தமிழ்த் திரைபடங்கள் 2016 ஓர் அலசல்

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட படங்கள் வந்தும் சொல்லிக் கொள்ளும்படி 25 படங்கள் தான் தேறுகின்றன.

Image result for தமிழ் சினிமா 2016

ரஜினியின் “கபாலி “,  விஜய்யின்  ” தெறி ” , சிவகார்த்திகேயனின் ” ரெமோ” மூன்றும்  கலக்கல் வெற்றி.

பிச்சைக்காரன், இறுதிச்சுற்று , இருமுகன், தர்மதுரை, ரஜினி முருகன், சென்னை 28, தேவி, 24, நல்ல வெற்றி.

Image result for தமிழ் சினிமா 2016

விசாரணை ஆஸ்காருக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

மற்ற சுமார் வெற்றிப்  படங்கள் :

தில்லுக்கு துட்டு, தோழா, அரண்மனை -2 , சேதுபதி, ஆண்டவன் கட்டளை, இது நம்ம ஆளு, மருது, மிருதன், அப்பா, காதலும் கடந்து போகும் , அச்சம் என்பது மடமையடா, இறைவி, குற்றமே தண்டனை, ஜோக்கர்,  மாவீரன் கிட்டு

குவிகத்தின் கணிப்பில் பார்த்திருக்க வேண்டிய படங்கள் :

கபாலி, ரெமோ, பிச்சைக்காரன், இறுதிச்சுற்று, சென்னை 28, விசாரணை, ஜோக்கர், தோழா, தர்மதுரை

மற்றவற்றை  ஃப்ரியா விட்டு விடலாம்.

நாவலோ நாவல் !

அந்தக் காலத்தில் நாவலோ நாவல் என்று கூறினால் ‘நான் விவாதத்திற்குத் தயார்,  என்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க யார் உள்ளார்’ என்று அறை கூவுவதற்குச் சமம்.

இன்றைக்கு  நாவல் என்ற ஆங்கிலச்  சொல் சரளமாக அனைவராலும் தமிழ்ச் சொல்லைப்போல் சொல்லப்படுகிறது. சரித்திர நாவல், துப்பறியும் நாவல், சமூக நாவல்  என்று தமிழறிஞர்களாலும் சொல்லப்படுகிறது. அதற்குச் சமமான புதினம் என்று இருந்தாலும் நாவல் என்ற சொல்லைச் சொல்லுவதில்தான் நமக்கு மகிழ்ச்சி.

தமிழில் சில ஆண்டுகள் வரை சிலரால் மட்டுமே நாவல் எழுத முடியும் என்றிருந்த நிலமை மாறி யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று வந்திருப்பது  தமிழ் எழுத்துலகுக்கு நல்ல காலம் என்று தான் சொல்லவேண்டும்.

Image result for எழுதும் கலை ஜெயமோகன்

நாவலை எப்படி எழுதுவது, எப்படியெல்லாம் எழுதக்கூடாது என்றெல்லாம் ஜெயமோகன் அவர்கள் தமது “எழுதும் கலை” என்ற புத்தகத்தில் வெகு அழகாகச் சொல்லுகிறார். நாவல் என்பது ‘ தொகுத்துக் காட்டி ஒட்டு மொத்தப் பார்வையை அளித்தல் ‘ என்று பொருள் விளக்கம் கொடுக்கிறார்.

இது தான் நாவலின் வடிவம் என்று சொல்லும்போதே அவ்வடிவத்தை உடைத்தபடி அடுத்த நாவல் வந்துவிடுகிறது என்று சொல்லுகிறார்.

Image result for புதினம்

அதற்கு அவர் கூறிய உதாரணங்களை மட்டும் இப்போது பார்ப்போம். மற்றவற்றைப் பின்னால் பார்ப்போம் .

 

வாழ்க்கை வரலாற்று வடிவம்    – பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை

கடித வடிவ நாவல் – கோகிலாம்பாள் கடிதங்கள் – மறைமலை அடிகள்

மனைவி கணவனிடம் கதையளக்கும் நாவல் – தலையணை மந்திரோபதேசம் – பண்டித நடேச சாஸ்திரி

டைரிக்குறிப்புகள் – நவீனன் டைரி – நகுலன்

பலவகைக்  குறிப்புகள் – ஜேஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

கேள்விபதில் வடிவம்  – வாக்கு மூலம் – நகுலன்

ஒரு மனிதனின் மொத்த வாழ்வைக் கூறுதல் – பொய்த்தேவு – க நா சுப்பிரமணியம்

ஒரே ஒரு நாளைப்பற்றிக் கூறும் நாவல்  – ஒரு நாள் –  க நா சுப்பிரமணியம்

ஒரு மனிதனின் நனவோடையாக  நீளும் நாவல் – அபிதா – லா ச ராமாமிர்தம்

யதார்த்தவாத நாவல் –  அன்னை – கார்க்கி

கதைபின்னல்  நாவல் – மோகமுள் -தி ஜானகிராமன்

நேர்ப்பேச்சு  வடிவம் – கோபால கிராமம் – கி ராஜநாராயணன்

உருவக நாவல் –   தண்ணீர் – அசோகமித்திரன்

நிஜ மாயை

நிஜ மாயை – ( Augmented Reality) –

(குவிகத்தில நாம வைச்ச பேர் தான் !)

Screenshot of Alibaba video on the Buy+ virtual shopping experienceScreenshot of Alibaba video on the Buy+ virtual shopping experience

(Image copyright ALIBABA) 

சீனாவில் பிரபலமான அலிபாபா நிறுவனம் ஒரு   மாயக் கண்ணாடியைக் கொண்டு வந்திருக்கிறது. இதைப்  போட்டுக்கொண்டு பார்த்தால் மால்களில் – கடையில் இருக்கும் பொருட்கள் அப்படியே தத்ரூபமாக நம்  கண்களில் தெரியும் – விலை மற்றும் அவற்றின் குறிப்புகள் உட்பட.

