சேய் வாசம் – ஜெயந்தி நாராயண்

 

Image result for சிறுகதை

மார்கழி மாதம்,, அருகிலுள்ள கோயிலிலிருந்து இனிமையான திருப்பாவை ஒலி கேட்டுக் கண் முழித்தாலும் எழ மனம் வராமல், குளிருக்கு இதமாகப் போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்தியபடி புரண்டு படுத்த மாலா, யாரோ தொடர்ந்தாற்போல காலிங் பெல்லை அடிப்பது கேட்டு , வேகமாக எழுந்து உடையைச்   சரிசெய்தபடி கதவைத்  திறந்தாள்.

“என்னக்கா, எம்புட்டு வாட்டி சொன்னாலும் கேக்க மாட்ற. மணி எட்டாச்சு பாரு. நா இன்னும் ரெண்டு வீடு வேல செஞ்சுட்டு வீட்டுக்கு போக வேணாவா. ஞாயித்துக்கிளம பிள்ளைங்க வீட்ல இருக்கும். அந்த மனுசனுக்கும் இன்னிக்கி ஒரு நாதான் லீவு.  வாய்க்கு ருசியா ஆக்கிப்போட்டுக் கவனிக்கத் தேவல்லயா. லீவு விட்டாலே நீ லேசுல எந்திருக்க மாட்ற”

“எந்திருச்சு என்ன செய்யப்  போறேன் செல்வி” என்று புன்னகைத்தபடியே வாஷ் பேஸின் குழாயைத் திறந்து சில்லென்ற தன்ணீரில் முகத்தைக் கழுவினாள். டீவியை ஆன் செய்தபடியே பேஸ்ட்டை ப்ரஷ்ஷில் பிதுக்கியவள்,

”சரி பொண்ணுக்கு ஒரு வாரமா உடம்பு சரியில்லன்னியே. இப்ப தேவலையா”

Image result for an young girl in chennai and exorcist

“அதுக்கு பேய் பிடிச்சுருச்சுக்கா…”

” உளறாத”

“ஆமாக்கா, அது தெரியாம ஆஸ்பத்திரிக்கு இட்டுகினு போய், ரத்தம் லாம் டெஸ்ட்டுக்கு கொடுத்துட்டு வந்தேன். அப்புறம் பக்கத்து வீட்டு அக்கா சொல்லிச்சுனு கார் எடுத்துகிட்டு காஞ்சிபுரம் போய் அங்க ஒருத்தரு கிட்ட மந்திரிக்கக் கூட்டிக்கிட்டுப் போனம். அவருதான் கண்டுபிடிச்சு மாங்காடுல ஒரு அம்மாவ பாக்க சொன்னாரு.. நேத்து மாங்காடு கூட்டிகினு போனம். அந்தம்மா இன்னும் முன்னாலயே கூட்டு வந்த்ருக்கலாம்லனு திட்டிச்சு.

ஒண்ணும் கவலப்படறதுக்கில்லக்கா.. உச்சி மண்டைல இருந்து முடி எடுத்து மந்திருச்சு மரத்துல வச்சு ஆணி அடிச்சுட்டா எல்லாம் சரியா போய்டும். என்னடா இதுக்கு இப்டி வந்துருச்சேன்னு ஒரே பேஜாரா இருந்துச்சு. இப்பத்தான் நிம்மதியாச்சு .

பேய் ஒடம்புல இருக்க சொல்லத்தான் பத்து நாளா ஒண்ணுமே சாப்பிடல”

“என்ன இப்பிடி பேசற.. ப்ளட் டெஸ்ட், என்ன ஆச்சு? டாக்டர் என்ன சொன்னார்”

“என்னக்கா வெவரம் இல்லாம பேசற.. அதுதான் பேய் பிடிச்சுருக்குனு கண்டு பிடிச்சிட்டம்ல… ரிப்போர்ட்டுலாம் வாங்கவே இல்ல.”

அவள் வேலையை முடித்து விட்டுப் போனபிறகும் அவளுடைய அறியாமை நிறைந்த வார்த்தைகள் சுத்தி சுத்தி வந்து கொண்டே இருந்தது. செல்போன் மணி சிந்தனையைக் கலைத்தது. உடன் வேலை பார்க்கும் சுமதி.

“ஈவினிங் சரியா 5 மணிக்கு உன்ன பிக் அப் பண்ண வரேன்.  ஆறு மணிக்கு அருணா சாயிராம் கச்சேரி டிக்கெட் கெடச்சது. நீ ரொம்ப நாளா ஆசைப்பட்டு கேட்டுண்ட்டே இருந்தியே”

இவளிடமிருந்து சரியாக பதில் வராமல் போகவே அவள் மறுபடியும்,

“என்னடி நீதானே ரொம்ப ஆசைப்பட்ட. அதுக்காகத்தான் கஷ்டப்பட்டு ரெண்டு டிக்கெட் வாங்கினேன்”

“இல்லடி தலை வலிக்கரது. ஜுரம் வர மாதிரி இருக்கு. நீ வேற யாரயாவது கூட்டிகிட்டு போயேன்”

“உனக்காகத்தான் இவ்வளவு மெனக்கெட்டு வாங்கினேன். சரி போ”

என்று சற்றே அதிருப்தியுடன் மறுமுனை துண்டிக்கப்பட்டது.

ஒண்டிக்கட்டையாக இருப்பதில், இந்த விடுமுறை நாட்களை தள்ளுவதுதான் இவளுக்குப் பெரும்பாடு. சுமதிதான் அப்பப்ப வெளியேபோகத் துணை. சினிமாவோ, ட்ராமாவோ, ஷாப்பிங்கோ. நாளைக்கு ஒரு நாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பாள். சமாளிச்சுக்கலாம்.

பத்து நாட்களாக சரியாக சாப்பிடாமல், சோர்ந்து படுத்தே இருக்கும் பெண்ணுக்கு ஒரு சிகிச்சையும் அளிக்காமல், பேய் ஓட்டும் முட்டாள் ஜனங்கள் மீது ஒரு பக்கம் கோபம் வந்தாலும், மறுபக்கம் பரிதாபமாக இருந்தது. ஒரு தீர்மானத்துக்கு வந்தவள், செல்வியை அலைபேசியில் அழைத்தாள். “நான் சொல்றத கேளு. சாயங்காலம் உன் பொண்ண கூட்டிகிட்டு, நீ டெஸ்ட் கொடுத்த ஆஸ்பத்திரிக்கு வந்துடு. நானும் அங்க வரேன். டாக்டர பார்த்து பேசிடலாம்”

“அதெல்லாம் வேணாம்க்கா. அது உள்ள இறங்கி இருக்கற பேய ஓட்டிட்டா எல்லாம் சரியாகிடும்.”

“வாய மூடு. நா சொல்றத மட்டும் கேள்”

மாலாவின் குரலில் இருந்த கடுமைக்குப் பலன் இருந்தது.

“சரிக்கா. கூட்டிகிட்டு வரேன்.”

Image result for சிறுகதை

ஆஸ்பத்திரியில், ரிஸல்ட்டை வாங்கிக்கொண்டு டாக்டரைப் பார்க்கக்  காத்திருந்தபோது, அந்த பெண்ணால் உட்காரக் கூட முடியல. துவண்ட கீரைக்கட்டா அம்மாமேல் சாய்ந்து கொண்டிருந்தது. மாலாவுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கப்பார்க்க மிகவும் கவலையாக இருந்தது. இவர்களுடைய முறை வந்ததும் மூவரும் உள்ளே சென்றார்கள்.

மாலா கையில் இருந்த ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர்,

“என்னம்மா டெஸ்ட் எடுத்து நாலு நாள் ஆச்சு. இப்பத்தான் ரிஸல்ட்ட எடுத்துகிட்டு வரீங்க. மஞ்சக் காமாலை வந்துருக்குமா இந்த பொண்ணுக்கு.  நாலு நாள் முன்னாலயே மருந்து கொடுக்க ஆரம்பிச்சு இருக்கலாமில்ல.  ஏம்மா உங்கள பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க. எடுத்து சொல்ல மாட்டீங்களா”

“இப்ப என்ன செய்யறது டாக்டர்”

“என்ன பண்றது. ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க வேண்டியதுதான்.”

டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கிக் கொடுத்து  அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வண்டியை எடுத்தவள் வீட்டுக்கு அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலில் கூட்டம் குறைவாக இருப்பதைப் பார்த்து வண்டியை ஓரமாக நிறுத்தினாள். ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணர் புன்னகையுடன் காட்சி தந்தார்.  எப்பொழுதும் காணும் புன்னகைதான், இன்று வித்தியாசமாக தனக்கு எதோ செய்தி சொல்வதுபோல் தோன்றியது. அவளும் அவனைப் பார்த்தபடியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தாள்.  மாயக் கண்ணன் விடுத்த செய்தி அவளுக்குப் புரிபடவில்லை.

வீட்டுக்கு வந்த உடன் செல்விக்கு போன் செய்து மருந்தை ஒழுங்காகக் கொடுத்தாளா என்று விசாரித்து விட்டு, மதியம் செய்த சாதத்தில் சிறிது மோரைவிட்டு சாப்பிட்டுவிட்டுப் படுத்தாள். புரண்டு புரண்டு படுத்தாலும் வெகு நேரம் வரை தூக்கம் வரவே இல்லை.  தூங்கின மாதிரியே இல்லை. அலாரம் அடித்து திடுக்கிட்டு எழுந்தாள். ஐந்து மணி. இப்ப எழுந்தாதான் சரியா இருக்கும், ஏழு மணி பஸ்பிடிக்க.

பல் தேய்த்து காபி போட்டு எடுத்துக் கொண்டுவந்து சோபாவில் அமர்ந்தாள். எது எப்டி போனாலும், காலை காபியை நிதானமாக டபரா டம்ப்ளரில் ஆத்தி மெதுவாக ரசித்து ருசித்து குடிக்க வேண்டும் மாலாவுக்கு. காபியை குடித்து குக்கரை வைத்துவிட்டு காய் நறுக்க உட்கார்ந்தபோது, அழைப்பு மணி சத்தம். செல்விதான். உள்ளே நுழைந்தவள், “அக்கா அந்த அருவாமனைய கொடுக்கா, இந்த கத்திலாம் சரிப்பட்டு வராது என்றபடியே  பீன்ஸ் காம்பை கிள்ள ஆரம்பித்தாள்.

“எப்படி இருக்கா பொண்ணு. ராத்திரி நல்லா தூங்கினாளா”

“நைட்டு கஞ்சி போட்டு கொடுத்தேன்க்கா, அப்பால டாக்டர் கொடுத்த மாத்திரைய கொடுத்தேன். தூங்கிருச்சு. இப்ப கூட நல்லா அசந்து தூங்கிட்டு இருக்கு.”

“மாத்திரைய விடாம கொடுக்கணும் சரியா”

“எங்க அக்கா கூட திட்டிச்சுக்கா, பேய் பிடிச்சுருக்க சொல்ல என்னாத்துக்கு டாக்டர்கிட்ட இட்டுகினு போய் மருந்தெல்லாம் வாங்கி கொடுக்கறேன்னு. அப்பால இந்த மனுசன்  வந்து எல்லாம் சத்து வரத்துக்குதான் மருந்து கொடுத்திருப்பாங்க, பரவால்ல சாப்டட்டும்னு   சொன்ன பெறவுதான் அடங்கிச்சு. நாளைக்கி மறுபடியும் மாங்காடு கூட்டிக்கினு போகனும்க்கா அத்த”

“உன்னயெல்லாம் திருத்த முடியாது.   ஆனால் டாக்டர் கொடுத்த மாத்திரையை விடாமகொடுக்கணும் சரியா? எனக்கு இப்ப நேரமாச்சு ஆபிஸுக்கு”

“சரிக்கா. கோபப்படாத. அதுக்கு குணமாகனும் அம்புட்டுதான். “

செல்வி உதவியுடன் மற்ற வேலைகளை முடித்து, வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பி பஸ் ஸ்டாப் வந்த போது, அங்கு அவளுக்கு முன் வந்திருந்த சுமதி அவளைப் பார்த்து முறைத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..

“ஸாரிடி ” என்று ஆரம்பித்து செல்வி கதையைச் சொன்னாள்.

“இத அப்பவே சொல்லவேண்டியதுதானே, செம்ம கடுப்பா இருந்தேன் நேத்து நைட்டெல்லாம், டிக்கட் வேஸ்ட்டா போயிருச்சேன்னு “

பஸ்ஸில் ஏறிய பிறகும் அவர்களுடைய பேச்சு செல்வியின் அறியாமையைப் பற்றியே இருந்தது.

“கண்டிப்பா இதுக்கு ஏதாவது  செஞ்சே ஆகணும் சுமதி”

வார இறுதிக்குள் அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

சனிக்கிழமை காலை வேலைக்கு வந்த செல்வியிடம், “செல்வி உன் பொண்ண கொண்டு வந்து இங்க விடு. ஒரு மாசம் லீவு போட்டுருக்கேன். நான் பாத்துக்கறேன்.

“உனக்கெதுக்குக்கா தேவல்லாத வேலைல்லாம். அத்த எங்கக்கா கிட்டத்தான் விட்ருக்கேன், இன்னும் ரெண்டு தபா மாங்காடு கூட்டிகிட்டு போய்ட்டு வந்தா எல்லாம் சரியாயிடும்க்கா”

“நான் சொல்றத கேளு. என் கிட்ட விடு நா நல்லா பாத்துக்கறேன் “

‘வேணாங்க்கா .”

“என் மேல நம்பிக்கை இல்லியா?”

“அதுக்கில்லக்கா, நீ பேயோட்டல்லாம் அனுப்ப மாட்ட”

“பேயெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் , முதல்ல நான் ஒரு வாரம் டாக்டர் கொடுத்த மருந்த கொடுத்து பத்தியமா சாப்பாடு போட்டு கவனிச்சுக்கறேன் .”

“சொன்னா கேக்க மாட்ட. நாதான் நெதம் இங்கிட்டு வரனே. நானும் பாத்திக்கறேன்”

“நீ எப்பவும் போல வீட்டு வேலைய கவனிச்சுகிட்டா போதும். அவள நான் பாத்துக்கறேன்.”

வீட்டு வேலையை முடித்து விட்டு , மதியம் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தாள் செல்வி. கிள்ளி எடுக்கச் சதையில்லாமல் கதவைப் பிடித்தபடி இருந்த அந்தப்  பெண்ணுக்கு பன்னிரெண்டு  வயசு இருக்கும். ஆஸ்பத்திரியில் அன்று இருந்த டென்ஷனில் சரியாக கவனிக்கவில்லை.  அழகான, ஆனால்,சோர்வான கண்கள், தீர்க்கமான மூக்கு, பயந்த முகம். பார்த்த உடன் மாலாவுக்கு பிடித்து விட்டது.

“இங்க வாம்மா”

சற்று மிரட்சியுடன் செல்வியை பார்த்த அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள். பயத்துடன் கூடிய வெட்கத்தில் புன்னகைத்த அந்தப்  பெண்ணைப் பார்த்து , ” உன் பேர் என்ன?”

“மீனா”

ராகவ் உயிரோடு இருந்து, அவனுடன் மணமாகி காலாகாலத்தில் குழந்தை பிறந்திருந்தால் , இந்த மீனா வயசிருக்கும். அதுவும் அவன் ஆசைப்படி பெண்ணாக பிறந்திருந்தால்….   கண்களை விட்டு நீர் வெளியே வராமல் இருக்கப் பிரயத்தனப்பட்டாள்.

உயிருக்கு உயிராகக்  காதலித்த ராகவ் கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன்பு, ஒரு சாலை விபத்தில் இறந்ததும், அதற்குப் பிறகு அவளுடைய அப்பாவும் அம்மாவும் எவ்வளவு வற்புறுத்தியும் இவள் வேறு யாரையும் மணக்க மறுத்ததும், அந்தக் கவலையிலேயே அவள் பெற்றோர் ஒருவர்பின் ஒருவராகக் காலமானதும் முடிந்த கதை.

“செல்வி நீ போய்ட்டு நாளைக்கி வேலைக்கு வா. கவலைப்படாம போ, நான் நல்லா கவனிச்சுக்கறேன் “

மீனாவிற்கென பிரத்தியேகமாக வாங்கித்  தன்னுடைய கட்டிலுடன் இணைத்துப்  போட்டிருந்த கட்டிலில் அவளைப் படுக்க வைத்தாள் . அந்தப் பெண் மிகவும் தயக்கத்துடனேயே அதில் அமர்ந்தது.  சிறிது நேரத்தில் தன்னை அறியாமல் அசதியில் தூங்கி விட்டது.

ஃபேனை மிதமான வேகத்தில் வைத்து விட்டு , சத்தம் ஏற்படுத்தாமல் கதவைச் சாத்திக்கொண்டு வெளியேவந்தாள்,

ஒரு வாரம் போனதே தெரியவில்லை.  மீனா மாலாவிடம் ரொம்ப நெருக்கமாகிவிட்டாள். டாக்டரிடம்  கொண்டு காண்பித்து, அவளுக்கு நேரத்துக்குச் சாப்பிடக் கொடுத்து, அவளுடன் கதை பேசிச் சிரிக்க வைத்து, மொத்தத்தில் மாலாவுக்கு இது முற்றிலும் புது அனுபவமாக இருந்தது.

மேலும் பத்து நாட்கள் நன்கு கவனித்ததில் மீனா உடல் முற்றிலும் தேறிவிட்டாள். அடுத்த நாள் வேலைக்கு வந்த செல்வியிடம்,

”இங்க பாரு செல்வி, மீனாக்கு நல்லா குணமாயிடுச்சு. இன்னிக்கி வீட்டுக்குக் கூட்டிகிட்டுப் போ”

“ரொம்ப நன்றிக்கா. நாகூட இம்புட்டு நல்லா கவனிச்சுருக்க மாட்டேன், பெத்த பிள்ளைக்குமேல கவனிச்சக்கா, எனக்கும் நல்லா புத்தில ஏர்றமாதிரி புரிய வச்ச. இனிமேட்டு பேய் அது இதுன்னு போகமாட்டேன். என் பிள்ள உசிர காத்த தெய்வம்க்கா” என கண்ணீருடன் காலில் விழப்போனவளை எழுப்பி,

“லூசு மாதிரி உளறாம குழந்தைய கூட்டிக்கிட்டு போ. கவனமா பாத்துக்கோ, மறுபடியும் உடம்புக்கு ஏதும் வராம பாத்துக்க. சனி ஞாயிறுல கொண்டு விடு. நாங்க ஜாலியா விளையாடுவோம், பீச்சுக்கு போவம், இல்ல கண்ணம்மா” என்றபடி மீனாவின் கன்னத்தைத் தட்டினாள். வெட்கத்துடன் அவளைப் பார்த்துச் சிரித்த மீனாவை அணைத்து முத்தமிட்டு,

”உனக்கு இங்க எப்ப வரனும்னு தோணுதோ அம்மா கூட வந்துடு சரியா”

மீனாவும் செல்வியும் போனபிறகு வீடு வெறிச்சோடிக் கிடந்தது. ஏதோ யோசனையில் வெகு நேரம் அமர்ந்திருந்தவளின் சிந்தனையை காலிங் பெல் சத்தம் கலைத்தது. கதவைத் திறந்தவுடன், அங்கு நின்ற சுமதி,

“என்னடி இவ்வளவு நேரமா பெல் அடிக்கறேன். உன்னய பார்த்து நாளாச்சேனு கிளம்பினேன். நேத்துதான் பையன் யு.எஸ் கிளம்பி போறான். ரெண்டு வாரமா ரொம்ப பிஸியா போச்சு. சரி இன்னிக்கி வந்து உன்ன பார்த்துட்டு போகலாம்னு. எப்ப ட்யூட்டில ஜாயின் பண்ணப் போற”

Related image

“நல்லா போச்சுடி. அருமையான அனுபவம். ராகவ் போனதுக்கு அப்புறம் எதுலயுமே ஒட்டுதல் இல்லாம இருந்த என்னை இந்த பெண் கூட இருந்த நாட்கள் சுத்தமா மாத்திருச்சு. இந்த ஒரு வாரமா ஒரு யோசனை. பணம் காசு நிறைய இருக்கு. முதல்ல ஒரு குழந்தைய தத்து எடுக்கலாமான்னுதான் யோசிச்சேன்.  அப்புறமா என்ன தோணித்துன்னா , தி நகர்ல அப்பாவோட ரெண்டு க்ரவுண்ட் வீட்ட ஒரு சின்னப் பள்ளிக்கூடமா கட்டி, அஞ்சு க்ளாஸ் வரைக்கும் மட்டும் இருக்கறமாதிரி செய்யாலாமான்னு தோண்றது. இந்த வேலைய ராஜினாமா பண்ணிட்டு நிறைய நேரம் குழந்தைகளோட இருக்கற மாதிரி இருந்தா நல்லா இருக்குமே. நீ என்ன சொல்ற”

கண்களில் நீரோடு, அவள் பேச்சை  ஆமோதித்த சுமதி, “இந்த மாதிரி ஏதாவது ஒரு மாற்றம்தாண்டி உங்க அப்பா அம்மாவும் உன் கிட்ட எதிர்பார்த்தாங்க.  அவங்க இருந்தா சந்தோஷப் பட்டிருப்பாங்க. பரவால்ல இப்பவாவது தோணித்தே.  வா நல்ல விஷயமா சொல்லியிருக்க,கோயிலுக்குப் போகலாம். நான் அப்டியே வீட்டுக்கு போறேன். எப்ப ஆபிஸ் வருவ?”

“திங்கக்கிழமை ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்”

முகம் கழுவி, புடவை மாற்றி, வீட்டைப் பூட்டிக்கொண்டு இருவரும் கிளம்பினர்.

Image result for yashoda and devakiகரு நீலப் பட்டுடுத்திய கண்ணனுடைய மோகனப் புன்னகையின் அர்த்தம் புரிந்ததுபோல் இருந்தது அவளுக்கு. அவனைப் பெற்ற
தேவகியை விட வளர்த்த யசோதைதானே பாக்கியம் செய்தவளாக இருந்தாள்.

 

சொற்பிழை…! —நித்யா சங்கர்

Image result for cooking master anime

 

பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காய் போன கதையாய்
அல்லவா போய்விட்டது..?

நான், ‘உதவாக்கரை.. சாமர்த்தியமில்லாதவன்..’ என்றெல்லாம்
அர்ச்சனை செய்து கொண்டிருந்த என் மகன் திலீபன் திடீரென ஒரு
வாரம் முன்பு ஒரு நல்ல செய்தியோடு வந்தான்.

‘அப்பா.. ‘பக்கத்து வீதியிலே உள்ள ராம விலாஸ் ஓட்டல்லே
டிபனும், சாப்பாடும் எவ்வளவு ருசியாக இருக்கு. எல்லா
ஜனங்களும் அந்த ஹோட்டலைப்போய் மொச்சுக்கறாங்க..
நம்ம ஓட்டலுக்கு யாருமே அதிகமா வறதில்லே.. சரியானபடி
வியாபாரம் ஆறதில்லே… இப்படியே போனா ஓட்டலை இழுத்து
மூடவேண்டியதுதான்…’ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டே
இருப்பீங்களே… இன்னிக்கு அங்கே போய் மெதுவாக விசாரித்து
அங்கிருந்து ஒரு குக்கை நம்ம பக்கம் கொண்டு வந்துட்டேன்.
என்ன.. அவங்க குடுக்கற சம்பளத்தை விட ரெண்டாயிரம்
ரூபாய் அதிகம் கொடுக்கணும்.. அவ்வளவுதான்.. இனிமே
பாருங்க.. நம்ம ஓட்டலுக்கு வரப் போகும் கூட்டத்தை..’ என்றான்.

‘ரெண்டாயிரம் அதிகம்’.. என்பது சிறிது அதிகம்தான். ஆனா
வியாபாரம் அதிகமானா அதை ஏறு கட்டிடலாம்… ‘ என்று
கணக்குப் போட்டு, ‘அப்படியா.. வெரிகுட்.. அவன் எப்ப ஜாயின்
பண்ணறான்’ என்றேன்.

‘நாளைக்கே…’ என்றான் திலீபன்.

அடுத்த நாளே அந்த புதிய குக் எங்கள் ஓட்டலில் வந்து
சேர்ந்தான். அன்று அதிசயமாக எங்களுடைய லோகல்
கவுன்ஸிலரிடமிருந்து வேறு ·போன். ‘மிஸ்டர் ஆதிமூலம்..
நான் சிபாரிசு பண்ணின பையன் உங்க ஓட்டல்லே இன்னிக்கு
சேர்ந்திருக்கான் போல் இருக்கு… அவனுடைய திறமையைப்
பார்த்து நீங்க சம்பளமும் டபுளா கொடுக்க ஒத்துக்கிட்டீங்க
போல இருக்கு. தாங்க் யூ… பையனை நல்லா கவனிச்சுக்குங்க..’
என்றார். பெருமையாக இருந்தது எனக்கு.

