விஸ்வகர்மா தேவ தச்சராகவும் சிற்பியாகவும் இருப்பதால் அவருக்கு எண்ணற்ற வேலைகள் இருந்தன. பிரம்மனின் படைப்புத் தொழிலுக்கு உதவியாக பதினான்கு உலகங்களை இவர்தான் அமைத்தார். ஆயுதங்கள் செய்வதில் அவர் ஒரு விற்பன்னர். கதன் என்ற அசுரனைத் திருமால் வதம் செய்தார். அந்த அசுரனின் எலும்பிலிருந்து ஒரு ஆயுதத்தை விஸ்வகர்மா உருவாக்கினார். அந்த ஆயுதமே ‘கதாயுதம்’ என்று பெயர் பெற்றது. அதே போல் அசுரர்களை எதிர்த்துப் போராட இந்திரனுக்குச் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் தேவைப்பட்டது. அதற்காக ததிசி என்ற முனிவரின் முதுகெலும்பிலிருந்து உருவாக்கப்பட்டதே வச்சிராயுதம். ஏற்கனவே இவர் சிவபெருமானுக்குப் பிங்களம் எனும் வில்லினையும், திருமாலுக்குச் சாரங்கம் எனும் வில்லையும் வடிவமைத்தவர். இந்திரனுக்காக அவனது தலைநகராம் அமராபதிபுரியையும் புதுப்பித்தவர்.
நீதி நியாயம் சத்தியம் இவற்றின் பிரதிநிதியாகத் தன் பேரன் எமதர்மராஜன் இருப்பான் என்று முதல் பார்வையிலேயே கணித்தவர். மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் தோன்றியவன் அல்லவா எமன்.? மகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரிசி, காசியபர், சூரியதேவன் ஆகியோர். சூரியனிடமிருந்து தோன்றியவன் எமன். அத்துடன் அவனுக்குச் சிவபெருமானின் அருளாசியும் கிடைத்திருக்கிறது. அதனால் அவனை எப்படியாவது தென்திசைக் காவலனாக்கி பூவுலக வாசிகளுக்கு அவர்கள் செய்த பாவபுண்ணியத்திற்கு ஏற்ப சுவர்க்க நரக பதவிகளை வழங்கும் நீதியரசனாக ஆக்கவேண்டும் என்ற எண்ணம் விஸ்வகர்மாவின் மனதில் உதித்தது. நரகலோகம் என்னும் எமலோகத்தை உண்டாக்கி அதற்குத் தன் பேரனை அதிபதியாக்கவேண்டும் என்கிற ஆசையும் அவர் முகத்தில் விரிந்தது. அத்தோடு மட்டுமல்லாமல் தன் பேரன் எமனுக்காக எமபுரிப்பட்டணம் என்ற ஊரையும் நிர்மாணிக்கவேண்டும் என்பதையும் தீர்மானித்துவிட்டார்.
அதைப்போல் வைவஸ்வத மனு பூலோகத்தின் மனித வர்க்கம் தோன்றுவதற்கு ஆரம்ப கர்த்தாவாக இருக்கவேண்டும் என்றும் எண்ணினார். மனுவின் வழித்தோன்றலாக வருபவர்கள் மனுஷன் மனுஷி என்று கருதப்படுவார்கள் என்று விஸ்வகர்மா உறுதியாக நம்பினார். அதைச் செயலாற்றவும் தான் முயலவேண்டும் என்று தீர்மானித்தார்.
அழகுப் பெண் எமி, யமுனா நதியாக ஓடி பூலோகத்தவர் பாவங்களைத்தீர்க்கும் புண்ணிய நதியாகப் பிரவாகம் எடுத்துச் செல்லும் வடிவம் இன்றே விஸ்வகர்மாவின் மனக்கண்ணில் விரிந்திருந்தது.
இந்த மூன்று குழந்தைகளையும் நன்றாகப் போஷித்து வளர்க்க தன் மகள் சந்த்யா அவள் கணவன் சூரியதேவனுடன் சேர்ந்து வாழவேண்டும்.
எவ்வளவு விரைவில் சூரியதேவனின் சுடு வெப்பத்தைக் குறைக்க இயலுமோ அவ்வளவு விரைவில் அதைச் செய்து முடித்தால்தான் சந்த்யா மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்த இயலும் என்பதை உணர்ந்துகொண்டதால் அவர் வேலையின் பளு அதிகமாயிற்று. சூரியதேவனின் ஒத்துழைப்பும் அதிகமாக இருக்கிறபடியால் விஸ்வகர்மா அதை உடனே செயலாற்றத் தொடங்கினார்.
