கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

வாழ்வா? சாவா?

Related image

சரியான நேரத்தில், சரியாக எடுக்கப்படும் முடிவுகள் வாழ்க்கையில் வெற்றிகளைத் தரக்கூடும். மருத்துவத்தில் சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளே உயிர்களைக் காக்கும்!

வாழ்வா, சாவா என்ற நிலையில், இரண்டு உயிர்களில் ஒன்றினைத்தான் காப்பாற்ற முடியும் என்றால் எப்படி முடிவெடுப்பது?

ஃப்ளோரிடாவில் வசிக்கும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஃப்ராங்க் போயெம் விவரிக்கும் கேஸ் ஹிஸ்டரி ஒன்றைப் பார்ப்போம் .

39 வயதான ஆறு மாத கர்ப்பிணிப் பெண் – மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவினால் (HEAMORRHAGE), கோமா நிலையில் அட்மிஷன். ஸ்ட்ரெட்சரைச் சுற்றிலும் உறவினர்கள் வாசல் வரை வந்து நிற்க, வெளியில் எடுத்த ஸ்கேன் , மூளையில் ரத்தம் கசிந்து தேங்கியுள்ளதைக் காட்டியது.

உடனே அறுவைச் சிகிச்சை செய்வதுதான் அவள் உயிர் பிழைக்க உள்ள ஒரே வாய்ப்பு! உள்ளே உள்ள சிசுவின் உயிருக்கும் ஆபத்து சேர்ந்தே இருந்தது. அன்னை உயிருடன் இருப்பது, சிசுவின் உயிருக்கும், வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது.

வெளியில் நடப்பது ஏதுமறியாமல், அம்மாவின் கர்ப்பப்பையில் சுறுசுறுப்பாக நீந்திக்கொண்டிருந்த அந்தக் குழந்தையை அல்ட்ராசவுண்ட் தெளிவாகக் காட்டியது.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, நினைவு திரும்பாவிட்டாலும், அம்மாவின் கருவறையின் பாதுகாப்பான, போஷாக்குடன் கூடிய சூழல் குழந்தைக்கு இன்னும் சிறிது காலம் தேவை – அதுவரை அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைத் தகுந்த முறையில் உயிருடன் வைத்திருக்க வேண்டும்.. டாக்டர் போயெம், தன் சக மருத்துவர்களுடன் – ஒரு டசனுக்கும் மேற்பட்ட ஸ்பெஷலிஸ்ட்டுகள் – கலந்தாலோசித்து, அப்பெண்ணின் கணவனுடைய அனுமதியுடன் ஒரு முடிவுக்கு வருகிறார்.

அடுத்த பத்து வாரங்களுக்கு, அப்பெண்ணிற்கு எல்லாவிதமான ‘லைஃப் சப்போர்ட்’ வசதிகளும் செய்யப்படுகின்றன. அறையில் அவளுக்குப் பிடித்த இசை ஒலிபரப்பப்படுகின்றது. உறவினர்கள், நர்சுகள், டாக்டர்கள், மருத்துவமனை சிப்பந்திகள், எல்லோரும் தினசரி சேவைகளை, அவளுக்கு எல்லாம் புரியும் என்பதைப்போல அவளுடன் பேசிக்கொண்டே செய்கின்றனர்.

கருவறையில் சுற்றிவரும் சிசுவுக்குத் தேவையான எல்லாம் தடங்கல் இல்லாமல் கிடைக்க – அன்னையின் டிரிப்பில் உணவு, தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் போன்றவை – வழி செய்யப்படுகின்றன. வெளி உலகம் வந்து தானாக இயங்கும் வரை அன்னை உயிருடன் இருப்பது அவசியமல்லவா?
குழந்தையின் இதயத்துடிப்பு, அசைவுகள் எல்லாம் முறையாகத் தினமும் மானிடர் செய்யப்படுகின்றன. ஏழெட்டு வாரங்கள் சென்று, குழந்தைக்குக் கருவறையில் மூச்சு முட்டல் ஏற்படுகிறது. உடனே அன்னைக்கு சிசேரியன் செக்‌ஷன் செய்து, குழந்தை – சுமார் மூன்று கிலோ எடை! – உயிருடன் வெளியே எடுக்கப்படுகின்றது – அழகான ஆண் குழந்தை!!

கோமாவிலிருந்து மீளாமல், பின்னர் அன்னையும், தன் கடமை முடிந்ததெனக் கண்ணை மூடிவிடுகிறாள்.

சமூகம், சட்டம், மெடிகல் எதிக்ஸ் எல்லாம் கவனிக்கப்படவேண்டிய கட்டாயம்  இந்த சிகிச்சைக்கு இருக்கின்றது. மிகவும் அரிதாகவே ஏற்படக்கூடியது – ஆகும் செலவும் அதிகமானது. இதையெல்லாம் தாண்டி, அந்தக் குழந்தை மருத்துவரின் கைகளில் தன் பிஞ்சுக் கால்களை உதைத்தபோது, ஏற்பட்ட பெருமையையும், நிறைவையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை என்கிறார் டாக்டர் போயெம்!

கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு நிலை – நண்பனின் மனைவி ஆறு மாத கர்ப்பிணி – இடைவிடாத வலிப்புடன் வந்தார். வலிப்புகளை உடனே நிறுத்த வேண்டும்; இல்லையேல் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாய் முடியும். ஈ ஈ ஜி தவிர வேறு டெஸ்ட் எதுவும் எடுக்க முடியாது – எம் ஆர் ஐ ஸ்கானும் 7 மாதங்களுக்குப் பிறகுதான், அதுவும் மிகவும் கவனத்துடன்தான் எடுக்க முடியும். இருந்தாலும் மிகவும் எச்சரிக்கையுடன், குழந்தையைப் பாதிக்காத மருந்துகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு வழியாக வலிப்புகளை நிறுத்தினோம்.

ஏழாம் மாதம் செய்த ஸ்கான், எங்களைப் புரட்டிப் போட்டது – தலையில் மிகப் பெரிய கட்டி – எதுவாகவும் இருக்கலாம் – கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்வது அவளுக்கும், உள்ளே வளரும் குழந்தைக்கும் ஆபத்தாய் முடியும். நியூரோ சர்ஜன், மகப்பேறு மருத்துவர், பொது மருத்துவர், டிபி ஸ்பெஷலிஸ்ட் எல்லோரும் விவாதித்தோம் – ஸ்கானில் ஒரு சின்ன ’க்ளூ’ – அது TB கட்டியாக இருக்கும் வாய்ப்பினை உறுதி செய்தது. மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்த டிபி மருந்துகளைக் கொடுத்து, தாய், சேய் இருவரையும் மானிடர் செய்தோம்.

Image result for cesarean delivery

டியூ டேட்டில், அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை முதலில் காப்பாற்றினோம் – நல்ல வேளை, குறையொன்றும் இல்லாமல் சரியாக இருந்தது குழந்தை!

பின்னர் எடுக்கப்பட்ட ஸ்கேனில், தலைக் கட்டி 90% கரைந்திருந்தது – டிபி தான் என்பது உறுதியானது. மேலும் மூன்று மாதங்களில், கட்டி முழுதுமாகக் கரைந்து, தாயும் சேயும் இன்று வரை நலம்!

Related image

வாழ்வா, சாவா என்பதில், ஓருயிரைத்தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை எப்போதுமே மருத்துவர்களுக்குச் சவால்தான்!

 

கடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன்

 dr1

நில், கவனி, எடுத்துக்கொள்!

 Image result for medical shop atrocities in india

காலையில்  எஃப் எம்மில் டிஎம்ஸ் குரலில் எம்ஜிஆர் பாடிக்கொண்டிருந்தார் – ‘ஏமாறாதே, ஏமாற்றாதே’.

பாட்டை ரசிக்க விடாமல் செல்போன் அலறியது.  பச்சை வட்டத்தில் விரலைத் தேய்த்து, ‘ஹலோ’ – முடிக்குமுன் “சார் நான் …. பேசறேன். என் ரிலேஷன் ஒருத்தருக்குத் திடீரென்று முகம் ஒரு பக்கமாய்க் கோணி, கையும் காலும் ஸ்டிஃப்பா ஒரு பக்கமாய் இழுக்குது. வாயிலிருந்து சலைவா ஒழுகுது’ என்றார் – குரலில் பதட்டம்.
 
‘நினைவு இருக்கிறதா?
 
‘ம்..நல்லா கான்சியஸா பேசறான் – ஆனா பேச்சு குளறுது
 
‘யூரின், மோஷன் போய்ட்டாரா?
 
‘அதெல்லாம் இல்லை சார்
 
‘சரி, உடனே அருகில் இருக்கும் நர்சிங் ஹோமில் அட்மிட் பண்ணுங்க – ஹீ நீட்ஸ் ‘இன் பேஷண்ட்’ ட்ரீட்மென்ட். வலிப்பாக இருக்கலாம். இது தான் முதல் முறையா?
 
‘ஆமாம் சார். ஃபேமிலில கூட யாருக்கும் இல்லை சார்’ என்றது போனில் குரல் பதட்டம் குறையாமல்!
 
இது போன்ற எமர்ஜென்சிகளில், பேஷண்டை நேராய்ப் பார்ப்பதும், அட்மிஷனில் வைப்பதும் இன்றியமையாதவை.
 
அட்மிஷன், முதலுதவி, ஆப்சர்வேஷன் எல்லாம் முடிந்து, நார்மலாக வீடு போய்ச்சேர்ந்தார் – மறுநாள் மாலை கிளினிக்கில் என்னை வந்து பார்ப்பதாக ஏற்பாடு. அதற்கு முன்பாகவே மதியம் மூன்று மணியளவில் மீண்டும் அதேபோன்ற இழுப்பு வந்து விடவே, என் செல்போன் சிணுங்கியது. ‘ நேற்று ஊசியும், ட்ரிப்பும் போட்ட பிறகு சரியாகிவிடவே நாங்கள் வீட்டுக்குப் போய்விட்டோம்; இப்போது திரும்பவும் அதே அட்டாக்’ என்றார் பேஷண்டின் அப்பா.
 
எமர்ஜென்சியாக ஒரு மாத்திரையைக் கொடுக்கச் சொன்னேன். ‘அரை மணியில் குறையவில்லையென்றால் மீண்டும் அட்மிஷன்தான்.  என்னைக் கூப்பிடுங்கள்’ என்றேன்.
 
