கடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன்

dr1

சுழலும் பம்பர நினைவுகள்!

 

எப் எம் ரேடியோவில் ‘பம்பரக் கண்ணாலே’ பாட்டுக் கேட்டு முடித்தபோது, மனதில் பம்பரமாய்ச் சுழன்றன பழைய நினைவுகள் –பம்பர நினைவுகள்!

எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம் –

கொத்தங்குடி மணித் தாத்தா(அப்பா வழி) தான் எனக்கு முதன் முதல் பம்பரம் வாங்கிக் கொடுத்தார்! நள்ளிரவுக்குமேல் வேலையிலிருந்து வந்தவர் சுவற்றில் மாட்டிய மஞ்சள்பையில் பம்பரமும் சாட்டையும்!   காலையில் கையில் எடுத்ததும்  முதல் அறிவுரை “வெளீல போய் பம்பரம் விளையாடாதெ – தோத்தா “ ஆக்கர்” வாங்கும் பம்பரம்” சொன்னவர் பத்தாவது படித்துக்கொண்டிருந்த என் சித்தப்பா!  பம்பரம் ஆக்கர் வாங்குவது அவ்வளவு வருத்தத்திற்குரிய சமாசாரம் அந்த  வயதில்!

மண்டையில் சிவப்பு, பச்சை, மஞ்சள் என வட்டங்கள் பெயிண்ட் செய்யப்பட்ட சின்னப் பம்பரமும்,  அதைச் சுழல வைக்க, இரண்டடி நீள சிவப்புக் கயிறும் – சாட்டையும் என் முதல் பம்பரம், மறக்க முடியாதது.

இரண்டு மூக்கிலும் சளி ஒழுக, நாக்கை மடித்து மேலுதட்டில் அழுத்திக்கொண்டு, இடது கையில் பம்பரத்தைப் பிடித்துக்கொண்டு வலது கையால் கீழே ஆணியிலிருந்து வரி வரியாகச் சாட்டையைச் சுற்றுவதில் இருக்கிறது சாமர்த்தியம். சாட்டை வழுக்குவதும், பம்பரம் நழுவுவதும் (சில சமயம் ஏடாகூடமாக,  டவுசர் இடுப்பிலிருந்து நழுவுவதும் உண்டு உடுக்கையை விட்டு பம்பரத்தைக் கெட்டியாய்ப்  பிடித்துக்கொள்ளும் விரோதக் கைகளும் உண்டு!) ஆரம்ப நிலை சறுக்கல்கள்!

கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே சாட்டை சுற்றிய பம்பரத்தைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு, மற்ற விரல்களில் சாட்டையின் முடிச்சு போட்ட நுனியைச் சுற்றிக்கொண்டு,  கையை முன்னும் பின்னும் இழுத்து, சாட்டையை உருவி, பம்பரத்தைச் சுழல விடுவது, ‘இழுப்பு  பம்பரம்’ விடுதலின் பால பாடம்!

தலைக்குமேல் கையை உயர்த்தி, பம்பரத்தைத் தரையில் குத்துவதைப்போல செலுத்த, சாட்டையை இழுத்துச் சுழல விடுவத “குத்து” அவசியம் அறிந்திருக்க வேண்டிய பாடம் –

எல்லாவகைப் பம்பர   விளையாட்டுகளுக்கும் இம்முறையே பயன்படும்! இறங்கிய பம்பரம் சுழலாமல், ஒரு பக்கமாக உருண்டோடிவிடும் பொறியிலிருந்து விடுபட்ட எலியைப் போல! இப்படி ‘மட்டையடித்தல்’ சில சமயங்களில் வட்டத்துக்குள் இருக்கும் பம்பரங்களை வெளிக்கொணர உதவும் –அதெல்லாம் தேர்ந்த பம்பர ஸ்பெஷலிஸ்டுகளுக்கே உரிய பண்பு!

இழுப்புபோலக் காற்றில் சாட்டையை இழுத்து, சுழலும் பம்பரத்தைத் தரையிறங்க விடாமல், உள்ளங்கையில்  ஏந்திக் கொள்வதற்குக்  கொஞ்சம் பயிற்சியும், முயற்சியும் வேண்டும்! சிலர் சாட்டை சொடுக்குவதைப்போல சொடுக்கி,  காற்றிலிருந்து பம்பரத்தைக்  கையில் சுழலவிடுவார்கள் ’டாக்டரேட்’ பெற்றவர்களுக்குச் சமமானவர்கள்! (இதனை முதலில் நான் முயற்சிசெய்து, சாட்டையில் சிக்கிய பம்பரம், சொடுக்கிய வேகத்தில் என்னையே பதம் பார்த்த சம்பவம்  சரித்திரப் பிரசித்தம்!)

கொய்யா, கருவேல மரங்களில் செய்யப்படும் பம்பரங்கள் – மெஷினில் சுழலவிட்டு, சீராக செதுக்கப்பட்டவை! அழகிய வண்ணங்களில் எங்கும்கிடைக்கும்.

(பெரிய கோயில் வாசல்களில், பனை ஓலைப் பெட்டிகளில் பல வண்ணங்களில் சாட்டையுடன் விற்பனை!).

தனியாக ஆசாரியின் மரப் பட்டறைகளில் ‘கடைந்து’ செய்யப்படும் பம்பரங்களுக்கு மவுசும், விலையும் கூடத்தான். ரோஸ்வுட் / தேக்கு மரஃபினிஷ், அழகான சாட்டை சுற்றும் வரிகள், பெரிய மண்டை, குறைந்தஉயரம், தடி ஆணி  தரையிலோ, கையிலோ சுழலும்போது, ஒருவித  அமைதியுடன் மயங்குவதைப்போலத் தோன்றும்  காதருகே கொண்டுவந்தால், சன்னமான ‘ஹம்மிங்’ கேட்கும்!

சிதம்பரத்தில், மேல சன்னதி ஃபேன்சி ஷாப்பில் கலர்ப் பம்பரங்களும், சின்னகடைத் தெருவில் கடைந்த  பம்பரங்களும் கிடைக்கும்! அதைவாங்கக் காசுதான் கிடைக்காது!

அவசரத்துக்குச் செய்தாற்போல், ஏதோ ஒரு கட்டையில் சீவி, கொஞ்சம் நீளமான ’கோம்பை’ (இந்த வார்த்தையின் பொருள் அறிய பம்பரப்  பண்டிதர்களை அணுகவும்!) போல செதுக்கப்பட்ட  பம்பரம் கொஞ்சம் ரஃபாகச் சுழலும்; அதிலும் ஆணி மெல்லியதாகவும், கோணலாகவும் இருந்தால்,  தரை இறங்கியவுடன், தட தடவென்று குதித்துக் குதித்துச்  சுற்றும் –  ”தொகுறு” பம்பரங்கள்! நம்ம ஊரில் சில பிரபலங்கள்கூட இப்படித் தொகுறும் பம்பரங்களாக  குதித்துச் சவுண்டு விடுவதைக் காணலாம்!!

அதிக ஆக்கர் வாங்கிய பம்பரங்கள் (தோற்று, மற்ற பம்பர ஆணிகளால்‘குத்து’ப் பட்டவை) அம்மை வடு  முகம்போல இருந்தாலும், சுழலும் போது அழகாகவும், மயங்குவதாகவும் இருக்கும். அடிபட்டால்தானே அமைதியும், அழகும் வருகிறது!

“அப்பீட்” எடுப்பது தெரிந்திருக்க வேண்டும், அதுவும் விரைவாக எல்லோருக்கும் முன்பாக எடுக்கவேண்டும். (இரண்டு மூன்று சுற்றுக்களில் பம்பரத்தைச் சுழலவிட்டு, தரையிலிருந்து சாட்டையால் தூக்கிக் ’காட்ச்’பிடிப்பது ’அப்பீட்’ (அ) கோஸ்’) கடைசியில் எடுப்பவர் தன் பம்பரத்தை வட்டத்துக்குள் வைக்க,, மற்றவர்கள் ’குத்து’ விட, பம்பரம்  வெளியே வரவேண்டும்  (ஆக்கர் வாங்குவதும், உடைவதும் உள்ளிருக்கும் பம்பரத்தின் தலைவிதியைப் பொறுத்தது!).  மீண்டும் எல்லோரும் அப்பீட் – கடைசீ அப்பீட் வட்டத்தின் உள்ளே – ஒரு வட்டம், இரு வட்டம்,

”தலையாரி” ஆடஇரண்டு அரை வட்டம் எனப் பல வகை ஆட்டங்கள்!

பம்பரத்தின் மண்டையில் தகர ஸ்லீவுடன் ஒரு ஆணி, அடித்து, சாட்டையைக் கட்டி, தரையிறக்காமல்,  அதிலேயே சுற்றுவது “தொங்கிச்சுற்றும் பம்பரம்” – குழந்தைகளுக்கானது சில சிறுமிகளுக்கும்! ( பம்பரவிளையாட்டில் சிறுமிகளைச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் உண்டு – வட்டத்திலிருந்து வெளியே ஓடும் பம்பரத்தை, தன் பாவாடையை விரித்துத் தடுத்து விடுவார்கள் ஓடுவதைத் தவிர்க்க! நான் அந்தக்காலச் சிறுமிகளைச் சொன்னேன்,  பம்பரம்போல பாவாடையும் இப்போது மறைந்து வருகிறது!)

இராமாயணத்தில் ‘பம்பரமாய்ச் சுழன்றான்’ என்று வருகிறது! பெண்களுக்குப் பம்பரக் கண்கள்” என்ற வர்ணனை உண்டு –சுழலுவதாலா? ஆணியால் குத்துவதாலா? என்ற பட்டிமன்றம் நடத்தலாம்!

தரையில் விடும் பம்பரங்கள் சிறுவர்களுக்கு, வித்தியசமாக, நாயகியரின் தொப்புளைச் சுற்றி, கிச்சு கிச்சு மூட்டும் பம்பரங்கள் தமிழ்க் கதாநாயகர்களுக்கு!

ஆணியின்றி மரத்தில் கூம்பு வடிவில் செதுக்கப்படும் பம்பரங்களும்,பிளாஸ்டிக் தட்டு வடிவில்  பம்பரங்களும், ஒன்றன்மேல் ஒன்றாக இரட்டை பம்பரங்களும் இப்போது கிடைக்கின்றன வீட்டில் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்ட அன்று தெருவில், புழுதியில்  ஆடிய  பம்பரங்களுக்கு இவை ஒருபோதும் இணையாக முடியாது!

பம்பரம் இப்போது யாராவது விளையாடுகிறார்களா, தெரியவில்லை.கிராமங்களில்கூட போஸ்டர்களில்  கட்சிச் சின்னமாகத்தான் பம்பரம் தென்படுகிறது!

எஃப் எம் ரேடியோவில் சந்திரபாபு பாடிக்கொண்டிருக்கிறார் – ‘பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே’! கண்களைத் தவிர  இன்று வேறெதுவும் நம்மிடையே இல்லை!!

 

 

 

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

dr1

 

படம் நன்றி: http://consenttobenothing.blogspot.in

 

நேர்மையின் மறுபெயர் ஏ என் சிவராமன்!

 

இந்திய பத்திரிக்கைத் துறையின் பிதாமகர் என்றே சொல்லலாம் – தேசப்பற்று, நாணயம், நேர்மை, மனத் துணிவு, எழுதும் கருத்துக்களில் தெளிவு இப்படிப் பல குணாதிசயங்களின் மொத்த உருவம் திரு ஏ என் எஸ் அவர்கள்.

சென்ற வாரம் டேக் மையத்தில் சதர்ன் ஹெரிடேஜ் சார்பில், கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்கள், தினமணி பத்திரிக்கை ஆசிரியர் மறைந்த திரு ஏ என் சிவராமன் அவர்களைப்பற்றி  (கீழாம்பூரின் அப்பா வழி மாமா தாத்தா  திரு ஏ என் எஸ்) சுமார் தொண்ணூறு நிமிடங்கள் ஓர் அருமையான உரையாற்றினார். –  1904 ல் அவர் பிறந்தது முதல், தனது தொண்ணூற்று ஏழாவது பிறந்த நாளில் (பிறந்த நாளும், இறந்த நாளும் ஒன்றே – மார்ச் 1) இறந்தது வரையிலான சில நிகழ்வுகளைக் கையில் குறிப்பேதுமின்றி, சுவைபடச் சொன்னார் கீழாம்பூர் – அவர் பேசியதிலிருந்து சில பகுதிகளைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்!

1904 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி கொச்சியில் பிறந்தார் ஆம்பூர் நாணுஐயர் சிவராமன் ! அந்தக் கால இண்டர்மீடியட் படித்தவர். தனது படிப்பில் நூற்றுக்கு இருநூறு மார்க்குகள் எடுத்தவர் – சாய்சில் விடவேண்டிய கேள்விகளுக்கும் பதில் எழுதினால் இப்படித்தானே மார்க் கிடைக்கும்! தனது பதினேழாவது வயதிலேயே, காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுக்கொண்டு சிறை சென்றார்! படிப்பும் ஒரு முடிவுக்கு வந்தது!

டிசி வாங்கும்போது, அன்றைய பிரின்சிபால் திரு கே சி போஸ், எந்த நேரத்திலும், படிப்பதை விட்டுவிடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்ளுகிறார் – எப்படிப்பட்ட ஆசிரியர்! சத்தியத்துக் கேற்ப ஏ என் எஸ் அவர்களும், தனது இறுதி மூச்சுவரை நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்குக் குறையாமல் – சில நாட்களில் பதினாறு மணி நேரம் – படித்துக்கொண்டிருந்தார் – இவர் எப்படிப்பட்ட மாணவர்! இன்றைய இளைஞர் சமுதாயம் அறிந்து கொள்ளவேண்டிய நல்லதொரு பண்பு இது!

அன்று ஏ என் எஸ் க்குப் பிடித்த தலைவர் திலகர். அவர் மறைவுக்கு, தாமிரபரணி ஆற்றில் திதி கொடுத்தவர் ஏ என் எஸ்! அதனால் பிரிட்டிஷ் போலீசால் கவனிக்கப்பட்டவர். ஒரு முறை அவரைக் கைதுசெய்ய, அவர் இருக்கும் கிராமத்துக்கு வருகின்றனர் போலீசார் – இடம் கண்டுபிடித்து வந்து கைதுசெய்து, போலீஸ் வானில் ஏற்றிச்செல்ல, வீட்டிலிருந்து, அக்கிரகாரத்தின் முனைவரை அவரது தாய் கூவியபடி வேனுக்குப் பின்னால் ஓடி வருகிறார். அவருக்குத்தான் தன் பிள்ளையின் மீதும், அதைவிடத் தாய்நாட்டின் மீதும் எவ்வளவு பாசம் – கண்ணிலிருந்து வேன்  மறையும்வரையில் அவர் ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என்று உரக்கக் கூவியவாறே ஓடிவருகிறார்!

கல்லிடைக்குறிச்சியில் சில காலம் சுதேசி பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்தார் ஏ என் எஸ் – அப்போது கிடைத்த நேரத்தில், சரித்திரம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். பின்னாளில் தினமணியில் அவரது நேர்மையான தலையங்கங்களுக்கு அடித்தளமாக அமைந்தது இந்தப் படிப்பு!!

அப்போது மிகச் சிறந்த பத்திரிக்கையாளராக இருந்த திரு டி எஸ் சொக்கலிங்கம் அவர்கள் சென்னையில் நடத்திக்கொண்டிருந்த ’காந்தி’ இதழில் ஏ என் எஸ் சேர்ந்தார். அந்த சமயத்தில் இராஜாஜியுடன் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு இருபது மாதங்கள் சிறைத் தண்டனை அடைந்தார். உடன் சிறையில் இருந்தவர் திரு காமராஜ்.

1934 ல் தொடங்கப்பட்ட தினமணிக்கு டி எஸ் சொக்கலிங்கம் ஆசிரியராக, ஏ என் எஸ் அவர்கள் உதவி ஆசிரியர் ஆனார். 1944 ல் சொக்கலிங்கம் தினமணியை விட்டுவிட, ஏ என் எஸ் அவர்கள் தினமணி ஆசிரியரானார். 1987 வரை தினமணியின் ஆசிரியராக அவர் ஆற்றிய பணி, பத்திரிக்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை!

டி எஸ் சி அவர்களும், ஏ என் எஸ் அவர்களும் பத்திரிக்கை உலகின் இரட்டையர்கள் என்றே அழைக்கப்பட்டனர்! பரஸ்பரம் அவர்கள் புதிய கதராடைகளை பரிமாறிக்கொள்ளாமல், ஒரு தீபாவளியும் கடந்ததில்லை!