திரிசூலமும் சக்ராயுதமும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பிரம்மர் தனித்தனிக் கட்டளைகளையும் பிறப்பித்திருந்தார்.
ஆரணி, செனனி, ரோதயித்திரி என்னும் முச்சக்தி வடிவானதாக சூலப்படை அமையவேண்டும். அதுமட்டுமல்லாமல் சூலத்தில் இச்சா சக்தி , கிரியாசக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளும் இணைந்து வரவேண்டும். அப்போதுதான் சிவபெருமானின் திருக்கரத்தில் திரிசூலம் இருக்கும்போது அவரைத் துதிக்கும் மக்கள், தேவர், அசுரர் என்ற மூன்று உலகவாசிகளின் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் அழிக்கும் சக்தி வாய்ந்ததாக அது அமையும். சிவனுக்கு உகந்த மூன்று இலைகள் சேர்ந்த வில்வ இலைவடிவில் திரிசூலம் அமையவேண்டும். சிவன் விழித்திருக்கும் நேரம், தூங்கும் நேரம், கனவு காணும் நேரம் என மூன்று நிலையையும் குறிப்பதாகவும் அமையவேண்டும். சத்வ ரஜோ தமஸ் குணங்களின் நீட்சியாகவும் அது இருக்கவேண்டும். மேலும் திரி சூலையின் அமைப்பில் வாரசூலையையும் இணைக்க வேண்டும். அதாவது மக்கள் பயணிக்கக்கூடாத திசையைத் திரிசூலம் சுட்டிக்காட்ட வேண்டும்.திங்கள், சனிக்கிழமைகளில் கிழக்கு திசை,செவ்வாய், புதனில் வடக்கு, வியாழனில் தெற்கு,வெள்ளி, ஞாயிற்றில் மேற்கு திசைகளில் சூலை இருக்குமாறு படைக்கவேண்டும். அந்தந்த திசைகள் பயணிக்கக்கூடாத திசைகள் என மக்கள் உணரும்படி செய்யவேண்டும்.
அதேபோல் சுதர்சன சக்கரத்துக்கும் பலவிதமான முன்னெச்சரிக்கைகள் உண்டு. சுதர்சன சக்கரம் நூற்றெட்டு வெட்டும் நுனிகளைக் கொண்டதாக இருக்கவேண்டும். இரண்டு அடுக்குகள் கொண்டதாகவும் அவை மாறுபட்ட திசைகளில் சுழலக்கூடியதாகவும் இருக்கவேண்டும். சுதர்சனம் செல்லும் பாதை தனியாக அமையவேண்டும். அதனால் அது எந்த இடத்திற்கும் எளிதில் செல்லும் திறன் கொண்டதாக அமையவேண்டும். அதில் ஒன்பது முக்கோணங்கள் நவகிரகங்களை உருவகப்படுத்துமாறு இருக்கவேண்டும். அது காலச்சக்கரம் என்றும் கருதப்படும். அதனால் அதில் 12 மாதங்களுக்கு ஏற்ப 12 ஒளிக்கற்றைகளும் ஆறு பருவங்களுக்கு இணையாக 6 மையங்களும் இருத்தல் அவசியம். ஏவியபின்னும் கூட பகவான் கட்டுப் பாட்டிலேயே இருக்கவேண்டும்.அதன் வேகம் விஷ்ணு பகவான் செல்லும் வேகத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் கோடிக்கணக்கான யோசனை தூரம் செல்லும்படி இருக்கவேண்டும். மற்ற ஆயுதங்களைப் போல் இதனை எறிய அல்லது அடிக்கவேண்டிய அவசியம் இருத்தல் ஆகாது. விஷ்ணு பகவான் மனத்திற்குக் கட்டுப்பட்டு ஏவிய வேலையை முடித்துவிட்டு அவரிடமே திரும்ப வரக்கூடியதாக இருக்கவேண்டும். ஏற்கனவே தயாரித்த வஜ்ராயுதத்தைவிட அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருக்கவேண்டும். எல்லாவற்றையும்விட அது சக்கரத்தாழ்வார் என்று உருவகிக்கப் போகிறபடியால் அதற்கேற்ற திவ்விய தரிசனத்தோடு அமைவது மிக மிக முக்கியம்.