இதோ ஒரு வாரம் ஓடி விட்டது.. அந்தப் பையன்
உருப்படியாக சமையல் ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை.
டிபன், சாப்பாடு குவாலிடியில் ஒரு முன்னேற்றமும் இல்லாமல்
அப்படியே இருந்தது. ஜனங்கள் இன்னும் அந்த ராமவிலாஸையே
மொய்த்துக் கொண்டிருந்தார்கள்.

நான் சிறிது கோபத்துடன் அந்தப் பையனைக் கூப்பிட்டு
விசாரித்தேன்..’என்னப்பா அந்த ஹோட்டல்லே எல்லாம் ருசியாகச்
சமைச்சுட்டிருந்தே.. இங்கே வந்து உன் திறமையைக் காட்டவே
யில்லையே… இத்தனைக்கும் அங்கே கொடுத்த சம்பளத்தை விட
அதிகமா கொடுக்கிறோமே…’ என்றேன்.

‘ஐயா.. என்ன சொல்றீங்க.. சமையலா..? எனக்கு ஒன்றுமே
சமைக்கத் தெரியாது. அந்த ஓட்டலிலும் வரும் கஸ்டமர்ஸ¤க்கு
தண்ணி கொண்டு கொடுப்பேன். அதையேதான் இங்கேயும்
செய்து கொண்டிருக்கிறேன்…’ என்றான்.

எனக்கு அப்படியே தலை சுற்றி மயக்கம் வரும்போல்
இருந்தது.

‘அந்த ஹோட்டல் மானேஜரை உங்களுக்குத் தெரியுமே..
அவரிடம் விசாரியுங்களேன்…’ என்றார் இதையெல்லாம்
கவனித்துக் கொண்டிருந்த என் நண்பர்.

·போன் போட்டேன்.. ‘என்னப்பா.. இப்படி பண்ணீட்டே..
உங்க ஹோட்டல்லே வேலை செய்துட்டிருந்த ஒரு பையனை
நாங்க சேர்த்துண்டோம்.. அவனுக்கு சமையலைப் பத்தி
ஒன்றுமே தெரிய மாட்டேங்குதே..’

‘….’- மறுமுனையிலிருந்து வந்த பதில் கேட்டு என் முகம்
அஷ்ட கோணலாக மாறியது.

‘ஓகே.. தாங்க்ஸ்..’ என்று வைத்தேன் பெருமூச்சுடன்.

‘என்னாச்சுப்பா..?’ என்றார் என் நண்பர்.

‘அதையேன் கேட்கறே..? என் பையனுக்கு சில
வார்த்தைகள் சரியாக உச்சரிக்க வராது.. ‘சீ·ப்’ குக்குன்னு
கேட்கறதுக்கு பதிலா ‘சீப்’ குக்குன்னு கேட்டிருக்கான்.
அவர்களும் ஒன்றுக்கும் உதவாத இந்தப் பையனைக்
காட்டியிருக்காங்க.. குக்கிங் டிபார்ட்மென்டில் இருந்தானே
ஒழிய இந்தப் பையனுக்கு ஒண்ணுமே தெரியாதாம்.
கவுன்ஸிலர் சிபாரிசு வேறே.. வெளியிலே அனுப்ப முடியாது.
இவனுக்குத்தான் அங்கேயுள்ள சமையல்காரங்கள்ளே ரொம்ப
கம்மியான சம்பளமாம். அதனாலே இவனை கைகாட்டி-
யிருக்காங்க. என் பையன் சரியா விசாரிக்காம அவனைக்
கூட்டிட்டு வந்துட்டான். ஒரு சொற்பிழையினாலே வந்த
அவஸ்தையைப் பார்த்தீங்களா.. நமக்கு வந்துட்டிருக்கிற
நஷ்டம் போதாதுன்னு இது ஒரு தண்டம்..’ என்றேன் ஈன
சுரத்தில்.

‘இப்போ என்ன செய்யப் போறீங்க…’

‘வேதாளம் கதைதான்… கவுன்ஸிலர் ஆளு.. வெளியிலே
அனுப்ப முடியாது. அந்த ஹோட்டல்காரங்க மெதுவாக
வேதாளத்தை நம்ம தோள்ளே இறக்கிட்டாங்க… நாம அதை
எப்படி இன்னொருத்தர் தோள்ளே இறக்கறதுன்னு இப்போ
யோசிக்கணும்…’என்று இருக்கையில் சோர்ந்து உட்கார்ந்தேன்.

 

 

நந்து – ஜெயந்தி நாராயண்

 

Image result for srirangam streets in 1970s

“அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே”

ஒவ்வொரு தடவையும் அவசர அவசரமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போய் பெருமாளை சேவிச்சு ராத்திரியே ஊர் திரும்பற மாதிரி ஆயிடறது. அதனால இந்த தடவை நாலு நாள் தங்கி, தண்ணி இருக்கோ இல்லியோ, கொள்ளிடம் போய் ஒரு குளியல், காட்டழகிய சிங்கர் கோயில், காலாற அம்மா மண்டபம், போற வழில ராகவேந்திர மடம், அப்புறம் தெற்கு வாசல்ல அந்த பக்கோடா கடை இருக்கான்னு பாக்கனும், ரெங்கராஜா தியேட்டர்ல ஒரு படம், தேவில ஒரு படம், அப்புறம் கிடைத்த நேரமெல்லாம் ஸ்ரீரங்கம் கோயிலையும் வீதிகளையும் சுத்திச்சுத்தி சுவாசிக்கனும்.

பாய்ஸ் ஹைஸ்கூல் போய்ட்டு அப்டியே மறக்காம ஆர் எஸ்வி பாத்துட்டு வரனும். என்ன மனுஷம்ப்பா.. கணக்கை அப்டியே ரத்தத்துல ஏத்தினவராச்சே.

யாரையும் துணைக்கு கூட்டிக்கல. தனிமைல அப்டியே பழைய நினைவுகளோட சஞ்சரிக்கறச்ச யார் கூடஇருந்தாலும் தொல்லைதான்.

“என்ன திடீர்னு” என்று கேட்ட கீதாவிடம்

“தினசரி வாழ்க்கைல இருந்து ஒரு மாற்றம் வேண்டிருக்கும்மா. ரொம்ப நாளா நினச்சுண்டு இருந்தேன். நேத்து சடார்னு தோணித்து. போயிட்டு வந்துடலாமேன்னு கெளம்பிட்டேன்”.

தானும் கூட வரட்டுமான்னு கீதா கேக்கல. எனக்கான இடத்தை அவளும், அவளுக்கானத நானும் ஆரம்பத்துல இருந்தே கொடுத்துப் பழகிட்டோம்.

திடீர்னு புறப்பட்டதால ட்ரெயின்லாம் யோசிக்கல. பஸ்ஸப் பிடிச்சு திருவானைக்கால இறங்கி ஆட்டோ பிடிச்சு ஸ்ரீரங்கம் வந்து ரூம் போட்டாச்சு.

பல்ல தேச்சுட்டு, தோள்ள துண்டப் போட்டுண்டு கொள்ளிடம் கிளம்பினேன். கீழ வாசல்கிட்ட போறச்ச,

“டேய் கண்ணா எப்டிடா இருக்க” என்று தோளில் தட்டியவரை திரும்பி பார்த்தேன்.
நெரச்ச தலையும் ஒரு மாச தாடியோட அடையாளம் தெரியல.

“என்னடா முழிக்கற? நாந்தாண்டா ரெங்கன்… ரெங்குடு”

அஞ்சாறு வருஷம் முன்னால ஊருக்கு வந்தப்ப பாத்தது. அதுக்குள்ள இப்டி கெழவனா போய் அடையாளமே தெரியலயே.

“ரெங்குடுவா என்னடாது தாடியும் வேஷமும்”

“சோம்பேறித் தாடிதான். வி.ஆர்.எஸ் கொடுத்துட்டேன்.. ஆபிஸா கொள்ள போறது தினமும் ஷேவ் பண்ண அதான் அப்டியே விட்டாச்சு. ஆமா, நீ எங்கடா இந்தப் பக்கம்?”

“சும்மா நாலு நாள் இங்க தங்கி இருந்துட்டு போலாம்னு”

“சும்மா நாலு நாளா?” நம்பிக்கையில்லாமல் பார்த்தான்.

“ஆபிஸ் இல்லியோ”

“அது எப்பவும்தான் இருக்கு. சும்மா ஒரு மாறுதலுக்கு”

“ஏகாதசிம் போது இப்டி நாலு நாள் வந்திருக்கப்டாதோ. பெருமாள நன்னா ஆயிரக்கால் மண்டபத்துல சேவிச்சுருக்கலாம். வேடுபறி மாதிரி கம்பைன் பண்ணிண்டு வந்திருக்கலாம்”

“இல்ல சாதாரண நாள்ல வந்து இங்க தங்கிட்டு போலாம்னுதான்” என்றவனை விசித்திரமாக பார்த்து விட்டு

“சரிடா நா வரேன். மத்யானம் கும்மோணம் கிளம்பறேன். மச்சினி பொண்ணுக்கு ரெண்டு நாள்ள கல்யாணம். நாந்தான் எல்லா ஏற்பாடையும் கவனிச்சுக்கறேன்”

அவன் போன பின் கிழக்கு ரெங்கா தாண்டி, கொள்ளிடம் நோக்கி போறச்ச கண்லபட்ட கழுதைய கூட பாசமா பார்த்தேன்.

எப்பவும் போல் கணுக்கால் தண்ணியில் கொள்ளிடம். அங்கே காய்ந்திருந்த புல்வெளியில்தான் கிரிக்கெட் விளையாடுவோம். நந்து போட்ட பவுன்ஸர்ல வடக்கு சித்திரை வீதி மொட்ட முரளி மண்டைல அடி பட்டு அவன் பொழச்சதே பெரிய விஷயமா போச்சு. அவனோட அப்பா வந்து எங்க வீதில போட்ட சத்தத்துல நானும் நந்துவும் அப்பலேர்ந்து கிரிக்கெட் மட்டயக்கூட தொடபயந்தோம்.

ஏதோ நினைவுகளுடன் தண்ணீரிலேயே ரொம்ப நேரம் உட்கார்ந்து விட்டு பின் நிதானமாக ஒரு குளியல் போட்டு கரையேறினா ஒரே பசி. ரூமுக்கு போய் ட்ரஸ்ஸ மாத்திண்டு சாப்டுட்டு அப்டியே படுத்தவன் நல்லா தூங்கிட்டேன்.

Srirangam olden days vaganam

ரெண்டு மணி நல்ல வெயில். இப்ப போனா பெருமாள் சேவையாகுமேன்னு கிளம்பினேன். பெருமாள் சன்னதில நல்ல கூட்டம். இது வேலைக்காகாதுன்னு கம்பத்தடி ஆஞ்சனேயர் கிட்ட சித்த நாழி உட்கார்ந்திருந்திட்டு அப்டியே ப்ரதக்‌ஷனமா வந்து சொர்க்கவாசல் கிட்ட பல்லிய பார்த்துட்டு தாண்டினப்ப, சின்ன வயசுல அந்த வழியா இராப்பத்தும் போது ஆழ்வார ஏளப் பண்ணிண்டு போனது ஞாபகம் வந்தது. அரைப் பரீட்சை லீவு, நானும் நந்துவும் கோயிலே கதின்னு இருப்போம். அப்ப மட்டுமே கிடைக்கற செல்லூரப்பம்க்கும் பல்லை உடைக்கும் உருப்படி என்ற பட்சணத்துக்கும் ஏக டிமாண்ட். தாத்தாக்கு கூட அம்மா அம்மியில் பொடி பண்ணிக் கொடுப்பா.

மெல்லிய புன்னகையுடன் வெளியேவந்து வலது புறமாகவந்து மேலப்பட்டாபிராமன், தன்வந்திரி  தாண்டி தாயார் சன்னதிக்குப் போனால், ப்ராட்டி, பெருமாள் அளவு ரொம்ப பிகு பண்ணிக்காமல் அருமையான தரிசனம் தந்தாள். மஞ்சக் காப்பை தாமரை இதழில் சுத்திக் கொண்டு வெளியே வந்தபோது பங்குனி உத்திர மட்டயடி உத்ஸவ நினைவுகளில் புன்னகையுடன் படிகளில் அமர்ந்தேன். தாயார் சன்னதி கோஷ்டி, பெருமாள் மேலே பழங்ளை விட்டு எறிந்த போது, ஒரு முறை பெருமாள் பக்கத்திலிருந்த என் மேல் சொடேரென்று மேலே விழுந்த பழக்கலவையும், அந்த வேகத்தில் அதிர்ந்து பிறகு அன்று முழுவதும் நினத்து நினைத்து நானும் நந்துவும் சிரித்துக் கொண்டே இருந்ததும் ஞாபகம் வர என் புன்னகை இன்னும் விரிந்தது.

“நீ..நீங்க கண்ணனில்ல”

லேசாக காதுகளிடை நரை, வைரத்தோடு, வைர மூக்குத்தி மினுமினுக்க, அந்த பளீர் சிரிக்கும் கண்கள். அட கமலா.

“கமலாதானே “

“ஆமா நீங்க எங்க இருக்கேள் இப்ப? ஆத்துல அழச்சுண்டு வரலியா” என்றபடியே, கண்கள் என்னைச் சுற்றித் தேடின.

“இல்ல நா மட்டும்தான் வந்தேன். சென்னைலதான் இருக்கேன். நீ எங்க இருக்க? எத்தன பசங்க?”

“ நா பெங்களூருல இருக்கேன். ஒரே பொண்ணு. போன மாசம்தான் கல்யாணம் ஆச்சு”

அவள்  ஏதோ கேள்விகள் கேக்க இயந்திரத்தனமா பதில் சொல்லிண்டே இருக்க மனசு பழய நினைவுகளில்.

நந்து ரொம்ப ஆசைப்பட்டான் கமலா மேல. ஆனா சொல்ல பயம். அவ பார்வைல இருந்து எங்களால எதுவும் கண்டு பிடிக்க முடியல. வேலை கிடச்சவுடனவேணா அம்மாகிட்ட சொல்லி அவாத்துல கேக்க சொல்லலாமாடான்னான். நா அவனுக்கு மேல பயந்தாங்குள்ளி. ஆமாண்டா வேலைகூட இல்லாம எப்டீன்னேன். அவன் வேலையோட வரதுக்குள்ள அவளோட கல்யாண பத்திரிகை வந்துடுத்து. அவ மனசுல என்ன இருந்ததுன்னு கடைசிவரை தெரியல. நந்துவோட சொல்லாமல்போன காதல் கதை முடிவுக்கு வந்தது.

“நந்து என்ன பண்றான்” னு அவ கேள்விக்கு நா பதில் சொல்றதுக்குள்ள,

“உன்னை எங்கல்லாம் தேடறது” என்றபடியே வந்த  இளம் பெண் அவளுடைய மகளாக இருக்கலாம்.

“சரி அப்புறம் பார்க்கலாம்” என்றபடியே நகர்ந்தாள்.

பழசை அசைபோட்டுண்டே ரொம்ப நேரம் தாயார் சன்னிதியிலேயே உட்கார்ந்திருந்துவிட்டு, வெளியேவந்து சாப்டுட்டு ரூமுக்கு வந்தேன்.

“சீசந்திக்கு காசு”

ரெண்டு பசங்க என்னைக் கடந்து சென்றார்கள். அட இன்னும் இந்தப் பழக்கம் இருக்கா?

Image result for sapparam in srirangam

நானும் நந்துவும் சின்ன வயசுல ஸ்ரீஜெயந்தியப்ப வீடு வீடா ஸ்ரீஜெயந்திக்கு காசுன்னுபோய் , வசூலித்த காசுல கலர் பேப்பர், க்ருஷ்ணர் படம், கோந்துல்லாம் வாங்கி, ஆத்துல இருந்த அட்டை, அத்தோட சிராய் அதிகம் இல்லாத விறகை தரையில் தேய்த்து மொழு மொழுன்னு ஆக்கி, அழகா ஒரு சப்பரம் பண்ணி தூக்கிண்டு, நாலு வீதியும் கோலாகலமா கத்திண்டே போனது ஞாபகம் வந்தது. என்ன க்ருஷ்ணருக்கு விளக்கு இல்லை, ஆத்துல இருந்த டார்ச்லைட்ட சப்பரத்துக்குள்ள வைக்கலாம்னு நைசா எடுத்துண்டு போனப்ப அண்ணா பார்த்து பிடுங்கிவச்சுட்டான். அதெல்லாம் அவ்ளவ் நாழி எரிஞ்சா பேட்டரி தீந்துபோயிடும்னு.

கார்த்தால எழுந்து விஸ்வரூப தரிசனம். பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், உடையவர் மற்றும் உபரி சன்னதிகள் சேவிச்சுட்டு கால் ஓஞ்சு கருட மண்டபத்துல உக்காந்தேன். அப்படியே அங்க ப்ரசாதம் வாங்கி காலை உணவ முடிச்சுண்டேன்.

இப்ப போனா ஆர் எஸ் வி ய பாக்கலாம். ட்யூஷன்லாம் முடிச்சு ஃப்ரீயா இருப்பார். போனப்ப சார் எங்கயோ வெளிலபோய்ட்டு அப்பத்தான் உள்ள நுழஞ்சார்.

“சார் நான் கண்ணன், கீழச் சித்திரை வீதி, 1986 பேட்ச்”

“ஆங்.. ஞாபகம் இருக்கு !உங்க செட்ல நீங்க ஆறு பேர் செண்டம் வாங்கினீங்களே”

“ஆமா சார் எல்லாம் உங்களாலதான்”

எப்பவும்போல லேசான வெட்கத்துடன், “அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா உங்க திறமை. வாங்கினீங்க”

இப்பவும் தினம் நாலு பேட்ச்க்கு ட்யூஷன் எடுக்கறார்.

அவர்கிட்ட அரை மணி பேசிட்டு போஸ்ட் ஆபிஸ்தாண்டி திட்டி வழியா சிந்தாமணிகிட்ட வரச்ச ஸைக்கிளில் போஸ்ட்மேன் கடந்து போனபோது சுப்பையா ஞாபகம் வருவதை தடுக்க முடியல. நீளமான தாடி, நெற்றியில் பளீரென்ற குங்குமம் விபூதி, இதுதான் சுப்பையா. போஸ்ட் இருக்கான்னு கேக்கற யாருக்கும் இல்லைன்னு சொல்ல மாட்டார். “நாளைக்கு கண்ணு” ம்பார்.. அப்ப கடிதம்தான் முக்கிய தகவல் சாதனமா இருந்தது. ஊர்லேர்ந்து மாமா, சித்தி போடற கடிதங்கள், வேலைக்கு காத்திருந்த அண்ணாவுக்கான நேர்முகக் கடிதம், இப்படி எதாவது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். திட்டி பக்கத்தில் ஒரு ஆத்துல வச்சு அவர் கட்ட பிரிச்சதுமே பாதி பேர் அங்க போய் தபால வாங்கிண்டு வந்திடுவோம்.

ஸ்ரீரங்கத்துல மட்டும் எப்பவுமே ஒரு நாளைக்கி 36 மணி நேரம் இருக்கறாப்ல எனக்கு தோணும். நீண்ட பகல். எனக்கும் வசதியா இருந்தது. வெயிலப் பாக்காம என் இஷ்டப்படி சுத்தினேன்.

Related image

மூன்று நாட்கள் வேகமா போய்டுத்து. நெனச்சபடியே காலாற ஸ்ரீரங்கம் முழுக்க நடந்து அந்த மண்ண சுவாசிச்சு கடைசியா வேணாம் வேணாம்னு நெனச்ச கீழச் சித்திரை வீதி – எங்காத்துக்கு பக்கத்துல வந்தேன். நிறைய மாறிப் போயிருந்தது. எங்காகம் அடையாளமே தெரியல. அடுத்தாப்ல நந்துவாகம் மாற்றம் ஏதுமில்லா அதே திண்ணையுடன் பூட்டப்பட்டு இருந்தது. நாங்க எல்லாம் வாடகைக்கு இருந்த வீடுகள்தான்னாலும், எங்களுடைய இளமைப் பருவம் முழுதும் கழிந்த அந்த வீட்டின்மேல் எனக்கு அலாதி ப்ரேமை.

பூட்டியிருந்த நந்துவாத்து வாசல் திண்ணையில் உட்கார்ந்தேன். ரொம்ப நாளா நானும் நந்துவும்தான் இப்டி நாலு நாள் இங்க வரனும்னு யோசிச்சுண்டு இருந்தோம்.

“இப்படி எனக்கு துணைக்கு வரமுடியாதபடி போய்ட்டயேடா. மூணு நாளா மனசுக்குள்ள பொங்கி வந்த துக்கம் பீரிட்டுவர, போன மாசம் ஆக்ஸிடெண்ட்ல இறந்துபோன நந்துவ நெனச்சு உடஞ்சு போய் அழ ஆரம்பித்தேன்.

பகல் ஒரு மணிக்கு யாருமில்லாத வீதியில் நிழலுக்கு படுத்திருந்த ஆடு என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டது.

கடிகாரம் – அழகியசிங்கர்

 

வீட்டில் கொஞ்ச நாட்களாய் கடிகாரம் அசையாமலிருந்தது.  கடிகாரம் சுவரில் சார்த்தியிருந்ததால் அசையாமல் தான் இருக்கும்.  ஆனால் பெயருக்குத்தான் அது கடிகாரமாக இருந்தது.  அதன் முட்களும் அசையாமலிருந்தன.  மாதக்கணக்கில் இப்படி அசையாமலிருந்த கடிகாரத்தை, வீட்டிலுள்ளவர்கள் அலட்சியப் படுத்தினார்கள்.

 ஆனால் அந்த வீட்டிலுள்ள வயதான பெண்மணி மட்டும் ‘ இதை எடுத்துக்கொண்டுபோய் ரிப்பேர் செய்யக் கூடாதா? ‘ என்று அடிக்கடி முணுமுணுக்காமலிருக்க மாட்டாள்.  எல்லார் காதுகளிலும் அவள் முணுமுணுப்புகள் விழுந்தாலும், யாரும் அவள் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அந்த வீடு இருந்த தெருவிலேயே கடிகாரம் ரிப்பேர் செய்யும் கடையும் இருந்தது.  கடிகாரத்தை எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்பதை தவிர வேறு ஒன்றுமில்லை.  யார் கடிகாரத்தை எடுத்துக்கொண்டு போய் அங்கு கொடுப்பது என்பதுதான் கேள்வி.

விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை

 

விசித்திர உறவு (பொன் குலேந்திரன்)

Image result for two ladies in srilanka getting married and their suicide

 

 

 

 

 

 

 

Image result for polgahawelaகொழும்பிலிருந்து வடக்கே நாற்பத்தைந்து மைல் தூரத்தில் உள்ள இயற்கை வளம் நிறைந்த கிராமம் பொல்ககாவலை. அக்கிராமத்தை வடக்கே போகும் ரயில் பிரயாணிகளில் தெரியாதவர்கள் இல்லை என்று துணிந்து சொல்லலாம்.

Sri Lanka railway Map

பெயருக்கேற்ப தென்னந்தோட்டங்கள் நிறைந்த கிராமம் அது. பிரபல்யமான புகையிரதச் சந்தி, அக்கிராமப் பெயரை பலர் மனதில் பதிய வைத்து விட்டது. புகையிரத நிலையத்தில் நின்று கிழக்கே பார்த்தால் பனிபடர்ந்த மலைத்தொடர்களையும், தேயிலைத் தோட்டங்களையும், மேற்கே பார்த்தால் தென்னம் தோட்டங்களையும் வயல்வெளிகளையும் காணலாம். கொழும்பு, கேகாலை, குருணாகலை ஆகிய நகரங்களில் இருந்து வரும் பாதைகள் ஒன்று சேரும் இடமது. கண்டிக்கும், பதுளைக்கும், யாழ்ப்பாணத்துக்கும் போகும் ரயில் பாதைகள் சந்திக்கும் முக்கிய புகையிரத நிலையமது.

