உயர்ந்த அன்பளிப்பு – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

ஆசிரியரை வாழ்த்துவது எவ்வளவு அசல். வசனத்தில் ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு அழகான வாழ்த்துக்கள். தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு ...

பள்ளி முதல்வருக்கு தன் பிறந்த நாள் வந்தாலே சங்கடம் தான். ஒவ்வொரு ஆசிரியரும் போட்டிப் போட்டுக் கொண்டு விலை மிகுந்த பொருட்களை வாங்கி, பரிசு அளித்து, கேக் வெட்டி, அமர்க்களப்  படுத்தி விடுவார்கள்.

ஆளுக்கு ஆள், இப்படியே… ஏதோ எதிர்பார்ப்பு. ரசிக்க முடியவில்லை.

இதற்கு நேர் மாறகப் பள்ளியின் ஸ்பான்சர்ஷிப் தேவதையும் உண்டு!

“மேடம், மன்னிக்கவும்”.   வெளியே ஸ்பான்சர்ஷிப் தேவதையின் குரல்.

“மிஸ்? உள்ளே வரலாமா?” அமைதியற்ற நிலையிலிருந்து திரும்பிப் பார்த்தார். அந்த சிறுமியைப் பார்த்ததுமே மனநிலை மாறியது. மாய வித்தைதான்!

“என் வகுப்பு அறையைக் கொஞ்சம் திறந்து தருவீர்களா?”

பள்ளி முதல்வருக்கு இது பரிச்சயமான வேண்டுகோள். அதே வேண்டுகோள், வருடத்தில் மூன்று நான்கு முறை. எப்பவும் போல! 

வகுப்பின் அறையைத் திறந்தார். வெகு கவனிப்புடன் அந்த சிறு கைகள் தன்னிடம் இருந்த பையின் உள்ளே கையை விட்டு, ஒவ்வொன்றாகத் தானே கையால் செய்த காகித பொம்மைகளை எடுத்து, அதன் மேல் இருந்த பெயர் பார்த்து, அதன் இடத்தில் வைத்து வந்தாள்.  கடுகு அளவும் கர்வமோ, பாசாங்கோ இல்லை.

ஆசிரியர் தன்னை மறந்து மகிழ்ந்தாள்.  ஸ்பான்சர்ஷிப்பில், யாருடைய ஆதரவிலோ படிக்கும் இந்த இளநெஞ்சுக்கு எத்தனை பெரிய உள்ளம்! இன்றைக்கு எந்த விசேஷமும் இல்லை. இது ஒரு “ஜஸ்ட் லைக் தட்” பகிர்தல்.

ஆசிரியருக்கு இவளுடைய பெற்றோரைப் பற்றித் தெரியும். வறுமையில் இருப்பவர்கள். எனினும், அக்கம் பக்கம் பசியில் வாடுவோருக்குக் கஞ்சி, கூழ், சோறு என்று ஏதோ போடுவதுண்டு. அங்கே தான் இவள் கற்றுக் கொண்டாளோ?

இப்படி எண்ணிக் கொண்டிருக்கையில், சிறுமி பொருட்களை வைத்து விட்டு, ஆசிரியருக்கு நன்றி கூறி சென்று விட்டாள். இருவருக்கும் இந்த தருணம்  மிகவும் பிடிக்கும். உள்ளுக்குள் அவ்வளவு பரவசம்!

பள்ளி மணி அடித்தது.  பிள்ளைகள் எல்லோரும் இறை வணக்கம் செய்து விட்டு வகுப்பிற்கு வந்தனர். 

இந்த மூன்றாம் வகுப்பின் ஒவ்வொரு பிள்ளையும் தன் இடம் வந்தவுடன், அங்கே தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆச்சரியத்தைக் கண்டனர்.   வண்ண வண்ணமான காகித பொம்மையைப் பார்த்து “ஆ”, “ஏ”, “ஓ” என்று ஒரே கூச்சல்!

