அடுத்து
வந்தது ‘ ஒண்ணா
இருக்கக் கத்துக்கணும் ‘ அணி !

அவர்கள்
மிகவும் விசித்திரமாகச் செய்தார்கள்!
முதல் இரு
அணிகள் போல ஜாலியான கத்தல் – கூச்சல் எதுவும் இல்லாமல் அமைதியாக
ஆரம்பித்தார்கள்.! பின்னணி இசை கூட மெதுவாக இழையோடிக் கொண்டிருந்தது. அந்த அணியிலிருந்து ஒரு பெண் மெதுவாக மேஜிக் – மெஸ்மெரிஸம் செய்பவள் போல வந்து நின்றாள் !

“ உங்கள்
அனைவருக்கும் எங்கள் வந்தனங்கள் ! இதுவரை ஆடி ஓடிக் களைப்படைந்திருப்பீர்கள்.! சற்று அமைதியாக உட்காருங்கள் ! நன்றாக ‘ ரிலாக்ஸ் ‘ செய்து கொள்ளுங்கள் ! தயவு செய்து நான்
சொல்கிறபடி செய்யுங்கள் !
உங்கள்
கண்களை மெல்ல மூடிக் கொள்ளுங்கள்.! நன்றாக ஒருமுறை மூச்சை இழுத்து விடுங்கள்.!
அப்படியே அமைதியாக ரிலாக்ஸ்டாக இருங்கள் ! நிகழ்ச்சி முடிகிற வரை கண்களை மூடிக் கொண்டே இருங்கள் ! சாதாரணமாக மூச்சு விடுங்கள் ! எங்கள் அணி நண்பர்கள் இப்போது உங்களுக்காக சில நிகழ்ச்சிகளை வழங்குவார்கள் ! அவை உங்கள் மனத்தை எங்களுடனும், எங்கள் மனத்தை உங்களுடனும் ‘ ஒண்ணா இருக்கச் ‘ செய்யும்.!
நாங்கள்
சொல்லப் போகிற கருத்துக்களைக் காது கொடுத்துக் கேளுங்கள் ! அப்படியே அமைதியாக – ரிலாக்ஸ்டாக – கண்ணை மூடிக் கொண்டு – சாதாரணமாக மூச்சு விட்டுக் கொண்டு கேளுங்கள்!
முதலில்
இந்தப் பொன்மொழியைக் கேளுங்கள் !
‘
நேற்று
என்பது சரித்திரம் – மறந்து விடுங்கள் !
‘ நாளை என்பது புதிர் – கவலை விடுங்கள் !
இன்று
என்பது இன்பம் – அதில் வாழுங்கள் !
பிறகு
சேகர் வந்தான்.! தனது சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கூறினான். அதில் ஒரு சோகம் இழைந்தது. “ நான் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த காலம்.
இரண்டு வேளை சாப்பாட்டிற்காக நான்கு வேளை உழைத்தேன். அந்த சமயங்களில் எல்லாம் என்
ஒரே பெண் அடிக்கடி என்னிடம் கெஞ்சுவாள் , “ அப்பா! வாயேன்! ப்ளீஸ்! நாம் அந்தப்
பூங்காவிற்குப் போய் விட்டு வரலாம் “ என்று அடிக்கடி கேட்பாள் ! நானும் அவள்கிட்டே ‘ இன்னிக்கு அப்பாவுக்கு வேலை இருக்கும்மா! என்
செல்லமில்லே ! இன்னொரு நாளைக்குப் போகலாம் ‘ என்று சொல்லி ஆபீசிற்கு ஓடிக் கொண்டிருந்தேன்.
நாள் வாரமாயிற்று; வாரம்
மாதமாயிற்று: மாதம் வருஷங்களாகி விட்டன ! நான் இன்னும் அவளை அந்தப் பூங்காவிற்குக்
கூட்டிக் கொண்டு போகவே இல்லை. இப்பொழுது என் பெண்ணிற்கு பதினைந்து வயதாகிறது.
பூங்காவிற்குப் போகும் ஆசை எல்லாம் போய் விட்டது. நான் நேற்றையையும், நாளையையும் எண்ணி எண்ணி இன்றையைக் கோட்டை
விட்டேன்.