மாலை 7 மணி சுமாருக்கு என் கிளினிக் வந்தான் அவன். வயது இருபத்தி இரண்டு, தனியார் கம்பெனியில் வேலை; கெட்ட பழக்கங்கள் கிடையாது. ஒல்லியான உடல், முள் தாடி, முகத்தில் ஓரிரண்டு பருக்கள், கண்களில் சிறிது மயக்கம்.
 
‘ஏதாவது மருந்து எடுத்துக் கொள்கிறாயா?’ என்றேன்.
 
‘இல்லை’. 
 
பேசிக்கொண்டிருக்கும்போதே, முகம் ஒரு பக்கமாய்க் கோணியது, உடல் பைசா கோபுரம் போல சாய்ந்தது, உட்கார்ந்திருந்த ஸ்டூலிலேயே  கைகளும் கால்களும் விரைத்துக் கொண்டு, கோணலாகப் பறக்கும் பறவை போல் இறுகினான். கோணிய வாயிலிருந்து எச்சில் வழிந்தது. ‘ம்..ம்ம்..ஆஆ..ஐயோ’ பல்லைக் கடித்துக் கொண்டு அரற்றினான். நினைவு தப்பவில்லை! 
 
‘என்ன செய்யிது?
 
‘இழுக்குது’ வாய் குளரியபடி சொன்னான்.
 
இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் ஓரளவுக்கு நார்மலானான். நடந்து, பாத்ரூம் சென்று வந்தான். இன்னும் சிறிது விரைப்பு கால்களில் இருந்தது.
 
மீண்டும் ‘வேறு ஏதாவது மருந்து எடுத்துக்கொண்டாயா? ஆல்கஹால்?’ என்றேன்.
 
‘ அந்தப் பழக்கம் இல்லை சார். இரண்டு நாள் முன்பு நைட் டுயூட்டியில்  கையில் ஒரு காயம் பட்டது. அதற்கு வலி மருந்தும், ஆண்டிபயாடிக்கும் எடுத்துக் கொள்கிறேன்’ 
 
இது வலிப்பு இல்லை. சில மருந்துகளால் வரும் ஒருவகை நரம்பு இழுப்பு – EXTRAPYRAMIDAL REACTION – வாந்தி மாத்திரைகள், சைக்கியாட்டிரி மருந்துகள் ஒவ்வாமையினால் வரக்கூடும். 
 
இவன் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் இப்படி வருவதற்கு வாய்ப்பில்லை – இருந்தாலும் மருந்துகளைக் காட்டச் சொன்னேன். சீட்டுக் கொண்டுவரவில்லை – பெயரும் தெரியாது!  அட்மிட் செய்யச் சொன்னேன் – எல்லா மருந்துகளையும் நிறுத்தச் சொல்லி, சிம்பிள் செடேஷன் கொடுத்து ஆப்சர்வேஷனில் வைத்தேன்.
 
டியூட்டி டாக்டரிடம் சொல்லி, அவன் கைப் புண்ணுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்தினைப் போனில் சொல்லச் சொன்னேன் – குழப்பத்துடன் காத்திருந்தேன்.
 
டாக்டரின் போன் என் குழப்பத்தைப் போக்கியது – ஆனால் அதிர்ச்சியூட்டியது. 
 
அவன் எடுத்துக்கொள்ளும் மருந்து ‘ஹேலோபெரிடால்’ – மனநிலைப் பிறழ்வுகளுக்குக் கொடுப்பது – ANTIPSYCHOTIC – ‘இவன் ஏன் இதனை எடுத்துக்கொள்கிறான்?
 
கொஞ்சம் ஷெர்லாக் ஹோம் வேலை செய்து பார்த்ததில் விடுகதை முடிச்சு அவிழ்ந்தது!
 
நடந்தது இதுதான்:
 
கையில் சின்னக் காயம் பட்டது. அருகிலிருந்த 24 மணிநேர மருத்துவ மனையில் முதலுதவி செய்து கொண்டு, டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரையை பக்கத்திலிருந்த மருந்துக் கடையில் வாங்கிப் போட்டுக்கொண்டு, வேலையில் தொடர்ந்தான்- அப்போது  விடியற்காலை இரண்டு மணி. மறுநாள் காலை இந்த இழுப்பு வந்தது. முதலுதவியில் சரியானது. புண்ணுக்கான மருந்தைப் பற்றி பேச்சே இல்லை! மறுபடியும் வலி மாத்திரையைப் போட்டுக் கொண்டார் – இழுப்பு வந்தது.  
 
எல்லாம் சரி – ஹேலோபெரிடால் எப்படி வந்தது? 
 
இங்குதான், நம் மக்களின் அறியாமையும், மருந்துக் கடைகளின் அலட்சியமும் தெரிய வருகிறது. டாக்டர் எழுதிக் கொடுத்த வலி மருந்தின் பெயருக்கும், ஹேலோபெரிடால் மருந்தின் ‘ட்ரேட்’ பெயருக்கும் ஸ்பெல்லிங்கில் மிகச் சிறிய வித்தியாசம்தான் – தூக்கக் கலக்கத்தில் கடைப்பையன் மாற்றிக் கொடுத்த மருந்தை இருவருமே சரி பார்க்கவில்லை – தவறான மருந்தால் வந்தது வினை!
 
‘இனி ஹேலோபெரிடால் எடுத்துக் கொள்ளக் கூடாது, அது உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. மருந்து வாங்கியவுடன் பெயர்களைச் சரி பார்த்து, வேண்டுமானால் மருத்துவரிடம் திரும்பவும் சென்று காண்பித்து, பிறகு உட்கொள்ளவும்’ என்ற அறிவுரையுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் சென்று தன் அப்பாவுடன் வந்து நன்றி சொல்லிப் போனான் அந்த நல்ல பிள்ளை!
 
இப்படித்தான் ஒரு முறை மருந்துக் கடைக்காரர்  முகத்தில் பருவுக்குக் கொடுத்த மருந்துக்கு பதில், பைல்ஸுக்குப் போடும் மருந்தைக் கொடுத்துவிட, முகமெங்கும் சிவந்து, கோபமில்லாமலே என்னை முறைப்பதைப்போல் பார்த்தார் ஒரு வழக்கறிஞர்.  
 
கடையில் வாங்கிய மருந்து, டாக்டர் கொடுத்த மருந்துதானா என்பதை, ஒரு முறைக்கு இருமுறையாகச் சரி பார்ப்பதே இன்றைய நிலையில் தேவை!
 
 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

dr1

சைக்கிள் காலம்!

Image result for குரங்குப் பெடல் சைக்கிள்

Image result for குரங்குப் பெடல் சைக்கிள்

அப்போது எனக்கு பத்து வயதிருக்கலாம் – கமலீஸ்வரன் கோயில் தெரு குள்ள ஸ்ரீதர் வாடகை சைக்கிளில் ரவுண்டு அடித்துக்கொண்டிருந்தான் – குரங்குப் பெடல் இல்லை – சீட்டில் உட்கார்ந்து!

அவன் ஓட்டிக்கொண்டிருந்தது, எங்கள் வீட்டில் இருந்த பச்சைக்கலர் ஹெர்குலெஸ் சைக்கிள் மாதிரி இல்லை. சின்னதாக நா..னே காலூன்றிக் கொள்ளுமளவுக்கு – (அந்த நீண்ட ’ஏ’காரம் என் குட்டை உருவத்தைக் குறிக்க!) – சிறுவர் சைக்கிள்!

தேய்ந்த பிரேக்குகள், துருவேறிய வீல் கார்டு, பெடலில் தொங்கும் நடு ரப்பர்க் கட்டை, 45 டிகிரியில் வானம் பார்த்த மரக்கட்டை சீட்டு, வளைந்த ஹாண்டில் பார், வாய்பிளந்த பிரேக் லீவர்கள்  – முதன் முதலில் இந்த சைக்கிளை ஓட்டிய பையனுக்கு இப்போது குறைந்தது ஐம்பது வயாதாகியிருக்கலாம்!

ஏக்கமாயிருந்தது – ஸ்ரீதர் கொஞ்சம் பெரியவன், வயதில்!  ஒரு ரவுண்டு கேட்டால் தரமாட்டான். பாட்டியும் காசு தரமாட்டாள் (ஒரவருக்கு பத்தோ, இருபதோ பைசாதான்) – “விழுந்து அடி பட்டுண்டா யாரு டாக்டர் வீட்டுக்கு அலையறது?”

சின்ன வயது சைக்கிள் அனுபவம் பற்றி ஒவ்வொருவரிடமும் நிச்சயம் ஒரு கதை இருக்கும் – சைக்கிள் அன்றைய வெகுஜன சினேகிதன்! எல்லோர் வீட்டிலும் ஒரு சைக்கிள் – அவசரத்துக்கு சட்டென்று ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு, பக்கத்துத் தெரு பொட்டிக்கடைக்குப் போய் ஒரணாவுக்குத் தக்காளியோ, வெங்காயமோ வாங்கி வர சைக்கிளை விட வேறு டிரான்ஸ்போர்ட் ஏது?

ஆறாம் கிளாஸில் என்னுடன் படித்த நடராஜனுக்கு இரண்டு காலிலும் போலியோ – மெடல் காலிபர்ஸ் காலை இறுக்க, சின்ன சைக்கிளில் ஒரு மாதிரி கோணலாய் உட்கார்ந்து பெடலடித்தபடி வருவான். ஹாண்டில்பார் பிடிகளிலும், சக்கர கார்டுகளிலும் கலர்க் கலராய்க் குஞ்சலங்கள் ஆடிவரும் – போலியோ குறையை அந்தச் சின்ன சைக்கிள் நட்புடன் தீர்த்து வைத்தது!

 

என் தாத்தா சைக்கிளோட்டி நான் பார்த்ததில்லை. எத்தனை மைல்களானாலும் நடராஜா சர்வீஸ்தான்! ஆனால் அப்பா, மார்கெட், சலவைக்கடை, ஆபீஸ் – எங்கும் சைக்கிளில்தான் செல்வார் – அம்மாவைவிட அவரது ஹெர்குலஸ் சைக்கிள்தான் அவருக்கு மிகவும் நெருக்கம்! மடித்துக் கட்டிய வேட்டியுடன் லாவகமாக முன்பக்கமாக நொடியில் ஏறிச் செல்வார்! நாளொன்றுக்கு முப்பது கிமீ சலிக்காமல் எழுபது வயது வரை சைக்கிளில் பவனி வந்திருக்கிறார். காலை நடையை விட இது சிறந்த உடற்பயிற்சி அவருக்கு!

’சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது’ ஒவ்வொரு சம்மரிலும் நடக்கும் ஒரு விவகாரம்! ஒருவர் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பின்னால் ஓடிவர, கற்றுக்கொள்பவர் நேராகப் பார்த்துக்கொண்டு, ஹாண்டில்பாரை பாலன்ஸ் செய்துகொண்டு, பெடலை மிதிப்பது எந்த நாட்டியத்தை விடவும் நளினமானது, கீழே விழும் வரையில்! உடன் வருபவர் மூச்சுத் திணறி பாதியிலேயே நின்றுவிட, பேச்சுக்குரல் இல்லாததால் ஓட்டுபவர் திரும்பிப் பார்க்க, பயத்தில் பாலன்ஸ் தவறி விழுந்து தெருவில் சில்லறை பொறுக்குவதும், விழுப்புண்கள் பெறுவதும், சைக்கிள் சரித்திரத்தில் திரும்பத் திரும்ப வருவன!

படிப்படியாக இரண்டு வருடங்களில் நானே சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதில் எனக்குக் கொஞ்சம் பெருமைதான்! சைக்கிள் ஸ்டாண்ட் போடுவதில் தொடங்கி, சாயாமல் தள்ளிக்கொண்டு போவது, இடது காலைப் பெடல் மீது வைத்துக்கொண்டு,வலது காலால் தரையில் உந்தி உந்தி சில நிமிடங்கள் கால் தரையில் படாமல், சைக்கிள் பெடல் சவாரி செய்வது, கொரங்கு (?குரங்கு) பெடல் அடிப்பது என்று சுயப்பயிற்சி! பிளாட்பாரமோ, மைல் கல்லோ – அதன் மீது காலூன்றி முதலில் பாரில், பின்னர் சீட்டில் அமர்ந்து சைக்கிள் சவாரி!

இதற்குள் சுள்ளி பொறுக்கிச் சென்ற செல்லாத்தாவின் பின்புறம் சைக்கிளால் மோதி – ப்ரேக் பிடிக்காமல் – கெட்ட வார்த்தையில் வாங்கிய திட்டு, மாது மாமாவின் புது வெள்ளை வேட்டியில் முன்சக்கரம் பட்டு அழுக்கானதற்கான  திட்டு, கட்டியிருந்த நாலு முழ வேட்டி, சைக்கிள் செயினில் மாட்டிக் கிழிந்து, எண்ணை/கிரீஸ் கறையில் கலர் மாறியது, தெரு முனையில் திரும்பிய குதிரை வண்டியைப் பார்த்து மிரண்டு, இடதுபுறம் சைக்கிளோடு சரிந்து, தெருவோரச் சாக்கடையில் சங்கமித்தது எல்லாம் சைக்கிள் கால வரலாற்று உண்மைகள்!

இரண்டு கைகளையும் விட்டு, சிட்டுக்களுக்கு முன்னால் சீன் போட்ட மறு நிமிடம், ஹாண்டில்பார் நொடிந்து ‘தடால்’ என கீழே விழுந்து தரை பெருக்காத வாலிபர்கள் குறைவு!

அந்தக்காலத்தில்,இரவு நேரத்தில் விளக்கில்லாமல் சைக்கிளில் போவது குற்றம். அதற்கான விளக்கை தினமும் துடைத்து, மண்ணெண்னை விட்டு ரெடி செய்வது ஒரு வேலை! பின்னால் வந்த முன்னேற்றம், சக்கரத்தில் உராய்ந்தபடி டைனமோவும் – அதனால் பிரகாசமாய் எரியும் கூம்பு வடிவ எலெக்ட்ரிக் லைட்டும்!

நாணல் படத்தில் விளக்கு இல்லை என நாகேஷை நடுரோட்டில் போலீஸ்காரர் நிறுத்த, மெதுவாய் அவரைச் சுற்றி வந்து, தோள்மீது கைபோட்டு சைக்கிளை நிறுத்துவார் – “பிளாட்ஃபாரமும் இல்லே, லைட் போஸ்ட்டும் இல்லே; நடு ரோட்டுல நிக்கச் சொன்னா, எப்படி சைக்கிள நிறுத்தறது? அதான் இப்படி…” என்பார்!

தமிழ் சினிமாக்களில் காதல் சொல்லும் சைக்கிள்கள் – நீதிக்குப் பின் பாசம் (எம்ஜிஆர் – சரோஜாதேவி), கல்யாணப் பரிசு (ஜெமினி – சரோஜாதேவி). அண்ணாமலை (ரஜினி, குஷ்பு) ! சைக்கிள் ஓட்டும் போதுதான் தத்துவப் பாட்டும் வரும் – பாவமன்னிப்பு (சிவாஜி). ஏழ்மையின் சின்னமும் சைக்கிள்தான் (நிறைய படங்கள்).

தபால்காரர், பால்காரர், பேப்பர் போடுபவர் எனப் பலரின் உற்ற தோழன் சைக்கிள் வண்டிதான்!

இரண்டு, மூன்று சக்கர சைக்கிள், சர்க்கஸ் பஃபூன் ஓட்டும் ஒரு சக்கர சைக்கிள், இரண்டுபேர் பெடல்செய்து போகும் மூன்று சக்கர சைக்கிள் எனப் பல ரகங்கள்.

முன்பக்க பார் இல்லாத லேடீஸ் சைக்கிள் பிரத்தியேகமாக பெண்களுக்கானது – ஓர் ஆண் அதை ஓட்டும்போது, பெண்ணுக்கான நளினத்துடன் ஓட்டுவதைப் போல் தோன்றுவது விந்தையானது!

சைக்கிள்கள் ஒரு தலைமுறையின் கலாச்சாரத்தைச் சொல்கின்றன. இன்றும் கிராமங்களின் முக்கியமான போக்குவரவு சாதனமாக இருப்பது சைக்கிள்கள்தான். காரியரில் தேங்காய்க் குலை, வைக்கோல் பிரி, கோழிகள் அடைத்த கூடை என வரப்புகளில் வளைந்து, வளைந்து சைக்கிளை ஓட்டிச்செல்வது அழகாய் இருக்கும்!

ஒலிபெருக்கி அலற, சுற்றிலும் காகிதத் தோரணங்கள் தொங்க, 24 மணி நேரம் இடைவிடாத சைக்கிள் சவாரி, ஊர்ப் பக்கங்களில் பிரபலம்.

நேரத்திற்குக் குழாய் வைத்த எவர்சில்வர் கேனில் டீயுடன் வரும் சைக்கிளுக்கு மவுசு கொஞ்சம் கூடதான்!

இன்று சைக்கிள் ஓட்டுவது ஒரு பயிற்சியாகச் செய்யப்படுகிறது! சுரங்கத்தில் வேலை செய்பவரைப்போல முன் விளக்குடன் ஒரு ஹெல்மெட், ஸ்போர்ஸ் ஷூவுடன் இருபது, முப்பது கிமீ சைக்கிள் சவாரி செய்யும் இளைஞர்கள் (ஞிகளும்) இப்போது நகர்ப்புறங்களில் அதிகம் காணப்படுகின்றனர்!

வீட்டுக்குள் காலைப் பயிற்சி சக்கரமில்லாத ‘ஸ்டாடிக்’ சைக்கிளில் தொடங்குகிறது – அது வெளியில் சைக்கிளில் சுற்றுவதற்கு ஈடாகுமா?

 

 

 

 

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

மனமென்னும் குரங்கு!

 

dr1

 

 

Image result for மனம் ஒரு குரங்கு

அந்தப் பெண்ணிற்கு சுமார் முப்பத்தைந்து வயதிருக்கும். படிய சீவப்படாமல், விரல்களால் கோதிவிட்டாற்போல் ஒதுக்கப்பட்ட சுருட்டைத் தலைமுடி. கண்களைச் சுற்றிக் கருவளையம். கணவன் கைத்தாங்கலாய்ப் பிடித்துக்கொண்டபடி உடன் வர, சின்னச் சின்ன அடிகளாய் வைத்து, பாலன்ஸ் செய்தபடி நடந்து வந்தாள். – தயக்கத்துடன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் உடல் குலுங்கியது. எங்கே விழுந்து விடுவாளோ என்ற பயம் கணவனின் இறுகிய கைப்பிடியில் தெரிந்தது. அருகிலிருந்த ஸ்டூலில் அமர்ந்து சிறிய பெருமூச்சுடன் ஆசுவாசப் படுத்திக்கொண்டாள் – எதிரே கணவன் அமர்ந்தான்.
 
“என்ன ப்ராப்ளம்?” என்றேன்.
 
”ஒரு மாதமாக இப்படி நடப்பதற்கு சிரமப்படுகிறாள். காரணம் தெரியவில்லை – பொது மருத்துவர், ஆர்த்தோ, நியூரோ மற்றும் ஆயுர்வேதம், யுனானி எல்லோரையும் பார்த்து விட்டோம். அநேகமாக எல்லா டெஸ்டுகளும் எடுத்து விட்டோம் – எல்லாம் நார்மல்!”
 
“கீழே விழுந்தார்களா? ஜுரம், ஜலதோஷம் ஏதாவது?”
 
“அதெல்லாம் ஒன்றுமில்லை – திடீரென்று இப்படி ஆகிவிட்டது – தெய்வக் குற்றமோ எனப் பரிகாரமெல்லாம் கூடச் செய்துவிட்டோம்”
 
எனக்குத் தெரிந்த அளவில் இந்த நடை எந்த வியாதியுடனும் பொருந்திப் போகவில்லை. இரத்தப் பரிசோதனைகள், ஸ்கான்கள் என எல்லா டெஸ்டுகளும் முகத்தில் அறைந்தாற்போல ’நார்மல்’ என்றன!
 
மீண்டும் நடக்கச் சொன்னேன் – இம்முறை கணவனின் உதவியில்லாமல்  நடந்தாள் – அதே நடை, எப்போதுவேண்டுமானாலும் விழுந்துவிடக்கூடிய அபத்திரமான குலுங்கும் நடை – கிட்டத்தட்ட முகமது பின் துக்ளக் படத்தில் சோ நடப்பதைப் போல – ஆனாலும் விழுந்துவிடவில்லை.
 
என் மனதின் மூலையில் சன்னமாகப் ‘பட்சி’ கூவியது.
 
