படைப்பாளிகள்: இரா முருகன் – எஸ் கே என்

 

era-murugan

எழுபது எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர்களில் பெருமளவிற்கு ‘சுஜாதா’வினால் ஈர்க்கப்பட்டு முயற்சி செய்தவர்கள். முன்னமே எழுதி வந்தாலும் சுஜாதாவின் படைப்புகளைத் தீவிரமாகப் படித்து வந்தவர்கள். சுஜாதாவின் தாக்கம் பல எழுத்தாளர்களை ஆக்கிரமித்தது. அவரை மானசீக குருவாகக் கருதுபவர்களும் ஏராளம்.

இந்நிலையில் அவர்கள் எழுத்துக்கள் சுஜாதாவை நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது சர்வ சாதாரணம்.  ஒரு சிலரே தங்களுக்கென்று ஒரு கதையாடல் பாணி கைவரப் பெற்றார்கள். புதிய முயற்சிகளிலும் ஈடுபட்டார்கள். அவர்களில் சட்டென்று நினைவிற்கு வருபவர் இரா முருகன்.

புதுக் கவிதையில் (கணையாழி -1977) தொடங்கிக் கவிஞராக, பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். வானொலியில் தனது கதைகளை வாசித்துள்ளார். திரைக்கதை வசனங்களும் எழுதியுள்ளார். ஆனந்தவிகடனில் தொடர்கட்டுரை, மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு, ஆங்கிலத்திலிருந்து கவிதை மொழிபெயர்ப்பு என்று பல பங்களிப்புகள். இவரது ‘அரசூர் வம்சம்’ ஆங்கில மொழிபெயர்ப்பு கண்ட நாவல். மாந்திரீக யதார்த்த (magical realism) வகையில் குறிப்பிடும்படியாக எழுதுபவர்.

இவரது செரங்கூன் மனிதர்கள்  சிறுகதை ..

*   *   *   *

ஈஸ்வரி, இந்தப் பெயர் உணர்த்தக்கூடிய, புலர் காலையில் துயிலெழுந்து, குளித்து, கூந்தலில் நுனி முடிச்சும், கையில் அர்ச்சனைத் தட்டுமாக, ஒலிபெருக்கியில் அம்பாள் பாடல் காதில் அறையும் கோயிலை நோக்கி நடக்கிற, அல்லது ‘மாமா, அத்தை சேர்ந்து நில்லுங்கள், நமஸ்காரம் பண்ணிக் கொள்கிறோம்’  என்று காலில் மெட்டி ஒலிக்க, மாக்கோலம் உலராத தரையில், வயிறு பெருத்த கணவனின் மனம் பொருந்தாத, தாமதமான இயக்கத்தோடு  கடைக்கண்ணால் பார்த்து இணை சேர்ந்து வணங்கி எழுகிற, பிம்பங்களிலிருந்து விலகியவளாக செரங்கூன் வீதியைத் துயில் உணர்த்தப் போகிற பெண்.

என்று தொடங்குகிறது.

டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலைபார்க்கும் 28 வயதுப்பெண்ணான ஈஸ்வரி, குழந்தை இல்லாதவள். கணவனும் அது போன்றே ஒரு கடையில் வேலை செய்பவன்.  இரவு  வெகுநேரம் வரை  ‘கணவனே கண் கண்ட  தெய்வம்’ சினிமா வீடியோவில் பார்க்கின்ற ஈஸ்வரி – ‘அதை நீயே பார்த்து அழுதுக்கிட்டு இரு, என்று சொல்லி  மாரடோனாவின் சர்ச்சைக்குரிய உலகக்கோப்பை கோல் எத்தனாவது முறையாகவோ பார்க்கும் பழனியப்பன்.

காலையில் அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்பும்போது, தான் வேலைக்குப் போகவில்லை. வீவு சொல்லிவிடு என்கிறான். காரணம் மறுநாள் பங்குகொள்ளப்போகும் தீமிதி.

முதன் முதலாக தீமிதிக்கப்போவதாக சொன்ன தினம் நினைவிற்கு வருகிறது. தனக்குப் பயமாக இருக்கிறது. வேண்டாமே என்கிறாள். விரதமெல்லாம் இருக்குமே என்று கேட்கிறாள்.

“ஆமா, ஒரு மாசத்திற்கு விரதம். நாளையிலிருந்து சவரம் கிடையாது. கவிச்சி கிடையாது. நீயும் கிடையாது..”

இதை மென்மையாகச் சொல்லியிருக்கலாம். வழித்து எரிகிற ரோமமும், கடித்துத் துப்புகிற எலும்பும், நீயும் எல்லாம் எனக்கு ஒன்றுதான். தேவையானால் வேண்டும். இப்போது தேவையில்லை.

கடைவேலையில் வித்தியாசமான வாடிக்கையாளர்கள்… காணாதது கண்டதுபோல் வாங்கிக் குவிக்கும் இந்திய யாத்திரிகள்.  அடிக்கடி வெளிநாட்டுப் பொருள்  விற்கும் வியாபாரிகளுக்காக  பொருள் வாங்கவரும் ‘கூரியர்’ சிங்காரம் அண்ணாச்சி.  இங்கேயே பிறந்து இதுவரை இந்தியாவே போகாத ஈஸ்வரிக்கு முன்பெல்லாம் தமிழர்களைக் கண்டால் நம்ம ஊர்க்காரங்க  என்ற உணர்வு இருந்ததுண்டு.

எல்லா ஊரும் ஒன்று தான் என நினைக்கும் பழனியப்பனுக்கு ஆட்டோ மெக்கானிசம் படித்துவிட்டு ஆஸ்திரேலியா போய்விட எண்ணமும் உண்டு,

வேலையில் மும்மரமாக இருந்துவிட்ட ஈஸ்வரிக்கு கணவனுக்கு லீவு சொல்லத் தாமதமாக நினைப்பு வருகிறது. பொது டெலிபோன் சென்று அவன் வேலைபார்க்கும் கடைக்குப் போன் செய்கிறாள். யாரிடம் சொல்வது? நினைவிற்கு வருவது உஷா நாயர் என்னும் பெயர்.உஷா நாயருக்கு முன்னமே தெரியுமாம். சொல்லிவிட்டளாம்.

பழனியப்பனுக்கும் அந்த உஷா நாயருக்கும் தொடர்பு இவளுக்கும் தெரிந்திருக்கிறது.  இருவரும் சேர்ந்து சுற்றுவதைப் பலரும் பார்த்திருக்கிறார்கள்.

“யாரோட சுத்தினா உனக்கென்ன? இங்கு என்ன பிள்ளையா குட்டியா, வாசல்லேயே காத்திருக்கிட்டுருந்துட்டு, அப்பா, அப்பான்னு ஓடி வந்து காலைக் கட்டிக்க?”

.. “இந்த வீட்ல பிள்ளை அழுகைதான் கேட்கலை. உன் புலம்பலாவது நிக்கக்கூடாதா? குடிக்காதே.. குடிக்காதே.. சே .. வேற பேச்சு கிடையாதா?”

உடன் வேலைபார்க்கும் சுபாவிற்காக  அவளுடன் ஷாப்பிங் போகிறாள். ஒரு சீனக்குழந்தையும் அதனைக் கூட்டிக்கொண்டுபோகும் கிழவரும், சலனமில்லாமல் ரிக்ஷாவில் போகும் ஜப்பானிய வயோதிக டூரிஸ்டுகள்.. எல்லா இயக்கமும் ஏதோ ஒரு விதிக்குக் கட்டுப்பட்டு அமைதியா இழைந்தோடுவது மனதுக்கு இதமாக இருக்கிறது.

பஸ்ஸில் திரும்புகையில் சில மலேசிய இளைஞர்களும், இவளைத் தீர்க்கமாகப் பார்க்கிற ஒரு பெண்ணும்.

ஏதேதோ எண்ண ஓட்டங்கள்.

பெண்ணே, உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? இந்தக் கண்கள் மட்டும் போதுமா கணவனைக் கட்டிப்போட? ஆறு மீட்டர் அளந்து  துணி வெட்டுவாயா? டீகோ மாரடோனா தீமிதித்தால் பார்க்கப் போவாயா?