நான்
மீனங்காடிக்குப் போனபோது அங்கே இருந்த ஒருத்தர் கூடப் பேசினேன். என் சோகம் என்னை அறியாமல் வெளியே வந்தது. அவர் அடுத்த நாளைக்கு மீனங்காடிக்குக் குறிப்பா
பெண்ணோட வரும்படி சொன்னார் ! என் பெண் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள்!
நான்
கெஞ்சிக் கூத்தாடி அவளையும் கூப்பிட்டுக் கொண்டு வந்தேன் ! எங்களுக்கு ஒரு சுகமான அனுபவம் மீனங்காடியில் கிடைத்தது. ஆபீஸ் வேலை என்று இல்லாமல் அன்றைய முழு நாளையும் எங்களுக்காகவே
வாழ்ந்தோம் ! ஒரு நிமிஷம் தனிமை கிடைத்ததும் என் பெண்ணிடம் ‘விளையாடக் கூப்பிட்ட போது வராத மோசமான அப்பாவாக
இருந்திருக்கேனே ‘ என்று
சொல்லி மன்னிப்புக் கேட்டேன். இனிமேல் ஆவலோடு அவள் தேவைப்படும் போதெல்லாம் இருப்பேன் என்றும் சொன்னேன். “ நீ ஒன்றும் அவ்வளவு மோசமான அப்பா இல்லை. என்னோட நீ ‘ ஒண்ணா இருந்தா ‘ போதும் “ என்று சொன்னாள். அப்பொழுதுதான் ‘ ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் ‘ என்ற தத்துவத்தின் முழு அர்த்தத்தையும்
உணர்ந்தேன். அந்த நிமிடத்திலிருந்து நான் நிகழ் காலத்திற்காக வாழ முடிவு செய்து
விட்டேன் ! நான் இழந்து விட்டேனோ என்று கலங்கிய என் மகள் எனக்குத் திரும்பக் கிடைத்து விட்டாள் ! “
டோனி மெல்ல
மேரியின் காதில் சொன்னான். “ சேகர் குறிப்பிட்ட ஆள் தினகர் ! புதிதாக
மீனங்காடியில் சேர்ந்தவன். அன்றைக்குத் தான் முதன் முதலில் மற்றவருக்கு உதவ
ஆரம்பித்திருக்கிறான். என் கிட்டே சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டான் ‘ டோனியின் குரலில் சந்தோஷம் கொப்பளித்தது.
அடுத்துப்
பேசின சுரேன் தன் முந்தைய வேலையில் தன்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணின் கதையைக்
கூறினான். கேட்கவே சோகமாயிருந்தது. “ அந்தப் பெண் சமீபத்தில்தான் வேலைக்குச்
சேர்ந்தவள். எனக்குப் பக்கத்து சீட் தான். அடிக்கடி என்கிட்டே ஏதோ சொல்ல வருவாள் ! நான் வேலை மும்முரத்தில் அவளை அலட்சியம் செய்தேன். ‘ தொந்தரவு செய்யாதே ‘ என்று மூஞ்சியில் அடித்தாற் போல்
சொல்லியிருக்கேன். திடீரென்று ஒரு நாளைக்கு ஆபீஸே அல்லோலகல்லோலப் பட்டது. அந்தப்
பெண் தப்பும் தவறுமாக பல காரியம் செய்திருக்கிறாள். தெரியாமல் தான்
செய்திருக்கிறாள். வேண்டும் என்று இல்லை. இருந்தாலும் கம்பெனிக்கு மிகவும் நஷ்டம். சரிப்படுத்த முடியாத அளவிற்குப் போய் விட்டது. அவளை வேலையை விட்டு நீக்கினார்கள். அது மட்டுமல்ல, அவள் செய்த தவறினால் மார்க்கெட்டிலும்
கம்பெனியின் பெயர் கேட்டுப் போய் விட்டது. அதன் தொடர் விளைவாக எங்கள் டிபார்ட்மெண்டில் இருந்து பத்து பேர் வேலையும் போயிற்று, என்னையும் சேர்த்து. நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நான் சரியான நேரத்தில் அவள் கூட பேசி அவள் பிரச்சனை என்ன என்று கேட்டு இருந்திருந்தால் இந்த கெட்ட பெயர், நஷ்டம் எல்லாவற்றையும் தடுத்து இருக்கலாமே என்று ! என் மனம் வேலையில் இருந்தது. ஆனால் கூட இருந்த மனிதர்களுடன் ஒண்ணா இருக்கக் கற்றுக் கொள்ளவில்லை அன்று.!
