நண்பர் காந்தி அவருக்கு அஞ்சலி !!

Image may contain: 1 person, text that says 'Prof. A. Gandhi Dean Saveetha Engineering College In Loving Memory In this sorrowful time, we would like to exteno to you our heartfelt condolences. May your soul Rest in Peace.'

                                                                                                                 ( நன்றி சசிகுமார் முகநூல்) 

 

 

Image may contain: 1 person, standing and indoorஎங்கள் இனிய நண்பர் காந்தி !

எங்களை  ஆழாத்  துயரில்  ஆழ்த்தி

தன் இனிய நினைவுகளை மட்டும்  அளித்துவிட்டு

இறைவனடி சேர்ந்துவிட்டார்.! 

 

கிட்டத்தட்ட ஐம்பது வருட நட்பு! 

 

சிரித்த முகம் ! செயலில் தெளிவு!  கடமையில்  கண் !  அன்பின் வடிவம் ! 

பண்பில்  குன்று! பார்வையில்  இனிமை !  பாசத்தில் மழை !

பேச்சில் திறமை ! கொள்கையில் பிடிப்பு! நேர்மையின் சிகரம்!

கல்லூரிக்கு பேராசிரியர் ! மாணவர்க்கு  தோழர் !

குடும்ப விளக்கு! உறவுக்கு தூண் !

கட்சியில் தலைவர்! காட்சிக்கு எளியர்  ! இன்னும் எத்தனையோ !

 

இவை ஒவ்வொன்றும்  வெறும்  வார்த்தைகள் அல்ல!  சத்தியம் !

இவரது  வாழ்வின் ஒவ்வொரு அத்தியாமும் அவற்றை நிரூபிக்கும்!

 

 

                                                        எங்கள் நட்பு மலரின் அழகிய இதழ் ஒன்று உதிர்ந்துவிட்டது ! 

                                             எங்கள் பஞ்ச முக விளக்கில் ஒரு திரி மட்டும் தனித்து விண்ணில் எரிகின்றது !

                                                          எங்களுக்கு இவரும் ஒரு மகாத்மா தான் !  வாழ்க நீ எம்மான் ! 

 

                      காந்தி!, உங்கள் பிரிவால் வாடும்,: சுந்தரராஜன்,  சந்திரமோகன், சிந்தாமணி, சந்திரசேகரன்

 

 

குண்டலகேசியின் கதை -3 – தில்லை வேந்தன்

குண்டலகேசியின் கதை -3

KANKALAI #குண்டலகேசி-அறிமுகம் #சங்க இலக்கியம் #ஐம்பெரும் காப்பியங்கள் - YouTube

முன் கதைச் சுருக்கம் :

A0111

பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
சிறு வயதில் தாயை இழந்தாலும் அன்புத் தந்தையின் அரவணைப்பில் மகழ்ச்சி அடைந்தாள்..
ஒருநாள், அரசனின் வீரர்கள், கொடிய கள்வன் காளன் என்பவனைக் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்வதைக் கண்டாள். அவன் மீது காதல் கொண்டாள்…….

குண்டலகேசி (மூலமும் உறையும்): By Praveen Kumar G by நாதகுத்தனார்

பத்திரை நிலை!

ஓதிய கல்வி, கேள்வி,
ஒன்றுமே உதவ வில்லை.
ஈதலும், அறமும் கொண்ட
இல்லதன் பெருமை விட்டாள்.
கோதிலாத் தந்தை காத்த
குலமுறை மரபும் விட்டாள்.
காதலால் நாணும் கெட்டாள்,
காரணம் அறிய மாட்டாள்

 

எயிற்றிலே நஞ்சை ஏந்தும்
எழில்கொளும் அரவம் உண்டு
வயிற்றிலே முத்தைத் தாங்கும்
வனப்பிலாச் சிப்பி உண்டு
பயிற்றியே விளக்கும் கல்வி
பாங்குடன் கற்ற போதும்,
கயிற்றினால் ஆடும் பாவை
காதலால் ஆனாள் பாவை.

( எயிற்றில் — பல்லில்)

தோழியிடம் தன் காதலைக் கூறுதல்

என்னுயிர் அனையாய் நானிங்கு
இயம்பிடும் சொற்கள் கேளாய்!
இன்னுயிர் தங்க வேண்டின்
இவனையான் மணக்க வேண்டும்
மின்னெனச் செல்வாய், எந்தை
விரும்பிட இதனைச் சொல்வாய்
மன்னனைப் பார்த்துப் பேசி
மாற்றிட வேண்டும் ஆணை.

 

தோழியின் அறிவுரை

கள்ளினை அமுதாய் எண்ணிக்
களிப்புடன் பருக லாமோ?
முள்ளினை மலராய் எண்ணி
முடிதனில் சூட லாமோ?
புள்ளினை வேடன் கையில்
புகலெனக் கொடுக்க லாமோ?
கள்ளமும் சூதும் கொண்ட
கயவனை விரும்ப லாமோ?

 

செய்தி அறிந்த தந்தை புலம்புதல்

மங்கையின் தோழி செய்தி
வணிகனைக் கண்டு சொன்னாள்.
வெங்கதிர் தளர்ந்து மேற்கில்
வீழ்வதைப் போலச் சாய்ந்தான்.
தங்கிய புகழும் போனால்,
தள்ளரும் மானம் போனால்,
எங்குலப் பெருமை போனால்,
இங்குநான் வாழேன் என்றான்.

 

இந்தவோர் இழிவு நேர
என்பிழை செய்தேன் கொல்லோ!
முந்தையோர் முறைகள் யாவும்
முடிந்தன கொல்லோ! என்றன்
சொந்தமும் நட.பும் ஊரும்
சொல்வதைப் பொறுப்பேன் கொல்லோ!
சிந்திடும் கண்ணீர் மல்கச்
செப்பினன் உயிரைத் தாங்கி.

பத்திரையிடம் தந்தை கூறுவது

வழிவழியாய் வந்தகுடிப் பெருமை விட்டு
வழிப்பறிசெய் கொள்ளையனை விழைந்தாய் போலும்
பழிவருமே தந்தைக்கு மறந்தாய் போலும்
பற்றென்மேல் வைத்ததெல்லாம் துறந்தாய் போலும்
விழிவிரித்த வலையினிலே விழுந்தாய் போலும்
வெல்லுமதி முழுதினையும் இழந்தாய் போலும்
அழிவென்ற வழிவிரும்பி நடந்தாய் போலும்
அன்புடனே சொல்கின்றேன், கடந்து போவாய்.

கேட்டவை எல்லாம் தந்தேன்
கேட்டினைத் தரவே மாட்டேன்.
காட்டுவாழ் புலிஅன் னானைக்
கடிமணம் புரிய ஒப்பேன்
ஊட்டியே வளர்த்த பெண்ணை
உயிருடன் இழக்க மாட்டேன்
நாட்டினில் வேறு நல்லோன்
நன்மணம் செய்து வைப்பேன்.

 

பத்திரை மறுமொழி.

உளத்தினால் விரும்பி விட்டால்
உறுமணம் என்றே சொல்வர்.
வளத்தினால், புகழால் ஓங்கி
வாழ்வதால் தயங்கு கின்றாய்.
அளத்தலில் அன்பால் மெல்ல
அவனையான் திருத்தி, வாழ்வில்
விளைத்திடும் விந்தை கண்டு
வியந்துநீ மகிழ்வாய் என்றாள்.

 

பொம்மையால் மகிழ்ந்த காலம்
போனதே பின்னர் என்றன்
அம்மையால் மகிழ்ந்த காலம்
அதுவுமே போன தந்தோ!
இம்மையில் மகிழ மீண்டும்
இந்தவோர் வாய்ப்புத் தந்தால்
செம்மையாய் வாழ்ந்து காட்டிச்
சிறப்பதைக் காண்பாய் நீயும்!

(தொடரும்)

 

 

 

பிரியம்- ரேவதி ராமச்சந்திரன்

Sadabhishekam Samagri Kit, पूजा की किट, पूजा किट - Pooja Dhravyam 18, Hyderabad | ID: 11505880933

தலைப்பு சம்ஸ்கிருதத்தில் இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா, கதையைப் படித்தவுடன் நீங்களே இந்த தலைப்புதான் இதற்குப் பொருத்தம் என்று எண்ணுவீர்கள். இதற்கு சமமான அன்பு, ஆசை, பாசம், நேசம், காதல் என்று எத்தனை வார்த்தைகள் இருந்தாலும் இத்தம்பதியரின் அந்நியோன்யத்தைப் ‘பிரியத்’தைத் தவிர வேறு எதனாலும் பறை சாற்ற முடியாது என்று நீங்களும் உணர்வீர்கள்.

‘கல்யாணமாம் கல்யாணம் 60 ஆம் கல்யாணம்’ என்று 20 வருடங்களுக்கு முன் 60 ஆம் கல்யாணம் முடிந்து, இதோ 10 நாட்களுக்கு முன் 80 ஆம் கல்யாணமும் ஆயிற்று அந்த தம்பதியினர் பார்வதி சங்கரனுக்கு. பெண், பிள்ளைகள் கல்யாணம் ஆகி தம்தம் குழந்தைகளோடு அமெரிக்காவில் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது சின்னதொரு வீட்டில் சிறிய சிறிய பூந்தொட்டிகளுடனும், அளவான சமையலுடனும் இரண்டாவது தனிக்குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தனர். மெதுவாக கோவிலுக்குச் செல்வதும், தம்தம் காரியங்களைத் தாமே செய்து கொள்வதுமாக நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர் .

அந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டிற்குப் புதிததாக மணமுடித்த தமபதியினர் சதீஷும் ஹேமாவும் குடித்தனம் வந்தனர். துணி உலர்த்தும் போது பார்த்து பரிச்சயம் ஆன இந்த மூத்த தம்பதியினரின் பரிவும், பேச்சும், அக்கறையும் இவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்துப் போய் விட்டன. அப்பப்ப கேரள ஸ்டைல் எரிசேரி, காளான், ஓலன் என்று சதீஷுக்குப் பிடித்த சமையல் ஐட்டங்களை பார்வதியிடமிருந்து கற்று வந்து ஹேமா சமைப்பாள். இப்படி அவர்களின் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு சமையலுமாக வளர்ந்து வந்தது.

பார்வதி ஒரு நாள் சாயந்திரம் காபி குடிக்க சதீஷையும், ஹேமாவையும் அழைத்தார். காபி அருந்தி விட்டுக் கொஞ்ச நேரம் அளவளாவிக் கொண்டிருந்து விட்டு இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்தனர். இதில் இரண்டு தம்பதியினர்க்கும் சுவாரஸ்யம் ஏற்படவே இப்பழக்கம் தொடரலாயிற்று.

சதீஷ் தினமும் காபி சாப்பிடும் நேரத்தில் ஒரு காட்சியைக் கவனித்தான். பார்வதி காபி குடுவையைக் கொண்டு வருவதும், அதைத் திறக்க முடியாமல் திணருவதும், தன் கணவர் சங்கரனை விட்டுத் திறக்கச் சொல்வதுமாக இருந்தாள். சதீஷுக்குத் தன் அம்மா நினைவு வரவே, அந்தப் பெண்மணியின் கஷ்டத்தைப் போக்க நினைத்தான். அந்தக் குடுவையை எளிதாகத் திறக்க ஒரு ஸ்பேனர் மாதிரி பொருளை வாங்கி வந்து அவர் கணவருக்குத் தெரியாமல் பார்வதியிடம் கொடுத்து ‘நீங்கள் என அம்மா மாதிரி. தினமும் குடுவையைத் திறக்கக் கஷ்டப்படுகிறீர்கள். இதன் உதவியால் திறந்து பாருங்கள். உங்கள் கஷ்டம் தீரும்’ என்று ஆதரவாகக் கூறினான். அதைக் கேட்டு பார்வதி ஒரு சிறு புன்முறுவலுடன் அதனை ஏற்றுக் கொண்டாள்.

