அட்டைப்படம் செப்டம்பர் 2017

இது செப்டம்பர் மாதம்.  பிரபலமான                   ‘கம் செப்டம்பர்’  பாடல் இசையைக் கேட்டுக்கொண்டே குவிகத்தைப் படியுங்கள்!

 

 

தலையங்கம்

 

 

Related image

சபை நடுவே ‘நீட்’ ஓலை வாசியான் நின்ற மரம்  போல நிற்கின்றது தமிழகம்.

என்ன ? கமலுடைய ட்விட்டர் பதிவு மாதிரி புரியாமலிருக்கிறதா?

தமிழகத்தின் இன்றைய போராட்டங்களைப்பற்றியும் புரிந்து கொள்ள முடியவில்லை.

நீட்டுக்கு எதிராக உயர்நீதி மன்றம் சென்ற அனிதாவைப் பாராட்டுகிறோம்.

ஆனால் அதற்காகத் தற்கொலை செய்துகொண்ட அனிதாவை எப்படிப் பாராட்டுவது? காரணம் எவ்வளவு வலுவுள்ளதாக இருந்தாலும் தற்கொலை தவறானதுதான்.

தமிழகத்தின் தரம் குறைந்த கல்வி முறையைக் குறை கூறுவதா?

இந்தியா முழுவதும் ஒரே மாதிரிக் கல்வியைத் தரத் தவறிவிட்ட அரசு இயந்திரங்களைக் குறை கூறுவதா?

எதிலும் இந்திக்காரர்களுக்குச் சாதகமாக முடிவெடுக்கும் மத்திய இந்தியாவின் வெறியர்களைக் குறை கூறுவதா?

மருத்துவக் கல்விக்குக் கோடிக்கணக்கில்  கட்டாய  நன்கொடை வாங்கும் பண முதலைகளைக் குறை கூறுவதா?  அல்லது அதைத் தடுக்க வக்கில்லாமல் இருக்கும் அரசுத் துறையைக் குறை கூறுவதா?

அநீதிக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தால்தான் நீதி கிடைக்கும். போராடுபவர்களின் குறிக்கோள் வெவ்வேறு மாதிரி இருக்கலாம்.

அக்டோபர் புரட்சியிலிருந்து, இந்தி எதிர்ப்பு தொடர்ந்து, தொழிற்சங்கப் போராட்டங்கள் பரவி,  ஜல்லிக்கட்டுவரை எண்ணற்ற போராட்டங்களை நாம் சந்தித்திருக்கிறோம்.

Image result for anitha suicide and agitation

அந்த வகையில் நீட் போராட்டத்தின் குறிக்கோளைப் பாராட்டுகிறோம்.   ( நீட்டுக்கு எதிரான போராட்டங்களைத் தடை செய்யச்சொல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது ) 

இது மோடிக்கு எதிரானது அல்ல. நாட்டுக்கு எது முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வதற்காகவே நடக்கும் போராட்டம்.

ஜாதி, மதம், அரசியல்,  உணர்ச்சி வேகம்  போன்றவற்றைத் தாண்டி யோசித்து முடிவெடுப்போம்.

Related image

அனைவரையும் பேசவிடுங்கள்.  மாற்றுக் கருத்துக்களை நசுக்காதீர்கள். ‘ தேசம் கேட்க விரும்புகிறது ‘  என்று வெற்றுக் குரல் எழுப்பாதீர்கள். எதிர்மறைக் கருத்துக்களை எடுத்து எறியுங்கள்.

முடிவில் அனைவருக்கும் நன்மை  கிடைக்கும்  என்ற நம்பிக்கை இருக்கிறது.

அப்போதுதான் , சபை நடுவே ‘நீட்’ ஓலை வாசியான் நின்ற மரம் போல நாம் அனைவரும் நிற்க வேண்டிவராது.

சால்மன் மீனின் தியாகம்

சால்மன்  என்பது  பசிபிக் கடலிலும்,  கடலை ஒட்டிய மலைப் பாங்கான பகுதிகளிலும் வாழும் ஒரு வித மீன்.

அது கடலிலிருந்து  1000 மைலுக்கு  அப்பால் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் இருக்கும்  நல்ல தண்ணீர் ஓடையின் கீழே அல்லது ஆற்றோரம் இருக்கும்  பாறைகளில் முட்டையிடும்.  2 /3 மாதங்களில் பிங்க் வண்ணத்தில் இருக்கும் அந்த முட்டைகளை உடைத்துக் கொண்டு சால்மன்  சின்னஞ் சிறு வடிவில் வெளிவரும்.

அந்தக் குட்டி சால்மன்கள் பல வாரங்கள்,  தான் இருந்த முட்டையின் கருவையே  உணவாக்கிக் கொண்டு பாறைகளிலேயே வாழும்.பிறகு 5 முதல் 10  வாரத்தில் கொஞ்சம் பலம் பெற்று சின்னஞ் சிறு மீன்களாகத் தண்ணீரில் நீந்தத் தொடங்கும்.

அதற்குப் பிறகு அவை கடலை நோக்கிச் செல்லும் பயணத்தை ஆரம்பிக்கும்.   சலசலக்கும் ஒடைகளின்  நீரில் குதித்துக்கொண்டும் நீந்திக் கொண்டும் தான் வாழப்போகும் பசிபிக் கடலை அடையப் புறப்படும்.  அது  ஆயிரம் மைல்களாக இருந்தாலும் சால்மன்களுக்குக் கவலை இல்லை.

வழியே அவற்றிற்குத்தான் எத்தனை இடையூறுகள் காத்திருக்கின்றன?

ஆனால் தன் முயற்சியில் சற்றும் தளராத இந்த சால்மன்கள்  வேகமாகப் பாயும் அருவிகளில் நீரின் வேகத்தோடு இறங்கி ஆற்றில் நீந்தி கடைசியில் தான் வாழப்போகும் கடலை நோக்கிச் செல்லும்.  இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். இந்த சமயத்தில் இந்த  சால்மன்ளகளுக்குக் கடல் நீரில் வசிக்கத் தகுந்தமாதிரி உடலின் வாகு மாறும். ஆறு அங்குல நீளத்தில் உடலில் சில வரிகளோடு இவை பயணத்தைத் தொடரும். ஓரிரு வருடங்களில் கடலில் வசிப்பதற்கான முழுத் தகுதியையும் அடைந்து விடும்.

கடலை அடைந்தவுடன் அங்கு இருக்கும் சால்மன் கூட்டத்தோடு இந்த இளம் சால்மன்களும் கலந்து கொள்ளும். அவற்றின் நிறமும் தகதகவென்று வெள்ளி போல மாறும்.  இனத்தோடு வாழ்ந்து வாலிபம் எய்து நாலைந்து வருடங்கள் குஷியாக இருக்கும்.  அப்போது அவற்றின் நீளம் 20 அங்குலம் முதல்  ஐந்தடி  வரை இருக்கக் கூடும் .

Timothy Knepp/ U.S. Fish and Wildlife Service

வாலிப சால்மன்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் வயது வந்தவுடன் செய்யும் காரியம்தான் மகத்தானது. தான் பிறந்த பாறைகளில்தான் தன் குஞ்சுகளும் பிறக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் அவை மீண்டும் ஆறுகள் வழியாக அருவிகள் வழியாகச் செல்லத்தொடங்கும். . இந்த முறை அவை நீரின் வேகத்திற்கு எதிர்த் திசையில்  செல்லவேண்டும்.  கடலில் இருந்தபோது இவை தன்உடலில் சேர்த்து வைத்திருந்த  கொழுப்புக்களே  இவற்றிற்கு இந்த சக்தியைக் கொடுக்கின்றன.          (பாகுபலியில் அருவிக்கு மேலே நாயகன் செல்வதுபோலே இவையும் செல்லும்) .