அப்படியே உங்கள் கண்ணை அசைத்து எது வேண்டுமோ அதை ஆர்டர் செய்யலாம்.

இந்த மாயக் கண்ணாடியை விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒரு அட்டையை உங்கள் கைபேசியில் இணைத்துக் கொண்டால் அதன்  மூலம் பொருட்களைக்  கடையிலிருந்து நேரடியாக வாங்கலாம்.

நம்ம ப்ளிப்  கார்ட், அமேசான் போன்றவைகளை  இது ஓரம் கட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போகிமேன் விளையாட்டும் இந்த நிஜமாயையை  வைத்து உருவாக்கப்பட்டதுதான்.

சபாஷ் சரியான போட்டி !

சிற்றிதழ்கள் உலகம்

உலக அளவிலான சிற்றிதழ்கள், கட்டுரைகள், ஆய்வுகள், பதிவதற்கான தளம் – ” சிற்றிதழ்கள் உலகம்” என்ற மின்னிதழ்.

கிருஷ்.ராமதாஸ் அவர்களின் முயற்சியால் இந்தப் பொங்கல் சமயத்தில் வெளிவந்திருக்கிறது! 

சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ், துபாய் அருகில் உள்ள அல் அய்ன் நகரில் தஞ்சை திரு.வரதராசன் அவர்களால்  13.01.2017 அன்று வெளியிடப்பட்டது . முதல் பிரதியை  திரு.கருணாகரன் அவர்கள் பெற்றுக்கொள்ள  நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Image may contain: 10 people, text

சென்னை புத்தகக்  கண்காட்சியிலும் இது வெளியிடப்பட்டது.

Image may contain: 5 people, people standing

வாழ்க! வளர்க! இவர்தம் தொண்டு !!

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2017

ஜனவரி 6 முதல் 19 வரை சென்னை பச்சையப்பா கல்லூரிக்கு எதிரில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் பபாசி வழங்கும் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் கூட்டம் அலை மோதுகிறது.  நிறைய மக்கள் நிறைய புத்தகங்கள்   வாங்குகிறார்கள்.

இது கண்காட்சி அல்ல, கண் கொள்ளாக் காட்சி !

இந்தக் கண் கொள்ளாக் காட்சியைப்  பற்றி விவரமாக அடுத்த மாதம் பார்க்கலாம் !

இப்போதைக்குச்  சில புகைப்படங்களை மட்டும் பார்ப்போம்.

No automatic alt text available.

Image may contain: car, sky and outdoor

தமிழ் விதி – இலக்கணம்

Image result for tamil language history and culture

தமிழில் அனைவருக்கும் தகராறு  க் , ச் ,  ட் , த், ப்  போன்ற மெய் எழுத்துக்களை இரு வார்த்தைகளுக்கு நடுவே எப்பொழுது சேர்க்க  வேண்டும் , எப்போது  சேர்க்கக் கூடாது என்பது தான்.

( தகராறுக்கு  முதலில் எந்த ‘ர’ போடவேண்டும் என்று கேட்டதற்கு தகராறு எப்பவும் சிறியதா  ஆரம்பிச்சு  பிறகுதான் பெரியதா முடியும். அதனால்  முதலில் சின்ன ‘ர’ போடுங்க , அப்பறம் பெரிய ‘ற ‘ போடுங்க! என்றாராம்)

Image result for tamil language history in tamil

இந்த வல்லின மெய்யெழுத்துக்களைச்   சேர்ப்பதை  வல்லினம் மிகும் இடங்கள் என்றும், சேர்க்கக் கூடாத இடங்களை  வல்லினம் மிகா இடங்கள் என்றும் சொல்லுகிறோம்.

சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்காமல்,  சேர்க்கக் கூடாத இடத்தில் சேர்த்தால் அர்த்தமே மாறுபடுவதுடன் ஓசை நயமும் கெட்டுவிடும்.

ஆகவே, வல்லினம் மிகும் இடங்களையும் மிகா இடங்களையும் தெளிவாக அறிதல் வேண்டும்.

கீழே கண்ட விதிகளையும் உதாரணங்களையும் படித்தால் இந்தத் தகராறு நமக்கு வராது.

வல்லினம் மிகும் இடங்கள்

1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளை அடுத்தும், எ என்னும் வினாவை அடுத்தும் வரும் வல்லினங்களாகிய க், ச், த், ப் மிகும்.

அ + பையன் = அப்பையன்
இ + செடி = இச்செடி
எ + பணி = எப்பணி

2. அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி,எப்படி என்னும் சுட்டு வினாச் சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.

அந்த + கோவில் = அந்தக்கோவில்
அங்கு + சென்றான் = அங்குச்சென்றான்
எங்கு + போனான் = எங்குப்போனான்

3. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

நூலை + படி = நூலைப்படி
பாலை + குடி = பாலைக்குடி

4. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்

அவனுக்கு + கொடுத்தான் = அவனுக்குக்கொடுத்தான்
பணிக்கு + சென்றான் = பணிக்குச்சென்றான்
இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்.
தண்ணீர் + குடம் = தண்ணீர்க்குடம்
மரம் + பெட்டி = மரப்பெட்டி
பூட்டு + சாவி = பூட்டுச்சாவி
விழி + புனல் = விழிப்புனல்.

6. பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

பச்சை + பட்டு = பச்சைப்பட்டு
பச்சை + கிளி = பச்சைக்கிளி

7. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ.

8. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.

மலர் + கண் = மலர்க்கண்
தாமரை + கை = தாமரைக்கை.

9. ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வல்லினம் மிகும்.

தீ + சுடர் = தீச்சுடர்
பூ + கூடை = பூக்கூடை.

10. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

அழியா + புகழ் = அழியாப்புகழ்
ஓடா + குதிரை = ஓடாக்குதிரை.

11. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.

பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
எட்டு + தொகை = எட்டுத்தொகை.

12. ட, ற, ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்.

ஆடு + பட்டி = ஆட்டுப்பட்டி
நாடு + பற்று = நாட்டுப்பற்று.

13. முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்

பொது + தேர்வு = பொதுத்தேர்வு
திரு + குறள் = திருக்குறள்.

14. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்

சால + பேசினான் = சாலப்பேசினான்
தவ + சிறிது = தவச்சிறிது.

15. ஆய், என, இனி, ஆக முதலிய இடைச்சொற்களின் பின் வல்லினம் மிகும்

என + கூறினான் = எனக்கூறினான்
இனி + காண்போம் = இனிக்காண்போம்.

வல்லினம் மிகா இடங்கள்.

1. அது, இது, அவை, எவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும், எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.

அது + பறந்தது = அது பறந்தது.
அவை + பறந்தன = அவை பறந்தன.
எது + தங்கம் = எது தங்கம்
எவை + சென்றன = எவை சென்றன.

2. ஆ, ஏ, ஓ என்னும் வினா எழுத்துக்களின் பின் வல்லினம் மிகாது
அவனா + சென்றான் = அவனா சென்றான்
அவனோ + பேசினான் = அவனோ பேசினான்
அவனே + சிரித்தான் = அவனே சிரித்தான்.

3. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது,

மலர் + பூத்தது = மலர் பூத்தது
வண்டு + பறந்தது = வண்டு பறந்தது.

4. அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

அத்தனை + படங்கள் = அத்தனை படங்கள்
இத்தனை + பறவைகள் = இத்தனை பறவைகள்.
எத்தனை + காக்கைகள் = எத்தனை காக்கைகள்.

5. வினைத்தொகையில். வல்லினம் மிகாது.

ஊறு + காய் = ஊறுகாய்
சூடு + சோறு = சுடுசோறு.

6. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.

கபிலபரணர்
இரவுபகல்.

7. இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.

தமிழ் + கற்றார் = தமிழ் கற்றார்
கடல் + கடந்தார் = கடல் கடந்தார்.

8. மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் வல்லினம் மிகாது.

பூவொடு + சேர்ந்த = பூவொடுசேர்ந்த
கபிலரோடு + பரணர் = கபிலரோடுபரணர்.

9. எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

ஒன்று + கொடு = ஒன்றுகொடு
இரண்டு + பேர் = இரண்டுபேர்.

10. வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது.

வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
வாழிய + பல்லாண்டு = வாழிய பல்லாண்டு.

11. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்களில் வல்லினம் மிகாது.

சல + சல = சலசல
பாம்பு + பாம்பு = பாம்புபாம்பு.

12. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிறபெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.

கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
சிறிய + பெண் = சிறிய பெண்.

தமிழ் கண்ட இலக்கண விதிகளைக் கொண்டு சந்திப் பிழைகளை நாவி மென்பொருள் திருத்துகிறது.

