமான ஒரு வாரத்தில் விதவையாகும் நஜ்மாவைத் தேடி வரும் அன்னிய இளைஞன் சூர்யா! செவிலியாக தன் கடமையைச் செய்ய, கலவரத்தில் கத்திக் குத்து பட்ட அவனுக்கு சிகிச்சை அளிக்கப் போக, அவர்களுக்குள் நடக்கும் உரையாடலில், இஸ்லாமிய கொடிய விதிமுறைகள் பேசு பொருளாகி, இறுதியில் நஜ்மா தன் துக்க தருணங்களைக் குறைத்து, தன் கனவை நோக்கி பயணப்பட்டாளா என்பது முடிச்சு!
கலையரசன் சூர்யாவாகவும் மிர்னா மேனன் நஜ்மாவாகவும் நடிப்பில் தங்கம் வென்றிருக்கிறார்கள். ஆச்சர்யமில்லை! இது நியூ யார்க் திரைப்படப் போட்டியில் பரிசு வென்ற படம். ஆஹா ஓடிடி தளத்தில் இந்த மாதம் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறது.
பொன்னியின் செல்வன் 2
எந்த ஒரு நடிகரின் ரசிகரும் குறை சொல்ல முடியாதபடி அனைவருக்கும் வெட்டி தைக்கப்பட்ட சட்டை போலப் பாத்திரங்கள். அதில் பொருந்திப் போகும் கலைஞர்கள். இது மணிரத்தினத்தின் டச்!
ஆனாலும் சீயான் விக்ரம், தன் உழைப்பை பளிச்சிட வைக்கிறார் நடிப்பில். மகா கலைஞன் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். அடுத்து ஒரு பார்வையில் வன்மத்தை காட்டியிருக்கும் நந்தினி ஐஸ்வர்யா ராய். இன்னும் நாயக அந்தஸ்த்திற்கு உயர்ந்திருக்கும் இசைப்புயலின் ‘அகநக’ தெறிக்க விடுகிறது. முதல் பாகத்தை விட ஈர்ப்பு அதிகம், கதையை படித்தாலும் படிக்காவிட்டாலும்! ஒரு குறை! ரகுமான் எனும் நடிகரை சொந்தக் குரலில் பேச விட்டிருக்கலாம். மாற்று கட்டைக் குரல் ஒட்டவேயில்லை! -ஃபில்மி கிராஃப்ட் அருண்!
முதல் பாகத்தில் ஆயத்தங்களைக் காட்டி விட்டு கதையின் இதயத்தைத் துளைத்திருக்கிறார் மணிரத்தினம். வந்தியத்தேவன் குந்தவை காதல் காட்சிகள் நெல்லை அல்வா! பின்புலத்தில் ஒலிக்கும் பாடலும் இசையும் நெய் முந்திரி! கரிகாலன் நந்தினி காட்சிகள் விக்ரம் ஐஸ்வர்யா அருகு காட்சிகள், இன்னமும் ரவிவர்மனால் வேறு தளத்திற்கு இட்டுச் செல்கின்றன. போதும் சொந்தக் கதை என்று நடுவில் ஒரு போர் காட்சியை பரபரப்புக்காக இணைத்திருக்கிறார் மணி! நாவலைப் போலவே ஈரத்துணி தான் க்ளைமேக்ஸ்! அதிலும் கொஞ்சம் மொடமொடப்பை விதைக்க முயன்றிருக்கிறார்கள் மணி, ஜெயமோகன், குமரவேல் கூட்டணியர்! மூன்றரை நட்சத்திர மதிப்பீடு ( 70 விழுக்காடு) கொடுத்திருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா!
நாவலைப் படித்தவர்களுக்கு சற்று ஏமாற்றம் வரலாம். ஆனால் சினிமா எனும் ஊடகத்தைப் புரிந்து வைத்திருக்கும் மணிரத்தினம், திரையில் இதெல்லாம் எடுபடாது என்பதை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார். அதனால் எதை எப்படிக் காட்ட வேண்டும் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது.
உண்மைக்கு நெருக்கமான காட்சிகளை வைத்த வகையில் பொ செ 2 இந்த நூற்றாண்டின் சரியான சரித்திர படமாக மாறும் வாய்ப்பு உள்ளது. கிரீன் மேட் காட்சிகளை நாடாமல் அச்சு அசல் சோழ தேசம் போல நம்ப வைக்கும் களங்களைத் தேடிப் படம் பிடித்தது இயக்குனரின் நேர்மையைக் காட்டுகிறது. ஒரு வினாடி கூட தொய்வில்லாத திரைக்கதை வெற்றிப் பதாகையை உயர்த்திப் பிடித்திருக்கிறது – இந்தியன் எக்ஸ்பிரஸ்.
பாகுபலியை விட சிறந்த படம் – இண்டியா டுடே.
பாகம் ஒன்றை விட இன்னும் கச்சிதமாக பரபரப்பாக இருக்கிறது பொ செ 2. நேர்க்கோட்டில் பயணிக்கு இந்த பாகம் இன்னும் சரியான புரிதலைக் கொடுக்கிறது! ரவிவர்மனின் ஓளிப்பதிவு அழகியலை திகட்டும் அளவிற்கு ஊட்டுகிறது! – என் டி டிவி.