Category Archives: புத்தகம்
வானத்தைத் தொட்டவர்:
வானத்தைத் தொட்டவர்: சாகித்திய அகாடமி விருது பெற்ற கௌரி கிருபானந்தன்
கௌரி கிருபானந்தன் எழுதிய “மீட்சி” என்ற தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்திற்கு 2015 வருடத்திற்கானசாகித்திய அகாடமியின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது கிடைத்திருக்கிறது.
“மீட்சி” என்பது 2015 வருட சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ள, “விமுக்தா என்ற பெயரில் திருமதி ஓல்கா” எழுதிய தெலுங்கு நாவலின் மொழிபெயர்ப்புப் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.
விமுக்தா என்ற கதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் ராமாயண இதிகாசத்தின் பின்னணியில் சீதை சூத்திரதாரியாக சொல்லப்பட்டவை.
எண்டமூரி வீரேந்தர நாத் மற்றும் யத்தன்பூடி சுசிலா ராணி போன்ற எழுத்தாளர்களின் எண்ணற்ற தெலுங்கு நாவல்களை கௌரி கிருபானந்தன் சுவை படத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பில் உயிரோட்டம் இருக்கும். தேன் போல் இனிக்கும்.
விருதைப் பற்றி அவருக்குத் தெரிந்த போது அவர் அமெரிக்காவில் இருந்தார். “ நான் எதிர்பாராதது. எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.
கௌரி.கிருபானந்தன் சிகரத்தைத் தாண்டி வானத்தைத் தொட்டுவிட்டார். அவர் இன்னும் நிறைய விருதுகள் பெற வேண்டும்,
என் . ஸ்ரீதரன் அவர்கள் வல்லமை என்ற வலைத் தளத்தில் இப்படிக் குறிப்பீட்டிருக்கிறார். மிகவும் பொருத்தமானது. (நன்றி)
காதலர் தினத்தில் படிக்க வேண்டிய புத்தகம்
ஒரே ஒரு புத்தகம் எழுதி உலகப் பிரபலம் ஆன ஒருவர் எழுதிய வரிகள் இவை! யார் என்று தெரிந்தால் இவரா இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று ஆச்சரியப் படுவீர்கள் ? அவர் எழுதியதைப் புரிகிற தமிழில் மாற்றம் செய்து தரப்பட்டுள்ளது.
அவனுடைய காதல் :
இந்தப் பெண்ணின் திமிர்ந்த மார்புக்கு மேல் போட்டுள்ள துப்பட்டா யானையின் தலையில் கட்டிய பட்டைப் போல திண்ணென்று இருக்கிறதே!
சரக்கு அடிக்கும் போது வர்ற கிக் , செக்ஸில் வரும் கிக் இவை ரெண்டைத் தவிர வேற கிக் உலகத்திலே இல்லை !
அவளைப் பாக்கணும்; கேக்கணும்; தின்னணும், முகரணும், தழுவணும். என்னோட கண் காது வாய் மூக்கு உடம்பு எல்லாத்துக்கும் ஒரே இடத்தில சொகம் இருக்குன்னா அது அவ தான்.
சாமி கோயில் சொர்க்கம் அமிர்தம் எதுவும் தேவையில்லை அவளை நெஞ்சோடு நெஞ்சா இறுக்கக் கட்டிக்கிட்டா போதும்.
காத்து கூட ரெண்டு பேருக்கும் நடுவில போகாத அளவுக்கு அவளைத் தழுவி இறுக்கிக் கட்டிக்கும் போது வர்ற சொகம் அடடா!
இவ உடம்பு நான் எப்பக் கேட்டாலும் கேக்கறதையெல்லாம் தர்ற நேயர் விருப்பம் மாதிரி இருக்கே !
ஒரே வார்த்தையில சொல்லப்போனா இவ ஒரு புத்தகம் மாதிரி. அவசரம் அவசரமா படிக்கக் கூடாது. ஒவ்வொரு வரியையும் அனுபவிச்சுப் படிக்கணும்.