விதிகள் மிகுமா? உதாரணம்
நிலை மொழியின் ஈற்றில் உயிரும் வரும் மொழியில் கசதப வந்தால் ஆம்  வினாத்தாள்
ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும். ஆம் பூப் பறித்தான், கைக் குழந்தை
அகர, இகர ஈற்று வினையெச்சம் முன் ஆம் வரச் சொன்னான், ஓடிப் போனான்
நிலைமொழியில் உயர்திணை இல்லை திரு கண்ணன், சிவ பெருமான்
இருபெயரொட்டுப் பண்புத் தொகை ஆம் தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம், முருகக்கடவுள்
பண்புத் தொகை ஆம் வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்
வினைத் தொகை இல்லை காய்கதிர்,பழமுதிர்சோலை
உம்மைத் தொகை இல்லை கபில பரணர்
உவமைத் தொகை ஆம் முத்துப்பல், கமலச் செங்கண்
உவமை விரி இல்லை முத்து போன்ற பல்,முத்தைப் போன்ற பல்
உருபும், பயனும் உடன் தொக்க தொகை ஆம் தமிழ்ப் பேச்சு
ஊர்ப் பெயர்களின் அடுத்து ஆம் திருவாரூர்த் தமிழ்ச்சங்கம்
எழுவாய் தொடர் இல்லை சாத்தன் வந்தான்
அடுக்குத் தொடர் இல்லை பாம்பு பாம்பு
விளித் தொடர் இல்லை சாத்தவா
தொரிநிலை வினைமுற்றுத் தொடர் இல்லை வந்தான் சாத்தன்
குறிப்பு வினைமுற்றுத்தொடர் இல்லை பொன்னனிவன்
பெயரெச்சம் இல்லை வந்த பையன், பறந்த புறா
எதிர்மறைப் பெயரெச்சத்தில் இல்லை வாடாத பூ, ஓடாத குதிரை
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆம் அறியாப் பிள்ளை, தீராத் துன்பம், ஓடாக் குதிரை, பாடாத் தேனீ
நெடிற்றொடர்,ஆய்தத்தொடர்,உயிர்த்தொடர்,இடை/மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சம் இல்லை வந்து போனான்
வன்றொடர்க் குற்றியலுகர வினையெச்சம் ஆம் போட்டுக் கொடுத்தார்
இடைச்சொற்றொடர் இல்லை மற்றொன்று
உரிச்சொற்றொடர் இல்லை நனிபேதை
இரட்டைக் கிளவி இல்லை தடதட
எட்டாம் வேற்றுமை இல்லை தலைவா கொடும், நாடே தாழாதே
ஏழாம் வேற்றுமை விரி இல்லை தரையில் படுத்தான்
ஏழாம் வேற்றுமைத் தொகை இல்லை தரை படுத்தான்
7 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் நீர்ப்பாம்பு
ஆறாம் வேற்றுமை விரி இல்லை கண்ணனது கை
ஆறாம் வேற்றுமைத் தொகை ஆம் புலமைச் சிறப்பு, கிளிக்கூண்டு,வாழைத்தண்டு,தேர்ச்சக்கரம்,காளி கோயில்
6 உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஐந்தாம் வேற்றுமை விரி இல்லை மதுரையின் வடக்கே
ஐந்தாம் வேற்றுமைத் தொகை இல்லை தமிழ் பேசு, ஊர் நீங்கினான்
5 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் வாய்ப்பாட்டு, கனிச்சாறு
நான்காம் வேற்றுமை விரியின் பின் ஆம் கடைக்குப் போனான்,தந்தைக்குக் கடமை
நான்காம் வேற்றுமைத் தொகை ஆம் வேலிக் கம்பி,பொன்னி கணவன்
4 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் குழந்தைப் பால், கூலிப்படை, தக்கோர் சால்பு
மூன்றாம் வேற்றுமை விரியின் பின் இல்லை தந்தையோடு சென்றான்
மூன்றாம் வேற்றுமைத் தொகை இல்லை கை தட்டினான்
3 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் வெள்ளித் தட்டு
இரண்டாம் வேற்றுமை விரியின் பின் ஆம் பூனையைப் பார்த்தான்
இரண்டாம் வேற்றுமைத் தொகை இல்லை நீர் குடித்தான்
2 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் நீர்க்குடம்
முதலாம் வேற்றுமை என்னும் எழுவாய் வேற்றுமை இல்லை கூனி கொடுத்தாள், வள்ளி சென்றாள், தாய் காப்பாற்றுவாள்
வன்தொடர்க் குற்றுகரம் ஆம் ட்டு,ற்று…
திரு, நடு, முழு, பொது ஆம் திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி
நிலை மொழியில் மகரம் கெட்டால் ஆம் இணையத் தமிழ், அந்நியச் செலாவணி, படத் தொகுப்பு.

ஆதாரம்:
தொல்காப்பிய/நன்னூல் இலக்கண விதிகள்
கவிக்கோ.ஞானச்செல்வன் அவர்களின் பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! என்ற தொகுப்பு
தமிழ் இணைய பல்கலைக் கழக இலக்கணப் பாடங்கள்

http://tech.neechalkaran.com/p/tamil-grammar.html

http://dev.neechalkaran.com/p/naavi.html#.V0Hi15H5ihd

தமிழில் தொழில்நுட்பப்பாடம் – கவிதை வடிவில்

தமிழில் இவ்வளவு அருமையான கவிதைகளுடன் தொழில்நுட்பத்தை யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை.

முனைவர் சுப்பராமனுக்கு நமது பாராட்டுதல்கள் !

(நன்றி : TEDx Salem-Dr.T S Subbaraman-Science in Classical Tamil -அறிவியல் தமிழ்)

பாருங்கள்/கேளுங்கள் வீடியோவை !

கோமலின் தண்ணீர் தண்ணீர்

கோமலின் தண்ணீர் தண்ணீர்

Image may contain: 2 people, people on stage, table and indoor

கோமல் 80 விழா 18 நவம்பர் மாலை நாரதகான சபாவில் மிகச்சிறப்பான முறையில் நடந்தேறியது.

திரைப்பட இயக்குனர் SP. முத்துராமன், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, தமுஎகச துணைத்தலைவர் சிகரம் செந்தில்நாதன் சிறப்பு விருந்தினர்களாக உரையாற்ற, CPI (M) மானிலத்தலைவர் திரு.ஜி.ராமகிருஷ்ணன், ஜனநாயக மாதர் சங்க தலைவி வாசுகி உமாநாத் , தமுஎகச பொருளாளர் இரா.தெ.முத்து, மற்றும் உறுப்பினர்கள் பல பேர், சிந்தனையாளர்/எழுத்தாளர் ஞானி, சபா செயலாளர்கள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்- சேகர் ராஜகோபால், ப்ரம்மகான சபா- ரவி, நாரதகான சபா- ஷங்கர் கிருஷ்ணசாமி, பத்திரிகையாளர்கள் ஹிந்து தமிழ் அரவிந்தன், தீக்கதிர் குமரேசன், அமுதசுரபி திருப்பூர் கிருஷ்ணன், நாடக உலக ஜாம்பவான்கள் காத்தாடி, MB மூர்த்தி, அகஸ்டோ, தமிழிசைஆத்மநாதன், மற்றும் எத்தனையோ நடிகர்கள், எழுத்தாளர்கள் இரா.முருகன், நாடக எழுத்தாளர்/இயக்குனர் பிரளயன், சின்னத்திரை பிரபலங்கள் DD, கல்யாணமாலை மோகன், மற்றும் அனைத்து நாடக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Image may contain: 5 people, people sitting and indoor

அனைவருக்கும் எனது நன்றிகள் பல.


அரங்கேறி 35 ஆண்டுகள் ஆன பிறகும் , இன்றும் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் சமகாலத்திய ஒரு நாடகமாக அனைவராலும் ரசிக்கப்பட்டது.
சமூக ப்ரக்ஞை உள்ள ஒரு படைப்பாளிக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாக இதைக் கருதுகிறேன்.