அப்போதும் அவற்றைப் பிடிக்க மனிதர்களும் மற்ற  விலங்குகளும் காத்துக் கொண்டிருக்கும். பாறையிImage result for alaska bears eating salmonல் ஒளிந்திருக்கும் கரடிகள் சுவையான சால்மனைத்  தின்னக் காத்துக் கொண்டிருக்கும்.  பலசமயம்  இந்த சால்மன்கள் துள்ளிக் குதித்து, காத்திருக்கும் கரடியின் வாயிலேயே நேராக விழுவதும் உண்டு..

இந்தப் பயணத்தின்போது அவை தன் உடல் கொழுப்பை வேகமாகக் கரைத்து அடுத்த தலைமுறையைக் கொடுக்கத் தயாராயிருக்கும். முடிவில்,  தான் பிறந்த இடத்தை அடைந்ததும் பெண் சால்மன் அதே ஓடைத்  தண்ணீரின் அருகே உள்ள பாறைகளில்    2500  முதல் 7000 வரை முட்டைகள் இடும். ஆண் சால்மன்கள் அந்த முட்டைகளைக் கருத்தரிக்க வைக்கும்.

அதற்குப் பின் நடப்பதுதான் மிகமிகக் கொடுமையானது.

முட்டைகள்   கருத்தரித்ததும்  அந்த ஆண் சால்மனும் பெண் சால்மனும் ஓரிரு வாரங்களில் தான் பிறந்த பாறையிலேயே தன் உயிரையும் விட்டுவிடும்.

அதற்குப் பிறகு அந்த முட்டைகளிலிருந்து வந்த புது சால்மன் குஞ்சுகள் தங்கள் வாழ்க்கை வட்டத்தை மீண்டும் துவக்கும்.

சால்மனின் தியாகம் உணமையிலேயே மகத்தானது.

 

 

 

 

சிற்றிதழ் உலகம் ஆசிரியர் க்ரிஷ் ராமதாஸ் அவர்களுக்கு அஞ்சலி

 

கிருஷ் ராமதாஸ்

சிற்றிதழ்களே தன் உயிர்மூச்சு என்று கூறி , அதற்காகவே சிற்றிதழ் உலகம் என்ற மின்னிதழைத் துவக்கியவர் திரு க்ரிஷ் ராமதாஸ் அவர்கள். முக நூலில் அவரது பதிவுகளைப் படித்து அவரைப் பாராட்டி குவிகம் இதழுக்காக சிற்றிதழ்பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதுமாறு வேண்டிக் கொண்டோம்.  அவர் மின்னிதழ் துவக்க இருந்ததால் பிறகு எழுதுவதாக வாக்களித்தார்.

அவரது மின்னிதழைப் பாராட்டிக் குவிகம் ஜனவரி 2017  இதழில் எழுதிய கட்டுரையின் பகுதி இது:

உலக அளவிலான சிற்றிதழ்கள், கட்டுரைகள், ஆய்வுகள், பதிவதற்கான தளம் – ” சிற்றிதழ்கள் உலகம்” என்ற மின்னிதழ்.

கிருஷ்.ராமதாஸ் அவர்களின் முயற்சியால் இந்தப் பொங்கல் சமயத்தில் வெளிவந்திருக்கிறது! 

சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ், துபாய் அருகில் உள்ள அல் அய்ன் நகரில் தஞ்சை திரு.வரதராசன் அவர்களால்  13.01.2017 அன்று வெளியிடப்பட்டது . முதல் பிரதியை  திரு.கருணாகரன் அவர்கள் பெற்றுக்கொள்ள  நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர். 

சென்னை புத்தகக்  கண்காட்சியிலும் இது வெளியிடப்பட்டது.

வாழ்க! வளர்க! இவர்தம் தொண்டு !!

அப்படிப்பட்ட நண்பர் மூளையில் தோன்றிய கட்டியினால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்.

அவரது இழப்பு சிற்றிதழ் உலகிற்கே பேரிழப்பு.

அவரது பிரிவால் வாடும் உறவினருக்கும் நண்பர் வட்டத்திற்கும் குவிகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

 மிகுந்த ஈடுபாட்டோடு தனது ‘சிற்றிதழ் உலகம்’ இதழை நடத்திவந்த ராமதாஸ் அவர்கள், தன் மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப்பிறகு தீவிரக் கண்காணிப்பிலே இருந்தார். ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் 18-08-2017 அன்று நள்ளிரவில் இயற்கை எய்தினார். இலக்கிய பரப்பில் சிற்றிதழ்களுக்காகத் தன்னுடைய முழுமையான பங்களிப்புகளைக் கொடுத்த ஒரு கலைஞனைக்  காலம் கருணையின்றி பறித்துக்கொண்டது           – கவிஞர். ‘வதிலை’ பிரபா.

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

Image result for chandragupta vikramaditya

ராமகுப்தர்  (மறைவு)

முன் கதை:
சமுத்திரகுப்தனின் மூத்த மகன் ராமகுப்தன்.
இளைய மகன் சந்திரகுப்தன்.
மாவீரன் சந்திரகுப்தனுக்கும் பேரழகி துருவாதேவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.
சமுத்திரகுப்தன் இறந்தவுடன் ராமகுப்தன் மந்திரியின் உதவியால் முடிசூடத் திட்டமிட்டான்.
அத்துடன் அழகி துருவாதேவியையும் சூழ்ச்சியால் மனவியாக்கத் துணிந்தான்.
ராமகுப்தன்- துருவாதேவி திருமணம் முடிந்தது..
ராமகுப்தன் குப்தச் சக்ரவர்த்தியானான்..
காதலர்கள் உள்ளம் துவண்டது..

இனி கதை தொடர்கிறது:

காலம் மெல்ல உருண்டது..

 

 

 

 

 

 

 

 

 

சமுத்திரகுப்தன் காலமானதும் அவனுக்கு அடங்கியிருந்த சில மன்னர்களுக்குக் குளிர்விட்டுப்போனது.
அந்த மன்னர்களில் சிலர் சக்தி பொருந்திய மன்னர்கள்.
சக வம்சத்தின் ருத்ரசிம்மா-II.

சமுத்திரகுப்தனின் மோதிரக்கையால் குட்டுப்பட்டவன்.
அவன் மகன் … அவன் பெயரும் ருத்ரசிம்மா-III.
பெயரைக்கேட்டாலே சும்மா அதிரும்.
வீரனாக வளர்க்கப்பட்டான்.
முரடன்.
பலத்தில் யானை போன்றவன்.

அவன்  தந்தை சாகும் முன் மகனை அழைத்து…
“மகனே! குப்தர்கள் நம்மைக் குனிய வைத்துவிட்டனர்.
நான் சாகப்போகும் தருணம் நெருங்கி விட்டது.
இதே நேரம் சமுத்திரகுப்தனும் சாகக்கிடக்கிறான்.
அவனுக்குப் பின்
அந்த ஆட்சியைக் குலைத்து…
அவனது ஆதிக்கத்தை அழித்து…”

சற்றே மூச்சு வாங்கி… நிறுத்தினான்.

“……..” – மகன் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
தந்தை தொடர்ந்தான்:
“அவர்களது பெருமையை அழிக்கவேண்டும்.
அவமானத்தில் அந்தப் பரம்பரை துடிக்கவேண்டும்”

மேலும் தொடர்ந்தான்:

“மகனே!
குப்தரின் மாபெரும் செல்வம் ..
அவர்கள் படையெடுத்துச் சேர்த்த செல்வம்..
அவரது கடலார்ந்த சேனா பலம் ..
உலகப் பிரசித்தி பெற்ற அந்த மன்னர்களின் ராணியர்களின் அழகும் செல்வாக்கும்… முதலாம் சந்திரகுப்தனின் ராணி குமாரதேவி முதல்  ‘துருவாதேவி’ வரை அனைவரும் பொக்கிஷங்கள்…
துருவாதேவியின் அழகுபற்றிதான் உலகே அறிந்ததே!
அவர்களது இந்த அனைத்துச் செல்வங்களையும் நீ பறித்து அவர்களை அவமானத்தில் குறுக வைக்கவேண்டும்”

சக மன்னன் ருத்ரசிம்மாவும் சமுத்திரகுப்தனும் ஒரே நாளில் இறந்தனர்.

