ஏழாம் சர்க்கம்

குறித்த நான்காம்நாளில் பூர்வாங்க காரியம் செய்திட இமவான் துவங்கினன்
நகரமாந்தர் தம் பெண்ணின் மணவிழா போல் மங்கள காரியம் செய்தனர்
பட்டுவிதானம் அமைத்து வாயிலில் தோரணம் கட்டி பூக்களையும் தூவினர்
பார்வதியை உயிரெனக் கருதிய இமவான் வேண்டியதனைத்தும் செய்தனன்
உறவினப்பெண்டிர் பார்வதிக்கு அணிகலன் பூட்டி ஆசி வழங்கி அருளினர்
சுமங்கலிப்பெண்கள் நல்ல நேரத்தில் அலங்காரம் செய்யத் துவங்கினர்
எண்ணெய் ஸ்நானம் செய்திட வேண்டி தக்க உடையும் பாணமும் தந்தனர்
குளிப்பதற்கு முன்னரும் வளர்பிறை மதியம்போல் அழகுடன் கொழித்தாள்
வாசனைப் பொடி தடவி கஸ்தூரி மஞ்சள் பூசி நீராட அழைத்துச் சென்றனர்
ரத்தினக் குளியலறையில் தங்கக்குடநீர் பெய்து மங்கள ஸ்நானம் புரிந்தனர்
மங்களக் குளியலுக்குப்பின் வெண்பட்டு அணிந்து பொலிவுடன் இருந்தாள்
மணிகள் பதித்த அலங்கார மண்டபத்துக்கு அவளை அழைத்துச் சென்றனர்
அலங்காரம் புரியவந்த பெண்கள் பார்வதியின் எழிலில் மயங்கி நின்றனர்
அகிற்புகையிட்டு மலர்செருகி பூச்சரம் தொடுத்து கூந்தலை முடிந்தனர்
மேனியெங்கும் வெண்சாந்து பூசி அழகு வரிகளையும் ஆங்காங்கே எழுதினர்
மேகக்கூந்தலில் அழகுமுகம் சந்திரபிம்பமோ வண்டு குவிந்த தாமரையோ
சாந்து பூசிய கன்னம் பூக்கள் பதித்த செவிகள் பார்த்த கண்கள் மயங்கின
செம்பஞ்சுண்ட இதழ்கள் தேன்மெழுகிட்டதும் அசைந்து அசைந்து துடித்தன
செம்பாதத்தில் சிவன்சிரசு படும்போது சந்திரகலையை எட்டி உதைப்பாளோ
கண்ணே இத்தனை கருத்திருக்க மேலும் அதற்கு மையிடல் தேவையோ
ஆபரணங்களை அவள் மேனி அணிவது நட்சத்திரங்கள் உதிக்கும் வானமோ
தன்எழிலை ஆழியில் கண்டதும் அதனை ரசிக்கவரும் சிவனை நினைத்தாள்
முடிவில் மேனை பார்வதிக்கு தந்தக் காதணி அணிவித்து உச்சி முகர்ந்தாள்
நல்லவரன் அமைந்ததென மகளை ஆனந்தக் கண்ணீரால் அலங்கரித்தாள்
மங்கலநூலை மகள்கையில் கட்டும்போது கண்ணீர் பெருகத் தடுமாறினாள்
வெண்பட்டு உடுத்திய பார்வதி பாற்கடல் புரளும் நுரைபோல் பொங்கினாள்
அலங்காரம் முடிந்த பார்வதி தெய்வத்தையும் பெண்டிரையும் வணங்கினாள்
பதிவிரதைப் பெண்டிர் பார்வதிக்குக் குறைவின்றி ஆசிகள் வழங்கினர்
பெண்ணை மணமகளாய்க் கண்ட இமவான் மணமகன் வரக் காத்திருந்தான்

சிவனுக்கும் அதே சமயம் அலங்காரம் செய்விக்க ஆடை அணிகலன் வந்தன
சிவனின் உடலைத் தழுவிய பொருட்கள் தாமே அணிகலன்களாய் மாறின
விபூதி சந்தனமாக கபாலம் தலையணியாக தோலாடை பட்டாயிற்று
நெற்றிக்கண் ஹரிதாள திலகமாய் மாறி முகத்திற்கு அழகு சேர்த்தது
கழுத்தில் கையில் தோளில் இடுப்பில் இருந்த பாம்புகள் ஆபரணங்களாயின
ஒளிவீசும் சந்திரகலை சிரசை அலங்கரிக்க வேறொரு ரத்தினம் எதற்கு ?