ஆனால் இது என்ன! மறு நாள் பழையபடியே பார்வதி தன் கணவரை விட்டு குடுவையைத் திறக்கச் சொல்வதைப் பார்த்து சதீஷ் ஆச்சர்யப்பட்டான்! ஏன் நான் வாங்கிக்கொடுத்த ஸ்பேனர் சரியில்லையா அல்லது அவர்களுக்கு அதை உபயோகப்படுத்தத் தெரியவில்லையா என்று யோசித்தான். பார்வதி உள்ளே சென்றவுடன் இவனும் பின்னாலயே சென்று ‘ஏன் அம்மா ஸ்பேனர் சரியில்லையா, ஏன் அதை உபயோகப்படுத்தவில்லை’ என்று வினவினான். அதைக் கேட்டு பார்வதி ‘கண்ணா, நீ என மீது இவ்வளவு அக்கறையும் பரிவும் காட்டுவதற்கு நன்றி. என்னால் எதன் உதவியும் இல்லாமல் இந்தக் குடுவையைத் திறக்க முடியும்’ என்று சிறிது நிறுத்தினாள். அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த சதீஷ் ‘அப்ப ஏன் மறுபடியும் உங்கள் கணவரையேத் தொந்தரவு செய்கிறீர்கள்’ என்று கண்கள் விரிய, புருவம் சுருங்கக் கேட்டான். அதற்கு பார்வதி சொன்ன பதில் அவனை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது. ‘ மகனே, என்னால் முடியாமல் நான் அவரிடம் செல்லவில்லை. இந்த மாதிரி அவரைக் கேட்பதால் அவர் மனத்தில் நான் இன்னமும் அவரைச் சார்ந்திருப்பது போலும், அவரில்லாமல் என்னால் இயங்க முடியாது என்றும், என வாழ்வின் ஆதாரம் அவர், இந்தக் குடும்பத்தின் தலைவர் அவர் என்ற உணர்வு அவர் மனதை விட்டு நீங்காதிருக்கவும் தான் நான் அவ்விதம் நடந்து கொள்கிறேன்’ என்றார். இதைக் கேட்ட சதீஷ் கண்கள் பணிக்க, மனம் நிறைக்க வியந்து மகிழ்ந்து வீடு திரும்பினான்.

பின்னால் வந்து கொண்டிருந்த சங்கரன் அவர்கள் இருவரும் அறியா வண்ணம் இதைக் கேட்டு விட்டு தனக்குள் சிரித்துக்கொண்டே ‘எனக்காகத்தான் பார்வதி இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்பது நான் மட்டுமே அறிந்த ரகசியம். அவள் மனம் கோணாதவாறு நானும் நடந்து கொள்வேன்’ என்று மனத்தில் நினைத்துக் கொண்டார்.

இவர்களது இத்தனைக்  கால வாழ்வின் இயல்பு ஒருவரைஒருவர் சார்ந்திருக்கும் இந்தப் ‘பிரியமே’ என்று புலனாகிறது அல்லவா!

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020

 

 

7. செய்திடுவேன்!

 

உதயம் முன்னே எழுந்திடுவேன் !
உற்சாகமாய் நான் ஓடிடுவேன் !
உடற்பயிற்சிகள் செய்திடுவேன் !
மூச்சுப் பயிற்சியும் செய்திடுவேன் !

பச்சைக் காய்கறி சாப்பிடுவேன் !
பழமும் தினமும் நான் உண்பேன் !
எதிர்ப்பு சக்தியை வளர்த்திடுவேன் !
ஆரோக்கியம் நான் பேணிடுவேன் !

ஆலயம் நானும் சென்றிடுவேன் !
ஆண்டவனையே வேண்டிடுவேன் !
அம்மா அப்பா சொன்ன விதம் –
அழகாய் நானும் வாழ்ந்திடுவேன் !

உறவுகள் நானும் போற்றிடுவேன் !
உதவிகள் செய்தே வாழ்ந்திடுவேன் !
நல்ல பழக்கங்கள் மேற்கொள்வேன் !
நல்லவன் என்றே பெயர் எடுப்பேன் !

நாடும் வீடும் போற்றணுமே !
நாளைய உலகம் சிறக்கணுமே !
நானும் நீயும் சேர்ந்திடுவோம் !
நல்ல உலகத்தைப் படைத்திடுவோம் !

 

8. மயிலே ! மயிலே ! மயிலே !

 

மயிலே ! மயிலே ! மயிலே ! – உனக்கு
வண்ணத் தோகை தந்தது யாரு ?
வண்ணத் தோகை தந்து உன்னை
ஆடச் சொன்னது யாரு ?

குயிலே ! குயிலே ! குயிலே !- உனக்கு
இனிய குரலைத் தந்தது யாரு ?
குரலைத் தந்து கூ கூ என்றே
கூவச் சொன்னது யாரு ?

காட்டின் தலைவா சிங்கம் – உனக்கு
வீர நடையைக் கொடுத்தது யாரு ?
நடையைக் கொடுத்து காட்டுக்கே நீ
ராஜா என்றது யாரு ?

வீட்டைச் சுற்றும் பூனை – உனக்கு
மீசை தந்தது யாரு ?
மீசை தந்து உன் மேல் எனக்கு
ஆசை தந்தது யாரு ?

எத்தனை உயிர்கள் எத்தனை உயிர்கள் –
உலகில் உள்ளது பாரு !
உலகில் உள்ள அனைத்தும் பாரு –
இயற்கையின் பெருமையைக் கூறு !
இயற்கை என்பது என்ன ? தம்பி –
இறைவன் என்பதும் அதுதான் !
இறைவன் புகழைப் பாடு – தம்பி
இன்பம் சேர்த்தே வாழு !

 

 

 

 

 

 

காளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்

 

Jallandhara | Devon ke Dev... Mahadev Wiki | Fandom

டுந்தவம் புரியும் பார்வதியின் ஆஸ்ரமத்தில் சடாமுடி முனிவர் வந்தார்

தேஜஸ் கூடிய  பிரும்மச்சாரியை அதிதி பூஜைப் பொருளுடன் வணங்கினள்

பேசத் தெரிந்த அம்மனிதர் பேசும் முறைப்படிப் பேசத்தொடங்கினார் 

 

“பெண்ணே ! நீ உன் சக்திக்கு மீறாமல் சரியாகத் தவம் செய்கின்றாயா ?

உன் ஆஸ்ரமத்து  செடி கொடிகள்  உன்னைப் போல் அழகாக இருக்கின்றன

தர்ப்பையைத்  திருடும்  மானிடமும்  அன்பாய்  இருப்பாய் என எண்ணுகிறேன்

உன் கனிவான தோற்றமே சொல்கிறது நீ தவறின்றி  தவம் செய்தாய் என்று

தூய்மைத்  தவத்தால் கங்கையினும்  பெருமையைத் தந்தைக்குத் தந்தாய்   

தர்மம் அர்த்தம் காமம் இம்மூன்றில் நீ போற்றிய தர்மமே மிகச் சிறந்தது

உன் கனிவான பண்பைப்   போற்றுகிறேன் என்னை நண்பராக ஏற்றுக்கொள் 

நட்பு  முறையில்  ஒன்று கேட்க விழைகிறேன் விருப்பமிருந்தால் பதில் கூறு

நற்குடி , செல்வம், இளமை எல்லாம்  இருக்க ஏன் இப்படித் தவம் புரிகின்றாய்

கடுந்துயர்  நீங்க கடுந்தவம் புரிவர், துயர் வர உனக்கு  வாய்ப்பேயில்லை 

இமவான் இருக்க யார் உனைப் பழிக்க இயலும்? தவத்தின் காரணம் யாதோ?

இரவுப்பெண் போன்ற நீ ஆபரணம் இன்றி  மரவுரி தரித்து இருப்பது முறையா

நீயே ரத்தினம் போன்றவள் கணவனுக்காக தவமியற்றவும் தேவையில்லை

கணவனுக்கான தவமென முகமே சொல்கிறது, உனை மறுப்பவன் எவன்   

உன் அழகு முகத்தைச்  சடைகள் மறைத்தும்  வராத கடினசித்தன்  யாரோ 

உடல் மெலிய முகம் வாட தவம் புரியும் உனைக் காண வராதவன் எவன்?     

நீ விரும்பிய அந்தக்  கர்வி இன்னும் வராதது  நஷ்டம் அவனதன்றி உனதல்ல  

விரும்பும் கணவனை அடைய தவப்பலன் தருகிறேன் யாரவன் என்று சொல்

 

அறியாதது போல வந்தவர் கேட்டிட பார்வதி வெட்கித் தோழியை நோக்கினள்

தோழியும் பார்வதி உடலை வருத்தித் தவம் புரிவதன் காரணம் விளக்கினள்

 

அழகில் மயங்காத  சிவபிரானைத்  தவத்தால் அடைய விழைகின்றாள் 

மதனின் பாணம்  அவனையே எரித்தாலும் பார்வதி மனதில் ஆழத் தைத்தது   

அளவிலாக் காதல் சிவனிடம் பெருகிட  அவளுடல் அனலாய்க் கொதித்தது   

சிவனை நினத்து உருகும்  அவளைக் கண்ட தோழியர் கலங்கித் தவித்தனர்

கனவிலும் நனவிலும் சிவனையே எண்ணி  உறக்கம்தன்னை   துறந்தனள்

மனதில்  இருக்கும் எம்பிரான் காதலை ஏன் ஏற்கவில்லை எனத் தவிப்பாள்

பற்பல உபாயம் யோசித்து தவமே நல்வழி எனஎண்ணி இவ்வனம் வந்தனள்

அவளிட்ட செடிகள் மரமென துளிர்த்திடஅவள்காதல் எப்போது துளிர்க்கும்?

தவத்தில் வாடித் தவிக்கும் இவளுக்கு சிவபிரான் அருள் எப்போது கிட்டும்?  

 

உவகை கொண்ட பிரானும் ‘தோழி உரைத்தது உண்மையோ’ என வினவினர்

மலர்க்கரம் குவித்து வணங்கிய பார்வதி செவ்விதழ் திறந்து பேசலானாள் 

‘தோழியுரைத்தது உண்மையே! சிவனை அடையவே இத்தவம் ‘ என்றனள்

 

வந்திருந்த வணங்கா சடாமுடியர் பார்வதியிடம் மேலும் பேசலானார்

“பெண்ணே! உன் அழகை அலட்சியம் செய்த சிவனை விரும்புதல் முறையோ

பாம்பைச் சுற்றிய அவன் கரம் நின் மங்களக் கரத்தைப் பற்றுவது சரியா?

யானத்தோலுக்கும் வெண்பட்டிற்கும் பொருத்தம் எங்கேனும் உண்டோ?

உன்மலர்ப்பாதம் சுடுகாட்டின் கடுந்தரையில்  பதிவதை யார் பொறுப்பர்?

அவன் மேனிச் சாம்பல் உன் சந்தன மார்பில் படிவது தகாத செயலான்றோ?

மணவிழாவில் எருதின்மேல் நீவிர் ஊர்கோலம் சென்றால் ஊர் சிரிக்காதோ?

சிவனை அடைந்த சந்திரன் கலை இழந்தான்  நீயும் களை இழக்க சம்மதமா?   

அழகு, நற்குடி,செல்வம் இவைஏதுமில்லா சிவன் உனக்கு ஏற்றவன் அல்லன்

யாக பூஜையை மயானத்தில் செய்வது போன்ற  தகாத ஆசையை விட்டுவிடு!

