கோகுலன் சென்னையில் ஒரு பெரிய நகைக்கடை வணிகரின் மகன். அழகன். கண்மணி , அவளும் ஒரு பெரிய வைர வியாபாரியின் மகள். அழகி. இருவர் திருமணமும் மேற்படி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஏ வி எம் ராஜேஸ்வரியில் வழக்கமான ஆடம்பரத்துடன் கிட்டத்தட்ட மூன்று ‘சி’ செலவில் தாம் தூம் என்று நடைபெற்றது. ரிசப்ஷன் போது கண்மணி அணிந்திருந்த வைரத்தோடு மட்டும் ஒரு கோடிக்கு மேல் இருக்கும் என்று வந்திருந்த மற்ற நகைக் கடைக்கார்கள் பேசிக்கொண்டார்கள். சிவப்பை உமிழும் அந்தத் தோடு டால் அடித்தது.
முதல் இரவு அடையார் பார்க்கில். கண்ணே, மணியே, தங்கமே, முத்தே, வைரமே என்று பாடிக்கொண்டார்கள் இரு நகைக்கடை இளஞ்சிட்டுக்கள் .இருவர் கண்களிலும் மிதந்த காதல் உடலெங்கும் பரவியது.
மறுநாள் இருவரும் தேன் நிலவிற்கு தாய்லாந்தின் பட்டயாவிற்குப் போனார்கள். மரக் கட்டைகளுக்கும் காதல் வெறியைப் பற்றவைக்கும் அந்த அழகுப் பிரதேசத்தில் இவர்கள் இருவரும் சிறகடித்துப் பறந்தார்கள்.
இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தமிழ்ப் படத்தின் ஷூட்டிங் கும்பலின் முக்கியமானவர்கள் தங்கியிருந்தார்கள். ஹீரோ, ஹீரோயின் , தயாரிப்பாளர் மூவர் மட்டும் இங்கே. மற்றவர்களெல்லாம் சுமாரான லாட்ஜில் அடைக்கப் பட்டிருந்தார்கள். ஹீரோயின் ஸாத்வி.
தமிழ்நாட்டின் சமீபத்திய கவர்ச்சிப் புயல். ஸ்ரீதேவிக்குக் கண் – இலியானாவுக்கு இடுப்பு – ரம்பாவுக்கு.. நமீதாவுக்கு .. என்றெல்லாம் இருக்கும் தமிழ் சினிமா வரிசையில் ஸாத்வியின் உதடுகள் -இதழ்கள் மிகவும் பிரபலம்.அவள், அவற்றை மட்டும் தனியாக இன்ஷ்யூர் செய்திருப்பதாக வதந்தி வேறு. வைரமுத்து வேறு அவள் இதழுக்காக ஒரு பாட்டு எழுதி பிலிம்ஃபேர் விருது வாங்கினார் என்றும் செய்தி அடிபட்டது.
இரவு பத்து மணிக்கு கோகுலனும் கண்மணியும் வெளியே சுற்றிவிட்டு தங்கள் 44 வது மாடியில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனி சூட்டுக்கு லிப்டில் போகும் போது, லிப்டில் தனியாக ஸாத்வி வந்தாள். கண்மணியைத் தமிழ் என்று அறிந்ததும் ஸாத்வி அவளைக் கட்டிக் கொண்டாள். கோகுலனுக்குக் கை கொடுத்தாள். பத்தாயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது. ஆனால் ஸாத்வியின் கண்களில் கண்ணீர். தயாரிப்பாளர் , ஹீரோ இருவரும் அவளைத் தொந்தரவு செய்கிறார்கள் . இன்று ஒரு இரவு தப்பித்துவிட்டால் நாளை இந்தியா போய்விடலாம். எங்கே ஒளிவது?