ராமகுப்தன் குப்த மன்னனான அதே நாள் ‘இளவரசன் ருத்ரசிம்மா’வும் சக நாட்டு மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.
குப்தர்களை வெல்வதற்கு சமயம் பார்த்துக்காத்திருந்தான்…

ராமகுப்தன் பட்டாபிஷேகக் கொண்டாட்டங்களில் மகிழ்ந்திருந்தான்!
நான்கு வருடங்கள் மெல்லச் சென்றது..

பல இதயங்கள் சோகத்தை மனதில் புதைத்து அந்த வடுவுடன் வாழ்வை நடத்தின.

ஒரு நாள் ராமகுப்தன் தன் மனைவியுடன் ஒரு சிறிய படைகொண்டு ஒரு இன்பச்செலவுக்காகப் புறப்பட்டான். அங்கும் இங்கும் திரிந்து சக ராஜ்யத்தின் எல்லை அருகே வந்தனர்.

அங்கு சக மன்னன் ருத்ரசிம்மாவின் பெரும் சேனை வந்து கொண்டிருந்தது.

ராமகுப்தனின் சிறு படை தாக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது.
ராமகுப்தன், துருவாதேவி இருவரும் சிறைபிடிக்கப்பட்டனர்.

ருத்ரசிம்மா ராமகுப்தனுக்குக் கடிதம் அனுப்பினான்.

‘ராமகுப்தா!
என்னிடம் சிக்கிக் கொண்டாய்!
உன்னுயிர் என் கையில் உள்ளது!
அதை உன்னிடமிருந்து பறிப்பது உன் பதிலில் இருக்கிறது.
உன் மனைவி துருவாதேவி முன்பு சந்திரகுப்தனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தாள்.

 ஆனால் அதற்கு முன்பு அவள் தந்தை அவளை எனக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
ஆக அவள் எனக்கே சொந்தமானவள்.
அவளை எனக்கு மணமுடிக்க ஒப்பி என்னுடன் அனுப்பிவைத்தால்..
உன்னை உன் நாட்டுக்கு அனுப்பி வைப்பேன்.
இல்லாவிடில்…
உன்னுயிர் உன் உடலில் தங்க வாய்ப்பொன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
அடைந்தால் ‘மகாதேவி… இல்லாவிடில் உனக்கு ‘மரண தேவி’ “

கடிதம் ராமகுப்தனைச் சுட்டெரித்தது.
ராமகுப்தன் மௌனமாகத் துருவாதேவியிடம் கடிதத்தை நீட்டினான்.
துருவாதேவி கடிதத்தைப் படித்தாள்.

அவளது பொன் போன்ற முகம் யானைத் தந்தம்போல் வெளுத்தது.
கோபம், துக்கம் பீறிட்டது.
வீரம் துணிச்சல் கொண்டவளாயினும் அவள் நிலைகுலைந்து கீழே விழுந்தாள்.

ராமகுப்தன் கேட்டான்:
“துருவாதேவி… அது உண்மையா?”

துருவாதேவி:
“ஆமாம். என் தந்தை என்னை சக மன்னன் ருத்திரசிம்மனுக்கு மணமுடிக்க முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சக மன்னனின் தீய குணங்களை அறிந்து திருமணத்தை நிறுத்தி விட்டார்.”

ராமகுப்தன்:
“தேவி! பேரழகியே! உன்னை என்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது. ருத்திரசிம்மனுடன் போர் புரிவேன்”

துருவாதேவி ஆனந்தப் பெருமூச்சு விட்டாள்.
‘ராமகுப்தன் வீரம் குறைந்தாலும் கொள்கை கொண்டிருக்கிறானே.” – என்று நிம்மதியடைந்தாள்.

“நீங்கள் ருத்திரசிம்மனுடன் போர் புரிந்து அவனைக் கொல்லுங்கள்… ஒரு வேளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என் உயிரை நான் போக்கிக் கொள்வேன்.. ஒரு நாளும் ருத்திரசிம்மனுக்கு உடையவளாக மாட்டேன்”

இந்த செய்தி கேட்டு ருத்திரசிம்மன் இடிஇடியென சிரித்தான்.
ராமகுப்தனை அழைத்து வரச்சொன்னான்.

ராமகுப்தன் கால்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு, கைகள் பின்னால் வைத்துக் கட்டப்பட்டு ருத்திரசிம்மன் முன் இழுத்து வரப்பட்டான்.

ருத்திரசிம்மனின் சிரிப்பு அடங்கியபாடில்லை.
“ராமகுப்தா! நீ ஏற்கனவே தோற்றுவிட்டாய்!
என்னிடம் போர் புரிவாயா?
உன் நிலைமையைப் பார்.
ஏற்கனவே உன் பாதி உயிர் போய் விட்டது.
என்னைப் பார்.”

ருத்திரசிம்மனின் பருத்த முகத்தை அவனது பெரும் மீசை மேலும் பயங்கரமாக்கியது.
உருண்டு திரண்ட தோள்களுடன், பெருத்த இடையுடன் அவன் ஒரு ராக்ஷசன்போல் கர்ஜித்தான்.:

“உன் மனைவியைக் கடைசிமுறை பார்த்துக் கொள்.
அவளை பலவந்தமாக தூக்கிச்சென்று மணமுடித்துக்கொள்ள எனக்குத் தெரியும்.
ஆனால்..ஒரு சில நாட்கள் உங்களை இங்கு தங்கவிட்டு உனக்கு நடக்கும் சித்திரவதைகளைக் கண்டு களிக்கப்போகிறேன்.
பிறகு உன் உயிர் என் கையால் போகும்” என்று நிறுத்தினான்..

அவனது கரங்கள் கொலை வெறியைக் காட்டியது.

“ஒரு வேளை மனம் மாறி துருவாதேவியை நீயே என்னிடம் அனுப்பி வைத்தால், உன்னை உயிருடன் விட்டு விடுவேன்…
அது மட்டுமல்லாது நீ பாடலிபுத்திரம் சென்று அரசனாக இருக்கலாம்.
ருத்திரசிம்மன் வாக்குத் தவற மாட்டான்.
ஆனால் நினைத்ததை அடையாமல் விட மாட்டான்”

ராமகுப்தன் நடுங்கி விட்டான்.
துருவாதேவியிடம் சென்றான்.

“என் ராணி!
உன்னை சகராஜனுக்கு நான் அளிக்காவிடில் நான் என் ராஜ்யத்தை இழக்க நேரிடும். உயிரையும் இழக்க நேரிடும்.
ஆனால் உன்னை அவனுக்குக் கொடுத்தாலோ எனது மனம் உடைந்து விடும்.
தாங்குவது மிகக் கடினம்.
என்ன செய்வேன்?
வெளிப்படையாகச் சொல்வதானால் நான் அரசனாக நீடிப்பதையே விரும்புகிறேன்.
ஆதலால்…
உன்னை இந்தக் கொடியவனிடம் அனுப்பப்போகிறேன்.
நீ அவனை மணம் செய்து கொள்வதை அறிந்து நான் பெரு வேதனை கொள்வேன்.
ஆனால் எனக்கு என் நாட்டுக்குத் திரும்ப செல்லவேண்டும்”

சொல் கேட்டு இடி விழுந்தாற்போல் துடித்தாள் துருவாதேவி.
“நினைத்தேன் … நினைத்தேன்.. உனக்காவது .. வீரம் வருவதாவது..
சே! என்ன மனிதன் நீ! மனிதனா நீ? உன் தம்பி இப்படி ஒரு செயலை கனவிலும் செய்வாரா?”