ஒரு பெரிய கூட்டம் ஒருத்தொருத்தராகப் போய் வி.சி.ஆர். விலை விசாரிக்கிறார்கள்.  சுருள்சுருளாகப்பட்டுத்துணிக்கு நடுவிலிருந்து ஈஸ்வரி எட்டிப்பார்கிறாள்.’ஏமாந்துவிடாதே பெண்ணே’ – மோ கிழவி சொல்கிறாள். ‘உனக்கு குழந்தை பிறக்க நேர்ந்துகிட்டேம்மா, இந்தா குங்குமம்’ சிங்காரம் அண்ணாச்சி பிரசாத்தை நீட்டுகிறார். ‘சீக்கிரம், சீக்கிரம்’   பழனியப்பன் தட்டுதடுமாறித தீக்குழியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறான். மேளக்காரர்கள் ஆவேசமாகக் கொட்டி முழக்குகிறார்கள். ‘ சீக்கிரம், சீக்கிரம்’. பழனியப்பன் ஒரு காலை எடுத்து தீயில் இறங்க முற்பட .. கால் தடுமாறி ..

Image result for FIRE WALK IN SOUTH INDIAImage result for FIRE WALK IN SOUTH INDIA

“வேணாங்க, ஐயய்யோ வேணாங்க” ஈஸ்வரி என்ற அந்த இருபத்தெட்டு வயது சிங்கைத்  தமிழ்ப்பெண், சுற்றி இருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்க்க அழ ஆரம்பித்தபோது, வெளியே மழை வலுத்துக் கொண்டிருந்தது .

என்று முடிகிறது.

*   *   *   *

நிகழ்வுகளுக்கிடையே, அலைபாயும் மனப்போராட்டத்தை  இயல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதும், தகவலும் எண்ண ஓட்டங்களும் மாறிமாறி சொல்லும் ‘ஜம்ப் கட்’ உத்தியும் இக்கதைக்கு  வளமூட்டுகின்றன.

சமீபத்தில் வெளியான வைக்கோல் கிராமம்  , மாய யதார்த்த சிறுகதை இணையத்தில் கிடைக்கிறது.

 

 

படைப்பாளிகள் – எஸ் கே என்

சு தமிழ்ச்செல்வி

 

எளிய மக்களின் நீண்ட வாழ்வின் நுண்ணிய பகுதிகளை அவர்கள் மொழியிலே பதிவு செய்யும் சு.தமிழ்ச்செல்வி, அவரது அளம், மாணிக்கம் மற்றும் கீதாரி ஆகிய நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர். இவரது சிறுகதைகளிலும் பெண் விவசாயக் கூலிகள் சந்திக்கும் அவலங்களும் இயலாமையும், பல சமயங்களில் வேறு வழிதெரியாது மூட நம்பிக்கைகளை கைக்கொள்ளுவதும் காணப்படுகின்றன. ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். “மாணிக்கம்” புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றவர்.

அவரது ‘யதார்த்தம்’ என்கிற கதை..

                                                * * * * * * *

Image result for indian poor dying in government hospital drawing

“ஏய், இங்க யாரு ஊளையிடறது? கொஞ்சம்கூட அறிவில்லாம..” கத்திக்கொண்டே வந்தாள் அந்த நர்ஸ்.

என்று தொடங்குகிறது. இடம் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாலுக்கா தலைநகரான திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை. அழுதழுது வீங்கிப் போயிருந்த மாரியப்பனும் தலைவிரிகோலமாய் மரத்தடியில் ஆஸ்பத்திரிக்கு வெளியே திடீர் திடீரென பெருங்குரலெடுத்து அழும் அவன் மனைவி கண்ணம்மாவும்  அவனது அம்மா காலை நாலரை பஸ்ஸில் வருவாள் என எதிர்பார்த்துக்கிடந்தார்கள். வரும்போது ஏதேனும் பணம் தோதுபண்ணிக் கொண்டுவரலாம். அவள் வந்தால்தான் இவர்கள் ஊருக்குப் போகமுடியும். கையில் இருந்ததோ இரண்டு மூன்று ரூபாய்கள்தான். இயலாமையும், துக்கமும் நெஞ்சை அழுத்துகிறது.

இப்படியெல்லாம் ஆகுமென்று தெரியுமா என்ன? நேற்று காலையிலேயே மூன்றரை வயது மகனுக்கு உடம்பு காய்ந்து கொண்டு  இருந்தது. பக்கத்து ஊர் ஆசுபத்திரியில் காண்பிக்கலாம் என மனைவியின் கோரிக்கை. ஆனால் அங்கு போய்விட்டு வந்து நடவுக்குப் போக சாத்தியமில்லை. இருவரும் சம்பாதிக்கும் குறைந்த வருமானத்தில்தான் வாழ்க்கை. வேலை கிடைக்கும் ஒரு சில நாட்களிலும் ஒருநாள் வேலைக்குப் போகாவிட்டால்..? ‘முக்குட்டு’ கடையிலிருந்து காப்பித்தண்ணியும் ‘சொர’ மாத்திரையும் வாங்கிக் கொடுத்துவிட்டு வேலைக்குப்போகத்தான் தீர்மானித்தாள்.

இருபோக சாகுபடி நடந்த நாட்களில் எதாவது வேலை கிடைத்துக்கொண்டே இருக்கும். வாய்கால் எல்லாம் காய்ந்து அல்லாடும் விவசாயத்தில் வேலை என்று கிடைப்பதே மிகச் சொற்பம்.

வேலை முடிந்து வீடு திரும்பும் கண்ணம்மா, காய்ச்சல் கண்ட மகனுக்கு ரசம் வைத்துக் கொடுக்க சிறு நண்டுகளைத் தேடிப்பிடித்து மடியில் கட்டிக்கொண்டு வந்தாள்.

மகனுக்குக் கிட்ட நெருங்கவே முடியாத காய்ச்சலில் தூக்கித்தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. வேலை சீக்கிரம் முடிந்தாலும் கூலி பெறத் தாமதமாகி அப்போதுதான்  வீடு திரும்பிய மாரியப்பன், மகனைத் தோளில்  போட்டுக்கொண்டு, மனைவியுடன்  ஏழரை மணி பஸ் பிடித்து இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தான்.

ஆஸ்பத்திரிக்கு வந்தபோது நைட் ட்யூட்டி டாக்டர் வந்திருக்கவில்லை. இவ்வளவு மோசமான ‘கேஸ்’ பார்க்க நர்ஸ்களுக்கும் விருப்பமில்லை. காலில் விழாத குறையாக கெஞ்சியதால் வைத்தியம் பார்த்தார்கள். வேண்டாத தெய்வமில்லை. ஊசிபோட்ட மயக்கத்தில் குழந்தை உறங்குகிறான் என்ற நினைப்பிலும்,  இனி பிள்ளையைக் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையிலும்  ஏதோ டீயும் பன்னும் தின்று கண்ணயர்கிறார்கள். இடையில் திடுக்கிட்டுக் கண்விழிக்கும்போதுதான் புரிகிறது பிள்ளை இறந்து கிடப்பது.

பதினைந்து ரூபாயுடன் முதல் பஸ்ஸில் வந்த கிழவி, பேரப்பிள்ளை போய்விட்டது என்று அறிந்து ஒருபாட்டம் அழுது தீர்த்தாள்.

சரி. இப்போது ஊர் திரும்பவேண்டுமே? கார் என்றால் இருநூற்றைம்பது ஆட்டோ என்றாலும் நூற்றைம்பது.

“அம்மா, நீங்க ரெண்டியரும் அழுது  ரெகள பண்ணாதிய. புள்ளைய மடில போட்டுக்கிட்டு பஸ்ஸுலேய  போயிருவம்” என்றான்.

துக்கத்தைத் தொண்டையில் அடைத்துக்கொண்டு மூன்றரை டிக்கெட் எடுத்தான். கண்ணம்மாவை சமாளிக்கும் கடமை கிழவிக்கு.

பஸ் நான்கைந்து ஊர்களைக் கடந்திருந்தது. கண்மூடி மயங்கிக் கிடந்தவள் சாமி வந்தவளைப்போல் திடீரென்று எழுந்தாள். கிழவி சுதாரித்துக்கொண்டு பிடித்து அழுத்தி உட்காரவைப்பதற்குள், “ஐயோ.. நான் பெத்த தங்கமே.. ” என்று அலறிக்கொண்டு மகனிடம் பாய்ந்தாள் கண்ணம்மா. ஓடிக்கொண்டிருக்கும் பஸ்சில் நிலைதடுமாறி விழுந்தாள்.

கம்பியில் குத்தி ரத்தம் வழிய மூவரும் இறக்கிவிடப்படுகிறார்கள். எல்லோரும் இரக்கப்பட்டாலும்  உதவி செய்ய முன்வரவில்லை. மாரியப்பனுக்குத் துக்கத்தைவிட மனைவிமேல் கோபம் பெரிதாக  வந்தது.

அந்த ஊரில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்த டீக்கடைகளில் கிழவி துக்கத்தைச் சொல்லி அழுதாள்.