இவள் பாதங்களைத் தொட்டுத் தடவிப் பார்த்தேன். அடடா அது கூட எவ்வளவு சுகமா பூப்போல இருக்கு !
இவளுடைய முத்தைப் போன்ற பற்களில் ஊறிய நீர் தேன் கலந்த பாலை விட இனிக்கிறதே !
அவளின் ஏக்கங்கள் :
என் ஆளு எப்படிப் பட்டவன் தெரியுமா? அவனைப் பாத்துட்டு நான் கண்ணை இறுக்க மூடினேன்னாக் கூடக் கவலைப்படமாட்டான். ஏன்னா அவன் என் கண்ணுக்குள்ளே குஷியா (குளிச்சுக்கிட்டு) இருப்பான்.
எனக்கு சூடான காபி வேண்டாம். ஏன்னா என் நெஞ்சுக்குள்ளே கொஞ்சிக்கிட்டிருக்கிற அவனை அது சுட்டிடும் .
சே ! ! அவன் வராத வரைக்கும் வருவான் வருவான் என்கிற நினைப்பே சந்தோஷமாயிருந்துச்சு. இப்போ அவனைக் கட்டிக்கிட்டு படுத்திருக்கும் போது அவன் போயிடுவானோன்னு கவலைப்படுது! என்ன மனசுடி இது!
சுகம் தர்ர என் உடம்பையே இப்படிக் கசக்கிப் பிழியரானே, வில்லன் எவனாவது கிடைச்சான்னா அவன் உடம்பை எப்படிக் கசக்கிப் பிழிவான் ?
ஆசை என்கிறது பெரிய கடலா இருக்கலாம். ஆனா படகு மாதிரி நானும், துடுப்பு மாதிரி அவனும் இருந்தா எவ்வளவு தூரம் வேணுமுன்னாலும் போகலாம்.
என் கண்ணுக்கு அறிவே இல்லேடி! இந்தக் கண் தானே அவனை எனக்குக் காட்டிச்சு . இப்போ அவன் வரலையேன்னு அது அழுவுதே! நான் என்னடி செய்வேன் ?
நான் எத்தனை முறை கோபித்துக் கொண்டாலும் அவன் என்னிடம் கோபித்துக் கொள்வதேயில்லை. இது தான் அவனோட சிறந்த பரிசு.
முழுப் புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா?
படியுங்கள் ! திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். அதில் காமத்துப் பாலில் வரும் பாடல்களின் அர்த்தம் இவை.
பாடல் எண்கள் : : 1087 1090 1101 1103 1108 1105 1110
1126 1128 1151 1165 1164 1171 1208
காதல் – காமம் – கனிரசமே !
கண்ணில் பட்ட ஒரு சுவாரசியமான, பழைய கட்டுரை ( நன்றி : சிலிக்கான் ஷெல்ஃப் )
இந்திய பீனல் கோட் சட்டத்தின்படி முதலில் தடை செய்யப்பட்ட புத்தகம் ஒரு தெலுங்குப் புத்தகமாம். ராதிகா சந்த்வனமு என்று பேர். தஞ்சை மராத்திய அரசர் பிரதாப் சிங்கின் அவை தாசி முத்துப்பழனி பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதியது. கிருஷ்ணன் மீது கோபம் கொண்ட ராதாவை சமாதானப்படுத்தும் கிருஷ்ணன் என்பதுதான் புத்தகத்தின் தளம். ராதா கலவியை முன்னின்று நடத்துவது போல வருகிறதாம்.