Related image

ஒரு காலத்தில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக மாடாக உழைத்த மலைநாட்டுத் தமிழர்கள், குடியுரிமையிழந்து, புலம்பெயர்ந்து தம் சொந்த மண்ணாம் தமிழ் நாட்டுக்குப் போவதற்காக வந்து மூட்டை முடிச்சுக்களுடன் கடும் குளிரில் தலைமன்னார் போகும் இரவு மெயில் ரயிலின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இடம் பொல்ககாவலைப் புகையிரத நிலையம். பல இனக்  கலவரங்களின்போது யாழ்ப்பாணம் ரயிலில் செல்லும் தமிழ் பிரயாணிகளை வழிமறித்து அடித்து, அவர்களுடைய பொருட்களை சிங்களவர்கள் கொள்ளையடித்ததும் இந்தப் புகையிரத ஸ்தானத்தில்தான். பழமையில் ஊறின பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் கிராமம். அத்தகைய கிராம மண்ணில் இரு ஜீவன்களுக்கிடையே விசித்திரமான உறவு மலர்ந்து கிராமவாசிகளின் ஏளனமான பார்வைக்கு விருந்தாகுமென எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அக்கிராமத்தில்தான் எங்கள் கதையின் கதாநாயகி குணவதி நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்தாள். கதாநாயகி என்பதை விட கதாநாயகன் என்று சொல்வதே மிகப் பொருத்தமாகும். வயதுக்கு அதிகமான வளர்ச்சி. அவளுடையதோற்றமும் நடையும் குரல் வளமும் ஆண்களைப் போன்றது எனக் கிராமத்தவர்கள் பலர் வர்ணித்தது உண்டு. அவள்  பேசும்போது அவளின் குரல் ஆண் குரலா அல்லது பெண் குரலா என்று வித்தியாசம் கண்டு பிடிப்பது மிகக் கடினம். இந்தமாற்றத்தை அவளுக்கு எட்டு வயதாயிருக்கும்போதே பெற்றோர்கள் அவதானித்தனர். பெண்மைக்கு வித்தியாசமான குணாதிசயங்களையுடைய அவளை ஏளனமாக அவளுடன் படித்த சக மாணவிகள் விமர்சித்ததுண்டு.

பள்ளிக்கூடத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் நாடகங்கள் மேடை ஏறும் போது ஆண் வேஷத்துக்கு முதலில் தெரிந்தெடுக்கப்படுபவள் குணவதிதான். அவளைக் “குணா” என்ற ஆண் பெயர் கொண்டுதான் அவளது தோழிகள் அழைப்பார்கள். அதைக் குணவதி பெரிதாக எடுத்துக்  கொள்வதில்லை.  தன் ஆண்மைக் குணம் தனக்கு பாதுகாப்பிற்காகக் கடவுளால் கொடுக்கப்பட்ட வரம் என்பது அவள் கருத்து. மற்றைய பெண்களைவிடத் தன்னிடம் பழக ஒரு வித பயமும் மரியாதையும் மாணவர்கள் வைத்திருந்ததை அவளால் அவதானிக்க முடிந்தது. மாணவர்களுடன் ஏதாவது பிரச்சனைகள் வந்தால் மாணவிகள் முதலில் குணாவைத் தான் முன்னின்று வாதாடி பிரச்சனையைத் தீர்த்து வைக்க அனுப்புவார்கள். அவளின்  ஆண்மைத் தோற்றத்தினால் சில  மாணவிகள் அவள் மேல் விளக்க முடியாதளவுக்கு அன்பு வைத்திருந்தார்கள்.

“ எடியே குணா! நீ மட்டும் உண்மையில்  ஒரு ஆணாக இருந்திருந்தால் நீதாண்டி என் வருங்காலக் கணவன் என்று” சிலமாணவிகள் நகைச் சுவையாகச் சொல்லுவார்கள். ஒரு பெண்ணுக்கேற்ற மார்பக அமைப்பு, மெதுமை அவளுக்கில்லாதது சக மாணவிகளுக்கு ஆச்சரியமாயிருந்தது.

………

புகையிரத நிலையத்துக்கருகே உள்ள தபாற் கந்தோரில் தபாற்காரனாகப் பல வருடங்களாக வேலை செய்யும் குணபாலாவின் இரு பெண்குழந்தைகளில் மூத்தவள் குணவதி. குணாவின் தாய் குணாவுக்கு எட்டுவயதாக இருந்த போது விஷ ஜுரத்தால் பாதிக்கப்பட்டு, இரு குழந்தைகளையும் குணபாலாவின் கையில் பாரம் கொடுத்து விட்டு இவ்வுலகையிலிருந்து விடைபெற்றுவிட்டாள். அதன் பின் குணபாலாவின் விதவைத் தாய் சீலாவதியின் மேல் தான் இருகுழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு விழுந்தது. குணாவின் தங்கை ஞானாவதி ருதுவாகும்போது வயது பன்னிரண்டு. அப்போது பதினைந்து வயதான குணா ருதுவாகாமல் இருந்தது சீலாவதிக்கும் குணபாலாவிற்கும் பெரும்கவலை. கிராமத்து சாஸ்திரியாரிடம் அவளது சாதகத்தைக் கொண்டு போய்க் காட்டிக் கேட்டபோது அவர் சொன்ன வார்த்தைகள் அவர்களைத் திடுக்கிட வைத்தது.

“ஆணாகப் பிறக்க வேண்டிய இச்சாதகக்காரி ஏதோ முற்பிறவியில் செய்த கர்மாவின் நிமித்தம் இப்போது பெண் பிறவி எடுத்திருக்கிறாள். இதனால் இப்பிறவியில் இவளுக்குச் சில எதிர்பாராத சம்பவங்கள் வாழ்க்கையில் நடந்து, உங்கள் குடும்பத்துக்கு அவப்பெயர்கூட வரலாம். நீங்கள் தினமும் பன்சலாவுக்குப்  போய் புத்தபகவானைத் தியானித்து உங்கள் மகளைக் காப்பாற்றும்படி வேண்டுங்கள். இவளுக்குத் திருமணம் நடக்கும் ஆனால் …..” என்று முழுவதையும்விளக்கமாய் கூற விரும்பாமல் அரை குறையாகச் சொல்லிவிட்டு சாதகத்தைத் திருப்பி சீலாவதியின் கையில் கொடுத்துவிட்டார்;   சாஸ்திரியார். காலதாமதமாகி பதினேழு வயதில் குணவதி ருதுவானாள்.

………

பொல்ககாவலை அரசினர் மஹாவித்தியாலத்தில் உயர்தர வகுப்பில் படித்துக்   கொண்டிருந்தபோது அவளுக்கு எதிர்பாராத விதமாக ஒரு கிராமப் பள்ளிக் கூடத்திலிருந்து மேற்படிப்பிற்காக புலமைப்பரிசு பெற்று அந்தப்பாடசாலைக்கு மாற்றலாகி வந்த “மல்லிக்கா” வின் அறிமுகம் கிடைத்தது. படிப்பில் மல்லிகா வெகு கெட்டிக்காரி. அதுவுமில்லாமல் கலையார்வம் உள்ளவள். மல்லிகாவும் குணாவும் முதற் தடவையாகச் சந்தித்தபோது ஏதோ பலவருடங்களாக பழகியது போன்ற ஒரு உணர்வினால் அவர்கள் இருவரும் ஈர்க்கப்பட்டனர். புதிதாகப்  பள்ளிக்கூடத்தில் சேர்ந்த மல்லிகாவை மாணவிகள் ஒன்று சேர்ந்து பயமுறுத்தும் சமயங்களில் அவளை அவர்களின் தொல்லைகளிலிருந்து மீட்டு பாதுகாப்புக் கொடுத்தவள் குணா.

பள்ளிக்கூடத்தில் அரங்கேறிய “ரோமியோ ஜுலியட்” நாடகத்தில் முக்கிய பங்கேற்று ஜுலியட்டாக நடித்தாள் மல்லிகா. அவளுடன் முதல் முறையாக ரோமியோவாக நடிக்கும் சந்தர்ப்பம்  குணாவுக்குக் கிடைத்தது. அந்த நாடக ரோமியோ ஜுலியட். காதல் ஜோடிகளைப் பற்றிப் பாராட்டிப் பேசாதவர்கள் இல்லை.

நாடகத்தின் பின் அவர்கள் உறவு மேலும் வளர்ந்தது. கணிதப் பாடத்தில் தனது சந்தேகங்களை மல்லிகாவிடம் கேட்டு அடிக்கடி தெரிந்து கொள்வாள் குணா. அதைக் காரணம் காட்டி இருவரும் பாடசாலை முடிந்த பின்னரும் தனியாக வகுப்பில் சந்தித்து நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சந்திப்பால் அவர்கள் உறவு வளரத்தொடங்கியது. அந்த உறவு காலப்போக்கில் ஒரு இறுக்கமான பிணைப்பை அவர்களிடையே தோற்றுவித்தது. அந்த உறவு காதலா அல்லது இரு பெண்களுக்கிடையிலான நட்பா என அவர்களின் சினேகிதிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. குணாவை சில மாணவிகள் கேலி செய்யும்போது அவளுக்காக அவர்களுடன் வாதாடுவாள் மல்லிகா. இருவரினதும் நட்பைப்பற்றி மாணவிகள் பலர் கேலியாகப் பேசிக்கொண்டனர். இவர்கள் உறவு தலைமை ஆசிரியரின் காதில் எட்டியவுடன் அவர் இருவரையும் அழைத்து எச்சரிக்கை செய்தார்.

மல்லிகாவுடைய தொடர்பை அதிக காலம் நீடிக்க குணாவுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆரம்பத்தில் குணபாலாவை தலைமையாசிரியர் அழைத்து குணா மல்லிகா சினேகிதத்தைப் பற்றி எச்சரிக்கை செய்த போது அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவிலலை. ஏதோ இரு மாணவிகளுக்கிடையே உள்ள நட்பு என்றே கருதினான். ஆனால் அதைப்பற்றி அவன் தாய் சீலாவதி சொன்னபோது அவள் சில வருடங்களுக்கு முன் உள்ளூர் சாஸ்திரி சொன்னதை நினைவுபடுத்தினாள். அதன் பிறகு குணபாலாவின் போக்கு மாறியது.

“நீ படித்தது போதும் உன் ஆச்சிக்கு வீட்டில் உதவியாக இரு” என பாடசாலைக்குப்போகாமல் குணாவை நிறுத்திவிட்டான். குணாவுக்கு அந்தத் தடை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் தந்தைக்கும் ஆச்சிக்கும் தெரியாமல் மல்லிகாவை வயல் வெளிகளில் சந்திக்க அவள் தவறவில்லை. விசித்திரமான அவர்கள் உறவு வேறு பரிணாமம் எடுத்தது. கணவன் மனைவிபோல் மறைவாக பழகத் தொடங்கினர். குணாவின் மென்மை கலந்த வேறுபட்ட ஆண்மையினால் மல்லிகா கவரப்பட்டாள். சமூகத்தின் எதிர்ப்பு மேலும் அவ்விரு ஆத்மாக்களின் உறவை வலுப்படுத்தியதே தவிர பாதிக்கச் செய்யவில்லை. ரோமியோ ஜுலியட் காதலைப் போல் எதிர்ப்பில் மேலும் கிளை விட்டு வளர்ந்தது.

சாஸ்திரியார் சொன்னது போல் தன் குடும்ப மானத்துக்கு மகள் பங்கம் ஏற்படுத்தி விடுவாளோ என்ற பயம்  குணபாலாவை பீடித்துக் கொண்டது. குணவதியின் நடத்தையால் தனது இரண்டாவது மகளின் மண வாழ்க்கை பாதிக்கப்படுமோ எனப் பயந்தான் அவன். தாயின் ஆலோசனைப்படி கண்டியிலிருந்த தனது சகோதரியின் மகன் சோமசிரிக்கு குணாவைத் திருமணம் செய்து கொடுக்கத் தீர்மானித்தான்.

சோமசிரி இராணுவத்தில் ஒரு படைவீரன். கைநிறையைச் சம்பளம். சலுகைகள் வேறு. தந்தையினதும் ஆச்சியினதும் திட்டம் குணாவுக்கு மறைக்கப்பட்டது. திடீரென ஒரு நாள் குணபாலா குடும்பம் கண்டிக்குப் பயணமாக வெளிக்கிட்ட போது குணா ஆச்சியிடம் அங்கு போவதன் காரணத்தைக் கேட்டாள். “ உன் கண்டி மாமியும் மச்சானும் எங்களைப் பார்த்து பலமாதங்கள். ஆகிறது என்று கடிதம்போட்டிருக்கிறார்கள் அதுதான் போய் ஒரு கிழமை இருந்திட்டு வருவோம்” என மழுப்பினாள் ஆச்சி சீலாவதி. குணபாலா மௌனமாயிருந்தான்.

கண்டியில் தனக்கும் சோமசிரிக்கும் திடீர்த் திருமணம் நடக்கும் எனக் குணா எதிர்பார்க்கவில்லை. சோமசிரியை அவள் கண்டு பல வருடங்கள். பொல்ககாவலைக்கு இரு தடவைதான் அவன் தாயுடன் வந்திருந்தான். இப்போது அவன்  தோற்றத்தில்தான் எவ்வளவு மாற்றம். அவன் நடையில்கூட பெண்களைப்போல் ஒரு வகை நளினம். திருமணத்துக்குப் பின் இரண்டாவது மகளுடனும் தாயுடனும் ஊருக்குத் திரும்பினான் குணபாலா. குணாவை சோமசிரிக்கு திருமணம்   செய்துகொடுத்துக் கண்டியில் வாழவைத்து அதன் மூலம் குணா – மல்லிகா உறவைக் கத்தரித்து விட்ட சாதனையால் அவன் மனம் பெருமைப்பட்டது. குடும்ப கெளரவம் சீரழியாமல் காப்பாற்றி விட்டேனே என்ற ஒரு நிம்மதி அவனுக்கு.

………

குணபாலா நினைத்தது ஒன்று ஆனால் நடந்தது வேறு. மகளின் திருமண வாழ்க்கை எதிர்பார்த்தது போல் சந்தோஷமாக இருக்கவில்லை. திருமணமாகி ஒரு மாதத்துக்குள் தான் கணவனுடன் வாழ முடியாது. தன்னை திரும்பவும் ஊருக்குஅழைக்கும்படி மன்றாடித்  தகப்பனுக்குக்  கடிதம் போட்டிருந்தாள் குணவதி. கடிதத்தில், தன் கணவனும் மாமியும் தன்னைஅடித்துத் துன்புறுத்துவதாகவும். அவர்களுக்கு மல்லிகாவுடன் தான் வைத்திருந்த சினேகிதம் எப்படியோ தெரிய வந்துவிட்டதாகவும் அதன்பிறகு அவர்கள் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் குறை கூறி எழுதியிருந்தாள். அதுவுமல்லாமல் தனக்கும் கணவனுக்கும் இடையே தாம்பத்திய உறவு, தான் எதிர்பார்த்த அளவுக்குத் திருப்தியானதல்ல எனவும், உறவின் போது அவரின் சுயநலப் போக்கு தனக்கு அவர் மேல் வெறுப்பை வளர்த்திருக்கிறதேதவிர கணவன் மனைவி என்ற உறவை வளர்க்க வில்லை எனப் பச்சையாக நீண்ட கடிதம் எழுதியிருந்தாள்.

சோமசிரி பலாலிக்கு மாற்றலாகிப் போனது குணாவுக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது. அவளுக்கு ஒரு பிரச்சனை தீர்ந்த மாதிரி இருந்தது. இனி தான் ஊருக்குப் போகலாம், மல்லிகாவைத் திரும்பவும் சந்திக்கலாம் என மனதுக்குள் சந்தோஷப்பட்டாள். “பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து விஞ்ஞான பட்டப் படிப்புக்கு பேராதனைக்கு வருகிறேன்” என்ற மல்லிகாவின் கடிதம் கிடைத்தவுடன் குணாவுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. எவ்வளவு காலம்தான் அவளை விட்டுப் பிரிந்து இருப்பது?. அவள் தன் மிருதுவான கரங்களால் என் கரங்களை அழுத்தும் போது ஏற்படும் மனச் சந்தோஷத்திற்கு ஈடுதான் என்ன?  குணவதியின் மனம் மல்லிகாவின் ஸ்பரிசத்தைத் தேடி ஏங்கியது.

நாங்கள்  இருவரும் பெண்கள் என்பதற்காகக் கணவன் மனைவியாக வாழ சமூகம் இடம் கொடுக்காதா?  எங்கள் உரிமை மறுக்கப்படுமா? சில வெளி நாடுகளில் இந்த உறவைச் சட்டம் ஏற்கும் போது இங்கு மட்டும் ஏன் இந்த உறவுக்குத் தடை? சோமசிரியுடன் என் மனத்துக்குப் பிடிக்காத சுகமற்ற தாம்பத்திய வாழக்கையை நான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதைத் தானா சமூகம் எதிர்பார்க்கிறது? என் வாழ் நாள் முழுவதும் நான் சித்திரவதை அனுபவிக்க வேண்டுமா? இதற்கு ஒரு முடிவு வேண்டும் என மனதுக்குள் தீர்மானித்து, “ என்னைத் தேடவேண்டாம் எனக்கு சோமசிரியுடன் வாழப்பிடிக்கவில்லை” எனச் சுருக்கமாகக் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மாமியாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள் குணவதி.

கடிதத்தைக் கண்ட குணவதியின் மாமியார், பதறிப்போய் தன் தம்பிக்குத் தந்தி அடித்து வரவழைத்தாள். குணவதி எங்கே போனாள் என்பது எல்லோருக்கும் புதிராயிருந்தது. அவள் பொல்ககாவலைக்கு வந்திருக்க மாட்டாள் என்பது குணபாலாவுக்குத் தெரியும். வருமுன் மல்லிகா எங்கே என்பதைப் பாடசாலையில் விசாரித்து அறிந்த பின்னரே கண்டிக்குச் சென்றான் குணபாலா. திருமணத்துக்கு முன் குணவதிக்கும் மல்லிகாவுக்கும் இடையே இருந்த விசித்திரமான உறவைப் பற்றி தனக்கு ஏன் மூடி மறைத்தாய் என குணபாலாவிடம் கோபப்பட்டாள் அவன் தங்கை.

“திருமணத்துக்குப் பின் அவள் திருந்திவிடுவாள் என நான் நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு. இதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை” எனச் சொல்லிக் கவலைப்பட்டான் குணபாலா. “இப்போது மல்லிகா பேராதனை பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள் என விசாரித்ததில் தெரியவந்தது. எதற்கும் நாங்கள் பேராதனைக்குப் போய் மல்லிகாவைச் சந்தித்து குணா அங்கு வந்தாளா எனக் கேட்போம். நீ அதுவரை பதட்டப்படாமல் என்னோடை புறப்பட்டுவா” எனத் தங்கையை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு பேராதனைக்குப் புறப்பட்டான் குணபாலா

………

Image result for lovers committing suicide in a river in sri lankaபேராதனைப் பல்கலைக் கழக வளாகத்தினூடாக அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது மஹாவலி நதி. இரு நாட்கள் தொடர்ந்து பெய்த மழையில் நதியின் ஓட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அந்த நதியில் தான் எத்தனை பல்கலைக்கழக மாணவ மாணவிகள் தம்முயிர்களை மாய்த்துக்கொண்டனர்.  அதன் கரை  ஓரத்தில் ஒரே மாணவர் கூட்டம். ஏதாவது படகுப் போட்டி நடக்கிறதா என மாணவர்களிடம் விசாரித்தான் குணபாலா. “ அப்படி ஒன்றுமில்லை. இரு காதலர்கள் நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களின் பிரேதங்கள் கரையில் ஒதுங்கியிருக்கின்றன. போலீசும் விசாரணை நடத்துகிறது. இறந்தவர்களில் ஒருத்தி பல்கலைக் கழக முதல் வருட மாணவி அது தான் அங்கு கூட்டம்” என்று பதில் வந்தது. அதைக் கேட்டவுடன் குணபாலாவுக்குத் தலை சுற்றியது. அது குணவதியும் மல்லிகாவுமாக இருக்குமோஎன்று அவன் மனம் படபடத்தது. அவன் நிலை தடுமாறுவதைக் கண்ட அவன் தங்கை “ ஏன் அண்ணே பதறுகிறாய். வா போய் யார் என்று பார்ப்போம்” எனத் தமையனையும் அழைத்துக் கொண்டு அங்கு நின்ற மாணவர்களின் உதவியுடன் நதிக்கரைக்குச் சென்றாள்.

ஒருவரை ஒருவர் அணைத்தபடி கணவன் மனைவி போல் நதிக் கரையில் ஒதுங்கியிருந்த இரண்டு பிரேதங்களும் குணவதியுடையதும் மல்லிகாவினதும்  என்பதை அடையாளம் கண்டு பிடிக்க இருவருக்கும் அதிக நேரம் எடுக்கவில்லை. பிரேதங்களின் உடல்கள் ஊதியிருந்தன. இருவர் கழுத்துகளையும் காட்டுப் பூக்களினாலான மாலைகள் அலங்கரித்தன, ஏதோ இறப்பதற்கு முன் கணவன் மனைவியாகி மாலை மாற்றிக்கொண்டார்களோ எனப் பார்ப்பவர்களுக்கு எண்ணத் தோன்றும்..

இறந்த ஒரு பெண்ணின் தகப்பனும் மாமியும் வந்திருப்பதை அறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்,  உடனேஅவர்களை ஒரு ஓரத்துக்கு அழைத்துச் சென்று “இந்தக் கடிதம் மல்லிகாவின் அறையில், அவளுடைய சினேகிதி ஒருத்தியால் கண்டெடுக்கப்பட்ட கடிதம். இதை வாசியுங்கள். அதன் பிறகு விசாரணையைத் தொடருவோம்” என்று குணபாலாவின் கையில் கடிதத்தைக் கொடுத்தார் சப் இன்ஸ்பெக்டர். கடிதத்தை நடுங்கும் கைகளால் வாங்கித்  தங்கைக்குக் கேட்கும் விதத்தில் மெதுவாக, அழுகை நிறைந்த குரலில் வாசிக்கத் தொடங்கினான் குணபாலா.

” எங்கள் பெற்றோர், இனித்தவர், நண்பர்கள், சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு..

எங்கள் இருவருக்கும் இடையேலான உறவு விசித்திரமான உறவானாலும் ஒரு புனித உறவு. நாங்கள் ஒருவரை ஒருவர் மனமாரக் காதலித்தோம். எங்கள் உறவின் நோக்கம் உடலுறவல்ல. சமூகமும் நீங்களும் அதைத் தப்பாகக் கணக்குப்போட்டீர்கள். பௌத்தர்களாகிய நீங்கள் போன பிறவியில் நம்பிக்கை வைத்திருப்பீர்களானால் எங்கள் உறவு போன பிறவியின் தொடர்கதை. முதல் முறை நாங்கள் பாடசாலையில் சந்தித்த போது ஏதோ எங்களுக்கிடையே புரியாத ஒரு ஈர்ப்பை  உணர முடிந்தது. அதுவே காதலாக மலர்ந்தது.

எங்களின் உறவைத் துண்டிப்பதற்கு எங்களில் ஒருத்தியான குணாவுக்குக் கட்டாயத் திருமணத்தை நடத்தி வைத்தீர்கள். அவளது சொற்பகால மணவாழ்க்கை சோகம் நிறைந்தது. நாங்கள்  இருவரும் பெண்கள் என்ற காரணத்தால் கணவன் மனைவியாக சட்டப்படி திருமணம் செய்து கொண்டு வாழமுடியாது என எமக்குத் தெரியும். உங்களை விட்டு எங்குச் சென்று நாம் வாழ்ந்தாலும் சமூகம் ஏளனமாகப் பேசி எம்மை ஒதுக்கி வைக்கும். அந்தத் துன்பம் நிறைந்த, நிம்மதி அற்ற வாழ்வை இப்பிறவியில் அனுபவிப்பதை விட அடுத்த பிறவியிலாவது நாம் ஆண் பெண்ணாகப்  பிறந்து காதலராக ஒன்று சேர இறைவன் அருள் புரியட்டும். எங்கள் தற்கொலைக்கு நாங்களே பொறுப்பு.

Image result for two ladies in srilanka getting married and their suicideகடைசியாக ஒரு வேண்டுகோள். எங்கள் இருவரையும் தயவு செய்து நதிக்கரை ஓரத்தில் அருகருகே புதைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் புனித நதியின் அரவணைப்பில் சமுதாயத்தின் தொந்தரவின்றி, நாம் நீண்ட நித்திரை செய்ய விரும்புகிறோம். இந்த ஆசையையாவது சமுதாயம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

இப்படிக்கு
என்றும் சமுதாயத்தால் பிரிக்கமுடியாத
குணா – மல்லிகா

………

(குறிப்பு- 2002ம் ஆண்டு, சிறிலங்காவின் தென்பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தைக் கருவாகக் கொண்டு கற்பனையும்கலந்து  இச் சிறுகதை எழுதப்பட்டது. பாத்திரங்களின் பெயர்களும், ஊர் பெயர்களும் கற்பனையே )

*டிகாக்ஷன் போடும் கலை!* — நன்றி முகநூல்

 

முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் தவறான செய்தி வரக் கூடும் என்பதற்கு இது நல்ல உதாரணம். *டிகாக்ஷன் போடும் கலை!*  என்ற இந்தக்  கதை சுஜாதா அவர்கள் எழுதியதாகக்  குவிகத்தில் வெளியிட்டவுடன், நிறையப் பாராட்டுதல்கள் வந்தன. ‘ஆஹா’ என்று சந்தோஷப்பட்டால், சுஜாதா தேசிகன் அவர்கள் ஒரு வெடிகுண்டை எடுத்து வீசியுள்ளார். 