Image result for poors travelling in a bus with a dead child in india

பிள்ளை இறந்த இரண்டாம் நாள், துக்கத்துடன் அவனது பொருட்களை வெறித்துப் பார்த்துகொண்டிருந்தாள் கண்ணம்மா.  அவளிடம் ‘இப்படியே அழுதுகொண்டிருந்தாலும் செத்த பிள்ளை திரும்பி வரப்போவதில்லை, எல்லோருடன் நடவுக்குப் போனால் வேலை நினைப்பில் எல்லாம் மறந்து போகும்’ என்கிறாள் கிழவி. அந்த ‘டீக்கடை மவரசனுக்கு’ பணம் திருப்பித் தர வேண்டுமல்லவா?

தெருவில், ‘இன்று வேலை கிடைக்கவேண்டுமே’ என்ற பரபரப்புடன், ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டிருந்தார்கள் நடவு நடப்போகும் பெண்கள். அவளுடன் கண்ணம்மாவும் சேர்ந்து கொண்டாள்.

என்று முடிகிறது.

                                                * * * * * * *

‘இயல்பில் ஆண் பெண் என்னும் ஏற்றத்தாழ்வெல்லாம் இல்லை; உடல் தோற்றத்திற்குத்தான் இந்த ஆண் பெண் அடையாளமெல்லாம்’ என்று சொல்லும் தமிழ்ச்செல்வி பெண்ணியம் குறித்த கோட்பாட்டுரீதியான வாசிப்புப் புரிதலெல்லாம் பெரிய அளவில் தான் கொண்டிருக்கவில்லை என்கிறார். இன்னல்களுக்காட்பட்ட பெண்ணொருத்தி இயல்பாகத் தனது வாழ்வியலைப் பதிவு செய்யும்போது அதுவே பெண்ணெழுத்திற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கத்தான் செய்யும் என்கிறார்

இவரது வலைப்பூவில் மற்ற படைப்புகளின் விவரங்களும் குறிப்புகளும் கிடைக்கின்றன.

 

 

 

படைப்பாளி – எஸ் கே என்

பாவண்ணன்

pd1

மொழிபெயர்ப்புகள், கவிதைகள், நாவல்கள். குறுநாவல்கள், கட்டுரைகள், குழந்தைப் பாடல்கள், நூல்-திரை-நாடக விமரிசனங்கள் என பன்முகப் படைப்பாளியான பாவண்ணனின் சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி  பதினைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. தமிழக அரசின் குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது, இலக்கிய சிந்தனை நாவல் பரிசு, கதா விருது போன்று பல அங்கீகாரங்கள் பெற்ற இவர், பைரப்பாவின் மகாபாரதப் பின்னணி கன்னட நாவலின் மொழிபெயர்ப்பான “பருவம்’ நூலுக்காக 2005 சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது பெற்றவர்.

* * * * * * * * * *

இவரது நலிவு என்னும் சிறுகதை

அருமாந்தபுரம் ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் பாண்டிச்சேரியைப் பார்க்கிற பச்சைவண்ண கட்டிடத்தில்தான் இருதயமேரி கான்வென்ட் இருக்கிறது.

Image result for village school teacher in a tamil nadu christian school

என்று தொடங்குகிறது

அங்கு ஆசிரியையான லூசி அடவில்லாத கணவனாலும், நிரந்தரமற்ற வேலைகளாலும் இன்னல்களே வாழ்க்கையாக வாழுபவள்.

எப்போதும் பேருந்து கான்வென்டிற்குச் சற்றுத் தொலைவிலேயே நிற்கிறது. இறங்கியதும் நடக்கத்தொடங்காமல்  ஒரு கம்பத்தைப் பிடித்துக்கொண்டு புழுதி அடங்கும்வரை கைக்குடடையால் வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு நின்று விடுகிறாள்.   வாந்தி வருவதுபோல் இருக்கிறது. நடக்கக்கூடப்    பலவீனமாக இருக்கிறது. தினப்படி ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து வாங்கி சாப்பிட்டிருந்தாலோ, ஒரு மாதமாவது பெரியாஸ்பத்திரியில் பெட்டில் இருந்து சிகிச்சை பெற்றிருந்தாலோ குணமாகி இருந்திருக்கலாம். ஆஸ்பத்திரியில் சேரலாம என்று கணவனிடம் கேட்டபோது பதிலேதும் சொல்லவில்லை. நான்கு நாட்கள் வீட்டிற்கே வரவில்லை.

கணவன் ஜோசப் ஒருமுறை சஸ்பென்ஷனில் இருந்தபோதுதான் குழந்தை பிறந்தது. அந்தச் சமயத்தில்தான் இந்த வாந்தியும் தொடங்கியது. முன்பெல்லாம் வேலை பார்த்த பூச்சி மருந்துக்கடை, பேப்பர் ஃபாக்டரி காரணமாக வரும் சாதாரண வாந்தி என்று நினைத்தாள். 

அவள் வேலை பார்த்துவந்த  பூச்சி மருந்துக்கடைக்கும், அனாதை இல்லத்திற்கும் ஜோசப்பின் அம்மா வந்து தரக்குறைவாக சத்தம்போட்டது, சத்தம்போட்ட அம்மாவை ஜோசப் இழுத்துப்போட்டு உதைத்தது என கசப்பான அனுபவங்கள்தான் வாழ்க்கை. திரும்பவும் ஜோசப்பிற்கு சஸ்பென்ஷன். கான்வென்ட் சம்பளத்தில் பஸ் செலவு போகத்தான் குடும்பச் செலவுகளுக்கு. இடையிடையே காசு கேட்டுக்கணவனின் தொல்லை.

வரவர இந்த வாந்தியும் சோதனை செய்கிறது. நேற்று பாடம் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் குடலே அறுந்து போகிற மாதிரி வலிகண்டு புரட்டியது. வகுப்பறைக்குள்ளேயே அசிங்கமாகிவிடுமோ என்னும் பயம். இதோ வாசலுக்குப் போய்விடலாம் என்ற அவசரத்தில் நடக்க, வயிற்றில் மேஜை இடிக்க,  காலையில் சாப்பிட்ட கம்பு மாவுக்களி, மருந்து மாத்திரைகள் எல்லாம் வெளியில். ஒரே களேபரம் எல்லா மிஸ்களும், மதரும் வந்துவிட்டார்கள். பொன்னம்மா ஆயாதான் இரண்டு பக்கெட் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தாள். வகுப்பை அப்படியே விட்டுவிட்டு பஸ் ஏற்றி  அனுப்பிவிட்டார்கள்.

இந்தக் கம்பத்திலேயே சாய்ந்துகொண்டிருப்பதை விட மெதுவாக கான்வெண்டே போய்விடலாம் எனத் தோன்றுகிறது.

இடுப்புப்பக்கம் இற்றுப்போகிறமாதிரி வலிக்கிறது. கொஞ்சம் தாராளமாய் உட்கார்ந்தால் தேவலாம் போல் இருக்கிறது. மின்னுகின்ற தண்டவாளம் பார்வையில் பட்டு ‘கான்வென்டுக்கே போயிர்லாம், பக்கத்தில் தானே’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டு நடக்கிறாள்.

குழந்தையின் ஞாபகம் வருகிறது. இந்த வேலையை வாங்கிக்கொடுத்த மேரி அத்தையும் அவள் புருஷனும் நினைவிற்கு வருகிறார்கள்.

ஜோசப், ஜோசப் அம்மா மாதிரி ஜனங்களும் இருக்கிறார்கள். மேரி அத்தை,  மேரி அத்தை புருஷன் மாதிரி ஜனங்களும் இருக்கிறார்கள். எல்லாம் மாதாவின் செயல்.

முதல் பெல் அடிக்கும் பொன்னம்மாளின்     ‘இப்போது பரவாயில்லையா?’ என்ற கேள்விக்கு ‘ம்..’ என்று பதிலளிக்கிறாள். ஸ்டாஃப் ரூமை நெருங்கும்போது எதிர் ஹாலிலிருந்து மதர் கூப்பிடுவது கேட்கிறது.

குட் மார்னிங், இப்ப எப்படியிருக்கு, நல்லாயிருக்கேன்’ , டேக் யுவர் சீட், பரவாயில்லை போன்ற உரையாடல்களுக்குப் பிறகு

‘தப்பா எடுத்துக்கக் கூடாது. நேத்து நீங்க போனப்புறம் ஒங்களைப்பத்தி எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்னேன். ஒரு வியாதியை ரெண்டு வருஷமா வளர உட்டுக்னு இருக்கிறது ரொம்ப தப்பு. ஆரோக்யம்தான் எல்லாத்துக்கும் அடித்தளம். நீங்க அவசியம் டாக்டரைப் பார்க்கணும். நல்லா ஓய்வெடுக்கணும் சீக்கிரமா குணமாவனும். இன்னிக்குத் தேதி பதினாலுதான். ஆனா உங்க முழுச் சம்பளமும் இந்த பாக்கெட்ல இருக்கு’

‘மதர்…’

‘ஒங்களை நாங்க  வெளியேத்தறதா நினைச்சுக்கக் கூடாது. நீங்க மருத்துவம் செஞ்சிக்கதான் அனுப்பறம். ஒங்க உடம்பு குணமாக எல்லோரும் மாதாவை  பிரார்திக்கறம்.’

