மணிமகுடம் -ஜெய் சீதாராமன்

முன் கதைச் சுருக்கம்

 

இதுவரை…….

இடைக்கால சோழர் உத்தம சோழர் தஞ்சையில் ஆண்டு கொண்டிருந்த போது சோழர் கீழிருந்த வாணகப்பாடி நாட்டு சிற்றரசன்  வந்தியத்தேவன் ஈழத்தில் போர் புரிந்துகொண்டிருந்த சோழர் படையின் புது சேநாதிபதியாக நியமிக்கப் பட்டிருந்தான்.

புதுப் பதவியை ஏற்குமுன், பாண்டியர் வம்சாவளி மணிமகுடமும் மற்றும் புராதனமான  இரத்தின மாலையும்  ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இரகசியத்தின் தகவல்கள் அவனுக்குத் தற்செயலாகத் தெரியவருகிறது. அதனை மீட்டிய பின்னர்  பதவி ஏற்கும் எண்ணத்தோடு இலங்கைக்கு,  தோழன், முதன் மந்திரியின் ஒற்றன் திருமலை உதவியோடு பூதத் தீவுக்கு வருகிறான்.

அவன் மணிமகுடமும் இரத்தின மாலையும் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்து, அவைகளை மீட்டு எடுத்து வந்து, அவர்களின் கலத்தில் ஏறியதும், கடல் கொள்ளைக்காரர்களின் கைகளில் சிக்குகிறான். அவர்களிடமிருந்து சாதுர்யமாகத் தப்பித்த வந்தியத்தேவனுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும் பெரிய யுத்தம் மூள்கிறது. வந்தியத்தேவன் தலை மேல் பெரிய பாய்மரம் விழுந்து நினைவை இழக்கிறான். கடல் கொள்ளையர்களுடன் கூட்டாக இருந்த ரவிதாசன்மணிமகுடம், இரத்தின மாலையுடன் இருந்த தங்கப் பெட்டியை அபகரித்து அவர்களின் கலத்தில் ஏறி தப்பிக்கிறான். போவதற்கு முன் தீப்பந்த அம்புகளால் வந்தியத்தேவன் மயங்கியிருந்த கலத்தை தீக்கிரையாக்குகிறான். அதற்குள் மூன்று பெரிய போர்க்கலங்களில் திரும்பிய திருமலை கொள்ளையர்களை விட்டுவிட்டு எரிகின்ற கலத்திலிருந்த வந்தியத்தேவனை மீட்க விரைகிறான்.

ஐந்து நாட்களுக்குப்பிறகு ரவிதாசன் கூட்டத்தினர், ராசிபுரத்தில் நந்தினியிடம், கைப்பற்றிய மணிமகுடத் தங்கப் பெட்டியை சமர்ப்பிக்கின்றனர். நந்தினி ஆவலுடன் பெட்டியைத் திறந்து பார்க்கையில் உள்ளே மணிமகுடம், இரத்தின மாலைக்குப் பதிலாக வெறும் கற்கள் இருப்பதைக்கண்டு, வந்தியத்தேவன் அவர்களை நன்றாக ஏமாற்றியிருப்பதை அறிகிறார்கள். வந்தியத்தேவனை தீர்த்துக்கட்ட சபதமெடுக்கிறார்கள்.

இனி……………………..

அத்தியாயம் 13.சேனாதிபதி வந்தியத்தேவன்

நான்கு நாட்களுக்குப் பிறகு..

மாதோட்டத்தில் சோழர் படையின் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாரின் பாசறைக்கு வெளியே படை முழுவதும் குழுமியிருந்தது.

உள்ளே ஈழப்படையின் மாதண்ட நாயகனான, சுந்தர சோழரின் புதல்வர் அருள்மொழிவர்மர், பெரிய வேளார், மற்றும் வந்தியத்தேவன் கூடியிருந்தனர். அடிபட்ட வந்தியத்தேவன் உடம்பு பூரணமாகக் குணமடைந்திருந்தது.

அருள்மொழிவர்மர் வந்தியத்தேவனைப் பார்த்து “தோழா! உன் உடம்பு முழுவதும் குணமடையுமுன் உன்னை நான் சந்திக்க விரும்பவில்லை. ஆனால் உன் சாதனையைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தெரிந்துகொண்டேன்” என்றார்.

சேனாதிபதி, “உன் தீரத்தை திருமலை மூலமாகக் கேட்டு தெரிந்துகொள்ள விரும்பினேன்.. ஆனால் திருமலை திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டான். செவ்வேந்தியும் மற்ற படை வீரர்களும் உன்னைப் புகழ்ந்தார்கள். பொக்கிஷங்களை அடைய எப்படி புதிர் முடிச்சுகளை அவிழ்த்து, புத்தியை உபயோகப்படுத்தி, மதியாலும் வீரத்தாலும் அடைந்தாய் என்பது எவராலும் செய்ய இயலாத சாதனை! ஆனால் பாண்டியச் சதிகாரக் கும்பல்களும், கடல் கொள்ளைக்காரர்களும் எப்படியோ உன்னிடமிருந்து அவைகளை பறித்து எடுத்துக்கொண்டு போனது என்பது விதி!” என்று கூறி முடித்தார்.

அப்போது வீரன் ஒருவன் உள்ளே வந்து பணிவுடன் வணங்கி, “திருமலை உங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்று கூறினான். வேளார் உடனே அழைத்துவருமாறு தலையை அசைத்தார்.

திருமலை வந்து எல்லோரையும் வணங்கி கையிலிருந்த மூட்டையை கீழே வைத்தான். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அருள்மொழி, “என்ன திடீரென்று மாயமாய் எங்கே மறைந்திருந்தாய்? மூட்டையில் என்ன?” என்று கேட்டார்.

திருமலை “மறைந்தவிதத்தை விவரிக்குமுன் இந்த மூட்டையில் வந்தியத்தேவர் சோழ குலத்தினரால் மிகவும் அவசியமானதாக வேண்டப்படும் பொருட்களை வைத்திருக்கிறார். அவைகளைப் பரிசாக உங்களிடம் சேர்ப்பிக்க என்னிடம் கொடுத்துள்ளார். மேலும் உங்கள் ஆவலைத் தூண்ட விரும்பவில்லை.. இதோ!” என்று மூட்டையை அவிழ்த்தான்.

அருள்மொழி உள்ளிருந்து ஒரு கிரீடத்தை வெளியில் எடுத்தார். எடுத்து, ஆச்சர்யத்தில் மூழ்கி, “இது.. இது.. பாண்டியர் மணிமகுடமல்லவா?” என்றார்.

உடன் இருந்த வேளார் இரத்தின மாலையைக் கையில் எடுத்தார். அவர் மூச்சு ஒரு கணம் நின்றது. மறுபடி நின்ற மூச்சு வேலையைத் தொடங்கியது. ஸ்தம்பித்துப் போன அவர் “இது.. இதுவும்.. பாண்டியர் இரத்தின ஹாரம் அல்லவா!” என்றார். அவர் வியப்பின் சிகரத்தில் நின்றிருந்தார். வந்தியத்தேவனைப் பார்த்து,

“சதிகாரக் கும்பல் உன்னிடமிருந்து அவைகளை அபகரித்தது உண்மை அல்லவா?பின் எப்படி..?” என்றார்

வந்தியத்தேவன் “பொக்கிஷப் பெட்டியை அவர்கள் அபகரித்தது என்னவோ உண்மை. அதை இப்போது திறந்து பார்த்து ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்திருப்பார்கள்” என்றான் அவனுக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன்.

குழுமியிருந்த சபையில் ஆச்சர்யக் கூக்குரல்கள் மிகுந்தது.

பிறகு அவர்களுக்குக் குடந்தை சாலையில் நடந்த சம்பவத்திலிருந்து திருமலையைப் போர்க் கப்பல்களைக் கொண்டுவர அனுப்பியதுவரை விளக்கிக் கூறினான். திருமலை கிளம்புமுன் அவனிடம் பொக்கிஷப் பொருட்களை மீட்டபின் அவற்றை பெட்டியிலிருந்து அகற்றி பாறையின் அருகிலிருந்த புதருக்குப் பின் மறைக்கப் போவதாகச் சொல்லியிருந்ததையும் கூறினான். தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் பொக்கிஷங்களை உங்களிடம் ஜாக்கிரதையாக சேர்க்கும்படியும் திருமலையிடம் முன்பே சொல்லியிருந்ததைச் சுட்டிக்காட்டினான்.

“என்னுடைய முன்யோசனையின் பேரில் திருமலை எங்களையெல்லாம் தீக்கு இரையாக்க ஆரம்பித்துக் கொண்டிருந்த கப்பலிலிருந்து மீட்டபின் படகில் மறுபடி பூததீவுக்குப் போய்ப் பொருட்களை எடுத்து கொண்டுவரச் சென்றிருக்கிறான். அப்போதுதான் அவன் மாயமாய் மறைந்ததாக நீங்கள் நினைத்துக் கொண்டீர்கள். பிறகு நடந்தவையெல்லாம் நீங்கள் அறிவீர்கள்” என்று கூறி முடித்தான்.

“ஆமாம்!அவர்களை ஏமாற்ற, மற்றும் அவர்களுக்குச் சந்தேகம் வராமலிருக்கப் பெட்டிக்குள் அப்படி என்னதான் வைத்திருந்தாய்?” என்று அருள்மொழி வினவினார்.

வந்தியத்தேவன் “கற்கள்..” என்றான்.

எல்லோரும் குப்பென்று சிரித்தார்கள். அனைவரது சிரிப்பும் அடங்க ஒரு நாழிகை ஆயிற்று.

அருள்மொழி மறுபடியும் “பலே வந்தியத்தேவா! உன் வீரத்தையும் விவேகத்தையும் கண்டு நான் வியக்கிறேன்! உன்னை நண்பனாக அடைய நான் என்ன புண்ணியம் செய்திருக்கிறேனோ” என்று அவனை ஆரத் தழுவி முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அருள்மொழி மேலும் “இந்த பாண்டியர் புராதான பொக்கிஷங்கள் பாண்டிய நாட்டுக்கே சொந்தமானவை. நமக்கு அடிபணிந்து நம்மால் நியமிக்கப்படும் அரசனிடம் உரிய காலத்தில் அவைகள் ஒப்படைக்கப்படும்! பாண்டிய தேசத்து மக்களால் அது ஒரு மகத்தான செய்கையாகக் கருதப்படும் என்பதில் எனக்குக் கடுகளவும் சந்தேகமில்லை!” என்று உணர்ச்சப் பரவசப்பட்டுச் சொன்னார்.

வேளார் “வந்தியத்தேவா! இது பொன்னான நேரம். வெளியில் நமது படை கூடியிருக்கிறது, எதனால் தெரியுமா? இன்றிலிருந்து சேனாதிபதி பதவியிலிருந்து நான் விடுதலையாகிறேன். நீ அதை ஏற்கப் போகிறாய். அதை இந்த நல்ல நாளில் அறிவிக்கத்தான் இந்த ஏற்பாடு” என்றார்.

எல்லோரும் பாசறையிலிருந்து வெளியே வந்தனர்.

திருமலை,  “ஈழத்தின் தளபதி மாதண்ட நாயகர் அருள்மொழிவர்மர்..! வாழ்க! வாழ்க!!” என்று இடி முழக்கக் கூறினான்.

எல்லோரும் “வாழ்க! வாழ்க!!” என்றார்கள்.

“ஈழத்தின் சேனாதிபதி கொடும்பாளூர் பூதிவிக்ரம கேசரி பெரிய வேளார் வாழ்க!’ என்றான்.

எல்லோரும் “வாழ்க! வாழ்க!!” என்றார்கள்

அருள்மொழியிடம், வேளார் தன் கத்தியை இடுப்பிலிருந்து எடுத்து நீட்டினார். அதைப் பெற்றுக் கொண்டு அருள்மொழி, வந்தியத்தேவன் அருகில் சென்று கைகளை உயர்த்தினார்.. வந்தியத்தேவன் கத்தியைத் தன் இரு கைகளாலும் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டான். பிறகு வலக்கையில் அதை ஏந்தி உயரப் பிடித்தான்.

திருமலை “ஈழத்தின் புதுச் சேனாதிபதி..

வாணர் குல வீரர்..

வல்லத்து அரசர்..

வல்லவரையர் வந்தியத்தேவர்..

வாழ்க!”

என்று மறுபடியும் இடி முழங்கினான்.

எல்லோரும் கைகளை உயர்த்தி “வாழ்க! வாழ்க!!” என்றனர்.

“வீர வேல்..”

“வெற்றி வேல்..”

 

முடிவுரை

வந்தியத்தேவனால் மீட்கப்பட்ட மணிமகுடம் பல வருடங்களாக உத்தம சோழர் மற்றும் பிறகு பட்டம் ஏறிய ராஜராஜசோழன் பாதுகாப்பில் சோழ அரண்மனையிலேயே இருந்தது. கடைசி பல்லவ வாரிசான பார்த்திபேந்திரன் சோழப்பேரரசின் கீழ் கப்பம் கட்டும் சிற்றரசனாக சோழர்களுக்குச் சேவை செய்துகொண்டிருந்தான். அவன் மனம், சிதைந்த பல்லவ சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் தலை தூக்கி நிலை நாட்டத் துடிதுடித்துக் கொண்டிருந்தது. சோழர்களின் பரம்பரைப் பகைவர்களான பாண்டிய நாட்டுடன் ரகசியத் தொடர்பு வேறு கொண்டிருந்தான். தஞ்சையில் மகுடம் வைத்துப் பாதுகாக்கப்படும் இடம், பாதுகாக்கும் மெய்க் காவலர்கள் பற்றிய விஷயங்களை அடிக்கடி பாண்டிய நாட்டுக்குத் தெரிவித்துக் கொண்டும் இருந்தான். தஞ்சை மாளிகையிலேயே சோழர் வீரர்களுடன் பாண்டவ உளவாளிகள் சிலர் புகுந்திருந்தார்கள். பாண்டியர்கள் மறுபடியும் மணிமகுடத்தை அபகரித்தார்கள். (அடைந்தார்கள் என்று கூறுவது மிகப் பொருந்தும்!) அது கருத்திருமன் உதவியால் மறுபடியும் ஈழ நாட்டு மகிந்தனிடம் வந்தடைந்தது. வேறு ஓர் கண்காணா இடத்தில் மீண்டும் அதை மகிந்தன் மறைத்து வைத்தான்.

அடுத்த சோழப் பேரரசனான ராஜேந்திரன் காலம் வரை அது ஈழத்தில் ரகசிய கண்காணிப்பில் மறைந்திருந்தது. இது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டெடுத்த கீழ் காணும் கல்வெட்டினால் உறுதி ஆகிறது:

ராஜேந்திர சோழன் மறைந்த பாண்டியர் மணிமகுடத்தை மீட்டு வந்த உண்மையான வரலாறு சோழ சரித்திரத்தில் சிகரம் வாய்ந்த நிகழ்சியாகும்! இந்த என் குறுநாவலைத் தொடர்ந்து எழுதக் கூடிய ஒரு அரிய வாய்ப்பு! விரைவில் அதற்கான சூழ் நிலை அமையும் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

 வணக்கம்!

———————————————————————————————————————–

அனுபந்தம்

சோழநாடு/ஈழம் வரைபடம்

வரலாற்றின் முக்கிய பாத்திரங்கள்

ஆசிரியர்:

  நான் ஜெ.ராமன், ஜெய்சீதாராமன் என்னும் புனைப்பெயரில் இக்கதையை எழுதியிருக்கிறேன். பிறந்தது 1939ம் ஆண்டு பட்டுக் கோட்டையில். 1965ல் இந்தியாவைவிட்டு முதலில் இங்கிலாந்து நாட்டிற்கும் பின்னர் ஆஸ்த்ரேலியாவிற்கும் குடிபெயர்ந்து 33 வருடங்களுக்குப் பின் பிறந்தமண்ணிற்கே திரும்பி வந்தேன். இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில்  பலகாலம் வேலை பார்த்துவிட்டு முடிவில் Franchised Austrlia Postன் உரிமத்தில் தொழிலதிபராய் பணிபுரிந்தேன்.  

இந்த ‘மணிமகுடம்’ குறுநாவல் எனது முதல் படைப்பு, 2011ல் தொடங்கி 2016ல் நிறைவு பெற்றது. நான் இந்த கதையை மேலே தொடருவதும் அல்லது வேறு சரித்திர நாவல்களை உருவாக்குவதும் இந்தக் கதையில் எனக்கு உங்களால் கிடைக்கும் அங்கீகாரத்தைப் பொருத்திருக்கிறது.

 

மணிமகுடம் – ஜெய் சீதாராமன்

Image result for வந்தியத்தேவன்Image result for வந்தியத்தேவன்Image result for வந்தியத்தேவன்Image result for வந்தியத்தேவன்

இதுவரை…….இடைக்காலச்  சோழர் உத்தம சோழர் தஞ்சையில் ஆண்டு கொண்டிருந்தபோது சோழ சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட வாணகப்பாடி நாட்டு சிற்றரசன்  வந்தியத்தேவன் ஈழத்தில் போர் புரிந்துகொண்டிருந்த சோழர் படையின் புது சேநாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தான்.

புதுப் பதவியை ஏற்குமுன் பாண்டியர் வம்சாவளி மணிமகுடத்தையும் மற்றும் புராதனமான  இரத்தின மாலையையும்  ஈழத்தில் மறைத்து வைத்திருக்கும் இரகசியத்தின் தகவல்கள் அவனுக்குத் தற்செயலாகத்  தெரியவருகிறது. அதனை மீட்டிய பின்னர்  பதவி ஏற்கும் எண்ணத்தோடு இலங்கைக்குத்  தோழன், முதன் மந்திரியின் ஒற்றன் திருமலை உதவியோடு பூதத்  தீவுக்கு வருகிறான்.

வந்தியத்தேவன் மணிமகுடமும்   இரத்தின மாலையும் இருக்கும் இடத்தைத்  துல்லியமாகக் கண்டுபிடித்து, அவைகளை மீட்டெடுத்து வந்து அவர்களின் கலத்தில் ஏறியதும் , கடல் கொள்ளைக்காரர்கள் கைகளில் சிக்குகிறான். அவர்கள் கைகளிலிருந்து சாதுர்யமாக தப்பித்த வந்தியத்தேவனுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் பெரிய யுத்தம் மூள்கிறது. வந்தியத்தேவன் தலை மேல் பெரிய பாய்மரம் விழுந்து நினைவை இழக்கிறான். கடல் கொள்ளையர்களுடன் கூட்டாக இருந்த ரவிதாசன்,  மணிமகுடமும், இரத்தின மாலையும் இருந்த தங்கப் பெட்டியை அபகரித்து அவர்களின் கலத்தில் ஏறித் தப்பிக்கிறான். போவதற்கு முன் தீப்பந்த அம்புகளால் வந்தியத்தேவன் மயங்கியிருந்த கலத்தை தீக்கிரையாக்குகிறான். அதற்குள் மூன்று பெரிய போர்க்கலங்களுடன்  திரும்பிய திருமலை கொள்ளையர்களை விட்டுவிட்டு எரிகின்ற கலத்திலிருந்த வந்தியத்தேவனை மீட்க விரைகிறான்.

இனி……………………..

அத்தியாயம் 12. நந்தினியின் சபதம்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு..

 

நந்தினி, அமர புஜங்கநெடுஞ்செழியப் பாண்டியன் மற்றும் அவர்களைச் சேர்ந்த வீரர்கள் கூடிய கூட்டம் ஒன்று, ராசிபுரம் ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த மண்டபத்தில், இரவு நடுசாமத்தில்  கூட்டப்பட்டிருந்தது. அவர்கள் யார் வருகைக்காகவோ காத்திருந்தினர்போல் தோன்றியது.

ஒரு சலசலப்பு! வெளியில் யாருடைய வருகைக்காகவோ எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீரர்களில் ஒருவன் உள்ளே ஓடிவந்து “வந்துவிட்டார்கள்! வந்துவிட்டார்கள்!!” என்றான்.

உள்ளே ரவிதாசன் முன்வர கருத்திருமனும், சோமன்சாம்பவானும் ஓர் நீண்ட பெரிய பெட்டியைத் தூக்கி வந்து கீழ் வைத்து அவர்கள் முன் நின்றார்கள்.

“மகாராணி!உங்கள் முன்னோர் பாதுகாத்து வந்த விலை மதிக்கமுடியாத மணிமகுடமும் இரத்தின ஹாரமும் இதோ! பல எதிர்ப்புகளை சமாளித்து எடுத்து வந்துள்ளேன்” என்று பெருமிதம் பொங்கக் கூறினான் ரவிதாசன். அவன் இருகண்களிலும் மின்னல் பளிச்சிட்டது.

இதற்காகவே கொண்டு வரப்பட்டிருந்த பட்டுக் கம்பளம், நந்தினி முன் விரிக்கப்பட்டது.

கருத்திருமனும் சோமன்சாம்பவானும் மிகவும் ஜாக்கிரதையாக பெட்டியை அவள் முன் வைத்தனர். ரவிதாசன் அதில் பதிந்திருந்த மீன் சின்னத்தைத் தன் அங்கவஸ்திரத்தால் துடைத்தான்.

“மிகப் பெரிய சாதனை புரிந்திருக்கிறீர்.அதற்கான பரிசு உரிய காலத்தில் கிடைக்கும்” என்றாள்.

பக்கத்திலிருந்த பட்டுப் பையிலிருந்து வீர பாண்டியன் அவளிடம் ஒப்படைத்திருந்த பெட்டியின் சாவியை எடுத்தாள். ஒரு கையால் பூட்டைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால், சாவியை பொருத்திப் பூட்டைத் திறக்க முயன்றாள்.

முடியவில்லை!

சாவி பூட்டின் துவாரத்தைவிட பெரியதாய் இருப்பதை உணர்ந்தாள்.

“என்ன இது ரவிதாசன் அவர்களே? திறக்க இயலவில்லையே? விளக்கம் தேவை” என்றாள்.

ரவிதாசன் “என்னிடம் சாவியைக் கொடுங்கள்” என்று வாங்கித் திறக்க முயன்றான்!

பயனில்லை! அவனும் திகைத்தான்!

நந்தினி “நல்லது. ஏதோ தப்பு நடந்திருக்கிறதுபோல் தோன்றுகிறது. பூட்டை உடையுங்கள்” என்று கணீர் குரலில் கட்டளையிட்டாள்.

பூட்டு உடைக்கப்பட்டது.

பெட்டியை நந்தினி திறந்தாள்.

உள்ளே..

‘மணிமகுடமும் இரத்தின ஹாரமும்’ இல்லை!

அவைகளுக்குப் பதிலாக..

‘நிறைய கற்கள்’ இருந்தன!!!!

நந்தினி அதிர்ச்சியால் மயங்கிக் கீழே விழுந்தாள்.

ரவிதாசன் கண்கள் சிவந்தன. கருத்திருமன் விரல்களை நெறித்தான். சோமன்சாம்பவன் தலையிலடித்துக் கொண்டான்.

அமரபுஜங்கன் ஓடிச் சென்று நந்தினி முகத்தில் தண்ணீர் தெளித்தான். மற்ற எல்லோரும் “அய்யோ, எப்படி?” என்று புலம்பினார்கள்.

நந்தினி கண் விழித்தாள். பற்களை நறநற என்று கடித்து “இது வந்தியத்தேவன் வேலையாகத்தான் இருக்கவேண்டும். நன்றாக நம்மை ஏமாற்றிவிட்டான்” என்றாள்.

ரவிதாசன் ‘மஹாராணி..” என்று ஆரம்பித்தான்.

அவனை ஆவேசமாகப் பார்த்த நந்தினி,

“நீங்கள் இங்கிருந்து போனதிலிருந்து என்னவெல்லாம் நடந்தது என்று கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?என்று அடங்காத கோபத்துடன் ரவிதாசனை வினவினாள்.

ரவிதாசன் ஒன்றுவிடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தான்.

“ஆக, நீங்கள் சென்று அதனை எடுத்து வரவில்லை..வந்தியத்தேவன் எடுத்து வந்ததை அவனிடமிருந்து பறித்து வந்திருக்கிறீர்கள்.. அப்படித்தானே?”

ரவிதாசன் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தோன்றாமல், ஏதோ சொல்ல வாயெடுத்தான்.

நந்தினி அவனை மேலும் பேசவிடாமல் மறித்து “அப்படி பறித்து வந்ததும் வேறு.. சரி.. வந்தியத்தேவன் இறந்ததை உங்கள் கண்களால் பார்த்தீர்களா?” என்றாள்.

“இல்லை, ஆனால்..”என்று ரவிதாசன் முடிக்கவில்லை,

நந்தினி மீண்டும் அவனைத் தடுத்து, “கைதேர்ந்த சோழக் கடற்படை வீரர்கள் அவன் உயிரை மீட்டிருக்கலாம்! நம் குல உயிர்நாடியான பொக்கிஷங்களை நம்மிடமிருந்து அபகரித்து எதிரி சோழர்களிடம்  அவன் சேர்ப்பித்து விட்டிருக்கக்கூடும். அவன் நம் கையில்தான் உயிரை விடவேண்டும் என்பது விதி. வந்தியத்தேவா! மீண்டும் எங்களை முட்டாளாக்கி விட்டாய்! நீதான் எங்கள் முதல் எதிரி. சோழ வர்க்கத்தின் கதையை நாங்கள் முடிக்குமுன் உன் உயிர் எங்களால் எடுக்கப்படும். இது நாங்கள் எடுக்கும் புது சபதம்” என்று அனல் பறக்கக் கூறினாள்.

நந்தினி தன் கையை நீட்டினாள்! எல்லோர் கைகளும் அவள் கையோடு இணைந்தன!

(அடுத்த இதழில் முடியும்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

மணி மகுடம் – ஜெய் சீதாராமன்

 

அத்தியாயம் 11. மணிமகுடம்.

 

 

செவ்வேந்தி, மாலுமிகள் மற்றைய வீரர்களுடன் விடியற் காலையில் கலத்தின் மேல் தளத்திற்கு வந்து நின்று கொண்டிருந்தான். பின் வந்தியத்தேவன் வந்து அவர்களுடன் கலந்து கொண்டான்.

வந்தியத்தேவன் ஒரு வீரனிடம் பெரிய பூட்டு, அதற்கான சாவி, மண் வெட்டிகள், கூடைகள், கடப்பாரைகள், அணைந்த சில தீப்பந்தங்கள், சில எண்ணைக் குடுக்கைகள், தண்ணீர் குடுக்கைகள், கயிறுகள் முதலியவற்றை சாக்குகளில் போட்டுக் கட்டி எடுத்து வரச்செய்தான். அவற்றைத் தவிர சில நீண்ட கம்புகளையும் எடுத்து வரச் செய்தான். கீழே தள்ளப்பட்ட படகில், எல்லோரும் பொருட்களுடன், மாலுமிகள் துடுப்பு வலிக்க, தீவை நோக்கிச் சென்றனர்.
மூட்டைகளைக் கம்புகளின் நடுவே கட்டி, இருவர் இருவர்களாக சில வீரர்கள் சுமந்து கொண்டார்கள். கடைசியாக அனைவரும் பயணத்தைத் தொடங்கினார்கள். இறுதியில் குன்று இருக்குமிடம் வந்து, ஏறி உருண்டைக் கல் முன்னால் வந்து நின்றார்கள்.