 

அதிதி சொல் கேட்ட பார்வதி உதடுதுடிக்க கண்சிவக்க பதிலுரைத்தாள்

 

“ சிவபிரானின் அருமை பெருமை தெரியாத மூடரே அவரை நிந்திப்பர்    

 உலகைக் காக்கும் ஈசன் அவருக்கு எப் பொருளாலும் பயனில்லை

 பாம்பணி ஆயினும் சாந்தஸ்வரூபன் அள்ளிக் கொடுக்கும் வள்ளள் பிரான்

 உலகே உடலாய் அமைந்த சர்வேஸ்வரன் எவராலும்  அறியப்படாதவர்     

 அவர் உடல் பட்ட சுடுகாட்டுச் சாம்பலைத் தேவரும் சிரசில் கொள்வர்

யானை ஏறும் இந்திரனும் எருதில் பவனி வரும் சிவனின் பாதம் பணிவன்

பிறப்பில்லை என்ற  சொல் உண்மையுடைத்து ஆதி அந்தமில்லாதவர் அவர்

 உமது கூற்று சரியோ தவறோ பொருட்டில்லை, என்மனம் அவரையே நாடும்

தோழி, இவர் சொன்னது சொல்லவிழைவது எதுவும்எனக்குத் தேவையில்லை”   

 

கோபித்த பார்வதியை  சிவவடிவு காட்டி நகைமுகத்துடன் கரம் பற்றினார்

வெட்கமும் அச்சமும் சேர  பார்வதி மலையைச் சேர்ந்த நதிபோல் நின்றாள்

‘தவம் செய்து எனை அடைந்தாய், நான் உன் அடிமை’ என சிவபிரான் கூற

பெறர்க்கரிய பேறு பெற்ற பார்வதி செய்தவத்தின் பலன் முழுதும் பெற்றாள்  

இளநீர் – தீபா மகேஷ்.

பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக் கட்டுரை | வினவு

 

சித்திரை மாதத்து வெயிலின் உக்கிரம் அந்த ஞாயிறு பிற்பகல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

ஒரு வாரம் அலுவலக வேலையாய் வெளிநாடு சென்று விட்டு அன்று அதிகாலைதான் சென்னை திரும்பியிருந்தேன். அதனாலேயே என்னவோ வெய்யில் அதிகமாக இருப்பது போல தோன்றியது.

அந்த பயணத்தின் அலுப்பும், அசதியும் உடலில் இன்னும் நிறைய மிச்சம் இருந்தது. கண்களில் கூட லேசான எரிச்சல்.

வந்தவுடன் ஒரு நல்லெண்ணைக் குளியல் போட்டிருக்கலாம். சோம்பேறித்தனம்.

கண்டிப்பாக இன்று இளநீராவது குடிக்க வேண்டும்.

நான் ஒரு இளநீர் பைத்தியம். எல்லாருக்கும் ஏதாவது ஒரு பொருளின் மேல் இருக்கும் பற்றும் பைத்தியமும் எனக்கு இளநீர் மேல்.

மழை நாட்கள், குளிர் காலம் (அது எங்கு சென்னையில் இருக்கிறது?) தவிர, நான் சென்னையில் இருக்கும் பெரும்பாலான நாட்களில் இளநீர் குடிக்கத் தவறியது இல்லை.

கோடைக் காலம் என்றால் கேட்கவே வேண்டாம். தினம் ரெண்டு இளநீராவது குடித்து விடுவேன்.

எனக்கு நினைவு தெரிந்து முதலில் இளநீர் குடித்தது ஸ்கூல் படிக்கும் போதுதான். அப்போது எனக்கு மஞ்சள் காமலை வந்திருந்தது. தினமும் காலையில் அப்பா என்னை தி நகரில் இருக்கும் டாக்டரிடம் மருந்து சாப்பிட அழைத்துப் போவார்.

கசப்பான அந்த கஷாயத்தை குடித்து விட்டு திரும்பும்போது, என்னை சமாதானம் செய்யும் விதமாக பனகல் பார்க் அருகில் இருக்கும் இளநீர்க்காரனிடம் தினமும் இளநீர் வாங்கித் தருவார்.

“தண்ணி காயா ரெண்டு இளநீர் குடுப்பா”, என்று கேட்டு, ஒன்றை எனக்கு வெட்டி தரச் சொல்வார். நான் மிகுந்த ஆவலோடு அவன் அதை வெட்டுவதையே பார்த்துக் கொண்டிருப்பேன். அவன் காயின் மேல் பாகத்தை சீவி அதில் ஒரு ஸ்ட்ரா போட்டுத் தரும் போது ஏதோ ஆஸ்கார் அவார்ட் வாங்குவது போல நான் கை நீட்டுவேன். அந்த இளநீர் பூராவும் எனக்குத் தான் என்பதில் எனக்கு அலாதி சந்தோஷம்.

“இளநீர் உடம்புக்கு ரொம்ப நல்லதுமா. ரத்தத்த சுத்தம் பண்ணும். உடம்ப குளிர்ச்சியாக்கும்”, என்று அவருக்குத் தெரிந்த இயற்கை மருத்துவத்தை சொல்லுவார். எனக்கு அதைப் பற்றி எல்லாம் பெரிதாக அக்கறை இல்லை. ஆனால், இளநீர் நீரின் சுவை தொண்டை வழியே உள்ளே போக உடம்பெல்லாம் ஒரு புத்துணர்ச்சி பரவுவது போல தோன்றும்.

வீட்டில் உள்ள மற்ற எல்லாருக்கும் அந்த இன்னொரு காயில் இருக்கும் தண்ணீர் தான், பாவம், என்று நினைத்துக் கொள்வேன்.

இளநீரை பாட்டிலில் வாங்கி வந்து ஃப்ரிட்ஜ்ல் வைத்துக் குடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கா போன போது அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ‘கோகநட் வாட்டர்’ என்று அழகாக பேக் செய்து வைத்திருந்தார்கள். ஏன் நம் ஊரில் கூட இப்போது இளநீர் பேக் செய்து பாட்டிலில் வந்து விட்டது. ஆனால், ஏனோ அதை வாங்க மனம் ஒப்பவில்லை.

பாண்டி காய், பொள்ளாச்சி காய், செவ்வெளநீர் என்று நமக்கு இப்போது ‘சாய்ஸ்’ அதிகம். மேலும், நம் ஊரில் இளநீர் வாங்கி குடிப்பதே ஒரு தனி அனுபவம்.

“நல்ல தண்ணி காயா லேசா வழுக்கையோட குடுங்க,” என்று கேட்டு வாங்கி, கடைக்காரர் அதை அழகாக மேல் பக்கம் சீவி, லாவகமாக நடுவில் நெம்பி துளை போட்டுத் தரும் அழகை ரசித்துக் குடிக்க வேண்டும்.

நான் இளநீர் ஸ்ட்ரா போட்டு குடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டது. ஸ்ட்ரா ப்ளாஸ்டிக் பொருள், சுகாதாரம் கிடையாது என்று காரணம் எல்லாம் தாண்டி, இளநீரை இரு கைகளில் பிடித்து, அதன் வாயோடு வாய் வைத்து, கடைசி சொட்டு வரை ரசித்துக் குடிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது.

இளநீர் கனவில் மூழ்கி இருந்தவளுக்குத் தாகம் அதிகமாகி எடுத்து ஏதாவது குடித்தால் தேவலை என்று தோன்றியது.

ஜில்லென்று கொஞ்சம் பானைத் தண்ணீர் குடித்தேன்.

டீ வி பார்த்துக் கொண்டிருந்த மகனிடம், ‘டேய், அம்மாக்கு இளநீர் வாங்கிட்டு வாடா’ என்றேன்.

அட போம்மா, உனக்கு வேற வேலை இல்லை என்பது போல என்னைப் பார்த்தான். ‘என்னால போக முடியாது, அப்பாவ போக சொல்லு,’ என்று அவரைக் கோர்த்து விட்டான்.

இதுதான் பிள்ளைகளின் சாமர்த்தியம். அவர் பாவமாக என்னைப் பார்த்தார்.

“கொஞ்ச நேரம் கழிச்சு டூ வீலெர்ல போய்ட்டு வரலாம்.  இப்ப வேணாம். ரொம்ப வெயிலா இருக்கு,” என்றார்.

இது நடக்கும் கதையாக எனக்குத் தோன்றவில்லை. ‘தெருமுனைதானே, நானே நடந்து போய் குடிச்சிட்டு வரேன்’, என்று வீம்பாக கிளம்பினேன்.

தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததும் வெயில் கொஞ்சம் குறைந்திருப்பது போல தோன்றியது. காற்று கூட கொஞ்சம் அடித்தது.

நிழலில் நிறுத்தியிருந்த கார்களையும் என்னையும் தவிர தெரு வெறிச்சோடி இருந்தது.

எங்கள் தெருவின் இரு பக்கமும் நெடிந்து வளர்ந்து கிளை பரப்பியிருந்த குல்மொஹர் மரங்கள், சாலை முழுதும் மஞ்சள் பூக்களை இறைத்திருந்தன.

அவற்றை மிதிக்க மனமில்லாமல் சாலையின் நடுவில் நடந்தேன்.

தெரு முனையை நெருங்கும் போதே ஏமாற்றம் காத்திருந்தது.

எப்போதும் இருக்கும் இளநீர் வண்டி அங்கில்லை.

ஞாயிற்று கிழமை கூட இருப்பானே, ஏன் காணோம்? ஊருக்குப் போயிருப்பானோ? அவன் ஊரில் இல்லை என்று இவருக்கு முன்னாடியே தெரியுமோ? அதனால்தான் டூ வீலர்ல போலாம்னு சொன்னாரோ? என்றெல்லாம் யோசித்தபடி எனது அவசர குடுக்கைத்தனத்தை நானே திட்டிக் கொண்டேன்.

ஆனாலும் ‘இளநீர் தாகம்’ விடுவதாய் இல்லை. என்ன ஆனாலும் சரி. எவ்வளவு தூரம் நடந்தாலும் சரி. இன்று இளநீர் குடித்துவிட்டுதான் மறுவேலை, என்று முடிவு செய்துக் கொண்டேன்.

மெயின் ரோடில் கோயில் எதிரே ஒரு இளநீர்கடைக்காரர் இருப்பது நினைவுக்கு வந்தது.

இன்னும் கொஞ்சம் நடந்தால் அங்கே போய் குடிக்கலாம் என்று என்னை நானே உற்சாகப்படுத்திக் கொண்டு மறுபடியும் நடக்கத் தொடங்கினேன்.

மெயின் ரோடில் வெய்யில் அதிகமாகத் தெரிந்தது. வாகனத்தில் போய் பழக்கப்பட்ட அந்த ரோடில் நடக்கும் போது ரொம்ப தூரம் நடப்பது போல் தோன்றியது.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் இது என்ன முட்டாள்த்தனமான பிடிவாதம் என்று தோன்ற ஆரம்பித்தது.

ஒரு வேளை அந்த கடையும் இல்லை என்றால்? இந்த வெய்யிலில் இவ்வளவு தூரம் நடப்பது ரொம்ப அவசியமா, அதுவும் ஊரிலிருந்து வந்தவுடனே? ஒரு நாள் இளநீர் குடிக்காவிட்டால் என்ன ஆகிவிடும்? என்றெல்லாம் என் சுய விமர்சனம் தொடர்ந்தது.

நல்ல வேளை தூரத்தில் கோவிலுக்கு எதிரே ஒரு பெரிய மரத்தின் நிழலில் இளநீர்க் கடை இருப்பது தெரிந்தது.

சட்டென்று நடையில் ஒரு சுறுசூறுப்பும் உற்சாகமும் வந்து ஒட்டிக்கொண்டன.  