குபேரனுக்காகச் செய்யப்படும் சிவிகை ஒரு பறக்கும் விமானமாகச் செயல்படவேண்டும். தேவர்களும் மனிதர்களும் உபயோகிக்கும் ருக்ம, சுந்தர, திரிபுர, சகுண, என நான்கு வகையான விமான வகைகளை விட வித்தியாசமானதாய் அமையவேண்டும். அவைகளில் இருப்பது போல இடஞ்சுழி வலஞ்சுழி இருத்தல் ஆகாது. விமானத்தைச் செலுத்துபவர் எண்ணப்போக்கின்படி மனோவேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கவேண்டும். வலவன் என்கிற விமான ஓட்டி இருத்தல் கூடாது. அதாவது ‘வலவன் ஏவா வான ஊர்தியாக’ அது அமையவேண்டும்.
பரத்வாஜ முனிவர் எழுதிய யந்த்ர சர்வஸ்வம் என்ற மூல புத்தகத்தின் அடிப்படையில்தான் விஸ்வகர்மா ஆயுதங்களைப் படைத்து வந்தார். அதில் ஒரு பகுதி வைமானிக சாஸ்திரம். பலதரப்பட்ட விமானங்கள் எவ்விதம் தயாரிக்க வேண்டும் அவை எவ்வாறு செயல்படவேண்டும் என்பதைப்பற்றி அவர் விரிவாகக் கூறியுள்ளார். விஸ்வகர்மா அவற்றையெல்லாம் தன் மனத்திரையில் எண்ணிப்பார்த்தார்.
வானத்திலிருந்தே எரிபொருளைச் சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்த விமானம். பூதவாஹா : முன்னும் பின்னும் சமவேகத்தில் பறக்கும் விமானம். தூமாயனா : எரிக்கப்பட்ட எரிபொருளையே தாமே புதிய எரிபொருளாகக் கொண்டு இயக்கக் கூடிய விமானம். கிதோகமா : மரங்களை எரித்துப் பெரும் எண்ணெய்யில் இயங்கக் கூடிய விமானம். ஹம் சுவாகா : சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம். தாரமுஹா : எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கக் கூடிய விமானம். மாணிவஹா : செயற்கை ரசாயன உப்புகளாலும் செல்லக்கூடிய விமானம். மாராதசாஹா காற்றை உறிஞ்சி சக்தியை எடுத்து இயங்கும் விமானம். மற்றும் ஷக்டிங்கர்ப்பம், விக்யுதம், துருபதம், குண்டலிகம் போன்ற விமானங்கள் இருந்ததாகவும் பரத்வாஜர் கூறியுள்ளார்.
இப்போது புதியதாக வடிவமைக்கப்போகும் புஷ்பக விமானம் இவை எல்லாவற்றிற்கும் மேலானதாக அமைய வேண்டும் என்பதை பிரம்மர் சொல்லாமலே ஏற்றுக்கொண்டார் விஸ்வகர்மா.
விஸ்வகர்மாவிற்குத் தனது அரண்மனையிலிருந்து ஆயுதங்கள் தயாரிக்கும் இயந்திரத்தை வரவழைத்தார். அதனைச் சூரிய மண்டலத்தில் சூரியதேவன் அரண்மனைக்கு வெளியே உள்ள பரந்த வாசல் அருகே நிறுவினார். இயந்திரத்தின் உட் பக்கத்தில் சூரியன் சுலபமாக அமர்ந்துகொள்ளும் இருக்கையை அமைத்தார். அதற்குள் அவர் சூரியதேவனின் ஒளிச் சக்தியை மாற்றும் பெரிய முப்பட்டைக் கண்ணாடி ஒன்றைப் பொருத்தினார். சூரியதேவன் தனது அதிகபட்ச வெப்பத்தையும் ஒளியையும் சில நாழிகைகள் ஒருங்கே வெளியிடவேண்டும். அப்போது முப்பட்டையிலிருந்து வரும் அதீத ஒளியிலிருந்து ஆயுதங்கள் செய்ய அதிலேயே தோன்றும் சீரொளியை உபயோகிக்கவும் திட்டமிட்டார். ஆற்றல் மிக்க ஓளி விலகியதும் சூரியதேவனின் ஒளியும் வெப்பமும் மங்கும். அதன் பிறகு அவருடைய கிரணங்களால் ஸந்த்யாவிற்கு எந்தவித பாதகமும் இருக்காது. ஆனால் இது காந்த சிகிச்சை மாதிரி பலமாதங்கள் தொடர்ந்து பலன் தராது. முதல் முயற்சியில் ஒளியும் வெப்பமும் ஆயுதங்களாக மாற்றப்படும். அதன்பின்னர் அவன் தினமும் ஓர் ஊடகக் கதவின் வழியாகத் தன் அரண்மனைக்கு வரவேண்டும். அப்போது தான் அவன் ஒளியும் வெப்பமும் சந்த்யாவிற்கு ஏற்றபடி இருக்கும்.