பேச ஒன்றுமில்லாமல் இரண்டு சொட்டுக் கண்ணீருடன் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு  வெளியே வரும்போது மதர் தோளில் தட்டிக் கொடுக்கிறாள்.

தொடை நடுக்கம் அதிகமாகவே வாசலைப் பார்த்து நடக்க இருந்த லூசி ஸ்டாஃப் ரூம் பெஞ்சில் உட்காருகிறாள்.

என்று கதை முடிகிறது.

பாவண்ணனின் பல கதைகள் எதார்த்தங்களையும், போராடுதல்களையும் இயலாமையையும் உள்ளது உள்ளபடி சித்தரிப்பவை. இவரது ‘ஜெயம்மா’ ,’கையெழுத்து’ போன்ற கதைகள் குறிப்பிடத் தக்கவை.

 

படைப்பாளி -(எஸ் கே என் )

ம வே சிவக்குமார்

 

சென்ற ஆண்டு மறைந்த ம.வே  நெய்வேலியைச் சேர்ந்தவன். (என் இனிய நண்பன் என்பதால் ‘ன்’ விகுதி). ஒரு வித்தியாசமான துடிப்பான நண்பன். தற்செயலாகக் கணையாழியில் வெளிவந்திருந்த “கடவுளும் கையாட்களும்” என்னும் சிறுகதையைப் படித்த பிறகுதான் அவன் எழுதுவான் என்றே தெரியும். அடுத்தமுறை சந்தித்தபோது வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.  தான் காணும் விஷயங்களில் ஒரு வேறுபட்ட பார்வை மற்றும் எது எழுதினாலும் அதனூடே ஒரு நகைச்சுவை. கதைகளுக்குப் பெயரிடுவதிலும் ஒரு வேறுபாடு. ஆகியவை குறிப்பிடத்தக்கன.

வேடந்தாங்கல் (வேடம் தாங்கும் மனிதர்கள்), வட்டம்   (அந்தகால அறிவுஜீவிகள் – அவர்கள் எழுதுவதும் பேசுவதும் மற்றவரைச் சென்றடையாத குழூஉக்குறி), கடைச் சங்கம் (இளைஞர்கள் பொழுதுபோக்கும் டீ கடை பெஞ்ச்) என்று சில உதாரணங்கள். பல பொது நண்பர்களும் உண்டு என்பதால் அவன் கதைகளில் யாரைக் குறிக்கிறான் என்றும் புரியும். பெரிதாகச் சாதிக்கக் கூடியவன் என்று எழுத்தாளர் சுஜாதா, ‘குமுதம்’ எஸ்.ஏ.பி போன்றோரால் எதிர்பார்க்கப்பட்டவன். தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர் ஒன்றுக்கு வசனம் எழுதியவன். சிறிதுகாலம் திரைப்படத்துறையிலும் இருந்தவன். தனக்கு உரிய அங்கீகாரம்  இல்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அறிவித்தது, தனது நாடகத்தை ஒளிபரப்ப மறுத்த தூர்தர்ஷன் முன் உண்ணாவிரதம் என்று பல தடாலடிகள்.

“உன்னை நம்பு’ என்னும் சிறுகதை

“கொஞ்ச நாட்களாகவே எதைத்தொட்டாலும் பிசகிக்கொண்டு இருந்தது.” என்று தொடங்குகிறது. அடுத்தடுத்து பல சறுக்கல்களில் பொருளாதாரம் மோசமாகி, கடனுக்கு வாய்தா சொல்லும் பொய்களும் தீந்துபோன நிலை.  தொட்டதற்கெல்லாம் சிடுசிடுப்பு. அடுத்தமாதம் சீட்டு எடுத்துவிட்டால் பிரச்சினைகளிலிருந்து வெளியே வந்துவிடலாம் என்கிற  நம்பிக்கையில் தூங்கிப்போகிறான் . சிறு சிறு நகைகளையும் அடகு வைத்துக் கட்டிவரும் சீட்டு அது.

சீட்டு பிடித்துவந்த பால்கார சங்கர பாண்டியின் குடும்பமே காணாமல் போய்விட்டது. சீட்டுக்கட்டிய எல்லோரும் அதிர்ந்து போகிறார்கள். கதவை உடைத்து உள்ளே இருந்த சாமான்களை எடுத்துப்போகிறார்கள். இவன் எடுத்து வந்தது ஒரு கிரைண்டர். மனைவி அதை வீட்டில் சேர்க்கவில்லை. எல்லாமே போயிற்றே என்ற பெரும் துக்கத்தில் ஆழ்கிறார்கள்.

திடீரென சங்கரபாண்டி திரும்பிவந்து   குடும்பத்தோடு வெளியூர்  சென்றிருந்த சமயத்தில் இவர்கள் எல்லாம் வீட்டிலிருந்த லட்சக்கணக்கான  பணம் பண்டங்கள் எல்லாவற்றையும்   சூறையாடிவிட்டதாகப் புகார் கொடுக்க சூறையாடிவர்கள் பட்டியலில் இவன் பெயரும்.

மனைவியின்  தோழி சொன்னாள் என்று ஒரு சாமியாரைப் பார்க்கிறார்கள்.

நாக்கு வெளியில் தள்ளிய காளி படம், நடுவில் சூலம் குத்தப்பட்ட அம்பாரமாய்  குங்குமம், அந்த சூலத்தில் குத்தப்பட்ட எலுமிச்சம்பழம், சாம்பிராணிப்புகை,    சப்பணமிட்டு தியான நிலையில் கண் மூடியிருந்த சாமியார் …

“சாமியார் இப்போது கடவுள் மாதிரி. அதுக்கு ஒளிவு மறைவு கிடையாது. கூச்ச நாச்சமும் தெரியாது. பொட்டில அடிச்ச மாதிரி கேள்வி கேட்கும். அது கிட்டே பொய் சொல்லமுடியாது. எதிர்லே  ஆள் வந்து உட்கார்ந்ததுமே  அவன் யாருன்னு அதுக்குத் தெரிஞ்சுடும். வந்தவனுக்கு என்ன பிரச்சினை அதுக்கு என்ன தீர்வுன்னு டக்குன்னு பிடிபட்டுவிடும். அது உன்னப் பார்க்காது. தியானத்தில இருக்கு. உன் வார்த்தைகள்  அதுக்குக் கேட்கும். காதுல விழற வார்த்தைக்கு அது வாய்ல சொல்ற வார்த்தைதான்  பதில்.  தலையை ஆட்டிட்டு தட்சணையை வெச்சுட்டுப் போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்”    

இவன் டோக்கன் 132. வரிசையில் கூப்பிடப்பட்டாலும், சாமியாரே திடீரென  அறிவிப்பு செய்து யாரையாவது கூப்பிடுவார். அதுபோல கூப்பிடப்பட்ட ஒரு சேலத்துக்காரரை  -நீ தம்பிக்கு  துரோகம் செய்தாய். அவன் உன்னை  பதிலுக்கு  துரோகம் செய்தான். தானிக்குத் தீனி சரியாப் போச்சு. இங்கு வந்ததே தப்பு.  ஓடு’ என்று மானத்தை வாங்குகிறார்.

வரிசையில் சிலருக்குப் பிறகு,

” … சீட்டுப்பணம் கட்டி சிக்கல்லே இருக்காரு ஒருத்தரு. அவரை வரச் சொல்லு” என்று அறிவிக்கிறார். 

“வாய்யா. கிரைண்டரு. உனக்கு உன்  சம்சாரம்தான் ஆதரவு. இவளை விட்டுவிடாதே. இவதான் உனக்கு அச்சாணி. ரெண்டு மாடும் இணையா  இருந்தா எதையும் ஜெயிச்சுரலாம். மழை அடிக்கறப்போ உப்பும் காத்தடிக்கறப்போ மாவும் வித்துட்டுப் போனானே ஒருத்தன். அவனுக்குச் சொன்னதுதான் உனக்கும். தப்பு எங்கேன்னு யோசி. எல்லாம் சரியாயிடும்.  இப்ப  இல்லேன்னா அடுத்த தடவை. ஓடிட்டே இருந்தாத்தான் நிக்க முடியும் புரியுதா? உழைப்புதான் ஜெயிக்கும்.”       