இது சுஜாதா எழுதியதே இல்லையாம். ஆனால் பேஸ்புக் , வாட்ஸ் அப் இரண்டிலும் வெகு நாட்களாக வலம் வருகிறதாம்.

 உடனே சுஜாதாவின் மற்றொரு சீடரான ரகுநாதனிடம் கேட்டேன். அவரும் இது சுஜாதா எழுதியது அல்ல என்று சொல்லிவிட்டார். 

சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு ஜட்ஜுகளும் சமீபத்தில் கொடுத்த தீர்ப்பு மாதிரி ஆகி விட்டது. 

தவறாகப் பிரசுரித்ததற்காக  குவிகத்தையும்  என்னையும் மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். – சுந்தரராஜன் 

 

*டிகாக்ஷன் போடும் கலை!* – சுஜாதா எழுதியதாக வலைப்பக்கங்களில் வலம் வரும் கதை 

Image result for chennai man making filter coffee

Image result for husband trying to prepare filter coffee

 

டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் –அந்தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.

மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி.வெறும் ஸ்டெரெய்ன்தான் – இரண்டு நாள் ரெஸ்ட்டாக இருந்தால்போதும் என்று டாக்டர்சொல்லிவிட்டார்.

ரெஸ்ட் என்பதில் காப்பிகூடப் போடக்கூடாது என்பதும் அடங்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால்   வழக்கம்போல் காலை ஐந்தரை மணிக்குக் காப்பி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ரிஸல்ட்டுகளை எலக்ட்ரானிக் யந்திரம் வினாடி நேரத்தில் அறிவிக்கும் காலம் இது…மனைவி காப்பி போடுவாளா, மாட்டாளா என்ற ரிஸல்ட் ஆறு மணிக்குமேல்தான் தெரிந்தது.

”டிகாக்ஷன் நீங்களே போட்டு விடுங்கள். பாலையும் ஸிம்மிலே வெச்சு நிதானமாகக் காய்ச்சி விடுங்க”என்று சொல்லிவிட்டுத் தனது தூக்கத்தின் இன்ப எல்லைக்குள் பிரவேசித்து விட்டாள்.

நான் காப்பி குடித்துப் பழகியிருக்கிறேனேதவிர போட்டுப் பழகாதவன். ஓரளவு காப்பி நடவடிக்கைகளை எட்ட இருந்து கவனித்திருக்கிறேன் என்றாலும் அதைத் தெரிந்துகொள்ள எந்த ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ளாதவன்.

மனைவி போடும் காப்பி, கிரிக்கெட் ஆட்டம் மாதிரி சில சமயம் நன்றாயிருக்கும். சில சமயம் சுமாராக இருக்கும். இன்னும் சில சமயம் நாம் எதைக் குடித்தோம் என்றே தெரியாது. மனைவி அமைவதெல்லாம்மாதிரி காப்பி அமைவதெல்லாம் டிகாக்ஷன் தந்த வரம்.

காப்பிப் பொடியை எந்த இடத்தில் வைப்பது என்ற அடிப்படை அறிவு சமையலறையில் புழங்குபவருக்கு இருக்க வேண்டும்.

மழை மறைவுப் பிரதேசம் மாதிரி கடலைமாவு பாட்டிலின் பின்னால் அதை ஒளித்து வைத்திருந்தால்  எனக்கெப்படித் தெரியும். பக்கத்து வீட்டு அம்மாள் கண்ணில் நம்ம வீட்டுப் பாட்டில் புல் காப்பிப் பொடிபட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை. அவர்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கிறது. அதன்மேலெல்லாம் நம்ம திருஷ்டிபடும் என்று அவர்கள் நினைத்துக் காரில் கண் திருஷ்டி கணபதி ஒட்டிவைப்பதில்லை.

ஆனால் நம்ம வீட்டு அற்ப காப்பிப் பொடியைப் பார்த்துப் பக்கத்து வீட்டம்மாள் கண் போட்டுவிடுவாளாம்.எல்லாம் சைக்கோ கேஸ்.

‘காப்பிப் பொடி எங்கே…’ என்றதும் அதன் இருப்பிடத்தை முணகினாள். அத்தோடு அலை வரிசை ஆ·ப்ஆகிவிட்டது.

காப்பிப் பொடியை ·பில்ட்டரில் போடவேண்டும் என்பதெல்லாம் தெரியாத மூடனல்ல நான். அதையும்மேல் பில்ட்டரில் போட வேண்டும் என்கிற அளவுக்கு விஷயம் தெரிந்த ஞானஸ்தன்.

ஆனால் எந்த  பில்ட்டர் என்பதில் ஒரு புதிர் வைத்திருந்தாள். ஒவ்வொருத்தருடைய ஹாபி எதையாவதுகலெக்ட் செய்வது. சிலதுகள் கீ செயின் சேகரிக்கும். சில பேர் இருபது ரூபாய் நோட்டாக சேகரிப்பார்கள். சிலர் காதுக்கு மாட்டிக் கொள்ளும் ஏதோ ஒரு அயிட்டம். பொட்டு தினுசுகள், பெட்டிவகையறா…

மனைவி ஒரு  பில்ட்டர் கலெக்டர். பல வகையான பில்டர்கள் வைத்திருக்கிறாள். சுமார் ஒன்பது பத்து இருக்கும். அது அது ஒழுங்காக அது அதனுடைய ஜோடியுடன் பொருத்தி குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தால் சட்டென்று நாம் எடுத்து விட முடியும்.

மேலுதுகளும் கீழுதுகளும் தனித் தனியாக ஒரு கூடையில் பளபளத்துக் கொண்டிருந்தன. மனைவி அதை ஸெட் செய்து வைப்பதற்குள்தான் ஆக்ஸிடென்ட்(?) ஆகிவிட்டது.

எந்த பாட்டத்துக்கு எது மேல் பாகம் என்று கண்டுபிடித்து அடுக்கி வைப்பதற்கே டங்குவார்    அறுந்துவிட்டது. அதற்கப்புறம் அதற்கு மூடிப் பொருத்தம் பார்ப்பதற்குள் முகூர்த்தமே முடிந்து விடும்போலாகிவிட்டது.

நல்ல வேளை, அவ்விடத்திலிருந்து, ‘இன்னுமா காப்பி போட்டாகிறது’ என்று குரல் வரவில்லை.

சற்று கணிசமான ஒரு பில்டரை தேர்ந்தெடுத்தபின், காப்பிப் பொடி போட ஸ்பூன் தேடியதில் சகலஸ்பூன்களையும் தேய்க்கப் போட்டிருப்பது தெரிந்தது. (ஆனால் நான் கொஞ்சம் சூட்சுமமூளைக்காரனாதலால் வேறு பாட்டில் ஒன்றிலிருந்த ஸ்பூனை எடுத்து உபயோகித்தேன். மேற்படிபாட்டிலில் இருந்தது மஞ்சள் தூளாதலால் அதன் வாசனை காப்பிப் பொடியில் பற்றிக் கொண்டு விடப்போகிறதென்று அலம்பிவிட்டு – சே! என்ன அவசரம், ஏன் ஆர்வம் – காப்பிப்பொடி பாட்டிலில் ஈரமாகவே நுழைத்து விட்டேன். அது ஒன்றும் சிரச்சேதத்துக்குரிய மாபெரும்   குற்றமில்லா விட்டாலும்; நாளைக்குக் கோர்ட் முன் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மனைவியின் குறுக்குக் கேள்விகளும் என்நறுக்கு பதில்களும். (கற்பனைதான்).

Image result for coffee spill in kitchen

நீங்க எந்த ஸ்பூனைப் போட்டீர்கள்?

ஏதோ ஒரு ஸ்பூன்.

மிளகாய்ப் பொடி ஸ்பூனா?

அந்த அளவு முட்டாளில்லை. மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூன். எல்லாம் அலம்பிட்டுத்தான் போட்டேன்.

துடைச்சீங்களா?

ஊம்… ஊம்…

சரியாச் சொல்லுங்க. துடைக்காமலேயே போட்டிருக்கீங்க.

சரியான ஞானக் கண்ணி!

காப்பிப் பொடியெல்லாம் பிசுபிசுன்னு… சே! அப்புறம் ஏன் பாட்டிலை மூடலை?

மஞ்சள் தூள் பாட்டிலையா? நல்லா மூடினேனே.

நான் கேட்டது காப்பிப் பொடி பாட்டிலை. எல்லா வாசனையும் போச்சு. புளியங்காப் பொடியாட்டும்   ஆயிட்டுது…

ஒரே நாளில் இவ்வளவு பெரிய மண மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடமில்லாவிட்டாலும் தப்பு,தப்புத்தானே….

இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூனை ஈரம்போக வேஷ்டியிலேயே துடைத்துக் காய்ந்திருப்பதைச் சரிபார்த்துக் கொண்டுதான் பாட்டிலில் போட்டேன்.

சே! காப்பிப் பொடிப் பாட்டிலுக்குள்ளே ஏற்கனவே ஒரு சிறு ஸ்பூன் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான்அளவு ஸ்பூனாக இருக்க வேண்டும். சில சமயம் அந்தச் சின்ன அலுமினிய பழைய ஸ்பூனை நான் சந்தித்திருக்கிறேன். சனியனைத் தூக்கி எறி முதலில் என்று கூடச் சொல்லியிருக்கிறேன். எங்க வீட்டிலேஅம்மா ஆசையாக் கொடுத்தது. பாட்டி காலத்திலிருந்து ஆகி வந்த ஸ்பூனா இருந்துண்டிருக்கு – உங்ககண்ணை ஏன் உறுத்துது எட்ஸெட்ரா.

அந்த பாரம்பர்ய ஸ்பூனாலேயே போட்டுவிடலாம். நாளைக்கு விசாரணைக் கமிஷன் எந்த ஸ்பூனைப்போட்டீங்க என்று கேள்வி கேட்டால் கேள்விக்குப் பதில் சொல்லச் சாதகமாயிருக்கும்.

ஸ்பூனால் எத்தனை போடுவது என்பது பிரசினை. வாய்ஸ் கொடுக்கலாமா? ‘நீங்க பெரிய ரஜினி? வாய்ஸ்குடுக்கறீங்களா வாய்ஸ்?’ என்று எழுப்பப்பட்ட புலி உறுமக் கூடும்.

இரண்டு ஸ்பூன் காப்பிப் பொடியை (குமாச்சியா) போட்டாயிற்று.

அப்புறம் ஞாபகம் வந்தது. பில்ட்டரில் கொஞ்சம் சர்க்கரை போடுவாள். அப்போதான் நன்றாகஇறங்குமாம்.

ஒரு குண்சாகச் சர்க்கரை போட்டேன். சாதனையில் மாபெரும் பகுதி முடிந்தது.

பாலைக் காய்ச்ச வேண்டியது. டிகாக்ஷனுடன் கலக்க வேண்டியது. சர்சர்ரென்று நுரை பொங்க ஆற்றிக்குடித்துவிட்டு அவளுக்கும் தர       வேண்டியது.

பாலைக் காய்ச்சுவதில் ஒரு சின்ன இக்கு வந்து சேர்ந்தது. சிறிது சூடானதும் பாலில் வினோதமானகொப்புளங்கள் கிளம்பி டுப், டப் என்று வெடித்தன. உடம்பெல்லம் நடுங்கிப் போச்சு. ‘இறைவா,தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வாயப்பா’ என்ற பிரார்த்தனை எடுபடவில்லை.

இத்தனைக்கும் அறிவுக்கெட்டிய விதத்தில் பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துத்தான்அடுப்பேற்றினேன்.

Image result for indian ever silver coffee tumbler spill

இதற்குள் எந்த அன்னப் பறவையின் தலையீடும் இல்லாமல் பால் வேறு நீர் வேறு என்றாகி கட்டி தனி,தண்ணி தனி, இரண்டும் கலந்த தொகுதி தனி எனக் கூட்டு சேராக் கூட்டணி மாதிரி பால் அது இஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருந்தது.

மிக அபாய கட்டம். இதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தால் காலையில் மாபெரும் மகாபாரத யுத்தம்தான் நிகழும், ஈராக்கிய கைதியை நிர்வாணமாக்கி அமெரிக்கப் பெண் ஸோல்ஜர் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துப் போன பயங்கரக் காட்சி கண் முன் வந்தது.

அமெரிக்கப் படையினரளவு கல் நெஞ்சுக்காரியல்ல என் அன்பு மனைவி என்றாலும் சேதாரம் செப்டம்பர்  இருபத்து நாலு ஆச்சே.

ஒரு லிட்டர் பாலையும் திரிய வைத்துவிட்டேனே…

இப்போதுதான் எனது பழைய எதிர்பார்ப்பு அழைப்பு வந்தது.

”இன்னுமா காப்பி போடறீங்க?”

”தோ ஆச்சு!”

”நான் வரட்டுமா?”

”வேணாம், வேணாம்” அவசரமாக அவள் வருகையை ரத்து செய்தேன்.

முக்கியமான சடங்கு ஒன்று இருக்கிறதே. கட்டி தட்டிய ஒரு லிட்டரின் பூத உடலை உடனடியாக மறைத்தாக வேண்டும். புழக்கடை செடிக்குக் கொண்டு போய்க் கொட்டலாம். ஆனால் போகிற வழியில்மனைவியின் ‘என்னத்துக்குப் புழக்கடைக் கதவைத் திறக்கறீங்க?’ என்றால் விபரீதம். கொலைசெய்வதைவிட அதை மறைப்பது கடினமான வேலை என்பார்கள். பாலைத் திரிய வைப்பதைவிட, திரிந்தபாலை மனைவிக்குத் தெரியாமல் கொட்டுவது கஷ்டமான வேலை.

அதை ஒரு வழியாக சமையலறைத் தொட்டியிலேயே ஊற்றி, பாலின் சுவடே தெரியாமல் குழாய் நீரைக்கணிசமாக ஓடவிட்டு, மேற்படி பாத்திரத்தை புத்தி சக்திக்கு எட்டியவாறு அவசரத் தேய்ப்பு செய்துஅலமாரியில் கவிழ்த்துவிட்டுப் புதிய பாத்திரத்தில் புதியதாகப் பாலை ஊற்றி ஒரு வழியாகப் பால் காய்ச்சும்படலம் முடிந்தது.

இனி பில்ட்டரில் உள்ள டிகாக்ஷனுடன் கலப்புத் திருமணம்தான்.

பில்ட்டரை எடுப்பது மகாக் கடினமான வேலை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும்பழமொழிக்குச் சிறந்த உதாரணம் – பில்ட்டரைக் கழற்றுவதுதான்.

எவ்வளவு அழுத்தமாக மூடினோமோ அவ்வளவுக்கு அந்தச் சனியனைத் திறக்க முடியாது. சூடு வேறு பற்றிக்கொள்கிறதா, ஒரு வழியாக வேட்டி, துணி, பிடி துணி என்று பல வகை சாதனைகளைப் பயன்படுத்தியும்  விட்டுத் தொலைத்துக் கொண்டால்தானே.

இடுக்கியை எடுத்து பில்ட்டரின் மேல் புறத்தைத் தாஜா செய்தேன். அப்புறம் கீழ்ப்புறம். சட்டென்று ஒருஐடியா. சூடாக இருப்பதால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கலாம்… ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துஅதில் பில்ட்டரை இளைப்பாற வைத்தேன்.

அதற்குள் மனைவியிடமிருந்து

‘என்னாச்சு! நான் வரட்டுமா?’ என்று மூன்று கால்கள். (மனைவிக்கு இரண்டுகால்கள்தான்).

”இதோ ஆச்சு!” என்று சமாதானக் குரல் தந்துவிட்டு, முழுப் பலத்தையும் பயன்படுத்தி, விபீஷணன்ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிடுங்கப் பார்த்த மாதிரிப் பெரு முயற்சி செய்து, கடைசியில் டமால்என்று ஜோடி பிரிந்தது.  செய்கூலி சேதாரம் போக கீழ் பில்ட்டரில் அரை பில்ட்டருக்கு டிகாக்ஷன்.

பிழைத்தேண்டா சாமி என்று பாலில் அதைக் கொட்டி சர்க்கரையையும் அள்ளிப் போட்டு கலக்கி மனைவிக்குக் கொண்டு செலுத்திவிட்டு, சமையலறைக்குத் திரும்புவதற்குள்,

‘தூ தூ… என்று மனைவியின்கூப்பாடு.

”அழுத்தவே இல்லியா…” கூவினாள் – காட்டாளி டார்ஸான் கூட யானைக் கூட்டத்தை இத்தனை நீட்டி,உரக்க அழைத்திருக்க மாட்டான்.

”எதை அழுத்தலையா?” செயற்கையான வீரத்துடன் காளிமாதாவிடம் மோதினேன்.

”மனுஷி குடிப்பாளா?” என்று ஆற்றிக் காட்டினாள்.

மணல் மாரி! கறுப்பு மணல் டம்ளரிலிருந்து டபராவுக்கு மாறிக் கொண்டிருந்தது.

”அழுத்தவே இல்லியா? காப்பிப் பவுடர் பூரா அப்படியே இறங்கித் தொலைத்திருக்கிறது! அழுத்தணும்னு தெரியாது?”

”எதை?”

”என் தலையை!”

மனைவி படுக்கையிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்தாள். என்னை ஒரு தள்ளுதள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் பில்ட்டரை ஆராய்ந்தாள்.

”ஒரு வாய் காப்பிப் போட லாயக்கில்லை. மாடு கன்னுப் போட்ட இடம் மாதிரி மேடையைக் கோரம்பண்ணி வெச்சிருக்கீங்க. அழுத்தணும்னு தெரியாது. மனுஷி எப்படிக் குடிக்கிறதாம்.

”எதையடி அழுத்தணும்…?”

”காப்பிப் பொடியைப் பில்டரில் போட்டுட்டு கடனேன்னு அப்படியே வென்னீரை ஊத்தினீங்களாக்கும் –வேலை முடிஞ்சிதுன்னு.”

நான் மகா சிரத்தையுடன் செய்த காரியத்தை அவள் கடனே என்று செய்ததாகக் கூறியதற்கு வருத்தம்தெரிவித்தேன்.
அதற்குள் அவள் வேறு புது பில்ட்டரை எடுத்துப் புதுசாகக் காப்பிப் பவுடரை…

”இதனுடைய மேல் பில்ட்டர்எங்கே… அட ராமா! நாலு ஸ்பூன் பில்ட்டருக்கு இரண்டு ஸ்பூன் பாட்டத்தைப் போட்டுத் தொலைச்சி காப்பிப் பொடியையும் சரியாக அழுத்தாமல்….”

”காப்பிப்பொடியை அழுத்தணுமா, சர்க்கரைகூடப் போட்டேன். நீ போடுவியே அதே மாதிரி.”

”உங்க தலை. காப்பிப் பொடியை அழுத்தி விடணும். உங்களுக்கு என்ன இழவு தெரிகிறது? நாலு ஸ்பூன்அடிக்கிற காப்பிப்பொடி பில்ட்டரில் இரண்டு ஸ்பூன் பொடியைப் போட்டு அதையும் அழுத்தாமலே…”

”அழுத்தினேனே. பில்ட்டர் விட்டுக்கவே மாட்டேன்கிற அளவு அழுத்தினேனே.”

”காப்பிப் பொடியை அழுத்தணும்… இந்த வீட்டிலே ஒருத்தி செத்தால் கூட அவளுக்கு ஒரு வாய் காப்பிப்போட்டுத்தர ஆள் இல்லை.”

”செத்தால் ஒரு வாய் அரிசிதான் போடுவார்கள்,” என்று சொல்லியவாறு (மனசில்) நைஸாக ஸ்தலத்தைவிட்டு நழுவினேன்.

கால்மணியில் மனைவி காப்பியோடு வந்தாள். நிஜமாவே காப்பி பிரமாதமாயிருந்தது.

Image result for kumbakonam filter coffee

”போடறவா போட்டாத்தாண்டி எல்லாமே நல்லாருக்கு!” என்று பாராட்டினேன். ”எனக்கும் காப்பி போடமுறைப்படி கத்துக் கொடுத்துடு” என்றேன்.

”கத்துக் குடுக்கறாளாக்கும் கத்து? கண் பார்த்தா கை வேலை செய்யணும். காப்பின்னாபொண்டாட்டிதான் போடணும் என்கிறது வடிகட்டின மேல்ஷாவனிஸம்!”v

”வாஸ்தவமான பேச்சு…” என்று நைஸாக நகர்ந்தேன். ஓட்டல்களில் ஆண்கள்தான் காப்பி போடுகிறார்கள் மேலாவது ஷாவனிஸமாவது. உளறல்

யதார்த்தம் –நித்யா சங்கர்

 

 

Image result for tamil novels திக்பிரமையடைந்து, அலுப்போடு, சலிப்போடு, ஓய்ந்து போய்
உட்கார்ந்திருந்தார்கள் சரவணனும், மீனாட்சியும். எல்லாம் நல்ல
படியாகத்தானே போய்க்கொண்டிருந்தது. ஆனா கடைசியிலே
யமுனா இப்படி ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டு விட்டாளே!

யமுனாவின் ஜாதகக் கட்டை எடுத்து வரன் தேட ஆரம்பித்து
நேற்றோடு ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. பார்த்த உறவினர்களிடமும்,
நண்பர்களிடமும் வரன் பார்க்கச் சொல்லி, அவர்களும் பல வரன்களை
சிபாரிசு செய்தும் ஒன்றும் சரியாகவில்லை. இந்த கம்ப்யூட்டர் யுகத்திலே
இருக்கின்ற வலைகளிலெல்லாம் நுழைந்து சலித்துப் பார்த்தாகி விட்டது.
ஒன்றும் குதிர்ந்த பாடில்லை.

பல ஜாதகங்கள் இவளுடைய ஜாதகத்திற்கு பொருந்தவில்லை.
அப்படிப் பார்த்துப் பொருந்திய பல வரன்களை யமுனா ஏதாவது
காரணம் காட்டி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள். பெண் பார்க்க
வந்த சில வரன்கள் ஏதோ காரணங்கள் கூறி அவர்கள் தட்டிக்
கழித்தனர். கடைசியில் பார்த்தால் ஒன்றும் கல்யாணத்தில் முடியவில்லை.


ஆனால் இன்று பெண் பார்க்க வந்த ராஜாராமன் குடும்பத்தைப் பார்த்தவுடனே பிடித்து விட்டது சரவணனுக்கும், மீனாட்சிக்கும். பையன்
ராஜாராமனும், அவன் பெற்றோர் சபேசனும் காயத்ரியும் தான் பெண் பார்க்க வந்திருந்தார்கள். அம்மூவரின் அடக்கமான தன்மை, கலகலப்பான – அதே சமயம் கண்ணியமான பேச்சு, பார்த்தவுடனே பிடித்துவிட்டது. ‘ஆண்டவனே, இவ்விடம் நல்லபடியா முடியவேண்டும்’ என்று இருக்கின்ற கடவுள்களிடமெல்லாம் வேண்டிக்கொண்டே, அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

வழக்கமான பெண்பார்க்கும் படலம் முடிந்தது. காபி, டிபன்
சாப்பிட்டாகி விட்டது.

சபேசன் மெதுவாக, ‘பெண்ணும், பையனும் தனியாக சிறிது
நேரம் மனம் விட்டுப் பேசட்டுமே… ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள
உதவுமல்லவா..’ என்றார்.

‘வை நாட்…. யமுனா…. மாப்பிள்ளையை மாடி ரூமிற்குக் கூட்டிக்
கொண்டு போ..’ என்றார் சரவணன்.

யமுனாவும், ராஜாராமனும் மாடி ரூமிற்குச் சென்றனர். இங்கு
ஹாலில் பெரியவர்கள் அரசியலைப் பற்றியும் சமையல் பற்றியும்
காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து
கொண்ட விதத்தையும், சிறு உரிமைகளை யதார்த்தமாக எடுத்துக்
கொண்ட பாங்கையும் பார்த்தபோது அவர்களுக்கும், யமுனாவையும்
தங்கள் குடும்பத்தையும் பிடித்துப் போயிருக்க வேண்டும் என்று
தோன்றியது சரவணனுக்கும், மீனாட்சிக்கும்.