”கவலைப்படாதீர்கள் – சீரியஸாகத் தெரியவில்லை – என் சைக்காலஜிஸ்ட்டைப் பாருங்கள்” என்றேன்.
 
”சைக்கியாட்ரி டாக்டரா?” சிறிது அதிர்ச்சியுடன் கேட்டார் கணவர்.
 
“சைக்கியாட்டிரிஸ்ட் இல்லை, சைக்காலஜிஸ்ட் – மருந்து கொடுக்கும் மருத்துவர் இல்லை – உளவியல் நிபுணர்”
 
மனமும், அதன் தன்மைகளும் வியக்க வைப்பவை. உடலை இயக்க வல்லவை! மகிழ்ச்சியில் சுதந்திரமாகப் பறக்கும் மனது, காயப்படும்போது இறுக்கத்தில் உடலைக் கட்டிப்போடும் – மனவலியின் வெளிப்பாடு உடல் உபாதைகளாக முன்னிருத்திக் கொள்ளும் வலிமை உடையது!
 
நோய்களைவிட, அவற்றால் ஏற்படும் மன இறுக்கமும், உளைச்சலும் தீவிரமானவை. நோய்க்கான சிகிச்சை இந்த மனவலியைத் தீர்க்காமல் முழுமையடைவதில்லை.
 
விவேகானந்தர் இதையே ‘நீ என்னவாக நினைக்கின்றாயோ, அதுவாகவே ஆகின்றாய்’ என்றார். ஆழ்மனதை கட்டுப்படுத்தி, மயக்க மருந்துகள் ஏதுமின்றி அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மகான்களைப் பற்றி நாம் அறிவோம்.
 
மனதால் ஒரு நோயை உருவாக்க முடியும் – அதே போல மனக்கட்டுப்பாடு ஒரு நோயின் வீரியத்தைக் குறைக்கவும் முடியும் என்பது உளவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
 
ஒரு நிலையில் நில்லாமல் தாவும் குரங்கு மட்டுமல்ல; சமயத்தில் உடல் நலத்தையே தன் கட்டுக்குள் கொண்டுவரும் ரிங்க் மாஸ்டரும் ஆகும் மனது!
 
மனது இறுக்கமாய் உள்ளபோது, பசியில்லை, உறக்கமில்லை, உடலில் பல வலிகள், எளிதில் எரிச்சலடைவது போன்ற பல உபாதைகள் – மனதால் உடலுக்கு வரும் நோய்கள் – PSYCHO SOMATIC DISORDERS – தீவிரமானவை, சிகிச்சைக்கு அடங்காதவை!
 
ஹிப்னாடிஸம் – (மெஸ்மெரிஸம்) – என்பது ஒரு வகை மனோவசியக் கலை! ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் மார்டின் ஷார்கோ இந்த மனோவசிய முறையில் பல நரம்பு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தமுடியும் என்றார்.
 
சைக்காலஜிஸ்ட் ரிப்போர்ட் என் சந்தேகத்தை உறுதிப் படுத்தியது. தீவிர மன இறுக்கத்தாலும், உளைச்சலாலும் அந்தப் பெண் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. அதன் வெளிப்பாடுதான் இந்த விநோதமான நடை! ஒரு வகையான மனோவியாதி.
 
நடந்தது இதுதான் – அவசரத் தேவைக்காகக் கடனாக வாங்கி எடுத்து வந்த பணம் – ரூபாய் ஐம்பதாயிரம் – வரும் வழியில் பஸ் பிரயாணத்தில் தொலைந்து விடுகிறது. கண்டிப்பான கணவன், மாமியார் மற்றும் பணத்தின் அவசரத் தேவை எல்லாமும் ஒன்றாகச் சேர்ந்து அந்தப் பெண் மனதை உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன – தன் இயலாமை, பொறுப்பற்ற தன்மையாகத் தன்னையே குத்திக் காட்டும் குற்ற உணர்ச்சியாக விஸ்வரூபம் எடுக்கிறது – மனக் குரங்கு, இப்போது ரிங்க் மாஸ்டராகி விடுகிறது – உடலை நோய்வாய்ப்பட வைக்கிறது – வினோதமாக நடக்க வைக்கிறது!
 
இதைத்தான் கண்ணதாசன் ‘ மனித ஜாதியின் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா ‘ என்றான்!
 
இரத்தப் பரீட்சைகள், எக்ஸ்ரே, ஸ்கான் இவற்றால் இந்த மனம் என்னும் ரிங் மாஸ்டரை வெளிப்படுத்த முடியாது.
 
நடந்தவற்றைக் கூறி, கவுன்சலிங் மூலம் வாழ்வின் அநித்தியங்களையும், தவிர்க்கமுடியாத துயரங்களையும் விளங்க வைத்த பிறகு, சிறிது சிறிதாக அவள் நார்மலாக நடக்க ஆரம்பித்தாள் – மனது அமைதியானது!
 
ஒரு வகுப்பில் இந்த கேஸ் ஹிஸ்டரியைக் கூறி, மாணவர்களைக் கேட்டேன்:
‘இதற்கு என்ன தீர்வு – எப்படி சிகிச்சை அளிக்க முடியும்?”
ஒரு நீண்ட அமைதி.
பின் பெஞ்சிலிருந்து ஒரு குரல் கேட்டது.
“யாராவது ஒரு ஐம்பதாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்து விடலாம்!”
மனம் ஒரு குரங்கு – ஒத்துக்கொள்கிறீர்களா?!!
Image result for மனம் ஒரு குரங்கு
 
 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

dr1

அசோகமித்திரனின் கட்டுரைகள்

Image result for ashokamitran essays

காலச்சுவடில் நாகேஷ் மறைவுக்கு அஞ்சலிக் கட்டுரைஎழுதியிருந்தார் அசோகமித்திரன். கிட்டத்தட்ட அதேசமயம் தி நகர் டாக் பத்திரிகையில், தன் தி நகர்நினைவுகளையும் பதிவு செய்திருந்தார்.

ராமகிருஷ்ணாபள்ளி நாட்களுடன், பனகல் பார்க், பாண்டி பசார்,டாக்டர் சாரி கிளினிக், சிவா விஷ்ணு கோயில் என என்நினைவுகளும் அவர் எழுத்துக்களுடன் பயணித்தன.

கிழக்குப் பதிப்பகம் அவரது கட்டுரைகளை வரிசைப்படுத்தி, இரண்டு குண்டு வால்யூம்களாக வெளியிட்டுள்ளது. ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரைக் கலெக்‌ஷன் அவைஅவரதுவிசாலமான பார்வை, எளிமையான வார்த்தைக் கோர்வைகள், அகில உலக ஞானம், பரந்துபட்ட வாசிப்பு,அன்றாட வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை அணுகும்முறை, சமூக அக்கறை, தீவிர கவனிப்பு, இடையே  இழைந்தோடும் மெலிதான அங்கதம்வாசகனின் தோள்மீது கைபோட்டு அழைத்துச் செல்லும் நட்பான எழுத்துக்கள்அவரை அறிந்தவர்களுக்கு அவருடன்பேசிச் செல்லும் அனுபவத்தைக் கொடுக்கக் கூடியவை!

அவரது சமீபத்திய, தமிழ் தி இந்து வில் வெளியான புகைப்படம் போல் ஒரு வாழ்க்கை” ஓர் ஆத்மார்த்தமானகட்டுரை. ஜுரத்தில் அழிந்துவிட்ட பழைய நினைவுகள்,அறுபத்தைந்து ஆண்டுகளின் வாழ்க்கை, தன்கதைகளில் வாழும் யதார்த்தம், வரலாற்றைப் பழங்குப்பையாக (பழைய காகிதங்கள்,நூற்றுக்கணக்கில் புத்தகங்கள், டயரிகள், குறிப்புகள்,பழைய பத்திரிகை இதழ்கள்) ஜானகிராமனிடம் (பழையபேப்பர்காரன்?) போட்டுவிட்ட மனவலி, பழைய பிலிம்சுருள்கள், புகைப்படங்களை குப்பையில் போட்டுவிட்ட வருத்தம்எல்லாம் வாழ்க்கைச் சித்திரங்களாகக் கண்முன் விரிகின்றன! (எழுதுவதைத் தவிர, அந்தக் காலத்தில் கையில் காமெராவுடன் போட்டோக்கள்எடுப்பது அசோகமித்திரனுக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்பது பலருக்குச்  செய்தியாக இருக்கலாம்!).

நடைவெளிப் பயணம்’ – அசோகமித்திரன் குங்குமத்தில்எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பு.  இவை  சமகாலத்தவை; அல்லது நான் வாழ்ந்த காலத்தவை.  இந்த 83 ஆண்டுகளை நான் புரிந்துகொள்ளும்  முயற்சியில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டவை. இவை  படிப்போருக்கு ரசமாகவும் இருந்து, நம் காலத்தையே புரிந்து கொள்வது எவ்வளவு கடினமானது என்றும்  நினைக்க வைத்தால் என் முயற்சி பயனில்லாமல்போகாதுஎன்கிறார் முன்னுரையில்! ஒவ்வொரு  கட்டுரையோடும், தான் படித்து ரசித்த புத்தகம்  ஒன்றினை வாசகனுக்கு அறிமுகப் படுத்தும் சிறு குறிப்பு ஒன்று பெட்டிச் செய்தியாக எழுதுகிறார்எளிமையான,ஆனால் ஆழமான குறிப்புகள்வாசிக்கத் தூண்டும்அறிமுகங்கள்!

முன்னுரைகள் பற்றி…. என்ற கட்டுரையில்:

அந்த நூலுக்கு அது எழுதப்பட்ட நாளிலிருந்து இருபதுஆண்டுகள் கழித்தும், அந்த முன்னுரை பொருத்தமாக இருக்குமா என்று எண்ணிப் பார்ப்பது நல்லது. அப்படிஎண்ணிப் பார்ப்பதற்குக் கதை எழுதுவதைவிட இன்னும்தீவிரமான கற்பனை தேவை 

எழுபதுகளிலேயேஒரு பிரசங்கம்கட்டுரையில் இன்றுஅதிக அளவில் பேசப்படுகின்ற பெண்ணீயக் கருத்துக்களை முன்வைத்து எழுதியிருப்பார்சமரசம் எதுவுமில்லாமல்!  