காஞ்சி மகாப் பெரியவர், ஒரு முறை ஏ என் எஸ் அவர்களிடம் ஒரு கட்டிட வரைபடத்தைக் கொடுக்கிறார் – ஒரு கோயிலுக்கான ‘ஷெட்’.- இதை ஏன் கொடுத்தார் என்பது இருவருக்கும் புரியாத ஒன்று!  திரும்ப வந்த ஏ என் எஸ்,  திரு கோயங்கா அவர்களிடம், இதைப்பற்றிக் கூற, அருகிலிருந்து கேட்டவர், திரு பிர்லா அவர்கள். அரை மணி நேரத்தில் அந்த ஷெட் கட்டுவதற்கான முழுத் தொகையையும் பிர்லா அவர்கள் வழங்கி விடுகிறார்கள். எல்லாமே எதிர்பாராமல் நடக்கின்றன – பிர்லா அவர்களின் காஞ்சித் தொடர்பு, ஏ என் எஸ் அவர்களாலேயே முதலில் ஏற்படுகிறது!

எமர்ஜென்சியை வெளிப்படையாக எதிர்த்த இரண்டு பத்திரிக்கைகளில் ஒன்று தினமணி. சென்சார் கடுமையாக இருந்த காலம் – தலையங்கப் பகுதியை ஒன்றும் எழுதாமல் வெறுமையாக விட்டுவிடுவார் – அல்லது உலக ஜனநாயக நாடுகளைக் கேலி செய்வதுபோல் பகடியாக எமர்ஜென்சியை சாடுவார்!

திரு காமராஜ் அவர்களுக்கும், ஏ என் எஸ் க்கும் அவ்வளவு நெருக்கம். எமர்ஜென்சியில் மனமுடைந்து காமராஜ் மறைந்தபோது, வருந்தி, ஒரு வரி எழுதிவிட்டு, ‘ என் பேனா இனி எழுத மறுக்கிறது ‘ என்றெழுதி சென்சார் இருப்பதைச் சுட்டினார்! எமர்ஜென்சிக்குப் பிறகு, ‘எமர்ஜென்சியின் முதல் பலி (VICTIM) திரு காமராஜ்’ என்று எழுதினார்.(இதனை திரு மெரினா அவர்கள் ஆனந்த விகடனில் குறிப்பிட்டுள்ளார்!).

திரு டி எஸ் கிருஷ்ணா, திரு காமராஜ், திரு கருணாநிதி ஆகிய மூன்று பெரும் ஆளுமைகளின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர். எமர்ஜென்சி சமயத்தில், அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களைச் சந்திக்க, செக்யூரிடிகளுக்குத் தெரியாமல், பேப்பர் கட்டுகளுடன் வேனில் ஏ என் எஸ் பயணித்தது வியப்புக்குரியது!

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஃப்ரென்ச், ஜெர்மன், உருது என இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளை எழுத, படிக்கத் தெரிந்தவர். ஒரிஜினல் குரானைப் படிப்பதற்காக உருது மொழியை ஓர் ஆசிரியர் வைத்துக் கற்றுக்கொண்டார் – அப்போது அவருக்கு வயது எண்பதுக்கும் மேலே!

’கணக்கன்’, ‘அரைகுறைப் பாமரன்’ போன்ற புனைப் பெயர்களில், அறிவியல், பொருளாதாரம், அரசியல் களங்களில் ஏராளமான கட்டுரைகள், பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதியவர் ஏ என் எஸ். ‘மாகாண சுயாட்சி’ பற்றிய புத்தகம் 1928 லேயே எழுதியவர்! ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே’ – கணக்கன் கட்டுரைகள் – ‘நாணயத்தின் மதிப்பு இறங்கியது ஏன்?’ போன்ற புத்தகங்கள் அனைவரும் படிக்க வேண்டியவை! ‘விண்வெளிக்கு அப்பால்’ என்ற இவரது புத்தகம், கலாம் அவர்கள் ஏவுகணைபற்றி அறிந்துகொள்ள ஓர் உந்துதலாக இருந்தது என்று கலாம் அவர்களே குறிப்பிட்டுள்ளார்!

1987 ஆகஸ்ட் – தினமணி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார் – ஆனாலும் படிப்பதையோ, எழுதுவதையோ விட்டுவிடவில்லை!

பத்திரிக்கைத் துறையில் அவரது சேவையைப் பாராட்டி, 1988 ல் அவருக்கு “B.D.GOENKA AWARD” கொடுக்கப்பட்டது!

2001, மார்ச் 1 திரு ஏ என் எஸ் மறைந்தார் – அவர் வாழ்க்கை முழுவதும் நேர்மை, உண்மை, உழைப்பு, படிப்பு, எழுத்து என்று நற்பண்புகளால் நிறைந்தது.

இன்றைய இளைஞர் சமுதாயம் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு தலை சிறந்த பத்திரிக்கையாளர் திரு ஏ என் சிவராமன் அவர்கள்.

திரு கீழாம்பூர் அவர்களுக்கு என் நன்றி – அவர் பேசியதில் மிகக் குறைந்த அளவே இங்கே எழுதியிருக்கிறேன் – ஆனாலும் மனம் நிறைவாய் இருக்கிறது!

 

 

Image may contain: 6 people

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

dr1

(கடைசிப்பக்கம் எழுதிவரும் டாக்டர் ஜெ பாஸ்கரன் அவர்களுக்குக் கலைமகள் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. – வாழ்த்துக்கள் – குவிகம் )

 

 

Related image

ஸ்ட்ரெஸ் – தவிர்க்கப்பட வேண்டிய மனநிலை!

அவர் உள்ளே வரும்போதே நடையில் ஓர் அவசரம் தெரிந்தது – அங்கும் இங்கும் பார்த்தபடி வந்தார். கண்களில் ஒரு வித எதிர்பார்ப்பு. எதிரில் அமர்ந்து கையைப் பிசைந்தபடி இருந்தார். மேலோட்டமாக மூச்சு – இடையிடையே ஆழ்ந்த சுவாசம் என ”ரெஸ்ட்லெஸ்” ஆக இருந்தார்.

‘என்ன பிராப்ளம்?”

பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ஏ4 தாளை எடுத்தார். வரிசையாக, இடமில்லாமல் நெருக்கி இரண்டு பக்கங்களிலும் கேள்விகளால் நிரப்பியிருந்தார்!

“மறந்து விடக் கூடாதே என்றுதான் . . .. .” – என்றவாறே, நெற்றியைக் கைக்குட்டையால் துடைத்தபடி கேட்கத் தொடங்கினார்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஒருவர் மன அழுத்தத்தில் இருந்தால் வரக்கூடியவையே!

இப்போதெல்லாம் சின்னக் குழந்தை முதல் முதியோர் வரை அடிக்கடி பிரயோகிக்கும் சொல் “டென்ஷனா இருக்கு!”  ’ஸ்ட்ரெஸ்’ அல்லது ’மன அழுத்தம்’ என்பது ஒருவித மனநிலையே – அமைதியாய் சிந்திக்கும் அல்லது இலேசான மனநிலைக்கு எதிரானது. 

ஹான்ஸ் செல்யே என்னும் அறிஞர், இப்படிப்பட்ட மனநிலை உடலின் ‘சமநிலை’யை (HOMEOSTASIS) பாதிக்கிறது என்கிறார்.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மனிதர்களைப் பாதிக்க கூடியவை மன அழுத்தம் தரக்கூடிய சூழல்களே (STRESSFUL SITUATIONS)!

நம் உடல் ஸ்ட்ரெஸுக்கு எதிர்வினை ஆற்றுவது, நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

“கேனன்” எனும் அறிஞர், ஸ்ட்ரெஸ் வரும்போது நாம் மூன்று வழிகளில் நம்மையறியாமலேயே எதிர்வினையாற்றுகிறோம் என்கிறார். ஃபைட் (சண்டையிடுதல்), ஃப்ளைட் (ஓடிவிடுதல்) அல்லது ஃப்ரீஸ்  (உறைந்து விடுதல்). – ஏதாவது ஒரு வழியில் நாம் இந்த அழுத்தத்தை எதிர்கொள்ளுகிறோம்!

இந்த எதிர்வினைக்குக் காரணம், நமது மூளைக்குள்ளிருக்கும் ஹைப்போதலாமஸ் – பிட்யூட்டரி –அட்ரினல் தொடர்பினால் சுரக்கும் ‘அட்ரினலின்’,’கார்டிசால்’ போன்ற ஹார்மோன்கள்தான்! இவற்றால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது (பால்பிடேஷன்), இரத்தக் கொதிப்பு (BP) எகிறுகிறது – அதிக வியர்வை மற்றும் கை,கால்களில் நடுக்கம் ஆகியவை ஏற்படுகின்றன!

ஸ்ட்ரெஸில் இருப்பவரது மனநிலை “ஆங்சைடி நியுரோசிஸ்” எனப்படுகிறது. எப்போதும் ஒரு பரபரப்பு, ‘என்ன’ ‘என்ன’ என்பதுபோன்ற ஒரு படபடப்பு, அதிகமான சந்தேகங்கள், சலிப்புகள், கவனக்குறைவு, மறதி, அவசரம் என ஒட்டுமொத்தமான ஒரு ‘திறமைக் குறைவு’ ஏற்படுகின்றது. மனோநிலையில் ஏற்படும் மாற்றங்கள், நமது எண்ணங்களையும், நடத்தைகளையும் மாற்றிவிடுகின்றன!

உள்ளிருந்து வரும் ஸ்ட்ரெஸ் பெரும்பாலும் மனோ ரீதியானது – வெளியிலிருந்து வரும் ஸ்ட்ரெஸ் பெரும்பாலும் உடல் ரீதியானது!

வாழ்க்கையில் ஏற்படும் இழப்பு, இறப்பு, பிரிவு, புதிய முயற்சிகள், இயலாமை, ஏழ்மை போன்றவை பெரும்பாலும் ஸ்ட்ரெஸுக்கு வழிவகுக்கின்றன.

அன்றாட அலுவல்களில் சலிப்பு, தினசரி ஏற்படும் வெறுப்பு, விரோதங்கள், மாற்றங்கள், மன அழுத்தம் இவற்றின் ஒன்றுசேர்ந்த பாதிப்பு – எப்போதும் வெறுப்பேற்றும் நட்பு, அண்டை வீட்டார், உடன் வேலை செய்பவர், போக்குவரத்து நெரிசல், எதிர்பாரா விருந்தினர் – இப்படிப் பல வழிகளில் ஒருவருக்கு அழுத்தம் வரலாம்!

ஸ்ட்ரெஸினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்: 

சோர்வு (மனம், உடல் இரண்டும்!),  வலிகள் (கை,கால் குடைச்சல்), தசைகளில் இறுக்கம், அஜீரணம், வாந்தி, பேதி, மலச்சிக்கல், தூக்கமின்மை, குறையும் நோய் எதிர்ப்பு சக்தி (அடிக்கடி ஜலதோஷம், நோய்த் தொற்று), பாலியல் வெறுப்பு, ஆண்மை குறைவு!

நெஞ்சு வலி, படபடப்பு, இரத்தக் கொதிப்பு, இரத்தக் குழாய்கள் தடிப்பு போன்றவை இதயம் சம்பந்தப் பட்டவை!

மயக்கம், அதிக வியர்வை, தலைவலி (டென்ஷன்), உடல் வலி போன்றவை நரம்பு சம்பந்தப் பட்டவை!

தசை இறுக்கத்தினால், கழுத்து, முதுகு வலி, ‘நரம்பு’ இழுத்தல் ஆகியவையும் ஏற்படும்.

நீண்ட நாளைய ஸ்ட்ரெஸ், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.

இவ்வளவு கெடுதல்களை விளைவிக்கக்கூடிய ஸ்ட்ரெஸ் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் – அதிலிருந்து வெளியே வரும் வழியை அறிந்து, காரணத்தைத் தவிர்த்துவிட்டால், நிவாரணம் நிச்சயம்!

மேலே குறிப்பிட்ட நபரின் நேர நிர்வாகம், அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நட்பு, பணியில் அணுகுமுறை போன்றவற்றால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தது!

மன நல ஆலோசகர் மூலம் அவருக்குக் கவுன்சலிங் கொடுக்கப்பட்டது! யோகா, மெடிடேஷன் ஆகியவையும் உதவின.

மருந்துகளை விட, பிராணாயாமம், யோகா, மெடிடேஷன், உடற்பயிற்சி, உணர்வுகளை மனதில் தேக்கி வைக்காமல், பகிர்ந்து கொள்ளுதல், சரிவிகித உணவு, முறையான நல்ல தூக்கம், நேர நிர்வாகம், நல்ல நட்பு, இசை, போன்றவை அதிக அளவில் உதவக் கூடும்!

மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது ஒரு கலை – அதை அனைவரும் பின் பற்றுவது, தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்க்க உதவும்!

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

  

 

 

 

 

 

 

 

 

 

 

ஃப்ளாஷ் பேக் – விழா!

சுமார் 30-40  வருடங்களுக்கு முன்னால் –

அதாவது  டிவி,நெட்,யூடியூப் எல்லாம் நம்மை ஆக்கிரமிப்பு செய்யும் முன்பு  சினிமா மட்டுமே ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்தது. அப்போதைய சினிமாக்கள் கூடியவரையில் நல்லனவற்றையே, கலை நயத்துடன் சொல்லி வந்தன. ஓரிரண்டு கலைஞர்களைத் தவிர, மற்றவர்கள் சினிமாவை   அதன் பெருமைக்காகவும் , கலை வளர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்திவந்த பொற்காலம் –

தங்களது திறமையாலும், தொழில் மீது கொண்ட பக்தியாலும், படைப்புகளாலும் மட்டுமே பெயர் பெற்ற மூன்று பிரபலங்களுக்கு  11-3-2018 ஞாயிறன்று மாலை ஒரு பாராட்டு விழா நடைபெற்றது – மூன்று மணி நேரம், இனிமையான ’அந்தக் கால சினிமா’ நினைவுகளில் கரைந்தது!

சென்னை ‘ரசிகாஸ்’  கலை மற்றும் பண்பாட்டு அமைப்பின் சார்பில், திரு.முக்தாசீனிவாசன் (மூத்த திரை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்) திரு.சித்ராலயா கோபு (மூத்த வசனகர்த்தா, மற்றும் இயக்குனர்), திரு.C.V.ராஜேந்திரன் (மூத்த திரைஇயக்குனர்) ஆகியோருக்கு விருது மற்றும் பாராட்டு விழா – திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தத் திரை உலக ஜாம்பவான்களின் பங்களிப்பு, தமிழ்த் திரையுலக வரலாற்றில் மகத்தானது, மறக்க முடியாதது. பேரா.பிரகாசம், டெல்லி கணேஷ், சித்ரா லக்‌ஷ்மணன், ரமேஷ் கண்ணா, மோகன்ராம், காந்தி கண்ணதாசன், எம்எஸ்வி ஹரிதாஸ் என ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம் – பேசுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் ஏராளமான விபரங்கள் – நேரமோ குறைவு.   இருந்தாலும் கிடைத்த நேரத்தில் அனைவரின் பங்களிப்பும் சுவையாகவும், சிறப்பாகவும் இருந்தது.

முக்தா V சீனிவாசன்:

எண்பத்தி எட்டு வயதானவர். 1947ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் ‘கிளாப்’பாயாகச் சேர்ந்தவர், பத்து வருடங்களில் தானே ஒரு படத்தை இயக்கி, அரசு விருதைப்பெறும் அளவுக்கு உயர்ந்தார். முதல் படம் முதலாளி (ஏரிக்கரையின் மேலே புகழ்), தொடர்ந்து ஏராளமான வெற்றிப் படங்கள்.  திட்டமிட்ட நேர்மையான உழைப்பு அவரைத் தயாரிப்பாளர் நிலைக்கு உயர்த்தின. தன் சகோதரர் திரு முக்தா ராமசாமி, தயாரிப்பு நிர்வாகத்தைத் திறம்படக் கவனிக்க, வெற்றிமேல் வெற்றிப் படங்கள் முக்தா பிலிம்ஸில் உருவாயின!

