



சுடச் சுட விமரிசனம் ( கிருஷ்ணன் )
விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம் !
தூத்துக்குடி கல்லூரி ஒன்றில் நடக்கும் தில்லுமுல்லுகளை ஹீரோ விஜய் எப்படி வெளிக் கொண்டுவந்து ஹீரோயின் கீர்த்தி சுரேஷைக் கை பிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை
விஜய்க்கு புது ‘விக்’ !!
பரதன் இயக்கம் சீராக இருக்கிறது.
விஜய் ரசிகர்கள் எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கட்டும். மத்தவங்க ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே அப்பீட் ஆகலாம் !
பைரவா படமே இணைய தளத்தில் வந்துவிட்டது என்ற செய்திகளையெல்லாம் விட்டுவிட்டு அதன் டிரைலரை மட்டும் இங்கே பார்ப்போம்.
ஒரு அயர்வு தரும் வேலைநாளின் முடிவில் சட்டென்று அலுவலக நண்பர்கள் முடிவெடுத்து எங்காவது போவது வழக்கம். அப்படித்தான் இந்த வெள்ளிக்கிழமை செகண்ட் ஷோ இருமுகன்
ஆனந்த் ஷங்கர் எடுத்த கதைக்களம் நல்ல கதைக்களம். ஒரு ஆளை ஐந்து நிமிடத்திற்குப் பறந்து பறந்து அடிக்கும் சக்தி தரும் மருந்து. அதை பயங்கரவாத அமைப்புகளுக்கு வில்லன் விற்கிறான். ஹீரோவும் வில்லனும் ஒரே உரு. கொஞ்சம் முற்பகை. இறுதியில் சுபம். ஆனால் சமீபமாக விக்ரமைச் சுற்றி சயின்ஸ் ஃபிக்ஷனும், மருந்து சோதனைகளுமாகவே வருகிறதே என ஒரு எண்ணமும் வராமலில்லை.
விக்ரமைப் பொறுத்தவரை வயது அவரைக் கண்டால் கடன்கொடுத்தவனைக் கண்டவன்போல் ஓடி ஒளிகிறது. உடற்கட்டு செம்ம. நயன் அள்ளிக் கொண்டு போகிறார்.
நயனுக்கு அறிவாளி, அப்பாவி எது கொடுத்தாலும் போகிற போக்கில் செய்துவிட்டுப் போய்விடுவார். படத்தில் நித்யா மேனன் எழுத்துக் கூட்டிப் படிப்பதுபோல் பேசுகிறார். ஆனால் பொம்மை போன்ற முகம் பேசுகையில் காதெல்லாம் கொஞ்சம் கம்மியாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் பாவம் ஸ்டண்ட் காட்சியில் பூச்செண்டோ கண்ணாடியோ வந்தால் உடைந்து போகுமல்லவா? அதுபோல அந்தப் பதுமை பாதியிலேயே போய் விடுகிறது. மனசு வைத்திருக்கலாம்.
தம்பி ராமையாவை மைனாவில் பிடித்த சிரிப்பு போலீஸ் விடவில்லை இன்னும். கருணாகரனின் அனாயாசமான நடிப்பை வீணடித்திருப்பதாய் தோன்றியது. நாசர் எப்போதும் விமரிசனத்துக்குள்ளேயே வரக்கூடாது. எப்போதும்போல் அருமை.
இசை வில்லனுக்கான ட்ராக்குகளில் பொருந்தியிருக்கிறது. பாடல்கள் இன்னும் கவனித்திருக்கலாம்.
கதை தமிழுக்குப் பழசு என்றாலும் சரியான ஆளிடம் ஒப்படைத்திருப்பதால் அற்புதமாக வந்திருக்கிறது. ஹீரோ விக்ரமை விட வில்லன் விக்ரம் உடல்மொழியில் அசத்துகிறார். நர்ஸ் உடையணிந்து ஆஸ்பிடலில் இருக்கையில் போலீஸ் ஒருவன் ஜொள்ளு விடுவதைக் காண்பிப்பது நச்.
குறைகள் அங்கங்கே தென்பட்டாலும் படம் ஒரு அறுசுவை எண்டர்டெயினர் வகை.