அடுத்து
வந்தாள் பாத்திமா ! அவள் தன் வீட்டில் நடந்த கதையைச் சொன்னாள். நல்ல பாஸிடிவ் ஆன கதை !
அவள் வெகு
மும்முரமாக டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த நேரம். அவள் பையன் அவள் அருகே உட்கார்ந்து எதுவும் பேசாமல் ‘ உர் ‘ என்று இருந்தான். அப்பொழுது அவளுக்குப்
புரிந்து விட்டது – அவனுக்கு
ஏதோ பிரச்சனை என்று. டிவியை அணைத்து விட்டு அவன் கூட ஒரு மணி நேரம் பேசினாள். அன்றைக்கு ஆபீஸுக்கு வருவது கூட லேட்டாகி விட்டது. ஆனால் அவனுடன் மனம் விட்டுப் பேசியது சந்தோஷமாக இருந்தது. டைவர்ஸ் வாங்கிக் கொண்டு தனி ஆளாக இருக்கிறவர்களுக்கு மற்றவர்களின் உணர்ச்சிகள் நன்றாகவே புரியும். அவன் பள்ளிக் கூடத்தில் ஏகப்பட்ட அடிதடி சண்டை. எல்லார் மேலேயும் அவனுக்குக் கோபம்
வந்தது. அம்மா கூட பேசி முடிந்ததும் அவனுக்கும் தன் மன பாரம் இறங்கியது போல்
தோன்றியதாம். சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டே விளையாடப் போனான். அவன் கூட அன்றைக்கு
‘ ஒண்ணா
இருந்தது ‘ இரண்டு
பேருக்குமே மிகவும் திருப்தியாக இருந்தது.
இன்னும்
ஓரிருவர் தங்கள் சொந்தக் கதை, ஆபீஸ் கதைகளை உருக்கமாகவும், அழுத்தமாகவும் சொன்னார்கள். அனைவரும் இனிமேல் வாடிக்கையாளர்களுடன் ஒன்றிப் போவோம் என்று உறுதி பூண்டார்கள். மனதும் செயலும் ஒன்றோடு ஒன்று இணையும் போது தான் மற்றவர் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பிக்கிறோம். மற்றவர் நம்மிடம் கேள்வி கேட்க வரும்போது அவர்களுடன் ‘ ஒண்ணா ‘ இருந்தால் தான் அவர்கள் பிரச்சனை நமக்குப்
புரியும். அதற்கான சரியான விடையும் கிடைக்கும்.
அலுவலகத்தில்
நண்பர்கள் ஏதாவது யோசித்துக் கொண்டிருந்தால் செல்லமாக அவர்களைத் தட்டி விட்டு “ எங்கே இருக்கிறாய் டியர் “ என்று கேளுங்கள். அவர்கள் நிகழ் காலத்துடன்
ஒன்றிப் போவார்கள். யாரை சந்தித்தாலும் ‘ என்ன சௌக்கியமா ‘ என்று கேட்பதற்குப் பதிலாக ‘ ஒண்ணா இருக்கியா ? ‘ என்று கேட்டு அதனை நினைவு படுத்திக் கொள்ளலாம்
என்றும் யோசனை சொன்னார்கள்.
அதைப் போல
மனமும் செயலும் ஒன்றாமல் இருக்கும் நண்பர்களிடம் மற்றவர் முன் தட்டிக் கேட்கத்
தயக்கம் வரும் போது ‘ அலை பாயுதே
‘ என்று
குறிப்பாகச் சொல்லலாம், என்றும்
அப்படிச் சொல்லும்போது அவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளவும் கூடாது என்றும் வேண்டிக்
கொண்டார்கள் ! மற்ற மக்கள் எல்லோரும் அவற்றை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டார்கள்.