இதயத்தில் நீ, பனித்திரை, தவப்புதல்வன், அந்தமான் காதலி, கீழ்வானம் சிவக்கும், அவன் அவள் அது, சூரியகாந்தி போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்தார். திரு.சோ அவர்கள் திரைக்கதை வசனத்தில் வந்த அத்தனைப் படங்களும் வெற்றிப் படங்களே – பொம்மலாட்டம் படப் பாடலை – வா வாத்தியாரே வூட்டாண்டே, நீ வராங்காட்டினா வுடமாட்டேன் – திரு சீனிவாசன் அவர்கள் மேடையிலேயே பாடி மகிழ்ந்தார்!

ஆரம்ப காலங்களில் கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார் – பின்னர் காங்கிரஸ் அவரை அரவணைத்துக் கொண்டது. தானே இராட்டையில் நூல் நூற்பார் – காந்தீயக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பார் – இன்றும் கதர் ஆடைதான் – விடுமுறைநாட்களில் மெளன விரதம்!

அவர் எழுதிய ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’ – தொடராக துக்ளக் இதழில் வெளிவந்தது –ஒரு முக்கியமான ஆவண நூலாகத் திகழ்கிறது. நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். நான்கு வேதங்களைப் பற்றிய நூல் – சதுர்வேதி –எல்லோருக்குமானது, எளிமையானது.

ஏற்புரையில் அவரது நினைவாற்றலும், மனித நேயமும், நேர்படப் பேசும் தன்மையும்ஒருங்கே வெளிப்பட்டது!

சி.வி.ராஜேந்திரன்:

’தென்னிந்திய சாந்தாராம்’ எனப் புகழப்பட்ட டைரக்டர் ஸ்ரீதரின் சகோதரர் இவர். மீண்டசொர்க்கம் முதல் அவருக்கு அசிஸ்டெண்டாய், அசோசியேட்டாய்ப் பணிபுரிந்தவர். தனது படங்கள் எல்லாம் சிறப்பாக அமைந்ததற்குக் காரணம் ஸ்ரீதரிடம் தான் கற்றுக்கொண்ட சினிமாதான் என்கிறார். நில் கவனி காதலி, வீட்டுக்கு வீடு,கலாட்டாக் கல்யாணம், சுமதி என் சுந்தரி, ராஜா, நீதி, வாழ்க்கை, சிவகாமியின்செல்வன் என இவரது வெற்றிப்படப் பட்டியல் தொடர்கிறது. பாடல் காட்சிகளைப்படமாக்குவதில் இவருக்கு இணை இவரேதான் என்ற பெயர் பெற்றவர்.

‘சித்ராலயா’ கோபு:

1936 ஆம் ஆண்டு பிறந்த இவர் டைரக்டர் ஸ்ரீதரின் பால்ய சிநேகிதர். தன்னுள்ளிருந்த ‘ஹ்யூமரிஸ்ட்’டை      வெளிப் படுத்தியவர் ஸ்ரீதர்தான் என்கிறார். ஸ்ரீதருடன் ஆரம்ப காலம் முதல் பணியாற்றியவர். எல்லாப் படங்களின் நகைச்சுவைப் பகுதிகளையும் எழுதியவர். காதலிக்க நேரமில்லை படத்தின் டைட்டில் கார்டில் ”கதை,வசனம் – ஸ்ரீதர் – கோபு” என்று தனக்கு நிகரான அந்தஸ்தைக் கொடுத்த ஸ்ரீதரைப்பற்றிப் பெருமைப்படுகிறார். இவர் முதன் முதலாக டைரக்ட் செய்த படம், ஏவிஎம் மின் “காசேதான் கடவுளடா”! மிகச் சிறந்த, நல்ல நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரர்– காதலிக்க நேரமில்லை, கலாட்டாக் கல்யாணம், சுமதி என் சுந்தரி, வீட்டுக்கு வீடு,உத்தரவின்றி உள்ளே வா போன்ற நல்ல நகைச்சுவைப் படங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவையே! சோவுடன் தனக்கிருந்த தனிப்பட்ட நட்பை மிகவும் சிலாகித்துக் கூறுகிறார்.

ஸ்ரீதர், நடிகர் திலகம், கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன், ஆகிய திறமை மிக்ககலைஞர்களுடன் பணி புரிந்ததைப் பெருமையாக எண்ணி மகிழ்கின்றனர் சி விஆரும், கோபுவும்!

நிகழ்ச்சி துவங்குமுன்,  சுமார் 35 நிமிடங்களுக்கு, இந்த மூன்று ஜாம்பவான்களின்படங்களிலிருந்து வசனம் மற்றும் சில காட்சிகளின் ”க்ளிப்பிங்” காட்டப்பட்டது.அரங்கத்தில் எழுந்த கைதட்டல்களும், சிரிப்பும், மகிழ்ச்சியும் இவர்களின் புகழை உரத்துச் சொல்வதாய் அமைந்திருந்தன !

ஓர் இனிமையான ஃப்ளாஷ் பாக்” தான் – சந்தேகமே இல்லை!

Image result for காதலிக்க நேரமில்லை  Image result for காதலிக்க நேரமில்லை   Image result for vaa vaathyare uttaande song by cho

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

Image result for உ வே சா

”தமிழ்த் தாத்தா” உ.வே.சா. – (1855 – 1942) சில குறிப்புக்கள் !

 

குவிகம் இலக்கிய வாசல் மற்றும் இலக்கிய சிந்தனை நடத்திய கூட்டத்தில் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்கள், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர்பற்றி உரையாற்றினார். ஒரு மணி நேரத்திற்குள், அழகாக, சுவாரஸ்யமான தகவல்களை தனக்கே உரிய நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார் – அவரது நினைவாற்றல் வியக்கவைத்தது!

உ.வே.சாமிநாத அய்யர், உத்தமதானபுரம் அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் வெங்கட்ராமன். (பின்னர் சாமிநாதன் என பெயர் மாற்றியவர் குருநாதர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை).

குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கும், சாமிநாத அய்யருக்கும் இடையே இருந்த குரு – சிஷ்ய உறவு மிகவும் வியக்கத்தக்கது.

19 ஆம் நூற்றாண்டின் சங்க இலக்கியப் பதிப்புகளுக்கு முக்கியக் காரணமானவர் திரு உ.வே சா அவர்கள்.- இவரது பதிப்புகள் “ஐயர் பதிப்பு” எனச் சிறப்புடன் குறிப்பிடப்படுகின்றன.

இவரது ‘என் சரித்திரம்’ புத்தகம், சுயசரிதைகளில் சிறப்பானது – இவர் ஏடுகளைத் தேடுவதற்கும், பிரதிகள் எடுப்பதற்கும் எடுத்துக்கொண்ட சிரமங்கள், தமிழ் வித்வான் பட்டம் பெற்றது, மற்றும் அன்றைய கல்வி முறை, பதிப்புத் துறையில் இருந்த தடங்கல்கள்  என அந்தக்கால சூழல்களை மிகச் சிறப்பாகச் சொல்லிச் செல்கிறது அவரது சரித்திரம்! அவருக்குப் பிறகு, அவரது வாழ்க்கை வரலாற்றில் விடுபட்டவற்றை – அவர் இறக்கும் வரையிலான நிகழ்வுகளை – திரு கி.வா ஜ அவர்கள், “என் ஆசிரியப்பிரான்” என்ற நூலில் தொடர்கிறார் என்பது பலருக்குச் செய்தியாக இருக்கக்கூடும்.

உ.வே.சா. நல்ல இசை ஞானம் உடையவர். கோபாலகிருஷ்ண பாரதியிடம் சில காலம் இசை பயின்றார் – இசையிருந்தால், இலக்கிய இலக்கணத்தில் புத்தி செல்லாது என குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொன்னதால், இசையை விட்டார். ஆனாலும், மிகவும் விருப்பமுடன் செய்யுட்களை ராகத்துடன் பாடி, மாணவர்களுக்கு வகுப்பெடுப்பார்!

மீ. சு. பிள்ளையவர்களின் மாணவர் திரு தியாகராஜச் செட்டியார் ஓய்வு பெறவே, அந்தப் பணியிடத்துக்கு சாமிநாத அய்யர் அவர்களைப் பரிந்துரைக்கிறார் – அவரது முதல் வேலைக்கான சம்பளம் மாதம் ஐந்து ரூபாய்!

சங்க நூல்கள் பதிப்பு, என் சரிதம் இவை தவிர, திரு உ வே சா அவர்கள் எழுதிய கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. அந்தக் காலத்தில் நிலவிய மனித நேயம், நேர்மை, இயற்கைச் சூழல் என மிகத் தெள்ளிய தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளக் கூடியவாறு எழுதியிருப்பார். சுதேசமித்திரன், கலைமகள், தினமணி, ஆனந்த விகடன், தாருல் இஸ்லாம், தென்னிந்திய ‘வர்தமானி’ போன்ற பத்திரிகைகளில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. காலமாற்றத்திற்கேற்ப, எளிமையான தமிழில் உள்ள கட்டுரைகளைப் படிக்கும்போது, உ.வே சா அவர்களின் தமிழ்ப் புலமை நம்மை வியக்க வைக்கிறது.

அவர் தனது குருநாதருடைய வாழ்க்கையை, ’ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்னும் உரைநடை நூலாக – இரண்டு பகுதிகளாக, மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.  இது தவிர, தியாகராஜச் செட்டியார், கனம் கிருஷ்ணய்யர், கோபாலகிருஷ்ண பாரதியார், மகா வைத்தியநாதய்யர் ஆகியோரது வரலாறுகளையும் எழுதியுள்ளார்.

சாஸ்திரீய சங்கீத விரிவான பதிவுகள், தல புராணங்கள், செவி வழிக் கதைகள், கட்டுரைகள் என இவரது எழுத்துலகம் பரந்துபட்டது.

சங்கராபரணம் நரசயர் கதை:

தஞ்சாவூரை ஆண்ட மஹாராஷ்டிர மன்னர் ஒருவர், மிகச் சிறப்பாக ‘சங்கராபரணம்’ பாடிய நரசயர் அவர்களை மிகவும் புகழ்ந்து, பரிசுகள் கொடுத்து ‘சங்கராபரணம் நரசயர்’ என்ற பட்டமும் கொடுத்துக் கெளரவித்தார்.

ஒரு சமயம் நரசயருக்கு எதிர்பாராத செலவு – அதனால் கடன் வாங்க கபிஸ்தலத்தில் இருந்த இராமபத்திர மூப்பனார் என்னும் செல்வந்தரை அணுகினார்., இசையில் மிகுந்த ஆர்வமும், ஞானமும் உடைய மூப்பனார், ‘கடனுக்கு அடகு வைக்க ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்க, “கண்ணால் காண முடியாது, காதால் கேட்கலாம். காலத்திற்கும் அழியாதது, இன்பத்தைத் தருவது – என் சங்கராபரணம் ராகமே – அதனை அடகு வைக்கிறேன் – தங்கள் பொன்னைத் திருப்பித் தரும் வரையில், நான் அதை எங்கும் பாடுவதில்லை என்று உறுதி கூறுகிறேன்” என்று சொல்லிக் கடன் பத்திரம் எழுதிக் கொடுக்கிறார். சொன்னவாறே எங்கும் சங்கராபரணம் ராகத்தைப் பாடாமலேயே  இருக்கிறார்.

கும்பகோணத்தின் பெரும் செல்வந்தர் அப்புராயர் வீட்டுக் கல்யாணத்தில், எல்லோரும் விரும்பும் சங்கராபரண ராகத்தைப் பாட மறுக்கிறார் நரசயர். மூப்பனாரிடம் சங்கராபரணத்தை அடகு வைத்த விபரத்தையும் கூறி, கடனைத் திருப்பித் தந்தால்தான் அந்த ராகத்தைப் பாடமுடியும் என்பதையும் விளக்குகிறார் நரசயர். உடனே ராயர், பொன்னையும், அதற்கான வட்டியையும் செலுத்தி, பத்திரத்தை மீட்டு வர, ஒருவரை அனுப்புகிறார்.

இராமபத்திர மூப்பனார் மகிழ்ந்து, அந்தத் தொகையோடு, மேலும் ஒரு தொகையையும் எடுத்துக்கொண்டு கும்பகோணம் வருகிறார். “ஐயர் அவர்கள் கடனாகக் கேட்டதால் எனக்கு வருத்தம் உண்டாயிற்று. அவர்களுக்குப் பயன்படுத்தாமல் வேறு என்ன செய்வதற்கு நான் செல்வம் படைத்தேன்? விளையாட்டாய் அடகு வைத்தவர், இன்று வரையில் அந்த ராகத்தை எங்கும் பாடவில்லை – அது அவரது உயர்ந்த குணத்தையும், உண்மையையும் காட்டுகிறது” என்று கூறி, மனம் மகிழ்ந்து, முழுத் தொகையைத் திருப்பியதோடல்லாமல், சங்கராபரணத்தை அத்தனை காலம் சிறை செய்ததற்கு அபராதமாக ஒரு தொகையையும் சேர்த்துக் கொடுக்கிறார்.

இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் உ.வே.சா அவர்களின் கட்டுரைகளும், சொல்லோவியங்களும் படிக்கப் படிக்கத் திகட்டாதவை!

மேலும் “செண்டு” என்ற சொல்லுக்குப் பொருளை ஒரு கோயில் பூசாரியிடமிருந்து தெரிந்து கொள்கிறார். ‘ஆட்டிடையன் வெட்டு’ என்பதன் பொருளை கிராமத்தில் ஆடு மேய்க்கும் கிழவனார் ஒருவரிடம் இருந்து தெரிந்து கொள்கிறார்! தமிழைக் கற்றுக் கொள்வதில் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் பார்க்கவில்லை தமிழ்த் தாத்தா அவர்கள்!

 

”அன்னியர்கள், தமிழ்ச்செவ்வி அறியாதார்

இன்று எம்மை ஆள்வோரேனும்,

பன்னியசீர் மஹாமஹோ பாத்தியா

யப்பதவி பரிவின் ஈந்து,

பொன்நிலவு குடந்தைநகர்ச் சாமிநா

தன்தனக்குப் புகழ் செய்வாரேல்,

முன்இவன் அப்பாண்டியர்நாள் இருந்திருப்பின்

இவன் பெருமை மொழியல்ஆமோ?

என்கிறார் மகாகவி பாரதி!

 

”சாமிநாத ஐயர் தமிழிலே பிறந்தார்; தமிழிலே வளர்ந்தார்; தமிழிலே வாழ்ந்தார். அவர் பிறப்புந் தமிழ், வளர்ப்புந் தமிழ்; வாழ்வுந் தமிழ். அவர் மனமொழி மெய்களெல்லாம் தமிழே ஆயின. அவர் தமிழாயினர்; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ்; தமிழ் அவர்.”  –  திரு.வி.க.

 

(ஆதாரம்: 1.முள்ளால் எழுதிய ஓலை – செவிவழிக்கதைக் கட்டுரைகள் – உ.வே.சாமிநாதையர் – காலச்சுவடு பதிப்பகம்.

  1. நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும் – டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை -90).

 

 

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

“தூளி” யில் துயிலும் சிந்தனைகள்!

dr1

கே கே நகரின் குறுகிய சந்து ஒன்றில் திரும்பினேன்; மூன்று மாடிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று முளைத்துக்கொண்டிருந்தது. வாசலில் செங்கற்கள், சிமெண்ட்-மணல் கலவை, சற்றுத்தள்ளி, சரளைக் கற்களை சிமெண்டுடன் கலக்கும் வாய்பிளந்த பெரிய இரும்புக் கலவை இயந்திரம் – இவற்றையெல்லாம்தாண்டி அந்த வீட்டு வேப்ப மரக்கிளையில் வெளிறிய நீலத்தில் வெள்ளைப் பூக்கள்போட்ட கிழிந்த புடவை தூளியாய் ஒரு குழந்தையுடன் தொங்கிக்கொண்டிருந்தது!

Related image

“ஆள் ஆரவாரமற்றுக் கிடக்கிறது                                                                                    வேப்ப மரத்தில் தூளி”

எங்கோ படித்த கவிதை வரிகள் நினைவில் வந்து, மனதில் தூளி ஆடின!

தூளி, ஏணை, புழுது, குழந்தைத் தொட்டில் (CRADLE CLOTH) எனப் பல பெயர்கள் – நம் கலாச்சார பாரம்பரியம் பேசும் இவ்விதத் ”தூளிப் படுக்கை”கள் இப்போதெல்லாம் அரிதாகவே தென்படுகின்றன!

“காடா” துணியில் (முரட்டு, பழுப்புநிறக் காட்டன் துணி) ‘ஏணை ரெட்டு’ என்று இருமுனைகளையும் தைத்துத் (லுங்கிமாதிரி) தூளியாய்த் தொங்கவிடுவார்கள்.