அரைமணி நேரம் கழித்து கீழே வந்த யமுனாவின் முகத்தி –
லிருந்தோ, ராஜாராமன் முகத்திலிருந்தோ ‘எஸ்’ஸா, ‘நோ’வா
என்று தெளிவாகத் தீர்மானிக்க முடியவில்லை பெற்றோர்களால்.

உலக வழக்கப்படி, ‘ஓகே… அப்ப நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு
பையன்கிட்டேயும் பேசிட்டு பதில் சொல்கிறோம்’ என்றபடியே
எழுந்தார் சபேசன்.

ராஜாராமனும், காயத்ரியும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

வீட்டிற்கு வெளியே வந்து, அவர்கள் காரில் ஏறி அமரும்
வரை பார்த்து வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தார்கள்
சரவணனும், மீனாட்சியும்.. யமுனா ஹாலில் உட்கார்ந்து டி.வி.பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஓகே… மீனாட்சி… எனக்கு பரம திருப்தி. பையன் ராஜா
மாதிரி இருக்கான். கை நிறைய சம்பளம். அவன் பெற்றோர்களும்
ரொம்ப தன்மையா, அன்பா இருக்காங்க. இது பிக்ஸ் ஆச்சுன்னா
யமுனா ரொம்ப லக்கி. நீ என்ன சொல்றே…?’ என்றார்
வாயெல்லாம் பல்லாக.

‘ஆமாங்க.. எனக்கும் அவங்களைப் பார்த்ததும் பிடிச்சுப்
போச்சு.. ஜாதகமும் நல்லா பொருந்தி இருக்கு.. இந்த இடத்தை
முடிச்சிடலாம்..’

‘அட.., நம்ம பாட்டுக்கு பேசிட்டிருக்கோம். யமுனா
ஒண்ணுமே சொல்லலியே.. ‘ என்றார் சரவணன் யமுனாவைப்
பார்த்து.

‘அவ சந்தோஷத்துலே வாயடச்சுப் போய் உட்கார்ந் –
திருக்கான்னு நினைக்கறேன். ஏண்டி, வாயத் திறந்து சொல்லேன்
சம்மதம்னு’ என்றாள் மீனாட்சி.

ஒரு நிமிடம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த
யமுனா, ‘ஐ ஆம் ஸாரி அம்மா… நமக்கு இந்த இடம் சரிப்பட்டு
வரும்னு தோணலே.’ என்றாள் மெதுவாக.

‘என்னடி சொல்றே…?’ என்று அதிர்ச்சியோடு கேட்டார்கள்
சரவணனும், மீனாட்சியும் கோரஸாக.

‘ஆமாம்மா… அவருடைய விருப்பு வெறுப்புகளையும்,
பழக்கவழக்கங்களையும், பற்றி பேசிட்டிருந்தப்ப, ‘வெளி நாடுகள் பலவற்றுக்குப் போயிருக்கேன்.. வெளிநாட்டு கலாசாரம்…. ஐ லவ் இட்… நோ ரெஸ்ட்ரிக்ஷன்… கம்ப்ளீட் ·ப்ரீடம்… நோ கமிட்மென்ட்..வெளிநாட்டுக்குப் போகும் போது பல தடவை நானும், என் கேர்ள்ப்ரண்டும் ஒரே வீட்டிலே குடும்பம் நடத்தி இருக்கோம்னா – அதாவது லிவிங்க் டுகெதர் அண்டர் ஒன் ரூ·ப் னா – பார்த்துக்கோயேன். அந்த அஸைன்மென்ட் முடிஞ்சு நான் விடைபெறும்போது நோ ஹார்டு ·பீலிங்க்ஸ்.. ஆல் தி பெஸ்ட் சொல்லிக்கொண்டோம். இப்பவும் ·பேஸ்புக்கில் தொடர்பில் இருக்கோம். நான் வெளிநாடு போகும்போது ஐ வான்ட் ஸச் ·ப்ரீடம். தேர்
ஷ¤ட் நாட் பி எனி கம்ப்ளெய்ன்ட்ஸ்..’னு சொல்றார்மா… நமக்கு
இது சரிப்பட்டு வருமா..’ என்றாள் யமுனா.

‘கடவுளே… ஒரு மாதிரி தோதுப்பட்டு வர நிலையிலே
இது இப்படி ஆச்சே… நமக்கு இதெப்படிம்மா சரிப்பட்டு வரும்’
என்றார் சரவணன் ஈனக் குரலில்.

‘அதத்தான்பா நானும் கட் அன்ட் ரைட்டா சொல்லிட்டேன்..’
என்று சொல்லியபடியே தன் ரூமிற்குப் போனாள் யமுனா.

விக்கித்து நின்றனர் சரவணனும், மீனாட்சியும்.
அலுவலகத்தில் ஏதோ ஒரு ·பைலை புரட்டிக் கொண்டிருந்த யமுனாவின் ஸெல்·போன் சிணுங்கியது. ஸெல்·போனில் யார் கூப்பிடுவது என்று பார்த்தாள்.

‘ராஜாராமன்….’

ஒரு புன்முறுவலோடு ·போனை எடுத்து, ‘ஹலோ’ என்றாள்.

‘என்ன யமுனா.. சமாளிச்சுட்டீங்களா..? அப்பா அம்மா
என்ன சொன்னாங்க..? ‘

அவங்க ரொம்ப அப்ஸெட் ஆயிட்டாங்க… அவங்களுக்கு
உங்களையும், உங்க குடும்பத்தையும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நான் சொன்னதுக்கப்புறம் இது வரை ஒரு வார்த்தை கூட பேசலே.. ஸ்தம்பித்து உட்கார்ந்து இருக்காங்க… உங்க வீட்டிலேஎப்படி..?’

‘எங்க வீட்டிலேயும் அதே கதைதான்.. ஆனா உண்மை-
யிலே எனக்கும் உங்களையும், உங்க குடும்பத்தையும் ரொம்பப்
பிடிச்சிருக்கு. ஆனா என் காதல் குறுக்கே வந்துடுத்து. என்னை
நம்பி இருக்கும் அவளுக்காக நான் இப்படி நடந்துக்க வேண்டி
வந்துடுத்து. எங்கப்பா ரொம்ப ஸ்டாடஸ் பார்க்கறவரானதாலே
எனக்கும் என் காதலைப்பற்றிச் சொல்ல முடியாத நிலை. அவருக்கு
மெதுவாகச் சொல்லிப் புரிய வைக்கணும். அவ மட்டும் என்
வாழ்க்கையிலே வந்திருக்கலேன்னா உங்களை டெ·பனிட்டா
சூஸ் பண்ணி இருப்பேன்’

‘ஓகே… நானும் அதேமாதிரிதான் மாட்டிட்டிருக்கேன். என்
லவ்வைப் பற்றியும் அப்பா அம்மா கிட்டே சொல்ல முடியாம
தவிச்சிட்டிருக்கேன். அதே மாதிரி ஸ்டாடஸ் பிரச்னை… அவர்
மட்டும் என் வாழ்க்கையிலே வராம இருந்தா உங்கள் பெயரை
எப்பவோ ‘டிக்’ பண்ணியிருப்பேன். ஆனா இந்த ‘லிவிங்
டுகதர்’ பொய்யை அனாவசியமாக சொன்னோமோன்னு
நினைக்கிறேன்.. நம்ம காரக்டரையே கெடுத்துக்கற மாதிரி
சொல்லிட்டோமே.. வேறே ஏதாவது சாக்குச் சொல்லி இருக்கலாம்’

‘நீங்க வேறே… இப்படி ஸ்ட்ராங்கா, தடாலடியா ஏதாவது
சொல்லி யிருக்கலேன்னா ரெண்டு பேரையும் உட்கார வெச்சு
‘கட்டுடா தாலியை’ ன்னு சொல்லி யிருப்பாங்க..’ என்று சிரித்த
படியே ‘உங்க காதலைப் பற்றி சீக்கிரம் வீட்டில் சொல்லுங்க..
நானும் சொல்ல டிரை பண்ணறேன்.. ஆல் தி பெஸ்ட்..’ என்றான்.
பசி வயிற்றைக் கிள்ளியது. ஏதாவது டிபன் சாப்பிடலாம்னு
பக்கத்திலிருந்த அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான் ராஜாராமன்.
ஹோட்டலில் சுமாரான கூட்டம்.  இருக்கை ஏதாவது காலி
யிருக்கிறதா என்று கண்களை சுழல விட்டவன் கண்கள் அந்த
டேபிளைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் மலர்ந்தது.

‘யார் அது..? யமுனா மாதிரி இருக்கே… ஆமா அவளேதான்.’
என்று அந்த டேபிளை நோக்கி விரைந்தான்.

‘ஹலோ.. யமுனா.. வாட் எ ஸர்ப்ரைஸ்.. எப்படி இருக்கீங்க?’

அவளும் அவனைப் பார்த்ததும் குதூகலத்தோடு, ‘ஹாய்..
எப்படி இருக்கீங்க..?’ என்று கூறியபடியே சைகையால் உட்காரும்படி
எதிர் இருக்கையைக் காட்டினாள்.

‘என்ன தனியா வந்திருக்கீங்க..? ஹஸ்பன்ட் கூட வர்லையா..
நான் உங்களைப் பெண் பார்க்க வந்து ஒரு வருடம் ஓடிட்டது
இல்லே..’ என்றான் ராஜாராமன்.

‘இல்லே ராஜாராமன்.. என்னுடைய காதல் நிறைவேறலே..
அப்பாவை எப்படியோ சம்மதிக்க வெச்சு அவர் வீட்டுக்கு
சம்மந்தம் பேச அனுப்பினேன். முதல்லே இன்டரஸ்ட் காட்டினவங்க போகப் போக அவ்வளவா இன்டரஸ்ட் காட்டலே.
அவருக்கும் பல டைம் ·போன் பண்ணினேன். முதலில் பிடி
கொடுக்காமல் பேசினார்.  அப்புறம் ·போன் அட்டென்ட்
பண்ணறதையே நிறுத்திட்டார். ஸோ அந்த இடம் கைகூடலே..
அப்பா இன்னும் ஜாதகக் கட்டைத் தூக்கிட்டு அலஞ்சுண்டிருக்கார்.. ஆமா.. வாட் அபௌட் யூ… ‘ என்றாள் யமுனா.

‘அதையேன் கேட்கறீங்க… உங்களுக்கு நடந்த மாதிரிதான் எனக்கும் நடந்தது. அவள் என்கிட்டே பேசறதையே
கம்ப்ளீட்டா அவாய்டு பண்ணிட்டா… ப்ச்… யாருக்கு எங்கெங்கு விதிச்சிருக்கோ அங்கேதான் நடக்கும்’ என்றவன் கண்களை நாலாபக்கமும் சுழல விட்டான்.

‘ஓ மை காட்.. இன்னிக்கு என்னாச்சு.. யார் யாரையோ
பார்க்கறேன்… யமுனா நான் காதலிச்ச பெண்ணை பார்க்கணும்னா
அப்படியே மெதுவாகத்  திரும்பி, என்ட்ரன்ஸில் உள்ள அந்த
முதல் டேபிளைப் பாருங்க.. அவள் அவளுடைய ஹஸ்பன்டோட வந்திருக்கான்னு நினைக்கிறேன்..’

யமுனா மெதுவாக அந்த முதல் டேபிளைப் பார்த்தாள்.
பார்த்தவள், ‘என்னங்க அபிராமியா..?’ என்றாள்.

‘ஆமாம்.. அவளேதான். உங்களுக்கு அவளைத்
தெரியுமா..?

‘தெரியும்.. அவளுடைய அப்பா என்னுடைய அப்பாவுடைய கொலீக்.. அவ கல்யாணத்தின் போது நான் ஊரிலில்லை. அதனால் அவ கல்யாணத்தை அட்டென்ட் பண்ண முடியலே…’ என்று சொல்லியபடியே அபிராமியின் பக்கத்தில் இருந்த நபரைப் பார்த்ததும் திகைத்து, ‘என்ன அவரா..’ என்றாள்.

திகைத்து இருந்த அவள் முகத்தைப் பார்த்த ராஜாராமன்,
‘என்னாச்சுங்க யமுனா..’ என்றான்.

‘அவளைக் கைப்பிடித்தவன்தான் என் மாஜி காதலன் அரவிந்த்…’ என்றாள் மெதுவான குரலில்.

சில நிமிடங்கள் யோசித்தவன், ‘இப்போது க்ளியராகப்.
புரிகிறது யமுனா… அந்த அரவிந்தின் அப்பா என்னுடைய
அப்பாவுடைய கொலீக்… நம்முடைய மீட்டிங்கிற்கு அப்புறம்
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் அப்பா, ‘என் கோலீக், அவன்
பையனுக்கு நாம ராஜாராமனுக்குப் பார்த்தமே அந்தப் பெண்
யமுனா வீட்டிலே பேச்சு வார்த்தை நடந்து வரதா சொன்னான்
நான் அந்தப் பெண் காரெக்டர் கொஞ்சம் அப்படி இப்படின்னு
சொல்லிக்கிறாங்க என்று ஸ்ட்ராங்கா சொல்லி வெச்சேன். அவங்க போய் அந்த ·பேமிலியில் ஏன் மாட்டிக்கணும்னு, அவனும் நமக்கு எதற்கு ரிஸ்க்குன்னு அலயன்ஸையே டிராப் பண்ணிட்டான்’னு சொன்னார். அதனால்தான் அரவிந் உங்ககிட்டே பேசறதையும் கட் பண்ணிட்டார். மோஸ்ட் பிராபப்ளி என்னுடைய கேஸ்லேயும் அது மாதிரி நடந்திருக்கலாம். ‘ என்றான் ராஜாராமன்.

‘டாமிட்.. பின் காதல்ங்கறதுக்கு என்னங்க அர்த்தம்?
யாரோ சொன்னாங்கன்னு காதலியையோ அல்லது காதலனையோ
சந்தேகப்பட்டா அது உண்மையான காதலா..?’ என்று
பொரிந்தாள் யமுனா.

‘அதுதான் வாழ்க்கையின் யதார்த்தம் யமுனா… நாலு பேர்
நாலு வகையா ஒருத்தருடைய ஒழுக்கத்தையோ நடத்தையையோ தப்பா பேசினா, ‘நமக்கு எதற்கு வம்பு… ஒதுங்கிக்குவோம்னுதான் மனுஷனுக்குத் தோணும். அதனாலேதான் சமுதாயத்திற்கு எல்லோரும் பயப்படணும்னு சொல்றது.. நாம காதல் நிறைவேறணும்னு ஒரு பொய்யைச் சொன்னோம். ஆனா பார்த்தீங்களா..அதுவே நமக்கு வில்லனா மாறிடிச்சு… உலகம் எவ்வளவு சின்னதா ஆயிட்டுது பார்த்தீங்களா…? உங்கள் காதலன் என் காதலியை…. வண்டர்·புல்… ஆசைப்படலாம்… ஆனா அந்த ஆசை நிறைவேறலைன்னா அதப்பத்தியே நினைச்சு துவண்டுடாம, கிடைச்சதை சந்தோஷமா ஏத்துட்டு வாழணுங்க… அதுதான் வாழ்க்கையின் தாத்பர்யம்.. யதார்த்தம்… நீங்க அன்னிக்கு சொன்னீங்க… என் காதல் மட்டும் குறுக்கே வரலேன்னா உங்க பெயரை டிக் பண்ணியிருப்பேன்னு.. இன்றும் அந்த மன நிலையில்தான் இருக்கீங்களா..? ‘ என்றான் ராஜாராமன் திடுதிப்பென்று.

‘யூ ஆர் கரெக்ட்… இப்போ நாம் ரெண்டு பேருமே எலிஜிபிள்
·பார் மாரேஜ்… ஏன் நம்ம ப்ரொபோஸலை ரீ ஓபன் பண்ணக்
கூடாது..?’ என்றாள் யமுனா.

‘பட்… அதில் ஒரு சிக்கல் இருக்கே… ஆயிரம் பொய்கள்
சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம். அது தப்பில்லேன்னு
சொல்வாங்க. நாம் ஒரு பெரிய பொய்யைச் சொல்லிக் கல்யாணத்தை
நிறுத்தி இருக்கோமே..? இப்போ எப்படிச் சமாளிக்கறது..?’

‘இப்போ உண்மையைச் சொல்லி கல்யாணத்தை நடத்துவோம்.
இப்போ அதைக் கொண்டாட ஸ்வீட்டோடு சாப்பிடுவோம்’
என்றாள் யமுனா குதூகலத்தோடு.

‘வெயிட்டர்..’ என்று கூப்பிட்டான் ராஜாராமன்.

 

 நெருப்பு சுடாது – எஸ் எஸ்

தன் கையில் உள்ள சிகரெட் புகைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தான் குமார். கடந்த பத்து நாட்களில் அவனுடைய வேலை இதுமட்டும்தான் என்றாகி விட்டது.  எங்கே போயிற்று அவனுடைய அட்டகாசம்? எங்கே போயிற்று அவனுடைய கம்பீரம்? ஏன் இப்படி மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்?

Related image

திடீரென்று குரல் கேட்டது. “ குமாரண்ணே! நாயக்கர் வீடு தீப்பிடிச்சுடுச்சு அண்ணே!”

“ நெஜமாவாடா சொல்றே! நம்ம நாயக்கர் வீடா? “ பத்து நாட்கள் ஆடாமல் அசையாமல் இருந்த குமாரை இந்தச் சேதி உலுக்கியது.  அப்படியே நாயக்கர் வீட்டை நோக்கி ஓடினான். “ நளினி! உனக்கு ஒண்ணும் ஆகக்கூடாதே! கடவுளே!” மனதுக்குள் வேண்டிக்கொண்டே ஓடினான்.

பந்தக்கார நாயக்கர் வீடு ஊர்க்கோடியில் உள்ள பெரிய வீடு.  நாட்டு ஓடு போட்டு முன்னாலேயும் பின்னாலேயும் கூரை போட்டு வேய்ந்த பங்களா.  சுற்றிலும் பந்தல் அலங்காரத்துக்குத் தேவையான மூங்கில், துணி வளையங்கள், கயிறு, கூரை வேறு. கோவிந்தசாமி நாயக்கர் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறார்.  ‘நளினி! நளினி!’ என்று எரியும் வீட்டைக் காட்டிக் கதறி அழுது உள்ளே பாயத் துடிக்கிறார்.  குமாருக்கு எல்லாம் புரிந்து விட்டது.  நளினி எரியும் வீட்டுக்குள்! யாரும் எதிர்பார்க்கவில்லை, எரியும் வீட்டுக்குள் குமார் பாய்ந்து ஓடுவான் என்று!.

எரியும் வீட்டுக்குள் புகுந்த அவனை புகையும் நெருப்பும், கீழே விழும் கம்புகளும் ஒன்று சேர்ந்து தாக்கின.  தாழ்வாரத்தைக் கடந்து எப்படி உள்ளே வந்தோம் என்பது அவனுக்குப் புரியவில்லை.  கம்பங்கள் படீர் படீர் என்று வெடித்துக்கொண்டிருந்தன.  தென்னை உத்திரம் கீழே விழுந்து விடுமோ என்று பயமாக இருந்தது.  எரியும் மூங்கிலைத் தாண்டி வீட்டிற்குள் போனான்.  பல அறைகள் கொண்ட பழங்கால வீடாகையால் நளினி எந்த அறையில் இருப்பாள் என்று தெரியாமல் ஒவ்வொரு அறையாகப் பார்த்துத் தேடினான். ‘ நளினி! நளினி!’ என்று கத்திக்கொண்டே அங்கும் இங்கும் ஓடினான்.

நிலைமை நேரத்திற்கு நேரம் மோசமாகிக்கொண்டே வந்தது. நளினியைக் கண்டு பிடிக்க முடியாமல் போய்விடுமோ என்று பயந்தான்.  அவளைக் காணவில்லை என்று நினைக்கும்போது அவன் பதட்டம் அதிகரித்தது.  வீட்டின் பின்புறம் ஓடினான்.  அங்கோ முழுவதும் கீற்றுக்கொட்டகை. தீயின் கோர தாண்டவம் அங்கு அதிகமாகவே இருந்தது. முதலில் தீப்பிடித்த இடம் அதுதான் போலும்.  தீயின் நாக்குகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.  நடுவிலே ஒரு சிமெண்ட் திட்டு. அதன் நடுவே நளினி மயங்கி விழுந்து கிடக்கிறாள்.  தீயின் ஜுவாலைக்கு நடுவே நளினி! குமாருக்கு மூச்சு நின்று விடும்போல இருந்தது. அவன் நரம்புகள் புடைத்தன.

எப்படி அவளை அணுகுவது என்று ஒரு சில செகண்டுகள் யோசிப்பதற்குள் எரியும் தட்டி ஒன்று அவள் மேல் விழுந்தது.  அவ்வளவுதான்.  நெருப்புக்கு ஊடே ஓடினான்.  உடம்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் நெருப்பு உக்கிரமாகத் தாக்கியது.  எதையும் பொருட்படுத்தாமல் அவள் அருகே சென்று எரிந்து கொண்டிருந்த தட்டியைத் தூர எறிந்தான். எரியத் தொடங்கிய நளினியின் புடவையைக் கசக்கி அணைத்தான்.  நல்ல வேளை! அந்தத் தட்டியைத்தவிர வேறு தீயின் நாக்குகள் அவளைத் தொடவில்லை.  ஆனால் புகை மண்டலம் அவளை மயக்கத்தில் ஆழ்த்தி இருந்தது.  அவள் தலைமுடியை அவிழாமல் இறுக்கி முடிந்து அவளை ஆட்டுக்குட்டியைத் தூக்குவதுபோலத் தூக்கினான்.  நிமிர்ந்து பார்த்தால் மேலே இருந்து இன்னும் பல கூரைகள் சரிந்து எரியத் தொடங்கின. அந்த இடம் இன்னும் சில நிமிடங்களில் தீயின் கோரப்பிடிக்குள் சிக்கிவிடும் என்பதை உணர்ந்தான்.

அவளைத் தூக்கிக்கொண்டு பின்புற வழியில் ஓடலாம் என்று பார்த்தால் அங்கே ஒரே நெருப்புக் கோளம். முற்றிலும் அடைபட்டிருந்தது.  வந்த வழியே திரும்ப வேண்டியதுதான் என்று அந்த நெருப்பு வளையத்தைத் தாண்டி ஓட்டு வீட்டுப் பகுதிக்கு வந்தான்.  ஓடுகள் ஒவ்வொன்றாக அப்போதுதான் வெடிக்கத் துவங்கின.

நடுவில்  சின்ன முற்றம் மாதிரி இடம் வந்ததும் அவன் கால்கள் தடுமாறின.  மூங்கில் கிழித்துத் தோள்பட்டையிலிருந்து  இரத்தம் வேறு கொட்டிக் கொண்டிருந்தது. அப்படியே நளினியைக் கீழே போட்டு அவனும் மயங்கி அவள் மேல் விழுந்தான்.  அந்த அதிர்ச்சியில் நளினியின் மயக்கம் தெளிந்தது. “ யார்.. நான்… எங்கே.. ஐயோ.. நெருப்பு… குமார்… நீங்க எங்கே..  அவளால் யோசிக்கவே முடியவில்லை.  அந்த முற்றத்தைத்தவிர  மற்ற எல்லா இடத்திலும் நெருப்பு சூழ்ந்திருந்தது.

தன்னைக் காப்பாற்ற வந்த குமாரும் மயங்கிக் கிடக்கிறான் என்பதை உணர்ந்ததும் அவளுக்குத் துக்கம் பீறிட்டது. “ குமார்! குமார்!” என்று அவன் கன்னத்தைத் தடவி அவனை மயக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாள் . முடியவில்லை. அந்த நேரம் பார்த்து வெடித்த ஓடு அவன் தலையில் வெகு வேகத்துடன் தாக்க ‘ அம்மா’ என்று அலறி எழுந்தான் குமார்.  அவனுக்குச் சுரணையும் வந்தது.  மேலும் பல ஒடுகள்  வெடிக்கும் போல் இருப்பதைப் பார்த்து நளினி குமாரை மெல்ல இழுத்து மேடான மூலைக்குக் கொண்டுபோனாள்.  மடாலென்று முறிந்த உத்திரம் சலசலவென்று ஓடுகளைக் கொட்டி வெளியே செல்லும் வழியைச் சுத்தமாக அடைத்து விட்டது.

