திரையுலகமும் எழுத்தாளர்களும் – வாதூலன்

Image result for tamil writers

Image result for திரையுலகம்

2018ல் கலைஞர் இறந்தவுடன் அவருக்கு அஞ்சலி செலுத்த ஓர் எழுத்தாளர் (இலக்கிய ஏடு ஒன்றின் உதவி ஆசிரியர். ஓர் ஆராய்ச்சியாளரும் கூட) சென்றிருக்கிறார். ஆனால் அங்கு காணப்பட்ட கூட்டத்தைக் கண்டு – குறிப்பாக சினிமா சம்பந்தப்பட்டவர்களே – வெறுத்துப் போய்த் திரும்பி விடுகிறார்.

அந்த மனநிலையில் இலக்கிய ஏட்டில் மூன்று பக்கங்கள் குமுறி தள்ளிவிட்டார். ‘சினிமா தமிழ் நாட்டை மிகவும் கெடுத்துவிட்டது’ என்பதை சில உதாரணங்களுடன் எழுதியிருக்கலாம். ஆனால் மனிதர் அக்கு வேறு ஆணி வேறாகச் சில நடிகர்கள் மீது ஆவேசமாகப் பாய்ந்துவிட்டார். (வடிவேலு, நாகேஷ், ரஜினி) நாகேஷின் உடல் மொழியும், நடிப்பும் அப்பட்டமான காப்பி என்பதை ஒரு காட்சி மூலம் (சர்வர் சுந்தரம்) விவரித்திருந்தார்.

‘இளையராஜாவோ இங்கு பலருக்கு தெய்வம்’ என்று குறிப்பிட்டிருந்தார். கவனியுங்கள் அது பாராட்டே அல்ல, எள்ளலான தொனியில் எழுதப்பட்ட வாக்கியம்.

வேறொரு நாவலாசிரியர், உலகம் சுற்றி வந்த எழுத்தாளர். வாராவாரம் பிரபல இதழில் நடிகர்களைக் கிண்டலடிப்பார். இவருடையது வேறு பார்வை, வேறு கோணம். அதாவது சில நிமிடங்களே உடலசைவு செய்து வசனமும் பேசிவிட்டு லட்சக் கணக்கில் சம்பாதிப்பவர்கள் என்று அங்கலாய்ப்பார். எழுத்தாளார்களையும், நடிகர்களையும் ஒப்பிடுவது இவர் பாணி.

இந்தப் போக்கு சரியா? திரைப்படமும், எழுத்தும் ஒன்றாகி விடுமா?

ஒரு சினிமா வெளியாக முதலில் முதல்போட தயாரிப்பாளர் தேவை. பிறகு இயக்குநர் சொல்கிற ‘ஒரு வரி’ கதையை காட்சி காட்சியாக விரித்து எழுத வசனகர்த்தா வேண்டும். படத்தின் சூழலுக்கேற்ப இசையமைக்க இசையமைப்பாளர், திறமையான ஒளிப்பதிவாளர் என்று நிறைய பேர் தேவைப்படுவார்கள்.

ரொம்ப சரி, ஆனால், பாதாம்பருப்பு, நெய், சர்க்கரை, குங்குமப்பூ எல்லாம் சேர்ந்தால் பாதாம் கேக் ஆகி விடாதே? மிகச் சரியானபடி பருப்பை அரைத்து, பிறவற்றைச் சேர்த்து பதமாகக் காய்ச்சி அளவாக வெட்டியெடுத்தால் மட்டுமே நாவுக்கு ருசியான பாதாம் கேக் அமைகிறது. நடுவில் ஏதாவது சின்ன கோளாறு நேர்ந்தால் கூட, போச்! அவ்வளவுதான். நேரம், பணம் எல்லாம் விரயம்.

இது போலத்தான் திரைப்படமும், படத்துக்கு ஏற்ற நாயகன், நாயகி, நகைச்சுவை நடிகர் போன்றவர்களைத் தேர்ந்தெடுத்து இயக்குகிற பொறுப்பு இயக்குனரைச் சேர்ந்தது. இதில்தான் எத்தனை தடங்கல்கள்.

முதலாவது இடம், பொருள், நேரம், பிரதான நாயகர் நாயகி தவிர பிற நடிகர்கள் எல்லாரும் கூப்பிட்ட நேரத்தில் இணைய வேண்டும். என்னுடைய சொந்த அனுபவமும் உண்டு. 2004ல் தனியார் டிவி ஒளிபரப்புக்காக என் நெருங்கிய உறவினர் பங்கேற்றார். வினாடி வினா போன்ற நிகழ்ச்சி. கேள்வி கேட்பவர் ஒப்பனை செய்து கொண்டு அமருவதற்கும், பிறவற்றுக்குமே நிறைய நேரமாயிற்று. நிகழ்ச்சி முடிய காலை 3 மணி. ஒரு சாதாரண க்விஸ் நிகழ்ச்சிக்கே இத்தனை சடங்குகள் தேவையென்றால், திரைப்படக் காட்சிக்கு எப்படி இருக்கும் என்று ஊகியுங்கள்.

அடுத்ததாக வானிலை. ஊட்டியிலோ, கொடைக்கானலிலோ இலேசான மழைத்தூறல் விழும் போது காதலர்கள் சந்திப்பதாகக் இயக்குநர் காட்சி அமைக்கிறார் என்றால், முக்கிய நடிகர்கள் வந்துவிட்டார்கள், ஆனால் அப்போது பார்த்து வெயில் கொழுத்தும் அல்லது சற்றும் எதிர்பாரா விதமாக மழை கொட்டித் தள்ளலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் என்ன செய்வது? 50 வருட முன்பு ‘படம் எடுத்துப் பார்’ கட்டுரையை பிரபல வார இதழில் கே. பாலசந்தர் விவரித்து எழுதியிருக்கிறார்.

படம் எடுக்கிற காலகட்டத்தில், கதாநாயக நடிகருக்கோ, நடிகைக்கோ எந்த விதமான மாறுதலும் ஏற்படாமலிருக்க வேண்டும். உதாரணமாக நடிகர் வீட்டில் மரணமோ வேறு அசம்பாவிதமான நிகழ்வோ நேர்ந்துவிட்டால், படப்பிடிப்பை ஒத்தி வைக்கும் சந்தர்ப்பம் வரலாம். பெண்கள் என்றால் வேறு விதம். இடைப்பட்ட காலத்தில் யாராவது நடிகை கர்ப்பமாகிவிட்டால், கதையையே சற்று வேறு விதமாக மாற்ற நேரிடும்.

அப்புறம் இருக்கவே இருக்கிறது continutity என்கிற தொடர்புத் தன்மை. ஒரு முறை விவேக்கைச் சந்தித்த போது பாலசந்தர் “என்ன இது! எப்போதும் trimஆக இருப்பாயே… இப்போது என்ன தாடி மீசை கோலம்? ஓ… கன்டிநியூட்டியா.” என்று கேட்டிருக்கிறார். ரா.கி. ரங்கராஜன், இதை மையமாக வைத்து பிரபல இதழின் தீபாவளி மலரில் சிறுகதையே எழுதியிருக்கிறார். படம் எடுக்கும் போது இடையே தொகை பேரத்தால் குழந்தை நட்சத்திரத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை. உருவம், முகச்சாடை அனைத்தும் பொருத்தமாக அமைந்து, படம் வெற்றி பெற்றதில் டைரக்டர் பெருமிதப்படுகிறார். இருந்தாலும் இறுதியில் ஒரு ஏமாற்றம். புதிய குழந்தை நட்சத்திரத்துக்கு ஆறு விரல்! எனவே மிகச் சின்ன சின்ன அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனிப்பது மிக முக்கியம்.

இன்றைய காலங்களில், அரசியல் மற்றும் பல்வேறு காரணங்களால் இந்தியா மொத்தமும் திடீர் திடீரென்று கலவரங்கள் எழுகின்றன. எங்கேயாவது இரண்டு மாநில எல்லை முடிவில் ஷுட்டிங் எடுத்தால் “_____  நடிகர் வரக்கூடாது” என்ற கூக்குரல் எழலாம்.

உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய நிகழ்வுகளுக்குத் திரை உலகில் பஞ்சமே இல்லை. ஸ்டண்ட் காட்சி, சர்க்கஸ் காட்சிகள் போன்றவற்றில் சிலர் காயமடைந்திருக்கிறார்கள். சில மாதங்கள் முன்பு கூட ஒரு படப்பிடிப்பில் கிரேன் மண்டையில் விழுந்து அடிபட்டு மூன்று பேர் இறந்து போனார்கள்.மிகப் பிரபல நடிகர் என்றால் ஸ்டண்ட் காட்சிக்கு டூப் போட்டு விடுவார்கள். என்றாலும் உயிர் உயிர்தானே?

“”திரைப்படம் வெளியிடுவதற்கென்றே சில பண்டிகைகள் இருக்கின்றன. தைப்பொங்கல், தீபாவளி. இதே போல மிகப் பெரிய நடிகர்களின் படத்தை வெளியிடும் போது, அவை மோதி, படங்களுக்கு பாதிப்பு வராமல் இருப்பதற்கு தோதான தேதியை தேர்ந்தெடுப்பது, தியேட்டர்களை தேர்வு செய்வது இது போன்று விஷயங்கள் தயாரிப்பாளர்களின் பொறுப்பு என்றே சொல்லலாம்.

மேற்சொன்ன பல அம்சங்களைத் தாண்டித்தான் ஒரு திரைப்படம் வெளியாகிறது. இவை நீங்கலாக ஒலி, ஒளி, எடிட்டிங், போட்டோகிராபி முதலிய பல தொழில் நுட்பங்களும் இணைய வேண்டும்.

திரைப்பட இசைக்கு என்றுமே ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதன் மெட்டும், வரிகளும் எளிதில் மக்கள் மத்தியில் பதிந்துவிடும். டி.கே. பட்டம்மாளின் காந்தீய பாடல்களும், பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில்’ பாடலும் இன்றைக்கும் சாதாரண மனிதர்களும் முணுமுணுக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் சினிமா மாதிரியான சாதனம்தான்.

சினிமா சங்கீதத்தை வெறும் ‘டப்பா பாட்டு’ என்று ஒதுக்கிக் தள்ளிவிடமுடியாது. இன்றைய கர்நாடக சங்கீதத்தில் மூத்தவரும், பல விருதுகளைப் பெற்றவரும், மெல்லிசை மன்னரான எம்.எஸ்.வி.யுடன் பணியாற்றியவருமான மதுரை ஜி.எஸ். மணியின் வார்த்தைகள்.

“சினிமாவுக்கு மெட்டமைக்கிறது சாதாரணம் இல்லை. கர்நாடக இசையில் மத்திம ஸ்ருதின்னு சொல்றது போல அங்கே ‘சைகிள் ஆஃப் போர், ஃபைவ்’ என்றெல்லாம் உண்டு. லைட் மியூசிக் என்பதை லைட்டா பண்ண முடியாது. ரொம்ப மெனக்கிடணும், உழைக்கணும்” என்று அழுத்திச் சொல்கிறார்.

இங்கு நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் பெறுகிற ஊதியத்தைப் பற்றிச் சில வரிகள், என்னதான் வசனகர்த்தா ‘ரூம்’ போட்டு யோசித்தாலும் எவ்வளவுதான் டைரக்டர் இன்ன விதமான பாவம் என்று சொல்லிக் கொடுத்தாலும் அவற்றை உள்வாங்கிக் கொண்டு உருவம் கொடுப்பது நடிகர்தான். சந்தேகமேயில்லை. டீக்கடைக்காரர் சாமியார் வேடம் போட்டு “அதே அதே” என்று மலையாள உச்சரிப்புடன் பேசி அசத்தியவர். ஒரு பஞ்ச் வசனமான “இது எப்படி இருக்கு!” என்று வினோத முகபாவத்துடன் பேசினவர், சாதாரணமான கூப்பிடும் முறையை “சந்திரமவுலி சந்திரமவுலி” என்று உயர்த்திய கண்ணுடன் விளித்தவர்; “இன்னைக்கு செத்தா, நாளைக்கு பால்” கோணல் உடல்மொழியோடு சொன்னவர்: இவை இடம் பெற்ற படங்கள் ஞாபகம் இருக்கிறதா? ஆனால் தேங்காய் சீனிவாசன், ரஜினி, கார்த்திக், விவேக் இவர்கள் உடனே நினைவுக்கு வருவார்கள். ஏனெனில் வசனத்துக்கு ‘உயிர்’ தந்தவர்கள் அவர்கள்தான்.

சினிமா தயாரிப்பாளர்களுக்குள்ள உள்ள சிக்கல்கள் , தொழில் முறைக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்வதில் உள்ள சிரமங்கள், இவற்றை நன்கு புரிந்து கொள்ள கோமல் சுவாமிநாதன் எழுதின ‘பறந்து போன பக்கங்களை’ படித்தாலே போதுமானது.

இதே மாதிரிதான், வரிகளுக்கு மெட்டுப் போட்டு உயிர் கொடுப்பவர் இசையமைப்பாளர்கள். “உன்னை ஒன்று கேட்பேன்” “ஒரே ஒரு ஊரில், ஒரே ஒரு ராஜா” “தென்றல் வந்து தீண்டும் போது என்ன வர்ணமோ” போன்றவை சாதாரண வரிகள்தான். இசையமைப்பாளர், ராகம் போட்டு பின்னணியுடன் இசைக்க வைத்ததால்தானே, மனதில் நிற்கிறது !

அவர்கள் வாங்குகிற சம்பளம் அடிப்படை பொருளாதாரமான தேவை – வினியோக சம்பந்தப்பட்டதுதான். இதில் குற்றம் காண்பது ஏன்?

சினிமா தொடர்புள்ளவர்களைக் குறித்து நிச்சயம் சில வார்த்தைகள் பதிவு செய்ய வேண்டும். இயற்கை பேரிடர் மழை, வெள்ளம், கரோனா தொற்றோ எது வந்தாலும், தனி மனிதனாகப் பொருள் உதவி செய்பவர்கள் அவர்கள்தான். நடிகர் சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலமாகவும், வேறு சிலர் ரசிகர் மன்றம் வழியாகவும் ஒத்தாசை புரிகிறார்களே.

யோசித்துப் பாருங்கள், இவ்வளவு தடங்கல்கள் இடையூறுகள் சூழ்ந்துள்ள திரை உலகை – சில நடிகர்கள் பெறும் ஊதியத்தை வைத்தோ, கூடுகிற கூட்டத்தை வைத்தோ மதிப்பிடுவது சரியான அளவுகோலா? இல்லவே இல்லை.

சரி, இருக்கட்டும். எழுத்தாளர்களின் நிலைமை என்ன? ‘அல்லலற்ற உலகு’ என்றே அந்தத் துறையைக் குறிப்பிடலாம். மழை, வெயில், புயல், காற்று, கரோனா தொற்று, பிற நோய் தொற்றுகள் என்று இருந்தாலும் அவர்கள் அமைதியாக நாலு சுவருக்குள் எழுதிக் கொண்டிருக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால், இத்தகைய சூழல்கள் எழுத்தாளனுக்கு ஒரு உந்து சக்தியாக மாறுகிற வாய்ப்புண்டு. கற்பனைக் குதிரையை உற்சாகமாகக் தட்டி, ஓட வைக்க முடியும். தான் எழுதினதை, மீண்டும் மாற்றி எழுதலாம். யாருக்காகவும் அவசரப்படத் தேவையில்லை, போட்டி என்று வந்தால் கூட, குறைந்த பட்சம் ஒரு மாதம் அவகாசம் தருகிறார்கள்.

தீபாவளியின் போதோ அல்லது வேறு ஏதாவது நடப்பு நிகழ்வின் போதோ (current topic) அவற்றை வைத்து கதை எழுத பிரபல எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள் வரும். “இரண்டே நாளில் —— கதை எங்களிடம் சேர வேண்டும்” என்று பத்திரிகை ஆசிரியர் கோரிக்கை விடுப்பார்.

நேரில் சென்று, நடுவர்கள் முன் எழுதிய அனுபவமும் கிட்டும். ஒரே ஒரு முறை ‘மாவட்ட சிறுகதை’ என்ற தலைப்பில் அதே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூடி சிறுகதை எழுதுகிற சந்தர்ப்பத்தைக் குமுதம் அளித்தது. நேரம் மூன்று மணி. கோவையிலிருந்தபோது நான் அதில் பங்கு பெற்றேன். நடுவர்கள் ராஜேஷ்குமார், பூவண்ணன், விமலா ரமணி. பத்து மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் ஒரு மணிக்கு பரிட்சை முடிந்தவுடன் அன்று மாலையே முடிவையும் அறிவித்தார்கள். என்னதான் முன்கூட்டியே கதைக் கரு, அமைப்பு, நடை முடிவு எல்லாவற்றையும் தீர்மானம் பண்ணியிருந்தாலும், பலர் நடுவே உட்கார்ந்து எழுதுவது வித்தியாசமான அனுபவமாகத்தானிருந்தது.

இன்னொரு வசதி எழுத்தாளர்களுக்கு மட்டுமே உண்டு, உடல் நலம் குன்றிப் போன சமயத்தில் ஓர் அசிஸ்டென்டை வைத்துக் கொள்ளலாம். ஆசிரியர் பொறுப்பு கூடுதலாக இருந்த, பத்திரிகையின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய காலத்தில் – 1959-60, குமுதம் எஸ்.ஏ.பி. சொல்லச் சொல்ல உதவி ஆசிரியர் புனிதன் எழுதினார். இதை ‘சொல்லாதே’ நாவலின் முன்னுரையில் எஸ்.ஏ.பி. பதிவு செய்திருக்கிறார்.

ஏன்… சமீப காலத்தில் கூட பாலகுமாரன் நிறைய எழுத வேண்டியிருக்கிற சூழலில் உதவியாளர் வைத்துக் கொண்டாரே? பார்வை பழுது போன போது, அ.ச.ஞா. தம் மகள் மீராவின் உதவியுடன்தான் கம்பராமாயண விளக்கம் எழுதினார்.

லேட்டஸ்ட் மாறுதல்:- கணினி. எழுத்தாளர்கள் கதையைத் தபாலில் சேர்க்கக் கூட தேவையில்லை. கணினியில் கதையை டைப் செய்து, மின்னஞ்சலில் முகவரியை டைப் செய்து அழுத்தினால், கதை பத்திரிகை ஆபிசுக்குச் சேர்ந்துவிடுகிறது.

1947ல் தேவன் ‘விச்சுவுக்கு கடிதங்கள்’ தலைப்பில் பல தொழிலின் சாதக பாதகங்களை நகைச்சுவையுடன் விவரித்து இருக்கிறார். இஞ்சினியர், வைத்தியர், சட்டம், அரசு வேலை, பள்ளி ஆசிரியர் போன்றவை இதில் அடங்கும். இதில் எழுத்தாளரும் இடம் பெறுகிறார். (கவனிக்க நடிகர் இல்லை) அவர் எழுதியிருப்பதாவது:- எழுத்தாளனாக தொடங்குவதற்கு பேப்பரும், பேனாவும், மசிக் கூடுமே போதுமானது. மூலதனம் இல்லாமல் இவ்வளவு மலிவாக இதை ஆரம்பிக்க முடிகிறது என்பதே இந்தத் தொழிலின் சிறந்த கவர்ச்சி. யாரும் பழகலாம். யாரும் பெயர் வாங்கலாம். கன்னியாகுமரியிலிருந்து இமயமலைச் சாரல் வரையில் பிரபலமாகலாம்.

இன்றைய டிஜிட்டல் உலகில், இமயமலை என்ன உலகம் முழுதுமே எழுத்தாளர்கள் பெயர் தெரிகிறது. பத்திரிகையில் சிறுகதை எழுதும் எழுத்தாளன் முதல், நோபல் பரிசு பெறும் எழுத்தாளன் வரை, சாகித்ய அகாடமி விருது வாங்குபவர் வரை, நிலைமை இதுதான். மாற்றமே இல்லை.

முத்தாய்ப்பாக இலக்கிய எழுத்தாளர்களுக்கும், நவீன எழுத்துச் சிற்பிகளுக்கும் ஒரு வார்த்தை:- திரைத் துறையில் உள்ள பாதக அம்சங்களைக் குறிப்பிடுங்கள். கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வது, நடிகைக்குக் கோயில் கட்டுவது போன்ற அபத்தங்களை குற்றம் சாட்டுங்கள். சினிமா மாயையில், கனவுலகில் சிக்கி பாழாகாதீர்கள் என்று இளைஞர்களுக்கு அறிவுரை விடுங்கள். பிற மாநிலங்களைப் போலத் (கேரளா, மேற்கு வங்காளம், கர்நாடகா) தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு உரிய மதிப்பு தரப்படுவதில்லை என்று ஆதங்கப்படுங்கள். ஓகே…

அதை விட்டுவிட்டு, அந்தத் துறையையும், துறை சேர்ந்த நடிக நடிகைகளை இகழ்வது, எள்ளி நகையாடுவது போன்றவை அனாவசியம். சமூகத்தில் பொறுப்பானவர்களுக்கு இது அழகல்ல.

எழுத்தும் ஒரு தொழில்தான். ஏதோ அதைத் தவம், வரம் என்று பிரமையில் ஆழ்ந்து, உலகத்திலேயே உன்னதமானது என்று நினைத்து சுயதம்பட்டத்தில் ஈடுபடாதீர்கள்.

கல்கி, மிகச் சரியாக ‘திரை உலகம்’ பத்திரிகைக்கு அனுப்பின குறிப்பில், 1948, இவ்விதம் சொல்கிறார்.

“ஓர் எழுத்தாளன் தன்னை மகா மேதாவியாக நினைத்துக் கொண்டு, சுயபுராணக் குப்பைகளைக் கிளறி பக்கம் பக்கமாக எழுதுவதைவிடத் தலைவலி வேறு இருக்க முடியாது.”

70 ஆண்டுகளுக்குப் பிறகும் கல்கியின் வார்த்தைகள் இன்றும் பொருத்தமாக இருப்பது ஒரு வியப்புதான்.

நடனமும்  மருத்துவமும் – சுரேஷ் ராஜகோபால்

Dance Medicine | Sports Medicine & Training Center

“அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது

மானிடராய் பிறந்த காலையின்

கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது” – ஔவையார்

 

நமது சுவாசம், குடிக்கும் நீர், உண்ணும் உணவு, சரியான தூக்கம், அமைதியான மனநிலை (தியானம்), உடல் பற்றிய அக்கறை, உடற்பயிற்சி முதலானவை நமது உடலைப் பராமரிக்கும் காரணிகள். 

இதில் உடற்பயிற்சியில் நடனம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நடனம் பார்க்கும்  போதும் சரி  ஆடும் போதும் சரி பல உடல் நலம் பேணும் கருவியாக இருக்கிறது. 

நடனம் என்பது ஒரு கலை, உடலிலே அசைவு கொடுத்து தாளத்துக்கும் இசைக்கும் ஏற்ப ஆடுவது, அதில் சில நடனங்களில் நளினமிருக்கும் சில நடனங்களில் மூர்க்கமிருக்கும். உலகில் பல்வேறு பாகங்களில் பல்வேறு நடனங்கள் அவரவர் கலாச்சாரத்தை ஒட்டியும் பழக்க வழக்கங்களைச் சார்ந்திருக்கும்.