ஒரு பெரிய தள்ளுவண்டி முழுதும் பெரிதும் சிறிதுமாய் காய்கள். வண்டிக்கு அருகில் ஒரு ப்ளாஸ்டிக் சேரில் கடைக்காரர்.

ஒரு அழுக்கான கரையேறிய லுங்கியில் தன்னுடைய பருத்த சரீரத்தை மறைத்திருந்தார். அவரது கண்கள் மூடி, வாய் லேசாக திறந்திருந்தது. நல்ல தூக்கத்தில் இருந்தார்.

அவர் மூச்சின் சீரான தாளத்திற்கேற்ப அவரது வயிறு மேலும் கீழும் ஏறி இறங்கியது.

வெப்பமோ, வாகனங்களின் இரைச்சலோ அவரை தொந்திரவு செய்ததாக தெரியவில்லை.

ஐயா என்று அழைத்து அவரை எழுப்பலாமா என்று தோன்றிய யோசைனையை சட்டென்று மாற்றிக் கொண்டேன்.

இந்த வெயிலில், சத்தத்தில் இப்படி தூங்குகிறார் என்றால் எவ்வளவு களைப்பு இருக்க வேண்டும். பாவம் என்ன அசதியோ, இரவு தூங்காமல் வேலைப் பார்த்தாரோ என்னவோ? யாருக்குத் தெரியும் இவர்களுடைய உழைப்பும், வாழ்க்கையும்?

என் மனம் தனக்குத் தெரிந்த விதத்தில் அவருடைய வாழ்க்கையைக் கற்பனை செய்து கொண்டது.

அவர் நிம்மதியாக தூங்குவதைப் பார்த்து ரசித்தபடியே, இளநீர் குடித்தத் திருப்தியோடு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

 

மெய்நிகர் புத்தகக் கண்காட்சி

கொரானா காலத்தில்  புத்தகக் கண்காட்சி ! 

நடத்த முடியுமா? 

திரை  அரங்குகளைத் திறக்கவே உன்னைப் பிடி என்னைப் பிடி என்றிருக்கும் இந்தக் காலத்தில் திமு திமு என்று ஆட்கள் குவியும் புத்தகக் கண்காட்சியை  எப்படி நடத்துவது ? 

மக்கள் எப்படி வருவார்கள்? 

அரசு அனுமதி வழங்குமா? 

வழங்கும் !

காரணம் இது  மெய் நிகர் புத்தகக் கண்காட்சி ! 

VIRTUAL BOOK FAIR  !!!!

 

 

இதைக் கொண்டுவருபவர்கள் 

மற்றும் பலர்! 

இந்த மெய் நிகர் கண்காட்சி எவ்வாறு செயல்படப்போகிறது என்ற ஒரு கருத்துப் பறிமாற்றத்திற்கு செப்டம்பர் 26 அன்று நமது குவிகம் சார்பில் ஏற்பாடு செய்தோம். 

சிக்ஸ்த் சென்ஸ் புகழேந்தியும் அவரது புதல்வர் கார்த்திகேயனும் கலந்துகொண்டு இணையம் மூலம் எப்படி  இந்தப் புத்தகக் கண்காட்சி செயல்படும் என்பது பற்றி  ZOOM மூலம் விளக்கினார்கள் ! 

அமேசான் போன்ற மின்வணிக இணைய தளங்களில் புத்தகங்களை விற்பதில் பலவித பிரச்சினைகள் இருப்பதாக புதிப்பாளர்கள் கருதுகிறார்கள்.  அதில் குறைந்த விலை உள்ள புத்தகங்களைப் பதிவு செய்து விற்றால் நஷ்டம்தான் வரும்.   மேலும்  விற்பனைத்தொகை உடனே வராது.

புத்தகக் காட்சிக்குச் செல்ல இயலாதவர்கள், பல்வேறு காரணங்களால் அதைத் தவறவிட்டவர்கள் எதிர்காலத்தில் இந்த வசதியை அதிகம் பயன்படுத்திக் கொள்வார்கள்.

 இருந்த இடத்திலிருந்தே அவர்கள் புத்தகங்களை வாங்க இந்த ஏற்பாடு வசதியாக இருக்கும்.

வருடத்தின் 365 நாட்களிலும் ஒரு நாளின் 24 மணி நேரமும் இது செயல்பாட்டில் இருக்கும் என்பதால் எப்போது நினைத்தாலும் புத்தகங்களை வாங்கலாம்.

பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை இந்தத்  தளத்தில் விற்க 10 புத்தகங்களுக்கு 3000 ரூபாய் செலுத்தவேண்டும். 1500 புத்தகங்களுக்கு 50000  ரூபாய் செலுத்தவேண்டும்.   

மெய்நிகர் புத்தகக் காட்சியில் அச்சுப் புத்தகம், மின் புத்தகம், ஒலிப் புத்தகம் என்று முழுவதுமே புத்தகம் விற்பனை மட்டுமே நடைபெறும். அதைப் பற்றிய செய்திகள் மட்டுமே இடம்பெறும். அதனால் புத்தக விற்பனை அதிக அளவில் நடைபெறும்

பதிப்பாளர், விற்பனையாளர், வாசகர் இவர்களுக்குப் பாலமாக இந்த அமைப்பு இருக்கும்.

இதில் பங்கேற்கும் அனைவருக்குமே தனைத்தனியாக வலைதளங்கள் இருக்கும். புத்தகங்கள் விற்ற தொகை அவரவர் வங்கிக் கணக்கிற்கு உடனே போய்ச் சேர்ந்துவிடும். அதற்குத் தேவையான கட்டண நுழைவு வாயில் வசதி (payment gateway option) ஒருங்கிணைப்பு (integration) இருக்கும்.

கொரானாப் பெருந்தொற்று காலத்தில் முன்னைவிட இணையம் வழியாகப் புத்தகங்கள் வாங்கும் பழக்கம் கணிசமான அளவு அதிகரித்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. வருங்காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்பதால் அந்த வாய்ப்பை அனைவரும்  பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக வாசிப்புத் தளத்தை விரிவாக்குவதுதான் இதன்  முதன்மை நோக்கம்.

மெய்நிகர் புத்தகக் கண்காட்சி  அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள் !

கீழ்க்கண்ட சுட்டியில் மெய்நிகர் புத்தகக்காட்சி குறித்த அனைத்து தகவல்களையும் பதிவேற்றப்பட்டுள்ளன. 

 http://thevirtualbookfair.com/

1) Technical Advantages :
http://thevirtualbookfair.com/adv-tam.html
http://thevirtualbookfair.com/adv-eng.html

2) Trade Benefits :
http://thevirtualbookfair.com/beni-tam.html
http://thevirtualbookfair.com/beni-eng.html

3)Subscriber Guidelines :
http://thevirtualbookfair.com/subs-tam.html
http://thevirtualbookfair.com/subs-eng.html

4)FAQs:
http://thevirtualbookfair.com/faq-tam.html
http://thevirtualbookfair.com/faq-eng.html

மூன்று கவிதைகள் – பானுமதி.ந

ராகு செவ்வாய் பலம் சேர எளிய பரிகாரம் - குமுதம் செய்தி தமிழ்

 

பட்டம்

இராகு பிடித்தது என் விண்மீனை
பனைஒலைப் பட்டம் கட்டி விரதமிருந்த
சிறு வயதில் ஆதவன் வெளி வரும் வரை
அத்தனை யம பயம்
வரவேற்கக் காத்திருக்கிறேன்
பின்னவரை இன்றும் கூட
என் விண்மீனில் தானாம்
பட்டம் கட்டாத படபடப்புடன்.
வழி பாத்திருக்கும் மணமகள்

 

நளன் - தமிழ் விக்கிப்பீடியா

 

தன் நலன்

பாதி கிழித்துப் போனான்.
மீதி வாழ்வில் என்னைக்
கோர்த்து தாய்வீடு அனுப்பிய
தயாளன்,முழுதும் கொடுத்திருப்பேன்
கேட்டிருந்தால் அவன் முன்பு கொண்டிருந்த
அன்பையே ஆடையென்றணிந்து
அவனை நள(ல)ன் என்காதீர்கள் இனியும்.

 

 

 

 

மாற்றம்

தீபச் சுடரொளி என தென் கிழக்கிலிருந்து
மிதந்து வந்த அந்த வான் தூதுவன்
திசை மாறி வட மேற்காய் சிவப்பு ஒளியில்
அலுமினிய வான் கோள் சொன்ன சேதி ஒன்று
வழிகாட்டியை மாற்றியவன் அந்த வித்தகன்.

கம்பன் சொல்லும் கதை ( இராமன் – பரசுராமர்) – கவி அமுதன்

 

ராமாயணம் – 1. பால காண்டம் – சரவணன் அன்பே சிவம்

கம்பன் சொல்லும் கதை

 கவிஅமுதன்

பரசுராமன் – இராமன் :

முன்கதை:

பரசுராமன் – இராமன் இருவருமே விஷ்ணுவின் அவதாரங்கள்.
இருவரும் ஒரே இடத்தில் சந்தித்தால்?
வால்மீகி – கம்பர் இந்தக் காட்சியை நமக்கு கதையாக்கியுள்ளனர்.
இராமன் – சீதை திருமணம் முடிந்து அவர்கள் மிதிலையிலிருந்து அயோத்தி வருகிறார்கள். தசரதனும் கூட வருகின்றார். வழியில், பரசுராமன் வருகிறார்.
பயங்கரமான அவர் வரவை கம்பர் ஒன்பது பாடல்களில் வர்ணிக்கிறார்.
பரசுராமன் வரவு கண்டு தசரதன் சோர்கிரான்.
இராமன் வினவுகிறான்:
‘யாரோ? இவர் யாரோ?’?
தசரதன் பரசுராமருக்குப் பூசை செய்து வணங்குகிறான்.
முனிவன் (பரசுராமன்) முனிந்திட்டான், சினந்திட்டான்.
இராமனைப் பார்த்து: ‘மிதிலையில் நீ செய்தவற்றைக் கேட்டு அறிந்தேன்.
உன் தோள் வலி காணவே வந்தேன். வேறு ஒன்றும் விஷயம் இல்லை”- என்கிறார்.
தசரதன் அபயம் வேண்டுகிறார்.
‘என் மகன் சிறியவன். விட்டு விடுங்கள்’ – கெஞ்சுகிறார்..

பரசுராமன் தசரதனை லட்சியம் செய்யாமல், இராமனைப் பார்த்து: ‘என்னிடம் இருக்கும் இந்த வில், நீ மிதிலையில் ஒடித்த வில்லுக்கு சமானமானது. இது என் தந்தை ஜமதக்கினிக்கு, மகாவிஷ்ணு அளித்தது. இதை வளைத்து நாணேற்றுவாய். அம்பும் தருகிறேன். இதை செய்வாயேல் பிறகு நாம் யுத்தம் செய்யத் தொடங்கலாம் – வல்லையேல் என வில்லை வளை”
கம்பன் வார்த்தைகளில்: –“வல்லை ஆகின , வாங்குதி. தனுவை’.

அதாவது, என்னுடன் யுத்தம் செய்ய உனக்குத் தகுதி இருக்கிறதா என்று முதலில் பார்க்கலாம் என்கிறார்.

கம்பர் வரிகளில்:
‘இராமனும் முறுவல் எய்தி, நன்று ஒளிர் முகத்தான் ஆகி.
“நாரணன் வலியின் ஆண்ட வென்றி வில் தருக”’  

தோளுற அந்த வில்லை வாங்கி சொல்லும்
இராமன் சொல்வதை – கம்பர் கவிக்கிறார்.