2016, செப் 22 அவரது பிறந்த நாளன்று அவர் எனக்களித்த பரிசு அவரதுபார்வைகள்” – கட்டுரை நூல்! முழுவதும்எழுத்தாளர்களைப் பற்றிநேர்கொண்ட பார்வையுடன்  மனிதர்களை’ அலசியிருப்பார்.

அசோகமித்திரனின் எழுத்துக்கள் எளிமையாய்த்தோன்றும். ஆனால் அவை  தீவிரமானநுணுக்கமான எண்ணங்களின் பிரதிபலிப்புகள்

Related image

அவர் எழுத்துக்களைப் போலவேஅவரும் எளிமையானவர்!

 

கடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்

சிறுகதைகள் 

dr1

Image result for சிறுகதை

 

குவிகம் சார்பில் திருரகுநாதன் ஜெயராமன் ’சிறுகதைகள் – அன்றும்இன்றும்’ என்ற தலைப்பில் பேசினார் – ரஸமான, ரசிக்கத் தகுந்த பேச்சு!

சிறுகதைகள் எப்போதுமே வாசகரை வசீகரிப்பவை. அந்தக் காலம் முதலே மதன காமராஜன் கதைகள், விக்கிரமாதித்தியன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் மிகவும் பிரபலம். 1942 ல் அல்லயன்ஸ் (அமரர்)குப்புசாமி ஐயர் அவர்கள் ‘கதைக் கோவை’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார் என்பது பலருக்குத் தெரிந்திருக்காது!

Image result for சிறுகதை

பின்னர் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, சு.செல்லப்பா, க.நா.சு, கு.அழகிரிசாமி, லாசரா, தி.ஜானகிராமன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி  (இன்னும் பலர் பெயர் விட்டுப் போயிருக்கலாம்) போன்றோர் சிறுகதை இலக்கியத்தைத் தங்கள் அரிய படைப்புகள் மூலம் செம்மையாக்கினர். பின்னர் கல்கி, தேவன், சாவி, ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சு., சுப்ரமணிய ராஜு, மாலன், சுஜாதா, ஐராவதம் போன்றோர் பல மாற்றங்களைப் புகுத்தினர். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பிரபஞ்சன், இவர்கள் இன்றைய சூழலுக்கேற்ற கதைகளைப் படைக்கின்றனர். ஆர்.சூடாமணி, சிவசங்கரி, அனுராதா ரமணன், இந்துமதி, வாஸந்தி, அம்பை போன்ற எழுத்தாளர்கள் தங்கள் சிறுகதைகள் மூலம் குடும்பம், சமூகம் இவற்றில் பெண்களின் நிலை குறித்து விசனப்பட்டு, பெண்கள் உரிமை, விடுதலை என குரல் எழுப்பியுள்ளனர். நான் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்கள், சிறுகதை எழுதுபவர்களில் நூற்றில் ஒரு பங்கு இருக்குமா என்பதே சந்தேகம் – எல்லோரிடமும் சிறுகதைகள் இருக்கின்றன – எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்!

சிறுகதைக்கு இலக்கணம் என்ன? இந்தக் கேள்விக்கு விடையளிப்பது  என்பது குருடர்கள் யானையைப் பார்த்த கதை போல்தான்!

கதையின் நீளம் என்ன? சின்னச் சின்ன கதைகள் (தேவன் போல்) அரைப்பக்கம் முதல் பதினைந்து இருபது பக்கங்களுக்கு சிறுகதைகள் நீள்கின்றன!

கதைக்கு ஓர் ஆரம்பம், உடல், முடிவு அவசியம். இன்றைய நவீன சிறுகதைகளில் ஒரு நிகழ்வு அல்லது ஒரு சிறிய எண்ணம் சுவைபட  சொல்லப்பட்டு, மற்றவற்றை வாசகர்களின் கற்பனைக்கு விட்டுவிடும் அதிசயம் நடக்கிறது!

சுஜாதாஅவர்களின் ‘புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்’  கட்டுரை பல விதங்களில் சிறுகதைக்கான தேவைகளைச் சொல்லுகிறது!

பிரபல ஆங்கிலச் சிறுகதை எழுத்தாளர் ஓஹென்றி மற்றும் ஜெஃப்ரிஆர்ச்சர் போன்றோரின் கதைகள் பிரபலமானதற்குக் காரணங்கள், அவற்றின் சுவாரஸ்யமும், எதிர்பாராத முடிவுகளும்தான்!

திரு ரா கி ரங்கராஜன் எழுதியுள்ள ‘எப்படிக் கதை எழுதுவது?’ என்ற புத்தகத்தில், சிறுகதையின் முடிவை முன்னமேயே தீர்மானம் செய்து, பிறகு அதற்கேற்றார்போல்  கதை புனையச் சொல்கிறார் – எதிர்பாராத திடீர் முடிவுக்கு இது உதவும்!

வெறும் சுவாரஸ்யம் மட்டுமே சிறுகதைக்குப் போதுமா? தொடக்கம் முதல், இறுதி வரை வாசகரைக் கட்டிப் போடுவது சுவாரஸ்யமான நடையும், அடுத்தடுத்து வரும் காட்சியமைப்புகளும்தான். ஆனாலும், அந்தக் கதையை மனதில் நிறுத்துவது, அதன் கருப்பொருளும், அது சொல்லும் சங்கதியும்தான் என்பது என் எண்ணம்.

பிறமொழி சிறுகதைகள் பலவும் இப்போது மொழி பெயர்க்கப்பட்டுத் தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி, வங்காளம் எனப் பல தொகுப்புகள் – இந்திய கலாச்சாரம் பேசுகின்றன!

இந்திய மொழிகளில் வெளி வந்துள்ள நல்ல சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, ஆங்கில மொழிமாற்றம் செய்து, இரண்டு தொகுப்புகளாகக் கொண்டுவந்துள்ளனர் – தொகுத்தவர் குஷ்வந்த் சிங். தமிழிலிருந்து அண்ணாதுரை, கருணாநிதி, அம்பை ஆகியோரது சிறுகதைகள் அவற்றில் இடம்பெற்றுள்ளன!

சிறுவயதில் படித்த ஓஹென்றியின் ‘THE GIFT OF THE MAGI’ ஒரு நல்ல சிறுகதைக்கு உதாரணம் – குறைந்த வருமானம், கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும் கணவன் மனைவி – மனைவிக்கு நீண்ட அழகிய கூந்தல்; ஆனால் அதனைப் பராமரிக்கத் தேவையான சீப்பு (DRIER OR STRAIGHTENER) வாங்க வசதியில்லை! கணவனின் அழகான கைக்கடிகாரம் – ஸ்ட்ராப் மாற்ற வசதியில்லாமல் பெட்டியில்! கிருஸ்துமஸ் பண்டிகைக்கு பரிசுகள் வாங்கப் பணம் இல்லை. அன்புக்கும், காதலுக்கும் குறைவே இல்லை. பண்டிகைக்கு முதல் நாள் மனைவி அழகிய ஸ்ட்ராப் வாங்கி வந்து, கடிகாரத்தைக் கேட்கிறாள் – கட்டி அழகு பார்க்க!

‘உனக்கு ஏது பணம்?’

’பராமரிக்க முடியாத என் முடி எதற்கு? முடியை வெட்டி, விற்று உன் வாட்ச்சுக்கு ஸ்ட்ராப் வாங்கினேன்’

அங்கே ஒரு மெளனம் விழுகிறது.

கையைத் தலைக்குத் தாங்கலாக வைத்துக்கொண்டு, கணவன் சொல்கிறான் ‘உன் அழகிய கூந்தலுக்காகத்தான் இந்த சீப்பை வாங்கி வந்தேன் – கையில் கட்டிக்கொள்ள முடியாத வாட்ச்சை விற்று!’

இருவருக்கும் இப்போது அந்தப் பரிசுகள் தேவைப்படாது!

எனக்குப் பிடித்த, மறக்க முடியாத சிறுகதை இது – இதுதான் சிறுகதை இலக்கணமோ?

கடைசிப்பக்கம் – கதை கேளு கதை கேளு – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

dr1 

கதைகள் ஒரு கலாச்சாரத்தின் வெளிப்பாடு! நாம் எல்லோரும் சிறு வயதில் நிறையக் கதைகள் கேட்டிருக்கிறோம் – சொல்லியிருக்கிறோம். வானில் நிலாவையோ, மரத்தில் அணிலையோ, கைப்பிடிச் சுவற்றில் காக்காவையோ காண்பித்துக் கதை சொல்லி சாதம் ஊட்டும் அம்மாவோ, பாட்டியோ எல்லோர் வீட்டிலும் உண்டு! இன்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தைக்கு ஐ பேடில் கார்டூன், ரைம்ஸ், விடியோ கேம்ஸ் காட்டி, பர்கரும், பீட்சாவும் வாயில் ஈஷப்படுகின்றன! கதை சொல்வதே கனவாகிப் போய்விட்டது!

செவ்வாய்தோறும் தமிழ் ஹிந்துவில் எஸ் ராமகிருஷ்ணன் இப்படிப்பட்ட கதைகளை – பல்வேறு நாடுகள், மொழிகள் சார்ந்த, நாடோடிக் கதைகள், நீதிக் கதைகள் என பல வகைக் கதைகளைப் பற்றி எழுதுகிறார்.
நம்மிடையே புழங்கி வரும் இராமாயண, மகாபாரதக் கதைகளும், வாய்வழி, செவி வழிக் கதைகளும் (கி ரா வின் கிராமீயக் கதைகள்) இன்றைய தலைமுறையினருக்கு அந்நியமாக இருக்கின்றன. சங்கீத உபன்யாசங்களும், இலக்கியச் சொற்பொழிவுகளும் ஒரு வகையில் கதை சொல்லும் வழிமுறைகளே!

