இலக்கிய வாசல் – மூன்றாம் நிகழ்ச்சி

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற 

பிரபல எழுத்தாளர்   பிரபஞ்சன் அவர்களுடன் 

ஒரு நேர் காணல் !

image
image

இடம் 

 ஸ்ரீனிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் சாலை ஆழ்வார்ப்பேட்டை , சென்னை 600018 

நாள்

சனிக்கிழமை 20 ஜூன் 2015 மாலை 6.30 மணி 

அவருடைய நாவல்களைப் பற்றிய விளக்கங்களை  அவரிடமே நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள ஓர்  அருமையான சந்தர்ப்பம்!

தங்கள் வினாக்களை முன்னதாகவே அனுப்பினால் சிறப்பாக இருக்கும். 

வினாக்களை  தங்கள் பெயர், கைபேசி எண்ணுடன்  ilakkiyavaasal@ gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்!!

ஷாலு மை  வைஃப்

image

“ஷாலு உன்னுடைய தீர்மானத்தில் மாற்றமில்லையா? ”

என் கணவன் என் தோழன் “ சீரியலில் சூர்யா,  சந்தியா கிட்டே  கெஞ்சுவது போல் கேட்டுக் கொண்டிருந்தேன் . 

"குருஜினிக்கு ஆயிரம் சிஷ்ய கேடிகள் சாரி கோடிகள்  இருக்கும் போது சிங்கப்பூர் போக உன்னை ஏன்  தேர்ந்தெடுக்கணும்? ”

 இந்தக் கேள்வியை நான் ஆக்டிவ்  வாய்ஸில பாசிவ்  

வாய்ஸில மற்றும் பல

வாய்ஸில கேட்டும் ஷாலுவிடமிருந்து சிறு புன்னகைக் கீற்றைத் தவிர எந்த மறுமொழியும் வரவில்லை. நான் நவராத்திரி சிவாஜி மாதிரி நவ ரசத்தையும் பிழிஞ்சது தான் மிச்சம். 

திடீரென்று ஞாபகம் வந்தது. இதுக்கு சரியான ஆள் ஷிவானி தான். அவள் அடம் பிடிச்சா யாரும் அவ கிட்டே குறுக்கப் பேச முடியாது. அவளிடம் நன்றாகப் புரியும்படி பத்து நிமிஷம் சொல்லி அவளை ஷாலுவிடம் அனுப்பி வைத்தேன். ‘அப்பா சொன்னேன்னு மட்டும் சொல்லிடாதே !’ என்று நன்றாக எச்சரித்து அனுப்பினேன். 

“கவலைப் படாதே அப்பா ! அம்மா நம்மளை அம்போன்னு விட்டுட்டு சிங்கப்பூர் போக மாட்டா’ என்று துர்கா படத்தில் பேபி ஷாலினி            ( அவங்களே தான் ! நாளைய டாப் டக்கர் ஹீரோயின் !  அஜீத் மச்சினி – குமுதம் அட்டைப் படம் பாக்கலையா? ) சட்டை போட்ட குரங்குகிட்டே  பேசுவது போல் அபயக் குரல் கொடுத்தாள். அதுக்கு மேல ‘ஷிவானி இருக்க பயமேன்’ என்ற டான்ஸ் போஸ் வேற ! 

எனக்கு வேணும் என்று நொந்துகொண்டு அவளை பேசச்சொன்னேன் ! அடுத்த அறையில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் இருவரும் பேசுவதை ஒட்டுக் கேட்டேன் ! அவர்கள் நிறைய டெசிபலில் பேசியதால் ஒட்டுக் கேட்க வேண்டிய அவசியமில்லாமல் அதுவாகவே என் செவிப்பறையைத் தாக்கியது! 


image

அம்மா ! நான் உன்கூடக் கொஞ்சம் பேசணும் !

பேசிக்கிட்டுத் தானம்மா இருக்கே !

அதில்லே! நான் கொஞ்சம் சீரியஸா பேசணும் !

