


இந்த நேர் பிரதி உலகப் புகழ் தாஜ் மஹால் அல்ல. அதைப் போலவே உருவாக்கிய மொகலாயக் கட்டடம்.
இது பீபி-கா-மக்பரா என்று அழைக்கப்படும். இருக்குமிடம் அவுரங்காபாத்திலிருந்து 5 கிமீ தொலைவில்.
இந்த அழகிய மசோலியம் ,மொகலாய மன்னன் அவுரங்கசீப் (1658-1707) மனைவி ராபியா -உல்-தௌரானி அல்லது டிராஸ் பானு பேகத்தின் நினைவுக்காகக் கட்டப்பட்டது.
அரச குமாரர் அசாம் ஷா அவரது தாயின் நினைவாக கிபி 1651-1661 நூற்றாண்டுகளில் இதை எழுப்பியிருக்கிறார்.
இதை வடிவமைத்து உருவாக்கியவர் அடா-உல்லா என்னும் கட்டிடக் கலைஞர் என்றும், ஹான்ச்பெட் ராய் என்னும் பொறியியலாளர் என்றும் பிரதான நுழை வாயிலில் கிடைத்த கல்வெட்டுகளினால் தெரியவருகிறது.
பின்புறம் அமைந்துள்ள அழகிய மலைத் தொடர்களின் வடிவங்களிலும் பசுமையான தோட்டங்களின் மத்தியிலும் இந்த சமாதியைப் பார்த்து ரசிப்பது ஒரு பிரமிப்பான அனுபவமே!
இதனைக் கட்டிமுடிக்க ரூபாய் 6,68,2037-7, 1651-1661 ஆண்டுகளில் செலவாயிற்று என்றும் தெரியவருகிறது.
இந்த மசோலியம் தாஜ் மஹாலைத் தோற்கடிக்கத் தொடங்கியபோதிலும், தரம்கெட்ட நகல் வடிவமாக முடிவடைந்தது.
காரணம் தாஜ்மகாலின் அஸ்திவாரம் ஆழமான காதலில் போடப்பட்டது. அது அசல். அதனால் உலக அதிசயங்களில் ஒன்றானது.
இந்த பீபி கா மர்க்காரா போட்டிக்காகக் கட்டப்பட்டது. அசல் அசல் தான். நகல் நகல் தான்.
இதைப் பார்க்கும் போது ராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரியகோவிலும் அதே வடிவில் அவன் மகன் ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுர சிவன் கோவிலும் நினைவுக்கு வருகிறது.
தந்தையின் கோவிலைவிடப் பெரியதாக இருக்கக்கூடாது என்று சற்று சிறியதாகக் கட்டினானாம் ராஜேந்திரன். பாண்டியர் படையெடுப்பால் இது மிகவும் சிதிலமடைந்து காணப் படுகிறது. மராட்டியர் பராமரிப்பால் தஞ்சைக் கோவிலுக்கு மெருகு கிட்டியது.
தஞ்சைக் கோவில்
கங்கை கொண்ட சோழபுரக் கோவில்
இதோ தமிழ்நாடு தோட்டக்கலை நிறுவனம் வழங்கும் வீட்டில் மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம்!
500/ ரூபாய்க்கு ஒரு கிட் வாங்கி காய்கறி பயிர் செய்யுங்கள் !
விவரத்துக்குக் கீழே கொடுக்கப்பட்ட வீடியோவைப் பாருங்கள்
கல்கியின் பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து சாண்டில்யனின் கடல்புறா நாடக வடிவில் வருகிறது.
சபாஷ் ! சரியான போட்டி !! என்று மறுபடியும் வீரப்பா பாணியில் சொல்லத்தோன்றுகிறது.
கும்பகோணம் மகாமகம் குளத்தில் மன்மத வருடம், உத்திராயணம், சிசரருது, மாசிமாதம் 10ம்நாள் (22 பிப்ரவரி 2016) திங்கள் கிழமை, வளர்பிறை பவுர்ணமி மகம் நட்சத்திரம் அதிகண்ட யோகம் பத்திரை கரணம் கூடிய தினத்தில் சூரியன் கும்பத்திலும், பூர்ணசந்திரன் மகம் நட்சத்திரத்திலும், குரு சிம்ம ராசியிலும் நிற்க மகாமகம் கடைப் பிடிக்கப்படுகிறது.
அருள்மிகு. ஆதிகும்பேஸ்வரர் நீராடல் நேரம்:
அன்று கும்பகோணம் ஸ்தல நேரப்படி பகல் 11:18 மணிக்கு மேல் பிற்பகல் 1:20 மணிக்கு முன்னர் ரிஷப லக்னத்தில், ரிஷப வாகனத்தில் மகாமகம் குளத்திற்கு வருகைதந்து புனிதநீராடி பக்தர்களின் பாவங்களை நீக்கி அருள்புரிவார்
13.2.2016 அன்று கொடியேற்றத்துடன் மாசிமகம் உற்சவம் துவங்கும். அதற்குப் பிறகு 10ம் நாள் மகம் நட்சத்திரத்தில் தீர்த்தவாரி (புனித நீராடல்) நடைபெறும்.