லலிதா தாரிணி – கோமலின் மகள் மற்றும் இந்த நாடகத்தை இயக்கியவர். ( முகநூல் பதிவிலிருந்து) 

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நாடகம் இத்தனை அளவிற்குத் துடிப்புடன்இருப்பதற்கு முக்கிய காரணங்கள்:-

கோமலின் மனித நேயக் கதை   – மனதைத்தொடும் வசனங்கள். நடிகர்கள் பாத்திரத்தின் தன்மையை அறிந்து நடித்திருக்கும் நயம். அந்த அழகான கிராம மேடை அமைப்பு –  திறமையான ஒலி,ஒளி அமைப்பு – எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய – இன்றைய இயக்குனர்கள்.

பங்குபெற்ற அனைவருக்கும் குவிகத்தின் மனமுவந்த   பாராட்டுதல்கள்!

 

குறு நாடகங்கள் – எஸ் கே என்

 

 

No automatic alt text available.

தமிழில் நாடகங்கள் அதிகமாக மேடையேறியது எழுபது எண்பதுகளில்தான். அவற்றில் பெரும்பாலானவை ‘துணுக்குத் தோரணம்’ என்று வகைப்படுத்தப்பட்டன. அந்தக் காலகட்டத்தில்   பெரும்பாலோர் நாடகங்களுடனோ சபாக்களுடனோ ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டு இருந்திருப்பார்கள். தொலைக்காட்சி வந்தபிறகு நாடகங்கள் குறைந்தன. நல்ல நாடகம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பலருக்கு உண்டு.

இந்த ஆண்டு அல்லயன்ஸ் ஃப்ராங்சைஸ் ஒரு குறுநாடகவிழா நடத்தியது. சுமார் பத்து நிமிடங்கள் கொண்ட முப்பது நாடகங்கள் மூன்று வாரங்கள் நடத்தப்பட்டன. பெரும்பாலும் இளைஞர்கள் பங்குகொண்ட தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் மிகுந்த புத்துணர்ச்சியை அளித்தது.  அதில் எட்டு நாடகங்களை  மீண்டும் ‘CRISPY THEATER’ அரங்கேற்றியது. அந்தக்  குறுநாடகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

‘ஷ்ரத்தா’ நாடகக் குழு கடந்த ஒரு சில ஆண்டுகளாக சில நல்ல நாடகங்களை மீண்டும் ரசிகர்களுக்குப் பார்க்க வாய்ப்பு அளித்தது. ஒருமுறை மூன்று சிறுகதைகளை நாடகமாக்கி சிறப்பாக அரங்கேற்றினார்கள். இந்த ஆண்டு எட்டு குறுநாடகங்கள் மேடை ஏற்றினார்கள்.

எட்டு நாடகங்கள் துண்டுப் பிரசுரத்தில் இருந்தாலும் நாங்கள் சென்ற தினத்தில் ஏழு நாடகங்களே இருந்தன.

  • சுந்தர ராமசாமியின் ‘சீதை மார்க் சீயக்காய்தூள்’ ஒரு நபர் நாடகமாக (மோனோ ஆக்டிங்) ரசிக்கும் வகையில் இருந்தது. ஓவியர், அவரது மனைவி மற்றும் படம் வரையச் சொன்ன வியாபாரி ஆகிய மூன்று பாத்திரங்களையும் அந்த நடிகர் சிறப்பாகச் செய்தார்.
  • ‘அது’ – ‘ஸ்கைலேப்’ பூமியில் விழுந்து உலகமே அழியப்போகிறது என்ற பீதி உலவியது. அதுபோல் விண்வெளியிலிருந்து மாபெரும் ‘அது’ விழுந்து உலகம் அழியவிருப்பதாக அஞ்சும் நிலையில் ஒரு இளம் தம்பதியர் அதனை எதிர்கொள்ளும் காட்சியும், மற்றவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என ஒரு பிச்சைக்காரன் மூலமாகவும் இந்த நாடகம் சித்தரித்தது, ரசிக்கமுடிந்தது. பிறக்கப்போகும் குழந்தைக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போம் என அந்த தம்பதியினர் முடிவு செய்கிறார்கள். எளிய வசனங்களும் இயல்பான நடிப்பும் ரசிக்கும்படியாக இருந்தது.
  • ‘மெல்லத் தமிழ் இனி …’ பாரதியார் பாடல்களில் தவறாகப் பயன்படுத்தப்படும் ‘மெல்லத் தமிழினி’, நல்லகாலம் பாரதியாரை இழுக்கவில்லை. தமிழ் படிக்காத ஒரு மாணவி தமிழைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க,   ஒரு ஆட்டோ ஓட்டுனரின் தமிழால் ஈர்க்கப்படுவதாக சென்னைத் தமிழ் கிண்டலுடன் காண்பிக்கப்பட்டது. பரவாயில்லை. (ஒரு வேண்டுகோள் ‘மெல்லத்தமிழினி சாகும்’ என்று எவனோ சொன்னதாக கூறுபவர்களைப்  பாரதி சாடியல்லவா இருக்கிறான். பாரதியாரே அப்படிச் சொன்னார் என்று மேடையிலும் உரையாடல்களிலும் சொல்லுவோரை முழுப் பாடலையும் படிக்கச் சொல்லுங்கள். புண்ணியமாய் போகும்)
  • ‘கைபேசி’ – ‘மைமிங்’ வகையில் வசனமே இல்லாத வகை நாடகம் இது. பங்கேற்றவர்கள் சிறுவர்கள் என்பதால்  ‘எனர்ஜி லெவல்’ மிகச் சிறப்பாக உற்சாகமாக இருந்தது. பிணம்தூக்கிகள் ஒவ்வொருவராகக் கைபேசியில் பேசப்போவதும், அம்போ என்று விடப்பட்ட பிணம் தானும் ஒரு செல்போன் எடுத்து பேசத்தொடங்குவதும் நல்ல கற்பனை. சொல்ல முயற்சிக்கப் பட்டவைகளில் பல  பார்வையாளர்களைச் சென்றடைய வில்லை என்று தோன்றிற்று.
  • ‘அறியா சனம்‘ தலைப்பு ஒரு சிலேடை என்று நினைக்கிறேன். ஒரு மைக் தான் கதைசொல்லி. மற்ற ‘சனங்கள்’ வந்துபோக, மேலிருந்து தொங்கும் ஒரு நாற்காலி –  ‘அறியாசனம்’ கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்குகிறது. வித்தியாசமான நாடகம். வசனங்கள் நினைவில் நிற்காததால் காட்சியுடன் ஒன்ற முடியவில்லை.
  •  ‘தாலிக்கொடியும் தொப்புள்கொடியும்’ மற்றும் ‘கடைசிக் கடிதம்’ ஆண்டாள் பிரியதர்சினியின் இரு கதைகள் நாட்டிய அபிநயங்களோடு ஒரே கலைஞரால் நிகழ்த்தப்பட்டன. எனக்கு ரசனை பற்றாது என்பதால் ‘ஜகா’ வாங்கிக்கொள்கிறேன்.