சின்ன வயதில் என் பாட்டி சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. மிகவும் பயமும், மரியாதையும் உள்ள மருமகள் – மாமியாரைக் கேட்காமல் எந்த வேலையும் செய்யமாட்டாளாம் – சமையலில் உப்பு போடுவது முதல் இரவு படுக்கும் வரை எல்லாமே மாமியாரைக் கேட்டுத்தான்! திடீரென்று ஒரு நாள், மாமியார் இறந்து விட, மருமகளுக்குக் கை ஒடிந்தாற்போல் ஆயிற்று. யாரைக் கேட்பது என்று தவித்தாள். அவள் கணவன் உடனே மாமியார் போல ஒரு பொம்மை செய்து கொடுத்து, பாவனையாகக் கேட்டுக்கொள்ளச் சொன்னான்! அவளும் எதையும் ஒருமுறை அந்த பொம்மையிடம் கேட்டுவிட்டு, தனக்குத் தோன்றியபடி வேலைகளைச் செய்யத் தொடங்கினாள்.
ஒரு நாள் கணவனுடன் ஏதோ தகராறில் கோபித்துக் கொண்டு, மாமியார் பொம்மையுடன் வீட்டைவிட்டு வெளியே போகிறாள். வழி தவறி, காட்டுக்குள் சென்று விடுகிறாள். இரவாகிவிடுகிறது – வழி தெரியாமல், பயந்தபடியே அங்கிருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொள்கிறாள். கையில் மாமியார் பொம்மையைப் பார்த்தபடியே, தூங்கி விடுகிறாள்!
அதே இரவில், ஊரில் கொள்ளையடித்த பணம், நகைகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, வழக்கமாக வரும் மூன்று திருடர்கள் அந்த மரத்தின் கீழ் அமர்ந்து, பங்கு பிரிக்கிறார்கள். பேச்சுக் குரலில் கண்விழித்த மருமகள், திருடர்களைப் பார்த்து பயந்து போய், கையிலிருந்த பொம்மையைக் கீழே தவற விட, இரவில் மரத்தின் மேல் பேயோ, பிசாசோ என்றலறியபடி, பணம், நகைகளைப் போட்டுவிட்டு திருடர்கள் ஓடிவிடுகிறார்கள். காலையில் மாமியார் பொம்மையை எடுக்கக் கீழே வரும் மருமகள், பணம், நகைகளையும் எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்கிறாள் – பின்னர் வசதிகளுடன் வாழ்வதாகக் கதை முடியும்.

கதை சொல்லும் பாவமும், ஏற்ற இறக்கங்களும், இடைச்செருகலாக வரும் இருட்டு, மிருகங்கள் எல்லாம் குழந்தைகளைக் கட்டிப் போட்டுவிடும். பாட்டியின் மூடுக்குத் தகுந்தாற்போல் கதை நீளவோ அல்லது குறையவோ செய்யும்!

பள்ளிக்கூடங்களில் கூட, ஒரு பீரியட் ‘கதை சொல்லும்’ நேரமாக ஒதுக்கி, கதை சொல்லக் குழந்தைகளை ஊக்குவிக்கலாம்! குவிகம் இலக்கிய வாசல் மாதாந்திர நிகழ்வொன்றில், ‘கதை கேளு, கதை கேளு’ என்ற தலைப்பில் அழகாகக் கதை சொன்னார் ஒரு பெண்மணி! வரவேற்கப்பட வேண்டிய விஷயம் – வாருங்கள் கதை சொல்வோம், கதை கேட்போம் !

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.   

dr1

அப்பாவின் (நினைவில்) கடைசிப்  பக்கம்!

விடியற்காலை ஐந்து மணிக்கு வந்த போன் கால், அப்பா தூக்கத்திலேயே எங்களை விட்டுப் பிரிந்ததைச் சொல்லியது.

உழைப்பும், நேர்மையும், தளரா மனமும் கொண்டு, சந்தித்த அத்தனை சோகங்களையும், இடர்களையும் கடந்து, தன் குழந்தைகளுக்காகவே வாழ்ந்த, அப்பா, மறைந்தார்.

மிகக் குறைந்த வருமானம் – பெரிய குடும்பம் – வாழ்க்கையில் எதிர்நீச்சல் மிகக் கடுமையானதாக இருந்தது. குழந்தைகள் படிப்பு மட்டுமே முக்கியம் எனத் தன் உடலை வருத்தி அவர் எதிர்கொண்ட கஷ்டங்கள் கண்ணில் நீர் நிரப்புவன.

குழந்தைகள் பெரியவர்களாகி நல்ல நிலைக்கு வந்த பிறகு கூட, ‘தன் கையே தனக்குதவி’ என்று, அறுபதையும் தாண்டி, தன் வேலையில் தொடர்ந்தார். தன் அன்றாட செலவுகளுக்குக் கூடப்  பிறர் கையை எதிர்பார்க்காத மன உறுதி!  ஆற்றில் போட்டாலும் அளந்து போடும் பக்குவம்!  தனக்கு வந்த எந்தப் பொருளையும் – தங்க மோதிரங்கள், வேட்டிகள், சட்டைகள் – அவர் உபயோகப்படுத்தியதாக எனக்கு நினைவில் இல்லை.

நான்கைந்து சட்டைகள், வேட்டிகள், காலுக்கு செருப்பு, ஒரு கைக் கடிகாரம் இவையே அவரது தேவைகளாக இருந்து வந்தன. தன் தேவைகளை மிகவும் சுருக்கிக் கொண்டு, சில அத்தியாவசியங்களுடன், சுறுசுறுப்பாகச் சுற்றி வந்தவர் அவர்.

அவரது போராட்ட வாழ்க்கையே ஒரு பாடம் – அதிலிருந்து முக்கியமான இரண்டு பக்கங்களை இங்கு சொல்வது சரியாக இருக்கும்!

வாழ்க்கையின் ஆதாரம் ‘கர்ம யோக’மே – BE FAITHFUL TO YOUR DAILY ROUTINE – என்ன வந்தாலும், எது நடந்தாலும், தன் தினசரி கடமைகளை – ஆபீஸ் போகும்போதும் சரி, பின்னர் அதை நிறுத்தியபோதும் சரி – தவறாமல் செய்து விடுவார். சாத்திரம், சம்பிரதாயம், நேரம், காலம், மகிழ்ச்சி, வருத்தம் எதுவும் அவரது செயல்பாடுகளை மாற்றிவிட முடியாது. உழைப்பு ஒன்றே வாழ்வின் ஆதாரம் என்பதைத் தானே ஓர் உதாரணமாய் இருந்து உணர்த்தியவர் என் அப்பா!.  நேரத்திற்கு, அளவான உணவு – ஒரு வேளை சாப்பாடு, ஒருவேளை டிபன், இடையே இரண்டு முறை காபி அவ்வளவுதான். அமிர்தமே கிடைத்தாலும் இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடமாட்டார் – அவ்வளவு கட்டுப்பாடு!

தேவைக்கு அதிகமான எதையும் – பொருளோ, பணமோ – உபயோகிக்க மாட்டார். ஆரம்பக்  காலத்தில் இல்லாமை, பின்னர் வாழ்க்கையில் எல்லாம் இருந்தது – அப்போதும், அதே அளவான, பேராசைப் படாத மனம்! தன் பிள்ளைகளே ஆனாலும், எதையும் வேண்டும் என்று கேட்காத குணம். பீரோ நிறைய அவருக்குக் கொடுக்கப்பட்ட துணிகள் – புதுமணம் மாறாமல் – அடுக்கி வைக்கப் பட்டிருந்தன! உழைத்து, சம்பாதித்துச் சேர்த்த பணம் முழுவதும், குழந்தைகள்  பேரிலேயே சேமிப்புப் பத்திரங்களாக வைக்கப்பட்டிருந்தன! தனக்கென்று எதையுமே எடுத்துக்கொள்ளாமல், அனைத்தையும் தன் பாசம், ஆசிகளுடன் சேர்த்து எங்களுக்கு வைத்துவிட்டுத் தான் மட்டும் தூக்கத்திலேயே எங்களைப் பிரிந்துவிட்டார்.

எங்களுக்குச் சிறந்த கல்வியும், நிறைந்த அன்பும், பாசமும் கொடுத்து வளர்த்து, தன்னையே தன் உழைப்பாலும், உண்மையாலும் உயர்த்திக் கொண்டு, வாழ்ந்து மறைந்த என் தந்தை ஓர் உன்னதமான மனிதர்!

மீண்டும் பிறந்தால், இவரே என் தந்தையாய் இருக்கவேண்டும் – படைத்தவன் முன் நான் வைக்கும் வேண்டுகோள் இது மட்டுமே!

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ . பாஸ்கரன்

dr1

நம்பிக்கை என்னும் மந்திரச் சாவி!  

Image result for faith

அது வானம் பார்த்த பூமி!

மழை பொய்த்து, பூமியும் அந்தக் கிராமத்து மக்களின் மனங்களும் வறண்டு கிடந்தன.

இயற்கையை எதிர்த்து மனிதன் என்ன செய்து விட முடியும்?
ஊரே ஒன்றுகூடி, ஊரின் நடுவிலிருக்கும் கோயிலின் முன் கூட்டுப் பிரார்த்தனை செய்வது என முடிவு செய்தது கிராமப் பஞ்சாயத்து. குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் மழை வேண்டி கோயில் முன் திரண்டனர்.

கூட்டத்தின் நடுவில் ஒரு சிறுவன் மட்டும் தாழங்குடை ஒன்றைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தான்!

பிரார்த்தனை நிச்சயம்; மழை வரப்போவதும் நிச்சயம்! நனையாமலிருக்கக் குடை கொண்டுவந்த சிறுவன்தான் ‘நம்பிக்கை’ யின் மறு உருவம். மற்றவர்களின் நம்பிக்கையில் சந்தேகம் கலந்திருக்கிறது.

ஒன்றின் மீது நமக்கிருக்கும் உறுதியான பிடிப்பு, எண்ணம், எதிர்பார்ப்பு – FAITH, HOPE, TRUST, CONFIDENCE – நம்பிக்கையாகும்.

அம்மாவினால் அடையாளம் காட்டப்படும் அப்பா – குழந்தையின் முதல் நம்பிக்கை!

அழுதால் பால் கிடைக்கும் – அம்மாவின் மீது குழந்தையின் நிஜ நம்பிக்கை!

மேலும் மேலும் உயர்த்தும், மாணவன் ஆசிரியர் மீது வைக்கும் நம்பிக்கை!

சீரான வாழ்க்கைக்கு ஆதாரம், கணவன் மனைவி இடையில் நிலவும் பரஸ்பர நம்பிக்கையே!

ரயிலிலோ, பேருந்திலோ, விமானத்திலோ பயணம் செய்வதும் ஒருவித நம்பிக்கையில்தான்!

விடாமுயற்சியுடன் ஓடி, வியர்த்து உழைப்பதுவும், வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில்தானே!

மறுநாள் காலை கண் விழிப்போம் என்ற நம்பிக்கையுடனேயே முதல் நாள் இரவு தூங்கிப் போகிறோம்!