வீசி ஆட்டினாலும் தரை குழந்தையைத் தொடாதவாறும், விழுந்தாலும் அடிபடாதவாறும், தரையிலிருந்து இரண்டு அடி உயரத்துக்குள் தூளி கட்டப்படும் – தூளித் துணியின் இரண்டு முனைகளையும் நல்ல கயிற்றால் இறுகக்கட்டி, தேவைக்கேற்ற உயரத்தில் பரண் சட்டத்திலோ, கூரையின் விட்டத்திலோ தொங்கவிடப்படும்!

ஒரு சுங்கடிப் புடவையைக் கொசுவி, விட்டத்தில் சொருகி, இழுத்து, இரண்டு முனைகளையும் சேர்த்து முடிந்து தூளி கட்டிவிடுவாள் அம்மா! தூளியைக் கொஞ்சம் தொங்கியமாதிரி இழுத்து ‘தாங்குமா?’ என்று ‘சரி’ பார்ப்பாள்! சில சமயங்களில் நான் (பள்ளிச் சிறுவனாக என்று அறிக!) உட்கார்ந்து பார்ப்பதுவும் உண்டு. இருந்தாலும் ‘பெரியவர்கள் தூளியிலாடக்கூடாது, குழந்தைக்குத் தலை வலிக்கும்’ என்பாள் – அதன் காரணம் இன்றுவரை எனக்குத் தெரியாது. (தெரிந்தவர்கள் உதவலாம்!).

பள்ளி நாட்களில் என் கடைசித் தம்பியையும் (பதினைந்து வயது வித்தியாசம்!), பின்னர் எங்களுடன் தங்கிய என் சித்தியின் குழந்தையையும் இரவு முழுவதும் தூளியில் ஆட்டியவாறே, நான் தூங்கி வழிந்த நாட்கள் மறக்கமுடியாதவை.

இரவில் குழந்தை தூளியை நனைத்துவிட்டால், கொஞ்சம் இந்தப்பக்கம், அந்தப்பக்கம் இழுத்து, ஈரமானபகுதி மேலேயும், காய்ந்தபகுதி கீழேயும் வரவைத்துக் குழந்தையைத் திரும்பவும் தூளியில்விடுவாள் அம்மா – ஈரத்தில் அழுத குழந்தை, சிரித்தபடியே தூங்கிப்போகும்! தூக்கத்தில், ஒருகால் அல்லது ஒருகை, சில சமயம் தலை தூளியிலிருந்து எட்டிப்பார்க்கும். கிழிந்த புடவையிலிருந்து எட்டிப்பார்க்கும் கால், வீட்டின் வறுமை சொல்லும்!

குழந்தைக்குக் காற்றும், வெளிச்சமும் வருவதற்காக, தூளிக்கிடையில் குறுக்காக ஒரு மரக்கட்டையை – (வேலைப்பாடமைந்த வர்ண மர உருளைகள் வசதியுள்ளவர்களுக்கு!) – வைத்து சிறிது அகலப்படுத்துவதும் உண்டு! கிலுகிலுப்பை, பொம்மைகளைக் கட்டிவிட்டால், மல்லாந்து படுத்திருக்கும் குழந்தை அதைப் பார்த்தவாறே சிரித்து, விளையாடி, தூங்கிவிடும்!

குழந்தை அழுகையின் டெசிபலைப் பொறுத்து, தூளியை வீசியோ, முன்னும் பின்னும் குலுக்கியோ ஆட்டுவது நல்ல பலனைக் கொடுக்கும்! தூளியில் ஒரு கயிற்றைக்கட்டி, தள்ளி அமர்ந்து, ஒரு கையில் புத்தகம் வைத்துப் படித்துக்கொண்டே, மறுகையால் சோம்பலாய்க் கயிற்றை இழுத்து ஆட்டுவது, படிக்கும் புத்தகத்தின் சுவாரஸ்யத்தைப் பொறுத்து சீராகவோ, கோணலாகவோ அமையும்! புதிதாய்ப் பாட்டு கற்றுக்கொள்பவர்களுக்கும், பாத்ரூமில் சாதகம் செய்பவர்களுக்கும், பாடிக்கொண்டே தூளி ஆட்டுவது நல்லதொரு வாய்ப்பாக அமையும் – குழந்தை பயந்து தூங்கும் வரை!

தூளி ஆட்டுவதை மெதுவாக நிறுத்தினால், கை, கால் அசைவு, அல்லது ‘உம்’ என்ற சத்தம் மூலம் குழந்தை தொடர்ந்து ஆட்டச் சொல்வது சில சமயங்களில் நம் பொறுமையை சோதிக்கும்!

தமிழ் சினிமவின் ஏழ்மைக்கான குறியீடு தூளி – மரத்திலோ, குடிசையிலோ தொங்கும்.புடவைத் தூளி, சோகத்தையும் சேர்த்தே சொல்லும். கணவனை இழந்த (அ) கணவனால் கைவிடப்பட்ட ஓர் அபலைப் பெண் தன் குழந்தையைத் தூங்க வைப்பது தூளியில்தான் – அவளே பாடுவதாகவோ அல்லது இசையமைப்பாளர் குரல் பின்னணியில் பாடுவதாகவோ, ஒரு தத்துவம் கலந்த சோகப்பாட்டு நிச்சயம் உண்டு (பீடி, சிகரெட் பிடிக்க சிலருக்கு இது எக்ஸ்ட்ரா இடைவேளை!).

ஹை பிச் ”ஆரீராரோ….”, மரக் கிளையில் தூளி, கண்ணீருடன் ரவிக்கை போடாத அம்மா (ஏழ்மை காரணமில்லை – விரக்தி அல்லது உடை பற்றாக்குறை!). ஒரு ஹை கிரேன் ஷாட் – ஒரு ஜூம் அவுட் லாங் ஷாட் – தியேட்டரில் கண்ணீரும் கம்பலையுமாகத் தாய்குலம் – எழுபதுகளின் கிராமீய மணம் கமழும் படங்களில் இது ரொம்ப பிரசித்தம் !

பணக்காரக் குழந்தைக்குத் தொட்டில் – தொங்கும் பிளாஸ்டிக் பொம்மைகள், சுழலும் கிலுகிலுப்பை, கை தட்டும் பபூன் எல்லாம் உண்டு – தூளி கிடையாது!

ஐம்பது வயதுத் தமிழ்க் கதாநாயகன், தூளியில் உட்கார்ந்து கொண்டு, கையையும், காலையும் உதைத்துக் கொண்டு, கையில் ஃபீடிங் பாட்டிலுடன், இருபது வயதுக் கதாநாயகியைப் பார்க்கும் காதல் பார்வை (கழுகுப் பார்வை), ரசிகக்குஞ்சுகளுக்கு குஷியாய் இருக்கலாம் – ஆனால் அது தூளிக்கு அவமானம்!

கர்மயோகி ‘சாவித்ரி’ புத்தகத்தில் (அரவிந்தர் புத்தகத் தமிழாக்கம்), “விதியின் விளையாட்டு, விரும்பி நாடிய ஏணை தூளி” என்கிறார். தமிழ் இலக்கியங்களில் தூளிக்குத் தனி இடம் உண்டு!

தூளியினால் ஏற்படும் சில மருத்துவ நன்மைகள் வியக்க வைக்கின்றன – நம் முன்னோர்கள் இவற்றை அறிந்துதான் தூளியை உருவாக்கினார்கள் என்று ஜல்லியடிக்க விரும்பவைல்லை. ஆனால் ஆராய்ச்சியில் கண்டறிந்த சில உண்மைகள் இன்றைய தலை முறையினரைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கும்.

  • ‘ஆட்டிசம்’ குழந்தைகளுக்கு ‘SENSORY’ OCCUPATIONAL THERAPY க்குத் தூளி பயன்படும்.
  • குழந்தைகளின் சமநிலை உணர்வுக்கு (BALANCING SENSE) தூளி உதவுகிறது.
  • குதிப்பது, ஊஞ்சலில் ஆடுவது, குட்டிகரணம் போடுவது, ஸ்கேடிங் – இவற்றின் ஆரம்பப் பயிற்சியாய் தூளி இருக்கிறது.
  • தூளியின் அரவணைப்பில் குழந்தை அமைதிப்படுகிறது. பாதுகாப்பு உணர்வு மேம்படுகிறது.
  • முழு உடலுக்கும் சப்போர்ட் கொடுத்து, குழந்தை வளைந்து, நெளிவதற்குத் தோதாக இருக்கிறது.
  • தன் உடல் அசைவது பற்றிய அறிதலும், பறத்தல் உணர்வும், நிலைப்படுதல் உணர்வும் குழந்தைக்கு ஏற்படுகிறது.

அம்மாவின் சீலையில் தூளி ஆடுவதால், அம்மாவின் மணத்துடன் மடியில் உறங்கும் நிம்மதியும், அமைதியும் குழந்தைக்குக் கிடைக்கிறது – தூளியும் ஒரு வகையில் அரவணைக்கும் அம்மாதானோ?

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்..

dr1

 

பாக்கியம் ராமசாமி என்கிற ஜ ரா சுந்தரேசன்

Image result for ஜ ரா சுந்தரேசன்

டாக்டர் பாஸ்கர் இருக்கிறார்……………  

கோடானு கோடி வாசகர்களைத் தன் நகைச்சுவை எழுத்துக்களால் மகிழ்வித்துவந்த பாக்கியம் ராமசாமி என்கிற ஜ.ரா.சுந்தரேசன், தனது எண்பத்தி ஏழாவது வயதில் மறைந்தார்.

சேலம் ஜலகண்டாபுரத்தில் பாக்கியம் – ராமசாமி தம்பதிகளுக்கு செப் 1930ல் பிறந்தவர், தனது இறுதி மூச்சுவரை  தன் நகைச்சுவை எழுத்துக்களால் மகிழ்வித்தவர்..

ஜ.ரா.சுந்தரேசன் என்ற இயற்பெயரில் சீரியஸ் விஷயங்களையும், பாக்கியம் ராமசாமி (தன் தாய் தந்தை பெயர்கள்!)என்ற புனைப்பெயரில் ஹாஸ்யம் நிறைந்த கதை, கட்டுரைகளையும் எழுதுவார். இறுதி மூச்சுவரை நகைச்சுவையே வாழ்க்கை முறையாகக்கொண்டு வாழ்ந்தார் என்றால் அது சிறிதும் மிகையே அல்ல. எப்போதும் சிரிப்பு, ஹாஸ்யம், மகிழ்ச்சிதான் – அவருக்கும், அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும்!

குமுதம் பத்திரிகையில் 37 ஆண்டுகள் துணை ஆசிரியர் பணி.(அதற்கு முன்பு தமிழ்வாணன் அவர்களின் கல்கண்டு பத்திரிகையில் வேலை என்பது உபரிச்செய்தி!). இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கதைகள், சுமார் 30 நாவல்கள், கட்டுரைகள் என எழுதிக் குவித்துள்ளார்!

இன்றளவும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவிவரும் அப்புசாமி – சீதாப்பாட்டி 1963 ஆம் வருடம் குமுதத்தில் முதன்முதலில் தோன்றினர். அவர்கள் உருவானதே ஒரு சுவாரஸ்யமான கதை!

அந்த வாரக் கதை எழுதாததற்கு வீட்டில் நடந்த  ஒரு சண்டையைக் காரணமாகச் சொன்னார் ஜராசு. குமுதம் ஆசிரியர் உடனே அதையே  ஒரு கதையாக எழுதச்சொல்கிறார்! வயதான தாத்தாவும் பாட்டியும் சண்டை போடுவதாகக் கதை எழுதச்சொல்கிறார் – தாத்தா அசடு கேரக்டராகவும், (பொடி போடுவது, மெட்ராஸ் தமிழ் பேசுவது, நண்பர்களுடன் பட்டம் விடுவது எல்லாம் பின்னால் வந்து ஒட்டிக்கொண்ட ரகளைகள்!) பாட்டி ஆங்கிலம் பேசும், ரீடர்ஸ் டைஜஸ்ட் படிக்கும் மாடர்ன் கேரக்டராகவும் அமைக்க முடிவு செய்கின்றார் ஜராசு! பாட்டிகள் முன்னேற்றக் கழகம், போட்டிகள், விரோதங்கள் என விரிவடைந்து, எப்போதும் பாட்டியே தாத்தாவை வெற்றிகொள்வதாக அமைந்த அத்தனை கதைகளும், நாவல்களும் மறக்கமுடியாத நகைச்சுவை விருந்துகள்!. முதல் கதை 1963 ஆம் ஆண்டு குமுதத்தில் வெளியானது – இன்றும், 54 வருடங்களுக்குப் பிறகு, அந்த தாத்தா, பாட்டி எலியும் பூனையுமாக ரகளையடித்து வருவது பாக்கியம்  சார் தமிழ் நகைச்சுவை இலக்கியத்துக்குக் கொடுத்துள்ள பெரும் கொடையாகும்.

பாக்கியம் சார் எழுதுகிறார்: “அப்புசாமி சீதாப்பாட்டி கதாபாத்திரங்களுக்கு இன்றைய தேதியில் 42 வருடம் (இன்று 54 வருடம்!) ஆகிறது. அதாவது 42 வருடங்களாக அந்த இரு பாத்திரங்களும், அவர்களது பட்டாளமும் என் கட்டுப்பாட்டுடனோ, கட்டுப்பாடு இல்லாமலோ தமிழகத்தில் கொட்டமடித்து வருகிறார்கள். தமிழ் கூறும் நல்லுலகம் கோமாளி அப்புசாமியை மன்னித்து, விரும்பி, ரசித்து ஆதரித்து வருகிறார்கள்”

பக்கத்து வீட்டில் அகாலத்தில் கதவுதட்டும் அப்பு சாஸ்திரியின்மீது மகா எரிச்சல்  – அவரது பெயரையே தாத்தாவுக்கு வைத்ததாகச் சொல்கிறார் பா.ரா.  பாட்டிக்கு சீதாலட்சுமி என்றும் பெயர் வைக்கிறார். பின்னர் ஆசிரியர் சொன்னதன் பேரில், அப்புசாமி, சீதாப்பாட்டி நாமகரணம் நடக்கிறது – தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நகைச்சுவைத் தம்பதிகள் இவர்களாகத்தான் இருக்க முடியும்!!

அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும், 1001 அப்புசாமி இரவுகள், மாணவர் தலைவர் அப்புசாமி (தொடர்களாக வந்தவை ), பீரோவுக்குப் பின்னால், நானா போனதும், தானா வந்ததும், தேடினால் தெரியும் (கட்டுரைகள்) மற்றும் பல சிறுகதைத் தொகுப்புகள் மிகவும் சுவாரஸ்யமானவை!

இரண்டு ரிக்‌ஷாக்காரர்கள் மெட்ராஸ் பாஷையில் பேசிக்கொல்வதுபோல் எழுதிய பகவத் கீதை, “பாமரகீதை” – மிக எளிமையாக, எல்லோருக்கும் புரியும்படி சிறப்பாய் எழுதியிருப்பார்.

ஒரு வீணை மேஸ்ட்ரோவின் கதையை, ஃப்ளூட் ரமணி சொல்ல, அதைக் கதையாக எழுதினாராம் ஜராசு, திரு சாருகேசி சொல்கிறார்.

’சுதாங்கன்’ என்ற புனைப்பெயரைச் சூட்டியதே ஜராசு சார்தான் என்கிறார் ரங்கராஜன் என்கிற சுதாங்கன்!

இவரது ’ஞானத் தேடல்’ சுவாரஸ்யமானது – சீரியசானது. தேவன் அவர்கள் இறந்தபோது, ‘இனி என்ன இருக்கிறது?’ என்ற விரக்தியில், குருவாயூர்சென்று, சன்னியாசியாக அலைந்து திரிந்ததை, நகைச்சுவை கலந்துசொல்வார் – “தேடினால் தெரியும்” புத்தகம் படித்துத் தெரிந்துகொள்ளலாம், பசியும், வியாதியஸ்தர் கூட்டத்தில் இரவும், பசி மயக்கத்தில் உறங்கி, விழித்தபோது சுற்றிலும் சில்லறைக் காசுகள் இவரைப் பிச்சைக்காரனாக்கியதும் – இவரது நகைச்சுவைக்குப்பின் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ’ஞானத் தேடலை நமக்குத் தெரிவிக்கும்!

ஒர் அருமையான மனிதரை, நகைச்சுவைச் சக்கரவர்த்தியை இழந்து நிற்கிறது தமிழ் கூறும் நல்லுலகம். அவர் ஆன்மா இறை நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.