‘பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும் 
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ; விரதம் பூண்டாய்.
ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது அன்றால்,
யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புது விரைவின்!’என்றான்

அதாவது:
மண்ணில் உள்ள மன்னர்களை கொன்று குவித்தீர்.
தங்கள் தந்தை கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கினீர்.
அதைக் குற்றம் என்று சொல்லலாகாது.
ஆனால்.. என்னிடம் அம்பைக் கொடுத்தீர்.
வம்பை வாங்கினீர்.
இது வம்போ? அன்றி வீம்போ? நானறியேன்!
ஆயினும், உங்கள் ஆசைப்படி, இப்பொழுது இதை நாணேற்றி விட்டேன்.
இந்த அம்பு வீணாகலாகாதே!.
எந்த இலக்கை நோக்கி இந்த அம்பைச் செலுத்துவது?
இதற்கு பதிலை, விரைந்து சொல்வீரே!

இராமனுக்கே என்ன பிரச்சினை என்றால்:
அம்பு தொடுத்த பின் – அதை எய்யாமல் இருக்க இயலாது. மேலும் அம்பைத் தொடுத்தபின் உடனே எய்தாயாக வேண்டும். தாமதம் தகாது. அதனால் அந்த வார்த்தைகளைக் கூறினான்.

இராமன் வில்லை வளைத்ததும் பரசுராமனரது தேஜஸ் வாடியது.
அவரது அவதார சக்தியும் மறைந்ததாம். இராமனைப் பற்றி அவருக்கு எல்லாம் விளங்கிவிட்டது. இராமனைப் பார்த்து கூறுகிறார்:

கம்பன் வரிகள்:

‘எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!’ என
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே

இதன் கருத்து:
பரசுராமர்: நான் பெற்ற தவம் அனைத்தும் அழிய உனது அம்பை விடுவாயாக. அது கேட்டு, இராமன் வில்லில் இருந்து அந்தக் கணை புறப்பட்டு பரசுராமர் தவத்தை எல்லாம் வாரி- திரும்பியது.

பரசுராமன்: ‘எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக’. என்று இராமனை வாழ்த்தி விடை பெறுகிறான்.

பின்கதை:

இராமன் தந்தையைத் தொழுது அவர் துயர் போக்கினான்.
தசரதன் மகிழ்ந்து மகனை உச்சி மோந்தான்.
தேவர் மலர்மழை பொழிய, வருணனிடம் பரசுராமன் வில்லை சேமிக்கக் கொடுத்து விட்டு அயோத்திக்கு சென்றடைகின்றனர்.

யாம் ரசித்த இந்த கம்பன் கதையை யாவரும் ரசிப்போமே!

 

 

 

குவிகம் இலக்கியவாசல்

குவிகம் பற்றி சக பத்திரிகையாளர் விமர்சனம்:  

குவிகம் புதிய இதழில்  சில படைப்புகள் வாசித்தேன்
பெண்ணியம் பேசும் கவிதை மிக யதார்த்தம்
குண்டலகேசியை தில்லைவேந்தன் சிறப்பாகப் படம்பிடிக்கிறார்.
தாகூரின் நாட்டிய வழிபாடு மற்றும் ஆதிசங்கரர் பற்றிய கட்டுரைகள் புதிய செய்திகளைச் சொல்கின்றன.
108 வடைகள் கதைபோலில்லை. சொந்த அனுபவமாக மிளிர்கிறது.
ஆல்பம் ரேவதி ராமச்சந்திரன் சிறுகதையின் முடிவில் சேட்ஜின் மரணம் நெஞ்சைப் பிழிகிறது

வளவதுரையன் 

 

 

 

 

 

குவிகம் பொக்கிஷம் – துறவு – சம்பந்தன் (திருஞானசம்பந்தன்)

கலைமகள், வைகாசி 1943.

நன்றி- சுருதி வலைப்பக்கம்

Posted by என் செல்வராஜ் at 20:16:00

ஈழத்தில் போற்றுதலுக்குறிய எழுத்தாளர்களில் சம்மந்தன் என்கிற திருஞான சம்மந்தனும் ஒருவர். (1913-95)

சம்பந்தனின் முதலாவது சிறுகதை தாராபாய் 1938 ஆம் ஆண்டில் கலைமகளில் வெளிவந்தது. இவரது 11 சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்துள்ளன.[ இது தவிர மறுமலர்ச்சி, கலைச்செல்வி, கிராம ஊழியன், ஈழகேசரி ஆகிய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 1966 ஆகத்து மாத விவேகி இதழ் “சம்பந்தன் சிறுகதை மலராக” அவரது ஐந்து சிறுதைகளைத் தாங்கி வெளிவந்தது. இலங்கை இலக்கியப் பேரவை 1998 ஆம் ஆண்டில் சம்பந்தன் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுதியில் 10 சிறுகதைகள் அடங்கியிருந்தன.

1960களில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1963 ஆம் ஆண்டில் இவர் எழுதத் தயாராக வைத்திருந்த சாகுந்தல காவியம் 1987 ஆம் ஆண்டிலேயே நூலாக வெளிவந்தது. கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் இந்நூலுக்கு அணிந்துரையும், பண்டிதமணி ஆசியுரையும் வழங்கியிருந்தனர்.

1990 ஆம் ஆண்டில் இலண்டனுக்குப் புலம்பெயர்ந்து சென்றார். அங்கிருந்து அவர் எழுதிய பாவிய மகளிர் எழுவர் பற்றிய நூல் தர்மவதிகள் என்ற தலைப்பில் அவர் இறந்த பின்னர் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அணிந்துரை வழங்கியிருந்தார்.

சம்பந்தனின் நினைவாக ஆண்டுதோறும் “சம்பந்தன் விருது” எனும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

 

 

சுருதி : எனக்குப் பிடித்த சிறுகதைகள் (7)

 

அவர் நிமிர்ந்திருந்தார். அவருக்குப் பின்புறமாகச் சற்று விலகி அந்தப் பாலசந்நியாசி உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் நின்ற ஆலமரம் வானத்தை மறைப்பது போல எங்கும் பரந்து வளர்ந்து கிடந்தது. சற்றுத் தொலைவில், அவர்களுக்கு எதிரில் நெருப்பு ஒரு மனித உடலைக் கழுவித் துடைத்து உண்டுகொண்டிருந்தது. அப்படி எரிந்துகொண்டிருந்த நெருப்பின் ஒளி வெகுதூரம் வரைக்கும் இருளைத் துரத்தி விரட்டியது. பிரமாண்டமான அந்த ஆலின் விழுதுகளின் நிழலும் அடிமரத்தின் நிழலும் பூதாகாரமாக எதிர்த்திசையில் படுத்துக் கிடந்தன.

இரண்டொரு நரை கண்ட பெரியவரின் கம்பீரமான முகமும், அடர்ந்து கறுத்த ரோமங்கள் பிரகாசிக்கும் இளையவரின் ஒளி நிறைந்த முகமும் தெளிவாகத் தெரிந்தன. பெரியவர் கண்களைப் பாதி மூடியபடி இருந்தார். மற்றவரோ அகல விழித்தபடி எதையோ கவனித்துக் கொண்டிருந்தார்.

எங்கும் நிசப்தம் நிலவியது. மரணத்தின் நிழல் படிந்த நிசப்தம் அது. அக்கினி அந்த உடலுடன் விறகையும் சேர்த்துத் துடைப்பதனால் உண்டான சப்தங்கள், அங்கே நிலவிய அமைதியை இடையிடையே மாசுபடுத்திக் கொண்டிருந்தன.

வாழுகிற மனிதனால் பெரிதும் அஞ்சி வெறுக்கப்படுகிற, கடைசியில் அவனுக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் செய்கிற இடம் அது. வேறுவகையில், அளவில், நிலையில், இன்பதுன்பங்களை மாறி மாறி அனுபவித்த தசை, நரம்பு, எலும்பு முதலிய எல்லாமே துகளாகி அந்த மண்ணின் உருவை ஏற்றுக் கொண்டு தாமும் அதுவாகி ஐக்கியமாகிவிட்டன.

ஒரு காலத்தில் யாரோ இரண்டு பகையரசர்களின் படைகள் ஒன்றோடொன்று மோதி நிர்மூலமான இடமும் அதுதானாம். அகால வேளைகளில் குதிரைகள் ஓடுகிற, கனைக்கிற, சத்தங்கள். யானைகள் பிளிறுகிற பேரொலிகள். வெட்டு, குத்து, கொல்லு என்ற இரக்கமற்ற குரல்கள், வேதனை தோய்ந்த மரண தாகத்தில் எழுகின்ற சோகமயமான ஓலங்கள் எல்லாம் கலந்து கேட்கும் என்று சொல்லுகிறார்கள்.

அது மயானம், இடுகாடும் சேர்ந்த மயானம். பேய்கள் தங்கள் விருப்பம்போல் விளையாடி மகிழும் இடம். எங்கே திரும்பினாலும் நிர்மானுஷ்யத்தின் சுவடுகள் தெரிந்தன.

பெரியவர் கண்களைத் திறந்து உற்றுப் பார்த்தார். எதிரில் அந்த உடல் கருகிச் சுருண்டு வெடித்து எரிந்து கொண்டிருந்தது. தீக்கொழுந்து எழுந்தும் அடங்கியும் வளைந்தும் நெளிந்தும் வேறு வேறு திசைகளில் குதித்தும் காற்றுடன் சேர்ந்து தானும் விளையாடியது.

திடீரென்று மேலே உறங்கிக் கிடந்த பறவைகளின் அவலக் குரல்கள் எழுந்தன. கூகை ஒன்று, எங்கிருந்தோ வந்து கொத்தியும் கிழித்தும் அவற்றைக் கொன்று தள்ளியது. அபாயத்தை எதிர்பார்த்திராத அந்த ஏழைப்பறவைகள் செயலற்று ஒவ்வொன்றாகக் கீழே விழுந்தன. யமனாகி வந்த கூகை அங்கிருந்து பறந்து சென்ற பிறகும், வெகுநேரம் வரைக்கும் அந்தப் பறவைகளின் துன்பக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன.

நடுநிசி ஆகிவிட்டது. அதுவரை ஓங்கி எரிந்த நெருப்பு மெல்ல மெல்ல அடங்கித் தழலுருவாயிற்று. மறுபடியும் சப்த நாடிகளையும் ஒடுங்கச் செய்யும் அந்தப் பேயமைதி. சுற்றிலும் இருள் இருளை விழுங்கி அதையே உமிழ ஆரம்பித்தது.

பெரியவர் திரும்பிப் பின்னால் உட்கார்ந்திருந்த இளந்துறவியின் முகத்தைப் பார்த்தார். அவருக்கே அது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த வைராக்கிய புருஷனின் குழந்தை முகம் எதிரில் கிடந்த தழல் போல என்றும் இல்லாத ஒளியுடன் விளங்கியது.

“குழந்தாய்!” என்று அவர் தம்மை மறந்து கூப்பிட்டார்.

இளையவர் எழுந்து முன்னால் வந்தார். பெரியவர் கேட்டார்.
“இங்கே எதைக் காண்கிறாய்?”

சிறிது தாமதித்தே பதில் வந்தது. “கால ருத்திரனது நர்த்தனத்தையே காண்கிறேன், சுவாமி.”

கேட்டவர் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு, இனிப் புறப்படுவோம்” என்று சொல்லிக் கொண்டு எழுந்தார்.

இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். குற்றுயிராய்க் கிடந்த ஏதோ ஒரு பறவையைச் சர்ப்பம் ஒன்று சிரமப்பட்டு விழுங்கியபடியே நகர்ந்து வழிவிட்டது.

கிழக்கிலிருந்து வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்றார்கள். பெரியவர் முன்னாகவே நடந்தார். எங்கும் வளர்ந்து கிடந்த நாணல்கள் அவர்களின் பாதங்களைத் தொட்டுத் தொட்டு மீண்டன. பாதையோ வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. இளையவர் அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தார். அது நிர்மலமாகி ஞானிகளின் மனம்போலத் தெளிந்திருந்தது. கொஞ்சத் தூரம் சென்றதும் பெரியவர் திரும்பி நின்று, “அப்பனே, உனக்குத் தூக்கம் வரவில்லையா?” என்று கேட்டார்.