உங்க அப்பா உன்கிட்டே இதைச் சொல்லச் சொன்னாரா ? 

 ஏன் அப்பா சொல்லித் தான் நான் பேசுவேன்னு நீ நினைக்கிறே ? 

நீ கேட்க வந்த தோரணையே உன்னைக் காட்டிக் கொடுத்திடுச்சு !

என்னன்னு ?

நீ அப்பாவுக்கு சப்போர்ட்டா பேச வந்திருக்கேன்னு புரியுது !

நான் உனக்கு சப்போர்ட்டா பேச வந்திருக்கேன் !

புரியலையே !

உனக்குப் புரியாதுன்னு தான் நான் விளக்கமா சொல்ல வந்திருக்கேன் !

எதைப் பத்தி ? 

எதைப் பத்தி நான் பேசப் போகிறேன்னு தெரியாம நீ ஏன் அப்பாவை நம்ம பேச்சில இழுக்கிறே ? 

நிச்சயமா இந்த மாதிரி எல்லாம் பேச உங்க அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும் !

நான் என்ன பேச வந்திருக்கேன்னு தெரியாம நீ ஏன் விஷயத்தை விட்டு வெளியே போற ?

ஏன்னா நீ விஷயத்தைச் சொல்லாமல்  மென்னு முழுங்குரே ! 

நீ தான் விஷயத்தைச் சொல்ல விடாமல் என்னைத் தடுக்கப் பாக்கிறே ! 

நீ சொல்ல வேண்டியதை நேரா சொல்ல வேண்டியது தானே ?

நீ சொல்ல விட்டால் தானே ?

நீ இப்பிடித் தப்பா  சொல்வேன்னு எனக்குத் தெரியும் ! 

நீ இப்பிடித் தான் சொல்வேன்கிறது எனக்கும் புரியும். 

அட! அட! ராம் ஜேத்மலானியும் பராசரன் அவர்களும்  பேசுவது போல் இருந்தது ! ஒட்டுக்  கேட்ட என் காது ஓட்டை ஆயிடும் போல இருந்தது. அம்மாவுக்கு ஏத்த பொண்ணு என்று அவளை மனசில் பாராட்டினேன். 

அம்மா ! நீ குறுக்க குறுக்கப் பேசாதே  ! நான் ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வர்றேன் !

அது தான் ..

உஸ்ஸ்.  நான் சொல்றதைக் கேளு ! நீ சிங்கப்பூர் போறது நம்ம வீட்டில ஒருத்தருக்குப் பிடிக்கலை !

இது தான் ஊர் அறிஞ்ச விஷயம் ஆச்சே! உங்க அப்பா மட்டும் தான் ஆரம்பத்திலேர்ந்து இதுக்கு முட்டுக் கட்டை போடறார். 

அம்மா ! மறுபடியும் நீ தப்பா பேசறே !

முதல்லே நான் என்ன தப்பா சொன்னேன் ? 

நான் தப்பா சொல்வேன்னு நீ சொன்னியே அது தான் உன் முதல் தப்பு !

ரெண்டாவது தப்பு ?

அப்பா மட்டும் தான் இதை எதிர்க்கிறார்னு நீ சொன்னது !

வேற யாருக்குப் பிடிக்கலை? உனக்கா? 

இல்லை ! நான் உன் கட்சி ! 

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது !  பப்ளிக் பிராசிக்யூட்டர்  சேம் சைட் கோல் போடற மாதிரி இல்ல இருக்கு !

ஷாலுவும் கொஞ்சம் ஆடிப் போய்விட்டாள் என்று தான் தோன்றியது ! 

வேற யாருடி இதை வேண்டாங்கிறது ?

ஷ்யாம்  அண்ணா ! 

‘இதென்ன புது குண்டா இருக்கு’ என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். 

சும்மா உளறாதேடி!அவன் அன்னிக்கே ஒத்துக்கிட்டான். 

அது அன்னிக்கு! 

இன்னிக்கு மாறிடுச்சா?

ஆமாம்!

எப்படி?