 சில செய்திகளைச் சொல்லவும், கருத்துக்களைப் பரிமாறவும் இந்தக் கலை பயன் பட்டிருக்கிறது  .நடனம் என்பது பலவற்றை உள்ளடக்கியது, குறிப்பாக சமூகம், பண்பாடு, அழகியல் , கலை அனைத்தையும் விளக்கவும் முடியும் .

சில நாட்டுப்புறக் கலைகளில் தனியாக ஒவ்வொரு காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்றார்போலப் பல வித்தியாசமாக நடன அசைவுகளிருக்கும். அவை கூத்து, ஆட்டம், பாட்டம் என்று அழைக்கப் படுகிறது ..

 நடனங்கள் பல்வேறு பாணிகளில் உருவாகியுள்ளன. எனினும் எல்லா நடனங்களுமே தம்முள் சில பொது இலக்கணங்களை , இயல்புகளைக் கொண்டுள்ளன. நடன அசைவுகளுக்கு ஏற்ப உடல் வளைந்து நெளிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக இருப்பது மட்டுமன்றி, உடல் உறுதியும் முக்கியமானது. இதனாலேயே முறைப்படியாக நடனம் ஆடுபவர்கள் நல்ல நீண்டகாலப் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.

 தமிழ் கலாச்சாரத்தில் இயல் இசை நாடகம் எனப் பிரிக்கப்பட்ட ஆய கலை அறுபத்து நான்கினில், தென்னகத்தின் சிறப்புக் கூறும் பரதமும் ஒன்று  . இந்த நாட்டியம் உடலில் மனம் முதல் உடல் வரை அனைத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது. மருத்துவ ரீதியில் இது ஒரு உடல் பயிற்சி. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவிடும். உளவியல் ரீதியாக .உள்ளத்திற்கும் பயிற்சி. ஆடல் கலையில் சிறப்புப் பெற்றது ரம்மியமான ஆடல், முகத்தில் நவரசமும் காட்டமுடியும், பாடலுக்கு ஏற்ற மாதிரி வளைவு சுளிவு நெளிவு வெளிப்படுத்த முடியும். .

 மிக மிகப் பழைய மனித நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்னரே சடங்குகள்,  கொண்டாட்டங்கள், பொழுதுபோக்குகள் போன்ற பல காரணங்களுக்காக நடனங்கள் மனித வாழ்வில் மிக முக்கிய இடம் பெற்றிருக்க சான்றுகள் கிடைத்துள்ளன.. . சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த தொல்பொருட்களிலும் நடனம் ஆடும் உருவங்கள் காணப்படுகின்றன.

 மனிதன் தனக்குள்ளே  முதலில் சங்கேத முறையில் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டிருக்கலாம்  . பிறகு பேச்சு வழக்கு , பாட்டு, ஆட்டம், நடனம் என்று பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கிறது .  தற்போதைய காலகட்டத்தில் நடனம் பெரும்பாலும் பெண்களுக்கு உரித்தானதாகப் பார்க்கப் படுகிறது. முன்னொரு காலத்தில் இதை ஆண்களும் ஆடி வந்தது வரலாற்றில் தெரிய வருகிறது, ஆனால் அதிலும் ஆண்கள் பங்கு சொற்பமே.

மனித குலமட்டுமல்ல மற்ற மிருகங்கள், தேனீ போன்ற பூச்சிகள், பறவைகள் கூட நடனம் போன்ற அசைவுகளை வெளிப் படுத்துகின்றன.

தில்லை நடராசரின் பரதம் மிகவும் பிரபலம். “Cosmic Dance” என்று விஞ்ஞானிகளால்  விவரிக்கப்படும் தில்லை நடராசப் பெருமானின் ஆனந்த நடனமும், ருத்ர தாண்டவமும் குறிப்பிடத்தக்கவை. நடனத்திற்கென தமிழகத்தில் பொன்னம்பலம் சபை, வெள்ளி சபை, தாமிர சபை முதலான சபைகள் இருந்துள்ளன. அவைகளில் எல்லாம் ஆடல்வல்லான் ஆடிய அற்புத நடனங்கள் விவரித்துக் கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில் இந்த பரந்து விரிந்த இந்திய நாட்டில் பலவகையான நடனங்கள் ஆடப்பட்டு வருகின்றன.

 ஆடல் பாடல் என்பவை எல்லா இந்து தெய்வங்களும் தொடர்புப் படுத்தி, நடன சபாபதி,  கண்ணன் காளிங்க நர்த்தனம்  , பார்வதி தேவியின் நடனம் , நர்த்தக  விநாயகர், காளிதேவியின் கூத்து இப்படி கலாச்சாரத்தோடு கலந்த வருகிறது.  நடனம் சீமந்தமாகப் பல நூல்கள் தமிழில் எழுதப் பட்டுள்ளன, அதில் பரத சாஸ்திரம் என்ற நூல் பரத முனிவரால் எழுதப்பட்டது . சிலப்பதிகாரத்தில் பரதம் பற்றிய பாடல்கள் இருக்கின்றன.  

 தமிழ்நாட்டில் பரதம், கேரளாவில் கதகளி (ஆண்களுக்கானது), மோகினியாட்டம் (பெண்களுக்கானது)  ஆந்திராவில் குச்சுப்பிடி,ஒடிசாவில் ஒடிசி, மணிப்பூர் மணிப்புரி , வட இந்தியாவில்   கதக் , அசாமில் சத்ரியா இப்படி பல நடனங்கள் நமது நாட்டில் மட்டுமே ஒவ்வொரு பகுதிக்கும் என்று  வித்தியாசமாக ஆடப்படுகின்றன

எந்த வகை நடனமும் ஆடுவதற்கு, பார்ப்பதற்கும் உடலில் சில எழுச்சிதனை நிச்சயமாகக் கொடுக்கிறது. அந்தக் கலை எப்படி மருத்துவமாக பார்க்கப்படுகிறது என்று பார்ப்போம் .

நடனம் என்பது எல்லா வயதினருக்கும், வடிவங்களுக்கும், அளவிற்கும் பொருந்தக்கூடியதாக இருக்க ஒரு வழியாகும். இது உடல்நலம்  மற்றும் மனநலத்திற்கு என்று  பலவிதமான   நன்மைகளைச்  செய்யும் வல்லமை பெற்றது.

உடல் சார்ந்தது 

 

Seattle Dance Medicine - Home | Performance art, Art, Seattle-இதயம் மற்றும் நுரையீரலின் மேம்பட்ட நிலை, (சீரான இரத்த ஓட்டம்)

-அதிகரிக்கும்  தசை வலிமை,  சகிப்புத்தன்மை மற்றும் இயங்கு சக்தி (மோட்டார்) உடற்பயிற்சி

-அதிகரித்த ஏரோபிக் உடற்பயிற்சி

-மேம்பட்ட தசை தளர்வு மற்றும் வலிமை

-எடை மேலாண்மை

-வலுவான எலும்புகள் மற்றும் எலும்பு தேய்தல் (அல்லது) எலும்பு நொறுங்குதல்  (ஆஸ்டியோபோரோசிஸ்) அபாயத்தைக் குறைப்பது

-சிறந்த ஒருங்கிணைப்பு, சுறுசுறுப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை

 

மனம் சார்ந்தது 

-மேம்பட்ட சமநிலை மற்றும்  விழிப்புணர்வு 

-அதிகரிக்கும்  உடல் மற்றும் மன  நம்பிக்கை

மனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள் | தமிழ்ஹிந்து | Mobile Version-மேம்பட்ட மன செயல்பாடு, மனோதைரியம்

-மேம்பட்ட பொது மற்றும் உளவியல் நல்வாழ்வு,  (மனோ தத்துவ ரீதியாக முன்னேற்றம்.)

–அதிக தன்னம்பிக்கை மற்றும் மனவளம்

-சிறந்த சமூக நோக்கம், செயல்பாடு, ஈடுபாடு ..

கிடைத்த நல்ல உடலைப் பேணி பாதுகாத்துக் கொள்வது நமது கடமையாகும்.  அந்த முயற்சியில் நடனத்தின் பங்கு மகத்தானது.  எல்லோருக்கும் கிட்டிவிடாது ஆனால் கிடைத்தவர்கள் பொன்போல பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.

 

கம்பன் சொல்லும் கதை ( இராமன் – பரசுராமர்) – கவி அமுதன்

 

ராமாயணம் – 1. பால காண்டம் – சரவணன் அன்பே சிவம்

கம்பன் சொல்லும் கதை

 கவிஅமுதன்

பரசுராமன் – இராமன் :

முன்கதை:

பரசுராமன் – இராமன் இருவருமே விஷ்ணுவின் அவதாரங்கள்.
இருவரும் ஒரே இடத்தில் சந்தித்தால்?
வால்மீகி – கம்பர் இந்தக் காட்சியை நமக்கு கதையாக்கியுள்ளனர்.
இராமன் – சீதை திருமணம் முடிந்து அவர்கள் மிதிலையிலிருந்து அயோத்தி வருகிறார்கள். தசரதனும் கூட வருகின்றார். வழியில், பரசுராமன் வருகிறார்.
பயங்கரமான அவர் வரவை கம்பர் ஒன்பது பாடல்களில் வர்ணிக்கிறார்.
பரசுராமன் வரவு கண்டு தசரதன் சோர்கிரான்.
இராமன் வினவுகிறான்:
‘யாரோ? இவர் யாரோ?’?
தசரதன் பரசுராமருக்குப் பூசை செய்து வணங்குகிறான்.
முனிவன் (பரசுராமன்) முனிந்திட்டான், சினந்திட்டான்.
இராமனைப் பார்த்து: ‘மிதிலையில் நீ செய்தவற்றைக் கேட்டு அறிந்தேன்.
உன் தோள் வலி காணவே வந்தேன். வேறு ஒன்றும் விஷயம் இல்லை”- என்கிறார்.
தசரதன் அபயம் வேண்டுகிறார்.
‘என் மகன் சிறியவன். விட்டு விடுங்கள்’ – கெஞ்சுகிறார்..

பரசுராமன் தசரதனை லட்சியம் செய்யாமல், இராமனைப் பார்த்து: ‘என்னிடம் இருக்கும் இந்த வில், நீ மிதிலையில் ஒடித்த வில்லுக்கு சமானமானது. இது என் தந்தை ஜமதக்கினிக்கு, மகாவிஷ்ணு அளித்தது. இதை வளைத்து நாணேற்றுவாய். அம்பும் தருகிறேன். இதை செய்வாயேல் பிறகு நாம் யுத்தம் செய்யத் தொடங்கலாம் – வல்லையேல் என வில்லை வளை”
கம்பன் வார்த்தைகளில்: –“வல்லை ஆகின , வாங்குதி. தனுவை’.

அதாவது, என்னுடன் யுத்தம் செய்ய உனக்குத் தகுதி இருக்கிறதா என்று முதலில் பார்க்கலாம் என்கிறார்.

கம்பர் வரிகளில்:
‘இராமனும் முறுவல் எய்தி, நன்று ஒளிர் முகத்தான் ஆகி.
“நாரணன் வலியின் ஆண்ட வென்றி வில் தருக”’  

தோளுற அந்த வில்லை வாங்கி சொல்லும்
இராமன் சொல்வதை – கம்பர் கவிக்கிறார்.

‘பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும் 
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ; விரதம் பூண்டாய்.
ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது அன்றால்,
யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புது விரைவின்!’என்றான்

அதாவது:
மண்ணில் உள்ள மன்னர்களை கொன்று குவித்தீர்.
தங்கள் தந்தை கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கினீர்.
அதைக் குற்றம் என்று சொல்லலாகாது.
ஆனால்.. என்னிடம் அம்பைக் கொடுத்தீர்.
வம்பை வாங்கினீர்.
இது வம்போ? அன்றி வீம்போ? நானறியேன்!
ஆயினும், உங்கள் ஆசைப்படி, இப்பொழுது இதை நாணேற்றி விட்டேன்.
இந்த அம்பு வீணாகலாகாதே!.
எந்த இலக்கை நோக்கி இந்த அம்பைச் செலுத்துவது?
இதற்கு பதிலை, விரைந்து சொல்வீரே!

இராமனுக்கே என்ன பிரச்சினை என்றால்:
அம்பு தொடுத்த பின் – அதை எய்யாமல் இருக்க இயலாது. மேலும் அம்பைத் தொடுத்தபின் உடனே எய்தாயாக வேண்டும். தாமதம் தகாது. அதனால் அந்த வார்த்தைகளைக் கூறினான்.

இராமன் வில்லை வளைத்ததும் பரசுராமனரது தேஜஸ் வாடியது.
அவரது அவதார சக்தியும் மறைந்ததாம். இராமனைப் பற்றி அவருக்கு எல்லாம் விளங்கிவிட்டது. இராமனைப் பார்த்து கூறுகிறார்:

கம்பன் வரிகள்:

‘எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!’ என
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே

இதன் கருத்து:
பரசுராமர்: நான் பெற்ற தவம் அனைத்தும் அழிய உனது அம்பை விடுவாயாக. அது கேட்டு, இராமன் வில்லில் இருந்து அந்தக் கணை புறப்பட்டு பரசுராமர் தவத்தை எல்லாம் வாரி- திரும்பியது.

பரசுராமன்: ‘எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக’. என்று இராமனை வாழ்த்தி விடை பெறுகிறான்.

பின்கதை:

இராமன் தந்தையைத் தொழுது அவர் துயர் போக்கினான்.
தசரதன் மகிழ்ந்து மகனை உச்சி மோந்தான்.
தேவர் மலர்மழை பொழிய, வருணனிடம் பரசுராமன் வில்லை சேமிக்கக் கொடுத்து விட்டு அயோத்திக்கு சென்றடைகின்றனர்.

யாம் ரசித்த இந்த கம்பன் கதையை யாவரும் ரசிப்போமே!

 

 

 

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்களுக்கு இவ்வாண்டுக்கான ஞானபீட விருது

 

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம்

(இந்த தளத்தில் உள்ள கட்டுரைகளை இணையத்தில் கட்டுரையின் இணைப்புடன் பகிர்ந்து கொள்ளலாம் – ஜெயமோகன் )

 

மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்களுக்கு இவ்வாண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஒரு நினைவு. 2007ல் மலையாள திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான ஓ.என்.வி.குறுப்ப்புக்கு ஞானபீடம் வழங்கப்பட்டபோது மலையாள வார இதழான மாத்ருபூமிக்கு நான் அளித்த நீண்ட பேட்டியில் ஓஎன்வி அவர்களுக்கு ஞானபீடம் வழங்கப்பட்டதை கண்டித்து அப்பரிசுக்கு எவ்வகையிலும் தகுதியானவர் அக்கித்தம் அவர்கள்தான் என்றும், அவர் இருக்கையில் ஓஎன்விக்கு அளிக்கப்பட்டது ஒரு வகை மீறல் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அது ஒரு சிறு விவாதத்தைக் கிளப்பியது. பலவகையிலும் மலையாளிகளுக்கு பிரியமான பிரபலக் கவிஞர் ஓஎன்வி. இடதுசாரிக்கவிஞர். கேரள இடதுசாரி இயக்கத்தின் பண்பாட்டுமுகங்களில் ஒருவர். அவர் பரிசுபெறும் அச்சூழலில் அவ்வாறு சொல்வது அவரை அவமதித்தலாகும் என்று சொல்லப்பட்டது. என் கருத்துடன் உடன்பட்டவர்கள்கூட இன்னொருவரிடம் ஒப்பிட்டிருக்கவேண்டாம், இருவருக்குமே சங்கடம் என்றார்கள். ஓஎன்வியின் பாடல்களின் இசையொருமை,சொல்லழகு பற்றி எனக்கு மாற்றுக்கருத்தில்லை என்றும் ஆனால் ஞானபீடம் என்பது தனக்கான தனிப்பார்வையும் தனிப்படைப்புமொழியும்கொண்டு ஒரு சூழலின் மையவிசையாக இயங்கும் படைப்பாளிக்கு அளிக்கப்படவேண்டியது என்றும் நான் மறுமொழி சொன்னேன். அதைச் சுட்டிக்காட்டவே அந்த ஒப்பீட்டை நிகழ்த்தினேன் என்றேன்.

அக்கித்தம் அவர்களுக்கு ஞானபீடம் என்னும் கருத்தை ஒருவகையில் அவ்வாறு தொடங்கிவைத்தேன் என எண்ணிக்கொள்கிறேன். ஏனென்றால் அக்கித்தம் அன்று பிரபலக் கவிஞர் அல்ல. அவர் சென்றகாலத்தைய கவிஞராக, ஒருவகையில் புதியவாசகர்களால் கவனிக்கப்படாதவராக ஆகிவிட்டிருந்தார். அவர் மலையாளத்தில் புதுக்கவிதை தோன்றுவதற்கு முந்தைய அழகியல்மரபைச் சேர்ந்தவர். அவர் தீவிரமாகச் செயல்படுவதை நிறுத்தி நீண்டநாள் ஆகிவிட்டிருந்தது

அக்கித்தம் என்பது அவருடைய குடிப்பெயர். 1926 மார்ச் 18 ஆம் தேதி பாலக்காடு மாவட்டத்தில் குமரநல்லூரில் பிறந்தவர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி. அமேற்றூர் அக்கித்தத்து மனையில் வாசுதேவன் நம்பூதிரியும் சேகூர் மனைக்கல் பார்வதி அந்தர்ஜனமும் பெற்றோர். இவருடைய தம்பி அக்கித்தம் நாராயணன் புகழ்பெற்ற ஓவியர். இவர் மகன் அக்கித்தம் வாசுதேவனும் புகழ்பெற்ற ஓவியர்தான்

அக்கித்தம் இளமையில் இசையும் சோதிடமும் கற்றார். இளமையில் காந்திய இயக்கத்தி ஆதரவாளராகவும் பின்னர் இடதுசாரி கருத்துக்கள் கொண்டவராகவும் திகழ்ந்தார். எம்.ஆர்.பி [எம்.ராமன் பட்டதிரிப்பாடு] அவர்களின் ஆசிரியத்துவத்தில் கொல்லத்தில் இருந்து வெளிவந்த உண்ணிநம்பூதிரி என்னும் மாத இதழின் வெளியீட்டாளராக 1946ல் தன் இருபதாம் வயதிலேயே பணியாற்றினார். நம்பூதிரி சமூகத்தின் மூடநம்பிக்கைகள், பழைமையான ஆசாரங்களுக்கு எதிராகச் செயல்பட்ட முக்கியமான சீர்திருத்த இதழ் இது

கேரளத்தில் இலக்கியம், சமூகசிந்தனை ஆகியவற்றில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்திய மங்களோதயம் யோகக்ஷேமம் போன்ற இதழ்களில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். திரிச்சூரிலிருந்து வெளியான மங்களோதயம் கேரள நவீனஇலக்கியத்தில் பல தொடக்கங்களை நிகழ்த்திய சிற்றிதழ்- ஒருவகையில் மணிக்கொடியுடன் ஒப்பிடலாம். இவ்விதழின் ஆசிரியரையும் இதழ்ச்சூழலையும் குறித்த வேடிக்கையான சித்திரத்தை வைக்கம் முகமது பஷீரின் ‘ஒரு பகவத்கீதையும் சில முலைகளும்’ என்னும் குறுநாவலில் காணலாம்

1956ல் கோழிக்கோடு ஆகாசவாணியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 1975 ஆம் ஆண்டு திரிச்சூர் ஆகாசவாணியில் பொறுப்பாளரானார். 1985ல் ஓய்வுபெற்றார். அக்கித்தம் இசையிலும் ஈடுபாடுள்ளவர். பொதுவாக அரசியல் விவாதங்களிலோ இலக்கியவிவாதங்களிலோ ஈடுபாடு காட்டாதவர். அனைவரிடமும் நல்லுறவு கொண்டிருந்தவர். ஆனால் இடதுசாரி இயக்கத்தின் உட்பூசல்கள், சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் அரசின் மானுட அழிவுகளும் ஒடுக்குமுறைகளும் வெளிப்படுத்தப்பட்டமை அவரை இடதுசாரி இயக்கங்கள்மேல் அவநம்பிக்கை கொள்ளச்செய்தது.இஎம்எஸ் போன்ற மூத்த கம்யூனிஸ்டுத் தலைவர்களுடன் அணுக்கமான உறவு கொண்டிருந்த அக்கித்தம் அவ்வியக்கத்தின் தொடர்புகளை வெளிப்படையாக விலக்கிக் கொண்டார்.

1951ல் வெளிவந்த இருபதாம்நூற்றாண்டின் இதிஹாசம் [இருபதாம் நூற்றாண்டின் தொன்மம்] என்னும் புகழ்பெற்ற குறுங்காவியம் அந்த கொந்தளிப்பையும் விலக்கத்தையும் வெளிப்படுத்துவது.

வெளிச்சம் துஃகமாணு உண்ணீ

தமஸல்லோ சுகப்ப்ரதம்

[வெளிச்சமே துயரம் மகனே, இருட்டல்லவா இனியது]

என்னும் வரி அக்கவிதையில் உள்ளது. மலையாளத்தில் ஒரு பழமொழி போல புழங்குவது அது. 1983ல் வெளிவந்த ‘இடிஞ்ஞு பொளிஞ்ஞ லோகம்’ [இடிந்துசிதைந்த உலகம்] இடதுசாரிகள் மேல் கடுமையான விமர்சனத்தை முன்வைத்த இன்னொரு நீள்கவிதை.

இக்காரணத்தால் பொதுவாக இடதுசாரி விமர்சகர்களால் ஆளப்படும் மலையாள இலக்கியச் சூழலில் அக்கித்தம் தொடர்ச்சியாக புறக்கணிப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானார். 1973ல் அவருக்கு கேந்திர சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டது. அதன்பின் முக்கியமான விருதுகள் எவையும் அளிக்கப்படவில்லை. 2017ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இப்போது ஞானபீடம்

அக்கித்தம் கவிதைகள் கேரளத்தின் மரபுக்கவிதை இலக்கணத்தை ஒட்டியவை. அதேசமயம் மரபுக்கவிதைகளிலுள்ள வழக்கமான சொல்லணிகள், மரபுத்தொடர்கள் அற்றவை. கேரளப் புதுக்கவிதையைப்பற்றிப் பேசும்போது ஒருமுறை பி.ராமன் சொன்னார். “மலையாளத்தில் வசனகவிதை எழுதுவதில் ஒரு சிக்கல் உள்ளது. மலையாள உரைநடை பேச்சுமொழிக்கு அணுக்கமாகச் செல்லும்போது தொய்வான சொல்முறையாக ஆகிறது. அதை இறுக்கமான உரைநடையாக ஆக்கமுயன்றால் செயற்கையாக மாறிவிடுகிறது.இறுக்கமான இயல்பான கவிமொழியை அடையவேண்டும் என்றால் மரபுக்கவிதையின் தாளக்கட்டு உதவுகிறது”

இது ஓர் உண்மை. அக்கித்தம் போன்றவர்களின் மரபுக்கவிதை வரிகளுடன் ஒப்பிட்டால் மலையாள வசனகவிதைகள் நீளநீளமாக ஒலிப்பதைக் காணலாம். மலையாள மரபுக்கவிதை சம்ஸ்கிருத சொற்புணர்ச்சி இலக்கண முறைமையை அடியொற்றி பல சொற்களை ஒன்றோடொன்று இணைத்து அடர்த்தியான சொல்லாட்சிகளை உருவாக்குகிறது. அது பழகிய தாளத்தில் அமைந்திருப்பதனால் நினைவில் நிற்கவும் நாவால் சொல்லவும் அயலாக இருப்பதுமில்லை.