வந்தியத்தேவன் கல் இருந்த இடத்திற்கு மேல் என்ன இருக்கிறது என்பதை அறிய அங்கு நோட்டம்விட்டான். சிறிய கற்கள் நிறைந்த சற்று உயரமான இடம் ஒன்று தென்பட்டது. அந்த இடத்தையும் தற்போது கல் இருக்கும் இடத்தையும், இடையில் உள்ள இடத்தையும் நோக்கினான்.

கல் இருக்கும் இடம் ஓர் பள்ளம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். கற்கள் இருந்த உயரமான இடத்திலிருந்து உருண்டைக் கல் பள்ளத்திற்கு, கீழ் நோக்கிய சரிவு இருப்பதையும் அறிந்து கொண்டான். இடையே உருண்டைக் கல்லின் அளவிற்கு ஒரு சாய்வான பாதை அமைக்கப்பட்டிருப்பதையும் கவனித்தான்.

கல்லுக்குக் கீழேயும், மற்ற அதன் இரு பக்கங்களிலும் வெட்டப்பட்ட மரங்களின் கட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட மூன்று ஆட்கள் உயரம் இருந்த கட்டைகளின் மேல் கல் உட்கார்ந்திருந்தது. மற்றும் கல்லைச் சுற்றிலும் கல்லின் கீழ் பாகத்தின் மேல் வரை, கட்டைகள் காணப்பட்டன. இதிலிருந்து கல் ஒரு கட்டைகளால் நிரப்பப்பட்ட பள்ளத்தில் இருத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தோன்றின.
இவற்றையெல்லாம் கணித்த அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிய ஆரம்பித்தது!

‘கல்லைவிட பெரியதாகவும், ஆழமாகவும் குழியைத் தோண்டி முதலில் பள்ளத்தில் பொக்கிஷப் பெட்டியை வைத்திருக்கிறார்கள்..பின் மண் போட்டு நன்றாக மூடியிருக்கிறார்கள். கட்டைகளால் அடியிலும், சுற்றிலும் கல்லின் அளவுக்கு சமச் சீராகவும், கல் சரிந்து கீழே இறக்கத்தில் ஓடிவிடாமல் இருக்கச் சரிவின் முன்னால் அதிகமாகவும் நிரப்பியிருக்கிறார்கள்’ என்பதை அறிந்து கொண்டான்.

‘மேலும் உயரத்திலிருந்த கல்லைச் சுற்றிலும், வெடி மருந்துகள் வைத்து அதைப் பெயர்த்திருக்கிறார்கள். கல் அவர்கள் அமைத்திருந்த சாய்வான பாதையில் உருண்டு குழியில் விழ இந்த ஏற்பாடுகள். அதை வெற்றிகரமாக முடித்து சாதனையும் செய்திருக்கிறார்கள்!’ என்றும் வந்தியத்தேவன் வியந்தான்!

‘அப்பப்பா!எவ்வளவு பெரிய அருஞ்செயல்!’ என்று எண்ணி, மஹாபாரதத்தில் சொல்லப்படும் ஒரு கதையை நினைவுபடுத்திக் கொண்டான்.

மஹாபாரதத்தின் முடிவில் பாண்டவர்கள் வடக்கே இமாலயத் தொடர்களில் மானாஸ் வழியாகத் தேவ லோகத்திற்குச் சென்று கொண்டிருந்தார்களாம்! அப்போது சரஸ்வதி நதி குறுக்கிட்டது. எல்லோரும் கரையிலிருந்து மறு கரைக்குத் தாண்டிச் செல்லத்தயாராக இருந்தார்கள். ஆனால் திரௌபதி மட்டும் மறுத்தாள்! அப்போது பீமன் பிரம்மாண்டமான நீண்ட கல் ஒன்றைப் பெயர்த்து பாலம் அமைத்தானாம்! அதைப் போலல்லவா இருக்கிறது இந்த அரும் பெரும் செயல்! என்று கணித்ததையெல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டான்!
இப்போது வந்தியத்தேவன் கல்லைப் பெயர்ப்பதற்கான உபாயங்களைப்பற்றி ஏற்கெனவே சிந்தித்து வைத்திருந்த எண்ணங்களை ஞாபகப்படுத்திக்கொண்டான். அதைச் செயல்படுத்தத் தொடங்கினான்.

செவ்வேந்தியை அழைத்தான்.
“கல்லுக்கு அடியில் உள்ள கட்டைகளைக் கீழேயிருந்து அகற்றுவதுதான் நமது முதல் வேலை. பாறை குழியிலிருந்து வெளிப்பட்டு உருண்டு கீழே போய்விடும்! கட்டைகளை அகற்ற அவற்றை எரிப்பதுதான் மிகச் சிறந்த உபாயம்!” என்றான்.

செவ்வேந்தி வீரர்களிடம் தீப்பந்தங்களைக் கொளுத்திக் கையில் தயாராய் வைத்துக்கொள்ளுமாறு ஆணையிட்டான்.

வந்தியத்தேவன் மெல்லத் தன் கையிலிருந்த பந்தத்தை கல்லுக்கடியிலிருந்த கட்டைகளில் போட்டான். மற்றவர்களையும் அவ்வாறே வெவ்வேறு இடங்களில் போடச் சொன்னான்.
வெய்யிலில்நன்றாய் காய்ந்திருந்த கட்டைகள் சட்டென்று தீயைப் பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தன! பெரிய ஜ்வாலையாய் வளர்ந்தது. பிறகு கட்டைகள் வேகமாக எரிந்து சாம்பலாகத் தொடங்கின. கல் மெல்ல மேலும் கீழுமாய் அசைய ஆரம்பித்தது அதன் ஆட்டம் அதிகமாயிற்று. கல்லைக் கீழே விழாமல் தாங்கிக்கொண்டிருந்த கட்டைகள் கருகத் தொடங்கின. பாரம் அதிகமாகிக் கல் பள்ளத்திலிருந்து வெளியில் வந்து, கீழ் நோக்கி உருள ஆரம்பித்தது.

அதன் வேகம் வினாடிக்கு வினாடி அதிகரித்தது. வேகமாகப் பெரிய சத்தத்துடன் சரிவில் கொடி செடி மரங்களைச் சாய்த்துக்கொண்டு உருண்டுபோய் மலையின் அடிவாரத்திற்குச் சென்று பிறகு நிலத்தில் உருண்டு கடலுக்குள் சென்று மறைந்தது!

ஒருவழியாகக் கட்டைகள் எரிந்து முடிந்தன! ஒரே புகைப்படலம்! சிறிது நேரம் ஒன்றும் புலப்படவில்லை! கட்டைகள் எல்லாம் சாம்பலாகி இருந்தன.

செவ்வேந்தி வீரர்களை மண்வெட்டிகள், கூடைகள், கடப்பாரை எடுத்து வரச் செய்து, மண்ணை வெட்டிக் கூடையில் எடுத்து, எரிந்த கட்டைகளின் மேல் தூவச் சொன்னான்.

புகை அடங்கிய பிறகு செவ்வேந்தி மறுபடி வீரர்களிடம் எல்லாவற்றையும் மண்வெட்டியால் அள்ளி, கூடையில் போட்டு, அகற்றச் சொன்னான். கட்டைகளின் கீழ் சுட்டுக்கொண்டிருந்த மணலையும் கடைசியில் அவர்கள் அகற்றினார்கள்.

செவ்வேந்தி மீண்டும் மண்வெட்டியால் அந்த இடத்தைத்  தோண்டச் சொன்னான். முடிவில் ஒரு தங்கப்பெட்டியின் மேல்பகுதி தென்பட ஆரம்பித்தது. பெட்டியின்மேல் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
அதிக கனமுள்ள பெரிய பூட்டுடன் கூடிய அந்தப் பெட்டியை வெளியில் வீரர்கள் எடுத்தார்கள்.

வந்தியத்தேவன் வீரர்களிடம் பூட்டை உடைக்கச் சொன்னான். அவ்வாறே பூட்டு உடைக்கப்பட்டது. பூட்டை அகற்றிவிட்டுப் பெட்டியைத் திறந்தான்.

அங்கே..!
கண்ணைப் பறிக்கும் அழகுடன் பாண்டியனின் பொக்கிஷங்கள் கதிரவனின் ஒளியில் தகதகத்து கண்களைக் கூச வைத்தன!
மணிமகுடத்தை முதலில் எடுத்தான். தங்கத்திலான மிகுந்த வேலைப்பாட்டுடன் பல வைரங்கள் பதிக்கப்பட்டிருந்த மகுடத்தைப் பக்கத்துக் கல்லில் வைத்தான்.

‘ஆகா.என்ன வேலைப்பாடு. எத்தனை வைரங்களும் கோமேதங்களும் வைடூரியங்களும்! இதன் அழகை எவ்வாறு வர்ணிப்பது?’ என்று வந்தியத்தேவன் அதிசயித்தான்.

அடுத்து கண்ணைப் பறிக்கும் இரத்தினங்கள் பதித்த வேலைப்பாடுகள் நிறைந்த ஹாரத்தை எடுத்து சிறிது நேரம் மெய் மறந்தான்.
இந்தப் பொக்கிஷங்களை அடைய அவன் சாதித்தவை அனைத்தையும் எல்லாம் நினைவு கூர்ந்தான். அவனுக்கே அவை அதிசயமாகத் தோன்றின!

‘பாதிக் கடலைத் தாண்டியாகிவிட்டது. முழுவதையும் தாண்டி வெற்றிகரமாய் அவற்றை சோழர்களிடம் சேர்ப்பித்தாக வேண்டும். அதுவரை இன்னும் என்ன என்ன சோதனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்குமோ? கையில் வாள் இருக்கிறது. நெஞ்சில் உரம் இருக்கிறது. நேர்மைத்திறன் இருக்கிறது. ஆகவே எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன்’ என்று உறுதி பூண்டான்.

பிறகு அவை இரண்டையும் உள்ளே வைத்துப் பெட்டியை மூடினான். பெட்டியிலிருந்த பூட்டை வெளியில் எடுத்துத் தூக்கி எறிந்தான்.
“இனி நாம் கலத்துக்குத் திரும்பலாம்” என்று அனைவருக்கும் கட்டளையைப் பிறப்பித்தான்.

பெட்டியை இருவர் தூக்கிக்கொண்டு வர மற்ற எல்லோரையும் அழைத்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கி பள்ளத்தாக்கில் நடந்து வந்து, மறுபடி மேலேறி வந்தியத்தேவன் பாறையை வந்தடைந்தான்.

ஓர் அடர்ந்திருந்த புதருக்கு அருகில் பெட்டியைக் கீழே வைக்கச் சொன்னான். அங்கிருந்து சற்றுக்  கீழே எல்லோரும் வந்தபின் எல்லோரையும் சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொன்னான்.
அனைவரும், வந்தியத்தேவன் உள்பட அமர்ந்தார்கள்.

சற்று நேரம் கழித்து வந்தியத்தேவன் எதையோ மறந்து விட்டவன்போல் எழுந்து நின்றான்! பெட்டியை நோக்கி நடந்தான். மற்றவர்கள் வியப்புடன் பார்த்தார்கள்!

பெட்டி புதருக்குப் பின்னால் இருந்ததால் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அது தென்படவில்லை! வந்தியத்தேவன் புதருக்குப் பின்னால் சென்று அவனும் மறைந்தான்!

அவர்கள் இருந்த இடத்திலிருந்து அவனைப் பார்க்க இயலவில்லை. அங்கு என்ன செய்தான் என்பது அவர்களுக்குத் தெரியாது! என்ன செய்திருப்பான் என்பதை யாமும் அறியோம்!!!

சிறிது ஓய்விற்குப் பின்..
செவ்வேந்தி முதலானோர் புதருக்குப் பின்னால் இருந்த வந்தியத்தேவன் பக்கம் வந்தார்கள்.

செவ்வேந்தி வந்தியத்தேவனைப் பார்த்து “ஏதாவது பிரச்சனையா?” என்றான்.
அதற்கு வந்தியத்தேவன்..
“இல்லை..இல்லை, பொக்கிஷங்களை மறுபடியும் பார்த்து மகிழ்ந்தேன், அவ்வளவுதான்” என்றான்.

வீரர்களிடம் சாக்கிலிருந்து பூட்டையும், சாவியையும் எடுத்து வரச் சொல்லி, வந்தபின் பெட்டியைப் பூட்டால் பூட்டினான். சாவியைத் தூர எறிந்தான்.

எல்லோரும் பெட்டியுடன் மறுபடி கரையை அடைந்தார்கள். வந்தியத்தேவன் கலம் இருந்த பக்கத்தை நோக்கினான். மூன்று கலங்கள் அவர்களின் கலத்திற்கு அருகில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தன!
வந்தியத்தேவன்செவ்வேந்தியிடம் “திருமலை, நமக்காக நான் கேட்டிருந்தபடி போர்க்கலங்களுடன் வந்திருக்கிறான். நாம் சீக்கிரமாக அங்கு சென்று அவர்களைச் சேர்வதுதான் நமக்கு நல்ல பாதுகாப்பு” என்றான்.

பெட்டியும் சாக்குகளும் படகில் முதலில் ஏற்றப்பட்டன. பிறகு மற்றோர் ஏறினர். மாலுமிகள் விரைவாகத் துடுப்பு வலித்து அவர்கள் கலத்தை அடைந்தார்கள். மேலிருந்து கீழே ஒரு கயிறு வீசப்பட்டது. பெட்டியை அதில் கட்டி மேலே இழுக்க, வந்தியத்தேவன் செய்கை காட்டினான். பெட்டி மேலே இழுக்கப்பட்டது! பிறகு அவர்கள் கொண்டு வந்திருந்த பொருட்கள் ஏற்றப்பட்டன. மற்றவர்கள் கீழே வீசிய கயிற்று ஏணியின் மூலம், ஒவ்வொருவராக மேல்தளத்தில் ஏறினார்கள். வந்தியத்தேவனும் கடைசியில் அவர்களைப் பின் தொடர்ந்தான்.

வந்தியத்தேவன் மேலே ஏறியதும் சடசடவென்று சில மாறுதலான நிகழ்ச்சிகள் வாயு வேகத்தில் நடந்தன. என்ன என்று தெரிந்து கொள்ளுமுன் அவனை  பத்துக்கும் அதிகமான போர்வீரர்கள் சூழ்ந்துகொண்டு கட்டிப்பிடித்தார்கள்.

வந்தியத்தேவன் சுற்றிப் பார்த்தான். தூரத்தில் அவனுடன் வந்த சோழ வீரர்கள், மாலுமிகள், செவ்வேந்தி மற்றும் எஞ்சியிருந்த மற்றோர் அனைவரும் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டான்.

பொக்கிஷப் பெட்டி கீழே வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தான்.
சுற்றியிருந்த போர்க் கலங்களை நோக்கினான். அவை போர்க்கலங்கள் அல்ல என்பதை அறிந்துகொண்டான். மேலே பறந்து கொண்டிருந்த புலிக்கொடிகள், மண்டை ஓட்டுச் சின்னம் கொண்ட கடல் கொள்ளைக்காரர்களின் கொடிகளாக மாற்றப்படுவதைப் பார்த்து அதை உறுதி செய்துகொண்டான்.

‘திருமலை போர்க் கலங்களுடன் வருமுன் கொள்ளைக்காரர்கள் முந்திக் கொண்டுவிட்டார்களே, இது என்ன கொடுமை!’ என்று எண்ணினான்.
ஒரு பயங்கர சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

கீழ்த்தளத்திலிருந்து ரவிதாசன் எக்காளமிட்டுக் கொண்டே, கருத்திருமன், சோமன்சாம்பவன் புடை சூழ வந்தியத்தேவனை நோக்கி வந்து நின்றான்.

“வந்தியத்தேவா, எப்படி எங்கள் இந்த சோழப் படைவீரர்கள் வேடம்? நீ எவ்வளவோதடவை எங்கள் வேலைகளில் பிரவேசித்து சீரழித்திருக்கிறாய்! ஆனால் இந்த முறை அது பலிக்கப்போவது இல்லை!. எங்கள் பொக்கிஷம் எங்களிடமே சேர்ந்துவிட்டது.. அதுவும் உங்கள் உதவியினாலேயே..” என்று கூறி “ம்..” என்று மற்றவர்களுக்கு ஓர் செய்கை செய்தான்.

பெட்டி கயிற்றினால் கட்டப்பட்டு, கீழ் இறக்கப்பட்டு, படகில் அவர்களின் ஒரு கலத்தில் ஏற்றப்படும்வரை ரவிதாசன் பார்த்து கொண்டிருந்தான்.
“இனி உன்னை இப்படியே விட்டு வைத்திருப்பது எங்களால் இயலாத காரியம்.உன்னுடைய கதையை இப்போதே முடிக்கிறேன்! உன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்; போன முறை நாங்கள் உன்னை விட்டுவிட்டது மகாராணியின் தயவால்.. இந்த முறை.. அது நடவாது” என்று வந்தியத்தேவன் முன் சென்று கத்தியை இடுப்பிலிருந்து உருவப் போனான்.
“சோழர் போர்க் கலங்கள் மூன்று நம்மை நோக்கி விரைவாக வந்து கொண்டிருக்கின்றன” என்று ஒரு கொள்ளைக்காரன் பாய்மரத்தின் உச்சத்திலிருந்து கத்திச் சொல்லிவிட்டுக் கயிற்றின் மூலமாக வேகமாகக் கீழே இறங்கி வந்தான்!

ரவிதாசனின் கவனம் சிதறியது. அந்த ஒரு கணம்தான் வந்தியத்தேவனுக்குத் தேவைப்பட்டது.

கைகளை உதறிக்கொண்டு தலைகீழாக மேலே எழும்பி ஒரு சுற்று சுற்றிக் கொள்ளைக்காரர்களின் பின் சென்று சுதாரித்துக் கொண்டு கத்தியை இடுப்பிலிருந்து உருவினான்.

கொள்ளைக்காரர்கள் கத்தியுடன் அவன்மேல் பாய்ந்தார்கள். பயங்கர கைகலப்பு தொடங்கியது. வந்தியத்தேவன் இருவரை மேல் உலகத்திற்கு அனுப்பினான். அதே சமயம் அவன் மேல் எறியப்பட்ட கத்தி படாதவாறு இமைக்கும் நேரத்தில் விலகி நின்றான்.

சட் சட்டென்று சோழ போர் வீரர்களின் கைக்கட்டுகளை அறுத்துவிட்டான்.

அவர்களும் சண்டையில் கலந்தார்கள்.
சோழர்களின் பலம் அதிகரித்ததைக் கண்டு கொள்ளைக்காரர்களுக்குக் கேட்கும்படியான பெரிய குரலில் ரவிதாசன் “கடலில் உடனே குதித்து நம் கலங்களுக்கு விரையுங்கள்” என்றான்.

விருட்டென்று திரும்பி, கலத்தின் விளிம்பில் கட்டப்பட்டிருந்த ஒரு பாய்மரக்கம்பத்தின் கயிற்றைக் கத்தியால் ஒரு வெட்டு வெட்டி மறுகணத்தில் கடலில் குதித்தான்.

அவன் மேல் பாய்ந்த வந்தியத்தேவன் தரையில் குப்புற விழுந்தான். பாய்மரக் கம்பம் அவன் தலையின்மேல் சரிந்தது. நிமிர்ந்த வந்தியத்தேவனின் தலை மறுபடி தரையில் சாய்ந்தது! அவன் சுய நினைவை இழந்தான்!

ரவிதாசன் முதலியோர் அவர்கள் கலத்தில் ஏறியபின் கொள்ளைக்காரர்களுக்கு மற்றும் ஒரு சைகை செய்தான்.
அவர்கள் தீ பொருத்திய எரியம்புகளை சர்சர் என்று வந்தியத்தேவனின் கலத்தின் மேல் சரமாரியாய் பொழிந்தனர். தீ முதலில் பாய்மரப் பாய்களைக் கவ்வியது! பிறகு மற்ற இடங்களிலும் பரவ ஆரம்பித்தது.முடிவாக கலத்தின் மேல் பகுதி முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அதில் மிகத்திருப்தி அடைந்த ரவிதாசன் “ஒழிந்தான் வந்தியத்தேவன்!” என்று பெருங்குரலில் கூறிவிட்டு அவர்களுடைய கலங்களை கிளம்புவதற்குக் கட்டளையிட்டான்! கலங்கள் அந்த இடத்திலிருந்து விரைவாக அகன்றன!

**********************************************************************

தொலைவில் வந்துகொண்டிருந்த சோழர் கலம் ஒன்றிலிருந்து திருமலை, வந்தியத்தேவன் தீவுக்குக் கொண்டு வந்திருந்த கலத்தின் பக்கத்தில் வேறு மூன்று பெரிய கலங்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு அவை கடற்கொள்ளைக்காரர்கள் என்று பார்த்தவுடனே அறிந்து கொண்டான்.
அந்த மூன்று கலங்களும் வந்தியத்தேவன் கலத்தைவிட்டு வேகமாக வேறுபக்கத்தில் செல்லத் தொடங்கியதையும் அவன் கண்டான்.
ஆனால்.. என்ன இது வந்தியத்தேவன் கலம் இப்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறதே என்று பதறி, ‘வந்தியத்தேவனுக்கு என்ன நேர்ந்திருக்குமோ? கொள்ளைக்காரர்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும்’ என்று எண்ணி கலபதியிடம் “நாம் இப்போது எரிகின்ற நமது கலத்தைக் காத்தாக வேண்டும். அதில் இருப்பவர்களை தீயிலிருந்து மீட்டாக வேண்டும். உடனே மற்ற கலபதிகளிடம் இதைத் தெரிவியுங்கள்” என்றான்.
கலபதி சைகை விளக்கு மூலம் மற்ற கலபதிகளிடம் செய்தியைத் தெரியப்படுத்தினான்.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் எப்படித் தீயை அணைத்து கலத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவது, என்பதில் கைதேர்ந்த வீரர்களைக் கொண்ட அந்தச் சோழர் கலங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தடைந்தன.

(தொடரும்) 

மணி மகுடம் – ஜெய் சீதாராமன்

இதுவரை…….

 இடைக்கால சோழர் உத்தம சோழர் தஞ்சையில் ஆண்டு கொண்டிருந்த போது சோழர் கீழிருந்த வாணகப்பாடி நாட்டு சிற்றரசன்  வந்தியத்தேவன் ஈழத்தின் போர் புரிந்துகொண்டிருந்த சோழர் படையின் புது சேநாதிபதியாக நியமிக்கப் பட்டிருந்தான்.   

   புதுப் பதவியை ஏற்குமுன் பாண்டியர் வம்சாவளி மணிமகுடத்தையும் மற்றும் புராதானமான  இரத்தின மாலையையும்  ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இரகசியத்தின் தகவல்கள் அவனுக்குத்  தற்செயலாகத் தெரியவருகிறது. அதனை மீட்டியபின்னர்  பதவி ஏற்கும் எண்ணத்தோடு இலங்கைக்கு, முதன் மந்திரியின் ஒற்றன் திருமலை உதவியொடு பூதத் தீவுக்கு வருகிறான்.

 இனி……………………..

அத்தியாயம் 10. பூதத்தீவு

 

அனைவரும் மீண்டும் வேளார் இருப்பிடம் வந்துசேர்ந்தனர். நடந்த அறிந்த விபரங்களை வேளாரிடம் கூறினான் திருமலை.
வந்தியத்தேவன் பெரிய வேளாரிடமிருந்து சிறிய கலம் ஒன்றைப் பெற்றுக்கொண்டான். அதில் மாலுமிகளைத்தவிர சில படை வீரர்களையும் சேர்த்துக் கொண்டான். சில தண்ணீர் குடுக்கைகளையும் எடுத்து வரச்செய்தான். செவ்வேந்தியின் உத்தரவுக்குப் பணிந்து மாலுமிகள் வந்தியத்தேவன், திருமலை முதலியோரை பூத தீவுக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.. கலத்தை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினர். ஒரு படகு கீழே இறக்கப்பட்டது.
வீரர்கள் தண்ணீர் குடுக்கைகளை கயிற்றின் மூலம் முதுகில் கட்டிக் கொண்டார்கள். இரு மாலுமிகள் துடுப்பு போட, வந்தியத்தேவனும், திருமலையும் செவ்வேந்தியையும் கூட ஐந்து வீரர்களையும் அழைத்துக்கொண்டு கரையின் தென்பக்கம் வந்தனர்.
வந்தியத்தேவன் மாலுமிகளைக் கரையோரமாக தீவை வலம் வரச் சொன்னான். இருவரும் வீடு ஏதாவது தென்படுகிறதா என்று கரையை நோக்கிப் பார்த்த வண்ணமிருந்தார்கள்..

சிறிது தூரம் வந்ததும் கரையோர மரங்களுக்கும் புதர்களுக்குமிடையே ஒரு வீட்டின் கூரை தெரிந்தது.

படகைக் கரையோரம் சென்று நிறுத்துமாறு வந்தியத்தேவன் ஆணையிட்டான்.. அவ்வாறே படகு நிறுத்தப்பட்டு எல்லோரும் இறங்கிப்   படகை மண்ணில் இழுத்து இருத்தினார்கள்.

வந்தியத்தேவன் வீட்டை நோக்கி நடந்தான். மற்றவரும் அவனைத் தொடர்ந்தனர். சிறிய வீட்டின் வாயிலை அடைந்ததும் வந்தியத்தேவன் வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டான்.

சுற்றுமுற்றும் தன் கண்களைச் சுழலவிட்டு, யாரேனும் தென்படுகிறார்களா என்று பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை.

செவ்வேந்தியிடம் பூட்டை உடைக்குமாறு பணித்தான். வீரர்கள் பூட்டை உடைத்தார்கள்..

அவர்களை வெளியிலேயே காவலிருக்கச் செய்துவிட்டு, திருமலையும் வந்தியத்தேவனும் உள்ளே நுழைந்தார்கள்.
உள்ளே சென்ற வந்தியத்தேவனும், திருமலையும் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள்.

ஆனால்..

அங்கே அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
“திருமலை!உள்ளே நன்றாக சோதனை செய்தும் பயன் ஒன்றுமில்லையே! உள்ளே ஒரு புத்தர் சிலையைத் தவிர வேறேதுமில்லையே! ஒன்றும் புரியவில்லை! நமது முயற்சி வீண்தானா?” என்றான் கவலையுடன் வந்தியத்தேவன்.