. பு. வீரேசலிங்கம் பந்துலு என்பவர் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. பந்துலு, முத்துப்பழனியின் நடையைப் புகழ்ந்தாலும் இதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி, ‘தேவடியாள்’ எழுதியது இப்படித்தான் இருக்கும் என்று எச்சரிக்கை கொடுத்திருக்கிறாராம். பிறகு மீண்டும் வெங்கடநரசுஎன்பவர் 1907-இல் வெளியிட்டிருக்கிறார். 1910-இல் பெங்களூர் நாகரத்தினம்மா – திருவையாறு தியாகராஜ உற்சவத்தின் இன்றைய வடிவம் உருவானதில் பெரும்பங்கு வகித்தவர் – திருத்திய பதிப்பை வெளியிட்டிருக்கிறார். நாகரத்னம்மா மிக சுவாரசியமான ஒரு ஆளுமைப் போராளி.
நாகரத்னம்மா, ஆண்கள் எழுதிய அடல்ட்ஸ் ஒன்லி புத்தகங்களை கண்டுகொள்ளாத பந்துலு முத்துப்பழனியை இப்படிச் சித்தரிப்பதைக் கேலி செய்திருக்கிறார். பெரிய சர்ச்சை கிளம்பி, 1912-இல் புத்தகம் தடை செய்யப்பட்டிருக்கிறது.
35 வருஷம் கழித்து ஒன்றிணைந்த சென்னை மாகாணத்தில் முதல்வராக பிரகாசம் இருந்தபோது தடை நீக்கப்பட்டிருக்கிறது. நல்ல வேளையாக அதைப் பார்க்க நாகரத்னம்மாவும் அப்போது உயிரோடு இருந்திருக்கிறார். சுபம்!
மூத்த தமிழ் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘சம்பங்கிபுரத்துப் பொம்பளைகள்’ என்ற ஒரு சிருங்கார ரசம் மிகுந்த நாவலைப் பல வருடம் முன்னால் எழுதினார். ஆனால் அதைப் பிரசுரிக்கத் துணிவின்றிக் கையெழுத்துப் பிரதியாகவே பல காலம் பெட்டிக்குள் வைத்திருந்தார். அந்தக் கையெழுத்துப் பிரதியைப் படிக்க வாய்ப்புக் கிடைத்த (லேசில் கிடைக்காத வாய்ப்பு அது) காலம் சென்ற எழுத்தாள நண்பர் தஞ்சை பிரகாஷ், நாவலைப் பற்றி உற்சாகமாகச் சொன்னது நினைவு வருகிறது. அது பிரசுரமாகி இருந்தால், தமிழில் இன்னொரு முக்கியமான சோதனை முயற்சியாயிருந்திருக்கும்.
சுஜாதா எழுதியதாகக் கூறப்படும் மெக்ஸிகோ சலவைக்காரி சமாசாரத்தையும் இந்த லிஸ்டில் சேர்க்கலாம். மேலும் சுஜாதா ,தமிழில் வெளிவந்த இன்பக்கதைகளைப் ( போர்னோ ) பற்றி எழுதியிருக்கிறார்.
முத்தம் , பருவம், போன்ற ஸ்டேபிள் போட்ட பத்திரிக்கைகள் , சரோஜாதேவி கதைகள், தமிழ்நாடனின் காம ரூபம், போன்றவை இந்தப் பட்டியலில் வரும்.
அருணகிரி நாதரின் சில பாடல்கள், கம்பராமாயணத்தில் சிலபாடல்கள் , சங்க இலக்கியங்களில் சில வரிகள், ஏன் நாலாயிரத்துத் திவ்யப் பிரபந்தத்தில் சில வரிகள் எல்லாம் இன்பச் சுவையைத் தூண்டும் பாடல்கள் தான்.
தமிழ் மீது பற்றுள்ள அண்ணாதுரையும் மற்ற இலக்கியங்களில் இருக்கும் காம ரசத்தை விட்டுக் கம்பராமாயணத்தில் இருக்கும் வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு கம்பரசம் என்ற இருபாகம் கொண்ட கம்பரசம் என்ற புத்தகத்தை எழுதி ‘கம்பராமாயணம் ஒரு ஆபாசக் களஞ்சியம்’ என்று வர்ணித்தார்.
அதையே கண்ணதாசன் ‘நான் ரசித்த வர்ணனைகள்’ என்ற தலைப்பில் கம்பனின் காவிய ரசத்தை அனுபவித்து ரசிக்கிறார்.
