குவிகம் இலக்கிய விநாடி வினா
தேர்வுச்சுற்று முடிவுகள்
ஜனவரி பத்தாம் தேதி வரை நடந்த முதல் சுற்றில் முதல் 12 இடங்களைப் பிடித்தவர்களில் இறுதிச் சுற்றுக்கு வருவதாக ஒப்புக் கொண்டவர்கள்!
1. அனிதா
2. RK ராமநாதன்
3. துரைசாமி தனபாலன்
4. சிவராஜ்குமார்
5. ராய செல்லப்பா
6. அழகியசிங்கர்
கொரானா காலத்தில் அவர்கள் அவர்கள் வீட்டிலிருந்தே எடுக்கப்பட்ட குறும் நகைச்சுவைப் படம்.
காத்தாடி சார் வழக்கம்போல கலக்குகிறார் !
கொரோனோ வைரஸால் உருவாகியுள்ள நோய்க்கு ‘கோவிட்-19’ என பெயர் அறிவிப்பு
இந்த ஆட்கொல்லி வைரஸ் எப்படிப் பரவுகிறது, அதிலிருந்து எப்படிக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது. தெரிந்து கொள்வோம்.
இப்படி ஒரு வைரஸ் அந்த வூஹானில் நகரில் வருவதாகக் கற்பனை செய்து எழுதியிருக்கிறார் ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவர் டீன் கூனட்ஸ். புத்தகத்தின் பெயர் இருட்டின் கண்கள் ( The eyes of darkness)
நாவலில் வூஹானில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ராணுவ ஆய்வகம், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்த புதிய வைரஸ் தயாரிப்பு ஒன்றில் ஈடுபடுவதாகவும், இறுதியாக கொடூர வைரஸ் ஒன்று உருவாக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாவலில் இந்த வைரஸுக்கு இடப்பட்ட பெயர் வூஹான் – 400 என்பதாகும்.
நேற்று இலக்கிய சிந்தனை மற்றும் குவிகம் இலக்கியவாசல் இணைந்து நடத்திய கூட்டம், சீனிவாசகாந்தி நிலையத்தில்.
ஓவியர் அமுதன் இலக்கியசிந்தனையின் பேச்சாளர்.
இவர் கண்ணதாசனுடன் பணி ஆற்றியவர். இந்த வகையில் கவிஞர் பற்றி நாம் அறிந்திராத பல நிகழ்ச்சிகளைக் கூறினார்.
இவரின் கூற்றின்படி காற்றுமண்டலம், புகைமண்டலம் போல்.. எண்ணங்களுக்கும் ஓர் மண்டலம் உண்டு. அதனால்தான் நாம் நம் கை கொண்டுதான் வரைகிறோம். ஆனாலும் அந்த ஸ்ட்ரோக் வந்து விழுந்தது என்று கூறுகிறோம். அதேபோல் பாட்டில் அந்த வரி வந்து விழுந்தது என்றும் சொல்கிறோம். நம் எண்ணத்தில் உதித்த வார்த்தைகளை எங்கிருந்தோ வந்து விழுந்தது என்று ஏன் கூறுகிறோம்…. அது இந்த எண்ண மண்டலம்தான். இங்கே சுழலுகின்ற எண்ணங்கள் எல்லோர் மீதும் விழுவதில்லை. யார் அதற்க்குத் தகுதி ஆனவரோ அவருக்கே இது பிராப்தம்.
அப்போது தகுதி என்பது எப்படி அளந்து பார்ப்பது? நம் sincerity அந்த தகுதி. எவ்வளவுக்கெவ்வளவு செய்யும் வேலையை நாம் நம் முழு மனதுடன் செய்கிறோமோ…. அப்போது இந்த அற்புத எண்ணங்கள் தானாகவே வந்து விழும்.
இதற்க்கு கண்ணதாசனை ஓர் உதாரணமாகச் சொன்னார்.