“இப்பொழுது இல்லை, சுவாமி.”
“பசி?”

“அதுவுமில்லை.”

மறுபடியும் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். இரண்டு நாழிகைத் தூரத்தில் அந்த ஒற்றையடிப்பாதை அகன்ற ஒரு சாலையில் போய் முடிந்தது. அந்தச் சாலையில் ஓரங்களில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன. இடையிடையே மாளிகைகள் போன்ற வீடுகளும் தெரிந்தன.

அவர்கள் நிற்காமலே தொடர்ந்து நடந்தார்கள். “இது எங்கே போகிறது? நாம் எங்கே போகிறோம்?” என்ற விசாரம் அவர்களைத் தொடவில்லை. மேலும் சில நாழிகை தூரம் நடந்து சென்றார்கள். திடீரென்று பெரியவர் வழியை விட்டு இறங்கி ஒரு வீட்டின் முன்புறத்திலே மரமொன்றைச் சுற்றிக் கட்டியிருந்த மேடையை அடைந்து படுத்துக் கொண்டார். மற்றவரும் அவரைத் தொடர்ந்து சென்று அவரது காலடியில் சரிந்தார்.

புலருவதன் முன் இளையவர் எழுந்து உட்கார்ந்தார். மிகச் சமீபமாக யாரோ ஒரு பெண் நிற்பதைக் கண்டதும் அவர் நன்றாக ஊன்றிப் பார்த்தார். வைகறையின் மங்கிய ஒளியிலே அவளது தோற்றம் யாரோ ஓர் அணங்கு நிற்பதுபோல இருந்தது. பிரபஞ்சத்தின் எந்த விசாரமுமே அணுகாத அவரது உள்ளத்தில் அது பெரிய ஆச்சரியத்தையே உண்டுபண்ணியது. அதனால் அவர் அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். கம்பீரமான அவரது தோற்றமும் பால் வடியும் முகமும் அவளையும் தன்னை மறந்த நிலையில் நிற்கச் செய்தன.

அந்தச் சமயத்திலேதான் பெரியவர் கண்களைத் திறந்தார். இந்த எதிர்பாராத காட்சி அவரை அதிரும்படி செய்யாவிட்டாலும் சிந்திக்கத் தூண்டியது. சிறிது நேரம் வரை அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவர், “அப்பனே, இவள் யார்?” என்று கேட்டார். இளையவர் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் திரும்பி நின்று பேசினாள். “சுவாமி, தங்கள் வரம் பெற்றதனால் பெரும் பாக்கியசாலி ஆனவள் இவள்.”

அவர் மெளனமாக இருந்தபடி அவளை உற்றுப் பார்த்தார். அப்போதும் அவளே தொடர்ந்து பேசினாள் : “சுவாமி, எதோ புண்ணியவசத்தால்தான் இங்கே தங்கி இந்த இடத்தைப் புனிதமாக்கிவிட்டீர்கள். கொஞ்சம் எழுந்து உள்ளே வருகிறீர்களா?”

அவள் நிலத்தில் விழுந்து வணங்கினாள். பெரியவர் கையை மேலே தூக்கி உயர்த்தி ஆசீர்வதித்தார். மற்றவரோ சும்மா இருந்தபடியே இருந்தார். அப்போழுது அவள் கண்கள் இருவரையும் மாறி மாறி மன்றாடின.

அவள் யாசித்ததை நிராகரிக்க அவர் விரும்பவில்லை. உடனே எழுந்து அந்த வீட்டை நோக்கி நடந்தார். அவர்கள் உள்ளே நுழையும் முன்பே அவள் ஓடிச் சென்று ஆசனங்களை இழுத்துவிட்டு “உட்காருங்கள்’ என்று வணங்கி நின்றாள். இருந்தவர் மற்றவரையும் உட்காரும்படி சமிக்ஞை செய்துவிட்டு எல்லாப் பக்கங்களையும் ஒருமுறை பார்த்தார். திடீரென்று அவரது முகத்தில் சொல்லமுடியாத ஒருவித வெறுப்பின் நிழல் படிந்தது.

அவள் இதை உணர்ந்ததும் மிகுந்த பண்புடன் பேச ஆரம்பித்தாள் : “சுவாமி பாவிகளுக்கு ஒருநாளும் விமோசனம் கிடைக்காதா?”

இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவர் கருணை நிறைந்த கண்களால் அவளைப் பார்த்து “நீயும் உட்கார்” என்று ஓர் ஆசனத்தைக் காண்பித்தார். அவள் உட்கார விரும்பவில்லை. மேலும் ஒருபுறமாக ஒதுங்கி நின்றாள்.

பெரியவர் பேசினார். “தவறு செய்தவர் தாமாகவே அதை உணர்ந்து பச்சாதாபப்படுவதே மிகச் சிறந்த பிராயச்சித்தமாகும்”

“சுவாமி, என்னைப் போன்றவர்களுக்கும் இந்த விதி பொருந்துமா?”

இப்பொழுது தெளிவான குரலில் அவர் பதில் கேட்டது : “குழந்தாய், உனக்குத்தான் இது முற்றும் பொருந்தும். வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதுமே நிதானமான பாதையில் செல்வதில்லை. மனம் சந்தர்ப்பவசத்தால் பல தடவைகளில் குழியில் தள்ளி விடுகிறது. குழந்தை நடக்கப் பழகும்போது எத்தனை தடவை விழுந்து விழுந்து எழும்புகிறது என்பதை நீ அறியாயா?”

“மறுபடியும் எழுந்திருக்க முடியாதபடி விழுந்துவிட்டால்?” பெருமூச்சின் நடுவே அவள் இப்படிக் கேட்டாள்.

அவர் ஒருமாதிரி சிரித்தபடியே பதில் சொன்னார் : “குழந்தையின் மானிடத் தாய் அல்லவே லோகநாயகி.”

அவள் ஓடிவந்து அவர் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள். மற்றவரோ எல்லாவற்றையும் கவனித்தபடியே பின்னால் உட்கார்ந்திருந்தார்.

பிறகு அவள் பெரியவரையே பார்த்து, “சுவாமி, ஒரு பொழுதுக்காவது இங்கே தங்கிச் செல்லவேண்டும்” என்று வேண்டிக்கொண்டு உள்ளே போனாள். அப்பொழுது அவர் மற்றவரைப் பார்த்துச் சொன்னார் : “அப்பனே, எழுந்திரு. போகவேண்டும்.”

ஒருவர்பின் ஒருவராக அவர்கள் வெளியே சென்றார்கள்.

அவள் ஓடிவந்து பார்த்தபோது அந்தத் தெருவையே கடந்து அவர்கள் மறைந்துவிட்டார்கள்.

எதிர்பாராத வகையில் பெரியவர் வேகமாக நடந்தார். அவரது மனம் நிலைகொள்ளாமல் தடுமாறியது. அந்த நிலையிலும் ‘ஏன் இது?’ என்று தமக்குள்ளே கேட்டுப் பார்த்தார். காரணம் தெரியவில்லை.

“அங்கே நுழைந்தாயே, அதனால்தான்”

இது அவர் உள்ளத்தின் ஒரு கோணத்திலிருந்து எழுந்த குரல்.

“பாவத்தின் பயங்கர அந்தகாரம் சூழ்ந்த இந்த உலகத்தில் அவள் அப்படி ஓர் ஆகாத பண்டமா? உள்ளே இருந்து மற்றொரு குரல் இப்படிக் கேட்டது. பின்னால் தொடர்ந்து வரும் மற்றவரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு அவர் மறுபடியும் முன்போலவே நடக்க ஆரம்பித்தார். இப்படிச் சிக்கலான மனநிலை அவரை முன்னும் சிலசமயங்களில் கலங்கச் செய்ததுண்டு. அப்போதெல்லாம் அதனதற்குரிய காரணங்களை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார். இன்று அது முடியவில்லை. விரும்பி முயன்றும் அது வெளிவர மறுத்தது.

அவர் முகத்தில் இலேசாக வியர்வை அரும்பியது. தமக்குள் பேசிக் கொண்டே நடந்தார். ’இந்த உலகத்திலிருந்து விடுபட்டு வாழ்வில் எத்தனையோ வருஷங்கள் கழிந்துவிட்டன. நித்திரை, உணவு என்ற இன்றியமையாதவற்றையே கட்டுப்படுத்தி மனத்தை மடக்கி வழி நடத்தினார். எத்தனை சோதனைகளைச் செய்து பார்த்தாயிற்று! எல்லாவற்றிலும் சித்தி லேசாகக் கிட்டியது. இன்றோ இது பெரிய புதிராகவே இருக்கிறது. அடிமனத்தில் – எங்கோ ஒரு மூலையில் – என் சக்திக்கு எட்டாத ஆழத்தில் ஏதோ ஒன்று அழுகிக் கிடக்கிறது.’

ஒரு பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்தார். இளையவரது முகம் வழக்கம் போலவே பிரகாசத்துடன் விளங்கியது.

“குழந்தாய்!”

அந்தக் குரலில் அன்பு அமுதாகி கடலாகிப் பொங்கி வழிந்தது.

“சுவாமி!” என்று உடனே பதிலுக்குக் குரல் கொடுத்தார் மற்றவர்.

“களைப்படைந்தாயோ என்று பார்த்தேன். அவ்வளவுதான்”

மறுபடியும் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். அவர்களுக்கு நடுவில் மெளனம் நிலைத்திருந்தது. கொஞ்சதூரம் சென்றதும் தெருவின் ஓரத்தில் நின்ற ஒரு மரத்தின் நிழலில் அவர் போய் உட்கார்ந்தார். இளையவரும் அவரைத் தொடர்ந்து சென்று ஒரு பக்கத்தில் ஒதுங்கினார்.

பெரியவருடைய மனத்தில் மற்றவரைப் பற்றிய நினைவுகள் திடீரென்று முளைத்தன. உடனே அவர் கேட்டார் : “குழந்தாய், நீ என்னை அடைந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?”

“ஆம்” என்று தலையசைத்தார் இளையவர்.

“இதுவும் ஒருவகையில் நம்மைப் பாதிக்கக்கூடிய பந்தம் தானே? இதை நீ உணரவில்லையா?”

மற்றவர் பதில் இன்றி மெளனத்தில் மூழ்கியிருந்தார்.

“உனக்குப் பக்குவ நிலை கைவந்துவிட்டது. இனியும் நீ என் இறக்கைகளுக்குள் உறங்க வேண்டியதில்லை.”

இளையவர் பிறகும் பேச்சின்றியே இருந்தார். சிறிது பொறுத்து மறுபடியும் பெரியவே பேசினார்.

“அப்பனே, இனி நீயும் நானும் பிரிந்து விடவே வேண்டும். அல்லது இரண்டு பேருமே பெரிய நஷ்டத்தை அடைவோம்.”

இளையவர் எழுந்து கூப்பிய கரங்களுடன் அவர் பக்கமாகச் சென்று விழுந்து வணங்கினார்.

”குழந்தாய், உன்னை ஆண்டவன் ஆசீர்வதிப்பானாக!”

அவர் கண்களை மூடியபடி எழுந்து நின்றார். அவருடைய குரல் கரகரத்தது. மற்றவர் குனிந்து அவருடைய பாதங்களைத் தொட்டு பலமுறை கண்களில் ஒற்றிக்கொண்டு தெருவில் இறங்கினார்.