 

 

 

 

 

கடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன்

Image result for pithukuli murugadas krishna songs

அசோகமித்திரனும்ஹார்மோனியமும்!

அசோகமித்திரனின் ‘நண்பனின் தந்தை’ தொகுப்பில் (நற்றிணை பதிப்பு) ஹார்மோனியம் சிறுகதை வாசித்துக் கொண்டிருந்தேன் – ஷீர்டி சாய்பாபா வண்டியில் ஒலிபெருக்கியில் பஜன் ஒலிக்கிறது – மஞ்சள் வேட்டி கட்டிய ஒருவன் கையில் ஹார்மோனியத்துடன் வண்டியைத் தள்ளி வருகிறான் – தெருமுனையில் பாடுவானாம்– இவனுக்கு ஹார்மோனியம் யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? தந்தையாக இருக்கலாம். அவன் பாடல் ஒலிபெருக்கியின் பாடலைவிட நன்றாக இருக்கிறது! நான்கைந்து கட்டைகளை மட்டும் அழுத்தி, பாட்டின் முழு வடிவமும் வருவதாக எழுதுகிறார். போகிற போக்கில் நேருவுக்கு ஹார்மோனியம் தெரிந்திருக்காது, பாரதியாருக்கும் ,ரவீந்திரருக்கும் ஹார்மோனியம் பிடிக்காது, ஆந்திராவில் ரயிலில் ஹார்மோனியப் பிச்சைக்காரர்கள் உண்டு என்று சொல்லி, ஹார்மோனியத்தில் கடவுள் உண்டு என்று முடிக்கிறார்!

மண்டைக்குள் கொஞ்சம் ஹார்மோனியம் நினைவுகள் பெல்லோஸ் (BELLOWS) போட்டன!

அந்தக் காலத்தில் விடியவிடிய நடக்கும் இசை நாடகங்கள், கூத்துக்கள் இவற்றின் மெயின் பின்னணி வாத்தியம் ஹார்மோனியம்தான்! ஸ்ருதி சேர்த்து, உச்சஸ்தாயியில் பாடப்படும் பாடல்கள் – மைக் இல்லாத காலங்கள்! – வசனங்களை விடவும் மிகவும் பிரசித்தி பெற்றவை! பாடகரின் ஸ்ருதியுடன் ஒன்றாகி, உடன் ஒலிக்கும் முக்கியமான இசைக்கருவி ஹார்மோனியம். எஸ் ஜி கிட்டப்பா, கே பி சுந்தராம்பாள் போன்ற அந்தக்காலக் குரல்கள் நாடகமேடையை ஹார்மோனியத்தின் துணையுடனேயே ஸ்ருதி கூட்டின!

முன்னமே வேறு வடிவங்களில் இருந்தாலும், 1840 ல் அலெக்சாண்டர் டீபைன் என்னும் ப்ரெஞ்சுக்காரர்தான் முதன் முதலில் பெயரிட்டு, ஹார்மோனியத்தை வடிவமைத்துக் காப்புரிமையும் பெற்றார்!

காற்று மூலம் ஒலியெழுப்பும் காற்று வாத்தியம் – (வாயினால் காற்று ஊதி வாசிக்கும் புல்லாங்குழல், நாதஸ்வரம் போன்று) துருத்திகள் மூலம் (BELLOWS) காற்றை ஊதி ஒலியெழுப்பப்படும் ‘பைப்ஆர்கன்’, மேலைநாட்டு அக்கார்டியன் போன்ற இசைக்கருவிகளின் மறுவடிவமே ஹார்மோனியம்! நம் பாரம்பரிய வழக்கப்படி, அமர்ந்து வாசிக்க வடிவமைக்கப்பட்டது! தோளின் குறுக்கே பட்டையில் கட்டி, நின்றபடியேவும் வாசிப்பவர்கள் உண்டு!

செவ்வகப் பித்தளைத் தகடுகள்மேல் துருத்திக்கொண்டிருக்கும் மெல்லிய தகடுகள், ஊதும் காற்றினால் அதிர்வடைந்து, இணைக்கப்பட்டிருக்கும் ஸ்வரக் கட்டைகளுக்கேற்ப ஒலியெழுப்பும்! ஆரம்பகாலத்தில் காற்றுத் துருத்தியைக் காலால் பெடல் செய்து ஒலியெழுப்பினர் – “கால்ஹார்மோனியம்” ! பின்னர் இடது கையினால் துருத்தியை அசைத்து, காற்று ஊதப்பட,வலது கை விரல்கள் (சுண்டுவிரல் தவிர!) ஸ்வரக்கட்டைகள் மீது வழுக்கி, நாட்டியமாட, ஸ்வரங்கள், ராகங்களாக வாசிக்கப்படுகின்ற அதிசயம் அரங்கேறியது!

வடக்கிந்திய இசையில் ஹார்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு – ஹிந்துஸ்தானி, கஜல், அபங்க் என எல்லாவகைப் பாடல்களுக்கும் முக்கிய பக்கவாத்தியம் ஹார்மோனியம்தான்! (சிலருக்கு சாரங்கிதான் பிடிக்கும்!). பீம்சென் ஜோஷி போன்றோருக்கு ஹார்மோனியமே பிரதானம் – ஹரிஹரன், பங்கஜ்உதாஸ், ஜெகஜித்சிங் கஜலுக்கும் அதுவே பக்கவாத்தியம்!

தென்னிந்தியாவில், பஜனைகள், நாம சங்கீர்த்தனங்களில் அதிக அளவில் ஹார்மோனியம் வாசிக்கப்படுகிறது. கர்னாடக சங்கீத நுட்பங்கள் ஒரு சில வாசிப்பது சிரமம் என்பதால், ஆல் இண்டியா ரேடியோவில் 1940 முதல் 1971 வரை ஹார்மோனியம் வாசிப்பது தடை செய்யப்பட்டிருந்தது – இன்று எப்படியோ தெரியாது. இப்போதெல்லாம் கீபோர்டுதான் எனக் கேள்விப்படுகிறேன்.

முதன் முதலில் நண்பர் ஒருவர் ’பேசிக்’ மாடல் (சிங்கிள் ரீட்) ஹார்மோனியம் ஒன்று கொடுத்தார். நானும் ஒரு கீபோர்ட்ஆர்டிஸ்டை (அவர் ஒரு சிறந்த இசைவல்லுனர் – கர்னாடக சங்கீதத்தில் பாடல்கள் இயற்றி, கீபோர்டில் இசையமைப்பார் – இசையை ரசிப்பதே ஒரு கலை – அதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்!) குருவாகக் கொண்டு கொஞ்சநாள் இசைப்பயிற்சி செய்தேன்! தொடர்ந்து பயிற்சி செய்யாமல் விட்டு விட்டேன் – குருவின் பெயர் தப்பித்தது!!

மைலாப்பூரில் செம்பை சிஷ்யர் ஒரு பாட்டு வாத்தியார் – மறைந்த நண்பர் தாமஸ் மூலம் அவர் அறிமுகம் – சில நாள் அவரிடம் ’பாட்டு கிளாஸ் ’க்குப் போனேன் (தோளில் ஜோல்னாப் பையில் சாம்பமூர்த்தி இசைப் புத்தகம்!) – சில ராகங்கள், சில சின்னப் பாடல்களுடன் நிறுத்திக்கொண்டேன் – அதற்குமேல் அவர் பொறுமையை சோதிக்க எனக்கு மனமில்லை! அவரிடம் ஒரு அருமையான டபுள் ரீட் ஹார்மோனியம் இருக்கும் – சா…பா…சா – நம் குரலுடன் இழையும்போதே, பிசிரில்லாததாய்த் தெரியும் உலகம்!!

ஹார்மோனியத்துடன் பாடல் என்றால் முதலில் என் நினைவுக்கு வருபவர் பித்துக்குளி முருகதாஸ் – அவரது பக்திப் பாடல்களின் ஜீவனே ஹார்மோனியத்தில்தான் என்று கூட நான் நினைப்பதுண்டு!

திரைப்பட இசையமைப்பாளர்கள் – ஒரு சிலரைத் தவிர – ஹார்மோனியம் துணையுடன்தான் மெட்டுக்கள் போடுவார்கள். எம் எஸ் வி, மஹாதேவன் இசையமைப்பில் ஹார்மோனியம் பல பாடல்களில் கூடவேவரும். எம் ஜி ஆரின் ’நாடோடி’ யில் எல்லாப் பாடல்களுக்கும் ஹார்மோனியம்தான் பேஸ் – ஹீரோ ஒரு தெருப்பாடகன்! (நாடு, அதை நாடு, அன்றொருநாள் இதே நிலவில் பாடல்கள் காலத்தினால் அழியாதவை!). இளையராஜாவின் அம்மன் கோயில் கிழக்காலே, காசி படப் பாடல்களில் ஹார்மோனியம் அழகாகச் சேர்க்கப்படிருக்கும்!

“ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” – பாலச்சந்திரராஜு அவர்களின் நல்ல புத்தகம். (மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு). வாசித்திருக்கிறேன் – நான் புத்தகத்தைச் சொன்னேன்!

Image result for msv and harmonium

கடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன்

வைதீஸ்வரன் கவிதைகள்

Image may contain: 10 people, people standing

கவிஞர் வைதீஸ்வரன் அவர்கள் பிறந்தநாளையொட்டி, அவரது கவிதைகளின் முழுத்தொகுப்பு – மனக்குருவி என்ற பெயரில் வெளிவந்துள்ளது. தொகுத்தவர் லதா ராமகிருஷ்ணன்.

விருட்சமும், டிஸ்கவரி பேலஸ் புத்தக நிலையமும் சேர்ந்து, “வைதீஸ்வரன் கவிதைகள் வாசிப்பு” என்ற நிகழ்ச்சியை ஒரு புதன் கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்தார்கள். மனக்குருவியிலிருந்து கவிதைகள் வாசிப்பது என்று மிகக் குறுகிய கால அவகாசத்தில் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர் – கிட்டத்தட்ட இருபது பேர் வந்திருந்தனர் – தனக்குப் பிடித்த கவிதைகளை, புத்தகத்திலிருந்து வாசித்து, சிறிது சிலாகித்தும் பேசினர்.

கவிஞர் வைதீஸ்வரன் அனைவருக்கும் நன்றி சொல்ல, கூட்டம் இனிதே முடிந்தது.

கவிதை என்பது “ஒருவர் தன் எண்ணத்தையோ, அனுபவத்தையோ கற்பனை நயத்துடன், உணர்ச்சி பூர்வமாக (உரை நடை அல்லாத) சொல்லமைப்பில், சுருக்கமாகவும், செறிவாகவும் வெளிப்படுத்தும் வடிவம்” – என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.

மரபுக் கவிதைகள் பள்ளிக்கூட நாட்களில், செய்யுள் வடிவில், மனப்பாடப் பகுதிகளாக, சிறிது யாப்பிலக்கணம் கற்றதோடு போய்விட்டன. புதுக்கவிதைகள், ஹைக்கூ போன்றவை இன்று விசேஷ கவனம் பெறுகின்றன. அந்த வகையில் வைதீஸ்வரன் கவிதைகள் சமகாலத் தமிழ் இலக்கிய வெளியில் பெரிய கவன ஈர்ப்பைப் பெறுகின்றன.

அவரது ‘உதய நிழல்’, ‘நகரச் சுவர்கள்’, ‘விரல் மீட்டிய மழை’, மனக்குருவி’ போன்ற எல்லாக் கவிதைத் தொகுப்புகளிலும் அன்றாடம் நாம் காணும் நிகழ்ச்சிகள் மிக நுட்பமாக, ஒருவித லயத்துடன் உலா வந்துகொண்டிருக்கும்!

வைதீஸ்வரன் ஒரு நல்ல ஓவியரும் கூட – அவரது ஓவியங்களில் கவிதைகளையும், கவிதைகளில் ஓவியங்களையும் வெளிப்படுத்துவது அவருக்கு மிகவும் லகுவாகக் கைவந்த கலை!
’பிணைப்புகள்’ என்ற கவிதையில் கிடைக்கும் காட்சியைப் பார்ப்போம் –

வானத்தில்
என்றோ கட்டறுந்துபோன
என் காற்றாடியை மறந்து
எத்தனையோ நாளாச்சு.
இன்று வரை தெரியவில்லை,
அது
என் வீட்டுக் கூரையிலேயே
வாலாட்டிக் கிடக்குதென்று.

கிராமப் புறங்களில் காய்ந்த கூரைகளின் மேல் சிக்கி, காற்றில் சிறகடித்துக் கொண்டிருக்கும் சாயம் போன காற்றாடிகளைப் பார்த்திருப்போருக்கு இது நிழற்படமாய் மனதில் விரியும்!

எறும்பு
கடிக்காதபோது
ஏன் கொன்றாய்?
உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்புதான் என்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?

இதில் அவர் மிகத் தெளிவாய் சொல்ல வந்த செய்தியை முகத்தில் அறைவதைப் போல் சொல்லிச் செல்கிறார்!

கட்டுரை ஒன்றில் சுஜாதா, நம் தமிழ்க் கவிதைகளில் மிகக் குறைவாகக் காணப்படும் பாலியல் சார்ந்த கவிதைகளைப் பற்றிப் பேசியிருப்பார்! வைதீஸ்வரன் கவிதைகளில் ஆண்-பெண் உறவு நிலைகள் பல இடங்களில் காணக்கிடைக்கின்றன. மாதிரிக்கு ஒன்று:

‘நான் சந்தனம்// பூசிக்கொள்// மணம் பெறுவாய்
நான் மலர்// சூடிக்கொள்// தேன் பெறுவாய்
நான் நதி// எனக்குள் குதி// மீனாவாய்
நான் காற்று// உறிஞ்சிக்கொள்// உயிர் பெறுவாய்
நான் உயிர்// கூடிக்கொள்// உடம்பாவாய்’ (கூடல் 2).

’ரஸனை’ – என்ற கவிதை நயமாய்க் கூறும் முரணை ரஸிக்கலாம்!

அவள் சமையல் முடிப்பதற்குள்
இவன்
கவிதை படைத்திருந்தான்.
சாப்பிட்டு எழுந்தவன்
ஏப்பத்தால் ‘பேஷ்’ என்றான்.
இரவின் இணக்கத்தால்
இவன் கவிதை கேட்க மசிந்தவளுக்கு
கொட்டாவியைக் குறைக்க முடியவில்லை,
கூடத்து விளக்கை அணைத்தாள்.

இசைஞானம் பெற்றவர், நாடகக் கலைஞர், ஓவியர், எழுத்தாளர் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள்) எனப் பன்முகத் தன்மை கொண்ட நல்ல மனிதர் வைதீஸ்வரன்!

இவரது ’திசைகாட்டி’ நூல் ஒரு கதம்ப மாலை – கவிதைகள், கட்டுரைகள், வாழ்வின் சம்பவங்கள் சிறு கதைகளாய் – இன்னும் பல்சுவை இலக்கியக் கலவை!

“நினைப்பைப் பொறுத்தது
நீ தேர்ந்துகொள்ளும் உலகம்’

என்கிறார் வைதீஸ்வரன்.

உண்மைதான் – நல்லதோர் உலகைத் தேர்ந்துகொள்ள வைதீஸ்வரன் படைப்புகளைத் தேர்ந்து கொள்ளலாம்!
‘மனக்குருவி’ – வைதீஸ்வரன் கவிதைகளை எல்லோரும் படிக்கலாம் – எளிமையோடும், சுவையுடனும் இருக்கின்றன – எனக்கே புரிகிறதே!!

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ. பாஸ்கரன்.

dr1

வாணிகப் பரிசிலனோ யான்? 

Related image

மிக அழகிய அரண்மனை அது. மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், கோட்டைக் கொத்தளங்களும், சுற்றிச் சுழன்றோடும் நீர்ச்சுனைகளும் கொண்டு, மன்னனின் ரசனைக்கு அத்தாட்சியாக நின்றுகொண்டிருந்தது!..

நீண்ட தூரப் பயணம். முகத்திலும் உடலிலும் களைப்பின் அறிகுறிகள். அரண்மனை வாயிலில் வந்து, நிமிர்ந்து நின்று,  “நான் ஒரு செந்தமிழ்ப் புலவன். அரசரைக் காண வந்துள்ளேன்’ என்கிறான் வந்தவன்.

தோற்றத்திலும், சொற்களின் தோரணையிலும் அவன் புலவன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

கூர்மையானது வாள் மட்டுமல்ல, பார்வையும் கூடத்தான். அங்கிருந்த காவலாளி – அந்தக் கணமே விரைந்து அரசராணையை நிறைவேற்றுகிறான்.