தன் சக்தியால் அழகு பெற்ற சிவபிரான் கத்தியில் தம் அழகைக் கண்டார்
நந்திகேஸ்வரர் கைபிடித்து ரிஷப வாகனத்தின் மீதேறி சிவனும் புறப்பட்டார்
தாய்மார்கள் எழுவர் சிவபிரான் பின் தத்தம் வாகனத்தில் உடன் சென்றனர்
பொன்னிறத் தாய்மார்கள்பின் கருத்த மேகம் போன்று பத்ரகாளி சென்றாள்
சிவசேவகர் பிரானுக்கு முன் வாத்யம் முழங்கி தேவர்புடைசூழ சென்றனர்
விஷ்வகர்மா குடைவடிக்க சூரியன் பிடித்திருக்க சிவபெருமான் சென்றார்
கங்கையும் யமுனையும் தேவவடிவம் கொண்டு வெண்சாமரம் வீசி வந்தனர்
பிரும்மரும் விஷ்ணுவும் சிவபிரானை எதிர் கொண்டு வரவேற்கச் சென்றனர்
வேதநாயகன் விவாக சுபதினத்தில் மும்மூர்த்திகளும் பேதமின்றி இருந்தனர்
இந்திராதி தேவரும் நந்திதேவர் அருள்பெற்று சிவபெருமானை வணங்கினர்
பிரும்மருக்குத் தலையசைப்பு விஷ்ணுவுடன் உரை சிவனின் சபைகௌரவம்
வந்திருந்த சப்தரிஷிக்களிடம் விவாகம் நடத்தித்தர சிவனும் வேண்டினார்
கந்தவர்கள் பிரானைப் பாடித்துதிக்க சிவனும் செவிமடுத்து மேலேசென்றார்
சிவபிரான் இவர்ந்த ரிஷபவாகனம் அசைந்துஅசைந்து அழகாய்ச் சென்றது
ஔஷதிப்ரஸ்தம் சென்ற பிரான் பொன்னகரைப் புன்னகையுடன் பார்த்தார்
திரிபுர வதையின் பாணமென சிவன் விண்ணிலிருந்து கீழே இறங்கினார்
இமவானும் வாசலில் வந்த சிவனை வரவேற்க சுற்றம் சூழச் சென்றான்
சிவசேவகரும் இமவான் உறவும் நீரோடு நீர் கலந்தார்போல கலந்தனர்
உலகே வணங்கும் சிவன் தன்னை வணங்கக் கண்டு வெட்கினான் இமவான்
மருகனாய்வந்த பிரானை மலரிட்ட பாதையில் தானே அழைத்துச்சென்றான்
உலாவரும் சிவனைக் கண்ணால்காண பெண்களின் துடிதுடிப்பு அம்மம்மா
அவிழ்ந்த கூந்தலை முடியாமல் விரைந்து சன்னலருகு சென்றாள் ஒருத்தி
காலில் செம்பஞ்சு பூசிடும்போது பூச்சு வழிய ஓடினாள் மற்றொருத்தி
ஒரு கண்ணுக்கு மையிட்டு மறு கண்ணை மறந்து ஓடினாள் இன்னொருத்தி
அவிழ்ந்த ஆடையை இழுத்துச் சொருகாமல் அப்படியே ஓடினாள் ஒருத்தி
நூலில் ரத்தினம் கோர்ப்பவள் அவை சிதறுவது அறியாமல் சாடினாள் ஒருத்தி
ஜன்னலில் பூத்த மலர் போல் அழகுப் பெண்கள் சிவனைப் பார்த்து நின்றனர்
அனைவரும் ஆவலாய்ப் பார்த்திருக்க தோரண வீதியில் சிவனும் வந்தார்
பிரானின் திருவுருவைப் பார்த்த பெண்டிர் பார்த்த வண்ணமே நின்றனர்
அழகியசிவனை அடைய பார்வதியின் தவம் நியாயமே எனப் பகர்ந்தனர்