நல்லவேளை ஏழு நாடகங்களுடன் விட்டார்களே என்ற ஆசுவாசத்துடன் அரங்கத்தை விட்டு அகன்றோம். நாம் அதிகப்படியான எதிர்பார்ப்புடன் சென்றதுதான் தவறோ?

 

 

இமையம் கணிப்பில் சிறந்த நாவல்கள்

இமையம் என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை  நன்கறியப்பட்ட  எழுத்தாளர். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார்.

Image result for இமையம்

2000 க்குப் பிறகு வந்த நாவல்களில் குறிப்பிடத்தக்க புதினங்கள்  என்று எழுத்தாளர் இமையம் அவர்கள் அறிவித்தவை:

ஆழி சூழ் உலகு‘ (2004) – ஜோ.டி.குரூஸ்

‘சோளகர் தொட்டி‘(2004) – ச.பாலமுருகன்

‘கருக்கு‘(1992) ‘வன்மம்‘ (2002)  – பாமா

‘ஏழாம் உலகம்‘ (2003) – ஜெயமோகன்

‘துயில்’ (2012) – எஸ்.ராமகிருஷ்ணன்

‘கீதாரி’ (2003) –  சு.தமிழ்செல்வி

கூகை (2006) –  சோ.தர்மன்

‘தகப்பன்கொடி‘ (2011) – அழகிய பெரியவன்

‘வாங்கல்‘(2001) – ஸ்ரீதர கணேசன்

‘உண்மைக்கு முன்னும் பின்னும் (2013) – சிவகாமி

‘சிலுவை ராஜ் சரித்திரம்’ (2002), ‘காலச்சுமை’ (2003), ‘லண்டனில் சிலுவை ராஜ்’ (2004) – ராஜ் கௌதமன்

‘காவல் கோட்டம்‘(2008) – பா.வெங்கடேசன்

‘அஞ்ஞாடி’ (2012) – பூ மணி

‘வெள்ளை யானை’ (2013) – ஜெயமோகன்

‘போதியின் நிழல்’ (2012) -அசோகன் நாகமுத்து

‘காலகண்டமும்‘(2013) – எஸ்.செந்தில்குமார்

‘புலிநகக் கொன்றை’ (2004) – பி.ஏ.கிருஷ்ணன்

‘அஞ்சு வண்ணம் தெரு‘, (2008) – தோப்பில் முகமது மீரான்

‘இரண்டாம் ஜாமங்களின் கதை (2004) – சல்மா

மீன்கார தெரு (2006), ‘துருக்கித் தொப்பி’ (2008) – கீரனூர் ஜாகிர் ராஜா

‘யாரும் யாருடனும் இல்லை‘(2003), அஞ்சாங்கல் (2013) – உமா மகேஸ்வரி

‘ஏற்னனவே சொல்லப்பட்ட மனிதர்கள்‘ (1985), ‘முசல் பனி‘ (2010), ‘வார்சாவில் ஒரு கடவுள்‘ (2008) – தமிழவன்

‘பிதுரா’, (1998) ‘பாழி’ (2008) –  கோணங்கி

‘ராஸ லீலா, காம ரூபக் கதைகள் – சாருநிவேதிதா

எழுதிய ‘மரம் – ஜி.முருகன்

‘ராஜீவ் காந்தி சாலை – விநாயக முருகன்

‘மூன்றாம் சிலுவை’  – உமா வரதராஜன்

சிலந்தி (2001), ‘யுரேகா என்றொரு நகரம்’ (2002), ‘37’ (2003)  – எம்.ஜி.சுரேஷ்

6174 (2012), – என்.சுதாகர்

‘கொரில்லா’ (2002), ‘ம்’ – ஷோபா சக்தி.

‘உம்மத்‘ (2013)  – ஸர்மிளா ஸெய்யத்

‘இமையத் தியாகம்’ (2006)  – அ.ரெங்கசாமி

‘புயலிலே ஒரு தோணி’ – ப.சிங்காரம்

“நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் (2009)” – கே.பாலமுருகன்

 

சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்கள்

Image result for சாகித்ய அகாதமி விருது

இலக்கியத்தில் இந்தியாவில் ஞானபீடத்திற்கு அடுத்த வரிசையில் உள்ள சிறப்பான விருது ! ஞானபீடம் எல்லா மொழிகளுக்கும் பொதுவானது. சாகித்ய அகாதமி ஒவ்வொரு மொழிக்கும் தனியே வழங்கப்படும் விருது!