ராமகுப்தன் கோபத்தின் வசமானான்.

“சந்திரகுப்தனை இதில் எதற்காக இழுக்கிறாய். அவன் அப்படி மாவீரன் என்றால் ஏன் நமக்கு உதவ வரவில்லை”

துருவாதேவி:
“அவருக்கு நம் நிலைமை எப்படித் தெரியும்? அவருக்கு செய்தி அனுப்பினால் நடப்பதைப் பார்”

ராமகுப்தன்:
“அவனுக்கு எப்படிச் செய்தி அனுப்புவது? நம் சேனையில் பாதி இறந்து விட்டது. மீதி இரும்புச் சங்கிலியால் கட்டுண்டு உள்ளனர்.”

வீரமற்று சோரம் போக… வழி தெரியாமல் இருந்தான் ராமகுப்தன்.

பாடலிபுத்திரத்தில்…

‘அண்ணன் மகாராணியுடன் சென்று மூன்று நாட்களில் திரும்பி வருவதாகக் கூறிச்சென்றவன் இன்னும் திரும்பவில்லையே’ என்று வியந்தான்.
‘வாரங்கள் இரண்டு சென்றதே!’ என்று யோசித்தான்.

உடனே சிறு படை ஒன்றைச் சேர்த்துத் தேடலானான்.
குப்த ராஜ்ய உளவாளிகள் பெரும் திறமை வாய்ந்தவர்கள்.
சந்திரகுப்தன் அவர்கள் துணை கொண்டு தேடினான்…
சக நாட்டு ருத்திரசிம்மன் அவர்களைச் சிறைப்பிடித்ததைக்   கேள்விப் பட்டான்.
விரைவில் சக நாடு எல்லையை அடைந்தான்.

ராமகுப்தனைக் காவல் காக்கும் ருத்திரசிம்மன் வீரர்கள்
சந்திரகுப்தனையும் அவனுடன் இருந்த இருபது வீரர்களையும் பார்த்தனர்.
குடிபோதையில் கண் மண் தெரியாமல் சிரித்தார்கள்.

‘ஹேய்… நீ குப்தனா? இது தான் உன் பெரும் படையா?”
அனைவரும் பெரிதாகச் சிரித்து ஓய்ந்தனர்.

“உனது மகாராஜாவும் ராணியும் எப்படி சுகமாக இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டுமா?”

அவர்களை ராமகுப்தன் இருப்பிடம் அழைத்துச் சென்றனர்.
சங்கிலியால் கட்டப்பட்டு நாய்போல் இருந்த அண்ணனைக் கண்டு சந்திரகுப்தனுக்கு,  துக்கத்துடன் கோபமும் வந்தது. அதை அடக்கிக்கொள்ளுமுன் துருவாதேவி அழுகையுடன் அலறத் தொடங்கினாள்:

“சந்திரகுப்தா.. தான் அரசாள்வதற்காக உங்கள் அண்ணன் என்னை சக ராஜன் ருத்திரசிம்மனுக்குக் கொடுத்து விட முடிவு செய்து விட்டார்”- ஓலமிட்டாள்.

சந்திரகுப்தன் திடுக்கிட்டான்.

“இது என்ன அநீதி அண்ணா? இதை எவ்வாறு செய்யத் துணிந்தாய்? நமது தந்தையின் பெருமையை நினைத்துப் பார். கேவலம் அரசாட்சிக்காக அன்பும் அழகும் நிறைந்த மனைவியை விட்டுக் கொடுப்பாயோ? வெட்கம் வெட்கம்”

ராமகுப்தன்:
“போதும் உன் அறிவுரை.. இவள் என் மனைவியாய் இருந்து நான் உயிர் விடுவதை விட, குப்த அரசனாக இருந்து புகழ் பெறுவதையே விரும்புகிறேன்”

துருவாதேவி இதைத் தாங்கமுடியாமல் மண்ணில் விழுந்தாள்.

சந்திரகுப்தன் சொன்னான்:
“தேவி. நான் இது நடக்க விடமாட்டேன். போர் புரிந்து உங்களை மீட்பேன்”

முன்னாளில் தன் இரு கரங்களினால் ஒரு சிங்கத்தையே கொன்ற சந்திரகுப்தன்.. உடனே தனது கத்தியை விசிறிப் போர் புரிந்தான். காவலர்களைக் கொன்றான்.

ஆயினும் காட்டைச் சுற்றி சூழ்ந்திருந்தான் சக நாட்டுப் பெரும் படையுடன் ருத்திரசிம்மன்.

சந்திரகுப்தன் :”உங்கள் மன்னனிடம்… துருவாதேவியை அழைத்து வந்திருப்பதாகக் கூறி என்னைக் கூட்டிச்செல்”

சந்திரகுப்தன் ஒரு பெண் வேடம்  பூண்டு சக வீரர்களிடம்.. தன்னை ருத்திரசிம்மனிடம் அழைத்துச் செல்லப் பணித்தான்.

பீமன் திரௌபதை போல் வேடம் தரித்துச் சென்று கீசகனைக் கொன்றதுபோல்…

சந்திரகுப்தன் ருத்திரசிம்மனை அடைந்து போர் புரிந்து தன் வெறும் கைகளினாலே ராக்ஷசன்போன்ற அவன் கழுத்தை நெரித்துக் கொன்றான்.

தோல்வியுற்ற சக நாட்டு சேனை ஓட்டம் பிடித்தது.

அண்ணனையும் துருவாதேவியையும் மீட்டு பாடலிபுத்திரம் அடைந்தான்.

பாடலிபுத்திரத்தின் தெருக்கள் திருவிழாக்கோலம் பூண்டன.
சந்திரகுப்தனின் சாகசங்களை மக்கள் கொண்டாடினர்.
அவனது உருவப்படத்தை தெருக்களில் வரைந்து மகிழ்ந்தனர்.
அதே சமயம் ராமகுப்தனின் கோழைத்தனத்தை வெறுத்தனர்.
சில தெருக்களில் அவனது கொடும்பாவி வைத்திருந்தனர்.
‘நாட்டாசைக்காக மனைவியைப் பயணம் வைத்த துரோகி’ என்று மக்கள் அந்த கொடும்பாவியில் காரி உமிழ்ந்தனர்.

ராமகுப்தனுக்கு வருத்தம், கோபம், குற்ற உணர்ச்சி, பொறாமை எல்லாம் ஒன்று சேர்ந்திருந்தது.
தன்னை மக்கள் தூற்றுவது ஒரு புறம்.
சந்திரகுப்தனை மக்கள் ஏற்றுவது மறுபுறம்.

அரசவை கூடியது.

ராமகுப்தன் நடந்த நிகழ்ச்சியை தனது வெற்றியாக அறிவிக்க முயன்றான்.

துருவாதேவி எழுந்து பேசினாள்:
ஒரு காளி சிங்கத்தின் மேலிருந்து இறங்கியதைப் போன்ற தோற்றம்..