வாடிக்கையாளர்களுடன்
போனில் பேசும்போது ஈமெய்ல் படிப்பது, மற்ற பேப்பர் படிப்பது என்ற வேலைகளில்
ஈடுபடாமல் அவர்கள் பேச்சிலேயே ஒன்றாக இருப்பது என்றும் முடிவு எடுத்தனர்.
எண்ணத்தைத்
தேர்ந்தெடு
கடைசியாக
வந்தது ‘ எண்ணத்தைத்
தேர்ந்தெடு ‘ அணி ! அவர்கள் கருத்துரை சுருக்கமாக இருந்தது. இதைச் செயலாற்றினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அழகாக எடுத்துச் சொன்னார்கள்.
இதனால்
நமக்கு நாமே பொறுப்பாளி என்ற எண்ணமும், ஆக்க பூர்வமாகச் செய்ய வேண்டும் என்ற உறுதியும் தோன்றும். இவை நமக்கு – மூன்றாம் மாடிக்கு ஒரு புது சக்தியையும்
உத்வேகத்தையும் அளிக்கும் என்பது உறுதி !
நம்
எண்ணத்தை நாமே தேர்ந்தெடுப்பதினால் மற்றவர் நம்மை மட்டமாக நினைக்கிறார்கள் என்ற
எண்ணமே தோன்றாது !
இதனால்
நாம் நமது முழுத் திறமையையும் வேலையில் காட்ட முடியும் ! விரும்புகிற வேலை செய்வதை
விட செய்கிற வேலையை விரும்பினால் சிரமமே தோன்றாது. இது ஒன்றை மட்டும் நாம் செயலாற்றினால் போதும், மூன்றாம் மாடி ஒரு அழகான, இனிமையான, சந்தோஷமான, புதுமையான இடமாக மாறும் என்பதில் சந்தேகமே
இல்லை.
இனி இந்த ‘ எண்ணத்தை ‘ எப்படி அமுல் படுத்துவது என்று அணியின்
கருத்துக்களை மக்கள் முன் எடுத்து வைக்க வந்தாள் அனு !
“ ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடு ‘ என்பது மிகவும் சொந்த விஷயம் ! பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையையே மறந்து விட்டோம். மற்றவர் திணிக்கும் எண்ணப்படியே செயலாற்றி வருகிறோம். இனி அதை மாற்றுவோம். ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருப்போம். அது சமயம் நமது சொந்த எண்ணத்திற்கு மதிப்புக் கொடுத்து அதன்படி நடக்க உறுதி பூணுவோம் ! நீங்கள் செய்யும் வேலையில் – உங்கள் எண்ணத்தில் நம்பிக்கை இல்லை என்றால்
அல்லது நம்பத் தயார் இல்லை என்றால் அதைச் செய்யாதீர்கள் ! நம்மில் பலர் பலவிதமான கஷ்டங்களில் இருக்கிறோம். இதை முயற்சி செய்வதே பெரிய கஷ்டமாகவும் இருக்கும். நாம் முயலுவோம் – வெற்றியும் பெறுவோம்”
என்று
சொல்லி விடை பெற்றாள் அனு.
அடுத்து
வந்த அந்த அணித் தோழர், “ நாங்கள்
இதை உபயோகப் படுத்த இரண்டு வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறோம்.
முதலாவதாக, ஷிவகேராவின் ‘ YOU CAN WIN ‘ – நீங்களும் வெற்றியடையலாம் என்ற புத்தகத்தை
உங்கள் அனைவருக்கும் எங்கள் அணியின் பரிசாகத் தருகிறோம். அதை அனைவரும் படிப்போம்.
அடுத்த மாதம் நாம் அனைவரும் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை ஆலோசித்து நம்மால்
எவற்றை உபயோகப் படுத்த முடியுமோ அவற்றை எடுத்துக் கொள்வோம். அது போல மேலும் நிறைய புத்தகங்கள் வாங்கி அலசி ஆலோசித்து கருத்து முத்துக்களை எடுப்போம். அவை நமது எண்ணங்களைத் தேர்ந்தெடுக்கப் பெரிதும் உதவும்.