வகுப்பு ஆசிரியர் சிறுமியைப் பார்த்து சமிக்ஞை செய்து கேட்டாள் “உனக்கு?” என்று. குழந்தையின் கண் மின்னியது. வகுப்பைச் சுற்றிப்ப் பார்த்து, அவர்கள் சந்தோஷத்தை உள் வாங்கியவள், “இதோ இவர்களின் சந்தோஷமே போதும்” என்பது போல் காட்சி அளித்தாள். தன்னுடைய “மௌனமான இன்பம்!”

அன்று முழு தினமும் பள்ளி முதல்வருக்கும் இவளைப் பற்றிய நினைவே.

வீடு வந்தாள்.  அவள் குழந்தை ஓடி வந்து பெருமையாக, “அம்மா, இதோ உனக்கு”.  கடையில் வாங்கிய அழகாக கிஃப்ட் ராப் செய்யப் பட்ட விலை உயர்ந்த அன்பளிப்பு!

 

“எதிர்த்து நின்ற வீராங்கனை(கள்)!” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Maalaimalar News: 13 year old girl harassment in puducherry

 

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. பூமிஜா சந்தித்த இன்னல்களை, தன்னைப் பாதுகாத்துக் கொண்ட விதத்தை – மீறி வந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்!

பூமிஜா எனக்கு அறிமுகம் ஆகும் போது பதிமூன்று வயதானவள். அவள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களுக்கு நான் மன நலக் கல்வியறிவு அளிக்கும் போது, அவளுடைய ஆசிரியை இவளைப் பற்றி என்னிடம் சொல்ல, அவளைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அழைத்ததும் கிடுகிடுவென்று அவள் மூச்சுக் காற்றை என்னுடைய ரோமங்கள் உணரும் அளவிற்கு மிக அருகில் வந்து நின்றாள் பூமிஜா. இடைவெளி இல்லாததைப் பலர் சாதகப்படுத்தி கொள்வார்கள் என்றதை இவள் தெரிந்து கொள்ளவில்லை என்று கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அவளுடைய முகபாவத்தில், வந்து நின்ற தோரணையில் ஒரு வெகுளித் தனம் எட்டிப் பார்த்தது. ஆகையால் அவளுக்கு இதனால் நேரக்கூடும் துன்பங்களை விளக்கினேன். இடைவெளி விடுவதைப் பற்றி விளக்கினேன். மனதில் வாங்கிக் கொண்டாள் என்றதைக் காட்டியது அடுத்த முறையெல்லாம் சந்திக்கும் போது உள்ள சரியான இடைவெளி.

பூமிஜா அணிந்திருந்த தடித்த கண்ணாடி பிரத்தியேகமாக இருந்தது. கையில் பெரிய கைக்குட்டை. மூக்கை துடைத்துக் கொண்டு இருந்தாள். அவளுடைய வயதினரோடு கொஞ்சம் வளர்ச்சி அதிகம். முக முதிர்ச்சியும். இது பிரச்சினை தரக்கூடும் என்பது என் மனதைக் குடைந்தது.

இவள் இந்தப் பள்ளிக்கூடம் சேர்ந்து இரண்டாவது வருடம். இவளை அறிமுக செய்த ஆசிரியை பூமிஜாவின் பெற்றோர் பள்ளியின் எந்த அழைப்பிற்கும் வராததைப் பற்றிக் கூறினாள். அவர்களின் இந்தச் செயல் தனக்குச் சங்கடமாக இருப்பதாகச் சொன்னாள். அற்புதமான ஆசிரியை என வியந்தேன்!

முதலில் பூமிஜாவை சந்தித்து அவளைப் பற்றிய தகவல்களைக் கேட்க ஆரம்பித்தேன். இவள் தான் மூத்தவள். அம்மா வேலையிலிருந்து வருவதற்குள் வீட்டைச் சுத்தம் செய்து, துணிகளை மடித்து, இரவு உணவையும் செய்து வைப்பது இவளுடைய பொறுப்பாம். இவளுடைய ஏழாவது வயதிலிருந்து இது ஆரம்பமானது. தங்கை நன்றாகப் படிப்பதால் எந்த வேலையிலும் கை கொடுக்க மாட்டாள். இவளிடம் அதிகம் பேச்சும் வைத்துக் கொள்ளவும் மாட்டாள். தம்பி சிலசமயங்களில் பூமிஜா செய்யும் வேலையில் ஒரு சிறிய பங்கைச் செய்வான். செய்யும் பலகாரங்களைப் புகழவும் செய்வான்.