தெருவில் இறங்கிய இளையவர் ஒருமுறை கூடத் திரும்பிப் பாராமலே நடந்து கொண்டிருந்தார். அவரது நடையில் எது இல்லாவிட்டாலும் நிதானம் இருந்தது. எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட தெளிவு இருந்தது.

அந்த உருவம் கண்களை விட்டு மறையும் வரையும் நின்றபடியே பார்த்துக் கொண்டு பெரியவர் தாய் போல் மாறி, “ஐயோ வெயில் கடுமையாக எரிக்கிறதே!’ என்று அங்கலாய்த்தார். பிறகு தாமும் தொடர்ந்து போக எண்ணியவர் போல அந்தத் திசையில் வேகமாக நடந்தார். சிறிது தூரம் சென்றதும் ஏனோ மறுபடியும் திரும்பி வந்து அந்த மரத்தின் கீழ் உட்கார்ந்தார்.

இளையவர் இருந்த இடம் சூனியமாகிக் கிடந்தது. ஆனால் மண்ணில் அவர் காலடிகள் நன்றாகத் தெரியும்படி பதிந்திருந்தன. அந்த அடையாளங்கள் ஏதோ அருமையான பொக்கிஷங்கள் போல அவருக்கு இருந்தன. வெகுநேரம் வரையில் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஏதோ ஆறுதல் இருப்பது போலப்பட்டது. நடுவில், ‘இனி ஒருபோதும் சந்திக்க மாட்டேனா?’ என்ற கேள்வி எழுந்ததும் தடுமாறி எழுந்து நின்று அவர் போன திசையைப் பார்த்தார். பிறகு அங்கும் இங்குமாக நடக்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம் அந்த அடையாளங்கள் அழிந்து விடாதபடி விலகி விலகியே நடக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது.

’இந்தப் பாசம் இவ்வளவு தூரம் என்னைப் பாதித்துவிட்டதே’ என்ற ஏக்கமும் அவருக்கு அடிக்கடி உண்டாயிற்று.
‘அன்றைக்கே, அவன் வந்தபோது ‘இது வேண்டாம் மறுபடியும் கட்டுப்படாதே’ என்று எச்சரித்த என் அந்தராத்மாவின் குரலை நான் கெளரவிக்கவில்லை. ‘சுவாமி, எனக்கு வழிகாட்டுங்கள்’ என்று வந்தவனை எப்படித்தான் போ என்று தள்ளமுடியும்? வா என்று ஏற்றுக்கொண்டேன். அவன் நிழலாகி வளர்ந்தான். இந்த நிலையிலும் அவனைப் பார்த்து மனம் களித்தேன். ஆனால் இன்று?

அவர் நீண்ட ஒரு பெருமூச்சுடன் கிளம்பி வந்தவழியால் நடந்தார். இப்பொழுது அவரது நடையில் வேகம் இல்லை. நிதானமும் இருக்கவில்லை. தகித்துக் கொண்டிருந்த வெயில்கூட அவரை அவசரப்படுத்தவில்லை. மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றார். பாரம் ஏறிய மனநிலையை அவரது முகம் எடுத்துக் காட்டியது.

வழியில் ஜனங்கள் போனார்கள். வந்தார்கள். அவர்களுக்குள் அவனும் இருக்கலாம் என்பதுபோல அவர் கண்கள் எல்லோரையும் ஆராய்ந்தன. ‘இனி வேண்டாம்’ என்று சில சமயங்களில் கண்களை மூடிக் கொண்டும் நடந்தார்.

வரவர அவருக்கு நடப்பதே பெரிய சிரமமாக இருந்தது. ஆயினும் நிற்காமலே சென்றார். அந்தச் சமயத்திலே, காலையிலே தாம் எந்த வீட்டில் இருந்து கிளம்பி ஓடினாரோ, அந்த வீட்டின் எதிரில் வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டார். நடப்பதை நிறுத்திவிட்டு அந்த மரத்தின் அடியில் இருந்து மேடையைப் பார்த்தார். எதிரில், ‘சுவாமி வாருங்கள்’ என்று வேண்டியவாறே அவள் ஓடிவந்தாள். அவர் இப்பொழுது அசையவில்லை. கண்களை அகல விழித்து அவளையே பார்த்துக் கொண்டி நின்றார். பிறகு தாமாகவே இறங்கி உள்ளே சென்றார்.

மற்றவரைப் பிரிந்ததினால் உண்டாகிய தாகம் மெல்ல மெல்ல தணிவதுபோல அவருக்குப் பட்டது. அப்பொழுது அவள் பேசினாள். ‘சுவாமி, எப்படியும் ஒரு நாளைக்கு உங்களைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால், அது இன்றைக்கே சித்தியாகும் என்று எண்ணவேயில்லை. நான் பெரிய பாக்கியம் செய்தவள்.’

அவர் உள்ளே புகுந்து ஒர் ஆசனத்தில் உட்கார்ந்தார்.

‘சுவாமி, மறுபடியும் போய்விட மாட்டீர்களே?’

அவள் உண்மையாகத்தான் இப்படிக் கேட்டாள்.

‘போ என்று தள்ளினாலும் முடியாத நிலையில் இப்பொழுது இருக்கிறேன்.’

காலில் விழுந்து வணங்கியவள் எழுந்து உள்ளே சென்றாள். அவர் அதற்குள் அதிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார். பிறகு அவர் கண்களைத் திறந்தபோது முற்றும் எதிர்பாராத தோற்றத்தில் அவள் எதிரில் நின்றாள்.

‘அம்மா, இது என்ன கோலம்?’

அவர் ஆச்சரியத்தோடு இப்படிக் கேட்டார்.

அவள் இதற்குப் பதில் சொல்லாமலே தன் கருத்தைச் சொன்னாள். ‘சுவாமி, இவையெல்லாம் இனித் தங்களைச் சேர்ந்தவையே. விருப்பம் எதுவோ அப்படிச் செய்யுங்கள்.’

அவர் அதிர்ந்து போய் சோர்வடைந்து கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தார்.

அதற்குள் அவள் வெளியே இறங்கி நடந்து கொண்டிருந்தாள்.

 

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

Why did Tesla say that 3, 6, and 9 was the key to the universe? - QuoraFrisson 3 6 9 - Home | Facebook369 Logo - AnimationXpressWhat is the significance of 3, 6, and 9 in Indian mythology? - Quora

எண் ஜோதிடம். 3, 6, 9

ஜோதிடமா ? வர வர நம்பிக்கை குறைந்து வருகிறது.

இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தமிழகத்தின் தலை சிறந்த ஜோதிடர்கள் எல்லாம் முழு மேக்கப்புடன், கலர் கலராக சட்டை போட்டுக் கொண்டு T V முன் அமர்ந்து பேசியதைப் பார்த்தோம்.

ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பாலாறு நாட்டில் ஓடும் என்றார்கள்.
இரண்டாம் அரை வருடத்தில் தேனாறு ஓடும் என்றார்கள்.
பாவம் இன்று பலருக்கு குடி நீரே கிடைக்க வில்லை.

ஜோதிட கலை தவறா என்றால், இல்லை. சரியாக கணிப்பவர்கள் யாரும் இல்லை.
நீங்கள் 1 ஆம் எண் எண்ணில் பிறந்தவரா? இந்த எண்ணில் பிறந்தவரை திருமணம் செய்தால் வாழ்க்கையே நரகமாகிவிடுமாம்! - Mullai News
நுனிப்புல் மேய்ந்து, நம் முகம் படித்தே நம் பிரச்சனையையும், எதிர்காலத்தையும் சொல்லி விடுவார்கள்.

More of Physiognomy than astrology.

ஆனால் வாழ்க்கையில் கஷ்டம் என்று ஜோதிடம் பார்க்க வருபவர்க்கு ஆறு மாதங்களில் எல்லாம் சரியாகி விடும் என ஆறுதல் கூறி நம்பிக்கை அளிக்கும் ஜோதிடர்களின் சேவையும் தேவையே.

நம்பிக்கைதானே வாழ்வின் ஆதாரமும், வளர்ச்சியும்.

ஜோதிடக் கலையை உலகிற்கு அளித்து, ஜனணம் முதல் மரணம் வரை துல்லியமாக கணக்கிட்டு சொன்ன மஹான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.

எண் ஜோதிடம் பற்றி கேட்கவே வேண்டாம்.

ஏதோ ஒரு எண், நம்ம வாழ்க்கையில் நுழைந்து நல்லது செய்ய முடியுமா என யோசித்துக் கொண்டிருந்த பொழுது, அறிவியல் விஞ்ஞானி நிக்கோலாஸ் டெஸ்லா அவசரம், அவசரமாக ஓடி வந்து 3, 6, 9 என்ற எண்களால் முடியும் என்கிறார்.

டெஸ்லாவை படித்த பின் யோசித்துப் பார்த்தால் அவ் எண்களில் ஏதோ இரகசியம் உள்ளது போல தோன்றுகிறது.

Muthukamalam.com / Astrology (General) - ஜோதிடம் சிறப்புப் பக்கங்கள்3,6,9 என்ற எண்களில் அப்படி என்ன பெரிய அதிசயம் ஒளிந்திருக்க போகிறது என்று சத்தமாக கேட்க வேண்டாம்.

அது கல்லறையில் உறங்கும் விஞ்ஞானி டெஸ்லா காதில் விழுந்தால் அவர் மனது கஷ்டப்படும்.

அவ்வெண்களின் மீது அவ்வளவு காதல் அவருக்கு.

விவேகானந்தரை பெரிதும் மதித்த டெஸ்லா நம் வேத சாஸ்திரத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்.

டெஸ்லா தனது வாழ்நாள் முழுதும் விசித்திரமான முறையில் அவ் எண்களை பயன்படுத்தினார்.

டெஸ்லா தான் தங்கி இருந்த விடுதிக்குள் நுழையும் முன்னர் வெளியே 3 முறை சுற்றி விட்டு பின்னர்தான் உள்ளே செல்வாராம்.

தான் தங்கும் அறை கூட 3 ஆல் வகுபடும் எண்ணைக் கொண்டதாகத்தான் தேர்ந்தெடுப்பாராம்.

நீங்கள் 1 ஆம் எண் எண்ணில் பிறந்தவரா? இந்த எண்ணில் பிறந்தவரை திருமணம் செய்தால் வாழ்க்கையே நரகமாகிவிடுமாம்! - Mullai Newsஒரு படி மேலே போய் தான் சாப்பிடும் தட்டை 18 நாப்கின்கள் கொண்டு துடைப்பாராம்.

இயற்கையைப் போலவே கணிதமும் நம்மால் உருவாக்கப் படவில்லை.
அவற்றின் பல பரிமாணங்கள் கண்டுபிடிக்கப் பட்டு உலகுக்கு தெரிவிக்கப் பட்டன.

எடிசன் போன்றோரால் ஏமாற்றப் பட்ட டெஸ்லா தன் கண்டு பிடிப்புகள் எதையும் முறையாக ஆவணப்படுத்த வில்லை.

அவரது மூளையின் ஒரு மூலையில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்த கண்டு பிடிப்புகள் அனைத்தும் அவரோடே அழிந்து விட்டன.

ஒரு வேலை ஆவணப் படுத்தி இருந்தால் அவர் கூற்றான “ If you only knew the magnificence of the 3, 6 and 9, then you would have a key to the universe.” என்பதின் உண்மை உலகிற்கு தெரிந்து இருக்கும்.

சற்று யோசித்தால் அவர் கூற்றில் ஏதோ, உண்மை இருப்பது போலவும் தெரிகிறது.

நம் முன்னோர் காரணம் இல்லாமல் எந்த காரியத்தையும் செய்தது இல்லை.

கீழே கண்டவை அனைத்தும் 3 ன் பெருக்கமாக அமைந்ததற்கு ஏதாவது காரணம் இல்லாமலா இருக்கும்?