நாம் அனைவர் கேட்டு ரசித்த பாடல்….அவள் ஒரு நவரச நாடகம்….படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த பாடல் எழுதப்பட்டபோது, கவிஞரும் திரு MSVஅவர்களும் பாடல் கம்போஸிங்கில் இருந்தனர். சாதாரணமாக திரைப்படப் பாடலுக்குப் பன்னிரெண்டு வரியில் பாடல் இருந்தால் போதுமானது. இந்தப் பாடல் எழுதப்படுவதற்கு முன்பே கவிஞரிடம் ஓர் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அந்தப் பாடல், ‘காலங்களில் அவள் வசந்தம்போல்’ ஒர் all time memory hit பாடல் போல் இருக்கவேண்டும் என்று.இதை மனதில் வைத்துக்கொண்டு, கவிஞர் பாடல் வரிகள் சொல்லத் தொடங்கினார். இருபது,முப்பது,நாப்பது…..வரிகள் சொல்லிக்கொண்டே போனார். MSV அவர்களும்…..அண்ணே… பன்னிரெண்டு வரிகள் போதும். இவ்வளவு வரிகள் சொல்லுகிறீர்கள்? போதும்….
கண்ணதாசன் நிறுத்தவில்லை….
இல்லை என் மனதில் இன்னும் அந்த வரிகள் வந்து விழவில்லை….அது வரை நான் நிறுத்தமாட்டேன் ..
கடைசியாக அந்த வரிகள் வந்து விழுந்தன…
அவை….
தழுவிடும் இனங்களில் மான் இனம்….
தமிழும் அவளும் ஓர் இனம்…..
நிறைய வரிகள் கொடுத்துவிட்டேன். நீ எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் …. கடைசியாக சொன்ன இரு வரிகள் நிச்சயம் இருக்கவேண்டும்….
பதினந்து வரிகள் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு போயிருக்கலாம்….
ஆனால்…செய்யவில்லை…
இது sincerity … dedication.
அவருக்கு வார்த்தைகள் வந்து விழுந்தது…
ஆமாம்….
இந்த வார்த்தை மண்டலம் போல்….
கற்கள் மணடலம் ஒன்று இருக்காதுதானே….
(நன்றி : லதா ரகு )
குவிகம் இலக்கிய வாசல் சார்பாக திருமதி சரஸ்வதி “இளைஞர் விரும்பும் இலக்கியம்’ என்பதுபற்றி அழகாகப் பேசினார்.
சுரேஷ் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிது முடிந்தது.
வருகிற மார்ச் 25ந்தேதி நடைபெறும் குவிகம் இலக்கியவாசல் நிகழ்வு, நமது 24 வது நிகழ்வாகும்.
இரண்டு வருடங்களாக இலக்கியக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருவது பெரிய சாதனை இல்லை என்றாலும் மனதுக்கு மகிழ்வைக் கொடுத்துவந்த நிகழ்ச்சித் தொகுப்பாக உள்ளது.
நாம் கடந்து வந்த பாதை : நிகழ்வைப் பற்றிய முழு விவரம் அறிய கோடிட்டவற்றைக் கிளிக்குங்கள் :
குவிகம் இலக்கியவாசலின் நிகழ்வில் உலகத் தரம் வாய்ந்த தமிழ் ஓவிய இலக்கியர் அல்லது இலக்கிய ஓவியர் திரு இந்திரன் அவர்கள் “நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் !
அவர் நிகழ்த்திய உரையின் காணொளி உங்கள் பார்வைக்கு !
(நன்றி : திரு: விஜயன்)
இணையத்தில் கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா
குவிகம் இலக்கிய வாசலின்
கோமலின் சுபமங்களா இதழ்களை இணையதளத்தில் வெளியிடும் விழா 15 அக்டோபர் மாலை மயிலாப்பூர் P S பள்ளி விவேகானந்தா அரங்கத்தில் நடைபெற்றது.
கதை படித்தவர் : திரு என் ஸ்ரீதரன் கவிதை படித்தவர் : கணபதி சுப்ரமணியன்
20-ஆக்ஸ்ட்-2016 அன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தேறிய நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் “சமீபத்தில் வாசித்த புத்தகங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
திரு சுந்தரராஜனின் வரவேற்புரையைத் தொடர்ந்து
திருமதி லதா ரகுநாதன் தனது “சட்டென்று மலர்ந்த பவழமல்லிகை” சிறுகதையை வாசித்தார்.