அக்கித்தம் கவிதைகளை வாசிக்கையில் அவை பிறகுவந்த மலையாள நவீனக் கவிதைகளைவிடச் செறிவானவை எனத் தோன்றுவது இதனால்தான். ஏனென்றால் அவருடைய கவிதையின் பேசுபொருட்கள் புதுக்கவிஞர்கள் எடுத்துக்கொண்டவைதான். அவருடைய பார்வையும் நவீன காலகட்டத்தைச் சேர்ந்ததுதான். அவருடைய மொழி மட்டுமே யாப்புக்குள் நிற்பது.

மலையாள மரபுக்கவிதையில் இருந்த ‘காளிதாசக்களிம்பு’ அக்கித்தம் கவிதைகளில் இல்லை என்று விமர்சகர்கள் சொல்வதுண்டு. உணர்ச்சிக்கொந்தளிப்புள்ள, கட்டற்ற மொழியில் நீண்டு செல்லும் கவிதைகளையே மரபுக்கவிஞர்கள் எழுதிவந்தனர். அக்கித்தம் சொல்லெண்ணி சுருக்கி எழுதும் ஒரு மரபுக்கவிமொழியை உருவாக்கினார். ஆனால் இயல்பான ஓட்டமும் சொல்லழகும் கொண்டவையாக அவ்வரிகளை அமைத்தார். மலையாளப் புதுக்கவிதையில் சொற்செறிவுக்கு அதேயளவுக்கு கவனம் அளித்தவர் ஆற்றூர் ரவிவர்மா. அவருக்கு அக்கித்தம் மேல் பெருமதிப்பு இருந்தது.

இன்னொன்றும் கூறவேண்டும். மலையாள மரபுக்கவிதைகள் அவற்றின் செறிவு, இசைத்தன்மை ஆகியவற்றுக்காக சம்ஸ்கிருதச் சொற்களை நோக்கிச் செல்வதே வழக்கம். மலையாளம் ஒரு புழக்கமொழி. சந்தத்தில் அமையும் சொல்தேடிச்சென்றால் சம்ஸ்கிருதத்தையே நாடவேண்டும். மலையாள மொழியின் அமைப்புக்கு சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே எடுத்தாள்வது பிழை அல்ல. ஆகவே மலையாளம் சற்று செம்மைகொண்டாலே நேரடிச் சம்ஸ்கிருதமாக ஆகிவிடும். புதுக்கவிதைகள்கூட சம்ஸ்கிருதச்செறிவு கொண்டவையே

ஆனால் முறையான சம்ஸ்கிருதக் கல்விகொண்டவரான அக்கித்தத்தின் கவிதைகளில் சம்ஸ்கிருதம் தேவைக்குமேல் பெருகி நிறைந்திருப்பதில்லை. மலையாள நாமொழி மரபிலிருந்தே சொற்களை கையாளவும் அவற்றை சம்ஸ்கிருதச் செவ்வியல் கவிநடை அளவுக்குச் செறிவுடன் அமைக்கவும் அவர் எடுத்த முயற்சியில் அடைந்த வெற்றியே மலையாளக் கவிஞர்களில் அவரை முதலிடம் கொண்டவராக ஆக்குகிறது. மலையாளக் கவிமொழியையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தவர் என்று அவரைச் சொல்லமுடியும். பின்னாளில் எழுதவந்த அனைவரிடமும், இன்று எழுதிக்கொண்டிருக்கும் நவகவிஞரான பி.ராமன் வரை, அக்கித்தம் அவர்களின் செல்வாக்கு உண்டு.

ஒரு நவீனக் கவிதைவாசகன் அக்கித்தம் அவர்களின் கவிதையில் இன்று கண்டு வியப்பது நாட்டார்ப்பாடல் அளவுக்கு,பேச்சுமொழி அளவுக்கு எளிய மலையாளச் சொற்கோவைகள் அடர்த்தியான கவிமொழியாக ஆவதன் அழகைத்தான். சற்றே நிறுத்திச் சொன்னால் எவராலும் புரிந்துகொள்ளக்கூடிய வரிகளே அவருடைய பெரும்பாலான கவிதைகள்

 

இந்நலேப் பாதிராவில் சின்னிய பூநிலாவில்

என்னையும் மறந்து ஞான் அலிஞ்ஞு நில்கே

தானே ஞானுறக்கேப்பொட்டிக் கரஞ்ஞுபோயி

தாரகவியூகம் பெட்டெந்நு உலஞ்ஞுபோயி

 

பரமதுக்கம் என்னும் கவிதையின் முதல்நான்குவரி இது. மேலே உள்ள வரிகளிள் சொற்களை நான் பிரித்திருக்கிறேன். சம்ஸ்கிருத சொல்லிணைவு முறைமைப்படி இணைந்த சொற்களாக அமைந்த கவிதை இது. [நேற்று பாதி இரவில் சிதறிய நிலவொளியில் என்னையும் மறந்து நான் கரைந்து நின்றிருந்தபோது தானாகவே நான் விம்மியழுதுவிட்டேன். விண்மீன்களின் சூழ்கையும் மெல்ல நெளிந்தாடியது ]. எந்தக் காரணமும் இல்லாத, எவ்வகையிலும் விளக்கமுடியாத ஒரு துயரத்தின் கணத்தைச் சொல்லும் கவிதை இது.

அக்கித்தம் அவர்களின் இலக்கியச் சாதனைகளில் ஒன்று சம்ஸ்கிருதத்தில் இருந்து பாகவதத்தைச் செய்யுளில் மொழியாக்கம் செய்தது. மூன்று தொகுதிகளாக அது வெளியாகியிருக்கிறது. அக்கிதத்தின் கவிதைகள் இரண்டு பெருந்தொகைகளாக வெளிவந்துள்ளன.

அக்கித்தம் அவருடைய பின்னாளைய கவிதைகளிலூடாக நவீன ஜனநாயக விழுமியங்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் பேசும் கவிஞராக வெளிப்படுகிறார். ஆனால் அவருடைய முதன்மையான கவிதைகளில் உலகியல் கொந்தளிப்புகளுக்கு அப்பால் மானுட உள்ளம் அடையும் தனிமையை, முழுமைக்கான தேடலை, அதன் மாற்றில்லாத துயரை வெளிப்படுத்துகிறார்.

மரபுக்கவிதையை நம் உள்ளம் இயல்பாக கற்பனாவாதத்துடன் இணைத்துக்கொள்கிறது. அக்கித்தம் கற்பனாவாதப் பண்புக்கு எதிரானவர். உணர்வடங்கிய நிலை கொண்டவை அவருடைய கவிதைகள். கொந்தளிப்பை வெளிப்படுத்தும்போதும் சமநிலை தவறாத சுருக்கமான மொழியை நோக்கிச் செல்பவை. பெரும்பாலும் மிக யதார்த்தமான வாழ்க்கைச்சித்திரங்கள் கொண்டவை.அவ்வகையில் அவரை நவீனச் செவ்வியலை எழுதியவர் என வரையறைசெய்ய முடியும்

 

அக்கித்தம் அவர்களுக்கு வணக்கம்

 

நாமும் ஜெயமோகன் அவர்களுடன் சேர்ந்து அக்கிடகம் அவர்களை வணங்குகிறோம் !

 

அமெரிக்கச் சக்கரவர்த்தி நார்டன் ( எஸ் எஸ் )

Related image

சென்ற ஆண்டில் தமிழில் சிறந்த படம் என்று அறிவித்த ‘ஜோக்கர்’ படத்தைப் பார்த்து அதில் வரும் ஜனாதிபதி பாத்திரத்தைப்பற்றி நாம் வித்தியாசமான கதை மனிதர் என்று நினைத்திருப்போம். இது மாதிரி உண்மையில் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் நினத்திருப்போம்.

ஆனால் உண்மையில் அதே மாதிரி ஒருவர் அமெரிக்காவில் இருந்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவர் தான் அவர். தன்னை அமெரிக்காவின் சக்கரவர்த்தி என்று 1859இல் பிரகடனம் செய்தவர்.

Joshua Norton in full military regalia with his hand on the hilt of a ceremonial sword.

அரிசி வியாபாரத்தில் நொடித்துப்போய் பிச்சை எடுக்கும் நிலைக்கு  வந்தார் நார்ட்டன். பிளாட்பாரம்தான் அவரது இருப்பிடம்.  திடீரென்று ஒருநாள் அவர் தன்னை அமெரிக்காவின் சக்கரவர்த்தியாக தனக்குத் தானே நியமித்துக் கொண்டார். அவரது அறிவிப்பைப் படியுங்கள்:

At the peremptory request and desire of a large majority of the citizens of these United States, I, Joshua Norton, formerly of Algoa Bay, Cape of Good Hope, and now for the last 9 years and 10 months past of S. F., Cal., declare and proclaim myself Emperor of these U. S.; and in virtue of the authority thereby in me vested, do hereby order and direct the representatives of the different States of the Union to assemble in Musical Hall, of this city, on the 1st day of Feb. next, then and there to make such alterations in the existing laws of the Union as may ameliorate the evils under which the country is laboring, and thereby cause confidence to exist, both at home and abroad, in our stability and integrity.

 

வேடிக்கை என்னவென்றால் அவரது நண்பர்களும் , மற்றவர்களும் அவரைக் கிண்டல் செய்யாமல் ‘சக்கரவர்த்தி’ என்றே அழைத்தார்கள். அது மட்டுமல்ல. அவர் சென்ற கடைகளில் எல்லாம் அவருக்கு மரியாதை செலுத்தி இலவசமாக உணவு உடை போன்றவைகளைக் கொடுத்தார்கள்.

சக்கரவர்த்தி நார்ட்டன் , அமெரிக்காவின் சட்டசபையைக் கலைப்பதாக அறிவித்தார். மேலும் அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர , ஜனநாயக இரு  கட்சிகளையும் தடை செய்வதாக அறிவித்தார்.

Ten dollar noteஎல்லாவற்றிற்கும் மேலாக,    தன் பெயரில் பேப்பர் பணத்தை வெளியிட்டார். வேடிக்கை என்னவென்றால் அந்தப் பணத்துக்கு மரியாதை செலுத்தி அதற்கான பொருட்களைக்  கடைக்காரர்கள் கொடுத்தார்கள்.

அதுமட்டுமல்ல , சான்பிரான்சிஸ்கோவிற்கும், ஓக் லேண்டிற்கும் இடையே ஒரு பெரிய பாலம் கட்டப்  போகிறேன் என்றும்,   கடலுக்கடியில் செல்லும் ரயிலையும் விடப் போகிறேன்  என்றும் அவர் ‘அதிகாரபூர்வமாக’ அறிவித்தார்.

( அவர் இறந்து வெகு காலம் கழித்து அவர் கூறிய படியே கடலின் மேல் பாலமும் , கடலுக்கடியில் செல்லும் ரயில் பாதையும் அமைக்கப்பட்டன.)

அவர்,  மயிலிறகு கிரீடமும், பித்தளைப் பட்டயமும்,  வாளும்  ( எல்லாம் மக்கள் அன்போடு கொடுத்ததுதான்) அணிந்து கொண்டு நகரத்தின் வீதி வழியே தினமும் வலம் வருவார். தன்னுடைய கருத்துக்களை அருகிலிருக்கும் மனிதர்களிடம் கூறுவார்.

ஒருமுறை சைனாக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு பெரிய கலவரம் வெடித்து,  இரண்டு கூட்டத்தினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருந்தனர். நமது சக்கரவர்த்தி அந்த இரு கூட்டத்தினருக்கும் நடுவில் நின்று அமைதிப்படுத்தும் வண்ணம் இறைவனை வேண்டினார். இரு கூட்டங்களும் கலவரத்தை நிறுத்திவிட்டுக் கலைந்து சென்றனர்.

ஒரு தடவை, ஊரு போலீஸ்காரர் இவரைப் பைத்தியம் என்று கூறி  சிறையில் அடைத்தார். உடனே நகரத்தின் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் நடத்தினர். செய்தித் தாள்களும் இதைக் கண்டித்துத் தலையங்கள் எழுதின. முடிவில் அவர் அரச மரியாதையுடன் விடுதலை செய்யப்பட்டார். தன்னைச் சிறையில் அடைத்த போலீஸ்காரரை மன்னிப்பதாக அறிக்கையும் விட்டார். அதிலிருந்து அவர் நடந்து செல்லும் போது போலீஸ்காரர்கள் மரியாதையுடன் சல்யூட்  அடிப்பது  வழக்கமாயிற்று.

ஆனால் ஜனவரி 1880 இல் அவர் இறந்து போது அவரிடம் இருந்தது  சில சில்லரைக் காசுகளே! திடீரென்று அவர் பிளாட்பாரத்க்தில் மயங்கி விழுந்து அங்கேயே இறந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தை மிகவும் சிறப்பாக நகரின் முக்கியப் பணக்காரர்கள் ஏற்பாடு செய்தார்கள். இரண்டு லட்சத்திற்குச் சற்று அதிகம் ஜனத்தொகை இருந்த அந்த நகரில் 30000 பேர் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். பிரபல பத்திரிகைகளும் ” சக்கரவர்த்தி  இறந்துவிட்டார்” என்று தலையங்கங்கள் எழுதின.

சான் பிரான்சிஸ்கோ க்ரோனிக்கில்:

“[o]n the reeking pavement, in the darkness of a moon-less night under the dripping rain…, Norton I, by the grace of God, Emperor of the United States and Protector of Mexico, departed this life”.[44]

அவரைப் போன்ற பாத்திரங்களைஆர்  எல் ஸ்டீவன்சன் , மார்க் ட்வெய்ன் போன்றவர்கள் தங்கள் காவியங்களில் படைத்து அவர் புகழை அழியாச் சின்னமாக மாற்றிவிட்டார்கள்.

மேலும் நகர மக்கள் அவர் பெயரில் ஒரு  பெரிய பட்டயத்தை நகரின் முக்கிய இடத்தில் பதித்தனர்

 

A plaque commemorating Norton, dedicated by E Clampus Vitus on February 25, 1939, which reads "Pause, traveler, and be grateful to Norton 1st, emperor of the United States and protector of Mexico, 1859-80, whose prophetic wisdom conceived and decreed the bridging of San Francisco Bay, August 18, 1869." The plaque depicts Norton, flanked to the left by the Bay Bridge and a dog labeled "Bummer" and to the right by a dog labeled "Lazarus".

 

இன்றும் நார்டன் பெயரில் ஒரு சுற்றுப் பயணம் அமைத்து அவர் இருந்த, இறந்த இடங்களுக்கு டூரிஸ்டுகளை அழைத்துச் செல்கிறார்கள்.

சான்பிரான்சிஸ்கோ நகரின் சில முனிசிபாலிட்டி அதிகாரிகள் பலமுறையாக  தற்போது இருக்கும் BAY BRIDGE க்கு அவர் பெயரை வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள் !

அது நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!

 

 “வலி நம் வசம்” மாலதி சுவாமிநாதன்

Image result for psychiatrist office in india

எனக்குக் கிடைத்த ஆசீர்வாதப் பட்டியலில்,  நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர் என்பதும், நிம்ஹான்ஸில் படித்த மேல் படிப்பும், என் குரு, டீச்சர்களும் அடங்கும்.  ஊக்கமும் , கற்றலும் , பொறுமைக்குப்  பஞ்சமே  இல்லாத வேலை பார்த்த இடமும் பெரிய ஆசீர்வாதங்களே! க்ளையன்ட் (மனோதத்துவத்  துறையில் நோயாளிகளை  க்ளையன்ட் என்றே அழைப்போம்) எங்களை அணுகி, தங்கள் பங்குக்கு ஒத்துழைத்து, அடுத்த நிலைக்குச் செல்லும் கட்டமும் ஆசிர்வாதமே! இவர்களின் துணிவான மன உறுதியை நான் “ஜான்சி கீ ராணி” என்பேன்.

ஒரு முப்பது வயதான “ஜான்சி கீ ராணி” மாயாவின் பயணத்தை உங்களிடம் விவரிக்கப் போகிறேன்.

Related image

மாயா என்னை மருத்துவ நிலையத்தில்  சந்தித்தபோது  “டாக்டர் ! என்  தோள் பட்டை, கை, பாதங்களில் எப்போதும்  வலி  இருந்து கொண்டிருக்கிறது.  குறிப்பாக, மாலை வேளையில் அசதி அதிகமாக வாட்டுகிறது.  தினசரி வேலைகளை முடிப்பதற்குள் சோர்ந்து போகிறேன் . அதனால்  வேலைகளை  முடிக்கவும் நேரமாகிறது.  சமீப காலமாக  எதற்கெடுத்தாலும் சுள் என்று கோபம் வருகிறது.  சிரிப்பு, சந்தோஷம் எல்லாம் மறந்தே விட்டது. ஞாபக மறதியும் அதிகமாகிறது.  ஒருவேளை டென்ஷனாக இருக்குமோ  என்று இவற்றைப் பொருட்படுத்தாமல் இருந்து விட்டேன்.  ஆனால் இப்போது வீட்டில்  உள்ளவர்களுடன் அடிக்கடி சண்டை வருகிறது.  வீடே போர்க்களம் போல் தோன்றுகிறது . இந்த வலிகளை என்னால் தாங்க முடியவில்லை . ஆகையால் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறேன்”   என்று கூறினாள்.

எட்டு வருட கல்யாணத்திற்குப் பிறகு விவாகரத்தைப் பற்றி யோசிக்கிறாள். காரணம்.. வலி .. வலிகள்…

வலி என்பது, தானாக வருவது அல்ல. அதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். அவற்றை நன்கு அறிந்துகொண்டு ஒரு ஹோலிஸ்டிக் வாழ்க்கையை மேற்கொண்டால்தான் வலி நம் வசப்படும். இல்லையேல் நாம் வலியின் பிடியில் வீழ்வோம். ( வலியின் அடிமை? )

மாயா தன் கணவர் கோபால், குழந்தைகள் ரோஹித் ( 8 வயது),  ரோஹன் (6 வயது) , மாமனார், மாமியாருடன் இருக்கிறாள். அவள் மாமனார், தனியார் நிறுவனத்தில் பெரிய பதவியில் வேலை பார்க்கிறார். அவர் அடிக்கடி  வெளியூர் பயணம் செய்வதால், மாமியார் வீட்டைக் கவனிக்கிறார்.  இவர்கள் குடும்பமோ , சம்பிரதாயங்களைக்  கடைப்  பிடிக்கும் குடும்பம். ‘வீட்டுப்  பராமரிப்பு-கணவர்- குழந்தை இவர்களைக் கவனித்துக் கொள்வது என்று இருப்பது தான்  பெண்களின் கடமை’ என்று நினப்பவர்கள்.  அவள் கணவர் கோபாலும் பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்ற அபிப்ராயம் உடையவர். கோபால், எம். பி .ஏ. முடித்து வேலையில் இருக்கிறவர். மாயாவின் தந்தை பெரிய தொழில் அதிபர். அவளுடைய செல்வாக்கைப்  பார்த்துதான் கோபால்   அவளைத் திருமணம் செய்ய எண்ணினார்.   கல்யாணமானதும், மாயாவின் அப்பா நிறுவனத்திலேயே கோபால் வேலையில் சேர்ந்தார்.  கோபால் நிதானமாகச் செயல்படுபவர். அவருக்குத்  தன் மாமனாரின் வேகம் சற்றும் பிடிக்கவில்லை.

மாயாவின் தந்தைக்கு  வயது 60. இருந்தாலும் அவர் சுறுசுறுப்பாக இருந்தார். எல்லாம் டான்-டான் என்று இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உடையவர். தன்னுடன் இருப்பவர்கள் அனைவரும்  இப்படியே  இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவர் .அப்பாவின் இந்தக் குணங்கள் மாயாவிற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவளுக்கு ஒரு புதிய பயம் வந்து  சேர்ந்தது. அவள் அம்மா பொறுமையின் சிகரம். தன் கணவன் சொன்னபடி நடப்பவள்.  தன் இன்னல்களை டைரியில் மட்டும்தான் எழுதுவாள். மாயா தன் அம்மாவை அடிக்கடி வியந்து பார்ப்பாள்.  அவளுடைய ஒரே அண்ணனுக்கு அப்பாவின் வழிமுறை கொஞ்சமும் பிடிக்கவில்லை. அப்பா  ஆட்சேபிக்கும் அத்தனையும்  அவனுக்குப் பிடிக்கும் – நீள முடி, ஜிப்பா, கோலாப்பூரி செருப்பு, ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பு இன்னும் எத்தனையோ. கடைசியில்  அவரை எதிர்த்துக் கல்யாணம் செய்து,  அவர் உறவை அறுத்துக்  கொண்டான்.  ஆனால் மாயாவிடம்   வைத்திருந்த பாசத்தினால் அவளிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தான் . மாயாவுக்கு அண்ணனின் பொது சேவை, பரிவு எல்லாம் பிடித்திருந்தது.

மாயா, தன் அப்பா சொற்படி ஆர்கிடெக்ட் படித்து அவர் நிர்வாகத்திலேயே வேலைக்குச் சேர்ந்தாள். கோபாலைத் திருமணத்திற்கு  சரி என்று சொன்னதும் அவரே. அப்பாவைப் பொறுத்த வரை கோபால் பணத்திலும், அந்தஸ்த்திலும் மிகச் சாதாரணம். இதனால், மாயாவுக்கு அவர்கள் வீட்டில் மதிப்பு கூடும் என எண்ணினார். கோபாலைத்  தன் நிறுவனத்தில் சேர்த்தது மாயாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.  அவளைப் பொறுத்த வரை, ‘ ஒருவர் தன் முயற்சி , திறமைகளால் முன்னேற வேண்டும்;  சிபாரிசினாலோ, மற்றவர் தோளிலில் ஏறியோ அல்ல’ என்ற கொள்கையில் தீர்மானமாக இருந்தவள்.  

இப்படி, பல சமயங்களில் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை –  அனுபவங்களை எப்படி வெளிப்படுத்துவது  என்று தெரியாமல் அவற்றை அப்படியே உள்வாங்கி வைத்துக் கொள்வோம். இப்படிச்  சேமித்தால், நாளடைவில், அதன் உறுத்தலை உணர்த்தவே உடலில் எங்கேயாவது வலி தோன்றலாம். அல்லது இருக்கிற வலியும் அதிகமாகலாம்.