கோகுலனும் கண்மணியும் ஸாத்வியை ரகசியமாக முக்காடு போட்டுத் தங்கள் தனி சூட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் படுக்கை அறை அலங்கரித்திருந்த விதத்தைப் பார்த்து ஸாத்விக்கே ஒரு மாதிரி இருந்தது. அவள் பக்கத்தில் இருந்த சிறு அறையில் புகுந்து கொண்டாள். ஹீரோவுடன் இருப்பதாக தயாரிப்பாளரிடமும் , தயாரிப்பாளருடன் இருப்பதாக ஹீரோவிடமும் போன் செய்துவிட்டு சுகமாகத் தூங்கினாள் ஸாத்வி. ஆனால் அவர்கள் இருவரும் ஸாத்வியை நினைத்துக் கொண்டு தூங்க முடியாமல் துடித்தார்கள். அவர்கள் மட்டுமல்ல. கோகுலனும் கண்மணியும் கூட அன்று வேறு காரணமாகத் தூங்க முடியவில்லை. ஸாத்வியின் அழகு இருவரையும் பாதித்திருந்தது . என்னதான் தனி அறையாக இருந்தாலும் இன்னொரு பெண் பக்கத்தில் இருக்கும் போது எப்படி ? இது கண்மணியின் ஆசையை அணைத்தது. கவர்ச்சிப் புயல் உடன் தேனிலவு … நினைக்கும் போதே கோகுலனுக்கு உடம்பின் ஒவ்வொரு அணுவும் துடித்தது. பக்கத்தில் இருக்கும் கண்மணியை மறந்தே போனான். அவனும் தூங்கவில்லை.
மறுநாள் காலை ஸாத்வி தன் கவர்ச்சி இதழால் கண்மணிக்கு முத்தம் கொடுத்துவிட்டு, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு புறப்பட்டாள். போவதற்கு முன் கோகுலனின் கையைப் பிடித்துக்கொண்டு அவனிடமும் மன்னிப்புக் கேட்கத் தவறவில்லை. அவள் கையை விடுவிக்க அவனுக்கு மனசே இல்லை.
அடுத்த வாரம் அவர்கள் சென்னை திரும்பினார்கள். ஸாத்வியின் கவர்ச்சி உதடுகள் அவனை ‘வா வா’ என்று ஒவ்வொரு நிமிடமும் அழைத்துக் கொண்டே இருந்தன. அவளுக்குப் போன் செய்தான். அவளைச் சந்திக்க அவள் இல்லத்துக்குப் போனான். பெரிய முத்துப் பதித்த அழகிய சிறு சங்கிலியை அவளிடம் காட்டினான். அவளது அழகிய உதடுகள் மேலும் அழகாக விரிந்தன. அவ்வளவு பெரிய அழகான முத்தை அவள் பார்த்ததே இல்லை. ‘இருபது லட்சம்’ என்றான். “ இதை எங்கே அணிவது?, காதிலா, கழுத்திலா?” என்று அவன் தோளில் கையை வைத்துக் கேட்டாள். ‘தொப்புளில்’ என்று சொல்லி அவள் ஆசைப்பட்டபடி அவனே அணிவித்தான். அவள் இதழ்கள் அவனுடைய இதழ்களைப் பற்றின.
கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் லட்சியம் செய்யவில்லை. சூட்டிங் தவிர மற்ற எந்த இடத்துக்கும் கோகுலன் இல்லாமல் ஸாத்வி போவதில்லை. அவள் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டான். கண்மணி? அப்படி ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டதையே மறந்து விட்டான். ஸாத்விக்கு என்றே தனி வீடு, நகை, கார், தோட்டம் எல்லாம் வாங்கிக் கொடுத்தான். யார் சொல்லையும் கேட்பதாக இல்லை. யார் மிரட்டலுக்கும் பயப்படுவனும் இல்லை அவன். அசையும், அசையாச் சொத்துக்கள் எல்லாம் கரைய த் தொடங்கின.