புலவரை மிக்க மரியாதையுடன் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறான். பட்டுப் பீதாம்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமரவைக்கிறான் – மேலிடத்து உத்தரவு அப்படி!

“யாரங்கே?” – தட்டிய கையொலிக்குப் பணியாரங்களும், பழரசங்களும் புலவன் முன் அணிவகுக்கின்றன!

”அரச மண்டபத்தில் அதிமுக்கியமான நாட்டு நிலவரம் குறித்த ஆலோசனையில் அரசனும், மந்திரியும், சேனாதிபதியும், மற்றும் முக்கிய அதிகாரிகளும் தீவிரமாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அரசரது அனுமதி பெற்று விரைந்து வருகிறேன்; அதுவரை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்” – மின்னலென மறைகின்றான் காவலன்.

ஆசனத்தில் அமர்ந்தபடியே, கண்களைச் சுழல விடுகின்றார் புலவர். விருந்தினர் மாளிகையின் பொலிவு அவரை மயக்குகிறது – தன் தோளில் போர்த்தியுள்ள பட்டு வஸ்திரத்தின் விசிறி மடிப்புகளைச் சரி செய்துகொள்கிறார் – அதிலிருக்கும் கிழிசல் வெளியே தெரியா வண்ணம்!

”மன்னா, உன் கொற்றம் வாழ்க! கொடை வாழ்க!! வெகுதூரத்திலிருந்து தங்களைக் காண ஒரு புலவர் வந்திருக்கிறார். விருந்தினர் மாளிகையில் தங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் மன்னா!”

“அப்படியா, மிக்க நன்று. அமரச் செய்து தாகத்திற்கு ஏதேனும் கொடு”

 “ம்ம், மந்திரியாரே, இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியமானது – இடையில் நிறுத்தக் கூடாதது. வந்திருக்கும் புலவருக்குத் தேவையான சன்மானம், பொன், ஆடை ஆபரணங்களை அளித்து, வழியனுப்பி விட்டு வாருங்கள். மற்றுமொரு சமயம் நான் அவரை சடுதியில் சந்திப்பதாகவும் சொல்லுங்கள்.”

’உத்தரவு மன்னா – அப்படியே செய்கிறேன்”

Image result for king and a poet in old tamilnadu

ஒரு பார்வையில், காவலாளிகள் இருவர் பின் தொடர, மந்திரியார் விருந்தினர் மாளிகை நோக்கி நடக்கிறார் – மனம் மட்டும் இங்கேயே மன்னரின் ஆலோசனைக் கூட்டத்தில்!

மந்திரியாரின் நடை, உடை மற்றும் பின் தொடரும் காவலாளிகளைக் கண்டு, மரியாதையுடன் எழுந்து, வணங்கி நிற்கிறார் புலவர்.

மந்திரியார், அகமும், முகமும் மலர வணங்கி, “ வணக்கம் புலவரே, தங்கள் வரவு நல்வரவாகுக! எங்கள் நாட்டில் தங்கள் புனிதப் பாதம் படரக் கொடுத்து வைத்திருக்கின்றோம் – நான் இந்நாட்டின் முதன் மந்திரி!”

”வணக்கம்! மன்னரின் தரும குணமும், தயாள மனமும் கேள்விப்பட்டு அடியேன் வந்துள்ளேன். இந்த இடமும், காவலரின் பண்பும், விருந்தினரை உபசரிக்கும் விதமும் நான் கேள்விப்பட்டதை உறுதி செய்கின்றன! மிக்க மகிழ்ச்சி! மன்னரைக் காணும் ஆர்வத்தில் உள்ளேன் – அவரது செங்கொடையும், கொற்றமும் செழிக்கப் பாடல் இயற்றியுள்ளேன்!”

“மிக்க நன்று. தீந்தமிழையும், தெய்வப் புலவர்களையும் போற்றிப் பாராட்டுவதிலும், வாரி வழங்குவதிலும், வாழ்த்தி வணங்குவதிலும் பேரானந்தம் கொள்பவர் எம் மன்னர்! ஆனால்….. இன்று ஒரு முக்கிய அரசு ஆலோசனைக் கூட்டம்; அரசரால் உங்களை நேரில் காண இயலாது – வருந்துகிறேன். அவர் ஆணைப்படி, இந்தப் பரிசுகளை, எங்கள் நாட்டின் சீராக உங்களுக்களிப்பதில் பெருமையடைகிறேன்!”

புலவர் முகம் மாறுகிறது – கோபமா, வருத்தமா அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை!  பரிசு, பட்டம், பதவி என்றால் உடனே ஓடிச் சென்று வாங்கிக் கொள்வதுதானே முறை? அதுவும் அரசனே கொடுக்கும்போது தடை என்ன இருக்கமுடியும்? தொலை தூரத்திலிருந்து, கிழிந்த மேலாடையுடன் உதவி நாடி வந்திருக்கும் புலவன் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே? என்ன தயக்கம்? 

அந்தக் காலத் தமிழன் தன் மீதும், தன் திறமை மீதும் மிகவும் நம்பிக்கையும், உவப்பும் கொண்டவன்.

குமுறுகிறார் புலவர் –

 ‘பெருங்குன்றுகளையும், மலைகளையும் கடந்துவந்து, மன்னரைக் கண்டு, போற்றிப் புகழ்ந்து, மகிழ்வித்துப் பரிசில் பெற வந்திருக்கும் எனக்கு என்ன பரிசு தகுதியானது என்பதனை,என்னைக் காணாமலே, எங்ஙனம் உங்கள் மன்னர் தெரிந்து கொண்டார்? எதற்காகப் பரிசு? நான் புலவன் என்பதாலா? என் புலமை என்னவென்றே அறியாமல் என் திறமைக்குப் பரிசை எங்ஙனம் நிர்ணயம் செய்யமுடியும்? நானென்ன வாணிகப் பரிசிலனா?

என்னைச் சிறிது நேரம் பார்த்து, அறிந்து, போற்றி, தினை அளவு பரிசு தந்தாலும் அதனைப் பெரிதாய் எண்ணி மகிழ்வேனே – அதுதானே இனிமையானதும் கூட!’

அரசனைக் காணாமல் பரிசை மட்டும் வாங்கிக் கொள்வதில் விருப்பமற்ற புலவர் – திறமைக்கேற்ற பரிசு, விருது – கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் அந்நாளில் தெரிந்திருந்தது!

 

208 – புறநானூற்றுப் பாடல்

பாடியவர் – பெருஞ்சித்திரனார்
பாடப்பெற்றவர் – அதியமான் நெடுமான் அஞ்சி
திணை – பாடான் திணை
துறை – பரிசில்

பாடல்:

குன்றும் மலியும் பல பின் ஒழிய
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு’ என
நின்ற என் நயந்து அருளி ‘ஈது கொண்டு,
ஈங்கனம் செல்க,தான்’ என, என்னை
யாங்கு அறிந்தனனோ தாங்கு அருங் காவலன்?

காணாது ஈத்த இப்பொருட்கு யான் ஒர்
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி,
தினை அனைத்து ஆயினும், இனிது – அவர்
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.

இந்தப் புறநானூற்றுப் பாடல், அந்தக் காலத் தமிழரின் நேர்மை, தன்னம்பிக்கை, தகுதிக்கேற்ற பரிசு / விருது போன்றவை குறித்துப் பேசுகிறது. – (படித்ததில் பிடித்தது!!)

(பரிசு / விருதுகள் இன்று அளிக்கப்படுவது, பின்னர் ஒரு நிலையில் திருப்பப்படுவது, என்பதைப்பற்றியெல்லாம் யாராவது இன்று குழப்பிக்கொண்டால் அதற்குப் பொறுப்பு நானல்ல – சங்க காலப் புலர்கள்தாம்!)

 

 

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

வாழ்வா? சாவா?

Related image

சரியான நேரத்தில், சரியாக எடுக்கப்படும் முடிவுகள் வாழ்க்கையில் வெற்றிகளைத் தரக்கூடும். மருத்துவத்தில் சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளே உயிர்களைக் காக்கும்!

வாழ்வா, சாவா என்ற நிலையில், இரண்டு உயிர்களில் ஒன்றினைத்தான் காப்பாற்ற முடியும் என்றால் எப்படி முடிவெடுப்பது?

ஃப்ளோரிடாவில் வசிக்கும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஃப்ராங்க் போயெம் விவரிக்கும் கேஸ் ஹிஸ்டரி ஒன்றைப் பார்ப்போம் .

39 வயதான ஆறு மாத கர்ப்பிணிப் பெண் – மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவினால் (HEAMORRHAGE), கோமா நிலையில் அட்மிஷன். ஸ்ட்ரெட்சரைச் சுற்றிலும் உறவினர்கள் வாசல் வரை வந்து நிற்க, வெளியில் எடுத்த ஸ்கேன் , மூளையில் ரத்தம் கசிந்து தேங்கியுள்ளதைக் காட்டியது.

உடனே அறுவைச் சிகிச்சை செய்வதுதான் அவள் உயிர் பிழைக்க உள்ள ஒரே வாய்ப்பு! உள்ளே உள்ள சிசுவின் உயிருக்கும் ஆபத்து சேர்ந்தே இருந்தது. அன்னை உயிருடன் இருப்பது, சிசுவின் உயிருக்கும், வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது.

வெளியில் நடப்பது ஏதுமறியாமல், அம்மாவின் கர்ப்பப்பையில் சுறுசுறுப்பாக நீந்திக்கொண்டிருந்த அந்தக் குழந்தையை அல்ட்ராசவுண்ட் தெளிவாகக் காட்டியது.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, நினைவு திரும்பாவிட்டாலும், அம்மாவின் கருவறையின் பாதுகாப்பான, போஷாக்குடன் கூடிய சூழல் குழந்தைக்கு இன்னும் சிறிது காலம் தேவை – அதுவரை அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைத் தகுந்த முறையில் உயிருடன் வைத்திருக்க வேண்டும்.. டாக்டர் போயெம், தன் சக மருத்துவர்களுடன் – ஒரு டசனுக்கும் மேற்பட்ட ஸ்பெஷலிஸ்ட்டுகள் – கலந்தாலோசித்து, அப்பெண்ணின் கணவனுடைய அனுமதியுடன் ஒரு முடிவுக்கு வருகிறார்.

அடுத்த பத்து வாரங்களுக்கு, அப்பெண்ணிற்கு எல்லாவிதமான ‘லைஃப் சப்போர்ட்’ வசதிகளும் செய்யப்படுகின்றன. அறையில் அவளுக்குப் பிடித்த இசை ஒலிபரப்பப்படுகின்றது. உறவினர்கள், நர்சுகள், டாக்டர்கள், மருத்துவமனை சிப்பந்திகள், எல்லோரும் தினசரி சேவைகளை, அவளுக்கு எல்லாம் புரியும் என்பதைப்போல அவளுடன் பேசிக்கொண்டே செய்கின்றனர்.

கருவறையில் சுற்றிவரும் சிசுவுக்குத் தேவையான எல்லாம் தடங்கல் இல்லாமல் கிடைக்க – அன்னையின் டிரிப்பில் உணவு, தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் போன்றவை – வழி செய்யப்படுகின்றன. வெளி உலகம் வந்து தானாக இயங்கும் வரை அன்னை உயிருடன் இருப்பது அவசியமல்லவா?
குழந்தையின் இதயத்துடிப்பு, அசைவுகள் எல்லாம் முறையாகத் தினமும் மானிடர் செய்யப்படுகின்றன. ஏழெட்டு வாரங்கள் சென்று, குழந்தைக்குக் கருவறையில் மூச்சு முட்டல் ஏற்படுகிறது. உடனே அன்னைக்கு சிசேரியன் செக்‌ஷன் செய்து, குழந்தை – சுமார் மூன்று கிலோ எடை! – உயிருடன் வெளியே எடுக்கப்படுகின்றது – அழகான ஆண் குழந்தை!!

கோமாவிலிருந்து மீளாமல், பின்னர் அன்னையும், தன் கடமை முடிந்ததெனக் கண்ணை மூடிவிடுகிறாள்.

சமூகம், சட்டம், மெடிகல் எதிக்ஸ் எல்லாம் கவனிக்கப்படவேண்டிய கட்டாயம்  இந்த சிகிச்சைக்கு இருக்கின்றது. மிகவும் அரிதாகவே ஏற்படக்கூடியது – ஆகும் செலவும் அதிகமானது. இதையெல்லாம் தாண்டி, அந்தக் குழந்தை மருத்துவரின் கைகளில் தன் பிஞ்சுக் கால்களை உதைத்தபோது, ஏற்பட்ட பெருமையையும், நிறைவையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை என்கிறார் டாக்டர் போயெம்!

கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு நிலை – நண்பனின் மனைவி ஆறு மாத கர்ப்பிணி – இடைவிடாத வலிப்புடன் வந்தார். வலிப்புகளை உடனே நிறுத்த வேண்டும்; இல்லையேல் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாய் முடியும். ஈ ஈ ஜி தவிர வேறு டெஸ்ட் எதுவும் எடுக்க முடியாது – எம் ஆர் ஐ ஸ்கானும் 7 மாதங்களுக்குப் பிறகுதான், அதுவும் மிகவும் கவனத்துடன்தான் எடுக்க முடியும். இருந்தாலும் மிகவும் எச்சரிக்கையுடன், குழந்தையைப் பாதிக்காத மருந்துகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு வழியாக வலிப்புகளை நிறுத்தினோம்.

ஏழாம் மாதம் செய்த ஸ்கான், எங்களைப் புரட்டிப் போட்டது – தலையில் மிகப் பெரிய கட்டி – எதுவாகவும் இருக்கலாம் – கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்வது அவளுக்கும், உள்ளே வளரும் குழந்தைக்கும் ஆபத்தாய் முடியும். நியூரோ சர்ஜன், மகப்பேறு மருத்துவர், பொது மருத்துவர், டிபி ஸ்பெஷலிஸ்ட் எல்லோரும் விவாதித்தோம் – ஸ்கானில் ஒரு சின்ன ’க்ளூ’ – அது TB கட்டியாக இருக்கும் வாய்ப்பினை உறுதி செய்தது. மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்த டிபி மருந்துகளைக் கொடுத்து, தாய், சேய் இருவரையும் மானிடர் செய்தோம்.

Image result for cesarean delivery

டியூ டேட்டில், அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை முதலில் காப்பாற்றினோம் – நல்ல வேளை, குறையொன்றும் இல்லாமல் சரியாக இருந்தது குழந்தை!

பின்னர் எடுக்கப்பட்ட ஸ்கேனில், தலைக் கட்டி 90% கரைந்திருந்தது – டிபி தான் என்பது உறுதியானது. மேலும் மூன்று மாதங்களில், கட்டி முழுதுமாகக் கரைந்து, தாயும் சேயும் இன்று வரை நலம்!

Related image

வாழ்வா, சாவா என்பதில், ஓருயிரைத்தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை எப்போதுமே மருத்துவர்களுக்குச் சவால்தான்!

 

கடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன்

 dr1

நில், கவனி, எடுத்துக்கொள்!

 Image result for medical shop atrocities in india

காலையில்  எஃப் எம்மில் டிஎம்ஸ் குரலில் எம்ஜிஆர் பாடிக்கொண்டிருந்தார் – ‘ஏமாறாதே, ஏமாற்றாதே’.

பாட்டை ரசிக்க விடாமல் செல்போன் அலறியது.  பச்சை வட்டத்தில் விரலைத் தேய்த்து, ‘ஹலோ’ – முடிக்குமுன் “சார் நான் …. பேசறேன். என் ரிலேஷன் ஒருத்தருக்குத் திடீரென்று முகம் ஒரு பக்கமாய்க் கோணி, கையும் காலும் ஸ்டிஃப்பா ஒரு பக்கமாய் இழுக்குது. வாயிலிருந்து சலைவா ஒழுகுது’ என்றார் – குரலில் பதட்டம்.
 
‘நினைவு இருக்கிறதா?
 
‘ம்..நல்லா கான்சியஸா பேசறான் – ஆனா பேச்சு குளறுது
 
‘யூரின், மோஷன் போய்ட்டாரா?
 
‘அதெல்லாம் இல்லை சார்
 
‘சரி, உடனே அருகில் இருக்கும் நர்சிங் ஹோமில் அட்மிட் பண்ணுங்க – ஹீ நீட்ஸ் ‘இன் பேஷண்ட்’ ட்ரீட்மென்ட். வலிப்பாக இருக்கலாம். இது தான் முதல் முறையா?
 