நம் ஒவ்வொரு எண்ணத்திலும், செயலிலும் நம்பிக்கையே ஆதார சுருதியாக இருக்கிறது!

நம்பிக்கைதானே வாழ்க்கை!

ஓட்டப்பந்தயத்தில் ஓடத் தயாராய் நிற்கும் ஒருவர், இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு, ‘நான் எங்கே ஜெயிக்கப் போகிறேன்’ என்று நம்பிக்கை இழந்தால், அவர் அந்தக் கணமே மற்றவர்களைத் துரத்திக் கொண்டு ஓடுவதற்குத் தயாராகிவிட்டார் என்பது உறுதியாகி விட்டது!

எல்லோருக்கும் முதலில் வேண்டியது ‘தன்னம்பிக்கை’.

மகாகவி பாரதியின் நம்பிக்கையே, சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே, ‘ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ‘ என்று பாடவைத்தது!

“நம்பிக்கை நிறைந்த ஒருவர், யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை “ சொன்னவர் அப்துல் கலாம் அவர்கள்!
பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தபோது, ‘ப்ரூப் படிக்கத் தெரியுமா?’ என்றார்கள்; ‘தெரியும்’ என்றேன். பழக முடியும் என்று நம்பினேன். பழகிக்கொண்டேன்.

‘கவிதை எழுதத் தெரியுமா?’ என்றார்கள்; நம்பினேன். எழுதினேன்.
‘முடியும்’ என்றால் முடிகிறது; தயங்கினால் சரிகிறது. – இது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது!

தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்வது ஒன்றே வெற்றிக்கு வழி.
நம்பிக்கைகளில் முதன்மையானது ‘இறை நம்பிக்கை’. இருக்கிறானா இல்லையா என்பதல்ல கேள்வி – நம்பிக்கை அவசியம்! எதையாவது நம்பித்தானே ஆகவேண்டும்! எதை நீ நம்புகிறாயோ அதுவே ‘இறைவன்’ என்பேன் நான்!

‘உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை’ என்பார் கண்ணதாசன் – உன் நம்பிக்கையைப் பொறுத்தது அது!

“கபடமற்ற மனம் இல்லாவிட்டால் இறைவனிடம் சட்டென்று நம்பிக்கை வராது! “ “ இறைவனின் திருநாமத்தில் நம்பிக்கை இருந்தால் தீர்த்த தலங்களுக்குப் போவது கூட அவசியமில்லை “ என்கிறார் இராமகிருஷ்ண பரமஹம்சர்.

புதிதாய்ச் சேர்ந்த அந்த ஆசிரியைக்கு, கப்போர்டு பூட்டைத் திறக்கும் நம்பர் காம்பினேஷன் தெரியவில்லை அல்லது மறந்து விட்டது. சிறிது நேர முயற்சிக்குப் பின், அந்தப் பள்ளியின் பாதிரியாரிடம் சென்று உதவி கேட்டார். உள்ளே வந்த பாதிரியார், இரண்டு எண்களைத் திருப்பிவிட்டு, சிறிது நேரம் அமைதியானார் – மேலே நிமிர்ந்து பார்த்து ஏதோ முணுமுணுத்தார். பின்னர், குனிந்து, மூன்றாவது எண்ணைத் திருப்பிப் பூட்டைத் திறந்து விட்டார்.

பாதிரியாரின் நம்பிக்கையில் ஆசிரியை வியந்து போனார்! சிரித்தபடியே பாதிரியார் சொன்னார்,”இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. மேலே கூரையில் இந்தப் பூட்டின் நம்பர் எழுதி ஒட்டப்பட்டுள்ளது!”

நம்பிக்கை சிறியதோ, பெரியதோ – அது கொண்டுவரும் மாற்றம் மிகவும் உன்னதமானது!

Image result for faith

 

 

 கடைசிப்பக்கம்     டாக்டர் ஜெ பாஸ்கரன்

பனைமர நட்பு  !

dr1

 “நண்பேண்டா….” “அம்மா, அப்பாவையெல்லாம் விட எனக்கு என்ஃப்ரண்ட்ஸ்தான்  முக்கியம்”                                                             “உலகத்திலேயே ஃப்ரண்ட்ஷிப்தான் உயர்ந்தது” “ஃப்ரண்ஷிப்புக்காக உயிரையும் கொடுப்பேன்”  

இதெல்லாம் இன்றைய இளைஞர்களிடையே சுற்றிவரும்  நட்பாஞ்சலித் தொடர்கள்! 

உண்மைதான்.

கிருஷ்ணன் – குசேலர் நட்பு முதல்கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார்பாரி – கபிலர்கர்ணன் – துரியோதனன்ராஜாஜி – பெரியார் எனப் பல நட்புகளின் பெருமையை நாம் அறிவோம்.

நட்புகளிலேயே பள்ளிக்கூட நட்புக்கொரு தனி இடம் உண்டு.    உயர்ந்தவன் – தாழ்ந்தவன்ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு   ஏதுமின்றி சுற்றித் திரியும் மகிழ்ச்சியான காலம் அதுகவலைகளும்,  பொறுப்புகளும் இல்லாத காலமும் கூட!

நாற்பது வருடங்களுக்கு முன்னால் பள்ளிக்கூடத்தில் மலர்ந்த நட்புஇன்றும் தொடர்கிறது  நானும்என்னுடன் படித்த பதினைந்து நண்பர்களும் தொடர்பிலிருப்பது மிகவும் சுகமான ஒன்று! வீட்டில் விசேஷம்பொது விழாதிருமணம் என நண்பர்கள் குடும்பத்தாருடன் கலந்து கொள்வதுஒரே கலாட்டாவாக இருக்கும்

அதுபோலவேமருத்துவக் கல்லூரியில் மலர்ந்த நண்பர்கள்இன்றும்  வாட்ஸ் அப்பில் அரட்டையடிப்பதுகல்லூரிநாட்களை  நினைவுத்   திரையில் ரீவைண்ட் செய்து பார்ப்பது போல் சுவையானது!

சிறு வயது நண்பர்களைபல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன?  ஃப்ளாரிடாவில் வசிக்கும் மருத்துவர் (மகப்பேறு சிறப்புமருத்துவர்ஃப்ராங்க் போயெம் தனது “DOCTORSCRY,TOO என்ற புத்தகத்தில்   சொல்வது   சுவாரஸ்யமானது.

பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களைக் கொண்டது வெற்றிகள்தோல்விகள்வருத்தங்கள்,  சந்தோஷங்கள்புதிய எண்ணங்கள்முயற்சிகள்புதிய நட்புகள்   என பல  வண்ணங்கள்  அந்த நாட்களை நம்முடன் பகிர்ந்துகொண்ட நண்பர்களை மீண்டும் சந்தித்து  அவர்கள் நம்முடன் இப்போது  இல்லையென்றாலும்  நன்றி சொல்லிஅந்தத் தருணங்களைத் திரும்ப வாழ்வது சுவாரசியமானதும்மகிழ்ச்சியானதும்தானே !

நாம் எல்லோரும் அப்பாஅம்மாகணவன்மனைவிபிள்ளை,  அண்ணன்தங்கை என்று ஏதாவது ஒரு ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறோம் – நமக்கென்று ஓர் ஆசைஒரு சொல்ஒரு நிமிடம் – நாம் நாமாக இருக்கும் தருணம் – நம் இளவயது நட்புகளுடன் மட்டுமே சாத்தியம்

நாம் நாமாக இருப்பதற்கு உதவும் நட்புக்கு ஈடு ஏதாவதுஇருக்கிறதா?

நாலடியாரில் நட்பாராய்தல் பாடல் ஒன்று:                             

கடையாயார் நட்பில் கமுகனையார் ஏனை                   இடையாயார் தெங்கின் அனையார் – தலையாயார்                           எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே           தொன்மை உடையார் தொடர்பு.

 சினேகப் பண்பில் கடைசிதரம் – தினமும் கூடிப் பழகி ஏதாவது உதவி செய்தால் மட்டும் நிலைக்கும் நட்பு  (பாக்குமரம்போல் தினமும் நீர் பாய்ச்ச வேண்டும்).

இடைத்தரமானவர்கள் தென்னை மரத்தைப் போன்றவர்கள்– விட்டு விட்டு நீர் பாய்ச்சுவதைப் போலஅவ்வப்போது உதவி செய்தால்தான் நட்பு நிலைக்கும்!

முதல்தரமான நட்புடையவர்கள் பனை மரம் போன்றவர்கள் – விதையிட்ட நாளைத்தவிர கவனிக்காமலே விட்டுவிட்டாலும்தானாய் வளர்ந்து பயன் தரும் – அதுபோல பழைய நினைவுகளை மறக்காதவர்களுடைய நட்புகாலங்காலமாக நிலைத்திருக்கும்!

பனைமர நட்பு வாய்த்தவர்கள்பாக்கியசாலிகள !

 

டாக்டர் ஜெ.பாஸ்கரன்.   .  

கடைசிப்பக்கம் –டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

dr1
Image result for doctors in india at service

வணக்கம் டாக்டர்ஸ்!

சமீபத்தில் வாட்ஸ் அப்பில் படித்தது – எண்பது வயது முதியவருக்கு இதயத்தின் இரத்தக்குழாயில் அடைப்பு. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு எட்டு லட்சம் ரூபாய்க்கு பில் வந்தது. பில்லைப் பார்த்த பெரியவர் கண் கலங்கினார். ‘ இல்லையென்றால் பரவாயில்லை, குறைத்துக் கொடுங்கள் ‘ என்றனர் மருத்துவர்கள். அதற்கு முதியவரின் பதில் நம்மை சிந்திக்க வைப்பது. ‘ பத்து லட்சம் கூட நான் தருகிறேன், அதற்கல்ல இந்தக் கண்ணீர். மூன்று மணி நேரம் என் இதயத்தைப் பார்த்துக் கொண்டதற்கே எட்டு லட்சம் என்றால், எண்பது வருடங்களாக எந்த வியாதியும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் – கண்ணீர் வந்தது ‘ என்றார்.

உண்மைதான். நம்மிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நமக்கு நன்மைகள் செய்து காத்திடும் நம் நல விரும்பிகளிடம் நாம் நன்றியோடிருக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கண்ணீர் சொல்லும் நீதி!