‘மந்திரிமார்களே…மக்களே..இந்த துரோகம்… அநீதி நீங்கள் அறிவீர்கள்..
ருத்திரசிம்மனிடம் என்னை அனுப்பத் துணிந்த இந்த அற்பனுக்கு என் மீது இனி எந்த தார்மீக உரிமையும் இல்லை. அந்த மணம் முறிந்து விட்டது. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் இன்றும் எல்லா அரசர்களும் பின்பற்றி வரும் ஒரு தத்துவம். அதில் அவர் கூறியது: ‘ஒரு பெண்ணுக்கு மறுமணம் செய்து கொள்ள காரணங்கள்: கணவன் மனைவியை விட்டுக் கண்காணா இடம் சென்றாலோ, அரசனுக்கு எதிராகக் குற்றம் செய்தாலோ, மனைவியின் உயிருக்கு ஊறு விளைவித்தாலோ, ஆண்மைக் குறைவு உள்ளவனாக இருந்தாலோ’”

மேல் மூச்சு வாங்கியதால் அவளது உடல் துடித்தது.
சமஸ்கிருதப் பாண்டியத்தியம் பெற்றிருந்ததால், அவள் மேலும் கூறினாள்:

“இதே காரணங்களை பராசர் முனிவரும் புராணங்களில் கூறியிருக்கிறார்
இன்று நான் ராமகுப்தன் மனைவியுமல்ல.. அவன் எனக்குக் கணவனுமில்லை.”
என்றாள்.

அவையினர் அனைவரும் ஆமோதித்தனர்.
‘துருவாதேவி வாழ்க’ என்று பெருங்கோஷமிட்டனர்.
ராமகுப்தன் தலை குனிந்தான்.

அன்று மாலை…இடம் ராமகுப்தனின் அறை:

“மந்திரி..எனக்கு இப்படி ஏன் நிகழ்ந்தது? இதற்கு  ஏதாவது செய்யவேண்டுமே”- என்றான்.

பழைய மந்திரியை அழைத்தான்.
அந்த மந்திரி..
அதே கொடிய மந்திரி..
பொய்யுரைத்து ராமகுப்தனை அரசனாக்கிய அதே மந்திரி.

“ராமகுப்தா… உனது கோழைத்தனம் உனது முட்டாள்தனத்தால் இன்று பகிரங்கமாகி நாடு முழுதும் பரவி நாறி விட்டது”

ராமகுப்தன் ஒடிந்து கிடந்தான்.

“எனினும் இன்றும் நான்தானே ராஜா? ஏன் ஒருவரும் என்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை”

மந்திரி சிந்தித்தான்.
கொடுமதியானுக்கு தீய எண்ணங்கள் எளிதாக உருவெடுக்கும்.
மந்திரி சொன்னார்:

“ஒன்று மட்டும் நிச்சயம். உங்களது தம்பி இங்கு இருக்கும்வரை உனக்கு மரியாதையும் கிடைக்காது. சந்தோஷமும் இருக்காது.”

ராமகுப்தன் :
“நீ சொல்வது சரிதான். அவனை நாடு கடத்தி விட வேண்டும்”

மந்திரி தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு மேலும் கூறலானான்:
“அப்படிச்செய்தால் …சந்திரகுப்தன் ஒரு படையைத் திரட்டி உன்னை எளிதில் வென்று ஆட்சியைக் கைப்பற்றுவான்.
ஆனால்…அவன் திடீரென இறந்து போனால் ????
அனைவரும் நாளடைவில் அவனை மறந்து போவர்.
சரித்திரத்தில் அவனுக்கு ஒரு வரி கூட இருக்காது.
பிறகு…
காலம் உன்னை கேவலமாக்கியது.
அதே காலம் உங்களைக் கோலமிட்டு அலங்கரிக்கும்.
குப்தர்களின் பொற்காலம் உங்களால் உருவாகும்.
அது உங்களால்தான் என்று சரித்திரம் பேசும்”

மந்திரியின் வார்த்தை ஜாலம் ராமகுப்தனை ஈர்த்தது.

“மந்திரி.. நீ சொல்வது சரி தான்.. ஆனால் சந்திரகுப்தன் நெடுங்காலம் வாழ்வானே!” என்று நொந்து கொண்டான்.

மந்திரி: ‘அவனது விதியை மாற்றிவிட்டால் நமது விதியும் மாறும்.
ஒரு வேளை… சந்திரகுப்தன் தூக்கத்திலேயே மர்மமாக இறந்து விட்டால்?”.

ராமகுப்தனுக்கு விளங்கிவிட்டது.

மந்திரி தொடர்ந்தார்:

“இன்றே! நீங்கள் அவனைக் கொல்ல வேண்டும்.
இன்றிரவே!
அவனில்லாமல் அரசாள நான் உங்களுக்கு உதவுவேன்”

அன்றிரவு…
குப்த சாம்ராஜ்யத்தின் எதிர் காலத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் இரவு.
நள்ளிரவு கடந்து இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.
இருட்டு எங்கும் பரவி ஒரு பயங்கரம் நிகழப் போவதை அமைதியாக அறிவித்தது.
பேயும் உறங்கும் வேளை.
சந்திரகுப்தன் தனது அறையில் படுத்திருந்தான்.
ஒரு சிறிய விளக்கு முணுமுணுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தது.
‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது’ என்பதைப் போல்…சந்திரகுப்தனுக்கு
உறக்கம் வரவில்லை .
‘துருவாதேவி’யை எண்ணி அவன் மனம் அலை பாய்ந்தது.
‘விதி நம் வாழ்வில் எப்படி விளையாடிவிட்டது?
துருவாதேவி எனக்கு மனைவியாயிருப்பாள்..
ஆனால் ராமகுப்தனை மணம் செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டது..
இப்படி ருத்திரசிம்மனுக்குக் கொடுக்க ராமகுப்தன் முனைந்தது’
இந்த எண்ணங்கள் அவனைத் தூங்கவிடவில்லை.

அந்த நேரம் .. ஒரு கருப்பு உருவம் சத்தம் செய்யாமல் அவன் படுக்கையை நெருங்கியது.
அதன் கைகளில் நீண்ட வாள்.
அந்த தூங்காவிளக்கு அந்த வாளை மட்டும் காட்டியது.
ஓங்கிய வாள் சந்திரகுப்தனின் தலையைக் கொய்திருக்கும்.
சந்திரகுப்தன் பந்துபோல் பாய்ந்து .. வந்தவனின் கரத்திலிருந்த வாளைப் பிடுங்கி..

‘இந்நேரத்தில் என்னைக் கொல்ல வந்திருக்கும் துஷ்டா..” என்று கூறியபடி..

அவன் வயிற்றில் வாளைப் பாய்ச்சினான்.
அவனது அலறல் சந்திரகுப்தனைத் தாக்கியது.
காவலர் விளக்குப் பந்தங்கள் கொண்டு வந்தனர்.

இரத்த வெள்ளத்தில் ராமகுப்தன்.
உயிர் பறந்து விட்டது..
சந்திரகுப்தன் துடி துடித்துப் போனான்.
அண்ணனின் உடலை மடியில் தாங்கியபடி.
‘ஐயோ அண்ணா… “அலறினான்.

“என்னைக் கொல்ல நீயே வந்தாயா? ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் இந்த நாட்டை விட்டே சென்றிருப்பேனே. நேராகக் கேட்டிருந்தால் என் உயிரையும் தந்திருப்பேனே. துருவாதேவி கிடைக்காமல் போனதுமுதல் நான் ஒரு நடைப்பிணமாகத்தானே இருக்கிறேன். ஐயோ .. என்ன செய்வேன்..தந்தையார் எவ்வளவு சொல்லியிருந்தார்? ‘உன் அண்ணனைக் காப்பதற்காக உன் உயிரையும் கொடுக்கத் தயங்காதே’- என்று சொன்னாரே. இன்று  உன் உயிரை நானே பறித்து விட்டேனே” – புலம்பினான்.

உண்மையான பாசமுள்ள தம்பியும் துரோகம் நிறைந்த அண்ணனும் ஒரு தாய் வயிற்றில் பிறப்பது கதை போல் தோன்றினாலும்… நிகழ்ந்தது.