மாயாவின் பிறந்த வீடும் , புகுந்த வீடும்  முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் இருந்தன. அவளும் கணவன் வீட்டிற்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொண்டாள். ஆனாலும் பல முறை  தன் பிறந்த வீட்டு வழக்கங்களை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள். இரண்டு வீடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்  ஆரம்பித்தாள்.அப்போதுதான் அவளிடம் முரண்பாடு நுழைந்து விட்டது.

ஒப்பிட்டு-முரண்பாடு செய்வது சஞ்சலம் உருவாக்கும் விதைகளே.

கல்யாணமாகி மூன்று மாதங்களில், அவள் மாமனார் அவர்கள் வீட்டை டிஸைன் செய்யச் சொன்னார். உற்சாகமாகத் தன் ஆர்கிடெக்ட் வேலையைச் செய்து முடித்தாள். அவர்களுக்குப் பிடித்திருக்கும்  என்று நம்பினாள்.  ஆனால்  ஒரு பொது இடத்தில், மாமனாரும், கோபாலும் இதைக் கிண்டல் செய்து பேசினார்கள்.  இது மாயாவின் மனதைக் காயப்படுத்தியது. யாரிடம் இதைச் சொல்ல முடியும் ? இதையும் தன் மனத்திலேயே உள் வாங்கி வைத்துக் கொண்டாள்.

குழந்தைகள் பிறந்தபின், கண்டிப்பான பராமரிப்பைக்  கடைப்பிடித்தாள். மாமனார், மாமியாரோ  கண்டிப்பே கூடாது என்றார்கள். வளர்ப்பு முறை வேறுபாடு மாயாவை நச்சரித்தது. மாமியார்தான் சமைப்பார்;  எப்போதும் குழந்தைகளுக்குப் பிடித்த வகைகள் செய்வார். அவர்களிடமே குழந்தைகள் இருந்தார்கள். இதனால் மாயாவுக்கு வருத்தம், ஏமாற்றம். வேறு வழியின்றி மாயா வீட்டின் மற்ற வேலைகளைக் கவனித்தாள்.

மாயாவின் அப்பா மாயாவைத்  தன்  வீட்டு வேலைகளை முடித்துவிட்டு , தங்கள் நிறுவனத்தில் வேலையில் சேரவேண்டும் என்று விரும்பினார்.  அவளுக்குப் பிடித்த ரிசர்ச் துறையில் பணி செய்யவேண்டும் என்றும் திட்டமிட்டார். கோபாலிடமும் , அவள் மாமியாரிடமும் கூறி அதை ஏற்றுக் கொள்ளவும் செய்தார். அலுவலகத்தில் இதை வரவேற்ற கோபால் வீடு திரும்பியதும், ஏளனமாகப் பேசி, மாயாவை வீடு-கணவர் என்று இருக்கச் சொன்னார். அவள்  மாமியாரும் இந்த அபிப்பிராயத்தையே ஆமோதித்தாள். மாயாவுக்கு தலை கிறுகிறுத்தது. வலியின் வீரியம் அதிகமானது.

உடலின் வலியை  எல்லோரும் புரிந்து கொள்வார்கள். அதைச் சொல்லவும்  முடியும், ஏற்றுக்  கொள்ளவும் செய்வார்கள் . ஆனால் மனம், உணர்ச்சி என்று ஆரம்பித்தால் பல கோணங்களில் போய்விடும். இதனாலேயே, நம் மூளையும் சூழலுக்கு ஏற்றவாறு மன பாரத்தை – உணர்ச்சிகளை உடல் வலியின் வடிவில்  தெரிவிக்கும். (உணர்ச்சிகளைத் வெளிப்படுத்துவது என்றும் உசிதம்).

மாயா வீட்டு வேலைகளைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினாள். ஆனால் அவளால் அவற்றைக்  சரிவரச் செய்ய முடியவில்லை.  வலியின் வேகம்  அதிகமானது. வேலை செய்யச்செய்ய வலி அதிகரித்துக் கொண்டுவந்தது.  கோபம் அதிகரித்தது. வலி தாங்க முடியாத அளவிற்குச் சென்றது.

வலி தனியாக வருவது இல்லையே; உடல்-மனம்-சூழல் எல்லாம்  இணைந்ததுதானே!

இந்தச் சூழ்நிலையில்தான் மாயா எங்களை அணுக நினைத்தாள். எங்களிடம் வருவதற்கும்  மிகச் சங்கடப் பட்டாள். ஒருவேளை தன் மேலேயே தவறு என்றாகி விடுமோ என்றும்  பயந்தாள். கோபால் சொல்வது போல், தான் “சாக்கு மூட்டையா”?  என்ற எண்ணம் வேறு அவளை அலைக்கழித்தது. அவளுடைய அப்பாவும் மனோ தத்துவ நிபுணர்களிடம் செல்வது ‘பலவீனம்’  என்றே  நினைத்தார்.                      ( உண்மையில் மனோதத்துவக் கல்வியில் இப்படி  உதவி கேட்பதைத் தான்  தைரியம் என்று சொல்லுவோம்)

பாவம் மாயா!  என்னிடம் ஏழு முறை அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டு வராமல்  பிறகு ரத்து செய்து விட்டாள்.

கடைசியில் அவள் வலி அவள் தயக்கத்தை மீறி எங்களிடம் வரச் செய்தது. தயக்கத்துடன் வந்தவளிடம், அவள் வலியைப்பற்றிக் கேட்க ஆரம்பித்தேன். எந்தத் தகவலையும் துருவிக்  கேட்கவில்லை. அவள் போக்கில் சென்றேன். ஆறுதல் அடைந்தாள்.

மறுபடியும் வந்தாள். இந்தத் தடவை அவள் வீட்டின் நிலவரத்தைப்பற்றி மேலும் அறிந்தேன்.

வலி என்பது தனியாக எங்கிருந்தோ வருவது இல்லையே!  நம் கண்ணோட்டங்களால் நம் சூழலை எதிர்த்துச் சமாளிக்கும் திறன்களையும், சூழ்நிலைகளைக் கையாளும் விதங்களையும் அறிவதனால் வலியைக்  கையாளுவதும் புரியும். இவைகளே வலியின் சிகிச்சைக்கும் உதவும்.

மாயாவுக்கு ஒரு சந்தேகமும் உதித்தது.  வேற்று மனிதரிடம் குடும்ப விஷயம் சொல்லலாமா? நியாயமான சந்தேகம். அவளிடம், எங்கள் தொழில்முறையை விவரித்தேன்: சுற்றியிருக்கும் தகவல்கள் நம் சிகிச்சையின் கருவிகளாகும். அவள் விவரித்த வலியை ஒப்பிட்டு உதாரணங்கள் காட்ட, புரிந்து கொண்டாள். மேலும், இங்கு பகிர்ந்து கொள்ளும் அந்தரங்கங்களை  யாருடனும் பகிர்ந்து கொள்ள  மாட்டோம் என்பதை வலியுறுத்தினேன். நம்பிக்கை மலர்ந்தது.

சில நரம்பியல் மாத்திரைகள் –  உரையாடல்கள் –  மேலும் சில ஹோம் வர்க் என்று தொடங்கினோம். சில வாரங்களில் அவளுடைய அசதி நன்றாகக்  குறைந்தது,  எரிச்சல், கோபம் அவள் கட்டுப்பாட்டில் வந்தது. மெதுவாகச் சிரிக்கவும்  ஆரம்பித்தாள்.

அடுத்த கட்டமாக, மாயா-கோபால் உறவு நிலையை மையமாக வைத்து இருவரையும் இணைந்து பார்க்க ஆரம்பித்தேன். இருவரும் சேர்ந்து பணியாற்றியவர்கள் என்பதால் அதைப்பற்றி நிறையப்  பேசினார்கள்.  அனுகூலமாகத்  தொடங்கியது,  கணவன்-மனைவி, பெற்றோர் என்ற உறவு முறையைப்  பற்றி எதுவும்  பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை அவர்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். தங்கள் சொந்த வாழ்க்கையை ஆராய்கிறேனோ என்று கொஞ்சம் கூச்சத்திலும்  ஆழ்ந்தார்கள்.

பிறகு மாயா சுதாரித்து, கோபாலைப்பற்றிய விவரங்களைப் பகிர்ந்தாள். கோபாலும் உரையாடினார். இந்த உரையாடலின் போதுதான் கோபாலுக்குச் சமைக்கும் திறனும், மாயாவிற்குப் பாடும் திறனும் இருக்கின்றன என்பதை இருவரும் உணர்ந்தார்கள். விஷயங்களைப் பகிர்ந்ததில், நெருங்கி நடப்பது, முகம் பார்த்துப் பேசுவது என, பல விதங்களில் நெருக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.

இந்த நிலையில், மாயா,   கோபால்,  தன் தந்தைபோல் இருக்கவேண்டும் என்று தான் விரும்பியதாகக் கூறினாள். அதுபோல கோபாலும்  சமையலில் தன் அம்மாவின் கை மணம் மாயாவுக்கு இல்லை என்ற வருத்தத்தைப்  பகிர்ந்தார். இருவரும், பல ஒப்பீடு முரண்பாடுகளை விவரித்தார்கள்.

வசதியான வாழ்க்கை மீது தனக்கிருந்த ஆசையே மாயாவைத் திருமணம் செய்து கொண்டதற்கு முக்கியக் காரணம்  என்று கோபாலும் ஒப்புக்கொண்டார், அவளின் பணக்கார வாழ்க்கை அவள் மீது ஒரு பொறாமையை உண்டு பண்ணியது.  இதனால் அவளை அடிக்கடி  கோபித்துக்  கொண்டார். மாமனார் மேல் உள்ள அச்சங்களையும் இவளிடமே காட்டினார். அவரிடம் சரி சொல்வது, பிறகு மாயாவிடம் மறுப்பு தெரிவிப்பது என்றே தான் நடந்துகொண்டதாக கோபாலும் ஒப்புக் கொண்டார்.  மனம் திறந்து பேசியதில், ஒருத்தரை ஒருத்தர் நன்றாகப் புரிந்து கொண்டார்கள். மாயாவின் அண்ணனும் இதை வெளிப்படையாகப்  பாராட்டினான். தன் பங்குக்கு ஏதேனும் செய்ய விரும்பினான். கோபால் மாயா இருவருடனும்  கலந்துரையாடி, அவர்களை   விடுமுறைக்கு வெளியூருக்கு அனுப்பி வைத்தான். ரோஹித்- ரோஹனைத் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினான்.

திரும்பி வந்ததும், படுத்த படுக்கையாக இருந்த மாமனாரைத் தான் இதுவரை கவனிக்கவேயில்லை என்பதை மாயா உணர்ந்தாள். மாமனார் மாமியாரைப் பார்த்துக் கொள்வதும் தனக்குச் சந்தோஷமான வேலை என்பதை உணர்ந்து செய்ய ஆரம்பித்தாள். ஆசை, பாசம், பராமரிப்பு கூடியது .கோபதாபங்கள் வெளியேறின.  வலியும் குறைந்தது,  

எதிர்பாராமல், கோபாலின்  உடல் நிலை சரிந்தது.டாக்டரைச் சந்தித்தார்கள். பரிசோதனையில் தீங்கற்ற டூமர் என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. டூமரை எடுத்து விடுவது நன்று என்ற முடிவை அனைவரும் ஆமோதித்தார்கள்.  வெளி நாட்டில் 3 மாதம் சிகிச்சை என்பதால் குழந்தைகள் தாத்தா-பாட்டியுடன் இருப்பது என்று முடிவானது. மாயாவுக்குக் கஷ்டம் என்று கோபால் வேறு ஏற்பாடு செய்ய நினைத்தார். மாயாவுக்கு இதில் உடன்பாடில்லை., “நான் வருகிறேன்” என்பதை உறுதியுடன் தெரிவித்தாள். கோபாலுடன் சென்றாள். மாயாவின் அண்ணனும், தந்தையும் தங்கள் பங்குக்குப் பல உதவிகள் செய்தனர்.

திரும்பியதும், மாயா என்னைப் பார்க்க வந்தாள்.

வலி தனக்கு நன்றாகவே குறைந்துவிட்டதால் வேலைகளை வெகுசீக்கிரமாகவும், நன்றாகவும் செய்ய முடிகிறது என்றாள். மகிழ்ச்சி பொங்க,  விமான நிலையத்தில் தன் மாமனார்-மாமியார் அவள் அம்மா-அப்பாவுடன் சிரித்துப்  பேசிக் கொண்டிருப்பதைப்  பார்த்துப் பரவசம் அடைந்ததைச்  சொன்னாள். மேலும் சண்டை போட்டுக் கொண்டிருந்த  தன் அண்ணன் – அப்பா இருவரும் சேர்ந்து அருகில் நிற்பதையும் பார்த்துக்  கொண்டாடியதையும்  சொன்னாள்.  கோபாலின் டூமர்-சிகிச்சை – கவனம்- ரிக்கவரீ தன்னையும்-அவரையும்  இன்னும் நெருக்கம் ஆக்கியதைக்  குதூகலமாகச் சொன்னாள்.

வலியின் மாத்திரையும்  தன் பங்குக்கு வேலை செய்தது; அதைவிட மாயா தனக்குள்ளும், தன்னைச்  சுற்றி உள்ள இன்னல்களையும் கவனித்துத்  தீர்வு செய்ததில் அவள் வலி அவள் கைவசத்தில் வந்தது. இதனால் “ எந்தச்  சூழ்நிலையிலும்  வலியைச் சமாளிக்கும் தைரியம் எனக்கு வந்துவிட்டது. என் வலியை நான் வென்றிடுவேன்”  என்று சொல்லி விடை பெற்றாள் மாயா – ‘ஜான்சி கீ ராணி’

மாயாவை இப்படிப் பார்ப்பது நல்ல ஆசீர்வாதம் தானே ? என்ன சொல்கிறீர்கள்?

மாயாவின் பரிமாணத்தை எங்கள் பாஷையில் ‘ரெஸிஸ்டன்ஸ் ட்ரான்ஸ்ஃபரன்ஸ்’ என்று சொல்வோம்.

பல முறை, “அட, எப்படிச்  சொல்வது”? என்று  இருந்தால், அது வலியாகத் தோற்றம் கொள்ளலாம்!

வலியின் வலி அதிகமாவதும் குறைவதும் நம் உணர்வுகளால்!

உடல் – மனம் – மூளை- சூழல் இவற்றில் நாம் கவனம் செலுத்துகையில்  வலி நம் வசம்! இல்லையேல், வலியின் அடிமை நாம்! ( அது நமக்குத் தேவையில்லை).

 

பொன்னியின் செல்வன் -டெலி பிலிம் – பாம்பே கண்ணன்

Image may contain: one or more people, people standing and outdoor

 

Related image

பொன்னியின் செல்வன், கடல்புறா, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், நான் கிருஷ்ண தேவராயன் போன்ற எண்ணற்ற ஒலிப் புத்தகங்களைத் தயாரித்து வெளியிட்ட பாம்பே கண்ணன் அவர்கள் ‘பொன்னியின் செல்வனை’  ஓர்  ஒளிப்படமாகத் (TELE FILM) தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

நட்சத்திரங்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

இதைப் பற்றி அவரே  தன் முகநூலில் கூறியவற்றை    உங்களுக்காகக் கீழே தந்திருக்கிறேன்.

கல்கியின் பொன்னியின் செல்வன் ஒளிப்படம்

ஒளிப்பட வேலைகள் துவங்கி விட்டன

நடிகர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது

படப்பிடிப்பிற்கான இடங்கள் பார்க்கப்பட்டு வருகின்றன
உடைகளும் காட்சி அமைப்புகளும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன

 TELEFILM ற்கும் TELESERIAL க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே

ஆனாலும் என்னுடைய பொன்னியின் செல்வன் TELEFILM என்று நான் கூறியதும் பலரும் எத்தனை EPISODE என்று கேட்கிறார்கள் திரைப்படமா என்றும் கேட்கிறார்கள்

அவர்களுக்காக இந்த விளக்கம்

நான் திட்டமிடுவது ஒரு முழுநீள தொலைக்  காட்சித்  திரைப்படம்தான்

ஆனால் இதைத் தற்சமயம் திரை அரங்குகளில் பார்ப்பதற்காகத்   தயாரிக்கப்  போவதில்லை

திரை அரங்குகளுக்குச்  செல்லவேண்டுமானால் அங்குள்ள பெரிய திரையில் காட்டும் வண்ணம் சில விஷயங்கள் படப்பிடிப்பிலேயே இருக்கவேண்டும்.மேலும் திரை அரங்குகளுக்குள் செல்ல விநியோகஸ்தர்கள் திரை அரங்கு உரிமையாளர்கள் இவர்களின் தயவு வேண்டும்.  மிகுந்த பொருட்செலவில் விளம்பரங்கள் செய்யப்படவேண்டும்.  விநியோகஸ்தினர்களை நாடினால் பிரபலமான நட்சத்திரங்கள் யாரென்று கேட்பார்கள் அல்லது பிரபலமான இயக்குனர் அல்லது தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டும்.  பல கோடிகள் முதலீடு தேவைப்படும். இல்லை என்றால் அது சூதாட்டம்தான்.

இவற்றை எல்லாம் தற்சமயம் நினைக்காமல் இந்தப் படத்தை ஒரு வீடியோ பிலிமாகத் தயாரிக்க முற்பட்டு வருகிறேன்

மேலும் பொன்னியின் செல்வன் போன்ற படத்தைத்  திரை அரங்குகளுக்குக்  கொண்டு  செல்ல   வேண்டுமானால் அதை ஒரு இரண்டு மணி நேர படமாகச்  சுருக்க வேண்டும்

அது பொன்னி மட்டும்தான். பொன்னியின் செல்வன் அல்ல
யானையை பானைக்குள் அடைப்பது போன்றது

ஆனால் என்னுடைய படம் அந்தக்  கதைக்கு – அந்த சரித்திரத்திற்கு எவ்வளவு நீளம் தேவையோ அதை – அதன் தரம் குறையாமல் எப்படி எடுக்க வேண்டுமோ அவ்வாறு இருக்கும்

என்னுடைய இப்போதைய கணிப்பு 300 நிமிடங்களுக்குள் இருக்கும் என்பது.

இதுவே இரண்டு பகுதிகளாக வெளிவரும்.

வெளி நாடுகளில் சில சிறந்த நாவல்கள்  திரைப் படங்களாக வருவதில்லை அவை இப்படிபட்ட TELEFILM களாகவே வருகின்றன என்பதை நான் கண்டிருக்கிறேன்.

உதாரணமாக ARTHUR HAILEY போன்றவர்களின் படைப்புகள்

மேலும் TELEVISION தொடராக தயாரிக்கலாமே என்பதற்கு என்னுடைய பதில்: 

அதன் சிரமங்களை,  அறிந்தவர்கள் சொல்வார்கள்!

அதற்கான முதலீட்டில் நான் இரண்டு பொன்னியின் செல்வன் எடுத்து விடுவேன்

மேலும்,  என்னுடைய படத்தில் அந்தந்த சரித்திர பாத்திரங்கள் மட்டுமே மனதில் நிற்பார்களே தவிர நடிகர்களைக் கொண்டு பாத்திரங்கள் அடையாளம் காணமாட்டார்கள். அந்த அளவிற்குப் பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கப்போகும் பொருத்தமான நடிகர்கள் இருப்பார்கள்

பொருத்தமான காட்சி பின்னணி காட்சிக்குத்தேவையான வெளிப்புறங்களில் படப்பிடிப்பு,அரங்க நிர்மாணம், உடைகள் கல்கியின் வசனங்கள் இசை மற்றும் பாடல்கள் எல்லாம் உண்டு

பின்னாளில் ஒருநாள் இதுவும் திரை அரங்குகளுக்கு செல்லும் –  தொலைக்  காட்சிகளில் இடம்பெறும் என்ற நம்பிக்கையோடு அதற்குத்  தேவையான TECHNICAL மாற்றங்களைக் குறைந்த செலவில் செய்யும் வண்ணம் இப்போது இதைத் தயாரிக்கின்றேன்

இதைப் பற்றியும் கிராபிக்ஸ் பற்றியும் தொழில்நுட்ப வல்லுனர்களோடு பேசி வருகிறேன்

மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்த TELEFILM என்னும் திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன்

நீங்கள் பார்க்கப்போவது ஒரு திரைப்படத்திற்கு நிகரானதாக இருக்கும்

நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தவாறே  DVD அல்லது வலைத்தளத்தில் காண்பீர்கள்

உங்களிடம்  மீண்டும் ஒரு முறை நான் கேட்க விரும்புவதெல்லாம் நீங்கள் அறிந்ததே

இதன் மாபெரும் பொருட்செலவிற்கான ஆதரவு

எங்களால் முடிந்த வரையில் இதில் செலவு செய்யப்போகிறோம்

இருந்தும் இதன் பிரம்மாண்டம் காரணமாக ,இது எல்லோர் மனதில் இருக்கும் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக அமைய வேண்டுமென்ற ஆசையினால்,நம் மனதில் இருக்கும் பாத்திரங்கள் கண் முன் தத்ரூபமாக தோன்ற வேண்டுமென்ற ஆவலினால், உங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளேன்

என்னுடைய ஒலிப்புத்தகங்கள் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் அடுத்து எப்போது என்றும் அவர்கள் மனதிற்கு தோன்றும் சில கதைகளை ஒலிப்புத்தகமாக செய்யுங்கள் என்றும் விண்ணப்பங்களை முன் வைக்கிறார்கள்

நிச்சயம் ஒருநாள் கடவுள் அனுக்ரகமும் உடல் மனது தெம்பும் இருந்தால் நேரமும் கிடைத்தால் செய்வேன்

இதற்கிடையில் நான் கேட்பதெல்லாம் கல்கியின் ரசிகர்களும் பொன்னியின் செல்வன் நாவலை ஒளிப்படமாக பார்க்க விரும்புவர்களும் சிறிய முயற்சியாக இதற்கு உதவலாமே

உங்களால் முயன்ற அளவிற்கு ஒரு ஐந்துலிருந்து பத்து விநாடி படம் தயாரிப்பதற்கு ஒவ்வொருவரும் உதவினாலே சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல தேவையான ஆதரவு கிடைத்து விடும்

குறிப்பாக வெளி நாட்டில் வாழும் கல்கியின் ரசிகர்களும் என் ரசிகர்களும் இதற்கு பெரும் உதவியாக இருப்பார்கள் என்றே நம்புகிறேன்

மிண்டும் படப்பிடிப்பு துவங்கியவுடன் உங்களை அணுகுகிறேன்.

