நான்காம் பாகம்
இடைக்காலச் சோழர்கள்
விஜயாலயன்
சரித்திரம் பேசுகிறது! –யாரோ
விஜயாலயன்
விஜயாலயன் என்றதும் கல்கியின் பொன்னியின் செல்வன் தான் நமக்கு நினைவு வரும். வயது முதிர்ந்து, இடுப்பிற்குக் கீழே செயலற்று இருந்த போதும் போர்க்களத்தில் வீரர்கள் அவரைத்தூக்கிக் கொள்ள அவர் தன் இரு கைகளிலும் பெரும் வாள் ஏந்தி சுழன்று எதிரிகளை வெட்டி வீழ்த்தும் காட்சியை அழகாக, அசாத்தியமாக வர்ணிப்பது என்பது கல்கிக்கு மட்டுமே சாத்தியம்.
கடைச்சங்க காலத்திற்குப் பின் சோழர் பெருமை குறைந்து..
குறுநில மன்னராகி..
பேரரசுகளுக்குக் கப்பம் கட்டி..
சரித்திரத்தில் இடம் பெறாமல்..
பல சோழர்கள்..
இருந்தனர் – இறந்தனர் – தொலைந்தும் போயினர்.
இளவரசிகளை உற்பத்தி செய்து மற்ற நாட்டு மன்னர்களுக்கு மணமுடித்து..
‘நானும் ராஜகுலம் தான்’ – என்று அரசியலில் அலைந்து திரிந்தனர்.
அரசியல் களத்தில் – ஆதாயத்திற்காக ஏதாவது கூட்டணியில் சேர்ந்து போரிடும் கூலிப்படையாகவும் இருந்தனர்.
அப்படிப்பட்ட நாட்களில் ..
அந்த சோழக் குறுநில மன்னர்கள் தங்களுக்கு என்றுதான் விடிவுக்காலம் வருமோ எனக் கனாக் கண்டிருந்தார்கள்.
கல்கியும் அந்த ஆதங்கம் தாங்காமல் தானோ ‘பார்த்திபன் கனவு’ என்று சோழக்குறுநில மன்னன் கதையை எழுதினார் போலும்.
மு.மேத்தா வின் ‘மகுட நிலா’வின் நாயகன் நமது விஜயாலன்.
அவரது காந்தக் கவிதை ஒரு கந்தகக் கவிதையாக வெடிக்கிறது :
“எத்தகைய கொடிய இருட்டையும் கிழக்கின் உறைவாள் கிழிக்காமல் விட்டதில்லை. இருண்ட கண்டமாய் இருந்த இனத்துக்கு வெகுதொலைவில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தின் பெயர்தான் – விஜயாலயன். வானச் சுவடியில் வைகறைக் கவிதையை யாரோ வரைந்து கொண்டிருந்தார்கள்” -இது சோழர் எழுச்சியைப் பற்றிய மேத்தாவின் வரிகள்:
அந்த நாவலின் முதல் வரி: “வெளிச்சம் வேகவேகமாக வந்து கொண்டிருந்தது”.
மேலும் மேத்தா எழுதுகிறார்:
“வரலாற்றின் நாயகர்கள் என்று வழிபடப்படுகிறவர்களெல்லாம் ஒரு காலத்தில் கலகக்காரர்கள் என்று கருதப்பட்டவர்களே!”.
விஜயாலயன் அப்படிப்பட்ட புரட்சித் தலைவன்!
சரி.. நாமும் கல்கியின் உந்துதல் நிமித்தம் – சற்றே கதை புனைவோம்.
காந்த மனோகரச் சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசராக உறையூரில் பதவி ஏற்றான். சோழ மன்னர்கள் தங்களைப் பரகேசரி, இராஜகேசரி, என மாறி மாறி அழைக்கின்றனர். தந்தை பரகேசரி என்றால் மகன் இராசகேசரி. முதல் பரகேசரி விஜயாலயன்! “தஞ்சை கொண்ட பரகேசரி”!
அவன் சிறந்த சிவபக்தன்.
(விஜயாலய சோழிஸ்வரம் திருக்கோவில்)
விஜயாலயன் ‘விஜயாலய சோழிஸ்வரம்’ என்ற கோயிலைக் கட்டினான்.
இது நார்த்தமலையில் (இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில்) அமைந்துள்ளது.
அவன்…
கனவுகளைச் சுமந்து வளர்ந்தான்.
கனவுகள் அவனைச் சோம்பேறியாக்கவில்லை.
கனவுகள் அவன் திறத்திற்கு உரமாயிற்று.
வீரம், விவேகம் அவனுக்கு ஏராளமாக இருந்தது.