அப்பா ராமன் வேலையில்லாமல் இருந்தார். பெரும்பாலும் வேலைக்குப் போகாமல் சீட்டு ஆடி, நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பாராம். அம்மா அவரிடம் பேசுவது  மிகக் குறைவாக இருப்பதாக பூமிஜா சொன்னாள்.

நண்பர்களுடன் வீட்டில் இருக்கும் போது அப்பாவிடம் போகவே பூமிஜா அஞ்சுவாளாம். ஏளனமாகப் பேசுவதும், தேவை இல்லாமல் சீண்டி விடுவதும் உண்டு. அவர் அப்பா என்றாலும் நண்பர்கள் முன்னே இப்படிச் செய்வது அவளை ஏதோ செய்ய, கூச்சமும், அழுகையும் வரும் என்றாள்.

அம்மாவைப் பற்றிச் சொல்லும் போது பூமிஜா, கொஞ்சம் முகபாவம் மாறியது. அம்மா ரமா பக்கத்திலிருந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாள். நல்ல உழைப்பாளி என்பதால் வெகு சீக்கிரத்தில் ஸுபர்வைஸராகி இப்போது மேல் அதிகாரியாக இருப்பதாகச் சொன்னாள். வீட்டில் தங்கை தம்பிக்கு அம்மா பாடம் சொல்லித் தருவதால் சாப்பிட்டு முடிந்த பின் சுத்தம் செய்வது பூமிஜா வேலை. இதையெல்லாம் கேட்கும்போது ஏதோ இல்லாதது போலவே தோன்றியது. அம்மாவுக்குப் பயந்தவளோ என நினைத்தேன்.

பூமிஜா அவளால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவது என்று எடுத்துக் கொண்டாள். தன்னால் முடிந்த வரை செய்தாள். யாரையும் திட்டவோ, கோபித்துக் கொள்ளவோ இல்லை. இதைத் தான் மோகன், அவனுடைய கூட்டமும் தவறாக எடுத்துக் கொண்டார்கள்

மோகனும் அவனுடைய தோழர்களும் பூமிஜாவை கேலி செய்வது, வேண்டும் என்றே காலை நீட்டித் தடுக்கி விழவைப்பது எனச் செய்தார்கள். முதலில் பூமிஜா பரவாயில்லை என்று விட்டு விட்டாள். போகப் போக மோகன் கைகள் அவள் மேல் பட, அதற்குப் பிறகு பார்க்கும் பார்வை அவளை உலுக்கியது. உஷாரானாள். அவர்களைத் தவிர்க்க முயற்சி செய்த போதிலும் இது தொடர்ந்தது. மூன்று முறை ஆனதும் ஆசிரியரிடம் புகார் செய்தாள். ஆசிரியர், பூமிஜாவை சமாதானம் படுத்தி அனுப்பி வைத்தார். கேலி தொடர்ந்தது.

பூமிஜாவுக்கு எப்படிக் கையாளுவது என்று தெரியவில்லை. ஆசிரியரிடம் சொல்லியும் அவர் மோகனை ஒன்றும் சொல்லவில்லை. மாறாக அவர்கள் முன்னேயே இவளிடம் “நீ அடக்க ஒடுக்கமாக இரு” என்றார்.

சக மாணவிகள் இதைக் கேட்டதும், அவர்கள் பரிந்துரை செய்ததில், தன் வகுப்பு லீடர் சன்ஜீவிடம் புகார் செய்தாள். அவனும் எடுத்துச் சொல்லி, இதைத் தடுக்க முடிந்த வரை முயன்றான்.

சரிசெய்ய முடியாததால் மனநல ஆலோசகரான என்னிடம் சன்ஜீவ் இதைப் பற்றிப் பேசினான். இப்படி நடப்பதை சகமாணவர் யாரும் தட்டிக் கேட்காதபடி மோகன் முழு வகுப்பையும் பயமுறுத்தி வைத்திருந்தான்.

