அறையில் யானை என்று அறியப்படும் சூழ்நிலை இதுதான்:

ஒரு கேள்வி, பிரச்சினை அல்லது சர்ச்சைக்குரிய விஷயத்தை விவாதம் வரும் என்றோ, சங்கடம் ஏற்படுத்தும் என்றோ சமூகத்தில் தடை செய்யப்பட்டதென்றோ காரணங்களினால் அனைவருக்கும் தெரிந்திருந்தும் தவிர்க்கப்படும் சூழ்நிலை. அறையில் யானை இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது அங்கே இல்லாதது போன்றே அனைவரும் நடந்துகொள்வார்கள்.
குருடர்கள் யானையை அறிந்த கதை:
குருடர்கள் சிலர் யானை பார்க்கப் புறப்பட்டார்கள். யானை பார்த்த பின்னர் அவர்கள் யானை எப்படி இருக்கிறது என்று விளக்குகிறார்கள். யானையின் வயிற்றுப் பகுதியை தடவிப்பார்த்தவன் சுவர் போன்றது என்றான். யானையின் காதைத் தடவிப்பார்த்தவன் முறம் போன்றது என்றும் வாலைப் பிடித்தவன் துடைப்பம் போன்றது என்றும் துதிக்கையை தடவியவன் மலைப் பாம்பு போலிருக்கிறது என்றும் காலைத் தடவியவன் கோயில் தூணைப் போலிருக்கிறது என்றும் தந்தத்தைத் தடவியவன் கூரிய ஈட்டி போன்றது என்றும் சொன்னார்கள்.
இந்த இரண்டையும் பின்னணியாகக் கொண்டு ஒரு கவிதை:
நீதிக்கதை
ஆளாளுக்குக்
கருத்துச்சொன்ன
ஆறுபேருக்கு
விளக்கிச்சொன்ன
ஏழாமவனிடம்
எட்டாமவன் கேட்டான்:
சரிதான்:
எல்லாம் சரிதான்:
காது இருக்கிறது துதிக்கையும் வாலும்
இருக்கிறது
சுவர்போல் உடலும்
தூண்போல் காலும்
கூடத் தெரிகிறது
ஆனால் யானை எங்கே?
-எம் யுவன்
(விருட்சம் கவிதைத் தொகுப்பிலிருந்து)