“ இனி தப்ப முடியாது குமார்! நாம ரெண்டு பேரும் இங்கேயே சாம்பலாக வேண்டியதுதான்!” நளினி அழுதுகொண்டே கூறினாள். ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு மற்றவர் மீது விழும் தீப்பந்தங்களைத் தட்டிவிட்டுக் கொண்டிருந்தனர்.  நளினி!  குமார்! என்று இரு குரல்கள் மட்டும் மெல்ல ஒலித்துக்கொண்டிருந்தன.

@@@@@@@@@@@@@@@@@@

இதே இடத்தில்தான் பத்து நாட்கள் முன்னே… இருவரும் கிட்டத்தட்ட இதேமாதிரிதான்.. வேறு ஒரு தீ அன்றைக்குக் குமாரைச் சூடேற்றியிருந்தது.

“ நளினி!”

“ குமார்! நீங்களா? நீங்க எப்படி இங்கே!”

“ நளினி! உன்  வீட்டில் யாரும் இல்லே என்று தெரிஞ்சுக்கிட்டுதான் வந்தேன்.  நளினி! ஐ நீட் யு.. ரைட் நௌ ..”

“ குமார்! இது சரியில்லை! யாராவது பார்த்தால்…”

“ என்ன நளினி! இதிலென்ன தப்பு? நம்ம கல்யாணம் நிச்சயமான மாதிரிதானே ! உங்கப்பாதான் ஓகே சொல்லிட்டாரே!”

“ அதுக்காக இந்த நேரத்தில் நீங்க இப்படி வருவது சரியில்லை. கொஞ்ச நாள் பொறுங்க பிளீஸ்..”

“ நோ நளினி!  என்னைத் தடுக்காதே! கிணற்று நீர், ஆக்கப் பொறுத்தவன் இந்தப் பழமொழி எல்லாம் வேண்டாம். எனக்கு நீதான் வேணும். இந்த முற்றத்திலே, முத்தத்திலே ஆரம்பிப்போம்.”

இழுத்து அணைத்து அவள் உதட்டுடன் கலந்து முத்தமிட்டான். முதல் முத்தம் தித்தித்தது.  ஆனால் அதிலே போதை மருந்து வாசனை இருந்தது.  நளினிக்கு மயக்கமே வரும்போல் இருந்தது.

“ குமார்! நீங்க குடிச்சிட்டு வந்திருக்கீங்க ! மரியாதையா வெளியே போயிடுங்க! ஐ ஹேட் யு!”

“ நோ குமார்! ப்ளீஸ் வேண்டாம்! கல்யாணத்துக்கு அப்புறம் குமார்… ப்ளீஸ்.. தயவு செஞ்சு… இது சரியில்லை…. குமார்.. விட்டுடுங்க… குமார்… நோ… நோ… சே! நீங்க எல்லாம் ஒரு மனுஷனா!”

“ ப்ளீஸ் நளினி! முதல் இரவுக்கு ஒரு சிறு ஒத்திகை. அவ்வளவுதான்.. கமான்..”

எங்கிருந்துதான் அவளுக்கு அவ்வளவு பலம் வந்ததோ தெரியவில்லை. அவனைக் கீழே தள்ளிவிட்டு நின்றாள்.

“ கெட் அவுட் குமார்! குடிச்சிட்டுக் கன்னாபின்னாவென்று நடந்து கொள்ளும் உங்களை லவ் பண்ணினேன்னு நினைச்சா வெட்கமா இருக்கு! மரியாதையா வெளியே போயிடுங்க! இல்லே சத்தம் போட்டு ஊரைக் கூட்டிடுவேன்!”

“ இவ்வளவு நடந்தப்புறம் உன்னை சுவைக்காமப் போக நான் என்ன மடையனா!” என்று  கத்திக்கொண்டே அவள்மீது பாயப்போனான்.

“ இதுக்கு மேலே ஒரு அடி எடுத்து வைச்சீங்கன்னா என்னை உயிரோடவே பார்க்க முடியாது.”

அவள் குரலில் இருந்த விபரீத ஒலி அவனை பயமுறுத்தியது.  அவளை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்துவிட்டு விடுவிடுவென்று வெளியே ஓடிவிட்டான்.  அன்று வெளியே போன குமாரைத் திரும்ப சந்திக்க மறுத்து விட்டாள் நளினி. அவர்கள் திருமணப் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்பே முற்றுப்புள்ளி போட்டுவிட்டாள்.  ‘குமாரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்’ என்ற தன் பெண் ‘அவனை இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, ஏழேழு ஜென்மத்திலும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார் கோவிந்தசாமி நாயக்கர். அவனுக்காகப் பெண் கேட்டு வந்த அவனது பெற்றோரிடம்  அவனை மணக்க முடியாது என்று அவளே நேரில் சொல்லி விட்டாள்!”

@@@@@@@@@@@@@@@@@@@

“ நளினி எழுந்திரு! நெருப்பு இந்த முற்றத்துக்கு வர்றதுக்கு முன்னாடி எப்படியாவது நாம தப்பிக்கணும்.”

“ குமார்! நீங்க ஏன் எனக்காக இந்த நெருப்பில் வந்து மாட்டிக் கொண்டீர்கள்?”

“ நளினி! நீ நெருப்பில் இருக்கிறாய் என்று தெரிந்து என்னால் சும்மா இருக்க முடியுமா? என் உயிரைக் கொடுத்தாவது உன்னைக் காப்பாத்தறதுதான் என் கடமை!”

“ ஐயோ குமார்! உங்கள் உண்மையான அன்பைப் புரிஞ்சுக்காம நான் உங்களைப் பலமா காயப்படுத்திட்டேன். அதுக்குத்தான் இந்த தண்டனை.  நீங்க எப்படியாவது தப்பிச்சுப் போயிடுங்க!”

“ தப்பு உன்மேலே இல்ல நளினி! என்னோடதுதான்! இல்லேன்னா அன்னிக்குப் போதை மருந்து சாப்பிட்டிருப்பேனா? உங்கிட்ட தகாத முறையில் நடந்திருப்பேனா?”

“ என்னது? போதை மருந்தா?”

“ ஆமா நளினி! நம்ம காதலை நண்பர்கள்கிட்டேசொல்லி ஒரு ட்ரீட் கொடுத்தேன். அதில ஒரு துரோகி எனக்கு வைத்திருந்த  ஜூஸிலே போதை மருந்தைக் கலந்து கொடுத்திட்டான்.  அதனால்தான் அப்படி நடந்துக்கிட்டேன். என்னை மன்னிச்சுடுன்னு நான் எழுதிய லெட்டர், நேரில் வந்து  சொன்னது எதையுமே நீ காதில் போட்டுக் கொள்ளவே இல்லை!”

“ ஐயோ குமார்! உங்க சின்னத் தப்புக்குப் பெரிய தண்டனை கொடுத்திட்டேனே! என்னை மன்னிக்க மாட்டீங்களா?”

அதற்குள் தீயின் நாக்குகள் அந்த முற்றத்தைச் சுற்றிப் பரவத் தொடங்கியது. எரியும் தீ நாக்குகளுக்கு நடுவே அவர்கள் இருவரும்.

“ குமார்! எனக்கு ஒரு வரம் தருவீர்களா?”

“ வரமா! நானா! இப்போதா?”

“ ஆமாம் குமார்! இப்போதேதான்! நாம ரெண்டுபேரும் எழுந்திரிச்சுத் தப்பிச்சுப் போக முடியாத சூழ்நிலை! எந்த நிமிஷத்திலும் தீயின் நாக்குகள் நம்மை சாப்பிடப்போகின்றன!  என் ஆசை .. வரம்… என்னன்னா,  நான் சாகும்போது உங்கள் மனைவியாக சாக விரும்புகிறேன்! மஞ்சள் கயிறு இல்லை! மாலைகள் இல்லை! நம்மை சுத்தி இருக்கும் அக்னி சாட்சியா என்னை மனைவியா ஏத்துக்கங்க குமார்!”

“ நளினி!”

Related image

இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கிக் கட்டிக்கொண்டார்கள். அவன் தீப்புண்களுக்கு உதட்டால் ஒத்தடம் கொடுத்தாள். நெருப்பின் சூடு அவளை அணுகாமல் அவள் உடலைத் தன் உடலால் போர்த்தினான்.! அவளது கண்ணீர் அவன் காயங்களுக்கு மருந்தாயிற்று. ‘இதுதான் மாலை’  என்று இருவரும் தங்கள் கரங்களை மற்றவர் கழுத்தில் மாற்றி மாற்றிச் சுற்றினர்.  ‘இதுதான் தாலி’ என்று அவள் கழுத்தில் மூன்று முறை முத்தமிட்டான்.  காற்றில் நெருப்பு எரியும் ஓசை நாதஸ்வரமாக ஒலிக்கிறது.  வெடிக்கும் ஓடுகள் மேளசத்தம்!  ‘கெட்டிமேளம்! கெட்டிமேளம்!’  அக்னியை வலம் வருவதற்குப் பதிலாக அக்னியே அவர்களை வலம் வந்தது.  ‘இப்போது நமக்கு முதல் இரவு! ஏன் உன் உடம்பு இப்படி சுடுகிறது? பயமா? வெட்கமா?’

“ இவ்வளவு வெளிச்சத்துக்கு நடுவில்… குமார்! எனக்கு வெட்கமாக இருக்கிறது! நம்மைச் சுற்றியுள்ள நெருப்பு விளக்கை அணையுங்களேன்! குமார்! ப்ளீஸ்.. குமார்!”

“ நளினி!”

அவர்கள் தலைக்கு மேலே பெரிதாக எரியும் திரைச்சீலைகள் அந்த புது மணத் தம்பதிகளை நெருப்புப் போர்வை போர்த்தி அழகு பார்க்கத் துடிக்கின்றன.

அதற்குப் போட்டியாக, தூரத்தில் தீயணைக்கும் வண்டியின்                             ‘ கணகண’வென்ற ஓசை ஒலிக்கின்றது.

யார் முந்துவார்கள்?

பத்மநாபன் எதையோ தேடுகிறார்? – அழகியசிங்கர்

Image result for heart attack in a small town hospital in tamilnadu

 

பத்மநாபன் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து சுரம், தலைவலி என்று எதுவும் வந்ததில்லை. அடிக்கடி வயிறு வலிக்கும். அதுவும் அஜீரணத்தினால். ஆனால் ஒருமுறை சுரம் வந்துவிட்டது. அவரால் நம்ப முடியவில்லை. அவர் பள்ளிக்கூடம் படித்த நாட்களில்தான் ஒவ்வொரு வருடமும் அவருக்கு மே மாதத்தில் சுரம் வந்துவிட்டுப் போகும். அதன்பின் அவருக்கு சுரம் அடித்ததே இல்லை. வயிற்றைக் கட்டுப்படுத்தாத அஜீரண தொந்தரவுதான் அடிக்கடி அவருக்கு இருக்கும். அன்று சுரம் வந்தவுடன், அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த ஊரில் அவர் மருத்துவமனைக்குச் சென்றதில்லை. டாக்டர் என்று யாரையும் பார்த்ததில்லை. சென்னையிலும் பெரும்பாலும் அவர் டாக்டரைப் பார்ப்பதில்லை.

அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரு நண்பர் சிவாதான். இருவரும் இலக்கியம் பேசும் நண்பர்கள். சிவாக்கும் அவருக்கும் பலமடங்கு வயது வித்தியாசம். ஆனால் இலக்கியம் பேசும்போது வயது வித்தியாசம் தெரியாது. பார்ப்பதற்கு இளம் வயதுக்காரராக இருந்தாலும், சிவா எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அவரைத்தான் பத்மநாபன் போனில் கூப்பிட்டார். சுரம் என்றார். சிவா பத்மநாபனைப் பார்க்க வரும்போது ரசக் கரைசலை எடுத்துக்கொண்டு வந்தார். பத்மநாபன் நெகிழ்ந்து விட்டார்.

தனியாக ஒருவர் இருக்கும்போது, இது மாதிரியான உதவிகள் நிச்சயமாக தேவையாக இருக்கும்.
“என்ன சார், என்னமோ மாதிரி ஆகிவிட்டீர்கள்,” என்றார் சிவா..
“நீங்கதான் ஏதாவது ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக வேண்டும்,”என்றார் பத்மநாபன்.

அந்த ஊரில் நெடுக பல மருத்துவமனைகள் உண்டு. அலுவலகத்திற்கு லீவு சொல்லிவிட்டு சிவாவுடன் கிளம்ப ஆயுத்தமானார் பத்மநாபன்.
சிவா மகாதான தெருவில் உள்ள ஒரு இருதய நோய் சம்பந்தமான மருத்துவமனைக்கு அழைத்துப் போனார். சாதாரண சுரத்திற்கு ஏன் இங்கு அழைத்துப் போகிறார் என்று யோசித்தார் பத்மநாபன்.
அந்த மருத்துவ மனையில் ஒரே கூட்டம். டோக்கனை வாங்கி வைத்துக்கொண்டு பத்மநாபன் அமர்ந்திருந்தார். கூட்டம் நகர்வதாகத் தெரியவில்லை. பொறுமை எல்லை மீறிப் போய்விட்டது.

“சிவா போய்விடலாமா” என்று கேட்டார் பத்மநாபன்.
“வேண்டாம், சார்,” என்றார் சிவா.
இருவரும் இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்கள். கூட்டமோ வழிந்து கொண்டிருந்தது. எல்லோரும் இதய நோயாளிக்காரர்கள். சாதாரண சுரத்திற்கு இங்கு ஏன் வந்தோம்?

ஒரு வழியாக டாக்டரைப் பார்க்க அனுப்பினான் அங்குள்ள ஊழியர்.
உள்ளே நுழைந்து டாக்டர் எதிரில் அமர்ந்தாலும், டாக்டர் பத்மநாபனைப் பார்க்கவில்லை. போன் மேலே போன். பேசிக்கொண்டே இருந்தார். சுரவேகத்தோடு பத்மநாபன் டாக்டரைக் கடுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவா மேலும் கோபம். ஏன் இங்கே அழைத்துக்கொண்டு வந்தார்?

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. உள்ளே அவசரமாக டாக்டரைப் பார்க்கக் கணவன் மனைவி இருவர் வந்தார்கள். ரொம்ப அவசரம். கணவன் மார்பைப் பிடித்துக்கொண்டு கத்திக் கொண்டிருந்தான். “டாக்டர் தாங்க முடியலை டாக்டர். வலி தாங்க முடியலை,” என்று மார்பைப் பிடித்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் பதட்டமாகியிருந்தோம். டாக்டர் அவனைப் பார்த்து, “சட்டையைக் கழட்டுங்க..” என்றார். அவனால் சட்டையைக் கூட கழட்ட முடியவில்லை. “டாக்டர் வலி அதிகமாக இருக்கிறது,”என்று அவன் இன்னும் கத்தினான்.

பத்மநாபனுக்கும், சிவாவிற்கும் தர்மசங்கடமாக இருந்தது. சிறிது நேரத்தில் கத்தினவன் கீழே விழுந்துவிட்டான். உடனே பரபரப்பு கூடி விட்டது.

இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் பத்மநாபனும், சிவாவும் அந்த இடத்தைவிட்டு வாசலுக்கு ஓடி விட்டார்கள். சிவா அந்தக் காட்சியைப் பார்த்ததால் வாந்தி எடுத்தார். “என்ன சிவா, வாந்தி எடுக்கிறீங்க?”என்று பத்மநாபன் கேட்டார்.

“என்னால தாங்க முடியாது சார்,” என்றார் சிவா.
“வேற ஆஸ்பத்திரிக்குப்   போகலாம்…ரொம்ப காலியா இருக்கிற ஆஸ்பத்திரியா  பாருங்க…சாதாரண சுரத்திற்குப் பார்க்கிற டாக்டராகப் பாருங்க…”
“அந்த ஆளுக்கு என்ன ஆயிருக்குமோ…உயிரோடு இருப்பாரா…செத்துப் போயிருப்பாரா…”
“சிவா..அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கு எதுக்கு…மேலும் அவர் இறந்தாலும் நாம் அதைப் பற்றி யோசிக்க வேண்டாம்..”என்றார் பத்மநாபன்.

பின் அங்கிருந்து ஒரு சாதாரண டாக்டரைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு பத்மநாபனைக் கொண்டுவந்துவிட்டுப் போய்விட்டார் சிவா.
கொஞ்சம் நேரம் கழித்து சிவாவிடமிருந்து போன் வந்தது. “சார், அந்த ஆள் போயிட்டான்..”என்றார் சிவா.

கேட்டவுடன் சொரேரென்றிருந்தது பத்மநாபனுக்கு. அவர் கண் முன்னால ஒரு 40 அல்லது 42 வயதுக்குட்பட்ட ஒருவர் மார்பு துடித்து இறந்தும் விட்டார். அப்போது அந்த மனிதன் துடித்த துடிப்பு. கத்திய கத்தல் அவர் காதில் இப்போதும் ரீங்காரம் இட்டுக்கொண்டிருந்தது. காலையில் நடந்த சம்பவமே பத்மநாபன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

தனியாக இருப்பதால்தான் இதுமாதிரியான பிரச்சினை. குடும்பத்தோடு இல்லாமலிருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று அவருக்குத் தோன்றியது.

சுரம் வேகம் தணிந்து விட்டதா என்று யோசித்துக் கொண்டிருந்தார். பின் கடைக்குச் சென்று ஒரு தர்மாமீட்டரை வாங்கிக்கொண்டு வந்தார். தர்மாமீட்டரை எடுத்து வாயில் இடுக்கிக்கொண்டு சுரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். சுரம் சாதாரணமாகத்தான் இருந்தது. இந்தத் தர்மாமீட்டரெல்லாம் பயன்படுத்திப் பல ஆண்டுகளாயிற்று.

பத்மநாபன் தன்னையே கேட்டுக்கொண்டார். ‘நான் என்ன பயந்தாங்கொள்ளியா?’ என்று.
‘ஆமாம்.’ என்று தனக்குள் பதிலும் சொல்லிக்கொண்டார்.

எந்த மனிதன்தான் பயம் இல்லாமல் இருக்க முடியும்?கடந்த 4 ஆண்டுகளாக அவர் தனியாக இங்கு இருக்கிறார். குடும்பம் சென்னையில். அப்பாவிற்கு 85 வயது. மனைவி இன்னொரு வங்கியில் பணிபுரிகிறாள். அவளால் அவருடன் அவர் இருக்குமிடத்திற்கு வந்திருக்க முடியாது.

முதலில் இந்தத் தனிமை வாசம் அவருக்கு வேடிக்கையாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தனியாக இருந்ததில்லை. தனிமை என்றால் என்ன என்பதைக் கூட அவர் யோசித்ததில்லை. இந்த ஊருக்கு வந்தபிறகு தனியாக ஒரு வாழ்க்கை நடத்த வேண்டியதை நினைத்து அவருக்கு வருத்தமாக இருந்தது. அலுவலகத்திற்கு அவசரம் அவசரமாக ஓடி திரும்பவும் வீட்டிற்கு வந்தவுடன் பொழுது போய்விடும். அவர் தனியாக வீடு மாதிரி எடுத்துத் தங்கியிருந்தார்.

இரவு படுத்துக்கொள்ளும்போது முதன் முதலாக அவருக்குப் பயமாக இருந்தது. இதுவும் வேடிக்கையாக இருந்தது. 50 வயதில் தனக்குப் பயமா? அவர் இருக்குமிடம் கோயில் இருக்கும் தெருவில். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அந்தப் பயம் போய்விட்டது. எப்போதும் சனிக்கிழமை சென்னைக்கு ஓடிவிடுவார். திரும்பவும் ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி இந்த ஊருக்கு வந்துவிடுவார்.

பெரும்பாலும் அவருக்குப் பொழுதுபோக்கு புத்தகம் படிப்பது. ஆனால் என்ன, நேரம் இருப்பதில்லை. அவரைச் சுற்றிலும் யாரும் புத்தகம் படிப்பவர்கள் இல்லை. ஏன் அலுவலகத்தில் யாரும் பேப்பரைக் கூடப் படிப்பதில்லை.

அவரால் ஒரு நிமிஷம்கூட புத்தகம் அல்லது பேப்பர் படிக்காமல் இருக்க முடியாது. இது ஒரு வியாதியா என்று கூட யோசிப்பார். இந்தத் தருணத்தில்தான் சிவாவின் நட்பு கிடைத்தது. சிவா ஒரு சிவில் இன்ஜினியர். தனியாக வீடு கட்டிக்கொடுக்கும் பணி. எப்போதும் அவர் சுலபமாக இருப்பதுபோல் பத்மநாபனுக்குப்படும். புத்தகம் படிப்பதுதான் சிவாவிற்கு வேலை. தடித்தடியாய் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பார். பின் அதைப்பற்றிப் பேச பத்மநாபனை நாடி வருவார்.

காலையில் மரணம் அடைந்தவரைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார் பத்மநாபன். பொழுது இருட்டத்தொடங்கிவிட்டது. அப்போதுதான் காலையில் நடந்த சம்பவம் அவரைத் தூங்கவிடாமல் பண்ணிக்கொண்டிருந்தது. இறந்து போனவரின் முகம் அவர் ஞாபகத்தில் வந்துகொண்டிருந்தது. அவர், மனைவியைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு போட்ட சத்தம், அவர் மனதில் அலறிக் கொண்டிருப்பதாகப் பட்டது.

பத்மநாபன் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் பலவிதமாக முடிச்சுப் போட்டுக்கொண்டிருப்பார். இப்படி முடிச்சுப் போடுவது ஆபத்து என்று உணர்ந்திருந்தார்.

என்ன படித்திருந்தால் என்ன? மரண பயம் எளிதில் போவதில்லை..50 வயது..தனிமை. பத்மநாபன் இன்னும் யோசித்துக் கொண்டிருந்தார். சம்பத் என்ற எழுத்தாளர் எழுதிய இடைவெளி என்ற நாவல் ஞாபகத்திற்கு வந்தது. அவர் புத்தகம் அச்சாகி வருவதற்குமுன் இறந்துவிட்டார். அந்தப் புத்தகம் முழுவதும் மரணத்தைப் பற்றியே சம்பத் எழுதியிருப்பார். அவருடைய மரணம்கூட ஒரு நாடகம் மாதிரி எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது.

காலையில் கூட மரணம் ஒரு நாடகம் நடத்திவிட்டுச் சென்றதாகத் தோன்றியது. எச்சரிக்கை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறதோ என்றுகூட யோசிக்க ஆரம்பித்தார். காலையில் நடந்த நிகழ்ச்சி மரணத்தைப் பற்றிய ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சியாகத் தோன்றியது. ஜாக்கிரதை என்று மரணம் மிரட்டிவிட்டுச் சென்று விட்டதா?

பத்மநாபனுக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. பொதுவாக தூங்கும்போது விளக்கெல்லாம் அணைத்துவிட்டுத் தூங்குவார். ஆனால் அன்று அவர் எல்லா விளக்குகளையும் எரியவிட்டுத் தூங்க முயற்சி செய்தார். எப்படியோ தூங்கி விட்டார்.

அடுத்தநாள் அவருக்கு சுரம் அளவு குறைந்துவிட்டது. அலுவலகத்தை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டார். அன்று சனிக்கிழமை. எப்போதும் அவருக்கு சனிக்கிழமை என்றால் மகிழ்ச்சியான நாள். அன்றுதான் அவர் சென்னைக்கு ஓடும் நாள். ஓடிவிட்டார் சென்னைக்கு. திரும்பவும் திங்கள் வந்தபோது அவருக்கு மரணத்தைப் பற்றிய காட்சி மறந்துவிட்டது.
சிவா அவரைப் பார்க்க வந்தபோது அப்போது நடந்த நிகழ்ச்சியை சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தார். சிவா ஓடிவந்து வாந்தி எடுத்ததைக் கிண்டல் அடித்துக்கொண்டிருந்தார்.

அவருக்குத் தெரிந்த ஒரு குடும்பம் அங்கிருந்தது. அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது வாந்தி எடுத்துக்கொண்டிருப்பார்கள்.
“உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அப்படி ஆகிவிடுகிறது. அன்று என்னால் தாங்க முடியவில்லை,”என்றார் சிவா.
“மரணம் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது,”என்றார் பத்மநாபன்.