அன்றைக்கு அவளைக் காணோம். அவள் இல்லாமல் அவனுக்கு என்னவோ போலிருந்தது. மதுவிற்கு அடிமை – போதை மருந்துக்கு அடிமை .அதைப்போல பெண்ணும் ஒரு அடிமைப்படுத்தும் பொருளா? அவள் இல்லையென்றால் ஏன் மனதும் உடம்பும் இப்படித் துடிக்கின்றன? இப்போதே அவள் வேண்டும். எங்கே அவள்? அவள் நடிக்கும் சூட்டிங் ஸ்டூடியோவிற்குச் சென்றான் முதல் முறையாக. அவனைத் தெரிந்தவர் அங்கே நிறையபேர் இருந்தார்கள். யாரும் அவனைத் தடுக்க முயற்சிக்கவில்லை. அங்கே அவள் முத்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாள். வசனங்கள் ஒலித்தன .
“ எங்கே உன்னுடைய காதலன் ?”
“ அவனைக் காதலன் என்று சொல்லாதே! அவன் என் அடிமை! என் கால் கொலுசை நக்கும் நாய்”
“அப்படியானால் நான்?”
“ நீ என் இதழ்த் தேனைச் சுவைக்க வரும் பட்டாம்பூச்சி.”
“ ஆஹா! இதழ்த்தேனே.. சுவைத்தேனே ..” – பாடல் வரி மெல்ல ஒலிக்கும் போது அவன் அவளை முதலில் மெதுவாக மூன்று முறை பிறகு அழுத்தமாக மூன்று முறை முத்தம் கொடுத்தான். அவனிடமிருந்து ஒரு சில வினாடிகள் விலகி பிறகு அதைவிட வெறியுடன் ஸாத்வி அவனை நாலைந்து முறை முத்தமிட்டாள்.
இந்த முத்தக் காட்சி நாலைந்து டேக்குகள் வாங்கின. டைரக்டர் கட் என்று சொன்னபிறகும் கூட அவர்கள் இருவரும் லிப் லாக்கிலிருந்து வெளியே வரவில்லை.
‘அவன் என் அடிமை! என் கால் கொலுசை நக்கும் நாய். – நீ -பட்டாம்பூச்சி .. இதழ்த்தேனே.. சுவைத்தேனே!’ – அந்த வரிகள் கோகுலின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தன.
வேகமாக வீட்டுக்குத் திரும்பினான். சற்று நேரத்தில் ஸாத்வி வந்தாள். “இது வெறும் நடிப்புத் தான்” என்று அவள் எவ்வளவு சொல்லியும் அதை நம்பும் மனநிலையில் அவன் இல்லை. அவன் மனதில் அந்த லிப்லாக் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே இருந்தது. இருவருக்கும் வாக்குவாதம். சண்டை முற்றியது. காரை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தான்.
வீட்டில் தனியே இருந்த கண்மணியைப் பார்த்ததும் அவன் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அவளைக் கட்டிக் கொண்டு அழுதான். அவளுக்குப் புரிந்துவிட்டது. சொத்தெல்லாம் அடமானத்தில். அவர்கள் குடியிருக்கும் வீட்டையும் காலி செய்யச் சொல்லிவிட்டாட்கள். மறுநாள் ஒரு கோடியை ஸாத்விக்குக் கொடுக்காவிட்டால் அவன் உயிரையும் எடுத்துவிடப் போவதாகச் சற்றுமுன் ஒருவர் போனில் கூறியது நினைவுக்கு வந்தது. அவனிடம் பணமில்லை. அவளிடமும் பணமில்லை. சட்டென்று அவளுக்கு ஞாபகம் வந்தது. அவள் அணிந்திருந்த தோடுகள். திருமணத்தின் போது அவள் தந்தை அவளுக்கென்று வாங்கியது. கோடி ரூபாய் பெறும். சரியாகப் பராமரிக்காதலால் அழுக்கடைந்து இருந்தாலும் அவற்றின் மதிப்பு குறையப் போவதில்லை. அந்த தோடுகளைக் கழற்றி அவனிடம் கொடுத்து ‘இதை ஸாத்விக்குக் கொடுங்கள். இல்லையேல் அவர்கள் உங்களை …’ என்று கண்ணீர் மல்கக் கூறினாள். அவன் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டவனைப் போல் துடித்தான்.