‘ஆமாம் சார். ஃபேமிலில கூட யாருக்கும் இல்லை சார்’ என்றது போனில் குரல் பதட்டம் குறையாமல்!
 
இது போன்ற எமர்ஜென்சிகளில், பேஷண்டை நேராய்ப் பார்ப்பதும், அட்மிஷனில் வைப்பதும் இன்றியமையாதவை.
 
அட்மிஷன், முதலுதவி, ஆப்சர்வேஷன் எல்லாம் முடிந்து, நார்மலாக வீடு போய்ச்சேர்ந்தார் – மறுநாள் மாலை கிளினிக்கில் என்னை வந்து பார்ப்பதாக ஏற்பாடு. அதற்கு முன்பாகவே மதியம் மூன்று மணியளவில் மீண்டும் அதேபோன்ற இழுப்பு வந்து விடவே, என் செல்போன் சிணுங்கியது. ‘ நேற்று ஊசியும், ட்ரிப்பும் போட்ட பிறகு சரியாகிவிடவே நாங்கள் வீட்டுக்குப் போய்விட்டோம்; இப்போது திரும்பவும் அதே அட்டாக்’ என்றார் பேஷண்டின் அப்பா.
 
எமர்ஜென்சியாக ஒரு மாத்திரையைக் கொடுக்கச் சொன்னேன். ‘அரை மணியில் குறையவில்லையென்றால் மீண்டும் அட்மிஷன்தான்.  என்னைக் கூப்பிடுங்கள்’ என்றேன்.
 
மாலை 7 மணி சுமாருக்கு என் கிளினிக் வந்தான் அவன். வயது இருபத்தி இரண்டு, தனியார் கம்பெனியில் வேலை; கெட்ட பழக்கங்கள் கிடையாது. ஒல்லியான உடல், முள் தாடி, முகத்தில் ஓரிரண்டு பருக்கள், கண்களில் சிறிது மயக்கம்.
 
‘ஏதாவது மருந்து எடுத்துக் கொள்கிறாயா?’ என்றேன்.
 
‘இல்லை’. 
 
பேசிக்கொண்டிருக்கும்போதே, முகம் ஒரு பக்கமாய்க் கோணியது, உடல் பைசா கோபுரம் போல சாய்ந்தது, உட்கார்ந்திருந்த ஸ்டூலிலேயே  கைகளும் கால்களும் விரைத்துக் கொண்டு, கோணலாகப் பறக்கும் பறவை போல் இறுகினான். கோணிய வாயிலிருந்து எச்சில் வழிந்தது. ‘ம்..ம்ம்..ஆஆ..ஐயோ’ பல்லைக் கடித்துக் கொண்டு அரற்றினான். நினைவு தப்பவில்லை! 
 
‘என்ன செய்யிது?
 
‘இழுக்குது’ வாய் குளரியபடி சொன்னான்.
 
இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் ஓரளவுக்கு நார்மலானான். நடந்து, பாத்ரூம் சென்று வந்தான். இன்னும் சிறிது விரைப்பு கால்களில் இருந்தது.
 
மீண்டும் ‘வேறு ஏதாவது மருந்து எடுத்துக்கொண்டாயா? ஆல்கஹால்?’ என்றேன்.
 
‘ அந்தப் பழக்கம் இல்லை சார். இரண்டு நாள் முன்பு நைட் டுயூட்டியில்  கையில் ஒரு காயம் பட்டது. அதற்கு வலி மருந்தும், ஆண்டிபயாடிக்கும் எடுத்துக் கொள்கிறேன்’ 
 
இது வலிப்பு இல்லை. சில மருந்துகளால் வரும் ஒருவகை நரம்பு இழுப்பு – EXTRAPYRAMIDAL REACTION – வாந்தி மாத்திரைகள், சைக்கியாட்டிரி மருந்துகள் ஒவ்வாமையினால் வரக்கூடும். 
 
இவன் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் இப்படி வருவதற்கு வாய்ப்பில்லை – இருந்தாலும் மருந்துகளைக் காட்டச் சொன்னேன். சீட்டுக் கொண்டுவரவில்லை – பெயரும் தெரியாது!  அட்மிட் செய்யச் சொன்னேன் – எல்லா மருந்துகளையும் நிறுத்தச் சொல்லி, சிம்பிள் செடேஷன் கொடுத்து ஆப்சர்வேஷனில் வைத்தேன்.
 
டியூட்டி டாக்டரிடம் சொல்லி, அவன் கைப் புண்ணுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்தினைப் போனில் சொல்லச் சொன்னேன் – குழப்பத்துடன் காத்திருந்தேன்.
 
டாக்டரின் போன் என் குழப்பத்தைப் போக்கியது – ஆனால் அதிர்ச்சியூட்டியது. 
 
அவன் எடுத்துக்கொள்ளும் மருந்து ‘ஹேலோபெரிடால்’ – மனநிலைப் பிறழ்வுகளுக்குக் கொடுப்பது – ANTIPSYCHOTIC – ‘இவன் ஏன் இதனை எடுத்துக்கொள்கிறான்?
 
கொஞ்சம் ஷெர்லாக் ஹோம் வேலை செய்து பார்த்ததில் விடுகதை முடிச்சு அவிழ்ந்தது!
 
நடந்தது இதுதான்:
 
கையில் சின்னக் காயம் பட்டது. அருகிலிருந்த 24 மணிநேர மருத்துவ மனையில் முதலுதவி செய்து கொண்டு, டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரையை பக்கத்திலிருந்த மருந்துக் கடையில் வாங்கிப் போட்டுக்கொண்டு, வேலையில் தொடர்ந்தான்- அப்போது  விடியற்காலை இரண்டு மணி. மறுநாள் காலை இந்த இழுப்பு வந்தது. முதலுதவியில் சரியானது. புண்ணுக்கான மருந்தைப் பற்றி பேச்சே இல்லை! மறுபடியும் வலி மாத்திரையைப் போட்டுக் கொண்டார் – இழுப்பு வந்தது.  
 
எல்லாம் சரி – ஹேலோபெரிடால் எப்படி வந்தது? 
 
இங்குதான், நம் மக்களின் அறியாமையும், மருந்துக் கடைகளின் அலட்சியமும் தெரிய வருகிறது. டாக்டர் எழுதிக் கொடுத்த வலி மருந்தின் பெயருக்கும், ஹேலோபெரிடால் மருந்தின் ‘ட்ரேட்’ பெயருக்கும் ஸ்பெல்லிங்கில் மிகச் சிறிய வித்தியாசம்தான் – தூக்கக் கலக்கத்தில் கடைப்பையன் மாற்றிக் கொடுத்த மருந்தை இருவருமே சரி பார்க்கவில்லை – தவறான மருந்தால் வந்தது வினை!
 
‘இனி ஹேலோபெரிடால் எடுத்துக் கொள்ளக் கூடாது, அது உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. மருந்து வாங்கியவுடன் பெயர்களைச் சரி பார்த்து, வேண்டுமானால் மருத்துவரிடம் திரும்பவும் சென்று காண்பித்து, பிறகு உட்கொள்ளவும்’ என்ற அறிவுரையுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் சென்று தன் அப்பாவுடன் வந்து நன்றி சொல்லிப் போனான் அந்த நல்ல பிள்ளை!
 
இப்படித்தான் ஒரு முறை மருந்துக் கடைக்காரர்  முகத்தில் பருவுக்குக் கொடுத்த மருந்துக்கு பதில், பைல்ஸுக்குப் போடும் மருந்தைக் கொடுத்துவிட, முகமெங்கும் சிவந்து, கோபமில்லாமலே என்னை முறைப்பதைப்போல் பார்த்தார் ஒரு வழக்கறிஞர்.  
 
கடையில் வாங்கிய மருந்து, டாக்டர் கொடுத்த மருந்துதானா என்பதை, ஒரு முறைக்கு இருமுறையாகச் சரி பார்ப்பதே இன்றைய நிலையில் தேவை!
 
 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

dr1

சைக்கிள் காலம்!

Image result for குரங்குப் பெடல் சைக்கிள்

Image result for குரங்குப் பெடல் சைக்கிள்

அப்போது எனக்கு பத்து வயதிருக்கலாம் – கமலீஸ்வரன் கோயில் தெரு குள்ள ஸ்ரீதர் வாடகை சைக்கிளில் ரவுண்டு அடித்துக்கொண்டிருந்தான் – குரங்குப் பெடல் இல்லை – சீட்டில் உட்கார்ந்து!

அவன் ஓட்டிக்கொண்டிருந்தது, எங்கள் வீட்டில் இருந்த பச்சைக்கலர் ஹெர்குலெஸ் சைக்கிள் மாதிரி இல்லை. சின்னதாக நா..னே காலூன்றிக் கொள்ளுமளவுக்கு – (அந்த நீண்ட ’ஏ’காரம் என் குட்டை உருவத்தைக் குறிக்க!) – சிறுவர் சைக்கிள்!

தேய்ந்த பிரேக்குகள், துருவேறிய வீல் கார்டு, பெடலில் தொங்கும் நடு ரப்பர்க் கட்டை, 45 டிகிரியில் வானம் பார்த்த மரக்கட்டை சீட்டு, வளைந்த ஹாண்டில் பார், வாய்பிளந்த பிரேக் லீவர்கள்  – முதன் முதலில் இந்த சைக்கிளை ஓட்டிய பையனுக்கு இப்போது குறைந்தது ஐம்பது வயாதாகியிருக்கலாம்!

ஏக்கமாயிருந்தது – ஸ்ரீதர் கொஞ்சம் பெரியவன், வயதில்!  ஒரு ரவுண்டு கேட்டால் தரமாட்டான். பாட்டியும் காசு தரமாட்டாள் (ஒரவருக்கு பத்தோ, இருபதோ பைசாதான்) – “விழுந்து அடி பட்டுண்டா யாரு டாக்டர் வீட்டுக்கு அலையறது?”

சின்ன வயது சைக்கிள் அனுபவம் பற்றி ஒவ்வொருவரிடமும் நிச்சயம் ஒரு கதை இருக்கும் – சைக்கிள் அன்றைய வெகுஜன சினேகிதன்! எல்லோர் வீட்டிலும் ஒரு சைக்கிள் – அவசரத்துக்கு சட்டென்று ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு, பக்கத்துத் தெரு பொட்டிக்கடைக்குப் போய் ஒரணாவுக்குத் தக்காளியோ, வெங்காயமோ வாங்கி வர சைக்கிளை விட வேறு டிரான்ஸ்போர்ட் ஏது?

ஆறாம் கிளாஸில் என்னுடன் படித்த நடராஜனுக்கு இரண்டு காலிலும் போலியோ – மெடல் காலிபர்ஸ் காலை இறுக்க, சின்ன சைக்கிளில் ஒரு மாதிரி கோணலாய் உட்கார்ந்து பெடலடித்தபடி வருவான். ஹாண்டில்பார் பிடிகளிலும், சக்கர கார்டுகளிலும் கலர்க் கலராய்க் குஞ்சலங்கள் ஆடிவரும் – போலியோ குறையை அந்தச் சின்ன சைக்கிள் நட்புடன் தீர்த்து வைத்தது!

 

என் தாத்தா சைக்கிளோட்டி நான் பார்த்ததில்லை. எத்தனை மைல்களானாலும் நடராஜா சர்வீஸ்தான்! ஆனால் அப்பா, மார்கெட், சலவைக்கடை, ஆபீஸ் – எங்கும் சைக்கிளில்தான் செல்வார் – அம்மாவைவிட அவரது ஹெர்குலஸ் சைக்கிள்தான் அவருக்கு மிகவும் நெருக்கம்! மடித்துக் கட்டிய வேட்டியுடன் லாவகமாக முன்பக்கமாக நொடியில் ஏறிச் செல்வார்! நாளொன்றுக்கு முப்பது கிமீ சலிக்காமல் எழுபது வயது வரை சைக்கிளில் பவனி வந்திருக்கிறார். காலை நடையை விட இது சிறந்த உடற்பயிற்சி அவருக்கு!

’சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது’ ஒவ்வொரு சம்மரிலும் நடக்கும் ஒரு விவகாரம்! ஒருவர் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பின்னால் ஓடிவர, கற்றுக்கொள்பவர் நேராகப் பார்த்துக்கொண்டு, ஹாண்டில்பாரை பாலன்ஸ் செய்துகொண்டு, பெடலை மிதிப்பது எந்த நாட்டியத்தை விடவும் நளினமானது, கீழே விழும் வரையில்! உடன் வருபவர் மூச்சுத் திணறி பாதியிலேயே நின்றுவிட, பேச்சுக்குரல் இல்லாததால் ஓட்டுபவர் திரும்பிப் பார்க்க, பயத்தில் பாலன்ஸ் தவறி விழுந்து தெருவில் சில்லறை பொறுக்குவதும், விழுப்புண்கள் பெறுவதும், சைக்கிள் சரித்திரத்தில் திரும்பத் திரும்ப வருவன!

படிப்படியாக இரண்டு வருடங்களில் நானே சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதில் எனக்குக் கொஞ்சம் பெருமைதான்! சைக்கிள் ஸ்டாண்ட் போடுவதில் தொடங்கி, சாயாமல் தள்ளிக்கொண்டு போவது, இடது காலைப் பெடல் மீது வைத்துக்கொண்டு,வலது காலால் தரையில் உந்தி உந்தி சில நிமிடங்கள் கால் தரையில் படாமல், சைக்கிள் பெடல் சவாரி செய்வது, கொரங்கு (?குரங்கு) பெடல் அடிப்பது என்று சுயப்பயிற்சி! பிளாட்பாரமோ, மைல் கல்லோ – அதன் மீது காலூன்றி முதலில் பாரில், பின்னர் சீட்டில் அமர்ந்து சைக்கிள் சவாரி!

இதற்குள் சுள்ளி பொறுக்கிச் சென்ற செல்லாத்தாவின் பின்புறம் சைக்கிளால் மோதி – ப்ரேக் பிடிக்காமல் – கெட்ட வார்த்தையில் வாங்கிய திட்டு, மாது மாமாவின் புது வெள்ளை வேட்டியில் முன்சக்கரம் பட்டு அழுக்கானதற்கான  திட்டு, கட்டியிருந்த நாலு முழ வேட்டி, சைக்கிள் செயினில் மாட்டிக் கிழிந்து, எண்ணை/கிரீஸ் கறையில் கலர் மாறியது, தெரு முனையில் திரும்பிய குதிரை வண்டியைப் பார்த்து மிரண்டு, இடதுபுறம் சைக்கிளோடு சரிந்து, தெருவோரச் சாக்கடையில் சங்கமித்தது எல்லாம் சைக்கிள் கால வரலாற்று உண்மைகள்!

இரண்டு கைகளையும் விட்டு, சிட்டுக்களுக்கு முன்னால் சீன் போட்ட மறு நிமிடம், ஹாண்டில்பார் நொடிந்து ‘தடால்’ என கீழே விழுந்து தரை பெருக்காத வாலிபர்கள் குறைவு!

அந்தக்காலத்தில்,இரவு நேரத்தில் விளக்கில்லாமல் சைக்கிளில் போவது குற்றம். அதற்கான விளக்கை தினமும் துடைத்து, மண்ணெண்னை விட்டு ரெடி செய்வது ஒரு வேலை! பின்னால் வந்த முன்னேற்றம், சக்கரத்தில் உராய்ந்தபடி டைனமோவும் – அதனால் பிரகாசமாய் எரியும் கூம்பு வடிவ எலெக்ட்ரிக் லைட்டும்!

நாணல் படத்தில் விளக்கு இல்லை என நாகேஷை நடுரோட்டில் போலீஸ்காரர் நிறுத்த, மெதுவாய் அவரைச் சுற்றி வந்து, தோள்மீது கைபோட்டு சைக்கிளை நிறுத்துவார் – “பிளாட்ஃபாரமும் இல்லே, லைட் போஸ்ட்டும் இல்லே; நடு ரோட்டுல நிக்கச் சொன்னா, எப்படி சைக்கிள நிறுத்தறது? அதான் இப்படி…” என்பார்!

தமிழ் சினிமாக்களில் காதல் சொல்லும் சைக்கிள்கள் – நீதிக்குப் பின் பாசம் (எம்ஜிஆர் – சரோஜாதேவி), கல்யாணப் பரிசு (ஜெமினி – சரோஜாதேவி). அண்ணாமலை (ரஜினி, குஷ்பு) ! சைக்கிள் ஓட்டும் போதுதான் தத்துவப் பாட்டும் வரும் – பாவமன்னிப்பு (சிவாஜி). ஏழ்மையின் சின்னமும் சைக்கிள்தான் (நிறைய படங்கள்).