‘கூளப்ப நாயக்கன் காதல்’ ஐம்பது வருடம் முன்னால் வரை கூட ஆபாசப் புத்தகம் என்று தடை செய்யப்பட்டிருந்ததாகச் சொல்வார்கள்.
கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது என்ற இரண்டு நூற்கள் பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய தூது இலக்கியங்களாகும். இந்தஇரண்டு நூற்களையும் இயற்றியவர் சுப்ரதீபக் கவிராயர்.
விறலிவிடு தூதில் பொதுவாகக் காணப்படும் கதை இதுதான்: உயர்குடிப் பிறந்தஆண்மக்கள் காமம் துய்க்க தாசியை நாடுவதும், இதன் மூலம் பொருள் இழத்தலும், நாளடைவில் தாசியால் அவமதிக்கப்பட்டு அவளைவிட்டுவெளியேறுதலும், இறுதியில் விறலியைத் தூதுவிட்டு, குடும்பத்துடன் இணைந்து மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்தலும் ஆகும். எனவே விறலி விடு தூது இலக்கியங்கள் எல்லாம் கிளுகிளுப்பான சிற்றின்ப வருணனையுடன் கூடிய பாடல்களுடன் கதை சொல்லப்படுகிறது. இறுதியில் நல்லின்பம் பெற ஆண்மக்களுக்கு அறிவுறுத்துவது. என்றாலும் புலவரின் நோக்கம் சிற்றின்பம் பற்றி விலாவாரியாகச் சொல்வதுதான்.
கூளப்ப நாயக்கன் காதல், விறலி விடு தூது இரண்டுமே விரகம், காமம், காதல், எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து இயற்றப்பட்டுள்ளன . பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாசிப் பெண்களின் ஆடையணிகளான ரவிக்கை, பொற்சரிகை, கிண்ண முலைக் கச்சு, சந்திர காந்தக் கச்சு என்பது பற்றியெல்லாம் விலாவாரியாகத் தெரியவருகிறது.
இப்படிப்பட்ட நூல்களுக்கு அந்தக்காலத்திலேயே பெரிய வாசகர் வட்டம் இருந்திருக்கிறது. சிற்றின்பப் பிரியர்களான சிற்றரசர்களும், பாளையக்காரர்களும் ஒன்றாகக் கூடி கேட்டுச் சுவைப்பார்களாம். காமம் பற்றிப் பேசினாலும் இவ்விலக்கியங்களில் வரலாறு, பண்பாடு, கலை மற்றும் அரசியல் பற்றிய அரிய செய்திகள் காணக் கிடைக்கின்றன.
சுப்பிரதீபக் கவிராயர்
மதுரைச் சுப்பிரதீபக் கவிராயர் வீரமாமுனிவருக்குத் தமிழ் கற்பித்தவர்.வீரமாமுனிவர் தூண்டுதல் காரணமாகக் கிறித்தவரானார் என்கிறார்கள்.வீரமாமுனிவர் இயற்றியதாகக் கருதப்படும் தேம்பாவணி என்னும் காப்பியம் ,வீரமாமுனிவர் கதை சொல்லச்சொல்ல சுப்பிரதீபக் கவிராயர் பாடல்களை இயற்றியதாக மு. அருணாசலம் என்ற இலக்கிய வரலாற்றறிஞர் கருதுகிறார்.
நிலக்கோட்டை என்பது அப்போது (தற்போதைய அமைவிடம் திண்டுக்கல் மாவட்டம்) ஒரு படைநிலையாகவே அமைக்கப்பட்டது. அச்சமயம் கூளப்ப நாயக்கரின் தந்தை சிந்தமநாயக்கர், நிலக்கோட்டைப் பாளையக்காரராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மதுரை திருமலை நாயக்கரின் வம்சாவழியைச் சார்ந்தவர். வடக்கில்திண்டுக்கல்லிருந்து மேற்கே சித்தையன் கோட்டைவரை பரவியிருந்த 108கிராமங்களை உள்ளடக்கிய நிலக்கோட்டை பாளையத்தைத் திறம்பட நிர்வகித்துவந்தார். சிந்தமநாயக்கரின் மகன்தான் கூளப்ப நாயக்கர். நாளடைவில் நாயக்கர்ஆட்சி முடிந்து ஆற்காடு நவாப்களின் ஆட்சி இப்பகுதியில் பரவியது.