இம்மாதக் கவிதை “நேரமில்லை” வாசித்து மகிழ்வித்தவர் திரு GB சதுர்புஜன்
ஒன்றரை மணி நேரம் மடை திறந்த வெள்ளமாய் “சமீபத்தில் படித்த புத்தககங்கள்” குறித்து திரு. எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.
உரையில் அவர் குறிப்பிட்ட புத்தகங்கள்:-.
பார்வையாளர்களின் கேள்விகளுக்கு
எஸ் ரா வின் பதில்களுக்குப் பிறகு கிருபாநந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
எஸ் ரா அவர்களின் உரையை ஸ்ருதி டி வி அழகாக வெளியிட்டுள்ளது. அதன் வீடியோ வடிவத்தை இங்கே பார்க்கலாம்
சென்ற மாத இலக்கியவாசலின் “கதைகேளு கதைகேளு ” என்ற நிகழ்வு மிக அருமையாக அமைந்தது. போன வருடம் இதே ஜூலையில் சிறுகதைச் சிறுவிழா என்ற பெயரில் கதைகளைப் படிக்க வைத்தோம். இந்த முறை அதற்கு மாறுதலாக கதைகளைச் சொல்ல வைத்தோம்.
கதை சொல்வதைத் தொழிலாகக் கொண்ட சில கதை சொல்லிகளையும் அழைத்திருந்தோம். அவற்றுள் ஒருவர்தான் வர முடிந்தது (திருமதி கீதா கைலாசம் அவர்கள்) . அந்தத் தொழில் வித்தகரிடமிருந்து அனைவரும் நிறைய கற்றுக் கொண்டோம்.
வந்திருந்த அனைவரும் கதையை மேடையில் சொல்வது இது தான் முதல் முயற்சி என்று சொன்னாலும் அனைவரும் சிறப்பாகச் செய்தார்கள். அதிலும் குறிப்பாகச் சதுர்புஜன் அவர்கள் தேர்ந்தெடுத்த கதையும் சொன்ன விதமும் எல்லோரையும் கவர்ந்தது.
அவரது வீடியோவை நீங்களே பாருங்கள் – கதையைக் கேளுங்கள் !
பிரபல கதை சொல்லி திருமதி கீதா கைலாசம் அவர்களின் கதையையும் கேட்டு மகிழுங்கள்.
திரு மாதேவன் என்ற இளைஞர் (இவர் வந்ததால் இலக்கியவாசல் வாசகர்களின் சராசரி வயது வெகுவாகக் குறைந்தது) சொல்லிய கதையையும் அதைத் தொடர்ந்து அவர் எழுப்பிய கேள்வியும் அதற்கான பதிலையும் கேளுங்கள்!
இந்த வீடியோக்களுடன் மற்ற கதை சொல்லிகளின் கதைகளையும் கேட்க/பார்க்க http://ilakkiyavaasal.blogspot.in/p/blog-page.html என்ற வலைப்பூவிற்குச் செல்லுங்கள்!
குவிகம் இலக்கிய வாசலின் 2016 ஜூன் மாத நிகழ்வான “வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்” 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை எலியட்ஸ் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் புதுமையான ‘ஸ்பேசஸ்’ அரங்கில் சிறப்பாக நடந்தேறியது.
சுந்தரராஜன் குவிகம் அமைப்பைப்பற்றியும் இந்நிகழ்வின் நோக்கம் பற்றியும் கூறி அனைவரையும் வரவேற்று நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.
வேணுகோபால் அவர்கள் வாசித்த “தர்பன சுந்தரி’ எல்லோரையும் நெகிழச்செய்த கதையாக அமைந்தது !.
பேராசிரியர் சிந்தாமணியின் கவிதைகள் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தன.