அப்படிபட்ட சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களையும் அவற்றை எழுதிய  எழுத்தாளர்களையும் இங்கே தருகிறோம். 

இவற்றில் நாம் எத்தனை படித்திருக்கிறோம்? 

ஆண்டு புத்தகத்தின் பெயர் ஆசிரியர் பிரிவு
2015 இலக்கியச் சுவடுகள் ஆ.மாதவன் புதினம்
2014 அஞ்ஞாடி பூமணி புதினம்
2013 கொற்கை ஜோ டி குரூஸ் புதினம்
2012 தோல் டி. செல்வராஜ் புதினம்
2011 காவல் கோட்டம் சு. வெங்கடேசன் புதினம்
2010 சூடிய பூ சூடற்க நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
2009 கையொப்பம் புவியரசு கவிதை
2008 மின்சாரப்பூ மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைகள்
2007 இலையுதிர்காலம் நீல பத்மநாபன் புதினம்
2006 ஆகாயத்திற்கு அடுத்த வீடு மு. மேத்தா கவிதை
2005 கல்மரம் ஜி. திலகவதி புதினம்
2004 வணக்கம் வள்ளுவ ஈரோடு தமிழன்பன் கவிதை
2003 கள்ளிக்காட்டு இதிகாசம் வைரமுத்து புதினம்
2002 ஒரு கிராமத்து நதி சிற்பி கவிதை
2001 சுதந்திர தாகம் சி. சு. செல்லப்பா புதினம்
2000 விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் தி. க. சிவசங்கரன் விமர்சனம்
1999 ஆலாபனை அப்துல் ரகுமான் கவிதை
1998 விசாரணைக் கமிஷன் சா. கந்தசாமி புதினம்
1997 சாய்வு நாற்காலி தோப்பில் முகமது மீரான் நாவல்
1996 அப்பாவின் சினேகிதர் அசோகமித்திரன் சிறுகதைகள்
1995 வானம் வசப்படும் பிரபஞ்சன் புதினம்
1994 புதிய தரிசனங்கள் பொன்னீலன் புதினம்
1993 காதுகள் எம். வி. வெங்கட்ராம் புதினம்
1992 குற்றாலக்குறிஞ்சி கோவி. மணிசேகரன் புதினம்
1991 கோபல்லபுரத்து மக்கள் கி. ராஜநாராயணன் புதினம்
1990 வேரில் பழுத்த பலா சு. சமுத்திரம் புதினம்
1989 சிந்தாநதி லா. ச. ராமாமிர்தம் சுயசரிதை
1988 வாழும் வள்ளுவம் வா. செ. குழந்தைசாமி இலக்கிய விமர்சனம்
1987 முதலில் இரவு வரும் ஆதவன் சிறுகதைகள்
1986 இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் க.நா.சுப்பிரமணியம் இலக்கிய விமர்சனம்
1985 கம்பன்: புதிய பார்வை அ. ச. ஞானசம்பந்தன் இலக்கிய விமர்சனம்
1984 ஒரு கவிரியைப் போல லட்சுமி (திரிபுரசுந்தரி) புதினம்
1983 பாரதி : காலமும் கருத்தும் தொ. மு. சி. ரகுநாதன் இலக்கிய விமர்சனம்
1982 மணிக்கொடி காலம் பி. எஸ். இராமையா இலக்கிய வரலாறு
1981 புதிய உரைநடை மா. இராமலிங்கம் விமர்சனம்
1980 சேரமான் காதலி கண்ணதாசன் புதினம்
1979 சக்தி வைத்தியம் தி. ஜானகிராமன் சிறுகதைகள்
1978 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வல்லிக்கண்ணன் விமர்சனம்
1977 குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி புதினம்
1975 தற்காலத் தமிழ் இலக்கியம் இரா. தண்டாயுதம் இலக்கிய விமர்சனம்
1974 திருக்குறள் நீதி இலக்கியம் க. த. திருநாவுக்கரசு இலக்கிய விமர்சனம்
1973 வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ணன் புதினம்
1972 சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன் நாவல்
1971 சமுதாய வீதி நா. பார்த்தசாரதி புதினம்
1970 அன்பளிப்பு கு. அழகிரிசாமி சிறுகதைகள்
1969 பிசிராந்தையார் பாரதிதாசன் நாடகம்
1968 வெள்ளைப்பறவை அ. சீனிவாச ராகவன் கவிதை
1967 வீரர் உலகம் கி. வா. ஜெகநாதன் இலக்கிய விமர்சனம்
1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ம. பொ. சிவஞானம் சரிதை நூல்
1965 ஸ்ரீ ராமானுஜர் பி.ஸ்ரீ. ஆச்சார்யா சரிதை நூல்
1963 வேங்கையின் மைந்தன் அகிலன் புதினம்
1962 அக்கரைச் சீமையிலே மீ. ப. சோமு பயண நூல்
1961 அகல் விளக்கு மு. வரதராசன் புதினம்
1958 சக்கரவர்த்தித் திருமகன் கி. இராஜகோபாலாச்சாரியார் உரைநடை
1956 அலை ஓசை கல்கி புதினம்
1955 தமிழ் இன்பம் ரா. பி. சேதுப்பிள்ளை கட்டுரை

 

 

கோமலின் தண்ணீர் தண்ணீர் !

கோமல் சுவாமிநாதன் அவர்களின் கருத்தான வசனங்களைக் கேட்க செல்லவேண்டும் இந்த நாடகத்திற்கு! 