இனிப்பு : நயன்தாரா, விக்ரமின் உடற்கட்டு, வசனங்கள்
காரம் : ஹீரோ விக்ரமை ஏதோ ஜில்லா வஸ்தாது மாதிரி எதற்கெடுத்தாலும் அடிப்பதாய்க் காண்பிப்பது
கசப்பு : அங்கங்கே இசை, க்ளீஷேவான சீன்கள்
உப்பு : சரிவரக் கலக்காமல் இருக்கும் வேதியியல். லாஃபிங் கேஸ் பயன்படுத்துதல் போன்ற சீன்களைத் தவிர்த்திருக்கலாம்.
புளிப்பு : சும்மா சுர்ரென்று ஏறிய சீன்கள் இருந்தன. தொய்விலிருந்து அதுதான் தட்டிக் கொண்டு வந்தது. நயன்தாரா அதை செவ்வனே செய்திருக்கிறார்.
துவர்ப்பு : எல்லாவற்றையும் விட துவர்ப்புதான் ரொம்ப நேரம் தெரியுமல்லவா? நித்யா மேனன் கொஞ்சம் துவர்க்கிறார். விக்ரமின் தாடி எனக்குத் துவர்க்கிறது.
இருமுகன் : ஜாலிக்காகப் பார்க்கலாம்
படம் டிக்கட் கிடைக்காதவர்கள் இந்த டீசரைப்பார்த்து ஆறுதல் அடையுங்கள் !
தசாவதாரத்தில் கலக்கிய பலராம் நாயுடு கமல் இப்போது தனி படமாக சபாஷ் நாயுடு என்று வருகிறார்.
இப்படத்தில் தெலுங்கின் முன்னணி காமெடி நடிகர் பிரம்மானந்தம் கமலுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், கமலின் மகள் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் கமலின் மகளாகவே நடிக்க இருக்கிறார். பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. லைக்கா நிறுவனம் வழங்க, கமலின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் கமல் தனது முந்தைய படங்களில் உள்ள கதாபாத்திரங்களைக் கொண்டே இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து படக்குழுவினர் தரப்பில் விசாரித்த போது கமல்ஹாசன் ‘தசாவதாரம்’ படத்தின் பாத்திரமான பல்ராம் நாயுடு வேடத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்றார்கள். இயக்கமும் கமல் !
தசாவதாரம் பலராம் நாயுடு காமெடி கொஞ்சம் பார்ப்போமா?
அந்தக் காலத்தில் சிலோன் ரேடியோவில் ஒரு நிகழ்ச்சி – நீங்கள் கேட்டவை -பழையன என்று வரும். அதில் வரும் பாடல்களைக் கேட்கும் போதே நீங்கள் பத்து-பதினைந்து வருடம் காலச் சக்கரத்தில் பின்னோக்கிப் போனதுபோல இருக்கும்.
அந்த வரிசையில் “முக்தா வீ சீனிவாசன்” அவர்கள் எழுதிய ‘தமிழ் திரை உலகம் ஆயிரம் செய்திகள் ‘ என்ற புத்தகத்திலிருந்து சில டிட்பிட்ஸ்.
(இதன் சிறப்பு என்னவென்றால் முக்தா வீ சீனிவாசன் அவர்களே சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் அமர்ந்து விற்பனை செய்தபோது வாங்கிய புத்தகங்கள் இவை.)
இந்தியாவின் முதல் பேசும்படம் ‘ஆலம் ஆரா’ 14.03.1931 அன்று வெளியானது.
முதல் தமிழ் பேசும்படம் ‘பக்தபிரகலாதா’ . கதாநாயகி தமிழிலும், கதாநாயகன் தெலுங்கிலும் மற்றொருவர் ஹிந்தியிலும் பேசி நடித்த படம்.
தமிழில் ஆரம்ப சினிமா தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் கே.சுப்ரமணியன் ( தஞ்சாவூர் பாபநாசத்துக்காரர்)
எல்லிஸ் ஆர் தான்காண் என்ற அமெரிக்கர் பல தமிழ்ப் படங்களை இயக்கினார். அவர் தான் சதி லீலாவதியில் எம் ஜி ஆரை அறிமுகப்படுத்தியவர்.