அன்னிக்கு அவன் கிட்டே ஐ பேட் வாங்கித் தர்ரேன்னு  சொன்னே ! அதனால ஒத்துக்கிட்டான்.

ஆமாம். அதுக்கென்ன? 

இன்னிக்கு அவன் மைண்ட் மாறிடுச்சு ! கிரிக்கெட் பேட் தான் வேணுமாம் ! 

அதனால என்ன !  கிரிக்கெட் பேட் வாங்கித் தர்றேன் !

சாரி ஷாலும்மா ! நீ லேட்! அப்பா அவனுக்கு நேத்திக்கே பேட் வாங்கிக் கொடுத்திட்டார் !

அதனால கட்சி மாறிட்டானா?  

அதுமட்டுமல்ல. 

வேற என்னவாம்? 

நீ சிங்கப்பூரில் இருக்கப்போற பத்து நாளைக்கு அப்பா தான் சமைக்கப் போறேன்னு வேற சொல்லி அவனைப் பயமுறுத்தியிருக்கிறார் ! 

அதுமட்டுமல்ல !

எல்லாத்தையும் சேத்துச் சொல்லுடி!

அப்பா அவனுக்கு டெய்லி ஹிந்தி சொல்லித் தரப் போறாராம். கிரிக்கெட் கோச்சிங் வேற கட்டாம். இன்னும் ஒண்ணும் சொன்னாரே!

யார் ?

அதைச் சொல்ல மாட்டேன் ! ம்.  ஞாபகம் வந்திடிச்சு! “ All is fair in love and war” லவ்வுன்னா என்னாம்மா?

செவுள்ளே அறைஞ்சா காது ஜிவ்வுன்னு கேக்கும்! லவ்வாம் லவ்வு. எங்கேடி உங்க அப்பா ? 

ஐயோ ! அம்மா அப்பாவை அறையப் போரான்னு கத்திக் கொண்டே ஓடிப் போய் விட்டாள் ஷிவானி.

ஷாலு நேரா நான் இருக்கிற ரூமுக்கு வந்தாள். 

” என்ன இது! குழந்தையை இப்படிப் பேசப் பழக்கியிருக்கேள்? “

வேணுமுன்னா பாரேன் ! ஷிவானியை வக்கீலுக்குத் தான் படிக்க வைக்கப் போகிறேன் ! என்னமா ஆர்கியு பண்றா?

எனக்கும் ஷிவானிக்கும் நடந்தது ஆர்கியுமெண்ட் இல்லே ! சும்மா டிஸ்கஷன் தான் ! 

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

யார்  கரெக்ட்டுன்னு  பாக்கிறது  

ஆர்கியுமெண்ட்,  எது  

கரெக்ட்டுன்னு பாக்கிறது டிஸ்கஷன் !

எங்கே 

கரெக்ட்டுன்னு பார்க்கிறது தான் அறிவு !

விளையாடாதீங்க ! உண்மையா சொல்லுங்க ! நான் சிங்கப்பூர் போறது உங்களுக்குப் பிடிக்கலைன்னா சொல்லுங்க நான் குருஜினி கிட்டே சொல்லி கேன்சல் பண்ணிடறேன் !

ஷாலு ! இந்தா ! உனக்கும்  உங்க குருஜினிக்கும் சிங்கப்பூர் விசா ! எங்க சிங்கப்பூர் ஆபிசில சொல்லி உடனே வாங்கிட்டு வந்தேன் !

ஷாலுவுக்குக் குஷி தாங்கல ! அப்படியே என்னைக் கட்டிப் பிடிச்சிட்டு ஒரு கிஸ் கொடுத்தாள். 

பின்னே ஏன் 

ஆர்கியுமெண்ட், டிஸ்கஷன் எல்லாம் !

இதுக்குத் தான்! 


image

அம்மா ! அப்பா ! ஷ்யாம்  அண்ணாவைக்  கன்வின்ஸ் பண்ணிட்டேன் ! அவனுக்கு இப்போ  ஓகேயாம். ஷிவானி  வர இருவரும் பிரிந்தோம் ! 