வகுப்பு மாணவர்களிடம், மோகன், அவனுடைய ஜால்ரா கூட்டத்தார் செய்யும் இன்னல்கள் பற்றி விசாரித்தேன். தெளிவாகத் தெரிந்தது, அவர்கள் பூமிஜாவிடம் செய்வது அடாவடித்தனம் (bullying). புகார் செய்தும், ஆசிரியர் கண்டிக்கவில்லை, அதுதான் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டு வந்தார்கள்.

முடிவு செய்தேன், மோகன் கூட்டாளிகள் உட்பட, வகுப்பிற்கு இந்த அடாவடித்தனமான புல்லியிங் பற்றிய வர்க்ஷாப் நடத்த வேண்டும் என்று. தலைமை ஆசிரியரிடம் சொல்லி, ஒரு ஆசிரியர் இருந்தால் நல்லது என்று சேர்த்துக் கொண்டேன்.

ஆம், யாரிடம் புகார் செய்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தாரோ, அந்த ஆசிரியரைத் தான். அது அவரை தலைகுனிவு ஏற்படுத்த அல்ல, அவருக்கும் புரிய வைக்கத் தான். அவர் ஒன்றும் செய்யாதது, எப்படிச் செய்ய என்ற அணுகுமுறை தத்தளிப்பா? இல்லையேல், அவருக்கே தாழ்வு மனப்பான்மையா? அல்லது இந்த மாதிரியான வன்முறை பற்றிய தவறான கருத்து – பெண்களால் தான் ஆகிறது என்றா?

கடைசி பாடத்தில் இருபது நிமிடம் இதற்கு அமைத்தோம். சிலர் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? அதன் விளைவு, தீங்கு, வன்முறை என்ற பல கோணங்களில் வடிவமைத்துச் செய்து வந்தேன். பயிற்சியில் ஏன் இதை இப்போது நடத்துகிறேன் என்றதற்கு விளக்கம் அளிக்கவில்லை. யாருடைய பெயரும் (குற்றச்சாட்டு-பாதிக்கப்பட்ட நபர்) சொல்லப்படவில்லை.

போகப்போக, பூமிஜாவுக்கு நடப்பது உடல்-உணர்வு வன்முறை என்றதை உணர்ந்தார்கள். ஆசிரியர் தானாகப் போய் அவளிடம் பேசினார். அதைத் தடுக்க தன்னுடைய முழு ஒத்துழைப்பபைத்  தருவதாகவும்  கூறினார்.

இது நடந்து கொண்டு இருக்கையில் ஒரு நாள் பூமிஜா கலங்கி வந்தாள். அழுகையை அடக்க முடியாமல் விம்மினாள். அவளுக்கு ஒரு ஐந்து ஸ்பூன் சக்கரை போட்ட சூடான காப்பியை ஆயாவிடம் சொல்லி எடுத்து வரச் சொன்னேன். அருந்தினால் உடலை, மனதைச் சாந்தப் படுத்த உதவும் என்பதால் கொடுத்தேன். அழுதுகொண்டே, தன் அம்மாவிடம் ஏதோ பகிரப் பார்த்ததாகவும் அம்மாவோ கையை உதறிவிட்டு இவளைத் தள்ளிவிட்டுப் போனது, மனதை வலித்தது என்றாள்.

அன்று மாலை பூமிஜா வீட்டிற்குச் சென்று பெற்றோரை நேரில் சந்தித்து, மறுநாள் எங்களைப் பார்க்கப் பள்ளிக்கு வர வேண்டும் என்று சொன்னேன்., ரமா முடியாது என்றாள். ராமனும் மறுத்தார்.  இல்லை என்பதற்கு இடமில்லை என்று சொன்ன பிறகு, சம்மதம் வாங்கினேன். வந்தார்கள்.

ரமா ஜம்மென்று வந்திருந்தாள். தனியாகப் பேச வேண்டும் என்றதால் ராமனை வெளியே அமர வைத்து விட்டு வந்தேன். ரமா வெளிப்படையாகச் சொன்னாள், வற்புறுத்தி, ராமனை தனக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள் என்று. கல்யாணத்திற்கு முன்பே வேலை இல்லாமல் சீட்டாடிக் கொண்டு இருப்பான். கல்யாணம் ஆனால் மாறும் என்று செய்து வைத்தார்கள் (தவறான கருத்து). சமுதாயத்திற்காக ராமனுடன் இருக்கிறாள் என்றாள்.