ஜெமினி எஸ் எஸ் வாசன் 70 படங்களுக்கு மேல் தயாரித்தவர். நந்தனார், சந்திரலேகா, அவ்வையார்,வஞ்சிக் கோட்டை வாலிபன் போன்றவை அந்தக் காலத்தில் சூப்பர் ஹிட். ( ஜெமினி கணேசன் இவரது ஜெமினி ஸ்டூடியோவில் பணிபுரிந்ததால் அந்தப் பெயரைப் பெற்றார்.)
ஏ வி எம், சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற கிராமபோன் கம்பெனியை 1932இல் ஆரம்பித்தார். பின்னர் அவர் தயாரிப்பாளராகி, நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் அவர்களுடன் இணைந்து எடுத்த பராசக்தி படத்தின் மூலம் சிவாஜி கணேசன் அறிமுகமானார்.
பாட்டே இல்லாத அந்தநாள் என்ற படத்தை இயக்கியவர் வீணை எஸ் பாலசந்தர். ( இன்றைக்குப் பார்த்தாலும் படம் டக்கராக இருக்கும்)
தமிழக முதல்வராக இருந்த ஐந்து முதல்வர்கள் திரை உலகத் தொடர்பு கொண்டவர்கள்: அண்ணா, கருணாநிதி,எம்.ஜி.ஆர்., வி என் ஜானகி, ஜெயலலிதா ஆகியவர்கள்.
சென்னையில் விஜயா வாகினி, ஏ வி எம் , சேலத்தில் மாடர்ன் ஸ்டுடியோ, கோவையில் பக்ஷிராஜா ஸ்டுடியோ ஆகியவை முக்கியமான ஸ்டுடியோக்கள்.
கவிஞர் கண்ணதாசன் முதல் பாட்டு எழுதிய படம் ‘கன்னியின் காதலி’ பாடல் ‘கலங்காதிரு மனமே’
தியாகராஜ பாகவதர் தமிழின் முதல் சூப்பர் ஸ்டார். அவரது ஹரிதாஸ் என்ற படம் மூன்று வருடங்கள் ஓடியது.
பி யு சின்னப்பா மிகவும் பிரபலமான கதாநாயகர். அவர் தன் வருமானத்தையெல்லாம் புதுக்கோட்டையில் வீடாக வாங்கிக் குவித்தார். அதனால் புதுக்கோட்டை அரசர் ‘இனி யாரும் பி யு சின்னப்பாவுக்கு வீடு விற்கக் கூடாது’ என்று தடையுத்தரவு போட்டாராம்.
டி ஆர் மகாலிங்கம் , கே ஆர் ராமசாமி, எம்.ஆர் ராதா, சகஸ்ரநாமம், எம்,கே,ராதா, ரஞ்சன், எஸ் எஸ் ராஜேந்திரன், என். எஸ் கிருஷ்ணன் , தங்கவேலு, சந்திரபாபு , ஜெய்சங்கர், ரவிசந்திரன், முத்துராமன், சிவகுமார் , பாலையா, நம்பியார், வீரப்பா, நாகேஷ் , கே பி.சுந்தராம்பாள், டி பி ராஜலட்சுமி, எம்.எஸ் சுப்பலக்ஷ்மி., எஸ்.டி சுப்பலக்ஷ்மி, டி ஆர் ராஜகுமாரி, கண்ணாம்பா, பானுமதி, பத்மினி, வைஜந்திமாலா, சாவித்திரி,சரோஜாதேவி, தேவிகா, மனோரமா ஆகியோர் அந்தக்காலப் பிரபலமான நடிக, நடிகைகள்.
தியாகராஜ பாகவதரும், என் எஸ் கிருஷ்ணனும் லக்ஷ்மிகாந்தன் என்ற பத்திரிகையாளரை கொன்றதற்காகச் சிறைத் தண்டனை பெற்றவர்கள். எம்.ஆர்.ராதாவும் எம் ஜி ஆரைச் சுட்ட காரணத்திற்காகச் சிறைத் தண்டனை பெற்றார்.