என்னுடைய எண்ணமே துவங்கிய படம் வெற்றிகரமாக முடிய வேண்டும்

நாம் கல்கியின் கதாபாத்திரங்களை திரையில் காண வேண்டும்

அவர்களுடன் சில மணி நேரங்களை கழிக்க வேண்டும் என்பதுதான்

இந்த விண்ணப்பம் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்தான்

அவர்கள் கொடுக்கப்போகும் சிறிய தொகை ஒவ்வொரு நாளும் அவர்கள் பெயர் சொல்லும்

உதவ விரும்புவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் வங்கிக் கணக்கு தருகிறேன் அதில் செலுத்தி விடுங்கள்

கண்டிப்பாக செய்வீர்கள் என நம்புகிறேன்

இதுவரையில் ஆதரவு அளித்துள்ள சில நல்ல உள்ளங்களுக்கு நன்றி

நன்றி வணக்கம்

Computer graphics எனப்படும் தொழில் நுட்பம் தெரிந்த கலைஞர்கள் இந்தத் தொலைக்  காட்சிப்  படத்திற்குத்  தேவைப்படுகிறார்கள்

புதியவர்கள் அனுபவஸ்தர்கள் ஆலோசனை வழங்க என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்

 பாம்பே கண்ணன்

 

எலிப்பொறி – ராமன்

 

 

நான் இங்கிலாந்தில் லண்டன் நகரில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வருடம். 1966ல்.  அப்போது லண்டன் ரீஜெண்ட் தியேட்டரில் ‘THE MOUSE TRAP’(எலிப்பொறி) என்னும் ஒரு அகதா கிரிஸ்டியின் பிரபலமான திட்டமிட்டுக்  கொலை புரிந்த கதையை  ‘யார் அதை செய்தார்கள்?’(whodunit?)  என்றவாறு அமைக்கப்பட்ட  விறுவிறுப்பான  நாடகத்தைப் பார்த்தேன்!

அந்த நாடகத்தைப் பற்றிய விவரங்களைச் சொன்னால் நீங்கள் அதை நம்பப்போவதில்லை!!!

1952ல் தொடங்கிய நாடகம் நான் பார்த்த நாள் 1966ல் அதே தியேட்டரில் 14 வருடங்களாக தினமும் ஹவுஸ் ஃபுல்லாக நடந்து 14*52*6 கணக்கில் 4368 ஷோக்களைத் தொட்டது.

இப்போது 2017ம் வருடம். இன்னமும் தினமும் தியேட்டரில் முழுமையாக நிரம்பி 65 வருடங்களுக்குப் பின் 26500 ஷோக்களையும் தாண்டி கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்டில் இடத்தை பெற்றிருக்கிறது!!  !!

நாடகம் 1972ம் ஆண்டு பக்கத்திலேயே இருக்கும் பெரிய செயிண்ட் மார்ட்டின் தியேட்டருக்கு மாற்றப்பட்டு அதிலேயே தொடர்ந்து நடைபெற்று மக்களை மகிழ்வித்துக் கோண்டிருக்கிறது! 

 

கனடாவில்  ஒன்டாரியோ, டொராண்டோவில் டிரக் தியேட்டரில் 9000 ஷோக்களை நிரப்பி சிங்கப்பூர், கோலாலம்பூர் , பேங்க்காக் போன்ற அயல் நாடுகளிலும் போடப்பட்டிருக்கின்றது!! உலகம் முழுவதும் முக்கியமாக ஐரோப்பாவிலிருந்து நாடகம் பார்ப்பதற்கென்றே மக்கள் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். நாடகம் இயங்கும் நேரம் 2 மணி 20 நிமிடங்கள்.

அந்த நாடகத்தின் கதை இப்படிப்  போகிறது:

லண்டனில் உள்ள ஆள் நடமாட்டமில்லா ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கெஸ்ட்ஹௌஸாக மாற்றப்பட்ட ‘மான்க்ஸ்வெல் மேனர்’  என்னும் பழைய அரச எஸ்டேட். அதன் உரிமையாளர்கள் மாலி மற்றும் ஜைல்ஸ் என்னும் புது மண தம்பதிகள். முதல் வாடிக்கையாளர்களுக்காக கெஸ்ட்ஹவுஸை ரெடி செய்து காத்திருக்கிறார்கள். வெளியில் பலத்த சூறாவளிக்  காற்றுடன்  பனி மழை பொழிந்து கொண்டிருக்கிறது. தம்பதிகள் முதல் வாடிக்கையாளர்களின் வருகையைப்  பாதிக்குமோ என்று பயம் கொள்கிறார்கள். அப்போது ரேடியோவில் அதே  தெருவில் ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நடந்த மௌரீன் என்ற ஒரு பெண்மணியின் கொலையைப் பற்றி ஓர்  அறிவிப்பு வருகிறது. அந்தச்  செய்தி கெஸ்ட் ஹவுஸ் தம்பதிகளை அவ்வளவாகப்  பாதிக்கவில்லை. கடைசியில் ஒருவர் பின் ஒருவராக ஐந்து வாடிக்கையாளர்கள் வந்து சேர்கிறர்கள். முதலாதவர் மன நிலையினால் சற்று பாதிக்கப்பட்ட கிரிஸ்டஃபர் என்னும் இளைஞர், தம்பதிகளுக்கு சிறிது மன உளைச்சலை கொடுக்கிறார். இரண்டாதவர் திருமதி பாயில். ஒன்றுமே பிடிக்காதவர். பிறர் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாதவர். மூன்றாமவர் எப்போதும் பட்டாளத்தைப்  பற்றியே பேசும் நடுத்தர வயதுள்ள மேஜர் மெட்காஃப். நான்காதவர் கேஸ்வெல் என்னும் இளைமையான பெண். ஏற்கெனவே ரேடியோவில் ஒலிபரப்பானக்  கொலையைப்  பற்றித்  தனக்குத்தெரிந்த சில உண்மைகளைச்   சொல்லுகிறார். திடீரென நுழைந்த பரவுசீனி என்னும் ஐந்தாதவர் தன் கார் பனிமழை சூறாவளியால் கவிழ்ந்து விட்டதாகக்  கூறிக்கொண்டே வந்து சேருகிறார்.

அடுத்த நாள்  போலிஸ் டிடெக்டிவ் சார்ஜெண்ட் ட்ராட்டர் கெஸ்ட் ஹவுசுக்கு  வருகிறார். அவர் ரேடியோவில் அறிவிக்கப்பட்ட  கொலை செய்யப்பட்டப்  பெண்மணி மௌரீனைப் பற்றிப்  பேசத் தொடங்குகிறார்.  சில வருடங்களுக்குமுன் நீதிமன்றம் மூன்று குழந்தைகளை, கவனித்துப் பாதுகாத்து வளர்க்க மௌரீன் வீட்டிற்கு அனுப்பியது.  ஆனால் அங்கு குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளானார்கள். அதை அறிந்த நீதிமன்றம் குழந்தைகளை அங்கிருந்து அகற்றுமுன் ஒரு குழந்தை மட்டும் பலியாகி இறந்துவிடுகிறது.  மௌரீன் பெண்மணி அக்குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியவள். மௌரீன்  சிறை தண்டனை பெற்றாள். தண்டனை முடிந்த  பிறகு  கெஸ்ட் ஹவுசிற்கு அருகில்  வசித்து வந்தாள். அங்குதான் அவள் கொலை செய்யப்பட்டாள். அவள் வீட்டில் போலீஸ் கண்டுபிடித்த  நோட்புக்கில்  ‘மூன்று குருட்டு மூஞ்சூருகள்’ கொல்லப்படுவார்கள்’ என்றும்  ‘கெஸ்ட் ஹவுஸ்’ மற்றும் ‘மௌரீன்’ விலாசங்களும் எழுதப்பட்டிருந்தன. அவள் உடலில் ஒரு குறிப்பில்  ‘இதுதான் முதலாவது’ என்றும்  எழுதப் பட்டிருந்தது.

திருமதி பாயில் மேஜரிடம், நீதிபதியாய் இருந்தபோது குழந்தைகளை மௌரீனிடம் அனுப்பியது அவர்தான் என்பதை ஒப்புக்கொள்கிறார். ட்ராட்டர் அங்கிருப்பவர்களில் யாரோஒருவர் கொலை செய்யப்பட்டவரோடு தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கிறார். எல்லோரும் இதை மறுக்கின்றனர்.

திடீரென்று படிப்பறையில் திருமதி பாயில் கொலை செய்யப்பட்டு விட்டதாக மாலி அறிவிக்கிறார். ட்ராட்டர் எல்லோரையும் பாயில் கொலை செய்யப்பட்டபோது எங்கிருந்தார்கள் என்பதை விசாரணை செய்கிறார். அதற்கு உண்மையான பதில் கிடைக்கவில்லை. மூன்று குழந்தைகளில் மற்றொன்றின் இருப்பிடம் தெரியவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சந்தேகிக்கிறார்கள்.  அங்கிருப்பவர்கள் அனைவரும்  மௌரீன் கொலையில் எதோ ஒரு காரணத்திற்காகத்  தொடர்பு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பட்டாளத்தில் சேர்ந்த  விலாசமில்லாத எஞ்சியுள்ள பெரியதாய் வளர்ந்துள்ள குழந்தைதான் இப்போது முதலாம் சஸ்பெக்ட் எனவும் தெரியவருகிறது.  எல்லோரும் அவர்களில் அந்த கொலைகாரன் பதுங்கியிருப்பதை உணர்கிறார்கள். யார் அந்தக் கொலையாளி? அடுத்து கொலைபடப்போகும் அந்த   நபர் – ‘குருட்டு மூஞ்சூரு’ யார்? சஸ்பென்ஸ் அதிகரிக்கிறது.  சிதறடிக்கும் முடிவில் ‘அந்த கொலையை செய்தவர் யார்’ என்ற உண்மையை நேர் மாறான திசையில் திருப்பிக்  கொலைகாரனைக்காட்டி செயலின் நோக்கத்தையும் வெளிப்படுத்தி நம்மை ஒரு குலுக்கு குலுக்கிவிடுகிறார் அகதா கிருஸ்டி.

எலிஸபெத் ராணி II மூலம் உச்ச பிரிட்டிஷ் டேம்(dame) தலைப்பு பெற்ற அகதா கிரிஸ்டியின் உன்னத பாணியின் அதிர்வுறும் சஸ்பென்ஸில் அற்புதமான சிக்கல்கள் அடங்கிய சதித்திட்டம் எந்த மூலை முடுக்களிலெல்லாம் பதுங்கியிருக்கிறதோ அங்கெல்லாம் அவர்களின் ஸ்டைலின் முடிவை ஊகித்துத் தெரிந்துகொள்ள இயலாத தன்மையின் உயர்வு தெரியவருகிறது.

கொலைகாரர் கடைசியில் நாடகம் பார்ப்பவர்களை அவரைப் பற்றியும் கதையின் முடிவைப்பற்றியும்,  யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவதுடன் நாடகம் முடிவடைகிறது! நானும் ஓருவரிடமும் பகிரப்போவதில்லை!!!

ஆரம்பத்தில் ரிச்சார்ட் அட்டென்பரௌ நடித்து பின்னர் அடிக்கடி நடிகர்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் ஓர் அதிசயம் கின்ன்ஸ் புக்கில் இடம் பெற்ற டெரிக் கைலெர் 4515  ஷோவிற்குப் பிறகு இன்றும் உயிருடன் இருக்கிறார்!! அவரின் குரல் FMல் தினமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!!!

 

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ரிச்சர்டு அட்டன்பரோவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமீர் ரஸா ஹுசைன் மற்றும் விராட் ஹுசைன் இயக்கத்தில் ‘தி மவுஸ் டிராப்’ நாடகத்துக்கு ஏர்செல் ஏற்பாடு செய்திருந்தது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 21, 22 ஆகிய நாட்களில் சென்னை பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நாடகத்தைப் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.

 

 

விட்டு விட வேண்டும்- மாலதி சுவாமிநாதன்

Related image

க்ளினிக் வந்து சேர்ந்தேன். கண்ணுக்குப்பட்ட முதல் காட்சி – ஒரு 35 (?) வயதுள்ள பெண்மணியின் பூப்படர்ந்த புடவையின் தலைப்பை அவளை ஒட்டி உட்கார்ந்த பையன் இழுத்து, இழுத்து, அவள் தலைப்பை சரி செய்ய, அவன் அதை இழுத்து விட்டு, “போடி போடி” என முணுமுணுத்து, அவளைக் கிள்ளி, மடியில் இருந்த பையைத் தட்டி விட்டான். பக்கத்து நாற்காலியில் ஒருத்தர் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

இவர்களே, அன்று, என்னுடைய முதல் க்ளையன்ட். உள்ளே அழைத்தேன். அந்தப் பெண்மணியை அட்டைபோல் ஒட்டிக் கொண்டு அந்தப் பையன், அவளைக் கிள்ளியபடியே (பளிச்சென்று பல வடுக்கள் அவள் வெளிர் சருமத்தில்) உள்ளே வர, அந்தப் புத்தகம் படித்துக்கொண்டிருந்தவர் “குட் ஈவ்னிங் மேடம்” என்றபடி ஜம்முனு சென்ட் மணக்கக் கையில் புத்தகத்துடன் “ஐ யாம் ஹிஸ் ஃபாதர்” என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்தார். அந்தப் பெண்மணி, அம்மா என யூகித்தேன்; கசங்கின புடவை, ஜூன் வெப்பத்தின் வியர்வை, பொட்டை கலைத்துச் சிவப்பாக வழிந்தபடி இருந்தது.

Image result for mother father and a problem son taken to psychiatric assistance in chennai

விவரிப்பில், பள்ளி கொடுத்த கடிதம் தந்தார்கள். அதில் சுனிலின் விவரம் புரியவந்தது. சுனில், ஆறாவது வகுப்பு வந்திருக்கிறான். அம்மா தன்னுடன் இருந்தால் மட்டுமே வகுப்பு செல்லத் தயாராம். இல்லா விட்டால் TV, ரிமோட், அம்மாவின் கருகுமணி தாலி, மேசையின் கண்ணாடி எனக் கையில் கிடைப்பதை உடைப்பானாம். அம்மா மீனா, குழந்தை என்று விட்டு விடுவாளாம். இந்த இரண்டு மாதங்களாக பள்ளி போனால், ஒரே இடத்திலேயே நிற்பது, துப்புவது, இல்லை சிணுங்குவது. ஆசிரியர், மன நல உதவி தேவை என்று கருதி, என்னிடம் (ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர்) அனுப்பி வைத்திருந்தார்.

சுனில், இங்கு வர இஷ்டப் படவில்லை. அதனாலேயோ என்னவோ, முழுதாக விவரித்திருந்த ரிப்போர்டை waiting hallலில் கிழித்துக் கடாசி விட்டான் என அவன் அம்மா வந்த சிரிப்பை அடக்கி விவரித்தாள். அப்பா குமார் “சுனில்” என்று குரல் உயர்த்தினார். முப்பது வினாடி அவகாசம் கொடுத்த பின் “சரி, உனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் எனக்குத் தேவைதானே?” என்றேன். தலை அசைத்தவாறு “ஸோ” என்றான். கிழித்த பேப்பரை ஒட்டி தரச் சொன்னேன். “ஐயோ, நானே” என்று அவன் அம்மா குறுக்கிட்டாள். குமார் “நன்னா நாலு சாத்து சாத்தணும். Fool” என்றார். இருவருக்கும் சேர்த்தாற்போல்  சொன்னேன், “சுனில் இந்தக் கடிதத்தை மதிக்கவில்லை. ஸோ கிழித்தான். சுனிலே ஒட்டுவான், ரைட் சுனில்?” அவன் இதை எதிர்பார்க்கவில்லை, முறைத்தான். அமைதியில் இரண்டு வினாடி நகர்ந்தது. கோந்து பாட்டிலை சுனில் எதிரே வைத்தேன். ஒட்டி, ஸாரீ சொல்லித் தந்தான். பிறகு வருவாயா என்று கேட்டதற்கு, “சரி” சொன்னான்.

மறு வினாடி, அம்மாவைக் கிள்ளி “பாப்பின்ஸ் தாடி” எனக் கேட்டான். அவள் புன்முறுவலுடன் பசையான அந்தப் பாப்பின்ஸ் பேப்பரை கிழித்து அவனுக்கு வாயில் போட்டாள். அப்பாவைப் பார்த்து சுனில் “ஏய், வரியா”? பதிலுக்கு அவர், “வாடா குழந்தை ” என்று சொல்லி அழைத்துக் கொண்டுபோனார்கள். சில சமயங்களில் நெருக்கங்கள் நம்மைப் பலவீனம் ஆக்கலாம், இங்கு இடையூறானதோ?

சுனில் ஏன் இப்படிச் செய்கிறான்? இந்தச் சூழலின் தன்மைகள், பராமரிப்பில் விதங்கள், கட்டுப்பாடுகள், குடும்பத்தினரின் உறவுமுறை, வலிமைகள், இடையூறுகளை அறிந்து, அவன் செய்யும் துன்புறுத்தல் ஏன்-எப்போது உருவாகியது, அது அமைந்து-நிலவுவதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

மீனா, மதிய உணவு இடைவேளைக்கு இரண்டு பீரியட் முன்பு சென்று, 2 பீரியட் பின்பு வீடு திரும்புவாள். இது நல்ல கவனிப்பு என்றே எண்ணினாள். குமாரும், வீட்டில் இருப்பதற்கு, சுனில் பள்ளியில் எப்படிப் படிக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்வது நன்றேயென ஆமோதித்தார். அவருக்குப் படிப்பு நன்றாக இருக்க வேண்டும். அது போதும். இவன் படிக்கும் பள்ளியின் சுவர் சற்று குட்டையாக இருந்ததால் தன் அம்மாவை க்ளாஸில் இருந்தபடி பார்க்க முடிந்தது. இந்த வருடம் க்ளாஸ் பின்புறம் அமைய, அவனால் அம்மாவைப் பார்க்க முடியவில்லை. அதனால்தான் பக்கத்தில் இருக்க வற்புறுத்தினான்.

வீட்டில், இவன் ஒரே பையன், கடைக்குட்டி, செல்லப் பிள்ளை. குமார் பூனேயில் தனி நிறுவனம் ஒன்றில் வேலையில் இருந்தபோது சுனிலின் அக்காக்கள் ரேகா, ராகி பிறந்தார்கள். குமார்,1972இல் துபாய் போக நேர்ந்தது. மீனா தன் கணவரைப் பிரிய விருப்பப் படவேயில்லை. அவரும், மீனாவை தன்னோடு வந்தாக வேண்டும் என்றார். 11 வயது ரேகா, 9 வயது ராகி, மதுரையில் பாட்டியின் பராமரிப்பில் விடப்பட்டார்கள்.

துபாய் சென்று,1978இல், மீனா சுனிலைப் பிரசவிக்க மதுரை திரும்பினாள். ஐந்து வருடங்களுக்குப் பிறகே அம்மா-மகள்கள் சந்தித்தார்கள், அந்நியர்கள்போல். ஆறு மாதங்கள் கழித்து, குமாரும் திரும்பினார். மதுரையில் 6 மாதம் வசித்தார்கள். பிறகு, பூனேயில் வீடு வாங்கி 5 பேரும் குடி ஏறினார்கள். 1982யில் டில்லி, மும்பை, குவைட் என்று குமாரின் வேலை அமைந்தது. இவர் இன்ஜினியர்; சீனியர் மேனேஜர், தாராள மனசு, படிப்பு விஷயத்தில் மிகக் கண்டிப்பு. வேலையில் இங்கும் அங்குமாக இருந்ததால் வீடு சம்பந்தப்பட்ட எல்லா முடிவுகளும் மீனாவுடையதே – முழு சுதந்திரம் இருந்தும் ரசிக்கவில்லை. இவற்றை, பாரம், சலிப்பு, எரிச்சல் என்று விவரித்தாள். மீனாவுக்கு முடிவுகள் செய்வது, குடும்பத் தேவைகளை பார்த்து – பூர்த்தி செய்வதே பிடிக்கவில்லை.

இவள், சுதந்திரமாகத் திரிந்தவள். மீனா தன் அம்மாவின் செல்லக் குழந்தை. பி.யூ.சி முடித்து, 19 வயதில் கல்யாணம். இதுவே அம்மாவிடமிருந்து முதல் பிரிவு. அவள் மாமியார் “புக்காமே உன் ஆம்” என்று சொல்லியதால், மீனா அம்மா வீட்டுப் பக்கம் போகவே இல்லை. வேலை செய்யத் தவிப்பாள். அம்மா கூடவே செய்து பழக்கம். மாமியார், பருப்பு கேட்டால், முழிப்பாள், எது எந்தப் பருப்புனு தெரிய வாரங்கள் ஆயின. வெண்ணெய், நெய் காய்ச்சும் படலம் மீனாவுக்கு ஒப்பாது. பல தடவை மீனா இட்லி வாத்து, குக்கருக்கு whistle போட்டதும் உண்டு. குழந்தை பிறந்தவுடன், எதை, எப்போது செய்வது என்று தடுமாறினாள். மாமியார் உதவிக்கு வரமாட்டாள். “நீயே செய், அப்போதுதான் வரும்” என்று இருப்பாள்.

சுனிலின் குழந்தைப் பருவத்தில், குமார் தன் குடும்பத்தை பூனேயில் விட்டுவிட்டு 8 வருடத்திற்கு குவைட் சென்றார். தன் அம்மா வீட்டுக்குப் போகவில்லை என்றாலும், இவர் பக்கத்தில் இருந்தது பக்கபலமே. இந்தப் பிரிவின் துக்கத்தை அவளுக்கு சமாளிக்கத் தெரியவில்லை.

ரேகா, மூத்தவள். சின்ன வயதில் பெற்றோரால் ஆன பிரிவில் யாரையும் நம்பிவிடக் கூடாது என்று தன் வேலைகளைத் தானே செய்து பயின்றாள். பருவம் அடைந்த வயதில் வீட்டில் தம்பிப் பயல் பிறந்தான். “இவன் என் தம்பி” என சொல்லக் கூச்சமாக இருந்தது. பிறந்த குழந்தையின் கூச்சல், தூக்கப் பழக்கம், அவனுக்குச் செய்யும் சிஷ்ருஷையாலேயே பத்தாவதில் மதிப்பெண் குறைந்தது. இவளுக்கும், சுனிலுக்கும் 14 வயது வித்தியாசம் ஒரு உறுத்தலாகவே இருந்தது. இவள், படிப்பில் மிகக் கெட்டி, கை வேலையில் சிறந்தவள், சமைப்பது ருசியாக இருக்கும்; இருந்தும் தன் குறைகளேயே அதிகமாகப் பார்ப்பாள்.

ராகி, வெட்கப்படும் சுபாவம். யாரிடமும், எதையும் சொல்லமாட்டாள். சுனில் அவள் பொருளை எடுப்பான், கிழிப்பான், உடைப்பான். “குழந்தைதானே” என்று விட்டு விடுவார்கள். இவளுக்கு யாரும் ஆறுதல் சொன்னதில்லை. 11 வயது இடைவேளை இருந்தும், அவனைத் தூக்கினதோ, தன்னுடன் கூட்டிக்கொண்டு போனதோ இல்லை. படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி, இன்ஜினியரிங்கும், விஸ்காமும் படித்தாள். பல பரிசுகள் பெற்றாள்.

அக்காக்களிடமிருந்து சுனில் விலகியே இருந்தவன், அம்மாவிடம் ஒட்டினான். கல்யாணம், மீனாவை அம்மாவிடமிருந்து பிரித்தது, வேலையினால் கணவரைப் பிரிய நேர்ந்தது. தன்னுடன் இருக்கத் தானோ, சுனிலுக்கு சோறு ஊட்டி, குளிப்பாட்டி, உடை அணிவித்து அக்கறை என்று 7-8 வயது வரை, மறைமுகமாக 9-10 வரை செய்தாள். அவன் விளையாட்டு தோழனும் ஆனாள். அவளுடன் தூங்கினான். அவள் எங்குச் சென்றாலும், அவனும் கூடவே போவான். இவளுக்கு இது இதமாகவே இருந்தது.