இது நீ பண்ணின மூணாவது தப்பு ! – ஷாலினி குரலில் சொன்னேன்!

மதிப்பு முதலீடு – சீனு

image

ராம் – “லாவண்யா, இந்த சுப்புப்  பயல் வந்து என்னைக்  கேட்டால் நான் இல்லைன்னு சொல்லிடு .”

லாவண்யா – “கல்யாணம் பண்ணி முப்பது வருஷம் ஆகுது, உங்களுக்கு என்னைப்  புரிஞ்சுக்க முடியலையா என்ன? . எனக்கு சின்ன பொய், பெரிய பொய் எதுவும்  சொல்ல வராது .”

ராம் – “இந்த ஒரு தடவை மட்டும் சொல்லிடு!  காபி வேணா எனக்கு ரெண்டு நாள் கட் பண்ணிடு .”

லாவண்யா – “முடியாது ! ஏன் இன்னிக்கு சுப்புவைப்  பார்த்து இப்பிடி ஓடறீங்க ?”

ராம் – “யாரோ ‘வாரன் பப்பெட்டாம் (Warren Buffett) , அவரு இந்தியாவுக்கு வந்திருக்கிறார். உலகத்திலேயே பெரிய பணக்காரராம். அவர் தாஜ்ல இன்னைக்குப் பேசறாராம். நல்லா  இன்வெஸ்ட்மென்ட் செய்வது எப்படி என்ற தலைப்பில் பேசப் போறாராம். அதுக்கு இந்த சுப்பு ரெண்டு டிக்கெட் வாங்கிட்டு வந்து என்னையும் கூப்பிடறார்.”

image

லாவண்யா – “போயிட்டு தான் வாங்க. வீட்டில சும்மா தானே இருக்கீங்க. ”

ராம் – “இல்லை, நான் இன்னைக்கு பேங்க் போகணும் . கொஞ்சம் அங்கே வேலை இருக்கு .”

லாவண்யா – “பேங்கிலிருந்து ரிடையர் ஆகி மூணு வருஷம் ஆனாலும் உங்களுக்கு டெய்லி பேங்க் போகாம இருந்தா தூக்கம் வராது. என்னால பொய் ஒண்ணும்  சொல்ல முடியாது. நீங்கள் ஆச்சு உங்க சுப்பு ஆச்சு .”

வாசலில் காலிங் பெல் சத்தம் . திறந்தால் –

“என்ன ராம் கிளம்பலாமா?” – சுப்பு

“ரெண்டே நிமிஷம்” – சிரிப்புடன் ராம்

லாவண்யா – “சுப்பு, நீங்க வரதுக்குத்  தான் ராம் இத்தனை நேரம் காத்துக்கிட்டு இருந்தார் !!!" 

பொய் சொல்ல வராது! ஆனால் போட்டுக்  கொடுக்க வரும்!

“அப்பிடியா? “- சுப்பு

"ஹி ஹி. ஆமாம் ” – ராம்

ராம், சுப்பு இருவரும் தாஜ் ஹோட்டலிற்குக்  கிளம்பினர்.

—-

image

“அப்பப்பா என்ன வெயில் ! என்ன வெயில் ! ” 

“காபி கொண்டு வரேன் ! கொஞ்சம் ஏ சி  கிட்ட உட்காருங்க. ஆமாம் , மீட்டிங் எப்படி இருந்துது.”

“பர்ஸ்ட் கிளாஸா  இருந்துது.” 