அழகும் அழகும் இணையாவிடில் அழகுக்கே பொருளில்லை என்றனர் சிலர்
சிவன் எழில் கண்ட மதன் நாணித் தானே சாம்பலானான் என்றனர் சிலர்
உயர்ந்தஇமவான் சிவன் மருகனானபின் இன்னும்உயர்வான் என்றனர் சிலர்
பெண்டிர் சொல்கேட்ட சிவன் புன்னகையுடன் இமவான்இல்லம் அடைந்தார்
விஷ்ணு கைகொடுக்க பிரும்மன் வழிகாட்ட சிவன் மணவறை சென்றார்
தேவரும் ரிஷிக்களும் சேவகரும் மற்றையோரும் அவர் பின் தொடர்ந்தனர்
இமவான் சிவபிரானை சாஸ்திரப்படி பட்டாடை கொடுத்து வரவேற்றான்
புத்தாடை உடுத்திய சிவபிரானை மணமேடைக்கு அழைத்துச் சென்றனர்
பூத்திருக்கும் பார்வதியைக் கண்ட சிவனின் கண்கள் மகிழ்வில் மலர்ந்தன
காணத்துடித்த இருவர் கண்களும் பிறர் காணாதபோது கண்டு மகிழ்ந்தன
பார்வதிகரத்தை இமவான் தந்திட சிவனும் பற்றிட இன்பம் அங்கே பிறந்தது
பார்வதி மயிர்க்கூச்செறிய சிவன் கைவியர்க்க கரஸ்பரிசம் காரணமாயிற்று
அழகே உருவான இருவரும் தங்கள் மணநாளில் அழகுக்கு அழகு சேர்த்தனர்
தம்பதிகள் இருவரும் மற்றவர் கைபற்றி மின்னும் அக்னியை வலம் வந்தனர்
உணர்ச்சியில் துடித்த இருவரும் அக்னியில் பொரியிட்டு ஹோமம் செய்தனர்
புரோகிதர் ஆணைப்படி ஓமப்புகை கையெடுத்து முகர்ந்தனள் பார்வதி
பார்வதி கண்மை புகையில் கரைய சூடிய மலர்களும் புகையில் வாடின
விவாகம் முடித்த புரோகிதர் சிவபார்வதி இருவருக்கும் ஆசி வழங்கினர்
புரோகிதர் கூறிய ஆசி வார்த்தைகளை மனதினில் பதித்தாள் பார்வதிதேவி
துருவநட்சத்திரம் பாரென சிவன்கூற பார்த்தேன் என பார்வதி உரைத்தாள்
உலகின் தாய்தந்தை சிவபார்வதி பாட்டன் பிரும்மமரை வணங்கினர்
பார்வதிக்கு ஆசி வழங்கிய பிரும்மர் சிவனிடம் சொல்வதறியாது நின்றார்
சிவ பார்வதி இருவரும் பொன்மணை அமர்ந்து அட்சதை ஆசிகள் ஏற்றனர்
லட்சுமிதேவி வெண்தாமரை மலரெடுத்து தம்பதியர்க்குக் குடை பிடித்தாள்
சரஸ்வதிதேவி சிவ பார்வதியரை தனித்தனி மொழியில் வாழ்த்தினாள்
தம்பதியர் இருவரும் தேவமகளிர் நடித்த நாடகம் பார்த்து மகிழ்தனர்
தேவர்கள் அனைவரும் தம்பதியரிடம் மன்மத சேவையை ஏற்க வேண்டினர்
சிவனும் உளம் மகிழ்ந்து மன்மத பாணங்கள் தம்மிடம் வருவதை ஏற்றார்
பார்வதி கரம்பற்றிய சிவன் அலங்கார சயனஅறைக்கு அழைத்துச்சென்றார்
வெட்கத்தில் தவித்த பார்வதிக்கு ஹாஸ்யரசம் தந்து வெட்கம் விடச் செய்தார்
நமப் பார்வதி பதையே ! ஹர ஹர மகாதேவா !
முற்றும்