கும்பகோண புவிநிலைப்படி மகம் நட்சத்திரம் ரிஷப லக்னத்தில் இருக்கும் பகல் 11:18 முதல் பிற்பகல் 1:20 வரை உள்ள காலமே மகாமகம் புனித நீராடல் காலமாகும்.(சூரியன் உச்சிக்கு வரும் காலம் மகாமகம்)
மகாமகம் வானியல் விளக்கம்
சூரியன், பூமி, சந்திரன், குரு கிரகம், மகம் நட்சத்திரம் ஆகிய ஐந்து வானியல் பொருட்கள் நேர்கோட்டில் வரும் காலமாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைமட்டும் இதுபோல் வரும். இந்த காலத்தில் சூரியனுக்கு எதிர்நிலையில் குரு கிரகம் முழுநிலவுபோல் முழுவிட்டத்துடனும் அதன் சந்திரன்களுடனும் வானில் அழகாக தோன்றும் இதை பைனாகுலர் மூலம் காணலாம்.
இக்குளத்தில்மாசி மாதத்தில் மற்றும் சிறப்பாக மகத்தன்று நீராடினால்யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி உள்ளிட்ட பன்னிரெண்டு புண்ணிய நதிகளில் மக்கள் நீராடிய பலன்கிட்டும். மேலும் இப்பிறவியில்பாவச்சுமைகளை நீக்கவும் தங்களின் புனிதத் தன்மையைப் பெறவும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் வழிபடுதல் நன்று. வர இயலாதவர்கள் அருகில் இருக்கும் கோவில் குளத்தில் நீராடி கும்பேஸ்வரரை தியானித்து சிவபுராணம் படித்து வில்வம் சாற்றினால் பலன்கிட்டும்
வழிபடுவதனால் ஏற்படும் பலன்கள்:
மகாமக வருடத்திற்கு ஒரு வருடம் முன்னமே கங்காதி, 66கோடி தீர்த்தங்களும், சமஸ்த தேவதைகளும், கும்பகோணத்திற்கு வந்துவிடுவதாகப் புராணங்களில் கூறப்படுகிறது. அதனால் வேறு தீர்த்தங்களில் நீராடவேண்டி க்ஷேத்ராடனம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
குடமூக்கு என்பது கும்பகோணத்தின் பழைய பெயர். கும்பம் என்றால் குடம். கோணம் என்பது மூக்கு. உலகம் அழியும் பிரளய காலத்தில் இறைவன் ஆணைப்படி விடப்பட்ட அமுத கும்பம் இவ்விடத்தில் தங்கி அதன் மூக்கு வழியே அமுதம் பரவியதால் ‘குடமூக்கு’ என்ற பெயர் ஏற்பட்டது.
கி.பி. 1385ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி புதன் கிழமை இந்த நகருக்கு ‘கும்பகோணம்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்தப்பெயரை முதலில் பயன்படுத்தியவர் அருணகிரிநாதர்.
கி.பி.1547ஆம் ஆண்டு மகாமக தினத்தன்று கிருஷ்ணதேவராயர் அவர்கள் புனித நீராடினார்.
மகாமக குளத்தின் அருகில் உள்ள மணிக்கூண்டு சிறப்பு வாய்ந்தது. இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து வெற்றியை நினைவுகூர திருப்பனந்தாள் காசி மட அதிபரால் 1948ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
மகாமகக்குள மண்டபங்கள் அனைத்தும் விஜயரகுநாத மன்னர் அளித்த சோடச மகாதானத்தின் வாயிலாகக் கட்டப்பட்டன. இப்பணியை முன்னின்று நடத்தியவர் அவருடைய மந்திரியான கோவிந்த தீட்சிதர் ஆவார். சோடசம் என்பது 16ஐக் குறிக்கும்.
இக்குளக்கரையில் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோயில்கள் (மண்டபங்கள்) காணப்படுகின்றன.
பிரம்மதீர்த்தேஸ்வரர்,
முகுந்தேஸ்வரர்,
தானேஸ்வரர்,
இடபேஸ்வரர்,
பாணேஸ்வரர்,
கோணேஸ்வரர்,
பக்திகேஸ்வரர்,
பைரவேஸ்வரர்,
அகஸ்தீஸ்வரர்,
வியாசகேஸ்வரர்,
உமாபகேஸ்வரர்,
நிருதீஸ்வரர்,
பிரம்மேஸ்வரர்,
கங்காதேஸ்வரர்,
முக்தேஸ்வரர்,
ஷேத்ரபாலேஸ்வரர்
என மொத்தம் 16 வகையான சிவலிங்கங்கள் குளத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்படங்களில் காணப்படுகின்றன. இந்த குளத்தின் நடுவே அமைந்துள்ள தீர்த்தக் கிணறுகள் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
இவற்றில் எட்டுக் கோயில்கள் கிழக்கு மேற்காகவும், நான்கு கோயில்கள் தெற்கு வடக்காகவும், இரண்டு கோயில்கள் தென்மேற்கு வடகிழக்காகவும், வடகிழக்கு தென்மேற்கு, தென்கிழக்கு வடமேற்கு நோக்கி முறையே ஒன்றொன்றாகவும் அமைந்துள்ளன. தெற்கு நோக்கிய நிலையில் கோயில் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், மகாமகப் பெருவிழா, 2016ம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்பு அடையாள லோகோ வெளியிடப்பட்டு உள்ளது. இதில், ஆதிகும்பேஸ்வரர் கோவில் கோபுரம், மகாமக குளம், அதில் சிவன், பார்வதி படத்துடன் சூலத்தையும், பெருமாளுக்குரிய திருமண், அந்த எழுத்துகளின் நடுவில் பொறிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், அறநிலையத் துறை சார்பில் தபால் அட்டை, சிறப்பு தபால் கவர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ‘மொபைல் ஆப்ஸ்’ வெளியிடப்பட்டு உள்ளது.