“கண்மணி ! உன் அருமை தெரியாத பாவி நான். இதை அவர்களுக்குக் கொடுக்கப் போவதில்லை. நாம் இருவரும் இப்போதே மதுரை செல்வோம். அங்கே என் தந்தையின் உயிர் நண்பர் கீர்த்திலால் இருக்கிறார். அவர் நமது காட் ஃபாதர். அவருக்கு அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு உண்டு. ‘டான்’ களும் அவருக்குப் பயப்படுவார்கள். அவர் மூலமாக இதை விற்று நாம் மதுரையிலேயே தொழில் செய்வோம்.” இருவரும் புறப்பட்டார்கள்.
மதுரையின் போலீஸ் கமிஷனர் பாண்டியனுடைய சின்ன வீட்டில் ஏக அமர்க்களம்.
அவர் பெயர் எல்லா ஊழலில் வந்தாலும் அவரை யாரும் அசைக்கமுடியாது. காரணம் அவருக்கு அமைச்சகத்தில் இருந்த செல்வாக்குத்தான். அவரால் தான் ஆளுங்கட்சி கடந்த தேர்தலில் வெற்றிபெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் அவரைப் பற்றிப் புகார் கொடுத்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை. மதுரையே அவர் கையில். ஆனால் அவரோ அவருடைய சின்னவீடு தேவியின் கையில். அவர் அடாவடியாகச் சம்பாதிப்பதே அவளைத் திருப்திப்படுத்தத்தான்.
அப்படித்தான், அன்று காலை ஒரு குவாரி காண்ட்ராக்டர் தன்னுடைய நன்றியறிதலை அவருக்குத் தெரிவிப்பதற்காக ஒரு அழகான ஜோடி வைரத் தோடுகளை அவருக்கு அன்பளிப்பாகத் தந்தார். ஹாலந்திலிருந்து திருட்டுத்தனமாக வந்தவை அவை. விளக்கின் அருகில் அவை பச்சையாக மின்னியன. அந்தத்தோடுகளின் அருமை பெருமைகளையும் சொன்னார். அடுத்த கணம் தேவியின் காதுகளில் அவை மின்னின. தேவி அவரைச் சிறிது நேரம் இன்பத்தின் உச்சியில் பறக்க வைத்தாள். அந்த மிதப்பில் அவர் இருக்கும் போது அவசரமாக அலுவலக அழைப்புவர தவிர்க்கமுடியாமல் சென்றார். இரவு எப்படியும் வந்துவிடுகிறேன் என்று உறுதி அளித்துவிட்டுச் சென்றார். மாலை முக்கிய மீட்டிங்கில் இருக்கும்போது தேவியின் போன் அலறியது. மீட்டிங் எப்படியோ போகட்டும் என்று அவள் வீட்டுக்குப் பறந்தார். தேவி கண்ணீரும் கம்பலையுமாக நின்றாள். அவளின் ஒரு தோடு காணவில்லையாம். இரண்டு தோடுகளில் ஒன்று சற்று லூசாக இருந்ததால் அதைச் சரிசெய்ய பிரபல வைரக் கடைக்குச் சென்றாள். அதைச் சரி செய்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் இரண்டு தோடுகளில் ஒன்றைக் காணோம். எங்கு தொலைந்தது? கடையிலா ? வீட்டிலா ? வழியிலா ? தேவிக்கு ஒன்றும் புரியவில்லை.
பாண்டியன் அசரவில்லை. ‘கவலைப்படாதே இன்னும் நாலு மணிநேரத்தில் அந்தத் தோடு கிடைத்துவிடும்’ என்று உறுதிகூறினார். தன் போலீஸ் ஆட்களால் அது முடியாது என்று அவருக்குத் தெரியும். அதுமட்டுமல்ல யாராவது விஷயத்தை வெளியில் விட்டுவிட்டால் , பிறகு தோடு எப்படி வந்தது என்ற விசாரணை வரும் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால் அவரின் நம்பகமான வலதுகரம் மதுரையை அழைத்தார். மதுரையால் மதுரையில் முடியாத காரியம் எதுவும் இல்லை. விஷயத்தைச் சொன்னார். அவன் களத்தில் இறங்கினான்.