திருமலை தனது பாதி மழித்த தலையை கையால் ஒருதரம் தடவிக் கொண்டான்!

“இல்லை வந்தியத்தேவா..சிறிது பொறு. நாம் சற்று வெளிப்புறமாகப் பார்ப்போம். நீ இடதுபுறமாகச் செல். நான் வலதுபுறம் பார்க்கிறேன்” என்று கூறி மளமளவென்று தனது சரீரத்தைத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் வந்தியத்தேவனின் பதிலை எதிர்பாராமலே.
வீட்டைச்சுற்றி வலம் வந்தான். கிழக்குப் பக்கத்துச் சுவற்றை வந்தடைந்ததும், அவனுக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. சந்தோஷ மிகுதியில் அவன் கூவத்தொடங்கினான்.

“வந்தியத்தேவா!கவலை வேண்டாம்! நமக்கு வேண்டியவை வீட்டின் இந்தச் சுவற்றில் இருக்கின்றன” என்றான்.

அவன் கூக்குரலைக் கேட்டவுடன் வந்தியத்தேவன் அவன் நின்றிருந்த இடத்தை நாடினான்.

அங்கு பாறைச் சுவற்றில் தமிழில் இடதிலிருந்து வலமாய் எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருந்தன. அவைகள் ஸ்ரீராமஜயம் எழுதுவதுபோல் முதலிலிருந்து கடைசிவரை தொடர்ச்சியாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.

புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம்..

அவைகள் ஏதோ மலைத்தொடர் போல் தொடர்ச்சியாக நீண்டுகொண்டே போயின.

இதனைப் பார்த்த வந்தியத்தேவன்.. சிறிது சிந்தனைக்குப் பின் திருமலையைப் பார்த்து “இந்த எழுத்துக்கள் நம்மை வேண்டுமென்றே, ஏமாற்றுவதற்காக செதுக்கப்பட்டிருக்கிறதுபோல் தோன்றுகிறது. இந்த ஆயிரக் கணக்கான எழுத்துக்களின் இடையே ஏதாவது குறிப்புகள் மறைந்திருக்கலாம்!” என்று கூறி செவ்வேந்தியைப் பார்த்து “செவ்வேந்தி, இந்த புத்த மகா வாக்கியங்களைத் தவிர வேறு மாற்றான வார்த்தைகள் இடையே செதுக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை முதலிலிருந்து தொடங்கி கடைசி வரை ஆராய்ந்து பார்த்துச் சொல்” என்றான்.
செவ்வேந்தி அவ்வாறே ஆராய்ந்து மிகவும் உன்னிப்பாகப் பார்க்கத் தொடங்கினான், பாதி வரை மாற்றான எழுத்துக்கள் ஏதும் இல்லை.
தொடர்ந்து அலசிக் கொண்டிருந்தான். திடீரென்று..
“வந்தியத்தேவரே, நீங்கள் சொன்னது உண்மைதான்.முதல் எழுத்து ‘கி’ தென்படுகிறது அதற்குபின் இடை இடையே ஒவ்வொரு தனியான எழுத்து ஆங்காங்கே புகுத்தப்பட்டிருக்கிறது” என்றான்.

மகிழ்ச்சியுடன் திருமலையை நோக்கித் திரும்பிய வந்தியத்தேவன், “செவ்வேந்தி! நீ சொல்லும் எழுத்துக்களை நான் தரையில் அப்படியே எழுதுகிறேன்” என்று ஒரு குச்சியைக் கொண்டு எழுதலானான்.
செவ்வேந்தி படித்துச் சொல்லச் சொல்ல எழுத்துக்கள் பிரிக்கப்பட்டன.
முதலில் ‘கி..ழ..க்..கு’ என்று தொடங்கி சொல்லிக்கொண்டே போனான். வந்தியத்தேவன் தரையில் குச்சியால் அவன் சொன்ன வார்த்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக எழுத ஆரம்பித்தான். இடை இடையே அவன் கண்டுபிடித்துச் சொன்ன வார்த்தைகள் கடைசியாக முடிவடைந்தன. வந்தியத்தேவன் எழுதிய வார்த்தைகள்..

வந்தியத்தேவன் சிறிது நேரம் அதை உற்றுப் பார்த்து தெளிவாக்க ஆலோசனை பண்ணினான்! விடை கிடைத்தது! கீழே வார்த்தைகளை விளக்கம் தரும் வகையில் எழுதினான்:

வந்தியத்தேவனும் திருமலையும் மண்டைகளைப் பிய்த்துக்கொண்டு வார்த்தைகளின் நோக்கத்தை அறிய முயன்றார்கள்.
வந்தியத்தேவன் “இந்த வார்த்தைகளில் மறைந்திருக்கும் புதிர் பொக்கிஷங்களை அடைவதற்கான வழியைச் சொல்லுகின்றன போலும்! முதல் புதிர் ‘கிழக்கு.’ இந்த இடத்திலிருந்து மறைந்திருப்பவை கிழக்கு திசையில் இருப்பதாக அறிவிக்கிறது” என்றான்.

“இரண்டாம் எழுத்து ‘கால்வாய்’ நாம் செல்லும் பாதை ஒரு கால்வாயில் கொண்டுபோய்ச் சேர்க்கும்” என்றான் திருமலை.

“நாம் இதுவரை எடுத்திருக்கும் விடைகளை மனதில் வைத்துப் பார்க்கும்போது கால்வாயின் முடிவில் வடக்கு நோக்கிச் செல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.அங்கு ஒரு பாறை! அதை அடைவதற்கான வழி இந்தப் புதிர்களில் கிடையாது! அதைப் பற்றி தெரிந்துகொள்ள கால்வாயின் முடிவில் ஏதாவது குறிப்புகள் அல்லது வழிகள் தென்படலாம்! பாறையின் கீழே மறைந்திருக்கும் இடத்தைப் பற்றி ஏதோ விளக்கம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. மேலே ஏதோ புலப்படும் என்ற புதிரின் விடை அங்கு சென்றபின்தான் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும்” என்றான் வந்தியத்தேவன்.
“சபாஷ்!வந்தியத்தேவா, நாம் இப்போதே கிழக்கு நோக்கிச் சென்று கால்வாயைக் கண்டுபிடிப்போம்” என்றான் திருமலை.

எல்லோரும் கிழக்கு நோக்கி நடக்கலானார்கள்.
சிறிது நேரம் கழித்து சதுப்புநிலக் கால்வாய் ஒன்று தென்பட்டது. இயற்கையால் ஆக்கப்பட்ட கடல் தண்ணீர் நிறைந்த கால்வாய் கடற்கரையின் தென் பக்கத்திலிருந்து தொடங்கி வடக்கு திசையில், நீளமாக ஒரு நீண்ட ஆறுபோல் வளைந்து வளைந்து சென்றது. அங்கிருந்து பார்க்கும்போது முடிவில்லாத கால்வாய் போன்று தோன்றியது.

வந்தியத்தேவன் கால்வாயை அடைந்ததும் கிழக்கிலிருந்து திசையைத் திருப்பி வடக்கு வழியாக கால்வாயை ஒட்டி எல்லோரையும் அழைத்துச் சென்றான்.

சென்று கொண்டே இருந்தார்கள். ஆனால் முடிவு வருவதாக இல்லை! அவர்களின் மனோநிலை அவ்வாறு இருந்தது! ஓரிரு காத தூரம் வரை வந்திருப்பார்கள்! ஆரம்பம் என்றால் முடிவு ஒன்று இருக்கத்தானே வேண்டும்! அந்த கால்வாய் ஒரு மலைத் தொடரின் அடிவாரத்தில் வந்து முடிவடைந்தது.

வந்தியத்தேவன் எல்லோரையும் கையைக் காட்டி நிறுத்தினான். வடக்கில் கால்வாய் முடிந்த இடத்திலிருந்து, தொடர்ந்து அதே திசையில் மேற்கொண்டு ஏதாவது பாறை தென்படுகிறதா என்று பார்த்தான். மலையைத் தவிர பாறை அங்கு எங்கும் காணோம்!

சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த போது..
“அதோ!மலையின் நடுவில் பார்! அங்கு ஓர் தனி பாறை தென்படுகிறது. புதிரில் கூறப்பட்டிருந்தது போல் இங்கிருந்து வடக்கில்தான் இருக்கிறது. அந்தப் பாறையைத் தவிர பக்கத்தில் வேறு பாறைகள் இல்லை!” என்று உள்ளம் பொங்கக் கூறினான்.

“சரி திருமலை..நாம் அந்தப் பாறையை நோக்கி நகர்வோம்” என்று கூறி அனைவரையும் அப்பாறையை நோக்கித் திருப்பினான் வந்தியத்தேவன்.
எல்லோரும் பாறையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார்கள். மலையில் பாறையின் தென்பாகத்தை அடைந்தார்கள்.
பாறை இரண்டு ஆட்கள் உயரமும், மேலே சுமாரான சமதரையும் இருப்பதையும் கவனித்துக் கொண்டான் வந்தியத்தேவன்.

“அடுத்த புதிர் ‘கீழே விளக்கம்’ அல்லவா?அப்படியென்றால் பாறையின் கீழ் ஏதாவது தென்படுகிறதா என்று பார்க்கலாம்” என்றான் வந்தியத்தேவன்.

அவனும் திருமலையும் பாறையைச் சுற்றி முழுவதையும் அலசினார்கள். ஒன்றும் பயனில்லை. பாறையைச் சுற்றிலும் புதர் வளர்ந்து மண்டியிருந்தது.

வந்தியத்தேவன் “திருமலை, ‘கீழே விளக்கம்’ என்ற புதிரின் விடை பாறைக்கு அருகில் மண்டியிருக்கும் புதரை அகற்றினால் தெரியக்கூடும்” என்றான்.

திருமலை அதை ஆமோதித்தான்.

இருவரும் மற்றவர் உதவியோடு பாறையைச் சுற்றிலும் அடர்ந்திருந்த புதர்களைத் தங்களின் வாளினால் வெட்டி அகற்ற ஆரம்பித்தார்கள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு வீரன் ஒருவன் “செவ்வேந்தி அவர்களே, இங்கு பாறையில் ஏதோ தென்படுகிறது” என்று கூவினான்.

அனைவரும் அவ்வீரன் இருந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு நீண்ட சதுரமான திசைகாட்டியைப்போல் கல் ஒன்று, பாறையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, புதர்களை நீக்கியதால் தெரிய வந்தது. அதில் ஏதோ செதுக்கப்பட்டிருந்ததை வந்தியத்தேவன் கவனித்தான்.
அதில் ஒரு மலையின் வடிவம் செதுக்கப்பட்டிருந்தது. ஒரு உருண்டைக் கல் மலையின் உச்சியின் சிறிது சரிவில் நன்றாக அமர்ந்திருந்தது! கீழே விழுந்துவிடாமல் சரிவில் இருந்தது ஒரு பெரும் அதிசயமாய் காணப்பட்டது! கல்லின் கீழ் ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்ததையும், பெட்டியின் மேல் ஒரு மீனின் சின்னம் இருந்ததையும் கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. இவைகள் அனைத்தையும் அவர்கள் கண்டார்கள்!
திருமலையிடம் “கடைசியில் நாம் எதைத்தேடி வந்தோமோ அதன் இருப்பிடத்தைப்பற்றிய உண்மை தெரிந்துவிட்டது. ஆனால் எங்கே இருக்கிறது இந்த மலையும், உருண்டைக் கல்லும்?” என்றான் வந்தியத்தேவன்.

திருமலை “இதற்கான விடை கடைசி புதிரான ‘மேலே புலப்படும்’ என்பதில் இருக்கலாம்” என்றான்.

வந்தியத்தேவனும் திருமலையும் சிறிது நேரம் சிந்தித்தார்கள்.
“ஏன் திருமலை ஒருவேளை பாறையின் மேல் நமக்கு வேண்டியவைகளைப் பற்றிய மற்றும் ஒரு குறிப்பு கிடைக்குமோ என்னவோ?” என்று வினவினான் வந்தியத்தேவன்.

அதற்கு திருமலை “உண்மைதான் வந்தியத்தேவா. அப்படியாகத்தான் இருக்கவேண்டும். இவ்வளவு தூரம் வந்துவிட்டு அதையும் பார்க்காமல் போகமுடியாது. அதையும் பார்த்துவிடுவதே நல்லது” என்று ஆமோதித்தான்.

“திருமலை அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.இரண்டு ஆட்கள் உயரமான பாறை, செங்குத்தாக மற்றும் வழுமனாக இருப்பதால் அதில் ஏற ஏணி வேண்டும் அல்லது யுத்தத்தில் கையாளப்படும் இடுப்புடன் கூடிய கயிறு தேவை. அவை இரண்டும் நம்மிடம் இப்போது இல்லை. வேறு வழி கண்டு பிடித்தாக வேண்டும்” என்றான் வந்தியத்தேவன்.

ஒரு வழியும் அவர்களுக்குப் புலப்படாததால், கடைசியாக இதைப் பற்றி பேசி விவாதிக்க செவ்வேந்தியை அழைத்துப் பேசிப் பார்க்கலாம் என்று முடிவுக்கு வந்தார்கள் இருவரும்..

செவ்வேந்தி “கவலையைவிடுங்கள். இது எங்களுக்கு ஒரு பிரச்சனையே அல்ல! போர்ப் பயிற்சியில் இதை கையாளுவதைப் பற்றி நிறையவே கற்றிருக்கிறோம். ஒரு கணம் எனக்கு அவகாசம் கொடுங்கள்” என்று பதில் அளித்து வீரர்களிடம் சென்று கிசுகிசுத்தான்.

மூன்று வீரர்கள் வரிசையாக பாறையைப் பார்த்த வண்ணம் நின்றார்கள். நடுவில் இருந்தவனின் தோள்களில் பக்கத்திலிருந்தவர்கள் தலைக்கு ஒரு கையைப் போட்டு பிடித்துக் கொண்டனர். பிறகு மூவரும், பின் பக்கம் நான்கு கை விரல்களைக் கோர்த்து இரு கோப்பைகளாக்கினர். திருமலையும் செவேந்தியும் மூன்று வீரர்களுக்கு முன் வந்து நின்று கொண்டார்கள். இப்போது ஒரு வீரன் இடது பக்க கிண்ணத்தில் தன் ஒரு காலை வைத்து, இடப் பக்கமிருக்கும் இரு தலைகளிலும் தன் கைகளினால் அமுக்கி, நடுவரின் இடப்பக்க இரு தோள்களில் முதலில் தன் ஒருகாலைப் பொருத்தி, பின் மற்ற காலையும் வைத்து, மெதுவாக எழுந்து, இருகைகளையும் பாறையில் இருத்தி நன்றாக பாறையின் முன் சாய்ந்து கொண்டான்.

செவ்வேந்தி அவன் இரு கால்களை நன்றாகப் பிடித்துக் கொண்டான். அடுத்த வீரன் அவ்வாறே வலப் பக்கம் செய்தான். அவனிரு கால்களையும் திருமலை பிடித்துக் கொண்டான். இப்போது மேலிருக்கும் இருவரும் நான்கு கை விரல்களைக் கோர்த்து இரு கோப்பைகளாக்கினர்.
எஞ்சியிருந்த மாலுமிகள் வந்தியத்தேவனுக்கு உதவி செய்ய, அவன் இரு கோப்பைகளிலும் கால்களை வைத்து, தலைகளில் கைகளை வைத்து அமுக்கி, நடுவரின் தோளில் இரு கால்களையும் வைத்து மேலிருப்பவர்களின் உடம்பைப் பற்றியபடியே ஏறி நின்றான். பிறகு அதைப் போலவே மேலிருப்பவர்களின் தோள்களில், பாறையில் சாய்ந்த வண்ணம் ஏறலானான்.

வந்தியத்தேவனின் கால்கள் கிட்டத்தட்ட பாறையின் சமதரைக்கு இணையாக இருந்ததால், குனிந்து தரையில் கைகளை வைத்தபடியே ஏறி பாறையின் மேல்பாகத்திற்கு வருவதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அங்கிருந்து தாவி பாறையில் ஏறி நின்றான்.
பாறையின் மேல்பாகத்தை முற்றிலும் நன்றாகச் சோதனை செய்தான். மூலை முடுக்கெல்லாம் தேடினான். என்ன ஏமாற்றம்! ஒரு குறிப்பும் தென்படவில்லை!

“திருமலை, இங்கு ஒரு விவரமும் இல்லை!இது பெரிய ஏமாற்றமே. இவ்வளவு சிரமப்பட்டும் பலன் இல்லாமல் போய்விட்டது” என்று பெருங் குரலில் கூறினான் வந்தியத்தேவன்.

பிறகு பாறையின் மறு பக்கத்தை நோக்கினான்.

மலையின் எஞ்சியிருந்த மேல் பாகம் தெரிந்தது. அதன் உச்சித் தொடர் நீண்ட நேர் கோடுபோல் இருந்தது ஒரு அதிசயமாகத் தென்பட்டது. உச்சியை அடைய சிறிது தூரமே பாக்கி இருந்தது. இதையெல்லாம் கவனித்த வந்தியத்தேவன்செவ்வேந்தியிடம் “கீழே வர இருக்கிறேன்” என்று கூறி சிறிது நேரத்தில், ஏறியதைப் போலவே இறங்கி வந்து அவர்கள் முன் நின்றான்.

“திருமலை, நமக்கு வேண்டியவைகள் இங்கில்லை” என்று மலையின் உச்சியைக் காண்பித்து “ஒருவேளை அங்கே புலப்படும்” என்றான்.
எல்லோரும் மறுபடி நடந்து உச்சியை அடைந்தார்கள். மறு பக்கத்தை நோக்கினார்கள். அவர்களின் கண்களை அவர்களால் நம்பமுடியவில்லை! மலையின் மறுபக்கத்தில் ஒரு பசுமை நிறைந்த பள்ளத்தாக்கு. சிறிது தூரத்தில் மரங்களும் செடிகளும் நிறைந்த ஒரு குன்று. அதன் சிகரம் இந்த மலையின் பாதி உயரமிருக்கும். சிகரத்தின் உச்சியிலிருந்து சிறிது கீழே சரிவில், ஒரு உருண்டைக் கல்லின் மேல் பாகத்தின் முக்கால் பகுதி, பக்கவாட்டில் நீட்டிக் கொண்டிருந்தது!
குன்றின் மறு பகுதியின் கீழே கடல் நீர். அது தீவின் மறு பக்க முடிவாக இருக்கலாம்! இவற்றையெல்லாம் எல்லோரும் கண்டார்கள்!

“இறுதியில் நமக்கு வேண்டியவைகள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டோம்!வாருங்கள். அங்கு செல்லலாம்” என்று வந்தியத்தேவன் மலையின் மறுபக்கத்தில் இறங்கி நடக்கலானான். பள்ளத்தாக்கு மூலம் குன்றை சென்றடைய விரும்பினான். அனைவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

எல்லோரும் பள்ளத்தாக்கில் இறங்கி சிறிது நேரம் சமதரையில் நடந்து குன்றின் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

குன்று ஏறிச் செல்ல இயன்றதாய் அமைந்திருந்தது. உருண்டைக் கல்லின் அருகாமையில் வந்துசேர அவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
வந்தியத்தேவன் கல் அமர்ந்திருந்த இடத்தைக் கவனித்தான். அதைச் சுற்றிலும் பார்த்தான். நன்கு ஆராய்ந்தான். கைகளைக் கட்டிக்கொண்டு இரண்டு மூன்று தரம் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

திருமலையும் அவன் பங்குக்கு கையைப் பிசைந்துகொண்டு மனதை அலசி ‘எப்படி அந்தக் கல்லை நகர்த்துவது?’ என்பதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

இருவருக்கும் அதற்கான பதில் கிடைக்கவில்லை.

வந்தியத்தேவன் “மகிந்தன் யாரும் எளிதில் செய்ய இயலாத காரியத்தை எப்படியோ சாதித்திருக்கிறான்! கல்லின் அடியில் பொக்கிஷம் இருப்பது உண்மை! அதை அவனால் எப்படி அந்த இடத்தில் வைக்க இயன்றது? மாபெரும் சாதனை!” என்றான். பிறகு மேற்கு வானத்தை நோக்கி “சூரிய அஸ்தமனம் தொடங்க ஆரம்பமாகியிருக்கிறது. இனிமேல் பொக்கிஷத்தை அடையும் வழியைக் கண்டுபிடித்து, அதை இருட்டுவதற்குள் வெளிக் கொண்டுவருவது என்பது இயலாத காரியம். நாம் இப்போது படகுக்குத் திரும்பலாம். கலத்திற்குச் சென்று உண்ட பிறகு இரவில் அடுத்த காரியத்தை எப்படித் தொடங்கி முடிப்பது என்பதைப் பற்றி யோசிக்கலாம்” என்றான்.

எல்லோரும் வந்த வழி நடக்கலாயினர்.

ஆனால்..
அவர்களை இரு நரிக் கண்கள் நோட்டமிடுவதை யாரும் கவனிக்கவில்லை.

குன்றுக்கு வெகு தொலைவில் ஒரு புதருக்கு பின்னால் மறைந்திருந்த சோமன்சாம்பவன், வந்தியத்தேவன் குழுவினர் நடவடிக்கைகளை இமை கொட்டாது, இரத்தம் கொதிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் மறைந்ததும், வெளியில் வந்து தீவின் வட கடற்கரைக்குத் தலை தெறிக்க ஓடினான். படகில் ஏறி படகோட்டியிடம் வேகமாக வடக்குப் பக்கம் வலிக்கச் சொன்னான்.

மற்றவர்கள் நடந்து வந்துகொண்டிருந்த போது “நீ கொல்லிமலையில் கண்ட விவரத்தின்படி நாம் காலம் கடத்தும் ஒவ்வொரு கணமும் கடல் கொள்ளைக்காரர்களுக்கு சாதகமாய் அமையப்போகிறது. எந்த நேரத்திலும் அவர்கள் வந்து நமக்குத் தொல்லை கொடுக்கலாம்! என்று வந்தியத்தேவனிடம் கூறினான் திருமலை.

“அது முற்றிலும் உண்மை.இடும்பன்காரி கொல்லப்பட்டது இப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். எனக்குக்  கிடைத்திருக்கும் இந்த அரிய ஒரு நாள் சந்தர்ப்பத்திற்கு இப்போது பங்கம் விளையலாம்! அடுத்த நாள் அவர்கள் தொடங்க இருந்த பயணத்தை முதல் நாளிலேயே ஆரம்பித்திருக்கலாம்.. “ என்று வந்தியத்தேவன் சிறிது நேரம் மௌனமானான்.

இப்போது பாறைக்கு வெகு அருகில் அவர்கள் நடந்து வந்திருந்தார்கள்.
வந்தியத்தேவன் முகம் திடீரெனத் தெளிவடைந்தது. திருமலையின் தோளில் கையைப்போட்டு அவன் காதருகில், பாறைக்கருகில் இருந்த புதரைச் சுட்டிக்காட்டி என்னவோ சொன்னான். பிரகாசமடைந்த திருமலை, அவன் சொன்னதை ஆமோதித்தான்.

“நாளை விடியுமுன்னே நாங்கள் கிளம்பி எப்படியாவது பொக்கிஷங்களைப் பெறுவதற்கான வழியைக் கண்டுபிடித்து அவைகளை மீட்போம் என்பது உறுதி!நீ நமது கலத்திலிருந்து மற்றுமொரு படகில் மாதோட்டம் சென்று, வேளார் அனுமதியுடன் மூன்று போர்க் கலங்களுடன் இங்கு வந்து சேர்” என்றான் வந்தியத்தேவன்.
சரியென்று தலையை ஆட்டி திருமலை ஆமோதித்தான்.

படகு கலத்திற்கு வந்தவுடன், எல்லோரும் தயார் செய்யப்பட்டிருந்த உணவை உண்டார்கள். பின் திருமலை வேறொரு மாலுமியுடன் மற்றுமொரு படகில் மாதோட்டத்திற்கு விரைந்தான். வந்தியத்தேவன், செவ்வேந்தியிடம் விடிகாலையில், சூரியன் உதிக்கு முன்பே தீவுக்குச் செல்ல ஆயத்தம் செய்யும்படி ஆணையிட்டான். பின்பு எல்லோரும் உறங்கச் சென்றார்கள்.

வந்தியத்தேவன் நீண்ட யோசனைக்குப் பிறகு மனம் தெளிந்தவனாய் உறங்கலானான். ஏன் நீண்ட நாட்களுக்குப் பிறகு என்றும் சொல்லலாம்.

(தொடரும் )

மணி மகுடம் – ஜெய் சீதாராமன்

அத்தியாயம் 09. புத்த ஸ்தூபி

வந்தியத்தேவன், திருமலை, செவ்வேந்தி மூன்று நபர்களும் ஏறிய புரவிகள் அனுராதபுரத்தின் தென்மேற்குத் திசையில் விரைந்து கொண்டிருந்தன. வந்தியத்தேவன் பயணத்தின் நோக்கத்தை செவ்வேந்திக்கு விளக்கிக்கொண்டே வந்தான். முடிவில் அவர்கள் அடர்ந்த காட்டுப் பகுதியை வந்தடைந்தார்கள். அங்கிருந்து ஒற்றையடிப் பாதையில் சிறிது நேரம் சென்றார்கள். அது ஒரு மைதானத்தில் கொண்டு வந்து சேர்த்தது. அங்கு அந்த பிரம்மாண்டமான வட்ட வடிவமான உயர்ந்த சுவர்கள் எழுப்பிக் கட்டப்பட்ட கோவில் ஒன்றைக் கண்டார்கள். அதன் நடுவே மிகவும் உயரமான ஒரு புத்த ஸ்தூபியும் இருந்தது. கோவிலைச் சுற்றிலும் நிறைய ஜன்னல்கள் காணப்பட்டன. ஒரே ஒரு வாயில் மட்டும் இருந்தது. மைதானத்தைச் சுற்றிலும் காட்டுச் செடிகளும், புதர்களும் தாறுமாறாய் வளர்ந்து, கவனிப்பார் அற்று மண்டிக் கிடந்தன. அது இந்தப் பகுதிக்கு வந்து போவோர் மிகக் குறைவு என்பதைத் தெரிவித்தது.