குலதெய்வம் எது என்று கேட்டுத் தெரிந்துகொள்ளும் சாமியார் 

“…   மேட்டுத் தெருவிலேர்ந்து  இன்னார் மகன் இன்னார் பேரன் நேர்ல வந்து ஆஜர் ஆவாம அவனுக்கு நாம் ஒண்ணும் பண்ண முடியலையேன்னு ஏங்கிக்கிட்டு இருக்கு. அப்பிடி விடலாமா? அதனால் அவளைப் போய் பார்.   உன் சீட்டுப்பணம் போனது போனதுதான். புத்திக் கொள்முதல். இனி யாரையும் நம்பாதே. உன்னை நம்பு. குல தெய்வத்தை கூட வெச்சுக்க. அடுத்து ஒரு முயற்சி செய். அதுலேர்ந்து படிப்படியா நல்லாயிடுவே. கிளம்பு”  

என்கிறார்.

 

கையில் காசில்லாததால் குலதெய்வத்தைப் பார்க்கத் தாமதமாகிக் கொண்டே வந்தது. அடகிலிருந்த நகைய விற்று சொந்த ஊர் போகிறார்கள். குலதெய்வத்தைப் பார்க்க வருபவர்கள் முன்கூட்டியே ஐயரிடம் தகவல் சொல்லி வரவழைப்பார்களாம். செல் நம்பர் கிடைக்கிறது.

கோயில்  பாழடைந்து இருந்தது. கூட வந்திருந்த மனைவியும் அவள் தாயாரும் அருகே ஒரு வீட்டில் திண்ணையில் உட்கார்ந்து கொள்கிறார்கள். குழந்தைகள் ஓடிப்பிடித்து தூண்களைச் சுற்றி விளையாடுகிறார்கள்.   ஐயரும் வருகிறார், ஆனால் சற்று தாமதமாக. அதற்குள் காட்டுச் செடிகளை வெட்டிச் சுந்தம் செய்கிறான் .

கோவிலில் விநாயகர் தலையிலிருந்து ஓணான் குதித்து ஓடுகிறது. அம்மன் ஓட்டடைக்கு நடுவில் மூக்குத்தி  காணமல் போய் இவன் மனைவியைப் போலவே துவரம் தூர்ந்துவிடாமல் குச்சி ஒன்று வைத்திருந்தாள்.

பூஜையும் கற்பூரமும் முடிந்து கோவிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று இவனுக்கும் மனைவி லலிதாவிற்கும் தோன்றுகிறது.

குறைந்த பட்சம் கோவிலைச் சுத்தம் செய்ய இரண்டாயிரம் ரூபாய் செலவாகும் என்று ஐயர் சொன்னார். லலிதா யோசித்தாள். குழந்தை ரம்யாவைக் கூப்பிட்டு கொலுசு, வளையல், தோடு முதலியவற்றைக் கழற்றினாள். முதலில் அழுத குழந்தை அது அம்மனுக்கு என்று தெரிந்தவுடன் அமைதியாகிவிட்டது. மெயின் ரோடு வரை கூட வந்து அடகுக் கடையில் ஐயர் பணத்தை வாங்கிக்கொண்டார் .

எங்கள் குலதெய்வ நேர்த்திக்கடன் இவ்வாறு இனிதே முடிந்தது. பதிலுக்கு வரலக்ஷ்மி செய்கிறபோது செய்யட்டும்.

என்று கதை முடிகிறது

இந்தக் கதையினை முழுதும் படிக்க    உன்னை நம்பு.

இணையத்தில் கிடைக்கும் இன்னொரு கதை  கடவுள்

சாதிக்க வேண்டிய உயரத்தை எட்டாவிட்டாலும் ‘வட்டம்’, ‘வேடந்தாங்கல்’, ‘அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும்   ‘பாப்கார்ன் கனவுகள்’ , ‘இறங்கப் போறீங்களா?’  மற்றும் போன்ற படைப்புகளுக்காக நினைவில் இருப்பான் ம.வே.சிவக்குமார்

 

படைப்பாளி – கு. அழகிரிசாமி (எஸ் கே என்)

 

இடைச்சேவல் என்னும் கிராமத்தைச் சேர்ந்த இவரும், இவரது நெருங்கிய நண்பரும் அதே கிராமத்தைச் சேர்ந்த கி ராஜநாராயணனும் சாகித்ய அகடமி விருதுபெற்ற, குறிப்பிடத்தக்க படைப்பாளிகள். இவர் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், விமரிசனங்கள் ஆகியவையும், இவரது சிறுகதைகளைப் போலவே படிப்பினையைப் போதனையாகச் சொல்லாத அரிய அனுபவம் என்று கூறலாம். இவர் இசையில் மிகுந்த நாட்டம் உடையவர்.  கீர்த்தனைகள் படைத்தவர்

*****

மிகவும் பேசப்படும் இவரது குமாரபுரம் ஸ்டேஷன் என்னும்  கதை

‘குமாரபுரம் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன். அரை மைல் சுற்றளவிற்கு எந்த ஊரும் கிடையாது. ஸ்டேஷன் என்று கட்டிவிட்டால் பெயர் வைக்காமல் முடியுமா? இடுகுறிப் பெயராவது வைத்துத்தானே ஆகவேண்டும்?’

என்று தொடங்குகிறது  .

புதியதாக மாற்றலாகி வந்திருக்கும் ஸ்டேஷன் மாஸ்டரின் பால்ய நண்பர் சுப்பராம ஐயர் ஓரிரு நாட்கள் தங்குகிறார். இந்த ஸ்டேஷனுக்கு பிரயாணிகளும் வருவதுண்டோ என்கிற ஐயம் அவருக்கு. ‘இப்படி இன்னும் பத்து ஸ்டேஷன் இருந்தால் போதும் இரயில்வே பட்ஜெட்டில் வருஷம் தவறினாலும் துண்டு விழுவது தவறாது’ என்கிறார்.

அதற்கு ஸ்டேஷன் மாஸ்டர் கோவில்பட்டி சந்தை தினங்களில் பத்து டிக்கட்களாவது தேறும் என்கிறார். தவிர, கோடையில் சுற்றுவட்டாரத்தில் நிலத்தில் வேலை செய்பவர்கள் மண்கலயங்களில் குடிநீர் எடுத்துச் செல்வார்களாம்.

தண்ணீர்ப்பந்தலுக்குப் பதிலாக ஸ்டேஷன் கட்டிவிட்டார்கள் என்று கேலி செய்கிறார் சுப்பராம ஐயர். ஸ்டேஷன் மாஸ்டர் பள்ளிக்கூடம் என்பது எதற்காக என்று  கேள்வி கேட்கிறார். நூறு குழந்தைகள் படிக்கத்தான் என்று பதில் வருகிறது. பிள்ளைகள் எதற்காகப் படிக்கிறார்கள் என்று அடுத்த கேள்வி. சுப்பராம ஐயர் பதிலளிக்கா விட்டாலும் ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லுகிறார்.

 ‘எந்த பைத்தியக்காரனும் அறிவு வளர்ச்சிக்காகப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. நீங்களும் நானும் அறிவு வளர்ச்சிக்காகவா படித்தோம். படிக்காதவனுக்கும் வேலை உண்டு என்று சட்டம் செய்யட்டும். எவனாவது மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தில் வந்து ஒதுங்குகிறானா என்று பார்க்கிறேன் என்று சவால் விட்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.

மூன்றாம் நாள் காலையில் எட்டுமணி பாசஞ்சர் வண்டியில் சுப்பராம ஐயர் ஊர் திரும்ப இரயிலுக்காகக் காத்திருக்கிறார். கோவில்பட்டி சந்தைக்குச் செல்லும் பயணிகள் முன்னதாகவே வந்து stationவெற்றிலைப் பாக்கு போட்ட வண்ணம் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எப்போதோ மாடு வாங்கிவந்த கதையை ஓர் ஆசாமி சொல்ல மற்றவர்கள் கவனமாக ‘ஊம்’ போட்டுக்கொண்டு இருந்தார்கள்.  அவர்கள் பேச்சுகளில் உள்ள உண்மை சுவாரஸ்யம், அர்த்தம் மற்றும்   தூரத்தில் தெரியும் கிராமங்களும் தனக்கு ஒரு பாடம் கற்பிப்பதாக உணர்கிறார், சுப்பராம ஐயர்.

பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயது மதிக்கத்தக்க  நான்கு சிறுவர்களும் ஒரு பெரியவருமாக  அவசர அவசரமாக வருகிறார்கள். காலில் பூட்சும், க்ளோஸ் கோட்டும் ஜரிகை அங்கவஸ்திரமுமாக, பள்ளிக்கூடத்திற்கு எப்போதோ வரும் பெரிய இன்ஸ்பெக்டரைப்போல காணப்படும் சுப்பராம ஐயரை வியப்போடு பார்க்கிறார்கள்.   

ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கட் கொண்டு வந்து கொடுக்கிறார். இரயிலும் வருகிறது. கூட்டமில்லை. ஐயர் ஏறிய பெட்டியிலேயே அந்தச் சிறுவரும் அவர்களுடன் வந்த பெரியவரும் ஏறிக்கொள்கிறார்கள். ஏராளமான சாமான்களோடு பூதாகரமான ஆகிருதியுடன் ஒருவரும் அவருடைய கனத்தில் முக்கால் வாசியாவது இருக்கும் ஒரு அம்மாளும் அந்தப் பெட்டியில் ஏற்கனவே இருக்கிறார்கள். அந்த மனிதரின் வைரக்கடுக்கன், வைரமோதிரம், தங்கப்பித்தான்கள் சிறுவர்களின் ஆச்சரியத்திற்கு உள்ளாகிறது.

பூதாகாரமான மனிதர் சௌஜன்யமாக சிறுவர்களை எங்கே பிரயாணம் என்று கேட்கிறார். அவர்கள் ஊரான இடைச்சேவலில் ஏழாம் வகுப்பு இல்லை என்றும், கோவில்பட்டியில் உள்ள பெரிய பள்ளியில் பரிட்சை எழுதிச் சேருவதற்குத்தான் அவர்கள் செல்கிறார்கள் என்றும்சிறுவர்கள் சார்பில்  பெரியவர் பதில் சொல்கிறார்.

நானே கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள் என்று அந்த வைரக்கடுக்கன் ஆசாமி மூன்று கேள்விகள் கேட்கிறார்

“வாட்டீஸ் யுவர் நேம்?”. “வாட்டீஸ் யுவர் பாதர் நேம்?’, “வாட் கிளாஸ் யூ பாஸ்?” எனக் கேட்கிறார். பதில்கள் கேட்டு நீங்கள் எல்லாம் பாஸ் என்கிறார். மேலும் கேள்விகள் கேட்கச் சொன்னால், “நம்ம இங்க்லீஷ் அவ்வளவுதான். அதுக்குமேல எங்க வாத்தியார் கத்துக்கொடுக்கல” என்று சிரிக்கிறார். 

பூதாகாரமான ஆசாமி திருநெல்வேலியில் பங்கஜ விலாஸ் என்னும் ஹோட்டல் நடத்துவதாகவும், நிறைய  படிக்கும் பையன்கள் இவர் ஹோட்டலில்தான் சாப்பிடுவதாகவும் தர்மத்திற்கு சாப்பாடு போடவில்லை என்றாலும் எத்தனையோ பேருக்கு ஸ்கூல் பீஸ் கட்டிவருவதாகவும் சொல்கிறார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. என்றாலும் அவர் ஹோட்டலில் சாப்பிடும் மாணவர்கள் எல்லாம், ஏன் இந்த நான்கு சிறுவர்களும் கூட,   தன் குழந்தைகள் தானே என்கிறார்.

அந்தப் பரீட்சைக்குப் பெரிய வாத்தியார் ஒரு மாசம் வீட்டில் வைத்து, மிகுந்த முயற்சி எடுத்துப்  பாடம் சொல்லிக்கொடுத்தாகவும், அந்தப் பையன்களில் ஒருவன் தனது பேரன் என்றும், மற்ற பையன்களில் ஒருவன் வசதி இல்லாதவன் ஆகையால் அவன் செலவுகளைத் தானே பார்த்துக் கொள்வதாகவும் பெரியவர் சொல்கிறார்.

சுப்பராம ஐயர் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் பெயரை எழுத்துக்கூட்டி ‘அன்னா கரீனா – லியோ டோல்ஸ்டோய்’ என்று ஒரு சிறுவன் படிக்கிறான்.

“டோல்ஸ்டோய்!. அதுவும் சரிதான்! சொல்லிக்கொடுக்காத வரையில் யாருக்கும்  டோல்ஸ்டோய் தானே ஒழிய டால்ஸ்டாய் எப்படி ஆகமுடியும்?” என்று நினைத்துக்கொள்கிறார் சுப்பரம ஐயர்.     

பரிட்சைக்குத் தயார் செய்வதற்காகப் பெரிய வாத்தியார் கொடுத்திருந்த காகிதங்களைச் சிறுவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

“பட்டிக்காட்டுப் பயல்கள் ஆனாலும் படிப்பு நல்ல படிப்புதான். வாத்தியாரு அப்படி. அந்த மாதிரி ஒரு தகப்பன்கூடப் புள்ளைகமேல அவ்வளவு பிரியமா இருக்கமாட்டான்னு சொல்றேனே” என்றார் பெரியவர்

“அது சரிதான். வாத்தியாரும் ஒரு தகப்பன்தானே?” என்றார் ஹோட்டல்காரர்.

இதைக் கேட்டதும் சுப்பராம  ஐயரின் உடம்பு சிலிர்த்தது.

இரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட ஹோட்டல்காரர், படிச்சிருந்தா  உத்தியோகம் பார்த்திருக்கலாம் . ஆனா இத்தனை வருஷமா பள்ளிப் பிள்ளைகளுக்கு உபகாரம் செய்திருக்க முடியாது என்கிறார்

“..நாலு பேருக்கு உபகாரமா இருந்தாத்தான் படிப்பிலே சேர்த்தி. ஊர்காரனை மிரட்டுற படிப்பு வேண்டவே வேண்டாம்..” 

கோவில்பட்டியில், பெரியவரையும் பிள்ளைகளையும் தங்குவதற்காக அவர்கள் ஊரைச் சேர்ந்த ஒரு போர்ட்டர் தன் வீட்டிற்கு அழைத்துப்போகிறான்.

சுப்பராம ஐயர் வீடு போகும்போது நினத்துக்கொள்கிறார்.

குமாரபுரம்  ஸ்டேஷன், ஸ்டேஷன் மாஸ்டரின் தர்க்கங்கள், வேப்பம்பூ மணத்துடன் வீசிய காற்று, கரிசல் மண் மணமும் உயிரும் கொடுப்பது,  ஹோட்டல்காரரின் தர்ம குணம், படிப்புக்கு அவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் கொடுத்த விளக்கம், கிராமத் தலைமையாசிரியர் தந்தையைப்போல் சிறுவர்களை நடத்தியது, டால்ஸ்டாயை ‘டோல்ஸ்டோய்’ என்று வாசித்த ‘அறிவு’, ஏழைப் போர்ட்டரின் விருந்துபசார அழைப்பு  இப்படி,  எல்லாமே அவருக்கு ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தன. இருபது நிமிஷ ரயில் பிரயாணத்தில், இருபது வருஷங்கள் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாத எத்தனையோ அரிய விஷயங்களைத் தெரிந்துகொண்டது போன்ற  ஆனந்தப் பரவசம் ..  கிராமத்து ஹெட்மாஸ்டரையும், ஹோட்டல் முதலாளியையும், போர்ட்டரையும்விடப் பெரிய வாத்தியார்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்று அவருக்கு ஒரு நிமிடம் தோன்றியது. அவர்களிடம் படிக்காத படிப்பையா இந்தச் சிறுவர்கள் இனிமேல் படிக்கப் போகிறார்கள் என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். ‘குமாரபுரம் ஸ்டேஷனுக்கு பிரயாணிகள் வராததைவிடப் பெரிய கேலிக்கூத்து, மேற்படிப்பிற்காக இவர்கள் வருவது! அந்த ஸ்டேஷனுக்காவது தண்ணீர்ப்பந்தல் என்ற மதிப்பு உண்டு ஆனால்…

அந்தச் சிறுவர்கள் சேர வந்திருந்த பள்ளிக்கூடத்தில் அவர்களுக்கு இடம் கிடைப்பதும் அந்தப்பள்ளியில் பரிட்சை வைத்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும் ஹெட் மாஸ்டர், அந்த சுப்பராம ஐயர்தான் என்று கதை முடிகிறது.

*****

பலராலும் குறிப்பிடப்படும் இவரது கதைகள்: அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், பேதமை, தெய்வம் பிறந்தது, காற்று,  தம்பி ராமையா, இருவர் கண்ட ஒரே கனவு, பெரிய மனுசி.