கோகுலன் கண்மணியின் தோடுகளை எடுத்துக்கொண்டு தன் ஆப்த நண்பர் கீர்த்தியிடம் விற்றுத் தரும்படிக் கேட்க வைரக்கடை அருகே வந்து கொண்டிருந்தான். அங்கே ரவுண்ட் வந்துகொண்டிருந்த மதுரையின் சந்தேகப் பார்வை கோகுலன் மீது விழுந்தது.
பாண்டியனுக்கு மதுரையிடமிருந்து போன் வந்தது. “ திருடன் அகப்பட்டுவிட்டான். பொருள் அவனிடம் தான் இருக்கிறது” என்று சொன்னான். தோடு கிடைத்த மகிழ்ச்சியில் பாண்டியன், தேவிக்கு முத்த மழை பொழிந்து கொண்டிருந்தான். மறுபடியும் போன் மதுரையிடமிருந்து வந்தது “அவன் உயிர் போனாலும் பொருளைத் தர மாட்டேன் என்கிறான். என்ன செய்வது? “என்று கேட்டான். “பறித்துக் கொண்டு வா” என்று கத்தினார் பாண்டியன். உயிரைப் பறிக்கக் கத்தியால் குத்தினான். கோகுலன் துடிதுடித்து வீதியில் விழுந்தான். மதுரை அவனிடமிருந்த இரு தோடுகளையும் எடுத்துக் கொண்டு ஒன்றைத் தன் பெல்ட்டின் ரகசிய அறையில் பதுக்கினான். மற்றொன்றை பாண்டியனிடம் கொடுக்கக் காரில் பறந்தான்.
கீர்த்திலால் கண்மணியிடம் வந்தார். பாண்டியன் மதுரையைக் கொண்டு கோகுலனைத் திருடன் என்று கூறி,அவனைக் கத்தியால் குத்தி, தோடுகளை எடுத்துக்கொண்டு போனதைக் கூறினார். கண்மணி துடிதுடித்துப் போனாள். கோகுலனைக்கூடப் பார்க்காமல் நேராகப் பாண்டியன் இருக்கும் தேவியின் வீட்டிற்குப் போனாள். காவலர்கள் யாரையும் காணோம். காலிங் பெல்லை அழுத்தினாள் . அப்போதுதான் தேவியைத் திருப்திப்படுத்திவிட்டுப் புறப்படத் தயாராகயிருந்த கமிஷனர் பாண்டியன் அவளைப் பார்த்து, “யாரம்மா நீ?உனக்கு என்ன வேண்டும்? ” என்று விசாரித்தார்.
“உங்களால் திருடன் என்று தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட கோகுலனின் மனைவி கண்மணி நான் என்றாள்”
“ திருடனின் உயிரைப் பறித்தாலும் தப்பில்லை. இருந்தாலும், நான் தோட்டை மட்டும் பறித்துக் கொண்டு வரச்சொல்லி மதுரையிடம் சொன்னேன்” என்றார்.
“ அவன் என் கணவனின் உயிரையே பறித்துவிட்டான். என் கணவர் திருடர் இல்லை. அது என் தோடு.”
“ இருக்கவே முடியாது.” என்று கூறினான்.
“ நெருப்புச் சோதனையில் தெரிந்துவிடும்” என்று ஆத்திரத்துடன் கூறினாள் கண்மணி.
“அந்தச் சோதனை எனக்கும் தெரியும்” என்று கூறி தேவியை அழைத்தான். அவள் காதிலிருந்த தோடுகளைக் கழட்டச் சொன்னார். தன் பாக்கெட்டிலிருந்து சிகரெட் லைட்டரை பற்ற வைத்துத் தோட்டுக்கு அருகே கொண்டு சென்றார்.