துர்க்கை அம்மனின் அருளும் இருந்தது.
வாள் சுழற்றும் வித்தையில் சூரனாக இருந்தான்.
இருகரங்களிலும் வாள் பிடித்துச் சுழன்று சண்டையிடுவது அவன் தனிச் சிறப்பு.
போரென்று ஒன்று வந்தால் – அதில் விஜயாலயன் நிச்சயம் பங்கு பெற்றிருப்பான்.
பெரும்பாலும் பல்லவருக்கு உதவியாக. மெர்சனரீஸ் என்பது போல – கூலிப்படை என்றும் சொல்வர். கூட்டணிப் போரில் அவன் தவறாது அங்கம் வகிப்பான்.
அந்த அங்கத்திற்குப் பெருமை சேர்த்தான்.
அங்கம் வகிப்பதுடன் தன் அங்கத்தில் புண்படுவது பொருட்படுத்தாது போர் புரிவான்.
புண்படுவது – அவன் வீரத்தைப் பண்படுத்தியது.
பல போர்களில் ஈடுபட்டு தன்னுடம்பில் தொண்ணூற்றாறு விழுப்புண்களைப் பெற்றிருந்தான்!
இதைப் பல கவிதைகள் கல்வெட்டில் பதித்தன.
அரசனான இரண்டு வருடங்களில் – பழையாறை தாண்டி இந்த சோழநாடு வளர வேண்டுமென்றால் என்ன செய்வது என்று யோசித்தான்.
அந்நாளில் – சோழன் நிலையே முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் நிலையும்.
இருவரும் பேரரசர்கள் நிழலில் வாழும் மன்னர்கள்.
முத்தரையர் – தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர். இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர். அந்நாளில் – முத்தரையர் தம் ஆதரவை வரகுண பாண்டியனுக்கு அளித்திருந்தனர்.
விஜயாலயன் ஒரு முடிவு செய்தான்:
‘தஞ்சை எனக்குத் தஞ்சமாக வேண்டும்’.
“சோழர் குலத்தின் தீபம் போன்ற அவர், தன் சொந்த மனைவியின் கரங்களைப் பற்றுவது போல், தஞ்சையைக் கைப்பற்றினார்” – என்று கல்வெட்டுகள் ஒரு கவிதையைப் படைக்கிறது. தஞ்சையைக் கைப்பற்றிய பிறகு, நிசும்பசூதன் என்னும் அசுரனை வதம் செய்த, துர்க்கையாம் நிசும்பசூதனிக்கு ஆலயம் எடுப்பித்தான்.
விஜயாலயனது வெற்றி, முத்தரையரின் நண்பர் பாண்டியன் வரகுணவர்மனுக்கு கோபத்தை விளைவித்தது.
பலமிக்க பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தனர்.
வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தில் நடந்த போரில் விஜயாலயன் தோல்வியுற்றான். தஞ்சையும் பறிபோனது. தோல்விகளைக் கண்டு விஜயாலயன் துவளவில்லை. சோழர்களுக்கு வெற்றி தோல்விகள் ஒரு ரோலர் கோஸ்டர் போல மேலும் கீழும் மாறி மாறி வந்தன. காலமும் விஜயாலயனுக்கு மூப்பை அளித்தது. கால்களைச் செயல்படுத்த இயலாது போயிற்று.
ஆனால் அவன் உறையில் இன்னொரு ஆயுதம் இருந்தது.
அது அவன் மகன் ஆதித்தன்.
ஆதித்தன் தன் தந்தையின் வீரத்தின் நிழலில் வளர்ந்தவன் – பெயருக்கேற்ப சூரியனைப் போலப் பிரகாசித்த வீரனாக வளர்ந்திருந்தான். வீரம் – அறிவு இவற்றுடன் ராஜதந்திரமும் சேர்ந்த கலவை அவன்.
இனி வருவது தமிழகத்தைப் புரட்டிப்போட்ட திருப்புறம்பயப் போர்.
பல்லவன் அபராஜிதன் – சோழன் மற்றும் கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி என்று நண்பர்களைக் கூட்டி பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.
கணக்குப்பார்த்தால் .. பல்லவ படை- பாண்டியப் படை இரண்டும் பெரும் படைகள். கங்க – சோழ படைகள் இரண்டும் சிறு படைகள்.
பெரும் போர்.
பல்லவ – பாண்டிய படைகள் இரண்டும் எண்ணற்ற வீரர்களை இழந்தது. கங்கமன்னன் முதலாம் பிருதிவிபதி போரில் இறந்தான்.