இணையத்தில் கிடைக்கும் சில கதைகள்

அன்பளிப்பு,   இருவர் கண்ட ஒரே கனவு , தியாகம்          

  எஸ் கே என்

படைப்பாளி ஆதவன் – (எஸ் கே என்)

ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் 

1942 ஆம் ஆண்டில் கல்லிடைக்குறிச்சியில் பிறந்த  கே எஸ் சுந்தரம் (ஆதவன்) இந்திய இரயில்வேயிலும், ‘நேஷனல் புக் டிரஸ்டின்’  தமிழ்ப் பிரிவில் துணையாசிரியராக தில்லியிலும்  பெங்களூரிலும்  பணியாற்றியவர். 1987 ல் சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக  வழங்கப்பட்டது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யா உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

“1960, 70களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதைக்  கழித்த, படித்த மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை அபிலாஷைகளையும், சோகங்களையும் நிராசைகளையும் ஆதவன் போல யாரும் தமிழில் பிரதிபலிக்க முடிந்ததில்லை” என்கிறார் திரு அசோகமித்திரன்.

அவர் சொற்களிலேயே ஏன் எழுதுகிறேன் என்பதைப்பற்றி :

“எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவேதான் நான் எழுதுகிறேன். சாப்பிடாமல் இருந்து பார்த்தேன் முடிந்தது; காதலித்தவளை மறக்க முயன்றேன், முடிந்தது. ஆனால், எழுதாமலிருக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.”

தன் எழுத்துக்கள் குறித்து

‘நானும் என் எழுத்தும்’ என்று சொல்லிக் கொள்ள முற்படும்போது, இந்தச் சொற்றொடரில் பெருமையுடன் கூடவே ஓர் ஏளனத்தின் சாயலும் கலந்து தொனிப்பதாக எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது – ‘இவனும் இவன் மூஞ்சியும்’ என்று சொல்வதைப் போல. வேறு சிலரும் இதே விதமான அபிப்ராயந்தான் கொண்டிருக்கிறார்களென்பதை நான் அறிவேன் – என் மூஞ்சியைப் பற்றியும், என் எழுத்தைப் பற்றியும். இப்படி ஒரு பிரகிருதியா! இப்படி ஒரு எழுத்தா! என்று பரிகாசத்துடன் சிரித்துக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கெடுப்பானேனென்று, பல சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன். “யூ ஆர் ரைட், ஆஸ் யூ ஸே – இந்த – என்ன சொன்னீர்கள்?”

 

சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞனான ராமசேஷனின் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் பதிவாகும் “என்பெயர் ராமசேஷன்” இவரது தலை சிறந்த படைப்பு என்று அறியப்படுகிறது. இந்தப் புதினத்தின்  ரஷ்ய மொழியாக்கம் இலட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனை ஆகியது.

இந்தியத் தலைநகரின் மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு மக்களின்  வாழ்க்கைப் போக்கு, மன ஓட்டங்கள் அதிகார வர்க்கம். மாணவர் உலகம், பத்திரிகை உலகம், அரசியல் உலகம், கலை உலகம், விஞ்ஞான உலகம், தொழிலாளர் உலகம் ஆகிய சூழலில் படைக்கப்பட்ட “காகித மலர்கள்” மற்றொமொரு சிறந்த புதினம்.

‘இண்டர்வியூ’, ‘அப்பர் பெர்த்’, ‘தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு’, ‘ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்’, ‘புதுமைப்பித்தனின் துரோகம்’,  ‘சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ ஆகியவை  இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைகளில் சில.

சுசீ என்றழைக்கப்படும் பள்ளியாசிரியை சுசீலா, மற்றொரு ஆசிரியையான மிஸ் டாமினிக் பற்றி சொல்லும் இவரது ‘சினேகிதிகள்’ சிறுகதை

“மிஸ் டாமினிக் தன்னைவிட இருபது ஆண்டுகள் ஜூனியரான என்னைப் பார்த்து பொறமைப்படுகிற ஒரு காலமும் வரும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை”

என்று தொடங்குகிறது

வேலைக்கான நேர்முகத்தேர்விற்கு வந்த அன்றே மிஸ். டாமினிக் தான் பிரின்சிபால் அறைக்கு வழி சொல்கிறாள். நேர்முகத்தேர்வின் குழுவில் அவளும் இருக்கிறாள். கேள்விகள் கேட்டதெல்லாம் பிரின்சிபால் அகதா மட்டுமே.

வேலைக்குச் சேர்ந்தபிறகு ஆறாம் வகுப்பிற்குக் கணக்குப் பாடம் எடுப்பது  சுசீலாவிற்குக் கிடைக்கவும் மிஸ் டாமினிக் தான் காரணம் என்று பேசிக்கொண்டார்கள். ‘மிடில்’  வகுப்புகளுக்குக் கணக்கு எடுப்பது மிஸ் டாமினிக்கின் ஏகபோக உரிமையாம்.

டாமினிக்கும் சுசீலாவும் சிநேகிதிகள் ஆகிவிடுகிறார்கள். கொண்டு வரும் மதிய உணவை மிஸ் டாமினிக் வீட்டிற்குச் சென்று சாப்பிடும் அளவிற்குப் பழகிவிடுகிறார்கள். அகதா பிரின்சிபாலாக இருந்தவரை டைம் டேபிள் வாங்குதல், எல்லா வகுப்பு பிராகரஸ் கார்டுகளை மேற்பார்வையிடுதல், பார்ட்டிகளோ சுற்றுலாக்களோ ஏற்பாடு செய்தல் என்று பல பொறுப்புகள்  மிஸ் டாமினிக் வசம் இருந்தன. ப்ரின்சிபாலுடன் டாமினிக் டீ சாப்பிடும்போது சுசீலாவும் பல சமயம் இருப்பாள்.

வெவ்வேறு ஆசிரியைகளின் பலவீனங்கள், வகுப்புகளில் நடந்த தவறுகள், ரகளைகள், போட்டிகள், பொறாமைகள் முணுமுணுப்புகள்  எல்லாம் பற்றி பிரின்சிபாலுக்கு  மிஸ் டாமினிக் மூலமாகத் தகவல் கிடைத்துவிடும். யாரவது லீவு  போட்டால் அதை எடுக்க மிஸ் டாமினிக்  வந்துவிடுவாள். நோட்புக்குகளை பரிசீலித்து அதிலுள்ள தவறுகளை பிரின்சிபாலுக்கு ரிப்போர்ட் செய்துவிடுவாள்.

டாமினிக்குடன் நல்ல உறவுகளைப் பேணிவர ஒவ்வொரு டீச்சரும் பாடுபட்டாள். அதே சமயத்தில் அவளுக்கு மிக நெருக்கமாகச் சென்றால் தங்களைப் பற்றி- தங்கள் குறைபாடுகளைப் பற்றி – அவளுக்குத் தெரிந்து விடுமோ என்று பயந்துகொண்டு சற்று விலகியே இருக்கவும் செய்தார்கள். என் ஒருத்தியிடம் மட்டும் டாமினிக் காட்டிய   அன்பும் பரிவும் அவர்களுடைய  பொறாமையைக் கிளப்பிவிட்டதில் ஆச்சரியமில்லை. ஒற்று வேலை செய்வதிலும், தங்களைப் பற்றி பிரின்சிபாலிடம் கோள் மூட்டி விடுவதிலும் நானும் டாமினிக்குக்கு உடந்தை என்றும் சிலர் நினைத்தார்கள்.

சிலர் டாமினிக்கைப் பற்றி, தனியாக இருக்கிறாளா, ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை, காதல் தோல்வியா,   சகோதர சகோதரிகள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் இவள் வாயைக் கிண்டுவார்கள். இவள் பதிலளிக்காமல் நழுவிவிடுவாள்.

அகதா ஓய்வுபெற்று பெண்டிக்டா பிரின்சிபாலாக வந்தும் டாமினிக்கின் பொறுப்புகளிலோ, அதிகாரத்திலோ எந்த குறைவும் ஏற்படவில்லை.

பிரின்சிபாலுக்குத் தளபதியாக, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பயமூட்டுபவளாக இருந்த டாமினிக் சுசீலாவிடம்  மட்டும் செடி கொடிகள், நாய்கள், உலக நடப்புகள், கல்விமுறையில் சீர்திருத்தங்கள் என்று அரிய விஷயங்களைப் பற்றி விவாதிப்பவளாக இருந்தது யாருக்குத் தெரியும்.

டாமினிக்கின் தோழமை காரணமாக ப்ரின்சிபலின் அந்தரங்க வட்டத்தில் தானும் அடக்கம் என்ற பிரமையில் திளைத்து வந்தாள்.