மந்திரி வந்தார்.

“சந்திரகுப்தா! அண்ணன் இறந்து விட்டான்.
தம்பியையே கொலை செய்ய முற்பட்டது துரோகத்தின் எல்லை.
அவன் கொல்லப்பட்டது அவனது துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனை.
நீ கலங்காதே!”

மேலும்:
“நான் ராமகுப்தனின் ஆதரவாளனாக இது நாள்வரை இருந்தேன்.
ஆனால் இன்று ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
தங்கள் தந்தை… தந்தை என்ற நிலையில் குடும்பத்தில் ஒற்றுமை நிலவவேண்டும் என்று விரும்பினாலும்..மன்னன் என்ற நிலையில் தாங்கள்தான் அரசனாகத் தகுதியாளர் என்றும் கருதினார். தங்களை மன்னனாக்க என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் எனது சுயநலம் கருதி ராமகுப்தனுக்கு ஆதரவளித்தேன்.
இன்று அவன் இறந்ததும் உங்கள் பக்கம் சாய்கிறேன் என்று நீங்கள் எண்ணக்கூடும்.
அனால் உண்மையைக் கூறாமல் இறந்தால் என் கட்டை வேகாது. இனி எனக்குத் தாங்கள் எந்த தண்டனை அளித்தாலும்  ஏற்றுக் கொள்ளத் தயார்.”
மந்திரியின் வாக்கில் சத்தியம் இருந்தது.
மன்னன் மன்னித்தான்.

சில நாட்கள் சென்றன.
சந்திரகுப்தன் அரண்மனைப் பூங்காவில் இருந்த மணிமண்டபத்தில் அமர்ந்திருந்தான்.
‘என் வாழ்வில் எப்படிப்பட்ட சோகங்கள் நடந்து விட்டது’  என்று எண்ணினான்.
பூங்காவில் வண்ண மலர்கள் குலுங்கிக் கிடந்தது.
வாடைக் காற்று பூங்காவில் அனுமதியின்றி நுழைந்தது.
அத்துடன் ஒரு சுகந்தம் வீசியது.
மெல்லிய சலசலப்பு அவன் கவனத்தைக் கவர்ந்தது.
துருவாதேவி அவன் அருகில் வந்தாள்.
சந்திரகுப்தன் மனதில் பலவித எண்ணங்கள் அலைமோதின.
துக்கம், பச்சாதாபம், சுயவெறுப்பு….

‘தேவி … என்னை மன்னித்துவிடுங்கள்… அண்ணனை நான்..” சொல்வதற்குள்…

துருவாதேவியின் மலர்க்கரங்கள் அவனது இதழைப் பொத்தியது.

“மன்னா… நீங்கள் ஒன்றும் சொல்லவேண்டாம்..இறைவன் நம்மை ஒன்று சேர்ப்பதற்காக இப்படிச் செய்தான் என்று நினைக்கிறேன்.
உங்கள் பண்பும், நற்குணமும், வீரமும், தெய்வத்தன்மையும் என் மனதில் என்றும் கோவிலாக இருக்கிறது. என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் உங்கள் அடிமை.”

சந்திரகுப்தன் ஒரு நொடியே யோசித்தான்.
‘இந்த மலர் ஏன் வாடவேண்டும்?
நமது தோட்டத்தில் என்றும் மணம் பரப்பவேண்டும்’

துடித்த அவள் இதழ்கள் அவன் இதழ்கள் சேர அடங்கியது.
பல காலம் காத்துக்கிடந்த இரு கிளிகள் அன்பைப் பரிமாறிப் பசியாறியது.

சந்திரகுப்தன் அரசனாக முடி சூடினான்.
அதற்கு முன் துருவாதேவியை மணந்தான்.
ராமர் பட்டாபிஷேகம் அயோத்தியை மக்களுக்குக் கொடுத்த மகிழ்ச்சி அன்று பாடலிபுத்திரத்திலும் இருந்தது.

 

 

 

 

 

 

(சந்திரகுப்தன்- துருவாதேவி)

இருவரும் ராஜா-ராணியாகி இந்தியாவின் பொற்காலத்தை உருவாக்கினர்.

  • சரித்திரம் அதைச் சொல்வதற்குக் காத்திருக்கிறது…

ரோடு – குறும் படம் அல்ல – பாடம்

 

வாழ்க்கை , பொண்டாட்டி எல்லாம்  சில சமயம் சொகுசா  இருக்கும்;  பல சமயம் கரடு முரடா இருக்கும். 

கொஞ்சம் அமெச்ரிசூரிஷ் ஆக இருந்தாலும் , இந்தக் கருத்தை விளக்கும்  குறும்படம் – நல்ல பாடம்.

எமபுரிப்பட்டணம் -எஸ் எஸ்

Related image

சூரியதேவனின் விமானம் விஸ்வகர்மாவின் தலைநகரின் மேலே ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தது. உலகையே தினம் வலம் வரும் போது ,  இவ்வளவு அழகு மிகுந்த பிரதேசத்தை நாம் எப்படிப் பார்க்காமல் இருந்திருக்கிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். சாதாரணமாக இருந்த தன் மாளிகையை விஸ்வகர்மா நொடிக்குள் இந்திரனுடைய அமராவதிப்  பட்டணத்தை  விட அழகாக மாற்றியிருக்கிறார் என்பது அவனுக்குப் புலனாயிற்று.

திடீரென்று  சற்றுத் தூரத்தில் அவன் விமானத்தை நோக்கி நுற்றுக்கணக்கான பறவைகள் வருவதுபோல் தெரிந்தது. சற்று உற்று நோக்கினான். அவை பறவைகள் அல்ல  – அனைத்தும் விமானங்கள் என்றும் புரிந்தது. ‘ எதற்காக இத்தனை விமானங்கள்? என்னைத் தாக்க வருகின்றனவா? அப்படியானால் அவற்றைச் சுட்டெரித்து விடவேண்டியதுதான்’  என்று முடிவு கட்டினான்.

விமானங்கள் அருகில் வந்ததும் சூரியதேவன் முகத்தில் இருந்த ரத்தினச்சிவப்பு  மஞ்சள் நிறப் புன்சிரிப்பாக மாறியது.  ஒவ்வொரு விமானத்திலும் அழகுத் தேவதைபோல பெண்கள். வண்ண வண்ண மலர்களையும் வண்ணப் பொடிகளையும் அவன் மீது தூவிக் கொண்டே இருந்தனர். வாசனைப் புகைகளையும் பன்னீரையும் அவன் மீது பரவ விட்டுக்கொண்டிருந்தனர். தங்கத் தாம்பாளத்தில் ஆரத்தி வைத்து வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

சூரியதேவனுக்குத் தான் ஒருமுறை கைலாயத்தில் பார்வதி தேவியின் நந்தவனத்திற்குச் சென்றபோது அங்கிருந்த அழகு ததும்பிய சூழல் அப்படியே மீண்டும் வருவதுபோல் இருந்தது. அந்த நந்தவனத்தையும் விஸ்வகர்மாதான் நிர்மாணித்தார்  என்று அன்று பார்வதிதேவி கூறியதும் நினைவில் வந்தது.

 அந்தப் பெண்கள் வந்த விமானங்கள் அவனை அரைவட்ட வடிவமாகச்  சுற்றிக்கொண்டே அவனுடன் பறந்து வந்தன.  அடுத்து வந்தது இன்னொரு விமான வளையம். அவற்றில் இருப்பவர்களைக் கண்டு சூரியதேவன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். ஒவ்வொரு விமானத்திலும் ஒரு தவ சிரேஷ்டர். ஒவ்வொருவரும் மந்திரங்களைச் சொல்லி அவன் மீது கமண்டலத்திலிருந்த நீரை அவன் மீது தெளித்து ஆசி வழங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த விமானங்கள்  ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. ஒவ்வொரு முனிவரும் அவன் முன் நின்று வாழ்த்து மந்திரத்தைச்  சொல்லி அவனை வலம் வந்தனர்.