இணையம் பற்றியும் சிற்றலை வானொலிபற்றியும் பல தகவல்களுடன் ஜெய்சக்திவேல் தனது கருத்துக்களைக் கூற கலந்துரையாடல் தொடங்கியது.வானொலி பற்றி விரிவாகப் பேசிய இவர் குறிப்பிட்ட தளங்கள் சர்வ தேச வானொலி மற்றும் பிராஜக்ட் மதுரை.
தாரிணி கணேஷ், கோமல் சாமிநாதன் அவர்களின் இலக்கிய இதழ் “சுபமங்களா” வெளியிட்ட படைப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படிருந்ததாகவும் இப்போது தளம் செயல்படுகிறதா என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.
கலந்துரையாடல் நிகழ்வில் பெரும்பாலானோர் கலந்துகொண்டது மிகுந்த நிறைவைத் தந்தது.
புத்தகமா இ- புத்தகமா ? என்ற கேள்வி எழுந்தாலும் அச்சடிக்கப்பட்டவையும் இணையத்தில் கிடைப்பவையும் இரண்டுமே இன்றைய சூழ்நிலையில் தேவையே என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது .
இறுதியாகப் பேசிய கிருபானந்தன் தன் நன்றி உரையுடன் இலக்கியப் பணியாற்றிவரும் தளங்களில் ஒரு சிலவற்றைக் குறிப்பிட்டார்.
நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
இந்த விழாவின் விவாதங்களின் முழு விவரமும் காண கீழே கொடுத்துள்ள இலக்கியவாசலின் வலைப்பூவிற்குச் செல்லுங்கள்!!
இலக்கியவாசலின் பன்னிரண்டாவது நிகழ்வு வாசுகி கண்ணப்பன் அரங்கத்தில் 19 மார்ச் மாலையில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு சுந்தரராஜன் வந்திருந்த முக்கிய விருந்தினர் திரு ஞாநி அவர்களையும் மற்றும் இலக்கிய
ஆர்வலர்களையும் வரவேற்றார்.
திருமதி உமா பாலு அவர்கள் அவருக்கே உரிய முத்திரைக் கவிதைகளை எதார்த்தமாக வழங்கினார். கவிதைகள் சிறியதாக இருந்தாலும் காரமாக இருந்தது.
திரு ஈஸ்வர் தனது பரிசுபெற்ற ‘சிகாகோ மாம்பழம்’ என்ற கதையைப் படித்த விதம் மிக அருமையாக இருந்தது. பாத்திரங்கள் பேசுவதைப் போலவே அவர் படித்தது கேட்பவர் கருத்தை மிகவும் கவர்ந்தது.
சாகித்ய அகாதமியின் மொழியாக்க 2015 ஆவது ஆண்டுக்கானவிருது பெறும் திருமதி கௌரி கிருபானந்தன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். குவிகம் இலக்கியவாசலும் அவர்களைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டது.
வோல்கா எழுதிய”விமுக்தா” என்ற கதைத் தொகுப்பின் ‘மீட்சி’ என்ற நூலுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. திருமதி கௌரி கிருபானந்தன் நம் மேடையில் அந்தக் கதை எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அதற்குப் பிறகு , “பரிக்ஷா” நாடக அமைப்பைக் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாக நடத்தி நாடகக் கலைக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் . திரு ஞாநி அவர்கள் தமிழ் நாடகத்தின் வரலாற்றை அவருக்கே உரிய பாணியில் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பட்டி தொட்டியிலும் நடைபெற்ற நாடகங்கள் எப்படிப் படிப்படியாகத் தேய்ந்து இன்று சென்னையில் மட்டும் எப்பொழுதாவது நடக்கும் அபூர்வப் பொருளாக மாறிவிட்டது என்பதை விளக்கினார்.