குமார் பூனே திரும்பினார். வீட்டைப் பார்த்து வியப்பும், கோபமும் சூழ்ந்தது. அவர், சுனில் தன் வேலையைத் தானேசெய்யவும், விலகித் தூங்கவும் சொன்னார். அவனால் முடியவில்லை. மீனாவும் மறுத்தாள். இதனால், வாக்குவாதம் நீண்டது, கூச்சல் குழப்பம் உண்டானது.

ரேகா, ராகி, சுனில் படிக்கும் நேரம் குமார் கேள்வி கேட்பார். பதில் தவறாக இருந்தால், மீனா, சுனில் பக்கத்தில் இருப்பவளைப் பார்த்து “வேறு என்ன வேலை?” என்றும், தொடர்ந்து “முட்டாள், அதான் மேல படிக்கல, முட்டாள்” என்பார். பசங்களும் “அப்படியென்றால் அம்மா மக்கு”, என்று நினைத்தார்கள். சுனில் அவளை “ஏய் மக்கம்மா” எனக் கூப்பிடுவான். மரியாதை வலுவிழந்தது.

இருந்தும், மீனா, சுனில் எதைச் செய்தாலும் சபாஷ் சொல்வாள், முழு பாப்பின்ஸ் பேக்கட் தருவாள். ரேகா, ராகி இவளிடமிருந்து என்றும் பாராட்டு பெற்றதில்லை. ஈடு கட்டுவதுபோல் பள்ளியில் பாராட்டு குவியும். எல்லா ஸப்ஜெக்டிலும் நன்றாகச் செய்ய, ஆசிரியர்கள் அன்பாக அழைத்துப் பேசுவார்கள். வீட்டில் சலிப்பு தட்டி இந்த மூன்று பெண்களும் விலகியே இருந்தார்கள்.

சுனில் எது கேட்டாலும் கிடைத்துவிடும். கேட்டதை அக்காக்கள் கொடுக்காவிட்டால், திட்டுவான், எச்சில் துப்புவான், கடிப்பான். மீனா கொடுக்க வற்புறுத்துவாள். அப்படியும் மறுத்தால், சுனிலிடம் “எப்படியானும், நாம வாங்கிடலாம். அடிச்சி வாங்கி தரேன்”, என்பாள். இதன் பல வடுக்களை அக்காக்கள் அணிந்திருந்தார்கள். சுனில், எது செய்வதற்கு முன்பும் “டேய், பாப்பின்ஸ், ஃபிங்கர் சிப்ஸ் தரேன், பண்ணு.” எனக் கெஞ்சுவாள். பெற்றோர் பிள்ளைக்குத் தரும் லஞ்சம்: ஒரு ஆயுதமே!

ரேகா, 22ல் மேல் படிப்பு முடித்து, கேம்பஸ் ப்ளேஸ்மென்டில் கெளரவமான உத்தியோகம் அமைந்ததும்,கல்யாணம் செய்து விட்டார்கள். தன்னை மறுபடியும் தள்ளி விட்டார்கள் என்றே தோன்றியது. கணவர் மூர்த்தி மீதும், அவர் குடும்பத்தினரிடமும் அன்பயைம், கவனிப்பையும் பொழிந்தாள். இவள் இல்வாழ்வு கனடாவில் அமைந்தது. கல்யாணமான முதல் 6 மாதம் அம்மாவிடம் பேசமறுத்தாள். கடிதங்களுக்குப் பதில் எழுதவில்லை. தள்ளிவிட்டார்கள் என்ற தர்க்கத்தை மூர்த்தி ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவர் தூண்டுதலில் கடிதப் போக்கு தொடங்கியது. முதலில், குற்றச்சாட்டுகள் குவிந்தது, தொடர்ந்து “ஐயோ, தப்பு, மன்னித்துக்கொள்”, பிறகு கருணை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

Related image

இருந்தும், சுனில் மேல் வெறுப்பு வாட்டியது. அம்மா விவரித்தபின், க்ளினிக் போகவேண்டிய சூழ்நிலையை அறிந்து கொண்டாள். முதல் நாளின் நிகழ்வுகளை மீனா விவரித்தாள். அவன் துப்பினான், கத்தினான் ,ஆனால் சுத்தமும்படுத்தி, கேள்விகளுக்கும் பணிவாக பதிலும் சொன்னான் என்று.

மீனாவுக்கு “இப்படியும் செய்ய முடியும்” என்று தோன்ற ஆரம்பித்தது. என்றாலும் கூட சின்ன அச்சம்,எங்கே சுனில் தன்னை விட்டு விலகி, மேடம்மேல்  பாசம் கொள்வானோ என? அக்கறையாக, க்ளினிக் செல்வதற்கு முன், இப்படி இருக்கலாம், அப்படி ஆகலாம் என சுனிலைத் தயாரித்துக் கூட்டிச் சென்றதில் அடம் அதிகமானது. அம்மா-மகனை வெவ்வேறு நாட்கள் பார்க்க முடிவானது.

சுனிலுடன் என்னுடைய பரிமாற்றம், கதைகள், க்ளே மாடலிங், எனக் கலந்ததாக இருந்தது. அம்மா பக்கத்தில் இருந்தாக வேண்டும் என்றான். முதலில் கதவருகில் உட்கார்ந்தாள், பின்னர், கதவு திறந்து பார்த்தவாறு; ஐந்து செஷனில் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கருடன்மட்டும் என ஆனது. மீனா அடம் பிடிப்பதை  சுதாரிப்பதை அணுகும் முறைகளைப் பார்க்கலானது.

குமாருக்கோ, அவர் பங்குக்கு, படிப்பைத் தவிர, சுனி்லுடன் ஆலோசித்து, இருவருமாகச் சேர்ந்து ஏதேனும் செய்ய வேண்டும். இது, டென்னிஸ் விளையாடத் தொடங்கி, சைக்கிளில் டபுள்ஸ், தோட்ட வேலை, கேரம் எனக் கூடிக்கொண்டேபோனது. தன் வயதுள்ளவர்களுடனும் சுனில் விளையாடத் தொடங்கினான்.

இதே சமயத்தில், சகோதரிகள் அவனுடன் க்ளினிக் வர ஆரம்பித்தார்கள், அம்மாவை விட்டுப் பழகவும், இவர்களின் இடையே இடைவெளி குறைப்பதற்காகவும். அம்மா தன் பக்கம் இல்லாமல் பள்ளியில் இருக்க முடியும் என்ற ஆலோசனை தொடங்க, மீனாவும் நானும் பள்ளிக்குச் சென்று விவரித்தோம்.

பள்ளியில், மிகக் கனிவுடன் சுனிலை வரவழைத்து, தகவலைப் புரிந்து, ஒத்துழைத்தார்கள். முதல் நாள் அவன் தட்டுத்தடுமாறி, முழித்து, கை பின்னி நின்றான். இப்படி ஆகக் கூடும் என்றே முன்னாலேயே அவன் க்ளாஸில் பொதுவாக, கனிவு-பதட்டம், பயம்- ஆதரவு ஜோடிகளைப் பற்றிய வர்க்க்ஷாப் நடத்தினேன். அதன் பிரதிபலிப்பு – சுனில் முழித்தபோது நான்-நீ என அவனுக்கு ஆதரவு குவிந்தது. தினம், முன்றைய தினத்தை விட, அம்மாவின்றி பள்ளியில் இருக்கும் நேரம் கூடியது. பள்ளி பழக ஆரம்பித்தான்; தயக்கமும், தைரியமும் கலந்து இருந்தது. மீனா சுனிலைப் பிரிந்து தத்தளித்தாள். அவளுக்குப் பிடித்த பூத்தையல் கை வேலையானது, கவலை கவ்வாமல் காத்தது.

வெவ்வேறு பரிமாணங்கள் அமைந்ததால், தயங்கி-தயங்கி பாசம் காட்டி, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியானார்கள். பெற்றோருக்குள் கருத்து வேறுபாடு எழுந்தால், கதவை மூடிக் கொண்டோ, பிள்ளைகள் இல்லாத இடத்திலோ தங்கள் தர்க்கத்தை வைத்துக் கொண்டார்கள். சுனில்-ரேகா-ராகி பரிச்சயம், அம்மா-பெண்களின் நெருக்கம், மாப்பிள்ளை மூர்த்தி வரப்பிரசாதமானது இன்னொரு கதையே!

பாதுகாப்பின்மையின் தோற்றங்கள்

முடியவே முடியாது என்போம், சஞ்சலத்தில்!

கூடவே கூடாது என்போம், சந்தேகத்தில்!

என்னுடையது, எனக்கு மட்டும் என எண்ணுவோம்!

பாரபட்சம் காட்டுவோம், பகிர்ந்து கொள்ளவே மாட்டோம்!

பிடிவாதம், கோபம், நம் பாதுகாப்பின்மையின்

நிலையற்ற நிலையின் “வார்த்தைகள்”!

 

 

 

“மீண்டு வந்தேன்” -மாலதி சுவாமிநாதன் (மன நல மற்றும் கல்வி ஆலோசகர்)

Image result for psychological doctor and a student in india

கடந்த மூன்று மாதங்களாக  நான் என்னவென்று புரியாமலேயே எதையோ தேடியபடியே என் நேரத்தைக்  கடத்தினேன். பார்ப்பவர்கள் நான் அலட்சியமாக இருக்கிறேன்  என்றும், சோம்பேறி, கொழுப்பு அதிகம் என்றெல்லாம் விவரித்தார்கள். அப்படியா, என்று இருந்து விட்டேன் என்றாலும், மனம் கலங்கியது என்னமோ உண்மை தான்!

இப்பொழுது திரும்பிப் பார்க்கையில் இது நான் விழுந்த மிகப்  பெரிய பாதாளம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் , இதற்கு முன்பு எனக்கு விஸ்தாரமான நண்பர்கள் குழு, வித்தியாசமானதும் கூட! அப்படிப்பட்ட நான், தனிமையில் ஆழ்ந்துவிட்டிருந்தேன். நாங்கள் முன்பு இருந்த வீட்டுப்பக்க நண்பர்களின் அழைப்பிற்கும் பதில் சொல்வது குறைந்தது. பதில் பேசி, என்ன மாறப்போகிறது என்பதாலேயே!

நாங்கள் முன்பு வசித்திருந்தது நகரத்தின் மறு கோடியிலே. திடீரென்று என் பெற்றோர் நான் பத்தாவது முடித்தவுடன் வீடு மாறலாம் என்று முடிவு செய்தார்கள். என் உலகமே மாறியது. நண்பர்கள், ஸ்கூல், மார்க் எல்லாம் தான். எரிச்சலும், சலிப்பும் அதிகமானது. எதிலும் பிடிப்பு இல்லை. உற்சாகமும் இல்லை. சாப்பாடு கூட ருசிக்கவில்லை. ஏனோ-தானோ என்று நாட்களைக் கடத்தினேன். யாருடனும் பழக மனம் வரவில்லை.

இதை எல்லாம் கவனித்த என் வகுப்பு டீச்சர், என் அம்மாவைக் கூப்பிட்டுக் கலந்து பேசி, “இது ‘மன சோர்வு’டைய அறிகுறிகள் போல் தோன்றுகிறது. மனோதத்துவர் ஒருவரைப் பார்ப்பது நல்லது” என்றார். நான் திகைத்தேன். அம்மாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “இந்த ஸ்கூல்ல மார்க் அதிகம் வரும்னுதானே வீட்டை விற்று இங்கே வந்தோம். இப்படி ஆயிடுத்தே! மனோதத்துவர்னா, ஸைக்கியாட்ரிஸ்டா, இந்த வயசுலயா?” என்றாள்.

டீச்சர் சமாதானம் சொல்லி விவரித்தார் “பிரச்சினை இல்லை! அறிகுறி தான். நான் பரிந்துரைக்கும் மனோதத்துவர் ‘ஸைக்கியாட்ரிக் ஸோஷியல் வர்கர். M.A. ஸோஷியல் வர்க்கில் மன நலப் பிரிவில் தேர்ச்சி பெற்று, பிறகு M.Philயில் இதையே மையமா கொண்டு பயின்றவர்” என்று விளக்கினார். “இவர், நம் பாதையை, நாமே வளமாக மாற்றிக் கொள்ள உதவுபவர். நம் வலிமைகள், குறைகள், அணுகுமுறை, வளம், தடைகள், குடும்பத்தினரின் பக்க பலம் எல்லாவற்றையும் நலமாகுவதற்குப் பயன் படுத்துவார்கள். நாம் மேம்படுவதே மருந்தாகும்”.

இதெல்லாம் கேட்டுப் புரிந்தாலும், என்னைத் தயக்கமும், சாக்குகளும் சூழ்ந்தது. என் டீச்சர் சொன்னதினாலேயே அந்த மன நல ஆலோசகரிடம் சென்றேன். அம்மா-அப்பா “நாங்க விவரிக்கிறோம்” என்றதை மதித்து முதலில் அவர்களுடன் பேசிவிட்டு, பிறகு என்னுடன் வெகு நேரம் தனியாகவே உரையாடினார்.

நாங்கள் பேசும்போது அவர் காட்டிய அந்த பூர்ண வாத்ஸல்யமும், உன்னிப்பாக எல்லாவற்றையும் உள்வாங்கியதும் என்னைக் கவர்ந்தது. அவர் கேட்ட கேள்விகளிலிருந்து என்னையும் என் நிலைமையையும் புரிந்தவர்போலே தோன்றியது. எல்லாவற்றிற்கும் மேல், என் பெற்றோருடன் கலந்து பேசுகையில், நான் சொன்ன பல விஷயத்தையும் அவர்களிடம் அந்தரங்கமாக வைத்தது, என்னை மிகவும் ஈர்த்தது. மனம் மாறத்தொடங்கியது.

இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. நான் பாதி மனதோடு வந்திருந்ததை மன நல ஆலோசகர் தெரிந்து கொண்டார். அவர் சொன்னது என்னவென்றால், உதவி நாடுகிறோம் என்று கருதினால் “இவர்கள் யார் சொல்ல” என்று தோன்றலாம். இதனாலயே தயக்கம் சூழுந்து, நம் சிந்தனையையும், செயலையும் தடுத்துவிடும். இதையே, நம்பிக்கையுடன் வாய்ப்பாகக் கருதினால் நாம் ஆக்கபூர்வமாக செயல் படுவோம். 45 நிமிடமோ, 1 மணி நேரமோ நாம் மனம் விட்டு பகிர்ந்து கொள்ளும்பொழுது, தன்னைப்பற்றிப் புரிந்து கொண்டு, இப்போதைய நிலை பயனுள்ளதா, பயனற்றதா என்ற தெளிவு பிறக்கும். நமக்கே “மாற வேண்டும்” என்று தோன்றவேண்டும். நாம் தயாராகவில்லை என்றால் யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மறுப்போம்.

சொல்லப் போனால், மன நல ஆலோசகருடன் முதல் சந்திப்பு உற்சாகத்தைக் கொடுத்தது. வாரத்திற்கு இரண்டு முறை போக ஆரம்பித்தேன். மெல்ல, மெல்ல நான் மாறுவதை உணர்ந்தேன். என் டீச்சரின் ஒரு சில வார்த்தைகளிலும் இது தெரிந்தது. 45 நிமிட உரையாடலைத்தவிர, நானாக செய்ய வேண்டிய பயிற்சிகளும் இருந்தன. என்ன, “ஏன்”, என்பதை நான்தான் சிந்தித்து, தீர்மானம் செய்து, விவரிக்க வேண்டும். இதை செயல்படுத்தும் கால அவகாசத்தையும் நானே நிர்ணயித்துக் கொண்டேன்.

மறுமுறை, மன நல ஆலோகரை சந்தித்தபோது, அன்றைய 45 நிமிடமும் நண்பர்களுடன் நான் பழகுவதை மையமாகக் கொண்டிருந்தது. என் நண்பர்களுடன் முன்பு பழகிய நிகழ்ச்சிகளைச் சொல்லும் பொழுது கண்முன் ஒவ்வொரு நினைவும் தெளிவாக வந்துநின்றது. நினைவுகளைக் கோர்க்க மிக இனிமையாகவும், இதமாகவும் இருந்தது. முடிவில், செய்முறை தீர்மானம் ஆனது. பழைய ஒரு நண்பனை மறுபடியும் தொடர்பு கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தேன். உடனே கூச்சமும், குழப்பமும் வர ஆரம்பித்தது, ஆனால் அந்த ஃப்ளாஷ்பேக் உறுதியை நிலை நாட்டியது.

சொல்லி வைத்தாற்போல், நான் வீடு திரும்பியதும், அவன், அங்கு, என் அறையில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து ஸ்தம்பித்தேன்! தற்செயலா? சொன்னதை செயல்படுத்துவதற்கான வாய்ப்பு தானாக அமைந்தது! இவன், எங்கள் பழைய வீட்டு அருகில் இருந்த நெருங்கிய நண்பன். தற்செயலாக மூத்த கூடைப்பந்து வீரர் ஒருவரைப் பக்கத்துத் தெருவில் காரில் கொண்டு விடும்போது, என் அம்மாவைப் பார்த்தான். அம்மா, அவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

ஒரு பக்கம் இவனைப் பார்த்த மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் மனதிற்குப் புதுத் தெம்பு வந்தது. அவன் என்னிடம் கை நீட்டியபடி “வாழ்த்துக்கள், நீ பல மாதங்களாக மெளனமாக இருந்ததுக்கு” என்று சொன்னது சில வினாடிக்கு பழைய மாதிரி தோன்றிற்று! நாக்கு சிக்கியது (வெட்கத்தில்). சற்று மொளனமானேன்.இப்படிப்பட்ட சுழ்நிலையில் இருக்கவே இருக்கு TV. கவனம் அதில் சென்றது. சுதாரிக்க முடிந்தது. சற்று நேரம் பேசினோம். விடை பெறும்போது திரும்ப சந்திக்க அழைத்தேன். ஆமோதித்தான். இந்த திடீர் நிகழ்வால் என்னுள் வந்த சிறு மாற்றத்தை அறிந்தேன். இது தான் மன நல ஆலோசகர் சொன்ன “Preparedness”இன் விளைவு என்று புரிந்தது.

இன்னொரு பயிர்ச்சியாக நான் செடி வளர்ப்பது என்று தேர்வு செய்தேன். அவர்கள் (வினோதமாக) வாடிய செடியை கண்டுபிடித்துப் வளர்க்க வேண்டும் என்றார். ஏன் வாடிய செடி? என் நிலையை பிம்பமாக காட்டும். நான் எரிச்சல், சலிப்பு என்று காண்பிப்பேன். இந்த செடி எப்படி தெரிவிக்கும்? துளிர் விடுமா? நான் காட்டும் அன்பு புரியுமா? எவ்வளோ நாளிலே துளிர் விடும்? மனத்துக்குள் “பார்ப்போம்” என்று நகைத்தேன்.

ஆவலின் தூண்டுதலில், செயல் பட்டேன். வித்தியாசம் தெரிந்தது. குறையும், குறைபாடுகளும் அல்ல, வண்ணமும், பல வழிகளும்! சற்று விவரிக்கிறேன்: வாடிய செடி துளிறுமா என்ற ஆவல் தூண்டியது. என்னைஅறியாமல் வேகமாக போய் பார்ப்பேன்; உள்வேகம் கூடியது. அது பூத்து குலுங்குவதுபோல் என் உடைகளின் வண்ணமும் விதவிதமாகியது. நானும் ஜொலிக்காரம்பித்தேன்!

அந்த சனிக்கிழமை பற்றி சொல்லியே ஆகவேண்டும். என் தோழர்களுடன் கூடுவது தொடர்ந்திருக்க, என் நெருங்கிய நண்பர்கள் வீட்டுக்கு வந்தார்கள். எனக்கு உருவாக்குவதில் ஆர்வம் உண்டு என்பது இவர்களுக்கு தெரிந்ததே. என் அறையில் உதிரி பாகங்கள் குப்பை கூளமாக இருந்தது (தனி ரூம் இதற்காகவே). சில பாகங்களை என்னிடம் கொடுத்து, பண்ணி காட்டேன் என்றார்கள். டைமாகும் என்றேன், பரவாயில்லை என்றார்கள். மின் விசிறி தொடங்கினேன். 2 மணி நேரம் கழித்து கிளம்பினார்கள். தூக்கம் ஏமாற்றி கொண்டிருந்ததால், தொடர்ந்தேன். முடித்தேன், காலை 7 மணி. நண்பன் உள்ளே வந்தான். “டேய், முடிச்சிட்ட!” எடுத்து அழகு பார்த்தான். “ஸாரீ, பர்ஸை விட்டேன், அதான். சரி நீ தூங்கு, ஸண்டே தானே. நான் அம்மாக்கிட்ட சொல்றேன்”. கதவை மூடிவிட்டு சென்றான். தூங்கினேன். பல மாதங்களுக்கு பிறகு அப்படி ஒரு தூக்கம். எழுந்தபின், அவ்வளவு ஃப்ரெஷாக இருந்தது.

ஒரு பெரிய பாரம் இறங்கியது போல் தோன்றியது. மன நல ஆலோசகர் சொன்னது ஞாபகம் வந்தது. நாம் முடியாது என்று ஆரம்பித்தாலோ, எல்லாவற்றையும் சோக கண்ணோட்டத்தில் பார்த்தாலோ வாழ்வு சுருங்கி விடும். பேசாதிருந்தால், தனிமை பெரிதாகும். இடமாற்றத்தை தடையாகவும், இடையூராகவும் கருதியிருந்ததால், நண்பர்களையும் பிரிந்ததில், பெற்றோரிடம் கோபம். அதனாலயே இப்படி உட்கார்ந்து விட்டேன். வாய்ப்புகள் என்னவோ கைக்கு எட்டின தூரத்தில் தான் இருந்தது.

நாங்கள் “ஆறு பேர் படை”. வீட்டுக்கு வந்தார்கள். என் நிலமையை பற்றி என்றும் ஒன்றுமே கேட்கவில்லை. இவர்களுக்கு என் வாடிய செடி பற்றி சொல்லி, காண்பித்தேன். அது என்னையும் மீறி ப்ரகாசமாய் பூத்து குலுங்குவதை பார்த்து எனக்கும் மேல் குஷியானர். என் நிலைமையை முழுவதும் இவர்களுக்கு எடுத்து சொன்னேன். நோ விமர்சனம். அதுதான் நண்பர்கள்!

நான் நன்றாவது வெளிப்படையாக தெரிந்தது. என் மன நல பயிற்சிகளில் உடற்பயிற்சியும் இருந்தது. முன் போல் கூடை பந்து விளையாடத் தொடங்கினேன்.