தபால்காரர், பால்காரர், பேப்பர் போடுபவர் எனப் பலரின் உற்ற தோழன் சைக்கிள் வண்டிதான்!

இரண்டு, மூன்று சக்கர சைக்கிள், சர்க்கஸ் பஃபூன் ஓட்டும் ஒரு சக்கர சைக்கிள், இரண்டுபேர் பெடல்செய்து போகும் மூன்று சக்கர சைக்கிள் எனப் பல ரகங்கள்.

முன்பக்க பார் இல்லாத லேடீஸ் சைக்கிள் பிரத்தியேகமாக பெண்களுக்கானது – ஓர் ஆண் அதை ஓட்டும்போது, பெண்ணுக்கான நளினத்துடன் ஓட்டுவதைப் போல் தோன்றுவது விந்தையானது!

சைக்கிள்கள் ஒரு தலைமுறையின் கலாச்சாரத்தைச் சொல்கின்றன. இன்றும் கிராமங்களின் முக்கியமான போக்குவரவு சாதனமாக இருப்பது சைக்கிள்கள்தான். காரியரில் தேங்காய்க் குலை, வைக்கோல் பிரி, கோழிகள் அடைத்த கூடை என வரப்புகளில் வளைந்து, வளைந்து சைக்கிளை ஓட்டிச்செல்வது அழகாய் இருக்கும்!

ஒலிபெருக்கி அலற, சுற்றிலும் காகிதத் தோரணங்கள் தொங்க, 24 மணி நேரம் இடைவிடாத சைக்கிள் சவாரி, ஊர்ப் பக்கங்களில் பிரபலம்.

நேரத்திற்குக் குழாய் வைத்த எவர்சில்வர் கேனில் டீயுடன் வரும் சைக்கிளுக்கு மவுசு கொஞ்சம் கூடதான்!

இன்று சைக்கிள் ஓட்டுவது ஒரு பயிற்சியாகச் செய்யப்படுகிறது! சுரங்கத்தில் வேலை செய்பவரைப்போல முன் விளக்குடன் ஒரு ஹெல்மெட், ஸ்போர்ஸ் ஷூவுடன் இருபது, முப்பது கிமீ சைக்கிள் சவாரி செய்யும் இளைஞர்கள் (ஞிகளும்) இப்போது நகர்ப்புறங்களில் அதிகம் காணப்படுகின்றனர்!

வீட்டுக்குள் காலைப் பயிற்சி சக்கரமில்லாத ‘ஸ்டாடிக்’ சைக்கிளில் தொடங்குகிறது – அது வெளியில் சைக்கிளில் சுற்றுவதற்கு ஈடாகுமா?

 

 

 

 

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

மனமென்னும் குரங்கு!

 

dr1

 

 

Image result for மனம் ஒரு குரங்கு

அந்தப் பெண்ணிற்கு சுமார் முப்பத்தைந்து வயதிருக்கும். படிய சீவப்படாமல், விரல்களால் கோதிவிட்டாற்போல் ஒதுக்கப்பட்ட சுருட்டைத் தலைமுடி. கண்களைச் சுற்றிக் கருவளையம். கணவன் கைத்தாங்கலாய்ப் பிடித்துக்கொண்டபடி உடன் வர, சின்னச் சின்ன அடிகளாய் வைத்து, பாலன்ஸ் செய்தபடி நடந்து வந்தாள். – தயக்கத்துடன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் உடல் குலுங்கியது. எங்கே விழுந்து விடுவாளோ என்ற பயம் கணவனின் இறுகிய கைப்பிடியில் தெரிந்தது. அருகிலிருந்த ஸ்டூலில் அமர்ந்து சிறிய பெருமூச்சுடன் ஆசுவாசப் படுத்திக்கொண்டாள் – எதிரே கணவன் அமர்ந்தான்.
 
“என்ன ப்ராப்ளம்?” என்றேன்.
 
”ஒரு மாதமாக இப்படி நடப்பதற்கு சிரமப்படுகிறாள். காரணம் தெரியவில்லை – பொது மருத்துவர், ஆர்த்தோ, நியூரோ மற்றும் ஆயுர்வேதம், யுனானி எல்லோரையும் பார்த்து விட்டோம். அநேகமாக எல்லா டெஸ்டுகளும் எடுத்து விட்டோம் – எல்லாம் நார்மல்!”
 
“கீழே விழுந்தார்களா? ஜுரம், ஜலதோஷம் ஏதாவது?”
 
“அதெல்லாம் ஒன்றுமில்லை – திடீரென்று இப்படி ஆகிவிட்டது – தெய்வக் குற்றமோ எனப் பரிகாரமெல்லாம் கூடச் செய்துவிட்டோம்”
 
எனக்குத் தெரிந்த அளவில் இந்த நடை எந்த வியாதியுடனும் பொருந்திப் போகவில்லை. இரத்தப் பரிசோதனைகள், ஸ்கான்கள் என எல்லா டெஸ்டுகளும் முகத்தில் அறைந்தாற்போல ’நார்மல்’ என்றன!
 
மீண்டும் நடக்கச் சொன்னேன் – இம்முறை கணவனின் உதவியில்லாமல்  நடந்தாள் – அதே நடை, எப்போதுவேண்டுமானாலும் விழுந்துவிடக்கூடிய அபத்திரமான குலுங்கும் நடை – கிட்டத்தட்ட முகமது பின் துக்ளக் படத்தில் சோ நடப்பதைப் போல – ஆனாலும் விழுந்துவிடவில்லை.
 
என் மனதின் மூலையில் சன்னமாகப் ‘பட்சி’ கூவியது.
 
”கவலைப்படாதீர்கள் – சீரியஸாகத் தெரியவில்லை – என் சைக்காலஜிஸ்ட்டைப் பாருங்கள்” என்றேன்.
 
”சைக்கியாட்ரி டாக்டரா?” சிறிது அதிர்ச்சியுடன் கேட்டார் கணவர்.
 
“சைக்கியாட்டிரிஸ்ட் இல்லை, சைக்காலஜிஸ்ட் – மருந்து கொடுக்கும் மருத்துவர் இல்லை – உளவியல் நிபுணர்”
 
மனமும், அதன் தன்மைகளும் வியக்க வைப்பவை. உடலை இயக்க வல்லவை! மகிழ்ச்சியில் சுதந்திரமாகப் பறக்கும் மனது, காயப்படும்போது இறுக்கத்தில் உடலைக் கட்டிப்போடும் – மனவலியின் வெளிப்பாடு உடல் உபாதைகளாக முன்னிருத்திக் கொள்ளும் வலிமை உடையது!
 
நோய்களைவிட, அவற்றால் ஏற்படும் மன இறுக்கமும், உளைச்சலும் தீவிரமானவை. நோய்க்கான சிகிச்சை இந்த மனவலியைத் தீர்க்காமல் முழுமையடைவதில்லை.
 
விவேகானந்தர் இதையே ‘நீ என்னவாக நினைக்கின்றாயோ, அதுவாகவே ஆகின்றாய்’ என்றார். ஆழ்மனதை கட்டுப்படுத்தி, மயக்க மருந்துகள் ஏதுமின்றி அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மகான்களைப் பற்றி நாம் அறிவோம்.
 
மனதால் ஒரு நோயை உருவாக்க முடியும் – அதே போல மனக்கட்டுப்பாடு ஒரு நோயின் வீரியத்தைக் குறைக்கவும் முடியும் என்பது உளவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
 
ஒரு நிலையில் நில்லாமல் தாவும் குரங்கு மட்டுமல்ல; சமயத்தில் உடல் நலத்தையே தன் கட்டுக்குள் கொண்டுவரும் ரிங்க் மாஸ்டரும் ஆகும் மனது!
 
மனது இறுக்கமாய் உள்ளபோது, பசியில்லை, உறக்கமில்லை, உடலில் பல வலிகள், எளிதில் எரிச்சலடைவது போன்ற பல உபாதைகள் – மனதால் உடலுக்கு வரும் நோய்கள் – PSYCHO SOMATIC DISORDERS – தீவிரமானவை, சிகிச்சைக்கு அடங்காதவை!
 
ஹிப்னாடிஸம் – (மெஸ்மெரிஸம்) – என்பது ஒரு வகை மனோவசியக் கலை! ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் மார்டின் ஷார்கோ இந்த மனோவசிய முறையில் பல நரம்பு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தமுடியும் என்றார்.
 
சைக்காலஜிஸ்ட் ரிப்போர்ட் என் சந்தேகத்தை உறுதிப் படுத்தியது. தீவிர மன இறுக்கத்தாலும், உளைச்சலாலும் அந்தப் பெண் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. அதன் வெளிப்பாடுதான் இந்த விநோதமான நடை! ஒரு வகையான மனோவியாதி.
 
நடந்தது இதுதான் – அவசரத் தேவைக்காகக் கடனாக வாங்கி எடுத்து வந்த பணம் – ரூபாய் ஐம்பதாயிரம் – வரும் வழியில் பஸ் பிரயாணத்தில் தொலைந்து விடுகிறது. கண்டிப்பான கணவன், மாமியார் மற்றும் பணத்தின் அவசரத் தேவை எல்லாமும் ஒன்றாகச் சேர்ந்து அந்தப் பெண் மனதை உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன – தன் இயலாமை, பொறுப்பற்ற தன்மையாகத் தன்னையே குத்திக் காட்டும் குற்ற உணர்ச்சியாக விஸ்வரூபம் எடுக்கிறது – மனக் குரங்கு, இப்போது ரிங்க் மாஸ்டராகி விடுகிறது – உடலை நோய்வாய்ப்பட வைக்கிறது – வினோதமாக நடக்க வைக்கிறது!
 
இதைத்தான் கண்ணதாசன் ‘ மனித ஜாதியின் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா ‘ என்றான்!
 
இரத்தப் பரீட்சைகள், எக்ஸ்ரே, ஸ்கான் இவற்றால் இந்த மனம் என்னும் ரிங் மாஸ்டரை வெளிப்படுத்த முடியாது.
 
நடந்தவற்றைக் கூறி, கவுன்சலிங் மூலம் வாழ்வின் அநித்தியங்களையும், தவிர்க்கமுடியாத துயரங்களையும் விளங்க வைத்த பிறகு, சிறிது சிறிதாக அவள் நார்மலாக நடக்க ஆரம்பித்தாள் – மனது அமைதியானது!
 
ஒரு வகுப்பில் இந்த கேஸ் ஹிஸ்டரியைக் கூறி, மாணவர்களைக் கேட்டேன்:
‘இதற்கு என்ன தீர்வு – எப்படி சிகிச்சை அளிக்க முடியும்?”
ஒரு நீண்ட அமைதி.
பின் பெஞ்சிலிருந்து ஒரு குரல் கேட்டது.
“யாராவது ஒரு ஐம்பதாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்து விடலாம்!”
மனம் ஒரு குரங்கு – ஒத்துக்கொள்கிறீர்களா?!!
Image result for மனம் ஒரு குரங்கு
 
 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

dr1

அசோகமித்திரனின் கட்டுரைகள்

Image result for ashokamitran essays

காலச்சுவடில் நாகேஷ் மறைவுக்கு அஞ்சலிக் கட்டுரைஎழுதியிருந்தார் அசோகமித்திரன். கிட்டத்தட்ட அதேசமயம் தி நகர் டாக் பத்திரிகையில், தன் தி நகர்நினைவுகளையும் பதிவு செய்திருந்தார்.

ராமகிருஷ்ணாபள்ளி நாட்களுடன், பனகல் பார்க், பாண்டி பசார்,டாக்டர் சாரி கிளினிக், சிவா விஷ்ணு கோயில் என என்நினைவுகளும் அவர் எழுத்துக்களுடன் பயணித்தன.

கிழக்குப் பதிப்பகம் அவரது கட்டுரைகளை வரிசைப்படுத்தி, இரண்டு குண்டு வால்யூம்களாக வெளியிட்டுள்ளது. ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரைக் கலெக்‌ஷன் அவைஅவரதுவிசாலமான பார்வை, எளிமையான வார்த்தைக் கோர்வைகள், அகில உலக ஞானம், பரந்துபட்ட வாசிப்பு,அன்றாட வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை அணுகும்முறை, சமூக அக்கறை, தீவிர கவனிப்பு, இடையே  இழைந்தோடும் மெலிதான அங்கதம்வாசகனின் தோள்மீது கைபோட்டு அழைத்துச் செல்லும் நட்பான எழுத்துக்கள்அவரை அறிந்தவர்களுக்கு அவருடன்பேசிச் செல்லும் அனுபவத்தைக் கொடுக்கக் கூடியவை!

அவரது சமீபத்திய, தமிழ் தி இந்து வில் வெளியான புகைப்படம் போல் ஒரு வாழ்க்கை” ஓர் ஆத்மார்த்தமானகட்டுரை. ஜுரத்தில் அழிந்துவிட்ட பழைய நினைவுகள்,அறுபத்தைந்து ஆண்டுகளின் வாழ்க்கை, தன்கதைகளில் வாழும் யதார்த்தம், வரலாற்றைப் பழங்குப்பையாக (பழைய காகிதங்கள்,நூற்றுக்கணக்கில் புத்தகங்கள், டயரிகள், குறிப்புகள்,பழைய பத்திரிகை இதழ்கள்) ஜானகிராமனிடம் (பழையபேப்பர்காரன்?) போட்டுவிட்ட மனவலி, பழைய பிலிம்சுருள்கள், புகைப்படங்களை குப்பையில் போட்டுவிட்ட வருத்தம்எல்லாம் வாழ்க்கைச் சித்திரங்களாகக் கண்முன் விரிகின்றன! (எழுதுவதைத் தவிர, அந்தக் காலத்தில் கையில் காமெராவுடன் போட்டோக்கள்எடுப்பது அசோகமித்திரனுக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்பது பலருக்குச்  செய்தியாக இருக்கலாம்!).

நடைவெளிப் பயணம்’ – அசோகமித்திரன் குங்குமத்தில்எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பு.  இவை  சமகாலத்தவை; அல்லது நான் வாழ்ந்த காலத்தவை.  இந்த 83 ஆண்டுகளை நான் புரிந்துகொள்ளும்  முயற்சியில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டவை. இவை  படிப்போருக்கு ரசமாகவும் இருந்து, நம் காலத்தையே புரிந்து கொள்வது எவ்வளவு கடினமானது என்றும்  நினைக்க வைத்தால் என் முயற்சி பயனில்லாமல்போகாதுஎன்கிறார் முன்னுரையில்! ஒவ்வொரு  கட்டுரையோடும், தான் படித்து ரசித்த புத்தகம்  ஒன்றினை வாசகனுக்கு அறிமுகப் படுத்தும் சிறு குறிப்பு ஒன்று பெட்டிச் செய்தியாக எழுதுகிறார்எளிமையான,ஆனால் ஆழமான குறிப்புகள்வாசிக்கத் தூண்டும்அறிமுகங்கள்!

முன்னுரைகள் பற்றி…. என்ற கட்டுரையில்:

அந்த நூலுக்கு அது எழுதப்பட்ட நாளிலிருந்து இருபதுஆண்டுகள் கழித்தும், அந்த முன்னுரை பொருத்தமாக இருக்குமா என்று எண்ணிப் பார்ப்பது நல்லது. அப்படிஎண்ணிப் பார்ப்பதற்குக் கதை எழுதுவதைவிட இன்னும்தீவிரமான கற்பனை தேவை 

எழுபதுகளிலேயேஒரு பிரசங்கம்கட்டுரையில் இன்றுஅதிக அளவில் பேசப்படுகின்ற பெண்ணீயக் கருத்துக்களை முன்வைத்து எழுதியிருப்பார்சமரசம் எதுவுமில்லாமல்!  

2016, செப் 22 அவரது பிறந்த நாளன்று அவர் எனக்களித்த பரிசு அவரதுபார்வைகள்” – கட்டுரை நூல்! முழுவதும்எழுத்தாளர்களைப் பற்றிநேர்கொண்ட பார்வையுடன்  மனிதர்களை’ அலசியிருப்பார்.

அசோகமித்திரனின் எழுத்துக்கள் எளிமையாய்த்தோன்றும். ஆனால் அவை  தீவிரமானநுணுக்கமான எண்ணங்களின் பிரதிபலிப்புகள்

Related image

அவர் எழுத்துக்களைப் போலவேஅவரும் எளிமையானவர்!