ரசிகர்களுக்கும் நாடகக் குழுவிற்கும் இடையே பாலமாக இருக்கவேண்டிய சபா செயலர்கள் இடைத் தரகர்களாக மாறி இந்த அழகான கலையை அழித்தது ஒரு காரணம். பள்ளிகளில் ஒரு காலத்தில் கோலோச்சிய நாடக வடிவத்தை சுத்தமாக மறந்தது இந்தக் கலையின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம். தொலைக்காட்சி தொடர் சீரியல்களை நாடகம் என்று ஒப்புக் கொள்ள மறுத்த ஞாநி அவர்கள் , இந்த மீடியத்தின் அசுர வளர்ச்சி நாடக மன்றங்களின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் என்று விளக்கினார். மேலும் அரசாங்கமும் குறைந்த கட்டணத்தில் நாடக அரங்கங்களை அமைத்துக் கொடுத்திருந்தால் இந்தக் கலை நன்றாக வளர்ந்திருக்கும் என்றும் ஆதங்கத்துடன் கூறினார்.
ஞாநி அவர்களுடைய உரைக்குப் பிறகு இலக்கிய வாசலின் சிறப்பு அம்சமான கலந்துரையாடல் நடைபெற்றது. நேற்றைய இன்றைய நாளைய நாடகங்களைப் பற்றி மக்களின் கேள்விகளுக்கு ஞாநி விளக்கமாக பதில் அளித்தார்.
கிருபானந்தன் , விழாத் தலைவர் ஞாநி அவர்களுக்கும், வந்திருந்த விருந்தினர்களுக்கும் மற்றும் விழா நடைபெற உதவிய செந்தில்நாதன் அவர்களுக்கும் , அரங்கம் தந்த வாசுகி கண்ணப்பன் அவர்களுக்கும் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.
“பொன்னியின் செல்வனின் வெற்றியின் ரகசியம்” என்ற தலைப்பில் இலக்கிய வாசலின் பதினொன்றாம் நிகழ்வு பிப்ரவரி 20, சனிக்கிழமை அன்று, தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவக்கப்பட்டது .
சுந்தரராஜன், வந்திருக்கும் தலைமைப் பேச்சாளர் திரு பாம்பே கண்ணன் அவர்களையும் மற்றும் விழாவிற்கு வந்திருக்கும் அன்பர்களையும் வரவேற்றார்.
கவிஞர் ஆரா ‘பொன்னியின் செல்வனில்’ வரும் கதையுலக மாந்தர்களை வைத்து ஒரு கவிதையைப் படைத்து அதனைக் கேட்பவர்கள் அனைவரும் ரசிக்கும் அளவிற்குப் படித்தும் காட்டினார்.
திருமதி விஜயலக்ஷ்மி, திரு.சுந்தரராஜன்எழுதிய “ராஜராஜ சோழன் உலா” என்ற சரித்திரக் கற்பனைக் கதையை அழகாகப் படித்துக் காட்டினார்.
கவிதையும் கதையும் பின்னால் வரப் போகிற நிகழ்விற்கு மிகவும் பொருத்தமாக இருந்தன.
திரு பாம்பே கண்ணன் பொன்னியின் செல்வனின் சிறப்புக்களை எடுத்துச் சொல்லி அதன் கதை, நயம், பேராசிரியர் கல்கி அவர்களின் எளிய நடை, பாத்திரப்படைப்பு,சரித்திரத்தையும் கற்பனையையும் கலந்த விதம் , கதாநாயகன் வந்தியத் தேவனின் யதார்த்த நிலை,யாராலும் கணிக்கமுடியாத அபூர்வமான வில்லி நந்தினியின் பாத்திரப் படைப்பு,நாட்டின் பேரரசரையும் இளவரசர்களையும் கொல்ல முயலும் சதித் திட்டம், இளவரசனின் அகோல மரணம், கொலைப் பழி விழுந்த கதாநாயகன், இப்படி எத்தனையோ காரணங்க.ளை பொன்னியின் செல்வனின் வெற்றிக்குக் காரணமாகக் கூற முயன்றாலும் , இறுதியில் கல்கி அவர்கள் குறிப்பிட்ட ‘ கடவுளின் அனுக்கிரகத்தால் தான் இப்படி ஒரு வெற்றிகரமான நாவலைப் படைக்க முடிந்தது ‘ என்ற கருத்தையே வலியுறுத்தினார்.
டாக்டர் நடராஜன் , கல்கி தாசன் என்ற பெயரில்
எழுதிக் கல்கியில் பிரசுரமான ஒரு கவிதை அவையில் படிக்கப்பட்டது.