“ என் தோடு ஹாங்காங்கிலிருந்து வந்தது. பச்சை நிறத்தை உமிழும்” என்று சொன்னார். ஒரு தோடு பச்சை நிற ஜாலம் காட்டியது. “ மற்றது என் தோடு . அது ஹாலந்திலிருந்து வந்தது. சிவப்பு நிறத்தை உமிழும்” என்று கூறி அவனிடமிருந்து லைட்டரை வாங்கி அடுத்த தோட்டுக்கருகே சென்றாள். அது அந்த அறையையே சிவப்பு நிறத்தில் மூழ்க அடித்தது.
பாண்டியனும் தேவியும் திடுக்கிட்டார்கள்.
அந்த அதிர்ச்சியில் அவர்கள் இருக்கும் போதே கண்மணி, பாண்டியனின் துப்பாக்கியை எடுத்து “ நீயா கமிஷனர்! நீ ஒரு கொலை காரன்” என்று கூறி அவனைத் துப்பாக்கியால் சுட்டாள். தடுக்க வந்த தேவியையும் சுட்டாள். பக்கத்து வீடுகளில் வெடித்த பட்டாசு வெடிச் சத்ததில் இந்தத் துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்கவில்லை.
இன்னும் அவள் கோபாவேசம் அடங்கவில்லை. வாசலில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அதற்குள் மதுரை அமர்ந்து தான் திருடிய கண்மணியின் தோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் மயக்கத்தில் அவனுக்கு உள்ளே நடந்த துப்பாக்கிச் சத்தம் கேட்கவில்லை. அவன் தான் மதுரை, தன் கணவனைக் கொன்றவன் என்று உணர்ந்து கொண்டாள். அவனை எப்படி அழிப்பது? அவன் போராத காலம் அவன் காரின் பெட்ரோல் டாங்க் திறந்திருந்தது. சத்தம் இல்லாமல் அருகே சென்றாள். மார்பில் மறைத்து வைத்திருந்த பாண்டியனின் சிகரெட் லைட்டரை எடுத்தாள். அதைப் பற்றவைத்து அந்த டாங்கில் போட்டாள்.
மதுரையுடன் காரும் எரிந்தது.
கூட்டமாக ஆட்கள் வரும் சத்தம் கண்மணிக்குக் கேட்டது. அவள் அப்படியே மயங்கி விழுந்தாள்.
கண் விழித்ததும், தான் ஒரு மலையாள இயற்கை வைத்திய விடுதியில் இருப்பதை உணர்ந்தாள் கண்மணி. கதவைத் திறந்து கொண்டு வந்தார் கீர்த்திலால். “ஐயா! தாங்களா? நான் எப்படி?” என்று கேட்டாள்.
“ நான் தானம்மா உன்னைத் தொடர்ந்து வந்தேன். நீ பாண்டியனைக் கொன்று விட்டு மதுரையை எரித்துவிட்டு வந்ததும் அங்கேயே மயங்கி விழுந்தாய். நான் உன்னை என்னுடைய கேரளா செல்லும் லாரியில் போட்டு அனுப்பினேன். ஒரு மாதமாக நீ மயக்கத்தில் இருந்தது எனக்கு மிகவும் வருத்ததைக் கொடுத்தது. இது கேரளக் காட்டில் இருக்கும் மிகச் சிறந்த ஆயுர்வேத ஆஸ்பத்திரி. உன்னை எப்படியாவது குணப்படுத்திவிடுவார்கள் என்று தெரியும். மதுரையில் ரவுடி மதுரைக்கும் பாண்டியனுக்கும் நடந்த தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டார்கள் என்கிற மாதிரி செட்டப் செய்திருக்கிறேன். ஆனாலும் அவர்களுடைய ஆட்களும் போலீசும் உன்னைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அதனால் நீ இங்கிருந்து சீக்கிரம் புறப்படவேண்டும்.” என்றார் கீர்த்திலால்.
“ஐயா!! என் கணவரை …..” சொல்ல முடியாமல் துடித்தாள் கண்மணி.