ஒரு சமயம் கூளப்ப நாயக்கர் தன் பரிவாரங்கள் புடைசூழ நிலக்கோட்டைக்கு அருகில் உள்ள பன்றிமலைப் பகுதிக்கு வேட்டையாடப் போயிருக்கிறார்.வேட்டைக்குப் போன இடத்தில் நவரத்தின மாலை என்ற மலை சாதிப் பெண்ணைக் கண்டார்; கண்டதும் காதல் பற்றிக்கொண்டது. நாயக்கர் மலை சாதிப் பெண்ணுடன் காதல் முற்றி காமம் ததும்ப வாழ்ந்திருக்கிறார். இதற்கிடையே சிந்தமநாயக்கரிடமிருந்து ஏதோ அவசரச் செய்தி வரவே கூளப்ப நாயக்கர் நவரத்தின மாலையைப் பிரிந்து நிலக்கோட்டை திரும்பியிருக்கிறார். நாளடைவில் நவரத்தின மாலை பற்றிய பிரிவால் மனம் வாடி மெலிந்து போனார் நாயக்கர். பிறகு என்ன நடந்தாலும் சரி என்று துணிந்து பண்றிமலைக்குப் போய் நவரத்தின மாலையைச் சந்தித்து ஆறுதல் கூறி அப்பெண்ணை நிலக்கோட்டைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டது இக்கதையின் உச்ச கட்டம்.
கூளப்ப நாயக்கரின் பிற்கால வாழ்க்கை மிகவும் சோகமானது. நிலக்கோட்டை ஜாமீன்ஆங்கிலேயர் வசம் போயிற்று. அவரும் கழைக்கூத்தாடி வேஷம் தரித்துத் தப்பிச் சென்றாராம். ‘எங்கள் ஜமீன்தார் ஆங்கிலேயர்களுக்குப் பயந்துகொண்டு இப்படிக் கழைக்கூத்தாடுவதா?’ என்று ஆங்கிலேயரிடம் போய், ”என் தலையை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்; எங்கள் ஜமீன்தாரை இப்படி அலைய விடாதீர்கள்” என்று கேட்டுக்கொள்ள, ஆங்கிலேயர்கள் நாயக்கரது செல்வாக்கைப் பார்த்து அசந்துபோய் அவரிடம் மீண்டும் ஜமீனை ஒப்படைத்தார்களாம்.
தூது இலக்கியங்களை, ‘விரக தாபத்தால் பலபடியாகப் புலம்பும் காமம் மிக்க கழி படர் கிளவி வகைகளுள் இதுவும் ஒன்று’ என்பார் மகாமகோபாத்யாய உ.வே. சாமிநாத ஐயர். எனவே இத்தகு தூதுகள் அன்று இயல்பாக விடப்பட்டுள்ளன.
விறலி விடு தூதுகள் யாவும் சிற்றின்பம் பேசி, நல்லின்பம் பேண அறிவுறுத்துவது. நோக்கம் சிற்றின்பம்தான் என்பது தெளிவு. நீலப்படங்கள், குறுந்தகடுகள் வரும் என எண்ணிக்கூட பார்த்திராத காலத்து காமச் சித்திரங்கள். நற்குடிப் பிறந்தார் காமம் துய்க்க தாசி வழிச் சேரல், பொருள் இழத்தல், அவமானப்பட்டு, தாசியால் துரத்தப்பட்டு, விறலியைத் தூதுவிட்டு, குடும்பத்தைச் சேர்ந்து மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்தல். ஒருவகையில் இஃதோர் சினிமா ஃபார்முலாதான். யாவும் ஒரே மாதிரியாக எழுதப் பெற்றுள்ளன. குறுமன்னர்களின், பாளையப்பட்டுக்காரர்களின் உள்வட்டத்து ஆண்கள் கூடியிருந்து கேட்டுச் சுவைப்பார்கள் போலும்.