கோவிலை அடைந்ததும் மூவரும் குதிரையிலிருந்து இறங்கி முகப்பு வாயிலுக்கு வந்துசேர்ந்தார்கள். அதிசயமாகக்  கதவு திறந்திருந்தது! சுற்றுமுற்றும் பார்த்த அவர்கள் உள்ளே எட்டிப் பார்த்தார்கள். ஒரு புத்த பிட்சு உள்ளிருந்து வெளியே வந்து,

‘புத்தம் சரணம் கச்சாமி,                                                                                                 தர்மம் சரணம் கச்சாமி,                                                                                                 சங்கம் சரணம் கச்சாமி’

என்று கூறி அவர்களை வணங்கிவிட்டு சுவற்றில் மாட்டியிருந்த தீப்பந்தத்தைச் சுட்டிக் காட்டிவிட்டு வெளியில் சென்றார். இருவரும் வெளியில் வந்து சுற்றுமுற்றும் பார்த்தபோது அவர் கோவிலில் இருந்து வெளிநோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள்.

வந்தியத்தேவன் “இந்த இடத்தைச்  சுத்தம் செய்து கவனித்துவரும் புத்த பிட்சு போலும்! திறந்து வைத்துவிட்டு அவர் இருப்பிடத்திற்கு செல்லுகிறார்! நல்ல சமயம். அவர் திரும்பி வருவதற்குள் நமது காரியத்தை முடிக்க வேண்டும்” என்றான்.

செவ்வேந்தி தீப்பந்தத்தை சுவற்றிலிருந்து எடுத்து கையில் உயரத் தூக்கியபடி வர, அனைவரும் கோவிலினுள் அடியெடுத்து வைத்தார்கள்.

கோவிலின் வட்டவடிவமான சுவற்றில் வர்ணக் கற்களால் ஒட்டப்பட்டு வரைந்த சித்திரங்கள் மேலும் கீழுமாக பெரியதும் சிறியதுமாக நிறைய காணப்பட்டன. முதலில் ஸ்தூபியைச் சுற்றி ஒரு தடவை வலம் வந்து முன்னோட்டம்  விட்டார்கள்.

சித்திரங்கள் மிகவும் அபூர்வமாகவும் அற்புதமாகவும் காணப்பட்டன. சில புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்தன. சில ஜாதகா கதைகளிலிருந்து கூறப்படும் நிகழ்ச்சிகளைச் சித்தரித்தன. வேறு சிலவோ புத்தரின் முந்தைய அவதாரங்களான போதிசத்வாவைப் பற்றி இருந்தன. ஒரு சில எதைப் பற்றி வரையப்பட்டிருக்கிறது என்று புரியாமல் இருவரும் விழித்தார்கள்! கடைசிப் பகுதி வெறுமையாக சித்திரங்களற்று இருந்தது.

“இந்த பெரும் சாதனையைச் செய்தவர்கள், இறுதிப் பகுதியை வரையாமல் விட்டதற்கு ஏதாவது ஒரு நல்ல காரணம் இருக்க வேண்டும்” என்றான் வந்தியத்தேவன் மற்ற இருவரையும் நோக்கி.

மறுபடியும் இருவரும், செவ்வேந்தி முன் செல்ல இரண்டாவது சுற்றைத் தொடங்கினார்கள்.

“புத்தர், ஜாதகா, போதிசத்வா போன்ற சித்திரங்களை ஒதுக்கி வேறு ஏதாவது மாறுதலாகத் தென்படுகிறதா, என்று பார்’ என்று வந்தியத்தேவன் திருமலையிடம் சொன்னான்.

கடைசியாக வெறுமையாய் இருந்த இடத்திற்கு முந்தைய பகுதியை அவர்கள் வந்தடைந்தார்கள். அங்கு வரையப்பட்டிருந்த கிரீடம் ஒன்றை வந்தியத்தேவனின் நுணுக்கக் கண்கள் கண்டு பிடித்தன. அதை திருமலையிடம் கூறினான். இருவரும் அடுத்திருந்த சித்திரங்களை ஆழமாக ஆராய ஆரம்பித்தார்கள்.

அந்த விசித்திரச் சித்திரங்கள் அவர்கள் எதிர்பார்த்து வந்த மர்ம செய்தியை தெரியப்படுத்துவதற்காகவே வரையப்பட்டிருப்பதாக இருவரும் முடிவு கட்டினார்கள்! இதனை மறுபடியும் கருத்திருமனின் கூற்றிலிருந்து நினைவுபடுத்திப் பார்த்தான் வந்தியத்தேவன்

கிரீடத்திற்கு அருகில் கழுத்தில் அணியும் வேலைப்பாடுடன் கூடிய ஆபரணம் ஒன்று வரைந்திருந்தது. யானைமேல் தேவர் ஒருவர் அமர்ந்திருந்தார். யானை வெள்ளை நிறமாக இருந்தது. அந்த யானை மேகத்தில் பறப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. பின்னர் மன்னர் ஒருவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். யானையிலிருந்து இறங்கியிருந்த தேவர் மன்னருக்கு முதலில் கிரீடத்தைச்   சூட்டினார். பிறகு அந்தஆபரணத்தை மன்னர் கழுத்தில் அந்த தேவரே அணிவிப்பது போல் வரையப்பட்டிருந்தது.

அதன் பிறகு புத்தர்பிரான் மேகத்தில் பறந்து வந்துகொண்டிருப்பதைப்போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. பின்பு புத்தர் அலைகள் சூழ்ந்த ஒரு நிலப்பரப்பில் இறங்கியிருப்பதைத் தெரிவித்தது. தொடர்ந்து வரையப்பட்டிருந்த சித்திரத்தில் அதே நிலப்பரப்பும், அதில் இரண்டு கொம்புகளுடன் கூடிய பூதம் ஒன்றும் வரையப்பட்டிருந்தது. ஆனால் புத்தர் இதில் இல்லை. இறுதியில் கடற்கரை ஓரத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்ட ஒரு சிறிய வீடு. சித்திரங்கள் இதோடு முடிவடைந்தன.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சித்திரங்கள் சொல்லும் செய்தியை அறிந்துகொள்ள முயன்றார்கள். சிறிது நேரம் சென்றது.

வந்தியத்தேவன் “உனக்கு ஏதாவது புரிகிறதா?” என்று திருமலையிடம் கேட்டான்.

“நன்றாகவே புரிகிறது.ஆனால்.. சில புதிர்களும் உள்ளன” என்றான் திருமலை.

“சரி; வா!மீண்டும் அதை உறுதிப்படுத்திக் கொள்வோம்” என்று கூறிய வந்தியத்தேவன் ஒவ்வொன்றாகப் பார்த்து ஆரம்பித்தான்.

“கிரீடம்தான் மணிமகுடம் என்றும், ஆபரணம்தான் இரத்தின ஹாரம் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது!”

வந்தியத்தேவன் வெண்மையான யானையைச் சுட்டிக்காட்டி “இது தேவேந்திரனின் வாகனமான ஐராவதமாக இருக்கலாம்!” என்றான்.

“அப்படியானால் அதில் அமர்ந்து பறந்து வருபவர் தேவேந்திரனாக இருக்க வேண்டும்” என்று முடித்தான் திருமலை.

“நன்கு!கண்டுபிடித்துவிட்டாய்! மன்னனின் பின்பக்கத்தில் கொடி ஒன்று பறப்பதை நோக்கினாயா? அதில் மீன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது பார்! மன்னர் பழம் பெருமை வாய்ந்த பாண்டியனாய் இருக்க வேண்டும்.”

“மணிமகுடத்தைச் சூட்டி தேவேந்திரன் இரத்தின ஹாரத்தை பரிசாக அணிவிப்பது இப்போது தெளிவாகிறது!”

‘ஆம்!இப்போது புத்தர் முதன் முதலில் பறந்து வந்து ஈழத்தில் இறங்கியதாகக் கூறப்படும் இடம் இது என்று நினைக்கிறேன்.! இடம் அலைகள் சூழ்ந்த நிலப்பரப்பைக் குறிக்கிறது! இடத்தின் பெயர் கூட..”

“தீவு!ஆம். இப்போது ஞாபகம் வருகிறது. போத தீவு!”

“அடுத்ததை நோக்கினாயா?அதில் சித்தரிக்கப்பட்டிருக்கும் இரட்டைக் கொம்பு உள்ள பூதம்.. இது என்னவாக இருக்கும்?”

“அதே போத தீவில் இருப்பதாக வரையப்பட்டிருக்கிறது. பூதத்திற்கும் போத தீவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம்!”

‘சந்தேகமில்லை!போத தீவின் பெயர் நாளடைவில் மருவி பூத தீவாக மாறியதைத்தான் இது தெரிவிக்கிறது” என்றான் வந்தியத்தேவன்.

மறுபடியும் வந்தியத்தேவன் “பொக்கிஷங்கள் பூதத் தீவில்தான் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. எனினும் எனக்கு ஒரு சந்தேகம். அனுராதபுரத்திற்கு பக்கத்தில் இருக்கும் இந்த புத்த ஸ்தூபியும், பூத தீவும் நம் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன. அப்படியிருக்க மகிந்தன் ஏன் அதை இந்த இடங்களில் கொண்டு வந்து எப்படி வைத்தான்? அதுதான் புரியவில்லை!” என்றான்.

“அதுதான் மகிந்தனின் மிகப்பெரிய சாதுர்யம்!! இதை வேண்டுமென்றே செய்திருக்க வேண்டும். பொக்கிஷங்கள் சோழர் கட்டுப்பாட்டு இடங்களில் இருக்க வாய்ப்பில்லை என்றும் மகிந்தன் பிரதேசங்களிலேயே தேட முயல்வார்கள் என்பதுதான் அவனுடைய சித்தாந்தம்!” என்று பதிலளித்த திருமலை “ஆனால் பூத தீவில் எங்கு மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை சித்திரங்கள் விளக்கவில்லையே” என்றான்.

வந்தியத்தேவன் “கடற்கரையில் தனித்திருக்கும் வீட்டை கவனித்தாயா? உன் கேள்விக்கான விடை அதற்குள்ளிருந்து கிடைத்தாலும் கிடைக்கலாம்” என்றான்.

“சரி; மேற்கொண்டு என்ன செய்வது?அனைத்துச் சித்திரங்களையும் பார்த்தாகிவிட்டது. அடுத்து..?” என்று வினா எழுப்பினான் திருமலை.

“மீண்டும் பயணம்தான்.வா, செல்வோம்” என்று திரும்பினார்கள் மூவரும்.

செவ்வேந்தி சுவற்றில் தீப்பந்தத்தைப் பொருத்தினான். இருவரும் இதுவரை சேகரித்த விவரங்களில் திருப்தி அடைந்தவர்களாய் வெளியில் வருவதற்கும் பிட்சு இருப்பிடத்திலிருந்து திரும்பி வருவதற்கும் சரியாய் இருந்தது. நன்றி கூறிவிட்டு மூவரும் புரவிகளில் ஏறி மாதோட்டத்தை வந்தடைந்தார்கள்.

(தொடரும் )

மணி மகுடம் – ஜெய் சீதாராமன் (08. ஈழத்தில்..)

 

 

இலங்கையில் போர் புரிந்து கொண்டிருக்கும் சோழப் படைக்குத் தேவையான கத்திகள், ஈட்டிகள், கேடயங்கள், இரும்பு உரிகள், மற்றும் படைகளுக்குத் தேவையான உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்றவை அடிக்கடி சோழ நாட்டிலிருந்து போர் மரக்கலங்கள் மூலமாக ஆயுதம் தரித்த வீரர்களோடு காவேரிப்பூம்பட்டிணம் துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. அதேபோல் கோடிக்கரையில் அரசாங்க விஷயத்திற்காக உபயோகப்படுத்தும் முதன் மந்திரி அநிருத்தரின் மரக்கலம் ஒன்று புறப்படத்  தயாராய் அங்கு நங்கூரம் பாய்ச்சி எப்போதும் இருக்கும்!! இன்றும் அவ்வாறே நின்றுகொண்டிருந்தது.

வந்தியத்தேவன் கொல்லிமலையிலிருந்து, வழியில் எங்கும் தங்காமல், ஊண் உறக்கமில்லாமல், வாயுவேகம் மனோவேகமாக அந்தத் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தான். கூடவே வழியனுப்பக் கந்தமாறனும் வந்திருந்தான். அவர்கள் இருவரும் இன்னும் மாறுவேடத்திலேயே இருந்தனர்.

கந்தமாறன் “வந்தியத்தேவா! நீ புக முற்படும் பாதை எவ்வளவோ கடினமானது! எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்! இதில் வீரம் மட்டும் இருந்தால் போதாது. விவேகமும் வேண்டும். எல்லாவற்றையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவாய் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை! வெற்றிச் செய்தியுடன் திரும்பி வா!” என்று வாழ்த்தினான்.

அப்போது கட்டையும் குட்டையாக தாடி மீசையுடன் தோன்றிய போர் மரக்கல அதிகாரி ஒருவன் அவர்களிடம் வந்து “கலம் கிளம்புவதற்கு ஆயத்தமாக உள்ளது. அதில் செல்ல விரும்புவோர் உடன் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் போர் சம்பந்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும்” என்று கூறி சுற்றுமுற்றும் பார்த்தபின் தாடி மீசையை சட்டென்று அகற்றி திரும்பவும் அணிந்து கொண்டான்.

அவனின் அச்செயலைக் கண்ட வந்தியத்தேவனுக்குஆச்சர்யம் தாங்க முடியவில்லை. “திருமலை!நீயா? எங்கே இந்தப் பக்கம்? எங்களை எப்படி அடையாளம் கண்டு கொண்டாய்? என்ன இந்த அதிகாரி வேடம்?” என்று குதூகலத்துடன் சரமாரியாய் கேள்விகளைப் பொழிந்தான்.
“வந்தியத்தேவா, மாறுவேடங்களிலிருந்த உங்களை அறிந்து கொண்டது ஒன்றும் எனக்குப் பெரிய காரியமல்ல!ஏனெனில் உங்கள் வரவை நான் இங்கு எதிர்பார்த்திருந்தேன்! இது என் எஜமானர் அநிருத்தர் மேற்பார்வையில் நமது ஈழப் படைக்கு அடிக்கடி அனுப்பப்படும் கலங்களில் ஒன்று. நான் பொருட்களைச் சரிபார்த்து அனுப்புவதற்காக இங்கு அடிக்கடி அனுப்பப்படுவேன். இங்கு நீங்கள் நிச்சயம் வரக்கூடும் என்று எதிர்பார்த்துக் கலத்தை கிளப்ப அனுமதிக்காமல் உனக்காக நிறுத்தி வைத்திருக்கிறேன். அதிக நாட்கள் இருத்தி வைத்திருக்க இயன்றிருக்காது.. ஒருவேளை இன்று நீ வராதிருந்தால் அது கிளம்ப வேண்டியிருந்திருக்கும். சரி! இலங்கைக்கு செல்லும் வரை நாம் மாறுவேடத்தில் இருப்பது நல்லது. பகைவர்களுக்காக இந்தப் பாதுகாப்பு. நானும் உன்னுடன் இலங்கைக்கு வரப்போவதாக இருக்கிறேன். இளவரசர் கந்தமாறன் நம்முடன் வரப்போகிறாரா?” என்றான் திருமலை.

“இல்லை திருமலை.எனக்கு வேறு அலுவல்கள் இருக்கின்றன. மேலும் வந்தியத்தேவன் தனியாகச் செல்லுகிறானே என்று கவலை கொண்டேன். அக்கவலை இப்போது அடியோடு தீர்ந்தது. உன் துணை அவனுக்கு யானை பலம் தந்துவிடும். நீங்கள் இருவரும் எடுத்த இக்காரியத்தில் வெற்றி பெற எங்கள் குலதெய்வமான கொல்லிப்பாவையின் அருள் உங்களுக்குக் கிட்டட்டும்” என்று கூறி வந்தியத்தேவனை அணைத்தவாறே கந்தமாறன் விடை பெற்றான்.

கந்தமாறனுக்கு விடை கூறி அனுப்பிய பிறகு இருவரும் நங்கூரம் பாய்ச்சி நின்ற கலத்திற்கு அழைத்துச் செல்ல ஓர் படகு அங்கு ஆயத்தமாக நின்று கொண்டிருந்தது பார்த்து அதை நோக்கிச் சென்றார்கள். இருவரும் படகில் ஏறினார்கள்.

கந்தமாறன், தன் பயணத்தைத் தஞ்சை நோக்கித் தொடர்ந்தான்.

&&&

வந்தியத்தேவனும் திருமலையும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தார்கள். கொண்டுவரப்பட்ட உணவைச் சாப்பிட்டபின் படுக்கையில் சாய்ந்தார்கள். வந்தியத்தேவன் திருமலைக்குக் கொல்லிமலையில் நடந்த சம்பவங்களை விளக்கினான்.
பிறகு வந்தியத்தேவனின் கடினமான பயணத்தினால் களைப்படைந்ததால் அவன் உடல் உறக்கத்தை நாடியது. அவனை அறியாமலேயே உறக்க நிலைக்குச் சென்றான். திருமலை அவனைப் பின் பற்றினான்.

கப்பல் இலங்கையில் நுழைந்து பாலாவி நதிக்கரையில் சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மாதோட்ட மாநகரின் துறைமுகத்தைக் காலை வந்தடைந்தது.

நமது நண்பர்கள் இருவரும் மாறுவேடத்தைக் களைந்தார்கள். இலங்கைப் படை சேனாதிபதி கொடும்பாளூர்பூதிவிக்ரமகேசரி – பெரிய வேளார் பாசறைக்குச் சென்றார்கள்.

பெரிய வேளார் “வல்லவரையர் வந்தியத்தேவரே! வருக வருக! ஈழத்திற்கு. என்னை விடுவித்து, சேனாதிபதி பதவியை ஏற்கப் போகிறீர்கள்! சோழர் படைக்கு புதிய சகாப்தம் ஏற்படுத்தப் போகிறீர்கள்! மாதண்ட நாயகன் அருள்மொழிக்கு உறுதுணையாய், வலது கையாக இருக்கப் போகிறீர்கள். அதற்கு உங்களுக்கு வல்லமை அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று கம்பீரம் சிறிதும் குறையாத குரலில் மிடுக்காய் வரவேற்பு நல்கினார்.

“உங்கள் அன்பான வரவேற்பிற்கு மிக்க நன்றி ஐயா!ஆனால்..”

“என்ன ஆனால் என்று இழுக்கிறீர்கள் வந்தியத்தேவேரே?”

“நான் பதவியை ஏற்பதற்கு முன் இங்கு என்னால் சாதிக்க வேண்டிய மிக முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது.அதற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது” என்று தயங்கித் தயங்கிக் கூறினான் வந்தியத்தேவன்.
கூடவே வந்திருந்த திருமலை, “இதோ. என் எஜமானர் உங்களுக்கு எழுதிய ஓலை” என்று ஓலையை மடியிலிருந்து எடுத்து நீட்டினான்.

“அடடே!திருமலை.. நீயும் வந்திருக்கிறாயா.. வந்தியத்தேவரை சந்தித்த மகிழ்ச்சியில் உன்னை நான் காண மறந்துவிட்டேன்” என்று திருமலை நீட்டிய ஓலையை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார் பூதிவிக்ரமகேசரி.
ஓலைச் செய்தி நீண்ட செய்திகளைத்  தாங்கி வரவில்லை. சுருக்கமாகவே இருந்தது. அதைப் படித்து முடித்த வேளார்,

“இதில் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு எனக்குப் பணித்திருக்கிறார் அநிருத்தர்.மற்ற விபரங்களை திருமலையும் வந்தியத்தேவ னும் வாய்மொழியாக அளிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்” என்று கூறி இருவரையும் பார்த்தார்.

வந்தியத்தேவன் அனைத்து விபரங்களையும் கூறி அவருக்குக் காரியத்தின் முக்கியத்தைப்பற்றி விளக்கினான்.

“நன்று வந்தியத்தேவா! நிச்சயம் உனக்கு எல்லாவித உதவியும் செய்கிறேன்” என்று உறுதியளித்தார். அத்துடன் நிற்காமல் உடனே காரியத்திலும் இறங்கினார்.

வேளார் கையைத் தட்டினார்.

சேவகன் ஒருவன் உள்வந்து கை கட்டி நின்றான்.

“செவ்வேந்தியை உடனே அழைத்து வா” என்று கட்டளை பிறப்பித்தார்.
அதைக் கேட்ட வந்தியத் தவன், “நாம் மேற்கொண்டிருக்கும் காரியத்திற்குப் பெண் எப்படி உதவுவாள்?” என்று வேளாரிடம் கேட்க..

அதைக் கேட்டுச்  சிரித்த வேளார், “பொறு வந்தியத்தேவா. வருபவரைப் பார்த்துவிட்டுப்பின் கேள். இன்னும் உன் பழக்கத்தை நீ மாற்றிக்கொள்ளவில்லை போலிருக்கிறது!” என்று குறையாத சிரிப்புடனே கூறினார்.

சிறிது நேரம் கழித்து செவ்வேந்தி வந்து வணக்கம் கூறிவிட்டுக் கை கட்டி நின்றான். வேளார் செவ்வேந்திக்கு வந்தியத்தேவனையும், திருமலையையும் அறிமுகப்படுத்தினார்.

பிறகு செவ்வேந்தியைப் பார்த்து “செவ்வேந்தி, இவர்கள் ஈழத்தில் சில முக்கிய இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களை அங்கெல்லாம் அழைத்துக் கொண்டு போவது உன் பொறுப்பு. நம் ஆதிக்கத்தின் கீழ் உள்ள இடங்களின் வழியாகவே அவர்களை அழைத்துச் செல். ஆதிக்கம் இல்லாத இடங்களுக்கு மாறுவேடத்தில் போவது உசிதம். கூட நம் வீரர்களை வேண்டுமானால் அழைத்துச் செல். படகு, போர் மரக்கலங்கள் தேவையானால் அதற்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்றார்.

செவ்வேந்தி “உங்கள் ஆணைப்படி நடந்து கொள்வேன்” என்றான்.
வேளார் வந்தியத்தேவனைப் பார்த்து “இவன் எங்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சிறந்த ஒற்றன். இவனுக்கு சிங்களமும் நன்றாகத் தெரியும். ஆகையால் இவனுடைய உதவி உங்களுக்கு நிச்சயம் தேவை. இவனிடம் பயணத்தின் முக்கியத்தைப்பற்றிக் கூறிவிடுவது நல்லது. இப்போது உன்னுடைய சந்தேகம் தீர்ந்ததா?” என்றார் நமுட்டுச் சிரிப்புடன்.
வந்தியத்தேவன் தனது அவசரத்தனத்தை உணர்ந்து வெட்கி, மன்னிப்புக் கோரினான்.

செவ்வேந்தி, வந்தியத்தேவனிடம் “எப்போது பயணத்தைத் தொடங்குவதாக இருக்கிறீர்கள்?” என்றான்.

உடன் பதிலளித்த வந்தியத்தேவன் “இப்போதே” என்றான்.

(அடுத்த பகுதி அடுத்த மாதம் )

 

 

 

மணிமகுடம் – ஜெய் சீதாராமன்


அத்தியாயம் 06.                                          கொல்லிமலை

chapter-6-final

கொல்லிமலைப் பகுதியையும் சுற்றுவட்டாரத்தையும், இந்த வரலாறு நடந்த சுமார் எண்ணூறு வருடத்திற்குமுன், வல்வில்ஓரி என்னும் மன்னன் அரசாண்டு வந்தான். அவன் மிகச் சிறந்த கொடை வள்ளல். வீரத்திலும் சிறந்து விளங்கினான். போரில் பல நாடுகளை வென்று அதிபதியானான். அவன் வீரத்தைப் பற்றி இதிகாசங்களிலும் அங்கு வழங்கி வரும் நாட்டுப் பாடல்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம். வில்லம்புக் கலையில் அவனை மிஞ்ச ஒருவரும் இல்லை என்று அவைகளில் பேசப்படுகிறது. அவன் வில்லிலிருந்து கிளம்பிய ஒரே அம்பு, ஒரு சிங்கத்தையும், மானையும், கரடியையும் கடைசியாக ஒரு காட்டு எருமையையும் கொன்றது என்பதை அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்த வம்சத்தில் உதித்தவன் தற்போதைய கடம்பூர் குறுநில மன்னன் சம்புவரையர். அவன் மகன், இளவரசன் கந்தமாரன் தஞ்சையில் தங்கியிருந்த மாளிகைக்கு நமது நண்பர்கள் இருவரும் வந்து சேர்ந்தனர்.

கந்தமாரன் இருவரையும் வரவேற்றான். வந்தியத்தேவனைக் கட்டித் தழுவி “நண்பா, நலமா? கடம்பூர் மாளிகை தீக்கிரையான பின் புது மாளிகையைப்பாலாற்றுக்கு வடக்கே வல்லத்திற்கு அருகாமையில் கட்ட ஆரம்பித்திருக்கிறோம். இனி நாமிருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது” என்று நாத்தழுதழுக்கக் கூறினான்’.

அதற்கு வந்தியத்தேவன் “நான்கூட வல்லத்தில் மாளிகை கட்டும் வேலையை ஆரம்பித்துள்ளேன். நான் இங்கே உன்னைப் பார்க்க வந்தது, வேறு காரியத்திற்காக உன் உதவியை நாட” என்றான்.

“என்ன உதவி வேண்டுமானாலும் கேள். தயங்காமல் அதை செய்து முடிப்பது நண்பனான என் தலையாய கடமை” என்றான் கந்தமாரன்.

வந்தியத்தேவன் நடந்த சம்பவங்களைக் கூறிச் சித்திரங்களில் கணித்தவற்றை விளக்கினான். பிறகு “நண்பா, உன் பூர்வீகமான கொல்லிமலையில் பெரியகோவிலூர்அரப்பள்ளீஸ்வரர் சிவன்கோவிலில் அடுத்த பௌர்ணமித் திங்களன்று நடுநிசியில் ஆபத்துதவிகள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அது கருத்திருமன் இலங்கையிலிருந்து கொண்டு வந்திருக்கும் பாண்டிய புராதனப் பொக்கிஷங்களான மணிமகுடம் இரத்தின ஹாரம் பற்றிய ரகசியமாகும். மாவீரன் ஆதித்த கரிகாலனைக் கொன்ற அவர்களைப் பழி தீர்க்க, அவர்களின் உயிர் நாடியான பொக்கிஷங்களை சோழ குலம் அடைய வேண்டும். அவை ஈழத்தில் புதைக்கப்பட்டிருக்கும் இருப்பிடத்தைப் பற்றிய ரகசியத்தைத்தான் அவர்கள் விவாதிக்கப் போகிறார்கள். எப்படியாவது அதைப்பற்றி அறிந்து, இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அடைந்து, சோழர்களிடம் சேர்ப்பிக்க இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதைத் தவறவிடக் கூடாது. எனவே உன் உதவியை நாடி வந்திருக்கிறேன்” என்று கூறி முடித்தான்.