பூமிஜாவை கடுகளவு கூட பிடிக்காது என்று முகத்தைச் சுளித்து, வெறுப்பு பொங்கச் சொன்னாள். அதனால் தான் அவள் சம்பந்தப்பட்ட எதிலும் பங்கு கொள்வதில்லை என்றாள். இதன் தாத்பரியம், புமிஜாவிற்கு “பெற்றோரின் நிராகரிப்பு” (parental rejection). எக்காரணத்திற்கும் ராமனுடன் ஒரு அறையில் இருக்க விரும்பவில்லை என்றும், இனிமேல் பூமிஜாவுக்காக வர முடியாது எனச் சொல்லி விட்டுச் சென்றாள்.

ராமன், தகவல்களைப் பகிர்ந்தான். பூமிஜா பிரசவம், பிறப்பு எதுவுமே ரமாவிற்குப் பிடிக்கவில்லை என்றான். கூட, அவள் சற்று மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்றதால், தூக்கி வைத்துக் கொள்ள மாட்டாளாம். டாக்டர்கள் சொன்னது, படிப்பு மந்தமாக இருக்கலாம், ஆனாலும் எல்லா குழந்தைகள் போகும் பள்ளிக்குப் போகலாம். மாலையில் இவளைப் போன்ற குழந்தைகளுக்கு கற்றுத் தரும் ஸ்பெஷல் எடுகேடரிடம் படிக்க வேண்டும் என்று.

பூமிஜாவிற்கு வேலை சொல்லித் தரலாம் என்றார்கள். ரமா தன் அம்மாவைச் சொல்லித் தரச் செய்தாள். பூமிஜாவிற்கு விளாவரியாக புரிய வைக்க வேண்டும். மெதுவாகச் சொல்லித் தர வேண்டும். மற்றபடி அவளால் எல்லாம் செய்ய முடியும். ராமன் இதை நிராகரித்து, அவளை “மக்கு” என்றே அழைத்தான், எதுவும் புரியாது என்று எடுத்துக் கொண்டான்.

அதனால் தான் சீண்டுவான். இதைப் பார்த்து வந்த அவனுடைய ஒரு நண்பன், கொச்சையாக, “அவளை வைத்து, சம்பாதி” என்றான். ராமனுக்கு தன்னுடைய செலவுக்குப் பணம் தேவைப் பட்டது. கொஞ்சம் கூட உடம்பை அலட்டிக்கொள்ளாமல் இது ஒரு வழி என்று நினைத்தான், அவனுள் இருந்த அசுரன் வெளியேறினான். பூமிஜாவை பிடிக்காததால் ரமா தலையிட மாட்டாள் எனத் தெரியும்.

நண்பர்கள் வரவழைக்க ஆரம்பித்தான். பூமிஜாவை ஏதாவது ஒன்றைச் சொல்லி அவர்கள் அருகில் உட்கார வைப்பான். அவர்கள் தவறாக இங்கே அங்கே தொடுவதைப் பார்க்காதது போல இருப்பான். பணமும் வாங்கிக் கொண்டான்.

பூமிஜா நழுவ முயலுவாள். அவளுக்குத் தப்பு நடக்கிறது என்று நன்றாகப் புரிந்தது. தவித்தாள். அம்மாவிடம் சொல்ல முயன்றாள் அவளோ செவி சாய்க்கவில்லை.

எப்பவும் போல பூமிஜா மருத்துவரைப் பார்க்கப் போனாள். இவளுக்குக் குழந்தைப் பருவத்தில் நேர்ந்தது பல நோய்கள். அவைகளுக்கு இன்னும் சிகிச்சை போய்க்கொண்டு இருந்தது. இன்றைக்குப் போக மனம் வரவில்லை. அவள் இதுவரை பார்த்த மருத்துவர் தன்னுடைய ஊருக்குப் போவதாகச் சொல்லி இருந்தார். அந்த பகுதியில் எல்லோருக்கும் பிடித்தவர். பூமிஜா தன்னுடைய கவலை எல்லாம் பகிர்ந்து கொள்வாள். அப்பா பற்றிச் சொல்வதற்குள் மருத்துவர் கிளம்பி விட்டார்.