வந்திருந்த அனைவரும் பொன்னியின் செல்வனில் தங்களுக்குப் பிடித்தப் பாத்திரப் படைப்புக்களைப் பற்றிப் பேசினர். கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலில் வாசகரின் வயதிற்குத் தக்கவாறு பாத்திரங்களின் பெருமையைப் புலப்பட வைத்துள்ளார் என்பதற்கு
20 வயதில் படிக்கும் போது வந்தியத் தேவனையும்,
30 வயதில் அருண்மொழிவர்மனையும்,
40 வயதில் ஆதித்த கரிகாலனையும்
50 வயதில் பழுவேட்டரையறையும்
60 வயதில் சுந்தர சோழரையும்
ரசிக்கும் அளவிற்குப் பாத்திரங்களைப் படைத்துள்ளார் என்பது கூறப்பட்டது.
மொத்தத்தில் கல்கிக்கும் பொன்னியின் செல்வன் நாவலுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக நிகழ்வு நடைபெற்றது.
குவிகம் இலக்கிய வாசலின் பத்தாவது நிகழ்வான “புத்தக உலகம்” திரு ரவி தமிழ்வாணனின் சிறப்புரையுடன் ஜனவரி இருபத்து மூன்றாம் நாள் திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையஅரங்கில் நடைபெற்றது.
சுந்தரராஜன் வந்திருந்தவர்களை வரவேற்று , குவிகம் இலக்கிய வாசலில் இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.முக்கியவிருந்தினரான திரு ரவி தமிழ்வாணன் அவர்களின் வெற்றிப் பாதைகளையும் சுட்டிக் காட்டினார்.
திருமதி பத்மஜா ஸ்ரீராம் அவர்கள் கவிதை வாசித்தார்.
திருமணம் ஆன பெண் புகுந்த வீடு சென்ற பிறகு வார விடுமுறையில் தன்அன்னையையும், பாட்டியையும் பிறந்த வீட்டில் பார்க்கும் போது அவள்மனதில் ஏற்படும் பாசப் பிணைப்பைக் கவிதையாய் – உணர்வுகளாய் நம்முடன்பகிர்ந்து கொண்டார்.
திரு அழகியசிங்கர், ஒரு பெண் தன்னைக் காதலிக்கும் இரண்டு பேர்களில் யாரைத் திருமணம் செய்து கொள்ளுவது என்ற தவிப்பை விறுவிறுப்பான கதைமூலம் நமக்கு வழங்கினார்.
திரு ரவி தமிழ் வாணன் ” புத்தகஉலகம்” என்ற தலைப்பில் தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்கும் களத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து விளக்கினார். எழுத்தாளர்களுக்கு மதிப்பும் மரியாதையும் நிறைந்த முதல் காலம். புத்தகங்கள் படிப்பதையே தவிர்க்கும் இன்றையகாலம். இணைய தளங்கள் ஆதிக்கத்தில் வரும் எதிர் காலம் ……
அவரது சிறு உரையைத் தொடர்ந்து வாசகர்கள் ஒவ்வொருவரும் குழந்தைகள் இலக்கியம், இளம் பிராயத்தினருக்குத் தேவையான புத்தகங்கள், தமிழ்க் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டியதின் அவசியம், நடமாடும் புத்தகாலயம் அமைப்பது போன்ற பல புத்தகம் சம்பந்தப்பட்ட கேள்விகளைச் சரமாரியாக எழுப்பினர் .
ரவி தமிழ்வாணன் அவர்களும் மற்றையோரும் அதற்கான விடைகளைப் பகிர்ந்து கொண்டனர். மணிமேகலை பிரசுரம் நடத்தும் எழுத்தாளர் – பதிப்பாளர் முதலீட்டு செய்யும் முயற்சியையும் திரு ரவி விளக்கினார்.
சுந்தரராஜன் அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் இனிது முடிந்தது.
கலந்துரையாடல் என்பதற்கு இந்தக் கூட்டம் ஓர் அருமையான உதாரணமாகஇருந்தது.