“சோழ வம்சத்தை பூண்டோடு அழிக்க சபதமெடுத்திருக்கும் சதிகாரர்கள் எங்கள் பூர்வீக வட்டாரத்திற்குள் இருந்துகொண்டே செயல்படுவது என் இரத்தத்தைக் கொதிக்க வைக்கிறது.  இருக்கட்டும்! என் உதவி என்றும் உனக்கு உண்டு. நானே உன்னுடன் கொல்லிமலைக்கு வந்து என்னாலான அனைத்தையும் அவசியம் செய்கிறேன். ஆனால் அந்த இடத்திற்கு அதிபதியான என்னை மக்கள் பார்த்துவிட்டால் ஊரைக்கூட்டிக்கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். இந்த செய்தி சதியாளர்களுக்கு எட்டிவிடக்கூடும்! நமது காரியமும் கெட்டுவிடும். ஆகையால் நாம் மாறுவேடத்தில் செல்லுவது உசிதம்” என்று கந்தமாரன் கூறினான்.

உடனிருந்த திருமலை “வந்தியத்தேவா, நான் இங்கிருந்து கோடிக்கரை செல்லுகிறேன். அங்கு என் குருவிற்காக ஒரு மரக்கலம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். ஈழத்திற்கு விரைவாகச் செய்திகள் அனுப்பவும் மற்ற தேவைகளுக்கும் அவைகளைப் பயன்படுத்துவார். மதுரை சோழர்களிடம் வீழ்ந்தபின் மாதோட்டத்திற்கு ராமேஸ்வரம் மூலமாக செல்வதே உசிதமான வழி என்றாலும் கோடிக்கரை மூலமாய் மாறுவேடங்கள் தரித்துச் செல்வதே உகந்தது. உன்னைப் பத்திரமாய் அங்கு கொண்டு சேர்ப்பது என் தலையான கடமை. நான் என் குருவிடம் செய்திகளைத் தெரிவித்துவிட்டு அங்கு உங்களுக்காகக் காத்திருப்பேன்” என்று கூறி திருமலை அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

வந்தியத்தேவன் “கந்தமாரா! பௌர்ணமிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. கொல்லி மலைக்குச் செல்ல எத்தனை நாட்கள் தேவை?” என்றான்.

கந்தமாரன் “மூன்று நாட்கள் தேவை. நாளை விடியற் காலையில் நாம் கிளம்ப வேண்டியிருக்கும். இன்று இரவு என்னுடனையே நீ தங்கலாம்” என்றான்.

கந்தமாரனும், வந்தியத்தேவனும்  மாளிகைக்குள் சென்றார்கள்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம் போன்ற காவியங்களில் வெகுவாகப் போற்றப்படும் கொல்லிமலை, இராமாயண இதிகாசத்தில் சுக்ரீவனின் பொறுப்பில் இருந்த தேன் நிறைந்த மதுவனமாக  இடம் பெற்றிருந்தது! அதன் உச்சியிலிருந்த, ‘அரப்பள்ளீஸ்வரா சதகம்’ போன்ற பாடல்களில் போற்றப்பட்ட பெரியகோவிலூருக்கு பௌர்ணமித் திங்களுக்கு முதல் நாள் பொழுது சாயும் நேரத்தில் வந்தியத்தேவனும் கந்தமாரனும் வந்துசேர்ந்தார்கள். அன்று இரவு நடுஜாமம்தான் பௌர்ணமித் திங்கள் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்! அவர்கள் தலையில் முண்டாசுடனும், முகத்தில் அடர்த்தியான மீசையுடனும், நெற்றியில் பட்டை விபூதியுடனும், அரையில் வெள்ளை நிற உடுப்புடனும் காணப்பட்டர்கள். உள்ளே அவர்களின் உடன்பிறவா கத்தியையும், தேவைப்பட்டால் உபயோகிக்க மறைத்து வைத்திருந்தார்கள்.

குதிரைகளை இருவரும் ஒரு மரத்தில் கட்டினார்கள்.

கந்தமாரன் “வந்தியத்தேவா, அதோ பார்த்தாயா, அரப்பள்ளீஸ்வரர் சிவன் கோவிலை! இன்று பிரதோஷ நாள். கோவில் மக்களால் நிரம்பியிருக்கிறது. அவர்கள் வெளியேறி கதவு மூடப்பட்டதும் நாம் உள்ளே செல்லலாம். உள்ளே போக வேறு வழி இருக்கிறது” என்று கூறி வந்தியத்தேவனைக் கோவிலுக்கு அருகாமையில் உள்ள ஆற்றின் கரை ஓரமாக அழைத்துச் சென்றான்.

“இதுதான் ‘ஐயாறு’.  நாம் செல்ல வேண்டிய பாதை அதோ” என்று ஒரு ஒற்றை அடிப்பாதையைச் சுட்டிக் காட்டினான் கந்தமாரன்.

ஒருமுறை சுற்றிலும் நோட்டம்விட்டு ஒருவரும் அருகில் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு அவ்வழி நடக்கலானான். வந்தியத்தேவன் அவனைத் தொடர்ந்தான்.

“நண்பா, இந்தப் பாதையின் முடிவிலே பார்த்தவர்களைப் பரவசப்படுத்தும் ‘ஆகாய கங்கை’ நீர்வீழ்ச்சி இருக்கிறது. உன்னை ஒரு நாள் அங்கு அழைத்துச் செல்லுவேன்” என்றான் கந்தமாரன்.

ஒற்றை அடிப் பாதை சரிவாகக் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பள்ளத்தாக்கு போலும்! குறிப்பிட்ட ஒரு கரடு முரடான இடம் வந்ததும் கந்தமாரன் பாதையைவிட்டு விலகி, மலைக் காட்டுக்குள் செடி கொடிகளை விலக்கிக்கொண்டு வந்தியதேவனுடன் முன்னேறினான். சிறிது தூரம் நடந்தபின் திடீரென்று நின்றான். சற்றுத் தொலைவிலுள்ள ஓர் பெரிய பாறையை சுட்டிக்காட்டினான். கீழே ஓர் குகைத் துவாரம் தென்பட்டது.
“வந்தியத்தேவா, ஒரு காலத்தில் சித்தர்கள், புத்த மதத்தினர்கள் மற்றும் சமணர்களும் இந்த இடத்தின் அமைதியைக் கண்டு இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே தங்கினார்கள். அவர்களால் உபயோகப்படுத்தப்பட்ட குகைகள் ஆங்காங்கே இருக்கின்றன. இது ஒரு சமணர் குகை. வா” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.

கந்தமாரன் கையில் கொண்டுவந்திருந்த மூட்டையை அவிழ்த்து பக்கத்தில் கிடந்த கட்டையை எடுத்துத் தீப்பந்தம் ஏற்றினான். அங்கு சமணர்கள் கல் படுக்கைகள் இருந்தன. ஒரு தியானக் கோலத்தில் அமர்ந்திருந்த தீர்த்தங்கரர் சிலை இருந்தது. குகைக்குள் குனிந்து தரையைச் சுற்றிலும் ஆராய்ந்தான். தரையில், பாதி கரியாய் தீய்ந்திருந்த சில கட்டைகளைக் கண்டான். ‘ஓகோ!அப்படியா!’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு “வந்தியத்தேவா, வந்த வேலை முடிந்தது! வா, எங்களது முன்னோர் மாளிகைக்குச் செல்லலாம்” என்றான்.

குகைக்கு வெளியே வந்து கொண்டிருக்கும் போது இதுவரை இருளில் மறைந்திருந்து அவர்கள் செய்கைகளை நோக்கிக் கொண்டிருந்த மனிதன் ஒருவன் பயங்கரமாகக் கத்திக் கொண்டே கந்தமாரன் மேல் பாய்ந்தான். நிலை தடுமாறிய கந்தமாரன் ஒன்றும் புரியாமல் தரையில் அலறிக்கொண்டு விழுந்தான். அவன் கையில் பிடித்திருந்த தீப்பந்தம் தரையில் விழுந்தது. வந்தியத்தேவன் கண் இமைக்கும் நேரத்தில் அணையப் போகும் தீப்பந்தத்தைப் பாய்ந்து சென்று கைப்பற்றினான். ஆனால் அதற்குள் தீப்பந்தம் உயிரை விட்டிருந்தது. தீபம் அணைந்தது! எங்கும் காரிருள்! தடால் என்று ஒரு சத்தம்! ‘ஐயோ’ என்று ஓர் அலறல்! மறுபடி நிசப்தம்! சிறிது நேரம் கழித்துத் தீப்பந்தம் மறுபடியும் ஏற்றும் ஓசை! வெளிச்சத்தில் கையில் தீப்பந்தத்துடன் தெரிந்த வந்தியத்தேவன் கீழே நோக்கினான். அங்கே அவர்களைத் தாக்கியவன் மயக்கமாகிக் கிடந்தான். அவன் தலையிலிருந்து உதிரம் தரையில் வழிந்து கொண்டிருந்தது.. சுதாரித்துக் கொண்டு எழுந்த கந்தமாரன்,

“வந்தியத்தேவா, என்ன நேர்ந்தது?” என்று வினவினான்.

“இந்த மனிதன் நாம் இங்கு வந்தபோது குகையில் மறைந்திருந்தான் போலும்! சதிகாரக் கும்பல்களில் இவனும் ஒருவனாக இருக்கலாம்! சமயம் பார்த்து நம் இருவரையும் தீர்த்துக்கட்ட உன் மேல் பாய்ந்திருக்கிறான். நான் அவன் மண்டையில் அணைந்த தீப்பந்தத்தினால் அடித்ததால் மயங்கிக் கிடக்கிறான். அவனது முகத்தைப் பார்! இதற்கு முன் எங்கேயோ பார்த்தது போல் தோன்றுகிறது” என்றான் வந்தியத்தேவன்.
கந்தமாரன் அவன் முகத்தை நோக்கியதும் வியப்படைந்தான்.

“வந்தியத்தேவா, இவன் பெயர் இடும்பன்காரி. நீ கூடப் பார்த்திருக்கலாம். கடம்பூரில் எங்கள் அரண்மனைச் சேவகனாய் வேலை பார்த்தவன். ஆதித்த கரிகாலன் மறைவிற்குப் பின் திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டான். பாண்டியர் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்று இப்போது தெரிகிறது. எங்கள் அரண்மனையில் இருந்துகொண்டு ஒற்றன் வேலை பார்த்திருக்கிறான்” என்று கந்தமாரன்இடும்பன்காரியின் மூக்கில் விரலை வைத்துப் பார்த்தான்.

“வந்தியத்தேவா, நமக்கு மீண்டும் ஒரு சிக்கல். இவன் உயிர் பிரிந்துவிட்டது, இவன் இங்கு இறந்ததை சதியாளர்கள் அறிந்தால், எச்சரிக்கை அடைந்துவிடுவார்கள். இன்றைய கூட்டத்தில் அந்த ரகசியம் விவாதிக்கப்படாமலே போகலாம். உடனே உடலை அவர்கள் கண்களில்படாதவாறு அப்புறப்படுத்த வேண்டும்” என்று கந்தமாரன் கூறினான். இருவரும் அவனை அருகில் இருந்த புதர் ஒன்றின் பின்னால் மறைத்து வைத்தார்கள். சரகுகளைக் கொண்டு தரையில் இரத்தக் கறைகளை முடிந்தமட்டும் சந்தேகம் வராதபடி மூடினார்கள். ஒற்றையடிப் பாதையில் மறுபடி ஊருக்குத் திரும்பினார்கள்.

கோவில் கூட்டம் அதற்குள் நன்றாகக் குறைந்திருந்தது. நேராக கந்தமாரன் அவர்களின் பூர்வீக மாளிகைக்கு வந்தியத்தேவனைக் கூட்டிச் சென்றான். அதற்குள் நன்றாக இருட்ட வேறு ஆரம்பித்திருந்தது.

கந்தமாரன் மறுபடி சுற்றிலும் ஒருவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு படியில் ஏறிக் கதவை லேசாகத் தட்டினான். கதவிலிருந்த குட்டிக் கதவு உள்ளிருந்து சிறிது திறந்தது. ஒருவன் தலையை வெளியே நீட்டி “யார் அங்கே?” என்றான்.

“சகாதேவா, நான்தான் உங்கள் இளவரசர்” என்று கந்தமாரன் தன்  மீசையைச் சட்டென்று விலக்கி அவனிடம் காண்பித்துவிட்டு மறுபடியும் அணிந்து கொண்டான்.

“வணக்கம் இளவரசே!” என்று கந்தமாரனை வேற்று உடையில் பார்த்த அதிர்ச்சியில் சற்றே லயித்த சகாதேவன் கதவை முழுவதுமாகத் திறந்து வெளியில் வந்தான்.கந்தமாரன் கால்களில் விழப்போன அவனை தன் இரு கைகளாளும் தூக்கி நிறுத்திய கந்தமாரன் ‘உஷ்..’ என்று உதட்டில் கையை வைத்து அவனை எச்சரித்து வந்தியதேவனுடன் உள்ளே சென்றான்.

உள்ளே ஓசைப்படாமல் நுழைந்தனர் நண்பர்கள் இருவரும்.
“சகாதேவா, எங்களுக்கு உண்ண உணவு ஏதாவது இருக்கிறதா?”
“இதோ ஒரு நொடியில் சமைத்துவிடுகிறேன்” என்றான் சகாதேவன்.
“வேண்டாம் சகாதேவா. பழங்கள் இருந்தால் போதுமானது” என்று கந்தமாரன் கூற, “நமது தோப்புகளிலிருந்து நிறைய காய்கனிகள் சந்தைக்கு எடுத்துச் செல்ல தோட்டத்தில் குவித்திருக்கிறார்கள்.இதோ எடுத்து வருகிறேன்” என்று கூறிவிட்டு சகாதேவன் சென்றான்.

அவன் அவ்விடத்தை விட்டு அகன்றதும், சந்தேகமாகப் பார்த்துக்கொண்டிருந்த நண்பனை நோக்கிய கந்தமாரன்,
“வந்தியத்தேவா, சகாதேவன் எங்கள் வம்சத்தைப் பரம்பரை பரம்பரையாய் பாதுகாத்துவரும் குடும்பத்தைச் சேர்ந்தவன். தனிக்கட்டை. மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். நாம் பழங்களை விரைவில் உண்டுவிட்டு நமது அடுத்த காரியத்தில் இறங்க வேண்டும். கோவிலிலிருந்து எங்கள் வம்ச முதல்வன் வல்வில்ஓரியினால், சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட ஒரு பெரிய சுரங்கப் பாதை, மலை அடிவாரத்திற்குப் பக்கத்திலுள்ள ராசிபுரம்வரை செல்லுகிறது. நாம் தற்போது பார்த்த குகையில் வாழ்ந்த சமணர்கள் ஒரு சிறு பாதையை உருவாக்கிப் பெரிய சுரங்கத்தில் இணைத்திருக்கிறார்கள். இது எங்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருந்தது. ஆனால் எப்படியோ பாண்டிய சதிகாரர்கள் இதை அறிந்து வைத்திருக்கிறார்கள். அதை அவர்கள் சதித்திட்டக் கூட்டங்களுக்கு உபயோகப்படுத்துகிறார்கள் போலும்! எனினும் கவலையில்லை. இந்த மாளிகையிலிருந்து கோவிலுக்குச் செல்ல எங்களுக்கென்று ஒரு பிரத்யேகமான சுரங்கமும் உள்ளது. அது சகாதேவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. அதில்தான் உன்னைக் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்போகிறேன்” என்றான் கந்தமாரன்.

வாழைப்பழம், மாதுளை, பலா போன்ற பழங்களை ஒரு பெரிய தட்டிலும் தேன், தேங்காய்பால், தண்ணீர் முதலியவைகளை குடுக்கைகளிலும் எடுத்து வந்து அவர்களுக்கருகில் வைத்துவிட்டு, சகாதேவன் கைகட்டிப் பக்கத்தில் நின்றான்.

கந்தமாரன் “சகாதேவா, நீ உடனடியாக ஒரு உதவி செய்ய வேண்டும். எங்கள் குதிரைகள் கோவிலுக்கருகில் மரத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. அவைகளை இங்கு கொண்டுவந்து கொள், இனிப்புத் தீனி முதலியவைகளைக் கொடுத்து நன்கு இளைப்பாற்று. காலையில் நாங்கள் உணவு உண்டபின் எங்கள் பயணத்தைத் தொடங்க வேண்டும். முதலில் தந்தை படுக்கும் அறையில் உள்ள சுரங்கப் பாதையில் நாங்கள் கோவிலுக்குச் செல்ல ஏற்பாடு செய்” என்று உத்தரவு பிறப்பித்தான்.

(தொடரும்)

 

 

மணி மகுடம் – ஜெய் சீதாராமன்

அத்தியாயம் 05. திருமலை

manimagudam-part-5

( படம்: லதா )

வந்தியத்தேவன் குதிரை திருவையாற்றைக் கடந்து வெண்ணாற்றங்கரையை நெருங்கியிருந்தது. குதிரைகளையும் சேர்த்து எடுத்துச் செல்லப்  படகு வசதிகள் கொண்ட காவேரி, குடமுருட்டி, வெட்டாறு நதிகளை ஏற்கெனவே அவன் கடந்து வந்திருந்தான். இப்போது வெண்ணாற்றையும் கடந்து, தென் கரைக்கு வந்து இறங்கினான்.

குதிரையின் கடிவாளத்தைக்  கையில் பிடித்துச்  சிறிது நேரம் நடந்து போய்க்கொண்டிருந்தான். வைணவ சம்பிரதாயத்தின் நூற்றெட்டு திவ்யதேசங்களில் ஒன்றான நீலமேகப் பெருமாள் கோவிலைக் கடந்து செல்லும் போது அங்கு கூடியிருந்த  சிறு கூட்டத்தில் ஒரு வாதப் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் சைவ, வைணவ மற்றும் பௌத்த மதங்களுக்கிடையே எந்த மதம் உயர்ந்தது என்பதைப்  பற்றிய சர்ச்சைகளும், வாக்குவாதங்களும், வாதப்போர்களும் நடப்பது எங்கும் உள்ள ஒரு சாதாரண நிகழ்ச்சி. அந்தக் கூட்டத்தைத் தாண்டிக்கொண்டு நமது வீரன் செல்லும்போது ஒருவன் வேண்டுமென்றே குரலை உயர்த்திக் கட்டைக் குரலில் விவாதித்துக் கொண்டிருப்பதைக் கேட்டான்.

கொஞ்சம் தூரம் சென்றபின் அந்தக் குரலை எங்கேயோ கேட்டிருந்தது போல் தோன்றியது. ஆவலால் தூண்டப்பட்டுத் திரும்பிக் கூட்டத்தை நோக்கிச் சென்றான். குதிரையைத் தட்டிக் கொடுத்து நிறுத்திவிட்டு கூட்டத்தில் நடப்பதைக் கவனித்தான்.

வாதம், காவி உடை அணிந்த ஐந்து புத்த பிட்சுக்களுக்கும், கையில் குறுந்தடி வைத்த கட்டையும் குட்டையுமான ஒரு முன்குடுமி வைத்திருந்த வைஷ்ணவதாரிக்கும் எனத் தெரிய வந்தது. தன்னுடைய ஊகம், வைஷ்ணவதாரி நமது திருமலை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு வாதப் போரைக் கவனிக்கலானான்.

Image result for alwarkadiyan and vanthiyathevan

புத்த பிட்சுக்கள் “புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” என்று முழங்கினார்கள்.

“நாராயணன் நாமத்தைப் பாடுவோம், நாராயணனைத் துதிப்போம், நாராயணனின் பாத கமலங்களைச் சேருவோம்” என்று திருமலை கர்ஜித்தான்.

புத்த பிட்சுக்களுக்குத் தலைவராகத் தோன்றியவர் சற்று முன்னால் வந்து “வீர வைஷ்ணவதாரியே, இந்த ‘நாராயணா’ போன்ற பெயர்களையும் பார்ப்பவைகளையும் கடந்து ‘நிர்வாணா’ என்கிற எங்கும் வியாபித்திருக்கும் அமைதி நிலைக்குச் செல்ல எங்கள் பௌத்த மதம் வழி வகுக்கிறது. உடனே உன் வைணவ வேடத்தைக் களை. எங்களுடன் சேர்ந்து..”

அவர் சொல்லப்போவதை முடிக்குமுன்னே திருமலை “நிறுத்துங்கள், புத்த பிட்சுக்களே. எல்லாம் வல்ல ஸ்ரீமன்நாராயணனையா கடந்து வரச் சொல்லுகிறீர்கள்? அபசாரம். நாராயணனே முதற் கடவுள். அவரே முடிவில்லாத நிலையிலும் வியாபித்திருக்கிறார். என்ன சொன்னீர்கள்? ‘நிர்வாணா’ அமைதியான நிலையா?வெறும் சூன்யமான ஒன்றும் அற்ற நிலை! அங்கு ஆனந்தத்திற்கே இடம் இல்லை! எங்கள் வைணவத்தைப் பின்பற்றி ஸ்ரீமன்நாராயணனின் பாதார விந்தங்களை அடைந்தால் ஆனந்தம்! முடிவில்லாத ஆனந்தம்! எங்கும் பரவசமான ஆனந்த நிலை! இப்போது சொல்லுங்கள். சூனியமா? ஆனந்தமா? எது பெரியது?” என்றான்.

அதைக் கேட்டதும் புத்த பிட்சுக் கும்பல் மெதுவாக நழுவியது. அவ்வப்போது ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த வைணவக் கும்பல் திருமலையை அப்படியே தூக்கி ‘பஜகோவிந்தம், பஜகோவிந்தம்’ என்று ஆரவாரித்துக் கோவிலுக்குள் அழைத்துச் சென்றது. நமது வீரனும் அவர்களுடன் உள்ளே சென்றான்.

Image result for alwarkadiyan

கோவில் அன்று பக்கத்திலிருந்த கிராமத்திலிருந்து வந்த பக்தர்களால் நிரம்பியிருந்தது. பெருமாள் சந்நிதியை அணுகியதும் திருமலை,

‘திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை

திருவடி சேர்வது கருதி செழுங்குருகூர்ச்சடகோபன்’

என்ற நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்த பாசுரத்தின் வரிகளை பக்திப் பரவசத்தால் பாடி, கடைசியில்,

‘திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்

திருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந்து ஒன்றுமினே’

என்று முடித்தான்.

வந்திருந்தோர் அனைவரும் வந்தியத்தேவன் உள்பட மனமுருகிப் பாட்டைக் கேட்டார்கள். பின்னர் பட்டர் பிரசாதங்களை வழங்கினார். பெருமாளைச் சேவித்தபின் எல்லோரும் வெளியில் வந்தனர். திருமலையை வெகுவாக வாழ்த்தியபின் வைணவக் கும்பல் மெல்லக் கலைந்தது.

“வணக்கம் திருமலை!வாதப் போரில் தடி கொண்டு தாக்கப் போகாமல் ஆன்மீக வாதத்திலும் வல்லமை உண்டு என்பதை நிரூபித்துவிட்டாய். உன்னை அதற்காக மெச்சுகிறேன்” என்று வந்தியத்தேவன் பிரசாதங்களை உண்டவாறே சொன்னான்.

திருமலையும் மென்றுகொண்டே “வணக்கம் வந்தியத்தேவரே! உங்களை எதிர்பார்த்துத்தான் இங்கு வந்தேன்.”

“அடடா..என்ன இது திருமலை! திடீரென்று மரியாதையெல்லாம் பலமாக இருக்கிறதே?”

“என் உற்ற நண்பனானாலும் வல்லத்து அரசராகிவிட்டீர்கள் அல்லவா, ஆகையினால்தான்..”

‘ஓஹோஹோ’ என்று சிரித்த வல்லவரையன், “அரசனானாலும் நண்பன் நண்பனே!என்னை நீ என்றே அழைக்கலாம்” என்றான்.

ps1

இருவரும் மனித சந்தடி இல்லாத அமைதியான இடத்தை அடைந்து ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்தார்கள்.

வந்தியத்தேவன் “திருமலை, உன்னிடம் ஒரு முக்கிய காரியத்தைப்பற்றி கலந்தாலோசிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற்போல் நீ இங்கே வந்து நிற்கிறாய்! முதலில் என்னை எதிர்பார்த்து வந்தேன் என்றாயே, ஏன்?” என்றான்.

“குடந்தைக்கு அருகில் உள்ள மகாதானபுரத்தில் பாண்டியச் சதியாளர்கள் அடிக்கடி சந்தித்துக் கூடிப் பேசுகிறார்கள் என்ற தகவல்கள் எங்களுக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறன. அவற்றைப் பற்றிய செய்திகளை அறிந்துவர கைதேர்ந்த ஒற்றன் மாகீர்த்தியை அனுப்பியிருந்தேன். அவன் அறிந்து கொண்ட செய்தியை எனக்குத் தெரிவிக்குமுன் கொல்லப்பட்டிருக்கிறான். நீ சேவகர்களிடம் சொல்லி எங்களிடம் தெரிவிக்கச் சொன்ன செய்தி இன்று அதிகாலையில் கிடைத்தது. அதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மாண்டவன் மாகீர்த்திதான் என்று தெரிகிறது. நீ குடந்தையிலிருந்து தஞ்சை வரக்கூடும் என்று எண்ணி உன்னை வழியில் சந்தித்து உண்மையை அறியலாம் என்று ஓடோடி வந்து கொண்டிருந்தேன்” என்று திருமலை சொல்லி நிறுத்தினான்.

“திருமலை! நீ கூறியவை உண்மையாகத்தான் இருக்கவேண்டும்! மாகீர்த்தியை சதியாளர்கள் துரத்திக் கொன்றதை என் கண்களால் பார்க்க நேர்ந்தது..!” என்று வல்லவரையன் மாகீர்த்தி கொல்லப்பட்டது, குறிப்பேடுகளை அவன் கண்டெடுத்தது, கருத்திருமனை அடையாளம் கண்டுகொண்டது, புதிர்களை முடிந்தவரைக் கணித்ததுவரை விவரமாகக் கூறினான்.

‘பெரியகோவிலூர்’ எந்த பகுதியைச் சேர்ந்தது என்ற விவரத்தை மட்டும் கணிக்க இயலவில்லை என்றும் கூறிய அவன் தொடர்ந்து,

“மாகீர்த்தி அடுத்த பௌர்ணமித் திங்கள் கிழமையில் பெரியகோவிலூரில் நடக்கப்போகும் ஆலோசனைக் கூட்டத்தைப் பற்றி அறிந்து கொண்ட உண்மை சதியாளர்களுக்கு எப்படியோ தெரிந்து போய்விட்டது. இதை அறிந்து கொண்ட மாகீர்த்தி தனக்கு எந்நேரமும் கேடு சதியாளர்கள் மூலமாக விளையலாம் என்று, தெரிந்த உண்மைகளை வேறு யாருக்கும் தெரியாதவாறு சித்திரங்கள் மூலமாக, குறிப்பேடுகளில் விளக்கி, யாரிடமாவது சேர்ப்பிக்கலாம் என்று எண்ணியிருந்தான் போலும்! என் மூலமாக அது சாத்தியமாயிற்று!” என்று கூறி முடித்தான்.