முதலில் வந்தவர் அகத்திய முனிவர்.

“ ஆதித்யா ! உன்னை என் ஹிருதயத்தில் வைத்துப் போற்றுகிறேன். நானும் என் சீடர்களும் கூறும் இந்தப் புண்ணிய மந்திரங்களைச் செவிமடுப்பாயாக! உன் பெருமைகளைக் கூறும் இந்த ஆதித்ய ஹிருதய மந்திரங்கள் பிற்காலத்தில் தேவர், கந்தர்வர், மனிதர் அனைவருக்கும் வழி காட்டும் மந்திரங்களாக விளங்கும் ”  என்று வாழ்த்தி அருளினார்.

Image result for aditya hrudayam

 

நல்வினைகளையும் , வெற்றியையும் ,மங்களத்தையும், மாங்கல்யத்தையும்நீண்ட ஆயுளையும், சிறப்பினையும் தருவதுடன்   பகைவர்களையும், பாவங்களையும், துன்பங்களையும்,கவலையையும் அழிக்கவல்ல  ஆதித்யஹ்ருதயத்தை நாள் தோறும் துதிக்கவும்!

தேவரும் அசுரரும் வணங்கும்  உலகின் நாயகனை  மூவுலகத்திற்கும் ஒளிதரும் சூர்யதேவனைத்  துதியுங்கள் !

அனைத்து தேவதைகளின் உருக்கொண்டவரும், பிரகாசமானவரும் ஆன சூரியபகவான் தன் ஒளித்திறத்தால்  உலகைக் காக்கின்றார்.

இவர்தான் பிரம்மா, விஷ்ணு, சிவன், கந்தன், இந்திரன்,குபேரன், காலதேவன், எமன்,சந்திரன், வருணன் மற்றும் அனைத்து  உயிர்களின் அதிபதியாவார்.

இவர்தான்  பித்ரு தேவதை, வசுக்கள், சாத்யர்கள், அஸ்வினி தேவர்கள்மருத்துக்கள்.மனு, வாயு,அக்னி. மற்றும், உலக மக்களின் உயிர் காக்க , பருவ காலங்களைப் படைத்து ஒளியைக் கொடுப்பவர்.

இவருக்கு மற்ற பெயர்கள் ஆதித்யன், ஸவிதா, ஸூர்யன், ககன்,பூஷா, கபஸ்திமான், ஸ்வர்ண சத்ருசன்பானு, திவாகரன்.

இவருக்கென்று பச்சைக் குதிரை உண்டு. ஆயிரம் தீ நாக்குகள் உண்டு.ஏழு குதிரை உண்டு .ஏழு ஒளிக்கிரணங்கள்  உண்டு. இருளைப் போக்கி மங்களம் தரும் பன்னிரு ஒளிக்கற்றைகள் உண்டு.

இவர் தங்கமயமான அண்டத்தைத் தன் கர்ப்பத்தில் தாங்கியவர்.குளிர்ச்சியைத் தருபவர். அதே சமயம் நெருப்பாய் எரிகிறவர். ஒளிமயமானவர்.அக்னியைக் கர்ப்பத்தில் கொண்டவர். பனியை விலக்கும் ஆதவன். அதிதியின் புதல்வர்.

இவரே ஆகாயத்தை  ஆள்பவர். தமோ என்னும் இருளை  விலக்குபவர். ருக்,யஜுர் ,சாம வேதங்களைக் கடந்தவர். மழையைப் பொழிவிக்கின்றவர்.வருணனின் தோழர். விந்திய மலை மேலே வான  வீதியில் பயணம் செய்பவர்.

இவர் வெப்பமாய் கொளுத்துபவர் . வட்ட வடிவானவர். தங்க மயமானவர். விரோதிகளை அழித்து எரிக்கும் குணமுடையவர். உலகத்தின் கவியானவர். மிகுந்த ஜோதி படைத்தவர். சிவப்பு நிறத்தவர். எல்லா உயிர்களையும் தோற்றுவிப்பவர்.

இவர் நட்சத்திரங்கள், கிருகங்கள் இவற்றின் தலைவர். உலகத்தை உருவகித்தவர். தேஜஸ் நிறைந்தவர். பன்னிரு வடிவுள்ளவர்.

உங்களுக்கு எங்களது வணக்கங்கள்!

கிழக்கில் மலைகளில் உதயமாகி மேற்கில் மலைகளில் மறையும் சூர்யனே உனக்கு வணக்கம். ஒளிக்கூட்டங்களுக்குத் தலைவனே வணக்கம். பகலுக்கு அதிபதியே வணக்கம்.

வெற்றியையும் வெற்றியோடு நலனையும் தருபவருக்கு வணக்கம்.வணக்கம்.

 பச்சைக்குதிரை கொண்டவருக்கு, ஆயிரம் கிரணங்கள் படைத்தவருக்கு அதிதியின் புதல்வருக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.

உக்கிரம் வாய்ந்தவருக்கு வணக்கம். வீரம் செறிந்தவருக்கு வணக்கம். வண்ணம் நிறைந்தானுக்கு வணக்கம். மார்தண்டாயானுக்கு வணக்கம். தாமரையை மலரச் செய்தானுக்கு வணக்கம். வணக்கம்.

 

அனைத்து முனிவர்களும் தங்கள் விமானங்களிலிருந்து மந்திர கோஷங்கள் மூலம் அவனுக்கு முகமன் கூறியது  சூரியதேவனைப் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. தன்னைப் புகழ்ந்துரைக்கும் சொற்களைக் கேட்டதும் அவன் பணிவு மேலும் அதிகமாகி இரு கைகளையும் கூப்பி அனைவரையும் வணங்கிய கோலத்தில் விஸ்வகர்மாவின் அரண்மனை முற்றத்தில் வந்து இறங்கினான்.

IMG_1106

அங்கே அழகே உருவெடுத்து வந்தது போல, கையில் மாலையுடனும் கன்னத்தில் வெட்கப் பொலிவுடனும் சூரியதேவனை வரவேற்கக் காத்திருந்தாள் விஸ்வகர்மாவின் மகள்  ஸந்த்யா .

 

இரண்டாம் பகுதி

Image result for jeyakanthan sketch

ஜெயகாந்தன் பேச எழுந்தார்.

அனைவருக்கும் வணக்கம்.  எந்த மேடையிலும் பேசுவதற்கு நான் பயந்தவனல்ல. பேசத் தெரிந்த நாள் முதல் பேசிக் கொண்டே இருந்தேன். பின்பு எழுதத்   தொடங்கினேன். என் எழுத்து மற்றவர்களுக்குப் பிடித்ததோ இல்லையோ என்று நான் கவலைப்படவில்லை. எனக்குப் பிடித்தது. எழுதிக் கொண்டே இருந்தேன். பேச்சு எழுத்து இரண்டையும் என் இரு கண்களாகப் பாவித்து என்னை நானே நடத்திக் கொண்டிருந்தேன்.

நான் வெற்றி அடைந்தேன். இறுமாப்புகொண்டேன். கோபத்தில் ஆழ்ந்தேன். வெறுப்பையும் தொட்டேன்.

எத்தனையோ பேர்களை எடுத்து எறிந்து பேசியிருக்கிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு பத்மபூஷன் விருது வழங்கியதற்காக நடைபெற்ற விழாவில் நான் தமிழைத் தாழ்த்தி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பேசினேன்.  அதுவும் எப்படி?

‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுதவேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக்கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’

இப்படிப் பேசியதற்காக தமிழ் உலகம் என் மேல் அவ்வளவாகக் கோபம் கொள்ளவில்லை. சிலர் மட்டும் வாய் வலிக்க வைதார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் ‘இவன் தன் தாயின் அன்பை நன்றாக அறிந்தவன், தாயைத் திட்டினாலும் அவள் காலடியிலேயே விழுந்து கிடப்பவன்’  என்று நம்பி என்னை மன்னித்தார்கள்.

அதிலிருந்து ஒரு வைராக்கியம் கொண்டேன். பேசுவதையும் எழுதுவதையும் குறைத்துக்  கொண்டேன்,  ஓரு பரிகாரம் போல.

அதனால்தான் என்  80 வது  வயது விழாவின்போது மற்றவர்கள் நிறையப் பேசினார்கள். நான் ஒரு நிமிடம்தான் பேசினேன். அதுவும் என்னவென்று தெரியுமா?

‘’இங்கே என்னை அழைத்தபோது எல்லோரும் நன்றி வணக்கம்தான் சொல்லுவார்கள் என்று அழைத்தனர்.. ஆனால் இங்கே எல்லோரும் நிறையப் பேசினார்கள்.. அதனால் நான் நன்றி வணக்கம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்’’ என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டேன்.

பேச்சு குறைந்தது.

“எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் வளமும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன். எதிர்கால சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன். வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில், நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்” என்றெல்லாம்  என் எழுத்தைப்பற்றி வர்ணித்த நான் எழுதுவதையே நிறுத்திவிட்டேன்.

எழுத்தும் குறைந்தது.

என் குறை நிறை எல்லாம் எனக்குள் இருக்கும் பொக்கிஷமாக வைத்திருந்தேன். யாருக்கும் தெரியாது என்ற இறுமாப்பு வேறு.

ஆனால்  என்னை அக்குவேறு   ஆணிவேறாக   அலசிப் பார்த்த நண்பர் மேடையில் அமர்ந்திருக்கிறார். அவர் என்னை அழைத்த போது எனது தீர்ப்பு நாள் வந்துவிட்டது என்று உணர்ந்தேன். அப்போது எனக்கு நான் எழுதிய அக்கினிப் பிரவேசம் கதை  நினைவிற்கு வந்தது.

 நானும் அக்கினிப் பிரவேசத்திற்குத் தயாராகி இங்கு வந்தேன். என்னை நானே புடம்போட இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று உணர்ந்தேன். 

அது மட்டுமல்ல , நான் எழுதிய ” சுமை தாங்கி ” என்ற கதையை உங்களுக்குச் சொல்லவேண்டும். 

Image result for a young boy of 10 years dies in accident in tamilnadu

ஒரு போலிஸ்காரன், பக்கத்தில் இருக்கும் காலனியிலிருந்து  வந்த யாரோ ஒரு பத்து வயசுப் பையன் லாரியில் அடிபட்டு இறந்ததைப் பார்க்கிறான். குழந்தையே இல்லாத அவனுக்கு அது கூட  வலியாக இல்லை. அது யாருடைய குழந்தை என்று அந்தக் காலனியில் விசாரிக்கும்போது அவனைப் பெற்ற  தாய் எப்படித் துடிப்பாள் என்பதை நினைத்துக் கலங்குகிறான் போலீஸ்காரன்.  

அவனைக் காலனின் தூதுவன் என்றே நான் அழைத்தேன். 

முடிவில்  தன் கைக்குழந்தைக்குப்  பால் கொடுத்துக் கொண்டிருக்கும்  ஒருத்தியிடம் தயங்கிக்கேட்க , அவள் தன் பெரிய பையன் காசு எடுத்துக் கொண்டு ஐஸ் வாங்கச் சென்றிருப்பதாகக் கூற , அவன் தான் லாரியில்…  என்று போலீஸ் சொன்னதும் ‘ அட ராசா ‘ என்று அவள் ஓடுவதைப் பார்த்து இதயம் வெடிக்க நின்றான்.

ஆனால் அப்போது அடிபட்ட இடத்திலிருந்து வேறொரு குரல்,                    ‘என்னை விட்டுட்டுப் போயிட்டியே ‘ என்ற அலறுவதைக் கேட்டதும், கைக்குழந்தைக்காரி, ‘அது என் பிள்ளை இல்லை’ என்று சிரித்துக் கொண்டே திரும்புகிறாள். 

போலீஸ்காரன் போய்ப் பார்த்தால், அங்கே அவன் மனைவி அழுது கொண்டிருக்கிறாள். ‘எனக்குத்தான் குழந்தை இல்லை, யாரோ பெத்த பிள்ளைக்காக அழக் கூட உரிமையில்லையா என்று கேட்டுக் கொண்டே போலீஸ்காரனுடன் வீடு திரும்புகிறாள். அப்போது ‘என்னைப் பெத்த ராசா போயிட்டியே ‘ என்று முன்னே கேட்ட  அதே கைக்குழந்தைக்காரியின் குரல் மீண்டும் கேட்கிறது. 

இந்தக் கதையில் நான் எமனை நன்றகத் திட்டியிருப்பேன்.

” ஒருத்தி பத்து மாசம்  சுமந்து பெத்த குழந்தையை, இப்படிக் கேள்வி
முறையில்லாம எடுத்துக்கக் கடவுளுக்குத்தான் என்ன
நியாயம்?..

சீசீ! கடவுள்தான் உயிருங்களை உண்டாக்கறார் – இந்த யமன்
தான்… யமனை உண்டாக்கினது யாரு? அவன் இப்படி
அக்குரும்பு பண்ண இந்தக் கடவுள் எப்படிச் சம்மதிக்கிறாரு?’

‘கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். கடை கெட்ட
அரக்கனுக்குமில்லாத, சித்திரவதையை ரசிக்கிற குரூர மனசு
படைச்சவன்னு. இல்லேன்னா, சாவுன்னு ஒண்ணு
இருக்கும்போது பாசம்னும் ஒண்ணை உண்டாக்குவானா?…’

‘வாங்கின ஐஸ்கிரீமைத் தின்னு முடிக்கறதுக்குள்ளே ஒரு
கொழந்தைக்குச் சாவு வரலாமா? அட, இரக்கமில்லாத
தெய்வமே! உன்னைத்தான் கேக்கறேன்! வரலாமா சாவு? ‘

அவள் தன் இதயத்தில் தாங்கும் உலகத்தின் சுமை –
தாய்மையின் சோகம் – அதனை அவனால் தாங்க
முடியவில்லை.

அதனால், நான் எமதர்மராஜனிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். சாவுகூடாது என்று அல்ல. சாவை ஏற்றுக்கொள்ளும் தைரியத்தை மனித குலத்திற்குத் தாருங்கள் என்பதைத்தான். 

அதைப்போல, எனக்கு முன்னால் பேசிய நண்பர்,  நரகத்தில் வாடும் நண்பர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டும் என்றார். அந்தக் கொள்கையை நான் ஏற்கவில்லை.  அதற்குமாறாக அன்பின் பாதையை அவர்களுக்குக் காட்டவிரும்புகிறேன். வாழ்வில் மட்டுமல்லாமல் அதற்குப் பின்னும் துடிக்கும் உள்ளங்களுக்கு நம் அன்பைப் பரிசாக அளிப்போம். அந்த அன்பு அவர்களுக்குப் பிடி சோறாகமாறி, தைரியத்தைத்தந்து அவர்கள் மனதைக் குளிர்விக்கும்.

 என்னை நம்புங்கள். அன்பை அனைவருக்கும் தாருங்கள்.

அல்லது  

‘என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ ‘ 

இல்லை . நன்றி வணக்கம். 

பேசி அமர்ந்தார் ஜெயகாந்தன். 

எமன் கண்ணைக்காட்ட எமி பேசஎழுந்தாள்.

(தொடரும்)