தமிழ் வருடங்கள். 60
வருடத்திற்கு 12 மாதங்கள்,
நாளுக்கு 60 நாளிகைகள்,
24 மணிகள்,
60 நிமிடங்கள்,
60 விநாடிகள்.
12 அங்குலம் 1 அடி
3 அடிகள். 1 கஜம்

வட்டத்தில் 360 டிகிரிகள்.

சிவன், விஷ்ணு, பிரம்மா மும் மூர்த்திகள் உடன் உறைபவர்கள்
பார்வதி, லெக்ஷ்மி, சரஸ்வதி
அசுரர்களை ஒடுக்க அவதரித்தவன் ஆறுமுகன்.

Holy Bible கூறுவது God, Jesus and Holy Spirit.
எகிப்தியரின் புராணம் பேசுவதும் 3 கடவுள்கள் ( சொர்க்கம் , பூமி, நரகம் ஆகியவற்றின் பிரதி நிதிகள்).

Atom ( அணு) தன்னுள் அடக்கியது புரட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் என மூன்று பகுதிகள்.

27 நட்சத்திரங்கள்(9)
9 கிரகங்கள். 12 ராசிகள் . கூடவே நவாம்சம்.
9 X 12= 108

இந்து மதம், புத்த மதம், சமணமதம், யோகா ஆகியவற்றில் 108 க்கு தனி சிறப்பு.

108 திவ்ய தேசங்கள், விருந்தாவனத்தில் 108 கோபியர்கள். 12 ஆழ்வார்கள்.
இமயம் முதல் குமரி வரை சக்தி பீடங்கள் 108
108 உபநிடதங்கள்
18 புராணங்கள்
சிவனின் பூத கணங்கள் 108
ஜப மாலையில் 108 மணிகள்,
அர்ச்சனைகள் 108 அல்லது 1008.( அஸ்டோத்திரம், சகஸ்ரநாமம்)

ஜைனர்கள் கர்மாவை அடையும் வழிகள் 108.

பௌத்தர்களுக்கு அடக்க வேண்டிய உணர்வுகள் ( earthly temptations) 108 .
பௌத்தர்கள் 108 முறை மணி அடித்து புத்தாண்டை வரவேற்பார்களாம். ஜப்பானிலும் இதுவே பழக்கமாம்.
முக்கிய சடங்குகள் 9 துறவிகள் கொண்டுதான் நடக்குமாம்.
சீனர்களின் சொர்க்க கோபுரம் 9 வளையங்களால் சூழப்பட்டுள்ளதாம்.
சீனர்கள் 36 மணிகள் கொண்ட மூன்று மாலைகளை வைத்து ஜெபிப்பார்களாம்.
பௌத்த ஆலயம் 108 படிகளுடன், 108 புத்த விக்கிரகங்களை கொண்டதாக இருக்குமாம்.

இஸ்லாத்தில் 108 என்ற எண்னே இறைவனை குறிக்கும்.
அவர்களின் ஜப மாலையிலும் 108 மணிகளே.
இஸ்லாமியர்க்கு புனித தளங்கள் 3 ( மெக்கா, மெதீனா, ஜெருசலேம்).
அவர்களின் (Belief) நம்பிக்கைகள் 6.

யோகாவில் சூரிய நமஸ்காரம் துவங்கி 108 நமஸ்காரங்கள்.

நாட்டிய சாஸ்திரத்தில் நாட்டிய
அமைப்புகள் 108

ஆன்மாவிற்கு 108 ஆசைகளும் 108 எதிர் பார்ப்புகளும் இருக்குமாம். பட்டியலிட்டு உள்ளார்கள்.

பூமியின் விட்டத்தை விட சூரியனின் விட்டம் 108 மடங்கு பெரியதாம்.

பூமியிலிருந்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம், அவைகளின் விட்டத்தை போல 108 மடங்காம்.

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12
மெய் எழுத்துக்கள். 18
உயிர் மெய் எழுத்துக்கள் 216.
சமஸ்கிருத வார்த்தைகள் ஆண் பால்54, பெண்பால் 54 என மொத்தம் 108.

சூரிய ஒளி கடக்கும் வேகம் விநாடிக்கு 186282 மைல்கள் (9)

ஈக்வேட்டரில் பூமியின் சுற்றளவு 21600 நாட்டிகல் மைல்கள்(9).

ஆரோக்யமான இதயம் துடிப்பது நிமிடத்திற்கு 60 தடவைகள்.
வெளி விடும் மூச்சு நிமிடத்திற்கு 15 தடவைகள்.
பகலில் 10800, இரவில் 10800 தடவைகள்.
உடம்பின் துவாரங்கள் 9 (ஒன்பது வாயிற் குடில்)
அன்னையின் கருவறையில் நாம் வசித்த காலம் 9 மாதங்கள்.
உடம்பில் 108 சூட்சுமங்கள் ( Nerve Points) மர்ம நாடிகள்.
அவை உடலின் 9 முக்கிய பாகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துகின்றனவாம்.

நவ மணிகள், நவ தாண்யம், நவ ராத்திரிகள்
நவ ரசம், நவ பாஷாணம். நவ நதிகள்,
நவ நிதிகள், நவ சக்திகள், நவாம்சம்,
நவ பிரம்மாக்கள், நவ திருப்பதிகள், நவ கைலாயம், நவ ஜோதி, நவ வீரர்கள், நவ அபிஷேகங்கள், நவ லோகம், நவ திரவியங்கள், நவ சிவ விரதங்கள், நவ சந்தி தாளங்கள், நவ குணங்கள், நவ குண்டலங்கள், நவ பக்தி, நவ சக்கரங்கள் இன்னும், இன்னும்.

ஆம்புலன்ஸ் கூட 108 தான்.
மனுஷனுக்கு 1008 வேலை, 1008 பிரச்சனைகள்.
9, பாவம் ஒரு சிலரை தவறாகவும் குறிப்பிடுகிறது.
தங்கம், பிளாட்டினம் 999 மார்க்.

தாய விளையாட்டில் 6,12 விழுந்தால்தான் பாதுகாப்பாக கட்டத்தை அடையலாமாம்.
ஆறும், பணிரெண்டும் என் பேத்தி வேண்டுகிறாள்.

ஆடு புலி ஆட்டத்தில் 3 புலிகள் 15 ஆடுகளுடன் ஆடுகிறாள்.

இன்னும் எவ்வளவோ. அனைத்தும் தற்செயலாகவா அமைந்திருக்கும்?

கூகுளாரிடம் கேட்டால் இந்த எண்களை கணிதமாகவும், விஞ்ஞானமாகவும் விவரிக்கிறார்.

என் அறிவுக்கு சற்று அதிகம்.

3, 6, 9 களில் ஏதோ இரகசியம், ஏதோ சிறப்பு இருப்பதை கண்களை மூடி ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்.

3,6,9 விதியை மாற்றும் ஜோதிட எண்கள் அல்ல.
அனைவர்க்கும் நல்லது செய்யும் புனித எண்கள்.

நல்லது நினைப்போம். நல்லதே நடக்கும்.

(எனக்கு 69 வது வயது துவங்கும் இன்று என் மகனுக்கு  36 வயது முடிவடைகிறது.
3,6,9 எண்கள் என்னுடன் பயனித்து நல்லவை மிகவே செய்துள்ளது.

இவ்வாண்டும் நல்லது மிக நடக்கும் என நம்புகிறேன்.)

விதிகளை மாற்றிவிடு! — கோவை சங்கர்

கடமை பெரிது 3257829.html - Dinamani

மனம்நொந்து உனைநாடி வருகின்ற பக்தரிடம்
முன்பிறவி கர்மாவென சொல்வதுவும் சரிதானோ?
பாவங்கள் செய்தவன் செழிப்போடு வாழ்ந்திட்டான்
அப்பாவி பக்தனை அல்லல்பட விடலாமோ?

பாவச்சுமை ஏற்றியவன் சுகமாகப் போய்விட்டான்
பாவவினை விலையென்ன அவனுக்குத் தெரியாது
பாவம்செயா இவனுமே அல்லல்பல படுகின்றான்
தப்பென்ன செய்தோமென இவனுக்குப் புரியாது!

பாவங்கள் செய்தவன் சுகமாகச் சென்றுவிட
அப்பாவி மனிதனுக்கு இத்தனை தண்டனையா?
தர்மநெறி நிற்பவன் நிலைகுலைய மாட்டானா?
‘அறநெறி நல்வழி’யெனும் நம்பிக்கை போகாதா?

தப்புகளைச் செய்தவன் மனம்வருந்த தண்டனையை
அப்பிறவியில் கொடுத்துவிடு அவன்கணக்கைத் தீர்த்துவிடு
பிற்பிறவி மனிதனையே மகிழ்வோடு வாழவிடு
பிறவியின் விதிகளை யதற்கேற்ப மாற்றிவிடு!

’நெருப்பில் ஒரு நகரம் ’ – மலையாளத்தில் ஐசக் ஈப்பன் தமிழில் மீனா

மலையாள மொழி இலக்கிய உலகில் ஐசக் ஈப்பன் சிறுகதை ,நாவல்,கட்டுரையாசிரியர்  என்று பன்முகம் கொண்ட  படைப்பாளி.

அவருடைய படைப்புகள் பதினாறு புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

பல படைப்புகள் ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 

ஈவிஜி புரஸ்காரம், தகழி விருது,அபுதாபி சக்தி விருது,கொட்டாரகாரா தம்பிரான் விருது ,எஸ்.கே .பொட்டேகாட் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். 

’நெருப்பில் ஒரு நகரம் ’ என்ற அவரது சிறுகதை சாதி,மத,இனப் பின்னணியில் மாறி வரும் மனித வாழ்க்கை, சமுதாய அழிவிற்கு இட்டுச் செல்கிற  நிலையைக் கருவாகக் கொண்டதாகும்.

இருபதாண்டுகளுக்கு முன்னர் தாம் அனுபவித்த கல்லூரி வாழ்க்கை,வாழ்ந்த நகரம் ஆகியன வெவ்வேறு  மதம் சார்ந்த மூன்று நண்பர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.பல ஆண்டுகள் கழிந்த பிறகும், ஒரு முறையாவது அந்த நகரத்திற்குப் போய் வரவேண்டுமென்ற ஆசை அவர்களைத் தூண்ட ,ஆழ்ந்த திட்டமிடலுக்குப் பின்னர் மூவரும்பழையஎதிர்பார்ப்புகளோடு பயணிக்கின்றனர். தோற்றத்தில் மட்டுமின்றிச் செயல்பாடுகளிலும் நகரம் முழுவதுமாக மாறிப் போயிருக்கிறது. மதங்களால் மாறுபட்ட நெருங்கிய மூன்று நண்பர்களைப் பார்க்க நகரம் தயாராக இல்லை.அங்கு வளர்ந்து விட்ட மதப்பின்னணியிலான அபிப்ராயங்கள், தூண்டப்படும் எதிர்ப்புகள் ஆகியன மனித வாழ்க்கையைச் சின்னா பின்னப்படுத்துவதை  அவர்கள் பார்க்கின்றனர்.

மத, இன ,மொழிவேறுபாடின்றி தாங்கள் வாழ்ந்த அந்த நாட்களுக்கும், இன்று  பரவியிருக்கின்ற  எண்ணங்களுக்குமான வேறுபாடு நகரங்கள் அழிந்து போவதற்கான சூழலை உருவாக்குவதை அறிந்து ’எதுவும் செய்ய முடியாத ’நிலையில் வருத்தத்தோடு திரும்புவதாக  கதை அமைகிறது. 

இந்த கதையைத் தரவிரக்கம் செய்து கொள்ள கீழே கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1KZVewZgZZFaH5nz3EZkBMHs_3QjOWBVF/view?usp=sharing