“சோழ நாட்டில் ‘பெரியகோவிலூர்’ என்று பெயர் கொண்ட ஊர்கள் மூன்று இருக்கின்றன. எங்கே, அந்தச் சித்திரங்களைப் பார்க்கலாம்” என்றான்.

வந்தியத்தேவன் மடியிலிருந்து பையை எடுத்து ஓலைச் சித்திரங்களை கீழே கொட்டினான். திருமலை அந்த சித்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பரிசீலனை செய்தான். அந்தப் புதிர்களின் நுணுக்கங்களைக் கண்டு வியந்து “வந்தியத்தேவா! நீ வீரனுக்கு வீரன்! ஒற்றனுக்கு ஒற்றன்! இந்த கடினமான புதிர்களை மிக எளிதில் கணித்திருக்கிறாய்! அதற்காக உன்னை மெச்சுகிறேன்!” என்று அவனைத் தட்டிக்கொடுத்தான். மறுபடியும் சித்திரங்களில் கவனம் செலுத்தினான்.

வந்தியத்தேவன் ‘மலை’ சித்திரத்தைப் பொறுக்கியெடுத்து “இதில்தான் பெரியகோவிலூர் இருக்கும் பகுதியின் புதிர் அடங்கியிருக்கிறது” என்று திருமலையிடம் காட்டினான்.

திருமலை அதைப் பார்த்து சிறிது நேரம் மௌனமானான். பிறகு “இது ஒரு மலைப் பகுதியைத்தான் குறிக்கிறது. அதில் வரையப்பட்டிருக்கும் உருவம் ஒரு பெண். எட்டுக் கைகள் படைத்த பெண் மானிடராக இருக்க வாய்ப்பில்லை. ஒரு தெய்வமாக இருக்கவேண்டும். இப்போது நான் சொல்லும் ஒரு கதையைக் கேள். தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் தற்போதைய இயற்கை எல்லையாக விளங்கும் மலைப் பகுதியைப் பற்றிய கதை அது. எட்டுக்கை கொல்லிப்பாவை அம்மன் அங்குள்ள மலைகளையெல்லாம் பாதுகாத்து வருவதாக அங்கு ஒரு ஐதீகம் நிலவிவருகிறது. அங்கு வழங்கிவரும் வரலாறு கொல்லிப் பாவையைப் பற்றி என்ன சொல்கிறதென்றால், ரிஷிகளும், முனிவர்களும் அவர்களது யாகங்களுக்கும் தவங்களுக்கும் அமைதியான இடமான அந்த மலையைத் தேர்ந்தெடுத்தனர். அரக்கர்கள் முனிவர்களைக் கொன்றும்; அவர்களின் யாகங்களையும் தவங்களையும் கெடுத்தும், மற்றும் பல்வேறு துன்பங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முனிவர்கள் அந்த மலைத் தெய்வமான பாவையை வேண்டினர்.

பாவை மனமிரங்கினாள். அவர்களின் கோரிக்கையை நிவர்த்திக்க முடிவு செய்தாள்!

அரக்கர்கள் ஒரு நாள் முனிவர்களின் தவங்களைக் கெடுக்க மலையை நோக்கி வந்தனர். படை மலையை நெருங்கி, மேலே செல்ல ஆரம்பித்தது. அப்போது ஒரு இனிமையான, மோகனச் சக்தி வாய்ந்த, எல்லோரையும் ஈர்க்க வைக்கும் ஒரு பெண்மணியின் சிரிப்பு அவர்களுக்குக் கேட்டது! படைகள் அதைப் பொருட்படுத்தாது மேலும் சென்றார்கள். சிரிப்பு அவர்கள் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது!

முனிவர்களை வேட்டையாட அரக்கர்கள் வெவ்வேறு திக்குகளில், தனித்தனி சிறு கூட்டமாகப் பிரிந்து செல்லத் தொடங்கினார்கள். ஒவ்வொருவருக்கும், அந்தச் சிரிப்பு, வெகு அருகாமையில், அவர்களை பிரத்யேகமாய் ஈர்ப்பதற்கென்றே கேட்டுக் கொண்டிருந்தது! அரக்கர்களின் மனம் சிதறியது! எல்லோரும் சிரிப்பு வந்த திக்கை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். மகுடியால் கட்டுண்ட பாம்புபோல் சிரிப்பு அவர்களை மேலே மேலே இட்டுக் கொண்டே சென்றது. இறுதியில் எல்லா அரக்கர்களையும் ஒரே இடத்திற்கு அந்த சிரிப்பு கொண்டு வந்து சேர்த்தது!

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது! பாவை எட்டுக் கைகளுடன் வானத்தைத் தொடுமளவு உயர்ந்து அவர்கள் முன் தோன்றினாள். பாவையின் சிரிப்புத் தொடர்ந்தது. ஆனால் அந்தச் சிரிப்பில் இப்போது எல்லோரையும் கவரும் மோகனம் இல்லை. அது ஒரு பயங்கரமான கோரச் சிரிப்பாக மாறியிருந்தது! பாவையின் வாயிலிருந்து அனல் கக்கியது!

அரக்கர்கள் பாவையின் விஸ்வரூபத்தைக் கண்டு, பயந்து அரண்டு போனார்கள்! தலை தெறிக்கதத் தாறுமாறாக ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்கள். பாவையின் வாயிலிருந்து மின்னல் போல் வந்த இடியுடன் கூடிய நெருப்பு ஜ்வாலை அரக்கர்களைச் சுற்றி பெரிய பள்ளத்தாக்கை உருவாகியது. எங்கும் ஒரே புகை மண்டலம். கண்மூடித் தனமாக ஓடிச் சிதறிச் சென்ற அரக்கர்கள் அனைவரும் அதில் விழுந்து மாண்டார்கள்.

இப்படியாக அந்த மலைத் தெய்வமான பாவை தன்னுடைய தெய்வீகமான சிரிப்பினால் அரக்கர்களை விரட்டி, வீழ்த்தி அந்த மலைப்பகுதியில் அமைதியை நிலைநாட்டினாள். அரக்கர்களைக் கொன்று வீழ்த்தியதால் ‘கொல்லிப்பாவை’ என்று அந்த தெய்வத்தை அழைத்து வணங்கினார்கள்! கொல்லிப்பாவைக்குக்  கோவில்கள் எடுக்கப்பட்டன. இன்றும் கொல்லிப்பாவை பூஜிக்கப்படுகிறாள். அவளது தெய்வீகச் சிரிப்பு போற்றப்படுகின்றது. அந்த எட்டுக்கை கொல்லிப்பாவையின் உருவம்தான் அந்த மலைக்கு முன் காணப்படுகிறது! கொல்லிப்பாவையின் மலைதான் இப்போது ‘கொல்லிமலை’ என்று வழங்கப்பட்டு வருகிறது! கொல்லிமலை பகுதியைத்தான் இந்தப் புதிர் குறிக்கிறது. மேலும் நந்தினி, ரவிதாசன், அமரபுஜங்க நெடுஞ்செழியப் பாண்டியன் போன்ற பாண்டிய ஆபத்துதவிகள் ஆதித்த கரிகாலனைக் கொன்று பழியைத் தீர்த்துக் கொண்ட பின் இங்கு வந்து ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த மிகவும் அடர்த்தியான மலைக் காடுகளில் கண்டுபிடிப்பது இயலாத காரியம். மற்றும் பெரியகோவிலூர், மலையின் உச்சியில் இருக்கிறது. பழமை வாய்ந்த அரப்பள்ளீஸ்வரர் அருள்பாவிக்கும் சிவன் கோவிலும் அங்குதான் இருக்கிறது” என்று சொல்லி முடித்தான்.

Image result for kolli hills

வந்தியத்தேவன்  உடனே “இந்தக் கதை எனக்கு உகந்த செய்தியைத் தெரிவிக்கிறதே! என் உற்ற நண்பன், கொல்லிமலை அதிபதி, கடம்பூர் கந்தமாறன் எனக்கு இதில் நிச்சயம் உதவி செய்வான்” என்றான். ‘அவனிடமிருந்து ஏன் எட்டுக்கை கொல்லிப்பாவை பற்றிய ஐதீகத்தை இதுவரை தெரிந்துகொள்ளவில்லை?’ என்று நினைத்து வெட்கிக் குறுகினான்.

அதை ஆமோதித்த திருமலை “கந்தமாறன்  தற்சமயம் தஞ்சையில்தான் இருக்கிறான்” என்றான்.

“மிகவும் நல்லதாகப் போயிற்று திருமலை. நாம் அவனைச் சந்திக்க தஞ்சைக்கு உடனே செல்வோம்” என்றான் வந்தியதேவன்.

திருமலையும் குதிரையில் அங்கு வந்திருந்தான். இருவரும் புரவிகளில் அமர்ந்து தஞ்சையை நோக்கிச் சென்றார்கள்.

(தொடரும்)

 

மணி மகுடம் – ஜெய் சீதாராமன்

அத்தியாயம் 04. அரசிலாறு.

part-4-final-copy

வந்தியத்தேவனின் ஆழ்ந்த உறக்க நிலை அடுத்த ஒன்றரை ஜாமத்திற்கு மட்டுமே நீடித்தது. அவன் அடிமனதில் பதிந்து மறைந்து வெகுவாக பாதித்திருந்த ஒரு துக்ககரமான சம்பவம் மேல்மனதிற்கு வந்து அவனை அப்படியே ஸ்வப்பன நிலைக்குக்  கொண்டு சென்றது. அதில் ஒரு சுந்தர வதனம் படைத்த ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது. அவனுடைய மடியில் அவள் தலை சாய்ந்திருந்தது. ஆ! அது என்ன? அவளின் கண்கள் ஏன் மூடிவிட்டன? அய்யோ! அவளின் உயிர் உடலைவிட்டுப்  பிரிந்துவிட்டதே! அதற்கு நாம் காரணமாகிவிட்டோமே என்றெல்லாம் எண்ணிய வந்தியத்தேவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. தலை சுற்றியது. திடுதிப்பென்று எழுந்து உட்கார்ந்தவன் சுய நினைவு நிலைக்கு வந்தான்! ஸ்வப்பன உலகத்தில் நிகழ்ந்த உண்மையான சம்பவங்கள் அவன் மனதில் பவனி வந்தன.

**************************************************************

ஆதித்த கரிகாலனின் மர்ம மறைவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நிகழ்வதற்கு முன் அவனைக் கண்ணும் இமையுமாக வந்தியத்தேவன் கண்காணித்து வந்தான். அதற்கு வேண்டிய பல உத்திகளை அவன் கையாள வேண்டியிருந்தது. அதற்காக சம்புவரையர் மகள் – நண்பன் கந்தமாறனின் சகோதரி மணிமேகலையின் நட்பைச் சம்பாதித்துக் கொண்டான். அதன் விளைவு மணிமேகலையின் மனதில் அது ஒருதலைக்  காதலாக மலர்ந்தது. சதிகாரர்கள் ஆதித்த கரிகாலனைக் கொன்று பழியை வந்தியத்தேவன் மேல் விழும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். அவ்வாறே பழி அவன் மேல் விழுந்தது. வந்தியத்தேவன் மேல் கொண்ட அளவிலாக் காதல் மற்றும் வந்தியத்தேவனின் பழியை தாங்க இயலாத  நிலை, பழியைத்  தானே ஏற்க முயன்று அது மணிமேகலையைப் பிச்சியாக்கியது. கரிகாலன் மறைவிற்கு வந்தியத்தேவன் காரணமல்ல என்று நிரூபிக்கப்பட்டு அவன் விடுவிக்கப்பட்டதை அறியாத மணிமேகலை அவனை மனதில் நினைத்தவளாகவே மற்றும் அவன் மடியில் தலை வைத்தவாறே  மறைந்தும் போனாள்!

**************************************************************

நிகழ்ந்தவை வந்தியத்தேவனின் மனதை மேலும் மேலும் உருக்கியது. தன்னால் ஒரு இளம் பெண் பலியானதை அவனால் ஏற்கவே முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.

கடைசியாக அந்த நினைவு அவனை விவேகமடைய வைத்து ஒரு வைராக்கியசாலியாய் மாற்றியது! பழைய நினைவுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ‘நமக்கு ஏன் இந்த வாழ்வு? பாண்டியர் சதிச்செயல்களைப் பற்றிய உண்மைகளைக் கையாளுவது மாமந்திரி அநிருத்தர் மற்றும் ஒற்றர் தலைவன் திருமலை போன்றவர்களின் வேலை. அவர்களிடம் கணித்தவைகளைச்  சமர்ப்பித்துவிட்டு நாம் வல்லத்திற்குச்  சென்று நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம்’ என்று வந்தியத்தேவன் வைராக்கியம் கொண்டான்!

‘காலில் சக்கரம் கட்டிக்கொண்டிருக்கும் திருமலை இப்போது எங்கே இருப்பான்?தஞ்சையில்தான் இருக்கக்கூடும்! அங்குதான் அவனைச்  சந்திக்க வேண்டும்’ என்று எண்ணிய வந்தியத்தேவன் கதிரவன் உதிக்கு முன் எழுந்து குளித்துவிட்டு அரசாங்க விடுதியிலிருந்து திருவையாறு வழியாகத்  தஞ்சையை நோக்கிச்செல்ல,  பயணத்தைத் தொடங்கினான். களைப்படைந்திருந்த குதிரை இரவு ஓய்விற்குப் பின் நன்றாக சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது. வந்தியத்தேவனையும் அவன் மனதின் சுமையையும் தாங்கிக் கொண்டு பறந்து சென்றது.

Image result for vanthiyathevan pictureதிருவையாற்றை அடையுமுன் குதிரை அரசிலாற்றங்கரையை நெருங்கியது. அங்கு வந்தியத்தேவனின் குதிரை மரங்கள் நிறைந்த அடர்த்தியான நதியின் கரை ஓரமாக சிறிது தூரம் வந்ததும் அவன் மனதில் கிளுகிளுப்பை உண்டாக்கிய  சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்திருப்பதை உணர்ந்தான். கடிவாளத்தைப்  பிடித்து நிறுத்தினான் -இல்லை.. ஏதோ ஒரு சக்தி அவனை நிறுத்த வைத்தது.

‘இந்த இடத்தில்தான் ‘அய்யோ முதலை..’என்ற பெண்களின் அபயக்குரலைக் கேட்டுக்குதிரையை வாயு வேகமாய்விட்டுக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தோம்! பஞ்சு அடைக்கப்பட்ட பொய் முதலையை நிஜ முதலை என்று எண்ணி குறிபார்த்து வேலைப்  பாய்ச்சினோம்!’ என்றெல்லாம் எண்ணிக்கொண்டு எந்த மரத்திற்கு முன்னால் வாயைப்  பிளந்து கொண்டு நின்ற முதலை வைக்கப்பட்டிருந்ததோ அங்கு வந்தடைந்தான். குதிரையிலிருந்து இறங்கி வசதியான வேர் ஒன்றில் அமர்ந்தான். ‘வேலுக்கு இழுக்கு நேர்ந்து மனம் நொந்திருந்தபோது இளைய பிராட்டி சொன்ன ஹிதமான வார்த்தைகள் இப்போது நினைத்தாலும் பரவசப்படுத்துகிறதே!’ என்று ஒரு கணம் மெய்மறந்தான். மறுகணம் மணிமேகலையின் நினைவுகள் அவன் மனதை மீண்டும் நிறைத்தன. கண்ணிலே நீர் மல்கியது. வளைந்து செல்லும் நதிப்ராவகத்தின் ஓசை சோககீதம் பாடுவதாகத் தோன்றியது. துக்கத்தில் தீவிரமாக ஆழ்ந்து தன்னை மறந்த நிலைக்குச் சென்றான்.

வந்தியத்தேவன் அமர்ந்த அடர்த்தியான மரத்திற்குச்  சிறிது தூரத்திற்கு முன்னால் இருந்த ஓடத்துறையில் ஒரு அழகிய அன்ன வடிவமான வண்ணப்படகு வந்து நின்றது. இது என்ன மாயம்! அதில் Image result for kundavai and vanthiyathevanஅவன் மனம் கவர்ந்த இளைய பிராட்டி குந்தவை அமர்ந்திருந்தாள்! படகில் வந்த காவல் ஆட்களிடம் அங்கேயே காத்திருக்கும்படி பணித்துவிட்டு, கரையில் இறங்கி மெல்ல வந்தியத்தேவன் அமர்ந்திருந்த மரத்திற்கு அருகில் வந்தாள். வந்தியத்தேவனை அங்கு எதிர்பாராமல் பார்த்த அவளின் அகன்ற கண்கள் மலர்ந்து பவளச்  செவ்வாய்கள் வியப்பினால் விரிந்தன. மகிழ்ச்சியை அடக்க முடியாமல் மெல்ல அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

வந்தியத்தேவன் குந்தவை வந்ததையோ, பக்கத்தில் வந்து அமர்ந்ததையோ கவனிக்கவில்லை. கண்களில் தாரையாக உருண்ட நீர்த்துளிகளோடு மணிமேகலையின் சோக நினைவினால் ஆற்றின் ப்ரவாகத்தை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான்.

குந்தவை அவன் முகத்தை நோக்கினாள். அவன் கண்களில் வழிந்த நீர் அவள் மனதை நெகிழவைத்தது. ஒரு நொடியில் அவன் மனதில் ஓடும் துயரச்  சிந்தனைகளைப்  புரிந்துகொண்டாள். குந்தவை திரும்பி வந்தியத்தேவன் கண்களிலிருந்த கண்ணீரை இடுப்பிலிருந்து எடுத்த துணியினால் ஒத்தி எடுத்தாள். குந்தவையின் கை ஸ்பரிசமும் கை வளைகள் எழுப்பிய நாதமும் அவனை இந்த உலகிற்குக் கொண்டுவந்து சேர்த்தன. இன்ப அதிர்ச்சியால் உந்தப்பட்ட வந்தியத்தேவன் மனதில் இந்த உலகத்தில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுந்தது.

குந்தவை “வல்லத்து அரசர் வந்தியத்தேவரே, உங்களுடைய துக்கத்தை நான் அறிவேன்” என்றாள்.

வந்தியத்தேவன் “இது கனவா.. அல்லது நினைவா” என்றான்.

“இது நினைவுதான்..”

“எப்படி இங்கே..”

“கடம்பூரில் நடந்த துக்க செய்தி எங்களுக்கு வந்தது முதல் எனக்கு உங்கள் ஞாபகமாகவே இருந்தது.சஞ்சலம் அடையும் போதெல்லாம் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நீங்கள் எங்களைக் காப்பாற்ற வீரச்செயல் புரிந்த இந்த இடத்திற்கு வருவதுண்டு.மனமும் அமைதி அடையும். அதற்காகவே இன்றும் வந்தேன்.”

குந்தவையின் சொற்கள் வந்தியத்தேவனை சொர்க்க பூமிக்குக்  கொண்டு சென்றது. சிறிது நேரம் அதிலேயே திளைத்திருந்தான். ‘மணிமேகலையின் மறைவிற்கு நான் காரணமாகிவிட்டேனே!இதற்கு எனக்கு மன்னிப்பே கிடையாது” என்று துக்கம் பொங்கக் கூறினான்.

அதற்குக்குந்தவை சரியான மறுமொழி கூறினாள். “மணிமேகலை இறந்ததற்குத்  தாங்கள் காரணமல்ல. அந்த பாபச்செயலைப்  புரிந்தவர்கள் நாங்களே. எங்கள் கோரிக்கையை சிரமேற்கொண்டு, உயிரைப் பணயமாய் வைத்து, பெரிய பழியையும் சுமந்து, எடுத்த காரியத்தில் ஓரளவு வெற்றியும் கண்டீர்கள். கரிகாலன் மரணத்திற்கு அவனே காரணம். எடுத்த காரியத்தினை முடிக்க மணிமேகலையைச்  சிறிது பயன்படுத்தியபோதிலும் அவளிடம் மிகவும் கௌரவமாகவும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டீர்கள். மேலும் கந்தமாறன் உங்களின் வீரச் செயல்களைப் பற்றி அவளிடம் வர்ணித்தபோது மணிமேகலை தன் மனதை உங்களுக்குப் பறிகொடுத்திருந்தாள். ஆகவே அவனுக்கும் இதில் பங்கேயின்றி தாங்கள் ஒருக்காலும் மணிமேகலையின் மரணத்திற்குப் பொறுப்பேற்க முடியாது” என்றாள்.

வந்தியத்தேவன் உடலும் உள்ளமும் ஒருவாறு பரவசமடைந்த போதிலும் சமாதானமடையாமல் “இருப்பினும் இந்த பொய், புரட்டு வேலைகளை என் மனது விரும்பவில்லை. அதற்கெல்லாம் அநிருத்தர், திருமலை போன்றவர்கள் இருக்கிறார்கள்’ நான் அமைதியான வாழ்க்கையைத் தொடங்கத் தீர்மானம் செய்துள்ளேன்” என்று கூறிவிட்டு,  குடந்தை சாலையில் நடந்தவைகளிலிருந்து அரசாங்க விடுதியில் தான் கணித்தவைகளையும் எடுத்துரைத்தான்.

குந்தவை அதனை வியப்பாகவும் வந்தியத்தேவனின் மதிநுட்பமான கணிப்புகளை கேட்டும் பெருமிதமடைந்தாள்.

கடைசியாய் வந்தியத்தேவன் “நடந்தவைகளையும் கணித்தவைகளையும் அநிருத்தரிடமும்,     திருமலையிடமும் சமர்ப்பித்துவிடப் போகிறேன். மேலும் எனக்குக் கொடுக்கப்பட்ட ஈழச் சேனாதிபதி பதவியிலிருந்தும் விடுதலை தரச் சொல்லிக்     கேட்டுக் கொள்ளப் போகிறேன்” என்று பெரியதொரு குண்டைத்   தூக்கிப்போட்டான்.

அதிர்ச்சி அடைந்தாள் குந்தவை. மனதைக் கவர்ந்தவனின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்திருந்தபோதிலும் ,‘மாபெரும் வீரனின் மகத்தான சேவையை சோழர்குலம் இழக்க நேர்ந்துவிடும் போலிருக்கிறதே.  வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்தது போலவும், மஹாபாரதப் போருக்கு முன் கௌரவர்களின் சேனையை வீழ்த்த பாண்டவர்கள் மலை   யைப் போல் நம்பியிருந்த அர்ஜுனன்,  வில்லைக்  கீழே எறிந்துவிட்டு, ‘காட்டுக்குச்  சென்று சன்யாசம் மேற்கொள்ளப்போகிறேன்’ என்று ஸ்ரீகிருஷ்ணரிடம் உரையிட்டது போல் அல்லவா இது இருக்கிறது! ஸ்ரீகிருஷ்ணர் எப்படி அர்ஜுனனுக்குப் பகவத் கீதையை உபதேசித்து அவன் கடமையை உணரவைத்தாரோ அப்படி வந்தியத்தேவனின் இந்த முடிவை மாற்றி அவனுக்கு உண்மையை உணரவைத்து, ஊக்குவித்து சமநிலைக்குக்   கொண்டுசேர்க்கும் முக்கியப் பணி   தனக்கு இப்போது இறைவனால் இடப்பட்டிருக்கிறது’ என்பதை உணர்ந்தாள்.

வந்தியத்தேவனைப் பார்த்து “உத்தமசோழர் ராஜ்யப் பொறுப்பை ஏற்றாலும் அவருக்கு உறுதுணையாய் அருள்மொழி இருக்கப்போகிறான். அவனுக்கு வலக்கையாகத்  தாங்கள் இருக்க வேண்டாமா? எந்த சந்தர்ப்பமும், நிகழ்ச்சியும் அரசியலில் சகஜம் அல்லவா? எந்தச்  சூழ்நிலையிலும் தங்கள் மனதைத்  தளரவிடலாமா? இது போன்ற எண்ணற்ற விஷயங்களைத்  தாங்கள் சந்திக்க வேண்டிவரும். அவைகளில் சில இன்பத்தை அளிக்கவல்லது. பல துன்பங்களைத்  தரக்கூடியவை. சில கோபங்களை வரவழைக்கும். பல மனத்தைத் தளர வைப்பவை. அவைகளைச் சீர்தூக்கிப் பார்த்து சம நிலையில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டாமா? என் மனம் கவர்ந்த வந்தியத்தேவரே! நிமிர்ந்து நில்லுங்கள். உங்கள் கடமைகளையும் எதிர்பார்ப்புகளையும் சிந்தித்துப் பாருங்கள்! பாண்டியர் உயிர்நாடியான மணிமகுடத்தையும் இரத்தின ஹாரத்தையும் ஈழத்திலிருந்து மீட்டு வருவது தங்கள் ஒருவராலேயே முடியும்! அதற்குத் தங்களைத்  தயார் படுத்திக்கொள்ளுங்கள். ஈழச் சேனாதிபதிப்  பதவி ஏற்று அருள்மொழிக்குப் பக்க பலமாய் இருங்கள். மணிமேகலையாகிய தெய்வம் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருந்து உங்களை நடத்திச் செல்வாள். என் இந்த நம்பிக்கையைத்  தகர்த்து விடாதீர்கள்!!!” என்று உணர்ச்சிவசமாய்ப்  பேசி முடித்தாள்.

ps2

குந்தவையின் கொவ்வை மலர்களை ஒத்த இதழ்களிலிருந்து பொங்கிய ஒவ்வொரு வார்த்தையும் வந்தியத்தேவன் நரம்புகளை முறுக்கி அவனை நிமிர்ந்து நிற்க வைத்தன. வைராக்கியம் தகர்ந்தது!! மனம் சமச்சீர் தெளிவை  அடைந்தது. !!! தன் கடமை என்ன என்பதை உணர்ந்து, நிலை தடுமாறியதை நினைத்து வருத்தப்பட்டான்.

“தேவி!உங்களின் வார்த்தைகள் எனக்கு ஊக்கமளித்து உண்மையை விளக்கின. என் கடமையை  உணர்த்தியதற்கு உங்களுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கின்றேன். என் சித்தம் நிலை குலைந்து தடுமாறியதற்காக வருத்தப்படுகிறேன்” என்றான்.

குந்தவை வந்தியத்தேவன் சோக உலகத்திலிருந்து மீண்டதை உணர்ந்தாள். அவன் பேசியதைக் கேட்டுப் பெருமிதம் கொண்டாள்.

Image result for kunthavai and vanthiyathevan“வெற்றியோடு திரும்பி வாருங்கள்.உங்களுக்காக நான் என்றென்றும் காத்திருப்பேன்” என்று குந்தவை தன் திருக்கரங்களை நீட்டினாள். வந்தியத்தேவன் தன் சொல் செயலிழந்து கைகளைப் பற்றிக்கண்களில் ஒற்றிக்கொண்டான்.