அனைவரும் பார்க்கவேண்டிய நாடகம் !

திரைப்படமாக வந்து அனைவரது பாராட்டையும் பெற்றது. 

 சிறந்த தமிழ்ப்படம் மற்றும் சிறந்த தமிழ்ப்பட இயக்குநருக்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த தமிழ்ப் படத்திற்கான “சினிமா எக்ஸ்பிரஸ்’ விருதையும் “தண்ணீர் தண்ணீர்’ தட்டிச் சென்றது. 

 

கதை, வசனம் : கோமல் ஸ்வாமி நாதன் 

திரைக்கதை இயக்கம் : கே.பாலசந்தர்

 

ராமலிங்கம் பிள்ளை

2030இல் சங்கர் இயக்கத்தில் ரஜினி படம் – நாம் எப்படி இருப்போம்?

rajini rajini2

\Image result for martianஇது 2030 வது வருடம். இன்றைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான். அவர் செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் வேற்றுக் கிரகவாசி. பெயர் அங்காரகன்.

பூமியை ஆக்ரமிக்க ஒவ்வொரு கிரகத்திலிருந்தும் ஒவ்வொருவர் வருகின்றனர்.  எட்டு வில்லன்கள் –  ஜாக்கி சான், அஜீத், விஜய், ஆமிர்கான், மகேஷ் பாபு, பிருத்விராஜ்,  டாம்க்ரூஸ்,  பிராட் பிட்.   எப்படி மற்ற கிரக வாசிகளையெல்லாம் சண்டையில் தோற்கடித்து விரட்டிவிடுகிறார்  என்பது தான் ஷங்கரின் அருமையான கதை .

கடைசியில் ரஜினியும்   வேற்றுக்கிரகவாசியாகையால் அவரும் போகவேண்டும் என்று பூமியில் மக்கள் போராட அப்போது அவர்களுக்கு உண்மை தெரியவருகிறது. ரஜினி உண்மையில் மங்கள்யானில் சென்ற பூமிநாதன் என்ற நம்மவர். மற்ற கிரகங்கள் பூமியைக் கைப்பற்றப்போவதை அறிந்து காப்பாற்றுவதற்காக செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் அங்காரகனைக் கொன்றுவிட்டு  அவன் வடிவில்  வருகிறார். கடைசியில் உண்மை அங்காரகன் -அட்டகாசமான வில்லன் பத்துத் தலைகளுடன் வந்து பூமிநாதனுடன் மோத வருகிறான். அது  வேறு யாரும் இல்லை . கமல் தான்.

ஹீரோயின் ஹாலிவுட்டிலிருந்து வந்த அழகுப் பதுமை.   ஷங்கரின் பிரும்மாண்ட படம் அது. இந்தியாவின் எல்லாமொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும் வெளியான படம்.

போதுமா நம்ம ரீல்?

 

அது சரி.  உண்மையில் 2030இல் நாம் எப்படி இருப்போம்?

கிப்லிங்கர் என்பவர் சொல்லுகிறார். இது உண்மை தான்.

Subscribe to Kiplinger's Personal Finance

 

சென்ட் வாசனை, டெக்னாலஜி மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் போகும் !

நன்றாகத் தூங்க வைக்கும்  புது கணினிமயமாக்கப்பட்ட படுக்கை

நம்  குளிர்சாதனப்பெட்டியே தேவையான சாமான்களை வரவழைக்கும்

வயல்களை விட அடுக்கு அடுக்கான  உயரங்களில் உணவுப் பொருட்கள் விளையும் – விளைச்சல்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லவேண்டிய அவசியமே இருக்காது.

டிரோன்கள் சாமான்களை உங்கள் வீட்டு வாசலிலேயே  பட்டுவாடா செய்யும்

உங்கள்  வை ஃபை ரவுட்டர் மற்ற எல்லாப் பொருட்களையும் இயக்கும்.

நடமாடும் வீட்டு  உபயோகச் சாமான்கள் (நடமாடும் படுக்கை, கட்டில்)

டிரைவர் இல்லாத கார்

அதிவேகத்தில் பறக்கும் ஆகாயவிமானங்கள்

கைரேகை கையெழுத்து பாஸ்வோர்ட் இல்லாமல் முகத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் சாதனம்

சாவிகளே இல்லாமல் போய்விடும். டிஜிட்டல் சாதனத்தினால் திறக்கலாம் மூடலாம்.

மாயக் கண்ணாடி அணிந்துகொண்டு வர்சுவலாக எங்கு வேண்டுமானாலும் போகலாம்- அதாவது பார்க்கலாம். 

இயற்கை வாயு, காற்று, சூரிய ஒளி, போன்றவற்றால் சுத்தமான மின்சாரம் கிடைக்கும்.

விட்டுக்குத் தேவையான மின்சாரத்தைப் பேட்டரியில் சேமித்து வைக்கும் வசதி

குளிக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து மீண்டும் உபயோகிக்கும் முறை

உங்கள் ஆரோக்கியத்தைச்  சரியாகக் கண்காணிக்க மைக்ரோ சிப் உடலில் பொருத்தப்படும்.

உங்களுக்குத் தேவையான  பிரத்தியேகமான மருந்துகள் கிடைக்கும்

சோதனைச் சாலையில் தயாரித்த உங்கள் உடல் உபகரணங்கள் தயாராக இருக்கும்.

நீங்கள் பேசுவதை உங்கள்  போன் பதிவு செய்யும்

எல்லா பரிமாற்றமும் மின்னணு மூலமே நடக்கும். பணம்,செக்,கிரெடிட் கார்ட் எல்லாம் மறைந்துவிடும்.