தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்து மிதமான தட்ப வெட்ப நிலை உருவாகி வருகிறது. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்டது. இந்த வருடம் 98 சதவீதம் மழை இருக்கும் என்று வானிலை ஜோதிடர்கள் சொல்லுகிறார்கள்! பலிக்குமா தெரியவில்லை !
அரசியலில்?
தினகரன் சிறையிலிருந்து வெளியே வந்து தனது விளையாட்டைத் தொடங்கிவிட்டார். சதுரங்க வேட்டை ஆரம்பமாகிவிட்டது. அரசியல் சேவகர்கள் அதற்குத் தகுந்தபடி இங்கும் அங்கும் நட(ன)மாட ஆரம்பித்து விட்டார்கள். ஜெயலலிதாவின் கட்டைவிரலுக்குக் கீழே இருந்து பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருந்த எம் எல் ஏக்கள், மந்திரிகள் இன்று இபிஸ், ஓபிஸ், தினகரன் என்று மூன்று சக்கர சர்க்கஸ் விளையாட்டில் ‘பார்’ ஆடிக்கொண்டிருக்கிறார்கள். தான் கீழே விழாமல் இருக்க எந்தக் கையை வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளத் தயாராய் இருக்கிறார்கள். ‘நான் ஈ’ என்று சொல்வது போல ‘எங்கே சர்க்கரை?’ என்று சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலினோ, அண்ணன் எப்போ விழுவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர்களுக்கோ குஷ்புவுக்கும் நக்மாவுக்கும் டச் அப் வேலை செய்யவே நேரம் போதவில்லை
பி ஜே பியோ ஜனாதிபதி தேர்தலுக்கு இந்த அக்கன்னா (ஃ) – அதிமுக என்ன செய்யப் போகுதோ என்று நூல் விட்டுக் கொண்டிருக்கிறது.
பா மு காவுக்கும் , விஜயகாந்த் கட்சிக்கும் பகல் கனவு காணவே நேரம் போதவில்லை
நாட்டு நடப்பு, நிர்வாகம் இவற்றைப் பற்றி யாருக்கு என்ன கவலை?
மக்களும் ஜல்லிக்கட்டை விட்டுவிட்டு ஜி டி பி , ஜி எஸ் டி, மாட்டிறைச்சி, டாஸ்மார்க் , நீட் தேர்வு என்று பிசியாகிவிட்டார்கள்.
படிப்பாளிகள் இணைய தளங்களில் மீம்ஸ் போட்டுவிட்டு அப்பீட் ஆகிவிடுகிறார்கள் !
ரஜினியும் தன் பங்குக்கு ‘ம்மேய்ய்ய்’ … என்று வாய்ஸ் கொடுத்துக் கொண்டு 2.0க்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறார்.
நாமும் தலையங்கம் எழுதி விட்டு சோம்பலை முறித்துக் கொள்வோம்!
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு தான் !!