விறலி என்பவள் யாழிசை, மிடற்றிசை, நாட்டியம் போன்ற கலைகளில் சிறந்த மதங்கி. கெட்டு அழிந்தபின், அவளை மனைவியிடம் தூது அனுப்புவது தான் இவற்றின் சாரம். பாலியல் குறிப்புகள், செயல்பாடுகள் பேசும் இலக்கிய வகை எனினும் பல பண்பாட்டு, வரலாற்றுக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
சவுளிக் கடை, ரவிக்கை, பொற் சரிகை, கிண்ண முலைக் கச்சு, சந்திர காந்தக் கச்சு, எனும் சொற்கள் புழங்குகின்றன. 1600 காலகட்டத்தில் தாசிப் பெண்களின் ஆடையணிகள் பல அறிகிறோம். வீரவாழிப் பட்டு, பொன்னெழுத்துச் சேலை, வீதி வாணச் சேலை, வண்ணத் தார்ச் சேலை, முத்து வண்ணச் சேலை, நாரண வர்ணச் சேலை, அருகு மணிச் சேலை, கஸ்தூரி கொடிச் சேலை, சரிகைச் சேலை, கம்பாவரித் துகில், கம்பிச்சேலை என பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.
காசு கொடுத்தால் யாருடனும் கூடலாம் என்பது தாசிகுலத் தர்மம். கிழத்தாசி, இளைய தாசிக்குக் கூறும் அறிவுரைகள் சில :
பெட்டிச் சுமை எடுக்கும் பேயனும் கைக்காசு தந்தால்
கட்டிச் சுகம் கொடுக்கக் கட்டளை காண்
முக்கொடி செம்பொன் முடிப்புக் கொடுத்தாலும்
கொக்கோக மார்க்கருடன் கூடாதே
இதில் கொக்கோக மார்க்கர் என்பது கலவி நுணுக்கங்களில் கற்றுத் துறை போகிய விற்பன்னர் என்று பொருள் படும்.
இலக்கியவாதிகள் பற்றியும் ஒரு எச்சரிக்கை உண்டு.
பொன் போலத் துதிக்கும் புலவரை நீயும் துதித்துப்
பின் போய் கும்பிட்டு அனுப்பிப் பின்னை வா
இலக்கியவாதிகளிடம் துட்டுப் பெயராது, வேண்டுமானால் ஒரு வெற்று வாழ்த்துக் கவிதைதான் கிடைக்கும் என்பதை 16-ம் நூற்றாண்டு தாசியும் தெரிந்து வைத்திருக்கிறாள்.
விரிவாக, இன்று பாலியல் விஞ்ஞானப் புத்தகங்கள் குறிப்பிடும் பல செய்திகளையும் நம் புலவர் பெருமக்கள் அறிந்திருந்தனர். பெண் லிங்கம், காமன் கவிகை, சந்திர நாடி எனவும், எட்டுவகையான ஆலிங்கனம் குறித்தும், நகக்குறி, பற்குறி, நாபிக்குறி பற்றியும், சுகக்குரல் என்பதும், சம்போக சுகம் எழத் தட்டுதல் என்ற தாடனம் நால்வகை பற்றியும் அறிய வேண்டுவோர் நேரடியாக வாசித்து அறிக. –
சேதுபதி விறலி விடு தூது
பத்தொன்பதாம் நூற்றாண்டில் முதுகுளத்தூர் சரவணப் பெருமாள் கவிராயர் இயற்றியது. பெரும்பாலும் அனைத்து விறலி விடு தூதுக்களும் அச்சு முறுக்குப் போன்ற வடிவம், தன்மை, அளவு, குணம். என்றாலும் சில பாடல் நயங்கள் வேறுபடுவதுண்டு. சில உவமைகள் அருமையாய்க் கண்படுவதுண்டு.
