நடுப்பக்கம் – சந்திரமோகன்

தயவு செய்து இப்படி உட்காராதீங்க!!! | Dr Raja | Royal Multi Care - YouTube
டாக்டர் ராஜா , ராயல் மல்டி கேர்  மூலம் சில சுலபமான உடற்பயற்சிகளைச் சொல்லித் தருகிறார். அவற்றைச் செய்தோம் என்றால் முதுகு வழி , கழுத்துவழி போன்றவை என்றைக்கும் உங்களைத் தொடாது என்று கேரண்டி கொடுக்கிறார்.
ஐந்து நிமிட வீடியோ தான் ! அவர் சொல்வதைக் கேட்டுவிட்டு இந்த நடுப்பக்கத்தைப் படியுங்கள் ! 
( இது விளம்பர நிகழ்ச்சி அல்ல ! உபயோகமாக இருப்பதால் பகிர்கிறோம்) 
அதன் பிறகு நிச்சயம் நீங்கள் இந்த உடற்பயிற்சியை ஆரம்பித்து விடுவீர்கள்.  
வீடியோ பார்க்க இந்த இணையத்தை அழுத்தவும். 
வீடியோவில் எலும்பு மருத்துவர் ஒருவர் உடல் முழுதுமான தசைகள் இறுகாமல் இருப்பதற்கு மூன்று எளிய பயிற்சிகளை கூறுகிறார்.
சில நாட்களாக அவைகளை பயிற்சி செய்து சில பலன்கள் தெரிவதன் விளைவுதான் இப்பதிவு.
நமக்கு சரியென்றை படுவதை சொல்லிவிட வேண்டும், சுமந்து செல்லக் கூடாது என்பதுதானே நம் கொள்கை.
முதலாவது கழுத்துக்கானது: இதுநாள் வரை நாம் தலை, முகம், கழுத்து பற்றி அதிகம் கவலைப் பட்டதில்லை.
மண்டையில எனக்கு  ஒன்றுமில்லை என கடந்த ஆண்டு ஸ்கேன் செய்து பார்த்து டாக்டரே சொல்லி விட்டார்.
‘ அங்கம் குறைவில்லாதவனை, அழகில்லா ஆண் மகனை மங்கையர்கள்  நினைப்பதுண்டோ ’ என பாடித் திரிந்த காலத்திலே ஒரு அழகிய கிளி ஒன்று ஒட்டிக் கொண்டது. எனவே முகத்திலும் குறையில்லை.
கழுத்தில் இப்பொழுது ஒரு பிரச்சனையும் இல்லை. பின்னொரு நாள் வரலாம். சுலபமான பயிற்சிதான். எனவே தினமும் செய்கிறேன்.
இரண்டாவது (plank):  ஆரம்பத்தில் சற்று கடினமாக தெரிந்தது. டாக்டரே முப்பது விநாடிகள் செய்தால் போதும். 90 விநாடிகள் செய்தால் நார்மல் என்றார். என்னால் தற் பொழுது 120 விநாடிகள் கூட செய்ய முடிகிறது.
முன்னால் நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருந்து எழுந்தால் கால் ஊன்றி சரியாக நிற்க சில நொடிகளாகும். பின்னர் சில அடிகள் ஆதி மனிதன் போல குனிந்து நடக்க வேண்டி யிருக்கும்.
ஆனால் தற் பொழுது ‘படையப்பாவில்’ ரஜினி எழுவது போல துள்ளி எழுந்து நடக்க முடிகிறது.
மூன்றாவது நமக்கு நன்கு தெரிந்தது. நாமே வயதின் மேல் பழி போட்டு தவிர்த்தது. மிரட்டும் பெயர் சுகாசனம், தெரிந்த பெயர் சம்மனம்.
முன்னர் பூஜை அறையில் கால் மாற்றி, குத்திட்டு அமர்ந்த நிலை இன்றில்லை.
ஒரு சபையில் நீண்ட நேரம் சம்மனமிட்டு அமர முடியாமல் நெளியும் நிலை இல்லை.
ஒரு மணி நேரம் சம்மனம் இட்ட நிலையில் சிரமமின்றி அமர முடிகிறது.
ஒரு அடி மேலே சென்று பத்மாசனத்தில் பாதியாக ஒரு காலை வயிற்றை தொட்டு போட முடிகிறது.
வயசு காலத்தில் வாயை கட்டாமல் தின்ற தீனி, வயசான காலத்தில் தொப்பையாய் மாறி இரண்டாவது காலை போட விடாமல் தடுக்கிறது.
தனியாக முயற்சி செய்கிறேன். அனைத்திற்கும் ஆகும் நேரம் பதினைந்து நிமிடங்களே. நம் கையில்தான் நாளொன்றுக்கு 1440 நிமிடங்கள் உள்ளனவே.
இதை பார்த்து யாராவது ஒருவர் முயற்சிக்கலாம் என மனதில் நினைத்தாலே என் ஜென்மம் சாபல்யமடையும்.
அது சரி, ‘சாபல்யம்’ என்றால் என்ன?