முதன் முதலாக தன் மகன் ஆதித்தன் சோழ படையின் மாதண்ட நாயக்கனாக போர்க்களத்தில் இறங்கி வெற்றிக்கனியைப் பறிப்பதைப் பார்த்து மகிழலாம் என்று பல்லக்கில் ஏறி திருப்பயம்புரம் வந்து சேர்ந்த விஜயாலய சோழனுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.
கடல் போல் திரண்ட இரண்டு படைகளும் ஒன்றையொன்று வெல்லப் போராடி கொண்டிருந்தன. புழுதி பறந்த போர்க்களத்தின் முடிவு இழுபறியாகிக் கொண்டிருந்தது. தன் மகன் ஆதித்தனின் முதல் போர் வெற்றியைப் பார்த்து மகிழ வந்த விஜயாலயன்- போரின் போக்கினால் சிந்தனை வசப்பட்டான். பல்லவ சோழ படைகள் மெல்ல மெல்ல தங்கள் வலிமையை இழந்து – போரிடும் மூர்க்கத்தை மறந்து – தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியது.
பல்லவ மன்னன் அபராஜித வர்மன் சரணடையும் முடிவை எடுக்கிறான். அதைக் கேட்டதும் குமுறிக் கொந்தளித்து கோபத்தின் உச்சிக்குச் சென்றான் விஜயாலயன். போர் உடை தரித்து இரண்டு கைகளிலும் வாள் பிடித்து இரண்டு வீரர்களின் தோளில் ஏறியபடி களம் புகுந்தான். தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த திருமேனியரான விஜயாலய சோழன், எண்பதாவது பிராயத்தில் திருப்புறம்பயம் போர்க் களத்தில் வந்து இரண்டு கைகளில் இரண்டு கத்திகளை ஏந்திச் சக்கரமாகச் சுழற்றி புகுந்து சென்ற விடமெல்லாம் எதிரிகளின் தலைகளை மலைமலையாகக் குவித்தான். எட்டுத்திக்கும் எதிரிகளின் தலையைப் பறக்க விட்டான். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர். நடக்க இயலாதவனின் வீரம் சோழ படைகளிடம் புது உத்வேகத்தைப் பாய்ச்சியது. வெகுண்டெழுந்த சோழப்படை எதிரிகளைத் துவம்சம் செய்து நிர்மூலமாக்கியது. தனக்கு ஏற்பட்ட பலத்த காயங்களையும் பொருட்படுத்தாது விஜயாலயன் போரிட்டிருந்தான். காலத்தின் விளிம்புக்கு வந்தான் அந்த மாவீரன்.
ஆதித்தன் கலங்கி நின்றான் : “தந்தையே! உங்கள் வீரம் என்றும் அழியாது. உங்கள் பெயரைக் கவிதைகள் பாடும். கல்வெட்டுகள் அதைச் சொல்லிச் சிவக்கும். சரித்திரம் பேசும். ஆனாலும் என் கண்கள் உங்கள் தேகம் படும் பாட்டைத் தாங்கவில்லை” -என்றான்.
விஜயாலயன்:
“மகனே .. நமது கனவு வசப்படும் நாள் நெருங்கியது. புலிக்கொடி பாரெங்கும் பறக்கும் நாள் விரைவில் வரும். கண்ணீரோடு வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. கடமைகள் காத்திருக்கின்றன. பாதைகளும் காத்திருக்கின்றன – உன் பாதங்களுக்காக!” – விஜயாலயனின் அந்த உத்வேகமான சொற்களில் முதலாம் ஆதித்தன் ஆறுதல் அடைகின்றான்.
போரில் வீர மரணமடைந்த விஜயாலய சோழன் என்ற கிழவனுக்குத் தெரியாது! தான் மிகப்பெரிய ஒரு சோழ சாம்ராஜ்யத்திற்கு அடி கோலியிருக்கிறோம் என்று.! பாண்டியர்கள் பல நூற்றாண்டு தலையெடுக்காமல் செய்தது அந்தத் தோல்வி. விஜயாலயனின் பரம்பரையில் வந்தவர்கள்தான் ராஜராஜ சோழனும், தென் கிழக்கு ஆசியாவை வென்ற ராஜேந்திர சோழனும்!
கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது. ஆனால் தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பிற்காலச் சோழர்களின் பொற்கால ஆட்சியைத் தொடக்கி வைத்தான். போரில் கிடைத்த வருவாயின் பெரும் பகுதி ஆதித்த சோழனுக்குக் கிட்டியது. போரின் முடிவில் சோழர்களின் சாம்ராஜ்ய எல்லைகள் விரிவடைந்தன.
அந்தக் கதைகளைச் சுகமாக அனுபவிக்கலாம் விரைவில்..