அப்போது ஒரு ஹெலிகாப்டர் வரும் சத்தம் கேட்டது. கீர்த்திலால் அவசரமாக வெளியே சென்றார். அந்த ஹெலிகாப்டர் அவர்கள் இருந்த இடத்துக்கு அருகே நின்றது. அதிலிருந்து இரண்டுபேர் பிடித்துக்கொள்ள கோகுலன் இறங்கி நடந்து வந்தான்.கழுத்திலும் , வயிற்றிலும் கட்டுப் போட்டுக்கொண்டிருந்தாலும் உயிர் பிழைத்துவிட்டான். கண்மணிக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஓடிப்போய் அவனைக் கட்டிக் கொண்டாள்.இருவர் கண்களும் நன்றி நிறைந்த கண்ணீரோடு கீர்த்திலாலைப் பார்த்தன.
“ நீங்கள் இருவரும் இந்தியாவில் இருப்பது ஆபத்து. உங்களை துபாய்க்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன். இப்போதே இந்த ஹெலிகாப்டரில் ஏறி திருவனந்தபுரம் செல்கிறீர்கள். அங்கே உங்களுக்குப் புது பாஸ்போர்ட் விசா எல்லாம் வழங்கப்படும். உடனே நீங்கள் துபாய்க்குப் போகிறீர்கள். சொல்ல மறந்து விட்டேனே? இனி உங்கள் பெயர் கோவலன் – கண்ணகி. எல்லா நலனுடனும் நீங்க துபாயில் வாழ சகல வசதிகளையும் செய்திருக்கிறேன் “ என்றார் கீர்த்திலால்.
ஹெலிகாப்டர் அவர்கள் மூவரை மட்டும் ஏற்றிக்கொண்டு பறந்தது.
அந்த ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் இரண்டு பணக்கார சகோதரர்கள் தங்கி உடம்பைத் தேற்றிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்பத்திரி மருத்துவர் சாத்தனிடம் அவர்களைப் பற்றி விசாரித்தனர்.
“அவள் கண்மணி . அவன் கோகுலன். அவர்கள் கதை தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சிலப்பதிகாரம் போலவே இருக்கிறது. கீர்த்திலால் தான் எல்லாவற்றையும் சொன்னார். ஒரு வித்தியாசம். அதில் சிலம்பு. இதில் தோடு.” என்று அவர்கள் கதையைச் சொன்னார் சாத்தன்.
“அவர்கள் கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கே. இதை அப்படியே தமிழ் சினிமாவாக எடுக்கலாமா? விஜய் சேதுபதி , லட்சுமி மேனன், நயன்தாரா சரியா இருப்பாங்க. நீ என்ன சொல்லற இளங்கோ?” என்று கேட்டார் மூத்த அண்ணன் மற்றும் தயாரிப்பாளர் செங்குட்டுவன். “ நான் திரைக்கதை எழுதி இயக்கத் தயார். தோட்டதிகாரம் என்ற பெயர் ஒகேயா?” என்றார் அவரது தம்பி இளங்கோ, பிரபல டைரக்டர்.
“ அது சரி, ஸாத்வி கேரக்டரில் ஸாத்வியையே நடிக்க வைத்து விட்டால் என்ன? என்று கேட்டார் செங்குட்டுவன்.
“சாரி! சாரே! ஸாத்வி கதை எனக்கு நன்றாகவே தெரியும். நான் தான் அவளுக்குக் குடும்ப வைத்தியன். அவள் நடிப்பதையே நிறுத்திவிட்டு ராஜஸ்தான் மவுண்ட் ஆபூக்குப் போய் பிரும்ம குமாரிகள் இயக்கத்தில் சேர்ந்து விட்டாள். ஒரு ரகசியம். கோகுலனுக்கும் அவளுக்கும் ஒரு பெண் குழந்தை கூட இருக்கிறது. அவள் பெயர் மேகலா. மேகலாவை மையமாக வைத்து ஒரு பெரிய நாவல் எழுதத் தீர்மானித்திருக்கிறேன்” என்றார் சாத்தன்.
“சரி, முதலில் தோட்டதிகாரம் ஆரம்பிப்போம்” என்றார் செங்குட்டுவன்.