இரண்டாவதாக, நமது எண்ணம் பற்றிய ‘ மெனு கார்டை ‘ நோட்டீஸ் போர்டில் தினமும் போடுவோம். முதல் கார்டு யார் போட்டார்களோ தெரியவில்லை ! அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி ! அது போல தினமும் எங்கள் எண்ணப் பாதை தொடரும் !
இதோ ஒரு ‘ சாம்பிள் ‘ கார்டை ஸ்லைடில் பாருங்கள் !

எல்லா
அணிகளும் அவர்களுடைய பணியைச் சிறப்பாக முடித்ததும் மேரி மேடையில் ஏறி அவர்கள்
ஒவ்வொருவருக்கும் தனித் தனியே நன்றி கூறினாள். தனித் தனியாக அழைத்துப் பாராட்டுதல்களையும் தெரிவித்தாள் ! டோனியும் கூட வந்து அவர்களை வாழ்த்தினான் ! மேரி ஆகாயத்தின் உச்சத்தில் இருந்தாள். அவளுக்கு நன்றாக விளங்கி விட்டது, இனி மூன்றாம் மாடி ஒரு கலக்கல் டிபார்ட்மெண்டாக
மாறும் என்பதில் ! குப்பைத் தொட்டியைக் கடாசி விடுவார்கள் என்பதில் முழு நம்பிக்கை
பிறந்தது !
டோனியும் மேரியும் ஒன்றாக நிதிக் கம்பெனிக்கு வந்தார்கள் ! அவர்களைக் கம்பெனியில் பலர் – மற்ற டிபார்ட்மெண்ட்காரர்கள் ஆச்சரியத்துடன்
பார்த்தனர். அவர்களில் பலருக்கு டோனியைத் தெரிந்திருந்தது.
“ மேரி !
உனக்கு வந்த புது வேலை பற்றி உன் பாஸுக்குத் தெரியுமா ? டோனி கேட்டான். இரண்டு வாரம் கழித்து நிதிக்
கம்பெனியின் முக்கியமான போட்டிக் கம்பெனி மேரிக்கு நிறைய சம்பளத்தோடு சௌகரியமான
இடத்தில் வேலை கொடுத்து அவள் சம்மதத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.!
“ எங்க
கம்பெனியின் பழைய பாஸ் கிட்டே பேசியிருக்காங்க ! நான் அந்த வேலையைப் பற்றி நிதிக் கம்பெனியில் யார் கிட்டேயும் பேசவில்லை.!”
“ பின்னே ஏன்
அதை வேண்டாம் என்று சொல்லி விட்டாய்? எனக்குப் புரியுது மேரி ! நீ ஆரம்பித்த இந்தப்
புதிய திட்டத்திற்கு உன்னை நீயே அர்ப்பணித்து விட்டாய் ! புதிய வாழ்க்கை ஆரம்பிக்க
இருக்கிற மக்களை விட்டுப் போக மனசில்லை. சரியா? “
“ அது ஒரு
விதத்தில் சரி தான் டோனி ! இங்கேயே அதே சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்றிருக்கும் போது
நான் எதற்காகப் புது வேலையைத் தேடணும் ? நல்ல நாட்கள் வந்திடுச்சு டோனி ! வந்திடுச்சு !”
ஒரு வருடத்திற்குப் பிறகு

பிப்ரவரி 7 . ஞாயிற்றுக் கிழமை. மேரி தன்னுடைய ‘ எளிமையான நினைவு ‘ புத்தகத்தைப் பிரித்தாள். போன வருடம் பிப்ரவரி 7 ந்தேதி எழுதினதை நினைவு கூர்ந்தாள் !
போன வருடம்
எப்படி குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்டில் குப்பை கொட்டுவது என்று கவலைப் பட்டுக்
கொண்டிருந்தேன். என் சொந்த
வாழ்க்கையும் ஒரு பிரச்சனையாக இருக்கும்போது எப்படி ஒரு பெரிய டிபார்ட்மெண்டைத்
திருத்துவது என்று பயந்து கொண்டிருந்தேன் !
‘ தாஜ்
ஹோட்டலில் ‘ நான்கு
அணிகளும் அவர்கள் தொகுத்து வழங்கிய விதமும் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தன.