இந்தச் சம்பவம் நடந்து பல நாட்கள் ஓடிவிட்டன. பத்மநாபன் மறந்து விட்டார். அவர் அலுவலகத்தில் மகாதேவன் என்று ஒருவர் இருக்கிறார். பார்ப்பதற்கு நீலு என்ற நடிகர் மாதிரியான தோற்றத்தில் இருப்பார். வளவளவென்று பேசிக்கொண்டிருப்பார். அவருடைய சில செய்கைகள் பத்மநாபனுக்கும் எரிச்சலாக இருக்கும். அலுவலகத்தில் அவருக்கு கெட்ட பெயர். அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார். அவருக்கு 2 பெண். ஒரு பையன். ஒரு பெண் இன்ஜினியரிங் காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். அவள் பாட்டும் பாடுவாள். கர்நாடக சங்கீதத்தில் ஒரு திறமை உண்டு.

pic2

அந்தப் பெண்ணிற்குக் கும்பகோணத்தில் ஒரு பாட்டுக் கச்சேரி நடத்த வேண்டும் என்பது அவருடைய நெடுநாள் விருப்பம்.
அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார். அந்தப் பெண்ணின் கல்லூரியில் உள்ள ஒரு பேராசிரியரைப் பேச ஏற்பாடு செய்தார். பெண்ணிற்குப் பாட்டுச் சொல்லிக்கொடுத்த ஆசிரியையைப் பேசக் கூப்பிட்டார். 90 வயதான ஒரு மிருதங்க வித்வானையும் பேசக் கூப்பிட்டார். பின் ஒரு பத்திரிகை அடித்து எல்லோருக்கும் வினியோகம் செய்தார்.

“பத்மநாபன் வந்திடுங்க..சாப்பாடெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறேன்,” என்றார் மகாதேவன் ஒருநாள் பத்மநாபனைப் பார்த்து.

அந்த நாள் வந்தது. பந்தநல்லூரிலிருந்து கும்பகோணம் 30 கிலோமீட்டர் தூரம். பஸ்ஸில் 1 மணிநேரம் பயணம். அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கு நேரம் ஆகிவிட்டது. 7.30 மணியிருக்கும். பஸ்ஸைப் பிடித்துக்கொண்டு கும்பகோணம் போய்ச் சேருவதற்குள் நேரம் அதிகமாகிவிட்டது. கச்சேரி நடக்கும் இடத்திற்குச் சென்றார். மகாதேவனின் பெண் பாடிக்கொண்டிருந்தாள்.

மகாதேவன் இவரைப் பார்த்தவுடன், வேகமாக ஓடி வந்தார். “என்ன ரொம்ப நேரம் ஆகிவிட்டதே?” என்று விஜாரித்தார். “டிபனெல்லாம் தீர்ந்து விட்டது…காப்பி சாப்பிடுங்க…ராத்திரி சாப்பாடெல்லாம் ரெடியாய் இருக்கும்..சாப்பிட்டுவிட்டுப் போங்க,” என்றார்.

பாட்டு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அந்தப் பெண் ‘தம்’ கட்டிக்கொண்டு பாடுவதாகத் தோன்றியது. பின் ஒரு இடைவேளை. மேடையை எல்லோரும் பேசுவதற்காகத் திருத்தம் செய்தார்கள்.

ஒவ்வொருவராக மேடையில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணின் பாட்டுத் திறமையை மெச்சிப் பேசினார்கள். பேராசிரியர் பேசும்போது, “வித்யா பாட்டில் மட்டுமல்ல…படிப்பிலும் நெம்பர் ஒன்..”என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார். 90 வயது மிருதங்க வித்வான் தள்ளாடித் தள்ளாடி மேடையில் வாழ்த்தினார். மேலும் மிருதங்க வித்வான் பென்சன் வாங்கிக்கொண்டு கும்பகோணத்தில் அந்த வயதிலும் தனிமையில் இருப்பதைப் பற்றியும் சொன்னார்.

ஒருவழியாக எல்லோரும் பேசி முடித்தப்பின், திரும்பவும் வித்யா பாட ஆரம்பித்தாள். மேடையில் இருந்தவர்கள் எல்லோரும் கீழே வந்து அமர்ந்தார்கள். வித்யா துக்கடாக்கள் பாட ஆரம்பித்தாள். சம்போ…சிவ சம்போ…என்ற பாட்டை உருக்கமாகப் பாட ஆரம்பித்தாள். அந்தப் பாட்டு எமனை அழைக்கும் பாட்டு என்று பத்மநாபனுக்குத் தோன்றியது.

திடீரென்று ஒரு சத்தம். வித்யாவின் கல்லூரிப் பேராசிரியர் நாற்காலியிலிருந்து கீழே சாய்ந்து விட்டார். வித்யா இதைப் பார்த்துவிட்டுப் பாடுவதை நிறுத்திவிட்டாள். மகாதேவன் அவசரம் அவசரமாக ஓடிவந்து பேராசிரியரைப் பிடித்துக் கொண்டார். பேராசியர் மயங்கியே விழுந்துவிட்டார். பாட்டு முழுவதும் நின்றுவிட்டது. பின் ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு பேராசிரியரைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். மகாதேவனுக்குத் துணையாக பத்மநாபனும் சென்றார்.

அவசரம் அவசரமாக ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றார்கள். மருத்துவ மனையில் அவசரப் பிரிவில் பேராசிரியரை அழைத்துக்கொண்டு போனார்கள். சிறிது நேரத்தில் பேராசிரியரைப் பரிசோதித்த டாக்டர், “அவர் எப்போதோ இறந்து விட்டார்,”என்று சொன்னார்.

எல்லோருக்கும் அதிர்ச்சி. பத்மநாபனுக்குத் திகைப்பாக இருந்தது. இருப்புக் கொள்ளவில்லை. மகாதேவனிடம் சொல்லிக்கொண்டு அவசரம் அவசரமாக ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டிற்குச் சென்றார். பின் அங்கிருந்து ஒரு பஸ்ஸைப் பிடித்து அவர் ஊருக்குப் பயணமானார். வீடு போய்ச் சேர இரவு 11 ஆகிவிட்டது.

வீட்டிற்கு வந்தவுடன் பத்மநாபனுக்குப் படபடவென்றிருந்தது. ஒரு பாட்டுக் கச்சேரி நடக்கும்போது இது மாதிரி மரணம் அவர் எதிர்பார்த்ததில்லை. அந்தப் பெண்ணைப் புகழ்ந்து பேசிய பேராசிரியர் முகம் அவர் முன்னால் மிதந்துகொண்டிருப்பதுபோல் தோன்றியது. பத்மநாபனுக்கு ஒரு கேள்வி உள்ளுக்குள் எழுந்து கொண்டிருந்தது. ஏன் இதுமாதிரியான நிகழ்ச்சி நடக்க வேண்டும். அதுவும் அவர் முன்னிலையில்.. மரணம் திரும்பவும் ஒரு நாடகத்தை நடத்துகிறதா? அல்லது அவரை எச்சரிக்கை செய்கிறதா?

பத்மநாபன் உறுதியாக இதற்கெல்லாம் பயப்படக்கூடாது என்று நினைத்தார். ஆனாலும் தூக்கம் வரவில்லை. பேராசியர் பற்றிய எண்ணத்தை முதலில் நிறுத்த வேண்டும் என்று நினைத்தார்.
ஏன் நாம் இந்தக் கச்சேரிக்குப் போனோம் என்று யோசித்தார் பத்மநாபன். அன்று மானேஜர் அந்தக் கச்சேரிக்கு வரவில்லை.

அன்று இரவும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. சென்னைக்கு இப்போதே ஓடவேண்டும் என்று தோன்றியது. அலுவலகத்திற்குப் போக வேண்டாமென்றும் பட்டது. மரணம்தான் முக்கியம். என்ன பெரிய வேலை என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினார். 50 வயதில் இதெல்லாம் எதற்கு? பதவி உயர்வு பெற்று எதற்கு இதுமாதிரி அவதிப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எல்லாம் தனக்குள். தனக்குள். அன்று இரவும் லைட்டெல்லாம் போட்டுக்கொண்டு முழித்துக் கொண்டிருந்தார்.
அடுத்தநாள் அவர் அலுவலகத்திற்குப் போகும்போது அவர் முகமே சரியில்லை.

மகாதேவனும் வந்திருந்தார். அவர் சாதாரணமாக இருந்தார். “யாரும் சாப்பிடவில்லை. எல்லா சாப்பாடும் வீணாகப் போய்விட்டது..”என்றார். என்ன மனிதர் இவர். சாப்பாடு வீணாகிப் போனதைப் பற்றிப் பேசுகிறார். ஒரு மரணம் அவர் முன்னால் நடந்ததைப் பற்றிச் சற்றுக்கூடக் கவலைப்படாத மாதிரி இருக்கிறாரே.. அந்தப் பெண் வித்யாவிற்கு எப்படி இருந்திருக்கும்.. தன் முதல் கச்சேரி அரங்கேறும்போதே இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டதே என்றெல்லாம் யோசித்திருக்குமோ?
அன்றும் சனிக்கிழமை. அந்த முறை சென்னை போனால், ஒரு வாரமாவது அங்கிருக்க வேண்டுமென்று தோன்றியது. மரணத்தின் நாடகத்தைத் தன்னால் மறக்க முடியாது போல் இருந்தது.

மகாதேவனைப் பார்த்து, இளங்கோ என்ற கடைநிலை ஊழியர், “என்ன மகாதேவன், சார்.. உங்க பெண் கச்சேரியில ஒரு பேராசிரியரை நிரந்தரமா ஊருக்கு அனுப்பிட்டீங்க போலிருக்கு..”என்று இடிஇடியென்று சிரித்தபடி கேட்டான்.

மகாதேவன் அதைக் கேட்டுச் சிரித்தார்.

பத்மநாபனுக்கோ ஒருவாரம் லீவு எடுத்துக்கொண்டு போகவேண்டும்போல் தோன்றியது. சிறிது நேரத்தில் வட்டார அலுவலகத்திலிருந்து மேலாளருக்குப் போன் வந்தது. “ஒருவாரம் பத்மநாபனுக்கு சென்னையில் டிரெயினிங்,”என்று.
ஆச்சரியமாக இருந்தது பத்மநாபனுக்கு.

 

ஈரம் – ஈஸ்வர்

Image result for an old man in chennai pulling cart

ராமய்யாவுக்கு வண்டியை அதற்கு மேலும் இழுக்க முடியவில்லை.  நல்ல வேளையாக,  நகரத்தின் மிகுந்த போக்குவரத்து நெரிசல், உயிர்த்துடிப்புடன் இயங்கிக் கொண்டிருந்த அந்த நெடுஞ்சாலையிலும், ஒரு பெரிய ஆலமரம், தெய்வம்போல் நின்று, நிழலைத் தந்து கொண்டிருந்தது.

சுட்டெரிக்கும் வெய்யில்.  சூரியன் சென்னையை மட்டும் ஏன் இப்படிச் சுட்டெரிக்கிறான்? இந்த நகரத்தின்மீது அவனுக்கு ஏன் இத்தனை கோபம்?  வண்டியை நிறுத்தி விட்டு ராமய்யா, வேட்டியை மடித்து, இறுக்கிக் கட்டியிருந்த இடுப்புத் துணியை அவிழ்த்து உதறி, முகத்தையும், உடலையும் துடைத்துக் கொள்கின்றான்.

 

ராமய்யா இந்த அறுபத்திரண்டு வயதில், வாழ்க்கையில் எங்கெங்கோ சுற்றிவிட்டுக் கடைசியாகச் சென்னையில் வந்து விழுந்தவன்.  அவனுக்கு என்று சொல்லிக்கொள்ள யாருமே கிடையாது.  தாகம் தொண்டையை வறட்டுகிறது. தண்ணீர் கிடைக்குமா என்று தெரியவில்லை.

எதிரே, அந்த சிறு சாலை,  இந்த நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் இடத்தில் ஒரு வட்டமான போலீஸ் நிழற்குடை.  முதலில் ராமய்யா அதைக் கவனிக்கவில்லை.  பார்த்திருந்தால், அங்கு நிழலுக்குக்கூட நிற்காமல், கஷ்டப்பட்டாவது வண்டியை இழுத்துக்கொண்டு, இன்னும் ஒரு கிலோ மீட்டர் போய் தள்ளி நிறுத்தியிருந்திருப்பான்.

போலீசுக்கும், அவனுக்கும் இருந்த உறவுதான் எவ்வளவு விசித்திரமானது.  போன ஜென்மத் தொடர்போ?

தாமிரவருணித் தண்ணீர் ஜில்லென்று இறங்கிப் பழகிய தொண்டை ராமய்யாவுக்கு.  பதினைந்து வயது ராமய்யாவுக்குத் தாமிரவருணி ஈரம் பழகிப்போன ஒன்று.  அவன் போதாத நேரம் அந்த வயதில்தான் தொடங்கப்படவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்ததோ?

கிராமத்தில் ஆடு ஒன்று களவு போக, அதற்கு அவன்தான் உடந்தை என்று யாரோ காணாமலே சாட்சியும் சொல்ல, ஊர் பஞ்சாயத்தால் அவன் குற்றத்திற்கு உடந்தையாகக் கருதப்பட்டு, பஞ்சாயத்திற்கு இரண்டு ரூபாய் அபராதம் கட்டவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டான்.  கோபமே உருவான இளைஞனாக இருந்த ராமய்யா, இந்தப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குத் தலைவணங்க மறுக்க, விஷயம் பெரிதாகி, தேவையே இல்லாமல் போலீஸ்வரை போயிற்று. – உபயம் ஊர்ப் பெரிய மனிதர்கள்.

ஊருக்குப் பெரிய மனிதர்கள் என்று வந்து நின்றவர்கள் ஊதிவிட, அந்தப் பக்கத்துச் சின்ன காவல் நிலையம், காரணமேயில்லாமல் ராமய்யாவைப் புரட்டி எடுத்தது.  இனி இறந்தாலும் அந்த ஊருக்கு வரமாட்டேன் என்று கோபத்தில் சூளுரைத்து விட்டு, மதுரைக்குத் திருட்டு ரயில் ஏறி வந்த தன் தலை எழுத்தை, ராமய்யா இன்றளவும் நொந்து கொண்டுதான் இருக்கிறான்.

ஆஹா! அந்தத் தாமிரவருணித் தண்ணீர்தான் என்ன சுகம்! இப்பொழுது நினைத்தாலும் தொண்டையில் ஜில்லென்று ஒரு சிலிர்ப்பு!

மதுரையில் ராமய்யா ஒரு நான்கைந்து வருடங்கள் இன்ன வேலைதான் என்றில்லாமல், என்னென்னவோ வேலைகள் பார்த்து வந்தான். பூ கட்டுவது, இலை விற்பது, எப்பொழுதும் நடக்கும் கூட்டத்திற்கு மைக் கட்டுவது… நிரந்தரமாக அவனுக்கு வேலை என்று ஒன்று கிடைத்து அமரும் சமயம், வேலைக்குப் போகும்பொழுது வழியில் ஒரு கொலை விழ, அதைப் பார்க்க நேரிட்ட சாட்சிகளில் அவனும் ஒன்று.  தொடர்ந்த போலீஸ் தொல்லையால் அவன் நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்லவேண்டிய கட்டாயம் நேரிட்டது.  தண்டனை பெற இருந்தவனுக்குப் பின்னால் ஒரு பெரிய ரவுடி சாம்ராஜ்யமே இருந்ததால், அந்த மீனாட்சிக் கோட்டையும் அவனுக்குப் பாதுகாப்பு அற்றுப் போக இரவோடு இரவாக, அவன் டிக்கெட் எடுத்து, அடுத்த கட்டப் பயணமாகக் கோவை நோக்கிப் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அப்பொழுதெல்லாம் கோவையில் தண்ணீர் பிரச்சனை.  தாமிரவருணித் தண்ணீரில் நனைந்த சுகத்தை மறக்காத தொண்டைக்கு, வைகையும், சிறுவாணியும் அடுத்ததாகத்தான் பட்டது.  நெஞ்சில் அந்த ஈரம் நிற்கவில்லை.  சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து, உறவு என்ற ஒன்று, யார் என்று கூட அறியாமல் நாடோடியாக வாழ்க்கையை ஆரம்பித்த ராமய்யா என்ற மனிதனுக்கும், வள்ளி அம்மை என்ற பெண்ணுக்கும் கோவையில்தான் பரிச்சயம் ஏற்பட்டது.  அவனுக்கு அச்சு அலுவலகத்தில் வேலை. பக்கத்தில் இருந்த ஒரு மில்லின் அலுவலகத்தைப்  பெருக்கும் வேலை வள்ளியம்மைக்கு.  இந்தத் தொடர்பு பிறகு அவன் பக்க உறவு என்ற யாரும் இன்றியும், திருமண உறவாக உருப்பெற்றது.

திடீரென்று ஒருநாள் அவன் வேலை பார்த்துக்கொண்டிருந்த பிரஸ்ஸில் அதிரடி போலீஸ் சோதனை.  தடை செய்யப்பட்டிருந்த ஏதோ ஒரு தீவிரவாத இயக்கத்திற்கான சுவரொட்டிகள் அச்சடித்த அச்சகம் என்ற முறையில்,  அங்கு பணி புரிந்தவர்களும் கைதாக, இவனும் அவர்களில் ஒருவனானான். மீண்டும் போலீஸ் கெடுபிடிகள், தொந்தரவுகள். சிறைவாசம் வேறு.  இது பல வாரங்கள் தொடர்ந்தது.  கூலிக்காக சுவரொட்டிகள் ஒட்டிய காரணம் ஒன்றைத்தவிர அவன் மீது பெரிய குற்றத்தைச் சுமத்தக் காவல்துறையாலும் முடியவில்லை.  பெரிய பின்னணி என்பது இல்லாதிருந்த காரணத்தால், அவனுக்கு ஜாமீன் கொடுத்து, அவனை வெளியே கொண்டுவர யாரும் முயற்சிக்கவும் இல்லை. இது அந்த நீதிபதிக்கே புதிய அனுபவமாக இருந்திருக்க வேண்டும்.  தீவிரவாத இயக்கங்கள் சம்பந்தப்பட்டவர்கள்  போலீசாரால் கைது செய்யப்படும்போது, அவர்களுக்கு எப்படியேனும் ஏதாவது ஒரு முறையில், திடீரென்று முளைக்கும் சமூக நல விரும்பி அமைப்புக்களோ, அல்லது ஏதாவது ஒரு கட்சியின் முகத்திரையாகச்  செயல்படும் சில மனித உரிமைக் கழக அமைப்புக்களோ, நிச்சயமாகப் பின்னணியில்  இருந்து  உதவிகள்  அனைத்தும் செய்யும். இவனுக்கு அத்தகைய ஆதரவு ஏதும் கிடைக்காத காரணமே, அந்த நீதிபதியை யோசிக்க வைத்திருக்கவேண்டும்.  ஒரு சாதாரணக் கூலியை தீவிரவாதி அந்தஸ்துக்கு உயர்த்தாமல், அவர் அவனை எச்சரித்து, விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

குறுகிய அந்த சிறை வாழ்க்கையை அவன் அனுபவித்துக்கொண்டிருந்த அந்தப் போதாத நேரத்தில், விதி இன்னமும் அவனுடன் விளையாடியது.  பிரசவ வலியில், சரியான நேரத்தில் கவனிக்க மனித உறவுகள் இன்றி, வள்ளியம்மை பிரசவ நேர துர்மரணம் எய்த, சிசுவும் இறந்தே பிறந்தது.  ஈமச்சடங்குகள் செய்ய அவனுக்குத் தற்காலிக அனுமதி கிடைத்தது.  சிதை மூட்டி, அவர்களைச் சாம்பலாக்கி, சிறை திரும்பு முன்னரே, ராமய்யாவுக்கு வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்களே மாறிப்போயின.  சமூக அமைப்பின் பாதுகாவல் அரணான காவல் துறை என்பதே ராமய்யாவுக்கு ஒரு  கசப்பான, வேண்டாத உறவாக மாறிவிட்டது.  உறவு என்பதே  இல்லாமற்போன அந்த மனித மனத்தில், வேண்டாத உறவு என்பதாக ஒன்று புதிதாக முளைத்தது.  போலீசைத் தொலைவில் பார்க்க நேரிட்டால் கூட, ராமய்யா முகத்தைத் திருப்பிக்கொண்டு, செறுமித் துப்பி, நகர்ந்து போவது, ஒரு இயற்கையான நிகழ்ச்சியானது.

வள்ளியம்மைக்குப் பிறகு சிறுவாணியும் அவனுக்குக் கசந்துவிட, ஒரு லாரியில் ஏறி அவன் தொடர்ந்த பயணத்தில், திருச்சி இடறியது.

கொஞ்ச காலம் காவிரி அவனுக்கு சுகமான அனுபவமாகத்தான் இருந்தது.  வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல், வயிற்றைக் கழுவமாத்திரம் என்றே அவனுக்கும் ஒரு ஜோலி தேவைப்பட, அதுவும் அவனுக்குச் சில நாட்களில் கிடைத்தது –  ஒரு தனியார் பேருந்துக் கம்பெனியில். அவன் வயிறு கழுவ, போதுமான வேலையாக அது இருந்தது.  பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்து நிறுவனமாக அது இருந்தாலும், சில குறிப்பிட்ட சரக்குகள் அங்கு வந்த பேருந்துகளில் ஏறுவதும், இறங்குவதும்கூட  அங்கு வாடிக்கையாக இருந்தது.  ஏற்றி இறக்குவது அவன் தொழிலாயிற்று.  அதற்கு அதிக நேரம் தேவைப்படாது என்பதால், அந்த பஸ் கம்பெனி வாசலில் நின்றுகொண்டு, வருகின்ற, போகின்ற பஸ்களின் கால அட்டவணை, போய்ச் சேரும் இடம் இவற்றை உச்சஸ்தாயிக் குரலில் கூவிக்கூவி வாடிக்கை சேர்ப்பதும் அவன் தொழில் தர்மங்களில் ஒன்றாயிற்று.  ஆனால் நிரந்தரம் என்பது அவன் தலையில் எழுதப்படாத ஒரு விதியோ!

தேர்தல் கூட்டங்களுக்கும் எல்லாக் கட்சிகளின் மாநில மகாநாட்டுக் கூட்டங்களுக்கும் பிரசித்தி பெற்ற அந்தக் காவிரிக் கரையில் அவன் அனுபவம் வேறானது. திருச்சியில்தான் அவனுக்கு முதலில் நட்பு என்ற ஒன்றே பரிச்சயமானது -மாரிமுத்துவின் மூலம்.  மாரிமுத்து கம்பெனி வாசலில் வண்டியில் கடலை-சுண்டல்-பலகாரம் என்று விற்பவன்.  ராமய்யாவுக்கு மாத்திரம் அவன் கடையில் மாதாந்திரக் கணக்கு என்ற அளவில் வளர்ந்த நட்பு.  மாரிமுத்து ஒரு கட்சியின் மாநில மகாநாட்டுக் கூட்டத்துக்கு, சுண்டல்-கடலை வண்டியுடன் வியாபாரத்திற்குப் புறப்பட்டபோது, ஒரு மாறுதலுக்காகத் துணைக்கு வருமாறு இவனை அழைக்க, ஒரு நாள் ஓய்வுபெற்று இவனும் துணைக்கு மாரியுடன் போக நேரிட்டது.

திடீரென்று மாநாட்டுக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம், பெரிய அடிதடி ரகளை, சில கைகள், சில கால்கள் வெட்டப்பட, அங்கு ஒரு போர்க்களம்.  அது ஆளும் கட்சி மாநாடு.  எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே செய்த குழப்பம் என்று இது உருமாறி, குழப்பத்தை ஏற்படுத்திய எதிர்க்கட்சி ஆட்களில் ஒருவனாக ராமய்யாவும் கைதானான்.  நிஜமாகவே இவன் வேலை பார்த்த பேருந்து நிறுவனர் எதிர்க்கட்சி பிரமுகராகவும் இருந்ததால், இவன் மீதான குற்றச்சாட்டு அரசியல் சாயம் பெற்று வலுவானது.  அவர் ஏவித்தான் இவனைப் போன்ற ஆட்கள், கூட்டத்தில் கலாட்டா செய்ததாக நம்ப இடம் ஏற்பட்டது.  எவ்வளவு எடுத்துரைத்தும் கேட்காமல் போலீஸ் அவர்கள் பாணியில் அவனை நன்றாகவே கவனித்துக்கொண்டது.  இவனை வெளியே கொண்டுவர,  கம்பெனி படாதபாடுபட வேண்டியதாயிற்று.  “ ஏண்டா சோம்பேறி! லீவு எடுத்துக்கிட்டு, அந்தக் கூட்டத்துக்குப்போய், எனக்குத் தண்டச் செலவு வச்சிட்டயேடா!” என்று நியாயமான கோணத்தில் முதலாளி   கத்த காவிரியையும் இரண்டு நாட்களில் ஒதுக்க வேண்டியதாயிற்று.