“திருமலையை முதலில் தஞ்சையில் சந்தித்துப்புதிரில் மறைந்திருக்கும் சில வினாக்களின் விவரங்களைப் பற்றிக் கலந்தாலோசித்துவிட்டுப்  பிறகு என் நீண்ட பயணத்தைத் தொடங்குவேன்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டு குதிரையில் தாவி ஏறினான். விருட்டென்று திரும்பி குதிரையைத்  தட்டிவிட்டான். குதிரை பிய்த்துக்கொண்டு பறந்தது.

வந்தியத்தேவனின் குதிரை மறையும்வரை பார்த்திருந்துவிட்டு நிம்மதியான பெருமூச்சுவிட்டாள். என்றும் இல்லா ஆனந்தத்துடன் ஓடத்துறைக்குத்  திரும்பினாள் குந்தவை.

(தொடரும்)

 

மணிமகுடம் – ஜெய் சீதாராமன்

 

முன் கதைச் சுருக்கம்

 

இன்றைக்கு 1100 ஆண்டுகளுக்கு முன்  வீர பாண்டியனின் தலையைக் கொய்து  பாண்டிய நாட்டை வென்ற சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன். தன்னைப் புலியிடமிருந்து காப்பாற்றிய வந்தியத்தேவனின் வீரத்தைப் பாராட்டிக்  கரிகாலன்   அவனைத் தன் அந்தரங்க வேலைகளுக்காக நியமித்துக் கொண்டான்.

வந்தியத்தேவன் தன் வீரச்செயல்களால் கரிகாலன் இட்ட பல வேலைகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தான். கரிகாலனின் சகோதரி குந்தவையின் காதலுக்குப் பாத்திரமானான். இளையவன் அருள்மொழி வர்மனின் நட்பையும் பெற்றான்

வீர பாண்டியனின்  தலையைக் கிள்ளிய கரிகாலனைப் பாண்டிய நாட்டு ‘ஆபத்துதவிகள்’ மர்மமுறையில்  கொன்று , அந்தப்  பழி வந்தியத்தேவன் மேல் விழும்படி சந்தர்ப்பத்தை  உருவாக்கினர்.  கரிகாலன் கொல்லப்பட்டது அவனால்  அல்ல என்று நிரூபணமானபின், அவன் சோழ நாட்டுக்குச்  செய்த சேவைகளுக்காக  அவனுக்கு அவன் முன்னோர்கள் ஆண்ட வாணகப்பாடி நாட்டையே  சோழ சக்கரவர்த்தி வழங்கினார்.  மேலும் அவன் ஈழத்தின் சேனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டான்.

வந்தியத்தேவன் ,  ஒருநாள்  தஞ்சைக்குச் செல்லும்போது தனிமனிதனொருவன் ஒரு கும்பலால் கொல்லப்படுவதைத் தடுக்க முற்பட்டான் . அதற்குள் கத்தியை நெஞ்சில் பாய்ச்சிய கும்பல் குதிரைகளில் பறந்து சென்றுவிட்டது. அதில் ஏனோ ஒருவன் வந்தியத்தேவனைக் கண்டதும் முகத்தை மறைத்துக் கொண்டபின் பறந்தோடினான். தாக்கப்பட்டவனின் குதிரையைச் சோதனையிட்டபோது அவன் ஒரு சோழ ஒற்றன் என்பதை அறிந்தான். மற்றும் சில   புதிர் பொதிந்த விசித்திர சித்திர ஒலைச் சுவடிகளையும் கண்டான்.  நெஞ்சிலிருந்து உருவிய கத்தியில் மீன் சின்னத்தைப் பார்த்த வந்தியத்தேவன் அவர்கள் பாண்டிய நாட்டைச் சேர்ந்த ‘ஆபத்துதவிகள்’ என்பதையும் அந்த சுவடுகளில் ஏதோ ஒரு மர்மம் புதைந்திருப்பதையும் புரிந்துகொண்டான்.

முன்னிரவு வேளையில் குடந்தை அரசாங்க விடுதியை வந்தடைந்த வந்தியத்தேவன்,  அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தங்கி, சுவடுகளை ஒவ்வொன்றாக ஆராய ஆரம்பித்தான். அதற்குமுன் முகத்தை வேண்டுமென்றே மூடி மறைத்த சதிகாரனின் கண்கள் அவனுக்கு ஏற்கெனவே பரிச்சியமான கருத்திருமன் என்பதை நினைவூட்டின… அவனுக்கு ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பாண்டிய மணிமகுடம், இரத்தினஹாரம் பற்றிய இரகசியமும் தெரியும் என்பதையும் வந்தியத்தேவன் அறிந்திருந்தான்.

சில சுவடுகளை ஆராய்ந்தபோது அவற்றிலிருந்து ஒன்றில் பாண்டியர் மணிமகுடமும், மற்றொன்றில் இரத்தினஹாரமும் வரைந்திருந்ததைத் தெள்ளத் தெளிவாகக் கணித்தான். சுவடுகளில் மறைந்திருக்கும் மர்மம் பாண்டிய பொக்கிஷங்களைப் பற்றித்தான் என்பதை இப்போது வந்தியத்தேவன் ஊர்ஜிதம் செய்துகொண்டான்.

பணியாளிடமிருந்து ஒரு மரப் பலகையும், கிழிந்த துணிகளும் மற்றும் சில கரித்துண்டுகளும் கேட்டு வாங்கிக்கொண்டு அடுத்த கட்ட சோதனையைத் துவங்க ஆரம்பித்தான்.

புது நேயர்கள் இப்போதும் கதையைத் தொடரலாம்.

 

part-3-2-final-copy-1

 

திடீரென்று எழுந்தான். பலகையை எடுத்து கரித்துண்டினால் கீழ்க் கண்டவாறு எழுதினான்:

pic9

முதலாவதாக இரு சந்திரன்களைத் தாங்கிய எண் ஐந்தைத் தேர்ந்தெடுத்தான். பலகையின் மறு பக்கத்தின் ஓரத்தில் கீழ்க்கண்டவாறு குறித்தான்::

pic10

கூட்டு வார்த்தைகளை ஆராய்ந்தான். அவைகள் சரியான விவரத்தைக் கொடுப்பதாகத் தோன்றவில்லை. மறுபடி சிந்தித்தான். ‘சந்திரனுக்கு  திங்கள் என்ற மற்றுமொரு பெயர் இருக்கிறதே!.அது ஏன் என் மூளைக்கு இதுவரை எட்டவில்லை?’ என்று எண்ணி மறுபடியும் பலகையில் அதனையும் குறித்தான்.

pic11

 

‘இதுவும் சரியாக இல்லை’ என்று மறுபடியும் யோசித்தான். அவைகள் சந்திரனைப் பற்றி வேறு ஏதோ ஒன்றைத் தெரிவிக்க முயல்வதாகத் தோன்றியது. அவன் மூளையின் நரம்பு ஒன்று அசைந்தது! கடைசி கூட்டெழுத்துக்களை மாற்றி எழுதினான்.

pic12

 

புதிரின் விடை வந்தியதேவனுக்கு இப்போது பௌர்ணமியையும் திங்கள் கிழமையையும் குறிக்கிறது என்பது விளங்கியது.. இன்று சுக்லபட்ச தசமி வளர்பிறை புதன் கிழமை என்றும் அடுத்த பௌர்ணமி திங்கள் கிழமையில் வருகிறது என்பதையும் விரல்களால் கூட்டி உறுதிப்படுத்திக் கொண்டான். ‘அடுத்த பௌர்ணமித் திங்கள் கிழமைக்கும் இப்புதிரில் மறைந்து பொதிந்திருக்கும் விவரத்திற்கும் ஒரு முக்கியமான சம்பந்தம் இருக்கவேண்டும்.அதை நாம் கண்டுபிடித்தே ஆகவேண்டும்’ என்று சபதம் எடுத்துக் கொண்டான். பலகையின் மறுபக்கத்தைத் திருப்பி ஐந்தில் ‘சந்திரன் 1 சந்திரன் 2’ என்பதை அடித்து ‘பௌர்ணமி திங்கள்’ என்று எழுதினான்.     

‘சந்திரன் 1’ பௌர்ணமியைக் குறித்தது. ‘சந்திரன் 2’ திங்கள் கிழமையைக் குறித்தது. இப்போது எண் ஒன்பதில் ‘முழுச்சந்திரன்’ எதைக் குறிக்கிறது? நாள் பௌர்ணமி. கிழமை திங்கள். இது ஒரு நாளின் பகுதியான ‘வேளை’ பற்றியதாக இருக்குமோ?’ என்று ஆராய்ந்தான். மறுபடியும் சித்திரத்தை நோக்கினான். ஆம்! முழுநிலா இரவின் நடுஜாமத்தை குறிப்பதாக இருக்கலாம். சந்தேகமில்லை! அதுதான் உண்மை’ என்று பலகையில் எண் ஒன்பதில் முழுச்சந்திரனை அடித்து ‘நடுஜாமம்’ என்று எழுதினான்.

‘ஏழாவதில் இருக்கும் கோபுரத்தின் நுழைவாயில், வேறு எதையாவது குறிப்பிடுகிறதோ?’ என்று சிறிது யோசனைக்குப் பின், ‘இது ஆவுடையார் மேல்பகுதி சிவலிங்கத்தைப்போல் இல்லை?ஆம்! அப்படியாகத்தான் இருக்கவேண்டும்’ என்று பலகையில் ஏழின் கோபுரம் நுழைவாயிலை அடித்து ‘சிவன் கோவில்’ என்று எழுதினான்.

‘ஆறாவது மனிதக் கும்பல், இரத்தின ஹாரத்தையும், மணிமகுடத்தையும் பற்றிப் விவாதிக்கப் போகும் ஒரு ‘கூட்டம்’ -இது சந்தேகத்திற்கிடமின்றிதெள்ளத் தெளிவாகத் தெரிகிறது’ என்று பலகையில் மனிதர் கும்பலை அடித்து ‘கூட்டம்’ என்று மற்றுமொரு மாற்றம் செய்தான்.

அடுத்ததாக ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டையும், பத்தையும் ஒன்றாக சேர்த்துப் பிணைக்கும் விவரத்தைக் கண்டறிய விரும்பி பலகையில் மறுபக்கத்தை துணியால் துடைத்தான். சிறிது நேரம் யோசித்தபின்.. இரண்டு சித்திரக் கூட்டணியில் ஐந்து விதமாக மாற்றி மாற்றி கரித்துண்டினால் பின்வருமாறு வரைந்தான்:

 

pic1

ஐந்தாவது கூட்டணியில் ஒரு மீனின் உருவம் தெளிவாகத் தெரிந்தது. ‘இது பாண்டிய வம்சத்துச் சின்னமான ‘மீன்’ அல்லவா?’ என்று பலகையில் இரண்டிலும் பத்திலும் இருந்த வளைகோடு 1 மற்றும் வளைகோடு 2 எழுத்துக்களை அடித்து பத்தில் ‘மீன் சின்னம்’ என்றுஎழுதினான். பலகையில் இதுவரை கணித்தத்ததை முழுவதுமாக நோக்கினான்:

pic2

கணித்தவைகள், என்ன செய்தியைச் சொல்லுகின்றன என்பதில் கவனம் செய்யத் தொடங்கினான். ‘கிடைத்த விவரங்கள், முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. பிணைத்து ஒருங்கிணைத்து கிரகிக்க வேண்டும். அவைகளை வரிசைப்படுத்துவது அவசியமாகிறது’ என்று எண்ணிய வந்தியத்தேவன் ‘மீன் சின்னம்’. எல்லாவற்றிற்கும் பொதுவான சித்திரம். ஒட்டு மொத்த விவரங்களும் பாண்டிய நாட்டைப் பற்றியது. அதுவே வரிசையில் முதல் இடத்தைப் பெறுகிறது’ என்று முடிவெடுப்பவைகளை பலகையில், ஒரு தனிப் பகுதியில் எழுதலானான்.

‘எல்லா சித்திரங்களும் இரத்தின ஹாரத்தையும் மணிமகுடத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது!எனவே அவை இரண்டும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை அடைகின்றன!’ என்று வந்தியத்தேவன் தீர்மானித்தான்.

‘பொக்கிஷங்களைப் பற்றி ‘கூட்டம்’ ஒன்றில் பேசப்படப் போவதாகத் தெரிகிறது.பேசப்படும் நாள் ‘பௌர்ணமித் திங்கள் கிழமை’ ஆகும்! எனவே அது நான்காம் இடத்தைப் பெறுகிறது! அந்தக் கூட்டம் நடு ஜாமத்தில் நடத்தப்படுவதாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் ‘நடு ஜாமம்’ ஐந்தாம் இடத்தை அடைகிறது’ என்று சிறிது நேரம் சிந்தித்தான்.

‘இந்தக் கூட்டம் நடக்க இருக்கும் இடம் ‘சிவன் கோவில்’ எனக்கொள்ளலாம்!

சிவன் கோவிலுக்கு நாம் ஆறாம் இடத்தைத் தரலாம்! அடுத்ததாக ‘கூட்டம்’ சித்திரம் ஏழாவது இடத்தைப் பெறுகிறது’ என்றெல்லாம் ஆராய்ந்த வந்தியத்தேவனின் கை அவ்வப்போது பலகையில் வரிசைப்படுத்தியவைகளை எழுதிக் கொண்டிருந்தது. அவை கீழ்க் கண்டவாறு காணப்பட்டன:

pic3

‘இவைகளைச் சேர்த்துப் பார்க்கும்போது விலை மதிக்கமுடியாத பாண்டிய பொக்கிஷங்களான இரத்தின ஹாரம், மணிமகுடம் பற்றிய முக்கிய விவரங்கள் அடுத்த பௌர்ணமி தினம் திங்கள் கிழமை நடுஜாமத்தில் சிவன் கோவிலில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்ற கணிப்பில் என்ற மாற்றமும் இல்லை!

எல்லாம் சரியாகத்தான் கணித்திருக்கிறோம்! ஆனால் இதில் முக்கியமாக கூட்டம் நடத்தப்படும் ஊரின் பெயர் இல்லையே! சோழ நாட்டில் ஆயிரமாயிரம் கிராமங்களும் இடங்களும் உள்ளனவே! ஊரின் பெயர் மட்டும் போதவே போதாது! அது இருக்கும் பகுதியின் பெயரைத் தெரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது! -இவைகள் இரண்டும் நாம் இதுவரை கணிக்காத சித்திரங்கள் ஒன்றிலும் நான்கிலும் புதைந்து கொண்டிருக்கின்றன’ என்று முடிவு செய்தான்.

அடுத்ததாக எண் நான்கின் ‘நீண்ட கோடுகள்’ ஓலையை கையில் எடுத்தான். உற்று நோக்கினான். அதில் பின் வருமாறு வரையப்பட்டிருந்தது:

pic4

வெகு நேரம் பரிசீலனை செய்தான். ‘இது என்ன மேலும் கீழுமாக ஒரே நீண்ட கோடுகளாகத் தெரிகின்றனவே! இதில் இருக்கும் வளைவுகளையும் புள்ளியையும் பார்க்கும் போது, இது ஒரு புரியாத புதிர் பொதிந்த மொழி போல் தோன்றுகிறது! நமக்குத் தெரிந்த வரையில் எந்த மொழியையும் எழுதும் போது சிறியவைகளாகத்தான் எழுதுவார்கள்! ஆம்! இந்த எழுத்துக்கள் வேண்டுமென்றே நீளமாக எழுதப்பட்டிருக்கின்றன! சித்திரத்தில் காணப்படும் புள்ளி, கோடுகளின் கீழே போடப்பட்டிருக்கிறது. ம்.. இப்படியே இவைகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதில் நமக்கு ஏமாற்றமே காணப்படுகிறது! வேறு என்ன செய்யலாம்?  இதில் தென்படாத விவரம் ஒருவேளை, வேறு கோணத்திலிருந்து பார்த்தால் கிடைக்கலாம்! அதிலிருந்து மறைந்திருக்கும் செய்தியை விளக்கும் குறிப்பை அறியலாம்!’ என்று ஓலையை தலை கீழாகத் திருப்பினான்.

சிறிது நேரம் உற்றுப் பார்த்தபின் ‘இதிலும் ஒன்றும் புலப்படவில்லையே! கணித்தபடி இது ஒரு மொழி என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது! ஏற்கெனவே சிந்தித்தபடி, மொழிகளின் வழி முறைகளை பரிசீலனை செய்வது அவசியமாகத் தோன்றுகிறது! எந்த மொழியாக இருந்தாலும் அதன் எழுத்துக்கள் அனைத்தும் சிறிய அளவில் இருப்பது என்பது ஒரு மறுக்கப்பட முடியாத விதிமுறை. எனவே சோழ ஒற்றன் ஏதோ ஒரு செய்தியை வேண்டுமென்றே விதிக்கு மாறாக எழுதித் தெரிவிக்க முயன்றிருக்கிறான் போலும்! நாம் அந்த எழுத்துக்களை முறைப்படி சிறியதாக எழுதிப்பார்க்கலாமே! அதிலிருந்து ஏதாவது புலப்படலாம்!’ என்று வந்தியத்தேவன் எண்ணி பலகையில் எழுத ஆரம்பித்தான். எழுத்தோலையிலிருந்து ஒவ்வொரு எழுத்தையும் பார்த்து, பெரியதிலிருந்து சிறியதாக மாற்றி ஒரே அளவில் எழுத ஆரம்பித்தான். அதற்கு அவனுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. இறுதியில்..

pic5

 

‘இப்போது சுலபமாக இருப்பதுபோல் தெரிகிறது! தமிழைப் போலவும் இருக்கிறது. இல்லாதது போலவும் இருக்கிறது. தமிழைப் போலவே எழுத்து ‘ப’ இருக்கிறது! அடுத்து ‘ய’ போலவே இருக்கும் எழுத்தில் செங்குத்தாக இருக்கும் மூன்று கோடுகளுக்குமிடையே உள்ள இடைவெளி வேறுவிதமாக இருக்கிறது! தமிழில் உள்ள முதல் இரண்டு கோடுகளுக்கு, இடைவெளி சிறியதாகவும் மற்ற இரண்டிற்கும் உள்ள இடைவெளி பெரியதாகவும் இருக்கும். ஆனால் புதிரின் ‘ய’வின் இடைவெளிகள் தமிழுக்கு நேர் எதிராக இருக்கின்றன. ‘ப’ போன்றிருக்கும் எழுத்தின் அடுத்தது, ஓர் ஒற்றைக் கொம்பு போல் இருக்கிறது! ஆனால் கொம்பு வலப்புறம் ஆரம்பித்து இடது பக்கம் முடிவதுபோல் தென்படுகிறது! கொம்பு ‘ப’வின் இடப் பக்கத்திற்கு பதிலாக வலப்புறம் வேறு எழுதப்பட்டிருக்கிறது! தமிழின் சில எழுத்துக்களின் மூக்குக் கோடுகள் வலது பக்கத்தில் இருப்பது என்பது மரபு! ஆனால் இதில் காணப்படும் கோடுகள் இடது பக்கத்தில் எழுதப்பட்டிருக்கின்றன! ஒன்றும் விளங்கவில்லையே..’ என்று குழம்பி நின்றான் வந்தியத்தேவன்.

அறையைச் சுற்றி வலம் வந்தான். மேலே பார்த்தான். கீழே பார்த்தான். அவனுக்கு எதிரில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே மண்டையைச் சொரிந்து கொண்டான். என்ன ஒரு ஆச்சரியம்.. திடீரென்று அவனுக்கு உண்மை உதயமாகத் தொடங்கியது.

வலது கையால் சொரிந்தது கண்ணாடியில் இடது கையாகத் தெரிந்தது! இடது கையால் வலது காதையும், கண்ணையும் தொட்டான். இடது கை வலதாகவும், வலது கண் காது முறையே இடது கண் காதாகத் தென்பட்டது. ‘ஆகா!அதுவா சமாசாரம்!’ என்று பலகையை கையிலெடுத்து கண்ணாடியில் காட்டினான். அதில் விரிந்தது புதிரின் ஓரளவிற்கான விடை..

pic6

 

‘ஆகா!நமது தமிழ்!’ என்று வந்தியத்தேவன் வியப்பில் ஆழ்ந்தான்!

வியப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு, மறுபடி சிந்திக்க ஆரம்பித்தான். ‘எழுத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக மாற்றி மாற்றி எழுதியிருக்கிறது!ஆகையால் அது சொல்லும் விவரத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை’.

மேலும் எழுத்து ‘கோ’ வலதுபுறத்தை மேலாகவும் இடதுபுறத்தை கீழாகவும் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது! எழுத்து ‘ர்’ தலைகீழாக இருக்கிறது’.

எழுத்துக்களை வேறு விதமாக மாற்றி எழுதி சேர்த்துப் பார்க்கலாம்!’ என்று வந்தியத்தேவன் பலகையில் எழுத்துக்களை கோர்த்து, மாற்றி, கோர்த்து மாற்றி ஏதாவது ஊரின் பெயர் அல்லது இடத்தின் பெயர் வருகிறதா என்று நீண்ட நேரம் முயற்சித்தான். முடிவில்.. வெற்றி கிட்டியது! பலகையில் ஊரின் பெயரும் தெரிந்தது!

pic7

பெருமிதத்துடன் பலகையின் மறுபக்கத்தில் நான்கில் ‘நீண்ட கோடுகள்’ எழுத்துக்களில் கோடு இழுத்துப் பக்கத்தில் ‘பெரிய கோவிலூர்’ என்று எழுதினான். இதுவரை கணித்தவைகளை பலகையில் நோக்கினான்.

இடத்தின் பகுதியை மறைத்திருக்கும், எண் ஒன்றான மலையின் பெயரை என்னத்தான் முட்டிக்கொண்டு யோசனை செய்தபோதிலும் அவனுக்கு விடை தென்படவில்லை. எண் ஒன்றின் ‘மலை’யைச் சுற்றி ஓர் வட்டம் போட்டு ஒரு கேள்விக் குறியையும் போட்டான்! கணித்தவைகள் கீழ்க் கண்டவாறு காணப்பட்டன:

pic8

வந்தியத்தேவன் ஆராய்வதை நிறுத்தினான். படுக்கையில் சாய்ந்தான். வெகு நேரம் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டான். நடு நடுவே, ஆண்டவன் சந்நிதியில் இருந்து கொண்டே கொலைகாரத் திட்டங்கள் தீட்டப்படுவதால், கடவுளையே நிந்திக்கும் சதிகாரர்களின் மேல் அவனுக்கு அளவிலாக் கோபம் வேறு வந்துகொண்டிருந்தது.

நேரம் நடுஜாமத்தைத் தாண்டியது! கண்கள் சோர்வடைந்தன. மூளை வேலை செய்ய மறுத்தது. உடல் உறுப்புகள் தளர்ந்தன. இமைகள் அவனையும் அறியாமல் மெதுவாக மூடின. வந்தியத்தேவனை நித்திராதேவி ஆட்கொண்டாள். அவன் ஆழ்ந்த உறக்க நிலையை அடைந்தான்!

(தொடரும்) 

 

மணி மகுடம் – ஜெய் சீதாராமன்

அத்தியாயம் 03. புரியாத புதிர்

(குவிகத்திற்காக  லதா பிரத்யேகமாக வரைந்த படத்துடன் இந்த மாத மணிமகுடம் தொடங்குகிறது ) 

ponniyin selvan1

குடந்தையின் அரசாங்க விடுதிக்கு முன்னிரவு வேளையில் வந்து சேர்ந்தான் வந்தியத்தேவன். தன்னிடமிருந்த அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவி வகிப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த புலி வெள்ளி பதக்கத்தைக் காண்பித்தான். அங்கிருந்தவர்கள் மிகுந்த பய பக்தியுடனும், தடபுடலான மரியாதையுடனும் நடந்துகொண்டார்கள்.

அங்கிருந்த அரச சேவகர்களிடம், மாண்ட பாண்டியர் சதியாளர் கூட்டத்தைச் சேர்ந்தவனைப்பற்றியும், சோழ ஒற்றனின் மரணத்தையும், சோழ முதன் மந்திரி அன்பில் அநிருத்தபிரும்மராயரிடம் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்தான். மற்றும் தன் குதிரையை அடுத்த நாள் விடியற் காலைப் பயணத்திற்கு தயார்படுத்தச் சொன்னான்.

அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குப் பணியாள் அழைத்துச் சென்றான். பணியாள் மறுபடி உணவு எடுத்து வந்து வைத்துவிட்டு, அங்கிருந்த அகலில் நிறைய எண்ணைவிட்டுத் திரியை ஏற்றி விளக்கை நன்றாக எரியவிட்டுச் சென்றான்.

உணவை உண்டபின், வல்லவரையன் அவனுக்காகப் போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்தபடியே இடுப்பிலிருந்து பையை எடுத்து ஓலைகளைப் படுக்கையில் கொட்டினான். ஒவ்வொரு ஓலையிலும் ஒரு மூலையில் சிறு துவாரம் ஒன்று இருந்ததைக் கவனித்து அவைகள் ஒரு கயிற்றினால் கட்டியிருந்திருக்கவேண்டும் என்று அனுமானித்தான். ஆனால் இப்போது கயிறு காணப்படாததினால் தனித்தனியாய் இருப்பதையும் புரிந்து கொண்டான். எனவே ஓலையின் மேற்பாகம் எது என்பதை துல்லியமாய் கண்டுபிடித்து  ஓலைகளைப் படுக்கையில் கீழே தனித்தனியாகப் பரப்பி வைத்தான்.:

 

psraman1 psraman2 psraman3

தனது முழு கவனத்தையும் செலுத்தி ஓலைகளை ஆராய ஆரம்பிக்கத் தொடங்கினான்.

வந்தியத்தேவன் மனம் வினாக்களை எழுப்ப ஆரம்பித்தது. ‘இந்த குறிப்பேடுகளில் பத்து சித்திரங்கள் இருக்கின்றன.அவைகள் கைதேர்ந்த நிபுணனால் வரையப்பட்டவை அல்ல. சித்திரக்கலை என்றால் என்ன என்று தெரியாதவர் கிறுக்கிய படைப்பு இது. ஒருவேளை மாண்ட ஒற்றன் வரைந்தவை போலும்! அவன் சித்திரக்கலையில் பழக்கம் இல்லாதவனாக இருந்திருக்கலாம்! ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? இது நிச்சயமாக பாண்டிய சதிகாரர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும்’ என்று எண்ணியவாறு யோசனையில் ஆழ்ந்தான்.

கத்தியைப் பாய்ச்சியபின் அதை உருவப்போன சதிகாரனின் நினைவு அவனுக்கு வந்தது.