வாயில் பின் அடித்த புணர்ச்சிப் புத்தகங்கள் தமிழில் வருவதற்கு முன், கலவிப் புகைப்படங்கள் காணக் கிடைக்கும் முன்பு, கோயிற் சிற்பங்கள், ஓவியங்கள் மட்டுமே புணர்ச்சிக் காட்சிகளை அறிமுகப்படுத்திய காலத்தில் எழுந்த நூற்கள் இந்த வகையைச் சார்ந்தவை. இவற்றைத் தோற்கடிக்கும் பின் நவீனத்துவப் பிரதிகள் என்று பின் அடிக்காத பிரதிகள் தமிழில் உண்டு என்றாலும், அன்று இவை கிளர்ச்சியூட்டும் பனுவல்கள். தனித்த குழாங்களில் வாசித்து மகிழ்ந்த நூல்கள். –
இவ்விதம் மேனியில் பெண்கள் வரைவதைத் தொய்யில் எழுதுவது என்கின்றனர். இதனை சங்க இலக்கியம் பேசுகிறது. அம்பிகாபதிக் கோவை, பாடல் – 444, “தோளில் கரும்பு, முலையில் கொடி விடு தொய்யிலும்’ என்கிறது. மகளிர் தம் தோளிலும் கொங்கைகளிலும் கரும்பு வில் போன்றும் பூங்கொடி போன்றும் குங்குமக் குழம்பில் தொய்யில் எழுதி இருந்தனர் என்பது பொருள்
முத்தொள்ளாயிரத்தின் சிறப்பான வெண்பாக்களில் ஒன்று: கடற்கரை அல்லது ஆற்றங்கரை மணலில், தாழை மரப் புதர் நிழலில் அல்லது புன்னை மர நிழலில் அமர்ந்து, தலைவனைப் பிரிந்த தலைவி, ஆருடம் கணிக்கிறாள், தலைவனைக் கூடுவேனா, கூட மாட்டேனா என்று. ஆருடம் என்பது கண்களை மூடி, ஆட்காட்டி விரலால் மணலில் வட்டம் வரைவது. வட்டம் கூடினால் தலைவனைச் சேருவேன், கூடாவிட்டால் சேரமாட்டேன் என்பது கல்பனை. ஆனால் பாதி வட்டம் வரைந்த பிறகு, தலைவிக்கு ஐயம் எழுகிறது. ஒரு வேளை வட்டம்- கூடல் கூடாமற் போனால் என் செய என! எனவே கூடல் இழைப்பதைப் பாதியில் நிறுத்தி விடுகிறாள்:
‘கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப் பெருவேனேல் கூடு என்று – கூடல்
இழைப்பாள் போல் காட்டி இழையாது, இருக்கும்
பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து’ (முத்தொள்ளாயிரம் 20)
பெரிய குதிரைகள் பூட்டிய தேரில் சேர மன்னன பவனி வருகிறான். பவனி வரும் அரசனைப் பார்த்தால் மகளுக்கு காதல் நோய் உண்டாகி விடும் என்று தாய்மார்கள் கதவுகளை அடைக்கிறார்கள். உலா வரும் மன்னனைக் காண மகளிர் கதவைத் திறக்கிறார்கள். தாயார் அடைக்க, மகளிர் திறக்க, கதவின் குடுமி தேய்கிறது என்பது முத்தொள்ளாயிரம்
நன்றி: சொல்வனம்
நன்றி: சிக்கான் ஷெல்ஃப்
புத்தகச் சுருக்கம் : தீபக் சோப்ராவின் ” The Seven Spirituality Laws of Success “
ஆங்கிலத்தில் புத்தகச் சுருக்கம் என்று ஒன்று வெளியிடுவார்கள். பிரபல புத்தகங்களை எழுதிய ஆசிரியரையோ அல்லது வேறு பிரபலமானவரையோ வைத்து அந்தப் புத்தகத்தின் சாரத்தை 2/3 பக்கங்களில் வெளியிடுவார்கள். getabstract.com என்ற ஒரு பணம் கொடுத்துப் பார்க்கும் இணைய தளம் உள்ளது.