அந்த ஊடகக் கதவை சந்த்யாவின் அரண்மனை வாயிலில் வைக்கத் தீர்மானித்தார். அதில் ஒரு சிக்கல் இருந்தது.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
மும்மூர்த்திகள் மூவரும் சிரித்துக்கொண்டே மேடைக்குச் சென்றார்கள். அவர்கள் மேடைக்கு வரும்போதே அவர்களுக்கான ஆசனம் தயாராகியிருந்தது. மேடையில் இருந்த சாலமன் பாப்பையா பாரதி பாஸ்கர், ராஜா, திண்டுக்கல் லியோனி அனைவரும் எழுந்து நின்றார்கள். நாம் வணங்கும் தெய்வங்களுடன் ஒரே மேடையில் இருப்பது என்பதை அவர்களால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. காண்பது கனவா நனவா என்பது புரியாமல் மயக்க நிலையில் அவர்கள் நால்வரும் இருந்தார்கள்.
” நாரதா! மேடைக்கு வா !” என்று தந்தை பிரம்மர் அழைத்ததும் வேறு வழியின்றி நாரதரும் மேடைக்கு வந்தார். மும்மூர்த்திகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பது அவர்கள் முகத்தில் விரிந்த புன்னகை உணர்த்தியது. விழாவிற்கு வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சிபெருக்கில் கரவொலி எழுப்பி எழுந்து நின்றனர். பிரம்மர் அனைவரையும் அவரவர் ஆசனத்தில் அமரும்படிக் கூறினார். விஷ்ணு மாறு வேடத்தில் அமர்ந்திருக்கும் முப்பெரும் தேவிகளைப் பார்த்துப் புன்னகை புரிந்து அவர்களையும் மேடைக்கு வரும்படி ஜாடையில் அழைத்தார். அவர்கள் தங்கள் இருக்கையில் நெளிவது புரிந்தது. கூட்டம் அவர்களையும் அடையாளம் கண்டு அதிகப்படியான கரவொலியை எழுப்பினர். அருகில் இருந்த எமியிடம் முப்பெரும்தேவிகளிடம் ஏதோ கூற அவள் வெட்கத்தில் நெளிந்தது நாரதருக்கு மட்டும் புரிந்தது. மேடையில் பிரம்மரும்- சரஸ்வதியும், விஷ்ணுவும் – லக்ஷ்மியும் சிவனும் – பார்வதியும் அமர்ந்திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
மூன்று காலங்களையும் உணர்ந்த நாரதருக்கு எதை எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை. கல்விக்கரசி கலைவாணி – நாரதரின் அன்னை , மகன் படும் பாட்டைக் கண்டு அவனுக்கு உதவும் வகையில் பேச ஆரம்பித்தார்.
“பெருமதிப்பிற்குரிய நடுவர் அவர்களே” என்று சரஸ்வதிதேவி அழைத்தபோது தான் பெற்ற பிறவிப்பயனை அடைந்த மகிழ்ச்சியில் திளைத்தார் சாலமன் பாப்பையா.
