(இந்தப் படத்துக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்மந்தம் என்பது படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்)
நீதிபதி ராமானுஜம், ஒரு பெறு மூச்சுடன் தன்னை சுற்றி அலமாரிகளில அடுக்கி வைத்திருந்த சட்ட புத்தகங்களை பார்க்கிறார். அவருக்கு தெரியும் அவைகளால் உதவ முடியாது என்று. அவருடைய பிரச்சனை என்ன என்று தெரிவதற்கு முன் சற்று அவரைப் பற்றி பார்ப்போம்.
வழக்கறிஞர்கள் குடும்பத்தில் பிறந்து தன் தந்தையின் அடிச்சுவட்டில் நீதிபதிகள் மதிக்கும் மூத்த வழக்கறிஞர் ஆக உயர் நீதி மன்றத்தில் வாதிட்டுக் கொண்டு இருந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக வழக்கறிஞர்கள் மதிக்கும் நீதிபதியாக தீர்ப்புகள் வழங்கிக் கொண்டு இருக்கிறார். பலரால் பேசப்படும் சில வழக்குகளில் இவரது தீர்ப்பை கேட்பதற்கென்றே இவர் அமரும் ஐந்தாம் எண் அறையில் வக்கீல்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதில் தங்கள் வழக்குகளில் வாய்தா வாங்காமல் கோட்டை விட்ட வக்கீல்களும் அடங்குவர். கோர்ட் பியூன் சயலன்ஸ் என்று கூவாமலேயே கோர்ட் நிசப்தமாக இருக்கும். அந்த நிசப்தமே பக்கத்து அறைகளில் சத்தமாக பேசப்படும்.
அப்படிப்பட்ட நல்ல மனிதருக்கு பிரச்சனை என்றால் நாம் கூட உதவலாமே என நீங்கள் எண்ணினால் அது தவறு. அவர் சொந்த பிரச்சனைகளை சுமந்து கொண்டு கோர்ட்டுக்கு வர மாட்டார்..
வீட்டிற்குபோகும் பொழுது காய்கறி வாங்கிச் சுமந்து செல்வதை பல வக்கீல்கள் பார்த்திருக்கிறார்கள்.
ஏன், போன வாரம் டிரைவர் வரவில்லை. புதிதாக உயர்நீதி மன்றம் வரை வரும் மெட்ரோ ரயிலில் இறங்கி வருகிறார்.
உங்களுக்கு ஞாபகமிருக்கும், பிரபலமான ஒரு வழக்கில் திருக்குறளை மேற்கோள்கள் காட்டி தீர்ப்பு வழங்கினார் ஒரு நீதிபதி. அதன்காரணமாய் சில காலம் வீட்டில் கரண்ட், தண்ணீர் இல்லாமல் தலைப்பாகையை தலைக்கு வைத்து வராந்தாவில் தூங்கினார். சுபாவத்தில் அவரும் இவரும் அண்ணன் தம்பி மாதிரி.
நீதிபதி ராமானுஜம் சற்று கண்களை மூடுகிறார் யோசிப்பதற்காக. அதைப் பார்த்து அவரது பியூன் சற்று கண்களை மூடுகிறார் உண்ட மயக்கத்தில்.
கடந்த மூன்று நாட்களாக ஒரு வழக்கில் நடந்து வரும் வாதப் பிரதிவாதங்களை அவர் மனது அசை போடுகிறது.
ஓ. அதுதான் அவர் பிரச்சனையா? என்ன வழக்கு என்று பார்ப்போம்.
ஈரோடு அருகே அமைதியான, அழகான ஒரு சிறு கிராமம். கந்தசாமி கவுண்டர் குடிசையை விட சற்று பெரிதான வீட்டில் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் அளவான தேவைகளுடன் நிம்மதியான வாழ்க்கை. ஐயன் வாழ்ந்த வீட்டை தன் தம்பிக்கு விட்டு கொடுத்து விட்டார். பெரிய மகளை பள்ளியோடு நிறுத்தி விட்டார். நல்ல பையனா பார்க்கவேண்டும். இரண்டாவது பெண் எட்டாம் வகுப்பு.
சற்று தள்ளி சின்னத்தம்பி கவுண்டர் வீடு. அவருக்கு குழந்தைகள் இல்லை. மற்றபடி அதே செட்அப்தான். ஏனெனில் இருவரும் அண்ணன் தம்பிகள். தங்கள் ஐயனுக்கு வந்த எட்டு ஏக்கர் நிலத்தை இரண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னால் பிரித்துக்கொண்டார்கள்.
ஒரே வாய்க்கால்.
பவானி ஆற்றிலிருந்து தேவையான தண்ணீர், ஐயனிடம் கற்ற உழைப்புடன் சேர்ந்ததால் இருவருக்கும் பெரிய குறையொன்றும் இல்லை. அதன் பின் ரொம்ப ஒட்டுதலோ உறவோ இல்லை. பகையும் இல்லை. இருவரும் ஒன்றாய் ஓடி ஆடிய பூமிதான் அது.