தமிழில் இது இன்னும் அவ்வளவாகப் .புழக்கத்தில் வரவில்லை.
அந்த வகையில் தீபக் சோப்ராவின் ” The Seven Spirituality Laws of Success ” என்ற புத்தகத்தின் சாரத்தை உங்கள்முன் பணிவன்போடு வைக்கிறேன்.
விதி ஒன்று : உண்மையான சக்தியின் விதி
இயற்கையோடு வாழ முயலுங்கள். தினமும் இரு முறை காலையிலும் மாலையிலும் அரை மணி நேரம் மௌன விரதம் இருங்கள் அல்லது தியானத்தில் இருங்கள்.
விதி இரண்டு : கொடுக்கல் வாங்கல் விதி
எவ்வளவு கொடுக்கிறீர்களோ அவ்வளவு உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். தினமும் யாருக்காவது ஒரு பூ அல்லது வேறு ஏதாவது பரிசு கொடுங்கள்.
விதி மூன்று: காரிய -காரண விதி
எந்தச் செயலைச் செய்வதற்கு முன்பும் , இதன் விளைவுகள் என்னவாகும், இது மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா ? என்ற கேள்வியை உங்கள் இதயத்திடம் கேட்டுவிட்டுப் பிறகு அதன் கட்டளைப்படி நடங்கள் !
விதி நான்கு: குறைந்த முயற்சி விதி
எதையும் எப்போதும்
செய்ய முயலாதீர்கள் – செய்யுங்கள்
குறைவாகச் செய்தாலும் நிறைவாகச் செய்யுங்கள்
வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள்
நினைத்தபடி நடக்காவிட்டால் வருந்தாதீர்கள்
உங்கள் பாதுகாப்பு வளையத்தை உடையுங்கள்
உங்கள் கருத்துக்களை மற்றவர் மீது திணிக்காதீர்கள்
மற்றவர்களை ஒப்புக்கொள்ளச் செய்வது தான் வெற்றி என்று எண்ணாதீர்கள்
விதி ஐந்து: ஆசையும் குறிக்கோளும்
உங்கள் ஆசைகளைப் பட்டியல் போடுங்கள்
அனுதினமும் அவற்றைப் படித்துவிட்டு தியானம் அல்லது மௌனவிரதம் இருங்கள் .
ஆசைகளை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் .
விளைவுகளைப் பற்றி மறந்துவிடுங்கள்
ஆசைகள் நிறைவேறுவதும் நிறைவேறாததும் இந்தப் பிரபஞ்சத்தின் செயல் என்று எண்ணிக்கொள்ளுங்கள்
விதி ஆறு: பிணைப்பிலா விதி
உலகில் எல்லா செயல்களிலும் உங்களால் முடிந்தவரை கலந்து கொள்ளுங்கள்
ஆனால் அவற்றுடன் உங்களைப் பிணைத்துக் கொள்ளாதீர்கள். சற்று விலகியே இருங்கள்
விதி ஏழு: வாழ்வின் விதி
எதிலும் யாருக்கும்
நான் எப்படி உதவமுடியும் என்று கேளுங்கள் ; இதில் எனக்கு என்ன இருக்கிறது என்று பார்க்காதீர்கள்
உங்களின் அபாரத் திறமைகளை எழுதித் தினமும் அவற்றைப் படியுங்கள்; உங்களுக்கு நம்பிக்கையும் பெருகும்; அந்தப் பட்டியலும் நீளும்
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?
நமது உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் (cell) இந்த ஏழு விதிகளை எப்போதும் கடைப்பிடிக்கின்றன !