“மொதல்ல போகப்  பிடிக்கலைன்னு சொன்னிங்க. இப்போ சூப்பர்ன்னு சொல்லறீங்க” 

“நானும் ஏதோ புதுப்  பணக்காரன் பேசறான்னு  பிடிக்காமதான் போனேன்.  ஆனா அந்த வாரன் பப்பெட்  எவ்வளவு சிம்பிள் ஆக இருக்கார் தெரியுமா.  வயசு எண்பத்தி நாலு ஆனாலும் ஆளு என்னமா கணீர் கணீர்னு பேசறார்.  ஷேர் மார்கெட்டில் எப்படி இன்வெஸ்ட் பண்ணுவது என்ற தலைப்பில அவ்வளவு அழகாகப்  பேசினார். “

“இப்படித்தான் அஞ்சு வருஷம் முன்னாடி உங்க மாமா பையன் வெங்கட் சொல்றான்னு ஷேர்ல  ஒரு அஞ்சு லக்ஷம் போட்டு நயா பைசா கூட திரும்பி வரலையே. நல்ல வேளை நம்ம பசங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு அபார்ட்மெண்ட் வாங்கினோமோ பொழைச்சோம்!“

"ஆமாம் . அதனால தான் நான் இப்படி இந்த சுப்பு கிட்ட மறைஞ்சிக்கப்  பார்த்தேன் . நீ தான் என்னை காலேல எட்டப்பன் மாதிரிக்   காட்டிக்  குடுத்தே . சரி அதை விடு . வெங்கட் சொன்ன ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் பேரு – டே டிரேடிங் . அது கிட்டத்தட்ட ரேஸ்  குதிரை மேலே பணம் கட்டற மாதிரி தான்.”

“ஓஹோ”

இன்னைக்கு இவர் பேசின டாபிக் – “வால்யு இன்வெஸ்டிங்”

“ புதுசா இருக்கே . அப்பிடின்னா  என்ன ?”

“நாம தக்காளி கிலோ ரெண்டு ரூபாய்க்கு விக்கும் போது ஒரு நாலு கிலோஎக்ஸ்ட்ரா  வாங்கறோம் இல்லையா . அதே மாதிரி , ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணறப்போ கூட, விலை கம்மியாக இருக்கும் போது தான் வாங்கணும்.”

“ரெண்டு ருபாய் கிலோ தக்காளி வந்தா , பத்து கிலோ வாங்குவேன் . எங்க அம்மாவுக்கும் ரெண்டு எக்ஸ்ட்ரா கிலோ வாங்குவேன் “

அது மட்டுமில்லாமல் ஒரு கம்பெனி ஷேர் நாம் வாங்கினால் , நம்ம உண்மையாலுமே அந்த  கம்பெனி ஓனர் மாதிரி ஆயிடறோம் ”

“இந்த மாதிரிக் கேள்விப்  பட்டதே இல்லையே.”

image

“ஆமாம் , ஒரு கம்பெனி ஷேர்ல ஒரு பெர்சென்ட் வாங்கினா நாம ஒன் பெர்சென்ட் ஓனர் ஆயிடறோம். அதனால தான் ஒரு கம்பெனி ஷேர் வாங்கும் பொழுது , வீடு , அபார்ட்மெண்ட் , நகை எல்லாம் வாங்கற மாதிரி தீர விசாரிச்சிட்டுத் தான் வாங்கணும் .”

“ஓஹோ . அப்போ ஒரு கம்பெனி ஷேர் வாங்கறோம் என்றால் , அதைப்  பத்தி நிறையப் படிக்கணும்  போல இருக்கே .கம்பெனி எந்த பிசினஸ்ல இருக்கு, எப்படி லாபம் சம்பாதிக்கிறதுன்னு  அதைப்  பத்தித் தெரிஞ்சால் தானே ஓனர்  ஆக முடியும் .நமக்கோ பிசினஸ் பத்தி ஒண்ணும் தெரியாதே”

“சரியான கேள்வி கேட்டாய். நான் பாங்க்லே லோன் ஆபீசராக இருக்கும் பொழுது லோன் சாங்ஷன் செய்யும் முன்னாடி அந்த கம்பெனியோட முழுக்  கணக்கையும் பார்த்துட்டுத்  தான் அப்ரூவ் பண்ணுவேன்.”

“ ஆனாலும், நீங்க இருந்ததோ விவசாய லோன் துறைல. உங்களுக்கு TCS, Reliance பத்தி என்ன தெரியும் ?”