மக்கள் அதற்கு மேலும் பல படிகள் போக முடியும் என்று நிரூபித்தார்கள் ! மீனங்காடித் தொழிலாளர்கள் காட்டிய பாதையில் இவர்கள் பல படிகள் சென்றார்கள் ! மூன்றாவது மாடி இப்போது மிகமிக வித்தியாசமான இடமாய் மாறி விட்டது. இப்போது ஒரு புதுப் பிரச்சனை உருவாகி உள்ளது. மற்ற டிபார்ட்மெண்ட் மக்கள் அனைவரும் இதில் வேலை செய்ய
விரும்புகிறார்கள்.! அந்த புது சக்தி – புது ஒளி எரிந்து கொண்டே இருக்கிறது !
எல்லாவற்றிற்கும்
மேலே கம்பெனியின் சேர் உமன் கொடுத்த ‘ பரிசு ‘ ஆச்சரியமாக இருந்தது. அதற்குக் கிடைத்த
சர்ட்டிபிகேட்டின் நகல் நிறைய வேண்டும் என்று கேட்டபோது அம்மையார்
ஆச்சரியப்பட்டுப் போனார்கள் ! அதன் நகலை தனக்கும், டோனிக்கும், பிரசாத்துக்கும், மற்ற டிபார்ட்மெண்ட் தொழிலாளர் அனைவருக்கும் – அது மட்டுமல்ல மீனங்காடித் தொழிலாளர்
அனைவருக்கும் கொடுத்தாள் மேரி. மீனங்காடியில் கேஷ் கவுண்டருக்கு மேலே அதை ‘ பிரேம் ‘செய்து மாட்டியிருந்தார்கள். டோனியின் அறையிலும் தனியே இடம் பெற்றிருந்தது.
தன்னையறியாமலே
அவளுக்கு பா. விஜய்யின் வரிகள் மனதில் தாளத்தோடு வந்தன !
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு !
மேரி தனது
கண்களிலிருந்து வழியும் நீரை மெல்லத் துடைத்துக் கொண்டாள் ! அவளது சந்தோஷக் கீற்றுக்களை ஊக்குவிக்கும் கருத்துக்கள் கொண்ட அந்தப் புத்தகத்தை மெல்ல மூடினாள்.!
***********************
“ டோனி! அந்த
‘ சிப்ஸ் ‘ தட்டை இப்படி நகர்த்து ! நீயே எல்லாவற்றையும்
சாப்பிட்டு விடாதே !’
டோனி
அவளுக்கு எதிரில் உட்கார்ந்து புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அந்தத் தட்டை அவளிடம் நீட்டினான் . மேரி புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே தட்டில் இருந்து ‘ சிப்ஸ் ‘ எடுக்கப் பார்த்தாள். ஏதோ வித்தியாசமாகத் தட்டுப்
பட்டது.! நிமிர்ந்து பார்த்தாள் !
அதில் சிப்ஸுக்குப் பதிலாக ஒரு அழகான மீன் பொம்மை ! அதன் வாயினுள் ஜொலிக்கும் வைர மோதிரம் ! ‘ எங்கேஜ்மெண்ட் மோதிரம் ‘
டோனியை
நிமிர்ந்து பார்த்தாள் ! ‘ மேரி !
என்னை ஏற்றுக் கொள்வாயா ?’ என்ற
கேள்விக் குறி அவன் கண்களில் தெரிந்தது. சந்தோஷத்தில் அவளுக்குத் தொண்டை அடைத்தது ! “ ஓ ! டோனி !” வார்த்தைகளே வரவில்லை. கண்களில் நீர் தெறிக்கக் கேட்டாள் “ உன் விளையாட்டுக்கு எல்லையே இல்லயா டோனி ?”


அந்த இரவு
வெளியில் மிகவும் குளிராக, இருட்டாக, வாட்டமாக இருந்தது. ஆனால் மேரி, டோனி இருவர் உள்ளத்திலும் அதற்கு நேர் மாறாக
உவகையும் இன்பமும் துள்ளிப் பாய்ந்தன !
சேர்மன் அம்மையார் பரிசளிப்பு விழா
நிதிக் கம்பெனியின்
தலைவி மேடைக்கு வந்து பேச ஆரம்பித்தார் !