வேறு மருத்துவர் வந்தார், இவளும் சந்தித்தாள். ஆனால் இவர் அவர் மாதிரி இல்லை. முழு நம்பிக்கை வைத்திருந்தாள். அதனால் தான் எப்போதும் போல தனியாக வந்திருந்தாள். இவர் பரிசோதனை செய்யும் போது அவளுக்கு ஏனோ அசிங்கமாகப் பட்டது. ஏதோ சரியில்லை எனத் தோன்றியது.

இந்த நேரத்தில், வகுப்பு பயிற்சியில் சுயபாதுகாப்பைப் பற்றி மாணவி – மாணவர் எனப் பிரித்துச் சொல்லித் தந்து வந்தேன். பல விளக்கம்,உரையாடல், செய்து, புரிந்து கொள்ள ரோல் ப்ளே நடத்தி வந்தேன். இதிலிருந்து, ஏறத்தாழ பூமிஜா தனக்கு நேர்வதை அடையாளம் செய்தாள்.

இதையும் பூமிஜா ஸெஷன்களில் பகிர மேலும் விளக்கி, உரையாடினோம். பூமிஜா தன்னைத் தானே பார்த்துக் கொள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நன்றாக உள்வாங்கிக் கொண்டாள்.

வகுப்பில் எல்லோரும் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நேரம் அமைத்தேன்.

பூமிஜா முதலில் பகிர்ந்தாள். மோகன், அவன் கூட்டாளியும் அவளுடைய கையைப் பிடிக்கையில், இவள் மணிக்கட்டை இறுக்கிப் பிடித்து அழுத்த, கையை விடுவித்தார்கள். பயிற்சியில் சொன்னபடி, பயத்திற்குப் பதிலாகச் சமயோசிதமாகச் செய்வது உதவியது எனச் சொன்னாள். தனக்கு ஏற்பட்ட வேதனை, “அசிங்கம்”, சோகம் எல்லாம் சொன்னாள். பூமிஜா இருப்பதை அப்படியே சொல்ல, அது கேட்கும் ஒவ்வொருவரின் மனதைத் தொட்டது. பலருக்கு ஊக்கமானது.

இதைத் தொடர்ந்து செய்தோம். பலர் தைரியமாகப் பகிர்ந்த பின்பே மோகன் அன்ட் பார்ட்டிக்கு உரைக்க ஆரம்பித்தது.

பூமிஜாவுக்கு செய்வதை, அதன் வலி, ரணத்தைச் செய்பவர்கள் உணர வேண்டும். செய்பவர்களைப் பற்றி அறிந்ததால், அவர்களின் குறைபாட்டையும்ச் சரி செய்தோம். ஆசிரியரும் இதுபோல மற்ற வகுப்பில் நடக்காமல் இருக்க யோசனை, செயல்பாட்டைப் பகிர்ந்தார்.

பயிற்சியின் எதிரொலியாக, அன்று டாக்டர் பரிசோதனை செய்யும் போது தற்காப்புக்காக நர்ஸ் உள்ளே இருக்கச் சொன்னாள். அதையும் மீறி அவருடைய முரட்டுத்தனமான நடத்தையால் திகைத்துப் போனாள். இது நடந்தது சுமார் முப்பத்தைந்து வருடத்திற்கு முன்பு. இப்போது போன்ற சட்டம் இல்லை. மகளிர் காவல்நிலையம் இல்லை. அந்த மருத்துவரைப் பற்றி புகார் செய்ய அவளைக் காவல்நிலையம் அழைத்துச் சென்றேன். அவர் பெரிய புள்ளி என்று அறிந்தும் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு ஒரு எச்சரிக்கையிட்டு வந்தார்கள்.

பூமிஜா வீட்டில் வன்முறை தொடர்ந்தாலும், இப்போதெல்லாம் அந்த ஆண்கள் அவளை இழுத்தாலோ கை வைத்தாலோ சத்தம் போடுவதால் அவர்கள் தடுமாறிப் போவதைக் கூறினாள். அம்மா மாறாமல் இருந்தது கவலையாக இருந்தது. அப்போது திடீரென்று பல மாறுதல்கள் நடந்து விட்டது.