வாழ்வில் இன்னும் அர்த்தம் சேர்க்க என்னுடைய நெடு நாள் ஆசை, Physics பாடத்தை பலருக்கு, இலவசமாகவும் எளிமையான பொருட்களுடன் கற்று தர வேண்டும் என்று. பிரபல திரு அரவிந்த் குப்தாவின் ஏகலவ்ய சிஷ்யன், நான். பள்ளியிலும், விடுமுறை நாட்களிலும் 1 மணி நேரம் கற்று தர என் பெற்றோர் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

இப்படி ஒவ்வொன்றாக செய்கையில் வாழ்வின் அர்த்தம் விஸ்தரித்தது. நம் நோக்கங்கள் நம்போல் தனித்துவம் கொண்டதே, நாமே உருவாக்கலாம் என்று புரிந்தது. இதில் எனக்கு பிடித்தது – நமக்கு தெரிந்த தகவல்களையும், திறமையும் மற்றவருடன் பகிர்வதே பேரின்பம்!

என் மன நல ஆலோசகர் தெளிவு படித்தியது போல்,ஒவ்வொரு படி எடுத்த பின்னும், நானே எனக்கு சபாஷ் கொடுத்தேன். இப்படி செய்வதில் மண்டை கனமோ, கர்வமோ இல்லை என்று அறிந்தேன்.

என் பெற்றோர், ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர், டீச்சர்,நண்பர்கள், வாடிய செடி, பங்குடனே இங்கு, உங்களிடம் இவ்வளவு பூரிப்புடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

திரும்பி பார்க்கையில்

நோக்கம்

எரிசக்தியானது!

இதனால்

மாற்றம் செய்யவும்

மாற்றம் கொண்டு வரவும் உதவியது!

என்னுடைய

“ஏன்” என்ற தேடலுக்கு ஊக்கமானது

என்னை படைப்பாளியாக்கியது!

அறிந்தேன்

நோக்கத்தினால் விளைவும்

விளைவினால் நோக்கமும்!

 

நோக்கம் நம்

தனித்தவத்திலும்

வலிமையிலும்

நெறிகளிலும் அடங்கும்!

 

 

ஒற்றுமை என்ன?

 

Related image

(picture courtesy  : FRONTLINE) 

இந்தப்பாடல்கள்  அனைத்திலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்று கண்டுபிடியுங்கள்: ( விடை கீழே) 

 

சிங்காரவேலனே தேவா …………. …………………….. (கொஞ்சும் சலங்கை) 

இசைத் தமிழ் நீ செய்த அரும்  சாதனை …………. ( திருவிளையாடல் )

கண்ணோடு காண்பதெல்லாம் …………. …………. (ஜீன்ஸ்) 

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் …………. ……( தீபம்)

சின்னஞ்சிறு வயதினிலே எனக்கோர் …………. (மீண்டும் கோகிலா) 

பூமாலையில் ஓர் மல்லிகை …………. …………. (ஊட்டி வரை உறவு) 

வாராயோ  வெண்ணிலாவே …………. …………. (மிஸ்ஸியம்மா) 

ராகங்கள் பதினாறு …………. …………. …………. (தில்லுமுல்லு) 

நீலவான ஓடையில் நீந்துகின்ற …………. …….( வாழ்வே மாயம்) 

பூவே பூச்சூட  வா …………. …………. …………. ……..( பூவே பூச்சூட வா )

ராக்கம்மா கையைத்தட்டு …………. …………. (தளபதி) 

குயிலே கவிக்குயிலே …………. …………. ………..(கவிக்குயில்) 

குருவாயூரப்பா …………. …………. …………. …….(புதுப் புது அர்த்தங்கள்) 

கங்கைக் கரைத் தோட்டம் …………. …………. ( வானம்பாடி) 

Indian Film Songs in Abheri / Bhimpalasi

இவை அனைத்திற்கும்   அடிப்படையான ராகம் “ஆபேரி”

 

 

கவிப்பேரொளி நீரை .அத்திப்பூ அவர்களின் “தகவல் முத்துக்கள் “

கவிப்பேரொளி நீரை அத்திப்பூ அவர்களின் ஆற்றல் மிகு உழைப்பால்  2011ம்ஆண்டு
தொடங்கிப் படைப்பிலக்கியக் காலாண்டு இதழாக வெற்றிகரமாக வலம்
வந்துகொண்டிருக்கும் தகவல் முத்துக்கள் பற்றிச் சில தகவல்கள் ….


கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் இதழ்களில் பல்சுவை பயனுள்ள தகவல்களும் இடம்பெறுவது சிறப்பு. இதழின் இன்னொரு சிறப்பு  அரசியல் மற்றும் திரைப்படச் செய்திகள் இல்லாமல் வருவது .


அஞ்சல் துறையின் பயிற்சி மைய உதவி இயக்குனராகப் பணி ஒய்வு பெற்றவுடன் “தகவல் முத்துக்கள் “இதழைத் தொடங்கிச் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நீரை.அத்திப்பூ அவர்களின் இயற்பெயர் சே..அப்துல் லத்தீப் .அவரது சொந்த ஊரின் பெயரான “நீர்முளை” இணைந்து நீரை.அத்திப்பூ என்றானது .


நீரை.அத்திப்பூ அவர்கள் எழுதிய நூல்கள் :

வண்ணஒளி எண்ணஅலை சின்னவரி
பாடி விளையாடு பாப்பா
நிலவுக்கே போகலாம்
அறிவியல் கூறும் அற்புத பாடல்கள்
குறுந்செய்திகவிதைகள்
அஞ்சல் தலை அறிய பாட்டு
இதழ்கள் ஏந்திய மலர்கள்
கலாம் பொன்மொழி கவிதை வரிசை -1

சென்னை , திருச்சி ,புதுச்சேரி . காரைக்கால் மற்றும் அண்ணா பல்கலைக்கழகச் சமுதாயப் பண்பலை வானொலியில் இவரது பங்கேற்பு தொடர்கிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவரது பங்கேற்பு கவிதை உரையாடல் விவாதம் எனத் தொடர்கிறது.

குவிகம் இலக்கிய வாசலில் “முகத்தை மறைக்குதோ முகநூல்”
கவியரங்கத் தலைமையேற்று கவிதை மழை பொழிந்து மகிழ்வித்தார் .

கவியரங்க தலைமை ,பட்டி மன்ற நடுவர் ,விழா இணைப்புரை என்ற வகையில் டாக்டர் .பி .ஜே.அப்துல் கலாம் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதை பெருமையுடன் நினைவுகூரும் நீரை.அத்திப்பூ சமீபத்தில் கலாம் பொன்மொழி கவிதை வரிசை-1″ என்ற நூலை வெளியிட்டு டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்குப் பெருமை சேர்த்தார் .

கவிஞரின் தொடர்புக்கு கைபேசி 94444 46350
email: kaviathippu@yahoo.co.in
.
குவிகம் சிறப்புச் செய்தியாளர் தரும.இராசேந்திரன் , பாபநாசம்

 

நான் கிருஷ்ண தேவராயன் – ஒலிப்புத்தகம் வெளியீடு விழா – பாஸ்கர்

 

Image may contain: 1 person, text

Image may contain: 2 people

(அமரர் ரா கி ரங்கராஜனி்ன்  நான் கிருஷ்ண தேவராயன் ஒலிப்புத்தகம் 9 ம் தேதி  வெளிவந்துவிட்டது) 

17 மணி நேர ஒலித்தகட்டின் விலை 350 ரூபாய்

கிடைக்குமிடம்: http://nammabooks.com/bombay-kannan/nan-krishna-deva-rayan-audio-book

விழா விமர்சனம் : 

தமிழ்ப் புத்தக நண்பர்களின் ”நான் கிருஷ்ணதேவராயன்” சிடி ஸ்பெஷல்!

தமிழ்ப் புத்தக நண்பர்கள்  இம்முறை இரண்டு வாரங்கள் முன்னதாகவே கூடிவிட்டார்கள் – உண்மையிலேயே கூட்டம் ஸ்பெஷல்தான்!

ரா.கி. ரங்கராஜன் அவர்களின் ’நான் கிருஷ்ணதேவராயன்’ நாவலின் ஒலித்தகடு (Mp3 CD) – பாம்பே கண்ணன் தயாரிப்பு – மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகம் (ஆங்கிலத்தில் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி) இரண்டையும் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் வெளியிட, முறையே மூத்த எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, டேக் செண்டர் சாரி இருவரும் பெற்றுக்கொண்டனர்!

பதினோரு நிமிடங்கள், ஒலிப் புத்தகத்தின் முதல் அத்தியாயம் மட்டும் – ஒலிபரப்பப்பட்டது. பின்னிசை, இடை இசை (BGM) உடன் வர, காதல்வயப்பட்ட கி.தேவராயன், காதலின் பெயரால் எல்லாக் கடமைகளையும் மறந்துவிட, ஏற முடியாத மலை உச்சியிலிருந்து அவனது அம்மா, காதலியை மறக்க சத்தியம் வாங்குவதாகக் காட்சி ……

நான் கதை வாசிப்பவன், கேட்பவனல்ல! கேட்பதில் நிறைவு எனக்குக் கிடைக்காது. எழுதுபவரின் மனஓட்டத்துடன், என் மனக் கற்பனையும் சேர்ந்து உருவாக்கும் திரைப் பிம்பம் எனக்குக் காது வழி கிடைப்பதில்லை. பேப்பர் குறைத்து, மரங்களின் மறுவாழ்வு அவசியமாவதாலும், வாசிப்பவர்கள் குறைந்து வருவதாலும், புத்தகங்கள் மறைந்து, கேட்கும் சிடிக்களுடன் சமரசம் செய்துகொள்ளும் நிலை அருகிலேயே இருப்பதால் இந்தக் கூட்டம் ’ஸ்பெஷல்’ ஆகிறது!

ரவி தமிழ்வாணனின் அறிமுக உரையைத் தொடர்ந்து, சாரி, பழம் புத்தகங்களின் மறுவாசிப்புக்கு சிடியின் அவசியத்தையும், பாம்பே கண்ணனிடம் ’நான் கி.தேவராயன்’ புத்தகத்தை ஒலி வடிவில் தயாரிக்கக் கேட்டுக்கொண்டதையும் சுருக்கமாக, அழகாகச் சொன்னார்!

தன் நாடக, திரை உலக அனுபவத்தில், அருமையான ஒலிப் புத்தகங்களை உருவாக்கும் பாம்பே கண்ணன் பாராட்டுக்குரியவர். ஒரே குரலில் கதை சொல்லாமல், கேரக்டர்களின் குரல்களில், இசையுடன் கதை சொல்வது வித்தியாசமாயும், ஒரு நாடகம் கேட்கும் அனுபவமாயும் இருக்கிறது – வாழ்த்துக்கள்!

வாழ்த்துரைத்த இந்திரா செளந்தர்ராஜன், நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. சுவடியிலிருந்து, காகிதத்தில் பதிப்பித்த உவேசா அவர்களைப் போல், காகிதத்திலிருந்து சிடியில் பதிக்கும் கண்ணனை வாழ்த்தினார்! ரா.கி.ர., ஜராசு ஆகியோரின் எழுத்துத் திறமையையும், ஆரம்பகால எழுத்தாளர்களை அவர்கள் ஊக்குவித்து நெறிப்படுத்தியதையும் சிலாகித்தார். Mp3 அளவு பேசினாலும், சுவாரஸ்யமான பல செய்திகளை, நகைச்சுவையுடன் வெளிப்படையாகச் சொன்னார்!

சமீப காலத்தில் இப்படிக் கண்ணில் நீர் வர நான் சிரித்ததில்லை –   ஜ ராசு என்னும் மனிதர் கண்ணில் நீர் வரவழைத்து விட்டார்!!     ராகிர வின் பன்முகத்தன்மை, எதையும் துணிவுடன் செய்வது, சேர,சோழ,பாண்டியரை விடுத்து, நாவலுக்குக் கிருஷ்ணதேவராயரைத் தேர்ந்தெடுத்தது, கமலின் உந்துதல் எனப் பல குறிப்புகள் – ராகிர வுடன் வெற்றிலை போட்டது, எல்.வி.பிரசாத்துடன் அப்புசாமி, சீதாப்பாட்டி படமெடுக்கப் பேசியது என ஹாஸ்யப் பிரவாகம்! முத்தாய்ப்பாய், வீட்டிற்குப் போனால் மிஸஸிடம் கிடைக்கப் போகும் அர்ச்சனைபற்றிச் சொல்ல, அரங்கே அதிர்ந்தது!! பேச்சுக்கிடையே சிலருக்கு ஹாஸ்யம் வரும் – இவருக்கோ ஹாஸ்யத்துக்கிடையே கொஞ்சம் பேச்சு வருகிறது!!

சரித்திர, மர்ம நாவல்களை மொழிபெயர்ப்பதை ஒரு சவாலாக செய்துவருகிறார் சுகந்தி. நான் கி.தேவராயனை அடுத்து அடிமையின் காதல் (ராகிர), நைலான் கயிறு (சுஜாதா) நாவல்களை மொழிபெயர்ப்பதாகக் கூறினார். தமிழிலும் நன்றாகவே பேசினார் – இண்டுவில் எழுதுவதாலோ என்னவோ, ஆங்கிலம் கொஞ்சம் அக்சென்டுடன், ‘பாஷ்’ ஆக இருந்தது!

ராகிர வின் புதல்வர் நன்றி கூறி எல்லோருக்கும் பொன்னாடை போர்த்தினார். குமுதம் குழுமத்துக்கும் (அன்றைய) ’ஸ்பெஷல்’ நன்றி சொன்னார். (உவேசா வுக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடை பற்றிப் பேசிய இந்திரா செளந்தர்ராஜனுக்கும், அவர் விவரித்த, ஒன்றுக்கும் உதவாத பொன்னாடையைப் போர்த்தியது, அவர் கூறியபடி, ‘நடப்பது நடந்தே தீரும்’ என்பதை உறுதி செய்தது!)

சாருகேசியின் வழக்கமான ஷார்ட் அண்ட் ஸ்வீட் நன்றி நவிலல் – கூட்டம் நிறைவு!

ஏனிந்தக் கூட்டம் “ஸ்பெஷல்”?
1.இரண்டாம் வாரமே, அதுவும் ஒரு ஞாயிறன்று கூட்டம்.
2.நேரம் தாண்டியும், (சுமார் ஒரு மணி பதினெட்டு நிமிடம்) கூட்டம் நடந்தது.
3.சிடி/ புத்தக வெளியீட்டுடன், ‘நான் கிருஷ்ணதேவராயன்’ விமர்சனக் கூட்டமாகவும் அமைந்தது !

 • பாஸ்கர் 

சுட்ட இட்லி – நன்றி வாட்ஸ் அப்

Image result for idli imagesImage result for idli images

Related image

 

இட்லியே ! இட்லியே ! கீழே கொடுத்துள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு விளக்கம்  கூறு! 
Optimism
Pessimism
Feminism
Journalism
Imperialism
Postmodernism
Nationalism
Pacism
Socialism
Racism
Realism
Capitalism
and
Escapism

 • இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism…
 • இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism…
 • இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism…
 • இட்லிய ‘சுட்டது’ யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism…
 • இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகுதான் நமக்குன்னு சொன்னா Imperialism…
 • இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism…
 • இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா
  Nationalism…
 • இட்லி உனக்கு கிடையாதுன்னா Pacism…
 • இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.
 • இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism.
 • இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism…
 • இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.
 • இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா escapism!!!!!

அட    அட    அட 

காமராஜர் ஒரு மகாத்மா – நன்றி முகநூல்

 

Image result for kamarajImage result for kamarajar and mahatma gandhi

 

Image result for kamarajar standing stills

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.
கர்ம வீரர் காமராசர் முதல்வராக இருந்த சமயம் நடந்தது. இவரல்லவோ முதல்வர்.

“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும்  மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ’

ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார்  மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்குக் கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துக் காட்டச்  சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார்.  மூக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லணுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா! கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்பரேட்டரிடம் கூறிவிட்டுக் காத்திருக்க  வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம், உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். “யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்கிறார். “அய்யா! நான்தான் அசெம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா”  என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து  யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா’ என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்கத் தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க’ என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை….

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நம்முடன் பேசியிருப்பது  முதல்வர் காமராசர் என புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று
அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதல்வரின் அறையில் உள்ள  சோபாவில், கன்னத்தில் கைவைத்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கிக் கதவோரம் நின்று கொண்டார்கள்.

நீங்கதான் மண்ணாங்கட்டியா…என்கிறார். ஆமாங்க ஐயா.
நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்தக் கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளைப் பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை  ‘வா…வாண்ணே! வந்து பக்கதில உட்காருங்க’  என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்கத் தயங்கித் தயங்கிப் பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துக் கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே…
ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே….உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க…எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்..  நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக்கூடாது.

‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல, மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளைப் பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகாரக் குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ,சற்றுத் தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டுப் போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க  மாட்டார்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டி பேச வார்த்தைகளின்றிக் கையெடுத்துக் கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்துக் கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழை
மக்களுக்காகவே இருந்தார்….

இனி இதுபோல முதல்வர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தோடு…

 

தமிழ்த் திரைபடங்கள் 2016 ஓர் அலசல்

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட படங்கள் வந்தும் சொல்லிக் கொள்ளும்படி 25 படங்கள் தான் தேறுகின்றன.

Image result for தமிழ் சினிமா 2016

ரஜினியின் “கபாலி “,  விஜய்யின்  ” தெறி ” , சிவகார்த்திகேயனின் ” ரெமோ” மூன்றும்  கலக்கல் வெற்றி.

பிச்சைக்காரன், இறுதிச்சுற்று , இருமுகன், தர்மதுரை, ரஜினி முருகன், சென்னை 28, தேவி, 24, நல்ல வெற்றி.

Image result for தமிழ் சினிமா 2016

விசாரணை ஆஸ்காருக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

மற்ற சுமார் வெற்றிப்  படங்கள் :

தில்லுக்கு துட்டு, தோழா, அரண்மனை -2 , சேதுபதி, ஆண்டவன் கட்டளை, இது நம்ம ஆளு, மருது, மிருதன், அப்பா, காதலும் கடந்து போகும் , அச்சம் என்பது மடமையடா, இறைவி, குற்றமே தண்டனை, ஜோக்கர்,  மாவீரன் கிட்டு

குவிகத்தின் கணிப்பில் பார்த்திருக்க வேண்டிய படங்கள் :

கபாலி, ரெமோ, பிச்சைக்காரன், இறுதிச்சுற்று, சென்னை 28, விசாரணை, ஜோக்கர், தோழா, தர்மதுரை

மற்றவற்றை  ஃப்ரியா விட்டு விடலாம்.

நாவலோ நாவல் !

அந்தக் காலத்தில் நாவலோ நாவல் என்று கூறினால் ‘நான் விவாதத்திற்குத் தயார்,  என்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க யார் உள்ளார்’ என்று அறை கூவுவதற்குச் சமம்.

இன்றைக்கு  நாவல் என்ற ஆங்கிலச்  சொல் சரளமாக அனைவராலும் தமிழ்ச் சொல்லைப்போல் சொல்லப்படுகிறது. சரித்திர நாவல், துப்பறியும் நாவல், சமூக நாவல்  என்று தமிழறிஞர்களாலும் சொல்லப்படுகிறது. அதற்குச் சமமான புதினம் என்று இருந்தாலும் நாவல் என்ற சொல்லைச் சொல்லுவதில்தான் நமக்கு மகிழ்ச்சி.

தமிழில் சில ஆண்டுகள் வரை சிலரால் மட்டுமே நாவல் எழுத முடியும் என்றிருந்த நிலமை மாறி யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று வந்திருப்பது  தமிழ் எழுத்துலகுக்கு நல்ல காலம் என்று தான் சொல்லவேண்டும்.

Image result for எழுதும் கலை ஜெயமோகன்

நாவலை எப்படி எழுதுவது, எப்படியெல்லாம் எழுதக்கூடாது என்றெல்லாம் ஜெயமோகன் அவர்கள் தமது “எழுதும் கலை” என்ற புத்தகத்தில் வெகு அழகாகச் சொல்லுகிறார். நாவல் என்பது ‘ தொகுத்துக் காட்டி ஒட்டு மொத்தப் பார்வையை அளித்தல் ‘ என்று பொருள் விளக்கம் கொடுக்கிறார்.

இது தான் நாவலின் வடிவம் என்று சொல்லும்போதே அவ்வடிவத்தை உடைத்தபடி அடுத்த நாவல் வந்துவிடுகிறது என்று சொல்லுகிறார்.

Image result for புதினம்

அதற்கு அவர் கூறிய உதாரணங்களை மட்டும் இப்போது பார்ப்போம். மற்றவற்றைப் பின்னால் பார்ப்போம் .

 

வாழ்க்கை வரலாற்று வடிவம்    – பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை

கடித வடிவ நாவல் – கோகிலாம்பாள் கடிதங்கள் – மறைமலை அடிகள்

மனைவி கணவனிடம் கதையளக்கும் நாவல் – தலையணை மந்திரோபதேசம் – பண்டித நடேச சாஸ்திரி

டைரிக்குறிப்புகள் – நவீனன் டைரி – நகுலன்

பலவகைக்  குறிப்புகள் – ஜேஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

கேள்விபதில் வடிவம்  – வாக்கு மூலம் – நகுலன்

ஒரு மனிதனின் மொத்த வாழ்வைக் கூறுதல் – பொய்த்தேவு – க நா சுப்பிரமணியம்

ஒரே ஒரு நாளைப்பற்றிக் கூறும் நாவல்  – ஒரு நாள் –  க நா சுப்பிரமணியம்

ஒரு மனிதனின் நனவோடையாக  நீளும் நாவல் – அபிதா – லா ச ராமாமிர்தம்

யதார்த்தவாத நாவல் –  அன்னை – கார்க்கி

கதைபின்னல்  நாவல் – மோகமுள் -தி ஜானகிராமன்

நேர்ப்பேச்சு  வடிவம் – கோபால கிராமம் – கி ராஜநாராயணன்

உருவக நாவல் –   தண்ணீர் – அசோகமித்திரன்

நிஜ மாயை

நிஜ மாயை – ( Augmented Reality) –

(குவிகத்தில நாம வைச்ச பேர் தான் !)

Screenshot of Alibaba video on the Buy+ virtual shopping experienceScreenshot of Alibaba video on the Buy+ virtual shopping experience

(Image copyright ALIBABA) 

சீனாவில் பிரபலமான அலிபாபா நிறுவனம் ஒரு   மாயக் கண்ணாடியைக் கொண்டு வந்திருக்கிறது. இதைப்  போட்டுக்கொண்டு பார்த்தால் மால்களில் – கடையில் இருக்கும் பொருட்கள் அப்படியே தத்ரூபமாக நம்  கண்களில் தெரியும் – விலை மற்றும் அவற்றின் குறிப்புகள் உட்பட.

அப்படியே உங்கள் கண்ணை அசைத்து எது வேண்டுமோ அதை ஆர்டர் செய்யலாம்.

இந்த மாயக் கண்ணாடியை விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒரு அட்டையை உங்கள் கைபேசியில் இணைத்துக் கொண்டால் அதன்  மூலம் பொருட்களைக்  கடையிலிருந்து நேரடியாக வாங்கலாம்.