ஆனால் இப்ப ஒருத்தர் நிலத்துல அடுத்தவர் மிதிச்சு போறதுக்கே ஆயிரம் யோசனை. ஒரு நாள் கருக்கல், வெள்ளி முலைக்கும் சமயம் கந்தசாமி கவுண்டர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருக்கிறார். எதிரே சின்ன தம்பி கவுண்டர் தனக்கு வரவேண்டிய தண்ணீரை திருப்பி விட்டதாக சண்டை போடுகிறார்.
சண்டை முற்றுகிறது. அண்ணனை லேசாகத்தான் தோளில் கை வைத்து தள்ளினார். கந்தசாமி கவுண்டர் சற்று தடுமாறி விழுந்தார்.
கீழே இருந்த மண்வெட்டி தலையை பதம் பார்த்து ரத்த வெள்ளம். அவரது குடும்பம் அநாதையானது.
பாவம் சின்ன தம்பி கவுண்டரும் எதிர்பார்க்கவில்லை. அண்ணன் மீது மனதுக்குள் அதிகப் பாசம் வைத்திருந்தார். ஆடிப்போய் விட்டார்.போலீசிடமும், கோர்ட்டிலும் தானே அண்ணனை கொன்று விட்டதாக தலையில் அடித்து சத்தியம் செய்தார்.
செஷன்ஸ் கோர்ட்டில் தூக்கு தண்டனை ரிவிஷன் பெட்டிஷனில் பத்து ஆண்டு தண்டனையாக மாறி இப்பொழுது உயர் நீதி மன்றத்திற்கு வந்துள்ளது.
மூன்று நாட்களாக நடந்த விவாதத்தில் அரசு தரப்பு வக்கீல் தரணீதரன் இது ஒரு திட்டமிட்ட கொலை. அரிதில், அரிதான (rarest of rare cases) வழக்காக கருதி I P C Sec 302ல் அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க கேட்டு கொண்டுள்ளார்.
வாதிக்காக வாதாடிய வழக்கறிஞர் சபரி ஸ்ரீராம் (சட்டம் படித்த என் பையன் தாங்க. ஒவ்வொருவர் பையனுக்காக சினிமாவே எடுக்குறாங்க, நான் கதையில் கொண்டு வரக் கூடாதா)
மிக அறிவு பூர்வமாக வாதாடினார். இது திட்ட மிட்ட கொலையல்ல இ பி கோ பிரிவு 299 ல் ஒரு குற்றமற்ற கொலையே (culpable homicide- not amounting to murder) எனவும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டியும் தன் வாதத்தை முடித்து இருக்கிறார்.
நம் நீதிபதிக்கு நாளை வழங்கப் போகும் தீர்ப்பில் அது ஒரு பிரச்சனையே இல்லை. அவரால் ஊகிக்க முடியாத உண்மை இல்லை, அவருக்கு தெரியாத சட்டமும் இல்லை.
அவரது நினைவுகள் அனைத்தும் நாம் இதுவரை அதிகம் பேசாத கந்தசாமி கவுண்டரின் குடும்பத்தையே சுற்றி சற்றி வந்தன.
ஒரு தீர்மானத்துடன் தீர்ப்பை எழுதுகிறார்.
அடுத்த நாள் காலை. பக்கத்து அறைகள் கூட அமைதியாக உள்ளன.
கட்டை பிரித்து தீர்ப்பின் இறுதி பாராவை படிக்கிறார். நீங்களும் கேளுங்கள்.
அவர் வழங்கிய தீர்ப்பு இன்று வரை பேசப்படுகிறது.
“கந்தசாமி கவுண்டர் தன் தம்பி சின்ன தம்பி கவுண்டரால் கொலை செய்யப்பட்டுள்ளார். இது ஒரு தற் செயலான கொலை.
அண்ணனின் குடும்பம் அநாதை ஆயிற்று. நான் கீழ் கோர்ட்டில் கொடுத்த பத்து வருட சிறை தண்டனையை உறுதி செய்கிறேன்.
ஆனால் குற்றவாளி தண்டனையை கழிக்க வேண்டிய இடம் சிறைச்சாலை இல்லை. குற்றவாளியை சிறைக்கு அனுப்பினால் இரண்டு குடும்பங்கள் பாதுகாப்பற்று போய்விடும்.
அவர் தனது ஊரில் தன் அண்ணன் நிலத்தையும் சேர்த்து விவசாயம் செய்து அவர்கள் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும். இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் மணம் முடித்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு கணக்கை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்குகிறேன்.”
தீர்ப்பை கேட்டவுடன் கோர்ட்டில் தம்மை மறந்து அனைவரும் கைதட்டினர் மகிழ்ச்சியுடன்.
அரசு வக்கீலுக்கு மட்டும் சற்று சந்தேகம். சட்டப்புத்தகத்தில் தேடிக்கொண்டு இருக்கிறார் நீதிபதிக்கு சட்டத்தில் உள்ள அதிகாரத்தை.