ராமய்யா பிறகு ராஜமுந்திரி, அலகாபாத் என்றெல்லாம் கூடப் போயிருக்கிறான்.  கோதாவரி, யமுனா என்று எல்லா தண்ணீரும் அவனுக்குப் பழகியது.  ஆனால் விசித்திரமாக அங்கும் ஏதாவது ஒரு  முறையில் அவனுக்கும், போலீசுக்கும் பழைய உறவு தொடர்ந்தது. தாமிரவருணி இனிப்பு அவன் தொண்டையிலும், போலீஸ் என்ற கசப்பு  அவன் நெஞ்சிலும்  இருந்து இன்றளவும் இறங்கவில்லை. கடைசியாக ராமய்யா வந்து விழுந்த இடம் சென்னை. இந்த ஊரில் ராமய்யாவுக்குப் பிடிக்காமல் போனது போலீஸ் மாத்திரம் அல்ல.  தண்ணீரும்கூட. எவ்வளவு குடித்தாலும் நெஞ்சில் சுவையில்லை.  தாகமும் அடங்குவதில்லை.

வெய்யிலோ மகா கொடுமை! தொழில் கிடைக்கும் நேரமாகப் பார்த்து சுட்டெரிக்கிறது.  இன்னும் இரண்டு கிலோ மீட்டராவது வண்டியை இழுக்கவேண்டும்.  ஒரு மாடு சுமையில் பாதியாவது இருக்கும். கூலி இருபது ரூபாய் கிடைக்கும்.

ராமய்யாவுக்கு அந்த ஆலமரம்  நிஜமாகவே ஆண்டவன் –  அவனுக்காகவே படைத்த வரமாகவே பட்டது. அவன் துண்டால்  முகத்தைத் துடைத்து எடுக்க, எதிரே ஒரு டிராபிக் போலீஸ்

போலீஸ் எந்த உடுப்பில் இருந்தால் என்ன? உருவம் மாறவா போகிறது?  ராமய்யாவுக்கு உடனே அந்த இடத்தை விட்டுப் போனால் போதும் என்று இருந்தது.

வந்த போலீஸ்  ராமய்யா அருகே வந்து நின்றான். இளம் வயதுதான்.  தொப்பியைக் கழற்றி விட்டுக் கைக்குட்டையால் , முகத்தையும், தலையையும் ஓட்டத் துடைத்துக் கொண்டான்.

“ நல்ல வெய்யிலில்ல?”

“……….” ராமய்யாவிடமிருந்து பதிலில்லை.

“ நான் இங்ஙன வந்து மூணு மாசமாச்சு… அதோ, அந்தக் கொடைதான் நம்ம கோட்டை.” சாலைக்கு நடுவே இருக்கும் டிராபிக் போஸ்டைக் காட்டுகிறான்.

“ அப்பப்போ இந்த வண்டியை இளுத்துக்கிட்டுப் போற, பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.  ஏன்யா! இந்த மதிய வெய்யில்ல,  தார் ரோட்டுல, செருப்புக்கூட இல்லாம, இவ்வளவு சுமையையும் வச்சிக்கிட்டு வண்டி இளுத்துக்கிட்டுப் போறியே, சூடு கொறஞ்சப்புறந்தான் வண்டி கட்டுவேன்னு யாருக்கா இருந்தாலும் சொல்ல வேண்டியதுதானேய்யா!”

“ பொழப்பு அப்பிடி….”  ராமய்யா வேண்டாவெறுப்பாகப் பதில் சொல்கிறான்.

“ கொஞ்சம் இரு! ..” சொல்லியவாறே அந்தப் போலீஸ் இளைஞன், மரத்திற்கு மேற்காக சாலையைத் தொட்டவாறு சுவருடன் ஒட்டி இருக்கின்றாற்போல் தோற்றம் அளிக்கும் மின்சாரப் பெட்டி இணைப்புப் பக்கம் போகிறான்.  அந்த மின்சாரப் பெட்டிக்குப் பின்னால் சுவற்றுப்  பக்கமாகத் தொங்கும் ஒரு பையையும், கூடவே ஒரு ஜோடி செருப்பையும் எடுத்து, ராமய்யா அருகே வருகிறான்.  அந்த ஜோடி செருப்பை ராமய்யா காலடியில் போடுகிறான்.

“ வெய்யில்ல வண்டி கட்டமாட்டேன்னா வெட்டியா போடப் போறானுவ?  இல்லே சாயரட்சைக்கு சரக்குப் போனா, துட்டு தரமாட்டேன்னு சொல்லிருவாங்களா? எங்களுக்குத்தான் தலை எளுத்து. வேகாத வெய்யில்ல நிக்கணும். வேண்டாதவங்களைப் புடிக்கணும். கைநீட்டி கவர்ன்மெண்ட் சம்பளம் வாங்குறோமில்ல… அது இளுக்குறபடி  ஆடணும்.. உனக்கு என்னய்யா தலை எளுத்து.. இந்தா! இந்த செருப்பை மொதல்ல மட்டிக்க..”

ராமய்யா தயங்குகிறான்.

“என்ன ரோசனை? இங்கிட்டு செருப்புத் தைக்கிறவன் ஒருத்தன் அந்த எம்.இ.எஸ். பாக்ஸ் பக்கம், சின்ன கோணி கட்டிக்கிட்டு கடை வச்சிருந்தானே? அவன் போன வாரம் பூட்டான்யா! மிஞ்சினது  இந்த சோடிதான்.  உரிமை கொண்டாட யாரும் இல்ல… போன வாரம் இதப் பார்த்தப்பவே எனக்கு உன் நெனப்பு வந்தது.  நான்தான் அதை அங்கிட்டு பத்திரமா எடுத்து வச்சேன். உன் காலுக்குன்னு அளவெடுத்தாப்போல சரியா இருக்கு பாரு! மாட்டிக்க..!”

ராமய்யாவைக் கட்டாயப்படுத்தி, கால்களில் அணிய வைக்கிறான்.  கால் குறுகுறுக்கிறது. புது அனுபவம்.

கொண்டுவந்த பையிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எடுக்கிறான்.  ஒரு விழுங்கு குடிக்கிறான்.  ராமய்யாவிடம் நீட்டுகிறான்.

“ குடி” ராமய்யா வாங்கத் தயங்குகிறான்.

“ பயப்படாதே! நல்ல தண்ணிதான்.  படிச்ச பொண்ணைத்தான் கட்டியிருக்கேன்.  இந்த மெட்ராஸ் தண்ணியக் காச்சாம குடிக்க வுடமாட்டா அவ. வெளிலயும் நான் குடிக்கக் கூடாதுன்னு கண்டிசன்… மீற முடியுமா?  நீயும் கொஞ்சம் தொண்டைய நனைச்சிக்க.”

ராமய்யாவுக்கு நிஜமாகவே அந்த சமயம் அந்தத் தண்ணீர் தேவைப்படுகிறது.  இருந்தாலும் காக்கிச் சட்டையிடம் வாங்கியாவது குடிக்க வேண்டுமா?

“ அட குடிங்கறேன்ல… இந்தத் தாளாத வெய்யில்ல, வண்டி இளுக்கறியேன்னுதான்  பாட்டில நீட்டுறேன்.  ஊத்திக்க… இந்த ஏரியால தண்ணி கெடக்கறதே  ரொம்பப் பாடுய்யா..”

ராமய்யா கையில் அவன் பாட்டிலைத் திணிக்கிறான்.

ஒரு மிடறு உள்ளே போகிறது. இன்னும் கொஞ்சம். ராமய்யா பாட்டிலை அந்த கான்ஸ்டபிள் இளைஞனிடம் கொடுக்க, அவன் பாட்டிலை மூடிப் பையில் வைத்துக் கொள்கிறான்.

“ எங்க ஆத்தா அடிக்கடி சொல்லும். வெய்யில்ல காயற தொண்டைக்குத் தண்ணி குடுக்கணம்டா…. இல்லைன்னா, நாம  பொறவி எடுத்து ஒரு பிரயோசனமும் இல்லேன்னு… ம்…. ஆயிரிச்சு…. அது போய் சேர்ந்து மூணு வருசம்…… ஆனா சொன்னது மனசுல நிக்குது.  உன்னையப் பார்த்தப்போ அதுதான் நெனவுக்கு வந்தது…… சரி வரட்டா! அடுத்த டூட்டி நாலு மணிக்கு.  வூட்டுக்குப் போவணும்.  ஆமா தண்ணி நல்லா இருந்திச்சா? கார்ப்பரேசன் தண்ணிதான்.  இருந்தாலும் காச்சின தண்ணி, அதான் கேட்டேன்.

அவன் போய் மறைகிறான்.

வெகு காலத்திற்குப் பிறகு, ராமய்யாவுக்குத் தொண்டை ஈரமாகிறது. ஈரம், நெஞ்சில் இறங்குகிறது.

 

 

 

சிசு கதை (எஸ்.எஸ் )

Image result for R

சிசு கதை ( சின்னஞ்சிறு கதை)

 

ஹெமிங்க்வே  எழுதிய உலக பிரசித்தி பெற்ற ஆறு  வார்த்தை சிசு கதை!

Image result for shortest stories

விற்பனைக்கு: குழந்தையின் செருப்பு – ஒருமுறை கூட அணியவில்லை.

குழந்தை பிறக்குமுன் வாங்கி வைத்த செருப்பு – குழந்தையின் மரணம் – செருப்பை விற்கும் அவலம் –

ஆறு வார்த்தைகளில் ஒரு கண்ணீர் கதை!

 

 இன்னொரு திகில் சிசு  கதை – பிரெடெரிக் பிரௌன் எழுதியது:

 தலைப்பு : சத்தம்

The last man on Earth sat alone in a room. There was a knock on thedoor…“

உலகத்தின் கடைசி மனிதன் தன் அறையில் தனியே அமர்ந்திருந்தான். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது…!

நம்ம பாரதியார் எழுதியிருக்கிறார் ( அவர் தொடாத விஷயமே இல்லை) 

கடவுள் கேட்டார்  – “பக்தா ! இது தான் பூலோகமா?”

 

இந்தப் பாணியில் நாமும் எழுதுவோமே என்று யோசித்ததின் விளைவு:

விற்பதற்கு குழந்தை வந்தது

 பால் கசந்தது – பக்கத்தில் பாட்டில் !

 கத்தியால் குத்தியவன் துடித்தான் – துடித்த உடல் நின்றது!

 பசிக்கு விலை உடல் என்றாள்.

 அடுத்த  தடவை என்னை கனவில் தான் காண்பாள்!

 பால் பொங்கியது- அணைத்தேன்!

 நாணத்தோடு நின்றேன்- வரையத் தொடங்கினான்!

 மனதில் அவளைப் பூட்டிவிட்டு சாவியைத் தொலைத்து விட்டேன்!

 பிறந்த பெண் குழந்தை மரணம் . கொடுமை -பெற்றோர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

 திருவிழாவில் நான் தொலையவில்லை – தொலைத்தார்கள்!

 என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் ..! போஸ்ட் மார்ட்டம் பண்ண வந்த டாக்டர் திணறினார்!

சாத்தானின் நடைபயலல் – பரத் பொன்னுசாமி

நான் நடக்க வேண்டும் என்று என்றுமே ஆசைப்பட்டுளேன். ஆனால் நட என்றுசொன்னால் அல்லது நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மட்டும்மண்டைப் பிரளயம் ஏற்பட்டு விடும் . அதாவது ஒன்னு கெடைக்கிறதுக்கு அவளோ கஷ்டப்படுவோம்..ஆனா அது கிடைச்சதும் அத வெச்சு என்னசெய்றதுன்னு தெரியாது..அந்த மாதிரி..

பேட்மேன் படத்துல சோக்கர் சொல்வது போல..

‘I’m a dog chasing cars. I wouldn’t know what to do with one if I caught it’

அந்த மாதிரி..

நண்பன் குளிக்கிறப்ப வாடா வாடானு கதவத் தட்டி இம்ச பண்ணுவேன்..ஆனாஅவன் வெளில வந்ததும் மறுபடியும் போய் படுத்துக்குவேன்..அவன் அவசரஅவசரமா வர்றதுல ஒரு சந்தோசம்..சொல்லப் போனா குரூர சந்தோசம்..ஒருகிறுக்குத்தனம்..

அந்த மாதிரி..

எல்லாமே ஒரு கிறுக்குத்தனம்தான்..

எங்கேயாது போகணும்..தனியா போகணும்..யாருமே இல்லாத எடத்துக்குப் போகணும்..நாலு நாள் நிம்மதியா இருந்துட்டு வரணும்னுதோணும்..திங்கள்கிழம காலைல இருந்து வெள்ளிக்கிழம வரைக்கும்தோணும்.. வண்ண வண்ணமா மனசுல மின்னும்..பறக்கும்..தனியா போய் புத்தர் மாதிரி ஞானம் அடையற மாதிரி கனவு வரும்..ஆனா வெள்ளிக்கிழம சாயங்காலம் ஆறு மணி ஆனதும்..ஞான புத்தர் பயந்த புத்தரா சோம்பேறிபுத்தரா மாறிடுவார்..

அந்த மாதிரி..

அந்த அஞ்சு நாள், ஏக்க சந்தோசம்..மீதி ரெண்டு நாள், கவலைப்படற குரூரசந்தோசம்..அவ்ளோ தான்..

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா..எனக்கு நடக்கணும்னு ஆசைலாம்இல்லை..ஆனா நடக்கிறது எனக்கு பிடிக்கும்னு சொன்னா இந்த உலகம்நம்மள செமயா ஒரு பார்வை பாக்கும்..அந்த பார்வை தர்ற போதைக்குத்தான்இத்தனையும்..

ஆனா எவன்/எவ கண்ணு பட்டுச்சோ தெரியல.. இன்னிக்கு நடக்க வேண்டிய நிலமை வந்துடுச்சு..கெரகம்..எப்படியாவது தள்ளி விட்டுடலாம்னு பாத்தேன்..முடியலை..போயே ஆகணும்..வண்டி இல்லாததனால நடந்துதான்போயாகணும்..

சரி போய் தொலைதுனு கிளம்பி வெளிய வந்து நின்னா சுள்ளுனுவெயிலு..கெரகம்..மெட்ராசுல என்ன மயித்துக்கு வாழணும்னு தோணுச்சு..அப்புறம் உடனேயே இன்னொன்னும் தோணுச்சு..இது ஏன் வண்டில  போறப்போலாம் உனக்கு தோணலைன்னு? இதுக்கு என்ன பதில்னு தெரியுது..ஆனா சொன்னா நான் சுகம் விரும்புற-பிரச்னை வந்தா மட்டும்மெட்ராசை வெறுக்குற-மனிதன் இல்லாத ஒருத்தனா தெரியலாம்..அதனால அத நான் சொல்லப் போறது இல்ல ..

கெரகம்..கெரகம்..

இந்த மண்டைய மொதல்ல ஒன்னாக்கணும்..முதலாளித்துவம் கம்யூனிசம்னுபிரிஞ்சு பிரிஞ்சு கடுப்பேத்துது..எவன் எப்படி போனா எனக்கென்ன..தெனமும்மெட்ராசுல பல கோடி பேர் இந்த வெயில்ல திரியறாங்கதான்..அதுக்கு நான் என்ன பண்றது..அது அவங்க தலையெழுத்து..செத்தா சாவுட்டும்..மூடிக்கிட்டுகெட கம்யூனிச முண்ட..

அப்படினு தலைல அடிச்சு கம்யூனிசத்த அடக்கி வெச்சு நடக்கஆரம்பிச்சேன்..ஆனா கண்டிப்பா இது அடங்காது..அடுத்த முக்குல கட்டடம்வேலை செய்றவங்களையோ, தெரு நாயையோ, ஐ.டி காரனையோ,வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி போட்டவனையோ, எதுத்தாப்புல கவசத்தை மாட்டிகிட்டு புர்ருனு வர்ற உன்னையோ, ஏன் சில சமயம் அந்தகவசத்துல பட்டுத் தெறிக்கிற என் மூஞ்சியோ..இப்டி எதப் பாத்தாலும் சிலுப்பிகிட்டு நிக்கும்..கெரகம்..கம்யூனிசம்ன பெரிய மயிருனு நெனப்பு..மொதல்ல புடிங்கி எறியயணு..

சரி அது கெடக்குது..சந்தானம் சொல்ற மாதிரி அது உள்ளூர் ஓணான்..எப்ப வேணும்னாலும் அடிக்கலாம்..நாம போவோம்..நேரமாச்சு..அப்படினு ராம் நகர்எட்டாவது சாலைல பீச்சாங்கை பக்கம் திரும்பினேன்..அப்பனு பாத்தா எதுத்தவீட்ல இருந்து அந்த பொண்ணு வெளில வரணும்? கல்யாணம்ஆயிடுச்சு..நல்லாவே தெரியுது..ஆனா மனசு எங்க கேக்குது..காஞ்சு போன கேவலமான மனசு..அழகா வேற இருக்கா..சரி கொஞ்சமே கொஞ்சம்பாத்துக்கலாம்னு தோணுச்சு..ஆனா அதுவும் இந்த கம்யூனிச முண்டையோடமொக்க மூளைக்கு உறைக்கறதுக்குள்ள பாத்துடனும்..இல்லைனா கல்யாணம்கச்சேரின்னு ஆரம்பிச்சுடும்..அப்டியே ஓரக்கண்ணுல ஒரு பார்வைய போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சேன்..

ஒரு நூறடி நடந்துருப்பேன்..அப்போதான் நடக்குறது எவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சுது..கால் வலிக்க ஆரம்பிச்சுடுச்சு..உடம்பெல்லாம் வேத்துக்கொட்டுது..கெரகம்..கெரகம்..இப்போதான் தெரியுது எல்லாரும் எதுக்கு உள்பனியன் போடறாங்கனு..அடுத்த தடவ கண்டிப்பாப் போடணும்..ம்ம்ம்..அடுத்ததடவ நடந்தா பாத்துக்குவோம்..இன்னும் ஒரு நூறடி போனேன்..கால்நல்லாவே வலிக்க ஆரம்பிச்சுடுச்சு..இரட்டைக் கெரகம்..
வவ்..வவ்..

இதுல இந்த தெருநாய்ங்க வேற..இதுங்க நம்மகிட்ட சண்டைக்கு வருதா இல்ல அதுங்களுக்குள்ளேயே சண்ட போட்டுக்குதுங்குளானு தெரியல..அதுங்களுக்குள்ளேயே குரைக்குது..திடீர்னு என்னப் பாத்துக் குரைக்குது ..இரவு நேரம்னா கூட சரி..அதுங்க கூடலுக்கு தடையா இருக்கறதனாலனு சொல்லலாம்..ஆனா பட்டப்பகல்ல எதுக்கு? ஒருவேளை இப்பவேவோ? இல்ல அவங்க வீட்டு பிரச்னைனால வந்த ஊடலோ? என்ன எளவோ..போய்டுங்க ஒழுங்கா..வண்டில மட்டும் வந்துருந்தேன்னா பாம்பாம்னு சத்தம் வெச்சே வெரட்டி அடிச்சிருப்பேன்..அப்பவும் போகலைனா சாகடிச்சுருப்பேன்..மறுபடியும் குரைச்சுதுங்க. நாம நெனைக்கறது கேட்டிக்குமோ? கேட்டா என்ன இப்போ? இருங்கடி நாளைக்குவெச்சுக்கறேன்னு கொஞ்சம் ஓடி கொஞ்சம் நடந்து அதுங்களதாண்டிட்டேன்..நல்லவேள கம்யூனிச மூளை இன்னும் தூங்கிட்டுதான்இருக்கு..

இன்னும் கொஞ்ச தூரம் தான்..வந்துரும்..அய்யய்யோ இப்போதான் ஞாபகம்வருது..இந்த போலீசு வேற முன்னாடி நிப்பானே..ஹெல்மெட்கேப்பானே..என்ன பண்ணலாம்னு ஒரு அம்பது அடிக்கு யோசிச்சுட்டேவந்தேன்..அப்போதான் நான் நடந்து வர்றேன்றதே இந்த மண்டைக்குப்  புரிஞ்சுது..எப்புடி பயமுறுத்தி வெச்சுருக்கானுங்க இந்த போலீசுக்காரனுங்க..கெரகம்..நல்லவேள நடந்து வந்துட்டோம்னு தோணுது..நடந்து வர்றது நல்லதுனு கூட தோணுது..
‘இதுலயும் சுயநலம் இருக்குனு’ உள்ள கம்யூனிசம் கத்துச்சு.. கெரகம்முழிச்சுடுச்சு..எல்லார மாதிரி நானும் கேட்டும் கேக்காத மாதிரி நடக்க ஆரம்பிச்சேன் மறுபடியும்..

இன்னோரு நூறு அடி..அப்பாடா வந்தாச்சு..ஒரு தம் வாங்கி பத்தவெச்சேன்..நல்லா ஒரு இழு இழுத்து விட்டேன்..கெரகம்..இதுக்காக எவ்ளோபிரச்னை பாரு..அவ்ளோ போதை..இல்லாம இருக்க முடியல..கெரகம்..
அடுத்து இழு இழுத்துட்டு என்ன பண்லாம்னு யோசிச்சுட்டு ரோட்ட வெறிக்க ஆரம்பிச்சேன்..கார் ஒண்ணு போச்சு..வெளிய வந்த புகையால அந்தக் காரஅடிச்சு நொறுக்கற மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு நல்லா அழுத்தி ஊதினேன்..

“கெரகம் புடிச்சவன்..ஏ.சி போட்டுக்கிட்டு சம்முனு போறான் பாரு நாயி”

உள்ளார,

“ஒண்ணும் போடாத நாயி, கோவணம் போட்ட நாய பாத்து அம்மணக்கராநாய்னு திட்டுச்சாம்”
வழக்கம் போல கேட்டும் கேக்காத மாதிரி திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்..

சிறுகதைக்கான உத்வேகம்: க.நா.சுப்ரமண்யம் எழுதிய அசுரகணம் நாவல்

ஒரு கதை இரு முடிவுகள் – அழகியசிங்கர்

எப்பவுமே அப்படித்தான் – மியாவ்

Image result for cat caricatures Image result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricatures

 

Image result for grandpa grand ma sketches in tamilnadu

” தாத்தா ! உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும். திருவான்மியூர் நம்ம வீட்டிலிருந்து பெசன்ட் நகர் பீச்சுக்குப் போறதுக்கு ஒரு வழி சொல்லுங்க தாத்தா! “

“கண்ணா! இங்கிருந்து கிளம்பி நேரா மந்த்ராலயம் போய், அங்கிருந்து காலடி, குருவாயூர், குந்தா, அப்பறம் திருச்செந்தூர் ,மதுரை போயிட்டு திருச்சி தஞ்சாவூர்,பாபநாசம் வழியாப் போனா வேகமாப் போயிடலாம்.
என்ன தாத்தா இது ! பக்கத்து இடத்துக்கு வழி கேட்டா எல்லா ஊருக்கும் வழி சொல்றீங்க ?”

“கண்ணா! பொதுவா நான் சொல்ற வழி என்னன்னா சிங்கபூர் லாஸ் ஏஞ்சல்ஸ் போய் அங்கிருந்து நியூயார்க் லண்டன் வழியா  சென்னை ஏர்போர்ட் வந்து அங்கிருந்து பெசன்ட் நகர் போகிற வழி தான் சொல்லுவேன். நீ சின்னப்பயலா இருக்கிறதாலே -உனக்கு சின்ன வழி சொன்னேன்.”

“என்ன பாட்டி ? தாத்தா இப்படி வழி சொல்றாரு?” 

“அது எப்பவுமே இப்படித்தான்.”

“பாட்டி! நீங்களாவது ஒரு வழி சொல்லுங்களேன்!”

“நல்லா கேட்டுக்கோ! பக்கத்து வீட்டு மாமிகிட்டே சொல்லிக்கிட்டு, எதித்த வீட்டு மாமிகூட அஞ்சு நிமிஷம் பேசிமுடிச்சு, பிளாக்  வாசல்ல, ரவுண்டிலே உக்காந்து பத்து நிமிஷம் அரட்டை அடிச்சு -அப்பறம் காய்கறி வண்டி வந்ததும் காய் வாங்கிட்டு , அப்பறம் பேப்பர்காரன் வரான்னா பாத்து  …..” 

“என்ன பாட்டி இது? தாத்தா என்னடான்னா உலகத்துக்கே வழி சொல்றார். நீங்க என்னடான்னா பிளாக்கை விட்டே வெளிய  வர மாட்டேங்கிறீங்க ?” 

“நான் சொல்றதை யார் கேக்கறா? ம்ம்.. இப்படி ஆச்சு என் நெலமை!”

“என்ன தாத்தா ! பாட்டி இப்படி சொல்றாங்க?”

“இது எப்பவுமே அப்படித்தான் !”

Image result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricaturesImage result for cat caricatures