பள்ளி அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த பெண் பணம் கையாடிவிட்டதால் அவளை நீக்கிவிட்டார்கள். அலுவலகத்தை நிர்வகிக்க ஒரு நம்பகமான ஆள் தேவைப்பட்டது. பிரின்சிபால் பெனடிக்டாவும் டாமினிக்கும் வேறு  ஆளை நியமிக்கும் வரை அந்தப் பொறுப்பை சுசீலாவை ஏற்க வைக்கிறார்கள். நாமும் அதிகார வட்டத்தில் ஒரு நபர் என்னும் பிரமையில் அப்பொறுப்பை ஏற்று சுசீலா என்னும்  ‘டீச்சர்’,  ‘கிளார்க்’ ஆகிவிடுகிறாள். புதுப் பொறுப்பில் வாசுதேவன் என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது.  சுசீலாவைச் சந்திக்க வந்த வாசுதேவனை, பள்ளியின் கணக்கு வழக்குகள் பரிசீலிக்க பெனடிக்டா கேட்டுக்கொள்கிறாள்.  சுசீலா – வாசுதேவன் நட்பு  திருமணத்தில் முடிகிறது.

திரும்பவும் குமாஸ்தாவிருந்து ஆசிரியை ஆகலாம் என்றால், “அந்த லைனிலிருந்து தொடர்பு அறுந்துபோய் இவ்வளவு நாளாகிவிட்டதே!” என்று சொல்லிவிடுகிறாள், பிரின்சிபால் பெனடிக்டா

பெனடிக்டா ஓய்வுபெற்றதும் மரியம் என்னும் புது பிரின்சிபால் பொறுப்பேற்கிறார். அவருக்கு டாமினிக்கின் வழிமுறைகள் பிடிக்கவில்லை. தன் வழி முறைகளை நியாயப்படுத்த  முயன்ற டாமினிக்கிடம் “உங்கள் கருத்துக்களை ஆதரிக்கும் வேறு பள்ளிக்கூடத்தில் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம்” என்கிறார் பிரின்சிபால்.

ஸ்டாஃப் ரூமில் இருந்தாலே உரத்த குரலும் சிரிப்புமாக அந்த அறையையே கலகலக்க வைக்கும் மிஸ் டாமினிக், அமைதியாகி விடுகிறாள். அரசியாக இருந்தவள், ஒரே நாளில் சாதாரணப் பிரஜை ஆனாள். சுசீலாவிற்கு அவள் மீது அனுதாபமாக இருந்தது.

டாமினிக் இன்னும் ஒரு மாதத்தில் ஒய்வு பெற இருக்கையில், காசு வசூலித்து ஸ்வீட் காரம் காப்பியுடன், தனது வீட்டிலேயே ஒரு ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்கிறாள் சுசீலா.

தேநீர் விருந்து பெரும் வெற்றி. எல்லோரும் கலைந்துபோனதும் சுசீலாவின் கையைப் பிடித்துக்கொண்டு உரக்க அழுகிறாள்.

“நான் உனக்கு அநீதி இழைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு சுசீ” என்னை மன்னித்துவிடு.”

“மிஸ் டாமினிக் ! எனக்குப் புரியவில்லை.”

“நான் உன்னைப் பார்த்துப் பொறாமைப் பட்டேன்”

“நான் அவ்வளவு அழகாகவா இருக்கிறேன்?”

“சுசீ .. நீ ஆறாம் வகுப்பு டீச்சராக இருந்தபோது – உன் படிப்பு சொல்லிக் கொடுக்கும் திறனைப் பலர் புகழ்ந்தார்கள். குறிப்பாக, கணக்குச் சொல்லித்தருவதை… என்னால் அதைத் தாங்க முடியவில்லை சுசீ.. நான்தான் கணக்குச் சொல்லித்தருவதில் எக்ஸ்பர்ட் என்று நினைத்திருந்தேன்.”

“நீங்கள்…. நிஜமாக … “

“நீ ட்யூஷன் சொல்லித்தருவாயா என்றுகூடச் சில பெற்றோர் பெனடிக்டாவிடம் விசாரித்தார்கள். எனக்கு பயமாகப் போய்விட்டது, சுசீ “

“பயமா? எதற்காக?”

“நாமிருவரும் குடியிருந்தது  ஒரே ஏரியாவில். எனக்கு வர வேண்டிய ட்யூஷன் கிராக்கிகளை நீ பறித்துக் கொண்டு விடுவாயோ என்று பயமாயிருந்தது. …”

ட்யூஷனில் தனக்குப் போட்டியாக சுசீ வரக்கூடாது என்பதற்காகவே, அவளை ஆபீசில் போடும்படி பிரின்சிபாலிடம் சிபாரிசு செய்ததாகவும் கூறுகிறாள் டாமினிக். சுசீலா அதிர்ச்சியில் துவண்டு போகிறாள்.

“என்னை மன்னித்துவிடு சுசீ! என்னை மன்னித்துவிடு!” என்று அவள் மீண்டும் அரற்றினாள். “உன்னைப்போல நானும் யாரவது ஓர் இளைஞனுடன் சமரசம் செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் நான் மிகவும் கர்வம் பிடித்தவள். பணியாதவள். எல்லா ஆண்களையும் என்னிடமிருந்து விரட்டிவிட்டது. ஒரு கட்டத்திற்குப் பிறகு யாருமே மிச்சமில்லை. நான் மேலும் என் பிடிவாதத்தில் சிறைப்பட்டு, வக்கிரமான சுயநலவாதியாகி, என் உறவினர்களையும் விரோதித்துக் கொண்டு, கடைசியில் நான் அன்போடு நேசித்த ஒரு ஜீவனுக்குக்கூட துரோகம் பண்ணுமளவிற்கு..  “

தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மீது தனது  மதிப்பீடுகள் யாவும் பறிக்கப்பட்டு, கடந்த பத்தாண்டு வாழ்க்கையும் பயனற்றதாக உணர்ந்து, மற்றவர்களை நம்புவதையே கேள்விக்குறியாக்கி…

மிஸ் டாமினிக்!  நீ என் மனதில் சந்தேக விதைகளைத் தூவிவிட்டாய். அவநம்பிக்கையுள்ளவளாக்கி விட்டாய். இதுதான் நீ செய்த மிகப் பெரிய குற்றம், டாமினிக் இனி எந்த ஒரு  ஜீவனையும் முழு மனதாக ஒப்புக்கொள்ளவோ, அதன் மீது நம்பிக்கை வைக்கவோ.. ஓ காட்!

ஒய்வு பெற்றபிறகு மிஸ் டாமினிக் இதே நகரின் புறநகர்ப் பகுதி ஒன்றில்தான் வசித்து வருவதாகக் கேள்வி.  யாரோ அட்ரஸ் கூடக் கொடுத்தார்கள். ஆனால் நான் அவளைப் பார்க்கப் போகவில்லை. பார்க்க வேண்டுமென்று தோன்ற வில்லை.

என்று முடிகிறது கதை

இணையத்தில் கிடைக்கும் இவரது சில கதைகள்.

இண்டர்வியூ          புதுமைப்பித்தனின் துரோகம்      முதலில் இரவு வரும்

 

வானத்தைத் தொட்டவர்:

வானத்தைத் தொட்டவர்: சாகித்திய அகாடமி விருது பெற்ற கௌரி கிருபானந்தன்

கௌரி கிருபானந்தன் எழுதிய “மீட்சி” என்ற தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்திற்கு 2015 வருடத்திற்கானசாகித்திய அகாடமியின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது கிடைத்திருக்கிறது.

Meetchi
“மீட்சி” என்பது 2015 வருட சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ள, “விமுக்தா என்ற பெயரில் திருமதி ஓல்கா” எழுதிய தெலுங்கு நாவலின் மொழிபெயர்ப்புப் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விமுக்தா என்ற கதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் ராமாயண இதிகாசத்தின் பின்னணியில் சீதை சூத்திரதாரியாக சொல்லப்பட்டவை.

எண்டமூரி வீரேந்தர நாத் மற்றும் யத்தன்பூடி சுசிலா ராணி போன்ற எழுத்தாளர்களின் எண்ணற்ற தெலுங்கு நாவல்களை கௌரி கிருபானந்தன் சுவை படத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பில் உயிரோட்டம் இருக்கும். தேன் போல் இனிக்கும்.

gowri.kirubanandan2
விருதைப் பற்றி அவருக்குத் தெரிந்த போது அவர் அமெரிக்காவில் இருந்தார். “ நான் எதிர்பாராதது. எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.
கௌரி.கிருபானந்தன் சிகரத்தைத் தாண்டி வானத்தைத் தொட்டுவிட்டார். அவர் இன்னும் நிறைய விருதுகள் பெற வேண்டும்,

என் . ஸ்ரீதரன் அவர்கள் வல்லமை என்ற வலைத் தளத்தில் இப்படிக் குறிப்பீட்டிருக்கிறார். மிகவும் பொருத்தமானது. (நன்றி)