இதுக்குத் தான் இன்னைக்கு வாரன்  ஒரு பஞ்ச் லைன் அடிச்சார் – ‘work within your circle of competence.’ அதாவது உங்களுக்கு எந்தத்   துறையைப்  பத்தி நல்லா  தெரியுமோ, அதுல மட்டும் தான் இன்வெஸ்ட் பண்ண வேண்டும்ன்னு.

“ஆஹா !! நம்ம முதல் பையனுக்கு வீடு வாங்கும் பொழுது கூட நாம எவ்வளவு ஏமாந்து போனோம். இப்போ தான் அந்த ரியல் எஸ்டேட் பத்தியே கொஞ்சம் புரிஞ்சிருக்கு. ஆனால் உங்களுக்குத் தெரிஞ்சதோ விவசாயத் துறை தான். ”

“இந்தியாவில நிறைய விவசாயக் கம்பெனிகள் இருக்கு. அதே மாதிரி பேங்க் பத்தியும் எனக்கு நல்லாத் தெரியும்.”

“அது சரி !. பேங்க் பத்தி தான் உங்களுக்கு எல்லாமே தெரியுமே , அந்த வாட்ச்மேன் வீடு விலாசம் வரை !!!”

“ சரி சரி . இந்த ரெண்டு துறைல நிறைய நல்ல கம்பெனிக்கு நானே லோன் குடுத்திருக்கேன். இப்போ அந்த கம்பெனி எல்லாம் பெரிய பெரிய கம்பெனி ஆயிடுத்து.”

“நம்ம வெங்கட் வேற மாதிரி சொன்னானே  . ஒரு லட்சம் போட்டால் ரெண்டு மாசத்தில ரெண்டு லக்ஷம் ஆயிடும்னு.”

“அது திவால் கம்பெனியில் போட்டாத்தான் அப்படி வரும்! இந்த வால்யு இன்வெஸ்டிங்ல எல்லாமே லாங் டெர்ம் தான் . நாம வீடு வாங்கினோமே , அந்த வீடு எந்த விலைக்கு போகும்னு தினமும் ரேட் பார்த்து விற்கிறோமா என்ன? இல்லையே . அதே மாதிரி,  ஒரு கம்பெனில ஷேர் வாங்கும் பொழுது , ஒரு மூணு இல்லை அஞ்சு வருஷம் ஆனால் தான் அதோட மதிப்பு அதிகம் ஆகும்.”

“இந்த மாதிரி இன்வெஸ்ட் பண்ணுவது ரொம்ப நல்லா இருக்கே . நமக்குத் தெரிஞ்ச கம்பெனி , நல்ல கம்பெனியாகப் பார்த்து , ரெண்டு ரூபாய் கிலோ தக்காளி மாதிரி விலையில வாங்கினால் நல்ல இன்வெஸ்ட்மென்ட் தான்.”

“சுப்பு இன்னைக்குத் தான் இந்தக் கதையைச்  சொன்னான் . அவன் ரெண்டு பொண்ணுக்கும் ஒரு பதினைஞ்சு வருஷம் முன்னாடி ஆளுக்கு ரெண்டு லக்ஷம் போட்டு ஒரு நல்ல கம்பெனில ஷேர் வாங்கினானாம் . இப்போ அதோட மதிப்பு ரெண்டு கோடிக்கு மேல . அதிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து தான் அவங்களுக்குக் கல்யாணமும் பண்ணினானாம்.”

“அப்படியா !!!”

“ஆனால் சுப்பு இன்னொன்னும் சொன்னான் . சரியாக ஒரு கம்பெனியைப்  பத்தி தெரிஞ்சுக்காம இன்வெஸ்ட் பண்ணினால், பணம் விரயம் ஆகும் வாய்ப்பு நிறைய இருக்குன்னு”

“இதைப்  பத்தி நிறைய கத்துக்க வேணும் போல இருக்கே .”

“கண்டிப்பா . . சுப்பு சொன்னான்

இன்னைக்கு வாரன் பப்பெட் பேச்சைக் கேட்டது  ஒரு பிள்ளையார் சுழி மாதிரி தான் . வாரத்திற்கு ஒரு ரெண்டு மூணு மணி நேரம் வந்து  வால்யு இன்வெஸ்டிங் பத்திச்  சொல்லித்  தரேன்னு சொல்லிருக்கான்.”