‘ஒற்றனின் உடலிலிருந்து கத்தியை உருவ முயன்ற சதிகாரன் ஏன் சட்டென்று முகத்தை அடையாளம் தெரியாதவாறு துணியால் மூடிக்கொண்டான்?அவன் கண்களைப் பார்த்த போது எங்கேயோ பார்த்தது போல் தோன்றியதே! முகத்தைப் பார்த்த போது அவ்விதம் தோன்றவில்லையே! ஏன்?’ என்றவை போன்ற எண்ண அலைகள் வந்தியத்தேவன் மூளையை வட்டமிட்டன.

கண்களை இறுக்க மூடினான். மனதில் புதைந்து கிடக்கும் லட்சோப லட்சம் எண்ண நினைவுகளுக்குள், புத்தியை உள்ளே புகுத்திக், கூர்மையாக்கித் தீவிரமாக அந்தக் கண்களுக்குரியவனைப் பற்றிய விவரங்களை அலசினான்! வெற்றி கிட்டியது!

************************************************************************

வந்தியத்தேவன் கரிகாலனைக் கொன்ற பழிக்காக தவறாகத் தஞ்சை பாதாளச்சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டிருந்தான் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். அப்போது வேறு காரணத்திற்காகச் சிறைப்பட்டிருந்த ஒரு கிருக்கனின் தொடர்பு கிடைத்தது. அவனுடைய சிகை பெரியதாக வளர்ந்து இரு பக்கங்களிலும் தொங்கியது. தாடி மீசை அபரிதமாக வளர்ந்து அவன் முகத்தை மறைத்தது. அவனுடைய கூர்மையான கண்கள் மட்டுமே வந்தியத்தேவன் மனத்தில் பதிந்திருந்தது. அவன் வருவோர் போவோர் எல்லோரிடமும் ‘பாண்டிய நாட்டுப் புராதன பொக்கிஷங்களான மணிமகுடமும் இரத்தின ஹாரமும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் எனக்குத் தெரியும், என்னை விடிவியுங்கள்’ என்று கூறிக்கொண்டிருந்தான். ஒருவரும் அதை நம்பவில்லை. ஏளனமாகச் சிரித்தார்கள். அதனால் அவனுக்கு ‘பைத்தியக்காரன்’ என்ற பட்டம் மட்டுமே கிடைத்து பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவன் உண்மையிலேயே பைத்தியக்காரன் அல்ல என்பதையும், அவன் பொக்கிஷங்களைப் பற்றிக் கூறுவது உண்மை என்பதையும், அவனுடைய உண்மையான பெயர் ‘கருத்திருமன்’ என்பதையும் வந்தியத்தேவன் பின்னர் அறிந்தான்.

பல தடவை ஈழத்திற்கு வீரபாண்டியன் பொருட்டுத் தூது சென்றிருக்கிறான். இவையெல்லாம் கருத்திருமன் வாயிலாகவே கேட்டு வல்லவரையன் தெரிந்துகொண்டான். குற்றவாளி போல் வேண்டுமென்றே நாடகம் நடித்து வந்தியத்தேவன் கருத்திருமனுடன் வெளியே தப்பினான். பொக்கிஷங்களின் இருப்பிடத்தின் உண்மைகளை அவனிடமிருந்து வரவழைத்துப் பின் சமயம் பார்த்து, அவனை மறுபடியும் சிறைப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தான். ஆனால் ரகசியத்தை அவனிடமிருந்து தெரிந்து கொள்ளுமுன் கருத்திருமன் தப்பி ஓடிவிட்டான்!

***********************************************************************

பதிந்திருந்த அனுபவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தியத்தேவன் மனதில் பவனி வந்தன. ‘கருத்திருமனா அவன்!முடி, தாடி மீசை எல்லாம் மறைந்து இப்போது முகம் லட்சணமாகத் தென்பட்டது. பரட்டைத் தலையும் தாடி மீசையும் இல்லாததால் அவனை அடையாளம் கண்டு கொண்டிருக்க இயன்றிருக்காது! ஆம்! ஆழமாக நம் மனதில் பதிந்திருந்த கண்கள் மட்டுமே அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது! பாண்டிய சதிகாரக் கும்பலுடன் சேர்ந்த அவனுடைய வேலையா இது? அப்படியானால் சோழ ஒற்றன், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களைப் பற்றி சதிகாரர்களால் பேசப்பட்ட ஏதோ ஒரு உண்மையை, அவர்கள் அறியாமல் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்!’ என்று முடிவு கட்டிய வந்தியதேவன் மீண்டும் சித்திரங்களை நோக்கினான்.

‘முதல் சித்திரம் ஒரு மலையைப் பற்றியது.அந்த மலைக்கு நடுவே ஓர் உருவம் தீட்டப்பட்டிருக்கிறது. அது ஆணா அல்லது பெண்ணா? இரண்டு கால்கள் இருக்கின்றன. ஆனால் இரண்டிற்கும் அதிகமான கைகள் இருக்கின்றனவே? இதற்கு என்னிடம் இப்போது விடை இல்லை. இரண்டாவதில் ஒரு மேலும் கீழுமாக வளைந்த ஒரே கோடு சித்திரத்தின் மேல் பகுதியில் வரையப்பட்டிருந்தது. எதையோ குறிக்கிறது. மூன்றாவது, ஆகா! இப்படியும் இருக்கமுடியுமா? இது கழுத்தில் அணியும் ஹாரமாகத்தான் இருக்கவேண்டும்! சந்தேகமில்லாமல் இது இரத்தின ஹாரம்தான்!!’ இவ்வாறு எண்ணிய வந்தியத்தேவன் முதல் படியைத் தாண்டிய பெருமிதத்துடன் மற்ற சித்திரங்களைப் பார்க்கலானான்.

‘நான்காவதில் நீண்ட கோடுகள் தென்படுகின்றன.ஆங்காங்கே சில வளைவுகளும் காணப்படுகின்றன. ஒரு புள்ளி கூட இருக்கிறது! அந்த ஒற்றன் ஏதோ ஒரு விவரத்தை இதன் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறான். அதை அறிந்து கொள்ள அதிக கவனம் தேவை. மற்றவைகளைப் பார்த்தபின் மறுபடி இதனிடம் வரலாம்’ என்று மற்றவைகளில் கவனம் செலுத்தினான்.

ஐந்தாவதில் ஒரு முழு சந்திரன் – ‘ஆ!! இது என்ன மற்றும் ஒரு முழு சந்திரனைப் போல் அல்லவா இருக்கிறது! இதில் மிகப் பெரியதோர் புதிர் புகுத்தப்படிருப்பது என்னவோ உண்மை! இவ்விரண்டு சந்திரன்களையும் பிணைத்திருக்கும் விவரம் அதில் அடங்கியிருக்க வேண்டும் என்று முடிவு கட்டினான். ஆனால் அது என்ன என்பது அவனுக்கு விளங்கவில்லை. ஆறாவதில் நிறைய மனிதர்களைக் கண்டான். அதில் ஒருவர் நின்றுகொண்டு ஏதொ விளக்கிக்கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது! மற்ற எல்லோரும் ஒன்று கூடி அமர்ந்திருப்பதும் தெளிவாகிறது..அது எதைக் குறிக்கிறது என்பதும் அவனுக்குப் புரியவில்லை!

‘ஏழாவது, இது என்ன?ஒரு கோவிலைப் போலல்லவா இருக்கிறது! அதற்கு அடியில் ஒரு கோவிலின் நுழைவாயில் போல் தோன்றுகிறது’ என்று இவ்வாறெல்லாம் அலசிக் கொண்டிருந்தபோது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

வந்தியதேவன் “உள்ளே வரலாம்” என்று உரக்கச் சொன்னான். கதவைத் திறந்துகொண்டு ஒரு பணியாள் உள்ளே வந்தான்.

உணவு கொண்டு வந்து வைத்திருந்த தட்டு முதலான பண்டங்களை அடுக்கி எடுத்தவாறே “தாங்கள் படுத்துறங்குமுன் ஏதேனும் தேவையா?” என்றான். வந்தியத்தேவன்

“ஆம்.ஒரு மரப்பலகையும் சிறு கரித்துண்டுகளும், கிழிந்த துணிகள் சிலவும் தேவை” என்றான்.

சிறிது நேரத்தில் கேட்டவைகளைக் கொடுத்துவிட்டுப் பணியாள் வந்தியத்தேவனை வணங்கிவிட்டு வெளியேறினான்.

வல்லவரையன் மறுபடியும் கவனத்தை சித்திரங்களின் மேல் திருப்பினான். ‘எட்டாவது!ஆகா! நமக்கு வேண்டிய விவரம் இதில் இருக்கிறது போலிருக்கிறதே! சந்தேகமில்லாமல் இது ஒரு கிரீடம்தான். பாண்டியர்களின் மணிமகுடம்! நாம் நினைத்தது போல் ரகசியம் பொக்கிஷங்களைப் பற்றி இருப்பதாகத் தெரிகிறது!’ என்று கணித்தான்.

‘அடுத்தது ஒன்பதாவது. மறுபடியும் ஒரு முழு நிலாவாகத் தென்படுகிறதே! ஐந்தாம் சித்திரத்தைப்போல் இதில் மற்றும் ஒரு சந்திரன் இல்லை. ஒன்றும் புரியவில்லை. கடைசியில் பத்தாவது. இரண்டாவது சித்திரத்தைப்போல் மேலும் கீழுமாக வளைந்த ஒரே கோடு சித்திரத்தின் கீழ்ப் பகுதியில் வரையப்பட்டிருந்தது. இந்த இரண்டு சித்திரங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?’ என்று சிந்தித்தான்.

முதல் கட்ட பரிசோதனை முடிவடைந்தது. இரண்டாவது கட்டத்திற்குச் செல்வதெப்படி?’ என்பதை வந்தியத்தேவன் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்தான்.

(தொடரும்) 

மணி மகுடம் -ஜெய் சீதாராமன்

ஒவ்வொரு ஓலையிலும் ஒவ்வொரு விசித்திரமான சித்திரம் வரையப்பட்டிருந்தது.

அதை நோட்டம்விட்ட வந்தியத்தேவனின் தலை சுற்றியது. ‘ஏதோ புதிர் பொதிந்த ஓலைகள் போல் தோன்றுகின்றனவே!’ என்று மறுபடியும் அவைகளை நோக்கினான்.

‘சோழர்களால் முறியடிக்கப்பட்ட பாண்டிய நாட்டை மீட்டு பாண்டியர்களின் ஆட்சியை நிலைநாட்ட சபதம் எடுத்துக் கொண்டவர்கள் ‘ஆபத்துதவிகள்’ எனப்படும் சதிகாரர்கள். அந்தக் கும்பலின் ரகசியம் ஒன்றை சோழ ஒற்றன் அறிந்து கொண்டிருக்கிறான். அதைத் தெரிந்துகொண்ட சதிகாரர்கள் அவனைத் துரத்திக் கொன்றிருக்கிறார்கள். அறிவாளியான ஒற்றன், உண்மையை ஓலைகளில் சங்கேத சித்திரமாகப் பதித்து எவரிடமாவது கொடுக்க நினைத்திருந்தான் போலும்!

பாண்டிய சதிகாரர்களின் மிகப் பெரிய ரகசியம் ஒன்று இந்த குறிப்பேடுகளில் புதைந்து கிடக்கிறது, நன்கு பொறுமையாக அலசி புதிர் முடிச்சை அவிழ்க்க வேண்டும். மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்க வேண்டும்! சோழ நாட்டை முன்னெச்சரிக்கையுடன், விழிப்பாக இருக்கச் சொல்ல வேண்டிய கடமை நம் தலை மேல் சுமத்தப்பட்டிருக்கிறது’ என்று எண்ணிய வந்தியத்தேவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு தன் குதிரையை நோக்கி நடந்தான்.

அவன் அருகிலிருந்த சிற்றூரை அடைந்த போது ஒரு நாழிகை ஆகிவிட்டது. அங்கிருந்த ஊர்ச்சபைத் தலைவரைப் பார்த்து தான் யார் என்றும் வழியில் நடந்த விபரங்களையும் கூறி, மாண்ட சோழ ஒற்றனின் நல்லடக்கத்திற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டான். விவரங்களை அறிந்த ஊர்ச்சபைத் தலைவரும் அப்படியே செய்வதாக உறுதியளித்தார். நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான் வந்தியத்தேவன்.

 

அத்தியாயம் 02. வந்தியத்தேவன்.

 IMG_5177

குதிரையில் அமர்ந்த வந்தியத்தேவன் குடந்தையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தான். இந்த சமயத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது!

‘விஜயாலயன்’ அஸ்திவாரம் அமைத்து நிலை நாட்டிய சோழ பரம்பரையில்  உதித்த ‘மதுராந்தக உத்தம சோழர்’ அரசாண்டு கொண்டிருந்த காலம் அது.வந்தியத்தேவன், தமிழ் வரலாற்றில் புகழ்பெற்ற வாணர் குலத்தில் தோன்றியவன். சோழர்கள் கீழ் இருந்த வாணகப்பாடி நாட்டு வல்லத்து அரசன். ‘அரையன்’ என்னும் சொல்லை நாட்டின் பெயரையும் சேர்த்துப் பட்டப் பெயராக அந்த நாட்களில் வழங்கப்பட்டு வந்தது. ஆகையால் நமது வீரன், ‘வல்லவரையன் வந்தியத்தேவன்’ என்று அழைக்கப்பட்டான்.

வந்தியத்தேவன் சிறுவனாய் இருக்கும் போதே வாணர் ஆட்சியின் பொற்காலம் முடிவடைந்தது. வந்தியத்தேவன் பெற்றோர், உறவினர், நாடு அனைத்தையும் இழந்து அனாதையானான். நசிந்த குலத்தின் கடைசி வாரிசாக மிஞ்சினான். வாலிபப் பருவத்தை அடைந்ததும் இழந்த நாட்டை சிறிதேனும் மீட்க உறுதிகொண்டான்.

அதற்கான சந்தர்ப்பம் ஒன்று அவனைத் தேடி வந்தது. சோழர் கீழ் இருந்த கடம்பூர் வல்வில்ஓரி குலத்து இளவரசன், அவனுடைய இளம் வயது நண்பன் கந்தமாறன், வந்தியத்தேவனைக் காஞ்சீபுரத்திற்கு அழைத்தான். அப்போதைய சக்ரவர்த்தி சுந்தரசோழரின் மூத்த குமாரன், பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், படைத்தளபதி மாதண்டநாயகனாக நியமிக்கப்பட்டிருந்தான். சோழர்களின் வடதிசைப் படையை, காஞ்சீபுரத்தை மையமாகக் கொண்டு எல்லையைப் பாதுகாத்து வந்தான். அவனுடன் அங்கு கந்தமாறன் எல்லைக் காவலில் பணிபுரிந்து கொண்டிருந்தான். இது ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிய வந்தியத்தேவன் வல்லத்திலிருந்து பாலாறு வழியாகக் காஞ்சிக்குப் பயணத்தைத் தொடங்கினான்.

IMG_5178

காஞ்சியை நெருங்கும் சமயம் வனவிலங்குகள் நிறைந்த காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். அப்போது தூரத்தில் ஒரு பயங்கரமான காட்சியைக் கண்டான். ஒரு ஓடையில் சர்வலட்சணங்களும் பொருந்திய வாலிபன் ஒருவன் குனிந்து தண்ணீர் பருகிக் கொண்டிருந்தான். சத்தம் இல்லாமல் மெதுவாய் பதுங்கிப் பதுங்கி அடிமேல் அடி வைத்து நடந்து வந்த புலி ஒன்று பக்கத்தில் இருந்த பாறையின் மேலேறி அந்த வாலிபன் மேல் பாயத் தருணம் பார்த்தது.

IMG_5183

ஒரு கணம்தான்! வந்தியத்தேவன் குதிரையிலிருந்தபடியே   தொங்கவிடப்பட்டிருந்த வேலை எடுத்து மின்னல் வேகத்தில் புலிமேல் குறிதவறாது எறிந்தான். புலி பாய்வதற்கும், பறந்து வந்த வேல் அதன் கழுத்தின் ஒரு பக்கத்தில் தைத்து, உள்ளே புகுந்து மறுபக்கத்தின் வழியாக வெளிவந்து சிறிது நீட்டிக் கொண்டு நிற்பதற்கும் சரியாக இருந்தது. பாய்ந்த புலி கோரமாகக் கத்திக் கொண்டே வெருண்டு, நெளிந்து, வாலிபனைத் தள்ளிக்கொண்டு தண்ணீரில் தொப்பென்று விழுந்தது. உணர்வை இழந்து தண்ணீரை விழுங்க ஆரம்பித்து, மூழ்கியது!

கனமான வஸ்து ஒன்றால் தள்ளப்பட்ட வாலிபன் என்ன நேர்ந்தது என்பது தெரியாமல் திடுக்கிட்டான். அதிர்ச்சியால் இடறி தண்ணீரில் விழுந்தான். விழும் முன் ஒருகணம் வந்தியத்தேவனையும் புலியையும் நோக்கினான். வாயில் தண்ணீர் புகுந்து தத்தளித்தான். மூச்சு முட்டியது. நினைவை இழந்தான்.

IMG_5180

 அதற்குள் வந்தியத்தேவன் குதிரையிலிருந்து தடால் என்று கீழே குதித்து கையில் கத்தியை உருவிக்கொண்டு பாய்ந்து வந்தான். தண்ணீருக்கு அடியில் சென்ற புலி இன்னும் வெளியே வரவில்லை. கத்தியைக் கரையில் வைத்துவிட்டுத் தண்ணீரில் இறங்கி மூழ்கிக் கொண்டிருந்த வாலிபனைத் தூக்கினான். தண்ணீரை வெகுவாகக் குடித்திருந்த அவனை மெதுவாகத் தரையில் குப்புறப் படுக்க வைத்தான். வயிற்றின் பின்புறத்தில் முதுகில் கையை வைத்து அமுக்கி அமுக்கி எடுத்தான். வாலிபன் வாயிலிருந்து தண்ணீர் குப்குப்பென்று வெளிவந்தது. அவன் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கத்தியை மறுபடி கையில் எடுத்து புலி தண்ணீரில் விழுந்த இடத்தை நோக்கினான். அடியிலிருந்து ரத்தம் மேல் வந்து தண்ணீரைச் சிவப்பு நிறமாக்கத் தொடங்கிக் கொண்டிருந்தது.

திடீர் என்று குதிரைகளின் குளம்புகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்ட வந்தியத்தேவன் அச்சத்தம் வந்த திக்கை நோக்கி எழுந்து நின்றான். அதில் வந்த வீரர்கள் சரட்சரட் என்று குதிரையிலிருந்து இறங்கி ஓடிவந்தனர். வாலிபன் குப்புறப்படுத்திருப்பதையும் வாளேந்திய ஒரு வீரன் ஒருவன் பக்கத்தில் நிற்பதையும் கண்டு வந்தியத்தேவனைக் குற்றவாளி என்று எண்ணி சூழ்ந்து கொண்டு பிடித்தனர். வியந்துபோன வந்தியத்தேவன் அமைதியாக வாலிபன் இருந்த இடத்தை நோக்கினான். மற்றவர்கள் அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

வாலிபன் மெல்லக் கண்விழித்தான்.

வந்திருந்த வீரர்கள்..

‘வட திசை மாதண்டநாயகன்..

பட்டத்து இளவரசர்..

ஆதித்தகரிகாலர்!

வாழ்க! வாழ்க!!’

என்று கோஷம் எழுப்பியது வந்தியத்தேவனை வியக்க வைத்தது. வீரர்களுக்குத் தலைவனாகத் தோன்றியவன் அருகில் வந்து “இளவரசே! உங்களுக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே? இந்த வாலிபன் உங்களைத் தாக்க முயன்றானா? சொல்லுங்கள்! உடனே இவனை எமலோகத்திற்கு அனுப்புகிறேன்!” என்றான்.

ஆதித்த கரிகாலன் முதலில் கட்டுண்ட வந்தியத்தேவனைப் பார்த்துப் பின் தண்ணீரை நோக்கினான். இரத்தச் சிவப்பாக மாறியிருந்த இடத்தில், செத்த புலி திடீரென அடியிலிருந்து தண்ணீர் மட்டத்திற்கு மேல் வந்து மிதந்தது. வேல் புலியின் கழுத்திலே நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான். அதற்குள் எங்கிருந்தோ வந்த பறவைகள் கூட்டம் புலியை மொய்க்க ஆரம்பித்தன. நடந்ததை புரிந்து கொண்ட கரிகாலன் காவலர்களை நோக்கி வந்தியத்தேவனின் கட்டுக்களை அவிழ்க்குமாறு கட்டளையிட்டு, மெல்ல எழுந்து எல்லோரையும் விலக்கி வந்தியத்தேவன் அருகில் செல்லத் தலைப்பட்டான். உடன் வந்த காவலர்கள் தலைவன் விரைந்து சென்று வந்தியத்தேவனின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு மன்னிப்புக்கோரும் பாவனையில் தலைதாழ்த்திச் சொல்லிவிட்டு தன் வீரர்களுடன் சிறிது தூரம் தள்ளிச் சென்றான்.

IMG_5184

அதற்குள் வந்தியத்தேவனின் அருகில் வந்து   அவனை அணைத்துக் கொண்டு “நண்பா! யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?” என்று கரிகாலன் கனிவுடன் கேட்டான்.

“பெயர் வந்தியத்தேவன்..”என்று ஆரம்பித்த வந்தியத்தேவன் முடிக்கவில்லை. அதற்குள் கரிகாலன்,

“ஆகா!வல்லவரையன் வந்தியத்தேவனா? உன்னைப் பற்றி ஏற்கெனவே எனக்குத் தெரியும்! கந்தமாறன் என்னிடம் உன் வீரத்தைப் பற்றிப் புகழ்ந்து தள்ளியிருக்கிறான். அதை, அறிமுகமாகுமுன்பே, என் முன்னாலேயே நிரூபித்துவிட்டாயே! குறி தவறாமல் வேலை புலி மேல் பாய்ச்சி என் உயிரைக் காப்பாற்றிவிட்டாய் அல்லவா!” அதிலும் என்ன ஒரு வேகம்.. என்னவொரு குறி.. அபாரம் நண்பா.. அபாரம்!” என்றான்.

“இளவரசே!தக்க சமயத்தில் சந்தர்ப்ப இடத்திற்கு என்னால் வந்ததினால் இதை சாதிக்க முடிந்தது. என்னுடைய இடத்தில் யாராய் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள்” என்றான் வந்தியத்தேவன்.

“நல்ல அறிவும், வீரமும் உள்ள உன்னிடம் மிகுந்த பணிவும் காணப்படுகிறது. அது உன் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது நண்பா!” என்று கரிகாலன் பதில் கூறினான்.

“வீரமும், விவேகமும் பணிவும் என் பெற்றோர்கள் சின்ன வயதிலேயே எனக்குப் புகட்டியிருக்கும் விஷயங்கள். ஆனால் அவர்கள் இப்போது உயிருடன் இல்லை இளவரசே..!” என்று சொல்ல ஆரம்பித்த வந்தியத்தேவன் முடிக்கவில்லை.

IMG_5179

கரிகாலன் அவன் பேசுவதைத் தடுத்து “ஆம்! நண்பா அறிவேன். ம்.. கவலையை விடு. நீ இழந்த வாணகப்பாடியை மறுபடியும் அடையலாம்! நீ மேலும் என் பொருட்டு சாதிக்க வேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கின்றன! வா. பாசறைக்குச் சென்று மற்றவைகளைப் பற்றிப் பேசலாம்” என்று வந்தியதேவனின் தோள்களில் கையைப் போட்டு, குதிரைகளினருகே சென்று வீரர்களிடம் ‘போகலாம்’ என்பதை கையை உயர்த்தி, மறுபடியும் முன்னால் தாழ்த்தி செய்கை மூலம் உணர்த்தினான். அனைவரும் புரவிகளில் ஏறிப் பாசறைக்கு விரைந்து சென்றனர்.

இப்படியாக ஆரம்பித்த அவர்களின் சந்திப்பு அடுத்தடுத்து நிகழ்ந்த வந்தியத்தேவனின் தீரமான வீரச்செயல்களாலும் யாரையும் ஈர்த்துச் சிரிக்க வைக்கும் வாக்குச் சாதுர்யங்களினாலும், கரிகாலனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானான். அவன் இட்ட பல வேலைகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தான். கரிகாலனின் சகோதரி இளைய பிராட்டி, குந்தவையின் காதலைப் பெற்றான். பிற்காலத்தில் ராஜராஜன் என்று சரித்திரத்தில் புகழ் பெறப்போகும் கரிகாலனின் சகோதரன் அருள்மொழியின் ஒப்பிலா நட்பைப் பெற்றான்.

இந்த நிலை வெகுகாலம் நீடிக்கவில்லை. காரணம் கரிகாலன் தன் பதினெட்டாம் வயதில் பாண்டியர்களுடன்  நடத்திய போரில் வீரபாண்டியனின் தலையைக் கொய்து வெற்றி பெற்றான். கோபம் அடைந்த பாண்டியனைச் சேர்ந்த ஆபத்துதவிகளான வீரபாண்டியனின் மகள் நந்தினி மற்றும் ரவிதாசன், கருத்திருமன் போன்றோர் கரிகாலனையும் சோழர் குலத்தையும் வேரோடறுத்துப் பாண்டிய நாட்டை மீண்டும் ஸ்தாபிக்க சபதம் எடுத்தனர்.

வந்தியத்தேவன் கரிகாலனைச் சேர்ந்த சில காலத்தில் இந்தச் சதிச்செயலைப் பற்றிய செய்தியை ஓரளவு புரிந்து கொண்டான். கரிகாலனை கண்ணும் இமையுமாக கண்காணித்து வந்தான். ஆனால்.. விதி வலியது. சதிகாரர்கள் வெற்றி பெற்று கரிகாலனை மர்மமான முறையில் கொன்றார்கள். கரிகாலனைக் கொன்ற பழி வந்தியத்தேவன் மேல் விழும்படியான சூழ்நிலையை வேறு உருவாக்கியிருந்தார்கள். பழி அவன் மேல் விழுந்தது. வல்லவரையன் தஞ்சைப் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டான். உண்மையான குற்றவாளி அவன் அல்ல என்ற உண்மை நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டான்.

சுந்தர சோழருக்குப் பிறகு உத்தம சோழர் அரச பதவியை ஏற்றார். வந்தியத்தேவன் செய்த சேவைகளைப் பாராட்டி வாணகப்பாடியை திரும்பவும் பெற்று வல்லத்து குறுநில மன்னன் ஆகினான். மேலும் ஈழத்தின் புது சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். பதவியை ஏற்குமுன் வல்லத்து மாளிகைகளை நிர்மாணம் செய்வதில் தற்சமயம் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவன் வல்லத்திலிருந்து குடந்தை வழியாகத்தஞ்சை செல்லும் போதுதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்தது.

தொடரும்