முன்கதைச் சுருக்கம்
பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.
ஒருநாள் ஊடலின் போது. அவனைத் ,’திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்டு, அவளைப் பழிவாங்க நினைத்தான்.
அங்கொரு மலை உச்சியில் குலதெய்வக் கோயில் இருப்பதாகக் கூறி அவளை அழைத்துச் செல்கிறான்……
வழியில் கண்ட வனப்புமிகு காட்சிகள்
மலைப் பகுதியின் எழில்
ஆடையென மேகநிரை மாமலையை மூடும்
அழகுமயில் அதைக்கண்டு சிறகுவிரித் தாடும்
ஓடையிலே விலங்கினங்கள் நீரருந்தி ஓடும்
உயர்மரத்துக் கிளையுகந்து வான்முகட்டைச் சாடும்
பேடையினை ஆண்பறவை இலைநடுவே தேடும்
பெண்குயிலும் துணையுடனே சேர்ந்திசைப்பண் பாடும்
வாடையினால் சிலபறவை கூடுகளில் வாடும்
வனப்புடைய வண்ணமலர் செடிகொடிகள் சூடும்!
மேகத்தின் நிழல் போன்ற யானைக் கூட்டங்கள்
அகிலும் மணக்கும் சந்தனமும்
அடர்ந்த மலையின் சாரலிலே
முகிலின் பரந்த கரியநிழல்
மொத்தம் வந்து படிந்ததெனத்
திகழும் யானைக் கூட்டங்கள்
சேர்ந்து நெருங்கி உறங்கினவே
நிகரில் மருப்பும் ஒளிவீசும்
நெளியும் மின்னாய்க் கண்கூசும்
( மருப்பு — யானைக்கொம்பு)
தினைப்புனம் காக்கும் பெண்கள்
நெடுமரத்தின் உச்சியிலே நிலைத்தபரண் மீதமர்ந்து
தடதடவென் றடிக்கின்ற தட்டையொடு தழலொலித்து
விடுகதிர்கள் கவர்கிளிகள் விலகிடவே அவைவிரட்டும்
சுடர்தொடிக்கை மடவார்கள் சூழ்ந்ததினைப் புனம்கண்டார்.
( தட்டை, தழல் — கிளிகளை வெருட்டும் கருவிகள்)
தட்டுவதால் ஓசை எழுப்புவது தட்டை
சுழற்றுவதால் ஓசை எழுப்புவது தழல்
கானகச் சிறப்பு
வானாடு பறவையினம் வண்முகிலுள் போய்மறையும்
கானாடு பிணைமறிகள் கலையுடனே தாம்விரையும்
தேன்நாடு பொறிவண்டு செறிமலர்கள் இதழுறையும்
கான்நாட்டின் காட்சிகளைக் கண்டவரின் மனம்நிறையும்!
( பிணை- பெண் மான்)
( மறி – மான் குட்டி)
( கலை – ஆண் மான்)
வஞ்சகம் கண்டிலள்
பஞ்சுநிகர் மஞ்சுதவழ் மாமலையும், அம்மலைமேல்
விஞ்சியுயர் விண்தொட்டு விளையாடும் வியன்மரங்கள்,
கொஞ்சுகுளிர் வீழருவி கோலமிகு காட்சிகளை
வஞ்சியவள் கண்டனளே வஞ்சகம்தான் கண்டிலளே
போகாதே எனத் தடுத்த பறவைகள்
முத்தன்ன வெண்ணகையாய் மொய்குழலாய் மென்னடையாய் சித்திரையின் முழுநிலவாய்ச் சிரிப்பவளே பத்திரையே
இத்தரையில் கொடியவன்பின் இனிப்போதல் விடுவையெனக்
கத்தினவே புள்ளினங்கள் காவென்றும் கீயென்றும்
செல்லாதே எனத்தடுத்த மரக் கிளைகள்
சேலாடு விழியுடையாய், செல்லற்க, செல்லற்க,
வேலோடு வழிப்பறிசெய் வீணன்பின் செல்லற்க,
நூலோதிப் பயனென்ன? நோக்கறிந்து பிழைப்பையெனக்
காலாடு மரக்கிளைகள் கைகளினால் தடுத்தனவே
( கால் — காற்று)
( காலாடு — காற்றில் ஆடும்)
(தொடரும்)