மகாமகம் திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்ட நாள் தொடங்கி 22ம் தேதி வரை புனித நீராடலாம் என ஆதீனங்கள் தெரிவித்து உள்ளனர்.
மகாமகக் குளத்தின் பரப்பளவு 6 ஏக்கர் 2813 சதுர அடியாகும்.
வஸ்தலம் பெயர் : | திருக்குடமூக்கு (கும்பகோணம்) |
இறைவன் பெயர் : | கும்பேஸ்வரர் |
இறைவி பெயர் : | மங்களநாயகி |
தல மரம் : | வன்னி |
வழிபட்டோர்: | ஏமரிஷி |
எப்படிப் போவது : | கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் இத்தலம் இருக்கிறது. திருகுடந்தை கீழ்கோட்டம், திருகுடந்தைக் காரோணம் என்ற மேலும் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளன. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திரு சாரங்கபாணி கோவிலும் கும்பகோணம் நகரில் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருக்குடமூக்கு (கும்பகோணம்) |
பூமத்தியரேகை | அட்சரேகை-10.958504 தீர்க்கரேகை-79.371093 |
|
மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தமிழகத்தில், 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. முதல் இருபது நகரங்களில் சென்னையும் கோயம்புத்தூரும் இடம் பெற்றிருக்கின்றன.
சரி, ஸ்மார்ட் சிட்டி என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?
தேவையான தண்ணீர் வசதி, சரியான மின்சார விநியோகம், குப்பை மேலாண்மை, போக்குவரத்து வசதிகள், வீடு வசதிகள் (குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு) , தகவல் துறை தொடர்பு, கணிணி மயமாக்கல், நல்ல அரசமைப்பு, குடிமக்கள் பயன் பெறும் வகையில் இணைய தளம் மூலமாக அரசுப் பணிகள், நல்ல சுற்றுப்புறம், குடிமக்களுக்குக் குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோருக்குப் பாதுகாப்பு , சுகாதாரம் மற்றும் படிப்பு வசதி.
இதற்காக மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு நகரத்துக்கும் 100 கோடி ரூபாய் வருடந்தோறும் வழங்கப்படும். மாநில அரசும் அதற்கு இணையான தொகையை வழங்க வேண்டும்.
சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்வு செய்து, அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மேம்பாட்டு பணிகளைச் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தி.நகரில் திட்டமிட்டுள்ள செயல்பாடுகள் :
ஒருங்கிணைந்த கட்டமைப்புப் பணிகள்
மோட்டார் வாகனமில்லா மிதிவண்டிப் பாதை, பாதசாரிகள் வளாகம்
மின்சேமிப்பு விளக்குகள், நவீன குடிநீர், கழிவுநீர் வடிகால் வசதிகள்
சாலை வடிவமைப்பு, நவீன சிக்னல்கள், பாதுகாப்பு அம்சங்கள்
பனகல் பூங்கா மேம்படுத்தல்
வாகன நிறுத்துமிட மேலாண்மை,
குப்பை அகற்றுவதில் நவீன முறையை கையாளுதல்
ஆகியவை இந்தத் திட்டத்தில் இடம் பெறும்.
மக்களுக்கு முக்கியமாகத் தேவை :
குப்பையில்லா சாலை / வீடு
மாசு இல்லா காற்று
நெரிசல் இல்லா போக்குவரத்து
நடக்கக் கூடிய நடைபாதைகள்
சரியான இடங்களில் மேம்பாலங்கள்
சாலையைக் கடக்கப் பாலங்கள்
ரயில் / பஸ் வசதி
சரியான ஆட்டோ
பஸ்களுக்குத் தனிப் பாதை
வண்டிகளுக்குத் தனித்தனித் தடங்கள்
ஒப்பனை அறைகள் –
குடி தண்ணீர்
மருத்துவம்
டாஸ்மாக் ஒழிப்பு
பள்ளிகள் / கல்லூரிகள்
உணவு விடுதிகள்
சுத்தமான ரயில் / பஸ் நிலையங்கள்
பொறுப்பான காவல் துறை
லஞ்சம் இல்லா அரசு அலுவலகங்கள்