நம்ம ப்ளிப்  கார்ட், அமேசான் போன்றவைகளை  இது ஓரம் கட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போகிமேன் விளையாட்டும் இந்த நிஜமாயையை  வைத்து உருவாக்கப்பட்டதுதான்.

சபாஷ் சரியான போட்டி !

சிற்றிதழ்கள் உலகம்

உலக அளவிலான சிற்றிதழ்கள், கட்டுரைகள், ஆய்வுகள், பதிவதற்கான தளம் – ” சிற்றிதழ்கள் உலகம்” என்ற மின்னிதழ்.

கிருஷ்.ராமதாஸ் அவர்களின் முயற்சியால் இந்தப் பொங்கல் சமயத்தில் வெளிவந்திருக்கிறது! 

சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ், துபாய் அருகில் உள்ள அல் அய்ன் நகரில் தஞ்சை திரு.வரதராசன் அவர்களால்  13.01.2017 அன்று வெளியிடப்பட்டது . முதல் பிரதியை  திரு.கருணாகரன் அவர்கள் பெற்றுக்கொள்ள  நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Image may contain: 10 people, text

சென்னை புத்தகக்  கண்காட்சியிலும் இது வெளியிடப்பட்டது.

Image may contain: 5 people, people standing

வாழ்க! வளர்க! இவர்தம் தொண்டு !!

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2017

ஜனவரி 6 முதல் 19 வரை சென்னை பச்சையப்பா கல்லூரிக்கு எதிரில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் பபாசி வழங்கும் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் கூட்டம் அலை மோதுகிறது.  நிறைய மக்கள் நிறைய புத்தகங்கள்   வாங்குகிறார்கள்.

இது கண்காட்சி அல்ல, கண் கொள்ளாக் காட்சி !

இந்தக் கண் கொள்ளாக் காட்சியைப்  பற்றி விவரமாக அடுத்த மாதம் பார்க்கலாம் !

இப்போதைக்குச்  சில புகைப்படங்களை மட்டும் பார்ப்போம்.

No automatic alt text available.

Image may contain: car, sky and outdoor

தமிழ் விதி – இலக்கணம்

Image result for tamil language history and culture

தமிழில் அனைவருக்கும் தகராறு  க் , ச் ,  ட் , த், ப்  போன்ற மெய் எழுத்துக்களை இரு வார்த்தைகளுக்கு நடுவே எப்பொழுது சேர்க்க  வேண்டும் , எப்போது  சேர்க்கக் கூடாது என்பது தான்.

( தகராறுக்கு  முதலில் எந்த ‘ர’ போடவேண்டும் என்று கேட்டதற்கு தகராறு எப்பவும் சிறியதா  ஆரம்பிச்சு  பிறகுதான் பெரியதா முடியும். அதனால்  முதலில் சின்ன ‘ர’ போடுங்க , அப்பறம் பெரிய ‘ற ‘ போடுங்க! என்றாராம்)

Image result for tamil language history in tamil

இந்த வல்லின மெய்யெழுத்துக்களைச்   சேர்ப்பதை  வல்லினம் மிகும் இடங்கள் என்றும், சேர்க்கக் கூடாத இடங்களை  வல்லினம் மிகா இடங்கள் என்றும் சொல்லுகிறோம்.

சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்காமல்,  சேர்க்கக் கூடாத இடத்தில் சேர்த்தால் அர்த்தமே மாறுபடுவதுடன் ஓசை நயமும் கெட்டுவிடும்.

ஆகவே, வல்லினம் மிகும் இடங்களையும் மிகா இடங்களையும் தெளிவாக அறிதல் வேண்டும்.

கீழே கண்ட விதிகளையும் உதாரணங்களையும் படித்தால் இந்தத் தகராறு நமக்கு வராது.

வல்லினம் மிகும் இடங்கள்

1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளை அடுத்தும், எ என்னும் வினாவை அடுத்தும் வரும் வல்லினங்களாகிய க், ச், த், ப் மிகும்.

அ + பையன் = அப்பையன்
இ + செடி = இச்செடி
எ + பணி = எப்பணி

2. அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி,எப்படி என்னும் சுட்டு வினாச் சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.

அந்த + கோவில் = அந்தக்கோவில்
அங்கு + சென்றான் = அங்குச்சென்றான்
எங்கு + போனான் = எங்குப்போனான்

3. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

நூலை + படி = நூலைப்படி
பாலை + குடி = பாலைக்குடி

4. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்

அவனுக்கு + கொடுத்தான் = அவனுக்குக்கொடுத்தான்
பணிக்கு + சென்றான் = பணிக்குச்சென்றான்
இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்.
தண்ணீர் + குடம் = தண்ணீர்க்குடம்
மரம் + பெட்டி = மரப்பெட்டி
பூட்டு + சாவி = பூட்டுச்சாவி
விழி + புனல் = விழிப்புனல்.

6. பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

பச்சை + பட்டு = பச்சைப்பட்டு
பச்சை + கிளி = பச்சைக்கிளி

7. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ.

8. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.

மலர் + கண் = மலர்க்கண்
தாமரை + கை = தாமரைக்கை.

9. ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வல்லினம் மிகும்.

தீ + சுடர் = தீச்சுடர்
பூ + கூடை = பூக்கூடை.

10. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

அழியா + புகழ் = அழியாப்புகழ்
ஓடா + குதிரை = ஓடாக்குதிரை.

11. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.

பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
எட்டு + தொகை = எட்டுத்தொகை.

12. ட, ற, ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்.

ஆடு + பட்டி = ஆட்டுப்பட்டி
நாடு + பற்று = நாட்டுப்பற்று.

13. முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்

பொது + தேர்வு = பொதுத்தேர்வு
திரு + குறள் = திருக்குறள்.

14. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்

சால + பேசினான் = சாலப்பேசினான்
தவ + சிறிது = தவச்சிறிது.

15. ஆய், என, இனி, ஆக முதலிய இடைச்சொற்களின் பின் வல்லினம் மிகும்

என + கூறினான் = எனக்கூறினான்
இனி + காண்போம் = இனிக்காண்போம்.

வல்லினம் மிகா இடங்கள்.

1. அது, இது, அவை, எவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும், எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.

அது + பறந்தது = அது பறந்தது.
அவை + பறந்தன = அவை பறந்தன.
எது + தங்கம் = எது தங்கம்
எவை + சென்றன = எவை சென்றன.

2. ஆ, ஏ, ஓ என்னும் வினா எழுத்துக்களின் பின் வல்லினம் மிகாது
அவனா + சென்றான் = அவனா சென்றான்
அவனோ + பேசினான் = அவனோ பேசினான்
அவனே + சிரித்தான் = அவனே சிரித்தான்.

3. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது,

மலர் + பூத்தது = மலர் பூத்தது
வண்டு + பறந்தது = வண்டு பறந்தது.

4. அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

அத்தனை + படங்கள் = அத்தனை படங்கள்
இத்தனை + பறவைகள் = இத்தனை பறவைகள்.
எத்தனை + காக்கைகள் = எத்தனை காக்கைகள்.

5. வினைத்தொகையில். வல்லினம் மிகாது.

ஊறு + காய் = ஊறுகாய்
சூடு + சோறு = சுடுசோறு.

6. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.

கபிலபரணர்
இரவுபகல்.

7. இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.

தமிழ் + கற்றார் = தமிழ் கற்றார்
கடல் + கடந்தார் = கடல் கடந்தார்.

8. மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் வல்லினம் மிகாது.

பூவொடு + சேர்ந்த = பூவொடுசேர்ந்த
கபிலரோடு + பரணர் = கபிலரோடுபரணர்.

9. எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

ஒன்று + கொடு = ஒன்றுகொடு
இரண்டு + பேர் = இரண்டுபேர்.

10. வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது.

வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
வாழிய + பல்லாண்டு = வாழிய பல்லாண்டு.

11. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்களில் வல்லினம் மிகாது.

சல + சல = சலசல
பாம்பு + பாம்பு = பாம்புபாம்பு.

12. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிறபெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.

கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
சிறிய + பெண் = சிறிய பெண்.

தமிழ் கண்ட இலக்கண விதிகளைக் கொண்டு சந்திப் பிழைகளை நாவி மென்பொருள் திருத்துகிறது.

விதிகள் மிகுமா? உதாரணம்
நிலை மொழியின் ஈற்றில் உயிரும் வரும் மொழியில் கசதப வந்தால் ஆம்  வினாத்தாள்
ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும். ஆம் பூப் பறித்தான், கைக் குழந்தை
அகர, இகர ஈற்று வினையெச்சம் முன் ஆம் வரச் சொன்னான், ஓடிப் போனான்
நிலைமொழியில் உயர்திணை இல்லை திரு கண்ணன், சிவ பெருமான்
இருபெயரொட்டுப் பண்புத் தொகை ஆம் தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம், முருகக்கடவுள்
பண்புத் தொகை ஆம் வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்
வினைத் தொகை இல்லை காய்கதிர்,பழமுதிர்சோலை
உம்மைத் தொகை இல்லை கபில பரணர்
உவமைத் தொகை ஆம் முத்துப்பல், கமலச் செங்கண்
உவமை விரி இல்லை முத்து போன்ற பல்,முத்தைப் போன்ற பல்
உருபும், பயனும் உடன் தொக்க தொகை ஆம் தமிழ்ப் பேச்சு
ஊர்ப் பெயர்களின் அடுத்து ஆம் திருவாரூர்த் தமிழ்ச்சங்கம்
எழுவாய் தொடர் இல்லை சாத்தன் வந்தான்
அடுக்குத் தொடர் இல்லை பாம்பு பாம்பு
விளித் தொடர் இல்லை சாத்தவா
தொரிநிலை வினைமுற்றுத் தொடர் இல்லை வந்தான் சாத்தன்
குறிப்பு வினைமுற்றுத்தொடர் இல்லை பொன்னனிவன்
பெயரெச்சம் இல்லை வந்த பையன், பறந்த புறா
எதிர்மறைப் பெயரெச்சத்தில் இல்லை வாடாத பூ, ஓடாத குதிரை
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆம் அறியாப் பிள்ளை, தீராத் துன்பம், ஓடாக் குதிரை, பாடாத் தேனீ
நெடிற்றொடர்,ஆய்தத்தொடர்,உயிர்த்தொடர்,இடை/மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சம் இல்லை வந்து போனான்
வன்றொடர்க் குற்றியலுகர வினையெச்சம் ஆம் போட்டுக் கொடுத்தார்
இடைச்சொற்றொடர் இல்லை மற்றொன்று
உரிச்சொற்றொடர் இல்லை நனிபேதை
இரட்டைக் கிளவி இல்லை தடதட
எட்டாம் வேற்றுமை இல்லை தலைவா கொடும், நாடே தாழாதே
ஏழாம் வேற்றுமை விரி இல்லை தரையில் படுத்தான்
ஏழாம் வேற்றுமைத் தொகை இல்லை தரை படுத்தான்
7 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் நீர்ப்பாம்பு
ஆறாம் வேற்றுமை விரி இல்லை கண்ணனது கை
ஆறாம் வேற்றுமைத் தொகை ஆம் புலமைச் சிறப்பு, கிளிக்கூண்டு,வாழைத்தண்டு,தேர்ச்சக்கரம்,காளி கோயில்
6 உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஐந்தாம் வேற்றுமை விரி இல்லை மதுரையின் வடக்கே
ஐந்தாம் வேற்றுமைத் தொகை இல்லை தமிழ் பேசு, ஊர் நீங்கினான்
5 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் வாய்ப்பாட்டு, கனிச்சாறு
நான்காம் வேற்றுமை விரியின் பின் ஆம் கடைக்குப் போனான்,தந்தைக்குக் கடமை
நான்காம் வேற்றுமைத் தொகை ஆம் வேலிக் கம்பி,பொன்னி கணவன்
4 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் குழந்தைப் பால், கூலிப்படை, தக்கோர் சால்பு
மூன்றாம் வேற்றுமை விரியின் பின் இல்லை தந்தையோடு சென்றான்
மூன்றாம் வேற்றுமைத் தொகை இல்லை கை தட்டினான்
3 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் வெள்ளித் தட்டு
இரண்டாம் வேற்றுமை விரியின் பின் ஆம் பூனையைப் பார்த்தான்
இரண்டாம் வேற்றுமைத் தொகை இல்லை நீர் குடித்தான்
2 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் நீர்க்குடம்
முதலாம் வேற்றுமை என்னும் எழுவாய் வேற்றுமை இல்லை கூனி கொடுத்தாள், வள்ளி சென்றாள், தாய் காப்பாற்றுவாள்
வன்தொடர்க் குற்றுகரம் ஆம் ட்டு,ற்று…
திரு, நடு, முழு, பொது ஆம் திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி
நிலை மொழியில் மகரம் கெட்டால் ஆம் இணையத் தமிழ், அந்நியச் செலாவணி, படத் தொகுப்பு.

ஆதாரம்:
தொல்காப்பிய/நன்னூல் இலக்கண விதிகள்
கவிக்கோ.ஞானச்செல்வன் அவர்களின் பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! என்ற தொகுப்பு
தமிழ் இணைய பல்கலைக் கழக இலக்கணப் பாடங்கள்

http://tech.neechalkaran.com/p/tamil-grammar.html

http://dev.neechalkaran.com/p/naavi.html#.V0Hi15H5ihd

தமிழில் தொழில்நுட்பப்பாடம் – கவிதை வடிவில்

தமிழில் இவ்வளவு அருமையான கவிதைகளுடன் தொழில்நுட்பத்தை யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை.

முனைவர் சுப்பராமனுக்கு நமது பாராட்டுதல்கள் !

(நன்றி : TEDx Salem-Dr.T S Subbaraman-Science in Classical Tamil -அறிவியல் தமிழ்)

பாருங்கள்/கேளுங்கள் வீடியோவை !

கோமலின் தண்ணீர் தண்ணீர்

கோமலின் தண்ணீர் தண்ணீர்

Image may contain: 2 people, people on stage, table and indoor

கோமல் 80 விழா 18 நவம்பர் மாலை நாரதகான சபாவில் மிகச்சிறப்பான முறையில் நடந்தேறியது.

திரைப்பட இயக்குனர் SP. முத்துராமன், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, தமுஎகச துணைத்தலைவர் சிகரம் செந்தில்நாதன் சிறப்பு விருந்தினர்களாக உரையாற்ற, CPI (M) மானிலத்தலைவர் திரு.ஜி.ராமகிருஷ்ணன், ஜனநாயக மாதர் சங்க தலைவி வாசுகி உமாநாத் , தமுஎகச பொருளாளர் இரா.தெ.முத்து, மற்றும் உறுப்பினர்கள் பல பேர், சிந்தனையாளர்/எழுத்தாளர் ஞானி, சபா செயலாளர்கள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்- சேகர் ராஜகோபால், ப்ரம்மகான சபா- ரவி, நாரதகான சபா- ஷங்கர் கிருஷ்ணசாமி, பத்திரிகையாளர்கள் ஹிந்து தமிழ் அரவிந்தன், தீக்கதிர் குமரேசன், அமுதசுரபி திருப்பூர் கிருஷ்ணன், நாடக உலக ஜாம்பவான்கள் காத்தாடி, MB மூர்த்தி, அகஸ்டோ, தமிழிசைஆத்மநாதன், மற்றும் எத்தனையோ நடிகர்கள், எழுத்தாளர்கள் இரா.முருகன், நாடக எழுத்தாளர்/இயக்குனர் பிரளயன், சின்னத்திரை பிரபலங்கள் DD, கல்யாணமாலை மோகன், மற்றும் அனைத்து நாடக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Image may contain: 5 people, people sitting and indoor

அனைவருக்கும் எனது நன்றிகள் பல.


அரங்கேறி 35 ஆண்டுகள் ஆன பிறகும் , இன்றும் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் சமகாலத்திய ஒரு நாடகமாக அனைவராலும் ரசிக்கப்பட்டது.
சமூக ப்ரக்ஞை உள்ள ஒரு படைப்பாளிக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாக இதைக் கருதுகிறேன்.

லலிதா தாரிணி – கோமலின் மகள் மற்றும் இந்த நாடகத்தை இயக்கியவர். ( முகநூல் பதிவிலிருந்து) 

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நாடகம் இத்தனை அளவிற்குத் துடிப்புடன்இருப்பதற்கு முக்கிய காரணங்கள்:-

கோமலின் மனித நேயக் கதை   – மனதைத்தொடும் வசனங்கள். நடிகர்கள் பாத்திரத்தின் தன்மையை அறிந்து நடித்திருக்கும் நயம். அந்த அழகான கிராம மேடை அமைப்பு –  திறமையான ஒலி,ஒளி அமைப்பு – எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய – இன்றைய இயக்குனர்கள்.

பங்குபெற்ற அனைவருக்கும் குவிகத்தின் மனமுவந்த   பாராட்டுதல்கள்!

 

குறு நாடகங்கள் – எஸ் கே என்

 

 

No automatic alt text available.

தமிழில் நாடகங்கள் அதிகமாக மேடையேறியது எழுபது எண்பதுகளில்தான். அவற்றில் பெரும்பாலானவை ‘துணுக்குத் தோரணம்’ என்று வகைப்படுத்தப்பட்டன. அந்தக் காலகட்டத்தில்   பெரும்பாலோர் நாடகங்களுடனோ சபாக்களுடனோ ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டு இருந்திருப்பார்கள். தொலைக்காட்சி வந்தபிறகு நாடகங்கள் குறைந்தன. நல்ல நாடகம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பலருக்கு உண்டு.

இந்த ஆண்டு அல்லயன்ஸ் ஃப்ராங்சைஸ் ஒரு குறுநாடகவிழா நடத்தியது. சுமார் பத்து நிமிடங்கள் கொண்ட முப்பது நாடகங்கள் மூன்று வாரங்கள் நடத்தப்பட்டன. பெரும்பாலும் இளைஞர்கள் பங்குகொண்ட தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் மிகுந்த புத்துணர்ச்சியை அளித்தது.  அதில் எட்டு நாடகங்களை  மீண்டும் ‘CRISPY THEATER’ அரங்கேற்றியது. அந்தக்  குறுநாடகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

‘ஷ்ரத்தா’ நாடகக் குழு கடந்த ஒரு சில ஆண்டுகளாக சில நல்ல நாடகங்களை மீண்டும் ரசிகர்களுக்குப் பார்க்க வாய்ப்பு அளித்தது. ஒருமுறை மூன்று சிறுகதைகளை நாடகமாக்கி சிறப்பாக அரங்கேற்றினார்கள். இந்த ஆண்டு எட்டு குறுநாடகங்கள் மேடை ஏற்றினார்கள்.

எட்டு நாடகங்கள் துண்டுப் பிரசுரத்தில் இருந்தாலும் நாங்கள் சென்ற தினத்தில் ஏழு நாடகங்களே இருந்தன.

 • சுந்தர ராமசாமியின் ‘சீதை மார்க் சீயக்காய்தூள்’ ஒரு நபர் நாடகமாக (மோனோ ஆக்டிங்) ரசிக்கும் வகையில் இருந்தது. ஓவியர், அவரது மனைவி மற்றும் படம் வரையச் சொன்ன வியாபாரி ஆகிய மூன்று பாத்திரங்களையும் அந்த நடிகர் சிறப்பாகச் செய்தார்.
 • ‘அது’ – ‘ஸ்கைலேப்’ பூமியில் விழுந்து உலகமே அழியப்போகிறது என்ற பீதி உலவியது. அதுபோல் விண்வெளியிலிருந்து மாபெரும் ‘அது’ விழுந்து உலகம் அழியவிருப்பதாக அஞ்சும் நிலையில் ஒரு இளம் தம்பதியர் அதனை எதிர்கொள்ளும் காட்சியும், மற்றவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என ஒரு பிச்சைக்காரன் மூலமாகவும் இந்த நாடகம் சித்தரித்தது, ரசிக்கமுடிந்தது. பிறக்கப்போகும் குழந்தைக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போம் என அந்த தம்பதியினர் முடிவு செய்கிறார்கள். எளிய வசனங்களும் இயல்பான நடிப்பும் ரசிக்கும்படியாக இருந்தது.
 • ‘மெல்லத் தமிழ் இனி …’ பாரதியார் பாடல்களில் தவறாகப் பயன்படுத்தப்படும் ‘மெல்லத் தமிழினி’, நல்லகாலம் பாரதியாரை இழுக்கவில்லை. தமிழ் படிக்காத ஒரு மாணவி தமிழைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க,   ஒரு ஆட்டோ ஓட்டுனரின் தமிழால் ஈர்க்கப்படுவதாக சென்னைத் தமிழ் கிண்டலுடன் காண்பிக்கப்பட்டது. பரவாயில்லை. (ஒரு வேண்டுகோள் ‘மெல்லத்தமிழினி சாகும்’ என்று எவனோ சொன்னதாக கூறுபவர்களைப்  பாரதி சாடியல்லவா இருக்கிறான். பாரதியாரே அப்படிச் சொன்னார் என்று மேடையிலும் உரையாடல்களிலும் சொல்லுவோரை முழுப் பாடலையும் படிக்கச் சொல்லுங்கள். புண்ணியமாய் போகும்)
 • ‘கைபேசி’ – ‘மைமிங்’ வகையில் வசனமே இல்லாத வகை நாடகம் இது. பங்கேற்றவர்கள் சிறுவர்கள் என்பதால்  ‘எனர்ஜி லெவல்’ மிகச் சிறப்பாக உற்சாகமாக இருந்தது. பிணம்தூக்கிகள் ஒவ்வொருவராகக் கைபேசியில் பேசப்போவதும், அம்போ என்று விடப்பட்ட பிணம் தானும் ஒரு செல்போன் எடுத்து பேசத்தொடங்குவதும் நல்ல கற்பனை. சொல்ல முயற்சிக்கப் பட்டவைகளில் பல  பார்வையாளர்களைச் சென்றடைய வில்லை என்று தோன்றிற்று.
 • ‘அறியா சனம்‘ தலைப்பு ஒரு சிலேடை என்று நினைக்கிறேன். ஒரு மைக் தான் கதைசொல்லி. மற்ற ‘சனங்கள்’ வந்துபோக, மேலிருந்து தொங்கும் ஒரு நாற்காலி –  ‘அறியாசனம்’ கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்குகிறது. வித்தியாசமான நாடகம். வசனங்கள் நினைவில் நிற்காததால் காட்சியுடன் ஒன்ற முடியவில்லை.
 •  ‘தாலிக்கொடியும் தொப்புள்கொடியும்’ மற்றும் ‘கடைசிக் கடிதம்’ ஆண்டாள் பிரியதர்சினியின் இரு கதைகள் நாட்டிய அபிநயங்களோடு ஒரே கலைஞரால் நிகழ்த்தப்பட்டன. எனக்கு ரசனை பற்றாது என்பதால் ‘ஜகா’ வாங்கிக்கொள்கிறேன்.

நல்லவேளை ஏழு நாடகங்களுடன் விட்டார்களே என்ற ஆசுவாசத்துடன் அரங்கத்தை விட்டு அகன்றோம். நாம் அதிகப்படியான எதிர்பார்ப்புடன் சென்றதுதான் தவறோ?