“ஆமாம் . நீங்க ரொம்ப வருஷம் முன்னாடி ஏதோ ஒரு விவசாயக் கம்பெனிக்கு லோன் குடுத்தீங்கன்னு சொன்னிங்களே.”

“ஆமாம். நாங்க லோன் குடுத்த கம்பெனி பெயர் – ஸ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட். அப்போ அந்தக் கம்பனியோட முழு மதிப்பே இருபது கோடி ரூபாய் தான் . அதாவது இருபது கோடி 2001ல இருந்தால் அந்த முழுக் கம்பெனியை  விலைக்கு வாங்கியிருக்கலாம்.”

இப்போ அதோட மதிப்பு என்ன ??

“பதினெட்டு ஆயிரம் கோடி.”

“நல்லது . சுப்பு கிட்டே நீங்க இன்னைக்கு மாட்டிக்கிட்டதே  ஒரு லாங் டெர்ம் இன்வெஸ்டிங்னு  சொல்லுங்க.”

“ஹா ஹா . ஆமாம்”

(தொடரும்) 

பங்கார்   டிப்ஸ்

image

யார் இந்த பங்கார்!?

 இவர் ஒரு  பங்குப் புலி ! பங்கு வணிகத்தின் சந்து பொந்துகள் எல்லாம் நன்றாகத் தெரிந்தவர் ! 30 வருடத்துக்கு மேல் பங்காட்டத்தில் பங்கு கொண்டிருப்பவர் !

குவிகம் வாசகர்களுக்காக அவர் தரும் பங்கு டிப்ஸ் ! 

“இப்போது மார்க்கெட் தூங்கிக் கொண்டிருக்கிறது ! தூங்கும் புலி மீது கல்  எறிந்து அல்லது இடறி  விடாதீர்கள் ! அது நம்மைத் தாக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் !  அது ரொம்ப முக்கியம்!”

பங்கார்  சில பங்குகளைப் பற்றிச் சொல்கிறார். அவற்றை அவர் சொன்ன விலைக்கு வாங்கி (இந்த விலை எப்போ வரும் என்பதும் நம் கையில் இல்லை)  அப்படியே அதை அடை காத்து  பொறுமையோடு காத்திருந்தால் பின்னால் அவை பொன் முட்டைகளாக மாற அதிக வாய்ப்பு உண்டு.  

சில காக்கா முட்டையாக மாறலாம்! ( 80 லட்சம் பட்ஜெட்டில் தயாரித்த காக்கா முட்டை படம் 8 கோடி வசூலாமே!) 


image

இந்த மாதிரி போட்டால் ஒரு டிஸ்கிளைமர் கிளாஸ் போட வேண்டுமே! 

image

போட்டாச்சு! 

கவிதை எழுத பேனா எடுப்பவர் பலர் ! ஸ்ரீனியோ  தனது  காமிராவை எடுக்கிறார்!

மழைத்துளி மழைத்துளி என்றும் அது புதுத்துளி 

இது புகைப்படம் அல்ல கவிதைப்படம் !

(ஸ்ரீனியின் அனுமதியுடன்) 

ஜோக்ஸ்

image

மேகியில் லெட் இருக்காமே?

குழந்தைங்க பென்சில் சீவும் போது விழுந்திருக்கும்!


image

அமெரிக்காவில் புதிய கண்டுபிடிப்பு! இந்திய  ரவா இட்லிகளில் இரும்பு அதிகமாக இருக்கிறதாம் ! ( யோவ்! அது மிளகுய்யா!) 


image

மேகி பேரை மாத்தி மரகதவல்லின்னு வைச்சுடுவோம்! 


image

பத்து வருஷம் தொடர்ந்து மேகி சாப்பிட்டா பாம்பு கடிச்சாக் கூட விஷம் ஒண்ணும் பண்ணாதாம் !