பெரிய மால் அல்லது ஷோ ரூம்களில் அவர்கள் கேட்ட விலையை, (வாங்கும் பொருளிலேயே ஒட்டியிருக்கும் விலையை) அப்படியே கொடுக்கும் நாம், பிளாட்ஃபாரத்தில் கத்தரிக்காய் விற்பவரிடம் ஐந்து ரூபாய்க்குப் பேரம் பேசுவோம்!

இந்த முரண் மருத்துவர்களிடம்  ‘இவ்வளவு பீஸா?’ என்று பேரம் பேசுபவர்களிடமும் உண்டு.

அவசரப் பிரிவில் மயங்கிய நிலையில் உள்ள நோயாளிக்கு வைத்தியம் செய்யும் டாக்டர் அப்போது ‘கடவுள்’ மாதிரித் தெரிவார்! சிறிது குணமாகி, நோயாளி கண் விழித்து இரண்டு வார்த்தை பேசினால், கடவுள், நல்ல டாக்டராகத் தெரிவார். உட்கார்ந்து, பிறகு இரண்டு அடி நடக்க ஆரம்பித்தவுடன், டாக்டர் ஒரு நல்ல மனிதனாகத் தெரிவார். பின்னர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யும்போது, பில் கொடுக்கும் அந்த நல்ல டாக்டரே ‘பிசாசு’ போலத் தோன்றுவார்!  இது மருத்துவர்களுக்கான சாபக்கேடு.

முதலிலேயே, நோயாளியின் சிகிச்சை பற்றியும், செலவு பற்றியும் பேசினால், ‘இந்த டாக்டர் பணத்திலேயே குறியாய் இருக்கிறாரே’ என்று அங்கலாய்ப்பர். வியாதி குணமான பின்னால் கேட்டால், ’இது அவசியமா, அது அவசியமா’ என ஆரம்பித்து, பேரம் பேசத் தொடங்குவார்கள். குணமாகாமல் வேறு விதமாக ஆகிவிட்டால், (நோயாளிக்கு என்ன வியாதியானாலும், என்ன வயதாக இருந்தாலும்) இப்போதெல்லாம் டாக்டருக்கு அடி உதை என்று செய்திகளிலும், ஊடகங்களிலும் பார்க்கிறோம்.

பொதுவாகவே, மருத்துவர்கள் மீதும், அவர்கள் கண்ணியம் மீதும் ஒரு அவநம்பிக்கை உருவாகியிருப்பதை உணரமுடிகிறது. மக்களின் அறியாமை, பொறுமையின்மை, அரசியல் தொடர்புகள், பெருகி வரும் அடிதடி கலாச்சாரம், ஊடகங்களில் தவறான கருத்துக்களைப் பரப்புதல், மருத்துவர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் எனப் பல காரணங்கள்!

எனக்குத் தோன்றும் சில யோசனைகள்.:

முதலில் முதலுதவி. பின்னர் என்ன பிரச்சனை, என்ன செய்ய வேண்டும் என்ற விளக்கம்

இங்கு வசதி இருக்கிறதா இல்லையென்றால் எங்கு செல்ல வேண்டும்?

பொதுவாக இப்படிப்பட்ட வியாதிகள், அப்போதைய நிலையில் எப்படி சிகிச்சை அளிக்கப்படும்? விளைவு எப்படியிருக்கும்?

உடனிருப்பவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

டாக்டர் நோயாளியின் கண்டிஷன் மற்றும் எதிர்பார்க்கும் காம்ப்ளிகேஷன் எல்லாவற்றையும், நெருங்கிய உறவினருக்குத் தெரிவித்தல்.

சிகிச்சையின் வரையறை – லிமிடேஷன் – உடனிருப்பவர்களுக்குத் தெளிவாக அறிவிப்பது.

டாக்டர்களும் மனிதர்களே – மந்திரவாதிகளோ, சித்தர்களோ, கடவுளோ அல்ல.

குழப்பமும், பதட்டமும், வருத்தமும், கலவரமும் கூடிய மனநிலையில் உள்ளவர்களுக்கு, ஆசுவாசமும், உண்மை நிலையும் புரிய வேண்டும் – அது டாக்டர் அல்லது சீனியர் நர்சு ஒருவரால் தெளிவாக எடுத்துரைக்கப் பட வேண்டும்.

இருந்தாலும், டாக்டர்களுக்கும், ஏனைய மருத்துவ சிப்பந்திகளுக்கும் பொதுவாகவே ஒரு பாதுகாப்பற்ற நிலையே இருப்பதாகத் தோன்றுகிறது. தகுந்த போலீஸ் பாதுகாப்பு கூட அவசியமோ என்று தோன்றுகிறது.

Image result for doctors performing open heart operation in chennai

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

அப்பாவின் டைப்ரைட்டர்  என்ற புத்தகத்தை எழுதி ஏராளமான பாராட்டுக்களைக் குவித்த டாக்டர்  ஜெ . பாஸ்கரன்  ஒரு மருத்துவர். இவரிடம் நல்ல ஸ்டெத்தும் இருக்கிறது; நல்ல பேனாவும் இருக்கிறது.

ஒரு மாறுதலுக்காகக் குவிகத்தின் கடைசிப்  பக்கத்தில் ஸ்டெத்துக்குப் பதிலாக  பேனாவால்  நம் இதயத்தைத் தொட வந்திருக்கிறார். தொடர்ந்து எழுத வாழ்த்துக் கூறி  வரவேற்கிறோம்.

 
dr1” குவிகம் மின்னிதழில் கடைசி பக்கம் நீங்கள் ஏதாவது எழுதுங்கள் – புதுமையாகவும், புதியதாகவும் இருந்தால் நல்லது “ என்றார் திரு சுந்தரராஜன். மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்ளுக்குள் ஏதோ உதைத்தது – பயம்தான். புது, புதி இரண்டுக்கும் இடையில் ஒரு ‘த்’ சேர்த்து மனம் மிரண்டது – அவர் சொல்படி எழுத, ‘புத்து’ வாகிய எனக்கு ‘புத்தி’ இருக்கிறதா என்ற கவலை என்னைச் சூழ்ந்துகொண்டது!

இதுதான் என் முதல் ’கடைசி’ பக்கக் கட்டுரை – இதற்குப் பிறகு படிக்க ஒன்றும் இல்லை என்று சொல்லாமல் சொல்லும் பத்தி – இதைப் படித்த பிறகு இதிலேயே ஒன்றும் இல்லையே என்று தோன்றினால் நான் பொறுப்பல்ல!

புகழ் வாய்ந்த கடைசி பக்கங்களை எழுதியவர்கள் நினைவுக்கு வந்ததும் உதைப்புக்கு இன்னொரு காரணம்! கல்கியின் கடைசி பக்கங்களில் கவிஞர் கண்ணதாசன், சமீபத்தில் மாலன், கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா, தற்பொழுது இ.பா. என்று இந்த சிங்கங்களின் உறுமலில், என் ’மியாவ்’ காணாமல் போய்விடுகின்ற காமெடியை வாசகர்கள் ரசிக்கக்கூடும்! இன்று முகநூலில் சிறப்பாக எழுதும் பலருக்கும் – சுருக்கமாகவும், ‘சுருக்’ கென்றும், நகைச்சுவையாகவும், நம்பகமாகவும் எழுத – இம்மாதிரிக் கடைசி பக்கக் கட்டுரைகளே முன்னோடிகள்!

முதல், நடு அல்லது எந்த ஒரு பக்கமானாலும், தன் பக்கமாக எழுதுவோரும் உண்டு – லேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகள் (ஆயிரத்தையும் தாண்டி இன்னும் பக்கம் பக்கமாக ஒரு பக்கக் கட்டுரைகள் எழுதுபவர் – கின்னஸில் இடம் பிடித்து விடுவாரெனத் தோன்றுகிறது!) ஏர்வாடியார் கவிதைஉறவில் தனக்கென ஒரு பக்கம் எழுதுகிறார்! ஆனாலும் கடைசி பக்கத்துக்கென்று ஒரு தனி அந்தஸ்த்து வந்து விடுகிறதோ?

‘ கடைசி ‘ ( அது ‘சி’ யா ‘சீ’ யா?) என்ற சொல்லுக்குக்  க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி “ (தொடர்ச்சியில், வரிசையில், காலத்தில்) முடிவு; இறுதி “  என்று பொருள் கூறுகிறது.

பரீட்சைக்குப் பணம் கட்டக் கடைசி நாள், ரேஷன் வாங்க இன்றே கடைசி நாள் என்று காலக் கெடுவைக் குறிப்பது இந்த கடைசி என்ற சொல் – வரிசையில் கடைசியில் வருபவருக்கு, இலக்குக்கு அருகில் வரும் வரையில் ‘திக்’ திக்’ தான் ! விறு விறுப்பாகப் படித்துக்கொண்டிருக்கும் மர்ம நாவலின் கடைசிப் பக்கம் முக்கியமானது ! கடைசிக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது.

இப்படித்தான் இந்தக் கடைசி பக்கத்துக்கும் ஒரு காலக்கெடு உண்டு – அதற்குள் எழுதிக் கொடுக்க வேண்டும்! எல்லாப் பக்கங்களையும் சுவாரசியமாகப் படித்துக் கொண்டு வருபவர்கள், கடைசி பக்கத்திலும் அதே சுவாரசியத்தை எதிர்பார்ப்பது இயல்பு – அதற்கேற்ப எழுதவேண்டுமே என்ற கடைசி பக்கக் கவலை முதலிலேயே வந்துவிடும்! ஒரு திரைப்படத்தின் கடைசி சீன், மகிழ்ச்சியாகவும், சுபமாகவும் முடிந்தால் அது அந்தப் படத்தின் வெற்றிக்கு உதவும் – அப்படித்தான் கடைசி பக்கமும் படித்த பிறகு ஒரு நிறைவைத் தர வேண்டும் என்ற குறு குறுப்பும் இருக்கத்தான் செய்கிறது.

பக்கம் கடைசியாக இருந்தாலும், பக்கம் பக்கமாக சொல்லாத ஒரு விஷயத்தை நல்லபடியாக சொல்லவேண்டிய கட்டாயமும் இருக்கிறது!

முயற்சிக்கிறேன்!                                                                                                

 கடைசியாக எஸ் வி சேகர் நாடக ஜோக் ஒன்று:                                                  “ அப்டீன்னா, கடைசில அவர் தான் உங்கப்பான்னு சொல்லு! “                “ ம்ஹூம், ஆரம்பத்திலேர்ந்தே அவர்தான் எங்கப்பா! “                                “ ஙே ! “