பூமிஜா வீட்டிற்குப் புதிதாகக் கல்யாணம் ஆன சிற்றப்பா சித்தி இங்கு வேலை கிடைத்ததால், அவர்களுடன் இருக்க வந்தார்கள்.

சித்தி பாசமானவள். பட்டதாரி. பூமிஜாவின் நிலை புரிந்து, பாடம் சொல்லித் தந்து, அவளுடன் வேலை செய்ததால், ரமாவிற்கு சித்தியையும் பிடிக்கவில்லை. வந்த புதிதில் பூமிஜா ராமன் அருகில் வந்தாலே குரலை எழுப்புவது, கண்களை விரித்து, ம்ம் என்றவுடன் அவனும் விலகியதைக் கவனித்தாள். எதுவும் கேட்கவில்லை. சில நாட்கள் கடந்தன. சிற்றப்பாவிடமும் அதையே செய்வதைச் சித்தி கவனித்தாள். வியப்பு ஆனது அவளுக்கு.

புது மாற்றத்தை என்னிடத்தில் சொன்னாள் பூமிஜா. இதுவரை, இவளைச் சமையல் அறையில் தூங்க வைத்தார்கள். அதை மாற்றி, அம்மா-தங்கை அருகில் படுக்க என யோசித்து வந்தோம். இதைச் செய்த பின் சில நாட்களுக்கு பூமிஜா பள்ளிக்கூடம் வரவில்லை, உடல்நலம் சரியில்லை என்ற கடிதம் வந்தது. மூன்றாவது நாள் தலைமை ஆசிரியரும் நானும் அவளைப் பார்க்கச் சென்றோம்.

பூமிஜா வீட்டில் இல்லை. பக்கத்துத் தெருவிலிருந்தாள். சித்தியுடன்.

சித்தி விளக்கினாள். அவளுடைய கணவனும் பூமிஜாவுடன் தவறாக நடந்து கொண்டதைப் பார்த்ததில் அங்கே அவர்களுடன் வாழ விருப்படவில்லை. தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து, இங்கு வந்து விட்டாள் என்று சொன்னாள். பூமிஜா தன்னுடைய பொறுப்பு மட்டுமே எனச் சொன்னாள்.

இருவரின் பாதுகாப்பைக் கருதி, காவல்துறையிடம் போய் விளக்கினோம். அவர்கள் ஆதரவாகப் பேசி, சித்தியின் தைரியத்தை வாழ்த்தி, அவர்களுடன் ராமன், சிற்றப்பா, ரமா மூவரையும் பார்த்து எச்சரிக்கை செய்து, அங்கே ரோந்து பணியில் உள்ள காவல்துறையினர் இவர்களைப் பார்த்துக் கொள்வதாகக் கூறினார்கள். செய்தார்கள்!

இத்துடன் முடியவில்லை, பூமிஜா பத்தாம் வகுப்பு முடித்தபின் வொகேஷனல் ட்ரைனிங் (vocational training, தொழில் பயிற்சி) சேர்ந்து பல கைவேலை கற்றுக்கொண்டாள். பூமிஜா தானாகச் சம்பாதிக்க, விசேஷங்களுக்கு கோலம் போடுவது என ஆரம்பித்தது. அவளை பலர் அழைத்தார். wire பை பின்னி விற்பனை, பூ தொடுத்துத் தருவது எனப் பல கைவேலை. பொருளை விற்பனை செய்ய இடம் அமைத்தேன். பக்கத்தில் உள்ள சிறுவர் பள்ளியில் உதவியாளராக வேலையும் கிடைத்தது. சித்தி மிகப் பாசமாகப் பார்த்துக் கொண்டாள்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு சந்தர்ப்பத்தில் சித்தியைச் சந்தித்த போது அவள் பூமிஜா எப்படி தான் வேலை செய்யும் இடத்தில் தற்காப்பு பற்றி கற்றுத் தந்தபடி, யாரும் அவளை வன்முறைக்கு ஆளாக்க விடாமல் இருந்ததையும் சொன்னாள்.