“ இதை விடப்
பெருமை தரும் இரவு எனக்கு இதுவரை இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை. மிகமிகச் சிறப்பான நிகழ்ச்சி ஒன்று நமது கம்பெனியில் சமீபகாலமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேரியும் அவளது சக தொழிலாளர்களும் மூன்றாம் மாடி டிபார்ட்மெண்டை ஒரு சந்தோஷமான – சௌகரியமான – திருப்திகரமான இடமாக மாற்றி இருப்பதை நான்
இன்று என் கண்களால் கண்டேன். இன்றைக்கு என்ன புது விசேஷம்? என்று நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் பதில்
சொன்ன விதம் என்னை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றது ! அவர்கள் சொன்ன பதில்
என்ன தெரியுமா ? ‘ இன்றைக்கு
ஒரு மிகப் பெரிய சந்தோஷமான நாளாய் இருக்க நாங்கள் முடிவு செய்து விட்டோம் “ என்று.
அது
மட்டுமல்ல ! வெகு காலம் சர்வீஸ் போட்ட சீனியர் தொழிலாளர்கள் எல்லாம் நேற்றைக்கு
வேலைக்குச் சேர்ந்தது போல் உற்சாகத்தில் இருப்பதைக் கண்டேன் ! வழக்கமான வேலை என்று
இருந்ததை மதிப்புள்ள வேலை என்று மாற்றி விட்டார்கள் ! இதற்கான மந்திரத்தை அவர்கள்
மீனங்காடியில் கண்டு பிடித்ததாகவும் கூறினார்கள்.! மீன் மார்க்கெட்டை ஒருவர் ஜாலியான இடமாக மாற்றும்போது நமது
கம்பெனியை ஒருத்தி சந்தோஷமான இடமாக மாற்றுவதில் அதிக சிரமம் இருந்திருக்காது என்று
நான் நம்புகிறேன் !
இந்த
மாறுதலை ஒரு சலவைக் கல்லில் ஓவியமாக – இல்லை காவியமாகத் தீட்டி அழகான வார்த்தைகளில்
பொறித்து நமது தலைமை அலுவலகத்தின் நுழை வாயிலில் அனைவரும் முதலில் பார்க்கும்
இடத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளேன் ! அதில் பொறிக்கப் போகும் வார்த்தைகள் என்ன தெரியுமா ?
நமது பணிக்கூடம்
“ இந்த நுழை வாயிலில் செல்லும் ஒவ்வொருவரும் ‘ இன்றைய நாளை மிகச் சிறப்பான நாளாக மாற்றுவோம் ‘ என்ற உறுதியுடன் உள்ளே காலெடுத்து வையுங்கள்.!
உங்களது அன்பு கலந்த நன்றி உங்களுக்கும், சக தொழிலாளர்களுக்கும், வாடிக்கை யாளர்களுக்கும் உரித்தாகட்டும் ! சந்தோஷமாக ஆட்டம் கொண்டாட்டத்துடன் இருக்க புது வழிகளைக் கண்டு பிடியுங்கள் ! கவலைகளை மறந்து விட்டு மகிழ்ச்சியுடன் வேலையில் கவனம் செலுத்துங்கள் ! மற்றவர்கள் உங்கள் சேவைகளைத் தேடி வரும்போது அவர்களுடன் எப்போதும் ஒன்றாக இருங்கள் ! உங்கள் உற்சாகம் குறைவது போல இருந்தால் இந்த மருந்தை
எடுத்துக் கொள்ளுங்கள் ! உதவி தேவைப்படும் ஒருவரைக் கண்டு பிடித்து அவருக்கு உதவுங்கள் ! சேவை தேவைப்படும் மனிதர்களைத் தேடிப் பிடித்து சேவை வழங்குங்கள் ! அந்த நாள் அவர்கள் நெஞ்சிலே நிலைக்க உதவி செய்யுங்கள் ! இவை என்றென்றைக்கும் நம்மையும் மற்றவரையும்
மகிழ்ச்சியில்திளைக்க வைக்கும் என்பது உறுதி “
(முற்றும் )
பக்கம் – 22