பட்டிமன்றப்பாணியில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த விவாத மேடையைத் தற்போது உங்கள் தொலைக்காட்சிகளில் நடக்கும் குழு விவாதமாக மாற்றி விட்டீர்கள். நாரதனைக் கிட்டத்தட்ட அர்னாப் கோஸ்வாமி அளவிற்கு மாற்றிவிட்டீர்கள். நாரதனுக்கு ஒரு கோட்டை மாட்டிவிட்டால் குறைந்த பட்சம் உங்கள் நீயா நானா கோபினாத் மாதிரியாவது பேசிக்கொண்டிருப்பான். நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். நாரதன் நடுவர் கூறியபடி நெறியாளாராக இருந்து எங்கள் ஆறு பேரையும் கேள்விகள் கேட்டு அதன்மூலம் நடுவர் அவர்களுக்குச் சரியான தீர்ப்பு வழங்க உதவும்படி கேடுக்கொள்கிறேன். ” என்று கூறியதும் விவாதமேடை
தொலைக்கட்சி மேடையாகிவிட்டது.
அந்த சமயத்தில் மேடையில் இருந்த ராஜா பக்கத்தில் இருந்த பாரதி பாஸ்கரிடம் ” ஆஹா! இது சரஸ்வதி சபதம் கிளைமாக்ஸ் செட்டிங் போல இருக்கே” என்று மெதுவாகத்தான் கூறினார்.
ஆனால் அது ஆப் செய்யப்படாத மைக்கின் வழியாக அரங்கம் முழுவதும் கேட்டு சிரிப்பலைகளப் பரப்பியது. அந்த சிரிப்பு அலையின் வேகம் அடங்குவதற்குள் தன்னை முழுதுமாகச் சுதாரித்துக் கொண்ட நாரதர் தான் எப்படிப் பயணிக்கவேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொண்டார்.
” நடுவர் அவர்களே! நேரடியாகவே நானும் விஷயத்திற்கு வருகிறேன். இன்று இந்த எமபுரிப்பட்டணம் மட்டுமல்ல அனைத்து உலகங்களில் உள்ள ஜீவராசிகள் எல்லாரும் தெரிந்து கொள்ள ஆசைப்படுவது ” எது சிறந்தது ? ஆக்கலா? காத்தலா? அழித்தலா?” என்ற கேள்விக்கான விடைதான். ”
அர்னாப் கோஸ்வாமி என்று கூட்டம் கத்தியது. அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவர்களை விட அதிக சத்தத்தில் நாரதர் பேச ஆரம்பித்தார்.
” அகில உலக மக்கள் மட்டுமல்ல. நானும் அதற்கான விடையைத் தெரிந்துகொள்ள ஆவலாயுள்ளேன். மும்மூர்த்திகள் முப்பெருந்தேவிகளின் அருளாசிகளுடன் அவர்களைக் கேள்விகள் கேட்கும் நெறியாளனாக மாறுகிறேன்.”
முதல் கேள்வியை பிரம்மதேவரிடம் கேட்டார்.
“தந்தையே! தாங்கள் படைப்புக் கடவுள். தங்களிடமிருந்துதான் எல்லாம் பிறக்கிறது. எல்லா ஜீவராசிகளும் உருவாகக் காரண கர்த்தா நீங்கள்! நீங்கள் படைத்தால்தான் காக்கமுடியும் அழிக்கவும் முடியும். அப்படியிருக்க காத்தலும் அழித்தலும் வாதத்திற்குக் கூட ஆக்கலுடன் போட்டிபோட முடியாது என்பது அறிவுசால் பெருமக்கள் பலரின் வாதமாக இருக்கிறது. இந்த வாதத்தை நீங்கள் எப்படிப் பெருந்தன்மையுடன் ஏற்கிறீர்கள்? என்று முதல்கொக்கிக் கேள்வியை வீசினார்.
பிரும்மர் புன்சிரிப்புடன் ” நான் இதற்குப் பதில் கூறுவதற்கு முன்னால் தேவி சரஸ்வதியின் கருத்தை அறிந்தபிறகு கூறுவதுதான் முறை! அதுமட்டுமல்லாமல் அவள் கல்விக்கே அதிபதி! அத்தோடு மகளிர் முதலில்! சரிதானே தேவி! ” என்று கேட்டதும் சபையில் சலசலப்பு உண்டாகியது.
சரஸ்வதி தேவியும் சிறு புன்முறுவலுடன் தன் கருத்தைக் கூற ஆரம்பித்தார்.
” படைப்புக் கடவுள் கூறியது போல முதலில் நான் முதலில் பெண், பிறகு மனைவி, அதன்பின் தாய், அதற்குப்பிறகுதான் கலைவாணி, கல்விக்கு அதிபதி எல்லாம். இதில் யாருக்கும் அழித்தல் என்றால் பிடிக்காது என்பதுதான் உண்மை. பிறப்பது எல்லாம் அழியும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அழிவைச் சிறந்தது என்று யாராலும் எண்ணமுடியாது. அதலால் மீதம் இருப்பவை ஆக்கலும் காத்தலும். இப்போதும் பெண் என்கிற அளவுகோலை வைத்துப் பார்ப்போம். ஒரு பெண் மணம் புரியும் வரை பெற்றோராலும், மணத்திற்குப் பிறகு கணவணாலும் கடைசிக்காலத்தில் பிள்ளைகளாலும் காப்பாற்றப்படுபவள் என்று பொது நீதி கூறுகிறது. ஆக, ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர் காத்தல் தொழிலைச் செய்ய வாழ்கிறாள் என்று ஆகிறது. அவள் குழந்தைகளைப் பெறும் போது அவள் ஆக்கல் பணியில் ஈடுபடுகிறாள். பின்னர் அந்தக் குழந்தையைப் பேணி வளர்க்கும்போது காக்கும் பணியில் ஈடுபடுகிறாள். ஆக, பெண் என்பவள் காத்தல் என்ற இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறாள். எனவே ஒரு பெண்ணின் பார்வையில் காத்தல்தான் சிறந்தது என்று கூறவேண்டும்.
இப்போது கலைவாணியின் நிலையில் பேச விரும்புகிறேன்.
பிரபஞ்சத்தில் ஆக்கல் ஒரு புள்ளி , காத்தல் ஒரு கோடு அழித்தல் ஒரு புள்ளி. கோடு என்பது என்ன? புள்ளிகளால் ஆனதுதானே! ஆக படைத்தல் முதற்புள்ளி, காத்தல் அடுத்தடுத்த பல புள்ளி, அழித்தல் முற்றுப்புள்ளி. அதன்படியும் பல புள்ளிகள் கொண்ட கோடு தான் காத்தல் . ஆகவே காத்தலே சிறந்தது என்று கூறுகிறேன். நான் பிரும்மபுரியில் இருந்தபோதிலும், என் கணவர் படைக்கும் தொழிலான ஆக்கல் தொழிலைச் செய்பவர் ஆயினும் என் கருத்துப்படி காத்தலே சிறந்தது.”
” தந்தையே இது என்ன? உங்கள் ஆக்கல் தொழிலுக்கு அன்னையின் மதிப்பீடு என்ன என்பதைக் கேட்டீர்களா? நீங்கல் ஒரு சிறு புள்ளியாமே? தங்கள் கருத்தும் இதுதானா? அல்லது அன்னையின் கருத்தை மறுக்கப் போகிறீர்களா? அவர்கள் கோடு போட்டால் நீங்கள் ரோடு போடுவீர்களா? அல்லது அந்தக்கோட்டைத் தாண்டாமல் கூட்டணி தர்மம் என்று அன்னையின் கருத்துதை ஆமோதிப்பீர்களா? அப்படியானால் படைப்புத் தொழில் புனிதமானதில்லையா? வெறும் பம்மாத்துதானா? ” நாரதர் கிடுக்கிப்பிடி போட்டார்.
எல்லோரிடமும் கலகம் செய்யும் நாரதர் இன்று குடும்பத்தில் குழப்பம் உண்டாக்குகிறாரே என்று அனைவரும் ரசிக்க ஆரம்பித்தனர். புருஷன் பொண்டாட்டி சண்டை அல்லது கூட்டணியில் தகறாறு என்றால் வேடிக்கை பார்க்கும் மற்றவர்களுக்கு குஷி தானே?
“நாரதா கேள்! சபையோரும் கேட்கட்டும்!” என்று ஆரம்பித்து பிரும்மர் பதில் கூற முன்வந்தார்.
சபையோருக்கு இப்போது சற்று குழப்பம் வந்தது. முதலில் ஒருமுகமாகப் பேசிய பிரும்மர் இப்போது நான்முகனாக நான்கு முகங்கள் வாயிலாகவும் பேச ஆரம்பித்தபோது எந்த முகத்தை வைத்துக்கொண்டுக் கேட்பது என்கிற குழப்பம்தான்.
எமிக்கு, இப்படி குடும்பத்தில் கும்மி அடிக்கிறார்களே என்ற கவலை வாட்டத் தொடங்கியது.
(தொடரும்)
.